Friday, December 02, 2022

வேதாகம முத்துக்கள் - நவம்பர் 2022


                                    - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


ஆதவன் 🖋️ 643 ⛪ நவம்பர் 01,  2022 செவ்வாய்க்கிழமை 

"கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்டஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது."( சங்கீதம் 33 : 12 )

இன்றைய வசனத்தின்படி நாம் பாக்கியமுள்ளவர்கள். காரணம், நாம் கர்த்தரை நமது தெய்வமாகக் கொண்டுள்ளோம். அதுபோல அவரும் நம்மைத் தெரிந்துகொண்டுள்ளார். 

தேவன் தனக்காகத் தெரிந்துகொண்ட மக்கள்தான்  இஸ்ரவேல் மக்கள். உலகினில் பல்வேறு மக்கள் இனங்கள் இருந்தாலும் தேவன் இஸ்ரவேல் மக்களைத் தனக்கு உகந்தவர்களாகக்  குறிப்பாகத் தேர்வு செய்தார். அது உண்மையிலேயே யூதர்களுக்கு ஒரு மேன்மையான காரியம்தான். அப்போஸ்தலரான பவுல் இதுபற்றி கூறும்போது, "இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே." ( ரோமர் 3 : 2 )

தேவனுடைய வார்த்தைகள் யூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது மேன்மையான காரியம்தான். விலையேறப்பெற்றப் பொருட்களை நம்பிக்கையானவர்களிடம்தான் ஒப்படைப்பார்கள். தேவனும் அதுபோலத் தனது விலையேறப்பெற்ற வார்த்தைகளை யூதர்களிடம் ஒப்படைத்தார். மெய்யாகவே தேவன் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட யூதஜனம் பாக்கியமுள்ளது.

அன்பானவர்களே, இன்றைய உலகினில் வேதம் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம்கொண்ட நம்மைத்தான் யூதர்கள் என்று குறிப்பிடுகின்றது (ரோமர் -2:28,29). நாம்தான் ஆவிக்குரிய யூதர்கள். எனவே நாம் தான் பாக்கியமுள்ளவர்கள்.

அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார், "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 )

ஆனால் இப்படித் தெரிந்துகொள்ளப்பட்ட நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக தொடர்ந்து வாழவேண்டும். இல்லாவிட்டால் நாம் இந்த பாக்கியநிலையில் தொடர்ந்து நிலைநிற்க முடியாது. இயேசு கூறினார், "அதிகம் கொடுக்கப்பட்டவனிடம் அதிகம் கேட்கப்படும்" என்று. அதனை நாம் மறந்துவிடக்கூடாது. யூதர்கள் தேவனது வார்தைகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் தேவனுக்கு விரோதமான பாவம் செய்தபோது தேவன் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தார். பிற ராஜாக்களிடம் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தார். இதுவே இன்றைய ஆவிக்குரிய யூதர்களாகிய நமக்கும் பொருந்தும்.

தனது விலையேறப்பெற்ற இரட்சிப்பை நமக்குத் தந்து நம்மை அலங்கரித்த தேவன் அதனை நாம் காத்துக்கொள்ளத் தவறினால் கடுமையாக நம்மைத் தண்டிப்பார் என்பதனையும் மறந்துவிடக் கூடாது. எனவே நாம் மற்றவர்களைவிட அதிக கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். பெற்றுக்கொண்ட இரட்சிப்பைக் கவனமுடன் காத்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம். 

தேவன் நமக்கு தகப்பனாக இருந்தாலும் அவர் பட்சிக்கிற அக்கினியாகவும் இருக்கின்றார் என்ற உண்மையினை நாம் மறந்துவிடாமல் கவனமுடன் நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடரவேண்டும்.

விலையேறப்பெற்ற தங்கம், சுத்தத்  தங்கமாக இருக்கவேண்டும். மாற்று குறையும்போது தங்கத்தின் மதிப்புக் குறைந்துவிடும். அதுபோல நாமும் தேவனது பார்வையில் விலையேறப்பெற்றவர்கள். நமது மதிப்புக் குறைந்திடாமல் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.  கர்த்தர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமாகிய நாம்  பாக்கியமுள்ளவர்கள்; பரிசுத்தமானவர்கள். 


ஆதவன் 🖋️ 644 ⛪ நவம்பர் 02,  2022 புதன்கிழமை 

"அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 26, 27 )

ஒருமுறை இயேசு கிறிஸ்து எருசலேமுக்குப் பயணமாய்ச் செல்லும்போது வழியிலுள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் பிரசங்கம்பண்ணிக் கொண்டு போனார். இயேசு கிறிஸ்துவின் போதனை குறிப்பாக, பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்குரிய தகுதிகளைக் குறித்ததாக இருந்தது. அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவனுக்கு இயேசு கிறிஸ்துவின் போதனை கடைபிடிக்க அரிதான ஒரு செயல்போலத் தெரிந்தது. வித்தியாசமான உபதேசமாக இருந்தது.

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 24 ) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் அவனுக்குக் குழப்பதைக் கொண்டுவந்திருக்கும். 

எனவே, அவன் இயேசு கிறிஸ்துவிடம், "ஆண்டவரே, இரட்சிக்கப்படுபவர்கள் சிலபேர்தானோ?" என்று கேட்டான்.  அவனுக்குப் பதில்கூறும்போது இயேசு கிறிஸ்து இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைக் கூறினார். 

இயேசு கிறிஸ்துவின் போதனைகளைக் கேட்கவந்தவர்களுக்கு அவர் பல வேளைகளில் உணவு கொடுத்தார். அப்பத்தையும் மீனையும் பலுகச்செய்து உணவளித்தார். பலர் இயேசு இப்படி உணவளிப்பதால் அவரிடம் வந்து போதகத்தைக் கேட்டனர்; உணவும் உண்டனர். ஆனால் அவர்கள் மெய்யான மனம்திரும்புதலுக்குள் வரவில்லை. இத்தகைய மனிதர்கள்தான் இறுதிநாட்களில் பரலோகத்தினுள் பிரவேசிக்கமுடியாமல் போகும்போது வந்து நின்று,  "உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே" என்று சொல்லுகின்றவர்கள். 

போதனைகளைக்கேட்டு அவர் அளித்த உணவினை உண்டு வந்ததால் அவர்கள் இறுதி நாளில் அவரோடு பரலோகத்தில் நுழைய முடியும் என்று நம்புவார்கள். ஆனால் அவர்களைப்பார்த்து, "உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

அன்பானவர்களே, இது இந்தநாளில் வாழும் நமக்கு ஒரு எச்சரிப்பாகும். ஆண்டவரின் நற்கருணையை (இராப்போஜனம்) உண்டு பல்வேறு சுவிசேஷ கூட்டங்களில் தவறாமல் பங்கு பெறுவதால் மட்டும் நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக முடியாது என்கின்றார் இயேசு கிறிஸ்து. காரணம், இவைகளைச் செய்வது எளிது. யார் வேண்டுமானாலும் எளிதில் இவைகளை நிறைவேற்றலாம். 

ஆனால், தேவன் விரும்புவது ஒரு மனம் திரும்பிய வாழ்வு. நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு வாழும் ஒரு மீட்பு பெற்ற ஆவிக்குரிய வாழ்வு. இந்த வாழ்வினை வாழ விரும்பாமல் வெறும் ஆராதைகளில் கலந்துகொண்டு  அதனால் திருப்தியடைவதில் அர்த்தமில்லை. ஆராதனையோடு ஆவிக்குரிய வாழ்வும் நமக்கு வேண்டும்.  இறுதிநாளில் உங்களை அறியேன் என்று தேவனது வாயினால் கூறப்பட்டு புறம்தள்ளப்படும் பரிதாப நிலைமை நமக்கு வரக்கூடாது.  

மீட்பு அனுபவம் பெற்று மாம்ச இச்சைகளை நிறைவேற்றாமல் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போதே நமக்கு தேவனோடு நித்திய பேரின்பத்தில் நுழைய முடியும். அப்போஸ்தலரான பவுல் அடிகளும் இதனால்தான் "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." ( ரோமர் 8 : 1 ) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

ஆதவன் 🖋️ 645 ⛪ நவம்பர் 03,  2022 வியாழக்கிழமை

"நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப்போகையில், குதிரைகளையும், இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்." ( உபாகமம் 20 : 1 )

கிறிஸ்தவர்கள் பலரும் இன்றைய தியானத்துக்குரிய மேற்படி வசனத்தைப் படிக்கும்போது  இந்த உலகத்தில் எதிரிகள் என்று இவர்கள் கருத்துபவர்களை நினைத்துக்கொள்வதுண்டு. பக்கத்துவீட்டுக்காரர்கள், அல்லது பணி செய்யும் இடங்களில் எதிராகச் செயல்படுபவர்கள் இவர்களையே எதிரிகள் என்று எண்ணிக்கொள்வதுண்டு. ஆனால், புதிய ஏற்பாட்டின்படி நமக்கு மாம்சீக எதிரிகள் கிடையாது. அனைவரையும் மன்னித்து மறப்பதே கிறிஸ்தவனின் பண்பாக கூறப்பட்டுள்ளது. பழிவாங்குவதல்ல. 

ஒருமுறை அலுவலகத்தில் தனது மேலதிகாரி தனக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறிய ஒரு சகோதரர் என்னிடம்,  "அவர்களது குதிரைகளையும், இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்." என்ற வசனம் தனக்கு உணர்த்தப்பட்டதாகக் கூறி கர்த்தர் ஜெயம் தருவார் என்று நம்பிக்கையுடன் கூறினார். ஆனால், உண்மையில் இந்தச் சகோதரிடம்தான் தவறே இருந்தது. பிற்பாடு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று அறிந்தேன். 

அன்பானவர்களே, பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள இந்த வசனம் ஆவிக்குரிய வசனமாக புதிய ஏற்பாட்டு மக்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நமக்கு எதிரிகள் நாம்தான். நம்மை வஞ்சிக்கும் பாவ ஆசைகளும் பாவச் சூழ்நிலைகளும்தான் நமக்கு எதிரிகள். ஆவிக்குரிய வாழ்விலிருந்து நம்மை விழத்தள்ளுவதற்கு சாத்தான் கொண்டுவரும் சவால்களே இந்த எதிரிகள்.

குதிரைகளையும், இரதங்களையும், நம்மிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்கள் போலவும் இருக்கும் மிகப்பெரிய பாவச் சூழ்நிலைகளைக்கண்டு நாம் பயப்படக்கூடாது; அவைகளுக்கு அடிமையாகிவிடக்கூடாது. நம் தேவனாகிய கர்த்தர் நம்மோடுகூட இருக்கிறார். அவர் நிச்சயமாக நம்மைக் கொடிய பாவங்களிலிருந்தும் பாவப் பழக்கங்களிலிருந்தும்    சாத்தானின் தந்திரங்களிலிருந்தும் அந்தகார சக்திகளிடமிருந்தும்   விடுவிப்பார்.

அப்போஸ்தலராகிய பவுல் அடிகள் இதனால்தான், "ஏனெனில், மாம்சத்தோடும் இரதத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு." ( எபேசியர் 6 : 12 ) என்று கூறுகின்றார். 

மேலும் அப்போஸ்தலரான பவுல் கூறும்போது, "ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும், தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.( எபேசியர் 6 : 13-17 ) என்கின்றார்.

அன்பானவர்களே, இன்றைய வசனம் "நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப்போகையில்" என்று ஆரம்பிக்கின்றது. ஆம், இந்த உலகில்  ஆவிக்குரிய யுத்தம் செய்யப் போகும்போது என்பது பொருள். அப்படி நாம்  போகும்போது  அப்போஸ்தலரான பவுல் கூறியுள்ள மேற்படி ஆயுதங்கள் நம்மிடம் இருப்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். மட்டுமல்ல அவை மழுங்கிப்போகாதவாறும் காத்துக்கொள்ளவேண்டும். அப்போது மட்டுமே நாம் இத்தகைய ஆவிக்குரிய போராட்டங்களில் வெற்றிபெற முடியும் 

ஆதவன் 🖋️ 646 ⛪ நவம்பர் 04,  2022 வெள்ளிக்கிழமை

"அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 : 25 )

இன்றைய சுவிஷேச கூட்டங்களில் பல்வேறுவகை ஊழியர்களை நாம் பார்க்கலாம். நடனமாடிகள், பாடகர்கள், ஆறுதல்படுத்துபவர்கள், ஆசீர்வாதங்களையே போதிப்பவர்கள், நாட்டு நடப்புகளை பேசுபவர்கள், நீதிபோதனைகள் செய்பவர்கள், வெட்டிக்கதை பேசுபவர்கள்  என இந்தப் பட்டியல் நீளும். 

ஆனால் ஒரு உண்மை  போதகன் மக்களை மனம்திரும்புதலுக்கேற்ற வழியில் நடத்துபவனே. ஆனால் அப்படிப் பேசினால் கூட்டம் சேராது, காணிக்கையும் வராது என்பதால் மக்களைக் கவரும் மேற்படி கூறப்பட்ட கவர்ச்சி போதகர்கள் கிறிஸ்தவத்தில் எழும்பியுள்ளனர். இவர்களது போதனைகளால் மக்களுக்கு எந்த ஆவிக்குரிய பயனும் ஏற்படுவதில்லை. 

இன்றைய தியானத்துக்குரிய வசனம் "அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து" என்று கூறுகின்றது. அப்போஸ்தலரான பவுல் அடிகள் ரோமையில் விசாரணைக் கைதியாக இருக்கும்போது தனது வாதங்களை எடுத்துக்கூறும்போதும் சுவிசேஷ அறிவிப்பாகவே அதனைச்செய்தார். பவுல் அடிகளின் பேச்சு நீதி, இச்சையடக்கம், நித்திய நியாயத் தீர்ப்பு இவைகளைப்பற்றியே இருந்தது.   

ஆனால், பேலிக்ஸ் இவைகளைக்கேட்டு பயமடைகின்றான். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள். அதுபோல நீதி, நியாயம், இச்சையடக்கம் இவை எதுவும் அவனிடம் இல்லாததால் பேலிக்ஸ் பயமடைந்தான். அவனுக்கு அதற்குமேல் பவுலின் வாதங்களைக் கேட்க மனதில்லை. எனவே, இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்று கூறி பவுலை அனுப்பிவிடுகின்றான்.

அன்பானவர்களே, இதுதான் இன்றைக்கும் நடக்கின்றது. கன்வென்சன் கூட்டங்களில் சென்று ஆடிப்பாடி துள்ளிக் குதிக்கும் பலரிடம் உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கை இல்லாததால் மெய்யான சுவிசேஷ அறிவிப்புகளை இவர்கள் கேட்க முன்வருவதில்லை. பாடல்களை ரசிக்கிறார்கள்; ஆடல்களை ரசிக்கின்றார்கள்; அவரைவிட இவர் நன்றாகக் பாடுகின்றார் என்கின்றார்கள்.  ஆனால், பேலீக்ஸைப்போல  மெய்யான சுவிசேஷ அறிவிப்புகளுக்குப் பயப்படுகின்றார்கள்; வெறுக்கிறார்கள்.

சபை ஆராதனை பல விசுவாசிகளுக்கு ஞாயிறு பொழுதுபோக்குபோல் மாறிவிட்டது. எனவே அவர்கள் கடினமான மெய்யான உபதேசங்களுக்குச் செவிகொடுப்பதில்லை. 

இதனையே அன்று அப்போஸ்தலரான பவுல் தனது சீடன் தீமோத்தேயுக்கு கூறினார். "ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்." ( 2 தீமோத்தேயு 4 : 3, 4 ) என்று. பவுல் கூறிய அந்தக் காலம்தான் இப்போது நடந்துகொண்டிருக்கின்றது.

அன்பானவர்களே, உண்மைக்கும் சத்தியத்துக்கும் செவிகொடுக்கும்போது மட்டுமே நாம் கிறிஸ்துவை அறிய முடியும். சத்தியம் கசப்பானதாக இருந்தாலும் சத்தியம் மட்டுமே நம்மை விடுவிக்க முடியும். "சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்"  ( யோவான் 8 : 32 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?

நமக்குத் தேவை ஆடலும், பாடலும், துள்ளலும், ஆசீர்வாத வார்த்தைகளுமல்ல. மெய் ஆசீர்வாதத்துக்கான வழிதான் நமக்குத் தேவை. அந்த வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நம்மை அர்ப்பணிப்பதால் மட்டுமே நமக்கு வெளிப்படும். ஆம், எனவேதான் "நானே வழி" என்று ஆணித்தரமாக நமக்கு அவர் கூறியுள்ளார். 

ஆதவன் 🖋️ 647 ⛪ நவம்பர் 05,  2022 சனிக்கிழமை

"என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்." ( யோவான் 8 : 29 )

ஒரு நாட்டின்  பிரதிநிதியாக (Ambassador) ஒருவரை அந்த நாடு இன்னொருநாட்டிற்கு அனுப்புகின்றது என்றால் அந்த நாடே அவருக்குண்டான அனைத்துச் செலவினங்களையும் ஏற்றுக்கொள்ளும். அவர் கேட்காமலே அவருக்கென்று பல சலுகைகளைக் கொடுக்கும். அவருக்கொரு பிரச்சனையென்றால் அனுப்பிய நாடு பிரச்சனையிலிருந்து அவரை விடுவிக்க செயல்படும். மட்டுமல்ல, அப்படி அனுப்பப்படும் நபருக்கு பல அதிகாரங்களும் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் ஒரு நிபந்தனை, பிரதிநிதியாக அனுப்பப்படும் நபர் தன்னை அனுப்பிய நாட்டிற்கு விசுவாசமானவராக, தனது நாட்டின் மகிமையை விட்டுக்கொடுக்காதவராக இருக்கவேண்டும்.  

இயேசு கிறிஸ்துவை பிதாவாகிய தேவன் தனது சித்தம் செய்ய உலகிற்கு அனுப்பினார். அந்தப்பணியை இயேசு கிறிஸ்து சரியாகச் செய்துமுடித்தார். மட்டுமல்ல அவர் செய்தவை அனைத்தும் பிதாவாகிய தேவனுக்கு பிரியமான செயல்கள். எனவேதான்,  "பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை" என்றார் இயேசு கிறிஸ்து. 

பிதா எப்படி இயேசு கிறிஸ்துவை அனுப்பினாரோ அதேபோல இன்று நம்மைக் கிறிஸ்து  உலகத்தில் அனுப்புகின்றார். "பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்." ( யோவான் 20 : 21 ) என்று கூறினார்  இயேசு கிறிஸ்து. இந்த வசனம் சீடர்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் நம் அனைவருக்கும்தான். ஏனெனில் ஒரு சீடத்துவ வாழ்வு வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.  

இயேசு கிறிஸ்துவோடு பிதாவாகிய தேவன் இருந்ததுபோல நம்மோடும் இருக்கும்போதுதான் நாம் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று உலகிற்கு அடையாளம் காட்ட முடியும். இயேசு கிறிஸ்து நமக்கு அதனையும் வாக்களித்துள்ளனர். "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்." ( யோவான் 14 : 23 ). அதாவது, கிறிஸ்துவின் வசனத்தின்படி வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். அப்போது நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம் என்று இந்த வசனம் கூறுகின்றது.  

ஆம், நாம் கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழும்போது மட்டுமே  பிதாவும் குமாரனாகிய கிறிஸ்துவும் நம்மோடு வாசம்பண்ணுவார்கள். இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. 

என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார் என்று நாம் உறுதியோடு கூறக்கூடிய நிலைக்கு வரவேண்டும். ஆவிக்குரிய வாழ்வில் நாம் வளரும்போது நமக்கு அந்த உறுதி ஏற்படும். நம்மோடு கிறிஸ்து இருக்கிறார் எனும் உறுதி நமக்கு ஏற்படும்போது மட்டுமே நாம் துணிந்து கிறிஸ்துவை மற்றவர்களுக்கு அறிவிக்க முடியும். 

மட்டுமல்ல, ஒரு பிரதிநிதிக்கு அவரை அனுப்பிய நாடு எல்லா உதவிகளையும் செய்வதுபோல தேவன் நமக்கு அனைத்து உதவிகளையும் செய்து ஏற்றபடி வழிநடத்துவார். ஒரு நாட்டிற்கு அனுப்பப்பட்ட  பிரதிநிதி தன்னை அனுப்பிய நாட்டிடம் தனது தேவைகளுக்குக் கெஞ்ச வேண்டியதில்லை. உரிமையாகவே அவரை அனுப்பிய நாடு அவருக்குப் பல சலுகைகளைச் செய்யும். அதுபோல கிறிஸ்துவுக்கு ஏற்புடையவர்களாக நாம் வாழும்போது நமது தேவைகளை அவர் சந்திப்பார். 

கிறிஸ்துவுக்குப் பிரியமான செயல்களைச் செய்யும்படி நம்மை ஒப்புக்கொடுப்போம். பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலை வேண்டுவோம். சத்திய ஆவியாகிய அவரே நம்மை கிறிஸ்துவின் பாதையில் நடக்க உதவிடமுடியும்.  அப்போது, நம்மை அனுப்பிய இயேசு கிறிஸ்து நம்முடனேகூட இருக்கிறார், நம்மை அவர் தனியேயிருக்கவிடவில்லை என்பதை இந்த உலகம் அறிந்துகொள்ளும்.  

அத்தகைய மேலான வாழ்வு வாழ நம்மை கிறிஸ்துவுக்கு ஒப்புவிப்போம். 

ஆதவன் 🖋️ 648 ⛪ நவம்பர் 06,  2022 ஞாயிற்றுக்கிழமை

"அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்." ( தீத்து 1 : 11 )

இங்கு பவுல் அடிகள் கிறிஸ்துவின் கிருபையினால் வரும் மேலான ஆத்தும இரட்சிப்பு பற்றி போதியாமல் தகாதவைகளைப் போதிக்கும் போதகர்களைப்பற்றி குறிப்பிடுகின்றார்.  இன்று பெரும்பாலான போதகர்கள் தகாத போதனைகளையே போதிக்கின்றனர். காரணம் இழிவான ஆதாயத்துக்காக. 

கன்வென்சன் கூட்டங்களில் மட்டுமல்ல,  முகநூல், வாட்சாப் போன்ற சமூக ஊடகங்களிலும் இன்று இத்தகைய போதனைகளே பெருகியுள்ளன. இத்தகைய போதனைகள் யாரையும் இரட்சிப்புக்கு நேராக நடத்துவதில்லை; மாறாக இவை சாதாரண மத பிரசங்கங்களாகவே இருக்கின்றன. அதாவது எல்லா மதங்களிலும் அவர்களது மத போதனைகளைக் கூறுவதுபோல இவர்களும் போதிக்கின்றனர். ஆனால் கிறிஸ்துவின் சுவிசேஷம் சாதாரண நீதிபோதனையல்ல; அது மீட்புக்கு நேராக மனிதர்களை நடத்துவது.

இத்தகைய பிரசங்கிகளின்  போதனைகள் பெரும்பாலும் நியாயப்பிரமாண கட்டளைகளை முக்கியப்படுத்தியவையாகவே  இருக்கும்.  இவர்களைக்குறித்தே இன்றைய வசனத்தைப் பவுல் அடிகள் கூறுகின்றார்.   இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனத்தில் இதனைத்தான் அவர்,  "அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்". ( தீத்து 1 : 10 ) என்று குறிப்பிடுகின்றார். 

இவர்கள்தான் இழிவான ஆதாயத்திற்காக தகாதவைகளை உபதேசித்து முழு குடும்பத்தையும் கவிழ்த்துப்போடுபவர்கள். மீட்பின் பாதையை மக்கள் அறியாதபடி தடைக்கற்களாய் இருக்கின்றவர்கள். இவர்களது போதனைகள் பெரும்பாலும் உலக ஆசீர்வாதங்களை முன்னிலைப்படுத்துபவையாகவும் காணிக்கையை மையப்படுத்தியவையாகவும் இருக்கும். 

அதாவது, காணிக்கைகள் அதிகம் கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தவறான உபதேசங்களை மக்களுக்குப் போதிப்பவர்கள். உதாரணமாக இன்று எழும்பியுள்ள  நூதன பிரபல பிரசங்கிகள்.  இவர்கள் ஆயிரம் ரூபாய் காணிக்கை அளித்தால் ஒரு லட்சமாக தேவன் அதனைத் திருப்பித் தருவார்;  இரண்டாயிரம் கொடுத்தால் இரண்டு லட்சமாக திருப்பித் தருவார் என்று, தேவனை ஏமாற்று பைனான்ஸ் கம்பெனிகளுக்கு ஒப்பிட்டு பிரசங்கிப்பவர்கள். இவர்கள் முழு குடும்பத்தையுமல்ல, முழு தேசத்தையும் கவிழ்த்துப்போடும் தீய சக்திகள். 

இன்றைய வசனத்தில் "அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்" என்கின்றார் அப்போஸ்தலராகிய பவுல்.  எப்படி அடக்குவது? அது ஜெபத்தினாலும் சரியான வேத விளக்கங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதாலுமே முடியும். அதற்கு முதலில் நமக்கு தவறான போதனைகளைச் செய்பவர்கள்மேல் ஆவிக்குரிய கோபம் வரவேண்டும். 

ஊழியம் என்பது தேவனுக்குரியது. தேவன் நமது தகப்பன். எனவே நமது தகப்பனுக்குரிய வேலையை அவமரியாதையோடு செய்பவர்கள்மேல் குமாரர்களாகிய, குமாரத்திகளாகிய  நாம் கோபம்கொள்வதில் தவறில்லை. (ஆனால் நாம் முதலில் தேவனது மகனாக மகளாக வாழவேண்டும்).

அன்பானவர்களே, முதலில் நாம் தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வோம். பிற்பாடு தவறான போதனைகளை மக்களுக்கு அடையாளம்காட்டுவோம். ஜெபத்தில் தேவனோடு ஐக்கியப்பட்டிருப்போம். அப்போது குடும்பங்களைக்  கவிழ்த்துப்போடும்  தகாத உபதேசிகள் மறைந்துபோவார்கள்; ஆம் பவுல் கூறுவதுபோல அவர்களது வாய் அடக்கப்படும். 

ஆதவன் 🖋️ 649 ⛪ நவம்பர் 07,  2022 திங்கள்கிழமை

"தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது." ( சங்கீதம் 63 : 1 )

இன்றைய தியானத்துக்குரிய இந்தச் சங்கீத வசனம் இது எழுதப்பட்டப் பின்னணியோடு பார்க்கும்போது நமக்கு மேலும் ஆழமான நம்பிக்கையைத்தரும் வசனமாகும். அதிகாலையில் தேவனைத் தேடுவது நம்மில் பலரும் செய்யும் காரியம்தான். ஆனால், தாவீது இந்த சங்கீதத்தை எழுதிய பின்னணியினை பார்க்கும்போதுதான் இதன் அருமை புரியும். 

இந்த சங்கீதத்தைத் தாவீது தனது முப்பது வயதுக்குள் எழுதியிருக்கவேண்டும். காரணம், தாவீது தனது முப்பதாவது வயதில் ராஜாவானார். இந்தச் சங்கீதம் அதற்குமுன்பாக அதாவது, அவர் சவுல் ராஜாவுக்குப் பயந்து தனது உயிரைக் காத்துக்கொள்ள வனாந்தரத்தில் இருந்தபோது எழுதியது. இந்தச் சங்கீதத்தின் துவக்கத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம், இது சுகமான அறையில் உட்கார்ந்து எழுதப்பட்ட வசனமல்ல. 

இன்று முப்பது வயதுக்குள் சினிமா நடிகர்கள்பின் ஓடும் இளைஞர்களை நாம் பார்க்கின்றோம். ஆனால் தாவீது இந்த இளம் வயதிலேயே தேவனைத் தேடினார். அதிகாலமே எழுந்து கர்த்தரை ஆராதித்தார். தன்னைச் சுற்றி இருக்கும் வறண்ட வனாந்தரத்தை அவர் பார்க்கின்றார். அதனை தேவனிடம், "அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது" என அறிக்கையிட்டு மன்றாடுகின்றார். பாலைவனம் எப்படி இருக்கும் என்று கற்பனைச் செய்து பாருங்கள். சுகமான காற்றோ, நீரோ, சுவையான உணவோ எதுவுமே இருந்திருக்காது. அத்தகைய சூழலிலிருந்து இதனைத் தாவீது பாடுகின்றார். 

"என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்." ( சங்கீதம் 63 : 6 ) என்று தாவீது கூறுவது அவர் இரவில் விழிக்கும்போதெல்லாம் தேவ சிந்தனையோடு இருந்ததைக் குறிக்கின்றது. 

அன்பானவர்களே, இன்று உண்மையான வனாந்தரத்தில் நாம் தவிக்காவிட்டாலும், வனாந்தரம் போன்ற வாழ்க்கைச் சூழ்நிலை ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்படுவதுண்டு.  தாவீதுக்கு இருந்ததுபோல உயிர் பயம், ஒருவேளை நமக்கும்  ஏற்படலாம். கொடிய நோய்வாய்ப்படும்போது இந்த பயம் நம்மைத் தாக்குகின்றது. இருளான நமது வாழ்க்கை ஒளியடையுமா? எனும் எதிர்காலத்தைக் குறித்த பயம்...இவைகளே இன்று நம்மை பாலைவனச் சூழலுக்கு இட்டுச் செல்கின்றன. 

ஆனால் இத்தகைய சூழ்நிலையில் தாவீது பிரச்சனைகளை நோக்கிப்பார்க்கவில்லை. அவர், "என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது." என்று பாடுகின்றார். பிரச்சனைகள் இருக்கின்றன ஆனால் அவர் உள்ளம் பிரச்சனைகளைவிட தேவன்மேல் தாகமாய் இருந்தது. 

இத்தகைய உயர்ந்த ஆவிக்குரிய அனுபவம் தாவீதுக்கு முப்பது வயதுக்குள் வந்துவிட்டது. ஆம், அதனால்தான் அவரது சங்கீதங்கள் சுமார் நாலாயிரம் ஆண்டுகளைக் கடந்தபின்பும் உயிரோட்டமாக உள்ளன. 

வனாந்தரமான நமது வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பார்க்கவேண்டாம், சூழ்நிலைகளைப் பார்க்கவேண்டாம். நமது பிரச்சனைகளை அவரிடம் சொல்லிச் சொல்லி அழவேண்டாம்.  சூழ்நிலைகளை மாற்றவல்ல தேவனையே நோக்கிப்பார்ப்போம். தாவீதை அபிஷேகித்து ராஜாவாக்கியவர் நம்மையும் அதுபோல உயர்த்துவார். உலகத்து ராஜாவைப்போலல்ல, நமது பிரச்சனைகள், பாவங்கள்மேல் வெற்றிகொள்ளும் ஆவிக்குரிய ராஜாக்களாக மாற்றுவார். 

ஆதவன் 🖋️ 650 ⛪ நவம்பர் 08,  2022 செவ்வாய்க்கிழமை

"அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்." (  யோவான் 6 : 27)

இன்று தங்களது உலகத் தேவைகளைப் பூர்த்திசெய்ய  வெய்யிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைக்கும் எண்ணற்ற மனிதர்களை நாம்  பார்க்கின்றோம். எதற்காக மனிதர்கள் இப்படிக் கடினமாக உழைக்கின்றனர்? தங்களது நல்வாழ்வுக்காகவும், தங்களது குடும்ப உறுப்பினர்களுக்காகவும்தான். 

இப்படி  உழைப்பதில் தவறில்லை; உழைக்காமல் இருப்பதுதான் தவறு.  நாம் நிச்சயமாக உழைக்கவேண்டும், அத்துடன் இயேசு கூறும் அறிவுரையையும் நாம் வாழ்வில் கவனத்தில் கொள்ளவேண்டும்.  "நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்;" என்கின்றார் இயேசு கிறிஸ்து.   ஆம், உலக வாழ்க்கைக்காக மட்டுமல்ல, நித்திய ஜீவனுக்காகவும்  நாம் உழைக்கவேண்டியிருக்கின்றது. உலக செல்வத்துக்காக உழைப்பதைவிட, ஆத்தும மீட்புக்காக நாம் அதிகம் உழைக்கவேண்டியுள்ளது.  

நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே உழைப்பவன் நேர்மையானவனாக, தனது உழைப்புக்குக்  குறிக்கப்பட்ட சம்பளத்துடன் நிறைவடைவான். லஞ்சம், ஊழல், சுரண்டல் செய்து சம்பாதிக்க முயலாமாட்டான். 

நேர்மை என்பது அதிக பணம் சம்பளமாகக் கிடைப்பதால் வந்த்துவிடுவதில்லை. அது மனிதன் தானாக உருவாக்கவேண்டிய குணம். மாதம் ஐம்பதினாயிரம் அறுபதாயிரம் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரி லஞ்சம் வாங்கும்போது  வெறும் பத்தாயிரம் சம்பளம் வாங்கும் மனிதன் உண்மையுள்ளவனாக வாழ்கின்றான். எனவே லஞ்சம் என்பது ஒரு வியாதி. அந்த வியாதிமாறவேண்டுமே தவிர அவனுக்கு எவ்வளவு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தாலும் அந்த குணம் மாறாது.  இதற்கு காரணம் அவர்கள் இயேசு கிறிஸ்து கூறுவதுபோல  அழிந்துபோகிற போஜனத்திற்காக (அதாவது உலகத் தேவைகளை மட்டுமே நிறைவேற்ற) உழைக்கின்றனர்.

சகேயு எனும் மனிதனைக் குறித்து லூக்கா 19 ஆம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம். இந்த சகேயு மக்களிடம் வரி வசூலிக்கும் மனிதர்களுக்குத் தலைவனாக இருந்தான். அதாவது ஒரு வருவாய் அதிகாரி போல. இவன்  முதலில் அழிந்து போகின்ற போஜனத்துக்காக உழைத்தபோது துன்மார்க்கனாக மக்களிடம் அதிக வரி வசூலித்துத்  தனது பையை நிரப்புபவனாக இருந்தான். ஆனால் நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனமான இயேசு கிறிஸ்துவை அறிந்தவுடன் அவனது எண்ணமே மாறிவிட்டது. தான் துன்மார்க்கமாக உழைத்து சேர்த்து வைத்துள்ள அழிந்துபோகிற  செல்வங்கள் பெரிதல்ல, நித்திய ஜீவனுக்கான வழியை எப்படியாவது தேடிட  உழைக்க வேண்டும், அதுவே பெரிது  எனும் எண்ணம் அவனுக்குள் வந்தது. 

"சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்." (  லுூக்கா 19 : 8 ) நித்திய ஜீவனைப் பெற்றுக்கொண்டான். ஆம், கிறிஸ்து ஒருவனுக்குள் வரும்போது அவன் மாற்றமடைந்து நித்தியஜீவனுக்கு நேரான செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றான்.

இன்று ஆலயங்களுக்குச் சென்று ஆராதனையில் தவறாமல் கலந்து கொள்பவர்களும், பெரிய பெரிய ஊழியர்களுக்கு ஆயிரக்கணக்கான காணிக்கைகள் அனுப்பும் பலரும் குறுக்குவழியில் பணம் சேர்ப்பதைக் குறித்து எந்த குற்ற உணர்வும் இல்லாதவர்களாக இருக்கின்றனர். அவர்களது எண்ணம் பணத்தைக் காணிக்கை கொடுத்து தேவ ஆசீர்வாதத்தைப் பெறுவதுதான். ஆனால் பணத்தின்மூலம் ஆசீர்வாதம் பெற எண்ணுவது வாழ்வில் சாபத்தையே கொண்டுவரும். 

மந்திரவாதி சீமோன் இப்படி ஆசீர்வாதம் பெற எண்ணினான். அப்போஸ்தலரான பேதுரு அவனை நோக்கி: "தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 20 ) என்று சபிப்பதைப்  பார்க்கின்றோம். 

அன்பானவர்களே, உலகத்தில் வாழ்வதற்கு நேர்மையாக உழைப்போம். அத்துடன் நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காக ஏற்ற செயல்களையும் நடப்பிப்போம். கடந்த காலங்களில் தவறாக உழைத்து பணம் சம்பாதித்திருந்தால் கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்போம். தவறைத்  திருத்திக்கொள்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். 

ஆதவன் 🖋️ 651 ⛪ நவம்பர் 09,  2022 புதன்கிழமை

"இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." ( எசேக்கியேல் 20 : 44 )

மனிதர்களது பாவங்களுக்கு பல்வேறு தண்டனைகள் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மிக இரக்கமற்ற தண்டனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால், கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என பழிவாங்கப்படவேண்டும். இதனை நாம் லேவியராகமத்தில், "நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினது போல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்." ( லேவியராகமம் 24 : 20 ) என வாசிக்கின்றோம்.  அங்கு பாவங்களுக்குத் தண்டனைதான் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர மன்னிப்பு பற்றி கூறப்படவில்லை. 

ஆனால், பழைய ஏற்பாட்டின் காலத்திலும்கூட மன்னிப்பு இருந்தது. தேவனை அக்காலத்து மக்கள் நெருங்கிடத் தயங்கினர்; பயப்பட்டனர். ஆனாலும் தாவீது, மற்றும் தீர்க்கதரிசிகள்,  உண்மையான பக்தர்கள் தேவனது மன்னிக்கும் குணத்தையும் இரக்கத்தையும்  அறிந்திருந்தனர். தேவனின் மன்னிக்கும் குணத்தை அறிந்திருந்த தாவீது, "ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்." ( சங்கீதம் 86 : 5 ) என்று கூறுகின்றார்.  ஆனால் பழைய ஏற்பாட்டு பாவ மன்னிப்பு முறைமை என்பது ஆடு அல்லது காளைகளை பலியிட்டு இரத்த நிவாரணம் மூலமே கிடைத்தது. 

இன்றைய வசனத்தில் எசேக்கியேல் மூலம் தேவன் கூறுகின்றார், "உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்". என்கின்றார். ஆம், இயேசு கிறிஸ்துவின் கிருபையின் பிரமாணத்துக்கு இணையான வசனம் இது.  அதாவது நமது பாவங்களுக்குத் தக்கபடி தண்டனை கொடாமல் கிருபையால் அவற்றை மன்னித்து இரங்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்  என்கின்றது இந்த வசனம். 

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வந்து பாடுபட்டு இரத்தம்சிந்தி மரித்து உயிர்த்து நமக்கு பாவ மன்னிப்பை எளிதாக்கினார். அவர் பூமியில் இருக்கும்போதே சொன்னார்,  "பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும்."( லுூக்கா 5 : 24 )

நாம் அனைவருமே பாவிகள்தான். நமது பாவங்களை அவர் எண்ணுவாரென்றால் அவர்முன் யாரும் நிற்க முடியாது. எனவேதான் இன்றைய வசனம் கூறுகின்றது, "உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." என்று. 

ஆம், கிறிஸ்துவே ஆண்டவரும் மேசியாவுமாயிருக்கிறார் என்பதற்கு இன்றைய  வசனம் மேலும் ஓர் சான்றாக இருக்கின்றது. கிறிஸ்துவினால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு  மீட்பு அனுபவம் பெறும்போது இந்த சத்தியம் நமக்குத் தெளிவாக விளங்கும். நமது பாவங்களை அவர் கிருபையாய் மன்னித்து மறுபடி பிறந்த அனுபவத்தை நமக்குத் தரும்போது, இயேசுவே கர்த்தர் என்று நாம் அறிந்து கொள்ள முடியும். 

அன்பானவர்களே, எந்த பாவங்கள் நம்மிடம் இருந்தாலும் அவரிடம் அறிக்கையிடுவோம். அவரிடம் நாம் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. நமது மீறுதல்களை அவர் அறிந்திருக்கின்றார். உண்மையான மனதுடன் நாம் அதனை ஏற்றுக்கொள்கின்றோமா என்பதையே அவர் எதிர்பார்க்கின்றார்.  ஆதாமைப் போல  நமது மீறுதல்களுக்கு மற்றவர்களையும் சூழ்நிலைகளையும் பழி சொல்லாமல் அவரிடம் மன்னிப்பு வேண்டுவோம்.   கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபையாய் அவற்றை மன்னித்து தானே கர்த்தர் என்பதை நமக்கு உறுதிப்படுத்துவார். 

ஆதவன் 🖋️ 652 ⛪ நவம்பர் 10,  2022 வியாழக்கிழமை

"இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே." ( 2 கொரிந்தியர் 7 : 9 )

இன்றைய ஆசீர்வாத ஊழியர்கள் மக்கள்  எப்போதும் மாயையான மகிழ்ச்சியில் இருக்கவேண்டும் என்பதற்காக பொய்யான தீர்க்கத்தரிசன வாக்குறுதிகளையும், ஆசீர்வாதங்களையும் கூறிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அப்போஸ்தலரான பவுல் அப்படிப்பட்டவரல்ல. தேவன் தனக்கு வெளிப்படுத்துவதையும், மக்கள் மனம் திருப்ப வேண்டியதன்  அவசியத்தையும் தயக்கமின்றி மக்களுக்கு எடுத்துரைத்து வந்தார். இது பலருக்கு துக்கமான காரியமாக இருந்தது. 

பொதுவாகவே மக்களுக்குத் தங்கள் தப்பிதங்களையும் பாவங்களையும் பிறர் எடுத்துக் கூறுவது பிடிக்காது. எப்போதும் மற்றவர்கள் தங்களை புகழவேண்டும் என்றே பலரும் விரும்புவார்கள்.  தங்களிடம் வரும் விசுவாசிகளது தவறுகளும் பாவங்களும் தெரிந்தாலும், பல போதகர்கள் அவர்களிடம் அவற்றை எடுத்துச் சொல்லி அவர்களது தவறைத் திருத்த முயல்வதில்லை. காரணம் அப்படிச் செய்தால் தங்களது சபைக்கு வருவதை அவர்கள் நிறுத்திவிடுவார்கள். அதனால் தங்களுக்கு வரும் காணிக்கைகளும் குறைந்துவிடும். ஆனால் பவுல் அடிகள் வேறு எந்த ஆதாயத்தையும் விரும்பாமல் மக்களது ஆத்துமாக்களின்மேல்  மெய்யான அன்பு கொண்டிருந்ததால் அவர்களைக் கண்டித்து தவறுகளையும் பாவங்களையும் உணர்த்தினார். 

இப்படி பவுல் கண்டித்து உயர்த்தியதால் துக்கமடைந்த பலர் பின்னர் மனம் திரும்பினார்கள். இது பவுலுக்கு மன மகிழ்சியைக் கொடுத்தது. எனவேதான், "இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்" என்று கூறுகின்றார். 

ஆம், "தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது." ( 2 கொரிந்தியர் 7 : 10 )

அதாவது நமது பாவம், மீறுதல்கள் இவைகளைக் குறித்து தேவனுக்கேற்ற துக்கம் கொண்டோமானால் மனம் திரும்புதல் ஏற்படும். எப்போதும் உலக காரியங்களைக் குறித்துத் துக்கப்பட்டுக் கொண்டிருந்தால் அது மரணத்தையே உண்டாக்கும். 

இயேசு கிறிஸ்து தனது மலைப் பிரசங்கத்தில் கூறியது ஆவிக்குரிய துக்கதைக்குறித்துதான். "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்." ( மத்தேயு 5 : 4 ) என்றார் இயேசு கிறிஸ்து. பலருக்கு இது ஆச்சரியமாக இருக்கும். அது எப்படி துயரப்படுபவர்கள் பாக்கியவான்களாய் இருக்க முடியும்? என்று எண்ணுவார்கள். அது அப்போஸ்தலரான பவுல் கூறும் ஆவிக்குரிய துக்கம் தான். பவுல் கூறுவதுபோல அது இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது. நரகத்துக்கு நேராகச் செல்லும் மனிதர்கள் இந்த ஆவிக்குரிய துக்கம் அடைவதால் நரகத்துக்குத் தப்புவார்கள். எனவேதான் இயேசு கிறிஸ்து துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் என்றுகூறினார். 

நமது பாவங்கள் மீறுதல்கள் இவைகளைக்குறித்து துக்கப்படுவோம். தேவனிடம் மன்னிப்பு வேண்டுவோம். அப்போது நமது துக்கம் சந்தோஷமாக மாறும். ஆம், மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காக அப்போது சந்தோஷப்படுவோம். 

ஆதவன் 🖋️ 653 ⛪ நவம்பர் 11,  2022 வெள்ளிக்கிழமை

"பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள்" ( சகரியா 4 : 7 )

பாபிலோனில் அடிமைகளாய் இருந்த இஸ்ரவேலரை கோரேஸ் ராஜா விடுவித்து, நேபுகாத்நேச்சார் தகர்த்துப்போட்ட எருசலேம் ஆலயத்தைக் கட்டுவதற்கு அனுமதியளித்து அனுப்பினான்.  அதற்கு இணங்க இஸ்ரவேல் மக்கள் எருசலேமுக்குத் திரும்பிவந்து ஆலயத்தைக் கட்டத்துவங்கினர். ஆனால், யூதர்களின் எதிரிகள் அதற்குத் தடைசெய்தனர். கோரஸ் ராஜாவுக்குப்பின்பு வந்த அர்தசஷ்டா ராஜாவுக்கு பொய் புகார்களை அனுப்பி ஆலயக் கட்டுமானத்தைத் தடைசெய்தனர். 

செருபாபேல் தலைமையில் ஆலயக் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த இஸ்ரவேலருக்கு இது மிகப்பெரிய தடையாக இருந்தது. அவர்கள் பரலோகத்தின் தேவனை நோக்கி  முறையிட்டு அழுது ஜெபித்தனர். அவர்களைத் திடப்படுத்த கர்த்தரது வார்த்தைகள் சகரியா தீர்க்கதரிசி மூலம் வந்தது. இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனம் சொல்கின்றது, "செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 ). செருபாபேலே பயப்படாதே, எனது ஆவியினால் நான் இதனைச் செய்து முடிப்பேன் என்பதே கர்த்தர் கூறுவதன் பொருள்.  

அன்பானவர்களே, இன்று நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் உலக வாழ்க்கையிலும் நமக்குப் பல்வேறு தடைகள் ஏற்படலாம். தோல்விகள் நிகழலாம். ஆனால் நாம் செருபாபேலைபோல கர்த்தருக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்து, ஏற்புடைய செயல்களைச் செய்வோமானால்  செருபாபேலுக்குச் சொல்லியபடி பெரிய பர்வதமும் நமக்குமுன் சமபூமி ஆகிடும். 

செருபாபேல் எனும் பெயருக்குப்பதிலாக உங்கள் பெயரை அந்த இடத்தில சேர்த்து உச்சரித்து விசுவாசம்கொள்ளுங்கள். உதாரணமாக, நான் இதனை, "பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்? ஜியோ பிரகாஷ் முன்பு நீ சமபூமியாவாய்" என்று கூறிக்கொள்வேன். அன்பானவர்களே, இப்படிச் சொல்லும்போது நமக்குள் விசுவாசம் ஏற்படும்.

தரியு எனும் ராஜா பாபிலோனில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது செருபாபேலுக்குக் கூறப்பட்ட கர்த்தரது வார்த்தை நிறைவேறியது. மலை போன்ற தடைநீங்கி  சமபூமியாக மாறியது. எந்தத் தடையும் இல்லாமல் எருசலேம் ஆலயப் பணிகள் தொடர்ந்தன. 

இதற்கு முக்கிய காரணம், செருபாபேல் தனது சுய பலத்தை நம்பவில்லை. "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." என்ற வார்த்தைகளின்படி கர்த்தரது ஆவி செயல்பட அவர் பொறுமையோடு காத்திருந்தார். 

நாமும் இதுபோலச்  செயல்படுவோம். பிரச்சனைகள் ஏற்படும்போது நமது சுய பலத்தை நம்பிச் செயல்படாமல் கர்த்தரது பலத்தை நம்பி செயல்படுவோம். அப்படி நாம் செயல்படும்போது ஆரம்பம்முதல் கர்த்தரது கிருபையின் கரம் நம்மோடு இருக்கும்; தடையில்லாத வெற்றி நமக்கு உண்டாகும். இதனையே, "தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள்"  என்று கூறப்பட்டுள்ளது. ஆம், கர்த்தரை முன்னிலைப்படுத்திச் செய்யப்படும் நமது அனைத்து காரியங்களிலும் அவரது கிருபையின் கரம் இருக்கும்; நமக்கு வெற்றி கிடைக்கும். 

ஆதவன் 🖋️ 654 ⛪ நவம்பர் 12,  2022 சனிக்கிழமை

"கர்த்தருடைய சொற்கள் மண் உலையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கின்றன." ( சங்கீதம் 12 : 6 )

கர்த்தருடைய வார்த்தையின் வல்லமைக்குக் காரணம் என்ன என்பதை இன்றைய வசனம் விளக்குகின்றது.  அதாவது, மனிதர்களது வாயிலிருந்த்து வருவனபோன்ற வார்த்தைகளல்ல கர்த்தரிடம் வருவது. அவை  சுத்தமான வார்த்தைகள். ஏழுமுறை உலையிலிட்டு உருக்கிய வெள்ளியைப்போன்றவை அவை. அதாவது, கர்த்தரது  வார்த்தையில் என்தப்பழுதும் இருபத்தில்லை. கவர்ச்சியோ ஏமாற்றோ இருப்பதில்லை. 

மனிதர்கள் நாம் பல்வேறு வார்த்தைகளைப் பேசுகின்றோம். ஆனால் நமது இதயத்து எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வார்த்தைகளைப் பலவேளைகளில் வெளியில் பேச முடிவதில்லை. ஆனால் கர்த்தரது  வார்த்தைகள் ஆம் என்றும், ஆமென் என்றும் இருக்கின்றன.  

மட்டுமல்ல, அவர் என்ன பேசுகின்றாரோ அல்லது நினைக்கின்றாரோ அது அப்படியே எந்த மறைவுமின்றி வெளிவரும். காரணம் அவர் யாருக்கும் எதற்கும் பயப்படத் தேவையில்லை. ஆம், எனவே, "கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 33 : 4 )

கர்த்தரது வார்த்தைகள் இப்படி உண்மையும் உத்தமுமானவையாக இருப்பதால் அந்த வார்த்தைகள் அவர் வாயிலிருந்து வெளிவரும்போது அவர் என்ன நினைத்துச் சொல்கின்றாரோ அதுவாகவே வெளிவருகின்றது. உதாரணமாக நாம் கல்லைப் பார்த்துக் கல்  என்று சொல்கின்றோம். ஆனால் அவர் கல் என்று சொன்னால், அது கல்லாகவே வெளிவருகின்றது. இப்படித்தான் அவர் உலகினைப் படைத்தார். அவர் தனது வார்த்தையால் உலகினைப் படைத்தார் என்று வாசிக்கின்றோம். அவர் "உண்டாகட்டும்" என்று சொல்ல அனைத்தும் உண்டாயின.

"கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது." ( சங்கீதம் 33 : 6 )

அந்த தேவனுடைய வார்த்தைதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று வேதம் கூறுகின்றது. "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ( யோவான் 1 : 1 ) என்று வாசிக்கின்றோம். எனவேதான் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையில் வல்லமை இருந்தது. அவர் சொல்ல அனைத்தும் நடந்தன. அவர் பிதாவாகிய தேவனுக்கு ஒப்பானவராகவே இருந்தார். 

"அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." ( யோவான் 1 : 14 )

அன்பானவர்களே, நாம் அவரைப்போல நூறு சதவிகிதம் சுத்தச்  சொற்களை பேசாவிட்டாலும் அப்படிப் பேச நாம் முயன்றால் நமக்கு அவர் உதவுவார். சுத்தமான சொற்களைப் பேசும்போதுதான் நமது வார்த்தையில் வல்லமை வெளிப்படும்.

ஆண்டவரே வல்லமை தாரும் என்று ஜெபிக்கும் பலரும் இதனை எண்ணுவதில்லை. ஜெபித்துவிட்டு நமது வார்த்தையில் எந்த மாற்றமுமின்றி வாழ்வோமானால் நமது வார்த்தைகள் வெற்று வார்தைகளாகத்தான் இருக்கும். நமது வார்த்தையில் வல்லமை இருந்தால்தான் மற்றவர்களுக்கு நாம் சுவிசேஷத்தை அறிவிக்கும்போது அது அவர்களது இருதயத்தில் மாற்றத்தை உண்டாக்கும். 

நமது நாவினை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். ஆண்டவரே, உம்மைப் போல சுத்த வார்த்தைகளைப் பேசுவதற்கு கிருபையினைத்தாரும் என்று வேண்டுவோம்.  அப்போது நமது வார்த்தைகளைத்  தேவன் கனம்பண்ணுவார்.  

ஆதவன் 🖋️ 655 ⛪ நவம்பர் 13,  2022 ஞாயிற்றுக்கிழமை

"நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்." ( ஓசியா 2 : 19 )

தேவனுக்கும் மனிதனுக்குமான உறவு காதலன் காதலி உறவுபோலவும், கணவன் மனைவி உறவுபோலவும் உள்ளது. வேதாகமத்தில் பல வசனங்களை நாம் இதற்கு உதாரணம் கூறலாம். உன்னதப்பாட்டுப் புத்தகம் முழுவதும் இப்படியே எழுதப்பட்டுள்ளது.  

வெளிப்படுத்தின விசேஷத்தில் மணவாளன் மணவாட்டி என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் சபையும் விசுவாசிகளுமே மணவாட்டிகள். கிறிஸ்துவே மணவாளன். 

இன்று கர்த்தர் நமக்கு ஒரு வாக்குறுதி தருகின்றார். என்னோடு "நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்" என்கின்றார். நான் உன்னை எனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுகொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று ஒருவர் மற்றவரிடம் கூறுவதுபோல உள்ளது இது. அதாவது நம்மை அவருக்கு உரியவர்களாக மாற்றுவேன் என்கின்றார். மீட்பு அனுபவம் ஒருவர் பெறுகிறார் என்றால், அவரை தேவன் தனது மணவாட்டியாகத் தெரிந்துள்ளார் என்று பொருள்.

கிறிஸ்து ஒருவரைத் தெரிந்துகொள்வது அவரது கிருபையினால்தான். இதனையே இன்றைய வசனத்தில், "நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்." என்று கூறப்பட்டுள்ளது. இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகளும் கூறியுள்ளார். "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு." ( எபேசியர் 2 : 8 ) ஆம், கிறிஸ்து நம்மைத் தெரிந்துகொண்டு அவரை நமக்கு வெளிப்படுத்துவது அவரது கிருபையினால்தான். 

இன்றைய வசனத்தில் நம்மை அவருக்கு மணவாட்டியாக அவர் தெரிந்துகொள்வேன் என்று கூறுகின்றார்.  "உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்." ( ஓசியா 2 : 20 )

அன்பானவர்களே, இந்த உலகத்திலுள்ள எல்லா ஆசீர்வாதங்களிலும் மிகப் பெரிய ஆசீர்வாதம் கிறிஸ்துவை அறிந்துகொள்வதுதான். நாம் ஒவ்வொருவரையுமே தனக்கு ஏற்புடையவர்களாக தெரிந்துகொள்ள கிறிஸ்து விரும்புகின்றார். ஆனால் அதற்கு நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டியது அவசியம். நாம் நமது உள்ளத்தினை எந்த ஒளிவுமறைவுமின்றி அவரிடம் திறந்து காட்டவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.  நமது உள்ளக்  கதவினை அவர் தட்டிக்கொண்டே இருக்கின்றார். நமது உள்ளமாகிய கதவினைத் திறக்கவேண்டியதே நாம் செய்யவேண்டியது. 

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 )

இயேசு நமது இதயக் கதவை எப்படித் தட்டுவார் என்று நீங்கள் எண்ணலாம்.  இரட்சிப்புக்கேற்ற பிரசங்கங்கள், கட்டுரைகள் இவற்றை நாம் கேட்கும்போது, வாசிக்கும்போது அவர் நமது இருதயத்தைத் தட்டுகின்றார். அவற்றுக்குச் செவிகொடுக்கும்போது அவர் நம்மிடம் வருகின்றார். 

அன்பானவர்களே, "நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்." என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

நம்மை ஏற்றுக்கொள்ள அவர் தயார்; அவரை ஏற்றுக்கொள்ள நாம் தயாரா? 

ஆதவன் 🖋️ 656 ⛪ நவம்பர் 14,  2022 திங்கள்கிழமை

"கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்." ( சங்கீதம் 25 : 13 )

எதிர்காலத்தில் தங்களுக்கு நடக்க இருப்பதை அறிந்துகொள்வதில் எல்லோருக்குமே ஆசை உண்டு. ஆனால் தேவன் மனிதர்களது எதிர்காலத்தை மறைவாகவே வைத்துள்ளார். ஆனால் அதனை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் பலரும் பல விதங்களில் முயல்கின்றனர். மரித்த ஆவிகளிடம் குறி கேட்கின்றனர், குறிசொல்பவர்களையும், ஜோசியர்களையும் நாடி ஓடுகின்றனர். 

ஜோசியர்கள் கூறும் காரியங்கள் சில வேளைகளில் உண்மைபோலத் தோன்றும். காரணம் அவர்களில் பலர் நமது கடந்த காலத்தைக்குறித்துச் சரியாகச் சொல்வதுண்டு. அசுத்த ஆவிகளின் வல்லமைகளால் இது சாத்தியமாகின்றது. ஆனால், நமது எதிர்காலம் குறித்து நம்மை உருவாக்கிய கர்த்தர் மட்டுமே அறிவார். 

இன்றைய வசனத்தில் சங்கீத ஆசிரியர், "கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்" என்று கூறுகின்றார். அதாவது, நாம் கர்த்தருக்குப் பயப்படும் ஒரு நீதியுள்ள வாழ்க்கை வாழ்வோமானால் அவர் நமக்கு நாம் தெரிந்து நடக்கவேண்டிய வழியைக் காட்டுவார். நமக்கு வாழ்க்கையில் அவர் வைத்துள்ள சித்தத்தை வெளிப்படுத்துவார். 

ஜோசியக்காரர்கள் கூறுவதுபோல தேவன் கூறுவதில்லை. மாறாக, நம்மைக்குறித்த அவனது சித்தத்தை மட்டும் வெளிப்படுத்துவார். ஆபிரகாமிடம் இப்படித்தான் கூறினார். "உன் சந்ததியைக் கடற்கரை மணலைப்போலவும் வானத்து விண்மீன்களைப்போலவும் பெருகச் செய்வேன் என்று கூறினார். அதனை விசுவாசித்து ஆபிரகாம் தனது வாழ்க்கையை எதிர்கொண்டார். அதனையே இன்றைய வசனம், "கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்" என்று கூறுகின்றது.

அதுமட்டுமல்ல, "அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்." என்று இந்த வசனம் கூறுகின்றது. கர்த்தருக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழும்போது நமது ஆத்துமா நன்மைகளைக் காணும். மட்டுமல்ல, நமது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும்கூட நல்லதொரு வாழ்க்கை வாழும். அதனையே "அவன் சந்ததி" என்று இன்றைய வசனத்தில்  கூறப்பட்டுள்ளது.   

அன்பானவர்களே, நாம் கர்த்தருக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழும்போது மிகப்பெரிய ஆசீர்வாதம் உண்டு. விசுவாசத்தோடு கர்த்தரது  வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்த ஆபிரகாமை நினைத்துக்கொள்வோம். ஒரு தனி மனிதனாக இருந்த அவனை தேவன் ஒரு மிகப்பெரிய வலுவான தேசமாகவே மாற்றினார். இன்றைய வசனம் கூறுவதுபோல அவனது சந்ததி ஆசீர்வாதமான சந்ததியாக விளங்குகின்றது. 

கர்த்தருக்குப் பயப்படுத்தல் என்பது ஒருகாவல்துறை அதிகாரியைப்பார்த்தோ அல்லது ஒரு மாணவன் ஆசிரியரைப் பார்த்தோ பயப்படுவதுபோன்ற பயமல்ல. மாறாக, தீமைக்கு விலகி வாழ்வதே கர்த்தருக்குப் பயப்படுதல். 

அப்படி நாம் வாழும்போது இன்றைய வசனம் கூறுவதுபோல  தேவன் நமக்காக ஏற்பாடு செய்துள்ள வழியை அதாவது எதிர்காலத் திட்டத்தை வெளிப்படுத்துவார். நமது சந்ததியும் இந்த உலகத்தில் ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கை வாழும். இதனைத் தவிர்த்து அநியாய வாழ்க்கை வாழ்ந்து அதிக பொருள் சேர்த்து வைப்பதால் நமது சந்ததி வாழாது. கர்த்தருக்குப் பயப்படும் வாழ்க்கை வாழ்வோம். மெய்யான  ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்வோம். 

ஆதவன் 🖋️ 657 ⛪ நவம்பர் 15,  2022 செவ்வாய்க்கிழமை

"கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்." ( யோபு 5 : 2 )

கோபம்,  பொறாமை எனும் இரண்டு குணங்களைப்பற்றி இன்றைய வசனம் கூறுகின்றது. கோபம் வருவதற்கு முக்கிய காரணம் பொறாமைதான். நம்மைவிட மற்றவர்கள் நன்றாக இருப்பது பலருக்குப் பிடிக்காது. இதுவே பொறாமைக்குணம். இப்படிபட்டப் பொறாமை கொள்பவன் தனது பொறாமையை கோபத்தில் வெளிப்படுத்துவான்.

இன்றைய தினசரி பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான பாவக் காரியங்களுக்குப்பின்னால் பொறாமையும் கோபமும் அடங்கியிருப்பதைக் காணலாம். 

தான் காதலிக்கும் பெண் மற்ற ஒருவனுக்குக் கிடைக்கக்கூடாது,  தன்னைவிட மற்றவர்கள் செல்வம் சேர்த்துவிடக்கூடாது, நல்ல ஆடையோ நகைகளையோ அணியக்கூடாது, எந்த இடத்திலும் நானே முன்னால் நிற்கவேண்டும், அடுத்தவர்கள் பதவி பெற்றுவிட்டால் அந்த இடத்தில நாம் இருக்கக்கூடாது, இவைபோன்றவையே பொறாமைக்குணம் கொண்டவர்களது எண்ணங்கள். இப்படிப் பொறாமை கொண்டவர்கள் கோபம் அதிகரிக்கும்போது  துணிந்து எந்தச் செயலையும் செய்வார்கள். 

கொலைகள்,  களவு, அடுத்தவர் சொத்தினை அபகரித்தல், கற்பழிப்பு, ஒருவரைக்குறித்து மேலதிகாரிகளுக்கு மொட்டைக்கடிதம் அனுப்புவது,  இவை எல்லாமே பெரும்பாலும் பொறாமையினால் ஏற்படும் கோபத்தின் விளைவுகளே இந்தக் . "கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்."

காயின் தனது சகோதரன் ஆபேலைப் கொலைசெய்யக் காரணம் பொறாமையே. இதனை அப்போஸ்தலரான யோவான், "பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே." ( 1 யோவான்  3 : 12 ) என்று கூறுகின்றார். புத்தியில்லாத அவனது செயல்   கர்த்தரது சாபத்துக்கு ஆளாக்கியது. "உலகத்தில் நிலையற்று அலைந்து திரிகிறவனாயிருப்பாய்" என்று சபித்தார் கர்த்தர்.   

மேலும், பொறாமை, கோபம் போன்ற குணங்கள் மனிதனை உடலளவில்  பாதிக்கும் என்று விஞ்ஞானமும் கூறுகின்றது. இரத்தக்கொதிப்பு,  இருதய நோய்கள், வயிறு சம்பந்தமான சில நோய்கள் ஏற்பட கோபமும் பொறாமையும் காரணமாயிருக்கின்றன. 

"பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதன் பண்ணும் என்பதற்கு  வதைக்கும் என்று பொருள். இதனை நாம் For wrath killeth the foolish man, and envy slayeth the silly one என்று ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசிக்கின்றோம்.  

பொறாமை பிசாசின் குணம். ஆதியில் தேவனோடு இருந்த லூசிபர் பெருமை, பொறாமை எனும் பாவத்தால்தான் நரகத்தில் தள்ளப்பட்டான். தேவனுக்குக் கிடைக்கும் ஆராதனையைக் கண்டு பொறாமைகொண்டான். அதுபோல  தனக்கும் ஆராதனை கிடைக்கவேண்டுமென்று எதிர்பார்த்தான். பொறாமையால் அழிந்தான்.  

அன்பானவர்களே, பொறாமை, கோபம் போன்ற குணங்கள் நம்மிடம் இருப்பதை உள்ளத்தின் உணர்ந்தால் தேவனிடம் மன்னிப்பு வேண்டுவோம். இத்தகைய குணங்களை இருதயத்தில் வைத்துக்கொண்டு நாம் செய்யும் ஆராதனைகளும், கொடுக்கும் காணிக்கைகளும் கர்த்தருக்கு ஏற்புடையவை அல்ல.  

ஆதவன் 🖋️ 658 ⛪ நவம்பர் 16,  2022 புதன்கிழமை

"நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 43 : 12 )

இன்று உலகத்தில் பல்வேறு மதங்கள் இருந்தாலும் முழு நிச்சயமாக நம்மை கிறிஸ்துவிமேல் நம்பிக்கைகொள்ள வைப்பது கிறிஸ்துவின் இரட்சிப்பு அனுபவமே. உலகிலுள்ள மக்கள் அனைவரும் தங்கள் உலகத் தேவைகளையே கடவுளிடம் வேண்டுகின்றனர். ஆனால் கிறிஸ்தவம் அப்படிச் சொல்லவில்லை. "நான் பரிசுத்தர்; நீங்களும் பரிசுத்தராயிருங்கள்" என்பதே கர்த்தரது மேலான வார்த்தை.  மறுமை வாழ்வுக்கு நேராக மனிதன் பாவ பழுதற்று இருந்தால் மட்டுமே செல்ல முடியும்.  அதற்கு வழிகாட்டவும் அதற்கான பாதையினை ஏற்படுத்தவும் கிறிஸ்து உலகத்தில் வந்தார். இதுவே கிறிஸ்தவத்தின் அடிப்படை.

ஆனால், இன்றைய மூன்றாம்தர பண ஆசை ஊழியர்களால் கிறிஸ்தவ சத்தியம் மறைக்கப்பட்டு மற்றவர்களால் கிறிஸ்தவத்தின் மேன்மையினை அறிய முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த அவல நிலைமைக்கு இன்றுள்ள பிரபல ஊழியர்களே 100% காரணம். தேவனுக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள்.

"நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை" என்று இன்றைய வசனம் திட்டமும் தெளிவுமாகக் கூறுகின்றது. உலகத்தில் பாவத்தை மன்னிக்க எந்த அந்நிய தெய்வங்களுக்கும் அதிகாரமில்லை. அந்த அதிகாரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவருக்கே உண்டு. எனவேதான்  இன்றைய வசனம், "இப்படிச் செய்யத்தக்க  அந்நிய தேவன் இல்லை" என்று கூறுகின்றது. 

இன்று பிற தேவர்களிடம் ஜெபித்து பிற மதத்தினர் தாங்கள் பல ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர். அவை உண்மையாக இருக்கலாம். உலக ஆசீர்வாதங்களை அவர்கள் பெற்றிருக்கலாம். ஆனால், இரட்சிப்பு அனுபவம் பெற்று பாவ விடுதலையை நான் வணங்கும் தெய்வம் எனக்குக் கொடுத்தது என்று எவராலும் துணிந்து கூற முடியாது. அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே முடியும்.  

"நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்." என்று இன்றைய வசனம் கூறுகின்றது. ஆம், நாம் ஒரு சாட்சி வாழ்க்கை வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். அப்படி ஒரு வாழ்க்கை வாழ உதவுவதுதான் இரட்சிப்பு அனுபவம். அந்த அனுபவத்தைப் பெறும்போது மட்டுமே நாம் கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ முடியும். 

உலக ஆசை, செழிப்பு உபதேசம் செய்யும் ஊழியர்களை நம்பிக் கொண்டிருந்தோமானால் கிறிஸ்தவம்  கூறும் மேலான அனுபவத்திற்குள் வர முடியாது. சராசரி உலக மதங்களைப்போல கடவுளை ஆராதித்து, உலக ஆசீர்வாதங்களைப் பெற்றதையே சாட்சியாகக்கூறி  கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவர்களாக வாழ்வோம்; பரிதபிக்கத்தக்கவர்கள் ஆவோம்.

எனவேதான் எபிரெய நிருப ஆசிரியர் கூறுகின்றார், "முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 3, 4 )

ஆதவன் 🖋️ 659 ⛪ நவம்பர் 17,  2022 வியாழக்கிழமை

"தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்." ( யோவான் 7 : 24 )

தோற்றத்தின்படி தீர்ப்பு செய்தல் என்பது ஒருவர் வகிக்கும் பதவி, சமுதாயத்தில் அவர் வகிக்கும் மதிப்புமிக்க நிலைமை,  அவரது பணம், ஆடை அணிகலன்கள் இவற்றைப்பார்த்து, அவர்களுக்குச் சாதகமான தீர்ப்புச் சொல்வதைக்குறிக்கின்றது. இன்று நமது நாட்டில் பெரும்பாலான தீர்ப்புகள் இப்படியே உள்ளன. நீதிமன்றங்களின்மேல் மக்களுக்குள்ள மதிப்பு, மரியாதை குறைந்துகொண்டே வருகின்றது. காணம் மேற்படி நாம் கூறியபடி, தோற்றத்தின்படி நீதிபதிகள் தீர்ப்புக் கூறுவதுதான். 

இதுகுறித்து சமீபத்தில் ஒரு கிண்டலான செய்திப் பதிவினை நான் பார்த்தேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, "முன்பெல்லாம் தீர்ப்பு வெளியான பின்னர் குற்றம்ச்சாட்டப்பட்டவர் நல்லவரா கெட்டவரா என்று தெரியவரும். ஆனால், இப்போது தீர்ப்பு வந்தபின்னர்தான் அந்த நீதிபதி நல்லவரா கெட்டவரா என்று தெரிய வருகின்றது" என்று. 

மனிதர்கள் நம்மால் எது நீதி, எது நியாயம் என்று முற்றிலும் சரியாகத் தெரியாது. நாம் நமது கண் கண்டபடியே ஒருவரை நியாயம் தீர்க்கின்றோம். ஆனால், தேவனோ எதார்த்ததோடு நியாயம் தீர்ப்பார். ஒருவர் செய்த  செயல்களைப் பார்த்து அப்படியே அவர் தீர்ப்பிடுவதில்லை. அந்தச் செயல் செய்யப்பட்டதன் நோக்கத்தையும் அவர் பார்க்கின்றார். எனவேதான் ஏசாயா கூறுகின்றார், "அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து..." ( ஏசாயா 11 : 3, 4 ) என்று. 

இயேசு கிறிஸ்து கூறினார், "மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்." ( லுூக்கா 6 : 37 ) மற்றவர்களது எதார்த்த நிலைமை நமக்குத் தெரியாது. அவர்கள் செய்த செயல் நமது பார்வையில் தவறு போலத் தெரியலாம். ஆனால், தேவன் நம்மைப்போல மனிதர்களை பார்ப்பவரல்ல. எனவேதான் மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் என்று கூறுகின்றார்.  

அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை நீதித்துறை சம்பந்தமான பதவிகளில் நீதிபதியாகவோ அல்லது வழக்கறிஞராகவோ இருந்தால் இந்த விஷயத்தில் அதிக கவனமுடன் இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார்,  "ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும், அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ!" ( ஏசாயா 10 : 1, 2 )

ந்த வசனத்தில் "ஐயோ" எனும் வார்த்தை தேவனது சாபத்தைக் குறிக்கின்றது. எச்சரிக்கையாய் இருப்போம். தோற்றத்தின்படி தீர்ப்பு செய்யாமல் நீதியின்படியே தீர்ப்பிடுவோம் இந்த உலகத்தில் பணமும் பதவியும் கிடைக்கின்றது என்பதற்காக அநியாயத் தீர்ப்புகளை எழுதி நமது சந்ததிகளுக்குப் பணத்தோடு  சாபத்தையும் நாம் சம்பாதித்து வைத்துவிடக் கூடாது.  

மேலும், அன்றாட உலக காரியங்களில் நாம் பலவித மக்களையோடு பழக்கவேண்டியுள்ளது. பல வேளைகளில் சிலரது செயல்கள் தவாறுபோல நமக்குத் தெரியலாம். அதற்காக அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பு செய்யவேண்டாம்.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக." ( ரோமர் 14 : 13 )

ஆதவன் 🖋️ 660 ⛪ நவம்பர் 18,  2022 வெள்ளிக்கிழமை

"மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."( லுூக்கா 3 : 8 )

மனம் திரும்பிய ஒரு வாழ்க்கை வாழாமல் நாம் சார்ந்துள்ள சபைகளைக்குறித்தும் நம்மைக்குறித்தும்  பெருமைபேசிக் கொண்டிருந்தோமானால் அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதையே இன்றைய வசனம் கூறுகின்றது. யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்தபோது அவரிடம் ஞானஸ்நானம் பெறுவதற்குப் பலரும் வந்தனர். அவர்களிடம்தான்  யோவான் இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். 

யூதர்களுக்கு தங்களை ஆபிரகாமின் மக்கள் என்று கூறுவதில் ஒரு பெருமை இருந்தது. அதனை நாம் வேதாகமத்தில் பல இடங்களில் வாசிக்கின்றோம். உதாரணமாக:-

"அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள்". ( யோவான் 8 : 39 )

"நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை.."( யோவான் 8 : 33 )

"எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ?" என்றார்கள். ( யோவான் 8 : 53 )

இப்படித் தங்களை ஆபிராகாமின் மக்கள் என்று பெருமைபேசும் மக்களிடம்தான்,  ஆபிரகாமின் மக்கள் என்று கூறிக்கொள்ளாதிருங்கள்; மாறாக மனம்திரும்பிய ஒரு வாழ்க்கை வாழுங்கள் என்கின்றார் யோவான். 

இதுபோலவே இன்றும் மக்கள் பல்வேறு  பாராம்பரிய பெருமைபேசிக்கொண்டு சத்தியத்தை அறியாமலும் வேதம் கூறும் மனம்திரும்பிய வாழ்க்கை வாழாமலும் இருக்கின்றனர். 

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், "நாங்கள்தான் இயேசு கிறிஸ்து உருவாகிய சபை. மற்றவர்களெல்லாம் எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்கள். பேதுரு முதல் இப்போதுள்ள போப்பாண்டவர்வரை திருச்சபைக்குத்   தலைமையேற்றவர்களது சரித்திரம் எங்களுக்கு உண்டு."  என்கின்றனர். 

சி.எஸ்.ஐ, லூத்தரன் போன்ற   சபையினர், "எங்கள் சபைதான் சரியான உபதேசத்தைக்கொண்டுள்ள சபை. தப்பறையான கொள்கைகளை மார்ட்டின் லூத்தர் சுட்டிக்காட்டி எங்களை சீர்திருத்தியுளார். நாங்கள்தான் கிறிஸ்து உருவாக்கிய ஆரம்ப சபையின் போதனைகளைக் கொண்டுள்ளோம்" என்கின்றனர்.

ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் பெந்தெகொஸ்தே சபைகள், "ஆவிக்குரிய சபை எங்கள் சபைதான். நாங்கள்தான் வேதம் கூறுகின்றபடி ஆவிக்குரிய ஆராதனை செய்கின்றோம்.  மற்றவர்களெல்லாம் பெயரளவு சபைகள்."  என்கின்றனர். 

இப்படியே பாரம்பரிய பெருமை பேசும் மக்களை இயேசு கிறிஸ்து கண்டித்தார். இத்தகைய மனிதர்களைப் பார்த்தே, "நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள்." ( மாற்கு 7 : 13 ) என்று சொன்னார்.

அன்பானவர்களே, சபை பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. அந்தப் பெருமை நம்மை மீட்க முடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே ஒருவரை இரட்சிக்கமுடியும். எந்த சபையில் இருந்தாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும் பாவ மன்னிப்பின் நிச்சயத்தை ஒருவர் பெறவேண்டியதுதான் முக்கியம். கிறிஸ்துவினால் மீட்கப்பட்ட அனுபவம் உள்ள ஒருவர் வீண் பாரம்பரிய பெருமை பேசமாட்டார். எல்லா மனிதர்களையும் நேசிக்கும் (கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் குறைகூறாமல் ) மனம் உள்ளவராக வாழ்வார். 

பாரம்பரிய பெருமை பேசுவதைவிட்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் திரும்புவோம்; மீட்பு அனுபவத்தைப்பெற்று சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்வோம். 

ஆதவன் 🖋️ 661 ⛪ நவம்பர் 19,  2022 சனிக்கிழமை

"நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்." ( உன்னதப்பாட்டு 5 : 2 )

தேவன் மனிதர்களது தனி சுதந்திரத்தை மதிக்கின்றார். எனவே அவர் வலுக்கட்டாயமாக யாரையும் தன்னிடம் வரவேண்டுமென்று வற்புறுத்துவதில்லை. ஆனால், எல்லோரும் மனம்திரும்பி தன்னிடம் வரவேண்டுமென்று விரும்புகின்றார். அதற்காக மனிதர்கள் தன்னை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்கு பல்வேறு சந்தர்ப்பங்களைக் கொடுக்கின்றார். அவரை ஏற்றுக்கொள்வதும் மறுதலிப்பதும் மனிதர்களது தனிப்பட்ட விருப்பதைப்  பொறுத்தது.   

இன்றைய வசனத்தில் சாலமோன் தனது அனுபவத்தைக் கூறுகின்றார். அவர் உறங்கினாலும், அவரது இருதயம் விழித்திருந்து என்கின்றார்.  "உறக்கத்திலும் கதவைத் தட்டும் என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்" என்பது  நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம். நாம் இன்று இதுபோல தேவனை அறியாமல் ஆவிக்குரிய தூக்கம் கொண்டவர்களாக இருக்கலாம். அனால், தேவன் கதவைத் தட்டும் சத்தத்தைக் கேட்கத்தக்கவர்களாக நம் இருதயம் விழிப்பாய் நாம் இருக்கவேண்டியது அவசியம். 

"என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது." எனும் வார்த்தைகள்  நமக்காக அவர் பட்டப் பாடுகளை நினைவுறுத்துகின்றன.  இரவின் தூறலினாலும், பனியின் குளிரினாலும் கஷ்டத்தை அனுபவித்து அவர் நமக்காக வந்துநின்று கதவைத் தட்டுகின்றார். சிலுவையில் அவர் பட்டப் பாடுகளும், கசையடிகளும் இதனைப் படிக்கும்போது நமக்கு நினைவு வருகின்றன. அந்த வேதனையோடு வந்து நின்று நம் கதவைத் தட்டுகின்றார். 

வெளிப்படுத்தின விசேஷத்திலும் தேவன் இதேபோல நமது இதயக் கதவைத் தட்டுவதைக் குறித்துக் கூறுகின்றார். "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 20 )

அன்பானவர்களே, இற்றைய வசனம் நமக்கு வற்புறுத்துவது விழிப்புள்ள ஒரு இருதயத்தோடு வாழவேண்டும் என்பதையே.  நாம் வெறும் உலகத் தேவைகளுக்காக மட்டுமே ஜெபித்துக் கொண்டிருந்தோமானால் அவரது குரலை நாம் கேட்கமுடியாது. தேவனை அறியவேண்டும் எனும் ஆவல் இருக்குமானால் நிச்சயமாக அவர்  கதவைத் தட்டும் சத்தத்தை நாம் கேட்கலாம்.  

"ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்."  என்பது ஆழமான இறை அனுபவத்தைக் குறிக்கின்றது. நாம் ஒருவரது வீட்டிற்குச் சென்று உணவருந்தவேண்டுமானால் அவரோடு நமக்கு நெருங்கிய உறவு இருக்கவேண்டும்.  எல்லோரது வீட்டிலும் நாம் சென்று உணவருத்தமாட்டோம். மேலும் உணவருந்தும்போதுதான் பல விஷயங்களை நாம் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்வோம். அத்தகைய உறவோடு தேவன் நம்மோடு வாழ ஆசைப்படுகின்றார். 

நித்திரை செய்தாலும் தேவனது குரலைக் கேட்கும் பக்குவம் நமக்கு வரும்படி ஆசைப்படுவோம். தேவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்துவைத்தால் அவர் நம்மை நோக்கிப் பல அடிகள் நெருங்கி வருவார். "ஆண்டவரே, நான் உம்மை அறியவேண்டும்" என்று உண்மையான உள்ளதோடு வேண்டும்போது  கதவைத் தட்டும் சத்தத்தை நாம் கேட்கமுடியும்; நாம் கதவைத் திறக்க முடியும். 

ஆதவன் 🖋️ 662 ⛪ நவம்பர் 20,  2022 ஞாயிற்றுக்கிழமை

"பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்." (  2 பேதுரு 3 : 8 )

கிறிஸ்துவினுடைய இரண்டாம் வருகையைப் பற்றிக் கூறும்போது அப்போஸ்தலரான பேதுரு மேற்படி வசனத்தைக் கூறுகின்றார். இந்த வசனம் மிக முக்கியமான ஒரு விஞ்ஞான விதியான 'காலமும் இடமும்' என்பதை தன்னுள் கொண்டுள்ளது.

காலமும் இடமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. நாம் இருக்கும் இடத்தின் அடிப்படையிலேயே காலம் செயல்படும். நமது பூமியில் நாம் கணக்கிடும் நாள், ஆண்டு இவை சூரியனை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதை நாம் ஓர் ஆண்டு எனக் கணக்கிடுகின்றோம். நமது வயதும் அதனடிப்படையில் மாறுகின்றது. ஆனால் நாம் இருக்கும் இந்த இடத்தினை மாற்றும்போது காலக் கணக்கும் மாறிவிடுகின்றது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களின் இந்த கோட்பாடு நேரமும் இடமும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறது. ஐன்ஸ்டீன் மேலும் கூறினார், நமது பிரபஞ்சத்திற்கு வேக வரம்பு உள்ளது: ஒளியின் வேகத்தை விட வேறு எதுவும் வேகமாக பயணிக்க முடியாது (வினாடிக்கு 186,000 மைல்கள்). அப்படி நாம் பயணித்தோமானால் என்ன நடக்கும்? உதாரணமாக அப்படி ஒருவர் விண்வெளியில் ஓர் ஆண்டு பயணித்து ஓர் ஆண்டு கழித்து திரும்பி வருவாரென்றால் அவரது வயது ஒரு ஆண்டுதான் கூடியிருக்கும். ஆனால் அவர் அப்படித் திரும்பி வரும்போது பூமியில் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் கடந்திருக்கும். அவர் பயணத்தைக் துவங்கியபோது பூமியில் இருந்த மக்கள் அழிந்து பல தலைமுறை மாறியிருக்கும்.

இதுதான் கர்த்தரது கணக்கும் மனிதர்கள் நமது கணக்கும். பேதுருவுக்குத் தேவன் இந்த சத்தியத்தை தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் வருகையைப் பற்றி பலரும் பலவிதங்களில் கேள்வி கேட்டனர். இதனைப் பேதுரு பின்வருமாறு கூறுகின்றார்: "அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே". ( 2 பேதுரு 3 : 4 )

தன்னிடம் கேள்வி எழுப்பிய மக்களுக்குப் பேதுரு இந்த வசனங்கள் மூலம் பதிலளிக்கிறார். தேவனது காலக் கணிப்பு ஒருபுறம், மறுபுறம் தேவனது பொறுமை. அதாவது ஒருவரும் அழிந்து கெட்டுபோய்விடக்கூடாது எனும் எண்ணம். எனவே தேவன் தனது வருகையைத் தாமதப்படுத்துகின்றார். "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 )

அன்பானவர்களே, கிறிஸ்துவின் வருகை உண்மை என்பதற்கு பேதுரு குறிப்பிட்டுள்ள நிரூபிக்கப்பட்ட இந்த விஞ்ஞானபூர்வமான வசனமே சாட்சி.

கிறிஸ்து நமது காலத்தில் வந்து நம்மை சந்திக்கலாம் அல்லது நாம் மரித்து அவர்முன் போய் நிற்கலாம். எனவே அவரை சந்திக்க நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டும். நமது வாழ்வை சீர்தூக்கிப் பாப்போம். கிறிஸ்துவை சந்திக்க நாம் தகுதியுள்ளவர்களாய் இருக்கிறோமா

ஆதவன் 🖋️ 663 ⛪ நவம்பர் 21,  2022 திங்கள்கிழமை

"எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை." ( ரோமர் 1 : 20 )

இன்றுள்ள விஞ்ஞான யுகத்தில் மனிதனது புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பலர் கடவுள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். "கடவுள் என்பது கற்பனை; மனிதனைக் கடவுள் படைக்கவில்லை, கடவுளை மனிதன்தான்  படைத்தான்." என்ற தப்பறையான போதனைக்கு இளைஞர்கள் அதிகம் இழுக்கப்படுகின்றனர்.  

ஆனால், உண்மையில் மிகப்பெரிய விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். இன்றைய வசனம் கூறுவதைப்போல, காணப்படாத அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகளை உண்டாக்கப்பட்டப் பொருட்களில் கண்டு தேவனை நம்பினர். இப்படிக் காணத் தவறினால் நியாயத் தீர்ப்பில் தேவனிடம் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது 

இதுவரைப் உலகினில் பிறந்த மனிதர்களிலேயே அதிக அறிவாளி (I Q )  ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் (1879 - 1955). அவர் குறிப்பிட்ட மதத்தை ஆதரிக்காவிட்டாலும், ஒரு மிகப்பெரிய சக்தி இந்தப் பிரபஞ்சத்தை நடத்துகின்றது என்பதை ஒத்துக்கொண்டார். இயற்கையாக தானாக பிரபஞ்சம் அமைந்த்திட வாய்ப்பில்லை என்கின்றார் அவர்.

நிகழ்தகவு கோட்பாடு (Probability Theory) எனும் மிகப்பெரிய விஞ்ஞான கோட்பாட்டினைக் கண்டறிந்த பாஸ்கல் (1623 - 1662) அவர் கண்டறிந்து கூறுவது நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. அவர் கூறுகின்றார், "ஒவ்வொவொரு  மனிதனது இருதயத்திலும் கடவுள் உருவாக்கிவைத்துள்ள வெற்றிடம் ஒன்று உள்ளது. இந்த வெற்றிடத்தை உருவாக்கப்பட்ட எந்த உலகப் பொருளினாலும் நிரப்பிட முடியாது. கிறிஸ்து வெளிப்படுத்திய கடவுளால் மட்டுமே இந்த  வெற்றிடத்தை நிரப்பிட  முடியும்." என்று மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.

சர் ஐசக் நியூட்டன் (1642 - 1727) அவர்களைப்பற்றி ஒரு சம்பவம் படித்தேன். ஒருமுறை அவர் ரெயிலில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது வேதாகமத்தைப் படித்து ஜெபித்துக்கொண்டிருந்தார். அவரது அருகில் அமர்ந்திருந்த இளைஞன் அவர் யார் என்பதை அறியாமல் அவரிடம், "ஐயா, விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. இன்னும் வேதாகமத்தையும் ஜெபத்தையும் நம்புகிறீர்களே என்று கிண்டலாகக் கூறி, ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த ஒரு கண்டுபிடிப்பைப் பற்றி பெருமையாகக் கூறினான். பாருங்கள் மனிதன் இப்படியெல்லாம் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கின்றான், நீங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்கள்........ஐயா கடவுள் என்று எதுவும் கிடையாது என்றான்".   

நியூட்டன் அவனிடம் எதுவும் தர்க்கம் செய்யவில்லை. தான் இறங்கும் இடம் வந்தபோது தனது அடையாள அட்டையை அவனிடம் கொடுத்து, என்னை இந்த முகவரியில் வந்து பாருங்கள், நாம் விரிவாகப்  பேசலாம்  என்றபடி இறங்கிச் சென்றுவிட்டார். அந்த முகவரியைப் பார்த்த இளைஞன் திடுக்கிட்டான். தன்னிடம் பேசிக்கொண்டிருந்தனர் நியூட்டன் என்பது அவனுக்கு அப்போதுதான் தெரிந்தது. 

அவர் கொடுத்த முகவரியத் தேடித் கண்டுபிடித்து அங்கு சென்றான் அந்த இளைஞன். நியூட்டனின் விஞ்ஞான கூடத்தின்  ஒரு அறையில்  இந்தப் பிரபஞ்சத்தை அவர் செயற்கையாக உருவாக்கி வைத்திருந்தார்.  காந்த சக்தியின்மூலம் சூரியன், கோள்கள், சந்திரன், பூமி இவை அந்தரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருந்தன. இளைஞன் ஆச்சரியத்துடன், "ஐயா, இவைகளை நீங்கள்தான் உருவாக்கினீர்களா? என்று கேட்டான். அவனுக்குப் பதிலாக நியூட்டன், "இல்லை, இவை தானாக வந்துவிட்டன. ஒருநாள் நான் உறங்கி விழித்துப் பார்க்கும்போது இவைகள் இங்கு வந்திருந்தன" என்றார். 

"அது எப்படி ஐயா தானாக இவை  வரும்? நீங்கள்தான் உருவாகியிருக்கிறீர்கள்" என்றான் இளைஞன். "நான் உருவாக்க வில்லை. தானாகத்தான் வந்தன" என்றார் நியூட்டன். அந்த இளைஞன் நியூட்டன் தன்னைக் கிண்டல் செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டான்.  அவனிடம் நியூட்டன் கூறினார், " தம்பி இந்தச் சிறிய அறையினுள் இந்த மாதிரி உருவங்கள் தானாக வந்திருக்க முடியாது என்று உறுதியாக நம்புகின்றாய், அப்படியிருக்கும்போது உண்மையான இவைகள் எப்படித் தானாகத் தோன்றியிருக்கமுடியும்?  அந்த இளைஞன் வெட்கப்பட்டு நியூட்டன் கூறியதை ஏற்றுக்கொண்டான்.

"இந்த ஆண்ட சராசரங்கள், சூரியன், கிரகங்கள், பூமி , பால்வீதி இவை இயற்கையில் தோன்றிட வாய்ப்பில்லை. இவற்றுக்குப்பின் மிகப்பெரிய தேவ ஞானம் இருக்கின்றது" என்கின்றார் நியூட்டன். 

கடவுள் நம்பிக்கையற்றவர்களாக நீங்கள் இருந்தால் அல்லது விசுவாசக் குறைவு ஏற்படும்போது இரவுவேளைகளில்  மொட்டை மாடியில் படுத்து வானத்தைப் பாருங்கள். 

"பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது." ( சங்கீதம் 19 : 2 )

ஆதவன் 🖋️ 664 ⛪ நவம்பர் 22,  2022 செவ்வாய்க்கிழமை

"இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே." ( மத்தேயு 13 : 15 )

மனிதனது உடலில் அளவுக்கதிகமாக கொழுப்புச் சேர்வது பல்வேறு நோய்களை உருவாகும். குறிப்பாக இருதய நோய் ஏற்பட கொழுப்பே முக்கிய காரணமாய் இருக்கின்றது. இங்கு இயேசு கிறிஸ்து ஆவிக்குரிய கொழுப்பைக்  குறித்துக் கூறுகின்றார். ஆவிக்குரிய காரியங்களைக் கேட்டு உணராமல் இருக்கின்ற மக்களைப்பார்த்து அவர்கள் இருதயம் கொழுத்திருக்கின்றது என்கின்றார். 

கொழுப்பு இரத்த ஓட்டத்தைத் தடைசெய்வதுபோல ஆவிக்குரிய கொழுப்பு தேவ சத்தியங்களை அறியக் கூடாதபடிக்கு மனிதர்களது இருதயத்தைத் தடைசெய்கின்றது. இன்றைய வசனத்தை இயேசு கிறிஸ்து ஏசாயா கூறிய வார்த்தைகளிலிருந்து எடுத்துப் பேசுகின்றார். ( ஏசாயா 6 : 10 )

உடலில் கொழுப்புத் தேங்கிடக் காரணம் நாம் உண்ணும் உணவு முறைகளும் சரியான உடல் உழைப்பு இல்லாததும். அதுபோல இந்த உலகத்தில் ஆவிக்குரிய வாழ்வைக் கெடுக்கும் பாவ காரியங்களை நாம் செய்வதுதான் தேவையற்ற உணவை உண்பது. ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபாடில்லாமல் வாழ்வதே உடல் உழைப்பு இல்லாமல் வாழ்வது. இதனால் நமது இருதயத்திலும் ஆன்மாவிலும் கொழுப்புச் சேர்ந்து  விடுகின்றது. 

இப்படிச் சேரும் கொழுப்பு என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதையே இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.  அதாவது ஆத்துமாவில் கொழுப்புச் சேர்வது கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், தேவன் நம்மை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக இருதயத்தைக் கொழுக்கும்படிச் செய்துவிடுகின்றது.  


இதன் பாதிப்புத்தான் காதால் மந்தமாய்க் கேட்பதும் நமது கண்களை மூடிப்போடுவதும். அதாவது, ஆவிக்குரிய மேலான சத்தியங்களை அறியாமலும் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ முடியாமலும் செய்துவிடுகின்றது. 

அன்பானவர்களே, நமது இருதயத்தைக் கொழுக்க வைத்து ஆத்தும நோயை உருவாகும் இந்தக் கொழுப்பை நாம் அகற்றவேண்டியது அவசியம். உடல் கொழுப்பை அகற்றிட, பைபாஸ், ஆஞ்சோபிளாஸ்டி சிகிர்ச்சைகள் உள்ளன. அந்தச் சிகிர்சைகள் அதிகப் பணச் செலவு உள்ளவை. ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இலவசமாய் இந்தக் கொழுப்பை அகற்றுகின்றார்.

இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் மீட்பு நம்மை புதிய மனிதனாக்கும். ஆத்தும கொழுப்புகள் மறைந்து நாம் அவரது மகிமையைக் காணும்படி நமது கண்களையும் அவரது குரலைக் கேட்டு நடக்கும்படி நமது காதுகளையும் திறந்துவிடும். ஆம், மீட்பு அனுபவமே நமது ஆத்தும கொழுப்பை அகற்றும். 

ஆனால், சிகிர்ச்சைக்குப்பின்னால் எப்படி ஒரு பத்திய வாழ்க்கை வாழ்கின்றோமோ அதுபோன்ற ஒரு ஆவிக்குரிய பத்திய வாழ்க்கையைத் தொடர்ந்து நாம்  வாழ வேண்டியது அவசியம். அத்தகைய வாழ்க்கை வாழ வாழ நமது கண்களும் காதுகளும் மேலும் தூய்மையடைந்து கொழுத்த இருதயம் லெகுவான இதயமாக மாறி அதில் தேவன் வந்து தாங்கும் ஆலயமாக மாறிட எந்தத் தடையும் இல்லாத ஒன்றாக மாறிடும். 

இதற்கு, முதலில் நமது இருதயத்தில் கொழுப்பு இருப்பதை உணர்ந்துக்ள்ளவேண்டும்; அது மறையவேண்டும் எனும் ஆர்வம் வேண்டும்,  சிகிர்சைக்கு மனப்பூர்வமாக முன்வரவேண்டும். அப்போது மட்டுமே நாம் குணமாக முடியும்.  அன்பானவர்களே,  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது கொழுப்புச் சேர்ந்த  இருதயத்தில் இலவச  பைபாஸ், ஆஞ்சோபிளாஸ்டிசெய்திட ஒப்புக்கொடுப்போம். ஆவிக்குரிய தெளிவுள்ள புதுவாழ்வு பெறுவோம்.

ஆதவன் 🖋️ 665 ⛪ நவம்பர் 23,  2022 புதன்கிழமை

"அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?" ( லுூக்கா 18 : 7 )

மறுவுலக வாழ்வையே முக்கியப்படுத்தி நம்மை நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்தவே இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். ஆனால் பொதுவாக கிறிஸ்தவர்கள் அனைவருமே இயேசு கிறிஸ்து கூறிய வசனங்களுக்கும் உவமைகளுக்கும் உலகச் சம்பந்தமான பொருளையே எடுத்துக்கொள்கின்றனர்.

அப்படி மக்கள் தவறுதலாகப் பொருள்கொள்ளும் வசனங்களில் ஒன்றுதான் இன்றைய வசனம்.  சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து மக்களுக்கு விளக்குவதற்கு இயேசு கிறிஸ்து தேவனுக்குப் பயப்படாத, மனிதர்களை மதியாத நியாதிபதி ஒருவனைக் குறிப்பிட்டுப்  பேசுகின்றார். இந்த அநீதியான நியாதிபதியிடம் ஒரு விதவை தனக்கு நியாயம் வேண்டி தொடர்ந்து மன்றாடுகின்றாள். அவளது உபத்திரவம் பொறுக்கமுடியாமல் அந்த அநீதியான நியாதிபதி அவளுக்கு நீதி வழங்குகின்றான். 

அதாவது இந்த விதவையைப்போல தேவனை நோக்கி இரவும் பகலும் நாம் தொடர்ந்து மன்றாடினால் நமது ஜெபத்தை தேவன் கேட்பார். என்று கூறினார் இயேசு கிறிஸ்து. 

இந்த உவமையை எல்லோரும் தங்களுக்காக இயேசு கூறியதாக எண்ணி, தொடர்ந்து தங்களது உலகத் தேவைகளை தேவனிடம் கூறினால் அவை நிறைவேறும் என்று எண்ணிக்கொள்கின்றனர். ஆனால், தெளிவாக வாசிக்கும்போது இயேசு கூறுவது புரியும். எல்லோரது ஜெபத்தையும் என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடாமல், "தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில்" என்று கூறுகின்றார். 

அதாவது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், அவரது கற்பனைகளின்படி வாழும் மீட்பு அனுபவம் பெற்றவர்கள். அத்தகைய மனிதர்கள் வேண்டுதல் செய்யும்போது தேவன் அதனைக்கேட்டு பதில் தருவார் என்கின்றார். அவரிடம் உலகத் தேவைகளுக்காக விண்ணப்பம் செய்யவேண்டுமென்றோ அப்படி  விண்ணப்பம்பண்ணும் உலகத் தேவைகள் எல்லாவற்றையும் அவர் தருவார் என்பதற்கோ  இயேசு கிறிஸ்து இந்த உவமையைக் கூறவில்லை. 

ஆவிக்குரிய மனிதர்கள் எப்போதும் தங்களது உலகத் தேவைகளைக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆவிக்குரியவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்தித்து அவற்றுக்கே முன்னுரிமைகொடுத்து வேண்டுதல் செய்வார்கள். 

அப்போஸ்தலரான யாக்கோபு எனவேதான், "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்." ( யாக்கோபு 4 : 3 ) என்று கூறுகின்றார். மட்டுமல்ல, "விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்." ( யாக்கோபு 4 : 4 ) என்று கோபத்தில் கூறுகின்றார். 

அன்பானவர்களே, வேதாகமம் ஆவிக்குரிய புத்தகம். அதனை சாதாரண உலகப் புத்தகம்போலப் படித்து நாம் தவறான அர்த்தங்களைக்கொண்டு வாழக்கூடாது. தேவன் நமது ஜெபத்தைக் கேட்கவேண்டுமானால் முதலில் நாம் மனம்திரும்பி ஒரு ஆவிக்குரிய வாழ்க்கை வாழ வேண்டும். அப்படி வாழும்போது நாம் ஆவிக்குரியவிதமான விண்ணப்பங்களைச் செய்வோம். அவர் அவைகளை நிறைவேற்றுவார்.  மட்டுமல்ல, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6 : 33 )" என்று இயேசு கூறியவாறு உலக ஆசீர்வாதங்களையும்  அவர் நமக்குத் தந்து ஆசீர்வதிப்பார். . 

ஆதவன் 🖋️ 666 ⛪ நவம்பர் 24,  2022 வியாழக்கிழமை

"மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்". ( லுூக்கா 18 : 27 )

நாம் மனித அறிவினால் எல்லாவற்றையும் சிந்திக்கின்றோம். ஏனெனில் நாம் வாழும் சூழ்நிலை நம்மை அப்படிதான் சிந்திக்கத் தூண்டும். எனவேதான் நம் பல வேளைகளில் பிரச்னைகளைப் பார்த்துப்  பயந்து திகைக்கின்றோம். இயேசு கிறிஸ்து கூறும் இன்றைய வார்த்தைகள் நமக்கு கர்த்தர்மேல் நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆம், தேவன் காலம், நேரம் இவைகளுக்கு அப்பாற்பட்டவர். அவரால் எல்லாம் கூடும்.

இயேசு செய்த அற்புதங்களில் மிகப்பெரிய அற்புதம், மரித்து, கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட லாசரை நான்கு நாட்களுக்குப்பின்  உயிர்ப்பித்தது. ஒருவர் மரித்து இரண்டாம் நாளே அந்த உடலிலிருந்து துர் நாற்றம் வந்துவிடும். நான்காம் நாளில் சதைகள் அழுகிவிடும். ஆனால், அந்த அழுகிய உடலை தனது வார்த்தையால் எழும்பச் செய்தார் இயேசு கிறிஸ்து. ஆம், மனிதனால் கூடாதவைகள் தேவனால் கூடும்.   

நித்திய ஜீவனைக்குறித்தும் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதைக் குறித்தும் பேசும்போது இயேசு கிறிஸ்து, "ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்." ( லுூக்கா 18 : 25 ) அதாவது செல்வந்தர்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது என்பது இதன் பொருள். 

ஆனால், இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளைக் கேட்டு மக்கள் அவரிடம் , "ஆண்டவரே, அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்படக்கூடும்?"  என்றார்கள். அவர்களுக்கு மறுமொழியாகத்தான் இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தைக் கூறினார். அதாவது மனிதர்களால் இது முடியாததுபோலத் தெரியலாம் ஆனால் மரித்த லாசரை உயிர்பித்ததுபோல தேவனால் இது முடியும்.  

ஆனால், இதற்கு ஒரு நிபந்தனையை இயேசு கூறுகின்றார்.  "எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்". ( லுூக்கா 18 : 17 ) அதாவது, ஒருவன் மனம் திரும்பி சிறு பிள்ளையைப் போன்ற மன நிலையினை அடைவானென்றால் அவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும். 

தேவனை ஏற்றுக் கொண்டவர்களெல்லாம் பிச்சைக்காரர்களல்ல. ஆபிரகாம் மிகப்பெரிய செல்வந்தன். தாவீது மிகப்பெரிய ராஜா.  எசேக்கியா ஒரு ராஜா. இதுபோல புதிய ஏற்பாட்டிலும் இயேசுவின் மறைமுக சீடனாயிருந்த அரிமத்தியா ஊர் யோசேப்பு ஒரு செல்வந்தன்.  மேலும் இயேசு உலகினில் இருந்தபோது பல  செல்வந்த பெண்கள் அவரோடு இருந்து ஊழியத்துக்கு உதவினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஏரோது ராஜாவின் செயலாளரான கூசாவின் மனைவியும் அவர்களுள் ஒருத்தி.   "ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்." ( லுூக்கா 8 : 3 ) என்று வாசிக்கின்றோம்.

பரலோக ராஜ்யத்தில் நுழைய பணம் ஒரு அளவுகோலல்ல. ஏழையாக இருந்து அவருக்கு ஏற்பில்லாத செயல்களில் ஈடுபட்டு ஒருவர் நரகத்துக்கு நேராகச் செல்லலாம். அதுபோல செல்வமுள்ள ஒருவர் தேவ நோக்கமறிந்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை  வாழ்ந்து பரலோக ராஜ்யத்தைச் சேரலாம்.  

மேலும் இன்றைய வசனம் உலகப் பிரச்சனைகளை எண்ணிக் கலங்கி நிற்பவர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் வசனமாகும். நம்மை அழுத்தும் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க வழியே இல்லாததுபோலத் தெரியலாம் ஆனால் நாம் கலங்கிடத் தேவையில்லை. நமது விசுவாசத்தை உறுதிப்படுத்த இன்றைய வசனம்  உதவிடும். 

இஸ்ரவேல் மக்கள் பார்வோனுக்குத் தப்பிவிட வழியே இல்லாத சூழ்நிலையில்  செங்கடலைப் பிளந்து வழியுண்டாக்கி அவர்களை    தேவன் காப்பாற்றவில்லையா?  எனவே பிரச்சனைகள், துன்பங்கள் இவைகளை எண்ணிக் கலங்கவேண்டாம். பிரச்சனைகளுக்கு ஊடாக தேவன் இருக்கின்றார் என்பதை விசுவாசியுங்கள். தேவன் நமக்கு விடுதலை தருவார்.  ஆம், மனுஷரால் கூடாதவை தேவனால் கூடும்.

ஆதவன் 🖋️ 667 ⛪ நவம்பர் 25,  2022 வெள்ளிக்கிழமை

"கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்."( 2 கொரிந்தியர் 2 : 14 )

பாகிஸ்தான் நாட்டில் சென்ற நூற்றாண்டின் மத்தியகாலத்தில் வாழ்ந்தவர் பில்குய்ஸ் எனும் பெண்மணி பற்றி அவர்களது புத்தகத்தில் படித்தேன். அவர் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர். அவரது கணவர் பாகிஸ்தான் அரசாங்கத்தில் அமைச்சரவையில்  பதவி வகித்தவர். இந்தப் பெண்மணிக்கு இயேசுவைக் குறித்தோ கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறித்தோ ஏதும் தெரியாது. ஆனால் அவரது வீட்டில் வேலைசெய்த வேலைக்காரப் பெண்மணிமூலாம் இயேசுவை அறிந்துகொண்டார். அவரை தேவன் கனவு மூலமே வழிநடத்தினார். 

வேதாகமத்தை அவர்  சரியாக படித்து அறியுமுன்னமே ஒருநாள் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் வெண் ஆடை அணிந்த ஒருநபர் நறுமணத் தைலங்கள் ( Scent ) விற்பனை செய்ய அவரது வீட்டிற்கு வந்தார். பில்குய்ஸ் அவரிடம் அந்த நறுமணத் தைலங்களைக்குறித்து விசாரிக்கவே அவர் குறிப்பிட்ட ஒரு தைலத்தை எடுத்து பில்குய்ஸ் கையில் கொடுத்து நுகர்ந்து பார்க்கச் சொன்னார். அந்தத் தைல பாட்டிலைத் திறந்ததும் மிகச் சிறந்த நறுமணம் பரவி அவர் வீடு முழுவதும் நிரப்பிற்று. இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறி அவர் சென்றுவிட்டார்.

பில்குய்ஸ் அவர்களுக்கு இந்தக் கனவின் பொருள் விளங்கவில்லை. இதுபற்றி ஒன்றும் புரியவில்லை. அன்று மாலை அவர் வேதாகமத்தைப் படிக்கமுயன்றார். இஸ்லாமிய நாடு, இஸ்லாமிய கணவன் என்பதால் மறைத்து மறைத்துதான் வேதாகமத்தை அவர் படிக்கவேண்டியிருந்தது.  அப்படிப் படிக்கும்போது அவர் கண்ணில் பட்டது இன்றைய நமது தியானத்துக்குரிய வசனம். "எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." எனும் வார்த்தைகளை வாசித்தபோது அவருக்குக் கனவின் பொருள் புரிந்தது. "நான் என்னை அறியாமல் துள்ளிக் குதித்துவிட்டேன்" என்று எழுதியுள்ளார் அவர். 

"இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 15 ) என்று தொடர்ந்து எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

அன்பானவர்களே, கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் நம்மை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் நம்மைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்த கிறிஸ்து விரும்புகின்றார். அதாவது சாட்சியுள்ள ஒரு வாழ்க்கைமூலம் கிறிஸ்துவின் நறுமணம் உலகில் பரவிடவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். 

"இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப் போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்." என்று கூறியுள்ளபடி கெட்டுப்போகிறவர்களும் அவரை அறிந்திடவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். காரணம், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம் திரும்பிடவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். கெட்டுப்போகிறவர்களும் கிறிஸ்துவுக்குள் மற்றவர்கள் வாழும் சாட்சி வாழ்க்கையைப் பார்த்து மனம் திரும்பிட வாய்ப்புண்டு.

நமது சாட்சி வாழ்வால் கிறிஸ்துவின் நறுமணம் உலகினில் பரவிடச் செய்வோம். 

ஆதவன் 🖋️ 668 ⛪ நவம்பர் 26,  2022 சனிக்கிழமை

"எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்." ( 1 கொரிந்தியர் 11 : 28 )

கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் அவர் வருமளவும் உட்கொண்டு அவரது மரணத்தையும் உயிர்ப்பையும்  அறிக்கையிடுவது கிறிஸ்தவர்களுக்கு இயேசு கிறிஸ்து கொடுத்தக் கட்டளை. "என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள்" (லூக்கா 22:19) என்று கூறினார்.  இப்படிச் செய்வது கிறிஸ்து நமக்காகத் தனது உடலையும் இரத்தத்தையும் பலியாகக் கொடுத்தார் என்பதை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அறிக்கையிடுவதாகும். 

ஆனால், இது வெறும் சடங்குபோன்றதல்ல. கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் நாம் உட்கொள்வது மெய்யாகவே கிறிஸ்துவோடு நாம் பங்குள்ளவர்கள் என்று அறிக்கையிடுவதாகும்.  

எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "எந்த மனுஷனும் தன்னைத்தான் சோதித்தறிந்து இந்த ஆப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்" என்று கூறுகின்றார். ஆம், கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்ள நமக்குத் தகுதி இருக்கின்றதா என்று சோதித்து அறிந்து உட்கொள்ளவேண்டும்.  

இப்படிக் கூறும் பவுல் அடிகள், தவறுதலாக அல்லது தகுத்தியில்லாமல் நாம் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்வது நம் உடலையும் பாதிக்கும் என்கின்றார். அதாவது தகுதியில்லாமல் உட்கொள்வது நோய்  ஏற்படக்கூடவும் மரணம் ஏற்படவும் ஏதுவாகலாம் என்கின்றார். "இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்." ( 1 கொரிந்தியர் 11 : 30 )

அன்பானவர்களே, கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்ப்பையும் நாம் நற்கருணை உண்ணும்போது அறிக்கையிட்டாலும் தகுதியான உள்ளத்துடனும் பரிசுத்தத்துடனும் அதனை நாம் உண்ணுவது தேவையாயிருக்கின்றது.

நான் முன்பு ஆராதனைக்குச் செல்லும் சபைப் போதகர் அப்பமும் ரசமும் கொடுக்குமுன் அனைவருக்கும் தெளிவான விரிவான விளக்கம் கொடுப்பார். அவர் அப்படி விளக்கமளித்தபின்னர் பார்த்தால் பாதிக்குமேற்பட்டவர்கள் அடுத்த முறை எடுத்துக்கொள்ளலாம் என்று திரும்பிவிடுவார்கள். இதுபற்றி ஒருமுறை தனியே அந்த பாஸ்டரிடம் பேசியபோது கூறினார், "கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொள்வது விளையாட்டல்ல, வருகின்றவர்கள் அனைவர்க்கும் போதிய விளக்கம் அளிக்காமல் நான் கொடுத்தேனானால் நானும் தேவனுக்குப் பதில்சொல்லியாகவேண்டும்." 

அன்பானவர்களே, இதுவரை தெரியாமல் நாம்  நம்மை ஆராயாமல் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உட்கொண்டிருந்தால் அவரிடம் மன்னிப்பு வேண்டுவோம். இனி நம்மை நாமே நிதானித்து அறிந்து, நமது மனச்சாட்சி நம்மைக் குற்றமில்லாமல் தீர்த்தால் மட்டுமே உட்கொள்வோம்.  

ஆதவன் 🖋️ 669 ⛪ நவம்பர் 27,  2022 ஞாயிற்றுக்கிழமை

"பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்". ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 )

பரிசுத்த ஆவியானவரை தேவன் நமக்கு அருளுவதற்குக் காரணம் அலறி கூச்சலிடுவதற்கோ, "லாப லாபா" என்று உளறுவதற்கோ அல்ல.  நாம் பெலனடைந்து கிறிஸ்துவுக்குச் சாட்சியாக வாழவே பரிசுத்த ஆவியானவர் நமக்கு வழங்கப்பட்டுள்ளார். 

இன்றைய வசனத்தில் எருசலேம் என்பது நாம் இருக்குமிடத்தை அதாவது நமது ஊர் அல்லது வீட்டைக் குறிக்கின்றது, யூதேயா என்பது நாம்மைச் சுற்றியுள்ள பகுதிகள், சமாரியா என்பது பிற இன மக்களைக்குறிக்கின்றது. அதாவது நமது சாட்சியுள்ள வாழ்க்கை நமது வீட்டிலும், ஊரிலும், பக்கத்து ஊர்களிலும், பிறஇன  மக்களிடமும்  விளங்கி இந்த உலகம் முழுவதிலும் பிரதிபலிக்கவேண்டும். இதற்காகவே பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் வருகின்றார். 

சரி, எப்படி பரிசுத்த ஆவியானவர் நம்மைத் தகுதிப்படுத்துகின்றார்? "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்."( யோவான் 16 : 8 ) என்று கூறினார் இயேசு கிறிஸ்து. அதாவது ஒருவரிடம் பரிசுத்த ஆவியானவர் இருப்பது பாவமற்ற அவரது வாழ்க்கை, அவரது நீதிச் செயல்கள் மூலம் தெரியவரும். நித்திய நியாயத் தீர்பைக் குறித்து அவர் கண்டித்து உணர்த்துவதால் நீதியாக வாழ ஒருவரைத் தகுதிப்படுத்தும். 

மேலும் இயேசு கிறிஸ்து கூறினார், "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்."( யோவான் 16 : 13 )

அன்பானவர்களே, பரிசுத்த ஆவியின் வரங்களைப் பெற்றுளேன் என்று கூறிக்கொள்ளும் பல ஊழியர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் வேதத்துக்கு ஏற்புடையதையல்ல. தங்களை வல்லமையுள்ளவர்கள் என்று மக்கள் நம்பவேண்டும் என்பதற்காகவும், அதிக காணிக்கைகள் வசூலிக்கவும் அவர்கள் செய்யும் தந்திரங்களே இவை.

பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டவன் தாழ்ச்சியுள்ளவனாக இருப்பான்.  ஆவியின் கனிகள் நிறைந்தவனாக இருப்பான்.  "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை."( கலாத்தியர் 5 : 22, 23 )

அன்பானவர்களே, உண்மையான ஆர்வத்துடன், தேவனுக்குச் சாட்சியான வாழ்க்கை வாழவேண்டும் எனும் ஆசையுடன் ஜெபிக்கும்போது நமக்கு வல்லமையின் ஆவியானவரின் துணை கிடைக்கும். அப்படியில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்யும் பிரபல ஊழியர்களைப் பார்த்து அவர்களைப்போல வரவேண்டுமென்று நாம் பரிசுத்த ஆவியானவரை வாஞ்த்தோமானால் கிறிஸ்துவைவிட்டு அந்நியப்பட்டுப் போய்விடுவோம். 

ஆண்டவரே நான் ஆவிக்குரிய வாழ்வில் பெலனடையவும் உமக்குச் சாட்சியான வாழ்க்கை வாழவும் எனக்கு உதவிட உமது பரிசுத்த ஆவியானவரைத் தந்து என்னை வழிநடத்தும் என்று வேண்டுதல் செய்யும்போது நமது வேண்டுதலின்மேல் தேவன் பிரியுமுள்ளவராக இருப்பார். 

மெய்யான அபிஷேகம், நம்மைக் கிறிஸ்துவுக்குச் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ உதவிடும். 

ஆதவன் 🖋️ 670 ⛪ நவம்பர் 28,  2022 திங்கள்கிழமை

"நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்...." ( எபேசியர் 3 : 16 )

நாம் ஒவ்வொருவரும் இரண்டு மனிதர்களாக உள்ளோம். வெளிப்பார்வைக்கு உலகுக்குத் தெரிவது ஒரு மனிதன்; வெளியுலகுக்குத் தெரியாத இன்னொரு மனிதன் ஒவ்வொரு மனிதர்க்குள்ளும்  மறைமுகமாக இருக்கின்றான். பெரும்பாலான மனிதர்களும்  இரண்டு மனிதர்க்குள்ளும் முரண்பாடு கொண்டவர்களாகவே வாழ்கின்றனர்.

உள்ளான மனிதன் ஆவிக்குரியவன். இன்று உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மனிதர்களே உலகினில் அதிகம். உள்ளான மனிதனில் நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே நம்மை வெளிக்காட்ட முடியுமானால் நாம் பலப்பட்டவர்கள் என்று அர்த்தம். ஆனால், பெரும்பாலும் உள்ளான மனிதன் பொறாமை, காய்மகாரம், பண ஆசை, பாலியல்  அவலட்சணமான எண்ணங்கள், கொண்டவனாகவே இருக்கின்றான். எனவே இவைகளை பலரும் மறைத்து தங்களை நல்லவர்களாக வெளிகாட்டிக்கொண்டு உலகினில் நடமாடுகின்றனர். 

உள்ளான மனிதனே ஆவிக்குரிய மனிதன். நாம் உள்ளான மனிதனில் பலப்படவேண்டியது அவசியம். உலக மனிதர்கள் உள்ளான விஷயங்களில் மோசமானவைகளாக இருந்தாலும்  கிறிஸ்துவின் ஆவி உள்ளான மனிதனில் வரும்போது அவர்களை வித்தியாசமானவர்களாக  மாற்றுகின்றார். அவர்கள் ஆவிக்குரியவர்களாக மாறுகின்றனர். அதன்பின்னரே அவர்களது சிந்தனை ஆவிக்குரிய சிந்தனையாக மாறுகின்றது. 

ஆனால், ஆவிக்குரிய வாழ்வு வாழ முயலும் மனிதர்களது நிலைமை பவுலைப்போல சில சிரமங்களுக்குளாக்குகின்றதாக இருக்கின்றது. அவர்கள் உள்ளான மனிதனில் தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ விரும்புபவர்களாக இருக்கின்றனர். ஆனால் வெளியுலக சூழ்நிலை உள்ளான மனிதனுக்கேற்ற அத்தகைய ஆவிக்குரிய வாழ்க்கை வாழத் தடைகளைக் கொண்டுவருகின்றது. எனவேதான் பவுல் கூறுகின்றார், "உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்." ( ரோமர் 7 : 22 ) என்று. ஆனால் வெளி உலக சூழ்நிலைகள் பரிசுத்த வாழ்க்கை வாழத் தடையாக பெரிய சவாலாக இருக்கின்றன.

இப்படி இருப்பதால், "நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது." ( 2 கொரிந்தியர் 4 : 16 ). அதாவது, பரிசுத்தனாக வாழ விரும்புவதால், வெளியான மனிதன் நலிவுற்று அழிவதுபோலத் தெரிந்தாலும் உள்ளான மனிதனில் நாளுக்குநாள் புத்துணர்வும், புது உருவாக்குதலும் நடக்கின்றது. இன்றைய வசனத்தில், எபேசு சபை விசுவாசிகள் அனைவரும் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்பட பிதாவை நோக்கி ஜெபிப்பதாக பவுல் கூறுகின்றார்.  

பரிசுத்த ஆவியானவரின் துணை இல்லாமல் நாம் உள்ளான மனிதனில் வல்லமைப்பட்டு வெளியான மனிதனை மேற்கொள்ள முடியாது.

அன்பானவர்களே, விசுவாசிகளது உலகத் தேவைகளுக்கே முன்னுரிமைகொடுத்து ஜெபிக்கும் இன்றைய ஊழியர்களைப்போல அல்லாமல், பவுல் தனது சபை விசுவாசிகள் இந்த மேலான வாழ்க்கை நிலையை அடைந்திட ஜெபிக்கின்றார். 

இன்று நமக்கு இத்தகைய ஊழியர்கள் வெகு சிலரே இருப்பதால், நாமே நமக்காக ஜெபிக்கவேண்டியது அவசியம். நமது உள்ளான மனிதன் நாளுக்குநாள் புதிதாக்கப்பட ஜெபிக்கும்போது நமது வாழ்க்கை முரண்பாடில்லாத வாழ்க்கையாக மாறும். உள்ளான மனிதனும் நமது வெளி மனிதனும் ஒன்றுபோல மாறும்போதுதான்  நாம் உலகிற்கு மெய்யானச் சாட்சிகளாக மாறமுடியும். 

ஆதவன் 🖋️ 671 ⛪ நவம்பர் 29,  2022 செவ்வாய்க்கிழமை

"நீர்மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 29 )

ரோமாபுரியில் நியாய விசாரணைக்குட்பட்டிருந்த அப்போஸ்தலரான பவுல் தனதுபக்க நியாயத்தை எடுத்துரைக்கும்போதும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவித்தார். அவரது பேச்சு அகிரிப்பா ராஜாவையே கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்கும்படி தூண்டக்கூடியதாக இருந்தது.  "அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்."( அப்போஸ்தலருடைய நடபடிகள் 26 : 28 )

அவனுக்குப் பதில் மொழியாகத்தான் அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தைக் கூறுகின்றார். அதாவது தனது சுவிசேஷத்தைக் கேட்கும் எல்லோரும் தன்னைப்போல கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொண்டவர்களாக மாறவேண்டும் என்று பவுல் விரும்பினார். 

இதுவரை உலகினில் பிறந்த எவரும் கூறத்துணியாத; கூறமுடியாத வார்த்தைகளை அபோஸ்தலரான பவுல் கூறினார். ஆம், "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்." ( 1 கொரிந்தியர் 11 : 1 ) என்றார்.

அன்பானவர்களே, இன்று நாம் இதுபோலக் கூற முடியாதுதான்.  ஆனால் அவர் கிறிஸ்துவின்மேல் எவ்வளவு வைராக்கியமாக அன்பு கொண்டிருந்தார் என்பது அவரது வாழ்கையினைப் பார்த்தால் புரியும். அந்த அன்பு, அவரை கிறிஸ்துவுக்காக வாழவும், அவரைப் பிரதிபலிக்கவும் அவருக்காக மரிக்கவும் தூண்டியது. 

இன்று அப்போஸ்தலரான பவுல் அடிகளின் வாழ்க்கை நமக்கு முன்னுதாரணமாக உள்ளது. கிறிஸ்துவின் வாழ்க்கையைப்பற்றிக் கூறும்போது சிலர் அவரது மனிதத் தன்மையைப் புரிந்துகொள்ளாமல், "அவர் தேவ குமாரன், அவரைப்போல நாம் வாழ முடியாது என்று சாக்குப்போக்குக் கூறுவதுண்டு. அவர்களுக்குப்  பதில் அப்போஸ்தலரான பவுலடிகளின் வாழ்க்கையும் அவரது பேச்சும். 

கிறிஸ்து தேவ குமாரன் எனவே அவரைப்போல வாழ முடியாது என்பவர்கள்,  "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்." எனும் பவுல் அடிகளின் வார்த்தைகளைக் கேட்டு அவரைப் பின்பற்றலாமல்லவா?

பல புனிதர்களும் மனிதர்களாக இந்த பூமியில் வாழ்ந்தவர்கள்தான். ஆனால் பரிசுத்த வாழ்க்கை வாழத் தங்களை அர்ப்பணித்தவர்கள். சாதாரண உலக மனிதர்கள்கூட, எப்போதுமே "நமது இலக்கு மேலானதாக இருக்கவேண்டும்" என பிறருக்கு அறிவுரை கூறுவார்கள். அப்படியிருக்க,   ஆவிக்குரிய நமக்கோ அந்த இலக்கு எல்லாவற்றையும்விட மேலானதாக இருக்கவேண்டியது எவ்வளவு முக்கியம்!!!

நமது பந்தயப் பொருளான கிறிஸ்துவைநோக்கி நாம் ஓடவேண்டியது அவசியம்.  அப்படி ஓடிட பரிசுத்த ஆவியானவரின் துணையும் வழிகாட்டுதலும் நமக்கு அவசியம். நமது இலக்கு கிறிஸ்துவைப்போலவும் குறைந்தபட்சம் அப்போஸ்தலரான பவுல் அடிகளைப்போலவும் மாறுவதாக  இருக்கட்டும். அப்படி நம்மை மாற்றி வாழ்ந்திட முயலுவோம்; ஜெபிப்போம். கர்த்தர்தாமே நமது ஆசை நிறைவேறிட உதவிடுவார்.  

ஆதவன் 🖋️ 672 ⛪ நவம்பர் 30,  2022 புதன்கிழமை

"தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது." ( ரோமர் 11 : 35, 36 )

இந்த உலகத்தில் மனிதர்கள் தங்களுக்கு ஏதாவது உதவித் தேவையென்றால் எந்த வழியிலாவது அதனைப் பெற்றிடத் தயங்குவதில்லை. அரசாங்கத்தில் ஏதாவது சலுகையோ அல்லது சான்றிதழோ தேவையென்றால் கைக்கூலி கொடுத்து அதனைப் பெற்றிடவே முயலுகின்றனர். மனிதர்களது இந்த குறுகிய புத்தி அவர்களை தேவனிடம் நெருங்கும்போதும் தொடருகின்றது. இதற்கு மக்களை வழிகாட்டும் ஊழியர்களும் ஒரு காரணம். 

தேவனிடம் ஏதாவது ஆசீர்வாதம் பெறவேண்டுமானால் அவருக்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என்று போதித்து மக்களை அப்படியே வழிநடத்துகின்றனர். ஆயிரம் ரூபாய்  காணிக்கை கொடுத்தால் தேவன் அதனைப் பத்தாயிரமாகத் திருப்பித் தருவார்; இரண்டாயிரம் கொடுத்தால் இருபதாயிரமாக திருப்பித் தருவார்  என்றும்  தேவனுக்குக் காணிக்கை கொடுக்கும் அளவினைப் பொறுத்தே அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்றும்  முட்டாள் போதனையை பிரபல ஊழியர்கள் வழங்கி மக்களை தேவ அன்பில்லாதவர்களாக மாற்றிவிட்டனர். 

அதிகமாக காணிக்கை அளித்த செல்வந்தர்களது காணிக்கையையல்ல, ஏழை விதவையின் இரண்டு காசு காணிக்கையினைத்தான்  இயேசு கிறிஸ்து மேன்மையாகக் கருதினார். அந்தக் காணிக்கைக் குறித்து  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியது நமக்கு எப்போதும் நினைவில் கொள்ளவேண்டிய ஒன்றாகும். "அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்." ( மாற்கு 12 : 44 ) என்றார் இயேசு. மேலும், அந்த விதவை தனக்கு இரட்டிப்பான ஆசீர்வாதம் வேண்டுமென்று காணிக்கை கொடுக்கவில்லை; கர்த்தருக்குக் கொடுக்கவேண்டும் எனும் ஆர்வத்தில் கொடுத்தாள்.  

செல்வ ஆசீர்வாதங்கள் பெறவேண்டும் எனும் எண்ணத்தில் காணிக்கை கொடுக்கும் மனிதர்களைப் பார்த்துதான் அப்போஸ்தலரான பவுல், "தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது." என்று கூறுகின்றார். அதாவது நமக்கு தேவனது பதில் கிடைக்கும்படி அவருக்கு ஒன்றை நாம் கொடுக்கமுடியாது. ஏனெனில் இந்த உலகத்திலுள்ள அனைத்தும் அவராலும் அவர் மூலமாகவும் அவருக்காகவும் உண்டாகியுள்ளன.

நாம் ஒன்றை தேவனிடமிருந்து பெறுவது அவரது சுத்தக் கிருபையால்தானே தவிர அவருக்குக் காணிக்கைக் கொடுப்பதாலல்ல. இப்படிச் சொல்வதால் காணிக்கைக்  கொடுக்கவேண்டாம் என்று பொருளல்ல, காணிக்கையை நாம் மனப்பூர்வமாக, தேவனிடமுள்ள அன்பின் நிமித்தமாகக் கொடுக்கவேண்டுமே தவிர அவரிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் குறுகிய வியாபார நோக்கில் கொடுக்கக்கூடாது. ஏனெனில் அவர் நாம் கொடுத்து நிறைவடையும் நிலையில் உள்ள அற்பமானவரல்ல.  சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது.

அப்போஸ்தலரான யாக்கோபு கூறுகின்றார், "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை." ( யாக்கோபு 1 : 17 ) பிதாவாகிய தேவனிடமிருந்து தான் அனைத்து வரங்களும் இறங்கி வருகின்றன. அவரிடத்தில் அதிகம் காணிக்கைக்  கொடுத்தவன், குறைவாகக் கொடுத்தவன் என்ற வேற்றுமை இல்லை.  

தேவனது கிருபையினை வேண்டி மன்றாடவேண்டுமேதவிர, குருட்டு வழிகாட்டிகளான  போதகர்களது அறிவுரைக்கைக் கேட்டு  கிருபையினை இழந்து போய்விடக்கூடாது.

Thursday, December 01, 2022

கிருபையினால் மீட்பு

 ஆதவன் 🖋️ 674 ⛪ டிசம்பர் 02,  2022 வெள்ளிக்கிழமை

"அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 : 15 )

கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொண்ட யூதர்களை வதைத்துத் துன்புறுத்தி  சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்த சவுலை தேவன் சந்தித்து பவுலாக மாற்றினார். சவுல் மனம்திரும்பிய செய்தி முதன்முதலில்  தமஸ்கு நகரைச் சார்ந்த அனனியா எனும் பெயருள்ள மனிதனுக்கு அறிவிக்கப்படுகின்றது. 

இயேசு கிறிஸ்து அளித்த தரிசனத்தால் கண்பார்வையை இழந்த சவுல் எனும் பவுலை நேரில் சென்று சந்தித்து அவர் பார்வை அடையும்படி வேண்டுதல்செய்ய தேவன் அனனியாவை அனுப்புகின்றார். அப்போது அனனியா சவுளிடம் செல்ல பயப்படுகின்றார். ஏனெனில் சவுல் கிறிஸ்துவின்மேல் விசுவாசம் கொண்ட யூதர்களைத் துன்பப்படுத்துவதை அனனியா நன்கு அறிந்திருந்தார். அப்போது தேவன் அனனியாவிடம் சவுல் இப்போது பழைய சவுல் அல்ல; அவர் நான் தெரிந்துகொண்ட பாத்திரம் என்று சொல்லி அவரிடம் செல்லுமாறு அனுப்புகின்றார்.  

"அவன் புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்." என்று பவுலை தேவன் எதற்காகப் பயன்படுத்தப்போகின்றார் என்பதையும் தேவன் அனனியாவிடம் கூறுகின்றார். 

அன்பானவர்களே, இன்று நாமும் பவுலைப்போல கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்படுபவர்களாகவே பலவேளைகளில் இருக்கின்றோம். பவுல் கிறிஸ்தவர்களை உண்மையினை அறியாமல் துன்புறுத்தினார், நாம் அறிந்தே நமது தகாத பாவச் செயல்களால் கிறிஸ்துவைத் துன்புறுத்துகின்றோம். 

பவுல் தனது பாவங்களை முதலிலேயே கிறிஸ்துவிடம்  அறிக்கையிடவில்லை;  தான் செய்தது பாவம் என்று உணரவும் இல்லை. ஆனால் தேவன் அவரைச் சந்தித்தார்.  ஆம், பவுல் கிறிஸ்துவை அறிந்துகொண்டது கிருபையினால்தான். எனவேதான் அவர் மீட்பு அனுபவத்தைப் பற்றிக் கூறும்போது, "கிருபையினால் மீட்பு" என்று கூறுவார். "இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்." ( ரோமர் 3 : 24 ) எனப்  பவுல் கூறக்  காரணம் இதுதான். 

மேலும், பவுல் கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்பட்டாலும் அது அறியாமையினாலும், தேவன் அருளிய நியாயப்பிரமாணக் கட்டளைகளைமேல் கொண்ட நம்பிக்கையாலுமே  அப்படிச் செயல்பட்டார். அவருக்கு அவர் நம்பிய யூத மதபோதனையில் உறுதியான நம்பிக்கை இருந்தது. எனவே அதற்கு எதிரான செயல்களை கிறிஸ்தவர்கள் போதிக்கிறார்கள் என்று அவர்கள்மேல் கோபம்கொண்டதனால்தான் அவர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார். ஆனால் இன்று நமக்கு அத்தகையைச் சூழல் இல்லை. கிறிஸ்துவின் மீட்பு பற்றி அறிந்திட மேகம்போன்ற திரளான சாட்சிகள் நமக்கு உண்டு (எபிரெயர் 12:1) எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

நமது உள்ளான மன எண்ணங்கள், கடவுளை அறியவேண்டும் எனும் ஆர்வம், நீதியான வாழ்க்கை இவை நமக்கு இருக்குமானால் நாமும் கிறிஸ்துவுக்குத் தூரமானவர்கள் அல்ல. நிச்சயமாக அவர் நமக்குத் தன்னை வெளிப்படுத்துவார். மட்டுமல்ல,  புறஜாதிகளுக்கும், ராஜாக்களுக்கும், அவருடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நம்மையும் தனது பாத்திரமாகத் தெரிந்துகொள்வார். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712