"தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்." ( மீகா 2 : 13 )
இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் நமது தேவனுக்கு "தடைகளை நீக்கிப்போடுகிறவர்" எனும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், நமது வாழ்வில் வரும் எந்தத் தடையையும் அவர் நீக்கிப்போட வல்லவராய் இருக்கிறார்.
இஸ்ரவேல் மக்களை மோசே எகிப்திலிருந்து விடுவிக்க பார்வோன் பல முறை தடை செய்தான். அவனது கரத்திலிருந்து அவர்களை விடுவித்து கர்த்தர் வழி நடத்தினார். கானானை நோக்கிய அவர்களது பயணத்தில் முதலில் வந்தத் தடை செங்கடல். ஆனால் அதனைக் கால் நனையாமல் அவர்களை தேவன் கடைக்கச் செய்தார். தடையாய் நின்ற எரிகோவின் மதில்கள் துதியினால் இடிந்து விழுந்தன. அவர்களுக்கு எதிர்த்துவந்த வல்லமைமிக்க பல அரசர்கள் அழிந்துபோயினர். ஆம், நமது தேவன் தடைகளை நீக்கிப்போடுகிறவர்.
அப்போஸ்தலர்களது வாழ்விலும் தேவன் இப்படித் தடைகளை நீக்கிப்போடுவதைப் பார்க்கின்றோம். பேதுருவை சிறைச்சாலை அடைத்துவைக்க முடியவில்லை. பவுலையும் சீலாவையம் சிறைச்சாலையின் தொழுமரம் தொடர்ந்து கட்டிவைக்க முடியவில்லை. அப்போஸ்தலர்களின் ஊழியத்தில் வந்த பல்வேறு இடர்கள், தடைகளை நீக்கிப்போடும் கர்த்தரால் தகர்ந்தன. அதே கர்த்தர் மாறாதவராக இன்றும் இருக்கிறார்.
அன்பானவர்களே, நமது வாழ்வில் வரும் துன்பங்கள், பிரச்சனைகள் இவைகளைக்கண்டு நாம் தயங்கி ஆவிக்குரிய வாழ்வில் தோல்வியடைந்திடக் கூடாது. நமது தேவன் வல்லமைமிக்கப் பராக்கிரமசாலியாக நம்மோடு இருக்கிறார். நமது வாழ்வில் வரும் எந்தத் தடையையும் தகர்த்துப்போட வல்லவர் அவர்.
இன்றைய தியானத்துக்குரிய வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது, தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார் என்று. நமக்குமுன் கர்த்தர் செல்கிறார் எனும் விசுவாசத்தோடு பயணத்தைக் தொடர்வோம்.
நமது தேவன் தனது பிள்ளைகளாகிய நம்மை ஒரு ராஜாபோல நடத்துகின்றார். நமது நாட்டின் பிரதமரோ, முதல்வரோ வருகிறார்களென்றால் முதலில் அவர்கள் வரும் சாலைகளிலுள்ள குண்டு குழிகள், தடைகள் அகற்றப்பட்டு அவர்கள் பயணம் செய்ய லெகுவாக்கப்படும். நமது கர்த்தர் நம்மை ராஜாபோல நடத்துவதால் நமக்குமுன் சென்று நமது பயணப் பாதையிலுள்ள தடைகளைச் சரிசெய்து நமக்குமுன் ஒரு பாதுகாவலர்போல நடந்து செல்கிறார். இதுவே கிறிஸ்துவின் அன்பு.
எனவே அன்பானவர்களே, நாம் எதனையும் கண்டு பயப்படத் தேவையில்லை. நமது ராஜா நமக்கு முன்பாகப் போகிறார். அந்த விசுவாசத்தோடு அவரைப் பின்தொடர்வோம்.
ஆதவன் 🔥 887🌻 ஜூலை 03, 2023 திங்கள்கிழமை
"அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து; ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக் கொள்ளேன். " ( ஆதியாகமம் 14 : 22 ) என்றான்.
சோதோமின் ராஜாவும் அவனோடு வேறு சில ராஜாக்களும் சேர்ந்து ஆபிராமின் (ஆபிரகாம்) சகோதரனது மகனாகிய லோத்துவையும் அவனது உடைமைகளையும் கைபற்றிச் சென்றுவிட்டனர். ஆபிராம் அதனைக் கேள்விப்பட்டபோது தனது ஆட்களுடன் சென்று போரிட்டு எதிரி ராஜாக்களை வென்று லோத்துவையும் அவனது சொத்துக்களையும் மீட்டுக்கொண்டார். எதிரி நாட்டு ராஜாவின் சொத்துக்களையும் அந்நாட்டின் மக்களையும் சிறைபிடித்துக்கொண்டார்.
அப்போது சோதோமின் ராஜா ஆபிராமிடம், எங்களிடமிருந்து நீர் கைப்பற்றிய பொருட்களை வேண்டுமானால் வைத்துக்கொள்ளும் ஆனால் நீர் கைதுசெய்துள்ள எங்களது நாட்டு மக்களை திருப்பித் தந்துவிடும் என்று கேட்கிறான்.
இந்தச் சூழ்நிலையில் ஆபிராம் கர்த்தரை முன்னிறுத்திப் பார்க்கின்றார். சோதோமின் ராஜா கூறுவதுபோல கைப்பற்றிய பொருட்களை வைத்துக்கொண்டால் ஒருவேளை பிற்காலத்தில் , " நான்தான் ஆபிராமைச் செல்வந்தனாக்கினேன்; அவனிடமுள்ளவையெல்லாம் எனது சொத்துக்களே " என்று சோதோமின் ராஜா கூறுவான். அப்படிக் கூறுவது கர்த்தரை அவமதிப்பதுபோலாகிவிடும். ஏனெனில் கர்த்தர், "நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்." ( ஆதியாகமம் 12 : 2 ) என்று ஆபிரகாமுக்கு ஏற்கெனவே ஆசீர்வாதத்தைக் வாக்களித்திருந்தார்.
எனவே, "ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன்." என்று அந்தச் சொத்துக்களை ஆபிராம் மறுத்துவிட்டார்.
அன்பானவர்களே, இன்று நாங்கள் ஆவிக்குரிய மக்கள் என்றும் ஆவிக்குரிய ஆராதனை செய்கின்றோம் என்றும் கூறிக்கொள்ளும் பலர், அரசாங்க பதவியில் இருந்துகொண்டு கைக்கூலி, லஞ்சம், ஏமாற்று வழிகளில் பொருள்சேர்த்து பின்னர் , "கர்த்தர் எங்களை ஆசீர்வதித்துள்ளார்" எனச் சாட்சியும் கூறுகின்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளின்போது இவர்கள் சிக்கிக்கொள்கின்றனர். இது கிறிஸ்துவை அவமானப்படுத்துவதல்லவா?
ஆபிரகாமின் வாழ்வில் பல விசுவாச அறிக்கைகளும் செயல்களும் இருந்தன. இதனாலேயே ஆபிரகாமை நாம் விசுவாசத்தின் தந்தை என்கின்றோம். அவரது வாழ்வு நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. ஆம் அன்பானவர்களே, ஆபிரகாமைப்போல உண்மையான ஒரு வாழ்வு வாழ்வோம். குறுக்கு வழியில் முயலாமல், கர்த்தர் நம்மை உயர்த்தும்படி அவரது பலத்தக் கரங்களுக்குள் அடங்கி இருப்போம். அப்போதுதான் நமது வாழ்வு ஒரு சாட்சியுள்ள வாழ்வாக இருக்கும்.
ஆதவன் 🔥 888🌻 ஜூலை 04, 2023 செவ்வாய்க்கிழமை
"கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல." ( லுூக்கா 9 : 62 )
கிறிஸ்து தனது அடியார்களிடம் உறுதியான நிலையான அன்பை எதிர்பார்க்கின்றார். ஒரு சில நாட்கள் முழு விசுவாசிகளாக இருந்துவிட்டுப் பின்னர் தேவைக்கேற்ப கிறிஸ்துவைப் பயன்படுத்த விரும்புபவர்களை அவர் தனக்கு ஏற்புடையவர்களாய்க் கருதுவதில்லை.
இன்று நாம் உலகினில் இப்படிப்பட்ட மனிதர்களைப் பரவலாகப் பார்க்க முடியும். அதாவது தங்கள் தேவைக்காக நம்மைப் பயன்படுத்திவிட்டு பிறகு கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். பின்னர் நம்மைக்கொண்டு ஏதாவது காரியம் ஆகவேண்டுமென்றால் வெட்கமில்லாமல் மீண்டும் நம்மிடம் வருவார்கள். ஆனால் தேவன் இத்தகைய மனிதர்களை அருவெறுக்கிறார். தேவைக்காக தன்னைப் பயன்படுத்துபவர்களையல்ல, மாறாக, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்". ( யோபு 13 : 15 ) என்று அவரைவிட்டுப் பின்மாறாமல் இருப்போரை தேவன் அதிகமாக நேசிக்கிறார்.
இன்று பல இளைஞர்களும் இளம் பெண்களும் இப்படி இருக்கின்றனர். பெரும்பாலான காதலர்கள் போலியான காதலையே வளர்த்துக்கொண்டு பின்னர் அவரவர் தேவைக்கேற்ப பிரிந்து வேறு வாழ்க்கையினுள் பிரவேசிக்கின்றனர்.
இயேசு கிறிஸ்து கூறிய மேற்படி வசனத்தின்படி வாழ பழைய ஏற்பாட்டுக்காலத்திலேயே எலிசா தீர்க்கதரிசி முடிவெடுத்தார். எலியா, எலிசாவை சந்தித்தபோது எலிசா தனது வயலில் ஏர்பூட்டி உழுதுகொண்டிருந்தார். எலியா அவரை ஊழியத்துக்கு அழைத்தபோது எலிசா உடனே அவரிடம், "நான் சென்று எனது வீட்டாரிடம் விடைபெற்று வருகிறேன்" என்று கூறி தனது வீட்டிற்குச் சென்று திரும்பிவந்து மக்களுக்கு விருந்து வைக்கிறார்.
இதனை நாம் பின்வருமாறு வாசிக்கிறோம். "அப்பொழுது அவன், ஒரு ஏர் மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்." ( 1 இராஜாக்கள் 19 : 21 )
அன்பானவர்களே, ஏர்மாடுகளும் ஏரும் இருக்குமானால் ஒருவேளை ஊழியத்தில் வரும் இடர்பாடுகளைக் கண்டு பின்மாறி மீண்டும் உழவுசெய்யச் செல்ல மனம் வந்துவிடும். எனவே முதலில் நாம் நமது ஏர்மாடுகளையும் ஏரையும் அழித்துவிடுவோம் என்று முடிவெடுத்தார் எலிசா. ஆம், கர்த்தரைப் பின்பற்றுவதில் அவர் அவ்வளவு உறுதியாக இருந்தார். எந்தவிதத்திலும் பின்மாற்றம் நமது வாழ்வில் வராது என்று அவர் உறுதியாக நம்பியதால்தான் இப்படிச் செய்தார்.
கலப்பையின்மேல் (கிறிஸ்துவின் மேல் வைக்கும் விசுவாசத்தில்) தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார் இயேசு கிறிஸ்து. ஆனால் எலிசாவோ கர்த்தருக்காக தனக்கு இருந்த கலப்பையையும் மாடுகளையும் அழித்துவிட்டு கர்த்தர்மேல் வைத்த விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்.
தேவன் எனக்குத் தருவதால் அவரை விசுவாசிக்கிறேன் என்பதல்ல விசுவாசம். என்னிடம் இருப்பவை அனைத்தும் போனாலும் பின்மாறாமல் அவரையே நம்புவேன் என்பதே உறுதியான விசுவாசம்.
ஆதவன் 🔥 889🌻 ஜூலை 05, 2023 புதன்கிழமை
"சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு." ( 1 தீமோத்தேயு 4 : 7 )
"உண்மை தனது கால் செருப்பை அணியுமுன் பொய்யானது உலகத்தையே சுற்றிவந்துவிடும்" என்று கூறினார் பிரபல சுவிசேஷகரும் நற்செய்தியாளரும் இறையியல் அறிஞருமான சார்லஸ் ஸ்பர்ஜன். இதுவே இன்று கிறிஸ்தவத்தில் நடந்துகொண்டிருக்கிறது. பொய்யும், கட்டுக்கதைகளும் மேலோங்கி தேவனது வார்த்தைகளையும் தேவபக்தியையும் தடுப்பவையாக இருக்கின்றன. பல்வேறு தவறான போதனைகள், செயல்பாடுகள் இவைகளுக்குக் காரணம் பாரம்பரியம் எனும் பல தவறான எண்ணங்களும் செயல்களும். இத்தகைய "சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு." என்கிறார் அப்போஸ்தலரான பவுல்.
கிறிஸ்தவத்தில் உள்ள சபைப் பிரிவினைகளுக்கு ஒரு முக்கிய காரணம் தேவனுடைய வார்த்தைகளைவிட பாரம்பரியத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்தான். ஆம், பாரம்பரியத்தைக் காப்பதற்காக நாம் தேவனது கட்டளைகளை அவமாக்குகின்றோம். இதனையே இயேசு கிறிஸ்து கண்டித்தார். "பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை அவமாக்குகிறீர்கள்". ( மாற்கு 7 : 9 ) என்றார்.
ஒரு சட்டப் பிரச்னை ஏற்படுகின்றதென்றால் நாம் சட்ட புத்தகத்தைத்தான் பார்த்து நமது பிரச்சனைக்குத் தீர்வு காண்கின்றோம். இதுபோல நமது வேத புத்தகம்தான் நமக்குச் சட்டப் புத்தகம். ஏனெனில் வேத வார்த்தைகள் தேவனது வார்த்தைகள். இவை தேவனுடைய பரிசுத்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டுப் பேசியவை. (2 பேதுரு 1:21) எனவே இந்தத் தேவனுடைய வார்த்தைகள் தான் நமக்கு இறுதித்தீர்வேத் தவிர பாராம்பரியங்களல்ல.
கிறிஸ்தவத்திலுள்ள அனைத்துச் சபைப் பிரிவுகளிலும் இத்தகைய பல பாரம்பரியங்கள் உள்ளன. சில சபைகளில் இவை அதிகமாகவும் சில சபைகளில் சற்றுக் குறைவாகவும் பாரம்பரியங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகளிலும் இன்று பல்வேறு பாரம்பரியங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.
இதனையே இயேசு கிறிஸ்து, "மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான்." ( மாற்கு 7 : 7 ) என்கின்றார்.
அன்பானவர்களே, பாரம்பரியங்கள் நமக்கு பாவத்திலிருந்து விடுதலை தராது; நமக்கு இரட்சிப்பைத் தராது. தேவனுடைய வார்த்தைகளே நம்மை விடுவிக்கமுடியும். நாம் வேதாகமத்தை ஆழமாக வாசிக்கும்போது எந்தெந்த விதங்களில் நாம் பாரம்பரியத்துக்கு அடிமையாகியுள்ளோம் என்பது புரியும். எந்த ஒரு சபைப் பிரிவிலுள்ள குறிப்பிட்ட தவறான பாரம்பரியத்தையும் தனிப்பட்ட விதத்தில் குறிப்பிட்டு விளக்கவேண்டிய அவசியமில்லை. தேவன் நமக்குப் புத்தியைத் தந்துள்ளார். எனவே, நாமே அவைகளை நிதானித்து அறிந்துகொள்ளலாம்.
ஆம் இந்தப் பாரம்பரியங்களெல்லாம் சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாய் இருக்கிற கட்டுக்கதைகள். இவைகளைவிட்டு தேவபக்தியாய் வாழ முயற்சிபண்ணுவது அவசியம். தேவனது வார்த்தைகளுக்கு மட்டுமே முன்னுரிமைகொடுத்து நம்மை ஒப்புக்கொடுத்து வாழவேண்டியது அவசியம். அப்போதுதான் தேவனது ஆசீர்வாதங்களைப் பெறமுடியும்.
ஆதவன் 🔥 890🌻 ஜூலை 06, 2023 வியாழக்கிழமை
"விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது." ( எபிரெயர் 10 : 38 )
இந்த உலகத்தில் நீதியாக வாழும் மனிதர்கள் பலர் உள்ளனர். நீதி வாழ்க்கைக்கும் ஒரு மனிதன் சார்ந்திருக்கும் மத நம்பிக்கைக்கும் சம்பந்தம்கிடையாது. எல்லா மத நம்பிக்கைக் கொண்டவர்களிலும் நீதியாக வாழ்பவர்கள் உண்டு. ஆனால் இன்றைய வசனம் கூறுகின்றது, "விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்" என்று. அதாவது, நீதியாக வாழ்வதால் மட்டும் ஒருவன் பிழைப்பதில்லை, மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தினால்தான் பிழைக்கிறான்.
அந்த விசுவாசத்திலிருந்து பின்வாங்கினால் அவன் நீதிமானாக இருந்தாலும் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் கர்த்தர். காரணம், நீதிமானாக வாழ்வது என்பது வேறு, கர்த்தர்மேல் வைக்கும் விசுவாசம் என்பது வேறு. கர்த்தர்மேல் நாம் வைக்கும் விசுவாசம்தான் நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்கவும் பாவத்தை மேற்கொள்ளவும் உதவும். ஏனெனில் பாவத்துக்காக தனது இரத்தத்தைச் சிந்தியவர் கிறிஸ்து. இப்படி கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசமே ஆவியின் பிரமாணம். அதுவே நம்மைப் பாவம், மரணம் இவைகளிலிருந்து விடுவிக்கமுடியும்.
இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 2 ) என்று எழுதுகின்றார். இப்படி, "மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்." ( ரோமர் 8 : 4 )
எனவே அன்பானவர்களே, நாம் நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வதுடன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் முழு விசுவாசம் கொண்டவர்களாக வாழவேண்டியதும் அவசியம்.
விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது என்று நாம் வாசித்துள்ளோம். (எபிரெயர் 11:1) ஆம், காணாதவைகளின்மேல் நமது நிச்சயம் கர்த்தரை விசுவாசிப்பதால்மட்டுமே வரும். நோவா நீதிமானாக மட்டுமல்லாமல் கர்த்தர்மேல் பூரண விசுவாசமுள்ளவனாக இருந்ததால் ஆசீர்வாதம்பெற்றார்.
"விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்." ( எபிரெயர் 11 : 7 )