Friday, October 29, 2021

கடமையை மட்டும் செய்யுங்கள்

"ப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்." ( லுூக்கா 17 : 10 )

இயேசு கிறிஸ்து இங்கு ஆவிக்குரிய வாழ்வில் தேவ ஊழியர்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான குணத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றார். இது ஊழியர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையாக இருந்தாலும் நாம் அனைவருமே வாழ்வில் பின்பற்றவேண்டிய ஒரு பண்பு. அதாவது சில சின்னச் செயல்களைச் செய்துவிட்டு பலரும் அதனைப் பெரிதாக விளம்பரப்படுத்துவதுண்டு. ஆனால் அப்படிச் செய்வது தேவனுக்கு ஏற்புடைய செயலல்ல என்று கிறிஸ்து குறிப்பிடுகின்றார்.

வேலைக்காரன் பணி தனது எஜமான் கட்டளையிட்டப் பணிகளை செய்து முடிப்பது. எஜமான் அவனை வேலைக்காரனாகத்தான் பார்ப்பானேதவிர அவன் தனக்கு உதவுவதால் அவனைத் தனியாக சிறப்பாகக் கவனிக்கமாட்டான். அதனைத்தான் இயேசு கிறிஸ்து,

"உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?" ( லுூக்கா 17 : 7 ) என்று கூறுகின்றார்.

மேலும், "தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே." (  லுூக்கா 17 : 9 ) ஆம் வேலைகாரனது வேலை தனது எஜமான் கட்டளையிட்டவைகளைச் செய்து முடிப்பது. "அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்." ( லுூக்கா 17 : 10 ) அதாவது நாம் தேவனது ஊழியங்களுக்காகச் செய்யும் செயல்கள் குறித்து நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை. அது நமது கடமை.

இதில் நாம் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. அதாவது வேலைக்காரன் செய்த செயல்களுக்குக் கைமாறாக எஜமான் ஒன்றும் கொடுக்காமல் விட்டுவிடமாட்டான். மாறாக, அவனுக்கென்று நியமிக்கபட்டக் கூலியைக் கொடுப்பான். அதாவது நியமிக்கப்பட்ட பணியை வேலைக்காரன் செய்வது அவனது கடமை. அதற்கானக் கூலியைக் கொடுப்பது எஜமான்.

ஆனால் நமது பரலோக எஜமான் தனது ஊழியர்களை மதிப்போடு நடத்துகின்றார். "ஒருவன் எனக்கு ஊழியம்செய்தால் பிதாவானவர் பண்ணுவார் என்று கூறியுள்ளார்". ஆனால் ஊழியக்காரர்கள் நிலைமை இன்று வேறாக இருக்கின்றது. எஜமானின் விருப்பம், சித்தம் இன்னது என்று தெரியாமல் ஊழியம் செய்யும் ஊழியர்கள் பலருண்டு. ஊழியத்தை தேவனுக்கென்று செய்யாமல் தங்களது பிழைப்புக்காகச் செய்யும் பலருண்டு. 

மேலும் பல ஊழியர்கள் எஜமான் குறிப்பிட்டப் பணியைச் சரியாகச் செய்யாமல் இருந்துகொண்டு வலுக்கட்டாயமாக எஜமானிடம் கூலியைப் பெற முயலுகின்றனர். அதுவே கிறிஸ்தவ ஊழியம் மக்கள் மத்தியில் அதன் இலக்கை அடையமுடியாததற்குக் காரணம். ஆம், இன்று எஜமான் கூலியைக் கொடுப்பான் எனும் நம்பிக்கையும் பலருக்கு இல்லை; எஜமான் விரும்பும் சித்தப்படியான வேலையும் பலர் செய்வதில்லை. ஆனால், குறுக்கு வழியில் தங்களை நம்பி வரும் விசுவாசிகளிடம் பல்வேறு தந்திர உபாயங்களைப் பயன்படுத்தி தங்கள் பிழைப்பை நடத்த முயலுகின்றனர் பல ஊழியர்கள்.

அன்பானவர்களே, ஊழியம் செய்பவர்கள் மட்டுமல்ல, நாம் இன்று வேறு உலக வேலைகள் செய்தாலும் இந்த நல்ல குணம் நமக்கு வேண்டும். செய்யக்கூடிய வேலையை நாம் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சனையில்லாமல் உண்மையாக வேலைச் செய்யவேண்டியது அவசியம். எனவேதான் அப்போஸ்தலரான கூறுகின்றார், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்."( கொலோசெயர் 3 : 24 )

இப்படி உண்மையாய் பணி செய்யும்போது நிச்சயமாக தேவனது பார்வையிலும் மனிதர்களது பார்வையிலும் நாம் மதிப்புமிக்கவர்களாக விளங்குவோம்

                 - சகோ. எம். ஜியோ பிரகாஷ்

 

Saturday, October 09, 2021

இடுக்கமான வழியில் நுழைவோம்

 

                                              - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

 

"நாங்கள் மனுஷருக்கல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்' (1 தெசலோனிக்கேயர் -2;4)

இந்த வசனம் இன்றைய ஊழியர்களை நம் கண்முன் நிறுத்துகிறது. இன்று பிரபலமான ஊழியர்கள் மற்றும் கன்வென்சன் பிரசங்கிகள் யாரை பிரியப்படுத்தப் போதிக்கின்றார்கள்தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிப்பதைவிட தங்களை, தங்கள் மகிமையை பிரசங்கிக்கும் போதகர்களே அதிகம். இவர்களது கூட்டங்களில் ஆசீர்வாத மழை பொங்கிப் பொழிவதைக் காணலாம். "கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கிறார், இன்று முதல் நீ அசீர்வாதமாக இருப்பாய்..." என அலறுவதும் ஆசீர்வாத உபதேசங்களும் இன்றைய கிறிஸ்தவக் கூட்டங்களில் நிரம்பி வழிவதைக் காணலாம்

வியாபாரிகள் ஆசீர்வாத கூடுகைகள், திரைப்பட நடிகர்கள் ஆசீர்வாதக் கூடுகைகள் என காணிக்கைகள் அதிகம் அளிக்கக்கூடிய மக்களைக் குறிவைத்து  திட்டமிட்டு   ஆசீர்வாத  ஜெபக் கூட்டங்கள்  அமர்க்களப்படுகின்றன.   

பொதுவாக மனிதர்கள் தங்கள் குறைகளை, குற்றங்களை பிறர் சுட்டிக்காட்டுவதை விரும்புவதில்லை. மாறாக அவர்களுக்குச் சாதகமாகப்  பேசினால் ரசிப்பார்கள். எனவே, பாவ வழிகளை விட்டு மனம் திரும்புவதை போதிக்காமல் ஆசீர்வாதங்களையே இந்த ஊழியர்கள்  போதிக்கின்றனர். மேலும்  எல்லோருக்கும்  வாழ்க்கையில்    பிரச்சனைகள்    பலப்  பிரச்சனைகள்        இருக்கும்.   இந்தப்  போதகர்கள்  மனோதத்துவ முறையில் அவர்களுக்கு  ஆறுதல்   அளிக்க  முயலுகிறார்கள்.  

ஆனால் தேவன் கூறும் ஆசீர்வாத முறை இதுவல்ல. இயேசு கிறிஸ்து தனது ஊழியத்தைத் தொடங்கியது குறித்து மத்தேயு நற்செய்தி கூறுகிறது, "அதுமுதல் இயேசு " மனம்திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது என்று பிரசிங்கிக்கத் துவங்கினார்" (மத்தேயு - 4:17). மனம்திரும்புதலே ஆசீர்வாதத்தின் முதல் படிஆனால் அதனைப் போதித்தால் தங்களது வரும்படி பாதிக்கும் என இந்தப் போதகர்கள் நினைப்பதே அவர்கள் பாவ மன்னிப்பைக் குறித்து பேசாததற்குக் காரணம்

இந்தப் போதகர்கள் தாங்கள் சரியாக போதிப்பதுபோன்ற ஒரு மாயத்  தோற்றத்தை உருவாக்கிட ஜெபியுங்கள், வேதம் வாசியுங்கள், உபவாசியுங்கள் என்று அறிவுறுத்துவார்கள். இவை பார்வைக்குச் சரிபோலத் தெரியும். ஆனால் ஒருவன் மனம் திரும்பாமல் இருந்துகொண்டும் இப்படிப்பட்டச் செயல் பாடுகளைச் செய்யலாம்.  

"மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." (  எசேக்கியேல் 18 : 32 )

மனம்திரும்பாமல் செத்து நரகத்துக்குச் செல்லக்கூடிய மக்களைப்  பற்றியக் கவலையே  இல்லாமல் "அதிசயம் ...அற்புதம்என மக்களை மயக்கி தங்களது வயிற்றுப பிழைப்பை தேடும் போதகர்களை நோக்கி பேதுரு கூறுகின்றார்:-  ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன் " (1 பேதுரு - 4:11)

என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார். (  எரேமியா 23 : 1 )

"Woe be unto the pastors that destroy and scatter the sheep of my pasture! saith the LORD." (  Jeremiah 23 : 1 )

இயேசு கிறிஸ்து உலக ஆசீர்வாதங்களைத் தருவதற்கு இந்த உலகத்தில் மனிதனாக வரவில்லை. மனிதர்களது பாவத்துக்குக் கழுவாயாக தனது உயிரைக்  கொடுக்கவும் மக்களை பாவத்திலிருந்து இரட்சித்து  நித்திய ஜீவனுக்கு நேராக நடத்தவுமே  வந்தார். அப்போஸ்தலரான யோவான் சுவிசேஷம் எழுதப்பட்ட நோக்கத்தைக் குறிப்பிடும்போது பின்வருமாறு கூறுகின்றார்:

" இயேசு தேவனுடைய குமாரனகிய  கிறிஸ்து என்று  நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே  நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப் பட்டிருக்கின்றன."  (யோவான் - 20:31) 

ஆம், நித்திய ஜீவனைப் பெறுவதற்கே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நித்திய ஜீவனை நாம் பெறுவதற்கு கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசமே முக்கியம். அதுவே நமது வாழ்வின் குறிக்கோளாக இருக்காவேண்டும்.  

கிறிஸ்துவின்மேல் கொள்ளும் விசுவாச வாழ்வு செழிப்பான உபதேசத்தினால் வருவதல்ல, மாறாக அது உபத்திரவங்களினாலும், அனுதினம் கிறிஸ்துவுக்காகச் சிலுவை சுமப்பதினாலும் வரும் ஒரு இடுக்கமான வழி. இந்த இடுக்கமான வழியாய் பிரவேசிக்க பலர் முயன்றாலும் அவர்களால் அதனுள் பிரவேசிக்கமுடியாது என்று இயேசு கூறினார். 

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 24 ) காரணம் அப்படி முயலும் பலரும் கிறிஸ்துவினிமித்தம் வரும் சிலுவையினை சுமக்க விரும்பாததால்தான். 

கிறிஸ்துவினிமித்தம் வரும் பாடுகளையும், உபத்திரவங்களையும் சகித்து கிறிஸ்துவின் இரத்தத்தால் வரும் மீட்பு அனுபவத்தைப் பெற்றவர்கள் மட்டுமே இடுக்கமான வழியாய்ப் பரலோகத்தில்  பிரவேசிக்கமுடியும். இதனை நாம் வெளிடுத்தின விசேஷத்தில் வாசிக்கின்றோம்.      "இவர்கள் மிகுந்த உபத்திரவத் திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 7 : 14 )


அன்பானவர்களே அதிசய அற்புத ஆசீர்வாதங்களை போதிக்கும் போதகர்களுக்கு மக்கள் கூட்டம் அதிகம் கூடலாம். ஆனால் வேதம் கூறுகிறது, "கேட்டுக்குச் செல்லும் வாசல் விசாலமானது, அதன் வழியே நுழைபவர்களும் அதிகம்". 

கேட்டுக்கான வாசலை விசாலமாகத் திறந்துவிடும் போதகர்களைப் புறக்கணித்து வேதம் கூறும் இடுக்கமான சரியான வழியில் நடப்போம்கிறிஸ்துவின்மேல் மெய்யான அன்புகொண்டு, எனக்கு கிறிஸ்து போதும் என வாழ்வோமெனில் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவியாகத் துணை நிற்பார்.