Friday, July 28, 2023

வேதாகம முத்துக்கள் - ஜூலை 2023

 
   

           - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


ஆதவன் 🔥 885🌻 ஜூலை 01, 2023 சனிக்கிழமை

"கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 12 )

அன்பானவர்களே, மனிதர்களால் பிடிக்கப்பட்டுக் கட்டி வைக்கப்பட்டிருக்கும்  யானைக்குத் தனது பலம் தெரியாது என்பார்கள்.  எனவே அது தன்னைவிட பலமடங்கு பலம் குறைந்த பாகனுக்குக் கீழ்ப்படிந்து அவன் சொல்படி கேட்கின்றது. தன்னைக் கட்டி வைத்திருக்கும் சிறிய சங்கிலியை அதன் பலத்தால் அறுத்துவிட அதனால் முடியும். ஆனால் அது அப்படிச் செய்வதில்லை. காரணம் தனது  சுய பலம் அதற்குத் தெரியாது. 

இதுபோலவே பலவேளைகளில் ஆவிக்குரிய நாமும் இருக்கின்றோம். நம்மோடு கர்த்தர் இருப்பதும் அவரால் நம்மை விடுவிக்கவும், எந்தச் சூழ்நிலையினையும் நாம் கடந்துவரச் செய்யவும்  முடியும் என்பதையும்  பல வேளைகளில் நாம் உணருவதில்லை.  எனவே நாம் சலித்துக்கொள்கின்றோம். "என்ன ஆண்டவர்........நம்ம  தலையில ஆண்டவன் இப்படி எழுதிவிட்டான்; அநுபவிச்சுதான் தீரணும்..." என எண்ணிக்கொள்கின்றோம். 

இதுபோலவே கிதியோனும் இருந்தான்.  கர்த்தருடைய தூதன் பராக்கிரமசாலியே என்று கூறியதும் கிதியோன், "ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்." ( நியாயாதிபதிகள் 6 : 13 )

அதனால் ஆண்டவர் அவனைத் திடப்படுத்தினார். "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 14 ) ஆம் அன்பானவர்களே, நாம் மிகப்பெரிய தீர்க்கதரிசியாகவோ, வல்லமைமிக்க ஊழியனாகவோ, புகழ்பெற்றவராகவோ இருக்கவேண்டியது அவசியமில்லை. நமக்கு இருக்கின்ற ஆவிக்குரிய  பலம் போதும். காரணம் நம் ஒவ்வொருவரது நிலையினையும் தேவன் அறிவார்; நமக்கு உதவுவார்.

ஆனால் அதற்கு, முதலில் நமக்குக்   கிதியோனைப்போல ஒரு தாழ்மையான இருதயம் தேவை. கிதியோனது தாழ்மையான உள்ளத்தை தேவன் அறிந்திருந்ததால்தான் அவனோடு இருந்தார். "தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிறார்" என்று வேதம் கூறவில்லையா? கிதியோனின் இந்த தாழ்ந்த இருதயம் அவனது பதிலில் தெரிகின்றது.  "அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே இரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்." ( நியாயாதிபதிகள் 6 : 15 ) எனது குடும்பமும் நானும் மிக எளிமையானவர்கள் என்று தன்னைத் தாழ்த்துகின்றான் கிதியோன். 

"அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறியடிப்பாய் என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 16 )

இப்படியே அப்போஸ்தலரான பவுல் அடிகள் கிறிஸ்துவோடுள்ள நெருக்கத்தினால் நம்பிக்கைகொண்டு விசுவாசத்தோடு கூறுகின்றார்,  "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு."( பிலிப்பியர் 4 : 13 )

ஆம் அன்பானவர்களே, கிதியோனைப்போல ஒரு தாழ்மையான உள்ளமும் அப்போஸ்தலரான பவுலைப்போல ஒரு விசுவாசமுள்ளத் தூய்மையான வாழ்வும் நமக்கு மிகமிகத்தேவை. அப்படி இருப்போமானால் கிதியோனிடமிருந்தும் பவுலிடமிருந்தும் அவர்களைப் பலப்படுத்தியதுபோல நம்மையும் பலப்படுத்திப் பயன்படுத்துவார். கர்த்தர் நம்மைப்பார்த்தும், "பராக்கிரமசாலியே நான் உன்னோடே இருக்கிறேன்"  என்பார்.

ஆதவன் 🔥 886🌻 ஜூலை 02, 2023 ஞாயிற்றுக்கிழமை

"தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்." ( மீகா 2 : 13 )

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் நமது தேவனுக்கு "தடைகளை நீக்கிப்போடுகிறவர்" எனும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், நமது வாழ்வில் வரும் எந்தத் தடையையும் அவர் நீக்கிப்போட வல்லவராய் இருக்கிறார். 

இஸ்ரவேல் மக்களை மோசே எகிப்திலிருந்து விடுவிக்க பார்வோன் பல முறை தடை செய்தான். அவனது கரத்திலிருந்து அவர்களை விடுவித்து கர்த்தர் வழி நடத்தினார். கானானை நோக்கிய அவர்களது பயணத்தில் முதலில் வந்தத் தடை செங்கடல். ஆனால் அதனைக் கால் நனையாமல் அவர்களை தேவன் கடைக்கச் செய்தார். தடையாய் நின்ற எரிகோவின் மதில்கள் துதியினால் இடிந்து விழுந்தன. அவர்களுக்கு எதிர்த்துவந்த வல்லமைமிக்க பல அரசர்கள் அழிந்துபோயினர். ஆம், நமது தேவன் தடைகளை நீக்கிப்போடுகிறவர்.  

அப்போஸ்தலர்களது வாழ்விலும் தேவன் இப்படித் தடைகளை நீக்கிப்போடுவதைப்  பார்க்கின்றோம். பேதுருவை சிறைச்சாலை அடைத்துவைக்க முடியவில்லை. பவுலையும் சீலாவையம் சிறைச்சாலையின் தொழுமரம்  தொடர்ந்து கட்டிவைக்க முடியவில்லை. அப்போஸ்தலர்களின் ஊழியத்தில் வந்த பல்வேறு இடர்கள்,  தடைகளை நீக்கிப்போடும் கர்த்தரால் தகர்ந்தன. அதே கர்த்தர் மாறாதவராக இன்றும் இருக்கிறார்.

அன்பானவர்களே, நமது வாழ்வில் வரும் துன்பங்கள், பிரச்சனைகள் இவைகளைக்கண்டு நாம் தயங்கி ஆவிக்குரிய வாழ்வில் தோல்வியடைந்திடக் கூடாது. நமது தேவன் வல்லமைமிக்கப் பராக்கிரமசாலியாக நம்மோடு இருக்கிறார். நமது வாழ்வில் வரும் எந்தத் தடையையும் தகர்த்துப்போட வல்லவர் அவர். 

இன்றைய தியானத்துக்குரிய வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது, தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார் என்று. நமக்குமுன் கர்த்தர் செல்கிறார் எனும் விசுவாசத்தோடு பயணத்தைக் தொடர்வோம்.

நமது தேவன் தனது பிள்ளைகளாகிய நம்மை ஒரு ராஜாபோல நடத்துகின்றார். நமது நாட்டின் பிரதமரோ, முதல்வரோ வருகிறார்களென்றால் முதலில் அவர்கள் வரும் சாலைகளிலுள்ள குண்டு குழிகள், தடைகள் அகற்றப்பட்டு அவர்கள் பயணம் செய்ய லெகுவாக்கப்படும். நமது கர்த்தர் நம்மை ராஜாபோல நடத்துவதால் நமக்குமுன் சென்று நமது பயணப் பாதையிலுள்ள தடைகளைச் சரிசெய்து நமக்குமுன் ஒரு பாதுகாவலர்போல நடந்து செல்கிறார். இதுவே கிறிஸ்துவின் அன்பு. 

எனவே அன்பானவர்களே, நாம் எதனையும் கண்டு பயப்படத் தேவையில்லை. நமது  ராஜா நமக்கு  முன்பாகப் போகிறார். அந்த விசுவாசத்தோடு அவரைப் பின்தொடர்வோம்.

ஆதவன் 🔥 887🌻 ஜூலை 03, 2023 திங்கள்கிழமை

"அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து; ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக் கொள்ளேன். " ( ஆதியாகமம் 14 : 22 ) என்றான். 

சோதோமின் ராஜாவும் அவனோடு வேறு சில ராஜாக்களும் சேர்ந்து ஆபிராமின் (ஆபிரகாம்) சகோதரனது மகனாகிய  லோத்துவையும் அவனது உடைமைகளையும் கைபற்றிச் சென்றுவிட்டனர். ஆபிராம் அதனைக் கேள்விப்பட்டபோது தனது ஆட்களுடன் சென்று போரிட்டு எதிரி ராஜாக்களை வென்று லோத்துவையும் அவனது சொத்துக்களையும் மீட்டுக்கொண்டார். எதிரி நாட்டு ராஜாவின் சொத்துக்களையும் அந்நாட்டின் மக்களையும் சிறைபிடித்துக்கொண்டார்.

அப்போது சோதோமின் ராஜா ஆபிராமிடம், எங்களிடமிருந்து நீர் கைப்பற்றிய பொருட்களை வேண்டுமானால் வைத்துக்கொள்ளும் ஆனால் நீர் கைதுசெய்துள்ள எங்களது நாட்டு மக்களை திருப்பித் தந்துவிடும் என்று கேட்கிறான்.  

இந்தச் சூழ்நிலையில் ஆபிராம் கர்த்தரை முன்னிறுத்திப் பார்க்கின்றார்.  சோதோமின் ராஜா கூறுவதுபோல கைப்பற்றிய பொருட்களை வைத்துக்கொண்டால் ஒருவேளை பிற்காலத்தில் , " நான்தான் ஆபிராமைச் செல்வந்தனாக்கினேன்; அவனிடமுள்ளவையெல்லாம் எனது சொத்துக்களே " என்று சோதோமின் ராஜா கூறுவான். அப்படிக் கூறுவது கர்த்தரை அவமதிப்பதுபோலாகிவிடும். ஏனெனில் கர்த்தர், "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்." ( ஆதியாகமம் 12 : 2 ) என்று ஆபிரகாமுக்கு ஏற்கெனவே ஆசீர்வாதத்தைக் வாக்களித்திருந்தார்.  

எனவே, "ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன்." என்று அந்தச் சொத்துக்களை ஆபிராம் மறுத்துவிட்டார். 

அன்பானவர்களே, இன்று நாங்கள் ஆவிக்குரிய மக்கள் என்றும் ஆவிக்குரிய ஆராதனை செய்கின்றோம் என்றும்  கூறிக்கொள்ளும் பலர், அரசாங்க பதவியில் இருந்துகொண்டு கைக்கூலி, லஞ்சம், ஏமாற்று வழிகளில் பொருள்சேர்த்து பின்னர் , "கர்த்தர் எங்களை ஆசீர்வதித்துள்ளார்" எனச் சாட்சியும் கூறுகின்றனர்.   லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளின்போது இவர்கள் சிக்கிக்கொள்கின்றனர். இது கிறிஸ்துவை அவமானப்படுத்துவதல்லவா? 

ஆபிரகாமின் வாழ்வில் பல விசுவாச அறிக்கைகளும் செயல்களும் இருந்தன. இதனாலேயே ஆபிரகாமை நாம் விசுவாசத்தின் தந்தை என்கின்றோம். அவரது வாழ்வு நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. ஆம் அன்பானவர்களே, ஆபிரகாமைப்போல உண்மையான ஒரு வாழ்வு வாழ்வோம். குறுக்கு வழியில் முயலாமல், கர்த்தர் நம்மை உயர்த்தும்படி அவரது பலத்தக் கரங்களுக்குள் அடங்கி இருப்போம். அப்போதுதான் நமது வாழ்வு ஒரு சாட்சியுள்ள வாழ்வாக இருக்கும். 

ஆதவன் 🔥 888🌻 ஜூலை 04, 2023 செவ்வாய்க்கிழமை

"கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல." ( லுூக்கா 9 : 62 )

கிறிஸ்து தனது அடியார்களிடம் உறுதியான நிலையான அன்பை எதிர்பார்க்கின்றார்.  ஒரு சில நாட்கள் முழு விசுவாசிகளாக இருந்துவிட்டுப் பின்னர் தேவைக்கேற்ப கிறிஸ்துவைப் பயன்படுத்த விரும்புபவர்களை அவர் தனக்கு ஏற்புடையவர்களாய்க் கருதுவதில்லை.

இன்று நாம் உலகினில் இப்படிப்பட்ட மனிதர்களைப் பரவலாகப் பார்க்க முடியும். அதாவது தங்கள்  தேவைக்காக நம்மைப் பயன்படுத்திவிட்டு பிறகு கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். பின்னர் நம்மைக்கொண்டு ஏதாவது காரியம் ஆகவேண்டுமென்றால்  வெட்கமில்லாமல் மீண்டும் நம்மிடம் வருவார்கள்.  ஆனால் தேவன் இத்தகைய மனிதர்களை அருவெறுக்கிறார். தேவைக்காக தன்னைப் பயன்படுத்துபவர்களையல்ல, மாறாக, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்". ( யோபு 13 : 15 ) என்று அவரைவிட்டுப்  பின்மாறாமல் இருப்போரை தேவன் அதிகமாக நேசிக்கிறார். 

இன்று பல இளைஞர்களும் இளம் பெண்களும் இப்படி இருக்கின்றனர். பெரும்பாலான காதலர்கள் போலியான காதலையே வளர்த்துக்கொண்டு பின்னர் அவரவர் தேவைக்கேற்ப பிரிந்து வேறு வாழ்க்கையினுள் பிரவேசிக்கின்றனர். 

இயேசு கிறிஸ்து கூறிய மேற்படி வசனத்தின்படி வாழ பழைய ஏற்பாட்டுக்காலத்திலேயே எலிசா தீர்க்கதரிசி முடிவெடுத்தார். எலியா, எலிசாவை சந்தித்தபோது எலிசா தனது வயலில் ஏர்பூட்டி உழுதுகொண்டிருந்தார். எலியா அவரை ஊழியத்துக்கு அழைத்தபோது எலிசா உடனே அவரிடம், "நான் சென்று எனது வீட்டாரிடம் விடைபெற்று வருகிறேன்" என்று கூறி தனது வீட்டிற்குச் சென்று திரும்பிவந்து மக்களுக்கு விருந்து வைக்கிறார். 

இதனை நாம் பின்வருமாறு வாசிக்கிறோம். "அப்பொழுது அவன், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்." ( 1 இராஜாக்கள் 19 : 21 )  

அன்பானவர்களே, ஏர்மாடுகளும் ஏரும் இருக்குமானால் ஒருவேளை ஊழியத்தில் வரும் இடர்பாடுகளைக் கண்டு பின்மாறி மீண்டும் உழவுசெய்யச் செல்ல  மனம் வந்துவிடும். எனவே முதலில் நாம் நமது ஏர்மாடுகளையும்  ஏரையும் அழித்துவிடுவோம் என்று முடிவெடுத்தார் எலிசா. ஆம், கர்த்தரைப் பின்பற்றுவதில் அவர் அவ்வளவு உறுதியாக இருந்தார். எந்தவிதத்திலும் பின்மாற்றம் நமது வாழ்வில் வராது என்று அவர் உறுதியாக நம்பியதால்தான் இப்படிச் செய்தார். 

கலப்பையின்மேல் (கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தில்) தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார் இயேசு கிறிஸ்து. ஆனால் எலிசாவோ கர்த்தருக்காக தனக்கு  இருந்த  கலப்பையையும் மாடுகளையும் அழித்துவிட்டு கர்த்தர்மேல் வைத்த விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். 

தேவன் எனக்குத் தருவதால் அவரை விசுவாசிக்கிறேன் என்பதல்ல விசுவாசம்.  என்னிடம் இருப்பவை அனைத்தும் போனாலும் பின்மாறாமல் அவரையே நம்புவேன் என்பதே உறுதியான  விசுவாசம்.

ஆதவன் 🔥 889🌻 ஜூலை 05, 2023 புதன்கிழமை

"சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு." ( 1 தீமோத்தேயு 4 : 7 )

"உண்மை தனது கால் செருப்பை அணியுமுன் பொய்யானது உலகத்தையே சுற்றிவந்துவிடும்" என்று கூறினார் பிரபல சுவிசேஷகரும் நற்செய்தியாளரும் இறையியல் அறிஞருமான சார்லஸ் ஸ்பர்ஜன்.  இதுவே இன்று கிறிஸ்தவத்தில் நடந்துகொண்டிருக்கிறது.  பொய்யும், கட்டுக்கதைகளும் மேலோங்கி தேவனது வார்த்தைகளையும் தேவபக்தியையும் தடுப்பவையாக இருக்கின்றன.  பல்வேறு தவறான போதனைகள், செயல்பாடுகள் இவைகளுக்குக் காரணம் பாரம்பரியம் எனும் பல தவறான எண்ணங்களும் செயல்களும். இத்தகைய  "சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு." என்கிறார் அப்போஸ்தலரான பவுல். 

கிறிஸ்தவத்தில் உள்ள சபைப் பிரிவினைகளுக்கு ஒரு முக்கிய  காரணம் தேவனுடைய வார்த்தைகளைவிட பாரம்பரியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்தான். ஆம், பாரம்பரியத்தைக் காப்பதற்காக நாம் தேவனது கட்டளைகளை அவமாக்குகின்றோம். இதனையே இயேசு கிறிஸ்து கண்டித்தார்.  "பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை அவமாக்குகிறீர்கள்". ( மாற்கு 7 : 9 ) என்றார். 

ஒரு சட்டப் பிரச்னை ஏற்படுகின்றதென்றால் நாம் சட்ட புத்தகத்தைத்தான் பார்த்து நமது பிரச்சனைக்குத் தீர்வு காண்கின்றோம். இதுபோல நமது வேத புத்தகம்தான் நமக்குச் சட்டப் புத்தகம். ஏனெனில் வேத வார்த்தைகள் தேவனது வார்த்தைகள். இவை தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டுப் பேசியவை. (2 பேதுரு 1:21)  எனவே இந்தத் தேவனுடைய வார்த்தைகள் தான்  நமக்கு இறுதித்தீர்வேத்  தவிர பாராம்பரியங்களல்ல.

கிறிஸ்தவத்திலுள்ள அனைத்துச் சபைப் பிரிவுகளிலும் இத்தகைய பல பாரம்பரியங்கள் உள்ளன. சில சபைகளில் இவை அதிகமாகவும் சில சபைகளில் சற்றுக் குறைவாகவும் பாரம்பரியங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளிலும் இன்று பல்வேறு பாரம்பரியங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. 

இதனையே இயேசு கிறிஸ்து, "மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்." ( மாற்கு 7 : 7 ) என்கின்றார். 

அன்பானவர்களே, பாரம்பரியங்கள் நமக்கு பாவத்திலிருந்து விடுதலை தராது; நமக்கு இரட்சிப்பைத் தராது. தேவனுடைய வார்த்தைகளே நம்மை விடுவிக்கமுடியும். நாம் வேதாகமத்தை ஆழமாக வாசிக்கும்போது எந்தெந்த விதங்களில் நாம் பாரம்பரியத்துக்கு அடிமையாகியுள்ளோம் என்பது புரியும். எந்த ஒரு சபைப் பிரிவிலுள்ள குறிப்பிட்ட தவறான பாரம்பரியத்தையும் தனிப்பட்ட விதத்தில் குறிப்பிட்டு விளக்கவேண்டிய அவசியமில்லை. தேவன் நமக்குப் புத்தியைத் தந்துள்ளார். எனவே, நாமே அவைகளை நிதானித்து அறிந்துகொள்ளலாம். 

ஆம் இந்தப் பாரம்பரியங்களெல்லாம் சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாய் இருக்கிற கட்டுக்கதைகள். இவைகளைவிட்டு தேவபக்தியாய் வாழ முயற்சிபண்ணுவது அவசியம். தேவனது வார்த்தைகளுக்கு மட்டுமே முன்னுரிமைகொடுத்து நம்மை ஒப்புக்கொடுத்து வாழவேண்டியது அவசியம். அப்போதுதான் தேவனது ஆசீர்வாதங்களைப் பெறமுடியும்.

ஆதவன் 🔥 890🌻 ஜூலை 06, 2023 வியாழக்கிழமை

"விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது." ( எபிரெயர் 10 : 38 )

இந்த உலகத்தில் நீதியாக வாழும் மனிதர்கள் பலர் உள்ளனர். நீதி வாழ்க்கைக்கும் ஒரு மனிதன் சார்ந்திருக்கும் மத நம்பிக்கைக்கும் சம்பந்தம்கிடையாது. எல்லா மத நம்பிக்கைக் கொண்டவர்களிலும் நீதியாக வாழ்பவர்கள் உண்டு. ஆனால் இன்றைய வசனம் கூறுகின்றது, "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்" என்று. அதாவது, நீதியாக வாழ்வதால் மட்டும் ஒருவன் பிழைப்பதில்லை, மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தினால்தான் பிழைக்கிறான். 

அந்த விசுவாசத்திலிருந்து பின்வாங்கினால் அவன் நீதிமானாக இருந்தாலும் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் கர்த்தர். காரணம், நீதிமானாக வாழ்வது என்பது வேறு, கர்த்தர்மேல் வைக்கும் விசுவாசம் என்பது வேறு. கர்த்தர்மேல் நாம் வைக்கும் விசுவாசம்தான் நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்கவும் பாவத்தை மேற்கொள்ளவும் உதவும். ஏனெனில் பாவத்துக்காக தனது இரத்தத்தைச் சிந்தியவர் கிறிஸ்து.  இப்படி கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசமே ஆவியின் பிரமாணம். அதுவே நம்மைப் பாவம், மரணம் இவைகளிலிருந்து விடுவிக்கமுடியும்.

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்று எழுதுகின்றார். இப்படி, "மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்." ( ரோமர் 8 : 4 )

எனவே அன்பானவர்களே, நாம் நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வதுடன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் முழு விசுவாசம் கொண்டவர்களாக வாழவேண்டியதும் அவசியம். 

விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது என்று நாம் வாசித்துள்ளோம். (எபிரெயர் 11:1) ஆம், காணாதவைகளின்மேல் நமது நிச்சயம் கர்த்தரை விசுவாசிப்பதால்மட்டுமே வரும். நோவா  நீதிமானாக மட்டுமல்லாமல் கர்த்தர்மேல் பூரண விசுவாசமுள்ளவனாக இருந்ததால் ஆசீர்வாதம்பெற்றார். 

"விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்." ( எபிரெயர் 11 : 7 )

விசுவாசத்தினாலுண்டாகும் நீதி எனும் வார்த்தைகளை மேற்படி வசனத்தில் நாம் வாசிக்கின்றோம்.  ஆம், மனித நீதி வேறு, விசுவாசத்தினால் வரும் தேவநீதியென்பது வேறு. அதுவே பாவத்தை மேற்கொள்ள உதவுவது. எனவே, நீதியுள்ள வாழ்க்கையோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேலுள்ள நமது விசுவாசத்தையும் விட்டுவிடாமல் உறுதியாக இருப்போம். 

ஆதவன் 🔥 891🌻 ஜூலை 07, 2023 வெள்ளிக்கிழமை

"ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்" ( 1 தீமோத்தேயு 6 : 3, 4 )

இன்றுபோல பவுல் அப்போஸ்தலரது காலத்திலும் பல்வேறு தவறான உபதேசங்களும் வழிகாட்டுதல்களும்  கிறிஸ்துவை விசுவாசித்த மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. இவைகளையே பவுல் வேற்றுமையான உபதேசங்கள் என்று கூறுகின்றார். இப்படி வேற்றுமையான உபதேசங்களைப்  போதிப்பவர்கள் இறுமாப்புள்ளவர்களும், ஒன்றும் அறியாதவர்களும் வீண் தர்க்கங்கள் வாக்குவாதங்கள் செய்வதை நோய்போல கொண்டவர்களுமே.

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் வரும் பாவ மன்னிப்பு, பாவத்திலிருந்து விடுதலை, ஆத்தும இரட்சிப்பு, நித்தியஜீவன் இந்த அடிப்படை உபதேசங்களை போதிக்காமல் அதாவது இத்தகைய  இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் முன்னுரிமைகொடுத்து போதிக்காமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான். 

இப்படிச் சொல்வதால் எப்போதும் இவைகளையே போதிக்கவேண்டுமென்று பொருளல்ல; மாறாக, இந்தச் சத்தியங்கள்தான் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்.  

அன்பானவர்களே, இன்று இதுபோல வேத வசனங்களைப் புரட்டித் தங்களுக்கேற்றாற்போல பிரசங்கிக்கும் ஆசீர்வாத  ஊழியர்கள் பலர் உண்டு. சமூக வலைத் தளங்களில் உலாவரும் பல பிரசங்கங்கள் இத்தகையவையே. வேத வசனங்களைக் கோர்வையாக, அவை என்னச் சொல்லவருகின்றன என்பதை உணராமல் குறிப்பிட்ட வசன  எண்ணை மட்டுமே சொல்லிக்கொண்டிருப்பார்கள் இவர்கள். 

வேதாகமம்,  அதிகாரம், வசனங்கள் எனப் பிரிக்கப்பட்டது 12ஆம் நூற்றாண்டில்தான். அவற்றை தோல் சுருளில் எழுதியவர்கள் தொடர்ச்சியாகவே எழுதினர்.   எனவே தொடர்ச்சியாக வாசிக்கும்போதுதான் எழுதப்பட்டதன் கருத்து நமக்குத் தெரியும்.  ஆசீர்வாத வசனங்களைப் பொறுக்கியெடுத்துப் போதிப்பவர்கள் அந்த வசனத்தின் முற்பகுதி, பிற்பகுதியைச் சேர்த்து வாசித்தால்தான் உண்மையான பொருள் புரியும். இத்தகைய ஊழியர்களுக்கு நாம் சொல்லிக்கொடுத்தாலும் புரியாது, நம்மிடம் தர்க்கம்தான் செய்வார்கள். 

இதற்கு என்ன காரணம் என்பதனையும் பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார்.  அவை என்னவென்றால், கெட்ட சிந்தனை, வாழ்க்கையில் உண்மையில்லாமை, ஊழியத்தை வருமானம் ஈட்டக்கூடியத் தொழிலாக எண்ணுவது இவைகளே. எனவே மாறுபாடான போதனைகளைக் கொடுக்கும் ஊழியர்களை விட்டு நாம் விலகவேண்டுமென்கிறார். "கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு." ( 1 தீமோத்தேயு 6 : 5 )  

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் உபதேசிக்காமல் வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவர்களைப் புறக்கணித்து ஆத்துமாவைக் காத்துக்கொள்வோம். 

ஆதவன் 🔥 892🌻 ஜூலை 08, 2023 சனிக்கிழமை

".......எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 28 )

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் நாங்கள்தான் என்று யூதர்களுக்கு ஒரு பெருமை இருந்தது. தாங்களே தேவனுக்குப் பிரியமான மக்கள் என்று எண்ணிக்கொண்டு மற்றவர்களை அற்பமாக எண்ணிக்கொண்டனர். இதனைத் தவறு என்று பேதுருவுக்கு அவரை கொர்நேலியுவிடம் அனுப்புமுன் தேவன் அவருக்குத் தெளிவுபடுத்தினார்.   தேவனுக்கு யாரையும் சுத்தமாக்க முடியும் எனவே எவரையும் நீ தீட்டாக எண்ணாதே என்று விளக்கினார் தேவன்.  "தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 15 )

இதனை உணர்ந்துகொண்டபின்பு, ".......எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 28 ) என்கிறார் பேதுரு.

இந்த நிலைமைதான் இன்றும்  கிறிஸ்தவத்தில் தொடருகின்றது. ஒவ்வொரு சபைப்பிரிவும் மற்றவர்களை 
அசுத்தமானவையாகவும்   தீட்டானவைகளாகவுமே பார்க்கின்றன. ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்று கூட்டங்களில் பேசும் குருக்கள், ஊழியர்கள்  தனிப்பட்டமுறையில் மதவெறியர்களாகவும் ஜாதி வெறியர்களாகவும், மொழி வெறியர்களாகவும்  இருக்கின்றனர்.  கிறிஸ்துவைப்போல பிறரை ஏற்றுக்கொள்ளும் உண்மையான மனநிலை இவர்களுக்கு இல்லை.  

இதுவே கிறிஸ்தவத்தின் சாபக்கேடு. கசப்பான இந்த மனநிலை இருக்கும் எவரும் கிறிஸ்துவை அறியமுடியாது அவரது மீட்பு அனுபவத்தையும் பெறமுடியாது.  இதனையே பேதுருவுக்கு அன்று  உணர்த்திய தேவன் இன்று  நமக்கும் உணர்த்துகின்றார்.  

எனவே, மன ஒருமைப்பாட்டுடன் நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவேண்டும்; அவரை அறிவிக்கவேண்டும்.  யாரையும் அற்பமாகவோ, வேண்டாதவர்களாகவோ நாம் எண்ணிவிடக்கூடாது. இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்." ( கொலோசெயர் 1 : 28 ) என்று கூறுகின்றார். எந்த மனிதனையும் கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிறுத்த நாம் முயலவேண்டுமேயல்லாமல் மதவெறிகொண்டு அலையக்கூடாது.

மேலும், இன்று கிறிஸ்தவர்களுக்கிடையேயுள்ள பிரிவினை தவிர மற்றவர்களால் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், அடக்குமுறைகள் எல்லாவற்றையும் தேவன் அறிவார். ஆனால், இவர்களுக்கு மனம்திரும்ப அவகாசம் கொடுப்போம் என்று தேவன் அவர்களுக்கு அவகாசம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.  அதனால் பிற்காலத்தில்  ஒருவேளை இவர்கள் மனம்திரும்பலாம். எனவே ஒருவரையும், ஒரு சபைப் பிரிவினரையும்  தீட்டானவர்கள் அசுத்தமானவர்கள் என்று நாம் ஒதுக்கவேண்டாம். தற்போது என்னிடம் நெருக்கமாக இருப்பவரும், தேவனுக்கென்று வைராக்கியமாக ஊழியம் செய்து வருபவருமான இந்து மார்க்கத்திலிருந்து கிறிஸ்துவை அறிந்துகொண்ட  சகோ. சொர்ணகுமார் என்பவர் ஒருகாலத்தில் ஆர். எஸ்.எஸ். ன் மாணவர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்து கிறிஸ்தவத்துக்கு எதிராகச் செயல்பட்டவர்தான். இப்படிப் பலர் உள்ளனர்.

எனவே, குறுகிய மதவெறியை விட்டு, மதவாதிகளாக இருப்தைவிட்டு ஆன்மீகவாதிகளாக மாறுவோம். எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும்  சொல்லவேண்டாம்.  

ஆதவன் 🔥 893🌻 ஜூலை 09, 2023 ஞாயிற்றுக்கிழமை

"விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்" ( 1 தீமோத்தேயு 6 : 12 )

நாம் ஒவ்வொருவரும் நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வைப் பெறவே அழைக்கப்பட்டுள்ளோம். அந்த நித்தியஜீவனைப் பெறவேண்டுமானால் நாம் விசுவாசத்தில் நிலைநிற்கவேண்டியது அவசியம். ஆனால், இந்த உலகத்தில் நமது விசுவாசத்தைக் குலைத்திடப்  பல்வேறு தடைகள் நம்மை எதிர்கொள்ளும். நாம் அவைகளை எதிர்த்துப் போராடி வெற்றிபெறவேண்டும். இதனையே தனது சீடனான தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலரான பவுல் அறிவுரையாகக் கூறுகின்றார்.  

இப்படி விசுவாசத்தைவிட்டு நம்மை வழுவச்செய்யும் முக்கியமான காரணம் பண ஆசை அல்லது பொருளாசை.  எனவேதான் பவுல் அடிகள் இதன் முந்தய வசனங்களில் கூறுகின்றார், "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்." ( 1 தீமோத்தேயு 6 : 10 )

பண ஆசை கொண்டு அலைவது தங்களைத் தாங்களே கத்தியால் குத்திக்கொள்வதுபோன்றது. தற்கொலை செய்பவர்கள் இப்படித்தான் செய்வார்கள். நித்திய ஜீவனுக்கு நேராகச் செல்வதைவிட்டு நாம் தவறான பாதையில் செல்வது ஆத்தும மரணத்தையே கொண்டு வரும். எனவேதான் பவுல் அப்போஸ்தலர் இதனைத் தங்களைத் தாங்களே குத்திக்கொள்வதற்கு ஒப்பிடுகின்றார். 

பணத்தைத் தேடி அலைவதைவிட்டு நித்தியஜீவனுக்கு நேராக நாம் செல்லவேண்டும். நாம் ஏற்கெனவே முந்திய தியானங்களில் பணம் சம்பாதிப்பதற்கும் பண ஆசைக்கும் உள்ள வேறுபாடுகளைத் தியானித்துளோம். பண வெறியைவிட்டு நாம் நித்திய ஜீவனை அடைந்திட முயலவேண்டும். இதனையே அப்போஸ்தலரான பவுல் தொடர்ந்து எழுதுகின்றார். "நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு." ( 1 தீமோத்தேயு 6 : 11)

நீதி, தேவபக்தி,  விசுவாசம்,  அன்பு,  பொறுமை,  சாந்தகுணம் இவையே நித்தியஜீவனுக்கு நேராக நம்மை நடத்தும் பண்புகள்.  இவைகளை அடையும்படியே நாம் முன்னுரிமை கொடுத்து முயலவேண்டும். மேலும், படிப்பு, உழைப்பு பற்றி நமது குழந்தைகளுக்குப் போதிப்பதுபோல இந்தக் குணங்களையும் தேவன்மேலுள்ள விசுவாசத்தையும் அவர்களில் வளர்க்க நாம் முயலவேண்டும்.  

நமது முன்மாதிரியான வாழ்க்கையும் முக்கியம். நமது விசுவாச வாழ்வு நமது குழந்தைகளுக்கு முன்மாதிரியாக அமையும். ஆம், விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடி  நித்தியஜீவனைப் பற்றிக்கொள்ளவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதனை மறந்திடாமல் நமது விசுவாசத்தைக் காத்திடத் துணிவுடன் போராடுவோம்.

ஆதவன் 🔥 894🌻 ஜூலை 10, 2023 திங்கள்கிழமை

"ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." (எபேசியர் 5:14)

இன்றைய வசனத்தில் தூக்கம், மரித்தோர் என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை ஆவிக்குரிய தூக்கத்தையும் ஆவிக்குரிய மரணத்தையும் குறிப்பனவாக உள்ளன. 

தேவனை அறியவேண்டுமென்ற ஆர்வமில்லாமல் ஏனோதானோ என்று எல்லோரும் வாழ்வதுபோன்ற ஒரு வாழ்வு வாழ்ந்துகொண்டு குறிப்பிட்ட நாளில்மட்டும் ஆராதனைகளில் கலந்துகொண்டு, கடமைக்காக வேதாகமத்தில் சில பகுதிகளை அவ்வப்போது வாசித்துக்கொண்டு, எந்தவித ஆவிக்குரிய உணர்வோ இல்லாமல் வாழும் வாழ்க்கை ஆவிக்குரிய தூக்க வாழ்க்கை. 

உலக மனிதர்கள் செய்யும் அனைத்து அவலட்சணமான பாவ காரியங்களையும் செய்து  தேவனைப்பற்றிய எண்ணமோ அச்சமோ இல்லாமல் வாழும் வாழ்க்கை மரித்துப்போன வாழ்க்கை. இப்படி மரித்துப்போன மனிதர்கள் செய்யும் பாவ காரியங்களை  வெளியில் சொல்லுவதும்  அவலட்சணமாய் இருக்கிறது என்கிறார் பவுல் அடிகள். "அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே." எபேசியர் 5:12)

நாம் ஆவிக்குரிய தூக்கம் கொண்டவர்களாக வாழ்ந்தாலும் தேவனது பார்வையில் மரித்தவர்களே. எனவேதான்,  "தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு" என்று கூறப்பட்டுள்ளது. மரித்தவன் உணர்வற்றுக் கிடப்பதுபோலக் கிடக்காதே எழுந்திரு என்று தேவன் கூறுகின்றார். 

இன்று ஆவிக்குரிய தூக்கத்தில் வாழும் பலர் தங்களது மேலெழுந்தவாரியான பக்திச்  செயல்பாடுகளைப்  பெரிதாகக் கருதுகின்றனர். எனவே, வாழ்வில் ஏதாவது துன்பமோ, பிரச்சனையோ வரும்போது, "நான் எவ்வளவோ ஜெபிக்கிறேன், கோயில்களுக்குப் போகிறேன், வேதாகமத்தை வாசிக்கிறேன்...எனக்கு ஏன் இந்தக் கஷ்டங்கள் .....ஆண்டவருக்குக் கண்ணில்லையா?" என்பார்கள். 

அன்பானவர்களே, முதலில் நாம் நமது ஆவிக்குரிய வாழ்க்கை எப்படியுள்ளது என்று நிதானித்து அறியவேண்டும். தூங்கிக்கொண்டிருப்போமானால் தூக்க நிலையிலிருந்து எழும்பவேண்டும். "அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." என்று இன்றைய வசனம் சொல்கிறது. ஆம், நாம் பிரகாசிக்கப்பட வேண்டுமானால்   முதலில் நமது தூக்கத்திலிருந்தும், மரித்த வாழ்க்கை வாழ்பவர்களாக இருந்தால் உயிர்பெற்றவர்களாக மாறி எழும்பவேண்டியதும் அவசியம். அப்போது நாம் பிரகாசமடைவோம்.

ஆதவன் 🔥 895🌻 ஜூலை 11, 2023 செவ்வாய்க்கிழமை

"பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்." ( யோவான் 3 : 20 )

ஒருமுறை என்னிடம் அன்பாகவே இருக்கும் எனது ஊரைச் சார்ந்த எனது அப்பா வயதுடைய ஆசிரியப் பெரியவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது எங்களது பேச்சு சுவிசேஷம் சம்பந்தமாகத் திரும்பியது. பதினைந்து இருபது நிமிடங்கள் பேசியபின்பு, அவர் என்னிடம், "என்ன தம்பி எல்லோரும் பாவம், பாவம் ..... என்றுதான் சொல்கிறீர்கள். எதுதான் பாவம்? என்றார். நான் அவருக்கு, "தேவ சித்தத்துக்கு எதிரான நமது செயல்களெல்லாமே பாவம்தான்" என்றேன். "இப்படிச் சொன்னா எப்படி...தெளிவாகச் சொல்லுங்க" என்றார். 

நான் அவரிடம்,  உங்களுக்கு உதாரணத்துக்கு ஒரு வசனம் சொல்கிறேன் என்று கூறி, "............வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை." ( 1 கொரிந்தியர் 6 : 9, 10 ) என்ற வசனத்தைச் சொன்னேன். 

அதுவரை தம்பி,  தம்பி  என அன்பாகப் பேசியவர், "சின்னப்பயலே .. என்னடா பேசுகிறாய்? என்னைப்பற்றி உனக்குத் தெரியுமாடா? உன் அப்பா வயசுடா எனக்கு " என்றபடி என்னை அடிக்கக் கை ஓங்கினார். எனக்கு எதுவும் புரியவில்லை. ஏன் இவருக்கு இவ்வளவு கோபம்?. இந்தச் சம்பவத்தை எனது  ஆவிக்குரிய நண்பரிடம் நான் சொல்லும்போது அவர் கூறினார், "அவரே ஆண்புணர்ச்சிக்காரர் அவரிடம்  நீ  இப்படிச் சொன்னா உன்னை அடிக்காம என்னசெய்வார்.? ஏற்கெனவே பள்ளியில் இவர்மேல் இந்தக் குற்றச்சாட்டிற்கு அவருக்கு மெமோ கொடுத்திருக்கிறார்கள்" என்று விளக்கினார். அதன்பிறகு அந்த ஆசிரியர் என்னிடம் பேசமாட்டார். என்னைக் காணும் இடங்களில் முறைத்துக்கொண்டு செல்வார்.

ஆம், இப்படியே இயேசு கிறிஸ்துவிடம் பலரும் நெருங்கிவரத் தயங்குவதற்குக் காரணம் அவர்களது பாவங்களே. தெய்வங்கள் என்று கூறப்படும் மற்ற எந்த தெய்வங்களும் மனிதர்கள் தன்னிடம்நெருங்கிவர அவர்களது பாவங்கள் தடையாக இருக்கின்றன என்று கூறுவதில்லை. எனவே எளிதாக சில பரிகாரங்களைச் செய்கிறார்கள்.   ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நெருங்க நாம் எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை. காரணம் அவரே நமக்காக , நமது பாவங்களுக்குப் பரிகாரியாகிவிட்டார்.  அதனை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு மன்னிப்பு பெறும்போது நாம்  கிறிஸ்துவை வாழ்வில் பெறுகின்றோம். 

இந்த உலகினில் சில தொழில்கள் நாம் மிக அதிகமாகப் பாவம்செய்ய ஏதுவானத் தொழில்களாக உள்ளன. எனவே அத்தகைய தொழில்களைச் செய்பவர்களிடம் நாம் சுவிசேஷம் சொல்லும்போது அவர்களுக்கு அது தொழிலுக்குத் தடைபோலத் தெரியும். எனவே நமது சுவிசேஷ அறிவிப்பை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 

ஆம், "பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்."  திருடர்கள் திருடச் செல்லும்போது முதலில் அந்த இடத்திலுள்ள ஒளியைத்தான் முதலில் அழிக்க முயலுவார்கள். ஏனெனில் ஒளியானது அவர்களது செயலை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். இதுபோல கிறிஸ்துவின் வசனங்கள் பலரது பாவங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி அவர்களது மனச்சாட்சியைக் குத்துவதால் அவர்கள் வேத வசனங்களையும் அவற்றை எடுத்துச் சொல்பவர்களை பகைக்கின்றனர்.  

துணிவுடன் கள்ளம் கபடமின்றி நமது பாவங்களை ஒத்துக்கொண்டு ஒளியாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போதுதான் அவரை நமது வாழ்வில் பெற்று அனுபவிக்கமுடியும். 

ஆதவன் 🔥 896🌻 ஜூலை 12, 2023 புதன்கிழமை

"எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவவூற்று புறப்படும்." ( நீதிமொழிகள் 4 : 23 )

உயிர்களின் பிறப்பிடமே தண்ணீர்தான். எனவேதான் இன்று விஞ்ஞானிகள் பல்வேறு கிரகங்களில் நீர் இருக்கின்றதா என்பதை அறிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஏனெனில் ஒரு கிரகத்தில் தண்ணீர் இருக்குமானால் அங்கு உயிர்கள் வாசிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது என்று பொருள். 

நமது ஆவிக்குரிய வாழ்வு உயிருள்ள வாழ்வாக இருக்கவேண்டுமானால் நமது ஆத்துமாவில் ஜீவத் தண்ணீர் இருக்கவேண்டியது அவசியம். நீரற்ற வறண்ட நிலத்தில் எப்படி பயிர்களோ உயிர்களோ வளராதோ அதுபோல உயிரற்ற ஆத்துமாவில் எதுவுமே இராது.  இன்றைய வசனம் கூறுகின்றது, "எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவவூற்று புறப்படும்." ஆம், நமது இருதயத்திலிருந்து  ஜீவ ஊற்று புறப்படவேண்டுமானால் நமது இருதயம் பக்குவமாக பாதுகாக்கப்படவேண்டும்.  

ஜீவத்தண்ணீர் என்று இயேசு குறிப்பிடுவது பரிசுத்த ஆவியானவரைக் குறித்துதான். இதனையே, "தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்." ( யோவான் 7 : 39 ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இன்றைய வசனம் கூறுவதன்படி, இருதயம் பாதுகாக்கப்படவேண்டுமானால் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் உள்ளவர்களாய் வாழவேண்டியது அவசியம். எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்." ( யோவான் 7 : 38 ) என்று. 

மேலும் சமாரிய பெண்ணிடம் பேசும்போது இயேசு கிறிஸ்துக்  கூறினார், "இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார்." ( யோவான் 4 : 10 )

ஆனால் அன்றுபோல இன்றும்கூட மனிதர்கள் கர்த்தரையும் அவரது ஆவியானவரையும் பெறுவதற்கு முயற்சிப்பதைவிட  பிற காரியங்களில்தான் கவனம் செலுத்துகின்றனர். இதனையே எரேமியா மூலம் தேவன்  கூறினார், "என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்." ( எரேமியா 2 : 13 )

நமது இருதயத்தை தேவனுக்கு ஏற்றபடி மாற்றாமல் உலக ஆசீர்வாதங்களுக்கே முன்னுரிமை கொடுத்து வாழ்கின்றோமென்றால் நாம் ஜீவத்தண்ணீர் ஊற்றினைவிட்டு வெடிப்புள்ள தண்ணீர் நிற்காத தொட்டிகளைக் கட்டுகின்றவர்களாகவே இருப்போம். அத்தகைய தொட்டியால் யாருக்கும் பயனில்லை.  

நமது இருதயத்தை இயேசு கிறிஸ்துவுக்குத் திறந்து கொடுப்போம்; எல்லாக் காவலோடும் நமது இருதயத்தைக் காத்துக்கொள்வோம் அப்போது ஜீவ ஆவியான பரிசுத்த ஆவியானவர்  நமது இருதயத்திலிருந்து ஊற்றாகப்  புறப்படுவார். ஜீவ ஊற்று நமது இருதயத்திலிருந்து புறப்படுமேயானால் நாம் நமக்குமட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கும் உபயோகமுள்ளவர்களாக இருப்போம். நம்மைச் சுற்றிலும் செழிப்பான ஒரு தோட்டமே உருவாகும்.  

ஆதவன் 🔥 897🌻 ஜூலை 13, 2023 வியாழக்கிழமை

"நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 )

கிறிஸ்து இயேசுவினால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய நமக்கு கிடைத்துள்ள பெரியபேறு என்ன என்பதை அப்போஸ்தலனாகியப் பேதுரு இன்றைய வசனத்தில் விளக்குகின்றார்.   முன்பு அந்தகார  இருளிலிருந்து நம்மை அவர் தனது ஆச்சரியமான ஒளியினுள் அழைத்தார். நாம் அதனால் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும், ஆசாரியர்களாகவும் பரிசுத்த ஜாதியாகவும் அவருக்குச் சொந்தமான மக்களாகவும் மாறியுள்ளோம். ஏன் இப்படி நம்மை அழைத்தார்? அவரை நமது சாட்சியுள்ள வாழ்க்கையால் மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டுமென்பதால்.

இந்த உலகத்தில் வாழும் அனைவருமே அந்த ஆச்சரியமான ஒளியாகிய அவரை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அவரை அறிவித்தால்தான் முடியும். எனவே நாம் நமது வாழ்க்கையால் அவரை அறிவிக்கவேண்டியது அவசியம். 

அவர் நம்மைத் தெரிந்துகொண்ட இந்தத் தெரிந்துகொள்ளுதல் சாதாரணமாக எளிதில் நமக்குக் கிடைத்திடவில்லை; மாறாக, அவரது பரிசுத்த இரத்தத்தால் கிடைத்தது. அவரது பாடுகளும், இரத்தம் சிந்துதலும் நமக்கு இந்தச் சிறப்பினைப் பெற்றுத்தந்துள்ளது. 

இதனையே நாம் வெளிப்படுத்தின விசேஷத்தில் வாசிக்கின்றோம்,  "நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக." ( வெளிப்படுத்தின விசேஷம் 1 : 6 ) என்று. 

பதவியில் இருக்கும் ஒருவர் மற்றவர் மேலான இடத்தைப் பிடித்துவிடக்கூடாது என்பதிலேயே குறியாக இருந்து செயல்படுவார். ஆனால் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாம் அவரைப்போல பிதாவோடுகூட இருக்கவிடுமென்று நம்மைத் தெரிந்துகொண்டார். இதனை அவர் தனது சீடர்களோடு உலகத்தில் வாழ்ந்தபோது தனது ஜெபத்தில் பிதாவைநோக்கி முறையிட்டார். (யோவான் - 17:23-26)

அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் காரணம் இதுதான். அதாவது நம்மேல் வைத்த அன்பினால் நாம் அவரது பரிசுத்த சமூகத்தில் ராஜாக்களாக இருக்கவேண்டுமென்பதற்காக இந்தப் பாடுகளை அவர் அனுபவித்தார். இந்த உண்மையினை நாம் வரும்போதுதான்  கிறிஸ்துவின்மேல் நமக்குத் தனிப்பட்ட அன்பு ஏற்படும்.  

கிறிஸ்துவின் அன்பையும் நமக்காக அவர்பட்ட பாடுகளின் தியாகத்திற்காகவும் எண்ணி அவருக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்வோம். கிறிஸ்து வெறுக்கும் காரியங்களை நாமும் வெறுப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. 

ஆதவன் 🔥 898🌻 ஜூலை 14, 2023 வெள்ளிக்கிழமை

"கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்". ( 1 சாமுவேல் 17 : 47 )

இந்த அண்டசராசரங்களை தனது வார்த்தையால் தேவன் உண்டாக்கினார். அவர் உண்டாகட்டும் என்று கூற அனைத்தும் உண்டாயின. அவருக்குத் தான் உண்டாக்கின மனிதனை இல்லாமலாக்குவது எவ்வளவு எளிதான காரியம்!! அவருக்கு எதிராக போராடுபவர்களை தேவன் நேசிக்கவே செய்கின்றார். அதனால்தான் கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் பிற்பாடு மனம்திரும்பி அவருக்கு ஊழியக்காரராக மாறுகின்றனர். அப்போஸ்தலரான பவுல் அடிகளே இதற்கு முதல் உதாரணம். 

இன்றைய வசனம் தாவீது பெலிஸ்தியனாகிய கோலியாத்தைக் கொல்லும்முன் கூறிய வார்த்தைகள்.  பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள இந்த வசனத்தை புதிய ஏற்பாட்டு அர்த்தத்தில் நாம் பார்த்தல் நல்லது. 

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல. கெத்சமெனி தோட்டத்தில் அவரைப் பிடிக்க வந்தவர்களில் ஒருவனது காதினை  பேதுரு வாளினால் ட்டியபோது இயேசு கிறிஸ்து அவரிடம், "உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்." ( மத்தேயு 26 : 52 ) என்று கூறித் தடுத்தார். 

மட்டுமல்ல, "நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?" ( மத்தேயு 26 : 53 ) என்று கேள்வி எழுப்பினார். ஆம், அவர் நினைத்தால் ஒரே நொடியில் எல்லாவற்றையும் செய்யமுடியும். 

ஆனால் தேவனது இரட்சிப்பின் திட்டம் வேறு. கிறிஸ்து இரத்தம் சிந்தியாகவேண்டும். அந்த இரத்தத்தால்தான் இரட்சிப்பு நடைபெறவேண்டும். எனவே, இன்றைய வசனம் புதிய ஏற்பாட்டு முறையில் கூறப்படவேண்டுமானால் "கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல தனது சுய இரத்தத்தால் இரட்சிப்பவர்  என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்" என்று இருக்கவேண்டியது அவசியம். 

இன்றைய வசனத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது, "இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்று போட்டான். " ( 1 சாமுவேல் 17 : 50 ) என்று கூறப்பட்டுள்ளது. அன்பானவர்களே, இதனை நாம், "இவ்விதமாகக் கிறிஸ்து மூன்று ஆணிகளாலும் சிலுவையினாலும் பாவத்தை  மேற்கொண்டு, அதனை மடங்கடித்து, அதனை அழித்துப்போட்டார் " என்று கூறலாம்.  

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 ) என்று கூறுகின்றார். 

ஆம், நமது "கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்". 

ஆதவன் 🔥 899🌻 ஜூலை 15, 2023 சனிக்கிழமை

"சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை." ( 1 சாமுவேல் 3 : 19 )

இன்றைய தியானத்துக்குரிய இந்த வசனம் என்னைச் சிந்திக்கவைத்தது. இந்த வசனத்தில், "சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனோடுகூட இருந்தார்" என்று கூறப்பட்டுள்ளது. அன்பானவர்களே, பொதுவாக நமது வாழ்க்கையில் நாம் வளர வளரக் கர்த்தரைவிட்டு விலகிவிடுகின்றோம். காரணம் வளர வளர உலகக் கவர்ச்சி நம்மை இழுத்து நம்மைப் பாவத்துக்குநேராக இழுத்துச் சென்றுவிடுகின்றது. 

சாமுவேல் சிறுவனாக இருந்தபோதே தேவனது சத்தத்தைக் கேட்கும் அனுபவத்தைப் பெற்றிருந்தார். அதாவது தன்னிடம் கர்த்தர்தான் பேசுகிறார் என்பதைக்கூட அறியமுடியாத வயது அவருக்கு அப்போது. எனவே கர்த்தர், "சாமுவேலே" என்று அழைத்தபோது ஆசாரியானாகிய ஏலிதான்  தன்னை அழைப்பதாக எண்ணிக்கொண்டார். எனவே, சாமுவேலை  மூன்றுமுறை கர்த்தர் அழைத்தபோதும் ஏலியிடம் சென்று "இதோ இருக்கிறேன், என்னை அழைத்தீரே?" என்றார். 

கர்த்தர்தான் சாமுவேலை அழைக்கிறார் என்பதை ஏலி அறிந்துகொண்டார். எனவே மூன்றாவது முறை சாமுவேல்  தன்னிடம் வந்தபோது ஏலி, "சாமுவேலை நோக்கி: நீ போய்ப்படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றார்". ( 1 சாமுவேல் 3 : 9 )

ஆசாரியனாகிய ஏலியின் புதல்வர்களைப்போல அல்லாமல் சாமுவேல் உத்தமமாக நடந்துகொண்டதால் கர்த்தர் அவருடனேகூட இருந்தார். 

இன்று நமக்கு இது ஒரு படிப்பினையாக உள்ளது. ஊழியமானது பரம்பரைத் தொழிலல்ல. ஆசாரியாகிய ஏலிக்கு இரண்டு மகன்கள் இருந்தபோதும் அவர்களை புறக்கணித்த தேவன் சாமுவேலை தெரிந்துகொண்டார். அது ஏனென்றால் சாமுவேலின்  தூய்மையான வாழ்க்கைதான். ஆனால் இன்றைய நாட்களில் ஊழியம் பரம்பரைத் தொழிலாகிவிட்டது. காரணம், ஊழியத்தின்மூலம் சேர்க்கப்பட்டச் சொத்துக்கள் மற்றவர்களுக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகத் தங்கள் வாரிசுகளை ஊழியர்கள் ஊழியத்தில் பழக்குகின்றனர். 

சாமுவேலை தேவன் தெரிந்துகொண்டதாலும், அந்தத் தெரிந்துகொள்ளுதலுக்கேற்ப சாமுவேல் நடந்துகொண்டதாலும் கர்த்தர் அவரோடே இருந்தார். அப்படி இருந்ததால், "அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை. சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது." ( 1 சாமுவேல் 3 : 19,20 )

நமது வாழ்கையினைச் சிந்தித்துப்பார்ப்போம். வளர வளர நாம் எப்படி இருக்கின்றோம்? நேற்றைவிட இன்று எப்படி இருக்கிறது நமது ஆவிக்குரிய வாழ்க்கை? எந்த நிலையிலும் கர்த்தர் நம்மைவிட்டு விலகிடாமல் நமது ஆவிக்குரிய வாழ்வைக் காத்துக்கொள்வது நமது கடமை. அப்படி வாழ்வோமானால் நம்மைக்குறித்த தனது சித்தத்தைத் தேவன் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.   

ஆதவன் 🔥 900🌻 ஜூலை 16, 2023 ஞாயிற்றுக்கிழமை

"நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்." ( 1 யோவான்  1 : 6 )

அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்துகின்றன. தேர்தல் நெருங்கும்போது அவர்களது இந்தச் செயல்பாடுகள் தீவிரமாக இருக்கும். இன்று தங்களைக்  கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்களது நிலைமையும் இப்படி அரசியல் கட்சியில்  உறுப்பினர்களாக சேர்வதுபோல போல ஆகிவிட்டது பரிதாபகரமான நிஜம். 

கிறிஸ்தவ பெற்றோருக்குப் பிறந்துவிட்டதால் நாம் கிறிஸ்தவர்களல்ல; ஆலயங்களுக்குச் செல்வதாலும், தசமபாக காணிக்கைக் கொடுப்பதாலும், ஜெபக் கூட்டங்களில் கலந்துகொள்வதாலும் நாம் கிறிஸ்தவர்களல்ல.  ஆம் நாம் கிறிஸ்துவோடு ஐக்கியப்படாமல் இருந்துகொண்டும் இப்படிபட்டக் காரியங்களைச் செய்யமுடியும். 

கிறிஸ்துவோடு ஐக்கியம் என்பது அவரை நமது வாழ்வில் அனுபவிப்பது; அவரோடு நெருங்கிய உறவினை வளர்த்துக்கொண்டு வாழ்வது; அவரது பிரசன்னத்தை அன்றாடம் வாழ்வில் அனுபவிப்பது; அவரது கற்பனைகளின்படி வாழ்வது. இப்படி வாழும்போது நமது குணங்கள் மாறுதலடையும். நம்மிடம்  ஆவிக்குரிய கனிகள் இருக்கும். 

"ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) இப்படி வாழும்போது நாம் சில தியாகங்கள் செய்யவேண்டியிருக்கும். நமது ஆசைகளை, தேவைகளை குறைக்கவேண்டியிருக்கும்.  இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்." ( கலாத்தியர் 5 : 24 ) என்று கூறுகின்றார். 

இப்படி இல்லாமல் நாம் பெயரளவில் மட்டும் கிறிஸ்தவர்களாக இருப்போமானால் நாம் பொய்யர்கள். எனவேதான்  நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

நாமும் அவரது சீடர்களைப்போல கிறிஸ்துவோடு ஐக்கியமுள்ளவர்களாக வாழவேண்டும் என்பதற்காகவே அவரிடம் கண்டும் கேட்டும் இருப்பதை நமக்கு அறிவித்துள்ளதாகக் கூறுகின்றார் அப்போஸ்தலரான யோவான். "நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது." ( 1 யோவான்  1 : 3 ) 

பெயரளவு கிறிஸ்தவர்களாக அல்ல; கிறிஸ்துவோடு ஐக்கியத்தை வளர்த்துக்கொண்டவர்களாக வாழ்வோம். நம்முடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கட்டும். அத்தகைய ஐக்கியத்துக்குத்  தடையாக உள்ள நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டுவோம். 

                                                                                  
ஆதவன் 🔥 901🌻 ஜூலை 17, 2023 திங்கள்கிழமை

"அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது." ( ரோமர் 4 : 13 )

இன்றைய தியான வசனத்தில் "விசுவாசத்தினால் வருகிற நீதி" எனும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம். கட்டளைகளைக் கடைபிடிப்பதால் வரும் நீதியைவிட விசுவாசத்தினால் வருகின்ற நீதி மேலான நீதி. ஆம், தேவன்மேல் வைக்கும் விசுவாசத்தால்  மட்டுமே நாம் அத்தகைய நீதியுள்ள வாழ்க்கை வாழமுடியும். 

நியாயப்பிரமாண கட்டளைகளைக் கடைபிடிப்பதால் நாம் நீதிமானாக முடியாது. இயேசு கிறிஸ்து பரிசேயர்களையும் வேதபாரகர்களையும் பார்த்துக் கூறினார், "மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்"( மத்தேயு 23 : 23 )

நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிடாமலிருக்க வேண்டுமானால் நாம் தேவன்மேல் விசுவாசம்கொண்டவர்களாக வாழவேண்டியது அவசியம். 

ஆபிரகாம் காலத்தில் நியாயப்பிராமணக்  கட்டளைகள் கொடுக்கப்படவில்லை.  அவரது காலத்துக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரே மோசேமூலமே நியாயப் பிராமணக்  கட்டளைகள் கொடுக்கப்பட்டன. ஆனால் ஆபிரகாம் தனது விசுவாசத்தினால் தேவ நீதியை அதற்கு முன்னரே நிறைவேற்றினார். ஆனால் வேதம் கூறுகின்றது, மோசேமூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிராமணக்  கட்டளைகள் தேவ நீதியுள்ள வாழ்க்கை வாழ உதவவில்லை. இதனையே அப்போஸ்தலராகிய பவுல் அடிகள், "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே." ( கலாத்தியர் 2 : 16 ) என்றுகூறுகின்றார். 

அப்படி நியாயப்பிரமாணம் நம்மில் செய்யமுடியாத தேவ நீதியை  கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால் நாம்  செய்து முடிக்கவேண்டும் என்பதற்காகவே  கிறிஸ்து இயேசு உலகினில் வந்தார். இதனையே அப்போஸ்தலராகிய பவுல் அடிகள், "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 ) என்று கூறுகின்றார். 

எனவே அன்பானவர்களே, வெறும் கட்டளைகளைக் கடைபிடித்து நாம் நம்மை நீதிமான் என்று எண்ணிக்கொண்டிருப்போமானால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்பவர்களாக இருப்போம்.  கிறிஸ்து இயேசுவின்மேல் உள்ள விசுவாசமே நம்மைப் பாவங்களை மேற்கொள்ளவும் நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவும் உதவிடும். எனவே கிறிஸ்துவின்மேலுள்ள நமது விசுவாசம் குறைந்திடாமல் விழிப்புடன் இருப்போம்.  

                                                                          
ஆதவன் 🔥 902🌻 ஜூலை 18, 2023 செவ்வாய்க்கிழமை

"நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்." ( 1 கொரிந்தியர் 2 : 12 )

இன்றைய வசனத்தில் அப்போஸ்தலராகிய பவுல் அடிகள் இரண்டு ஆவிகளைக்குறித்துப் பேசுகின்றார்.  ஒன்று, உலக மனிதர்களிடமுள்ள ஆவி; இன்னொன்று தேவனிடமிருந்து புறப்பட்டு வருகின்ற ஆவி. இந்த உலகத்தில் அதன் செயல்பாடுகளை அறியவும் செயல்படவும் உலகத்தின் ஆவி போதும். ஆனால் தேவனிடமிருந்து வரும் ஆவியினைப் பெற்றால்தான் அவர் அருளும் ஈவுகளையும் அவரின் அன்பின் ஆழங்களையும் மேலான ஆவிக்குரிய சத்தியங்களையும்   நாம் அறிய முடியும். இதனையே, "தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்." என்கின்றார் பவுல் அடிகள். 

தொடர்ந்து வரும் வசனத்தில், "அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்." ( 1 கொரிந்தியர் 2 : 13 ) என்று கூறுகின்றார். அதாவது, மனிதர்கள், குறிப்பாகப் பேச்சாளர்கள், அரசியல்வாதிகள் பேசுவதுபோல நாங்கள் பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசுகின்றோம் என்கின்றார்; தேவனிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட அனுபவத்தில் பேசுகிறோம் என்று பொருள்.

அன்பானவர்களே, யார் வேண்டுமானாலும் கிறிஸ்துவின் செய்தியை அறிவிக்கலாம். ஆனால் அப்படி அறிவிக்க ஆவியானவரின் துணை வேண்டுமென்று இதனால் புரிகின்றது. இன்று பல போதகர்கள், குருக்களது பேச்சுக்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாகவே இருக்கின்றன. ஆவிக்குரிய அனுபவமில்லாமல் கற்றறிந்த அறிவினைக்கொண்டு போதிப்பது மனித போதனையே. 

"சட்டியில் இருந்தால் அகப்பையியல் வரும்" என்று ஒரு தமிழ் பழமொழி உண்டு. அதாவது நம்மிடம் என்ன இருக்கின்றதோ அதைத்தான் நாம் மற்றவர்களுக்குக் கொடுக்கமுடியும். ஆனால், தேவன் நம்மில் செயல்படும்போது நமக்குத் தெரியாத சத்தியங்களையும், அதாவது நம்மிடம் இல்லாததையும்  நாம் ஆவியினால் அறிந்து போதிக்க முடியும். 

எனவே, நூறு சதவிகித உலக ஆசை செயல்பாடுகளை வாழ்வில் கைக்கொண்டு வாழும்  ஒருவர்  ஆலயத்தில் நின்று ஆவிக்குரிய செய்தியைக் கொடுக்கமுடியாது என்பது நிச்சயம்.  தேவனால் அருளப்பட்ட ஆவியினைப் பெற்று ஆவிக்குரிய வாழ்வு வாழ்வு ஒருவரே ஆவிக்குரிய செய்தியைக்கொடுத்து மற்றவர்களையும் ஆவிக்குரிய வழியில் நடத்த முடியும். நாம் நல்ல ஆவிக்குரிய போதகர்கள் நமக்குக் கிடைத்திட வேண்டுதல் செய்யவேண்டியது அவசியமாயிருக்கிறது. 

என்னை ஆவிக்குரிய வாழ்வில் ஆரம்ப நாட்களில் வழிநடத்திய காலம்சென்ற  பாஸ்டர் ஜான்சன் டேவிட் (ஐ.பி.சி சர்ச்) அதிகம் படிக்காதவர்தான்; இறையியல் கல்லூரியில் அவர் படித்ததில்லை. ஆனால் அவரைப்போன்ற போதகர்களை இத்தனை ஆண்டுகளிலும் நான் கண்டதில்லை. ஆலயத்தில் போதிக்க மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழ தேவனால்  அருளப்பட்டவைகளை அறியும்படி தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியைப் பெறவேண்டியது அவசியமாய் இருக்கிறது. ஆனால், ஆவிக்குரிய வழக்கை என்ன என்பதை அறியாத மனிதர்களுக்கு இவை புரியாது; பைத்தியக்கார உளறல் போலவே இருக்கும்.  

ஆம் "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." ( 1 கொரிந்தியர் 2 : 14 )

                                                                                     
ஆதவன் 🔥 903🌻 ஜூலை 19, 2023 புதன்கிழமை

"உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்." ( ஏசாயா 26 : 3 )

இன்று பல மனிதர்களிடம் இல்லாத ஒன்று மன சமாதானம். பெரிய பதவிகளிலும் புகழின் உச்சத்திலும் இருக்கும் பலர் சமாதானமின்றி தற்கொலை செய்து மடிகின்றனர். இதனை நாம் பார்க்கும்போது மனசமாதானத்துக்கும் பதவி,  புகழ், செல்வம் இவற்றுக்கும் சம்பந்தமில்லை; இவை மனிதர்களுக்கு மன சமாதானத்தைக் கொடுப்பதில்லை என்பது தெளிவாகின்றது. 

நல்ல பதவியோ, செல்வமோ, புகழோ இல்லாத கோடிக்கணக்கான மனிதர்கள் உள்ளனர். எல்லோரும் தற்கொலை செய்வதில்லை. ஆனால் ஏதோ நம்பிக்கையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் எல்லோரும் பூரண சமாதானத்துடன் வாழ்கின்றார்கள் என்று கூறமுடியாது. தற்கொலை எனும் முடிவினை எடுக்காவிட்டாலும் பலரது வாழ்க்கை சமாதானமில்லாமலேயே  இருக்கின்றது.  

ஒரு மனிதனுக்குப்  பூரண சமாதானம் கார்த்தரைப் பற்றிக்கொள்வதாலேயே கிடைக்கின்றது. பூரண சமாதானம் என்பது உலகம் கொடுக்க இயலாத சமாதானம். இதனையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பின்வருமாறு  வாக்களித்தார்:-  "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக." (யோவான் 14:27)

இன்று பலரும் உலகம் கொடுக்கும் சமாதானத்தைத் தேடி மது, திரைப்படம், காளியாட்டுகளில் ஆர்வம்கொண்டு அலைந்து சமாதானம் பெற முயல்கின்றனர். இத்தகைய சிற்றின்ப காரியங்கள் முதலில் சமாதானம் தருவதுபோலத் தெரிந்தாலும் இறுதியில் பல்வேறு உடல் நோய்களையும் பிரச்சனைகளையுமே வாழ்வில் கொண்டுவந்து மேலும் அதிக சமாதானக் குறைவினை ஏற்படுத்தும்.

ஆனால் பூரண சமாதானம் கர்த்தரை உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கிறது. இதனையே இன்றைய வசனத்தில் நாம்  "உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்" என வாசிக்கின்றோம். ஆம், நமது தேவன் நம்பிக்கைத் துரோகம் செய்பவரல்ல. நாம் அவரையே நம்பியிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியுமாதலால் நம்மை அவர் கைவிடமாட்டார்; பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார்.

அன்பானவர்களே, சமாதானத்தின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு நாம் யாரைத்தேடி ஓடினாலும் நமக்குப் பூரண  சமாதானம் கிடைக்காது. இன்றைய வசனம் கூறுவதுபோல நாம் கர்த்தரை மட்டுமே  உறுதியாக நம்பியிருந்தால் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார். எனவே, அவரையே பற்றிக்கொள்வோம்; உலகம் கொடுக்கமுடியாத சமாதானத்தைப் பெற்று மகிழ்வோம்.

                                                                                    
ஆதவன் 🔥 904🌻 ஜூலை 20, 2023 வியாழக்கிழமை

"என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்." ( மத்தேயு 12 : 30 )

தனக்கு யார் விரோதி என்பதனை கிறிஸ்து இயேசு இங்கு குறிப்பிடுகின்றார். பொதுவாக நாம் கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களையே கிறிஸ்துவுக்கு விரோதி என்று கருத்திக்கொள்கின்றோம். எனவே ஆங்காங்கே கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் செயல்பாடுகளைக்கண்டு உள்ளம் கொதிக்கின்றோம். இது சாதாரண மத வெறியுடன்கூடிய உள்ளக்கொதிப்பு. 

ஆனால் தேவன் இத்தகைய எதிர்ச்செயல்களைவிட கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்கள் கிறிஸ்துவோடு  சேர்ந்து ஐக்கியமாயிருக்காமல் வாழ்வதனையே பெரிய கேடாகக் கருதுகின்றார். கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் ஒருவேளை பிற்பாடு மனம்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு கிறிஸ்து இல்லாமல் வாழ்பவர்கள் அவருக்கு விரோதிகள். அவர்கள் கிறிஸ்துவை வாழ்வில் அறிந்துகொள்வது கூடாத காரியம். 

மேலும், இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில், இப்படி கிறிஸ்துவோடு சேராதவன் சிதறடிக்கின்றான் என்கின்றார் கிறிஸ்து. 

நாம் கிறிஸ்து இல்லாமல் வாழும்போது மற்றவர்களை சேர்பதற்குப் பதில் சிதறடிக்கிறவர்களாக மாறிவிடுகின்றோம். காரணம், கிறிஸ்து இல்லாத வாழ்வில் சாத்தான் எளிதாக நுழைந்துவிடுகின்றான். ஒன்று சேர்கின்றவர் கிறிஸ்து என்றால் சிதறடிக்கிறவன் சாத்தான்தான். எனவேதான்,  "சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து." ( நாகூம் 2 : 1 ) என்கின்றார் நாகூம் தீர்க்கத்தரிசி.

அரண் என்பது வேலியைக் குறிக்கிறது. சிதறடிக்கிற சாத்தான் நம்முள் நுழைந்து நம்மையும்  அவனைப்போல சிதறடிக்கிற மக்களாக மாற்றாமலிருக்க நாம் நமது வேலியை காத்துக்கொள்ளவேண்டும். 

என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் என்று இயேசு கிறிஸ்து எச்சரித்தது நமது நினைவில் எப்போதும் இருக்கவேண்டும்.  இன்று கிறிஸ்துவோடு ஐக்கியமில்லாத சபைகளில் சிதறடித்தல் அதிகமாக உள்ளதை நாம் காண்கின்றோம். அரசியல் தேர்தலைவிட இந்தச் சபைகளில் தேர்தல் சந்தி சிரிக்கும் வகையில் இருக்கின்றது. காவல்நிலையம், நீதிமன்றம் என சபைத் தலைவர்கள் அலைந்துகொண்டிருக்கின்றார்கள். காரணம் சிதறடித்தல்.  

பிரதான மேய்ப்பனாகிய அவரே நமக்குள் நுழைய அனுமதித்திடவேண்டும். வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிற கள்ளனுக்கும்  கொள்ளைக்காரனுக்கும் எச்சரிக்கையாய் இருப்போம்.  ஆம், கிறிஸ்துவோடு இணைந்திருக்கவில்லையானால் நாம் கிறிஸ்துவுக்கு விரோதிகளாகவும், ஒருமைப்பாட்டுடன் சேர்க்கிறவர்களாக இல்லாமல் சாத்தானின் குணத்துடன்  சிதறடிக்கிறவர்களாக மாறிவிடுவோம்.  

ஆதவன் 🔥 905🌻 ஜூலை 21, 2023 வெள்ளிக்கிழமை

"பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்." ( யோவான் 3 : 27 )

இந்த உலக அரசாங்கத்திடமிருந்து ஏதாவது ஒன்றினை நாம் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் அதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. சில ஆதாரங்களை நாம் அரசாங்கத்துக்குச் சமர்ப்பிக்கவேண்டும்.  அவற்றின் அடிப்படையில் நமது விண்ணப்பத்தைச் சரிபார்த்து அரசாங்கம் நமக்கு உதவி செய்யும். 

ஆனால் நமது நாட்டில் இப்படி உதவி பெறுவது பலவேளைகளில் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அரசு அதிகாரிகள், அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கவேண்டியிருக்கின்றது. இதனால் தகுதியுள்ளவர்கள் உதவி பெறாமலும் தகுதியற்றவர்கள் உதவிகளைப் பெற்று அனுபவிப்பதும் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. 

ஆனால், பரலோக ராஜ்யத்தில் நமது நீதியுள்ள வாழ்க்கையின்படியும் தனது சித்தத்தின்படியும் தேவன் நமக்கு அனைத்தையும் அருளுகின்றார். "பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்." ஆம், பூலோக அரசாங்கத்தைப்போல ஏமாற்றோ தவறுகளோ கைக்கூலிகளோ இல்லாததால் நீதியுள்ள ராஜ்யமாக இருக்கின்றது. நமது தேவைகள், விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலித்து முடிவெடுப்பது தேவனது கரத்திலேயே உள்ளது. 

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." ( யாக்கோபு 1 : 17 ) என்று குறிப்பிடுகின்றார். வேற்றுமையின் நிழல் அங்கு கிடையாது. ஆள் பார்த்து உதவுபவரல்ல தேவன். 

அன்பானவர்களே, எனவேதான் நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழவேண்டியது அவசியமாயிருக்கிறது. பரலோக சித்தம் செய்யாமல், தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு நாம் பரலோக ஆசீர்வாதங்களைப் பெறமுடியாது. உலகத்திலுள்ள துன்மார்க்கர்களது செழிப்பைப் பார்த்து நாம் தேவனை தவறாக எண்ணிவிடக்கூடாது. உலக ஆசீர்வாதம் வேறு; பரலோக ஆசீர்வாதம் என்பது வேறு. உலகத்துக்குரிய வாழ்க்கை வாழ்பவன் உலக ஆசீர்வாதங்களை மட்டுமே பெறுவான். 

"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்றார் இயேசு கிறிஸ்து. ஆம், தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை நாம் தேடும்போது இந்த உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களை தேவன் நமக்குத் தந்தருள்வார். ஆம் அன்பானவர்களே, பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். எனவே நாம் நமது வாழ்க்கையில் பரலோக தேவனைத் திருப்திப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு வாழவேண்டும்.  அப்படி வாழும்போது நன்மையான  ஈவுகளும் பூரணமான வரங்களும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவரும்.

                                                                                       
ஆதவன் 🔥 906🌻 ஜூலை 22, 2023 சனிக்கிழமை

"வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே." ( யோவான் 5 : 39 )

இன்று புதிய உபதேசமாக பலர் கூறுவது,  நமக்கு பழைய ஏற்பாடு முக்கியமல்ல; நாம் கிருபையின் காலத்தில் இருக்கின்றோம், எனவே கிறிஸ்துவின் கிருபையின் உபதேசங்களே போதும் என்கின்றனர். இத்தகைய போதகர்கள் கிறிஸ்துவைச்  சரியாக அறியாதவர்களும் கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு எதிரிகளும் என்றே கூறவேண்டும். "இயேசு மாத்திரம்" என்று இவர்கள் முழங்குவார்கள். இது கேட்கச் சரிபோலத் தெரிந்தாலும் பின்னணியில் தாறுமாறான உபதேசங்களே அதிகம் இருக்கும். எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். 

காரணம், பழைய ஏற்பாடு இல்லாமல் புதிய ஏற்பாடு இல்லை. பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலே புதிய ஏற்பாடு. யூதர்கள் பழைய ஏற்பாட்டில் தேறியவர்கள். மேசியா எனும் உலக இரட்சகரைப்பற்றி பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் கூறியவற்றை அவர்கள் விசுவாசித்தனர். எனவே மேசியாவை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களால் இயேசு கிறிஸ்துதான் பழைய ஏற்பாட்டு நூல்களில் கூறப்பட்ட மேசியா என்பதை மட்டும் நம்ப முடியவில்லை.  

ஏறக்குறைய அனைத்து பழைய ஏற்பாட்டு நூல்களிலும் கிறிஸ்துவைப்பற்றிய ஏதாவது ஒரு குறிப்பு உண்டு. மொத்தமாக பழைய ஏற்பாட்டில்  47 இடங்களில் கிறிஸ்துவாகிய மேசியாவைக்குறித்து குறிப்புகள் உள்ளன. ஆனால் யூதர்கள் இவற்றை இயேசு கிறிஸ்துவுக்கு கூறப்பட்ட தீர்க்கதரிசனங்களாக உணர்ந்துகொள்ளவில்லை. எனவேதான் இயேசு கிறிஸ்து யூதர்களைப்பார்த்து,  "வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும்  அவைகளே." என்று கூறுகின்றார். 

இன்று நாம் பழைய ஏற்பாட்டு சரித்திரங்களையும் தீர்க்கதரிசனங்களையும் படித்து உணர்ந்தால் மட்டுமே கிறிஸ்துவைக்குறித்தும் நாம் தெளிவாக உணர முடியும். அவர்மேல் விசுவாசம் ஏற்படும்.  

இயேசு கிறிஸ்துவும் பல இடங்களில் பழைய ஏற்பாட்டு சம்பவங்களைக் கூறுவதை நாம் பார்க்கலாம். உதாரணமாக, மோசே, எலியா, யோனா, லோத்தின் மனைவி, சோதோம்,  கொமாரா, ஏசாயா இவர்களைப்பற்றி இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார். புதிய ஏற்பாட்டினை மட்டும் நாம் வாசித்துக்கொண்டிருந்தால் கிறிஸ்து உதாரணம் கூறும் இவை எதுவுமே நமக்குப் புரியாது. 

பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழலாட்டமே. எனவே நாம் அவற்றை கற்றறியவேண்டியது அவசியம். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் மக்களோடு இருந்து வழிநடத்தியது கிறிஸ்துவே என அப்போஸ்தலராகிய பவுல் குறிப்பிடுகின்றார்.  "எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே." ( 1 கொரிந்தியர் 10 : 4 )

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து வெறும் 2000 ஆண்டுகளுக்குமுன் வந்தவரல்ல. அப்படி நாம் நம்பிக்கொண்டிருந்தோமானால் அவரை நாம் புத்தர், காந்தி, போன்ற மனிதர்களில் ஒருவராகக் கருதுகின்றோம் என்றுதான்  பொருள். 

பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு எனப் பாகுபடுத்தாமல் வேதவாக்கியங்களை ஆராய்ந்து அறிவோம்.  அவைகளால் நமக்கு நித்தியஜீவன் உண்டு.  கவனமாய் ஆவிக்குரிய கண்களோடு வாசிக்கும்போது நாம் பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவைக் காணலாம். கிறிஸ்துவைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. 

ஆதவன் 🔥 907🌻 ஜூலை 23, 2023 ஞாயிற்றுக்கிழமை

"ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்." ( லுூக்கா 10 : 5, 6 )

இன்றைய தியானத்துக்குரிய வசனம் முக்கியமான ஒரு உண்மையினை நமக்கு விளக்குகின்றது. இன்று பெரும்பாலும் ஆசீர்வாத ஊழியர்கள் தங்களிடம் வரும் விசுவாசிகளுக்கு ஆசீர்வாத செய்திகளையும் வாக்குத்தத்தங்களையும் கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்த விரும்புகின்றனர். ஆனால் தேவனது பார்வையும் அவர் தரும் ஆசீர்வாதமும் மனிதர்கள் கூறுவதுபோல வெற்றுக்கூற்றல்ல. 

இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்." ஆம் அன்பானவர்களே, ஒரு ஆசீர்வாத வாழ்த்து அல்லது ஆசீர்வாத செய்தி  ஊழியக்காரர் சொல்வதால் நமது வாழ்வில் பலித்துவிடுவதில்லை. முதலில் அந்த ஆசீர்வாதத்தினைப் பெறுவதற்கு நாம் தகுதியுள்ளவர்களாக மாறவேண்டியது அவசியமாயிருக்கிறது.  ஒரு சமாதான வாக்குறுதியோ வாழ்த்தோ நமதுவாழ்வில் செயல்பட நாம் தகுதியுள்ளவர்களாக மாறவேண்டியது அவசியம். 

இன்று பலரும் இந்த விஷயத்தில்தான் தவறுகின்றனர். ஆசீர்வாத ஊழியர்கள் தரும் மனோதத்துவ செய்திகள் தரும் ஆறுதலைத் தேடி ஓடுவதால் வாழ்வில் மெய்யான ஆசீர்வாதத்தினைப் பெறத்  தவறிவிடுகின்றனர். 

தாவீது கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்தவர்தான்; அவரது சந்ததியில் கிறிஸ்துவைத் தோன்றப்பண்ணுவேன் என தேவன் அவருக்கு வாக்களித்திருந்தார். ஆனால் அவர் உரியாவின் மனைவியிடம் பாவத்தில் வீழ்ந்தபோது தேவன் நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பித் தாவீதுக்கு எச்சரிப்பு விடுத்தார். "இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும்." ( 2 சாமுவேல் 12 : 10 ) என்றார். தாவீது மனம் திரும்பினார்.

பாவ வாழ்க்கையிலிருந்து மனம் திரும்பும்போது மட்டுமே ஒருவர் ஆசீர்வாதமும் சமாதானமும் பெறமுடியும். சகேயுவின் வாழ்க்கை இதற்கு ஒரு உதாரணம். ஆயக்காரனாகிய அவன் தனது பாவங்களை விட்டு மனம்திரும்பியபோது கிறிஸ்து அவனை ஆசீர்வதிக்கிறார். லூக்கா நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம், "சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது" ( லுூக்கா 19 : 8, 9 ) என்றார். ஆம், மனம் திரும்பியபோது அந்த வீடு இரட்சிப்படைந்தது. 

சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், என்று இன்றைய வசனம் கூறுவதன்படி சமாதானத்துக்கு பாத்திரவான்களாக வாழ முடிவெடுத்துச் செயல்படுவோம். மெய்யான சமாதானத்தை நமது குடும்பங்களில்  பெற்று அனுபவிப்போம்.  

ஆதவன் 🔥 908🌻 ஜூலை 24, 2023 திங்கள்கிழமை

"மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். " ( சங்கீதம் 113 : 9 )

இன்று சராசரியாக குழந்தை பிறப்பு விகிதம் நாட்டில் குறைந்துகொண்டே வருகின்றது. முற்காலங்களில் பத்து பன்னிரெண்டு குழந்தைகள் பெற்று வளர்த்தனர். சென்ற தலைமுறையில் அது ஐந்து ஆறு எனச் சுருங்கியது. இப்போது ஒன்று அல்லது இரண்டு என்றாகிவிட்டது.  ஆனால் அந்தக் குழந்தையும் இல்லாமல் ஏங்கும் தம்பதிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. 

குழந்தை இல்லாமைக்குச் சிகிர்சை முன்னெப்போதையும்விட இன்று அதிக  அளவில் நடைபெறுவதாக மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. குழந்தையில்லாமை என்பது மிகப்பெரிய சோகம்தான். ஒரு குழந்தையாவது பிறந்துவிடாதா என்று கோவில் கோவிலாக அலைந்து பல நேர்ச்சைகள் செய்து தவமிருக்கின்றனர் பலர். அன்பானவர்களே, இன்றைய வசனம் அப்படித் தவிக்கும் மக்களுக்கு ஆறுதலளிக்கும் வசனமாக உள்ளது. ஆம், நமது கர்த்தர் "மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார்."

குழந்தையில்லா பிரச்சனையினால் பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. ஆனால் நமது கர்த்தர் அத்தகைய நிலைமையை மாற்றுகின்றார். எனவேதான் இன்றைய வசனம் பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார் என்று  கூறுகின்றது. கர்த்தர் நமது வாழ்வில் இடைப்படும்போது குழந்தையில்லாமையால் ஏற்படும் பிரிவினை நீங்கி வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகின்றார். 

நமக்குத் திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டதே என்று கலக்கமடையவேண்டாம். 75 வயதில் ஆபிரகாமுக்கு ஒரு குழந்தையை வாக்களித்து 100  வது வயதில் ஈசாக்கைக் கொடுத்து ஆசீர்வதித்தார் தேவன். அவரால் கூடாத காரியமில்லை. "பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார்." ( ஏசாயா 66 : 9 )

அன்பானவர்களே, சூழ்நிலைகளையும் மருத்துவ அறிக்கைகளையும் பார்த்து பயப்படவேண்டாம். எல்லாவற்றையும் நமக்குச்  சாதகமாக மாற்றிட தேவனால் கூடும்.  பல்வேறு சாட்சிகளை நான் கேட்டிருக்கிறேன். எல்லா பரிசோதனை முடிவும் எதிர்மறையான அறிக்கையினைத் தந்து,  மருத்துவர்கள் கைவிட்டு 100 சதம் முடியாது என்று கைவிடப்பட்டவர்கள் கர்த்தரது அதிசயத் தொடுதலால் குழந்தைப்பேறு பெற்றுள்ளனர். விசுவாசத்துடன் கர்த்தரை நம்பி காத்திருங்கள். கர்த்தர் அதிசயம் செய்வார். 

கலங்கி நிற்கும் மக்களைப்பார்த்து கர்த்தர் கேட்கின்றார், "பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ?.

                                                                                          
ஆதவன் 🔥 909🌻 ஜூலை 25, 2023 செவ்வாய்க்கிழமை

"மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். " ( சங்கீதம் 115 : 17, 18 )

துதித்தல் என்பது கார்த்தரைப் புகழ்தல் என்று பொருள். இப்படிக் கூறுவதால் சாதாரண உலகத் தலைவர்களைப்போல தன்னைப் புகழ்வதை கர்த்தர் விரும்புகின்றார் என்று பொருளல்ல. மனிதர்கள் தன்மேலுள்ள அன்பினால் தன்னைப் பெருமைப்படுத்துவதை தேவன் விரும்புகின்றார். கர்த்தரது அன்பை உணர்ந்த ஒருவர் தன்னை அறியாமலேயே நன்றியுணர்வுடன் கார்த்தரைப் புகழுவார்.  இன்றைய வசனம், "மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்." என்று கூறுகின்றது. அதாவது ஆவியில் உணர்வும் உயிரும் இல்லாமல் மரித்துப்போயிருப்பவர்கள் மட்டுமே  கர்த்தரைத் துதிக்கமாட்டார்கள் என்று கூறுகின்றது. 

அப்படியில்லாமல் ஜீவனுள்ளவர்களாய் வாழும் "நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். " என்கின்றது இன்றைய வசனம். "கர்த்தரை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது." ( சங்கீதம் 136 : 1 ) என்று ஆரம்பிக்கும் சங்கீதம் ஒரு துதியின் சங்கீதம். இந்த சங்கீதத்தில் கர்த்தர் செய்த அரும்பெரும் செயல்களை ஒவ்வொன்றாகச் சொல்லி துதிக்கின்றார் சங்கீதக்காரர். 

"கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) ஏன் கர்த்தரைப் புகழுவது ஏற்றதாய் இருக்கின்றது? அன்பானவர்களே, துதிக்கும்போது நமது கட்டுகள், வியாதிகள் நீங்குகின்றன. துதிக்கும் மனிதனைச் சாத்தான் நெருங்க அஞ்சுவான். துதியினால் விடுதலை உண்டு. 

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பவுலும் சீலாவும் "நடுராத்திரியிலே ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 25,26 ) என்று வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, சிலவேளைகளில் அதிக துன்பங்கள், பிரச்சனைகள் நம்மை நெருங்கும்போது நம்மால் ஊக்கமுடன் ஜெபிக்கமுடியாது. அந்த நேரங்களில் நாம் அமைதியாக தேவனைத் துதித்துக்கொண்டிருந்தாலே விடுதலை கிடைக்கும். "ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்." ( எபிரெயர் 13 : 15 )

மேலும், அப்போஸ்தலராகிய பவுல் அடிகள்,  ஸ்தோத்திரம் செய்வது நம்மைக்குறித்த தேவ சித்தம் என்று கூறுகின்றார்.  "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 18 ) தேவ சித்தம் செய்து ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்வோம். 

                                                                                        
ஆதவன் 🔥 910🌻 ஜூலை 26, 2023 புதன்கிழமை

"நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்" 
( ஆதியாகமம் 4 : 7 )

இன்றைய வசனம் காயினைப்பார்த்து தேவன் கூறியது. ஆதியாகமத்தில் நாம் வாசிக்கின்றோம், "காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை". ( ஆதியாகமம் 4 : 5 ) என்று. நம்மில் பலருக்கும் தேவன் ஏன் காயினது காணிக்கையினை அங்கீகரிக்கவில்லை எனும் சந்தேகம் எழலாம். இந்த வசனங்களைக் கவனமாக வாசித்தால் அது புரியும். 

காயினையும் அவன் காணிக்கையையும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தேவன் முதலில் காயினை அங்கீகரிக்கவில்லை, அப்படி அவனை அங்கீகரிக்காததால் அவனது காணிக்கையையும் அங்கீகரிக்கவில்லை.  இன்றைய வசனத்தில் தேவன் காயினிடம்  "நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ?" என்கின்றார். அதாவது, அவன் வாழ்வில் நல்லது செய்யவில்லை. எனவேதான் இப்படிக் கூறுகின்றார். மேலும் தேவன் கூறுகின்றார், "நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்." அதாவது நீ நன்மை செய்யாததால் உன் பாவம் உன் வாசல்படியில் படுத்திருக்கின்றது. 

அன்பானவர்களே, இன்றைய வசனம் நமக்கும்  ஒரு எச்சரிப்பாகும். நாம் இன்று ஆலயங்களுக்குச் செல்லலாம், நற்செய்தி கூட்டங்களில் கலந்துகொள்ளலாம், மணிக்கணக்காக ஜெபிக்கலாம், தசமபாக காணிக்கைகள் செலுத்தலாம்  ஆனால் வாழ்க்கையில் நம்மிடம் நல்லது இல்லையானால், நல்ல வாழ்க்கை வாழவில்லையானால் நமது பாவம் நமது வாசல்படியில் படுத்திருக்கும்.  நம்மால் பாவத்தை மேற்கொண்டு வெற்றியுள்ள ஆவிக்குரிய வாழ்க்கை வாழ முடியாது. 

காரணம், மேற்படி பக்தி காரியங்கள் பாவத்தை நம்மைவிட்டு அகற்றிடாது. நாம் ஆலயங்களுக்கோ இதர வீடுகளுக்கோ செல்லும்போது நமது காலணிகளை வாசல்படியருகே விட்டுச்செல்கின்றோம். திரும்பும்போது மீண்டும் அணிந்துகொள்கின்றோம். ஆம், அதுபோலவே வாசல்படியில் நாய்போல படுத்திருக்கும் பாவம் நாய் நம்மைத் தொடருவதுபோலவே பின்தொடரும்.  நன்மை செய்யாத குணம்; கபடம், பொறாமை, வஞ்சகம் இவை காயினது உள்ளத்தில் இருந்ததால் அவனால் ஆபேலின் காணிக்கையினை கர்த்தர் ஏற்றுக்கொண்டதை சகிக்கமுடியவில்லை. 

இத்தகைய குணங்கள் நம்முள் இருப்பதை நாம் மறைத்தாலும் தேவன் அதை அறிவார். எனவே நாம் நன்மைசெய்ய மனமில்லாதவர்களாக, உள்ளான மனத்தில் மாற்றமில்லாமல் வாழ்வோமானால் நமது ஆராதனைகளும் வழிபாடுகளும் வீணானவையே. தேவன் நம்மைப்பார்த்தும் இப்படிக் கேட்பார், "நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்"

அன்பானவர்களே, பாவம் நமது வாசல்படியில் படுத்திருக்க நாம் அனுமதிக்கக்கூடாது. கிறிஸ்து இயேசுவின் ஆவியின் பிரமாணத்துக்குள் நாம் உண்மையாக வரும்போதே பாவத்திலிருந்தும் அதனால் வரும் ஆத்தும மரணத்திலிருந்தும் நாம் விடுதலை அடைய முடியும். இதனையே, "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்கின்றார் அப்போஸ்தலராகிய பவுல் அடிகள். 

நியாயப்பிரமாணக்  கட்டளைகளுக்கல்ல, கிறிஸ்து இயேசுவைப் பற்றும் ஆவிக்குரிய பிரமாணத்துக்குள் நாம் வரும்போதே மெய்விடுதல் நமக்குக் கிடைக்கும்.


ஆதவன் 🔥 911🌻 ஜூலை 27, 2023 வியாழக்கிழமை

"திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது." ( யாக்கோபு 1 : 27 )

இந்த உலகத்தில் தங்களது தேவ பக்தியைக் காட்டிட மக்கள் பல்வேறு முயற்சிகளைச் செய்கின்றனர்.  இத்தகைய முயற்சிகளைச் செய்யும் பலரிடம்  தங்களது பக்திச் செயல்களை மற்றவர்கள் பார்க்கவேண்டும்; பாராட்டவேண்டும் எனும் எண்ணமும் இருக்கின்றது. ஆனால் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இத்தகைய பக்திச் செயல்கள் அந்தரங்கமாக இருக்கவேண்டுமென்று கற்பித்தார். 

ஜெபம் செய்யவேண்டுமானால் நமது ஜெபம் பிதாவுக்கு மட்டும் தெரியத்தக்கதாக அந்தரங்கத்தில் அறைவீட்டில் கதவுகளை மூடி ஜெபம் பண்ணவேண்டும். உபவாசம் செய்வது பிறருக்குத் தெரியக்கூடாதபடி தலைக்கு எண்ணெய்பூசி முக உற்சாகத்துடன், நாம் உபவாசிப்பது பிறருக்குத் தெரியாதபடி உபவாசம் இருக்கவேண்டும். காணிக்கை அளிப்பது மற்றவர்களுக்குத் தெரியாமல் அளிக்கவேண்டும்  என்பதுபோன்ற பல காரியங்களைக் கூறினார். ஆனால் இன்று கிறிஸ்தவர்கள் பலரும் இவற்றில் எதையுமே கடைபிடிப்பதில்லை. 

தெருவில் நின்று ஜெபிப்பது, தான் ஜெபிப்பதையும் தர்மம் செய்வதையும்   வீடியோ எடுத்து முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் இதர சமூக ஊடகங்களிலும் வெளியிடுவது, உபவாச ஜெபம் என போஸ்டர் அடித்து விளம்பரம் செய்வது என்பவைதான்  கிறிஸ்தவ பக்திச் செயல்கள் என மாறிவிட்டன. இதற்குக் காரணம் பெருமை. வசன எண்களை  மனப்பாடம் செய்து ஒப்பிட்டுவிக்கும் இவர்களுக்கு "பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார்" (1 பேதுரு 5:5) எனும் வசன அறிவு இல்லாமல்போனது ஆச்சரியமான அவலமான உண்மை.  

மேலும் சிலர் கிறிஸ்துவின் படங்கள் சொரூபங்களுக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி, நறுமண தூபங்கள், அகர்பத்திகள் கொளுத்தி பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.  

ஆனால், இன்றைய வசனம்,  திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும்   உதவுவதும் உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது என்று கூறுகின்றது. அதாவது ஏழைகளுக்கு உதவுவதும் நமது உடலை பாவத்துக்கு உட்படுத்தாமல் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்வதுமே மெய்யான தேவ பக்தி என்று கூறுகின்றது. 

ஏழைகளுக்கு உதவுமுன்  முதலில் நாம் உலகத்தால் கறைபடாதபடி  பரிசுத்தமாய் வாழவேண்டியது அவசியம். அதாவது, ஏமாற்று, கைக்கூலி, அடுத்தவர் சொத்தை வஞ்சித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு அந்தப் பணத்தில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடுப்பது தேவன் விரும்பும் செயலல்ல.  ஆனால் இன்றைய  விளம்பர உலகில் இப்படிச் செய்பவர்களையே உலகம் மதிக்கின்றது. எனவே உலக பெருமையை விரும்புகின்றவர்கள் இப்படிப்பட்டச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். 

அன்பானவர்களே, வெளியரகமானச்  சில பக்திச் செயல்பாடுகளையோ  தேவையற்ற விளம்பர முயற்சிகளையோ தேவன் அங்கீகரிப்பதில்லை. உண்மையாக நேர்மையாக சம்பாதித்தப் பணத்தில்  ஏழைகளுக்கு உதவிகள் செய்வதும் பாவமில்லாமல் நமது உடலைப்  பரிசுத்தமாய்க் காத்துக்கொள்வதுமே தேவன் விரும்பும் பக்தி. இதுவே  பிதாவாகிய தேவனுக்கு ஏற்புடைய பக்தியாயிருக்கிறது.

                                                                                         
ஆதவன் 🔥 912🌻 ஜூலை 28, 2023 வெள்ளிக்கிழமை

"இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 19 : 15, 16 )

பெயரளவில் மட்டுமே இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்களுக்கு இன்றைய வசனம் ஒரு எச்சரிப்பாகும். நாங்கள் பரம்பரைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு ஆவிக்குரிய வாழ்க்கையோ கிறிஸ்துவை அறியவேண்டுமெனும் ஆர்வமோ இல்லாமல் வாழும் மக்கள் இன்றைய வசனம் கூறுவதுபோல இக்கட்டுகளில் மாட்டிக்கொள்ள அதிக வாய்ப்புண்டு. 

கிறிஸ்துவின் சரித்திரமும் அவர் செய்த புதுமைகளும் புனிதர்களது வரலாறுகளும் தெரிவது மட்டும் கிறிஸ்தவ வாழ்க்கையல்ல. மரித்துப்போன மிஷனரி பணியாளர்களைப்பற்றி பெருமை பேசி, "எங்கள் சபையை உருவாக்கியவர் அவர்தான்" என்று  கூறிக்கொண்டிருப்போமானால் நாம் நம்மையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று பொருள்.  

அப்போஸ்தலராகிய பவுல் செய்த அதிசய அற்புதங்களைக்கண்ட மந்திரவாதிகளாகிய சிலர் பவுல் பிரசங்கிக்கும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் தாங்களும் பேய்களை ஓட்ட முடியுமென்று எண்ணி அவமானப்பட்டதுபோல நமது வாழ்க்கை ஆகிவிடக்கூடாது. 

அவர்களுக்கு பவுல் பிரசங்கித்த இயேசு கிறிஸ்துவைப் பற்றி தெரிந்திருந்ததேயல்லாமல்  பவுலுக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள தொடர்போ, பவுலடிகளின் பரிசுத்த வாழ்க்கையோ அவரது ஜெப வாழ்க்கையோ தெரிந்திருக்கவில்லை. எனவே கிறிஸ்துவின் பெயரைக் கூறினால் பேய்கள் ஓடிவிடும் என்று எண்ணிக்கொண்டனர். 

தேவனுக்கு நமது வாழ்கையினைப்பற்றி தெரிவதைப்போல சாத்தானுக்கும் தெரியம்.  எனவே பிச்சாசுப்பிடித்தவன் அந்த மந்திரவாதிகளை நோக்கி, "இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார்" என்று  கேள்வி கேட்டான். மட்டுமல்ல  அவன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அன்பானவர்களே, கிறிஸ்துவின் பெயரைமட்டும் அறிந்துகொண்டு நாங்களும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு வாழ்வோமானால் இப்படி நமக்கும் சம்பவிக்கலாம். பேய் மட்டுமல்ல, வியாதிகள், துன்பங்கள், பிரச்சனைகள் இவைகள் எல்லாமே நம்மை மேற்கொண்டுவிடும். நாம் சரியான வாழ்க்கை வாழாமல் ஜெபித்துக்கொண்டு மட்டும் இருப்போமானால், பிசாசு பிடித்த மனிதனிடம்  கேட்டதுபோல சாத்தான் நம்மைப்பார்த்தும் கேள்வி கேட்பான். "இயேசுவை அறிவேன், நீங்கள் யார்"

கிறிஸ்துவை நமது வாழ்வில் அறிந்துகொண்டு, அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவருக்கேற்ற பரிசுத்த வாழ்வு வாழ்வோமானால் மட்டுமே சாத்தானால் நம்மைக் கேள்விகேட்க முடியாது. பெயருக்காகவும், கடமைக்காகவும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்களாகவே இருப்போம். 

                                                                                           
ஆதவன் 🔥 913🌻 ஜூலை 29, 2023 சனிக்கிழமை

"உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்." ( 1 இராஜாக்கள் 3 : 9 )

இன்றைய வசனம் சாலமோன் அரசர் தேவனிடம் செய்த விண்ணப்பமாகும். இந்த விண்ணப்பத்தைத் தேவன் அங்கீகரித்தார்;  தனக்கு நீடித்த வாழ்வையோ  செல்வத்தையோ எதிரி ராஜாக்களின் மீது வெற்றிபெற்று வாழ்வதையோ கேட்காமல் இப்படி ஞானமுள்ள இருதயத்தைத் தாரும் என சாலமோன் விண்ணப்பம் செய்தது தேவனுக்கு மகிழ்ச்சியளித்தது. 

எனவே, தேவன் அவனிடம், இப்படி நீ விண்ணப்பம் செய்ததால்.  "உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை." ( 1 இராஜாக்கள் 3 : 12 ) என்று வாக்களித்தார்.

அன்பானவர்களே, சாலமோன் செய்த இந்த விண்ணப்பம் தேவனுக்கு மகிழ்ச்சியூட்டியது; அதனால் அதற்குத் தேவன்  செவிகொடுத்தார் என்றாலும் அது ஆவிக்குரிய வாழ்க்கைக்குரிய வேண்டுதல் அல்ல. நூறு சதவிகிதம் உலகம் சார்ந்த விண்ணப்பம் அது. அதனால் இரண்டுமுறை தேவன் சாலமோனை சந்தித்துப் பேசியபின்பும் அவனால் தாவீதைப்போல ஒரு சிறப்பான வாழ்க்கையினை வாழ முடியவில்லை. அவன்  தனது தகப்பன் தாவீதைவிட அதிகம் செல்வத்தினை சம்பாதித்தான்; ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் தோல்வியடைந்து இறுதியில் கர்த்தரை விட்டு பின்மாறிப்போனான். 

இன்று நம்மில் பலரும் சாலமோனைப்போலவே ஜெபிக்கிறோம். எனது குழந்தைகள் ஞானத்திலும் அறிவிலும் வளரவேண்டுமென்று வேண்டுதல் செய்கின்றோம். இது நல்ல விண்ணப்பம்போலத் தெரிந்தாலும் ஆவிக்குரிய விண்ணப்பமல்ல. எல்லா உலக மனிதர்களும் இதுபோலவே தங்கள் குழந்தைகள் ஞானமும் அறிவுமுள்ளவர்களாக வாழவேண்டுமென்றுதான் ஜெபிக்கின்றார்கள்.

கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் நமக்கு உண்மையில் தேவையானது பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதல். அவரே நம்மைச் சரியாகப்   போதித்து வழி நடத்திட முடியும். அவரே நமக்கு மெய்  ஞானத்தைத்தந்தருள முடியும். ஆம் பரிசுத்த ஆவியானவரின் வரங்களில் ஒன்றுதான் ஞானம். அந்த பரிசுத்த ஆவியானவரே "பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

மேலும், "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்." ( யோவான் 14 : 26 ) என்று கூறியுள்ளார். 

அன்பானவர்களே, நாம் ஜெபிக்கவேண்டியது சாலமோனைப்போல ஞானத்துக்காக அல்ல; மாறாக ஞானத்தின் ஊற்றாகிய பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்துக்காகவே. அவர் நமக்குள் வரும்போது நாம் ஞானவானாக மாறிட முடியும்.  உலக ஞானிகளால் அன்று ஸ்தேவானை எதிர்த்துத் தர்க்கம் செய்ய முடியவில்லை. இதனை நாம் அப்போஸ்தலர்ப்பணி நூலில் வாசிக்கின்றோம்:- "அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 6 : 10 ) என்று. 

அன்பானவர்களே, ஞானத்துக்காக அல்ல; ஞானத்தின் ஊற்றாகிய பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்துக்காக சிறப்பாக ஜெபிப்போம். நமது குழந்தைகளையும் ஆவியானவரின் ஞானத்தால் நிரப்ப வேண்டுவோம். 

                                                                                       
ஆதவன் 🔥 914🌻 ஜூலை 30, 2023 ஞாயிற்றுக்கிழமை

"உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." ( எரேமியா 29 : 13 )

இன்று உலகினில் பலரும் கடவுளை வழிபட்டாலும் அவரை அறிந்து வழிபடுபவர்கள் வெகுசிலரே. தங்கள் பிறந்த மத முறைமைகளுக்கேற்பவும் தாய் தகப்பன் கற்றுக்கொடுத்த அறிவின்படியும் ஏதோ சில வழிபாடுகளைச்  செய்து கடவுளை வழிபடுகின்றனர்.  

இப்படி வழிபடுவதிலும் போட்டியும் பொறாமையும், எனது கடவுள்தான் பெரியவர் எனும் எண்ணமும் அதிகரித்து கடவுள் கூறிய அன்பைவிட்டுவிடுகின்றனர். எல்லோருமே "அன்பே கடவுள்" என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் அன்பை விட்டுவிடுகின்றனர். ஆனால் வேதாகமம் , அன்பே கடவுள் என்று கூறாமல், "தேவன் அன்பாகவே இருக்கிறார்" (1 யோவான் 4:8) என்று கூறுகின்றது. ஆம், அன்பாகவே இருக்கும் தேவனை அறியவேண்டுமானால் நாம் மதவாதிகளாக இல்லாமல்  வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. "அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்." ( 1 யோவான்  4 : 8 ) என்று வேதாகமம் கூறுகின்றது.

"உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." ( எரேமியா 29 : 13 ) என்று இன்றைய வசனம் கூறுவதன்படி உண்மையாய்த் தேடுபவன் உண்மையான மனித அன்புள்ளவனாக இருப்பான். அவன்தான் கடவுளை அறியமுடியும். தனது தேவைகளைச் சந்திக்க தேவனைத் தேடுபவன் தேவனை அறிய முடியாது.

இதனையே இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம் கூறினார்,  "நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்." ( யோவான் 4 : 22 ) ஆம், அறியாத தேவனையே அதுவரை மக்கள் தொழுதுகொண்டிருந்தனர்.  

அன்பானவர்களே, நாம் நமது இருதயத்தில் உண்மையான தேவ அன்பினால்  தேடினால் மட்டுமே தேவனைக் கண்டுபிடிக்கமுடியும். நாம் அவரைத் தடவியாகிலும் கண்டுபிடிக்கவேண்டும். "கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 17 : 27 ) என்று வசனம் கூறுகின்றது. உண்மையாகவே, நம்மில் எவருக்கும் அவர் தூரமானவர் அல்ல. 

பொதுவாக நாம் அனைவருமே ஆன்மீகக் குருடர்கள்தான். குருடன் ஒரு இடத்தையோ பொருளையோ கண்டுபிடிக்கத் தடவித் திரிவதுபோல நாம் அவரைத் தடவியாகிலும் கண்டுபிடிக்கவேண்டும். அதாவது அவரை அறியவேண்டுமெனும் ஆர்வமும் முயற்சியும் நமக்கு வேண்டும்.

உலக ஆசை இச்சைகளைவிட்டு தேவனை அறியவேண்டுமெனும்  ஆர்வத்துடன் தேடுவதே தேவனை முழு இருதயத்தோடும் தேடுவது. நமது முன்னோர்கள் சொல்லிக்கொடுத்ததை குருட்டாம்போக்கில்நம்புவதல்ல; உண்மையினை அறியவேண்டுமெனும்  எண்ணத்தோடு தேடவேண்டும். தனது முன்னோர்களும், முழு உலகமும் இந்த உலகம் தட்டையாக இருக்கின்றது என்று கூறியபோதும்; அப்படியே நம்பியபோதும் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அது தவறு என்று நிரூபித்தார். காரணம் அவர் உண்மையை அறிய முயன்றார்.

அன்பானவர்களே, அதுபோல முன்னோர்களின் பாரம்பரிய நம்பிக்கைகளை நம்புவதைவிட்டு முழு இருதயத்தோடும் தன்னைத் தேடினீர்களானால், தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் என்கிறார் தேவனாகிய கர்த்தர். நம் முன்னோர்களும் பெற்றோர்களும் கூறியதால் அல்ல தனிப்பட்ட முறையில் நாமே அவரை அறிய வேண்டுமெனும் ஆர்வத்துடன் முயன்றால் மட்டுமே தேவனை வாழ்வில் கண்டுகொள்ளமுடியும்.

                                                                                       
ஆதவன் 🔥 915🌻 ஜூலை 31, 2023 திங்கள்கிழமை

"அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்." ( லுூக்கா 24 : 29 )

இயேசு கிறிஸ்துவின் இரண்டு சீடர்களின் அனுபவம் நமக்கு ஒரு பாடமாகும். உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ளுமுன்பே அவரது வார்த்தையால் இருதயம் பற்றி எரிந்ததால் அந்த இரண்டு சீடர்களும் அவரைநோக்கி, நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். 

வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டுள்ளதற்கு மாறாக இங்கு சம்பவங்கள் நடைபெறுவதைப் பார்க்கின்றோம். "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 ) என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இங்கு, அவர் தட்டுவதற்கு முன்பே சீடர்கள் அவரை அழைக்கின்றனர். அவர் அவர்களோடுச்சென்று தங்கி உணவருந்துகின்றார். ஆம்,  இன்றைய வசனம் நாம் அனைவருமே இயேசு கிறிஸ்துவை நோக்கிக் கூறவேண்டிய வசனமாகும்.  

இயேசு கிறிஸ்துவைச் சீடர்கள் அழைக்கக் காரணமென்ன? வேத வாக்கியங்களை அவர் அவர்களுக்கு  விளக்கிக் கூறும்போது அவர்களது இருதயம் அந்த வசனங்களால் கொழுந்துவிட்டு எரிந்ததால்தான்.  இதனை அவர்கள் தங்களோடு வந்தவர் இயேசு கிறிஸ்து என்று அறிந்தபின்னர் கூறுகின்றனர். "அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா ? ( லுூக்கா 24 : 32 ) என்று அவர்கள் கூறுவதைப் பார்க்கின்றோம்.

அன்பானவர்களே, வேத வசனங்களை நாம் வாசிக்கும்போது கிறிஸ்துவின்மேலுள்ள அன்பினால் நமது இருதயம் எரியவேண்டும். அதாவது அந்த வசனங்களை நாம் வாசிக்கும்போது நமது இருதயத்தில் அது செயல்புரியவேண்டும். கிறிஸ்து சீடர்களுக்குத் தான் பாடுபடவேண்டியதன் அவசியத்தையும் மீட்பின் திட்டத்தையும்தான் விளக்கினார்.  அதனைக் கேட்டபோது அவர்களது இருதயம் கொழுந்துவிட்டு எரிந்தது.  எனவே அவர்கள் அவரைத் தங்களோடு தங்கும்படி வருந்தி அழைத்தனர்.

உலக ஆசை தேவைகளை நிறைவேற்றிட மட்டுமே கிறிஸ்துவைத் தேடி,  அவரது மீட்பின் திட்டத்தை அறியவோ இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளவோ ஆர்வமற்று வாழ்வோமானால் வசனங்களால் நமது இருதயம் கொழுந்துவிட்டு எரியாது. கிறிஸ்து நம்மிடம் தங்கிட வரமாட்டார். "ஆண்டவரே வாரும்... வாரும் ...." என நாம் கூப்பாடு போடலாம். ஆனால் அவரது வசனம் நமது இருதயத்தில் செயல்புரிய இடம்தராமல் - எம்மாவு  சீடர்களது இருதயம் கொழுந்துவிட்டு எரிந்ததுபோல  எரிந்திடாமல் - வாழ்வோமானால்  அவரை வாழ்வில் அனுபவிக்கமுடியாது. 

நமது வாழ்வின் அந்திப்பருவம் ஆகிவிட்டது; பொழுதும் கடந்துவிட்டது. இன்னும் நாம் கிறிஸ்துவை அறியாமல் வாழலாமா? கிறிஸ்துவை மெய்யான அன்புடன் நேசித்து "நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொள்வோம்" அப்பொழுது அவர் நம்முடனே  தங்கும்படி நமது இருதயத்தினுள் வருவார். 

No comments: