Tuesday, April 30, 2024

வேதாகம முத்துக்கள் - ஏப்ரல் 2024

 


                            - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,148                                            💚 ஏப்ரல் 01, 2024 💚 திங்கள்கிழமை 💚

"அவரே இஸ்ரவேலைமீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம்." ( லுூக்கா 24 : 21 )

இயேசு கிறிஸ்து மரித்து மூன்று நாட்களாகி அவர் உயிர்த்த அன்று கிறிஸ்துவின் இரண்டு சீடர்கள் எருசலேமுக்கு எட்டு மைல் தொலைவிலுள்ள எம்மாவு எனும் கிராமத்தை நோக்கி பயணம் சென்றனர். அப்போது அவர்களோடு வழிப்போக்கனைப்போல இயேசு கிறிஸ்து சேர்ந்துகொண்டு வழிநடந்தார். அவர்கள் அவரை இயேசு என்று அறியவில்லை.  அவரோடு பேசிக்கொண்டுச் சென்றபோது  இயேசு அவர்களிடம், "நீங்கள் துக்க முகமாய் எதனைப்பற்றிப்   பேசிக்கொண்டு செல்கின்றீர்கள்?" என்று கேட்டார். 

அப்போது அந்தச் சீடர்கள் அவரிடம் இயேசு கிறிஸ்துவின் மரணத்தைப்பற்றி கூறினர். அப்போது அந்தச் சீடர்களில் ஒருவனாகிய கிலோயேப்பா என்பவர் விரக்தியுடன், "அவரே இஸ்ரவேலைமீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம்." எனும் வார்த்தைகளைக் கூறுகின்றார். அதாவது அவரை நாங்கள் நம்பியிருந்தோம் அந்த நம்பிக்கை எங்களை ஏமாற்றியது என்பதுபோல உள்ளது அவரது பேச்சு. 

அன்பானவர்களே, நாமும் பலவேளைகளில் இதுபோல,  "நான் கடவுளே கதியென்று  அவரையே நம்பியிருந்தேன் ....எனது நம்பிக்கை பொய்யாகிவிட்டது" போன்ற அவிசுவாசம் கலந்த வார்த்தைகளைக் கூறுகின்றோம். 

இந்தச் சீடர்கள் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தியை ஏற்கனவே கேட்டிருந்தனர். ஆனால் அதனை  முற்றிலுமாக அவர்களால் நம்ப முடியவில்லை. எனவேதான் அவர்கள் கூறுகின்றனர், "ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள்." ( லுூக்கா 24 : 22, 23 )

இந்தச் சீடர்கள் இயேசு கிறிஸ்துவோடு மூன்றரை ஆண்டுகள் இருந்தவர்கள். அவர் செய்த பல்வேறு அற்புத அதிசயங்களை நேரில் கண்டவர்கள். ஆனாலும் அவர்களால் அவரது உயிர்த்தெழுதலை முற்றிலுமாக நம்ப முடியவில்லை. இதுபோலவே நாமும் பல அற்புதங்களை சாட்சியாக கேட்டிருந்தும் நமக்குப் பிரச்சனைகள் வரும்போது கலங்கி விடுகின்றோம். இந்தச் சீடர்கள் கூறியதுபோல, "ஆண்டவரே எனது பிரச்சனைக்குத் தீர்வு தருவார் என்று நம்பியிருந்தேன்" என்று அவிசுவாசமாகக் கூறிக் கலங்குகின்றோம். 

அன்பானவர்களே, இப்படி இருப்போமானால் இயேசு கிறிஸ்து சீடர்களைப் பார்த்துக் கூறியதுபோல நம்மைப்பார்த்தும் "தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே," ( லுூக்கா 24 : 25 ) என்று கூறுவார். 

எனவே, நமது இருதயம் மந்தமாகாமல் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். வேதாகமத்தில் நாம் வாசிக்கும் செய்திகள்,  பரிசுத்தவான்களின் அனுபவங்கள் என்றோ நடந்த ஓர் சம்பவமல்ல. இன்றும் அத்தகைய சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கின்றார்". (எபிரேயர் 13:8). எனவே கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசம் குறைந்திடாமல் காத்துக்கொள்வோம். 

"அவரையே நம்பியிருந்தோம்" என்று விரக்தியில் கூறாமல் "அவரையே நம்பியிருக்கிறோம்; அவரே  எங்களுக்கு ஜெயம் தருவார்" என்று  மகிழ்ச்சியுடன் உறுதியுடன் கூறுவோம். 

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,149                                           💚 ஏப்ரல் 02, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்." ( சங்கீதம் 121 : 1&2 )

உலகில் நமக்குச் சில காரியங்கள் நடைபெற மற்றவர்களது உதவி பல வேளைகளில் தேவைப்படுவதுண்டு. பொருளாதார உதவியாக இருக்கலாம், பள்ளி அல்லது கல்லூரிகளில் நமது குழந்தைகளைச் சேர்ப்பதற்காக இருக்கலாம் அல்லது வேலைவாய்ப்புகளில் நமக்கு உதவிட இருக்கலாம். அப்படி ஒருவர் நமக்கு உதவுவதாக வாக்களித்துவிட்டால் நாம் என்ன சொல்வோம்? "சார், நீங்கள் சொன்னதைநம்பி உங்களையே மலையாக எண்ணிக்கொண்டிருக்கிறேன்" என்போமல்லவா? அதுபோலத்தான் சங்கீத ஆசிரியர் கூறுகின்றார்.

'எனக்கு உதவி சாதாரண மனிதரிடமிருந்து அல்ல, வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து' என அவர் துணிவுடன் கூறிகின்றார். மனிதர்கள் வாக்குத் தவறலாம், ஆனால் கர்த்தர் தன்னை நம்பியவர்களை கைவிடுபவரல்ல. மட்டுமல்ல அந்த நம்பிக்கையை சங்கீத ஆசிரியர் கூறிவிட்டு, "என் கண்களை அவரை நோக்கி ஏறெடுக்கின்றேன் என்கின்றார்".

மலைகளைப் பற்றி பார்ப்போமானால் மலைகளால் பல நன்மைகள் உள்ளன. முதலில் அவை இயற்கையான பாதுகாப்பு அரண் போன்றவை. இந்தியாவின் வட எல்கையிலுள்ள இமயமலை நமது நாட்டிற்கு மிகப் பெரிய பாதுகாப்பு அரண். மட்டுமல்ல மலைகள் ஆறுகளின் பிறப்பிடம், மூலிகைகளின் உறைவிடம், ஆயிரக்கணக்கான உயிரினங்கள் மலையைநம்பி உயிர் வாழ்கின்றன. சூழலியலின் முக்கிய காரணி. நமது தேவனும் இது போன்றவரே 

அன்பானவர்களே, இன்று நாம் சிந்திக்கவேண்டிய விஷயம் இதுதான், நமக்கு மனிதர்களது ஒத்தாசை எப்போதும் கிடைக்காது. சிலவேளைகளில்  காலம், மற்றும் சமூக பொருளாதார காரணங்கள் மனிதர்களது உதவி நமக்குக் கிடைத்திடாமல் தடுக்கச்செய்திடும்.  எனவேதான் நாம் மனிதர்களை நம்புவதைவிட கர்த்தர்மேல் பற்றுதலாய் இருப்பதே நல்லது என்று வேதத்தின் மத்திய வசனம் கூறுகின்றது: "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்". ( சங்கீதம் 118 : 8 ). 

எந்தப் பிரச்சனைகள் வாழ்வினில் வந்தாலும் நமது விசுவாசக்கண்களால் நாம் கர்த்தரை நோக்கிப் பார்க்கவேண்டும். அவரை நோக்கிப் பார்த்தவர்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை என்று வேதம் கூறுகின்றது.

புதிய ஏற்பாட்டில் ஒத்தாசை வரும் பர்வதமான இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்து சுகம் பெற்றவர்கள் பலர் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக நாம் ஒருவரைப் பார்க்கின்றோம், அவர்தான் சகேயு. ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு. அவர் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணமுடியாமல் இயேசு வரக்கூடிய பாதை ஓரத்திலிருந்த காட்டு அத்தி மரத்தில் ஏறி அவரை நோக்கிப் பார்த்தான். மிக உயர்ந்த ஆசீர்வாதமான ஆத்தும இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான்.  அவரை நோக்கிப் பார்க்கவேண்டியதே நாம் செய்யவேண்டியது.   

நாமும் நமது கன்மலையான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்போம். மலைகளைப்போல அவர் நமக்கு பாதுகாப்பு அரண், மலையிலிருந்து ஆறுகள் புறப்படுவதுபோல கிறிஸ்துவிடம் என்றும் வற்றாத ஜீவ நீரூற்றுகள் சுரந்து நம்மை வாழவைக்கும், மலைகள் மூலிகைகளின் பிறப்பிடம் அதுபோல எந்த நோய்களையும்  குணமாக்கும் மாமருந்து கிறிஸ்து,   ஆம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்தால் நமக்கு ஒத்தாசை வரும்.


 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,150                                           💚 ஏப்ரல் 03, 2024 💚 புதன்கிழமை 💚

"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன." ( யாக்கோபு 2 : 19 )

நாம் அனைவரும் கடவுள்மேல் விசுவாசம் இருப்பதால்தான் ஆலயங்களுக்கு வருகின்றோம், ஜெபிக்கின்றோம், பல்வேறு பக்தி முயற்சிகளை எடுக்கின்றோம். ஆனால் அப்போஸ்தலனாகிய யாக்கோபு, இதுபோல "பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன." என்று கூறுகின்றார். இதிலிருந்து பிசாசுகளின் கடவுள் நம்பிக்கையைவிட நமது நம்பிக்கையென்பது மேலான ஒன்றாக இருக்கவேண்டும் என அவர் தெளிவுபடுத்த விரும்புகின்றார் என்பது தெளிவு. 

எபிரேய நிருபத்தில் நாம் வாசிக்கின்றோம், "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) என்று. இதனைத் தொடர்ந்து அங்கு பல விசுவாச வீரர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே இப்படி தங்கள் நம்பியவைகளில் உறுதியுடனும் நிச்சயத்துடனும் வாழ்ந்தார்கள். அதனால் தேவனுக்கேற்றவர்கள் என்று நற்சாட்சி பெற்றவர்கள்.

ஆனால் பிசாசுகள் அப்படியல்ல. கடவுள் ஒருவர் உண்டு என்பதை அவைகள் நம்பினாலும் அவருக்கு எதிரான செயல்களைச் செய்ய மனிதர்களைத் தூண்டுகின்றன. இதனை நாம் ஆதியாகமத்திலேயே பார்க்கலாம். ஆதாமையும் ஏவாளையும் தேவ கட்டளைக்கு எதிராகச் செயல்படத் தூண்டியது பிசாசுதான். 

"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்." ( எபிரெயர் 11 : 6 ) என்றும் கூறப்பட்டுள்ளது. பிசாசுக்கு இந்தநம்பிக்கையும் கிடையாது. மாறாக, பிசாசு பெருமை ஆணவம் எனும் குணங்கள் கொண்டு செயல்படுவதுகின்றது. இது கிறிஸ்துவின் தாழ்ச்சி குணத்துக்கு எதிரான குணம். 

அதாவது, கடவுள் ஒருவர் உண்டு என பிசாசுகள் விசுவாசித்து நடுங்கினாலும் அவைகளுக்கு கடவுளின் குணங்கள் இல்லை. மாறாக மனிதர்களையும் கடவுளுக்கு எதிராகச் செயல்படத் தூண்டுகின்றன. எனவே அன்பானவர்களே, நாமும் ஆலயங்களுக்கு வந்து ஆராதித்து கலைந்துசென்று பிசாசுகளின் குணங்களோடு வாழ்ந்தால் அதில் அர்த்தமில்லை.

கிறிஸ்துவின் பாடுகளையும் அவர் அடையப்போகும் மகிமையையும் தரிசனமாக கிறிஸ்துவுக்கு ஏறக்குறைய 750 ஆண்டுகளுக்கு முன்னமேயே கண்ட ஏசாயா தீர்க்கத்தரிசி பிசாசு அடைந்த வீழ்ச்சியையும் கண்டு விவரித்துள்ளார். 

"........நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்." ( ஏசாயா 14 : 13 - 15 ) என்று பிசாசின் வீழ்ச்சி குறிப்பிடப்படுகின்றது.

ஆம் அன்பானவர்களே, கடவுள்மேல் நாம் விசுவாசம் கொண்டால் மட்டும் போதாது,  அந்த விசுவாசம் பிசாசுகளின் விசுவாசம்போல ஆகிவிடக்கூடாது. வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசுத்தவான்களின் விசுவாசம்போல உறுதியான விசுவாசமாக இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது மட்டுமே நமது உள்ளான குணங்கள் மாறி நாம் தெய்வீக குணங்களுள்ளவர்களாக மாறி ஆவிக்குரிய நிலையில் முன்னோக்கிச் செல்ல முடியும். 

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,151                                           💚 ஏப்ரல் 04, 2024 💚 வியாழக்கிழமை 💚

"உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 8 )

தேவன் நமது பலம் பலவீனம் எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றார். மனிதர்கள் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழவேண்டும் என எடுக்கும் முயற்சிகளையும் அவர் பார்க்கின்றார். ஆனால் பலவேளைகளில் அவர்களால் அது முடிவதில்லை. தங்களை அறியாமல் தேவனுக்கு எதிரான காரியங்களைச்  செய்துவிடுகின்றனர். ஆனால், எந்த பலவீனம் இருந்தாலும் அவரை மறுதலியாமல் வாழும் வாழ்க்கையினை அவர் விரும்புகின்றார். அதுவே அவருக்குப் போதும். 

இதனையே இன்றைய தியான வசனம், "உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே"   என்று கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே, நமது தேவன் நம்மால் சுமக்க முடியாத சுமையினை நம் தோள்மீது ஏற்றிவைப்பவரல்ல. அவர் அன்பான தகப்பன். நமது குழந்தைகளிடம் நாம் ஒரு வேலையினை ஒப்படைக்கும்போது நாம் எதிர்பார்க்கும் அளவுக்குச் சிறப்பாக அவர்கள் அதனைச் செய்து முடிக்காவிட்டாலும் அவர்கள் அதனைச் செய்து முடிக்க எடுத்த முயற்சியை நாம் எண்ணிப் பாராட்டுவோம் அல்லவா?. 

அதுபோலவே தேவனும், நாம் பூரண பரிசுத்தராக வாழவேண்டுமென்று விரும்பினாலும்  நாம் அப்படி வாழ எடுக்கும் முயற்சிகளை பார்க்கின்றார். நமது கொஞ்ச பலத்தால் நாம் அவர் விரும்பிய பூரணத்தை அடைய முடியாவிட்டாலும் "உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்." என்று நமது முயற்சியினைப் பாராட்டி நம்மை ஆசீர்வதிக்கின்றார். 

இதனை நாம் நியாயாதிபதிகள் புத்தகத்திலும் பார்க்கலாம். மீதியானியரை எதிர்த்துப் போரிட தனக்குப் பலமில்லை என்று கிதியோன் கூறியபோது தேவன் அவனிடம், "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்." ( நியாயாதிபதிகள் 6 : 14) என்று வாசிக்கின்றோம். ஆம், நமக்கு இருக்கக்கூடிய பலத்தோடு நாம் எடுக்கும் முயற்சிகளை தேவன் வாய்க்கப்பண்ணுகின்றார். 

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு என்று கூறப்பட்டுள்ள இன்றைய வசனம் ஏதோ ஒரு சபைக்குக் கூறப்பட்டுள்ள வசனமல்ல. கொஞ்சம் ஆவிக்குரிய பலம் இருந்தாலும் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ விரும்புபவர்கள்தான் பிலதெல்பியா சபையினர் என்று குறிப்பிடப்படுகின்றனர். 

இப்படி வாழ்பவர்களைக் குறித்துத் தேவன் தொடர்ந்து கூறுகின்றார்,  "என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 10 )

அதாவது, இப்படி தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ விரும்பிச் செயல்படுபவர்களுக்கு இரண்டு முக்கிய ஆசீர்வாதங்களைத் தேவன் வாக்களித்துள்ளனர். முதலாவது, அத்தகையவர்களுக்கு  முன்பாக  திறந்தவாசலை (ஆசீர்வாதத்தினை) வைப்பேன்,  அதனை  அதை ஒருவனும் தடுக்க முடியாது என்கின்றார். இரண்டாவது, பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி அவர்களைக்  காப்பேன் என்று வாக்களிக்கின்றார். 

எனவே அன்பானவர்களே, நமக்கு இருக்கின்ற ஆவிக்குரிய பலத்தோடு தேவனை மறுதலியாமல் பரிசுத்த வாழ்வு வாழ முயற்சியெடுப்போம். 

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,152                                           💚 ஏப்ரல் 05, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்." ( எரேமியா 10 : 2 ) 

இன்று பொதுவாக கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும்கூட பிற மதத்தவர்களைப்போல பல்வேறு நியமங்களைப் பார்க்கின்றனர். ஒரு குறிப்பிட்ட ஊருக்கு நான் சென்றிருந்தபோது அங்கு இருந்த பிரபல ஜோதிட நிலையத்திலிருந்து எனக்குத் தெரிந்த கிறிஸ்தவ நண்பர் ஒருவர் வெளிவந்தார். அவரிடம், "என்ன, நீங்க இங்கிருந்து வருகிறீர்கள்?"  என்றேன் ஆச்சரியத்துடன். அவர், "இதுல தப்பு என்னங்க இருக்கு?.....இங்கு வரும் மக்களில் பாதிபேர் கிறிஸ்தவர்கள்தான்" என்றார்.   

தங்களை ஆவிக்குரிய சபை மக்கள் என்று கூறிக்கொள்ளும் பலர்கூட தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் போன்ற காரியங்களை நடத்தும்போது ராகுகாலம், நல்லநாள், அமாவாசை, வளர்பிறை போன்ற காரியங்களைக் கணக்குப்பார்த்து செயல்களை செய்கின்றனர். "பிள்ளைகளுடைய வாழ்க்கை பார்த்தீர்களா, அதனாலதான்" என்கின்றனர். அதாவது பிற மதத்தினர் செய்யும் இத்தகைய செயல்கள் மனதளவில் தங்களைப் பாதித்துள்ளது என்பதனை இவர்கள் இதன்மூலம் அறிக்கையிடுகின்றனர்.

வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள் என்று சொல்லப்படக் காரணம், நமது தேவன் வல்லமையில் பெரியவர். அவர் நம்மீது ஆதிக்கம் செலுத்த முடியுமே தவிர அவர் உண்டாக்கின இந்த கிரகங்கள் தனது பிள்ளைகளின்மேல் ஆதிக்கம் செலுத்த அவர் அனுமதிக்கமாட்டார். "அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்." ( எரேமியா 10 : 12 )

எனக்கும் ஜாதகம் கணித்து எழுதி வைத்திருந்தனர். ஆனால் நான் கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கைக் கொண்டவனாக இருந்ததால் அதனை பெரிதுபடுத்தவில்லை; அதனைப் படித்துப் பார்த்ததுமில்லை. 1993 ஆம் ஆண்டு நான் கிறிஸ்துவை அறிந்துகொண்டபின்னர் வீட்டிலிருந்த அந்த ஜாதக புத்தகத்தை எடுத்து வெளியில் எறிந்துவிட கையில் எடுத்தேன். அப்போது ஒரு சின்ன ஆசை, 'நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்தோம், நமது ராசி என்ன என்பதை ஒருமுறைப் பார்த்துவிட்டு இதனை வெளியில் எறியலாம்' என்று எனினேன். ஆனால், தேவனை எனக்குள் உணர்த்தினார், "எதனையும் பார்க்காதே, அதனை வெளியில் எறிந்துவிடு" என்று.

ஒருவேளை அன்று நான் அதனைப் பார்த்திருப்பேனானால் பத்திரிகைகளில் வரும் ராசிபலன்களைப்  பார்க்கும்போது என்னை அறியாமல் எனது ராசிக்கு என்ன பலன் போட்டிருக்கின்றது என்று பார்க்க முயலுவேன். இப்போது அந்தத் தொல்லை இல்லை. 

ஆம் அன்பானவர்களே, தேவன் தனது பிள்ளைகள் தன்னை நோக்கிப்பார்க்கவேண்டுமென விரும்புவாரேத் தவிர தான் உண்டாக்கின பொருட்களை நோக்கிப்பார்க்கவேண்டுமென விரும்புவதில்லை. வானங்களும் அவற்றிலுள்ள அனைத்துமே தேவனால் படைக்கப்பட்டவை. நாம் அவைகளை நோக்கிப்பார்த்து பயப்படத் தேவையில்லை.

இந்தியாவின் மிகப்பெரிய ஜோசியர்களை நம்பி, ஜாதகம் கணித்து, அவர்கள் கணித்துக் கூறியதைக் கேட்டுப்  பயந்து பல்வேறு பரிகாரங்களைச் செய்து இறுதியில் அவலமாய் மரித்துப்போன பிரபல தமிழக அரசியல் தலைவரது வாழ்க்கை நமக்குத் தெரியும். அதே நேரம் இத்தகைய எந்தச் செயல்பாட்டையும் செய்யாமல் தேவனையே நம்பி வாழ்ந்து அமைதியாக மரித்து உலகைவிட்டுக் கடந்து சென்ற பரிசுத்தவான்களையும் நாம் கண்டுள்ளோம்.

"கர்த்தாவே உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது." ( எரேமியா 10 : 6 ) ஆம், நமது தேவனுக்கு ஒப்பானவர் எவருமில்லை. அவரது நாமமே வல்லமையில் பெரியது. அவரையே நம்புவோம்; கர்த்தர் நம்மோடு இருந்து நம்மை எந்த இக்கட்டிலிருந்தும் விடுவிப்பார்.


 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,153                                          💚 ஏப்ரல் 06, 2024 💚 சனிக்கிழமை 💚

"என் சிறுப்பிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்." ( கலாத்தியர் 4 : 19 )

கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமையாகும். அது கிறிஸ்து நமக்குக் கொடுத்தக் கட்டளையாகும். நற்செய்தி அறிவித்தல் என்பது வெறும் உலக ஆசீர்வாதங்களை அறிவிப்பதல்ல; மாறாக, கிறிஸ்துவின் பாவ மன்னிப்பையும் இரட்சிப்பையும் மக்களுக்கு அறிவித்து அவர்களை மீட்பின் பாதையில் நடத்துவதாகும்.  

கிறிஸ்து உயிர்த்து விண்ணகம் செல்லுமுன் கொடுத்த இறுதிக் கட்டளையே இதுதான். பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." ( மாற்கு 16 : 15 ) என்றார். ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுவதுபோல கிறிஸ்து நம்மில் உருவாகவேண்டும்.  அப்படி நாம் கிறிஸ்துவை அறிந்து கொண்டபின்னர் அதே ஆத்தும பாரத்தோடு கிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டும். 

நாம் வெறுமனே பிரசங்கம் செய்வதல்ல, மாறாக கிறிஸ்துவை பிறர் அறிந்து அவரது மீட்பு அனுபவத்தைப் பெறவேண்டுமென்று நம்மையே வருத்தி  அவர்களுக்கு அறிவிப்பது. இதுவே மனிதர்களது மனமாற்றத்தைக்கு ஏதுவாக அமையும். 

நான் கம்யூனிச சித்தாந்தத்துக்கும் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும்  அடிமையாக இருந்தபோது உலக பத்திரிகைகளுக்கு கதைகள் கவிதைகள் எழுதிவந்தேன். அப்போது கிறிஸ்துவை அறிந்த,  என்னை விட  சுமார் 10 வயது குறைவான பத்திரிகை நண்பரொருவர் எனக்கு இருந்தார். அவர் கிறிஸ்துவை அறிந்தவர். அவர் என்னிடம் கதை, கட்டுரைகள் வாங்க எனது வீட்டிற்கு வருவார். அப்போது மெதுவாக கிறிஸ்துவைப்பற்றி எனக்கு அறிவிப்பார்.  நான் அவரிடம், "வேறு நல்ல விஷயங்கள் இருந்தால் பேசுங்கள், இல்லாத ஒன்றைப்பற்றி என்னிடம் பேசாதீர்கள்" என்பேன். இது பல நாட்களாக நடந்தது.

ஒருமுறை என்னிடம், "ஜியோ அண்ணே, நீங்க உங்களுக்காக இல்லாவிட்டாலும் நான் கூப்பிடுவதற்காகவாவது எனக்கு மதிப்பு கொடுத்து என்னோடு ஒரு பிரேயருக்கு வாருங்கள்" என்று வற்புறுத்தினார். அவருக்காக அன்று ஒரு சனிக்கிழமை அவரோடு சென்றேன். ஒரு சிறிய ஆலயத்தில் மூன்று நண்பர்கள் இருந்தார்கள். அவர்களோடு உட்கார்ந்திருந்தேன். அவர்கள் எனக்காக ஜெபித்தார்கள்.  எனக்கு என்னைக்குறித்தே அவமானமாக இருந்தது. "நமது பழைய நண்பர்கள் நாம் இங்கே அமர்ந்திருப்பதைக் கண்டால் என்ன எண்ணுவார்கள்?" என்பது மட்டுமே என் மனதில் இருந்தது. 

இதுபோல மூன்று வாரங்கள் வார இறுதி நாட்களில் கூடி ஜெபித்த அந்தக் கூட்டத்துக்குச் சென்றேன். மூன்றாவது வாரத்தில் ஜெபித்து முடித்து வீட்டிற்கு வந்தபோது அந்த இரவில் கிறிஸ்துவால் மாற்றமடைந்தேன். அது, 1993 நவம்பர் 18 ஆம் நாள். அந்த ஒரே நாளில் எனது பழைய குணங்கள் மாறின; பழைய நண்பர்கள் மாறினர். அன்பானவர்களே, அதன் பின்னர்தான் எனக்காக அந்தச் சகோதரன் எடுத்தக்  கடுமையான உபவாசத்தையும், தனது உடலை வருத்தி எனது மாற்றத்துக்காக அவர் ஜெபித்ததையும் என்னிடம் கூறினார். ஆம், கிறிஸ்து என்னிடத்தில்  உருவாகுமளவும் அவர் எனக்காக  கர்ப்பவேதனைப் பட்டிருக்கின்றார். 

அன்பானவர்களே, இதுதான் பவுல் அப்போஸ்தலர் கூறும் நற்செய்தி அறிவித்தல். வேதாகமத்திலிருந்து ஆசீர்வாத வாக்குத்தத்தங்களைத் தேடிப்  பொறுக்கிஎடுத்து, "கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்" என்று கூறுவது எளிது. அது  நற்செய்தி அறிவிப்பல்ல; உளவியல் ஆற்றுப்படுத்தல். அதனால் ஒருவர் கிறிஸ்துவை அறியவோ மனமாற்றமடையவோ முடியாது.  

எனவே ஜெபத்தோடு, மனம் திரும்புதல், ஆவிக்குரிய நிலையில் வளர்ச்சியடைதல்  போன்ற செய்திகள் எழுதுவதற்கே நான் முன்னுரிமை கொடுக்கின்றேன்.  இதுவரை நான் எழுதிய 1150 க்கும் மேற்பட்ட தியானங்களில் உலக ஆசீர்வாதத்தை வெறும் 20 அல்லது 25 தியானங்களில் மட்டுமே குறிப்பிட்டிருப்பேன். ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவை ஒருவர் வாழ்வில் அறிந்துகொள்வதே மெய்யான ஆசீர்வாதம்; அவரை அறிந்தபின்பு நமது வாழ்வின் மற்றவைகள் அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார். 

"உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." ( மாற்கு 16 : 15 )  எனும் கிறிஸ்துவின் வார்த்தைகளை கடைபிடிக்கவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். நம்மை வருத்தியாவது நாம் அறிந்த கிறிஸ்துவை பிறருக்கும் அறிவிப்போம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,154                                          💚 ஏப்ரல் 07, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது." ( யோவான் 9 : 41 )

இயேசு கிறிஸ்து கூறிய இன்றைய தியான வசனம் சாதாரண வசனம்போல இருந்தாலும் இதன் உட்பொருள் ஆழமான அர்த்தம் கொண்டது. தேவனை நாம் அறியாமலேயே இருந்திருந்தால் நமக்கு பெரிய பாவம் சேர்ந்திருக்காது. மாறாக அவரை அறிந்துகொண்டபின் நாம் பாவம் செய்தால் அது மிகக் கடுமையாக தேவனால் பார்க்கப்படும். எனவே, தேவனை அறிந்த கிறிஸ்தவர்கள் வாழ்வில் அதிகக்  கவனமுடன் இருக்கவேண்டியது அவசியம்.

இந்த வசனத்தில் தேவனை அறியாத நமது பழைய காலத்தை குருடர்களுக்கும் கிறிஸ்துவை அறிந்த வாழ்க்கைக்கு கண் திறந்து காணக்கூடிய புதிய வாழ்க்கைக்கும்  ஒப்பிடப்பட்டுள்ளது. மட்டுமல்ல, குருடனாகவே இருந்திருந்தால் பாவம் இருக்காது; கண்திறந்து பார்வை அடைந்துள்ளோம் என்று கூறுவதால் நமது பாவம் நிலை நிற்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒருவரிடம் அவருக்கு கொடுக்கப்பட்ட அளவுக்குத்தான் கணக்குக் கேட்கமுடியும். அதுபோல தேவனையே அறியாதவனிடம் அந்த அளவுக்குத்தான் தேவன் எதிர்பார்ப்பார். ஆனால், "நான் தேவனை அறிந்திருக்கிறேன்" என்று கூறிக்கொண்டு, பெருமையுள்ளவர்களாகி ஒருவர் செய்யும் தவறான செயல்கள் தேவனால் கடுமையான தண்டனைக்குரிய ஒன்றாக பார்க்கப்படும். இதனையே, "நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது" என்கின்றார் இயேசு.  

தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பல கிறிஸ்தவர்களும் ஆவிக்குரிய சபையினர் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சில சபைகளும் இப்படி இருக்கின்றனர். தாங்களே தேவனை அறிந்தவர்கள், மற்றவர்கள் இருளின் மக்கள் எனக் கூறிக்கொள்கின்றனர்.    

இப்படித் தாங்கள் மட்டுமே சீயோனுக்குத் தகுதியுள்ளவர்கள் மற்ற சபையினர் நரகத்தின் மக்கள் என்று கூறிக்கொண்டிருந்தால்  காண்கின்றோம் என்று கூறுகின்ற உங்களது பாவம் நிலைநிற்கிறது என்று பொருள். 

தங்களை ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொண்டு வாழ்க்கை மாற்றமில்லாமல் வெறுமனே கூப்பாடுபோட்டு ஜெபித்துக் கொண்டிருந்தால் காண்கின்றோம் என்று கூறுகின்ற உங்களது பாவம் நிலைநிற்கிறது என்று பொருள்.  

மற்ற சபையினரையும் பிற மத மக்களையும் அற்பமாக எண்ணி இருளின் மக்கள் தவறிய ஆடுகள் என்று கூறிக்கொண்டிருந்தால், காண்கின்றோம் என்று கூறுகின்ற உங்களது பாவம் நிலைநிற்கிறது என்று பொருள்.  

இயேசு கிறிஸ்து கூறினார், "அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங்கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங்கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்." ( லுூக்கா 12 : 48 )  மனிதர்களே அப்படியானால் தேவன் எவ்வளவு அதிகம் கேட்பார்!!!

எனவே அன்பானவர்களே, ஏதேனும் தியானங்களில் கலந்துகொண்டு கிறிஸ்துவை வாழ்வில் லேசாக ருசித்த அனுபவம் பெற்றவுடன் நாம் மற்றவர்களைவிட மேலானவர்கள் எனும் எண்ணம் வந்துவிடக்கூடாது.  பெற்றுக்கொண்ட அந்த அனுபவத்தில் முழுமையடையவேண்டும்.  அறிந்த கிறிஸ்துவை வாழ்வில் நாம் பிரதிபலிக்கவேண்டும்.  அதே ஆவிக்குரிய அனுபவத்தில் வாழ்வின் இறுதிவரை நாம் நிலைத்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் கிறிஸ்து நம்மைப் பார்த்தும் இன்றைய தியான வசனத்தில் கூறியதுபோலக் கூறுவார், "நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது." 

ஆம், கிறிஸ்துவை அறிந்துள்ளேன் என்று கூறிக்கொள்ளும் நம்மிடம் தேவனுக்கு ஏற்பில்லாத தகாத குணங்கள் இருக்குமானால் அவைகளை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு மனத்தாழ்மையுடன் வாழ முயலவேண்டும். இல்லாவிட்டால் நாம் அவரை அறியாமலேயே இருந்திருப்பது அதிக நன்மையானதாக இருக்கும். அப்போது சில அடிகள் மட்டுமே அடிக்கப்படுவோம். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,155                                          💚 ஏப்ரல் 08, 2024 💚 திங்கள்கிழமை 💚

"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்." ( பிலிப்பியர் 4 : 4 )

இந்த உலகத்தில் நமக்குப் பாடுகளும் உபத்திரவங்களும் துன்பங்களும் உண்டு என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கின்றார். ஆனால் கிறிஸ்துவின்மேல் திட நம்பிக்கைகொண்டு வாழும்போது நாம் இவற்றை ஜெயிக்க முடியும். எனவேதான், "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" ( யோவான் 16 : 33 ) என்றார் இயேசு. 

"என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன்." என்று இயேசு கூறுவதிலிருந்து அவரில் நாம் விசுவாசம்கொள்ளும்போது நமக்கு சமாதானம் கிடைக்கும் என்று பொருளாகின்றது. அப்படி சமாதானம் கிடைக்கும்போது நாம் சோர்வாக இருக்கமாட்டோம்.  இதனையே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில்,  "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்."என்று கூறுகின்றார். 

நமது துன்பங்ளையும் பிரச்சனைகளையும் விசுவாசத்தோடு தேவனிடம் ஒப்படைத்துவிட்டால் மனதின் துக்கங்கள் மாறும்.  சாமுவேலின் தாயாகிய அன்னாளைக்குறித்து நாம் வாசிக்கும்போது, பிள்ளையில்லாத அவளது மனக்குறையினை காண்கின்றோம். பிள்ளையில்லாத துன்பம் கொடியது. உலகத்தினரின் பழிச்சொல்லுக்கும் மனக்கவலைக்கும் அது இட்டுச்செல்லும். இப்படி பிள்ளையில்லாததனால் தனது நாச்சியாரின் பழிச்சொல்லையும் ஊராரின் பழிச்சொல்லையும் சுமந்து கவலையுடன் அவள் தேவ சமூகத்தில் ஜெபிக்கின்றாள்.    

உண்ணாமல் வேதனையுடன் தேவ சமூகத்தில் ஜெபித்த அவள் தனது குறையினைத் தேவனிடம் தெரிவித்தபின்பு மன நிம்மதியடைகின்றாள்.  வேதம் சொல்கின்றது, "பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.' ( 1 சாமுவேல் 1 : 18 ) தேவனிடம் எனது குறையினைச் சொல்லிவிட்டேன்; அவர் எனது வேண்டுதலுக்குச் செவிகொடுப்பார் எனும் உறுதி அன்னாளுக்கு இருந்தது. எனவே அவள் அதன்பின்பு துக்கமுகமாய் இருக்கவில்லை. 

அன்பானவர்களே, இதனையே அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில், "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்." என்று உறுதியாகக் கூறுகின்றார். பின்னர், அவ்வாறு எப்படி  சந்தோஷமாய் இருப்பது என்பதற்கு பின்வருமாறு வழி கூறுகின்றார்:- 

"நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்." ( பிலிப்பியர் 4 : 6, 7 )

கர்த்தர்மேல் பாரத்தை வைத்துவிட்டு எப்போதும் சந்தோசமாக இருப்போம். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,156                                          💚 ஏப்ரல் 09, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்." ( கொலோசெயர் 1 : 28 )

ஒருவன் கிறிஸ்துவுக்குள் தேறினவனாக விளங்கவேண்டுமானால் அவன் கிறிஸ்துவைப்பற்றி அறிந்தால் மட்டும் போதாது. காரணம், கிறிஸ்துவைப் பற்றி அறிவது நம்மை அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கமாட்டாது.  கிறிஸ்துவைப் பற்றி அறிவது வெறும் மதபோதனை. மதபோதனை மதவாதிகளைத்தான் உருவாகுமேத்தவிர மேலான ஆவிக்குரிய மனிதர்களை உருவாக்க முடியாது.  

ஆனால், ஒருவர் கிறிஸ்துவை அறியும்போது மட்டுமே அவர் கிறிஸ்துவைப்போன்ற குணங்களுள்ளவர்களாக மாறமுடியும். கிறிஸ்துவோடு தனிப்பட்ட உறவினை வளர்த்துக்கொள்ளும்போது மட்டுமே நாம் கிறிஸ்துவை அறியமுடியும்.

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில்,  "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து" என்று கூறுகின்றார். அவரைபற்றியல்ல; மாறாக அவரையே அறிவித்து என்று கூறுகின்றார். அப்படி அறிவிக்கக் காரணம், "ஒருவரை கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு" என்கின்றார். 

இன்றைய தியான வசனத்தில், "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள்" எனும் வார்த்தைகளை பவுல் பயன்படுத்தியுள்ளார். அதாவது, நாடு, மதம், ஜாதி, இனம், நிறம் கடந்து எந்த மனிதனையும் கிறிஸ்துவுக்குள் நிலைநிறுத்த வேண்டும் என்று பொருள். இதுபோலவே, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிக் குறிப்பிடும்போதும் அப்போஸ்தலனாகிய யோவான், "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 ) என்று குறிப்பிடுகின்றார். ஆம் அவர் எந்த மனிதனையும் ஒளிர்விக்க வல்லவர்.

கிறிஸ்துவுக்குள் தேறினவனாக ஒருவர் மாறும்போது அற்பமான மனித சுபாவங்கள் மாறிவிடும். வெளிப்பார்வைக்கு அவர்கள் வித்தியாசம் தெரியாதவர்களாக மற்றவர்களைப்போல் இருந்தாலும் உள்ளான மனிதனில் கிறிஸ்துவைப்போன்ற எண்ணங்கள் உள்ளவர்களாக மாறிவிடுவார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தபின்னரும் அப்போஸ்தலரான பவுலின் நிரூபங்கள் உயிருள்ளவையாக இருக்கின்றன. காரணம், அவரது உள்ளான எண்ணம் மாயமற்றதாக இருந்தது. இன்றைய வசனத்தில் அவர் கூறுவதுபோல, எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு அவர் போதித்தார், ஜெபித்தார். 

நாமும் இப்படி வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். "எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்." ( கொலோசெயர் 1 : 28 ) என்று அவர் கூறியுள்ளபடி மனிதர்களை கிறிஸ்துவுக்குள் தேறினவர்களாக மாற்றிட நாம் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும். 

ஆனால் இன்று பெரும்பாலான சுவிசேஷ அறிவிப்புகள் இப்படியிருப்பதில்லை. அன்பானவர்களே, நான் அடிக்கடி கூறுவதுபோல கிறிஸ்தவத்துக்கு எதிரிகள்  வெளியிலில்லை. பிரபல கிறிஸ்தவ ஊழியர்களே கிறிஸ்தவத்துக்கு எதிரிகள். இவர்களில் பலர்  தொலைக்காட்சி ஊழியம் எனும் பெயரில் மனிதர்களை இருளுக்கு நேராகவே நடத்துகின்றனர். அவர்கள்  மனிதர்களுக்கு ஞானத்தோடு புத்திசொவதுமில்லை சரியான போதனைகளைக் கொடுப்பதுமில்லை;  கிறிஸ்துவுக்குள் நிலைநிறுத்த முயலுவதுமில்லை. இவர்களது பல சாட்சிகள் பிற மதத்தினர்முன் கிறிஸ்தவத்தைக் கேலிப் பொருளாக்குவதுடன் உண்மையான கிறிஸ்தவர்களையே மனம்நோகச் செய்கின்றன.

எனவே, இப்படி எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு போதிப்பதே மெய்யான ஊழியம். அப்போஸ்தலரான பவுலின் மனநிலையுடன் நமது வாழ்வாலும் வார்த்தையாலும் கிறிஸ்துவை அறிவிப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   தொடர்புக்கு:- 96889 33712

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,157                                          💚 ஏப்ரல் 10, 2024 💚 புதன்கிழமை 💚

"எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது." ( 1 கொரிந்தியர் 10 : 23 )

தேவன் மனிதனைப் படைத்து பூமியிலுள்ள அனைத்தின்மேலும் அவனுக்கு அதிகாரத்தைக்கொடுத்தார். மனிதனை தேவன் ஒரு ரோபோ இயந்திரம் போல படைக்கவில்லை. அவனுக்குச் சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலையும் சுதந்திரத்தையும் கொடுத்துள்ளார். இப்படி இல்லையானால் நாம் அனைவரும் ரிமோட் பொம்மைபோல அவர் சொல்வதை மட்டுமே செய்துகொண்டிருப்போம். சுய விருப்பமோ அதிகாரமோ இல்லாமல் மனிதனுக்கு சுதந்திரத்தின் மகிழ்ச்சி இல்லாமல் போயிருக்கும். 

இப்படி, எல்லாவற்றையும் அநுபவிக்க தேவன் சுதந்திரம் நமக்குத் தந்திருந்தாலும் அவற்றை எல்லாம் அனுபவிப்பது நமக்குத் தகுதியாயிராது; எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். நாம் கிறிஸ்துவுக்குள் அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழவேண்டுமானால் சில பல காரியங்களை நாம் தியாகம் செய்யவேண்டும். உலகத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் தேவனால் படைக்கப்பட்டிருந்தாலும் அவைகளை தேவன் ஒரு நோக்கத்துக்காகப் படைத்திருப்பார். ஆனால் மனிதன் தனது மூளை அறிவினால் பல பொருட்களை தேவனுக்கு ஏற்பில்லாதவையாக மாற்றிவிட்டான். 

இப்படி இருப்பதால், "எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்." ( 1 கொரிந்தியர் 6 : 12 ) என்கின்றார் பவுல் அடிகள். தேவனால் படைக்கப்பட்ட பொருட்கள் தவிர மனிதனால் உருவாக்கபட்டப் பல பொருட்களையும் அனுபவிக்க நமக்கு உரிமை உண்டு. ஆனால் எல்லாம் தகுதியாகவும் இராது நாம் எவற்றுக்கும் அடிமையாகிவிடவும் கூடாது.  

இந்த உலகத்தில் நாம் வாழ பணம், வீடு, ஆடைகள், உணவு  எனப் பலவித பொருட்கள் நமக்குத் தேவையாக இருக்கின்றன. இவைகளை அனுபவிக்க நமக்கு உரிமை உள்ளது. ஆனால் இவைமட்டுமே வாழ்க்கை என எண்ணி இவற்றைப் பெறுவதற்கு நாம் தகாத செயல்பாடுகளில் ஈடுபடும்போது நாம் அந்தப் பொருளுக்கு அடிமையாகியுள்ளோம் என்று பொருள். 

எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல் நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், நமக்கு எல்லாவற்றையும் அனுபவிக்க உரிமை இருந்தாலும் நமது ஆத்துமத்துக்குத் தகுதியான, நமது பக்திவிருத்தியை அதிகரிக்கச் செய்யக்கூடிய பொருட்களை மட்டும் நாம் உபயோகிக்கவேண்டும். மட்டுமல்ல, எவற்றுக்கும் நாம் அடிமைகள் ஆகிவிடக்கூடாது.  

பக்திச் செயல்பாடுகளில் மூழ்கி பல்வேறு ஆன்மீகப் பணிகளைச்  செய்யும் சிலர் மறுபுறம் முழுநேரமும் தொலைக்காட்சி சீரியல்கள் பார்ப்பது, கிரிக்கெட் விளையாட்டுகளை ரசிப்பது, மற்றும் நகைகள், புடவைகள், திரைப்படங்கள், பீடி சிகரெட்  போன்ற பலவற்றுக்கு அடிமைகளாக இருக்கின்றனர். இவை எவையும் நமக்கு பக்திவிருத்தியோ, ஆத்தும முன்னேற்றத்தையோ தரப்போவதில்லை. 

உலகினில் நாம் எல்லாவற்றையும் அனுபவிக்கலாம் எனினும் நம்மிடம் இத்தகைய அடிமைத்தனங்களோ பக்திவிருத்தி ஏற்படுத்தாத செயல்களோ இருக்குமானால் அவற்றை அகற்றி வாழும்போது மட்டுமே தேவனை அறியக்கூடிய வழிகளில் நாம் முன்னேற்றம்காண முடியும்.   

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,158                                          💚 ஏப்ரல் 11, 2024 💚 வியாழக்கிழமை 💚

"துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்." ( நீதிமொழிகள் 24 : 24 )

தேர்தல் காலத்தில் நமக்கு உணர்வூட்டக்கூடிய வசனம் இன்றைய தியான வசனமாகும்.  பொதுவாக அரசியல்வாதிகள் பலரும் துன்மார்க்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்குள் நாம் கலக்கமில்லாமல் அமைதலான வாழ்க்கை வாழ உதவக்கூடிய  மனிதர்களைப்  பொறுக்கியெடுத்து நாம் தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

துன்மார்க்கருக்கு வேதாகமம் குறிப்பிடும் அடையாளங்களைப் பார்த்து நாம் ஒருவரைத் தள்ளி இன்னொருவருக்கு வாக்களிக்கவேண்டுமானால் இன்றைய சூழலில்   நாம் யாருக்கும் வாக்களிக்கமுடியாது. ஆனால் நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டு நாம் நமது கடமையைச் செய்யவேண்டியது அவசியம். எனவே, பொதுவான அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாமல், நாட்டுமக்கள் அனைவரையும் சரி சமமாக நடத்தக்கூடியவர்களையும், அனைவர்க்கும் சமஉரிமை, சமநீதி, சமவாய்ப்பு  வழங்கக்கூடியவர்களையும் கொடூரமான சட்டங்களால் மக்களை வதைக்காதவர்களையும்  நாம் தேர்ந்தெடுக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.

இன்றைய வசனம், "துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள்."  என்று கூறுகின்றது. எனவே, நாம் மேலே பார்த்தபடி, பொதுவான அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாமல், நாட்டுமக்கள் அனைவரையும் சரி சமமாக நடத்தக்கூடியவர்களையும், அனைவர்க்கும் சமஉரிமை, சமநீதி, சமவாய்ப்பு  வழங்கக்கூடியவர்களையும் தேர்ந்தெடுக்கவேண்டியுள்ளது. இப்படி இவற்றுக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்கு நாம் வாக்களிக்கும் போது "துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய்" என்று நாம் கூறுவதாகப் பொருள்.  

ஆனால் கிறிஸ்தவர்களில் சிலர் இப்படி நீதி, நேர்மை, சம உரிமை, சாமவாய்ப்பு இவற்றை மறுக்கின்ற அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க ஆதரவு திரட்டுகின்றனர். சிலர் அத்தகைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றனர்; வேட்பாளர்களாகவும் நிற்கின்றனர்.  இவர்களைப்பார்த்து வேதம் எச்சரிக்கின்றது, "தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!" ( ஏசாயா 5 : 20 )

மேலும், "ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும், அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ! விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதவி பெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்?" ( ஏசாயா 10 : 1-3 ) என்கின்றார் உன்னதமான கர்த்தர்.

மேற்படி வசனங்களில் "ஐயோ" எனும் வார்த்தை மறைமுகமாகச்  சாபத்தைக் கூறுகின்றது. அதாவது அப்படிப்பட்டவன் கடவுளின் பார்வையில் ஐயோ என்று போய்விடுவான். கைவிடப்பட்டுக் கடவுளின் சாபத்தைப் பெறுவான். மட்டுமல்ல, இப்படிப்பட்டவர்களுக்கு வாக்களித்து துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது, அத்தகைய மனிதன் கடவுளின் சாபத்தையும் மனிதர்களின் சாபத்தினையும் பெறுவான். "விசாரிப்பின் நாளிலும் (நியாயத்தீர்ப்பு நாளில்)  தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதவி பெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்?"  என்கின்றார் தேவன்.

எனவே,  நாம் ஏற்கெனவே பார்த்தபடி, பொதுவான அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தாமல், நாட்டுமக்கள் அனைவரையும் சரி சமமாக நடத்தக்கூடியவர்களையும், அனைவர்க்கும் சமஉரிமை சமநீதி, சமவாய்ப்பு  வழங்கக்கூடியவர்களையும், கொடுமையான சட்டங்களை எழுதி, செயல்படுத்தி மக்களை வதைக்காதவர்களையும்  தேவன் நமக்குத் தலைவராகத்  தரும்படி ஜெபிக்கவேண்டியதும் அத்தகைய கட்சியினருக்கு வாக்களிக்கவேண்டியதும் நமது கடமையாகும். மாறாக, அத்தகையவர்களுக்கு எந்தவிதத்திலும் ஆதரவளிப்பது வேதாகமத்தின் அடிப்படையில்  நமக்கும் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் சாபத்தைக் கொண்டுவரும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   தொடர்புக்கு:- 96889 33712

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,159                                          💚 ஏப்ரல் 12, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் எனப்படுவதை வெறுத்து," ( எபிரெயர் 11 : 24 )

மோசேயின் பல்வேறு குணங்கள் நம்மையும்  ஆவிக்குரிய வாழ்வில் நிதானித்து அறிந்து பின்பற்றிட வழி காட்டுகின்றது. 

மோசேயினுடைய வாழ்க்கை வித்தியாசமானது.  பிறக்கும் எபிரேயர்களுடைய ஆண்பிள்ளைகள் அனைத்தையும் நைல் நதியில் போட்டுவிடவும் பெண்பிள்ளைகளை மட்டும் உயிரோடு வைக்கவும் பார்வோன் மன்னன் எல்லோருக்கும் கட்டளையிட்டான். (யாத்திராகமம் 1:22)  மோசேயின் தாய் தனக்குப் பிறந்த மகனான மோசேயை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்து வளர்த்தாள். அதற்குமேல் அதனை வளர்க்கமுடியாமல் நைல்நதி ஓரத்தில் நாணல்பெட்டியில் வைத்து விட்டாள். அவனை பார்வோனின் மகள் எடுத்துத்  தனது மகனாக வளர்த்தாள். 

ஆனால் வளர்ந்தபின்னர் மோசேக்குத் தனது பிறப்பின் பின்னணி தெரிந்தது.  அதன் பின்னால் அவனால் அரண்மனை வாழ்க்கையில் தொடர்ந்து வாழமனமில்லை. அரண்மனையில் ராஜ வாழ்க்கை  வாழ்ந்து, பார்வோனின் மகளின் மகன் (பார்வோன் மன்னனின் பேரன்) என்ற மேலான நிலை இருந்தபோதும் மோசே அதனைவிட தேவனுடைய மக்களாகிய எபிரேயர்களுடன் சேர்ந்து பாடு அனுபவிப்பதையே தெரிந்து கொண்டார். 

அரண்மனையில் பல்வேறு பாவ காளியாட்டுகள் சந்தோஷமளிக்கக் கூடியவைகளாக இருந்தபோதும் அவற்றைவிட தனது மக்களுடன் பாடு அனுபவிப்பதையே மோசே தெரிந்துகொண்டு அரண்மனை வாழ்கையினைத் துறந்து வெளியேறினார். இதனை நாம், "அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்." ( எபிரெயர் 11 : 25, 26 ) என்று வாசிக்கின்றோம். 

எபிரேய நிருப ஆசிரியர் இது மோசேயின் விசுவாசத்தினால்தான் என்று கூறுகின்றார். இதனையே இன்றைய தியான வசனம், "விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து," என்று கூறுகின்றது. மோசே ஒரு சராசரி மனிதனாக இருந்திருந்தால் அரண்மனையிலேயே வாழ்ந்து அடுத்த அரச பதவியினை அடைந்திட முயன்றிருப்பான். ஆனால் தேவன்மேலிருந்த விசுவாசத்தினால் மோசே அரண்மனை வாழ்கையினைத் துறந்தார். 

மட்டுமல்ல, இந்த "மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்." ( எண்ணாகமம் 12 : 3 ) என்று வாசிக்கின்றோம். பாவத்தின்மேல் வெறுப்பு, செல்வத்தின்மேல் பற்றில்லாத நிலை, சாந்தகுணம் போன்ற குணங்கள் இருந்ததால், "ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்".
( யாத்திராகமம் 33 : 11 )

இவை அனைத்துக்கும் மூல காரணம், தேவன்மேல்கொண்ட விசுவாசத்தினாலே தான்.   அன்பானவர்களே, பாவ சந்தோஷங்களையும், செல்வம், பதவி போன்றவற்றையும் வெறுத்து ஒதுக்கி தேவன்மேல் உறுதியான விசுவாசத்தோடு தேவ ஐக்கியத்தில் வாழ மோசே நமக்கு வழி காட்டுகின்றார். பெரிய உலக ஆசீர்வாதம் நமக்குமுன் இருந்தாலும் அதனைவிட தேவனுக்குமுன் உண்மையாய் வாழ நம்மை ஒப்புக்கொடுத்து வாழ்வோமானால் தேவ ஐக்கியத்தில் நாமும் உறுதிப்படலாம். 

"ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்" என்று கூறப்பட்டுள்ளபடி தேவன் நம்மோடும் பேசுவார். அவர் மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டுபவரல்ல. இந்த அனுபவதில் வளருவதே ஆவிக்குரிய வளர்ச்சி. விசுவாசத்தோடு தேவ ஐக்கியத்தில் வளர முயற்சியெடுப்போம். அதற்கு, மோசே செய்ததுபோல தேவனைவிட்டு நம்மைப் பிரிக்கக்கூடிய  சில காரியங்களை நம்மைவிட்டு ஒதுக்கிவைப்போம். அதற்கு ஆவியானவர்தாமே நமக்குஉதவுவாராக. 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,160                                          💚 ஏப்ரல் 13, 2024 💚 சனிக்கிழமை 💚

"நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்." ( தீத்து 3 : 5 )

நாம் கிறிஸ்து இயேசுவினால் மீட்கப்பட்டதற்கு நமது நீதிச் செயல்கள் காரணமல்ல; மாறாக அவரது இரக்கமே காரணம். இந்த உலகத்தில் பலர் நல்ல நீதிசெயல்கள் செய்பவர்களாக இருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப் பெறவில்லை. ஆலய காரியங்களில் முழுமூச்சாக ஈடுபட்டுப்  பல பக்திச்  செயல்பாடுகளில்  ஈடுபட்டாலும் பலரும் மீட்பு அனுபவத்தைப் பெறவில்லை. 

இன்று நாம் கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப் பெற்றுள்ளோம் என்றால் அதற்குக் காரணம் அவர் நம்மேல் வைத்தக் கிருபைதான் காரணம். நாம் செய்த நற்செயல்களல்ல மாறாக முற்றிலும் தேவ கிருபையால் நாம் மீட்கப்பட்டுள்ளோம். இதனையே அப்போஸ்தலரான பவுல், "ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல" ( எபேசியர் 2 : 9 ) மேலும்,  "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" ( எபேசியர் 2 : 8 ) என்று வாசிக்கின்றோம்.

இதனை நாம் ஒரு சிறு உதாரணம் மூலம் புரிந்துகொள்ளலாம். சமுதாயத்தில் நல்ல செல்வாக்குள்ள தனது  தகப்பனார் அடிக்கடி அறிவுறுத்தியும் துன்மார்க்க மகன் அவனது நண்பர்களோடு சேர்ந்து குடித்து பலருடன் தகராறுசெய்து போலீசாரிடம் மாட்டிக்கொண்டான். அங்கு காவலர்களால் அடிபட்டு அவமானப்பட்டபோது அவனுக்குத் தகப்பனார் கூறிய அறிவுரைகள் நினைவுக்கு வந்தன. பலமுறை சிந்தித்து, தான் யார் என்பதை போலீசாரிடம் சொல்லிவிட முடிவெடுத்தான்.

அவன் தான் யார் என்பதைக் கூறியபோது அவன் இவ்வளவு பெரிய மனிதனின் மகன் என்பதை போலீசாரால் நம்ப முடியவில்லை. அந்தத் தந்தையைத்  தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். அந்த மகனும்  தந்தையிடம் அழுது மன்னிப்பு வேண்டினான். தகப்பன் கூறிய பின்னர் அவனைப் போலீசார்  விடுவித்தனர். அவன் போலீஸ் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டான்; மீட்கப்பட்டான். அதன்பின்னர் அவனுக்குத் தான் தந்தைக்கு எதிராகச் செய்த செயல் அவமானமாய் இருந்தது. அவரது நற்பெயருக்கு கேடு விளைவித்தததற்காக மனம் வருந்தினான். இனிமேல் பழைய நண்பர்களோடு சேரக்கூடாது என்று உறுதியெடுத்துத் திருந்தினான்.  

அந்த மகன் இதற்குமுன் தந்தையோடு சேர்ந்து பல நல்ல சமுதாயத் தொண்டுகளும்  செய்துள்ளான். ஆனால் நல்லது செய்தாலும் துன்மார்க்க நண்பர்களும் துன்மார்க்கச் செயல்பாடுகளும் அவனிடம் இருந்து அவனை கேடுகெட்டவனாகவே மாற்றியிருந்தது. ஆனால் இப்போது இந்த ஒரு சம்பவம் தகப்பனின் இரக்கத்தை உணரச்செய்து  அவனை மனம் திரும்பச் செய்தது. 

அன்பானவர்களே, இந்தத் தகப்பன் தனது மகன் ஏற்கெனவே செய்த பல நல்ல செயல்களுக்காக அவனிடம் அன்புகூரவில்லை. மாறாக, அவன் அவரது சொந்த மகன் என்பதால் காவலர்களின் பிடியில் சிக்கியபோது அன்புகூர்ந்து அவனை விடுவிக்க முயற்சியெடுத்தான். இப்படியே, "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." ( ரோமர் 5 : 8 ) ஆம் கிறிஸ்து நமது அன்பானத் தகப்பன். 

இந்தத் துன்மார்க்க மகனைப்போலவே நாம் இருக்கின்றோம். நமது தகப்பனாகிய கிறிஸ்து இயேசுவின் அன்பை நாம் உணராமல் இருக்கின்றோம். அவருக்கு எதிரான பாவச் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், அவரை விசுவாசத்தோடு நாம் நோக்கிப்பார்த்து நமது பாவங்களை ஒத்துக்கொண்டால் மீட்கப்படுவோம். ஆம் அன்பானவர்களே, நாம் நல்ல செயல்கள் செய்யாதவர்களாக இருந்தாலும் கிறிஸ்துவின் கிருபையால் மீட்கப்படுவோம். அதன்பின்னர்தான் அவரது அன்பினை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும். 

"ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்." ( ரோமர் 4 : 5 ) 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,161                                          💚 ஏப்ரல் 14, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்." ( 1 தீமோத்தேயு 4 : 16 )

சுமார் இருபத்தியாறு ஆண்டுகளுக்குமுன் நான் ஞாயிறுதோறும் கன்னியாகுமரி அருகிலுள்ள கொட்டாரம் எனும் ஊரிலிருக்கும் .பி .சி . சர்ச் ஆராதனையில் கலந்துகொள்வேன். அங்கு பாஸ்டராக ஜான்சன் டேவிட் ஐயா இருந்தார்கள் (இப்போது இறந்துவிட்டார்). மிகப் பெரிய தேவ மனிதனாகவும் தீர்க்கதரிசியாகவும் இருந்தார் அவர். ஒரு மறைவான, ஆரவாரமில்லாத வாழ்க்கை வாழ்ந்தவர்.

அவர் ஒருமுறை என்னிடம் பேசும்போது அவருக்கு ஆண்டவர் அளித்த தரிசனத்தைக் குறித்து விளக்கினார். அவர் ஆலயத்தில் போதிக்கும் போதனைகள் அனைத்தும் ஒரு பெரிய டேப் ரிக்கார்டரில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டடிருந்ததைக் கண்டாராம். இதனை அவர் பிரசங்கம் செய்யும் அதே நேரத்தில் ஆண்டவர் அவருக்குக் காண்பித்தாராம். அப்போது ஆண்டவர் அவருக்கு மேற்படி வசனத்தை உணர்த்தி, "நீ போதிப்பதில் கவனமாக இரு" என்றாராம். நாம் பேசும் ஒவ்வொரு பேச்சும் நியாயத் தீர்ப்பு நாளில் ஆண்டவரால் நினைவுகூரப்படும் என்பதற்கு இது ஒரு அடையாளம்.

அப்போது நான் ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்பகட்டத்தில் இருந்தேன். எந்த ஆவிக்குரிய அனுபவங்களும் அப்போது எனக்கு இல்லை. அப்போது பாஸ்டர் ஜான்சன் டேவிட் ஐயா என்னிடம், "தம்பி பிற்காலத்தில் நீ ஊழியம் செய்யும்போது இதை மறந்திடாதே " என்று அறிவுரை கூறினார். அப்போது அப்படி நான் போதிக்கும் நிலை வரும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் இன்று ஒவ்வொருநாள் வேதாகம செய்தி எழுதும்போதும் இந்த வார்த்தைகள் என்னை அச்சுறுத்துவனவாகவே உள்ளன. ஆம், நமது செயல்கள், பேச்சுக்கள் அனைத்தையும் தேவன் கவனித்துக்கொண்டிருக்கின்றார். 

அன்பானவர்களே, இது எனக்கு மட்டுமல்ல, நாம் அனைவருக்குமே பொருந்தும். கிறிஸ்தவர்கள் நாம் அனைவருமே கிறிஸ்துவை போதிக்கக் கடமைப்பட்டவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கிறிஸ்துவை அறிவிக்கின்றோம். அதனால் நமது செயல்பாடுகள் பிறருக்குச் சாட்சியளிக்கும் விதத்தில் இருக்கவேண்டும்.

அந்தியோகியாவில் கிறிஸ்துவைப்போல வாழ்ந்த அவரது சீடர்களைப் பார்த்துதான் மற்றவர்கள் அவர்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்தனர் (அப்போஸ்தலர் பணி 11:26). ஆனால் இன்று பலரும் இயேசு கிறிஸ்து அரசியல் கட்சி துவங்குவதுபோல கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்தார் எனது தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றோம். மேற்படி வசனத்தின்படி சீடர்கள் வாழ்ந்ததால் இந்த வசனத்தின்படி அவர்களது உபதேசத்தைக் கேட்டவர்களையும் அவர்கள் இரட்சிப்பு அனுபவத்தினுள் நடத்தினார்கள். அப்படி அந்த மீட்பு அனுபவத்தைப் பெற்றவர்களே கிறிஸ்தவர்கள்.

நாமும் இன்று நமது பேச்சு செயல் இவற்றில் எச்சரிக்கையாய் இருப்போம். நமது ஒவ்வொரு பேச்சும் செயலும் தேவனால் கவனிக்கப்படுகின்றன எனும் அச்ச உணர்வு இருந்தால் மட்டுமே நாம் ஒரு உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ முடியும்


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,162                                         💚 ஏப்ரல் 15, 2024 💚 திங்கள்கிழமை 💚

"...........மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6 : 7, 8 )

நெல் விதைத்துவிட்டு கோதுமையை அறுவடை செய்ய முடியாது. இது நாம் எல்லோரும் அறிந்ததே. நாம் விதைப்பதையே அறுப்போம். இதே இயற்கையின் விதிதான் மனிதர்களது வாழ்க்கைக்கும் பொருந்தும். இயற்கையிலிருந்து இந்தச் சத்தியத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த உலகத்திலேயே சிலவேளைகளில் அப்பட்டமாக இது வெளிப்படும். ஒரு முறை ஒரு சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டேன். ஒரு குறிப்பிட்ட நகரத்தில் சாலை ஓரம் ஒரு முதியவர் பல நாட்களாக வசித்து வந்தார். அவர் சொந்த குடும்பத்தால் கைவிடப்பட்டு அவலமான நிலையில் இருந்தார். ஆனால் அவரது முகத்தில் ஒரு சிரிப்பு இருக்கும். தர்மம் கொடுப்பவர்களை வாழ்த்துவார்.

நகரத் தூய்மை பணிக்காக சாலை ஒர மக்களை அப்புறப்படுத்தினர் அதிகாரிகள். அப்போது ஒரு முரட்டு அதிகாரி கோபத்துடன், "பிச்சைக்கார பயலே, இங்கிருந்து ஓடுடா.." என்றும், கெட்டவார்த்தைகள் பேசியதுமல்லாமல்  தனது காலால் அந்த முதியவரையும் அவரது உடைமைகளையும் மிதித்துத் தள்ளினார். சரியாக மூன்றாம் நாள் அதே இடத்தில் நடந்த ஒரு விபத்தில் அந்த அதிகாரியின் கால் பேருந்து சக்கரத்தில் சிக்கி நசுங்கித் துண்டானது. இதனைப் பார்த்தப் பலரும் , "ஆணடவன் உண்மையிலேயே இருக்காரு...." என மனித முறைமையில் சொல்லிக்கொண்டனர்

"சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்." ( 1 தீமோத்தேயு 5 : 24 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். சிலருடைய பாவங்கள் என்று கூறப்பட்டுள்ளதால் எப்போதுமே இப்படி நடைபெறும் என்று சொல்லமுடியாது என்பது தெளிவு

மேலும் மாம்சத்துக்கென்று விதைத்தல் என்பது நமது  உலகக் காரியங்களுக்காகவே நமது உழைப்பைச் செலவழித்துக் கொண்டிருப்பதைக்  குறிக்கும்.  அதாவது, எந்தவித ஆவிக்குரிய சிந்தனையோ செயல்பாடோ இல்லாமல் முழுக்க முழுக்க நமது இவ்வுலக வாழ்க்கைக்காக ஓடிக்கொண்டிருப்பதைக் குறிக்கும்.  இப்படி வாழும் மனிதர்கள் நித்திய ஜீவனை இழந்து தங்கள் ஆத்துமாவையும்  இழப்பார்கள்.  

இதற்கு மாறாக, "ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." இந்த உலக வாழ்க்கைக்குப்பின் முடிவில்லா நித்திய வாழ்வு ஒன்று இருக்கின்றது.  வேதாகமம் அதற்கு வழிகாட்டுகின்றது. இயேசு கிறிஸ்துவும், "நானே வழி" என்று கூறி தன்னைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார். எனவே அவரது கட்டளைகளின்படி நடப்பதே ஆவிக்கென்று விதைத்தல்.  எனவே அன்பானவர்களே, நாம் இந்த குறுகிய உலக வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுத்து நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்க்கையினை இழந்துவிடக் கூடாது

நாம் எதை விதைக்கின்றோமோ அதையே அறுப்போம்  எனும் உண்மையினை உணர்ந்துகொண்டோமானால் நமது வாழ்க்கை வித்தியாசமானதாக மாறும். குறுகிய உலக ஆசைகளுக்காகப் பாவ காரியங்களில் ஈடுபடமாட்டோம்.  இந்தச் சிந்தனை இல்லாததால் இன்று துன்மார்க்கமான பதவி, பணவெறிகொண்டு கொலைகளும் பல்வேறு அவலட்சணமான காரியங்களும், அற்பத்தனமான அரசியல் செயல்பாடுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் பொதுவாக எல்லோரும் கடவுள் நம்பிக்கை இருப்பதாகக் கூறிக்கொள்கின்றனர். அதாவது இவர்கள் கடவுளைத் தங்களைப்போன்ற ஒரு அற்பத்தனமானவராக எண்ணிக்கொண்டு செயல்படுகின்றனர். 

எனவே அன்பானவர்களே, நாம் எச்சரிக்கையாகச் செயல்படுவோம்.  மாம்சத்திற்கென்று விதைத்து அழிவை அடைந்திடாமல் ஆவிக்கென்று விதைத்து ஆவியினாலே நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ள முயலுவோம். 


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   தொடர்புக்கு:- 96889 33712

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,163                                         💚 ஏப்ரல் 16, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலு மிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்." ( செப்பனியா 1 : 6 )


இன்றைய தியான வசனம் எவை நமக்கு சாபமாயிருக்கும் என்று மூன்று காரியங்களைக்குறித்து  பேசுகின்றது. 

1. கர்த்தரைவிட்டுப் பின்வாங்குவது  

2. கர்த்தரைத் தேடாமல் வாழ்வது.

3. அவரைக்குறித்து விசாரியாமல் வாழ்வது.

இந்த மூன்றுவகையினரும் கர்த்தரால் ஆசீர்வாதத்தைப் பெறமுடியாது என்கின்றது இன்றைய வசனம். 

சிலர் ஆவிக்குரிய வாழ்வில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஆனால் சில, பல எதிர்மறையான காரியங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டவுடனோ அல்லது பழைய பாவ நாட்டங்கள் இருதயத்தைத் தூண்டுவதாலோ கர்த்தரைவிட்டுப் பின்வாங்கிப்போவார்கள்.  இப்படி "கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 20 ) என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

மட்டுமல்ல, "அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்." ( 2 பேதுரு 2 : 21 ) என்கின்றார். "நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது." ( 2 பேதுரு 2 : 22 ) என்று வாசிக்கின்றோம்.

இன்னொரு பிரிவினர் கர்த்தரை வாழ்வில் தேடாமலேயே வாழ்பவர்கள். அதாவது இவர்கள் ஆராதனைக் கிறிஸ்தவர்கள். கர்த்தரைத் தேடாமல் உலக ஆசீர்வாதங்களுக்காக ஜெபித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்களைப் பார்த்து ஆமோஸ் தீர்க்கதரிசி கூறுகின்றார், "கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்" ( ஆமோஸ் 5 : 6 ) ஆம் அன்பானவர்களே, நாம் வெறுமனே ஆலய ஆராதனைகளில் கலந்துகொண்டால் மட்டும் போதாது, தனிப்பட்ட முறையில் தேவனோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள ஆர்வமுடையவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அப்படிக் கர்த்தரைத் தேடுபவர்கள் பிழைப்பார்கள். அதாவது அவர்கள் பாவ மரண சூழ்நிலைகளுக்குத் தப்புவார்கள். 

நம்மில் பெரும்பாலானவர்கள் இரண்டாம் வகையினர்தான். கடவுளை நம்புகின்றோம், ஆலய ஆராதனைகளில் கலந்துகொள்கின்றோம் ஆனால் கர்த்தரை வாழ்வில் தனிப்பட்ட முறையில் அறியாதவர்களாகவே இருக்கின்றோம். 

மூன்றாவது வகையினர், அவரைக்குறித்து விசாரியாமல் வாழ்பவர்கள். கடவுள் நம்பிக்கையற்றவர்கள். "கடவுள் என ஒருவர் இருந்தால் ஏன் மறைந்துகொண்டிருக்கிறார்? என் முன்னால் வரட்டும் நான் நம்புகின்றேன்" என்பார்கள் இவர்கள்.  வெட்டியாக இருந்து வம்பு பேசுவதைவிட்டு இவர்கள் கடவுளைத் தேடினால் அவரைக் கண்டுபிடிக்கமுடியும். "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்" ( மத்தேயு 7 : 7 )

அன்பானவர்களே, நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம்.  கார்த்தரைவிட்டுப் பின்வாங்கியிருந்தால் அவரிடம் மன்னிப்பு வேண்டி அவரோடு ஒப்புரவாவோம்; இரண்டாவது வகையினராக இருந்தால் ஆலய ஆராதனைகள் மட்டுமே போதுமென்று எண்ணாமல் தேவனோடு தனிப்பட்ட உறவினை வளர்க்க முயலுவோம். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்றால்  அப்படி ஒருவர் உண்டுமா என்று தேடியாவது பார்ப்போம்; உண்மையாகத் தேடினால் நிச்சயம் அவர் தென்படுவார்.  

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,164                                         💚 ஏப்ரல் 17, 2024 💚 புதன்கிழமை 💚

"தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 4 : 20 )

தேவனுடைய ராஜ்ஜியம், பரலோக ராஜ்ஜியம் எனும் இரு அரசாங்கங்களைக் குறித்து நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். பரலோக ராஜ்ஜியம் என்பது பிதாவின் ராஜ்ஜியம்; அவரது அரசாங்கம். மரித்த பரிசுத்தவான்கள் நுழைந்து வாழக்கூடிய மறுவுலக ராஜ்ஜியம். ஆனால் தேவனுடைய ராஜ்ஜியம் என்பது இந்த உலகத்தில் தேவன் நம்முள்வந்து ஆட்சிசெய்கின்ற ராஜ்ஜியம். 

"தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்." ( லுூக்கா 17 : 20, 21 ) என்று வாசிக்கின்றோம். ஆம், நமக்குள் தேவனுடைய ஆவியானவர் இருந்து செயல்படுவதே தேவனுடைய ராஜ்ஜியம்.

பவுல் அப்போஸ்தலர் காலத்தில் தேவனுடைய ராஜ்ஜியம் என்று கூறியவுடன் பலரும் தேவனுடைய ராஜ்ஜியம் வந்துவிட்டால் நாம் உண்பதற்கும், உடுத்துவதற்கும் இந்த உலக வாழ்வை சுகமாக அனுபவித்து மகிழ்வதற்கும்  அந்தத் தேவனுடைய ராஜ்ஜியம் உதவிடும் என்று எண்ணிக்கொண்டனர். ஆனால் அவையல்ல, மாறாக நீதி, சமாதானம்,  பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷம் இவையே தேவனுடைய ராஜ்யத்தின் அளவுகோல் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது." ( ரோமர் 14 : 17 )

தேவனுடைய ராஜ்யமானது தேவனைக்குறித்து பேசிக் கொண்டிருப்பதாலோ அவருக்கு ஆராதனைகள் செய்து கொண்டிருப்பதாலோ வராது. மாறாக, பரிசுத்த ஆவியானவரின் பலத்தால், அவர் நம்முள் வந்து செயலாற்றுவதால் நம்முள் வருகின்றது. இதனையே இன்றைய தியான வசனம், "தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது." என்று கூறுகின்றது. 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தனது சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபத்தில், "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக." ( மத்தேயு 6 : 10 ) என்று ஜெபிக்கச் சொல்லிக்கொடுத்தார். அதாவது புசிப்பும் குடிப்புமற்ற நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமான தேவனுடைய ராஜ்ஜியம் பூமியில் வருவதாக என்று ஜெபிக்கச் சொல்லிக்கொடுத்தார். 

நமது பக்திப் பேச்சுகளாலும் செயல்பாடுகளாலுமல்ல, மாறாக தேவனுடைய பரிசுத்த ஆவியானவரின் பலத்தால் தேவனுடைய ராஜ்யம் நம்மில் உருவாக ஜெபிப்போம்; செயல்படுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   தொடர்புக்கு:- 96889 33712

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,165                                         💚 ஏப்ரல் 18, 2024 💚 வியாழக்கிழமை 💚

"கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்." ( 2 யோவான்  1 : 9 )

கிறிஸ்துவின் உபதேசம் என்ன? அது அவரது இரத்தத்தால் உண்டாகும் பாவ மன்னிப்பு, இரட்சிப்பு, நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வு அல்லது முடிவில்லா வாழ்வு  பற்றியது. கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் கழுவப்படும்போது அவரோடு இணைக்கப்படுகின்றோம். அப்படி இணைக்கப்பட்ட நாம் அவரது ஐக்கியத்தில் தொடர்ந்து வாழும்போது இரட்சிக்கப்படுகின்றோம். இரட்சிப்பு என்பது ஒருநாள் அனுபவமல்ல; மாறாக, ஆவிக்குரிய வாழ்வின் முடிவுவரை நாம் அதில் நிலைத்திருக்கவேண்டும். இதனையே, "முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்." ( மத்தேயு 24 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இன்றைய வசனம் கூறுகின்றது, "கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்" என்று. இந்த வசனத்தின்படி வெறும் ஆசீர்வாதங்களையே சுவிசேஷமாக போதித்துக்கொண்டு, மாயாஜாலக்காரன்போல அற்புதம் அதிசயம் என்று கூறிக்கொண்டிருப்பவன் கிறிஸ்துவின் உபதேசத்தை மீறி நடக்கின்றான்.  அத்தகையவன் பிதாவையும் குமாரனையும் உடையவன் அல்ல என்பது தெளிவு. 

மட்டுமல்ல, விசுவாசி என்று கூறிக்கொண்டு கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழாதவனும் கிறிஸ்துவை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருந்து வாழ்பவனும் சத்தியத்தை போதிப்பவனுமே அவரில் நிலைத்திருப்பவன். அவனே பிதாவையும் குமாரனையும் உடையவன். அவனே கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை வாழவும் மற்றவர்களை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தவும்  முடியும். 

அன்பானவர்களே, கிறிஸ்துவின் மெய்யான சுவிசேஷத்தையும் அவர் சிந்திய இரத்தத்தின் மகிமையையும் அதனால் உண்டாகும் ஆத்தும இரட்சிப்பையும் பற்றி கவலைப்படாமல் வாழ்பவனும்  அதுபற்றி போதிக்காமல் வெற்றுப்  போதனை செய்பவனும் நமது மரியாதைக்குரியவனல்ல. அத்தகையோரை நமது வீடுகளில் ஏற்றுக்கொள்ளவும் கூடாது என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான யோவான். "ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்." ( 2 யோவான்  1 : 10 )

இயேசு கிறிஸ்துவை  அதிகம் அன்பு செய்தவர்தான் யோவான் அப்போஸ்தலர்.  கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் யோவானின் மனதினை மிகவும் வதைத்தன. நமது பாவங்களுக்காக கிறிஸ்து பட்டப்  பாடுகள்  எத்தனை மேலானவை என்பதனை யோவான் அறிந்திருந்தார். எனவே, அவற்றைப் போதித்து மக்களை மீட்பின் பாதையில் நடத்தாமல் தவறான போதனைகளைக் கொடுப்பவர்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அத்தகையவர்கள் கிறிஸ்துவை அவமதிக்கின்றார்கள் என்பதனை அவர் உணர்ந்ததால் இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. அப்படியானால் பின் வேறு யாருக்கு அவன் உடையவன் என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எனவேதான், "அவர்களை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்." என்று கூறுகின்றார்.

நாம் கிறிஸ்துவின் போதனைகளின்படி வாழ்ந்துகொண்டு இத்தகைய தவறான போதகர்களை இனம்கண்டு அவர்களது வழியைவிட்டு விலகிக்கொள்வதே விவேகம். ஏனெனில் அத்தகையவர்களின் போதனைகள் பெரும்பாலும் கிறிஸ்துவை அறியாத மற்ற மக்கள் மத்தியில் கிறிஸ்துவை அவமானப்படுத்துவதாகவே இருக்கும். அதற்கு நாம் உடன்படாமல் தப்பித்துக்கொள்ளவேண்டும். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,166                                         💚 ஏப்ரல் 19, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்றப் பலிகளைக்குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும், என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;" ( எரேமியா 7 : 22, 23 )

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் பல்வேறு பலிகளையும் நியமங்களையும் மக்களுக்கு நியமித்திருந்தார். அதன்படி பலிகள் செலுத்தி வாழ்வதுதான் தேவனுக்கு ஏற்புடைய செயல் என்று மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவர்கள் தேவனுடைய வாக்குக்குச் செவிகொடுக்கவில்லை. அதாவது அவர்கள் கட்டளையைக் கட்டளையாகப் பார்த்தனரேத்தவிர தேவன் விரும்பும் அன்பையும், இரக்கத்தையும் நீதியையும் விட்டுவிட்டனர். பலியிடுவது சம்பந்தமான கட்டளையை நிறைவேற்றுவதில் காட்டிய ஆர்வத்தை மனிதநேயத்திலும் பிறரை அன்பு செய்வதில் காட்டவில்லை.

எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்." ( மத்தேயு 9 : 13 )

பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று கூறிய இயேசு கிறிஸ்து இன்னுமொரு இடத்தில் "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்." ( மத்தேயு 12 : 7 ) என்று கூறுகின்றார்.

இன்றும் இயேசு கிறிஸ்துவின் காலத்து நிலைதான் தொடர்கின்றது. பல ஊழியர்கள் வறட்டுத்தனமான போதனைகளை போதிக்கின்றனரேதவிர இயேசு கிறிஸ்து கூறிய அன்பையும் இரக்கத்தையும் விட்டுவிட்டனர். தசமபாக போதனை இதற்கு ஒரு உதாரணம். அன்பு, இரக்கம், நீதி இவற்றைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பதைவிட வருமானத்தில் பத்தில் ஒன்று காணிக்கைக் கொடுப்பதுதான் வலியுறுத்தப்படுகின்றது.

பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று இயேசு கிறிஸ்து கூறுவது வேதாகமக் கல்லூரியில் சென்று கற்றுக்கொள்ள அல்ல, மாறாக பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு கற்றுத்தர இடம்கொடுங்கள் என்று பொருள். உங்கள் பொருளாசையையும் பண வெறியையும் விட்டுவிடீர்களானால் ஆவியானவர் உங்களை வழிநடத்துவார்; கற்றுத்தருவார் என்று பொருள்

பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்த மாட்டீர்கள்;  ஆராதனைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பிறரை அன்பு செய்வதற்கும் கொடுப்பீர்கள் என்று பொருள். ஆவிக்குரிய சபைகள் என்று  தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளில் காணிகைக் கொடுக்காதவர்களை சபிப்பதும் சாபங்களைக் கூறும் வசனங்களை அவர்களுக்கு எச்சரிக்கையாகக் கூறுவதும் உண்டு. பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தை உணர்ந்திருந்தால் இப்படிச் செய்யமாட்டார்கள். 

என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் என தேவன் கூறுவது நாம் அனைவருக்கும் ஒரு அறிவுரையாக இருக்கட்டும். அவர் இரண்டே இரண்டு கட்டளைகளைத்தான் கூறினார். ஒன்று எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பது, இரண்டாவது தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரை நேசிப்பது. இதற்கு முரணான வாழ்க்கை, அன்பற்ற போதனைகள் நாம் தேவ ஜனமாக இருக்கத் தடையானவைகள்.

ஆம் அன்பானவர்களே, பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நாம் அறிந்துகொண்டால் பிறரைக் குற்றப்படுத்தமாட்டோம். தேவன் காட்டிய அன்பு வழியில் நடப்போம். அதுவே கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வழி

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,167                                         💚 ஏப்ரல் 20, 2024 💚 சனிக்கிழமை 💚


"அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது." ( எபேசியர் 3 : 12 )

இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது நமக்கு வாழ்வில் என்ன கிடைக்கும் என்பதனை அப்போஸ்தலரான பவுல் இங்கு விளக்குகின்றார். உலக ஆசீர்வாதங்களல்ல; மாறாக, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும்போது நமக்கு முதலில் தைரியம் பிறக்கின்றது. அதாவது கிறிஸ்துவை அறியாமல் நாம் வாழ்ந்திருந்தபோது சின்ன பிரச்சனைகளும் பாடுகளும் நம்மை மனம்தளரச் செய்து நம்மைச் சோர்வுக்குள்ளாக்கிவிடும். ஆனால், அவரை நாம் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது நமக்கு உற்ற ஒரு தகப்பனாக அவர் இருப்பதால், தைரியம் கிடைக்கின்றது.  

இரண்டாவதாக, "திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது,  நாம் மரித்தால் தேவ சமூகத்தைச் சென்றடைவோம் எனும் திடமான நம்பிக்கை நம்மில் உருவாகின்றது. எனவே, மெய்யான ஒரு கிறிஸ்தவ விசுவாசி சாவைக்கண்டு அஞ்சமாட்டான். கிறிஸ்தவர்களுக்கு எதிரான வேதகலாபனைகளின்போது பலர் இரத்தச் சாட்சிகளாக உயிரைக்கொடுத்தது இந்த நம்பிக்கை இருந்ததால்தான். 

ஒருவர் கிறிஸ்துவை அறிவதற்கு முன் எப்படி இருந்தார், கிறிஸ்துவை  அறிந்தபின்னர் எப்படி மாறிவிடுகின்றார் என்பதனை விளக்கும்போது,  அப்போஸ்தலரான பவுல்,  "அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக் கொள்ளுங்கள்."   ( எபேசியர் 2 : 12 ) என்று கூறுகின்றார். 

அதாவது, கிறிஸ்துவை அறியாத மக்களாக நாம் இருந்தபோது, கிறிஸ்துவைச் சேராதவர்களாக, ஆவிக்குரிய இஸ்ரவேலுடைய உரிமைகள் இல்லாதவர்களாக, வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியராக,  நம்பிக்கையில்லாதவர்களாக,  இவ்வுலகத்தில் கடவுள் இல்லாதவர்களாக இருந்தோம் என்று கூறுகின்றார். 

கிறிஸ்துவை விசுவாசிப்போருக்கு மட்டுமே ஆவிக்குரிய உரிமைகள் உண்டு. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரை நாம் அறியாமலிருந்தபோது வேதத்தில் பல நூறு வாக்குத்தத்தங்கள் இருந்தாலும் தேவனுடைய அந்த  வாக்குத்தத்தங்களின் உரிமை நமக்கு இல்லாமலிருந்தது. பெயரளவுக்கு மட்டும் அந்த வாக்குத்தத்தங்களை வாசித்து அவற்றைச் சொல்லி ஜெபித்துக்கொண்டிருந்தோம். ஆனால் உண்மையில் அவற்றுக்கு நாம் அந்நியராக இருந்தோம். கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டபின்னரே நாம் அவற்றுக்கு உரிமையுள்ளவர்கள் ஆனோம்.  

அன்பானவர்களே, வெறுமனே "கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்" என்று கூறிக்கொண்டிருப்பதால் பலனில்லை. முதலில் நமது பாவங்கள் மன்னிக்கப்படும் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெறவேண்டும். அப்போதுதான் நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொள்ள முடியும். அந்த அனுபவத்தை வாழ்வில் நாம் பெறும்போதுதான்  அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாகும்.

இன்றைய வசனம் அப்படி கிறிஸ்துவை அறிந்து ஏற்றுக்கொண்டவர்களுக்கு பவுல் அப்போஸ்தலர் எழுதியதாகும்.  எனவே இந்த அனுபவங்களையும் உரிமைகளையும் பெற்ற நீங்கள் தவறான உலக ஆசீர்வாத போதனைகளால் ஏமாறி கிறிஸ்துவைவிட்டு பின்மாறிப் போகாதிருங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஆவிக்குரிய வாழ்வில் கவனமுடன் தொடர்வோம். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,168                                       💚 ஏப்ரல் 21, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் ." ( யோவான் 11 : 9, 10 )

பகலில் நடந்து செல்வதற்கும் இரவில் நடப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைய வசனம் ஆவிக்குரிய பொருளில் கூறப்பட்டுள்ளது. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவது நம்மைப் பகலுக்கு உரிமையாளர் ஆக்குகின்றது. மாறாக, கிறிஸ்துவை அறியாத வாழ்க்கை இருளின் வாழ்க்கை. 

இதனையே அப்போஸ்தலரான யோவான், "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது." ( யோவான் 1 : 4 ) என்று கூறுகின்றார்.  ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் ஜீவன் மனிதர்களுக்கு ஒளியாக இருக்கின்றது. நம்மை ஒளியிலே நடத்துகின்றது. 

இப்படி கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுள்ளவன் இருளில் நடந்தாலும் இடறமாட்டான். இதனையே இன்றைய தியான வசனம், "அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான்." என்று கூறுகின்றது. உலகத்தின் ஒளியாகிய கிறிஸ்து நம்மில்வரும்போது நாமே  வெளிச்சமாகிவிடுகின்றோம். இதனையே இயேசு கிறிஸ்து, "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" ( மத்தேயு 5 : 14 ) என்று கூறுகின்றார். 

தன்னில் கிறிஸ்துவின் வெளிச்சமில்லாத மனிதன் இரவான சூழ்நிலை வாழ்வில் வரும்போது இடறிவிடுவான்.  காரணம் அவனில் ஒளியில்லாமலிருப்பதுதான். கிறிஸ்துவின் வசனமே நமக்கு ஒளியாக இருந்து வழிநடத்தும் அனுபவம் மேலான ஆவிக்குரிய அனுபவமாகும். அந்த அனுபவத்தால்தான் சங்கீத ஆசிரியர், "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 119 : 105 ) என்று கூறுகின்றார்.

ஆவிக்குரிய இருளில் வாழ்பவன் இடறக்காரணம் அவனது ஆவிக்குரிய தூக்கமும் அவலட்சணமான வாழ்க்கையும்தான். ஆனால் கிறிஸ்துவின் வெளிச்சத்தில் வாழ்பவன்  தெளிவுள்ளவனாகவும், விசுவாசம், அன்பு மற்றும் இரட்சிப்பு அனுபவத்தையும் பெற்றிருப்பதால் இடறமாட்டான். 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்."( 1 தெசலோனிக்கேயர் 5 : 7, 8 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவைச் சார்ந்த பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,169                                       💚 ஏப்ரல் 22, 2024 💚 திங்கள்கிழமை 💚

"உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்".(செப்பனியா 3:17) 

இன்றைய தியான வசனம், கிறிஸ்துவுக்குள் வாழும் விசுவாசிகளுக்கு ஆறுதலளிக்கக்கூடிய வசனம்.  தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது கர்த்தர் நம்மோடிருந்து மகிழ்ந்து களிகூருவார் என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளில் சிலர் நன்றாகப் படிக்கின்றவர்களாகவும், பல்வேறு திறமைகளைக் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அத்தகைய மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் தனி அக்கறைகொண்டிருப்பார்கள். சிறப்பு நிகழ்ச்சிகளில் அவர்களை முன்னிலைப்படுத்துவார்கள். பள்ளியின் பெயர் பெருமையடைவதால்  அவர்களிடம் சந்தோஷமாய் இருப்பார்கள். 

இதுபோலவே நமது தேவனும் இருக்கின்றார். அவர் பாவிகளை நேசிக்கின்றார், அன்புசெய்கின்றார் என்பது உண்மையென்றாலும் தனக்கு ஏற்புடையவர்களாக  நீதி நேர்மையுடன் வாழும் மக்களிடம் அதிக அன்பு காட்டி கிருபையை அளிக்கின்றார். இப்படி தேவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழும்போது, அவர் நம்  நடுவில் இருக்கிறார்; நம்மிலிருந்து வல்லமையுடன் செயல்படுவார், நம்மை இரட்சிப்பார்; நம்மேல் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் நம்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். 

இப்படி கூறப்பட்டுள்ளதால் இவர்களுக்குத் துன்பங்கள் கிடையாது என்று பொருளல்ல. மாறாக, துன்பங்களினூடே ஆறுதலும் மகிழ்ச்சியும் அளித்து அவர்களை கிருபையால் தாங்கி நடத்துவார்.  ஒரு குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கும் மகளையோ மகளையோ அனைவரும் தாங்கி நடத்துவதுபோலவும், அத்தகைய மகனிடமும் மகளிடமும் குடும்பத்தினர் தனி அக்கறைகாட்டி மகிழ்ச்சியுடன் இருப்பதுபோலவும் தேவன் அவர்களோடு இருப்பார்; அவர்கள்மேல் தனி அக்கறைகாட்டுவார்.

இன்று பரிசுத்தவான்களாக, புனிதர்களாக கருதப்படும் எல்லோரும் இப்படித்  துன்பங்களினூடே கிறிஸ்துவைப் பின்பற்றினவர்கள்தான். அதனால் தேவன் அவர்கள்மேல் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அவர்களைப் பெருமைப்படுத்தினார். 

ஆவிக்குரியவர்களாக நாம் வாழும்போது நம்மை நாமே பெருமைப்படுத்தத் தேவையில்லை. ஆனால் இன்று பல கிறிஸ்தவ ஊழியர்கள் தங்களது பெருமையினைப் பறைசாற்றிட தாங்களே போஸ்டர் விளம்பரங்களும், சாட்சிகளையும் ஏற்பாடுசெய்து தங்களை உயர்த்திக்கொள்ள விரும்புகின்றார். ஆம் அன்பானவர்களே, கர்த்தர் நம்மோடு இருக்கின்றார் என்பதற்கு இத்தகைய உலகம் காட்டக்கூடிய  அளவுகோல்கள் தேவையில்லை. அது நமக்கும் தேவனுக்குமான தனிப்பட்ட உறவின் அடிப்படையிலானது. 

தேவன் நம்மோடிருப்பது நமது ஆவிக்குத் தெரியும். கிறிஸ்துவுக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது நம்  தேவனாகிய கர்த்தர் நம்  நடுவில் இருப்பதையும் அவர் வல்லமையுள்ளவராக நம்மை இரட்சித்து நம்பேரில் அவர்  சந்தோஷமாய் மகிழ்ந்து,  நம்மோடு அவர் அமர்ந்திருப்பதையும்  நமது தனிப்பட்ட வாழ்வில் உணர்ந்து கொள்ள முடியும். இத்தகைய மேலான நிலையினை நாம் ஆவிக்குரிய வாழ்வில் அடைந்திடவேண்டும். கிறிஸ்துவோடு நமது ஐக்கியத்தை வலுப்படுத்தும்போது நாம் இதனை உணர்ந்து அனுபவிக்கலாம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   தொடர்புக்கு:- 96889 33712

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,170                                       💚 ஏப்ரல் 23, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." ( யாக்கோபு 5 : 16 )

நமது ஜெபம் தேவனால் கேட்கப்படவேண்டுமானால் தேவன் கூறும் ஒரு நிபந்தனை நாம் பிறரது குற்றங்களை மன்னிக்கவேண்டும் என்பதே. அதாவது பிறருடன் இணக்கமான ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் தேவனிடம் ஜெபிக்கவேண்டும்.  வெறுப்பையும் கசப்பையும் பிறர்மேல் வைத்துக்கொண்டு நாம் ஜெபிப்பது அர்த்தமற்ற ஜெபம். "எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே;" (  லுூக்கா 11 : 4 ) என்று கிறிஸ்து நமக்கு ஜெபிக்கக் கற்றுக்கொடுத்துள்ளார்.

இப்படி பிறர்மேல் எந்தக் கசப்புமின்றி அவர்களுக்காகவும் ஜெபித்து வாழ்பவர்களே நீதிமான்கள் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. இத்தகைய "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது." என்கின்றார் அப்போஸ்தலரான யாக்கோபு. 

இப்படித்தான் தானியேல் தீர்க்கத்தரிசி ஜெபித்துக் கொண்டிருந்தார். தனது பாவங்களுக்காகவும் மக்களது பாவங்களுக்காகவும் தானியேல் விண்ணப்பம் செய்தார். இதனை நாம், "இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்." ( தானியேல் 9 : 20 ) என்று தானியேல் கூறுவதிலிருந்து அறியலாம்.

"நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" என்ற வசனத்தின்படி தானியேல் ஊக்கமாய் "ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, காபிரியேல் தூதன்  வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான். (  தானியேல் 9 : 21 ) என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது தானியேலின் ஜெபம் தேவ சந்நிதியை எட்டிய அதே நொடியில் தேவன் காபிரியேல் தூதன் மூலம் அந்த ஜெபத்துக்குப் பதிலையும் கொடுத்தனுப்பினார். "நீ மிகவும் பிரியமானவன். ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது. நான் அதை அறிவிக்கவந்தேன்;" ( தானியேல் 9 : 23 ) என்று காபிரியேல் தூதன் கூறுகின்றார்.

அன்பானவர்களே, தானியேல் போல நாம் நமக்காகவும் பிறருக்காகவும் ஜெபிக்கும் அதே வேளையில் தானியேலைபோல தேவனுக்கு முன்பாகவும் உலக காரியங்களிலும் குற்றமற்றவர்களாக நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.  ( தானியேல் 6 : 22 )  அப்படி நாம் பரிசுத்தமாய் நம்மைக் காத்துகொண்டு ஜெபிக்கும்போது தேவன் நமது ஜெபங்களுக்குப் பதில் தருவார்.  "நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு" இப்படிச் செய்யுங்கள் என்று இன்றைய தியான  வசனம் கூறுவதுபோல நாம் நமது வியாதிகளிலிருந்தும் , பிரச்சனைகளிலிருந்தும்  விடுதலையடைவோம்.

தானியேலின் ஜெபத்துக்கு ஜெபித்த அதே நேரம்  பதிலளித்த தேவன் நமது ஜெபத்துக்கும் நிச்சயம்  பதிலளிப்பார். ஆம், நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,171                                      💚 ஏப்ரல் 24, 2024 💚 புதன்கிழமை 💚


"விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்." ( கொலோசெயர் 3 : 5, 6 )

மனிதர்களின் உடலின் உறுப்புகளே பல்வேறு பாவங்களுக்கு நேராக மனிதர்களை நடத்துகின்றன.  விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை இவைகளுக்கு நமது கால்களும் கைகளும் கண்களும் காரணமாய் இருக்கின்றன. எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுவதையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் கூறினார்.

"உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்." ( மாற்கு 9 : 43 )

"உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்." ( மாற்கு 9 : 45 )

"உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்." ( மாற்கு 9 : 47 )

இயேசு கிறிஸ்து கூறியது போலவே இன்றைய தியான வசனத்தில், இவைகளை உண்டுபண்ணுகின்ற இந்த உறுப்புகளை அழித்துப்போடுங்கள் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். அழித்துப்போடுங்கள் என்று கூறுவதால் இவைகளை வெட்டி எறிந்துவிடவேண்டுமென்று பொருளல்ல. மாறாக,  இந்த உறுப்புகள் நமக்கு இல்லாதிருக்குமானால் நாம் எப்படி வாழ்வோமோ அதுபோல நாம் வாழவேண்டும் என்று பொருள். பரிசுத்த ஆவியானவர் நம்மில் செயல்புரிந்து இந்த உறுப்புக்கள் பாவத்துக்கு நேராக செயல்படாமல் காத்துக்கொள்ள வேண்டுமென்று பொருள். 

விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை எனும் ஐந்து குறிப்பிட்ட பாவங்களைப்  பட்டியலிட்டு "இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தேவனுடைய பார்வையில் இவைகளே மிகவும் மோசமான பாவங்கள் என்று பொருள். வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது இந்தப் பாவங்களே பலரை அழிவுக்குநேராக இழுத்துச் சென்றதை நாம் அறிந்துகொள்ளலாம். 

எனவே அன்பானவர்களே, நாம் வெறுமனே ஆலய ஆராதனைகளில் கலந்துகொண்டு,  ஜெபித்து பல்வேறு பக்திமுயற்சிகள் செய்தாலும் இந்தப் பாவங்கள் நம்மில் இருக்குமானால் நமது ஆராதனைகளும் பக்திமுயற்சிகளும் வீணானவைகளே. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை." (ரோமர் 12:1) என்று கூறுகின்றார். 

நமது சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து புத்தியுள்ள ஆராதனை செய்து வாழ்வோம். அப்போது, கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் வரும் தேவகோபாக்கினைக்குத் தப்பித்துக்கொள்வோம். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,172                                      💚 ஏப்ரல் 25, 2024 💚 வியாழக்கிழமை 💚


"ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." ( எபிரெயர் 4 : 16 )

நாம் தைரியமாய் ஒரு உயர் அதிகாரியிடம் சென்று நமது பிரச்சனைகளையும் நமது விருப்பங்களையும் கூறவேண்டுமானால் அவரோடு நமக்கு நல்ல உறவு இருக்கவேண்டும். ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரிடம்கூட  சென்று நாம் துணிவுடன் பேச முடியாது. அப்படியிருக்கும்போது நாட்டின் முதலமைச்சரிடமோ பிரதமரிடமோ நாம் எப்படித் துணிவுடன் சென்று பேசமுடியும்? 

ஆனால் அந்த உயர் பதவியில் இருப்பவர் நமது  தகப்பனாராகவோ தாயாகவோ இருந்தால் நாம் துணிவுடன் தைரியமாகச் சென்று பேசுவோம். காரணம் அவர்கள் நம்மைப் பெற்றவர்கள், நம்மைப்பற்றி அறிந்தவர்கள், வீட்டில் நம்மோடு வாழ்ந்து நாம் உண்ணும் உணவை உண்டு, நாம் வீட்டில் அனுபவிக்கும் பிரச்சனைகளை நம்மைப்போல அனுபவித்து வாழ்கின்றவர்கள்.  

இதனையே இன்றைய தியான வசனத்தின் முந்தைய வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." ( எபிரெயர் 4 : 15 )

இப்படி எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருப்பதால் நாம் அவரிடம் துணிவுடன் சென்று பேச முடியும். இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களையும் அவர் ஏற்கெனவே அனுபவித்துள்ளார். அவர் நமது தகப்பனாக, தாயாக இருப்பதால் நம்மைப்பற்றி முற்றிலும் அறிந்திருக்கின்றார். 

எனவே அன்பானவர்களே, முதலில் நாம் தேவனோடுள்ள நமது உறவினைச் சரிசெய்யவேண்டியது அவசியம். அவரோடு ஒரு மகனாக மகளாக உறவுடன் வாழ நம்மை ஒப்புக்கொடுத்து வாழ வேண்டும். அப்படி ஒரு உறவுடன் வாழ்வோமானால் இன்றைய தியான வசனம்  கூறுவதுபோல அவரது இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே நாம் சேர முடியும்.  

பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் என்று கூறியுள்ளபடி நாமும் அவரைப் போலப்  பாவமில்லாதவராக இருக்கவேண்டியது அவசியம். கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும்போதுதான்  பாவ மன்னிப்பைப் பெறுகின்றோம்; அவரோடு ஒப்புரவாகின்றோம். அப்படி தேவனோடு ஒப்புரவாகும்போதுதான்  நாம் அவரது பிள்ளைகளாகின்றோம். அப்படிப் பிள்ளைகளாகும்போது தான் இன்றைய வசனம் கூறுவதுபோல அவரை நெருங்கிட நமக்குத் தைரியம் பிறக்கும். 

எனவே அன்பானவர்களே, நம்மை அவருக்கு ஒப்புவித்து ஜெபிப்போம். அன்பான பரம தகப்பனே, உமக்கு விரோதமாக நான் செய்த பாவங்களுக்காக மெய்யாகவே மனம் வருந்தி மன்னிப்பு  வேண்டுகின்றேன். கல்வாரியில் நீர் சிந்தின உமது பரிசுத்த இரத்தத்தால் என்னைக் கழுவியருளும். உமது  விலையேறப்பெற்ற இரட்சிப்பினை நான் அடைந்திடவும் அதனால் உமது பிள்ளையாகிடவும் வரம்தாரும். உமது  இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் உமது உதவி கிடைக்கும் கிருபையை நான் அடையவும் உதவியருளும். மீட்பர் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே. ஆமென். 

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,173                                     💚 ஏப்ரல் 26, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது."(1 நாளாகமம் 21 : 1)

தேவன் தனது மக்கள் தங்கள் சுய பெலத்தையோ தங்களது செல்வத் திரட்சியையோ நம்பி வாழாமல் தன்னையே முற்றிலும்  நம்பி தன்னையே சார்ந்து வாழவேண்டும் என விரும்புகின்றார்அப்படி வாழ்ந்தவர்தான் தாவீதுஅதுதான் அவரது வளர்ச்சிக்குக்காரணம்ஆனால் இப்போது தாவீதுக்கு ஒரு விபரீதமான  ஆசை சாத்தானால் ஏற்படுகின்றதுராஜாவாகிய தனது கீழ்  எவ்வளவு மக்கள் இருக்கின்றனர் என்பதை அறிய ஒரு ஆசைஇதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம்ஒன்று தனக்குக்கீழ் எவ்வளவு மக்கள் இருக்கின்றனர் என்பதை அறிவதில் ஒரு  அற்பப்பெருமை எண்ணம்இரண்டாவது எதிரிகள் போரிட்டு  வருவார்களென்றால் போருக்குப் போகத்தக்க மக்கள் தன்னிடம் எவ்வளவுபேர் இருக்கின்றார்கள் என்பதை அறிவது.

தனது வாழ்வின் துவக்கமுதல் தேவனையே சார்ந்து வாழ்ந்தவர்தான் தாவீது. ஆடுகளுக்குப் பின்னாகத்திரிந்த ஒரு ஆட்டு இடையன். ஆனால் அவரைத் தேவன் ராஜாவாக உயர்த்தி இஸ்ரவேல்மீதும் யூதாவின் மீதும் ஆட்சிசெய்யவைத்தார். ஆனால், தாவீது இங்கு தனது பழைய விசுவாச நிலையிலிருந்து சற்று பின்வாங்கிவிட்டார். எந்த ஒரு ஆயுதமும் கையில் இல்லாமல் ஒரு கூழாங்கல்லால் மட்டுமே அரக்கன் கோலியாத்தை வெற்றிகொள்ள தேவன் தனக்குத் துணைநின்றதை அவர் இப்போது மறந்துவிட்டார்ஆனால் இன்று தனது பலத்தை அறிய தனது  மக்களை எண்ணிக் கணக்கிடத் துணிந்துவிட்டார்அதாவது  தேவன்மேல் இருந்த பழைய விசுவாசம் அவருக்குக் குறைந்து விட்டதுஇது தேவனது பார்வைக்கு ஆகாத ஒரு செயலாகி விட்டது.

அப்போது அவர் தனது சுய பலத்தை நம்பாமல் தேவனையே நம்பி கோலியாத்தை எதிர்த்தார். "நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்." ( 1 சாமுவேல் 17 : 45 ) என்று அறிக்கையிட்டு கோலியாத்தைக் கொன்றார்

எனவே மக்களைக் கணக்கிடும்படி தாவீது செய்த "இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார்." ( 1 நாளாகமம் 21 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியாளர்கள் செய்யும் தேவனுக்கு விரோதமானச் செயல்களை மக்களையும் பாதிக்கும் என்பது இங்கு உணர்த்தப்படுகின்றது. எனவே தகுந்த ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதில் நாம் கவனமாக இருக்கவேண்டியுள்ளது.

அன்பானவர்களே, தேவன் நமது வாழ்வில் பல அற்புதங்கள் செய்திருக்கலாம், அதிசயமாக நம்மை வழிநடத்தியிருக்கலாம் ஆனால் அப்போது நாம் நமது விசுவாசத்தில் எப்படி இருந்தோம் இப்போது எப்படி இருக்கின்றோம் என்று நம்மை நாமே சோதித்து அறியவேண்டியது அவசியம். தேவன், நாம் அவரையே சார்ந்து வாழவேண்டுமென விரும்புகின்றார். நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பார்த்தோமானால் நாம் விசுவாசத்தைவிட்டு நழுவி விடுவோம்

எனவே சூழ்நிலைகளைப் பார்க்காமல் சூழ்நிலைகளையே மாற்றவல்ல தேவனையே நோக்கிப்பார்க்கவேண்டும். ஒருவேளை சூழ்நிலையை மாற்றாவிட்டால் சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றுவார். இது நம்மைப்பார்க்கும் மற்றவர்களுக்கு அதிசயம்போலத் தெரியும்.

எனவே நூறு சதம் தேவனையே நம்பிவாழும் விசுவாச வரம்வேண்டி தேவனிடம் மன்றாடவேண்டியது நமது கடமை. அதுவே மற்றவர்களிடமிருந்து நம்மைத் தனித்துவம் மிக்கவர்களாக அடையாளம் காட்டும். தேவன்மீது மற்றவர்களும் விசுவாசம்கொள்ள இதுவே வழியாக இருக்கும்.


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   தொடர்புக்கு:- 96889 33712

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,174                                     💚 ஏப்ரல் 27, 2024 💚 சனிக்கிழமை 💚

"என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்" (லூக்கா 7:23)

இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து குறிப்பிடும் இடறல் என்பது நாம் ஏற்கெனவே கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடுகளையும்  போதனைகளையும்தான்.  கிறிஸ்தவ மார்க்கமே நம்பிக்கையின் அடிப்படையிலானதுதான். அந்த நம்பிக்கைக்கு எதிரான, முரணான போதனைகளும் செயல்பாடுகளும் நம்மை கிறிஸ்துவின்மேல் பூரண விசுவாசம் கொள்ளவிடாமல் தடுக்கின்றன. அல்லது இடறச்செய்கின்றன. நாம் நடக்கும்போது வழியில் கிடக்கும் கற்கள் நம்மைச் சிலவேளைகளில் இடறிவிடுகின்றன. அதுபோலவே கிறிஸ்தவ கோட்பாடுகளுக்கு முரணான போதனைகள் விசுவாசிகளை இடறச் செய்கின்றன. 

ஆனால் இயேசு கிறிஸ்து இடறல்கள் வருவது அவசியம் என்றும் கூறினார். காரணம் கிறிஸ்துவின்மேல் உண்மையான  விசுவாசம் கொண்டவர்களுக்கு அந்த இடறல்கள் அவர்களை மேலும் மேலும் விசுவாசத்தில் வளர உதவுகின்றன. விசுவாசத்தின் தந்தை என்று நாம் கூறும் ஆபிரகாமை எடுத்துக்கொள்வோம். அவரது விசுவாசத்துக்கு எதிராக  வந்த இடறல்தான் அவரை விசுவாச வீரனாக்கியது. 

இயேசு கிறிஸ்து கூறினார்,  "இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! "(மத்தேயு 18:7) ஆனால் ஆபிரகாமுக்கு வந்த இடறல் மனிதனால் வந்ததல்ல; மாறாக தேவனே அவரது விசுவாசத்தை நமக்குக் காட்டிட முன்குறித்துச் செய்த செயல் அது. 

இரட்சிப்புக்கு  ஏதில்லாத  வெறும் ஆசீர்வாத போதனைகள் இடறுதலுக்கேதுவானவைகள்; சில தேவையற்ற சடங்காச்சார  வழிபாட்டுமுறைமைகள் இடறுதலுக்கேதுவானவைகள்.   காரணம் அவை கிறிஸ்துவின்மேல் நாம் உறுதியான விசுவாசம் கொள்ளவிடாமல் தடுக்கின்றன. கிறிஸ்துவைவிட உலக செல்வங்களுக்கு முன்னுரிமைகொடுக்க நம்மை அவை தூண்டுகின்றன. ஆனால் இன்று மட்டுமல்ல அப்போஸ்தலரான பவுல் அப்போஸ்தலரின் காலத்திலேயே இப்படிப்பட்ட முரணான இடறலான போதனைகள் பலரால் போதிக்கப்பட்டன.  

எனவேதான் அவர் தனது நிருபத்தில் இதுகுறித்து எச்சரித்து எழுதினார். "சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்." (ரோமர் 16:17) ஆம் அன்பானவர்களே, எனவே, இடறலான போதனைகளைப் போதிப்பவர்களைவிட்டு நாம் விலகிவிடவேண்டும்.

ஒருவர் தவறுதலான இடறலான போதனையைக் கொடுக்கின்றார் என்பதனை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்? அது தேவனோடு நாம் வளர்த்துக்கொள்ளும் தனிப்பட்ட உறவினால்தான் முடியும். வெறுமனே ஆலயங்களுக்குச் சென்று போதகர்கள் போதிப்பதை மட்டும் நாம் கேட்டுக்கொண்டிருந்தால்  போதாது. நாம் தேவனோடு நமது தனிப்பட்ட உறவினை வளர்த்துக் கொள்ளவேண்டும். அப்படி கொள்ளும்போதுதான் ஆவியானவர் நமக்குச் சரியான வழியைக் காட்டுவார்.  

"எப்பொருள் யார்யார்வாய்க்  கேட்பினும் - அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று வள்ளுவரும் கூறியுள்ளார். எனவே அன்பானவர்களே, யார் போதிக்கின்றார்கள் என்று பார்க்கவேண்டாம். அவர் எத்தனை பெரிய கூட்டம் சேர்க்கும் பிரசங்கியாக இருந்தாலும் அப்படியே ஒருவர் கூறுவதைக் கேட்டு நம்பவேண்டாம்.  ஆவியானவர் தரும் வெளிச்சத்தில் வேத வசனங்களின் மெய்ப்பொருளைக் கண்டுகொள்வோம். அப்போது நாம் இடறமாட்டோம். "என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்"என்று இயேசு கிறிஸ்து கூறியபடி இடறலற்றவர்களாக இருந்து பாக்யவான்களாக வாழ்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   தொடர்புக்கு:- 96889 33712

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,175                                     💚 ஏப்ரல் 28, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்." ( எபேசியர் 5 : 30 )

திருச்சபை என்று நாம் கூறுவது உலகிலுள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைப்பிரிவுகளைக் குறிப்பதாக இருந்தாலும்  வேத அடிப்படையில் திருச்சபை என்பது விசுவாசிகளின் கூட்டத்தைக் குறிக்கின்றது. கூட்டம் என்று சொல்வதால் பெரிய எண்ணிக்கையாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. இரண்டு மூன்று விசுவாசிகள் சேர்ந்திருந்தாலும் அது ஒரு சபை.  இப்படி கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு சபையாக வாழும் நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

அப்போஸ்தலரான பவுல் கிறிஸ்துவுக்கும் விசுவாசிகளான சபைக்குமுள்ள உறவினை கணவன் மனைவி உறவுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். கணவனும் மனைவியும் தகப்பனையும் தாயையும் விட்டுப் பிரிந்து அவர்களுக்குள் ஒரே உறவாக இருப்பார்கள். அதுபோல கிறிஸ்தவ விசுவாசியும் அதுவரை வாழ்ந்த உலக வாழ்க்கையைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவோடு ஐக்கியமாக வாழவேண்டும் என்கின்றார். 

இதனையே, "இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்." ( எபேசியர் 5 : 31, 32 ) என்று கூறுகின்றார். 

எபேசியர் ஐந்தாம் அதிகாரத்தில் அப்போஸ்தலரான பவுல் கணவன் மனைவிக்குமுள்ள உறவினை திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள ஐக்கியத்துக்கு ஒப்பிட்டுப் பல காரியங்களைக் கூறுகின்றார். அவர் கூறும் காரியங்கள் குடும்ப வாழ்க்கைக்கும் பொருந்தும் சபைக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவுக்கும் பொருந்தும்.

இப்படி அவர் கூறும் முக்கியமானஒரு காரியம், "தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்." ( எபேசியர் 5 : 29 ) இந்த உலகினில் கணவன் மனைவியைப் பராமரித்துக் காப்பாற்றுகின்றான். அதுபோல கிறிஸ்துவின் சபையை பாராமரித்துக் காப்பவர் ஊழியர்களோ விசுவாசிகளோ அல்ல. மாறாக, கர்த்தர். கர்த்தர் எப்படி தனது சபையினைக் காப்பாற்றி பராமரித்து நடத்துகின்றாரோ அதுபோல கணவனும் மனைவியைக் காத்து நடத்தவேண்டும்.

இன்றைய தியான வசனம் கூறுவது இரண்டு விதங்களில் பொருந்தக்கூடியது. ஒன்று குடும்ப உறவு. இரண்டு கிறிஸ்துவுக்கும் சபைக்குமுள்ள உறவு. இந்த உறவுபடி  கணவனும் மனைவியும் உறவோடு இருக்கவேண்டும். அதே உறவோடு விசுவாசிகள் கிறிஸ்துவோடு உறவுடன் இருக்கவேண்டும். காரணம் நாம் அனைவருமே அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.

கணவன் மனைவி உறவினை அப்போஸ்தலராகிய பவுல் இங்கு முன்னிலைப்படுத்துவதுபோல சில இடங்களில் குறிப்பிட்டாலும் சபையாகிய விசுவாசிகளுக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவையே முக்கியமாக அவர் தெளிவுபடுத்த முயலுகின்றார். எனவேதான் அவர், "இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்." என்று முடிக்கின்றார்.  

அன்பானவர்களே, தகப்பனையும் தாயையும் விட்டுப்பிரிந்து கணவன் மனைவியாக இணைந்து வாழ்வதுபோல உலக ஆசை இச்சைகளை விட்டுப் பிரிந்து எந்தச் சூழ்நிலையிலும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்திடாமல் வாழவே நாம்  அழைக்கப்பட்டுள்ளோம்.   ஆம், நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,176                                     💚 ஏப்ரல் 29, 2024 💚 திங்கள்கிழமை 💚

"கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்தேயு 17:20) 

இன்றைய தியான வசனம் பலருக்கும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கின்றது. இந்த உலகினில் கோடிக்கணக்கான விசுவாசிகள் இருக்கின்றனரே, அப்படியானால் ஒருவரிடம் கூடவா கடுகளவு விசுவாசம் இல்லாமலிருக்கின்றது என்று எண்ணிக்கொள்கின்றனர். பின்னர் ஏன் இயேசு கிறிஸ்து கூறியதுபோன்று  எவராலும் மலையை அசைக்கமுடியவில்லை என்றும்  எண்ணிக்கொள்கின்றனர். 

இன்றைய வசனம்,  நாம் தேவனைப் பற்றும் விசுவாசத்தால் எந்த வல்ல செயலையும்  செய்ய முடியும் என்பதனை வலியுறுத்த இயேசு கிறிஸ்து கூறியது. மலையைப் பெயர்த்து அப்புறப்படுத்த இயேசு கூறவில்லை. இப்படி நடக்குமானால் உலகினில் வேடிக்கையான குழப்பமான சூழ்நிலையே ஏற்படும். ஹிமாச்சல பிரதேசத்தில் வசிக்கும் விசுவாசி இமயமலையைப் பெயர்த்து கன்னியாகுமரிக்கு அனுப்புவார். கன்னியாகுமரி விசுவாசி இங்குள்ள மலையை சென்னைக்குப் போ என  அனுப்புவார். உலகமே திக்குமுக்காடிப்போகும். 

வேதாகம வசனங்களை நாம் ஆவிக்குரிய பொருளில்தான் பார்க்கவேண்டும். கடுகளவு விசுவாசம் என்பது கிறிஸ்துவை நம்புவதாக இருக்கலாம் அல்லது அவர்மேலுள்ள நம்பிக்கையை ஏதாவது சிறு செயல்மூலம் நாம் வெளிப்படுத்துவதில் இருக்கலாம். அப்படி நாம் நமது விசுவாசத்தை வெளிப்படுத்தும்போது மலைபோன்ற பெரிய தடைகள் நம்மைவிட்டு அகலும். 

எனது சாட்சியைக்குறித்து பல முறை நான் குறிப்பிட்டுள்ளேன். கடவுள் நம்பிக்கையே இல்லாமலிருந்தபோது ஒரு சகோதரன் என்னை வற்புறுத்தி அழைத்ததால் வேறு வழியின்றி அவருடன் ஜெபிக்கச் சென்றேன். அன்பானவர்களே, அப்படி நான் வேறு வழியில்லாமல் அவர் வற்புறுத்தி அழைத்ததால் அவருடன் சென்றேன். அப்படி நான் சென்றதுதான் கடுகளவு விசுவாசம். அதாவது நான் எனது விசுவாசத்தை அன்று வாயினால் அறிக்கையிடாவிட்டாலும் அவருடன் ஜெபிக்க ஒத்துக்கொண்டு சென்றதன்மூலம் வெளிப்படுத்தினேன், அந்தக் கடுகளவு விசுவாசம் மலைபோன்ற இருளை என்னைவிட்டு அகற்றியது.      

இதுபோல என்னை வற்புறுத்தி ஜெபத்துக்கு அழைத்துச்சென்ற அந்தச் சகோதரனின்  விசுவாசமும் பலன் தந்தது. ஆம், கிறிஸ்து எனக்குத் தன்னை வெளிப்படுத்தி பாவமன்னிப்பு அளிப்பார் என்று அவர் நம்பியிருந்தார். அந்தச் சகோதரனின் விசுவாசத்தை தேவன் கனம் பண்ணினார்.  

அவிசுவாசம், இருளான வாழ்க்கைச்சூழல், தீராத நோய்கள், குடும்பப் பிரச்சனைகள், பாவச் செயல்பாடுகள்  இவைகளெல்லாம் நம்மைச் சுற்றி இருக்கும் மலைகள். கடுகளவு விசுவாசத்தோடு கிறிஸ்துவைநோக்கி நாம் பார்ப்போமானால் இந்த மலைகள் நம்மைவிட்டு அப்புறப்படுத்தப்படும். "உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்று இயேசு கிறிஸ்து கூறியது ஆவிக்குரிய அர்த்தத்தில்தான். 

ஆனால் நாம் ஆவிக்குரிய அனுபவங்களில் வளர வளர உலக காரியங்களிலும் நாம் வல்ல செயல்கள் செய்யமுடியும். ஆனால் மந்திரவாதிகள்போல அற்புதம்செய்து மற்றவர்களை நம் பக்கமாகத் திருப்ப இயேசு கிறிஸ்து சொல்லவில்லை. கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொள்வோம். நமது மற்றும் நம்மைச் சார்ந்தவர்களது ஆவிக்குரிய வாழ்வில் உள்ள மலைகளை நாம் இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,177                                    💚 ஏப்ரல் 30, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்." (நீதிமொழிகள் 16: 5 )

மனிதர்கள் வாழ்வில் தங்களைவிட்டு கண்டிப்பாக நீக்கவேண்டிய குணம் பெருமை அல்லது அகந்தை. பெருமையுள்ளவன் வாழ்வில் செழிப்பதுபோலத் தெரிந்தாலும் அவன் முடிவு பரிதாபகரமானதாக இருக்கும். எனவே வேதம் பெருமை குணத்தை நம்மைவிட்டு அகற்றிட அறிவுறுத்துகின்றது. உலகில் நல்லவர்களாக வெளிப்பார்வைக்குத் தெரியும் பலரும் பொய்யையும் நீதியற்றச் செயல்களையும் பலவேளைகளில் செய்கின்றனர். காரணம் பெருமைக்கு அடிமையாவதே. பெருமை, அகந்தை இவை மனிதனை எந்த அவலட்சணமானச் செயலையும் செய்யத்தூண்டும். பெருமைக்கு அடிமையானவன் நல்லவனாக இருக்க முடியாது. எனவேதான் வேதம், "பெருமையுள்ளவனுக்கு தேவன் எதிர்த்துநிற்கின்றார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 ) என்று கூறுகின்றது.

உங்கள் ஊர்களில் கூட இத்தகைய பெருமையுள்ள மனிதர்களை நீங்கள் சந்தித்திருக்கலாம். கல்லூரிப் பேராசிரியர்கள், வங்கி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் பலர் ஏதோ உலகமே இவர்கள் கைவசம்போல எண்ணிக்கொண்டு செயல்படுவதை பார்த்திருக்கலாம். இது தவிர, பிரதமர்கள், அமைச்சர்கள், முதலமைச்சராக இருப்பவர்கள், இருந்தவர்கள் இவர்களது பெருமை, அகந்தை இறுமாப்பு இவைகளையும் நாம் பார்த்திருக்கின்றோம்.

"தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்." ( லுூக்கா 1 : 51 ) என்ற வசனத்தின்படி தேவன் அவர்களைச் சிதறடித்ததனால் அவர்களில் பலருக்கு ஏற்பட்ட அலங்கோல முடிவுகளையும் நாம் கண்டிருக்கின்றோம். ஆம் தேவன் அகந்தையுள்ளவர்களை எப்போதும் விட்டுவைக்கமாட்டார்.

அற்பமான உலகப் பதவிகளுக்கே மனிதர்கள் இந்தப்பெருமை பாராட்டுகிறார்கள், ஆனால் இந்த அண்டசராசரங்களைப் படைத்த தேவன் எவ்வளவு தாழ்மையுள்ளவராக இருந்தார் என்பதை நாம் வேதாகமத்தைப் படித்தால் புரியும். தனது சீடர்களின் பாதங்களைக் கழுவியது ஒரு சிறிய சான்று. அப்போஸ்தலரான பவுல் அவரதுத் தாழ்மையைக் குறித்துச் சுருக்கமாகப் பின்வறுமாறு கூறுகின்றார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடினப் பொருளாய் எண்ணாமல் தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார்." (பிலிப்பியர் 2 : 6, 7)

அன்பானவர்களே, இப்படி அடிமை நிலைக்குத் தன்னைத் தாழ்த்தி தாழ்மைக்கு முன்னுதாரணமாக இருக்கும் தேவன் எப்படி பெருமையுள்ளவர்களை ஆதரிக்கமுடியும்?

வாழ்வில் எவ்வளவோ சம்பாதித்தும் நிம்மதியில்லை, செழிப்பு இல்லை, பிள்ளைகளுடைய வாழ்வு சரியில்லை என்பதுபோன்ற மனக்கவலைகளுடன் இருக்கும் அன்பானவர்களே, உங்கள் வாழ்வை எண்ணிப்பாருங்கள், உங்கள் அகந்தையானச் செயல்களால் யாரையாவது அற்பமாய் எண்ணியிருந்தால் அல்லது அவர்கள் மனம் நோக்கச் செய்திருந்தால் தேவனிடம் மன்னிப்பு வேண்டுங்கள். ".....அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும்." ( தானியேல் 4 : 37 ) அதேபோலத் தாழ்மையுள்ளவர்களை உயர்த்தவும் அவராலே கூடும்.

ஆம், மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் (அதாவது, கைகளைச் சேர்த்துக்  குவித்து ஜெபித்தாலும்) அவன் தண்டனைக்குத் தப்பான்.

Monday, April 29, 2024

மனமேட்டிமை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,177     💚 ஏப்ரல் 30, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்." (நீதிமொழிகள் 16: 5 )

மனிதர்கள் வாழ்வில் தங்களைவிட்டு கண்டிப்பாக நீக்கவேண்டியகுணம் பெருமை அல்லது அகந்தைபெருமையுள்ளவன் வாழ்வில்செழிப்பதுபோலத் தெரிந்தாலும் அவன் முடிவு  பரிதாபகரமானதாக இருக்கும்எனவே வேதம் பெருமை  குணத்தை நம்மைவிட்டு அகற்றிட அறிவுறுத்துகின்றதுஉலகில் நல்லவர்களாக வெளிப்பார்வைக்குத் தெரியும் பலரும்  பொய்யையும் நீதியற்றச் செயல்களையும் பலவேளைகளில்  செய்கின்றனர்காரணம் பெருமைக்கு அடிமையாவதேபெருமை,அகந்தை இவை மனிதனை எந்த அவலட்சணமானச்  செயலையும் செய்யத்தூண்டும்பெருமைக்கு அடிமையானவன்  நல்லவனாக இருக்க முடியாதுஎனவேதான் வேதம், "பெருமையுள்ளவனுக்கு தேவன் எதிர்த்துநிற்கின்றார்,    தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 ) என்று கூறுகின்றது.

உங்கள் ஊர்களில் கூட இத்தகைய பெருமையுள்ள மனிதர்களை நீங்கள்  சந்தித்திருக்கலாம்கல்லூரிப் பேராசிரியர்கள்வங்கி  அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் பலர் ஏதோ  உலகமே இவர்கள் கைவசம்போல எண்ணிக்கொண்டு  செயல்படுவதை பார்த்திருக்கலாம்இது தவிர, பிரதமர்கள், அமைச்சர்கள்முதலமைச்சராக இருப்பவர்கள்இருந்தவர்கள் இவர்களது பெருமைஅகந்தை இறுமாப்பு  இவைகளையும் நாம் பார்த்திருக்கின்றோம்.

"தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்." ( லுூக்கா 1 : 51 ) என்ற வசனத்தின்படி தேவன் அவர்களைச் சிதறடித்ததனால்  அவர்களில் பலருக்கு ஏற்பட்ட அலங்கோல முடிவுகளையும் நாம் கண்டிருக்கின்றோம்ஆம் தேவன் அகந்தையுள்ளவர்களை எப்போதும்   விட்டுவைக்கமாட்டார்.

அற்பமான உலகப் பதவிகளுக்கே மனிதர்கள் இந்தப்பெருமை  பாராட்டுகிறார்கள்ஆனால் இந்த அண்டசராசரங்களைப்  படைத்த தேவன் எவ்வளவு தாழ்மையுள்ளவராக இருந்தார்  என்பதை நாம் வேதாகமத்தைப் படித்தால் புரியும்தனது  சீடர்களின் பாதங்களைக் கழுவியது ஒரு சிறிய சான்றுஅப்போஸ்தலரான பவுல் அவரதுத் தாழ்மையைக் குறித்துச்  சுருக்கமாகப் பின்வறுமாறு கூறுகின்றார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச்  சமமாயிருப்பதைக் கொள்ளையாடினப் பொருளாய் எண்ணாமல்தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து  மனுஷர் சாயலானார்." (பிலிப்பியர் 2 : 6, 7)

அன்பானவர்களேஇப்படி அடிமை நிலைக்குத் தன்னைத்  தாழ்த்தி தாழ்மைக்கு முன்னுதாரணமாக இருக்கும் தேவன் எப்படிபெருமையுள்ளவர்களை ஆதரிக்கமுடியும்?

வாழ்வில் எவ்வளவோ சம்பாதித்தும் நிம்மதியில்லைசெழிப்பு   இல்லைபிள்ளைகளுடைய வாழ்வு சரியில்லை என்பதுபோன்ற  மனக்கவலைகளுடன் இருக்கும் அன்பானவர்களேஉங்கள்  வாழ்வை எண்ணிப்பாருங்கள்உங்கள் அகந்தையானச்  செயல்களால் யாரையாவது அற்பமாய் எண்ணியிருந்தால்  அல்லது அவர்கள் மனம் நோக்கச் செய்திருந்தால் தேவனிடம்   மன்னிப்பு வேண்டுங்கள். ".....அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும்அவருடைய  வழிகள் நியாயமுமானவைகள்அகந்தையாய் நடக்கிறவர்களை தாழ்த்த அவராலே ஆகும்." ( தானியேல் 4 : 37 ) அதேபோலத் தாழ்மையுள்ளவர்களை உயர்த்தவும் அவராலே  கூடும்.

ஆம்மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு  அருவருப்பானவன்கையோடே கைகோர்த்தாலும் (அதாவது, கைகளைச் சேர்த்துக்  குவித்து ஜெபித்தாலும்) அவன் தண்டனைக்குத் தப்பான்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Sunday, April 28, 2024

கடுகுவிதையளவு விசுவாசம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,176      💚 ஏப்ரல் 29, 2024 💚 திங்கள்கிழமை 💚



"கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்தேயு 17:20) 

இன்றைய தியான வசனம் பலருக்கும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கின்றது. இந்த உலகினில் கோடிக்கணக்கான விசுவாசிகள் இருக்கின்றனரே, அப்படியானால் ஒருவரிடம் கூடவா கடுகளவு விசுவாசம் இல்லாமலிருக்கின்றது என்று எண்ணிக்கொள்கின்றனர். பின்னர் ஏன் இயேசு கிறிஸ்து கூறியதுபோன்று  எவராலும் மலையை அசைக்கமுடியவில்லை என்றும்  எண்ணிக்கொள்கின்றனர். 

இன்றைய வசனம்,  நாம் தேவனைப் பற்றும் விசுவாசத்தால் எந்த வல்ல செயலையும்  செய்ய முடியும் என்பதனை வலியுறுத்த இயேசு கிறிஸ்து கூறியது. மலையைப் பெயர்த்து அப்புறப்படுத்த இயேசு கூறவில்லை. இப்படி நடக்குமானால் உலகினில் வேடிக்கையான குழப்பமான சூழ்நிலையே ஏற்படும். ஹிமாச்சல பிரதேசத்தில் வசிக்கும் விசுவாசி இமயமலையைப் பெயர்த்து கன்னியாகுமரிக்கு அனுப்புவார். கன்னியாகுமரி விசுவாசி இங்குள்ள மலையை சென்னைக்குப் போ என  அனுப்புவார். உலகமே திக்குமுக்காடிப்போகும். 

வேதாகம வசனங்களை நாம் ஆவிக்குரிய பொருளில்தான் பார்க்கவேண்டும். கடுகளவு விசுவாசம் என்பது கிறிஸ்துவை நம்புவதாக இருக்கலாம் அல்லது அவர்மேலுள்ள நம்பிக்கையை ஏதாவது சிறு செயல்மூலம் நாம் வெளிப்படுத்துவதில் இருக்கலாம். அப்படி நாம் நமது விசுவாசத்தை வெளிப்படுத்தும்போது மலைபோன்ற பெரிய தடைகள் நம்மைவிட்டு அகலும். 

எனது சாட்சியைக்குறித்து பல முறை நான் குறிப்பிட்டுள்ளேன். கடவுள் நம்பிக்கையே இல்லாமலிருந்தபோது ஒரு சகோதரன் என்னை வற்புறுத்தி அழைத்ததால் வேறு வழியின்றி அவருடன் ஜெபிக்கச் சென்றேன். அன்பானவர்களே, அப்படி நான் வேறு வழியில்லாமல் அவர் வற்புறுத்தி அழைத்ததால் அவருடன் சென்றேன். அப்படி நான் சென்றதுதான் கடுகளவு விசுவாசம். அதாவது நான் எனது விசுவாசத்தை அன்று வாயினால் அறிக்கையிடாவிட்டாலும் அவருடன் ஜெபிக்க ஒத்துக்கொண்டு சென்றதன்மூலம் வெளிப்படுத்தினேன், அந்தக் கடுகளவு விசுவாசம் மலைபோன்ற இருளை என்னைவிட்டு அகற்றியது.      

இதுபோல என்னை வற்புறுத்தி ஜெபத்துக்கு அழைத்துச்சென்ற அந்தச் சகோதரனின்  விசுவாசமும் பலன் தந்தது. ஆம், கிறிஸ்து எனக்குத் தன்னை வெளிப்படுத்தி பாவமன்னிப்பு அளிப்பார் என்று அவர் நம்பியிருந்தார். அந்தச் சகோதரனின் விசுவாசத்தை தேவன் கனம் பண்ணினார்.  

அவிசுவாசம், இருளான வாழ்க்கைச்சூழல், தீராத நோய்கள், குடும்பப் பிரச்சனைகள், பாவச் செயல்பாடுகள்  இவைகளெல்லாம் நம்மைச் சுற்றி இருக்கும் மலைகள். கடுகளவு விசுவாசத்தோடு கிறிஸ்துவைநோக்கி நாம் பார்ப்போமானால் இந்த மலைகள் நம்மைவிட்டு அப்புறப்படுத்தப்படும். "உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்று இயேசு கிறிஸ்து கூறியது ஆவிக்குரிய அர்த்தத்தில்தான். 

ஆனால் நாம் ஆவிக்குரிய அனுபவங்களில் வளர வளர உலக காரியங்களிலும் நாம் வல்ல செயல்கள் செய்யமுடியும். ஆனால் மந்திரவாதிகள்போல அற்புதம்செய்து மற்றவர்களை நம் பக்கமாகத் திருப்ப இயேசு கிறிஸ்து சொல்லவில்லை. கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொள்வோம். நமது மற்றும் நம்மைச் சார்ந்தவர்களது ஆவிக்குரிய வாழ்வில் உள்ள மலைகளை நாம் இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Saturday, April 27, 2024

கணவன் மனைவியாக இணைந்து வாழ்வதுபோல

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,175      💚 ஏப்ரல் 28, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்." ( எபேசியர் 5 : 30 )

திருச்சபை என்று நாம் கூறுவது உலகிலுள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைப்பிரிவுகளைக் குறிப்பதாக இருந்தாலும்  வேத அடிப்படையில் திருச்சபை என்பது விசுவாசிகளின் கூட்டத்தைக் குறிக்கின்றது. கூட்டம் என்று சொல்வதால் பெரிய எண்ணிக்கையாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. இரண்டு மூன்று விசுவாசிகள் சேர்ந்திருந்தாலும் அது ஒரு சபை.  இப்படி கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு சபையாக வாழும் நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

அப்போஸ்தலரான பவுல் கிறிஸ்துவுக்கும் விசுவாசிகளான சபைக்குமுள்ள உறவினை கணவன் மனைவி உறவுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். கணவனும் மனைவியும் தகப்பனையும் தாயையும் விட்டுப் பிரிந்து அவர்களுக்குள் ஒரே உறவாக இருப்பார்கள். அதுபோல கிறிஸ்தவ விசுவாசியும் அதுவரை வாழ்ந்த உலக வாழ்க்கையைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவோடு ஐக்கியமாக வாழவேண்டும் என்கின்றார். 

இதனையே, "இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்." ( எபேசியர் 5 : 31, 32 ) என்று கூறுகின்றார். 

எபேசியர் ஐந்தாம் அதிகாரத்தில் அப்போஸ்தலரான பவுல் கணவன் மனைவிக்குமுள்ள உறவினை திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள ஐக்கியத்துக்கு ஒப்பிட்டுப் பல காரியங்களைக் கூறுகின்றார். அவர் கூறும் காரியங்கள் குடும்ப வாழ்க்கைக்கும் பொருந்தும் சபைக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவுக்கும் பொருந்தும்.

இப்படி அவர் கூறும் முக்கியமானஒரு காரியம், "தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்." ( எபேசியர் 5 : 29 ) இந்த உலகினில் கணவன் மனைவியைப் பராமரித்துக் காப்பாற்றுகின்றான். அதுபோல கிறிஸ்துவின் சபையை பாராமரித்துக் காப்பவர் ஊழியர்களோ விசுவாசிகளோ அல்ல. மாறாக, கர்த்தர். கர்த்தர் எப்படி தனது சபையினைக் காப்பாற்றி பராமரித்து நடத்துகின்றாரோ அதுபோல கணவனும் மனைவியைக் காத்து நடத்தவேண்டும்.

இன்றைய தியான வசனம் கூறுவது இரண்டு விதங்களில் பொருந்தக்கூடியது. ஒன்று குடும்ப உறவு. இரண்டு கிறிஸ்துவுக்கும் சபைக்குமுள்ள உறவு. இந்த உறவுபடி  கணவனும் மனைவியும் உறவோடு இருக்கவேண்டும். அதே உறவோடு விசுவாசிகள் கிறிஸ்துவோடு உறவுடன் இருக்கவேண்டும். காரணம் நாம் அனைவருமே அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.

கணவன் மனைவி உறவினை அப்போஸ்தலராகிய பவுல் இங்கு முன்னிலைப்படுத்துவதுபோல சில இடங்களில் குறிப்பிட்டாலும் சபையாகிய விசுவாசிகளுக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவையே முக்கியமாக அவர் தெளிவுபடுத்த முயலுகின்றார். எனவேதான் அவர், "இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்." என்று முடிக்கின்றார்.  

அன்பானவர்களே, தகப்பனையும் தாயையும் விட்டுப்பிரிந்து கணவன் மனைவியாக இணைந்து வாழ்வதுபோல உலக ஆசை இச்சைகளை விட்டுப் பிரிந்து எந்தச் சூழ்நிலையிலும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்திடாமல் வாழவே நாம்  அழைக்கப்பட்டுள்ளோம்.   ஆம், நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்