இதனையே, "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 ) எனக் கூறப்பட்டுள்ளது.
அதாவது இன்றைய வசனம் நமக்குக் கூறுவது, கட்டளைகள் என்பவை வெறுமனே எவை எவை பாவம் என்பதை மட்டும் நமக்கு உணர்ந்துகின்றது. உதாரணமாக நாம் சாலையில் செல்லும்போது சிக்னல் பகுதிகளில் சிகப்பு, பச்சை, ஆரஞ்சு விளக்குகள் எரிந்து நம்மை எச்சரிக்கும். அவைகளைக் கவனித்து நாம் செல்லவேண்டும். இல்லையானால் விபத்துதான் ஏற்படும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு சிறந்த ஓட்டுநராக இருந்து வாழ்க்கைச் சாலையில் பாதுகாப்பாக நாம் பயணிக்க உதவிடுவார்.
அதனையே வேதாகமம் ஆவியினால் நடத்தப்படுதல் என்று கூறுகின்றது. "ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல." ( கலாத்தியர் 5 : 18 ) ஆம் , பரிசுத்த ஆவியானவர் நம்மை நடத்திடும்போது நாம் கட்டளைகளுக்குக் கீழ்பட்டவர்களல்ல; மாறாக அவருக்கு ஆட்பட்டவர்கள்.
ஆம் அன்பானவர்களே, பாவத்தை அறிகிற அறிவு மட்டுமே நியாயப்பிரமாணத்தினால் வருகிறது. எனவே, திருச்சட்டம் சார்ந்த செயல்களால் நாம் கடவுள் முன்னிலையில் ஏற்புடையவர் ஆவதில்லை. மனிதர்கள் பாவிகள் என்பதையே சட்டம் அவர்களுக்கு உணர்த்துகின்றது. எனவே நம்மை நாம் பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலுக்கு ஒப்புவிக்கவேண்டும். அப்படி ஆவியினால் நடத்தப்படுவோமானால் நாம் திருச்சட்டத்துக்குக் (நியாயப்பிரமாணத்திற்குக்) கீழ்ப்பட்டவர்களல்ல.
"நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்." ( சங்கீதம் 119 : 11 )
கர்த்தருடைய வேதத்தை நாம் நேசித்து வாசிக்கவேண்டியதன் அவசியத்தை இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது, நாம் தேவனுடைய வேதத்தை வாசிக்கும்போதுதான் தேவனது வார்த்தைகளை நாம் அறியமுடியும். அப்படி அறியும்போதுதான் நாம் அவற்றை பாதுகாக்க முடியும்.
இன்றைய தியான வசனத்தில் சங்கீத ஆசிரியர் தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு அவரது வார்த்தைகளை தனது இருதயத்தில் வைத்து வைத்தேன் என்கின்றார். அதாவது தேவனது வார்த்தைகள்மேலிருந்த அன்பால் அவரது வார்த்தைகளை இருதயத்தில் பாதுகாத்து வைத்துள்ளேன் என்கின்றார்.
இன்று மனிதர்களாகிய நாம் நமது இருதயத்தில் எவற்றை சேமித்து வைக்கின்றோம்? தேவையற்ற வார்த்தைகள், திரைப்படப் பாடல்கள், பிறர் நம்மைப்பற்றி கூறிய தகாத வார்த்தைகள் இவற்றைத்தான் பெரும்பாலும் சேர்த்து வைக்கின்றோம். இப்படி நமது இருதயம் தேவையற்ற பொருட்களால் நிரப்பும்போது அவைதான் நம்மிடமிருந்து வெளிவரும்.
இதனையே, "நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்." ( லுூக்கா 6 : 45 ) என்றார் இயேசு கிறிஸ்து. தேவையற்றவைகளால் நமது இருதயம் நிரப்பும்போது தேவையற்ற வார்த்தைகளை நமது வாய் பேசும்.
உலக செல்வங்களை நாம் பணப்பெட்டியில் சேகரித்து வைக்கும்போது நமது உலக காரியங்களுக்கு அவை உதவுவதைப்போல தேவனுடைய வார்த்தைகளை நாம் இருதயமாகிய பெட்டகத்தில் சேர்த்து வைப்போமானால் நாம் பாவம்செய்யாதபடிக்கு அவை நமது ஆத்துமாவுக்கு காவலாக அமையும். ஆனால் ஒன்று, உலக செல்வங்கள் அழிந்துபோகலாம், திருட்டுப்போகலாம் ஆனால் நமது இருதயங்களில் சேர்த்து வைத்த தேவ வார்த்தைகள் என்றுமே அழிவுறாது.
அன்பானவர்களே, இன்றைய தியான வசன அதிகாரத்தின் துவக்கத்தில் சங்கீத ஆசிரியர், "கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்." ( சங்கீதம் 119 : 1 - 3 ) என்று கூறுகின்றார். அதாவது, கர்த்தரது வேதத்தின் சாட்சிகளைக் கவனித்து வாழ்வோமானால், நாம் அநியாயம் செய்யாமல் அவரது வழிகளில் நடகிறவர்களாக இருப்போம்.
நாம் தினசரி வேதாகமத்தை வாசிக்கவேண்டியதன் அவசியம் இதனால்தான். நாம் அவற்றை வாசிக்க வாசிக்க அவை நமது இருதயத்தில் பதியும். நாம் தேவனுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, அந்த வார்த்தைகள் நம்மைக் காத்துக்கொள்ளும். தினசரி வேதாகமத்தை வாசிக்கும்போது நாம் மேலும் மேலும் மெருகடைந்து பரிசுத்தமாகின்றோம்.
ஆதவன் 🔥 936🌻 ஆகஸ்ட் 21, 2023 திங்கள்கிழமை
"அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யானபொருளை ஒப்புவிப்பார்கள்?" ( லுூக்கா 16 : 11 )
மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவருக்குச் சொந்தமாக பலத் தொழில் நிறுவனங்கள் இருந்தன. அவருக்கு ஒரேஒரு சிறிய மகன் இருந்தான். அவனுக்குப் பத்து அல்லது பதினோரு வயதுதான் இருக்கும். மனைவி அதிகம் படிப்பறிவில்லாதவள். நன்றாகச் சென்றுகொண்டிருந்த அவரது வாழ்வில் கொடிய நோய் பெரிய இடியாகத் தாக்கியது. மருத்துவர் அந்தத் தொழிலதிபரிடம், "நீங்கள் முன்புபோல அதிகம் உழைக்கக்கூடாது......உங்களுக்கு நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு மேலோட்டமாக தொழிலைக் கவனித்துக்கொள்ளுங்கள்" என்று அறிவுரைக் கூறினார்.
மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பிய அவர் பல்வேறு முறையில் சிந்தித்துவிட்டு ஒரு முடிவுடன் தனது அலுவலகத்துக்குச் சென்றார். அனைத்து முக்கியப் பணியாளர்களையும் அழைத்து அவர்களுடன் பேசி, மருத்துவர் கூறிய அறிவுரையின்படி அவர்களில் ஒருவரை நிறுவனத்துக்குத் தலைவராக ஏற்படுத்தப் போவதாகக் கூறினார். அங்கிருந்த பலர் அவர் தங்களைத்தான் பொறுப்பில் அமர்த்துவார் என எண்ணிக்கொண்டனர்.
ஆனால் அந்தத் தொழிலதிபர் அந்தப் பணியாளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அவரிடம் வெறும் பன்னிரெண்டாயிரம் மாதச் சம்பளம் பெறும் கணக்கியல் துறை ஊழியர் ஒருவரை அந்தப் பொறுப்புக்குத் தான் ஏற்படுத்தப்போவதாக அறிவித்தார். எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆம், அந்த மனிதரின் உண்மை, நேர்மை, கடின உழைப்பை அந்த நிறுவன உரிமையாளர் பல்வேறு சமயங்களில் கவனித்துள்ளார். அவரால்தான் தனது நிறுவனங்களையும் தன்னையும் ஏமாற்றாமல் உண்மையாக நடத்திடமுடியும் என்று அவர் நிதானித்திருந்தார். வெறும் பன்னிரெண்டாயிரம் மாதச் சம்பளம் பெற்றுவந்த அந்த நபர் ஒரே நாளில் மிக உயர்ந்த பதவியை அடைந்தார். மிக அதிக சம்பளம், தனி வீடு, கார், உதவியாளர்கள் என அவர் அந்த முதலாளியால் உயர்த்தப்பட்டார். காரணம் அவரிடமிருந்த உண்மை.
இதனையே இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்து "அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யானபொருளை ஒப்புவிப்பார்கள்?" என்று கூறுகின்றார். ஆம், உலகப் பொருட்களில் உண்மையாயிருந்த அந்த மனிதனிடம் பெருமைமிகு பதவி ஒப்படைக்கப்பட்டது.
மொர்தெகாயின் உயர்வுக்குக் காரணம் அவரது உண்மை. வாயில்காப்போனாக இருந்தபோதும் அந்தப் பொறுப்பில் உண்மையாயிருந்தார். ராஜாவைக் கொலைசெய்ய முயன்றவர்களை ராஜாவுக்கு அடையாளம் காட்டினார். தனது மக்களுக்காக உண்மையாய் நின்றார். எனவே அகாஸ்வேரு ராஜாவுக்கு அடுத்த பொறுப்பில் அமர்த்தப்பட்டார். (எஸ்தர் 10:3)
அன்பானவர்களே, எந்தக் குறைந்த மாதச் சம்பளத்தில் வேலைப்பார்த்தாலும் செய்யும் வேலைக்கு உண்மையுள்ளவர்களாக நாம் இருந்தால் உயர்த்தப்படுவோம். காவல் துறையில் வேலைபார்ப்பவர்கள் அதிகம் கையூட்டு பெறுகிறார்கள் எனும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அந்தக் காவல்துறையிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவர்கள் உண்டு. இப்படி உண்மையுள்ளவர்கள் எல்லோரும் பதவி உயர்வு பெற்றுவிடுவார்கள் என்று நான் கூறவில்லை; மாறாக உண்மையாக இருக்கும்போது குடும்பத்தில் தேவ ஆசீர்வாதம் நிச்சயமாகத் தங்கும்.
அநீதியான உலகப்பொருளைப்பற்றி உண்மையாக இருப்போமானால் தேவன் நம்மை நம்பி மெய்யான பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை ஒப்புவிப்பார். தேவன் தனது மக்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுபவரல்ல.
ஆதவன் 🔥 937🌻 ஆகஸ்ட் 22, 2023 செவ்வாய்க்கிழமை
"சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்." ( ஏசாயா 30 : 19 )
இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் சீயோன், எருசலேம் என்பவை உருவகமாகக் கூறப்பட்டுள்ளன. சீயோன் என்பது பரலோக ராஜ்யத்தையும் (தேவனுடைய நகரத்தையும்) எருசலேம் என்பது பரிசுத்த வாழ்க்கையையும் குறிக்கின்றது. அதாவது பரலோக ராஜ்யத்துக்கு உரிமையான மக்கள் பரிசுத்தமாக வாழ்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்து வரும் வார்த்தைகள், அப்படி தேவனுக்கு ஏற்புடைய பரிசுத்த வாழ்க்கை வாழ்வதால் வரும் ஆசீர்வாதங்கள் விளக்கப்பட்டுள்ளன. அதாவது அப்படி பரலோக ராஜ்யத்துக்குத் தகுதியான ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழும்போது, "நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்." என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து அடுத்த வசனங்களிலும் ஏசாயா இதன் ஆசீர்வாதங்களை விளக்குகின்றார். "ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும். நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்." ( ஏசாயா 30 : 20, 21 )
அதாவது இப்படி சீயோனுக்குத் தகுதியுள்ளவர்களாக ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழும்போது நாம் உபத்திரவம், குறைச்சல் போன்று நெருக்கத்தின் மத்தியில் இருந்தாலும் நமது போதகர் , அதாவது தேவன் நமக்கு மறைந்திருக்கமாட்டார். அவர் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துவார். நெருக்கத்தின் மத்தியிலும் நாம் அவரது தேவ பிரசன்னத்தைக் கண்டுணரமுடியும்.
மேலும் நாம் செல்லவேண்டிய சரியான பாதையினை அவர் நமக்குக் காட்டி வழிநடத்துவார். நாம் செல்லவேண்டிய பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.
மற்ற மக்களுக்கும் சீயோனைச் சார்ந்த மக்களுக்குமுள்ள ஆசீர்வாதத்தின் வித்தியாசம் இதுதான். மற்ற மக்கள் துன்பப்படும்போது வழிதெரியாமலும் உதவுவாரில்லாமலும் தவிப்பார்கள். ஆனால் நாம் சீயோன் எனும் பரலோகத்துக்குரியவர்களாக பரிசத்தமாக வாழும்போது தேவன் நமக்கு மறைந்திருக்கமாட்டார். நெருக்கத்தின் மத்தியிலும் அவரது முகத்தரிசனத்தை நாம் காண முடியும். அவரது வழிநடத்துதலை அனுபவிக்கமுடியும்.
மேலும், அப்படி வாழும்போது அவரை நோக்கி நாம் ஜெபிக்கும்போது நமது ஜெபத்துக்கு உடனேயே இரங்கி பதில் தருவார். இதனையே, "உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்." என்று இந்த வசனம் கூறுகின்றது.
அன்பானவர்களே, நாம் இந்த உலகத்தில் கொஞ்சகாலம் வாழ்ந்தாலும் நாம் நிரந்தர நகரான பரலோக சீயோனுக்கு உரியவர்கள். கர்த்தரோடு வாழப்போகிறவர்கள். எனவே தாறுமாறாக அலைந்திடாமல் பரிசுத்தநகரமாகிய எருசலேமில் தங்கி பரிசுத்த வாழ்கையினைத் தொடர்ந்திடுவோம்.
ஆதவன் 🔥 938🌻 ஆகஸ்ட் 23, 2023 புதன்கிழமை
"என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." ( சங்கீதம் 51 : 3 )
அன்பானவர்களே, ஒரு உணர்வுள்ள இருதயம் நமக்கு இருக்குமானால் நாமும் இன்றைய தியான வசனத்தில் தாவீது ராஜா கூறுவதுபோல கூறமுடியும். ஆண்டவரே, என் பாவம் எனக்கு முன்பாக நிற்கின்றது; நான் அதனை உணந்துள்ளேன், என்னை மன்னியும் என்று கூற முடியும். தாவீது பாவம் செய்தபோது முதலில் அது குறித்து எந்த குற்ற உணர்வும் அவருக்கு இல்லாமலிருந்தது. ஆனால் நாத்தான் தீர்க்கதரிசி தாவீதின் பாவங்களை அவருக்கு உணர்த்தினார். அதனை ஏற்றுக்கொண்ட தாவீது, "என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது." எனக் கூறுகின்றார். மட்டுமல்ல, தேவனிடம் மன்னிப்பு வேண்டி இறைஞ்சினார். இந்த 51 வது சங்கீதம் நமக்கெல்லாம் ஒரு மன்னிப்பு வேண்டுதல் ஜெபமாக உள்ளது.
"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." ( நீதிமொழிகள் 28 : 13 ) எனும் வசனத்துக்கேற்ப தாவீது இரக்கம் பெற்றார்.
பாவம் செய்யாத மனிதர்கள் இல்லை. மனிதர்கள் நாம் பெலவீனமானவர்கள். இதனை தேவன் நன்கு அறிவார். எனவே உணர்வுள்ள இருதயம் நமக்கு இருக்கும்போது நாம் மன்னிப்பு வேண்டும்போது அவர் நமது பாவங்களை மன்னிக்கிறார். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." ( 1 யோவான் 1 : 9 )
அன்பானவர்களே, நாம் செய்வது தவறு அல்லது பாவம் எனும் உணர்வு நமக்கு எப்போதும் இருக்கவேண்டியது அவசியம். அப்படி இல்லாமல் வாழும்போது நாம் காட்டுக்கழுதைகள் போல இருப்போம். இந்த உணர்வு இல்லாமல் வாழும்போது நமது ஜெபங்களும் அனைத்து பக்திச் செயல்களும் வீணானவைகளே.
"நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது." ( ஏசாயா 1 : 15 ) என்கிறார் பரிசுத்தரான கர்த்தர்.
எனவே நாம் இன்றைய வசனம் கூறுவதுபோல ஒரு உணர்வுள்ள இருதயத்தோடு வாழவேண்டியது அவசியமாய் இருக்கிறது. பாவம் நமது ஆத்துமாவைக் கொல்லுகின்றது. உணர்வுள்ள நாம் இருதயத்தோடு நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிகையிடும்போது மன்னிப்புப் பெறுகின்றோம். மட்டுமல்ல, நித்தியஜீவன் எனும் முடிவில்லா வாழ்வுக்கும் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம். எனவேதான் "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." ( ரோமர் 6 : 23 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.
தேவன் நமக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தரும்படி வேண்டுவோம். அப்போதுதான் நாம் தேவனிடம் பாவ மன்னிப்பு வேண்டி, அதனைப் பெற்று நரக அக்கினிக்கு நீங்கலாகி நித்திய ஜீவனுக்கு தகுதியுள்ளவர்கள் ஆகமுடியும்.
ஆதவன் 🔥 939🌻 ஆகஸ்ட் 24, 2023 வியாழக்கிழமை
"அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்." ( சங்கீதம் 103 : 10 )
இந்த உலகத்தில் தவறு செய்கின்றவர்களுக்கு உலக அரசாங்கங்கள் கொடுக்கும் தண்டனைகள் கடுமையானவை. கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் போன்ற தண்டனைகள் இன்றும்கூட சில நாடுகளில் தொடரத்தான் செய்கின்றன. இந்தியாவில்கூட நீதித்துறையில் ஊழலும் லஞ்சமும் இருந்தாலும் ஓரளவு மனசாட்சியுள்ள நீதிபதிகள் இருப்பதால் பலவேளைகளிலும் தவறுக்குத் தண்டனைகள் வழங்கபடத்தான் செய்கின்றன. ஆனால் இன்றைய வசனம் தேவனைப்பற்றி, "அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்" என்று கூறுகின்றது.
நமது பாவங்களை அவர் எண்ணுவாரானால் அவர் கொடுக்கும் தண்டனை எவ்வளவு பெரிதாய் இருக்கும்? ஆனால் அவர் கிருபையாய் நமது பாவங்களுக்கும் கெட்டச் செயல்களுக்கும் தக்கதாக நமக்குச் செய்யாமல் இருக்கிறார். ஆம், "இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்..." ( எசேக்கியேல் 20 : 44 ) என்கின்றார் பரிசுத்தராகிய கர்த்தர்.
"பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது." ( சங்கீதம் 103 : 11 ) என்று வேதம் கூறுகின்றது. அப்படி இருப்பதால் அவர் நமது அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமல் இருக்கின்றார்.
யூதர்கள் இயேசு கிறிஸ்துவைக் கொடுமைப்படுத்தி, முகத்தில் காறி உமிழ்ந்து அவமானப்படுத்தி சொல்லிமுடியாத கொடூர விதமாக நடத்திச் சிலுவையில் அறைந்து கொன்றனர். ஆனால் அவர்கள் செய்த கொடுமைக்குத் தக்கதாக அவர் அவர்களைப் பழிவாங்கவில்லை. பிதாவே, இவர்கள் தங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்; இவர்களை மன்னியும் என அவர்களது மன்னிப்புக்காக ஜெபித்தார்.
உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாக நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று தேவன் கூறியுள்ளபடி இன்றும் சாட்சிகள் பலர் எழும்பிக்கொண்டிருக்கின்றார். வேதாகமத்தை கிழித்து எறிந்து கிறிஸ்தவர்களை அவமானப்படுத்திய சாது சுந்தர்சிங்கைப்போல பலர் இன்றும் மனம் மாறி சாட்சி கூறுகின்றனர். ஆம், அவர்களது செயல்களுக்கேற்ப தண்டனை அளிக்காமல் தேவன் கிருபை பாராட்டியதால் அவர்கள் கர்த்தரை அறிந்துகொண்டனர்.
அன்பானவர்களே, நாம் ஒவ்வொருவரும் இப்படி நாம் செய்த பாவங்களை எண்ணிப்பார்ப்போமானால் அவரிடம் மன்னிப்பு வேண்டி அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். அப்படி நாம் வாழும்போதுதான் கர்த்தரை நாம் அறிந்துகொள்ளமுடியும். இல்லாவிட்டால் வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாகவே இறுதிவரை வாழ்ந்து மடிந்து போகிறவர்களாகவே இருப்போம்.
ஆதவன் 🔥 940🌻 ஆகஸ்ட் 25, 2023 வெள்ளிக்கிழமை
"உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக." ( சங்கீதம் 40 : 16 )
இன்றைய தியான வசனம், "உம்மைத் தேடுகிற அனைவரும்" எனும் வார்த்தைகளைக் கூறுவது நாம் கவனிக்கவேண்டிய ஒன்று. ஆம், நாம் தேவனைத் தேடுபவர்களாக மட்டுமே வாழவேண்டியது அவசியம். அப்படி வாழும்போது மகிழ்ச்சியும் சந்தோஷமும் நம்மில் தங்கியிருக்கும். ஆனால், இன்று இதற்கு மாறாக "தேவனிடமிருந்து வருவதைத் தேடுகின்றவர்களாகவே" நம்மில் பலரும் பலவேளைகளில் இருக்கின்றோம்.
ஒருமுறை நான் ஒரு ஆய்வுப்போல சிலரிடம் ஒரு கேள்வியைக் கேட்டேன். 'நீங்கள் ஏன் ஆலயத்துக்குச் செல்கின்றிர்கள் ? அல்லது ஆலயத்தில் என்ன வேண்டுதல் செய்வீர்கள்?" அன்பானவர்களே, இந்தக் கேள்விக்கு நான் கேட்ட அனைவருமே, குடும்ப ஆசீர்வாதம், நோய்களிலிருந்து விடுபட, கடன்தொல்லையிலிருந்து விடுபட, நமது திருச்சபை கட்டளைகளில் ஒன்று எனவே செல்கின்றோம் எனும் பதிலைத்தான் கூறினார்களேத் தவிர அதற்குமேல் ஒருவரும் பதிலாகக் கூறவில்லை.
கர்த்தரைத் தேடுகிறபோதுதான் அவருக்குள் மகிழ்ந்து சந்தோஷப்பட முடியும்; அவரது இரட்சிப்பை விரும்புகிறவர்கள் மட்டுமே தங்கள் வாழ்வில் என்ன நேர்ந்தாலும் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்ல முடியும் என்று இன்றைய வசனம் கூறுகின்றது.
இன்று பலரும் தங்களது உலகத் துக்கத்தையே பெரிதாக எண்ணி அதனை மட்டுமே நிவர்த்திசெய்திட தேவனைத் தேடுபவர்களாக மாறிப்போனோம். ஆனால் பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார், "தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது." ( 2 கொரிந்தியர் 7 : 10 ) ஆம், தேவனுக்கேற்ற ஆவிக்குரிய துக்கம் நம்மிடம் ஏற்படும்போதுதான் நாம் மனம் திரும்பி இரட்சிப்பை அடையமுடியும். உலக துக்கம் மட்டுமே கொள்பவர்களாக இருந்தால் நமது ஆத்துமா மரணமடையும் என்று வசனம் கூறுகின்றது.
இதனையே இயேசு கிறிஸ்து, "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்." ( மத்தேயு 5 : 4 ) என்று கூறினார். அது எப்படி துயரப்படுகின்றவர்கள் பாக்கியவானாக இருக்கமுடியும்? என நாம் இதன் பொருளை அறிய எண்ணுவதில்லை. ஆம், இங்கு இயேசு கிறிஸ்து கூறியுள்ளது ஆவிக்குரிய துக்கத்தைக் குறித்துதான். அவரை வாழ்வில் அறியவேண்டும், அடையவேண்டும் எனும் ஆர்வம், அந்தத் துக்கம் நமக்குள் ஏற்படவேண்டும்.
நாம் அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது அவரது பிள்ளைகளாகின்றோம். அப்போது அவர் நமது தேவைகளைச் சந்திப்பார். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? ஆனால் நாமோ இதற்கு மாறாக உலகப் பொருட்களையே முதலில் தேடுபவர்களாக இருக்கின்றோம்; அவரை விட்டுவிடுகின்றோம்.
"நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்." ( 2 தெசலோனிக்கேயர் 2 : 14 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஆம், நாம் அவரது இரட்சிப்பைப் பெற்று மகிமையை அடையவேண்டும் இதனையே அவர் விரும்புகின்றார். அதற்கு நாம், அவரைத் தேடுபவர்களாக வாழவேண்டியது அவசியம். அவரைத் தேடும்போது அவருக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; அவரது இரட்சிப்பை விரும்புகிறவர்களாக நாம் மாறுவோம். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்பவர்களாக இருப்போம்.
ஆதவன் 🔥 941🌻 ஆகஸ்ட் 26, 2023 சனிக்கிழமை
"கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்." ( செப்பனியா 3 : 15 )
சர்வ லோகத்தையும் படைத்து ஆண்டுவரும் கர்த்தர் நம்மை நோக்கிக் கூறும் இன்றைய வார்த்தைகள் நமக்கு மிகப்பெரிய ஆறுதலையும் தேறுதலையும் தருகின்றன. இதுவரை நாம் பல்வேறு ஆக்கினைகளுக்கு உட்பட்டிருக்கலாம், நமக்கு எதிராக உலக மனிதர்களும் சில நோய்களும் சத்துருவாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று கர்த்தர் கூறுகின்றார், "நான் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினேன்".
அன்பானவர்களே, நாம் தேவனது வார்த்தைகளை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளும்போது அவை உண்மையிலேயே நமது வாழ்வில் செயல்புரிவதை நாம் காணலாம். இன்றைய வசனம் கர்த்தர் தீங்கை உன்னைவிட்டு விலக்குவார் என்று கூறுவதுடன், "ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித்தீங்கைக் காணாதிருப்பாய்." என்றும் கூறுகின்றது.
அதாவது ஒரு ராஜா நம்முடன் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அல்லது நாமே ஒரு ராஜாவின் மகனாக மகளாக இருக்கிறோம் என எண்ணும்போது அது எவ்வளவு மேன்மை. ஆம், அதுபோல ராஜாவாகிய கர்த்தர் நம்மோடு இருப்பதால் இதுவரை நமக்கு ஏற்பட்டிருந்த சிறுமையினையும் நோய்களையும் பிரச்சனைகளையும் நம்மைவிட்டு அகற்றுவது மட்டுமல்லாமல் இனித்தீங்கைக் காணாதிருக்கும்படி அருள்புரிவார்.
இந்த உலகத்தில் நோய்கள், பிரச்சனைகள், துன்பங்கள் அனைவருக்கும் உண்டு. தேவ பிள்ளைகளான நமக்கும் உண்டு ஆனால் கர்த்தர் நம்மோடு இருப்பதால் அவற்றை எளிதாகக் கடந்துசெல்ல உதவிடுவார்.
இன்றைய வசனத்தைக் கூறும் செப்பனியா தீர்க்கதரிசி தொடர்ந்து எழுதும்போது கூறுகின்றார், "........உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( செப்பனியா 3 : 20 )
அதாவது கர்த்தர் நமது வாழ்வில் அதிசயமாகச் செயல்படும்போது மற்ற மக்களிடமிருந்து நாம் வேறுபட்டு காணப்படுவோம். மட்டுமல்ல, "சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்."
ஒரு ராஜாவின் பிள்ளை எங்குசென்றாலும் அதற்குத் தனி அங்கீகாரம் கிடைப்பதுபோல கர்த்தருக்குள் வாழும் நம்மையும் தேவன் மற்ற மக்களுக்குமுன் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பார்.
அன்பானவர்களே, நம்மேல் இவ்வளவு அன்பு கொண்டுள்ள தேவனுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியமென்று எண்ணிப்பாருங்கள். அற்ப உலக இன்பங்களுக்காக நாம் அவரை உதாசீனப்படுத்தி பிரிந்திடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம். அப்படி வாழும்போது வாக்குமாறாத தேவன் தான் கூறியபடி தொடர்ந்து நம்மை சகல ஜனங்களுக்குள்ளும் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைத்திடுவார். அப்போது நம்மைக் காணும் பிறருக்கு நாமே தேவ சாட்சியாக இருப்போம்.
ஆதவன் 🔥 942🌻 ஆகஸ்ட் 27, 2023 ஞாயிற்றுக்கிழமை
"தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன்அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்." ( பிரசங்கி 5 : 19 )
மனிதர்கள் பலரும் பெரும்பாலும் மெய்யான ஆசீர்வாதம் என்பது என்ன என்பதை அறியாமல் இருக்கின்றனர். அதிகப்படியான செல்வம், சொத்துக்கள், புகழ், அதிகாரம் இவை இருப்பதே ஆசீர்வாதம் என எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் இந்த உலகத்திலே நாம் பலவேளைகளில் பார்ப்பது, எல்லா செல்வமும் பெற்றிருக்கும் பலர் தாங்கள் நினைத்ததை உண்ணவும் குடிக்கவும் முடியாமல் இருக்கின்றனர்.
நீதிமொழிகள் நூலில் ஒரு அருமையான வசனம் உண்டு. "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." ( நீதிமொழிகள் 10 : 22 ) அதாவது கர்த்தர் தரும் ஆசீர்வாதம் முழுமையான ஆசீர்வாதமாக இருக்கும். வேதனை இருக்காது. எந்தத் தாயும் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உணவைப் பரிமாறிவிட்டு கூடவே நஞ்சை ஊட்டுவாளா? அதுபோலவே கர்த்தர் ஆசீர்வாதத்தைத் தரும்போது அதனை நாம் முழுமையாக அனுபவிக்க கிருபையும் செய்வார்.
இன்றைய வசனம், "ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன்அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்." என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பெற்றுக்கொண்ட பொருளாதார ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்க தேவனுடைய கிருபை அவசியம்.
இன்று தேவனிடம் வேண்டுதல் செய்யும்போது பலரும் ஆசீர்வாதங்களை மட்டுமே கேட்கின்றனர். கிறிஸ்தவ பிரசங்கிகளும் தேவ ஆசீர்வாதம் என்று பொருளாதார ஆசீர்வாதங்களையே முன்வைக்கின்றனர். காரும் பங்களாவும் கைநிறைய பணமும் இருந்தாலும் அதனை அனுபவிக்க தேவ கிருபை அவசியம். லட்சங்களை சம்பாதித்து மருத்துவமனைகளுக்குச் செலவிட்டு என்ன பயன்?
அன்பானவர்களே, நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது நமக்கு என்ன தேவையோ அதனை தேவன் தருவார். மட்டுமல்ல, அப்படி அவர் தரும் ஆசீர்வாதத்தை நாம் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவும் கிருபை செய்வார்.
"நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது...." ( யாக்கோபு 1 : 17 ) என்று வேதம் கூறுகின்றது. பிதாவாகிய தேவனே நமக்கு நன்மையானவைகளைத் தருகின்றார். அப்படி அவர் தரும் எதுவும் நன்மையானதாக, பூரணமானதாக இருக்கும். நாம் நமது ஜெபங்களில் இதனையே நாடுவோம். பிதாவே, பூரணமான நன்மைகளினால் என்னை நிரப்பும் என்று வேண்டுதல் செய்வோம். அவர் தரும் நன்மையில் புசிக்கவும், நம் பங்கைப் பெறவும், மகிழ்ச்சியாயிருக்கவும் நமக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய கிருபையே.
ஆதவன் 🔥 943🌻 ஆகஸ்ட் 28, 2023 திங்கள்கிழமை
"ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய பிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை." ( 1 கொரிந்தியர் 8 : 2 )
சிலர் என்னிடம் பலவேளைகளில் சொல்லுவது, "நாங்களெல்லோரும் பராம்பரிய கிறிஸ்தவர்கள். நீங்கள் எங்களுக்கு ஏன் சுவிசேஷம் அறிவிக்கவேண்டும். கிறிஸ்துவை அறியாத மக்களிடம்போய் அறிவிக்கவேண்டியதுதானே? இப்படி கூறுபவர்களுக்கு அப்போஸ்தலராகிய பவுல் கூறுகின்ற பதில்தான் இன்றைய வசனம். ஆம், நாம் எல்லாம் அறிந்துவிட்டோம் என எண்ணிக்கொள்வதே அறியாமையின் வெளிப்பாடுதான்.
பல்வேறு பாரம்பரியங்களுக்கும் பாவங்களுக்கும் அடிமையாகி மெய்த்தேவனை அறியாமலிருந்த யூதர்கள் இயேசு கிறிஸ்துவிடம் இதனைத்தான், "நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை;" ( யோவான் 8 : 33 ) என்று கூறினர். ஆம் அவர்கள் அறியவேண்டியதை அறியவேண்டியபடி அறியவில்லை. இதுபோலவே இன்றும் பல பாரம்பரிய கிறிஸ்தவர்கள் கூறிக்கொள்கின்றனர்.
அன்பானவர்களே, நாம் சத்தியத்தை அறியாதபடி சாத்தான் நம்மைப் பலவேளைகளில் தடைசெய்துள்ளான். எனவே நாம் பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடித்தபடி நாம் அடிமைகளாய் இருப்பதை உணராமலிருக்கின்றோம். பியோடெர் டோஸ்டோயுவஸ்கி (Fyoder Dostoyevesky) எனும் அறிஞர் தனது நூலில், "ஒரு கைதியை சிறையிலிருந்து தப்பவிடாமல் செய்யச் சிறந்த வழி அவன் தான் சிறையிலிருப்பதை உணர்ந்துகொள்ளாமல் இருக்கச்செய்வதே" என்று கூறுகின்றார்.
ஆம், பாவங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் அடிமையாகி அப்படி தாங்கள் அடிமைகளாக இருப்பதையே பலர் உணராமலிருக்கின்றனர். அப்படி உணராமல் இருப்பதால் அதே அடிமைத்தனத்தில் தொடருகின்றனர். தங்கள் அடிமைத்தனத்தை உணரும்போதுதான் விடுதலையும் மெய்த்தேவனை அறியும் வாய்ப்பும் நமக்கு உண்டு.
தேவன் நமது பாவத்தை மன்னித்த நிச்சயத்தைப் பெரும்போதுதான் நாம் தேவனை உண்மையாய் அன்புகூர முடியும். அப்படி "தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்." ( 1 கொரிந்தியர் 8 : 3 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.
மதவெறியுள்ளவன் தேவனை அறியமுடியாது. அதுபோல சபை வெறிகொண்ட கிறிஸ்தவன் கிறிஸ்துவை அறியமுடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியவேண்டுமானால் மற்ற எல்லாவற்றையும் நஷ்டமாகவும் குப்பையாகவும் நாம் எண்ணி வாழவேண்டும். அவரையே முற்றும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். இதனையே, "என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்." ( பிலிப்பியர் 3 : 8 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர்.
ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டிய பிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை. நாம் இன்னும் எதனையும் அறியவில்லை எனும் வெறுமை உள்ளம் நமக்கு வேண்டும். வெறும் குடத்தில்தான் நீரைச் சேகரிக்கமுடியும். அந்தக் குடம் அழுக்கும் அவலட்சணமான பொருளாலும் நிறைந்திருக்குமானால் அதில் சுத்த நீரைச் சேகரித்து வைக்கமுடியாது.
ஆண்டவரே, என்னையே நான் வெறுமையாக உம்மிடம் ஒப்படைக்கிறேன்; உமது ஆவியால் என்னை நிரப்பும். உம்மை அறியும் அறிவால் என்னைத் திருப்தியாக்கும் என வேண்டுவோம். நாம் எல்லாம் அறிந்தவர்களென்று எண்ணிக்கொள்வோமானால் ஒன்றையும் அறியவேண்டிய பிரகாரமாக இன்னும் அறியவில்லை என்றுதான் பொருள்.
ஆதவன் 🔥 944🌻 ஆகஸ்ட் 29, 2023 செவ்வாய்க்கிழமை
"நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3 : 12 )
ஆவிக்குரிய வாழ்க்கை அனுபவங்கள் மிகப்பெரிய கடல் போன்றது. அதனை முற்றிலும் அறிய மனிதர்களால் கூடாது. ஆனால் கிறிஸ்துவால் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அழைக்கப்பட்ட நமக்கு அதனை அறியவேண்டும் எனும் ஆர்வம் இருக்கவேண்டியது அவசியம். ஆவிக்குரிய அனுபவங்களில் முற்றிலும் தேறினவர்கள் இல்லை.
எனவேதான், நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன் என்று கூறுகின்றார். "ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்." ( பிலிப்பியர் 3 : 15 )
அன்பானவர்களே, இன்று பொதுவாகத் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கும் இந்த எண்ணமும் ஆவிக்குரிய வாழ்கையினைப்பற்றிய உணர்வும் இல்லை. மாறாக அற்பமான மதவெறி மட்டும் அதிகமாக இருக்கின்றது. (பெந்தெகொஸ்தே சபைகள் உட்பட) அப்போஸ்தலரான பவுல் மிகப்பெரிய அப்போஸ்தலராக இருந்தும், தேவனால் மிக அதிகமாக வல்லமையாய்ப் பயன்படுத்தப்பட்டிருந்தபோதும் அவரே அதை நான் இன்னும் அடையவில்லை என்று இன்றைய வசனத்தில் கூறுகின்றார். அப்படியானால் நாம் எம்மாத்திரம்?
கிறிஸ்து இயேசுவே நமது பந்தயப்பொருள்;அவரே நமது இலக்கு. அந்த இலக்கை அடையவேண்டியதே ஒவ்வொரு மனிதரிடமும் இருக்கவேண்டிய உணர்வு. அந்த இலக்கை நோக்கி தான் பயணிப்பதாக அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார். "கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3 : 14 ) என்கின்றார்.
நமக்கு எந்த அளவு ஆர்வமிருக்கின்றதோ அதன் அடிப்படையில்தான் தேவன் நமக்கு ஆவிக்குரிய ரகசியங்களை வெளிப்படுத்தித் தரமுடியும். ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றிய ஆர்வமும் அதன் உபயோகமும் தெரியாத மனிதனிடம் அந்தப் பொருளை நாம் கொடுப்போமானால் அவனுக்கு அதன் மதிப்பு தெரியாததால் அதனைப் பெரிதாக எண்ணமாட்டான். அந்த பொருள் தனக்குக் கிடைத்தது அவனுக்கு மேன்மையாகத் தெரியாது. எனவே, ஆர்வமில்லாதவர்களுக்கு தேவன் மேன்மையான காரியங்களை வெளிப்படுத்துவதில்லை.
மாறாக, ஒரு பொருள் நமக்கு மனத்துக்குப் பிடித்திருந்தால் அதனை எப்படியாவது பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் ஏற்படும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். அப்படியுள்ள மனிதர்களுக்கு தேவனும் அதிகமான அனுபவங்களைக் கொடுத்து வழி நடத்துவார். அப்படி ஏற்பட்ட அனுபவத்தையே அப்போஸ்தலரான பவுல், "அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." என்று குறிப்பிடுகின்றார்.
"ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்" என்கின்றார் பவுல். இந்தச் சிந்தனையே நாம் தேறினவர்கள் என்பதற்கு அடையாளம். ஆவிக்குரிய அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் ஆர்வம் இருப்பவர்கள் அனைவரும் தேறினவர்களே. வெறுமனே வழிபாட்டுக் கிறிஸ்தவர்களாக இல்லாமல் ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாக வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
எனவே, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கி நமது ஆவிக்குரிய ஓட்டத்தைத் தொடருவோம்.
ஆதவன் 🔥 945🌻 ஆகஸ்ட் 30, 2023 புதன்கிழமை
"சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது." ( 1 தீமோத்தேயு 4 : 8 )
இந்த உலகத்தில் பொருள் சம்பாதிக்கவேண்டும் எனும் எண்ணத்திலும் எப்படியாவது வாழ்க்கையில் முன்னேறி விடவேண்டுமென்னும் எண்ணத்திலும் மக்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். வீட்டையும் மனைவி பிள்ளைகளையும் விட்டு பொருள்தேட இரவும் பகலும் உழைக்கும் மனிதர்களை நாம் இந்த உலகத்தில் பார்க்கின்றோம். ஆனால், அப்போஸ்தலரான பவுல், மனிதனின் இந்த முயற்சிகள் அற்ப பிரயோஜனமுள்ளது என்று கூறுகின்றார்.
இப்படிக் கடினமாக உழைப்பதால் ஒருவேளை நாம் வாழ்வில் முன்னேறி வீடு, கார், சொத்துசுகங்கள், புகழ் இவற்றைச் சம்பாதிக்கலாம். ஆனால் இவை அற்ப பிரயோஜனமுள்ளது. உலகத்தின் பார்வையில் இவை பெரிதாகத் தெரிந்தாலும் தேவனின் பார்வையில் இவை அற்பமானவையே.
இது மட்டுமல்ல, தங்களது உடலைப் பேணுவதற்குச் சிலர் கடுமையான பயிற்சிகளையும் உணவுக்கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளுகின்றனர். உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் தேவையே. ஆனால் இவைகளையே நாம் முற்றிலும் சார்ந்துவிடக்கூடாது. இத்தகைய முயற்சிகள் தேவ பக்தி முயற்சிகளுக்கு அடுத்தபடியாக இருந்தால் தான் நல்லது. உடற்பயிற்சி மட்டும் எவரையும் காப்பாற்றிவிடாது. எனவேதான், தேவபக்தியானது எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது என்று இன்றைய வசனம் கூறுகின்றது.
தேவ பக்திக்கென்று நாம் எடுக்கும் முயற்சிகள் மற்றும் தேவனோடு ஐக்கியம் ஏற்படுத்த நாம் கொள்ளும் முயற்சிகள் இந்த உலக வாழ்க்கைக்கும் இனி வரவிருக்கும் மறுஉலக வாழ்க்கைக்கும் பிரயோஜனமுள்ளதாய் இருக்கின்றது. இதனையே தனது சீடனான தீமோத்தேயுக்கு எடுத்துச் சொல்கின்றார் பவுல். தொடர்ந்து, "உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்." ( 1 தீமோத்தேயு 6 : 7 ) என நினைவுறுத்துகின்றார்.
அதாவது சரீர முயற்சியில் எவ்வளவு நாம் சம்பாதித்தாலும் அவை இந்த உலகத்தைத் தாண்டி நம்மோடு வரப்போவதில்லை. ஆனால் இந்த உலக மக்கள் பண ஆசையால் இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் உபயோகமாகவுள்ள தேவ பக்திக்குரிய செயல்களை விட்டுவிடுகின்றனர்.
இப்படி இந்த உலகத்துச் செல்வத்துக்காக மட்டுமே நாம் உழைத்துக்கொண்டிருப்போமானால் நாம் பரிதபிக்கத் தக்கவர்களாகவே இருப்போம். ஆம், "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்." ( 1 தீமோத்தேயு 6 : 10 )
அன்பானவர்களே, இதனைப் படிக்கும்போது சிலர் நாம் உழைக்கக்கூடாதா? உடற்பயிற்சிகள் செய்யக்கூடாதா? என எண்ணலாம். நாம் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். உழைக்காதவன் உண்ணலாகாது என்றுதான் வேதம் கூறுகின்றது. ஆனால், உழைப்பை நம்புவதைவிட உழைப்பதற்கான ஆற்றலையும் பலத்தையும் நமக்குத் தந்துள்ள தேவனை முதலில் நம்பி அவருக்கு நாம் முதலிடம் கொடுக்கவேண்டும்.
ஆம், நமது சரீரமுயற்சி தேவனது பார்வையில் அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.
ஆதவன் 🔥 946🌻 ஆகஸ்ட் 31, 2023 வியாழக்கிழமை
"உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்." ( ரோமர் 5 : 3, 4 )
இந்த உலகத்தில் பாடுகளும் துன்பங்களும் பிரச்சனைகளும் எல்லோருக்கும் பொதுவானவை. ஆனால் நாம் துன்பங்களைக்கண்டு அஞ்சி ஓடினாலோ அல்லது தேவனைவிட்டு பின்மாறினாலோ நாம் நமது இலக்கை அடைய முடியாது. இதனை வலியறுத்தவே பவுல் அப்போஸ்தலர் இதனை எழுதுகின்றார்.
எவ்வளவோ ஜெபித்தாலும் கஷ்டங்கள் மாறவில்லை, துன்பங்கள் தொடருகின்றன எனச் சிலர் விரக்தி அடைகின்றனர். வேறு சிலரோ, "எல்லாம் கட்டுக்கதை....கடவுளை நம்பாதவர்களும் ஜெபிக்காதவர்களும் நன்றாக இருக்கின்றனர்; நாம் ஏன் இன்னும் கிறித்தவ விசுவாசத்தில் நிலைத்துருக்கவேண்டும்?" என வெறுத்துப்போய் கூறுகின்றனர். அல்லது, ஜெபிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை, நடப்பது நடந்தே தீரும் என போலி வேதாந்தம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் பவுல் அப்போஸ்தலர், நமது வாழ்வில் வரும் உபத்திரவங்கள் நமது பொறுமையை வளர்க்க உதவுகின்றது என்கின்றார். அது நமது விசுவாசத்தைச் சோதிக்க தேவன் வைக்கும் சோதனை, அதாவது பரீட்சை என்று கூறுகின்றார். எனவேதான் நாம் சோதனைகளை முறுமுறுப்பில்லாமல் சகிக்கும்போது அந்தப் பொறுமை பரீட்சையையும், அந்தப் பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, அப்படி உபாத்திரவங்களில் மேன்மைபாராட்டுகிறோம் என்கின்றார்.
தொடர்ந்து எழுதும் அப்போஸ்தலரான பவுல் அடுத்த வசனத்தில், நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றிருப்பதால் பரிசுத்த ஆவியானவரே நம்மை நடத்துவார். அவர்மூலம் தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் நிரம்பியிருக்கும். எனவே நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படவிடாது. தேவன் நிச்சயமாக நம்மை விடுவிப்பார் என்கின்றார். இதனையே, "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது." ( ரோமர் 5 : 5 ) என்கின்றார்.
அதாவது, நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும்போதும் துன்பங்கள் சோதனைகள் வருகின்றன என்றால், இந்தத் தேர்வின்மூலம் தேவன் நமக்கு ஏதோ நல்லது செய்யபோகின்றார் என்று உறுதியுடன் அமர்ந்திருந்து அப்படி உபாத்திரவங்களில் மேன்மைபாராட்டுகிறோம் என்கின்றார்.
அப்போஸ்தலரான யாக்கோபும், "இதோ, பொறுமையா யிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." ( யாக்கோபு 5 : 11 ) என யோபு அடைந்த துன்பங்களையும் தேவன் இறுதியில் அவரை துன்பங்களிலிருந்து விடுவித்து ஆசீர்வதித்ததையும் நமக்கு நினைவூட்டி துன்பகளில் பொறுமையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.
அன்பானவர்களே, இவை கடினமான செயலாக இருந்தாலும் நாம் துவண்டுவிடவேண்டாம். துன்பங்களில் ஜெபிக்க இயலாவிட்டாலும் தேவனை முறுமுறுக்காமல் அமைதியாக இருப்போம். அதுவே விசுவாசம்தான். "நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ் செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்" ( சங்கீதம் 4 : 4 )