Sunday, October 29, 2023

வேதாகம முத்துக்கள் - அக்டோபர், 2023

 

                           - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

ஆதவன் 🔥 977🌻 அக்டோபர் 01, 2023 ஞாயிற்றுக்கிழமை

"நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்."  (சங்கீதம் 92: 12, 13) 

தமிழ் நாட்டின் தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்களில் நாம் அதிக அளவில் பனைமரங்களைக் காண முடியும். பனை மரங்களைப் பார்த்தால் அவை செழிப்பாகத் தெரியாது. வறண்ட பகுதியில் வளர்வதால் அவை வறண்டுபோனவையாகவே இருக்கும். 

நான் சாத்தான்குளத்தில் பணி செய்தபோது ஒருமுறை பேருந்தில் பயணம் செய்தபோது இந்த வசனம் திடீரென எனது நினைவில் வந்தது. அது ஒரு நவம்பர் மாதம். நல்ல மழை பெய்திருந்ததால் பார்க்குமிடமெல்லாம் ஒரே பசுமை. வாழை மரங்களும், கடலை, பயிறு வகைகளும் பயிரிடப்பட்டு பச்சை பசேலென்றிருந்தது அந்தப் பகுதி.  ஆனால் இதே பகுதி ஏப்ரல், மே மாதங்களில் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். ஆம்,  ஏப்ரல், மே  மாதங்களில் பார்த்தால் பாலைவனம்போல இருக்கும். பனை மரத்தைத்தவிர வேறு எதனையும் நாம் காண முடியாது. 

ஆம், இந்தப் பனைமரத்தைப் போலவே நீதிமான் இருப்பான் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. கடுமையான வறட்சியையும், தண்ணீர் பஞ்சத்தையும் பனைமரம் எதிர்கொண்டு செழித்து வளரும். அதுபோல நீதிமான் எந்தவிதமான சோதனைகளையும் தங்கி கர்த்தருக்குள் நிலைத்துச் செழித்திருப்பான். மட்டுமல்ல, அந்த வறண்ட காலத்தில்தான் பனைமரம் மற்றவர்ளுக்குப்  பயன்படும் சுவையான பதநீரைத் தந்து உதவுகின்றது. மேலும் பனை மரத்தின் அனைத்துப் பகுதிகளுமே மக்களுக்குப் பயன் தாரக்கூடியவை. கர்த்தருக்குள் நிலைத்திருக்கும் நீதிமானும்  அப்படியே முழுவதும் மக்களுக்குப் பயன்தரக்கூடியவனாக இருப்பான். எனவேதான் வேதம் பனை மரத்தை நீதிமானுக்கு ஒப்பிடுகின்றது. 

மேலும், "அவன் லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்" என்றும் கூறப்பட்டுள்ளது.  நமது பகுதிகளில்  தேக்கு மரத்தை எப்படி உறுதியானதாக மதிப்புமிக்கதாகக் கருதுகின்றோமோ  அதுபோன்ற உறுதியான விலை உயர்ந்த மரம்தான் கேதுரு மரம்.  சாலமோன் தேவனுக்கென்று ஆலயத்தைக் காட்டியபோது கேதுரு மரங்களால் அதனைக் கட்டினான் என்று வாசிக்கின்றோம். தேக்கு மரம் எப்படி நூற்றாண்டுகளைக் கடந்தாலும் கெட்டுப்போகாமல் உறுதியாக உள்ளதோ அப்படியே கேதுரு மரப் பலகைகளும் இருக்கும். எனவே நீதிமானுக்கு அது உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், துன்மார்க்கரோ புல்லைப்போல இருக்கின்றனர். அதாவது அவர்கள் செழிப்பாக வாழ்வதுபோலத் தெரிந்தாலும் அந்தச் செழிப்புக் குறுகியதே.  மழை காலத்தில் பனை மரத்தைச் சுற்றிலும் இருக்கும் பசுமையான பயிர்கள் எதனையும் நாம் கோடைகாலத்தில் காண முடியாது. அவை இருந்த இடமே தெரியாமல் அவை அகன்றுபோயிருக்கும்.

இதனையே சங்கீத ஆசிரியர்  "இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை" (சங்கீதம் 37: 10) என்று கூறுகின்றார். ஆம், மழை மாதங்களில் பனை மரத்தைத் சற்றிலுமிருந்த செழிப்பு இல்லாமல் போனதுபோல அவர்கள் தேவனது பார்வையில் வெறுமையானவர்கள் ஆவார்கள். அதாவது, உலக பார்வையில் அவர்கள் செழிப்பானவர்கள் போலத் தெரிந்தாலும் தேவ பார்வையில் அவர்கள் ஒன்றுமில்லாதவர்களே. 

இன்றைய வசனத்தின் பிற்பகுதி, "கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்." என்று கூறுகின்றது. அதாவது கர்த்தரோடு உறுதியாக நாட்டப்பட்டவர்கள் தான் வேதம் குறிப்பிடும்  நீதிமான்கள்.  அவர்கள் பனையைப்போலவும் கேதுரு மரத்தைப்போலவும் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.  தேவனோடு இணைந்த நீதியுள்ள வாழ்க்கை மூலம் நாமும் பனையைப்போலவும் கேதுருவைப்போலவும் உறுதியாக வாழ்வோம்; பிறருக்கும் பயன்தருவோம். 


ஆதவன் 🔥 978🌻 அக்டோபர் 02, 2023 திங்கள்கிழமை

"என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்." ( யோவான் 8 : 54 )

மேன்மைபாராட்டல் என்பது தற்பெருமையின் ஒரு அம்சம். நான்தான் எல்லோருக்கும் மேலானவன் மற்றவர்களெல்லாம் என்னைவிட அற்பமானவர்கள் எனும் எண்ணமே ஒருவரைப் பெருமைகொள்ளச் செய்கின்றது. பொதுவாக அரசியல்வாதிகள் இப்படிப்பட்டக் குணத்தோடு இருக்கின்றனர். அதாவது மற்றவர்களைவிட நாம் உயர்ந்திருப்பதுதான் நம்மைத் தலைவனான உலகிற்குக் காட்டும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். 

எனவே, தங்களைப் புகழ்ந்து, தங்களுக்குப் பல்வேறு அடைமொழிகளையும் பட்டங்களையும் கொடுத்து சுவரொட்டிகளும் இதர விளமபரங்களையும் செய்கின்றனர். ஆனால் இப்படித் தன்னைத்தானே மகிமைப்படுத்துவது வீண் என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார். நமது உத்தமமமான செயல்பாடுகளையும் உண்மையையும் பரிசுத்தத்தையும் பார்த்து தேவன்  நம்மை மகிமைப்படுத்தவேண்டும். இதனையே, "என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர்" என்று இயேசு கூறுகின்றார். 

அப்போஸ்தலரான பவுலும் இதனையே கூறுகின்றார். "தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்." ( 2 கொரிந்தியர் 10 : 18 ) அதாவது தன்னைத்தான் புகழுகின்றவன் நல்லவனாக இருக்கமுடியாது. 

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னைத்தான் தாழ்த்தி அடிமையின் நிலைக்குத் தன்னைத் தாழ்த்தியதால் தேவன் அவரை மிகவே உயர்த்தியதை நாம் பார்க்கின்றோம். ஆம், "தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். ( பிலிப்பியர்  2: 9-11 )

அப்போஸ்தலரான பவுல், மேன்மைபாராட்டவேண்டுமானால்  ஒருவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்ட வேண்டும் என்று கூறுகின்றார்.  "மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மை பாராட்டக்கடவன்." ( 2 கொரிந்தியர் 10 : 17 ) காரணம், ஆவிக்குரிய அனுபவங்கள் மிகவும் அதிகமாகப் பெற்ற பவுல் அடிகள், அத்தகைய அனுபவம் பெறுவதே பெருமைக்குரிய காரியம் என்கின்றார். (2 கொரிந்தியர் 12:2-5)

அன்பானவர்களே, மிகப்பெரிய அரசர்களாக இருந்து ஆட்சி செய்த பலரும் ஒரு குறுகிய காலத்துக்கு மட்டுமே தங்களது பெருமையையும் மகிமையையும் காத்துக்கொண்டனர்.  ஆனால், தங்களைத் தாழ்த்தி வாழ்ந்த பரிசுத்தவான்கள் பலரையும்  நினைவில் வைத்துள்ளோம். அவர்களில் பலர் வணக்கத்துக்குரியவர்களாக உயர்த்தப்பட்டுள்ளனர்.   காரணம், அவர்களது தாழ்மையினைப் பார்த்து பிதாவாகிய தேவனே அவர்களை மகிமைப்படுத்தியுள்ளார். 

யூதர்கள் தேவனை  வணங்கினர் என்றாலும்  அவரையும் அவரது குணங்களையும் அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை. எனவேதான் இயேசு கிறிஸ்து,  "அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்."  என்கிறார்.  ஆம், தேவன் தேவன் என்று சொல்லிக்கொள்வதல்ல; மாறாக அவரையும் அவரது குணங்களையும் உணர்ந்து பிரதிபலிக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அப்படிப் பிரதிபலிக்கும்போது பிதாவாகிய தேவன் நம்மையும் மகிமைப்படுத்துவார். ஆம், நம்மை நாமே சுய விளம்பரங்கள்மூலம் நம்மை மகிமைப்படுத்தவேண்டிய அவசியமில்லை. 


ஆதவன் 🔥 979🌻 அக்டோபர் 03, 2023 செவ்வாய்க்கிழமை

"என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 30 : 2 )

எகிப்து  என்பது நமது பழைய பாவ வாழ்க்கையைக் குறிக்கின்றது. இஸ்ரவேல் மக்களை எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மோசே மீட்டு கானானை நோக்கி வழி நடத்தியதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு பரம கானானை நோக்கி வழிநடத்துகின்றார்.

மோசே இஸ்ரவேல் மக்களை கானானுக்குநேராக நடத்தியபோது தேவன் அவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு  கட்டளை "எகிப்துக்குத் திரும்பிச் செல்லவேண்டாம்' என்பதுதான். ஆனால் அந்த மக்கள் எகிப்தின் செழிப்பிலும் அங்கு தாங்கள் அனுபவித்த நன்மைகளிலும் நாட்டம் கொண்டு அவை இப்போது கிடைக்காததால் மோசே மீது கோபம் கொண்டனர். தங்களுக்கு ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிச்செல்ல முயன்றனர். தேவன்மேல் முறுமுறுத்தனர். 

"நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டு வந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள். பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திருப்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்." ( எண்ணாகமம் 14 : 3, 4 ) என்று வாசிக்கின்றோம்.

கிறிஸ்துவை அறிந்துகொண்டபின் நமக்கு பழைய காரியங்கள் பலவற்றைச் செய்ய முடியாது. ஏனெனில், கிறிஸ்துவுக்குள் நாம் வாழவேண்டுமானால் சில ஒறுத்தல்களைச் செய்யவேண்டும். இவைகளையே சிலுவை சுமக்கும் அனுபவம் என்கின்றோம். நாம் கிறிஸ்துவை அறிந்துகொள்ளுமுன் வாழ்த்த வாழ்க்கை நமக்கு இன்பமான வாழ்க்கைபோலத் தெரியும். அதற்காக நாம் கிறிஸ்துவைவிட்டுப் பின்வாங்கினால் எகிப்துக்குத் திரும்பியவர்களாவோம். அப்படி எகிப்தின் நிழலிலே ஒதுங்கவேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா மூலம் தேவன் இதனையே மீண்டும் வலியுறுத்துகின்றார். "சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதனால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதனால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!" ( ஏசாயா 31 : 1 )

உலக ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றது என்பதற்காக நாம் கிறிஸ்துவைவிட்டு விலகி பழைய பாவ வாழ்க்கைக்கு நேராகக் சென்றுவிடக் கூடாது.  "குதிரைகள், இரதங்கள் அநேகமாக இருப்பதனால்" என்று இங்கு கூறப்பட்டுள்ளது.  இவை செழிப்புக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளன. தற்போது விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளதுபோல அக்காலத்தில் மக்கள் குதிரைகளையும், ஒட்டகங்களையும்  இரத்தங்களையும்  வைத்திருந்தனர்.  கிறிஸ்துவை அறிந்துகொண்டபின் பழைய நாட்டம்கொண்டு வாழ்பவர்களுக்கு  ஐயோ! என்று இந்த வசனம் கூறுகின்றது.

எனவே அன்பானவர்களே, இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், உலக ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றது எப்பதற்காக எகிப்து எனும் பழைய வாழ்க்கைக்கு நேராக நாம் செல்வோமானால் நமக்கு ஆசீர்வாதமல்ல; சாபமே வரும் என்று இன்றைய வசனம் அறிவுறுத்துகின்றது. ஆம், எகிப்துக்குத் திரும்பிச் செல்லாமல் நம்மைக் காத்துக்கொள்வோம்.  

ஆதவன் 🔥 980🌻 அக்டோபர் 04, 2023 புதன்கிழமை

"மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கின்றன." ( கலாத்தியர் 5 : 17 )

போராட்டமிக்க ஆவிக்குரிய வாழ்வைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் இங்கு குறிப்பிடுகின்றார். நாம் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழவேண்டும், பரிசுத்தமாக வாழவேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் இந்த உலகின்  பல்வேறு விதமான இச்சைகள் நம்மை இழுக்கின்றன. அதாவது நாம் தேவனுக்கென்று வாழ விரும்பும் வாழ்க்கையை வாழ விடாதபடி நமது உடலின் விருப்பங்கள் நம்மை மறுபுறம் இழுக்கின்றன. இதனையே, "நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கின்றன." என்று குறிப்பிடுகின்றார் பவுல். 

இது ஏன் என்பதனையும் விளக்குகின்றார் அப்போஸ்தலரான பவுல். அதாவது மனிதன் இயல்பிலேயே நல்லவன் அல்ல. அதனால் நன்மை செய்யவேண்டும் என்று நாம் விரும்பினாலும் நம்மால் நன்மை செய்ய முடிவதில்லை. "...என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை." ( ரோமர் 7 : 18 )

இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருப்பதால், "நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்." ( ரோமர் 7 : 19 ) என்கின்றார். 

அன்பானவர்களே, இந்த முரண்பாட்டினை மேற்கொள்ளவேண்டுமானால் நம்மில் பரிசுத்த ஆவியானவர் செயல்பட வேண்டும். அவருக்கு நம்மை முற்றிலுமாகக் கையளிக்கவேண்டும். நமது இயலாமையை தேவனுக்குத் தெரிவிக்கவேண்டும். "ஆண்டவரே,நான் உமக்கு ஏற்ற பரிசுத்த வாழ்வு வாழ விரும்புகின்றேன்; என்னால் அது முடியவில்லை. எனது பலவீனத்தை நீக்கி நான் உமது சித்தம் செய்ய உமது ஆவியானவரை எனக்குத் தாரும் என உளப்பூர்வமாக வேண்டும்போது தேவன் நமக்கு உதவுவார். 

அப்படி தேவ ஆவியானவர் நம்மில் வரும்போதுதான் நாம் அவருக்கேற்ற தூய வாழ்வு வாழமுடியும். "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட் பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 ) அப்படி தூய ஆவியானவரின் நிலைத்து வாழும்போதுதான் நாம் ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள். இல்லையானால் நாம் வெறுமையான ஆராதனைக் கிறிஸ்தவர்களாகவே  இருப்போம்.

இப்படி நாம் வாழும்போது கிறிஸ்து நம்மில் இருக்கிறார் என்று பொருள். அப்படி "கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 )

அன்பானவர்களே, வெறும் சடங்குகளால் பரிசுத்த ஆவியானவர் நிம்மிடம் வந்து செயலாற்ற முடியாது. தாகத்தோடு வேண்டும்போதுதான் ஆவியானவரின் அபிஷேகம் நம்மை நிரப்பி நமைத் தூயவராக மாற்ற முடியும். "தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்." ( ஏசாயா 44 : 3 ) என்கிறார் கர்த்தராகிய ஆண்டவர்.

"பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?."( லுூக்கா 11 : 13 ) இயேசு கிறிஸ்து கூறுவதுபோல, வேண்டுவோம் ; பெற்றுக்கொள்வோம். 


ஆதவன் 🔥 981🌻 அக்டோபர் 05, 2023 வியாழக்கிழமை

"ஏரோது,................அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு, அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை." ( லுூக்கா 23 : 8, 9 )

இன்றைய வசனம் நமக்கு முக்கியமான ஒரு செய்தியைத் தருகின்றது. இயேசு கிறிஸ்துவைப் பற்றி நாம் பல காரியங்களைக் கேள்விப்பட்டிருக்கலாம்; அவர் செய்த அற்புதங்களைக் குறித்துப்   பலர் சொல்லும் சாட்சிகளை நாம் கேட்டிருக்கலாம். இத்தகைய செய்திகள் நமக்கு மனதளவில் அவர்மேல் ஒரு ஆர்வத்தைத் தந்திருக்கலாம். ஆனால், மெய்யான மனம் திரும்புதல் இல்லாமல் வெறும் கவர்ச்சி ஆரவாரத்திற்காக மட்டுமே நாம் அவரைத் தேடினால் நமக்கு அவர் பதில் தரமாட்டார். 

ஏரோது, அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு, அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் வினாவினான். என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அவன் ஏன் அவரைக் காண ஆசையாய் இருந்தான் என்றால் மனம் மாற்றமடைந்ததினால் அல்ல; மாறாக,  "ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான்." ( லுூக்கா 23 : 8, 9 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இயேசு ஒரு பிரபலமான மனிதராக இருந்தார் என்பதால் அவரைக் காண்பதற்கு விரும்பினானே தவிர உண்மையான அன்பினால் அல்ல. அவன் உள்ளத்தில் ஏற்கெனவே அவரைக் கொலை செய்யவேண்டும் எனும் எண்ணம் நிரம்பி இருந்தது. இயேசு கிறிஸ்துவின் பார்வையில் அவன் ஒரு நரி போன்றவன்; கபடஸ்தன். எனவேதான் மூன்று நாட்களுக்கு முன்பு இயேசு கிறிஸ்துவிடம் சில பரிசேயர்கள் வந்து, "இங்கிருந்து சென்றுவிடும் ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான்" என்று அறிவித்தபோது அவர்:- 

"நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம் நாளில் நிறைவடைவேன். இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்." ( லுூக்கா 13 : 33 ) என்று கூறினார். 

இயேசு கூறியதுபோல அவன் ஒரு நரி போன்றவன்தான். மட்டுமல்ல அவன் துன்மார்க்க வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்தான். தனது சகோதரன் மனைவியைத்  தன்னோடு சேர்த்துக்கொண்டு வாழ்ந்துவந்தான். அதனை யோவான் ஸ்நானகன்  சுட்டிக்காட்டியபோதும் மனம்திரும்பாமல் அந்தப் பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்றிட  அவரைக் கொலைசெய்தான்.  விபச்சாரம், கொலை, அதிகார வெறி கொண்டிருந்தான். ஆனால் இப்போது  அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு அவரிடம் பல காரியங்களைக்குறித்துக் கேட்கின்றான்.  

ஏரோது செய்த இதே பாவங்களைச் செய்த தாவீது மனம் வருந்தி தேவனிடம் மன்னிப்பு வேண்டி தேவ இரகத்தைப் பெற்றுக்கொண்டதை நாம் அறிவோம். ஆனால் ஏரோது அப்படி பாவ உணர்வடையவில்லை. 

அன்பானவர்களே, நாம் நமது பாவங்களை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு வேண்டினால் அவர் நமக்குப் பதில் தருவார். நமது குற்றங்களை உணர்ந்திருந்தால் கூட அவர் நம்மிடம் பரிந்து நமது வேண்டுதல்களை நிறைவேற்றுவார். மாறாக, ஏரோதைப்போல எந்தக்  குற்ற உணர்வோ மனம்திரும்புதலோ இல்லாமல் அவர் செய்த அற்புதங்களைக் குறித்து  பலர் சொல்லும் சாட்சிகளை மட்டும் கேட்டு நமக்கும் அவர் பதில் தருவார் என்று எண்ணிக்கொண்டிருப்போமானால் நமக்கு அவர் எந்த மறுமொழியும்  தரமாட்டார். 


ஆதவன் 🔥 982🌻 அக்டோபர் 06, 2023 வெள்ளிக்கிழமை

"கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்."( எரேமியா 14 : 7 )

நாம் அனைவருமே தேவனை நோக்கி ஜெபிக்கவேண்டிய ஜெபமாக இன்றைய வசனம் இருக்கின்றது. நாம் எவ்வளவுதான் நல்லவர்களாக வாழவேண்டுமென்று நினைத்தாலும், நம்மையும் மீறி பாவம் செய்துவிடுகின்றோம். பாவத்தில் பெரிய பாவம் சின்ன பாவம் என்றில்லை; தேவனது குணங்கள் நம்மில் இல்லாமல் போகும்போது நாம் பாவம் செய்கின்றோம்.

பாவம் செய்வது என்பது கொலை, கற்பழிப்பு, திருட்டு போன்ற செயல்கள்தான்; இவற்றைச் செய்யாததனால் நாம் பாவம் செய்யவில்லை என்று பலரும் எண்ணிக்கொள்கின்றனர்.  வேறு சிலர் தங்களிடம்  மது, பீடி, சிகரெட், வெற்றிலை, போதை வஸ்துக்கள் உபயோகித்தல்  போன்ற பழக்கங்கள் இல்லாததால் தங்களை பாவம் செய்யாதவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர்.  ஆனால் அவைகளை இயல்பிலேயே செய்யாத மனிதர்கள் எல்லா மதங்களிலும் இருக்கின்றனர்.

அன்பானவர்களே ஆனால்,    பிறரை மதிக்காதபோது; வசதியில் குறைந்தவர்களை அற்பமாய் எண்ணும்போது; அந்தஸ்து பார்க்கும்போது; பிறருக்கு விரோதமான எண்ணங்கள் நம்மில் எழும்போது; நம்மோடு பணி செய்கின்றவர்களைப் பற்றி உயரதிகாரிகளுக்கு புகார் அளிக்கும்போது;  பொறாமை, மன்னிக்கமுடியாமை போன்ற குணங்கள் நம்மில் இருக்கும்போது; பெருமை ஏற்படும்போது;  நாம் பாவம் செய்கின்றோம்.  

பெரிய பாவம் என்று பொதுவாக மனிதர்கள் கருதும் பாவம் எதனையும் எரேமியா   செய்யவில்லை. ஆனால் அவர்  "எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்." என்று ஜெபிக்கின்றார். 

இந்தப் பாவ உணர்வும் அதனை அறிக்கையிடுதலும் பரிசுத்தவான்கள், நீதியை விரும்பியவர்கள் அனைவரிடமும் இருந்தது. தாவீது ராஜாவும் தனது பாவங்களை அறிக்கையிடும்போது, "தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்." ( சங்கீதம் 51 : 4 ) என்று கூறுகின்றார். 

தேவனோடு நெருங்கிய உறவில் வளரவேண்டுமானால் நாம் அனைவரும் இந்த உணர்வோடு வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. கடமைக்காக ஆலயத்துக்குச் செல்வதனாலும், ஜெபிப்பதனாலும், வேதாகமத்தை வாசிப்பதனாலும் ஜெபக்கூட்டங்களில் கலந்து கொள்வதாலும் எந்த ஆவிக்குரிய நன்மையையும் நமக்கு ஏற்படாது; தேவ உடனிருப்பையும் அவரது பிரசன்னத்தையும் நாம் அனுபவிக்கமுடியாது. 

நாம் நமது பாவங்களை உணர்ந்து அவரது மன்னிப்பை இறைஞ்சும்போது இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுவதுபோல, நமது  அக்கிரமங்கள் நமக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், நமது சீர்கேடுகள் எவ்வளவு  மிகுதியாயிருந்தாலும்  அவர் நமக்குக் கிருபை செய்து நமக்கு இரக்கம் பாராட்டுவார். 

ஆதவன் 🔥 983🌻 அக்டோபர் 07, 202 சனிக்கிழமை

"தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்." ( 2 கொரிந்தியர் 1 : 4 )

இந்த உலகத்தில் நமக்கு உபத்திரவம் உண்டு என்றுதான் இயேசு கிறிஸ்து கூறினார். "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" ( யோவான் 16 : 33 ) உபத்திரவம் நம்மைப் புடமிடுகின்றது; கிறிஸ்துவைப்போல நாம் மாறிட உபத்திரவம் ஒரு வழியாக இருக்கின்றது. இன்றைய வசனத்தில் அப்போஸ்தலராகிய பவுல் உபாத்திரவப்படுவதன் இன்னொரு காரணத்தை விளக்குகின்றார். 

அதாவது, "எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி" என்கின்றார். அதாவது இந்த உலகத்தில் மனிதர்கள் பல்வேறு விதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த மனிதர்களுக்கு ஆறுதல் கொடுக்கத் தகுதியுள்ளவர்களாக நாம் மாறுவதற்கு தேவன் நமக்குத் துன்பங்களைக் கொடுக்கின்றார் என்கின்றார் அவர்.  

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் பட்டப்பாடுகளும் இதனால்தான்.  இதனையே நாம் எபிரெயருக்கு எழுதிய நிருபத்தில், "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." ( எபிரெயர் 4 : 15 ) என்று வாசிக்கின்றோம். ஆம், எல்லாவிதத்திலும் அவரும் நம்மைபோலச் சோதிக்கப்பட்டார். "ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்." ( எபிரெயர் 2 : 18 ) 

'தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்' என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது நாம் வெட்டிப் பேச்சாக பிறருக்கு ஆலோசனைகள் கூறலாம். ஆனால் அந்தத் துன்பத்தை அனுபவிக்கும் மனிதனுக்குத்தான் உண்மையான வலி புரியும். நாம் வீண் அறிவுரைகள் கூறிக்கொண்டிருப்போமானால் துன்பப்படும் மனிதர்களுக்கு அது வெற்று உபதேசமாகவேத் தெரியும். 

இன்றைய வசனம் மேலும் கூறுகின்றது, அப்படி நாம் துன்பம் அனுபவித்தாலும் தேவன் அதனோடுகூட ஆறுதலும் தருவார் என்கின்றது. அதாவது, "எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்." என்கின்றார் பவுல்.

மனிதர்களுக்கு ஆறுதலாளிக்கும் கருவிகளாக நாம் பயன்படுவதற்கு நாம் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி முதலில் நமக்குத் தூபங்களைத் தந்து, ஆறுதலையும் அளித்து அதுபோல நாமும் துன்பப்படும் மனிதர்களுக்கு ஆறுதல் அளிக்கும்படிச் செய்கின்றார். 

அதாவது தேவன் நம்மை வெறும் புத்தகப் படிப்பை மட்டுமல்ல; மாறாக விஞ்ஞானத் தேர்வுக்குத் தயாராகும் மாணவன் செய்முறை பயிற்சியும் பெறுவதுபோல நமக்கும் பயிற்சியளிக்கின்றார். இப்படி தேவன் பயிற்சியளிப்பதால் பிறருக்கு ஆறுதல் அளிக்கும் நாமும் உத்தமர்கள் ஆகின்றோம். "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." ( யாக்கோபு 1 : 12 )

சோதனைகளை பொறுமையோடு தங்கி, மற்றவர்களுக்கும் ஆறுதலாளிக்கும் கருவிகளாக மாறுவோம். 


ஆதவன் 🔥 984🌻 அக்டோபர் 08, 2023 ஞாயிற்றுக்கிழமை

"ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்." ( எபிரெயர் 12 : 12, 13 )

ஆவிக்குரிய வாழ்வு வாழும் நாம் தேவனால் சிலவேளைகளில் தண்டிக்கப்படுகின்றோம்.  அப்படித் தண்டிக்கப்படுவது தேவன் நம்மை நேசிக்கின்றார் என்பதற்கு அடையாளமாக இருக்கின்றது. அதாவது அவர் நம்மைத் தனது சொந்த பிள்ளைகளாக எண்ணி நடத்துகின்றார் என்று பொருள். "நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 7 ) நாம் நமது பிள்ளைகள் தவறு செய்யும்போது தண்டிக்கின்றோம். அப்படித் தண்டியாமல் விடுவோமானால் அந்தப் பிள்ளைகள் நல்ல வழியில் நடக்க முடியாது.

இன்று பெரும்பாலான குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தான் இருக்கின்றார். எனவே அவர்களுக்குப் பெற்றோர் அதிக செல்லம்கொடுத்து வளர்கின்றார். இதுவே இன்றைய பல குழந்தைகள் பள்ளிகளிலும் சமூகத்திலும் பல்வேறு தவறுகள் செய்து கெட்டு அழிவுறக் காரணமாக இருக்கின்றது. ஆம், சரியானபடி தண்டிக்காத குழந்தைகள் நல்ல வாழ்க்கை வாழ முடியாது. 

இன்றைய தியான வசனம் இந்தப் பின்னணியில்தான் கூறப்பட்டுள்ளது. இந்தப் பன்னிரெண்டாம் அதிகாரம் ஐந்தாம் வசனத்திலிருந்து  தொடர்ந்து வாசித்தால் இது புரியும். 

இப்படித்  தேவனால் தண்டிக்கப்படும்போது நாம் சோர்ந்து போகின்றோம். "ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்." என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. 

அதாவது தேவன் நம்மைத் தண்டித்ததனால் நாம் சோர்ந்துபோயிருக்கலாம், அப்படிச் சோர்ந்துபோன கைகளையும் முழங்கால்களையும் நாம் நிமிர்த்தி அவை ஒரேயடியாக பிசகிப்போகாமல் இருக்க நமது வழிகளைச் செம்மைப்படுத்தவேண்டும் என்று இந்த வசனம் கூறுகின்றது. ஆம், நமக்குள் நாம் நமது செயல்களைச் சிந்தித்துப் பார்த்து, தேவன் நமக்கு ஏன் இந்தத் தண்டனையைத் தாத்தார்  எனக் கண்டறிந்து நமது வழிகளைத் திருத்திக்கொள்ளவேண்டும். 

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு எதிர்  வீட்டில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. அந்தக் குடும்பத்தின் தகப்பனார் அந்தக் குழந்தைகள் சிறு தவறு செய்தாலும் கடுமையாகத் தண்டிப்பார். சிலவேளைகளில்  தப்பு செய்யும் தனது குழந்தைகளை காலைமுதல் மலை வரை  உணவு கொடுக்காமல் கட்டி வைத்துவிடுவார். எங்களோடு விளையாட வரும்போது அந்தக் குழந்தைகள், "எங்க அப்பா செத்துப்போயிட்டா நல்லா இருக்கும்" என்று கூறுவதுண்டு. ஆனால் இன்று அனைத்துக் குழந்தைகளும் நல்ல உயர் பதவிகளில் உள்ளனர். இப்போது தங்கள் தகப்பனை உயர்வாகப் பேசுகின்றனர். எங்களது அப்பா எங்களை அப்படி வளர்த்ததால்தான் நாங்கள் இன்று நல்லா இருக்கிறோம்" என்று கூறுகின்றனர்.  

இப்படிக் கூறுவதால் நாம் அனைவரும் மேற்கூறிய முரட்டுத் தகப்பன் போல இருக்கவேண்டும் என்று பொருளல்ல, மாறாக குழந்தைகள் தவறு செய்யும்போது தண்டித்து வளர்க்கவேண்டும். "எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்." ( எபிரெயர் 12 : 11 )

தேவன் தண்டிக்கும்போது பொறுமையாய் இருந்து நம்மைத் திருத்திக்கொள்வோம்.


ஆதவன் 🔥 985🌻 அக்டோபர் 09, 2023 திங்கள்கிழமை

"நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 27 : 11 )

கைதியான பவுலையும் அவரோடு வேறு சில கைதிகளையும் ரோமாபுரிக்குக் கப்பலில் கொண்டுசென்றனர். அரசனின் உத்தரவுப்படி யூலியு எனும் நூற்றுக்கு அதிபதியின்  தலைமையில் போர்சேவகர்கள் அவர்களைக் கொண்டு சென்றனர். நூற்றுக்கு அதிபதியான "யூலியு பவுலைப் பட்சமாய் நடப்பித்து, அவன் தன் சிநேகிதரிடத்திலே போய்ப் பராமரிப்படையும்படிக்கு உத்தரவு கொடுத்தான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 27 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது.  ஆம், யூலியு பவுலை மதித்ததால் அவரை நட்புடன் நடத்தினான். 

அந்தக் கடல் பயணம் மிகுந்த துன்பமும் அலைக்களிப்புமுள்ளதாக இருந்தது. புயலையும் கடும் போராட்டத்துடன் கடந்து நல்ல துறைமுகம் எனும் துறைமுகத்தை அடைந்தனர். ஆனால் தேவ எச்சரிப்பு பெற்ற பவுல் நூற்றுக்கு அதிபதியிடம் இதற்குமேல் கடல் பயணம் தற்போது வேண்டாம் என எச்சரித்தார். ஆனால் "நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான்." என்று இன்றைய வசனம் கூறுகின்றது.

நூற்றுக்கு அதிபதி பவுலை நட்புடன் நடத்தினாலும் பவுலைக்குறித்த ஒரு குறைந்த மதிப்பீடே அவனுக்கு இருந்தது. என்ன இருந்தாலும் பவுல் ஒரு சிறைக்கைதி, எளிய தோற்றம் கொண்டவர், கடல் பயணத்தைப்பற்றியும் பருவநிலைகளைப் பற்றியும் எதுவும் தெரியாதவர்.  எனவே அவன் பவுலை நம்பவில்லை.  மாறாக, கப்பல் மாலுமிகள் நல்ல அனுபவம் மிக்கவர்கள்; பல ஆயிரம் மைல் கடல் பயணம் செய்தவர்கள்; காற்றின் போக்கையும் கடலில் அலைகளின் தன்மைகளையும் நன்கு அறிந்தவர்கள்.  எனவே, அவர்கள் கூறுவதுதான் சரியாக இருக்கும் என்று எண்ணினான். 

இன்று உலகில் பலரும் இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ள நூற்றுக்கு அதிபதி போலவே இருக்கின்றோம். ஊழியர்களைக் கனம் பண்ணுகின்றோம், ஆனால் அவர்கள் மூலம் கூறப்படும் வார்த்தைகளை அலட்சியம் பண்ணுகின்றோம். தேவ வார்த்தைகளையும்; தேவ மனிதர்கள் கூறுவதையும்விட அனுபவமிக்கவர்களது பேச்சையும் திறமையையும் நாம் பலவேளைகளில் நம்புகின்றோம். 

ஆனால் நடந்தது என்ன? யூரோக்கிலித்தோன் எனும் கடும் கற்று கப்பலில் மோதிக்  கப்பலைக் கவிழ்த்துப்போட்டது. ஆனாலும் தேவன் தனது ஊழியனான பவுலைக் கனம் பண்ண விரும்பினார். எனவே கப்பல் சேதமடையுமுன்பே பவுல் மூலம் கப்பலில் பயணம் செய்தவர்களுக்கு ஒரு செய்தியைக் கொடுத்தார். அதனைப் பவுல் மற்றவர்களுக்குக் கூறி தைரியப்படுத்தினார் "என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று: பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும், இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 27 : 23, 24 )

ஆம் அன்பானவர்களே, ஊழியர்களை மதிக்கின்றோம் என்பது வெறும் காணிக்கைகளைக் கொடுப்பதல்ல. அவர்களது வார்த்தைகளை விசுவாசிப்பது; அவற்றை மதித்து நம்மைத் திருத்திக்கொள்வது; சூழ்நிலைகளையும் அனுபவமிக்கவர்களது வார்த்தைகளையும்விட தேவ வார்தைகள்மேல் விசுவாசம் கொள்வது. அப்படி இல்லையானால் நாமும் யூலியு  எனும் நூற்றுக்கு அதிபதிபோலவே இருப்போம். தேவ வார்த்தைகளை விசுவாசிப்போம்; நமது வாழ்க்கைக் கப்பல் யூரோக்கிலித்தோன் காற்றினால் கவிழ்ந்துபோகாமல் காத்துக்கொள்வோம்.


ஆதவன் 🔥 986🌻 அக்டோபர் 10, 2023 செவ்வாய்க்கிழமை

"கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்." ( 2 பேதுரு 2 : 9 )

இன்றைய வசனம் அதிக விளக்கம் இல்லாமலேயே புரியக்கூடிய வசனம். அதாவது தேவன் தேவ பக்தியுள்ளவர்களை சோதனைகளிலிருந்து விடுவிக்கின்றார்; தங்கள் தவறுக்கு மனம் வருந்தி திருந்தாத அக்கிரமக்காரரை அழிகின்றார். 

அப்போஸ்தலரான பேதுரு இதனை விளக்க ஆதியாகமத்திலிருந்து லோத்துவின் வாழ்க்கையினை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். அதனையே இன்றைய வசனத்தின் முத்தின வசனத்தில் நாம், "நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;" ( 2 பேதுரு 2 : 8 ) என்று வாசிக்கின்றோம். 

சோதோம் கொமோரா நகரங்களில் பாவம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக, பாலியல் பாவங்கள். அங்குள்ள மனிதர்கள் ஆண் புணர்ச்சிக்காரர்களாக இருந்தனர். அந்தப் பாவங்களைக் கண்டும் கேட்டும் தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய  லோத்து என்று மேற்படி வசனத்தில் வாசிக்கின்றோம். இப்படிப் பாவம் அதிகரித்ததால் தேவன் அந்த நகரங்களை அழிந்திடத் தீர்மானித்தார். ஆனால் அங்கு நீதிமானாகிய லோத்து குடியிருந்தார்.  

எனவே, தேவன் நகரத்தை அழிக்க அனுப்பிய தூதர்கள் லோத்துவிடம் வந்து தேவனுடைய திட்டத்தைச் சொல்லி அங்கிருந்து வெளியேறச் சொன்னார்கள். மட்டுமல்ல, அவன்பொருட்டு  இரத்த சம்பந்தமான அவனது உறவினர்களையும் தேவன் காப்பாற்றத் சித்தம்  கொண்டார். எனவே, "அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ. நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமூகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்." ( ஆதியாகமம் 19 : 12, 13 )

அன்பானவர்களே, ஒட்டுமொத்த நகரத்தையும் அழிக்க தேவன் முயலும்போது அங்கிருந்த ஒரு நீதிமானின் குடும்பத்தைத் தேவன் காப்பாற்ற முயலுகின்றதை நாம் பார்க்கின்றோம். எல்லோரும் செய்கின்றார்களே என்று நாமும் ஒரு தவறான பாவமான செயலை நாமும்   செய்யக்கூடாது  எனும் செய்தி இங்கு நமக்குத் தரப்படுகின்றது. 

ஒருவேளை நமது அண்டைவீட்டார், உறவினர்கள் தேவனுக்கு விரோதமான சில செயல்களைச் செய்யலாம்; அவர்கள் உலகச் செழிப்போடு நன்றாக இருக்கலாம். அதைப் பார்த்துவிட்டு நாமும், இப்படிபட்டக் காரியங்கள் செய்யும் அவர்கள் நன்றாகத்தானே இருக்கின்றார்கள், நாமும் அப்படிச் செய்வதில் தவறில்லையே என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. ஆம், இரண்டு பெரிய நகரங்களில் ஒரே ஒரு நீதிமானாகிய லோத்து மட்டுமே இருந்தான்; அழியாமல் காப்பாற்றப்பட்டான்.  

ஆம், எனவே தேவனது வார்த்தைகளை இருதயத்தில் இருத்தி  நம்மைக் காத்துக்கொள்வோம். கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். 


ஆதவன் 🔥 987🌻 அக்டோபர் 11, 2023 புதன்கிழமை

"நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்." ( 1 கொரிந்தியர் 13 : 10 )

இந்த உலகினில் பிறந்த எவருமே குறையில்லாதவர்களல்ல. பொருளாதாரக் குறைவை நான் குறிப்பிடவில்லை; மாறாக, குணங்களிலுள்ள குறைவினைச் சொல்கின்றேன். நாம் நமது குறைவுகளை நிறைவாக்கிட எண்ணுகின்றோம். ஆனால் இந்த உலகத்தின் சூழ்நிலைகள் நம்மை மேலும் மேலும் குறைவுள்ளவர்களாகவே மாற்றுகின்றன. 

இன்று மனிதர்களை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகளை  பல்வேறு நிறுவனங்கள் அளிக்கின்றன. மனநலப் பயிற்சிகள் (Psychological trainings), ஆற்றுப்படுத்தும் பயிற்சிகள் (Counselling trainings), ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சிகள் (Personality development trainings ) போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் இத்தகைய பயிற்சிகள் மனிதர்களுக்கேற்ற ஒரு மனிதனை ஒருவேளை உருவாக்கலாமேத்   தவிர ஒருபோதும் தேவனுக்கேற்ற தேவ மனிதர்களை உருவாக்க முடியாது. 

ஒருவர் தன்னிடமிருப்பதைத்தான் மற்றவருக்குக் கொடுக்க முடியும். தன்னிடமில்லாத குணங்களை புத்தகப் பயிற்சிமூலம் கொடுக்கலாம் என்பது ஏற்புடைய ஒன்றல்ல. மேற்படி பயிற்சியளிப்பவர்கள் அனைவரும் எந்தக் குறையும் இல்லாதவர்களல்ல; இவர்கள் இந்தப் பயிற்சிகளை ஒரு தொழிலாகச் செய்கின்றனர். அல்லது வெளிநாட்டிலிருந்து பெறப்படும் பணத்துக்காகச் செய்கின்றனர்.

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே பூரணமானவர். அவரே நம்மை சிறந்த மனிதர்களாக மாற்ற முடியும். அவர் தேவனுடைய சாயலாய் இருந்ததால் மனிதர்களுக்கு வழிகாட்ட மனிதர்களுக்கு ஒப்பாக வேண்டியிருந்தது. தேவனாக இருந்ததால் இந்த விஷயத்தில் அவரிடம் ஒரு குறை இருந்தது. அதாவது, அவர் மனிதர்கள் படும் கஷ்டங்களை தேவனாக இருக்கும்போது அனுபவிக்கவில்லை. எனவே, அவர் மனிதர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் அளிக்கவேண்டுமென்றால் மனிதர்களைப்போல அவர் துன்பப்படவேண்டியதும் அதன்மூலம் பூரணப்படவேண்டியதும்  அவசியமாய் இருந்தது. எனவே,  அவர் பாடுகள்மூலம் பூரணமடைந்தார். 

"அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்." ( எபிரெயர் 5 : 8- 10 )

எனவே, நாம் முன்பு பார்த்தபடி பூரணமான ஒருவர்தான் மற்றவர்களுக்குப்  பூரணத்தை அளிக்கமுடியும்.  ஆம், பூரணமான நிறைவானவர் கிறிஸ்துவே. எனவே அவர் ஒரு மனிதனுக்குள் வரும்போதுதான் அவன் நிறைவுள்ளவனாக முடியும். இதனையே இன்றைய தியான வசனம், "நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்." என்று கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே, நிறைவான இயேசு கிறிஸ்து நம்மில் வரும்போது மட்டுமே நமது குறைவுகள் ஒழியும். நமது குணங்களிலுள்ள குறைவு, பொருளாதாரக் குறைவு, உடல்நலக் குறைவு எல்லாமுமே  நிறைவான அவர் நம்மில் வரும்போது மாறி நாம் புதியவர்கள் ஆகின்றோம். 

நிறைவான இயேசு கிறிஸ்துவை நமது இதயங்களில் வரும்படி வேண்டுவோம்; நமது இருதயத்தை முற்றிலுமாக அவருக்கு ஒப்புவிப்போம். அப்போது இன்றைய தியான வசனம் நம்மில் நிறைவேறுவதை நாம் மட்டுமல்ல, நம்மைச் சுற்றி இருப்பவர்களும் உணர்ந்துகொள்வார்கள்.


ஆதவன் 🔥 988🌻 அக்டோபர் 12, 2023 வியாழக்கிழமை

"உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்." (ஏசாயா 50:10)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து மிக அதிகமான தீர்க்கத்தரிசனங்களைக் கூறியவர் ஏசாயா தீர்க்கதரிசி. இன்றைய தியானத்துக்குரிய வசனமும் இயேசு கிறிஸ்துவைக் குறித்தத் தீர்க்கதரிசனத்தோடு கூடிய அறிவுரையாகும். ஒளியானது தேவனைக் குறிக்கின்றது. "தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது."  ( 1 யோவான்  1 : 5 ) என்கின்றார் யோவான். 

இன்றைய தியான வசனத்தில், கர்த்தருடைய தாசன் எனும் பெயரில் இயேசு கிறிஸ்து குறிப்பிடப்படுகின்றார். ஒருவன் தன்னில் மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவின் வெளிச்சத்தை இன்னும் காணவில்லையானால் அந்தத் துன்மார்க்கன் அவரை நம்பி  அவரைச் சேர்ந்துகொள்வானாக என்கின்றார் கர்த்தர். அதாவது, தனது பாவங்களை உணர்ந்து அவரைச் சேர்ந்து கொள்ளவேண்டும். ஏனெனில், "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 ) அந்த ஒளி அவனைப் பிரகாசமடையச் செய்யும்.

ஆனால், "பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில்" வராதிருக்கிறான்". ( யோவான் 3 : 20 ) என்ற வாசனத்தின்படியே பலரும் ஒளியான அவரிடம் வரத் தயங்குகின்றனர். 

இயேசு கிறிஸ்துத் தன்னிடம் வருபவர்களைப்  புறம்பே தள்ளுபவரல்ல. எனவே அவரிடம் வரும்போது  எந்த ஒரு மனிதனையும் அவர் வெளிச்சமுள்ளவனாக மாற்றுவார். எனவேதான்,  "கர்த்தருடைய நாமத்தை நம்பி, அவரையேச் சார்ந்துகொள்ளக்கடவன்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. காரணம், அத்தகைய மனிதன் ஒளியடைவான்.  

ஆனால் பெரும்பாலான மனிதர்கள் மெய்யான ஒளியாகிய அவரிடம் வரத் தயங்குகின்றனர். காரணம், மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாய் இருக்கிறபடியினால் அவர்கள் அந்த ஒளியைப்பார்க்கிலும் இருளையே விரும்புகின்றனர்.( யோவான் 3 : 19 ) அவரிடம் வரும்போது தாங்கள் வழக்கமாககச் செய்துவரும் பல செயல்களைச் செய்யமுடியாது என்று எண்ணுகின்றனர்.  

அன்பானவர்களே, உலகினில் கோடிக்கணக்கான சொத்துக்கள் நமக்கு இருந்தாலும் கிறிஸ்து தரும் மெய்யான சமாதானத்துக்கு ஈடாகாது. அந்த மனச் சமாதானம் ஒளியாகிய அவரிடம் மட்டுமே உண்டு. இப்படிப்  பெரிய செல்வந்தர்களாக இருந்தும் மனச் சமாதானம் இல்லையானால் நமது வழிகளை நாம் சிந்தித்துப் பார்த்து மெய்யான ஒளியாக்கிய அவருக்கு நேராகத் தனது இருதயத்தைத் திருப்பவேண்டியது அவசியமாயிருக்கிறது. எனவேதான் ஏசாயா மூலம் கர்த்தர் இன்றைய ஆலோசனையைத் தருகின்றார். "தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன்." 

அவருக்குப் பயந்து, அவருடைய சொல்லைக் கேட்டு, வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிற மனிதர்கள்  கர்த்தருடைய நாமத்தை நம்பி, தங்களை அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.  அப்போது, "இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது." ( ஏசாயா 9 : 2 ) என்ற வார்த்தையின்படி நமக்கும் நடக்கும். 

ஆம், நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்; நீ நாடும் விடுதலை அவரிடமுண்டு. 


ஆதவன் 🔥 989🌻 அக்டோபர் 13, 2023 வெள்ளிக்கிழமை

"நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்." ( யூதா 1 : 21 )

பொதுவாக நாமெல்லோருமே தேவனிடம் ஜெபிக்கின்றோம். ஆனால் நமது ஜெபங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அப்போஸ்தலரான யூதா ஒரு அறிவுரை கூறுகின்றார். 

முதலாவது விசுவாசத்தைக் கூறுகின்றார். அதாவது நாம் ஜெபிக்குன் நாம் கேட்பதைப் பெற்றுக்கொள்வோம் எனும் விசுவாசம் வேண்டும். இயேசு கிறிஸ்துவும் இதனையே குறிப்பிட்டார். "ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்." ( மாற்கு 11 : 24 ) ஜெபிக்குமுன் இதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றார் யூதா. 

அடுத்து, நமது ஜெபங்கள் ஆவிக்குரியதாக இருக்கவேண்டும். வெறும் வாயினால் சப்தமிடுவதல்ல ஜெபம். தேவனோடு நமது இருதயம் இணைந்ததாக இருக்க வேண்டும். அது இருதயத்திலிருந்து வரவேண்டும். அன்னாளைப்போல இருதயத்தை தேவ சந்நிதியில் ஊற்றிவிடவேண்டும்.  (1 சாமுவேல் 1:15) 

மூன்றாவதாக, "தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது நமது செயல்பாடுகள் அனைத்துமே தேவன் விரும்பும்வண்ணம் இருக்க வேண்டும்.  "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." ( 1 யோவான்  5 : 3 )

இறுதியாகக் கூறப்பட்டுள்ளது, "நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்". நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் ஜீவன். அவரே முடிவில்லாத வாழ்வைத் தரவல்லவர். எனவே அந்தக் கிறிஸ்து நம்மீது இரக்கம்கொண்டு நமது ஜெபத்துக்குப் பதில்தர பொறுமையோடு காத்திருங்கள் என்கின்றார். 

அதாவது, சுருக்கமாகச் சொல்வதானால், தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து, விசுவாசத்தோடு, முழு உள்ளத்தோடு ஜெபித்து, அவர் பதில்தர காத்திருக்க வேண்டும்.  

இந்த உலகத்தில்கூட நாம் ஒரு அரசு அலுவலகத்தில் ஏதாவது தேவைக்கு விண்ணப்பிக்கும்போது நாம் காத்திருக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. மனு அனுப்பிவிட்டு மறுநாளே அரசு அலுவலகம்சென்று நமது மனுவுக்குத் தீர்வை நாம் எதிர்பார்க்க முடியாது.  ஆனால் நமது தேவன் நமது தேவைகளை நன்கு அறிவார். நமது சில தேவைகள் முக்கியமானதாக இருக்கும். அத்தகைய வேளைகளில் உடனடி பதில் தேவைப்படும். அத்தகைய நிலைமையில் அவர் உடனேயே பதில்தருவார். 

உதாரணமாக மரணத்தறுவாயிலிருக்கும் ஒருவருக்கு நாம் ஜெபிக்கும்போது பல மாதங்கள் காத்திருக்க முடியாது. அப்போது உடனடிப் பதிலை அவர் தரலாம். ஆனால் சில புனிதர்களின் தாய்மார்கள், பாவத்தில் வாழ்ந்த தங்கள் மகன் மனம்திரும்பப் பத்துப்  பதினைந்து ஆண்டுகள்  ஜெபித்ததாகக் கூறுவதை  நாம் அவர்களது வாழ்க்கைச் சரித்திரத்தால் அறியலாம். 

எனவே அன்பானவர்களே, அப்போஸ்தலரான யூதா கூறும் ஆலோசனையின்படி ஜெபிப்போம். தேவ பதிலுக்குப் பொறுமையுடன் காத்திருப்போம். 


ஆதவன் 🔥 990🌻 அக்டோபர் 14, 2023 சனிக்கிழமை

"தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்." ( சங்கீதம் 27 : 5 )

இன்றைய வசனத்தில் தாவீது தனக்குத் தேவனிடமுள்ள விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றார். இந்த உலகத்தில் போர்களும், நோய்களும் இதர இயற்கைப் பேரிடர்களும் நேரிடும்போது பலரும் கலங்கித் தவிக்கின்றோம். கொரோனா பேரிடர் காலத்தை நினைத்துப் பாருங்கள். ஒவ்வொருநாளும் நம்மோடு இருந்த பலரது இறப்புச் செய்தி நம்மைக் கலங்கடித்துக்கொண்டிருந்தது. நமது உறவினர்கள் நண்பர்கள் பலர் இறந்தும் போயினர். ஆனால் இன்றைய வசனத்தில் உறுதியாக விசுவாசத்துடன் தாவீது கூறுகின்றார், "தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்."

ஆம், தீங்குநாளில் தமது கூடாரத்தில் மறைத்து நம்மைக் காப்பதுமட்டுமல்ல, அப்படிக் காப்பாற்றியபின் நம்மை உயர்த்துவார் என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

தாவீது இப்படிக் கூற, தேவனுக்கேற்றபடி வாழ்ந்த அவரது வாழ்க்கையின்மேல் ஒரு நம்பிக்கை அவருக்கு இருந்தது. ஏனெனில் இந்த சங்கீதத்தை எழுதிய அவர்தான் 15 வது சங்கீதத்தையும் எழுதினார். அதில் அவர் கூறுகின்றார், "கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்." ( சங்கீதம் 15 : 1-3 )

யார் கர்த்தருடைய கூடாரத்தில் தங்குவான் என்பதை அவர் அறிந்திருந்தார். தனது வாழ்க்கை அதற்கேற்றாற்போல இருக்கின்றது என்பதை அவர் இருதயத்தில் ஆராய்ந்து அறிந்திருந்தார். எனவே, இத்தகைய துன்மார்க்கச் செயல்கள் தன்னிடம்  இல்லாததால் கர்த்தர் தன்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து,  தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, கன்மலையின்மேல் உயர்த்துவார் என்று விசுவாசத்துடன் கூறுகின்றார். அவர் கூறியதுபோல தேவன் அவரைப் பாதுகாத்து இஸ்ரவேலின்மேல் ராஜாவாக உயர்த்தினார். 

அன்பானவர்களே, தேவன் தாவீதுக்கு ஒரு நீதி நமக்கொரு நீதி என்று பார்ப்பாரல்ல.  தாவீதுக்கு இப்படிச் செய்வாரானால் நமக்கும் நிச்சயமாக இப்படிச் செய்வார். தேவனுடைய கூடாரத்தில் தங்குவதற்கு அவர் கூறியுள்ள தகுதிகள் மட்டும் நமக்கு இருந்தால் போதும் 

மட்டுமல்ல, இன்றைய தியான வசன சங்கீதத்தின் முதல் வசனத்தில் அவர் கூறுகின்றார், "கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் அரணானவர், யாருக்கு அஞ்சுவேன்?"  ( சங்கீதம் 27 : 1 )

ஆம் அன்பானவர்களே, தாவீது கூறுவதுபோல நாமும் விசுவாசத்தோடு கூறுவோம் கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? அவரே என் அரணானவர், யாருக்கு அஞ்சுவேன்? அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். ஆமென்.


ஆதவன் 🔥 991🌻 அக்டோபர் 15, 2023 ஞாயிற்றுக்கிழமை

"தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போகும்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோகும். சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?"  ( லுூக்கா 11 : 17, 18 )

இன்றைய உலகில் மனிதர்களது  நிலைமையையும் கிறிஸ்தவர்களின் நிலைமையும் பிரிவுபட்டதாக இருப்பதை நாம் காண்கின்றோம். நாம் எல்லோருமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டாலும் ஒவ்வொரு கிறிஸ்தவ சபைப் பிரிவினரும் மற்றவர்களை அற்பமானவர்களாகவே எண்ணிக்கொள்கின்றோம். 

ஆனால் கிறிஸ்தவர்களின் இந்த நிலைமைக்கு மாறாக சாத்தான்களுக்குள் ஒற்றுமை மேலானதாக இருக்கின்றது. அதாவது தேவனை ஏற்றுக்கொண்ட மனிதர்களுக்குள் பிளவுகளும் தேவனை என்றுகொள்ளாத சாத்தான்களுக்குள் ஒற்றுமையும் இருக்கின்றது. 

இயேசு கிறிஸ்து பிசாசுகளைத் துரத்துவத்தைக் கண்ட அவரை விசுவாசியாத யூதர்கள்,  இவன் பெயெல்செபூல் எனும் பிசாசுகளின் தலைவனைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். அவர்களுக்கு மறுமொழியாக இயேசு கிறிஸ்து, இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். சாத்தான் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? என்று இயேசு கிறிஸ்துக் கேட்கின்றார். 

அதாவது சாத்தானின் ராஜ்ஜியம் நிலைநிற்கக் காரணம் சாத்தான்களுக்குள் இருக்கும் ஒற்றுமைதான்.  அப்படி அவைகளுக்குள் ஒற்றுமை இல்லாதிருந்தால் சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்துபோயிருக்கும்.   அன்பானவர்களே, இன்று கிறிஸ்தவர்களுக்குள் இந்த ஒற்றுமை இல்லை என்பது வெளிப்படை. ஆனால், இந்தப் பிரிவினை பவுல் அப்போஸ்தலர் காலத்திலேயே இருக்கின்றது. 

"உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?" ( 1 கொரிந்தியர் 1 : 12, 13 )

மேற்படி வசனத்தை நாம் இக்கால வழக்கப்படி பின்வருமாறு கூறலாமல்லவா? "உங்களில் சிலர்: நான் R.C திருச்சபையைச் சார்ந்தவனென்றும், நான் C.S.I சபையைச் சார்ந்தவனென்றும்,  நான் பெத்தேகொஸ்துக்காரன் என்றும், (அதிலும் உட்பிரிவுகள் பல உண்டு அவற்றைக் கூறிக்கொள்வதில் பலருக்குப் பெருமை)  நான் சால்வேஷன் ஆர்மியைச்  சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா?". இன்றைய நாளில் கிறிஸ்தவ சபைகளில் உலக அளவில் 2500 க்கு மேற்பட்டப் பிரிவுகள் உள்ளன என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆனால் சாத்தானின் ராஜ்ஜியம் ஒன்றே.

நாம் ஒற்றுமையாய் இருந்தால்தான் நமது அரசு நிலைநிற்கும் என்று பிசாசுகளுக்குத் தெரிந்த அளவுக்கு கிறிஸ்தவர்களாகிய நமக்குத் தெரியவில்லை. சபைகள் நம்மை இடச்சிக்க முடியாது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே நம்மை இரட்சிக்கவுமுடியுமென்ற அடிப்படை உண்மை நமக்குத் தெரியவில்லை. ஆனால் பிசாசுகளுக்கு  அது தெரியும். எனவே அவை மனிதர்களை சபை அடிப்படையில் பிரித்து தங்களது ராஜ்யத்தை வலுப்படுத்தியுள்ளன. 

ஆனாலும் மெய்யான கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாக இருக்கும் பலர் உலகினில் உண்டு. அவர்களைச்  சாத்தானால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அவர்களே இன்று கிறிஸ்துவோடு ஐக்கியமான உண்மையான கிறிஸ்தவர்கள். அத்தகைய கிறிஸ்துவை அறிந்த கிறிஸ்தவர்களின் ஐக்கியதால்தான் கிறிஸ்து இன்று உலகினில் செயலாற்றுகின்றார். இந்த ஐக்கியம் வலுப்பெறும்போதே சாத்தானின் ராஜ்ஜியம் வலுவிழக்கும். ஆம் அன்பானவர்களே, நாம் எந்த சபைப் பிரிவினராக இருந்தாலும் சகோதரர்கள் எனும் உணர்வோடு கிறிஸ்தவ அன்பில் வளர்வோம்; சபைகளைவிட கிறிஸ்துவை விசுவாசிப்போம்.  கிறிஸ்துவை அன்புசெய்வோம்.


ஆதவன் 🔥 992🌻 அக்டோபர் 16, 2023 திங்கள்கிழமை

"யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன." ( எரேமியா 32 : 19 )

நமது தேவனைப்பற்றியும் அவரது வல்லமைபற்றியும் இன்றைய வசனம் ஆரம்பத்தில் கூறிவிட்டு இந்த வல்லமையை அவர் மனிதர்களை நியாயம்தீர்க்கும்போது விளங்கச்செய்வார் என்று நம்மை எச்சரிக்கின்றது.

அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன என்று கூறியுள்ளபடி தேவன் நமது செயல்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கின்றார். அந்த அடிப்படையிலேயே நம்மை அவர் நியாயம் தீர்ப்பார். 

ஆனால் இதனை உணராமல் "வல்லமை தாரும் தேவா" என உச்சக்குரலில் ஆர்ப்பரித்துப் பாடும் பலரும் வல்லமை பெற்று இயேசு கிறிஸ்துவைப்போல தாங்களும் அற்புதங்களும் அதிசயங்களும் செய்து மக்கள் மத்தியில் பெயர் பெறவே விரும்புகின்றனர்.

ஆம் அன்பானவர்களே,  மெய்யான வல்லமை நமக்கு ஏன் தேவை என்றால் பாவத்திலிருந்து விடுபடவே. தேவ ஆவியானவரின் வல்லமை இல்லாமல் நாம் பாவத்தை மேற்கொள்ள முடியாது. சாவுக்கேதுவான நமது உடல் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் உயிர்ப்பிக்கப்படவேண்டும். இதனையே அப்போஸ்தலரான பவுல், "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." ( ரோமர் 8 : 11 ) என்று கூறுகின்றார். 

யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிற தேவனை நாம் ஏமாற்றிட முடியாது. அவர் நமது ஆராதனை முறைமைகளையோ பக்தி முயற்சிகளையோ  பெரிதாக எண்ணுவதில்லை. நமது இருதயம் அவரோடு ஐக்கியமில்லாமல் குறிப்பிட்ட மந்திரங்களைத் திருப்பித் திருப்பிச் சொல்வதால் பயனில்லை. வல்லமை மிக்க ஜெபம் என்று சிலர் தரும் ஜெபங்களை வாசிப்பதில் அர்த்தமில்லை. 

குறிப்பிட்ட வார்த்தைகள் நம்மில் அதிர்வலையை  உண்டாக்கிடும் என்றும், எனவே குறிப்பிட்ட மந்திரங்கள் தேவனை நம்மிடம் நெருங்கிடச் செய்யும் என்றும்   பிற மத சகோதர்கள் கூறுவதுண்டு.   உடம்பில் அதிர்வலை ஏற்படுவது முக்கியமல்ல,  நமது உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் கிரியைச்செய்ய வேண்டும்.  நாம் தேவனுக்கேற்ற பரிசுத்தம் அடையவேண்டும். பாவங்களைக்குறித்த வெறுப்பு நம்மில் ஏற்பட வேண்டும். 

எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். வேதாகமம் கூறும் வழிகளுக்கு முரணான காரியங்களைச் செய்வது நம்மை தேவனுக்கு ஏற்புடையவர்களாக மாற்றாது. அவனவன் வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தககதாகவும் மட்டுமே அவர் பலன் தருவார். "இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 12 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆவியானவரின் துணையோடு நமது வழிகளையும் செயல்பாடுகளையும் தேவனுக்கு ஏற்புடையவையாக்குவோம். 


ஆதவன் 🔥 993🌻 அக்டோபர் 17, 2023 செவ்வாய்க்கிழமை

"உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்." ( மத்தேயு 24 : 42 )

இஸ்ரவேல் பாலஸ்தீனப் போர் ஆரம்பித்ததும் ஆரம்பித்தது பல ஆவிக்குரிய ஊழியர்களுக்கு ஒரே கொண்டாட்டம். தங்களது வேத அறிவையும் உலக அறிவையும் கலந்து நாளுக்கொரு வீடியோ காட்சிகளை வெளியிட்டுத் தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டிக்  கொண்டிருக்கிறார்கள். இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து இவர்கள் வெளியிடும் செய்திகள் உண்மையில் கூறுவதென்ன? வேறு ஒன்றுமில்லை, ஆண்டவரின் வருகை சமீபமாயிருக்கிறது என்பதுதான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினை வேதம் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளது உண்மைதான்; இயேசு கிறிஸ்துவும் அது பற்றித் தெளிவாகக் கூறியிருக்கின்றார். 

இயேசு கிறிஸ்து கூறினார், "நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்." ( மத்தேயு 24 : 44 ) அதாவது அவர் வருவது நிச்சயம். எனவே நாம் எப்போதும் அவரைச் சந்திக்க ஆயத்தமாய் இருக்கவேண்டும். இஸ்ரவேல் பாலஸ்தீன யுத்தம் வந்ததால் அல்ல. பாடமே சரியாகச் சொல்லித்தராத ஆசிரியர் ஆய்வாளர் வருவதற்குமுன் பரிதபிப்பதுபோல பரிதபித்து "வருகைக்கு ஆயத்தமாகுங்கள், ஆயத்தமாகுங்கள்" எனக் கூப்பாடு போடுகின்றனர் பல ஊழியர்கள்.  

வருகைக்கு ஆயத்தப்படுதல் என்பது நாம் எங்கோ பயணத்துக்குத் தயாராவதுபோல தயாராவதா? அது குறித்து பலரும்  விளக்குவதில்லை. ஆண்டு முழுவதும் உலக ஆசீர்வாதத்தையே போதித்துவிட்டு இந்தப்போரைக் கண்டவுடன் ஆயத்தமாகுங்கள் என்பது அர்த்தமற்றது. 

இஸ்ரவேல் பாலஸ்தீன போர் வேதத்தில் முன்குறித்தபடி நடப்பது தேவன்மேல் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தினாலும்  விசுவாசிகள் வருகைக்கு முன் என்னச் செய்யவேண்டும் என்றும் வேதம் ஏற்கெனவே கூறியுள்ளது. அப்போஸ்தலரான பவுல்,  "சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 23 ) என்று கூறுகின்றார். அதாவது நமது ஆவி, ஆத்துமா சரீரம் இவை அவர் வரும்போது குற்றமற்றதாகக் காக்கப்படவேண்டும். இதுதான் ஆயத்தமாய் இருத்தல் என்பதற்குப்  பொருள். 

மேலும், அந்த நாளைக்குறித்து இயேசு கிறிஸ்து கூறும்போது, "அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்." ( மாற்கு 13 : 32 ) என்று கூறியுள்ளார். இயேசு கிறிஸ்துவுக்கே தெரியாது என்று அவரே கூறிவிட்டபின்பு நாம் அற்ப மனிதர்கள் அதுகுறித்து ஆராய வேண்டிய அவசியமில்லை. அவர் வரும்போது நாம் அவரை எதிர்கொள்ளத் தகுதியாக இருக்கவேண்டியதே முக்கியம். 

அப்போஸ்தலர்களின் காலத்திலேயே இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். "நீங்கள் இப்படிப் போதிக்கிறீர்களே அவர் ஏன் இன்னும் வரவில்லை?" என்று அப்போஸ்தலர்களிடம் கேள்வியும் கேட்டனர். என்வேதான் அப்போஸ்தலரான பேதுரு அதற்கான விளக்கத்தைத் தனது நிருபத்தில் கூறினார், "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) என்று. 

இஸ்ரவேல் பாலஸ்தீன போர் ஆரம்பித்ததால் அல்ல, எப்போதுமே  நமது ஆவி ஆத்துமா சரீரம் முழுவதையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காத்துக்கொள்வோம்.  ஆம், "மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்." ( லுூக்கா 17 : 24 )


ஆதவன் 🔥 994🌻 அக்டோபர் 18, 2023 புதன்கிழமை

"நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்." ( சங்கீதம் 86 : 13 )

தேவ கிருபையினைக்குறித்து நாம் வேதாகமத்தில் பல்வேறு இடங்களில் வாசிக்கின்றோம். ஆனால் மேலான கிருபை என்பது தேவன் நமது பாவங்களை மன்னிப்பதும் பாவங்களுக்கு விலக்கி நம்மைக் காப்பதும்தான். தாவீது இதனைத் தனது அனுபவத்தில் அறிந்திருந்தார்.  எனவேதான் கூறுகின்றார், "என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்" என்று.

நமது பலவீனங்களில் நம்மைத் தாங்குவதுதான் தேவ கிருபை. இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகளிடம் தேவன் விளக்கினார், "என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்தில் என பலம்  பூரணமாய் விளங்கும்" (2 கொரிந்தியர் 12:9) என்று. நாம் அனைவருமே பலவீனமானவர்கள். பல்வேறு சமயங்களில் பாவத்தில் விழுந்துவிடுகின்றோம்.  ஆனால் தேவன் மன்னிப்பதில் கிருபை நிறைந்தவராக இருப்பதால் நம்மை மன்னித்து வாழவைக்கின்றார்.    

எனவேதான் தாவீது இன்றைய தியான சங்கீத அதிகாரத்தில் இன்றைய தியான வசனத்தின்முன் 5வது வசனத்தில் "ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்." ( சங்கீதம் 86 : 5 ) என்று கூறுகின்றார். 

"நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்." ( 1 யோவான்  2 : 2 )

இதனையே தேவன் தங்களுக்கு ஒப்புவித்ததாக பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார். "அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்" ( 2 கொரிந்தியர் 5 : 19 ) என்கின்றார். உலக மக்களின் பாவங்களை மன்னித்திட தேவனால் முடியும். ஆனால் மக்கள் தங்கள் தவறான பாவ வழிகளை உணரச் செய்யவேண்டும். அதற்காகவே தேவன் தங்களை பயன்படுத்துகின்றார் என்கிறார் பவுல்.  

விபச்சாரம் அதனைத் தொடர்ந்த கொலை போன்ற பாவங்களில் சிக்கியிருந்த தாவீதை உணர்வடையச் செய்ய ஒரு நாத்தான் தீர்க்கதரிசி தேவைப்பட்டார்.  தாவீது அதனை உணர்ந்து கொண்டார். எனவே, தேவன் தனது கிருபையால் பாதாளத்துக்குத் தனது ஆத்துமாவைத் தப்புவித்ததாகக் கூறுகின்றார். எனவேதான், "நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்." என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, நமக்கு எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் அது இந்த உலக வாழ்க்கைக்குத்தவிர வேறு எதற்கும் உதவாது. இந்த உலகத்தையே பணத்தால் நாம் கைப்பற்றலாம், ஆனால் நமது ஆத்துமாவை இழந்தால் அதனால் எந்தப்  பயனும் இராது. "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 )  

தேவன் நமக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தரும்படி மன்றாடுவோம். அப்போதுதான் நமது உள்ளான குணங்கள் நமக்கே வெளிப்படும். அப்போதுதான் நாம் நமது பலவீனங்களையும் பாவங்களையும் உணர்ந்து கொள்ளமுடியும். அப்போதுதான் தேவ மன்னிப்பையும் நாம் பெறமுடியும். நமது பாவங்களை உணர்ந்து தேவ மன்னிப்பை வேண்டுவதுடன் அவருக்கு நன்றியும் சொல்வோம். "எனது  ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்" நன்றி ஆண்டவரே எனத் தாவீதைப்போல கூறுவோம். 


ஆதவன் 🔥 995🌻 அக்டோபர் 19, 2023 வியாழக்கிழமை

"அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்." ( ஏசாயா 53 : 12 )

பிதாவாகிய தேவன் ஏசாயா தீர்க்கதரிசிக்கு கர்த்தராகிய இயேசு  கிறிஸ்துவைக்குறித்து வெளிப்படுத்திய வார்த்தைகளே இன்றைய தியான வசனம். "அவர் அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம்" என்று இன்றைய வசனத்தில் வாசிக்கின்றோம். அந்த அநேகரின் நாமும் ஒருவராக இருக்கின்றோம். நமக்காகவும் அவர் வேண்டிக்கொண்டுள்ளார். எனவேதான் நாம் இன்று மீட்பு அனுபவம் பெற்றுள்ளோம். 

ஆனால் இயேசு கிறிஸ்து பாடுபட்டதைக்கண்டு அவரது காலத்து மக்கள் பலரும்   தவறாக எண்ணினர். ஆம், அவர் கடவுளால் தண்டிக்கப்பட்டுளார் என எண்ணினர். அதனை ஏசாயா, "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்." ( ஏசாயா 53 : 4 ) என்று கூறுகின்றார். 

நாம் கண்ணால் காண்பவைகளும் காதால் கேட்பவைகளும் எப்போதும் முற்றிலும் உண்மையாக இருப்பதில்லை. பல காரியங்களின் உண்மைப் பின்னணி நமக்குத் தெரியாது. இன்று பத்திரிகைகளில் வெளிவரும் பல செய்திகளும் இப்படித்தான்.  தினசரி பத்திரிகைச் செய்திகளுக்கும் உண்மை நிலவரத்துக்கும் வேறுபாடு உண்டு.  புலனாய்வு இதழ்கள் ( Investigative  Journals ) இப்படி மறைக்கப்பட்டச் செய்திகளை வெளிக்கொண்டு வருவதுண்டு. 

இப்படியே இயேசு கிறிஸ்து பாடுபட்டதைக் கண்ணால் கண்டு அன்று மக்கள் தவறாக எண்ணியதை ஏசாயா தனது புலனாய்வு தரிசனத்தால் விளக்குகின்றார். இதனையே, "அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்." என்று கூறுகின்றார். அதாவது, அப்படி நாம் எண்ணினோம் ஆனால் அது மெய்யல்ல, மாறாக, "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்" என்கின்றார். 

மேலும், "நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்." ( ஏசாயா 53 : 6 ) என்று வாசிக்கின்றோம்.

"நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்." ( ஏசாயா 53 : 5 )

இப்படி அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன் என்கிறார் பிதாவாகிய தேவன். அன்பானவர்களே, இதனை வாசிக்கும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என எண்ணிப் பார்ப்போம். 

"அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 4 ) நம்மை முற்றிலும் அவருக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். 


ஆதவன் 🔥 996🌻 அக்டோபர் 20, 2023 வெள்ளிக்கிழமை

"நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்"( 1 தீமோத்தேயு 2 : 1 )

இன்றைய தியானத்தில் அப்போஸ்தலரான பவுல் நமக்கு ஒரு முக்கிய அறிவுரை கூறுகின்றார். அதனாலேயே அதனை பிரதானமாய்க் சொல்லுகிற புத்திமதி என்கின்றார். அதாவது நாம் நமக்காக மட்டுமே எப்போதும் ஜெபிக்காமல்  எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும் என்கின்றார். 

இது நம்மில் பலருக்கும் வித்தியாசமான செயல்போல இருக்கும். சிலர் எண்ணலாம், "நமக்கும் நமது குடும்பத்துக்கும்  ஜெபிக்கவே நேரமில்லை, இதில் எல்லோருக்கும் ஜெபிப்பது எப்படி?"  

இந்த உலகத்திலுள்ள எல்லோருமே உறவினர்கள்தான். காரணம், நாம் எல்லோருக்கும் தகப்பனாகிய தேவன் ஒருவரே. எனவே நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது ஒருவகையில் நமக்கே ஜெபிக்கின்றோம். இன்றைய வசனத்தைத் தொடர்ந்து பவுல் எழுதுகின்றார்,  "நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்." ( 1 தீமோத்தேயு 2 : 2 )

அதாவது நாம் இந்த நாட்டில் அமைதியாக வாழவேண்டுமானால் ஆட்சியிலுள்ளவர்கள் அதிகாரிகள் எல்லோருக்காகவும் ஜெபிக்கவேண்டும் என்கின்றார். எனவே, நாம் இவர்களுக்காக ஜெபிக்கும்போது நமக்கு அமைதி கிடைக்கின்றது. நாட்டில் பிரச்சினைகள் தீர்கின்றது.

அதுமட்டுமல்ல, நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ளோம். இப்படி நாம் மட்டும் அறிந்தால் போதாது. எல்லோரும் கிறிஸ்துவை அறியவேண்டும், இரட்சிக்கப்படவேண்டும். அப்படி எல்லோரும் இரட்சிக்கப்படும்போது தானாகவே அமைதி ஏற்படும். ஆம்,  "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்." ( 1 தீமோத்தேயு 2 : 4 ) எனவே நாம் எல்லோருக்காகவும் ஜெபிக்கவேண்டியது அவசியம்.

இந்த உலகத்தில் நாம் தனித்து வாழ முடியாது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் எண்ணிப்பாருங்கள். இவை எதனையுமே நாம் தனியாக இந்த உலகினில் இருந்திருப்போமேயானால் அனுபவித்திருக்கமுடியாது. ஆம், பல்வேறு மனிதர்களது உழைப்பு தரும் பலனை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். எல்லோருக்காகவும் வேண்டுதல்செய்ய அப்போஸ்தலரான பவுல் கூற இதுவும் ஒரு காரணம்தான்.

நமது ஜெபத்தின் எல்லையினை விரிவாக்குவோம். நமக்காக மட்டுமே ஜெபிப்பதை மாற்றி அப்போஸ்தலரான பவுல் கூறும் அறிவுரையின்படி எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணுவோம். அப்போது பிரச்னைகளில்லாத அமைதலான நாட்டில் நாம் வாழ முடியும். 


ஆதவன் 🔥 997🌻 அக்டோபர் 21, 2023 சனிக்கிழமை

"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 3 : 5 )

இந்த உலகத்தில் நாம் பல காரியங்களை நமது திறமையால்  சிறப்பாகச்  செய்யலாம். இப்படிப் பல  உலக காரியங்களை மனிதர்களாகிய நாம் சிறப்பாகக்   செய்தாலும் நாம் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது தேவனே நம்மை நடத்துவதால் நம்மால் பல காரியங்களை முன்போலச் செய்ய முடிவதில்லை. மட்டுமல்ல, தேவனால் நாம் நடத்தப்படும்போது உலக காரியங்களில்கூட அவரது துணை நமக்குத் தேவைப்படுகின்றது. காரணம் நாம் நமது திறமையல்ல அவரது உடனிருப்பே நமது பலம் எனும் உண்மையினை அப்போது அறிந்துகொள்கின்றோம்.  

ஒரு நிறுவனம் தனக்குப் பணியாளர்களைத் தேர்வு  செய்யும்போது நல்லத் திறமையுள்ளவர்களையேத்  தேர்ந்தெடுத்துப் பணியில் அமர்த்தும். ஆனால் நமது கர்த்தரோ திறமையைப் பார்ப்பதில்லை. திறமையில்லாதவர்களையும் அற்பமானவர்களையும் தேர்ந்தெடுத்து தனக்காகப் பயன்படுத்துகின்றார். கல்வியறிவு  அதிகமில்லாத கிறிஸ்துவின்  சீடர்கள்தான் இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துவின் போதனைகள் பரவி விரிந்திட காரணமாயிருந்தனர். 

படித்தவர்களும் படிக்காதவர்களும் கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்தனர்; செய்கின்றனர். காரணம் அவர்களுக்குள் இருந்து செயல்படும் ஆவியானவர்.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." என்று கூறுகின்றார்.

ஆம், பல கிறிஸ்தவ ஊழியர்கள் தாங்கள் வாழும் பகுதி மக்களால் அற்பமாய் எண்ணப்பட்டவர்கள்தான். ஆனால் தேவன் அவர்களை பயன்படுத்துவதால் "உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." ( 1 கொரிந்தியர் 1 : 28 ) என்பதை உண்மையென்பதை அவர்கள் இன்றும் மெய்ப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். 

அன்பானவர்களே, இன்று ஒருவேளை நாம் பிற மனிதர்களாலும், உறவினர்களாலும், நண்பர்களாலும் அற்பமாய் எண்ணப்பட்டவர்களாக இருக்கலாம். பணியிடங்களில் நமது தகுதியை குறைவாய் மதிப்பிடலாம். இத்தகைய சூழ்நிலையில் நம்மை தேவனுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்து அவரது உதவியை நாம் நாடும்போது தேவன் நமக்கு உதவிசெய்யவும் நம்மை எல்லா விதத்திலும் தகுதிப்படுத்தவும்   வல்லவராய் இருக்கின்றார். ஆம், "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 )

எனவே நாம் நமது உலக மற்றும்   ஆவிக்குரிய காரியங்களில் சிறந்து விளங்க அவரது ஞானத்துக்காக ஜெபிக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. "உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்." (யாக்கோபு 1;5).

ஆம் அன்பானவர்களே, நம்மால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல; நமது தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. இந்த எண்ணம் வரும்போது நமக்குள் தாழ்மை குணம் ஏற்படும்; பெருமை, அகம்பாவம் போன்ற குணங்கள் மறையும்.   

சுய தகுதியை மறப்போம்; நமது பலத்துக்கும் தகுதிக்கும் தேவ ஞானத்துக்கும் தேவ தயவை வேண்டுவோம்.


ஆதவன் 🔥 998🌻 அக்டோபர் 22, 2023 ஞாயிற்றுக்கிழமை

"முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்."  ( எபேசியர் 2 : 13 )

கிறிஸ்துவுக்கும் விசுவாசிகளான நமக்குமுள்ள உறவினைத் திருமண உறவுக்கு வேதம் ஒப்பிடுகின்றது. நாம் ஒருவரோடு மணமுடிக்குமுன் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்துக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை. ஆனால் அவரோடு திருமணம் முடிந்தபின் அவர்களோடு நெருங்கிய உறவினர்கள் ஆகின்றோம். குடும்ப உறவினர்கள் ஆகின்றோம். 

இப்படியே,  நாம் முன்பு கிறிஸ்துவை அறியாமல் துன்மார்க்கமாக வாழ்ந்து அவருக்குத் தூரமானவர்களாக இருந்தோம். ஆனால், கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு அவரை அறிந்துகொண்ட  பிறகு  இப்போது அவருக்குச் சமீபமாகியுள்ளோம். 

அப்படி நாம் அவருக்குத் தூரமானவர்களாக இருந்தபோது அவரது சொத்துக்களுக்கு உரிமை நமக்கு இல்லாமல் இருந்தது;  அவரோடு நாம் எந்த உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை; உறுதியான தேவ நம்பிக்கை நமக்கு இல்லாமலிருந்தது; எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கு கடவுளே இல்லை என்ற நிலைதான் இருந்தது.

இதனையே அப்போஸ்தலரான பவுல், "அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக் கொள்ளுங்கள்." ( எபேசியர் 2 : 12 ) என்று கூறுகின்றார். 

அப்போஸ்தலரான பேதுருவும், "முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 10 ) என்று கூறுகின்றார். 

இன்றைய நிலைமை நமக்கு எப்படி சாத்தியமாயிற்று என்று கூறவந்த பவுல், "இப்பொழுது கிறிஸ்து  கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்"என்று கூறுகின்றார். அதாவது, அவர் சிலுவையில் சிந்திய இரத்தத்தால் நமக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது என்கின்றார். 

அன்பானவர்களே, இப்படி நாம் தேவனுக்குச் சமீபமாகியுள்ளதால் இன்று நாம் விசுவாசத்தோடு வாழ முடிகின்றது. இந்த நிலையினை நாம் தொடர்ந்து காத்துக்கொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இல்லையானால் நாம் முன்புபோல அவரைவிட்டுத் தூரமாகிப்போவோம். எந்த நம்பிக்கையுமற்றவர்களாக அனாதைகள்போல இருப்போம்.  மட்டுமல்ல, நித்திய ஜீவனுக்கும் தூரமாகிப்போவோம். எனவே தொடர்ந்து விசுவாசத்தைப் பற்றிக்கொள்வோம். 
 
எனவேதான் எபிரெய நிருப ஆசிரியர், "சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்." ( எபிரெயர் 3 : 12 ) என்று எச்சரிக்கின்றார்.  ஆம், "நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்." ( எபிரெயர் 3 : 14 ) அப்போதுதான் நாம் ஏற்கெனவே வாசித்த உரிமைகளுக்குத் தகுதியுள்ளவர்களாக இருப்போம். 


ஆதவன் 🔥 999🌻 அக்டோபர் 23, 2023 திங்கள்கிழமை

"அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்." ( எபேசியர் 4 : 13 )

இன்றைய தியானத்தில் அப்போஸ்தலரான பவுல் தேவன் ஏற்படுத்திய ஐந்துவகை ஊழியங்களைக்குறித்து பேசுகின்றார்.  அப்போஸ்தலர்கள், தீர்க்கத்தரிசிகள், சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் என  தேவன் ஊழியங்களை ஏற்படுத்தி உலகினில் தேவனுடைய ராஜ்ஜியம் கட்டப்பட திட்டம்கொண்டார்.   

ஊழியங்கள்தான் ஐந்து வகையே தவிர அனைத்து வகை ஊழியங்களின் நோக்கமும் ஒன்றே. அதாவது, "நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்". ( எபேசியர் 4 : 14, 15 ) என்று கூறப்பட்டுள்ளது. 
 
தந்திரமுமுள்ள தவறான போதகங்களான  பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு நாம் அலைந்திடாமல் இருக்கவும் அன்பு, உண்மை இவைகளைக் கைக்கொண்டு  தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளரும் படியாகவும் இப்படி ஊழியங்களை ஏற்படுத்தினார்.  

அதாவது , எப்படியாவது மக்கள் தேவனை அறிந்து அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்பவர்களாகவும் அதனால் நித்திய ஜீவனை அடையவேண்டுமென்றும் தேவன் இப்படி ஊழியங்களை ஏற்படுத்தினார். சுவிசேஷகர்கள் அலைந்து பல்வேறு மக்கள் மத்தியில் நற்செய்தியை அறிவிக்கின்றனர். அப்படி அவர்கள் ஆதாயப்படுத்தும் ஆத்துமாக்கள் சபை போதகர்கள், மேய்ப்பர்களால் பராமரிக்கப் படுகின்றனர்.    தீர்க்கதரிசிகள் விசுவாசத்தை வளர்க்கவும் தவறான வழியை விட்டு மக்களைத் திருப்பவும் செய்கின்றனர். அப்போஸ்தல ஊழியர்கள் அப்போஸ்தல போதனையில் உறுதிப்படுத்துகின்றனர். 

அன்பானவர்களே, நாம் இன்று முக்கியமாக அறியவேண்டியது  இந்தப் பல்வேறு ஊழியங்களைப் பற்றியல்ல. மாறாக, தேவன் மக்கள்மேல் எவ்வளவு அன்புள்ளவராக இருக்கின்றார் என்பதை உணரவேண்டியதுதான்.  அப்போஸ்தலரான பவுல் தீமோத்தேயுக்கு எழுதும்போது, "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறியும் அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராக இருக்கின்றார்." (1 தீமோத்தேயு 2:4) என்று கூறுகின்றார்.

இப்படி எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவேண்டுமானால் இந்தப் பல்வேறு வகைஊழியங்களும் தேவையாய் இருக்கின்றது. சபை ஊழியங்கள் மட்டுமே இருக்குமானால் சபைக்கு வெளியே இருக்கும் மக்கள் தாங்களாக சபைக்கு தேவனைத்தேடி  வரமாட்டார்கள். 

ஆம் அன்பானவர்களே, எப்படியாவது மக்கள் அனைவரும் தன்னை அறியவேண்டும் என்பதால் தேவன் இப்படிச் செய்துள்ளார் என்றால் நாம் அவருக்கு எவ்வளவு உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும்!! எனவே நம்மால் முடிந்தவரையில் கர்த்தராகிய இயேசுவை அறிவிக்கவேண்டியது நமது கடமையாக இருக்கின்றது. 

சுவிசேஷ ஊழியம் என்பதுநாம் எல்லோருமே செய்யக்கூடிய பணியாகும். நம்மால் முடிந்த வரை நமது வாழ்க்கையாலும் வார்த்தைகளாலும் கிறிஸ்துவை அறிவிப்போம். ஆத்துமாக்களை ஏற்ற சபைகளில் சேர்த்து அவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர உதவுவோம். எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறியும் அறிவை அடையவும் வேண்டும் எனும் ஆர்வம் நமக்குவேண்டும். 


ஆதவன் தியான எண்:- 1,000                                                              அக்டோபர் 24, 2023 செவ்வாய்க்கிழமை

"உன்னுடனே பேசுகிற நானே அவர்" ( யோவான் 4 : 26 )

கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவரும் ஆதவன் தினசரித்   தியானம் இன்றுடன் 1000 வது தியானதை நிறைவு செய்கின்றது. இம்மட்டுமாய் இந்தத் தியானம் தொடர்ந்து வெளிவர கிருபைசெய்த கர்த்தராகிய இயேசு  கிறிஸ்துவை நன்றியோடு துதிக்கின்றேன்.  

இன்றைய தியான வசனம், "உன்னுடனே பேசுகிற நானே அவர்" என்பது  மிகச் சிறிய ஒன்றாக இருந்தாலும் இந்த வசனமே பலரை கர்த்தரை அறிந்து மனம் திரும்பச் செய்துள்ளது. எனது நண்பர் ஒருவர்  இந்து மத நம்பிக்கைகொண்டவர். ஆனால் அவருக்குச் சிறு வயதிலேயே மெய்யான கடவுள் யார் என்பதை அறியவேண்டும் எனும் ஆவல் இருந்தது. தொடர்ந்து பல மதங்களின் புனித  நூல்களைக் கற்றார். இறுதியில் வேதாகமத்தை வாசிக்கும்போது இன்றைய வசனம் அவரது உள்ளத்தில் ஊடுருவிப்  பேசியது. "மகனே, உன்னுடன் பேசுகிற நானே அவர். மெய்  தேவனை அறிய நீ எங்கெங்கோ அலைந்து முயலுகின்றாய், இப்போது உன்னுடன் பேசும் நானே நீ தேடும் அந்தத் தேவன்".

அன்பானவர்களே, அன்றே கிறிஸ்துவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த அவர் இப்போது கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்து வருகின்றார்.  கிறிஸ்துவை நாம் ஏன் மெய்யான தேவன் என்று அறிந்துகொள்ளவேண்டும்? மற்ற தெய்வங்களைப்போல மாலை , நறுமண அகர்பத்திகள் ஏற்றி வழிபடவா? இல்லை. இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்" ( யோவான் 8 : 24 ) ஆம், பாவத்தினால் நமது ஆத்துமா அழிந்து சாகாமல் விடுபடவேண்டுமானால் அவரை நாம் அறியவேண்டியதிருக்கின்றது.

இன்றைய வசனத்தை இயேசு சமாரிய பெண்ணிடம் கூறினார். அவளோ விபச்சார வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தவள். அவளுக்கு ஏற்கெனவே ஐந்து கணவர்கள் இருந்தார்கள்; இப்போது அவளோடு இருப்பவனும் அவளது கணவனல்ல. இப்படித்தான் இருந்தது அவள் வாழ்வு. ஆனால் பாவிகளையே தேடி வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவளுக்குத் தன்னை வெளிப்படுத்தினார்.  மகளே "உன்னுடனே பேசுகிற நானே அவர்" என்றார். 

அன்பானவர்களே, மெய்யான தேவனை அறியவேண்டுமென்றும் ஆவலும்  நமது பாவங்கள் மன்னிக்கப்படவும் வேண்டும் எனும் ஆர்வமும் நம்மிடம் இருந்து அவரை நோக்கிப் பார்ப்போமானால் நமக்கு அவர் தன்னை வெளிப்படுத்துவார். நமது பாவங்களை மன்னிப்பது மட்டுமல்ல, நமது வாழ்வையே மாற்றிடுவார். 

புதியஏற்பாட்டில் மட்டுமல்ல, பழைய ஏற்பாட்டு பக்தர்களிடம் பேசியதும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். அவர் வெறும் 2000 ஆண்டுகளுக்குமுன் பிறந்தவரல்ல. ஆம், ஏசாயா தீர்க்கத்தரிசி மூலம் தேவன் கூறுகின்றார், "நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்." ( ஏசாயா 44 : 6 )

"யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே." ( ஏசாயா 48 : 12 ) முந்தினவரும் அவரே பிந்தினவரும் அவரே. அவருக்கே நம்மை ஒப்புக் கொடுப்போம். இன்று கிறிஸ்துவைப் பலரும் தேவன் என்று விசுவாசியாதமைக்குக் காரணம் அவரை வெறும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பிறந்தவர் என்று எண்ணுவதுதான்.  

ஆம் அன்பானவர்களே, இந்த எண்ணத்தை மாற்றுவோம்; சத்தியத்தை அறிந்துகொள்வோம். அவரே முந்தினவராக இருந்தவர் என்று விசுவாசியாவிட்டால் கிறிஸ்து கூறியதுபோல நாம் நமது பாவங்களில் சாவோம். அவரை அறிய முயற்சிப்போமானால் நமக்கும் அவர் தன்னை வெளிப்படுத்துவார். "மகனே, மகளே உன்னோடு பேசுகின்ற நானே அவர்" என்று கூறி நம்மைத்  தேற்றுவார்; வழிநடத்திடுவார். 


🌿 'ஆதவன்' தியான எண்:- 1,001  🌿                                                                        🌹அக்டோபர் 25, 2023 புதன்கிழமை🌹

"நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்." ( பிலிப்பியர் 4 : 6 )

சிறு குழந்தைகள்  எதனையும் தங்களது மனதினில் மறைத்து வைப்பதில்லை. எல்லாவற்றையும் தாய் தகப்பனிடம் ஒப்புவித்துவிடும். உதாரணமாக, பள்ளிக்கூடம் சென்று திரும்பும் குழந்தை அன்று வகுப்பில் ஆசிரியர் பேசியது, விளையாடும்போது நண்பர்கள் பேசியது எல்லாவற்றையும் தாய் தகப்பனிடம் சொல்லும். அப்படிச் சொல்வதில் அந்தக் குழந்தைகள் ஏதோ ஒரு மகிழ்ச்சியை மனதினில் பெறுகின்றன. ஆனால் பெற்றோர் தான் குழந்தைகள் பேசுவதை பல வேளைகளில் செவிகொடுத்துக் கேட்பதில்லை.

பல பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகள் இப்படிப் பேசுவது எரிச்சல் ஏற்படுத்தும். "சரி.... சரி போய் படி அல்லது விளையாடு" என்று கூறி  அக் குழந்தைகளைத் தங்களைவிட்டுத் துரத்திவிடுவர். அன்பானவர்களே, நமது அனுபவங்களை பிறரோடு பகிர்ந்துகொள்வது இயற்கையிலேயே நமக்குள் உள்ள ஒரு உணர்வு. மனிதன் சமூக உணர்வுள்ளவன் ஆகையால் இந்த உணர்வு எல்லோருக்குள்ளும் இருக்கின்றது.

ஆனால் மனிதர்கள் வளர வளர இந்த உணர்வு குறைந்து அவர்கள் பல விஷயங்களை மறைக்கத் துவங்குகின்றனர். இதுவே மனச் சுமைக்குக் காரணமாகின்றது.   நமது தேவன் நமது மன எண்ணங்களையும் ஏக்கங்களையும் பாராமல் இருபவரல்ல. அவர் தனது பிள்ளைகள் தன்னோடு அனைத்தையும் ஜெபத்தில் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகின்றார். எனவேதான் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல்,  "நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்." என்று கூறுகின்றார்.

தேவன் நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் வெறுமனே கேட்டு மறந்துவிடுபவரல்ல; மாறாக, அவற்றுக்குப்  பதிலளிப்பவர். எனவே நாம் இப்படி எல்லாவற்றையும் நமது ஜெபங்களில் அவருக்குத் தெரிவிக்கும்போது நமக்கு அவர் ஆறுதலும் தேறுதலும் தருகின்றார். அப்போது நமது இருதயத்தை தேவ சமாதானம் நிரப்பும். இதனையே அப்போஸ்தலரான பவுல் தொடர்ந்து எழுதுகின்றார், "அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்." ( பிலிப்பியர் 4 : 7 )

அன்பானவர்களே, இந்த உலகத்தில் யாரும் அனாதைகளல்ல; நமது எண்ணங்களையும் ஏக்கங்களையும் புரிந்துகொண்டு பதிலளிக்கும் தாயும் தகப்பனுமான தேவன் நமக்கு உண்டு. எனவே வாழ்வில் நமக்கு நடக்கும் நல்லது கெட்டது அனைதையும் அவரோடு பகிர்ந்துகொள்வோம். ஜெபம் என்பது வெறுமனே மந்திரங்களை ஓதுவதல்ல மாறாக தேவனோடு பேசுதல்; அவர் பேசுவதைக் கேட்டல். நமது ஜெபங்கள் இப்படி மாறும்போது அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நமது இருதயங்களையும்  சிந்தைகளையும் நிரப்பும்.   

முழு இருதயத்தோடு நாம் அம்மா அப்பாவோடு பேசுவதுபோல தேவனோடு பேசுவோம்.  அவருக்கு நம்மைப்பற்றியும் நமது பிரச்னைகளைப்பற்றியும் தெரிந்திருந்தாலும் நாம் நமது வாயால் அவற்றை அவரிடம் சொல்லும்போது அவர் மகிழ்சியடைகின்றார். நமக்குப் பதில்தந்து நம்மை சமாதானப்படுத்துகின்றார். 


🌿 'ஆதவன்' தியான எண்:- 1,002  🌿                                                                      🌹அக்டோபர் 26, 2023 வியாழக்கிழமை🌹

"உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்." ( ஏசாயா 30 : 18 )

இந்த உலகத்தில் நாம் பல காரியங்களுக்குக் காத்திருக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. உடனேயே எல்லாம் நடந்துவிடுவதில்லை. ஒரு விதையை விதைத்தாலும் அது பலன்தர நாம் பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் காத்திருக்கவேண்டியுள்ளது. ஒருவர் மருத்துவராக வேண்டுமென்றால் அவர் ஐந்து ஆண்டுகள் பொறுமையாய்ப் படிக்கவேண்டுயுள்ளது. ஆம், அப்படிப் படித்து மருத்துவராகும்போது அந்த மகிழ்ச்சி அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தினருக்கும் சேர்த்தே கிடைக்கின்றது.  

வேதாகமத்தில் ஒரு அருமையான வசனம் உண்டு, "நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்." ( நீதிமொழிகள் 13 : 12 ) ஆம் அன்பானவர்களே உலக காரியங்களுக்கே இப்படி மகிழ்ச்சி ஏற்படுமானால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவத்தைப் பெறும்போது எவ்வளவு  மகிழ்ச்சியாய் இருக்கும்!!!

நமது ஜெபங்களையும் மன வேதனைகளையும் தேவன் அறிவார். ஆனால் அவர் ஏதோ நோக்கத்துக்காகத் தாமதிக்கின்றார்.. அவருக்கு நாம் பொறுமையோடு காத்திருக்கவேண்டியுள்ளது.  நமக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், நம்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள். இந்த வசனத்தின்படி, நாம் கர்த்தருக்காகக் காத்திருக்கின்றோம்; அவர் நமக்காகக் காத்திருக்கின்றார். பரஸ்பரம் காதலன் காதலி ஒருவருக்கொருவர் காத்திருப்பதுபோல ஒரு காத்திருப்பு இது. 

அன்பானவர்களே, நாம் பரலோக சீயோனுக்கு உரிமையானவர்கள். எனவே அதற்கு நாம் தகுதிபெற இந்தக் காத்திருப்பு தேவையாய் இருக்கின்றது. இப்படிக் காத்திருக்கும்போது நாம் எருசலேம் எனும் பரிசுத்த நகரத்தில் வசிப்பவர்களாய் மட்டும் இருந்தால் போதும். அதாவது நாம்  எருசலேம் எனும் பரிசுத்த வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுத்து காத்திருக்கவேண்டியது அவசியம். அப்படி நாம் வாழும்போது என்ன நடக்கும் என்பதைத் தொடர்ந்து ஏசாயா அடுத்த வசனத்தில் குறிப்பிடுகின்றார்:- 

"சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்." ( ஏசாயா 30 : 19 )

ஆம் அன்பானவர்களே, அப்போது நாம் அழுதுகொண்டிருமாட்டோம். காரணம், நமது கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே நமக்கு  மறுஉத்தரவு அருளுவார். எனவே நாம் கால தாமதம் ஆகின்றதே என்று கலங்கித் தவிக்க வேண்டாம். நமக்கு வயதாகிவிட்டதே, இனியும் நமக்கு மகிழ்ச்சி உண்டுமா என்று கலங்கவேண்டாம். 75 வயதில் ஆபிரகாமுக்கு ஒரு மகனைத் தருவேன் என  வாக்களித்த தேவன் அவருக்கு 100 வயதானபோதுதான்  அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார். 

மனம் தளராமல் உண்மை, பரிசுத்தம் இவற்றைக் காத்துக்கொண்டு கர்த்தருக்குக் காத்திருப்போம். இன்றைய வசனம் கூறுவதன்படி நம்மேல் மனதுருகும்படி கர்த்தர் எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள். 


🌿 'ஆதவன்' தியான எண்:- 1,003  🌿                                                                      🌹அக்டோபர் 27, 2023 வெள்ளிக்கிழமை🌹

"விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்." ( ரோமர் 10 : 4 )

இந்த உலகத்தில் பல்வேறு மத நம்பிக்கைகள் உள்ளன. ஒவ்வொரு மதங்களும் பல்வேறு சம்பிரதாய நம்பிக்கை முறைமைகளை  வகுத்து அவற்றுக்குக் கீழ்ப்படிப்பவர்களே தங்கள் மத அனுதாபிகள் என்று தீர்மானிக்கின்றன. ஒரு மதத்தை நம்புகின்றவன் அந்த மதம் கூறும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவேண்டும். இப்படியே யூத மதமும் இருந்தது. யூதர்கள் பல்வேறு கட்டளைகளையும் சடங்கு முறைமைகளையும் அனுசரித்து வந்தனர். அவற்றைக் கடைபிடிப்பவனே உண்மையான யூதன் என்று கருதினர். யூதர்களது கட்டளைகளே நியாயப்பிரமாணம். 

ஆனால், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்தக் கட்டளைகளும் சடங்கு முறைமைகளும் அல்ல, மாறாகத் தனதுமேல் வைக்கும் விசுவாசமே முக்கியம் என்று கூறினார்.  ஆம், கிறிஸ்து மதத்தை உருவாக்க வரவில்லை. மாறாக, ஒரு மார்க்கத்தை மனிதர்களுக்குக் காண்பிக்கவே வந்தார். அந்த மார்க்கமே விசுவாச மார்க்கம். விசுவாச மார்க்கத்தில் நாம் வரும்போது இயல்பிலேயே நாம் தேவ கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்துவிடுகின்றோம்.  கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக வந்தார். எனவே அவரை விசுவாசிப்போர் கட்டளைகளுக்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. இதனையே அப்போஸ்தலரான பவுல், "விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்." என்று கூறுகின்றார். 

அப்போஸ்தலரான யோவானும், "எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின." ( யோவான் 1 : 17 ) என்கின்றார்.  மோசே கொடுத்த  நியாயப்பிரமாண கட்டளையைவிட கிறிஸ்துவின் கிருபையும் சத்தியமும் மேலானவை. 

அன்பானவர்களே, இன்னும் நாம் ஒருசில மத நம்பிக்கைகளையும் மதச்  சடங்குகளையும் தவறாமல் கடைபிடித்துக்கொண்டு கிறிஸ்துவின் கிருபைக்குள் வராமல் வாழ்வோமானால் நமது வாழ்க்கை வீணான வாழ்க்கை. அது ஆவிக்குரிய வாழ்க்கையல்ல; மாறாக அது மத வாழ்க்கை. நம்மை வெறும் மதவாதியாக மாற்றும் வாழ்க்கை. 

"இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்." ( யோவான் 6 : 35 ) என்று கூறினாரேத்தவிர நியாயப்பிரமாண கட்டளைகளைக் கடைபிடிப்பவன் ஒருக்காலும் பசியடையான், ஒருக்காலும் தாகமடையான் என்று கூறவில்லை. ஆம் அன்பானவர்களே, நாம் அவரிடம் வரவேண்டும்; அவரை விசுவாசிக்கவேண்டும். 

நாம்கிறிஸ்துவிடம் வருகின்றோமென்றால், பிதாவாகிய தேவன் நம்மை அன்புசெய்து கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்துகின்றார் என்று பொருள்.  இது கட்டளைகளைக் கடைபிடிப்பதால் வருவதல்ல; மாறாக கிருபையினால் நாம் பெறும் பெரிய பேறு ஆகும். அப்படி நாம் கிறிஸ்துவிடம் விசுவாசம்கொண்டு அவரை நெருங்கும்போது அவர் நம்மைத் புறம்பே தள்ளமாட்டார். இதனையே யோவான் நற்செய்தியில் இயேசு கிறிஸ்து,   "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை."( யோவான் 6 : 37 ) என்று கூறினார். 

ஆம் அன்பானவர்களே, "விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்." எனும் வசனத்தின்படி, எவனுக்கும் என்பது மத, இன, ஜாதி, தேச வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் என்று பொருள்.  நாம் யாராக இருந்தாலும் அவரை விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும் என்று பொருள். மதச் சடங்குகளோ பாரம்பரியங்களோ சட்டதிட்டங்களோ தேவையில்லை என்று பொருள். அவர்மேல் விசுவாசம் கொள்ளவேண்டியதே முக்கியம் என்று பொருள். அவரை விசுவாசித்து ஆத்தும இரட்சிப்பையும் மேலான பரலோக வாழ்வையும்  பெற்றுக்கொள்வோம்.


🌿 'ஆதவன்' தியான எண்:- 1,004  🌿                                                                      🌹அக்டோபர் 28, 2023 சனிக்கிழமை🌹

"அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ( ரோமர் 8 : 28 )

ஆவிக்குரிய வாழ்வில் நம்மைத் திடப்படுத்த அப்போஸ்தலரான பவுல் கூறும் இன்றைய வசனம் உதவியாக இருக்கின்றது. அதாவது, நாம் தேவனுக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும் சிலவேளைகளில் நமக்குத் துன்பங்களும் நெருக்கடிகளும் ஏற்படுகின்றன. இத்தகைய சூழ்நிலைகளில் நாம் மனம் தளர்ந்து போய்விடக்கூடாது. காரணம், தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்கின்றார் பவுல் அப்போஸ்தலர்.

நமது வாழ்வில் பின்னாளில் நடக்க இருப்பவை பற்றி நமக்குத் தெரியாது. நம்மைக்குறித்தச் சில காரியங்களை தேவன் மறைவாகவே வைத்திருக்கின்றார். எனவே நாம் துன்பப்படும்போது இந்தத் துன்பத்தின் பின்னால் மிகப்பெரிய ஆசீர்வாதம் நமக்கு உண்டு என்பதை நாம் உணரவேண்டும். இன்றைய வசனம் கூறுவதன்படி அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களாக நாம் இருந்தால் போதும். 

தேவனிடம் அன்புகூருதல் என்பது பாவத்துக்கு விலகி வாழ்வதுதான். இன்றைய தியான வசனத்துக்கு மிகச் சரியான உதாரணம் யோசேப்பு. உடன்பிறந்தவர்களால் பகைக்கப்பட்டு, அடிமையாக விற்கப்பட்டு, அடிமையாக இருந்த நாட்டில் ஆபாண்டமாய்ப் பொய்க் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சிறைக் கைதியாகி இப்படிப் பல்வேறு தொடர் சோதனைகள் அவன் வாழ்வில்.  இவை அனைத்தும் தேவன் அவன்மேல் அன்புகூர்ந்து அவனை எகிப்துக்கு பிரதம மந்திரியாக மாற்றிடச் செய்தச் செயல்கள். அவனும் தேவனுக்குப் பயந்து பாவச் சூழ்நிலைவந்தபோதும் அதற்கு விலகித் தன்னைப்  பரிசுத்தமாய்க்  காத்துக்கொண்டான். 

யோசேப்புப் பிரதம மந்திரியானபின்  தன்னைக் கொடுமைப்படுத்தி அடிமையாக விற்பனைசெய்த சகோதரர்களைச் சந்தித்தபோது கூறுகின்றான்.  "பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார். ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்." ( ஆதியாகமம் 45 : 7, 8 ) 

துன்பத்தின்வழியில் அவனை நடத்தி அவனை உயர்த்தி மக்களையும் காப்பது தேவனது முன்திட்டம்.    ஆம் அன்பானவர்களே, தான் கொடுமைகளை அனுபவித்தபோது யோசேப்புக்கு பின்னாளில் நடக்கப்போவது தெரியாது. ஆனாலும் அவன் தேவனுக்குமுன் உண்மையுள்ள ஒரு வாழ்க்கை வாழ்ந்தான். 

அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்பதை தெசலோனிக்கேய சபை மக்களுக்கு அறிவிக்க அப்போஸ்தலரான பவுல் தனது உடன் ஊழியனான தீமோத்தேயுவை அந்தச் சபைக்கு அனுப்புகின்றார். அப்போது,   "உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்." ( 1 தெசலோனிக்கேயர் 3 : 2 ) என எழுதுகின்றார்.

அன்பானவர்களே, எனவே துன்பங்களைக் கண்டு சோர்ந்துபோக வேண்டாம். தேவனிடத்தில் அன்புகூரும்போது நமக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கும்.  

🌿 'ஆதவன்' தியான எண்:- 1,005  🌿                                                                      🌹அக்டோபர் 29, 2023 ஞாயிற்றுக்கிழமை🌹

"நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக்கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார்." ( லுூக்கா 11 : 52 )

தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அறியவேண்டுமானால் நாம் சிறு குழந்தைகள்போல மாறவேண்டியது அவசியம். ஆவிக்குரிய காரியங்களை அறிவுமூலம் நாம் விபரிக்கவோ தெரிந்துகொள்ளவோ முடியாது. ஆனால்,  இயேசுவின் காலத்து பரிசேயர்களும் நியாயசாஸ்திரிகளும் இப்படி இருந்ததால் அவரை அவர்களால் அறிய முடியவில்லை. ஒருவர் வேதாகமம் முழுவதும் படித்து டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் ஆவியின் அபிஷேகம் பெறாவிட்டால் அவர் தேவனைப் பற்றி அறிந்தவரேத்தவிர தேவனை அறிந்தவரல்ல.

எனவேதான் இயேசு கிறிஸ்துக்  கூறினார், "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது." ( மத்தேயு 19 : 14 ) என்று. சிறு குழந்தைகள் தங்கள் அறிவால் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க மாட்டார்கள். நாம் சொல்வதை குழந்தைகள் ஏற்றுக்கொள்ளும். 

பரிசேயரும் நியாயாசாஸ்திரிகளும் தங்களது வேத அரிவால் மேசியாவை அடையாளம்காண முயன்றனர். ஆனால் அவர்களது இறுமாப்பான இருதயமே கிறிஸ்துவாகிய மேசியாவை அறியத் தடையாக இருந்தது.    அவர்கள் இயேசுவை மேசியா  அல்ல  என நிராகரித்து, கடவுளுடைய ராஜ்யத்தில் மக்கள் நுழைவதைத் தடுத்தார்கள், அவர்களும் அதில் நுழையவில்லை. 

ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவைப்பற்றி கூறப்பட்ட  தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்களை அவர்கள் சுய அறிவுமூலம் பார்த்ததால் அவரைக் கண்டுகொள்ள முடியவில்லை. இப்படி மதத் தலைவர்களும் அறிவாளிகளான நியாயசாஸ்திரிகளும்  தோல்வியுற்ற இடத்தில் படிக்காத, சாதாரண மனிதர்கள் வெற்றி பெற்றார்கள். ஆம், படிக்காத சீடர்கள் இயேசுவை மேசியா என்று கண்டுகொண்டார்கள்.

இன்றும் பலர் இரட்சிப்பு அனுபவத்தைப் பெறாமலிருக்கக் காரணம் அவர்களது அறிவுதான். அவர்கள் வேத வசனங்களுக்குத் தங்கள் மூளை அறிவால் பொருள் தேடுகின்றனர். இப்படித்தான் இயேசு கிறிஸ்துவின் காலத்து பரிசேயர்களும் நியாயசாஸ்திரிகளும் இருந்தனர். 

இயேசுவே கிறிஸ்துவாகிய மேசியா என்பதை மக்களுக்கு விளக்குவதே அப்போஸ்தலரான பவுலின் முக்கிய பணியாக இருந்தது. பல ஆவிக்குரிய சத்தியங்களும் இப்படியே அறிவாகிய திறவுகோலால் நாம் திறக்க முடியாதவைகளே.  நம்மை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து ஆவியானவரின் வழிகாட்டுதலுக்குக் காத்திருக்கும்போதே உண்மையினை நாம் அறிந்துகொள்ள முடியும். 

அப்போஸ்தலரான பவுல் இதுபற்றி கூறும்போது, "அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." ( 1 கொரிந்தியர் 2 : 13, 14 ) என்கின்றார்.

அன்பானவர்களே பரிசேயர்களுக்கும் நியாயசாஸ்திரிகளுக்கும் இயேசு கூறியது சுய அறிவால் கிறிஸ்துவை தேடுபவர்களுக்கும் அவரை சரியாக அறியாமல் வெறுமனே வழிபடுபவர்களுக்கும் பொருந்தும். ஆம், அத்தகையவர்கள் தங்களது  சுய அறிவாகிய திறவுகோலைத் தூக்கி எறிந்துவிட்டு ஆவியானவரின் வழிநடத்துதலுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானித்தால்தான் அறியமுடியும். அறிவை விட்டுவிட்டு ஆவியானவரை பற்றிக்கொள்வோம்.


🌿 'ஆதவன்' தியான எண்:- 1,006  🌿                                                                      🌹அக்டோபர் 30, 2023 திங்கள்கிழமை🌹

"எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது." ( சங்கீதம் 130 : 6 )

தேவனை வாழ்வில் அறிய; அவரது இரட்சிப்பைப் பெற,  நாம் ஆர்வமாய்க் காத்திருக்கவேண்டும் எனும் உண்மையினை அழகிய உவமை வழியாக சங்கீத ஆசிரியர் கூறுகின்றார். ஜாமக்காரர் எனும் இரவுக் காவலர்களை அவர் உவமையாகக் கூறுகின்றார்.

இரவு காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்காரர்களை நாம் பார்த்திருப்போம். கடுமையான கோடை வெய்யில் வாட்டும் காலத்திலும்  மிகக் கடும் குளிரிலும், மழைக்காலங்களிலும் மிகவும் அவதிக்குள்ளாகி தங்கள் பணியைச் செய்கின்றனர். சுகமாக உறங்கவேண்டும் எனும் ஆர்வமும் உடல் சோர்வும் இருந்தாலும் அவர்களது பணி அவர்களைத் தூங்கவிடாது. எப்போது விடியும் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்கலாம் என்று அவர்கள் மனம் ஏங்கும். 

இப்படி இந்த இரவுக் காவலர்கள் ஏங்குவதைவிட அதிகமாய்த்  தேவனுக்காக எனது மனம் காத்திருந்து ஏங்குகின்றது என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார். 

மேலும், சங்கீதம் 119 இல் நாம் வாசிக்கின்றோம், "உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது." ( சங்கீதம் 119 : 123 ) என்று.

அன்பானவர்களே, தனது உலக ஆசைகளை நிறைவேற்றுவதற்கு சங்கீத ஆசிரியர் இப்படி ஏங்கவில்லை. மாறாக, தேவனோடுள்ள உறவை அடைந்திட; ஆத்தும மீட்பினைப் பெறுவதற்கு இப்படிக் காத்திருக்கின்றேன் என்கின்றார். இன்று நமது மனம் இப்படி ஏங்குகின்றதா? இப்படி ஒரு ஏக்கம் நமக்குள் இருக்குமானால் நிச்சயமாக தேவன் நம்மிடம் நெருங்கிவருவார். அவரது இரட்சிப்பை நமக்கு வெளிப்படுத்துவார். 

புதிய ஏற்பாட்டின் அடிப்படையில்  நியாயப்பிரமாணம் நம்மை இரட்சிப்பதில்லை. மாறாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசமே நம்மை இரட்சிக்கும். சங்கீதத்தில் கூறப்பட்டுள்ளதை அப்போஸ்தலரான பவுல் புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் பின்வருமாறு கூறுகின்றார்:- "நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.' ( கலாத்தியர் 5 : 5 ) ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு காத்திருக்கிறேன் என்று கூறுகின்றார். 

என்ன இருந்தாலும் நாம் ஆவலான இதயத்துடன் கர்த்தரது  இரட்சிப்புக்குக் காத்திருக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இந்த உலகத்திலேயே நாம் ஒரு வேலைக்காக,  அரசு சலுகைக்காக,  கல்லூரியில் இடம் கிடைப்பதற்கு எனப்  பல காரியங்களுக்குக் காத்திருக்கவேண்டியது இருக்கின்றது. ஆனால் இவற்றைவிட மேலான இரட்சிப்புக்கும் நித்திய ஜீவனுக்கும் நாம் எவ்வளவு அதிகம் காத்திருக்கவேண்டியது அவசியம்!!!

ஆவியானவர் நம்மை நிரப்பவும் நாம் நித்திய மீட்பினைப் பெறவும் தாகமுள்ளவர்களாக இருப்போமானால் நிச்சயமாக தேவன் தனது ஆவியால் நம்மை நிரப்புவார்.  "தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்." ( ஏசாயா 44 : 3 ) என்கிறார் கர்த்தர்.

🌿 'ஆதவன்' தியான எண்:- 1,007  🌿                                                                      🌹அக்டோபர் 31, 2023 செவ்வாய்க்கிழமை🌹

"போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ?" ( 1 கொரிந்தியர் 9 : 9 )

பயிர்களை அறுவடைசெய்தபின் அவற்றைப் கதிரிலிருந்து பிரித்தெடுக்க மாட்டைவைத்து போரடிப்பார்கள். அப்படிப் போரடிக்கும்போது மாடுகள் வைக்கோலோடு சேர்த்து தானியத்தையும் தின்னும். எனவே, போரடிக்கும்போது விவசாயிகள் மாடுகளின் வாயைக் கட்டிவிடுவதுண்டு.  ஆனால் அப்படிச் செய்யக்கூடாது என்று தேவன் மோசே மூலம் கட்டளைக் கொடுத்திருந்தார். இதை நாம் "போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக." ( உபாகமம் 25 : 4 ) என உபாகமத்தில் வாசிக்கலாம்.  

அப்போஸ்தலரான பவுல் இந்த உபாகம கட்டளையை சுவிசேஷ அறிவிப்புச் செய்யும் ஊழியர்களுக்கு ஒப்பிட்டு இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் கூறுகின்றார். காரணம்,  "அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்." ( 1 கொரிந்தியர் 9 : 14 ) என்று கூறுகின்றார். 

முழு நேர ஊழியத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பிழைக்கவேண்டுமானால் அவர்களுக்கு வருமானம் வேண்டும். அப்படி அவர்கள் தேவைகள் சந்திக்கப்படும்போதுதான் அவர்களும் உற்சாகமாக ஊழியம் செய்யமுடியும்.   ஆனால், கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வோர் முதலாவதாக நற்செய்தி அறிவிப்புக்குத்தான் முன்னுரிமைகொடுக்க வேண்டுமே தவிர அதன்மூலம் பெறப்படும் பணத்துக்கல்ல. ஏனெனில், "சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ." ( 1 கொரிந்தியர் 9 : 16 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

மாடுகளுக்காக கவலைப்படும் தேவன் மனிதர்களுக்குக் கவலைப்படாமல் இருப்பாரா? உண்மையாய் தேவனுக்கு ஊழியம் செய்வோரை தேவன் நிச்சயமாகக் கனம் பண்ணுவார். அந்த நம்பிக்கையில் அவர் கூறுகின்றார், போராடிகின்ற மாட்டுக்கு அந்த வைக்கோலைத் தின்ன அதிகாரம் உள்ளதுபோல மக்களது பணத்தை நான் பெறுவது எனது அதிகாரம். ஆனால் நான் அந்த அதிகாரத்தை மக்கள்மேல் செலுத்தவில்லை. அப்படி செலவில்லாமலேயே நான் கிறிஸ்துவின் சவிசேஷத்தை அறிவிப்பேன் என்கின்றார். 

"ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன்."( 1 கொரிந்தியர் 9 : 18 )

இந்த உறுதி அவருக்கு எப்படி வந்தது? அது தேவன் தனது ஊழியர்களைக் கைவிடமாட்டார் எனும் நம்பிக்கையில் வந்தது. அதுபோலவே, சில கஷ்டங்களை அவர் அனுபவித்தாலும் தேவன் அவரை ஊழிய பாதையில் நடத்தினார். இப்படி விசுவாசத்தால் ஊழியம் செய்தவர்கள் பலர் உண்டு. மக்களை நம்பியல்ல, தேவனையே முற்றிலும் நம்பி அவர்கள் ஊழியம் செய்தனர். தேவனும் அவர்களை நடத்தினார். ஜார்ஜ் முல்லர் (1805 - 1898) எனும் பரிசுத்தவான் தேவனையே நம்பி ஆயிரக்கணக்கான அனாதைக் குழந்தைகளை ஆதரித்து வந்தார். அவர் வாய் திறந்து கேட்காமலேயே அதிசயமாக தேவன் அவரை நடத்தினார். தற்போதும் நமது நாட்டிலேயே பல ஊழியர்கள் இப்படி ஊழியம் செய்கின்றனர்.

இன்றைய தியான வசனம் தனது நற்செய்தியை அறிவிப்பவர்களை தேவன் எப்படிக் கனப்படுத்துகின்றார் என்பதற்கு உதாரணம்.  பிரயாசைப்பட்டு ஒருவர் தேவனுக்கு ஊழியம் செய்யும்போது அவரைத் தேவன் கைவிடமாட்டார். சாதாரண மாடுகளுக்காக கவலைப்படும் தேவன் தனக்கு ஊழியம் செய்யும் ஊழியர்களைக் கைவிடுவாரா? ஆனால்  ஒன்று, போரடிக்கும் மாடுகள் வலுக்கட்டாயமாக பறித்துத் தின்பதில்லை. அவற்றுக்கு உரிமையானத்தைச் சாப்பிடுகின்றன. உண்மையான ஊழியர்கள் இந்த மாடுகளைப் போலவே  மக்களை வலுக்கட்டாயம் செய்யாமல் போரடிப்பார்கள்; தேவனே அவர்களை நடத்துவார்.

No comments: