Friday, July 29, 2022

தேவன் நமது செய்கைகளையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

 

ஆதவன் 🖋️ 550  ஜுலை 31, 2022 ஞாயிற்றுக்கிழமை

"கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்." ( சங்கீதம் 33 : 13-15 )

உலக மக்கள் அனைவரையும் ஜாதி, மதம், இனம், மொழி  இவற்றுக்கு அப்பாற்பட்டு தேவன் காண்கின்றார். அவர்கள் செய்யும் செயல்களைக்  கண்ணோக்கிக் கொண்டிருக்கின்றார்

மனிதனது இருதயங்களை உருவாக்கியவர் அவர். தன்னைப்போல பரிசுத்தமுள்ளவர்களாக மனிதர்கள் வாழவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். எனவேதான் இந்த வசனம் கூறுகின்றது, "அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்" என்று

இதன்படியே அவர் உலகத்தை நியாயம் தீர்ப்பார். கிறிஸ்துவை அறிந்தவர்கள் அறியாதவர்கள் ஒவ்வொருவரது மனசாட்சியும் தேவனது குரலாய் இருந்து அவர்களை எச்சரிக்கின்றது. இந்த எச்சரிப்பை மீறி செயல்படும்போது தேவன் அவற்றுக்குத் தண்டனை தீர்ப்பளிப்பார். கிறிஸ்துவை அறியாதவர்கள் அவரது போதனையை இதுவரை அறியாதவர்கள் இவர்களை தேவன் அவரவர் மனச்சாட்சியின்படியே நியாயம் தீர்ப்பார்.

"அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்." ( ரோமர் 2 : 15,16 )

ஆம், நமது இருதயங்களை உருவாக்கி, அது தனது இருதயம்போல பரிசுத்தமானதாக மாறவேண்டும் என விரும்பும் தேவன்,  வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார்அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

மட்டுமல்ல, ஆண்டவர் நமக்குச் செவிகொடுக்கவேண்டுமானால் நமது இருதயம் அவருக்கேற்றதாக இருக்கவேண்டியது அவசியம். "என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்." ( சங்கீதம் 66 : 18 ) என்று வாசிக்கின்றோம்

அன்பானவர்களே, ஒரு இடத்தில்  CCTV கேமரா கண்காணிப்பு இருக்குமானால் நாம் எவ்வளவு கவனமாகச் செயல்படுவோமோ அதுபோன்ற கவனத்துடன் நமது ஆவிக்குரிய வாழ்வை வாழவேண்டியது அவசியம்.   ஆம், தேவன் நமது  செய்கைகளையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கிறார்

தேவன் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்யாதவன் தேவனை அவமதிக்கின்றான்.


 ஆதவன் 🖋️ 549  ஜுலை 30, 2022 சனிக்கிழமை

"வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்." ( கொலோசெயர் 3 : 17 )

எது நடந்தாலும் நன்றியும் ஸ்தோத்திரமும் செய்ய நம்மை அறிவுறுத்தும் வேதம் இன்றைய வசனத்தில் எதைச்செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்து பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரிக்க நம்மை அறிவுறுத்துகின்றது. நமது உலக வேலைகளை உண்மையாய்ச் செய்வதே தேவனை மகிமைப்படுத்துவதுதான்.

நாம் உலக வேலைகளில் இருந்தாலும் இன்றைய வசனத்தின்படி நாம் அவற்றை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உண்மையுடன் செய்யவேண்டும்இப்படிச் செய்யும்போது நமது வேலைகளை நல்ல முறையில் செய்வதுடன் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க மற்றவர்கள் செய்வதுபோல நாம் செய்யமாட்டோம்

இன்று ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கின்றேன் என்று கூறிக்கொள்ளும் பலர் உலக காரியங்களில் உண்மையில்லாமல் இருக்கின்றார்கள்ஆவிக்குரிய சபைக்குப் பல ஆண்டுகளாகச் செல்லும் ஒரு நண்பரை எனக்குத் தெரியும். சபையில் கன்வென்சன் நடத்தவேண்டுமா, இல்லை சபைக்கு நிதி திரட்டவேண்டுமா, என்ன காரியத்திலும் இவர் பாஸ்டரோடு இணைந்து தீவிரமாகச் செயல்படுவார். இவர் அரசாங்க வேலையும் பார்த்துவந்தார். வீட்டிலும் ஒரு சிறிய தொழிலும் நடத்திவந்தார். அதனை அவரது மனைவி நிர்வகித்துவந்தார்.   

சபையின் காரியங்களுக்காகவும் தனது  தொழில் காரியங்களுக்காகவும் அடிக்கடி பொய்கூறி அலுவலகத்துக்கு டிமிக்கி கொடுத்துவிடுவார். அரசு ஆவணங்களில் அவர் களப்பணி செய்ய குறிப்பிட்ட ஒரு  இடத்துக்குச் சென்றதாக குறிப்பு எழுதிவைத்துவிட்டு தனது சொந்த வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவார்.

இதுபோல எனக்குத் தெரிந்த கால்நடை மருத்துவர் ஒருவர் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைபார்த்தார். வாரத்துக்கு ஒருமுறை அலுவலகம் சென்று வருகைப்பதிவேட்டில்  மொத்தமாக ஒருவாரத்துக்கான கையொப்பத்தினையும் போட்டுவிட்டு ஊரில் தனது சொந்த காரியங்களைப் பார்ப்பார். மருத்துவமனை ஊழியர் இவர் காட்டும் சலுகைகளுக்காக இவரைக் காட்டிக்கொடுக்காமல் உயர் அதிகாரிகள் திடீரென்று வந்துவிட்டால்,  "அவர் இப்போதுதான் வெளியே சென்றார்" எனக்கூறி சமாளித்துவிடுவார். இவரும் கிறிஸ்தவர்தான்.   

இப்படிப்பட்டவர்கள் பிதாவாகிய தேவனை அவமதிக்கின்றார்கள் என்றுதான் கூறவேண்டும். எத்தனையோபேர் வேலையில்லாமல் திண்டாடும்போது கிருபையாய் தேவன் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்யாதவன் தேவனை அவமதிக்கின்றான்

அன்பானவர்களே, இத்தகைய  தவறினை உங்கள் பணியிடங்களில் செய்திருந்தால் தேவனிடம் மன்னிப்பு வேண்டுங்கள்.    வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே சரியாக நேர்மையாகச் செய்யுங்கள். இப்படிச் செய்வதும் தேவனை மகிமைப்படுத்துவதுதான்.