Thursday, September 28, 2023

வேதாகம முத்துக்கள் - செப்டம்பர், 2023

 

              - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

ஆதவன் 🔥 947🌻 செப்டம்பர் 01, 2023 வெள்ளிக்கிழமை 

"ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக் கிறார்கள்". ( லுூக்கா 16 : 8 )  

ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மனிதர்களால் இந்த உலக மக்கள் செய்யும் பல காரியங்களைச் செய்ய முடியாது; பல உலகத்  தொழில்களை வெற்றிகரமாக நடத்திட முடியாது. காரணம் இந்த உலகத்துக்கு ஒத்த வேடம் தரித்தால் மட்டுமே உலக மனிதனைப்போல தொழில் செய்ய முடியும். ஆனால் இன்றைய உலகில் தங்களை ஆவிக்குரிய மக்கள் எனக் கூறிக்கொள்ளும் பலர் ஆவிக்குரிய ஆராதனை செய்கிறோம் என்று கூறிக்கொண்டாலும் எந்த மனச்சாட்சி உறுத்தலுமின்றி உலக மனிதர்களைப்போல  பல்வேறு தவறான காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். 

மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மக்கள் தங்கள்குடும்பத்தினராலும் மற்ற உலக மக்களாலும் பலவேளைகளில் பேதைகளாக எண்ணப்படுகின்றனர். காரணம், அவர்கள் மற்ற மனிதர்களைப்போல செயல்படுவதில்லை. அவர்களது சில செயற்பாடுகள் மற்றவர்களுக்கு முட்டாள்த்தனமான செய்கையாய்த் தெரியும். இதனால் குடும்பத்தினர்கூட சிலவேளைகளில் இவர்களை முட்டாளாக எண்ணுகின்றனர். 

இதற்கு முக்கிய காரணம், உலக  மனிதர்கள் தங்களது மூளை அறிவினால் ஒரு செயலின் சாதக பாதகங்களைக் கணித்து முடிவெடுக்கின்றனர். ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மனிதர்களோ ஆவியானவரின் வழிநடத்துதலின்படி முடிவெடுக்கின்றனர். எனவே மற்றவர்களுக்கு ஆவிக்குரிய மனிதர்களின் செயல்கள் முட்டாள்தனமாகத் தெரியும். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார். ஒளியின் பிள்ளைகள் என்பது ஒளியான கிறிஸ்துவுக்குரிய வாழ்க்கை வாழும் மக்கள்.  இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் என்பது இந்த உலகத்துக்குரிய வாழ்க்கை வாழும் மனிதர்கள்.  அவர்கள் மூளை அறிவால் முடிவெடுப்பதால் இந்த உலகத்தின் பார்வையில் ஒளியின் மக்களைவிட அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.

இதனையே அப்போஸ்தலரான பவுல்,  "நாங்கள்  கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர்நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்நாங்கள் பலவீனர்நீங்கள் பலவான்கள்;        நீங்கள் கனவான்கள்நாங்கள் கனவீனர்." ( 1 கொரிந்தியர் 4 : 10 ) என்று கூறுகின்றார். 

ஆனால் தேவன் பைத்தியமான ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மனிதர்களையே தனக்காகத் தெரிந்து கொள்கின்றார். "ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 27 ) என்கின்றார் பவுல்.

காரணம், "இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது.  ( 1 கொரிந்தியர் 3 : 19 ) ஆம், உலகத்துக்கு மற்றவர்கள் அறிவாளிகள்போலவும் மேதைகள் போலவும் தெரிந்தாலும் தேவனுக்குமுன் அவர்கள் பைத்தியக்காரர்கள். ஆம், தேவன் மனிதர்கள்போல பார்ப்பவரல்ல. 

அன்பானவர்களே, இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுவது ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு மட்டுமே முழுமையாகப்  புரியும். எனவே ஆவிக்குரிய நாம் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகளைவிட புத்தியில் குறைந்தவர்கள் என எண்ணப்பட்டாலும் கவலையடையத் தேவையில்லை. காரணம், அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல,"தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளையேத்தெரிந்துகொண்டார். கலங்கிடாமல் நமது ஆவிக்குரிய பயணத்தைத்  தொடர்வோம். 

 

ஆதவன் 🔥 948🌻 செப்டம்பர் 02, 2023 சனிக்கிழமை 

"தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்." ( லுூக்கா 17 : 20, 21 )

தேவனுடைய ராஜ்ஜியம், பரலோக ராஜ்ஜியம் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தேவனுடைய ராஜ்ஜியம் என்பது இந்த உலகத்தில் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மக்கள் தங்களது இருதயத்தில் அனுபவிப்பது. அது ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மக்களது ராஜ்ஜியம். எனவேதான் இயேசு கிறிஸ்து, "தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே" என்றார். ஆனால் பரலோக ராஜ்ஜியம் என்பது விண்ணக ராஜ்ஜியம். அது நாம் மரித்தபின்பு நாம் செய்த நன்மைகளுக்குப் பரிசாக அனுபவிக்கப்போவது. 

மேசியாவாகிய கிறிஸ்து இந்த உலகத்தில் இறை அரசை நிறுவுவதற்காக வருவார் என யூதர்கள் நம்பியிருந்தாலும் அவர்கள் அதனை உலக அரசாங்கம் போல ஒரு அரசாங்கமாக இருக்குமென்று எண்ணினர். எனவேதான் அவர்கள் இயேசு கிறிஸ்துவிடம், தேவனுடைய ராஜ்ஜியம் எப்போது வரும் என்று கேட்டனர். ஆம், இறை அரசு அல்லது தேவனுடைய ராஜ்ஜியம் என்ன என்பதை யூதர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. 

தேவனுடைய ராஜ்ஜியம் என்றால் என்ன என்பதை அப்போஸ்தலரான பவுல் தெளிவாக விளக்கினார். "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 ) என்று கூறுகின்றார். நீதி, சமாதானம், பரிசுத்த ஆவியினால் உண்டாகும் மகிழ்ச்சி. இவையே தேவனுடைய ராஜ்ஜிய மக்களது உடைமை. 

இந்த தேவனுடைய ராஜ்யத்துக்கு நாம் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமென்றால் நாம் குழந்தைகளாக மாறவேண்டியது அவசியம்.  அதாவது குழந்தையைப்போல கள்ளம் கபடமில்லாதவர்களாக மாறவேண்டும்.  சிறு குழந்தைகளை இயேசு கிறிஸ்துவிடம் மக்கள் கொண்டுவந்தபோது அவருடைய சீடர்கள் அவர்களைத் தடைசெய்தனர். அப்போது அவர்களைப் பார்த்து இயேசு கூறினார். "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது." ( லுூக்கா 18 : 16 )

அன்பானவர்களே, நாம் பரலோக ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டுமென்றால் முதலில் இந்த உலகத்தில் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகவேண்டியது அவசியம். பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல சாப்பாடு, குடிப்பு (அதாவது உலக காரியங்கள்) போன்ற உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நீதி, சமாதானம், பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷம் இவைகளால் நாம் நிறைந்திருக்க முக்கியத்துவம் கொடுத்து வாழவேண்டியது அவசியம். 

ஆம், தேவனுடைய ராஜ்ஜியம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; தேவனுடைய ராஜ்யம் நமக்குள்தான் இருக்கிறது. அதனை சாதாரண உலக  வாழ்க்கை வாழும் மக்கள் அறிய முடியாது. ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது அதனை நாம் அனுபவிக்கலாம். இந்த உலகத்தில் வாழும்போது நாம் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவர்களாக வாழ முயற்சியெடுப்போம். அப்போது பரலோக ராஜ்யத்தில் தேவன் நம்மைச் சேர்த்துக்கொள்வார். 


ஆதவன் 🔥 949🌻 செப்டம்பர் 03, 2023 ஞாயிற்றுக்கிழமை 

"காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்." ( எபிரெயர் 5 : 12 )

உயிருள்ள எந்த உயிரினமும் நாளுக்குநாள் வளர்ச்சியைக் காணும். உயிரில்லாத கல், மண் போன்றவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். எனவே வளர்ச்சி என்பது உயிர்களுக்கு அடையாளம். மேலும் பல உயிரினங்களால் பிறந்தவுடன் வளர்ச்சியடைந்த அதன் இனங்கள் உண்ணும் உணவினை உடனேயே  உண்ண முடியாது. நாம் பிறந்த குழந்தையாக இருந்தபோது நம்மால் பாலைத்தவிர வேறு எதனையும் உண்ண முடியாதவர்களாக இருந்தோம்.  

ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இதுவே நிலைமை. கிறிஸ்துவுக்குள் வந்தவுடன் நாம் உடனேயே முழு ஆவிக்குரிய மனிதர்களாக மாறிவிடுவதில்லை. பல்வேறு அறிவுரைகள், அனுபவங்கள், வாழ்க்கைப் பாடங்கள் கற்று வளரவளர நாம் ஆவிக்குரிய வாழ்வில் தேறினவர்கள் ஆகின்றோம். நம்மை வழிநடத்தும் போதகர்கள் நமக்கு ஞானப்பாலைக் கொடுக்கின்றார்கள். இதனையே அப்போஸ்தலரான பவுல், "நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை." ( 1 கொரிந்தியர் 3 : 2 ) என்கின்றார்.

நாம் ஆவிக்குரிய வாழ்வில் இன்னும் குழந்தைகளாகவே இருக்கின்றோம் என்பதனை எப்படிக் கண்டுபிடிப்பது? ஆவிக்குரிய அனுபவங்கள் பல பெற்ற பின்பும் இன்னமும் நம்மில் சாதாரண மனிதர்களைப்போல பொறாமை, வாக்குவாதம், மத சபை பேதங்கள் போன்ற குணங்கள் இருப்பது, இன்னும் ஆவிக்குரிய வாழ்வில் நாம் வளர்ச்சியடையவில்லை என்பதைக் காட்டுகின்றது. இதையே, "பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா?" ( 1 கொரிந்தியர் 3 : 3, 4 ) என்கின்றார்.

ஆவிக்குரிய வளர்ச்சி ஒருவரில் இருக்குமானால் இத்தகைய குணங்கள் நம்மைவிட்டு நீங்கியிருக்கும். அன்பானவர்களே, நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். நாம் இன்னமும் பால் உண்ணும் நிலையிலிருக்கின்றோமா அல்லது பலமான உணவினை உண்ணக்கூடிய தகுதி பெற்றுவிட்டோமா ? 

சவலைக் குழந்தைகள் எனும் குழந்தைகள் எந்த உணவினைக் கொடுத்தாலும் உடல் தேறுவதில்லை. அதுபோலவே ஆவிக்குரிய வாழ்வில் சிலர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வளர்ச்சியைக் காண்பதில்லை. அதனையே இன்றைய வசனத்தில் எபிரெய நிருப ஆசிரியர் கூறுகின்றார். அதாவது, நீங்கள் கிறிஸ்துவுக்குள் வந்த காலத்தைக் கணக்கிட்டால் நீங்கள் இதற்க்குள் தேறிய போதகர்கள் ஆகியிருக்க வேண்டும். ஆனால் இன்னமும்  "போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது."

மேலும், இன்றைய வசனத்தின் அடுத்த வசனம் கூறுகின்றது, "பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிற படியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்." ( எபிரெயர் 5 : 13 ) ஆம், நீதியின் வசனத்தின் பாதை ஆவிக்குரிய குழந்தைகளாக இருந்தால் நமக்குத் தெரியாது. எனவே,  நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடைந்து பலமான உணவை உண்ணத்தக்கவர்களாக மாறவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் ஆவிக்குரிய வாழ்வில் தேறினவர்களாக முடியும். 


ஆதவன் 🔥 950🌻 செப்டம்பர் 04, 2023 திங்கள்கிழமை 

"என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்." ( சங்கீதம் 66 : 18 )

கடவுள் நம்பிக்கை உள்ள அனைவருமே ஜெபிக்கின்றனர். எல்லோருமே கடவுள் தங்கள் ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்கவேண்டுமென்று ஆசைப்படுகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத, ஜெபிக்காத மக்களும் உலகினில் பல நன்மைகளைப்பெற்று வாழ்கின்றனர். பொதுவாக நாம் அனைவரும் உலக ஆசீர்வாதங்களை தேவனிடம் கேட்பதுதான் ஜெபம் என்றும் அதனைப் பெற்றுக்கொள்வதுதான் ஜெபத்தின் வெற்றி எனவும்  எண்ணிக்கொள்கின்றோம். 

ஆனால், ஜெபம் என்பது உண்மையில் வாழ்வின் ஊற்றாகிய தேவனை வாழ்வில் பெற்று அனுபவிப்பது; அவரோடு நம்மை இணைத்துக்கொள்வது. அப்படி நம்மை அவரோடு இணைத்துக் கொள்ளும்போது நமது  விண்ணப்பங்கள் வித்தியாசமானதாக இருக்கும். அப்போது நாம் ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமைகொடுத்து ஜெபிப்பவர்களாக இருப்போம். நமது ஜெபவேளைகளில் தேவ பிரசன்னத்தை உணர்பவர்களாக இருப்போம்.  

இன்று உலகினில் அக்கிரமக்காரர்கள், துன்மார்க்கர்கள் பலரும் செழித்து வளருவதைப் பார்க்கின்றோம். எனவே, உலக செழுமைக்கும் ஜெபத்துக்கும்  தேவ ஆசீர்வாதத்துக்கும் தொடர்பில்லை என்பது புரியும். ஆம் அன்பானவர்களே, உலகச் செழிப்பைக் கண்டு நாம் ஏமாந்துவிடக்கூடாது. காரணம் துன்மார்க்கன் செழிப்பான்  என்றுதான் வேதம் கூறுகின்றது. "துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்." ( சங்கீதம் 73 : 3-5 ). ஆனால் அவர்கள் முடிவு புல்லைப்போன்றது 

மாறாக, நீதிமான் தேவனையே தேடுவான். அவனது ஆசீர்வாதமும் வித்தியாசமானதாக இருக்கும். ஆம், "நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்." ( சங்கீதம் 92 : 12 ) என்கின்றது வேதம். பனைமரம் செழிப்பு என்று கூறமுடியாது. ஆனால் அது வறண்ட பகுதிகளில்தான் செழித்து வளரும். அதன் மொத்த உடலும் மனிதர்களுக்குப் பயன்படும். அதுபோலவே நீதிமான் இருப்பான். இது முழுமையான ஆசீர்வாதத்தை அடையாளம். 

வேதாகமம் உலக செழிப்புக்காக எழுதப்படவில்லை. இன்றைய தியான வசனத்தில் சங்கீத ஆசிரியர் கூறுவது ஆவிக்குரிய கண்ணோட்டத்தில்தான். ஆம், நமது இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தோமானால் ஆண்டவர் நமக்குச்  செவிகொடார். இதனையே ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தேவன், "உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." ( ஏசாயா 59 : 2 ) என்று கூறுகின்றார். ஆம், நமது அக்கிரமங்கள் தேவனைவிட்டு நம்மைப் பிரிகின்றது. 

ஆனால் இன்று உலக ஆசீர்வாதங்களைப் பெறுவதால் பலரும் தேவன் தங்களைவிட்டு தனது முகத்தை மறைப்பதை அறியாமல் இருக்கின்றனர். தங்களை தேவன் அன்புசெய்வதாக எண்ணிக்கொள்கின்றார். துன்மார்க்க ஊழல்வாதிகள் செழிப்பது தேவ ஆசீர்வாதமென்றால் நாம் தேவனை வழிபடுவது வீண். நாம் நல்ல ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழ்வதும் வீண். நாமும் அவர்களைப்போல வாழ்ந்து மடியலாமே?

இன்றைய வசனத்தின் அடுத்த வசனத்தில், "மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்" ( சங்கீதம் 66 : 19 ) என்கின்றார் சங்கீத ஆசிரியர் உறுதியாக. ஆம், இது உலக மனிதர்கள் கூறுவதுபோல அல்ல. நிச்சயமாக தேவன் எனது ஜெபத்துக்கு பதில் கொடுத்துள்ளார் எனும் உறுதி.  

ஆம் அன்பானவர்களே, நமது இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தோமானால் ஆண்டவர் நமக்குச் செவிகொடார். ஆனால் நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது நம் ஜெபத்தில் கேட்கும் உலக காரியங்கள் நமக்குக் கிடைக்கவில்லையானாலும் அப்போதும், "தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். ஆனால் ஏதோ நோக்கத்துக்காக நான் கேட்டதைத் தராமல் தாமதிக்கின்றார் எனும் உறுதி நமக்கு ஏற்படும். அக்கிரம சிந்தையை நம்மைவிட்டு அகற்றுவோம்; தேவன் நமக்குச் செவிகொடுப்பதை அனுபவத்தில் உணர்வோம். 

 

ஆதவன் 🔥 951🌻 செப்டம்பர் 05, 2023 செவ்வாய்க்கிழமை 

"இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும், சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக." ( ஏசாயா 8 : 12, 13 )

உலகத்தில் நமக்குத் துன்பங்கள், நோய்கள் பிரச்சனைகள் ஏற்படும்போது நம்மைச் சுற்றி இருக்கும்  மக்கள் நமது நன்மைக்காக பேசுவதுபோல பல்வேறு உபாயங்களைக் கூறுவார்கள். "உங்களது இன்றைய பிரச்சனைகளுக்குக் காரணம் சாபங்கள்" என்பார்கள்; அல்லது, "ஒரே ஒரு முறை ஜோசியம் பார்த்துப் பாருங்கள்" என்று அறிவுரைக் கூறுவார்கள்.  கடவுளைத் திருப்திப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள், உபாயங்களை நாம் கடைபிடிக்கவேண்டுமென்று நமக்கு அறிவுரைக் கூறுவார்கள். 

இப்படி பிரச்சனைகள் துன்பங்களில் உழலும் மக்களுக்கு இன்றைய வசனம் தெளிவை ஏற்படுத்துகின்றது. இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும் இருங்கள் என்று கூறுகின்றது. மட்டுமல்ல, கர்த்தரையே நம்பி அவருக்கேற்ற பரிசுத்த வாழ்க்கை வாழ உங்களை ஒப்புக்கொடுங்கள் என்று கூறுகின்றது. 

இன்றைய தியான வசனத்தை நாம் தொடர்ந்து வாசிக்கும்போது  ஏசாயா கூறுகின்றார், "அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம்பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்க வேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?" ( ஏசாயா 8 : 19 )

அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறி சொல்பவர்களையும் நம்புவது நமது பிரச்னைகளுக்குத் தீர்வல்ல. அப்படி அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறிசொல்பவர்களும்  ஆத்துமாவில் செத்தவர்கள்; நாமோ உயிருள்ளவர்கள். "உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?" என்கின்றார் ஏசாயா.

நாம் பயப்படவேண்டியது ஜீவனுள்ள தேவனுக்கு மட்டுமே. அவருக்குப் பயப்படும்போது நாம் பரிசுத்தமான வாழ்க்கை வாழ முற்படுவோம். ஆம்,  "சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக." 

அன்பானவர்களே, நம்மைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் பல்வேறு நம்பிக்கை உடையவர்களாக இருக்கலாம். அவர்கள் தங்கள் நம்பிக்கைக்கேற்ப நமக்கு அறிவுரை கூறுவார்கள். ஆனால் நாமோ ஜீவனுள்ள தேவனை நம்புகின்றவர்கள். எனவே, அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி பயப்படாமலும், கலங்காமலும், சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள் என்று இன்றைய வசனம் நமக்கு அறிவுரை கூறுகின்றது. 

மேலும், "தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்." ( நீதிமொழிகள் 16 : 17 ) எனும் வசனத்தின்படி தீமையான காரியங்களை நம்மைவிட்டு விலக்கி சமமான பாதையில் நடப்போம். அப்போது நமது ஆத்துமாவைக் காத்துக்கொள்வோம்.

ஆம், "சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக"  என்று கூறியபடி வாழும்போது இந்த உலக ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நாம் கட்டுப்பாடு என்று கருதாமலும்  அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நாம் பயப்படாமலும், கலங்காமலும் இருப்போம். 

      

ஆதவன் 🔥 952🌻 செப்டம்பர் 06, 2023 புதன்கிழமை 

"என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்." ( சங்கீதம் 27 : 10 )

தாயும் தகப்பனும் நம்மைக் கைவிடுவார்களா? இது நடக்கக்கூடிய ஒன்றா எனப் பலரும் எண்ணலாம். ஆனால் இது நடக்கக்கூடியதே என்பது இந்த உலகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களால் உறுதிப்படுகின்றது. 

சிறு குழந்தையாக இருக்கும்போது குழந்தைகளை அன்போடு வளர்த்தாலும் சில பெற்றோர் தங்கள் பிள்ளைகள் வளரும்போது குழந்தைகளிடையே வேற்றுமை உணர்வைக் காட்டுகின்றனர். பணத்துக்காக, சொகுசு வாழ்க்கைக்காக ஒரு மகனை கைவிட்டு இன்னொரு மகனைச் சார்ந்துகொள்ளும் பெற்றோர் உலகினில் இருக்கின்றார்.  

எனக்குத் தெரிந்த ஒருவர் தனது இரண்டு மகன்களில் நல்ல பதவியில் வசதியோடு வாழும் இளைய மகனோடு சேர்ந்துகொண்டு மூத்த மகனைப் புறக்கணிப்பதைக் கண்டுள்ளேன். இத்தனைக்கும் கொத்தனாராக வேலைசெய்து தான் சம்பாதித்த பணத்தில் தம்பியைப் படிக்கவைத்தவர் அந்த மூத்தமகன். ஆனால் இப்போது தம்பி படித்து நல்ல உயர்பதவியை அடைந்துவிட்டார். ஏழையான அண்ணனை தன்னோடு பிறந்தவர் என்று வெளியில் சொல்லவே இப்போது அவன் தயங்குகின்றான்.

தம்பியின் மனைவி ஆசிரியை. பிள்ளைகள் கான்வென்ட் பள்ளியில் படிக்கின்றனர். இப்போது குழந்தைகளைப் பராமரிக்கவும் உதவிகள் செய்யவும் ஆள் தேவைப்படுவதால் தாயையும் தகப்பனையும் தன்னோடு சேர்த்துக்கொண்டான் அவன். தாயும் தகப்பனும் தங்களுக்கு நல்ல வாழ்க்கைக் கிடைத்துவிட்டதால் தங்கள் சொத்துக்களையும் இளைய மகனுக்கே  எழுதிவைத்துவிட்டனர். மூத்தமகனும் அவனது மனைவி பிள்ளைகளும் வறுமையில் வாடுகின்றனர். 

அன்பானவர்களே, இத்தகைய சம்பவங்கள்  தாவீது ராஜா காலத்திலும் நடந்திருக்கலாம். அவரையே அவரது வீட்டில் இரண்டாம் தரமாக நடத்தியிருக்கலாம். இத்தகைய அனுபவங்களைக் கண்டதால் அவர் கூறுகின்றார்,  "என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்." 

இஸ்ரவேலின் அடுத்த ராஜாவாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதற்காக, கர்த்தரின் அறிவிப்பின்பேரில் சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதின் தகப்பன் ஈசாயின் வீட்டிற்கு வருகின்றார். அவர் ஈசாயிடம் அவனது பிள்ளைகளைக்குறித்து  விசாரித்தபோது அவன் தனது ஏழு பிள்ளைகளை சாமுவேலுக்கு அறிமுகம் செய்தான். ஆனால் அந்த ஏழுபேரில் ஒருவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை. 

அப்போது சாமுவேல் ஈசாயிடம், "உன் பிள்ளைகள் இவ்வளவுதானா?" என்று கேட்ட பிறகுதான் "இன்னும் எல்லோருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான், அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கின்றான்"     என்று பதில் கூறுகின்றான்.   ஆம், ஈசாய் தாவீதை அற்பமாக எண்ணியதால்தான் அவனை முதலில் சாமுவேலுக்கு அறிமுகம் செய்யவில்லை (1 சாமுவேல் 16: 4 - 11). ஆனால் அற்பமாக எண்ணப்பட்டத் தாவீதுதான் தேவனால் பயன்படுத்தப்பட்டார்.

தாயும் தகப்பனும் மட்டுமல்ல, சொந்தங்களும் சில வேளைகளில் நம்மைப் புறக்கணிக்கலாம். பகட்டு, பதவி, பணம், அந்தஸ்து இவைகளுக்கு மட்டுமே மதிப்புக் கொடுக்கும் உலகம் இது. ஆனால் கர்த்தர் மட்டுமே நமது உள்ளத்தையும் சிறுமையையும் நோக்கிப் பார்கின்றவர். ஆம், "சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்." ( சங்கீதம் 9 : 9 ) எனத் தாவீது கூறுவதும் அனுபவத்தால்தான். அவரது சகோதரர்கள் அவரை அற்பமாகத்தான் எண்ணிக்கொண்டனர். 

அன்பானவர்களே, இன்று இதுபோல ஒருவேளை நீங்கள் குடும்பத்தால், உற்றாரால், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களாக, அற்பமாய் எண்ணப்பட்டவர்களாக இருக்கலாம். மனம் கலங்கிடவேண்டாம். "என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்." என்று விசுவாசத்தோடு அறிக்கையிடுங்கள். கர்த்தர் அதிசயமாக மற்றவர்கள் மத்தியில் உங்களை உயர்த்திக் காட்டுவார்.  அற்பமாக எண்ணியவர்களுக்கு அது ஆச்சரியமான காரியமாகத் தெரியும். 


ஆதவன் 🔥 953🌻 செப்டம்பர் 07, 2023 வியாழக்கிழமை 

"எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்." ( மத்தேயு 16 : 23 )

இயேசு கிறிஸ்து கூறும் இன்றைய தியான வசனத்தின்படி பார்ப்போமானால் நம்மில் பலரும் பலவேளைகளில் சாத்தானாகவே இருக்கின்றோம். ஆம், நாம் அனைவருமே பல வேளைகளில் தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனிதருக்கேற்றவைகளையே சிந்தித்துச் செயல்படுகின்றவர்களாக இருக்கின்றோம். 

இன்றைய வசனத்தில் பேதுருவை நோக்கி இயேசு கிறிஸ்து சாத்தானே என்று கூறுகின்றார். இதே பேதுருவை சற்று நேரத்துக்குமுன்னர்தான் அவர் பாராட்டினார். "மக்கள் என்னை யார் என்று கூறுகின்றார்கள்" என்று ஒரு கேள்வியை இயேசு சீடர்களைப் பார்த்து எழுப்பினார். அப்போது அவர்கள்,   "சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்." ( மத்தேயு 16 : 14 )

அப்போது  சீடர்களிடம் அவர், "நீங்கள் என்னை யார் என்று கருதுகிறீர்கள்?" என்று கேட்டபோது பேதுரு, "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றார்." ( மத்தேயு 16 : 16 ) அப்போது இயேசு பேதுருவைப் பார்த்து, "யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்." ( மத்தேயு 16 : 17 ) என்றார். 

ஆனால், இப்போது  அதே பேதுருவைச் சாத்தான் என்று கூறுகின்றார். காரணம், அவர் பிதாவின் சித்தத்துக்கு மாறாக பேசியதுதான். பிதாவின் சித்தத்துக்கு மாறுபட்டு பேசிய இயேசுவின் அன்புச் சீடன் - தலைமைச் சீடன் பேதுருவையே அவர் சாத்தான் என்று கூறினால் நாம் எம்மாத்திரம்? பிதாவின் சித்தத்துக்கு மாறுபட்டு பேதுரு பேசியதற்கு ஒரே காரணம் அவர் இயேசு கிறிஸ்துவின்மேல் கொண்டிருந்த அன்புதான். இயேசு கிறிஸ்து சிலுவைச் சாவு அடைவதை பேதுருவால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து சொல்கின்றார், எந்த துன்பம் வந்தாலும் அல்லது எந்த எதிர்மறையான சூழ்நிலை நமக்கு ஏற்பட்டாலும் பிதாவின் சித்தத்துக்கு மாறுபட்டு நாம் செயல்படக் கூடாது என்பதுதான். அதனையே சிலுவை சுமக்கும் அனுபவம் என்கின்றார். 

அதனால்தான் இன்றைய தியான வசனத்துக்கு அடுத்த வசனமாக இயேசு கூறுகின்றார், "ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்." ( மத்தேயு 16 : 24 ) அதாவது பேதுரு இயேசுவை அன்பு செய்ததுபோல நாம் அன்புச்செய்தாலும் நமக்குத் துன்பங்கள் உண்டு. அதனைச் சுமந்துதான் அவருக்குப் பின்செல்லவேண்டும்.

துன்பங்களிலிருந்து விடுபட குறுக்குவழியில் முயல்வது தேவ சித்தமல்ல; அப்படி நாம் முயலும்போது இயேசு கூறுவதுபோல நாம் சாத்தானாக மாறிவிடுகின்றோம். அப்போது இயேசு நம்மையும் பார்த்து பேதுருவிடம் கூறியதுபோலக் கூறுவார், "நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்" என்று. எனவே நாம் என்ன செய்தாலும் அது தேவனுக்கு ஏற்றதுதானா என சிந்தித்துச் செயல்படவேண்டியது அவசியம். 

கிறிஸ்துவிடம் அன்புகூர்ந்து பல்வேறு பக்திச் செயல்பாடுகளையும் அன்புச் செயல்களையும் நாம் செய்தாலும் பிதாவின் சித்தத்துக்குக் கீழ்படிவது எல்லாவற்றுக்கும் மேலானது என்கிறார் கிறிஸ்து. தேவ சித்தம் அல்லது பிதாவின் சித்தம் அறிந்து செயல்படும் வழியை பரிசுத்த ஆவியானவர் நமக்கு காண்பித்து வழிநடத்திட வேண்டுவோம். அப்போதுதான் நாம் தேவனுக்கு ஏற்றவர்களாக முடியும்.


ஆதவன் 🔥 954🌻 செப்டம்பர் 08, 2023 வெள்ளிக்கிழமை 

"மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது." ( 1 யோவான்  4 : 3 )

இயேசு கிறிஸ்துவின் உருவப்படத்தை கிறிஸ்தவரல்லாத பலரும் தங்கள் வியாபார நிறுவனங்களில் வைத்திருப்பதை நாம் பார்த்திருக்கலாம். அவர்களைப் பொறுத்தவரை மற்ற தெய்வங்களைப்போல இயேசுவும் ஒரு தெய்வம். அவ்வளவே. இயேசு சாமி, கடவுள், இறைவன் என்று பலரும் கூறிக்கொள்ளலாம். இப்படிக் கூறுவது இயேசுவை அறிக்கையிடுவதல்ல; மாறாக,  மனிதனாக உலகினில் வந்த இயேசு கிறிஸ்துவை பிதாவின் ஒரே குமாரனென்றும், அவரே கர்த்தரென்றும் அவராலேயே மீட்பு உண்டு என்று உறுதியாக கூறுவதே அவரை அறிக்கையிடுதல்.    

இன்றைய வசனத்தை உறுதிப்படுத்த யோவான்  தனது இரண்டாவது நிரூபத்தில் இப்படிப்பட்ட வஞ்சக அந்திகிறிஸ்துவின் ஆவியுடைய மனிதர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்று கூறுகின்றார். "மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்." ( 2 யோவான்  1 : 7 )

இப்படி இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல என்று இன்றைய வசனம் கூறுகின்றது. மட்டுமல்ல, "வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது." என்று கூறுகின்றது. இறுதி நாட்களில் அந்திகிறிஸ்துவின் கொடுமையான நாட்கள் வருமென்று வேதம் கூறுகின்றது. ஆனால் அந்த அந்திகிறிஸ்துவின் ஆவி இப்போதும் உலகினில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது என்று இந்த வசனம் கூறுகின்றது. 

இயேசு கிறிஸ்துவைக் குறித்து, "பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." ( பிலிப்பியர் 2 : 11 ) என்று நாம் வாசிக்கின்றோம். இயேசு கிறிஸ்துவே கர்த்தர் என்று நாம் அறிக்கையிடும்போதுதான் நாம் பிதாவாகிய தேவனுக்கு மகிமையைச் செலுத்துகின்றோம். எல்லா தெய்வங்களைப்போல இயேசு கிறிஸ்துவும் ஒருவர் என நாம் கூறிக்கொண்டிருந்தால் நம்மில் அந்திகிறிஸ்துவின் ஆவி இருக்கின்றது என்று பொருள். 

எனவே, "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்." ( 1 யோவான்  4 : 15 )

அன்பானவர்களே,  பலரும் பல வேளைகளில், "எல்லா ஆறுகளும் ஒரே கடலில் சென்று சேர்வதுபோல எல்லா மதங்களும் ஒரே இறைவனையே சென்று சேர பல வழிகளைக் கூறுகின்றன" என்று கூறுவதுண்டு. புரட்சிகரமான கருத்து என்றும், இதுவே உண்மையாக இருக்கமுடியுமென்றும் மனித அறிவுக்குத் தெரியலாம். அப்படியானால் இயேசு கிறிஸ்து "நானே வழி" என்று கூறியிருக்கமாட்டாரே. ஆம், அவரே கர்த்தர்; அவரே வழி. இதனை அறிக்கையிடுவதே இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுவது. 

இப்படி "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்." ( ரோமர் 10 : 9 ) என்று வேதம் குறிப்பிடுகின்றது. 

இதனாலேயே இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்துவின் அன்புச் சீடர் யோவான் "மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது." என்று கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்துவை வேதம் கூறும் முறையில் அறிக்கையிட்டு அவரது இரட்சிப்பை அடைந்திடவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். மற்ற தெய்வங்களைப்போலவே இயேசுவும் ஒரு  சாமி, கடவுள், இறைவன் என்று கூறிக்கொண்டிருப்போமானால் நாம் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி நம்மில் இருக்கின்றது என்றே பொருள். 

  

ஆதவன் 🔥 955🌻 செப்டம்பர் 09, 2023 சனிக்கிழமை 

"கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்". ( 1 இராஜாக்கள் 17 : 14 )

பரிசுத்தவான்களான ஊழியர்களுக்கு உதவுவது குறித்து இன்றைய வசனம் நமக்குக் கூறுகின்றது. 

இன்றைய வசனம் எலியா தீர்க்கதரிசி சாறிபாத் விதவையைப் பார்த்துக் கூறிய வார்த்தைகள். நாட்டில் மிகக் கொடிய பஞ்சம் நிலவியபோது தேவ வழிநடத்துதலின்படி எலியா சாறிபாத் ஊருக்கு வருகின்றார். தேவன் ஏற்கெனவே எலியாவிடம் அங்குள்ள ஒரு விதவையை அவருக்கு உதவிட ஏற்பாடுசெய்திருந்தார். அந்த விதவை பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு ஒருநேர உணவுக்குக்கூட போதாத மாவும் எண்ணையும் இருந்தும் எலியாவுக்கு உதவ முன்வருகின்றாள். 

அவள் கூறுவதைப்  பாருங்கள்:- "பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன்." ( 1 இராஜாக்கள் 17 : 12 ) என்கின்றாள். 

அன்பானவர்களே, அந்தப் பஞ்சகாலத்தை எண்ணிப்பாருங்கள். மிகக் கடுமையான பஞ்சம் அது. அந்தப் பஞ்சத்தால் நல்ல வசதியோடு வாழ்ந்தவர்கள்கூட  உணவில்லாமல் தவித்திருப்பார்கள். இப்போது அவளுக்கும் அவளது மகனுக்கும் ஒருநேரத்துக்கு வயிறார உண்பதற்குக் கூட  மாவில்லை. அதுவும் தீர்ந்தபின்னர் சாகத்தான் வேண்டும் என்கின்றாள்.   ஆனால் அந்த இக்கட்டான வறிய நிலையிலும் எலியாவுக்கு முதல் அப்பத்தைச் சுட்டுக் கொடுக்கின்றாள். 

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்க முடியும். முதலாவது, கர்த்தர் கூறுகின்றார் என்று எலியா கூறியதை அவள் உறுதியாக நம்பினாள். இரண்டாவது, அவளது இரக்க குணமும் தேவ மனிதனுக்கு உதவ வேண்டுமெனும் எண்ணமும். 

ஆம், எலியா கூறியபடி பானையின் மாவும் கலசத்தின் எண்ணெய்யும் குறையவில்லை. குறையாத அந்த மாவு மற்றும் எண்ணையைக்கொண்டு அந்தப் பஞ்சகாலத்தில் அவள் பலருக்கு உதவியிருப்பாள். இவை அனைத்துக்கும் காரணம் அவள் தேவ மனிதனது வார்த்தைகளை விசுவாசித்ததும் அவருக்கு உதவியதும்தான். அன்பானவர்களே, இன்று உண்மையான ஊழியர்கள் குறைந்துபோனாலும் நாம் உதவுவதை தேவன் கணக்கில் வைத்துள்ளார். உண்மையான ஊழியரா  போலியானவரா என்பதனை நாம் சோதித்துப் பார்க்க வேண்டாம். அதனை அறிவது  தேவனுக்குரியது.  ஊழியர்களுக்கு உதவும்போது தேவன் நமக்கும் உதவுவார்; நம்மைக்கொண்டு பலருக்கும் உதவுவார். 

"ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே." ( எபிரெயர் 6 : 10 )

ஆம், பரிசுத்தவான்களுக்கு நமது பொருட்களால் ஊழியம் செய்யும் நமது பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல.


ஆதவன் 🔥 956🌻 செப்டம்பர் 10, 2023 ஞாயிற்றுக்கிழமை 

"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளுவாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்." ( லுூக்கா 16 : 9 )

இந்த உலகத்தில் நாம் பயன்படுத்தும் பல கருவிகள் நன்மையான காரியங்களுக்காக உண்டாக்கப்பட்டவை. ஆனால் அவைகளை பயன்படுத்துபவர்களது நிலைமை அல்லது பயன்படுத்தும் தன்மைக்கேற்ப அவை நல்ல காரியங்களையோ தீமையான காரியங்களையோ செய்கின்றன. உதாரணமாக கத்தியை எடுத்துக்கொள்வோம். கத்தியைக்கொண்டு காய்கறி நறுக்கலாம், கறி, மீன் இவைகளை வெட்டலாம். அதே கத்தியைக்கொண்டு ஒரு மனிதனைக் கொல்லவும் செய்யலாம். 

இதுபோலவே பணம் மற்றும்  உலக செல்வங்கள். உலக செல்வங்கள் நாம் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த உண்டாக்கப்பட்டவை. ஆனால் அவையும் கத்தியைப்போன்றவையே. எனவே அதனை  "அநீதியான உலகப்பொருள்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. கத்தியை எப்படி நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துகின்றோமோ அதுபோல உலகப் பொருட்களை நாம் பயன்படுத்தவேண்டும். 

உதாரணமாக, பணத்தை நாம் நல்ல பல காரியங்களுக்குப் பயன்படுத்தலாம். அதே வேளையில் குடி, பரத்தமை அல்லது வேசித்தனம், ஊழல், லஞ்சம் போன்ற காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தும்போது நாம்  உலகப்பொருளால் சிநேகிதரைச் சம்பாதிக்கின்றோம் என்று பொருள். தேவனுடைய ஊழிய காரியங்களுக்கு மட்டுமல்ல,  தர்மகாரியங்கள்  நல்ல சமூக காரியங்களுக்கும் நமது செல்வத்தைப் பயன்படுத்தலாம்.  

இப்படி நாம் செய்யும்போதுஅநீதியான உலகப் பொருட்களால் நண்பர்களைச் சம்பாதிக்கின்றோம் என்று பொருள்.  இப்படி உலகப் பொருட்களால் நாம் செய்யும் தர்மம்  "பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரணபலனுள்ளதாயும் இருக்கும்." ( 2 கொரிந்தியர் 9 : 12 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஆம், பலர் நமது நிமித்தம் தேவனை ஸ்தோத்திரம் செய்வது நமக்கு நண்பர்களைச் சம்பாதிப்பதுதான். 

அன்பானவர்களே, நாம் நல்ல முறையில் பொருள் சம்பாதிப்பது மட்டுமல்ல; சம்பாதித்த பொருளை நல்ல முறையில் செலவிடவேண்டியதும் அவசியம். அப்படி நல்லவிதமாக செலவிடும்போது நாம் மரிக்கும்போது நம்மை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்ளும் பரிசுத்தவான்கள் இருப்பார்கள்.  எனவேதான் அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

அநீதியுள்ள ஒரு கணக்காபிள்ளையைப் பற்றி (உக்கிராணக்காரன்) இயேசு ஒரு உவமையைக் கூறிவிட்டு இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். அவன் உலகத்தில் தனக்கு நண்பர்கள் வேண்டும் என்பதற்காக தனது எஜமானனுக்கு உலக பொருளில் நஷ்டத்தை ஏற்படுத்தி    நண்பர்களைச் சம்பாதிக்க முயலுகின்றான். நாமோ பரலோக வீட்டில் நமக்கு நண்பர்கள் உண்டாகும்படி உண்மையாக பொருட்களை நல்ல வழியில் செலவுசெய்து நண்பர்களைச் சம்பாதிப்போம்.


ஆதவன் 🔥 957🌻 செப்டம்பர் 11, 2023 திங்கள்கிழமை 

"அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய்." ( 1 சாமுவேல் 10 : 6 )

சாமுவேல் தீர்க்கத்தரிசி சவுலை நோக்கிக் கூறிய வார்த்தைகள் நமக்கு இன்றைய தியானமாக இருக்கின்றது. 

இங்கு சாமுவேல் கூறும் முக்கிய செய்தி "கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; அப்போது நீ  வேறு மனுஷனாவாய்." ஆம், கர்த்தருடைய ஆவி நம்மை வேறுபடுத்தும் ஆவி; நம்மைப் புதிதாக்கும் ஆவி. ஆவிக்குரிய ஆராதனை செய்கின்றோம், நாங்கள் ஆவிக்குரிய சபைக்குச் செல்கின்றோம், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுள்ளோம்  என்று கூறுபவர்கள் முதலில்  வசனம் கூறுவதன்படி உண்மையாகவே தங்கள் வேறு மனிதராகியுள்ளோமா என்று தங்களை நிதானித்துப் பார்க்கவேண்டியது அவசியம். 

அப்போஸ்தலரான பவுல், "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 ) என்று கூறுகின்றார். அதாவது பாவத்துக்கு அடிமையாகியுள்ள நமது உடலும் உள்ளமும் பாவத்துக்கு மரித்து நீதிக்குப்பிழைத்திருக்கும். 

அப்போது உடலாலும், உள்ளத்தினாலும் நாம் பாவத்துக்கு விடுதலையாகியிருப்போம். தேவனுக்குரிய ஆவிக்குரிய ரகசியங்களை அறிகின்றவர்களாக இருப்போம். "மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்." ( 1 கொரிந்தியர் 2 : 11 ) என்கின்றார் பவுல். இப்படி இருக்கும்போது நாம் வேறு மனிதராக இருப்போம். 

பரிசுத்த ஆவியானவரின் உதவியின்றி நாம் நமது சுய பலத்தினால் பாவத்தை மேற்கொள்ள முடியாது. பரிசுத்தமான வாழ்க்கை வாழ முடியாது. சாட்சியுள்ள வாழ்க்கை வாழ முடியாது. இப்படி ஆவியின் பலத்தால் வாழும்போதுதான் நாம் வேறு மனிதனாக முடியம். உலக மனிதர்களால் ஆவிக்குரிய மனிதர்களின் செயல்பாடுகளை முற்றிலும் அறிந்திட முடியாது. காரணம், அவர்கள் இன்றைய வசனம் கூறுவதைப்போல "வேறு மனிதர்கள்."

இதனையே இயேசு கிறிஸ்து, "காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்." ( யோவான் 3 : 8 )

உலகத்து மனிதர்களைப்போல வாழ நாம் அழைக்கப்படவில்லை. மேலான ஒரு வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். அப்படி வாழும்போது மட்டுமே நாம் நமது வீட்டிலும், ஊரிலும், நமது சமூகத்திலும், உலகம் முழுமைக்கும் சாட்சியுள்ளவர்களாக மாற முடியும். 

"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 )

பரிசுத்த ஆவியானவரை, அவரது அபிஷேகத்தை  வேண்டிக் கேட்போம். அப்போது மட்டுமே நாம் வேறு மனிதராகி சாட்சியுள்ள வாழ்க்கை வாழ முடியும். 


ஆதவன் 🔥 958🌻 செப்டம்பர் 12, 2023 செவ்வாய்க்கிழமை 

"கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்." ( சங்கீதம் 25 : 14 )

கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் ஆராதனை வேளைகளில் பக்திப்பரவசமாய் இருந்தாலும் அதன்பின்னர் உலக வாழ்க்கை என்று வரும்போது கெட்டவார்த்தைகள் பேசுவதும் கெட்டச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும், உலக துன்மார்க்கர்களைப்போல பல்வேறு முறைகேடான வாழ்க்கை வாழ்வதும் நாம் உலகினில் பார்க்கக்கூடிய ஒன்றுதான். 

இதற்குக் காரணம், அவர்கள் பக்தியுள்ளவர்களாக இருக்கின்றார்களேத் தவிர பரிசுத்தமுள்ளவர்களாக வாழவில்லை. காரணம் அவர்களிடம் தெய்வபயம் இல்லை. எனவே அவர்கள் வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் இன்றைய வசனம் கூறுகின்றது, "கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது" என்று. அப்படி அவருக்குப் பயந்த வாழ்க்கை வாழும் மக்களுக்குத்தான் அவர் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார் என்கின்றது இன்றைய வசனம். 

அது என்ன ரகசியம்? அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." ( கொலோசெயர் 1 : 27 )

ஆம், கர்த்தரை அறியாத பிற இன மக்களிடம் கர்த்தரது  மகிமை வெளிப்பட்டு தனது மக்களை வேறுபடுத்திக் காட்டியது. அந்த மகிமை எப்படிப்பட்டது என்பதை  தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருப்பதே அந்த இரகசியம்." மகிமையான மறுவுலக வாழ்க்கையின் நம்பிக்கை நமக்கு ஏற்படும்படி இந்த உலக வாழ்க்கையிலேயே கிறிஸ்து நமக்குள் இருந்து செயல்புரிவார். அப்படி அவர் செயல்புரியும்போது நாம் மாறுபட்ட மனிதர்களாக வாழ்வோம். 

இதனை மக்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கவே தன்னை தேவன் தெரிந்துகொண்டார் என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். "ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு," ( கொலோசெயர் 1 : 25 ) என்கின்றார். 

கர்த்தருக்குப் பயந்த வாழ்க்கை வாழும்போது, அல்லது அதற்கான முயற்சிகள் எடுக்கும்போது இந்த ரகசியத்தின்படி கிறிஸ்து நமக்குள் வந்து செயல்புரிவார். "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. இப்படி இயேசு கிறிஸ்து நமக்குள் வந்து விருந்துண்பதே அந்த ரகசியம். 

விண்ணையும் மண்ணையும் சர்வ லோகத்தையும் படைத்து ஆளும் தேவன் நமக்குள் வந்து தங்கி நம்மோடு உணவருந்துவேன் என்கின்றார். அப்படி அவர் நமக்குள் வந்து தங்கும்போது அவர் அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். அந்த உடன்படிக்கை கற்களினால் எழுதப்பட்ட பழைய உடன்படிக்கையைப்  போன்றதல்ல. எபிரெய நிருப ஆசிரியர் கூறுகின்றார், "அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் " ( எபிரெயர் 10 : 16 ) 

கர்த்தருக்குப் பயந்து பரிசுத்தமான வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். ஆம், "கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்".


ஆதவன் 🔥 959🌻 செப்டம்பர் 13, 2023 புதன்கிழமை 

"என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 1 : 3 )

நமது தேவன் உலக மனிதர்களைப்போல மன வைராக்கியம் கொண்டவரல்ல; மனிதர்களது பலவீனம் அவருக்குத் தெரியும். எவ்வளவுநாள் நாம் அவரை மறந்து அவரைப் புறக்கணித்து வாழ்ந்திருந்தாலும் அவரிடம் இரகங்களும் மன்னிப்புகளும்  உண்டு என்பதால் நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்கின்றார்.  எனவேதான் கூறுகின்றார், "என்னிடத்தில் திரும்புங்கள் ; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன்" என்று. 

தானியேல் புத்தகத்தில் நாம் வாசிக்கலாம், "......அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடவாமல் நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு." ( தானியேல் 9 : 9, 10 )

அன்பானவர்களே,  எண்ணிமுடியாத நாட்களாய் அவரை நாம் மறந்து வாழ்ந்திருக்கலாம். நமது வயதும் மிக அதிகமாகியிருக்கலாம். ஆனால் அவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு என்பதால், அவரிடம் நாம் முழு உள்ளத்தோடு திரும்பும்போது நம்மை அவர் ஏற்றுக்கொள்கின்றார். 

ஆனால் இன்று பெரும்பாலான மக்கள் முன்பு நான் வாழ்ந்ததுபோல  தங்களது முகத்தை தேவனை நோக்கித் திருப்பாமல் தங்களது முதுகை தேவனுக்குக் காட்டித்  தான்தோன்றித்தனமாக வாழ்கின்றார்கள். தங்கள் வாழ்வில் துன்பங்கள் வரும்போது மட்டும் தேவனை நோக்கி முறையிடுகின்றார்கள். இதனை எரேமியா மூலம் தேவன் கூறுகின்றார், "அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள்." ( எரேமியா 2 : 27 ) இதனைத் தேவன் எனக்கு உணர்த்தினார். இந்த மக்களுக்கு இதனைத் தெளிவுபடுத்தவேண்டும்.

எரேமியா கூறுவதுபோல,  எனது முகத்தையல்ல,  முதுகையே  அவருக்குக் காட்டியவனாக  வாழ்ந்துவந்தேன். கம்யூனிச மாதப் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்து மக்களை துன்மார்க்க நெறிக்கு நேராகத் திருப்பும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் எனது 36 வது வயதில் என்னைவிட 10 வயது குறைவான ஒரு சகோதரன் மூலம் கிறிஸ்துவை அறிந்து அவருக்கு நேராக எனது முகத்தைத் திருப்பினேன். என்னிடத்தில் திரும்புங்கள்,  அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லியபடி என்னிடம் அவரும் திரும்பினார்.  ஆம், தேவன் வாக்கு மாறாதவர். முழு மனதுடன் அவரை நோக்கிப் பாருங்கள்; கர்த்தர் உங்களிடம் திரும்புவார். 

இப்படி தங்களது தேவைக்கு மட்டும் தேவனைப் பயன்படுத்த விரும்புபவர்களை தேவன் கவனிப்பதில்லை. முழு மனதோடு தங்கள் பழைய தவறுகளை அறிக்கையிட்டு அவரிடம் திரும்பும்போது மட்டுமே அவர்களது குரலுக்குத் தேவன் செவிகொடுப்பார். 

தான் உருவாக்கிய மக்கள் தன்னை மறந்து வாழ்வதையும், தெய்வபயமின்றி அநியாயமான காரியங்களில் ஈடுபட்டு வருவதையும் கண்டு மனம் வெதும்பி  தேவன் கூறுகின்றார், "ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்." ( எரேமியா 2 : 32 )

எந்த மணப்பெண்ணும் தனது மண ஆடையையும் திருமண நகைகளையும் அணிய மறக்கமாட்டாள். ஆனால் தனது மணவாட்டியாக தான் தெரிந்துகொண்ட மக்கள் தன்னை அப்படி  மறந்துவிட்டார்கள் என்கின்றார் கர்த்தர். 

அன்பானவர்களே, நாம்தினமும் ஜெபித்து, ஆலய வழிபாடுகளில் பக்தியுடன் கலந்துகொள்வது மட்டும் போதாது, அவரிடம் முழு மனதுடன் திரும்பவேண்டும். அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


ஆதவன் 🔥 960🌻 செப்டம்பர் 14, 2023 வியாழக்கிழமை 

"இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்?"  ( யோவான் 6 : 9 )

ஒருமுறை இயேசு கிறிஸ்து மக்களுக்கு போதித்தபோது திரளான மக்கள் கூட்டம் அவரது போதனையைக் கேட்கக் கூடியது. அவர்களது ஆன்மீக பசிக்கு உணவளித்த இயேசு, அவர்களது வயிற்றுப் பசிக்கும் உணவிட எண்ணினார். எனவே தனது சீடனாகிய பிலிப்புவிடம், "இந்த மக்களுக்கு சாப்பிட அப்பங்களை நாம் எங்கே வாங்கலாம்? என்று கேட்கின்றார். தான் செய்யப்போகும் அற்புதத்தை அறிந்தே இயேசு இப்படிக் கேட்டார். அப்போது பிலிப்பு, "இருநூறு பணத்துக்கு அப்பம் வாங்கினாலும் இவர்களுக்குப் போதாதே என்றார். 

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு சீடனான அந்திரேயா, "இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்?" என்றார். 

அன்பானவர்களே, "இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்?" "இருநூறு பணத்துக்கு வாங்கினாலும் போதாதே" என்று தேவனது வல்லமையினை அறியாமல் சீடர்கள் அன்று கூறியதுபோல, நாமும் சிலவேளைகளில்  கூறிக்கொண்டிருக்கின்றோம். அதாவது நாம் தேவனையும் அவரது வல்லமையினையும் பெரிதாக பார்க்காமல் பிரச்சினையையே பெரிதாக எண்ணிக்கொள்கின்றோம்.  எனவே நம்மால் தேவனால் இதனைச் செய்து முடிக்க முடியுமென்று நம்ப முடிவதில்லை. அனால் இயேசு கிறிஸ்து அந்த இரண்டு மீனையும் ஐந்து அப்பத்தையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததுமின்றி பன்னிரண்டு கூடை நிறைய அப்பங்களும் மிஞ்சியிருக்கும்படி அற்புதம் செய்தார். 

இதுபோலவே அன்று இஸ்ரவேல் மக்களும், எகிப்தில் நாங்கள் அடிமைகளாய் இருந்தாலும் இறைச்சியைச் சாப்பிட்டுத் திருப்தியாக இருந்து  வந்தோம். இந்த வனாந்தரத்தில் எங்களுக்கு இறைச்சியைக் கொடுப்பவர் யார் என்று அழுதார்கள். ( எண்ணாகமம் 11) மோசே கர்த்தரை நோக்கி முறையிட்டார். அதற்குக் கர்த்தர், "நீங்கள் ஒரு நாள் இரண்டு நாளல்ல, ஒரு மாதமளவும் இறைச்சியைச் சாப்பிடுவீர்கள் என்றார்.  

இதனை மோசேயாலேயே நம்ப முடியவில்லை. இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் கூறியதுபோலவே மோசேயும் கூறினார்.  "என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே. ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான்."( எண்ணாகமம் 11 : 21, 22 )

"அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்." ( எண்ணாகமம் 11 : 23 ) அதுபோல அந்த மக்கள் சாப்பிட தேவையான இறைச்சியைக் கொடுத்தார். 

அன்பானவர்களே, கர்த்தரது கை குறுகிய கையல்ல. அதனை நாம் விசுவாசிக்கவேண்டும். "போதாதே". "எம்மாத்திரம்", "போதுமா?", "முடியுமா?"  என்று நாம் அவிசுவாசமாகக்  கூறிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. 

நமது மாத வருமானம் குறைவாக இருக்கலாம், உடல்நிலை பலவீனமாக இருக்கலாம், தீராத வியாதி அல்லது மருத்துவர்களால் இனி பிழைக்கவைக்க முடியாது என்று கைவிடப்பட்ட நிலையிலிருக்கலாம். எந்த நிலையிலும் விசுவாசத்தை விடாமல் கர்த்தரையே நோக்கிப் பார்ப்போம். அப்போது, "கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய்." என்று கூறி நமக்கு அற்புதம் செய்யும் இயேசுவின் கரத்தை நாம் காண முடியும். 


ஆதவன் 🔥 961🌻 செப்டம்பர் 15, 2023 வெள்ளிக்கிழமை 

"குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன்." ( ஏசாயா 42 : 16 )

தேவனை அறியும் அறிவில் நாமெல்லோரும் குறையுள்ளவர்கள். ஆவிக்குரிய சரியான பாதையினைச் சரியாக அறியாதக் குருடர்கள். ஆனால் நாம் அவரை அறியவேண்டும், ஆவிக்குரிய வாழ்வில் வளரவேண்டும் என்று விரும்பினால் இன்றைய வசனம் கூறுவதுபோல நம்மை அவர் நாம் அறியாத வழியிலே நடத்தி, நமக்குத் தெரியாத பாதைகளில் அழைத்துக்கொண்டுவந்து, நமக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவார். இப்படிச்  செய்து, நம்மைக்  கைவிடாதிருப்பார். 

இதனையே அடுத்த மூன்று வசனங்களுக்குப் பின்னர் நாம் வாசிக்கின்றோம், "என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்?" ( ஏசாயா 42 : 19 )

அவருக்குத் தாசனாக வாழ முயலுவோர்தான் குருடர்கள், அவரது தூதராக பணி  செய்ய விரும்புவோர் குருடர்கள் , உத்தமமான வாழ்க்கை வாழ்வோர் குருடர்கள், கர்த்தருக்கு ஊழியம் செய்வோர் எல்லோருமே சரியான பாதை தெரியாத குருடர்கள்தான். ஆனால் அவர்களது ஆர்வத்தையும் முயற்சிகளையும்  தேவன் பார்க்கின்றார். எனவேதான் அவர்களுக்கு  இருளான பாதையில் ஒளியாகவும், கோணலான பாதையினை நேராகவும் மாற்றி உதவுவேன் என்கின்றார் கர்த்தர். 

சரியான பாதை தெரியாத குருடர்களான நாம் அவரை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் போதும், அவர் நம்மை நோக்கி ஓடிவர ஆர்வமாக இருக்கின்றார். ஆனால் இன்று பொதுவாகப் பலரும் அவரை நோக்கிப் பார்ப்பதுபோலத் தெரிந்தாலும் அது தங்களது உலகத் தேவைக்கேத்தவிர அவருக்காக அல்ல. எனவே அவர் அமைதியாக இருக்கின்றார். 

ஒரு பெண்ணை உண்மையாகக் காதலிப்பவன் அந்தப் பெண் என்னென்ன வரதட்சணையாகக் கொண்டு வருவாள் என்று எதிர்பார்க்க மாட்டான். அதுபோல பெண்ணும் உயர்ந்த பதவி, பணம், தான் காதலிக்கும் மணமகனிடம் இருக்கின்றதா என்று கணக்குப் பார்க்க மாட்டாள். அதாவது, காதலர்களுக்கு தங்கள் காதலிக்கும் நபரோடு சேர்ந்து வாழவேண்டும் எனும் ஒரே எண்ணம்தான் இருக்கும். இதே எண்ணமும் ஆர்வமும் தேவனை அடைவதில் நம்மிடம் இருக்குமானால் இன்றைய வசனம் கூறுவதுபோல தேவன் நம்மை நடத்துவார். 

ஐயோ, என் பிள்ளை என்னிடம் வர முயலுகின்றானே / முயலுகின்றாளே என்று அவர் எண்ணுவார். தடையாக இருக்கும் பொருட்களைக் கடந்து சிறு குழந்தை தன்னிடம் வர முயலுவதைத்  தாய் காணும்போது அக்குழந்தையின் குறுக்கே இருக்கும் தடைகளை அகற்றி உதவுவதுபோல தேவன் நமக்கு உதவுவார்.  நமது பாதைக்கு ஒளியாகவும் தடையாக இருக்கும் கோணலான வழியை நேராகவும் மாற்றி உதவிடுவார்.

அவருக்குத் தாசனாக, தூதனாக, உத்தமனாக,   ஊழியக்காரனாக வாழ்வோமானால் நாம் நடக்கவேண்டிய சரியான பாதையில் அவர் நம்மை நடத்துவார். 


ஆதவன் 🔥 962🌻 செப்டம்பர் 16, 2023 சனிக்கிழமை 

"சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்." ( மாற்கு 15 : 21 )

அன்பானவர்களே, தேவனுக்காக என்று நாம் செய்யும் எந்தக் காரியமாக இருந்தாலும் அது அன்பினால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும் எனும் செய்தியை இன்றைய வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ள சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்பவன் அன்பினால் கிறிஸ்துவுக்கு உதவவில்லை. மாறாக, கட்டாயத்தின்பேரில் கிறிஸ்துவுக்காகச் சிலுவையைச் சுமந்தான் என்று கூறப்பட்டுள்ளது. அவன் யூதர்களுக்குப் பயந்து சிலுவையைச் சுமக்க உதவினான். 

இதுபோலவே பல மனிதர்களை நாம் பார்க்கலாம்.  சிலர் தேவனுக்கென்றும் ஆலயப் பணிகளுக்கென்றும் தேவ அன்பினால் ஏவப்பட்டுச் செய்யாமல் கட்டாயத்தின்பேரில் சில காரியங்களைச் செய்கின்றனர். கட்டாயத்தின்பேரில் சில பக்தி காரியங்களில் ஈடுபடுகின்றனர். எந்தவிதக்  கட்டாயமுமின்றி அன்பினால் ஏவப்பட்டு நாம் செய்யும் செயல்களே தேவனால் அங்கீகரிக்கப்படும். 

ஒரு சிறு நகரத்தில்  அந்தப் பகுதியிலுள்ள ஆலய பிரதிஷ்டைகாக ஊர் இளைஞர்கள் நன்கொடை வசூலித்தனர். அந்த ஊரில் கடைவைத்திருந்த கடை முதலாளியையும் வற்புறுத்தி ஒரு பெரிய தொகையை எழுதவைத்தனர். ஊராரைப் பகைக்கவேண்டாம் என்று கருதி அவரும் பெரிய தொகையினை நன்கொடையாகக் கொடுக்க முன்வந்தார். பின்னர் அவர் ஒருவரிடம் கூறியதை நான்  கேட்டேன். " வருஷம்தோறும் இது பெரிய தொந்தரவாய் இருக்கிறது....என்ன செய்ய அவர்கள் கேட்பதை அழுது தொலைக்கவேண்டியிருக்கிறது ..." என்று சலித்துக்கொண்டார். 

பிரதிஷ்டை பண்டிகையன்று அதிகம் நன்கொடைகொடுத்த இந்த முதலாளியை அழைத்து பொன்னாடைபோர்த்தி கவுரவித்தார்கள். மனிதர்கள் மத்தியில் அவர் பெருமைப்படுத்தப்பட்டார். இதுவும் அடுத்த ஆண்டிலும் அவர் இப்படி உதவிடவேண்டும் எனும் எண்ணத்தில்தான்.    அன்பானவர்களே,  இப்படிக் கட்டாயத்தின்பேரில் பல காரியங்களை நாமும் செய்யலாம். இவைகள் கட்டாயத்தின்பேரில் சீமோன் சிலுவை சுமந்த காரியம் போன்றவைகள்தான். 

ஆனால் உலக மக்களுக்கு அன்பினால் செய்யும் செயலையும் கட்டாயத்தின்பேரில் செய்யும் செயலையும் பகுத்தறிய முடிவதில்லை. இயேசு கிறிஸ்து பரிசேயன் ஒருவனது வீட்டில் பந்தியிருக்கும்போது பாவியாகிய பெண் ஒருவர் வந்து அவரது பாதங்களைக் கண்ணீரால் நனைத்து தனது கூந்தலால் துடைத்தாள். அவரை விருந்துக்கு அழைத்த சீமோன் இதுகுறித்து மனதுக்குள், "இவர் தீர்க்கதரிசியாக இருந்தால் தன்னைத் தொடும் பெண் பாவி என்று அறிந்திருப்பாரே" என எண்ணினான். 

அவனது எண்ணத்தைப் புரிந்துகொண்ட இயேசு அவனுக்குச் சில விளக்கங்களைக் கூறிவிட்டு இறுதியில் கூறினார்,  "ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே;  எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான்" ( லுூக்கா 7 : 47 )  

ஆம் அன்பானவர்களே, அன்பினால் செய்யும் சிறிய செயலையும் தேவன் அங்கீகரிப்பார். கட்டாயத்தின்பேரில் செய்யப்படும் எத்தனைப் பெரிய செயலையும் அவர் கணக்கில் கொள்வதில்லை. எனவே சிரேனே ஊர் சீமோனைப்போல வலுக்கட்டாயத்தின்பேரில் எதனையும் செய்யாதபடி எச்சரிக்கையாய் இருப்போம். நாம் எதனையும் தேவனுக்கென்று செய்யும்போது இதனையும் எண்ணிக்கொள்ளவேண்டும். ஊராரின் கட்டாயத்தின்பேரில் நாம் சில காரியங்களை இப்படிச் செய்யவேண்டியிருக்கலாம். ஆனால் அதனை நாம் உணர்ந்திருக்கவேண்டும் அப்படிச் செய்யும் செயலை நாம் உடன்தானே மறந்துவிடுவது நல்லது. 

ஆனால் கிறிஸ்துவின்மேல் மெய்யான அன்புகொண்டு நாம் செய்யும் சிறிய செயலையும் அவர் கணக்கில்கொள்வார். நமது பாவங்களையும் மன்னிப்பார். 


ஆதவன் 🔥 963🌻 செப்டம்பர் 17, 2023 ஞாயிற்றுக்கிழமை 

"புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்." ( எபிரெயர் 12 : 24 )

இன்றைய வசனம் சில செய்திகளை நமக்குத் தருகின்றது. ஒன்று இரத்தத்தில் உயிர் இருப்பதால் (லேவியராகமம் 17: 11, 14) அது பேசும் தன்மை உள்ளதாக இருக்கின்றது.  அப்படிப் பேசக்கூடியதாக இருப்பதால் ஆபேலுடைய இரத்தமும் பேசியது. இதனை நாம் ஆதியாகமத்தில் வாசிக்கின்றோம். தேவன் காயினைப் பார்த்துக் கூறுகின்றார், "என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது." ( ஆதியாகமம் 4 : 10 )

ஆம், ஆபேலுடைய இரத்தம் மனித இரத்தமானதால் அது தன்னைக் கொலைசெய்த காயினுடைய பாதகத்தை தேவனுக்கு எடுத்துச் சொல்லி முறையிட்டது. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனது இரத்தத்தால் நமது பாவங்களைக் கழுவுகின்றார். மட்டுமல்ல நாம் பாவம்செய்யும்போது தேவனிடம் பரிந்து பேசுகிறார். 

ஆபேலுடைய இரத்தம் தனக்காக நியாயம் கேட்டது. இயேசு கிறிஸ்துவின் இரத்தமோ சாகல உலக மக்களை பரிசுத்தமாக்கிட அவர்களுக்காக பரிந்து பேசுகின்றது. எனவே, "(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது."( கொலோசெயர் 1 : 14 )

மேலும், "அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று." ( கொலோசெயர் 1 : 20 )

இதனையே இன்றைய வசனம் ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள் என்று கூறுகின்றது. ஆம், "நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது." ( எபிரெயர் 9 : 22 )

மேலும் பரிசுத்த மார்க்கத்தில் நாம் நுழைவதற்கு இயேசு கிறிஸ்து தனது இரத்தத்தால் பாதையை உண்டாக்கியுள்ளதாலும்  அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும் உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயதோடும் அதில் சேரக்கடவோம் என்று கூறப்பட்டுள்ளது. (எபிரெயர் 10 : 20 ) 

இப்படி ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மேன்மையினை அறிந்தவர்களாக அவரது இரத்தத்தால் கழுவப்பட நம்மை முழுவதுமாக அவருக்கு ஒப்புக்கொடுப்போம். அப்போது  அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாகும் மட்டுமல்ல நமது விசுவாசம் பூரணப்படும். அந்த நிச்சயத்தோடு பரிசுத்த ஸ்தலத்தில் அவரோடு சேரமுடியும்.   

  

ஆதவன் 🔥 964🌻 செப்டம்பர் 18, 2023 திங்கள்கிழமை

"நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்." ( சங்கீதம் 3 : 5 )

இற்றைய சங்கீத தியான வசனம் எழுதப்பட்ட பின்னணியைப் பார்த்தால்தான் இதன் அருமை தெரியும்.  நாம் சுகமாக மெத்தையில் படுத்துத் தூங்கி எழுந்துகொண்டு,  "நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்" என்று கூறுவதுபோல தாவீது இதனைக் கூறவில்லை. மாறாக, தாவீதின் மகன் அப்சலோம் தாவீதைக் கொல்லுவதற்குத் தேடி அலைந்துகொண்டிருக்கும்போது அவனுக்குத் தப்பியோட முயன்ற தாவீது குகைகளிலும் மலை இடுக்குகளிலும் மறைந்து வாழும்போது கூறிய வார்த்தைகள் இவை. 

சரியான உணவும்,  தூக்கமும்,  ஓய்வுமின்றி  அலைந்து களைப்படைந்து, கிடைத்த இடத்தில் படுத்து உறங்கியெழுந்து தாவீது இன்றைய வார்த்தைகளை அறிக்கையிடுகின்றார். தூங்கி விழிப்பேனா இல்லை தூங்கும்போதே எதிரி என்னைக் கொன்றுவிடுவானோ எனும் அச்சப்படத்தக்க சூழ்நிலையில் தாவீது உறங்கி எழுந்து மகிழ்ச்சியுடன் கூறுகின்றார், "படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்" என்று. 

இதற்கு முந்தின இரண்டு வசனக்குமுன் அவர் கூறுகின்றார், "ஆனாலும் கர்த்தாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்." ( சங்கீதம் 3 : 3 ) ஆம், கர்த்தர் தன்னைக் கேடகத்தால் தாங்குகின்றார் என்பதைத் தாவீது அறிந்திருந்ததால்தான் அவரால் நிம்மதியாகத் தூங்கமுடிந்தது. எனவே, "எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்." ( சங்கீதம் 3 : 6 ) என்கின்றார் தாவீது. 

புதிய ஏற்பாட்டிலும் அப்போஸ்தலரான பேதுருவை ஏரோது கொலைசெய்யும் நோக்கத்துடன் பிடித்து சிறையிலடைத்து வைத்திருந்தான். அதற்கு முன்னர்தான் அவன் யோவானின் சகோதரனாகிய யாக்கோபைக் கொலைசெய்திருந்தான். அது யூதர்களுக்குப் பிடித்திருந்ததால் பேதுருவையும் கொலைசெய்ய எண்ணிச் சிறையில் அடைத்து வைத்திருந்தான். 

பொதுவாக கொலைசெய்யப்படப்போகும் கைதிகளுக்கு தண்டனை நிறைவேறப்போகும் நாளுக்கு முந்தின நாள் இரவில் தூக்கம் வராது என்கின்றனர் சிறை அதிகாரிகள். ஆனால் நாம் வாசிக்கின்றோம் அப்போஸ்தலரான பேதுரு எந்தக் கவலையுமின்றி சுகமாகச் சிறையில் தூங்கிக்கொண்டிருக்கின்றார். இதை, "ஏரோது அவரை  வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக்கொண்டிருந்தார்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 12 : 6 ) என நாம் வாசிக்கின்றோம். 

தாவீது கூறுவதுபோல இங்கு பேதுருவையும் தேவன் தனது தூதர்களை அனுப்பிச் சிறையிலிருந்து விடுவித்தார். 

அன்பானவர்களே, எந்தக் கவலை, துன்பம், நோய் வந்தாலும் கவலைப்படாமல் தாவீது கூறுவதுபோல "கர்த்தாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்." என அறிக்கையிடுவோம்.  தேவன் மனிதர்களிடம் வேற்றுமை பாராட்டுபவரல்ல, தாவீதை விடுவித்தனர், பேதுருவோடு இருந்து அவரை அதிகாரத்தின் கைகளுக்குத் தப்ப வைத்தவர் நம்மையும் விடுவிப்பார். 


ஆதவன் 🔥 965🌻 செப்டம்பர் 19, 2023 செவ்வாய்க்கிழமை

"உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்." ( ஏசாயா 51 : 2 )

முதுபெரும் தந்தையாகிய ஆபிரகாமையும் அவரது மனைவியாகிய சாராளையும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ  இன்றைய வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.

ஆபிரகாமின் தகப்பனாகிய தேராகு மற்றும் அவரது முன்னோர்கள் கர்த்தரை அறிந்தவர்கள்  அல்ல; அவர்கள் வேறு தெய்வத்தினை வழிபாட்டு வந்தனர். "ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்" ( யோசுவா 24 : 2 ) என்று யோசுவா நூலில் வாசிக்கின்றோம். ஆனால் தேராகு இறந்தபின் கர்த்தர் ஆபிரகாமை அழைத்தார்.

"கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்."( ஆதியாகமம் 12 : 1, 2 ) என்றார். 

இப்படி, "நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்." ( யோசுவா 24 : 3 ) என்கின்றார் கர்த்தர். 

இன்றைய வசனத்தில் இந்த ஆபிரகாமையும் அவன் மனைவியாகிய சாராளையும் நோக்கிப்பாருங்கள் என்று கூறப்பட்டுள்ளது. கர்த்தரை அறியாமல் வேறு தெய்வ வழிபாட்டில் வளர்க்கப்பட்ட ஆபிரகாம் கர்த்தர்மேல் விசுவாசத்தில் வல்லவரானார். எனவே, "அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

நமது தேவன் உள்ளங்களை ஊடுருவிப் பார்கின்றவர். ஆபிரகாமின் உள்ளான மனது அவருக்குத் தெரிந்திருந்ததால் அவரை அழைத்து ஆசீர்வதிக்கின்றார் தேவன். ஆபிரகாம் தன்னை தேவன் பெருகச் செய்யவேண்டுமென்று மன்றாடவில்லை. ஆனால் அவரது உண்மையினையும் உத்தமத்தையும், விசுவாசத்தையும் தேவன் கனம் பண்ணி ஒருவனாகிய அவரை ஒரு தனித் தேசமாகவே மாற்றிவிட்டார். ஆம்,  இஸ்ரவேல் தேசம் எனும் மொத்த நாடே   ஆபிரகாமின் சந்ததிகளால்  உண்டானது.  

எனவேதான், "உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்" என்று இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது. தேவனை விசுவாசிக்கும்போது அவர் ஒருவரை எப்படி கனம் பண்ணுகிறார் என்பதற்கு ஆபிரகாம் நமக்கு ஒரு உதாரணம். என்வேதான் விசுவாசத்தைப்பற்றி கூறும்போது எபிரெய நிருப ஆசிரியர், "ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்." ( எபிரெயர் 11 : 12 ) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, இன்றைய வசனம் இதையே நோக்கிப்பாருங்கள் என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. ஆபிரகாம், சாராள் இவர்களது விசுவாசத்தை நாம் நோக்கிப்பார்ப்போம். அதனை நாமும் நமது வாழ்வில் கடைப்பிடிக்க முயலுவோம்; கர்த்தர் நம்மையும்  ஆசீர்வதிப்பார்.  


ஆதவன் 🔥 966🌻 செப்டம்பர் 20, 2023 புதன்கிழமை

"எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்." ( ரோமர் 2 : 12 )

கிறிஸ்துவின் நியாயத் தீர்ப்பினைக்குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. மோசே வழியாக தேவன் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்த கட்டளைகளே நியாயப்பிரமாணக் கட்டளைகள். 

ஒருமுறை ஒரு நண்பர் என்னிடம் நியாயத் தீர்ப்பைக்குறித்து சொல்கிறீர்களே, கிறிஸ்துவை அறியாத மக்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்களே அவர்களை தேவன் எப்படி நியாயம்தீர்க்க முடியுமென்று கேட்டார். நான் அவருக்கு இன்றைய வசனத்தைத்தான் கூறி விளக்கினேன். எவர்கள் கட்டளைகள் எதுவும் இல்லாமல் பாவஞ்செய்கிறார்களோ அவர்கள் கட்டளைகள் இல்லாமலே கெட்டுப்போவார்கள்; அதுபோல கட்டளைகளுக்கு உட்பட்டவர்களாக வாழும் நாமோ அந்தக் கட்டளைகளின் அடிப்படையில் தீர்ப்படைவோம். 

"தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்." ( ரோமர் 2 : 6 ) என்று கூறப்பட்டுள்ளது. மனிதர்களில் இருதயத்தில் தேவன் தனது பிரமானங்களை எழுதி வைத்துள்ளார். இதனையே, "அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்." ( ரோமர் 2 : 15 ) என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்." ( ரோமர் 2 : 13 ) ஆம், நாம் கிறிஸ்தவர்களாக வாழ்வதால் தேவனது கட்டளைகளை அறிந்தவர்களாக இருக்கலாம். ஆனால் கேட்டால் மட்டும் போதாது, அவற்றின்படி வாழவேண்டியது அவசியம். அப்படி வாழும்போதே நாம் தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகின்றோம். 

நியாயப்பிரமாண கட்டளைகளை வாழ்வில் கேட்டறியாத பிற மக்கள் தங்களது மனச்சாட்சியின்படி வாழும்போது தங்களை அறியாமலேயே தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்கள் ஆகின்றனர். எனவேதான் பவுல் அப்போஸ்தலர், அவர்கள் அப்படி நீதியான வாழ்க்கை வாழும்போது  நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள் என்கின்றார். 

அன்பானவர்களே, பிற மக்களைவிட நியாயப்பிரமாண கட்டளைகளைப் பெற்று அவற்றின்படி வாழ உதவக்கூடிய பரிசுத்த ஆவியையும் பெற்றுள்ள நாம் எவ்வளவு பேறுபெற்றவர்கள்!! எனவே அவரது கட்டளைகளை மீறும்போது தேவனது நியாயத்தீர்ப்பு கட்டளைகளை அறிந்த நமக்கு மிக அதிகமாகவே இருக்கும் எனும் அச்சத்தோடு நாம் வாழ வேண்டியது அவசியம்.  ஆம், மிகுதியாக கொடுக்கப்பட்டவனிடம் மிகுதியாகக் கேட்கப்படும்.

"என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்." ( ரோமர் 2 : 16 ) என்று நமக்கு எச்சரிப்போடு கூட அறிவுரையாகக் கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம்மை தேவனுக்கேற்ற பாதையில் நடத்திடவும் நியாயத்தீர்ப்பு நாளில் நாம் தண்டனைக்குத் தப்பிடவும்  வேண்டுதல் செய்வோம்.


ஆதவன் 🔥 967🌻 செப்டம்பர் 21, 2023 வியாழக்கிழமை

"அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 14 )

நாம் பெரும்பாலும் மனச்சோர்வடையக் காரணம் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுபார்ப்பதும், நம்மிடம் இல்லாததை எண்ணிக் கலங்குவதும் நம்மை மற்றவர்களைவிட குறைவாக மதிப்பிடுவதும்தான். இன்றைய வசனத்தின் பின்னணி அப்படிப்பட்டதுதான். ஆனால் தேவன் தனது நேசமானவர்களுக்கு பலத்தைக்கொடுத்து இத்தகைய சூழ்நிலைகளில் உதவுகின்றார். 

மீதியானியருக்கு அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இஸ்ரவேலரின் பயிர்கள் விளைத்து அறுவடையாகும் சமயத்தில் மீதியானியர் வந்து அவைகளைக் கைப்பற்றிக் கொண்டுச்சென்று விடுவர். இத்தகைய சூழலில்  கிதியோன் தனது வயலில் கோதுமை அறுவடைசெய்து மீதியானியருக்குப் பயந்து தனது ஆலையின் அருகிலேயே அதனைப் போரடித்துகொண்டடிருந்தார். ஆனால் கர்த்தரோ இந்தக் கிதியோனைக்கொண்டு இஸ்ரவேலை மீட்கச் சித்தமானார். 

"கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 12 ) பின்னர் மீதியானியருக்கு எதிர்க்க கிதியோனைத் தான் தேர்ந்துகொண்டதை அறிவிக்கின்றார். ஆனால் கிதியோன் முதலில் தனது இயலாமையினையும் வலுவின்மையையும் தெரிவித்து இந்தப் பொறுப்பை ஏற்றுகொள்ளத் தயங்கினார். காரணம் மீதியானியர் போரில் வல்லவர்கள், பராக்கிரமசாலிகள்; அவர்களோடு நாம் எப்படி எதிர்த்துப்  போரிடமுடியும் என கிதியோன் தயங்கினார். அப்போது கர்த்தர், "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்."

ஆம் அன்பானவர்களே,  நாமும் பலவேளைகளில் இதுபோல நமது பலவீனங்களை எண்ணித்  தயங்கிக்கொண்டிருக்கின்றோம். ஆவிக்குரிய வாழ்வில் தொடர்ந்து நடக்க முடியாத பலக்குறைவு, நோய்கள், பிரச்சனைகள், குடும்பச்  சூழ்நிலைகள் என்ன இருந்தாலும் கர்த்தர் நம்மோடு இருக்கின்றார் எனும் உறுதி நமக்கு இருக்குமானால் மீதியானியரைப்போன்ற  எந்தப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள முடியும். நமக்கு இருக்கின்ற பலமே போதும். 

தயங்கிய கிதியோரிடம் கர்த்தர்,  "நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் " ( நியாயாதிபதிகள் 6 : 16 ) என்று தைரியமூட்டினார். 

கிதியோனைப்போல நமது வலுவற்றத் தன்மையை தேவனிடம் அறிக்கையிட்டு அவரது கிருபையினை நாம் சார்ந்துகொள்ளும்போது "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்"  ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று அப்போஸ்தலரான பவுலிடம் கூறியதுபோல நமக்கும் கூறுவார்.  

கர்த்தர் நம்மோடு இருக்கும்போது நாம்  பலவீனமாய் இருக்கும்போது அதிக பலமுள்ளவர்களாக மாறிவிடுகின்றோம். "அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." ( 2 கொரிந்தியர் 12 : 10 ) என்கின்றார் பவுல்.

நம்மிடம் இல்லாததை எண்ணிக் கலக்கிடவேண்டாம்; இருக்கின்ற பலத்தோடு விசுவாசத்தோடு தேவனைப் பற்றிக்கொள்வோம். கிதியோனிடம் "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா" என்று கூறிய கர்த்தர் அதே வார்த்தைகளை நமக்கும் கூறுகின்றார். இருக்கின்ற பலத்தோடு தொடர்ந்து போராடு; நான் உன்னோடு இருப்பதால் அனைத்துப் பிரச்சனைகளையும் மேற்கொள்வாய் என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர். 


ஆதவன் 🔥 968🌻 செப்டம்பர் 22, 2023 வெள்ளிக்கிழமை

"ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள். அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான்." ( மாற்கு 14 : 51, 52 )

வேதாகமத்திலுள்ள எந்த ஒரு சிறு குறிப்பும் காரணமின்றி எழுதப்பட்டதாயிராது.  இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் துப்பட்டியைப் போர்த்திக்கொண்டு இயேசு கிறிஸ்து கைதுசெய்யப்படும்போது அவர் பின்னே சென்ற ஒரு வாலிபனைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது. (துப்பட்டி என்பதற்கு மெல்லிய லினன் துணி என்று ஆங்கில வேதாகமத்தில் விளக்கம் உள்ளது)  

இந்தச் சம்பவம்  மாற்கு சுவிசேஷத்தில் மட்டும் கூறப்பட்டுள்ளது. "இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடக் காரணம் என்ன? இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் இல்லையே?" என நானும் எனது நண்பர் பாஸ்டர் சொர்ணகுமார் அவர்களும் பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்னர் பேசிக்கொண்டோம். இருவருக்குமே இதன் பொருள் புரியாமலிருந்தாலும் இது எழுதப்பட்டதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று கூறிக்கொண்டோம். 

கடந்த வாரம் ஒரு நண்பருக்கு பாஸ்டர் சொர்ணகுமார் அவர்கள் சுவிசேஷம் சொல்லும்போது ஆவியானவர் அவருக்கு இதனை வெளிப்படுத்தினார். அன்று மாலையில் அவர் மகிழ்ச்சியுடன், "ஜியோ,  நமது சந்தேகத்துக்குத் தேவன் விளக்கம் தந்துவிட்டார்" என்று கூறி இதனை விளக்கினார்.

அன்பானவர்களே, இந்த வாலிபன் இயேசுவின் சீடனல்ல; மாறாக வேடிக்கைப் பார்க்க வந்தவன்.  தூய்மையான வாழ்க்கை வாழாதவன். ஒரு ஆடையுமின்றி வெறும் மெல்லிய துணியைப் போர்த்திக்கொண்டு அங்கு வந்திருந்தான். ஆவிக்குரிய அர்த்தத்தில் இவன் இரட்சிப்பு எனும் ஆடை இல்லாதவன்.  இன்று கிறிஸ்துவைப் பின்பற்றுகின்றோம் என்று கூறிக்கொண்டு வாழ்வில் பரிசுத்தமின்றி வாழ்வோருக்கு இவன் உதாரணம். 

கிறிஸ்துவின் மேலுள்ள அன்பினால் இவன் கிறிஸ்துவைப் பின்பற்றவில்லை; மாறாக வேடிக்கைப்பார்க்க அவரைப் பின் சென்றான். இன்றும் இதுபோல வேடிக்கைப் பார்க்கும் கிறிஸ்தவர்கள் உண்டு. கிறிஸ்தவ வாழ்க்கை முறைகளை விட்டுவிட்டு தாறுமாறாக வாழ்ந்துகொண்டு திருவிழா, கோவில் பிரதிஷ்டை, அசனம், கலைவிழா என்று நடத்துவதில் மட்டும் ஆர்வம் காட்டுபவர்கள் இவனைப்போன்றவர்களே. 

ஆனால் தேவன் இத்தகைய வேடிக்கை கிறிஸ்தவர்களை அனுமதிப்பதில்லை. அவர்கள் அவமானமடைவார்கள். அப்போஸ்தலரான பவுல் எபேசு நகரில் செய்த அற்புதங்களைக்கண்டு தாங்களும் அவ்வாறு செய்து மக்களிடம் நன்மதிப்பைப் பெறுவதற்கு ஒரு பிரதான ஆசாரியனின் மக்கள் சிலர் முயன்றார். அவர்களிடம் பவுலிடமிருந்த  பரிசுத்தம் இல்லை; பவுளிடமிருந்த பரிசுத்த ஆவியின் வல்லமை இல்லை.  கிறிஸ்துவுக்குப் பின் நிர்வாணத்தை மறைக்க மெல்லிய துணியைப் போர்த்திக்கொண்டு சென்ற வாலிபனைபோல இவர்களும் பவுலை பின்பற்றி அதிசயம் செய்ய எண்ணினர்.

அப்போது "பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 19 : 15, 16 )

அன்பானவர்களே, நாம் கிறிஸ்துவை எப்படிப் பின்பற்றுகின்றோம் என்பதனை எண்ணிப்பார்ப்போம்.  பரிசுத்தத்தோடு அவரைப் பின்பற்றுகின்றோமா இல்லை வேடிக்கைக் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோமா? இல்லாவிட்டால் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்வதில் வீண் பெருமைகொண்டு சாட்சியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். பிரச்சனைகள் துன்பங்கள் நெருக்கும்போது துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் ஓடிப்போன வாலிபனைபோல நமது வாழ்க்கை மாறிவிடக்கூடாது.

     

ஆதவன் 🔥 969🌻 செப்டம்பர் 23, 2023 சனிக்கிழமை

"என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." ( சங்கீதம் 51 : 3 )

கிறிஸ்து இயேசுவினால்  நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் நமது பழைய பாவ வாழ்க்கை நமக்கு எப்போதும் நினைவில் இருக்கவேண்டியது அவசியம்.  மட்டுமல்ல, பாவங்கள் கழுவப்பட்டு மீட்பு அனுபவத்தைப் பெற்றபின்னரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றபின்னரும் சிலவேளைகளில் நாம் பாவம் செய்ய நேரிடலாம். பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்டத்  தாவீதுதான் பத்சேபாளிடம் பாவத்தில் விழுந்தார். 

நமது பாவங்களை தேவன் மறந்து விடுகின்றார். தனது முதுகுக்குப்பின் தூக்கிப் போட்டுவிடுகின்றார் என்பது மெய்யாக இருந்தாலும் நாம் நமது பாவங்களை; பாவவாழ்க்கையை மறந்துவிடக்கூடாது. 

அந்த நினைவு நமக்குள் இருக்கும்போதுதான் கிறிஸ்துவின்மேல் நமக்குள்ள அன்பு அதிகரிக்கும். ஐயோ, நான் இப்படிப்பட்ட பாவத்தைச் செய்திருந்தும் தேவன் என்னை இரட்சித்து நடத்துகின்றாரே எனும் எண்ணம் ஏற்படும். பழைய பாவங்களை நினைக்கும்போது நமக்கு வெட்கம் ஏற்படும். முன்பு நாம் அத்தகைய பாவங்கள் செய்து என்ன பயனைத்தான் கண்டோம்? அவைகளினால் மரணத்துக்கு நேரக்கத்தானே சென்றுகொண்டிருந்தோம்? இதனையே, "இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே." ( ரோமர் 6 : 21 ) என்கின்றார் பவுல்.

மேலும் பழைய நினைவுகள் இருந்தால்தான் நாம் இப்போது தூய்மையாக வாழ முடியம். இயேசு கிறிஸ்து கூறிய இரக்கமில்லாத ஊழியன் பற்றிய உவமை இதனை நமக்கு உணர்த்தும். (மத்தேயு 18:23 - 35) ராஜாவிடம்  பதினாயிரம் தாலந்து கடனைபட்டு அவரிடம் இரக்கம் வேண்டி கெஞ்சியபோது ராஜா அனைத்துக் கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். ஆனால் அந்த மனிதன் அதனை நினைவில் கொள்ளவில்லை. அப்படி அவன் நினைவில் வைத்திருப்பானேயானால் தன்னிடம் நூறு வெளிப்பணம்  கடன்பட்ட மனிதனுக்கு இரங்கியிருப்பான்.  

தாவீது ராஜா பத்சேபாளிடம் பாவத்தில் விழுந்தபின்பு நாத்தான் தீர்க்கத்தரிசியால் பாவத்தை உணர்த்தப்பட்டு மன்னிப்பு வேண்டி பாடிய சங்கீதம்தான் இந்த ஐம்பத்தி ஒன்றாம் சங்கீதம். அவர் கூறுவதுபோல இந்தப் பாவம் எப்போதும் அவர் கண்களுக்குமுன் நின்றுகொண்டிருந்தது. 

நமக்கும் நமது பழைய வாழ்க்கை நினைவில் இருக்குமானால் நாம் மீண்டும் அவற்றைச் செய்யமாட்டோம். மட்டுமல்ல, அத்தகைய பாவங்களை செய்துகொண்டிருக்கும் மக்களைப் பார்க்கும்போது அவர்கள்மேல் இரக்கம் ஏற்படும். 

இன்று ஆவிக்குரிய சபைகளுக்குச் செல்லும் பலரிடம் இந்த எண்ணம் இருப்பதில்லை. எனவே அவர்கள் தாங்கள் மட்டும் பரிசுத்தவான்கள் என்றும் மற்றவர்கள் அனைவரையும் பாவிகள் என்றும் கூறிக்கொள்கின்றனர். இதனாலேயே ஒரு இறையியலார் கூறினார், "பரலோகத்தில் இருக்கும் அனைவரும் எப்போதும் பரிசுத்தவான்களாய் வாழ்ந்தவர்களல்ல; அவர்கள் மனம்திரும்பிய பழைய பாவிகள்". கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமானாக மாறியவர்கள். இதுவே உண்மை. "என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது" என்று தாவீதைப்போலக் கூறி வாழ்வோமானால் நாம் தொடரும் பாவத்துக்குத் தப்பி வாழ முடியும். 


ஆதவன் 🔥 970🌻 செப்டம்பர் 24, 2023 ஞாயிற்றுக்கிழமை

"தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன்." ( யோவான் 12 : 8 )

ஏழைகளுக்குக் கொடுப்பது கடவுளுக்குக் கொடுப்பதுதான். வேதாகமத்திலும்,  "ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்." ( நீதிமொழிகள் 19 : 17 ) என்றுதான் கூறப்பட்டுள்ளது. 

ஆனால் பெரிய பணக்காரர்கள் ஆலயங்களுக்குக்  கோடிக்கணக்கான பணத்தைக் காணிக்கைக் கொடுப்பதைப் பார்க்கும்போது நம்மில் பலரும், "இந்தப் பணத்தை எத்தனையோ ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாம், இப்படி வீணாக கடவுளுக்கென்று கொடுக்கின்றாரே" என எண்ணுவதுண்டு.  ஆனால் ஒருவர் உள்ளன்போடு கடவுளுக்குக் கொடுக்கின்றாரா அல்லது வீண் பெருமைக்காகக் கொடுக்கின்றாரா என்பது நமக்குத் தெரியாது. 

இன்றைய வசனத்தின் பின்னணியை நாம் பார்ப்போமானால் இது தெளிவாகும். மார்த்தாளும் மரியாளும் இயேசு கிறிஸ்துவுக்கு விருந்து ஏற்பாடு செய்தனர். அப்போது மரியாள் விலை உயர்ந்த நறுமணத் தைலத்தை  இயேசுவின் பாதங்களில் பூசி அதனைத் தனது கூந்தலால் துடைத்தாள். "அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிகொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்."( யோவான் 12 : 5 )

அன்பானவர்களே, பண ஆசையால் நிறைந்தவர்களது எண்ணம் எதனையும் பணத்தால்தான் கணக்கிடும்.  யூதாஸ் இயேசு கிறிஸ்துவின் பணத்துக்கு கணக்கு வைத்திருந்தவன். பணப்பை அவனிடம்தான் இருந்தது. அவன் அவ்வப்போது தனது செலவுக்கு அதிலிருந்து எடுத்துக்கொள்வதுமுண்டு என்று நாம் ஒருங்கிணைந்த வேதாகமத்தில் வாசிக்கின்றோம். ஆம், "அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்." ( யோவான் 12 : 6 )

அவனுக்கு மறுமொழியாக "தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன்" என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார். இயேசு கிறிஸ்துவுக்கு மரியாளின் உள்ளான அன்பு தெரிந்திருந்தது. ஆனால் யூதாசுக்கு அந்த தைலத்தின் விலை மட்டும் தெரிந்திருந்தது. 

ஒருவர் ஆலயத்துக்குச் செய்வதையும் கடவுள் பணிகளுக்குக் கொடுப்பதையும் எளிதாக நாம் கணக்கிட்டுவிடக்கூடாது. ஏனெனில் கொடுப்பவரது உள்ளான மனநிலை அவர் தேவனிடம் கொண்டுள்ள அன்பு இவைகளைக்குறித்து நமக்குத் தெரியாது. நாமும்,  "இதனை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே" என்று கூறுவோமானால்  ஒருவேளை யூதாசுக்குக் கூறியதுபோல அவர் நமக்கும் கூறுவார்.   

மற்றவர்கள் கொடுக்கும் காணிக்கைகளையும் இதர ஊழிய பணிகளுக்குக் கொடுப்பதையும் நாம் கணக்கிட்டு விமரிசனம் செய்து பாவம் செய்திட வேண்டாம். ஏழைகளுக்கு கொடுக்க நமது உள்ளத்தில் உணர்த்தப்பட்டால் ஏழைகளுக்குக் கொடுப்போம்; ஆலயப் பணிகளுக்குக் கொடுக்க விருப்பப்பட்டால் ஆலய காரியங்களுக்குக் கொடுப்போம். தரித்திரர் எப்பொழுதும் நம்மிடம் இருக்கிறார்கள்; விரும்பும்போதெல்லாம் கொடுக்கலாம்.  


ஆதவன் 🔥 971🌻 செப்டம்பர் 25, 2023 திங்கள்கிழமை

"மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ?   பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?"( சங்கீதம் 88 : 10, 11 )

இன்றைய தியான வசனம் வேதனையால் வாடிய சங்கீத ஆசிரியர் மனம் கசந்து கூறுவதாகும். இத்தகைய வேதனைகளும்  வருத்தங்களும் நமக்கும் பல்வேறு சமயங்களில் ஏற்படுவதுண்டு. வேதனையோடு இந்தச் சங்கீத ஆரம்பத்தில் சங்கீத ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார், "என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது." ( சங்கீதம் 88 : 3 )  

அதாவது, துக்கத்தால் நான் செத்துப்போனேன்; எனக்கு இனிமேலும் நீர் அதிசயங்களைச் செய்வீரோ என்கின்றார். கைவிடப்பட்ட இந்த நிலையில் அவர் இன்றைய சங்கீதத்தை எழுதியுள்ளார். 

ஆனால் கர்த்தரது ஆவி ஒருவரை எந்த நிலையிலும் உயிர்ப்பித்து எழுந்து நிற்க  உதவிட முடியும். எல்லாம் முடிந்துபோயிற்று என்ற நிலையிலிருந்த இஸ்ரவேலருக்கு  எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலம் தேவன் திடனளித்தார். தரிசனத்தில் உலர்ந்த எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கில்  அவரைக்கொண்டுபோய் அவரைத் தீர்க்கதரிசனம் கூற வைத்தார். "கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள்." ( எசேக்கியேல் 37 : 5 ) என்று கூறினார். அதுபோல அந்த எலும்புகள் உயிரடைந்தன. 

"என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." ( எசேக்கியேல் 37 : 13 ) என்கின்றார் கர்த்தர். ஆம் அன்பானவர்களே, எந்தவித துக்கத்தால் நாம் மரித்தவர்கள்போல ஆகியிருந்தாலும் நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணுவேன் அப்போது நீங்கள் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கின்றார்.

மரணமடையும்வரை ஒருவர் கர்த்தரை நம்பலாம் ; அது இயற்கை. ஆனால் இயற்கைக்கு மாறாக மரித்தபின்பும் நமக்கு உயிரளித்து விடுவிக்கும் வல்லமை தேவனுக்கு உண்டு என்பதை விசுவாசிக்கும்போதுதான் நமது மனக் கவலைகள் முற்றிலும் மறைந்து தைரியம் பிறக்கும். 

மரித்து நான்கு நாட்கள் கடந்தபின் இயேசு கிறிஸ்து லாசரை உயிர்ப்பிக்கவில்லையா? லாசருவின் சகோதரிகளுக்கு இந்தச் சூழ்நிலையில் நம்பிக்கையே இருக்க வாய்ப்பில்லாதிருந்தது.  நாமும் அப்படி ஒரு சூழ்நிலையில் இருந்தால் அப்படித்தான் இருந்திருப்போம். "இயேசு:- கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்." ( யோவான் 11 : 39 ) ஆனால் இயேசு கிறிஸ்து அந்த நாறியப்  பிணத்தை உயிர்தெழச் செய்தார். 

ஆம் அன்பானவர்களே, நமது வாழ்க்கையும் துன்பங்களின் தொடர்ச்சியால் மரித்த வாழ்க்கையாக இப்போது இருக்கலாம்; ஆனால் தேவன் நினைத்தால் ஒரே நொடியில் அதனை மாற்றி நம்மை உயிர்ப்பிக்கமுடியும். 

"என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." ( எசேக்கியேல் 37 : 13 ) என்கிறார் கர்த்தர்.  விசுவாசத்தோடு அவரைப் பற்றிக்கொள்வோம்.


ஆதவன் 🔥 972🌻 செப்டம்பர் 26, 2023 செவ்வாய்க்கிழமை

"கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ?" ( மீகா 6 : 11 )

நாம் எந்தத் தொழில் செய்தாலும் அதனை தேவனுக்கு ஏற்ப உண்மையோடும் உத்தமத்தோடும் செய்யவேண்டியது அவசியம். பிறரை ஏமாற்றி, தொழிலில் மோசடி செய்து சம்பாதித்தப் பணத்தில் காணிக்கை கொடுப்பதையோ ஆலயப் பணிகளுக்குக் கொடுப்பதையோ தேவன் ஏற்பதில்லை. அதனையே இன்றைய வசனம் எடுத்துக் கூறுகின்றது. 

அந்த காலத்து சூழ்நிலைக்கேற்ப கள்ளத் தராசு, கள்ளப் படிக்கற்கள் என்று கூறப்பட்டாலும் இன்றைய கம்ப்யூட்டர் காலத்தில் தொழில் ஏமாற்று பல்வேறு விதங்களில் மாறியுள்ளது. எனவே நாம் என்னிடம்  கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இல்லை என்றுகூறி தப்பித்துக்கொள்ள முடியாது. இந்த வசனம் உண்மையோடு தொழில் செய் என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. 

இதற்கு ஒத்தாற்போல எரேமியா மூலம் தேவன் கூறுகின்றார், "நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?" ( எரேமியா 7 : 9, 10 ) 

திருட்டு, தொழில் போட்டியில் செய்யும் கொலைகள், பணம் அதிகரித்ததால் அதனைத் தொடர்ந்த விபச்சார பாவங்கள், பொய் சத்தியம் செய்தல், தொழில் செழிப்புக்காக பிற தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுதல்  போன்ற மேற்கூறிய வசனத்தில் கூறப்பட்டுள்ள  பாவச் செயல்கள் அனைத்தும் பெரும்பாலும் தொழில் செய்யும் மனிதர்களை எளிதில் மேற்கொள்ளக்கூடியவை. 

அன்பானவர்களே, எனவே எந்தத்தொழில் செய்தாலும் நேர்மையாகச் செய்யவேண்டும். தேவனுக்கு எதிரான பாவ காரியங்களை விட்டு விலகவேண்டும். துமார்க்க வழியில் சம்பாதித்த பணத்தை எவ்வளவு பெரிய ஊழியருக்குக்  காணிக்கையாகக்  கொடுத்தாலும் அது பலனற்றதே. காணிக்கைகளையே நம்பி ஊழியம் செய்யும் ஊழியர்கள் இந்தச் சத்தியத்தை விளக்கிச் சொல்ல மாட்டார்கள். எனவே எச்சரிக்கையாக இருப்போம். பல கிறிஸ்தவ தொழிலதிபர்கள் சாதாரண உலக மனிதர்களுக்கும் தங்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லாமல் வாழ்கின்றனர். ஆனால் இத்தகைய பல தொழில் நிறுவனங்களில் கிறிஸ்தவ ஊழியர்களை வரவழைத்து ஜெபங்களும் நடைபெறுகின்றன. 

ஆனால் தேவன் கூறுகின்றார், "நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை." ( எரேமியா 7 : 16 ) ஆம், இத்தகைய துன்மார்க்க செயல்களில் ஈடுபடுவோருக்காக ஜெபிப்பதையே தேவன் கேட்க மாட்டேன் என்கிறார் தேவன். 

தவறு செய்பவர்கள் தங்கள் பாவச் செயல்களுக்காக மனம் வருந்தி, மனம் திருந்தி ஜெபிக்கும்போது மட்டுமே தேவன் அந்த ஜெபத்துக்குப் பதிலளித்து அவர்களை மன்னிப்பார். 

தொழில் செய்பவர்களாக இருந்தால் மனதினில் நமது செயல்கள் நீதியுள்ளவைகள்தானா என்று நிதானித்து அறிந்து தவறு இருந்தால் மன்னிப்புக் கேட்டு புதிய மனிதனாக மாறவேண்டியது அவசியம். இல்லையானால் நமது ஜெபங்களும், காணிக்கைகளும், பக்தி முயற்சிகளும் வீணானவைகளே. ஆம், கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ? என்கிறார் கர்த்தர். 

    

ஆதவன் 🔥 973🌻 செப்டம்பர் 27, 2023 புதன்கிழமை

"நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப்போகையில், குதிரைகளையும், இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்." ( உபாகமம் 20 : 1 )

பழைய ஏற்பாட்டுச் சம்பவங்கள் இஸ்ரவேல் மக்களது சரித்திரமாக அவர்களது வாழ்க்கையில் தேவன் நடப்பித்தக் காரியங்களாக இருந்தாலும் அவைகளை நாம் இக்காலத்துக்கேற்ப நமது ஆவிக்குரிய வாழ்வில்  பொருத்திப்  பார்க்கவேண்டும்.  அவைகள் நமது ஆவிக்குரிய வாழ்கைக்காகவே வேதத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எகிப்தியரிடமிருந்து மீட்கப்பட்டு கானானை நோக்கிப் பயணமான இஸ்ரவேலரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விபரித்துவிட்டு அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார்,  "இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது." ( 1 கொரிந்தியர் - 10 : 11 )

எல்லாச் சம்பவங்களும் இப்படியே. அதுபோலவே இன்றைய வசனத்தையும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். நமக்கு எதிராக யுத்தம் செய்ய புறப்பட்டு வரும் குதிரை, இரதங்கள், பெரிய ஜனக்கூட்டம் என்பவைகள்  ஆவிக்குரிய வாழ்வில் நம்மை கவிழ்த்துப்போட வரும் துன்பங்களும், பாவச் சூழ்நிலைகளும் சாத்தானின் வல்லமைகளும்தான்.  அவைகளுக்குப் கண்டு பயப்படாமல் ஆவிக்குரிய வாழ்வை நாம் தொடரவேண்டும். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார். 

ஆவிக்குரிய வாழ்வில் நமது போராட்டங்களைக் குறித்து அப்போஸ்தலரான பவுல், "ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." ( எபேசியர் 6 : 12 ) என்று கூறுகின்றார். 

எனவே ஆவிக்குரிய வாழ்வில் நம்மைத் தொடரும் இத்தகைய சத்துருக்களை மேற்கொள்ள நாம் தயாராக இருக்கவேண்டும்.  "ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 6 : 13 ) என்கின்றார் பவுல். அந்தச் சர்வாயுதங்களை நாம் எபேசியர் 6 : 14 - 18  வசனங்களில் வாசித்து அறியலாம். (இவைகளை பல தியானங்களில் விரிவாக குறிப்பிட்டுள்ளேன்)

கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது அவர் நம்மோடு இருக்கின்றார் எனும் தைரியமும் உறுதியும் நமக்கு ஏற்படும். அந்த உறுதி நமக்கு ஏற்படும்போது நமது ஆவிக்குரிய வாழ்வின் சத்துருக்களுக்கு எதிராக நாம்  யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப்போகையில், அவைகள் குதிரை போன்ற வீரியமுள்ளவையாக இருந்தாலும், இரதங்கள் போல மகா பெரியவையாக இருந்தாலும், நம்மிலும் பெரிய கூட்டமாகிய ஜனக்கூட்டம் போல அடுக்கடுக்கான துன்பங்களாக இருந்தாலும் நாம் அவைகளுக்குப் பயப்படாமல் இருக்க முடியும். 

அப்போது, நம்மை  எகிப்து எனும் பழைய பாவ வாழ்க்கை  தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி பரம கானானை நோக்கி வழிநடத்தும் நம் தேவனாகிய கர்த்தர் நம்மோடே இருக்கிறார் எனும் உறுதி ஏற்படும்.


ஆதவன் 🔥 974🌻 செப்டம்பர் 28, 2023 வியாழக்கிழமை

"இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 36 )

(இந்தத் தியானத்தில் ஞானஸ்நானம் குறித்து பல்வேறு கிறிஸ்தவ சபைகளுக்குள் உள்ள முரண்பாடான கருத்துக்களை நான் விளக்க விரும்பவில்லை; விமரிசிக்கவில்லை. மாறாக ஞானஸ்நானத்தின் முக்கியத்துவதையே குறிப்பிட்டுள்ளேன்)  

நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மீட்பு அனுபவம் பெற்றபின் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்று வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. இன்றைய வசனத்தின் பின்னணியைப் பார்த்தால் இது புரியும். எத்தியோப்பிய மந்திரிக்கு பிலிப்பு சுவிசேஷம் அறிவித்தபோது அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். உடன்தானே அவருக்குள் ஞானஸ்நானம் பெறவேண்டுமெனும் ஆர்வம் தானாகவே ஏற்படுகின்றது. அப்போது அவர், "இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன?" என்று பிலிப்புவிடம் கேட்கின்றார். 

"அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றார். அப்பொழுது அவர்: இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி; இரதத்தை நிறுத்தச்சொன்னார். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவருக்கு ஞானஸ்நானங் கொடுத்தார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 37, 38 )

ஞானஸ்நானம் என்பது வெறுமனே நம்மைத் தண்ணீரால் கழுவுவதல்ல; மாறாக அது தேவனோடு நாம் செய்யும் ஒரு உடன்படிக்கை (Agreement). அப்போஸ்தலரான பேதுரு ஞானன்ஸ்நானத்தைப் பற்றிக் கூறும்போது, " ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது;" ( 1 பேதுரு 3 : 21 ) என்று கூறுகின்றார். 

இரண்டாவதாக, ஞானஸ்நானம் தேவன் விரும்பும் நீதியை நிறைவேற்றுவதாகும். தேவன் அவர் விரும்புகின்றபடி நாம் எல்லா அடிப்படை நீதியையும் நிறைவேற்றி வாழவேண்டுமென்று விரும்புகின்றார். இயேசு கிறிஸ்து பாவம் செய்யவில்லை; அவர் ஞானஸ்நானம் பெற அவசியமும் இல்லை.  ஆனாலும் அவர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். அவரைத் தடைசெய்த யோவான் ஸ்நானனிடம் இயேசு கிறிஸ்து,  "இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்." ( மத்தேயு 3 : 15 ) என்று கூறுவதைப் பார்க்கின்றோம்.  

மூன்றாவதாக நாம் பாவத்துக்கு மரித்து கிறிஸ்துவோடுகூட அடக்கம் செய்யப்படுவதற்கும் புதிய மனிதனாக மறுபடி மரித்தோரிலிருந்து எழும்புவதற்கும் ஞானஸ்நானம் அடையாளமாயிருக்கின்றது.  "ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம் பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்." ( கொலோசெயர் 2 : 12 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

நான்காவதாக, ஞானஸ்நானம் பெறுவதன்மூலம் கிறிஸ்துவை நாம் அணிந்துகொள்கின்றோம். நாம் சரீரத்தில் ஆடை அணிவதுபோல ஞானஸ்நானம் ஆவிக்குரிய ஆடையாக இருக்கின்றது. "ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே." ( கலாத்தியர் 3 : 27 ) என்கின்றார் பவுல். 

எனவே தான் கிறிஸ்தவத்தில் ஞானஸ்நானம் நாம் நிறைவேற்றவேண்டிய முக்கியமான கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது.  அதன்மூலம் நாம் கிறிஸ்துவில் நமது விசுவாசத்தை அறிக்கையிடுகின்றோம், தேவனோடு ஒப்பந்தம் செய்துகொள்கின்றோம், தேவ நீதியினை நிறைவேற்றுகின்றோம், கிறிஸ்துவோடு நமது பாவத்துக்கு மரித்து அவரோடுகூட புதிய மனிதனாக எழுந்திருக்கின்றோம், கிறிஸ்துவை ஆடையாகத் தரித்துக்கொள்கின்றோம். 


ஆதவன் 🔥 975🌻 செப்டம்பர் 29, 2023 வெள்ளிக்கிழமை

"ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத் தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." ( எசேக்கியேல் 11 : 21 )

நமது தேவன் பரிசுத்தத்தை விரும்புகின்றவர். நாம் செய்யும் எந்த ஜெபத்தையும், காணிக்கைகளையும்விட அவர் நமது பரிசுத்தத்தை விரும்புகின்றார். "யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே." ( எபிரெயர் 12 : 14 ) என்று நாம் வாசிக்கின்றோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் இதனால்தான் தனது மலைப் பிரசங்கத்தில், "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்." ( மத்தேயு 5 : 8 ) என்று கூறினார். 

மனிதனது இருதய சிந்தனைகள் பொதுவாகவே அவலட்சணமானவைகள். இதனால்தான் இயேசு கிறிஸ்து கூறினார், "எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்;" ( மத்தேயு 15 : 19, 20 )

எனவேதான் இன்றைய வசனம் கூறுகின்றது, "சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத் தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன்". அதாவது இப்படி நடக்கும் மனிதர்களது நடக்கையின் பயனை அவர்கள் அனுபவிப்பார்கள். 

நமது வாழ்வில் எவ்வளவு ஜெபித்தும், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொண்டும், காணிக்கைகளைக் கொடுத்தும்  மாற்றங்கள் ஏற்படவில்லையா? அப்படியானால் நமது இருதயத்தை நாம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டியது அவசியம். காரணம் இதயமானது மகா திருக்குள்ளதாய் இருக்கின்றது. இன்றைய செய்தித் தாள்களில் வரும் செய்திகளைப் படித்துப் பார்த்தால் நூற்றுக்கு தொண்ணூறு சதவிகித கொலைகளும் கற்பழிப்புகளும், சொத்துச் சண்டைகளும், நீதிமன்ற வழக்குகளும் மனிதர்களது இருதயத்தின் இச்சையினால்தான் என்பது புரியும். 

எனவே அன்பானவர்களே, நமது இதயமானது உலக இச்சைகளினால் மூழ்கி அழிந்துவிடாமல் காத்துக்கொள்வோம். எந்தவித உலக ஆசை நம்மில் அதிகரித்தாலும் அது இச்சைதான். "எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவவூற்று புறப்படும்." ( நீதிமொழிகள் 4 : 23 ) என்கிறார் கர்த்தர். 

இருதயத்தை நாம் காத்துக்கொள்ளும் போதுதான் பரிசுத்த வாழ்க்கையை நோக்கி நாம் முன்னேறமுடியும். " நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக." ( லேவியராகமம் 11 : 45 ) என்கிறார் பரிசுத்தராகிய கர்த்தர். 

    

ஆதவன் 🔥 976🌻 செப்டம்பர் 30, 2023 சனிக்கிழமை

"முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்".( ஆகாய் 2 : 9 )

நாம் ஏற்கெனவே பல வசனங்களில் பார்த்தபடி பழைய ஏற்பட்டு சம்பவங்கள் அனைத்துமே புதிய ஏற்பாட்டின் நிழலாட்டமே. இன்றைய வசனமும் அத்தகையதே.

அழிக்கப்பட்டுப்  பழுதுபட்டுப் போன  எருசலேம் ஆலயத்தினை மறுபடியும் கட்டத்துவங்கிய இஸ்ரவேல் மக்களுக்கு ஆகாய் தீர்க்கதரிசியின் மூலம் இன்றைய வசனம் கூறப்பட்டுள்ளது. தகர்க்கப்பட்ட பழைய ஆலயத்தினைக் குறித்துக் கவலையடையவேண்டாம்,  "முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்."

அன்பானவர்களே, புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் மெய்யான ஆலையம் என்பது நமது உடல்தான். "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" ( 1 கொரிந்தியர் 3 : 16 ) என்று நாம் வாசிக்கின்றோம். நமது உடலாகிய ஆலயத்தில் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் வாழ்கின்றார்.

எனவேதான் நாம் நமது உடலாகிய ஆலயத்தைப் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அப்படி நாம் நமது பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளத் தவறினால் தேவன் நம்மைக் கெடுப்பார் என்று வசனம் நம்மை எச்சரிக்கின்றது.  "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 )

நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு புது மனிதனாவது எகிப்திலிருந்து இஸ்ரவேல் மக்கள் விடுதலை ஆகி கானானை நோக்கி வந்ததற்கு ஒப்பாக இருக்கின்றது. ஆம், நாம் எகிப்து எனும் பழைய பாவத்தின் பிடியிலிருந்து விடுதலை ஆகிவிட்டோம். ஆனால் நம்மில் பழைய பாவ நாட்டங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றினை மேற்கொள்ள நமக்கு பரிசுத்த ஆவியாரின் துணை  தேவையாக இருக்கின்றது. இன்றைய தியான வசனத்தின் நான்கு வசனத்தின்முன்பு அது குறித்து ஆகாய் கூறுகின்றார்,  "நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." ( ஆகாய் 2 : 5 )

ஆம், நமது உடலாகிய ஆலயத்தினைப் பரிசுத்தமாகக் கட்டியெழுப்ப நம்மால் முடியுமா எனும் தயக்கம் நமக்கு வேண்டாம்.  ஆகாய் தீர்க்கத்தரிசி மூலம் தேவன் கூறுவதுபோல,  "நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்."

தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து ஆவியானவரின் துணையோடு நாம் காட்டக்கூடிய நமது உடலாகிய ஆலையம் நிச்சயமாக "முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், பெரிதாயிருக்கும்." மட்டுமல்ல, உடலாகிய ஆலயத்தைப் பரிசுத்தமாகக் கட்டும்போது, இன்றைய வசனம் இறுதியில் கூறுவதன்படி "சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்" 

No comments: