ஆதவன் 🔥 890🌻 ஜூலை 06, 2023 வியாழக்கிழமை
"விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது." ( எபிரெயர் 10 : 38 )
இந்த உலகத்தில் நீதியாக வாழும் மனிதர்கள் பலர் உள்ளனர். நீதி வாழ்க்கைக்கும் ஒரு மனிதன் சார்ந்திருக்கும் மத நம்பிக்கைக்கும் சம்பந்தம்கிடையாது. எல்லா மத நம்பிக்கைக் கொண்டவர்களிலும் நீதியாக வாழ்பவர்கள் உண்டு. ஆனால் இன்றைய வசனம் கூறுகின்றது, "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்" என்று. அதாவது, நீதியாக வாழ்வதால் மட்டும் ஒருவன் பிழைப்பதில்லை, மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தினால்தான் பிழைக்கிறான்.
அந்த விசுவாசத்திலிருந்து பின்வாங்கினால் அவன் நீதிமானாக இருந்தாலும் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் கர்த்தர். காரணம், நீதிமானாக வாழ்வது என்பது வேறு, கர்த்தர்மேல் வைக்கும் விசுவாசம் என்பது வேறு. கர்த்தர்மேல் நாம் வைக்கும் விசுவாசம்தான் நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்கவும் பாவத்தை மேற்கொள்ளவும் உதவும். ஏனெனில் பாவத்துக்காக தனது இரத்தத்தைச் சிந்தியவர் கிறிஸ்து. இப்படி கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசமே ஆவியின் பிரமாணம். அதுவே நம்மைப் பாவம், மரணம் இவைகளிலிருந்து விடுவிக்கமுடியும்.
இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்று எழுதுகின்றார். இப்படி, "மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்." ( ரோமர் 8 : 4 )
எனவே அன்பானவர்களே, நாம் நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வதுடன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் முழு விசுவாசம் கொண்டவர்களாக வாழவேண்டியதும் அவசியம்.
விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது என்று நாம் வாசித்துள்ளோம். (எபிரெயர் 11:1) ஆம், காணாதவைகளின்மேல் நமது நிச்சயம் கர்த்தரை விசுவாசிப்பதால்மட்டுமே வரும். நோவா நீதிமானாக மட்டுமல்லாமல் கர்த்தர்மேல் பூரண விசுவாசமுள்ளவனாக இருந்ததால் ஆசீர்வாதம்பெற்றார்.
"விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்." ( எபிரெயர் 11 : 7 )
விசுவாசத்தினாலுண்டாகும் நீதி எனும் வார்த்தைகளை மேற்படி வசனத்தில் நாம் வாசிக்கின்றோம். ஆம், மனித நீதி வேறு, விசுவாசத்தினால் வரும் தேவநீதியென்பது வேறு. அதுவே பாவத்தை மேற்கொள்ள உதவுவது. எனவே, நீதியுள்ள வாழ்க்கையோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேலுள்ள நமது விசுவாசத்தையும் விட்டுவிடாமல் உறுதியாக இருப்போம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712
No comments:
Post a Comment