இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, October 29, 2021

கடமையை மட்டும் செய்யுங்கள்

"ப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்." ( லுூக்கா 17 : 10 )

இயேசு கிறிஸ்து இங்கு ஆவிக்குரிய வாழ்வில் தேவ ஊழியர்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான குணத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றார். இது ஊழியர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையாக இருந்தாலும் நாம் அனைவருமே வாழ்வில் பின்பற்றவேண்டிய ஒரு பண்பு. அதாவது சில சின்னச் செயல்களைச் செய்துவிட்டு பலரும் அதனைப் பெரிதாக விளம்பரப்படுத்துவதுண்டு. ஆனால் அப்படிச் செய்வது தேவனுக்கு ஏற்புடைய செயலல்ல என்று கிறிஸ்து குறிப்பிடுகின்றார்.

வேலைக்காரன் பணி தனது எஜமான் கட்டளையிட்டப் பணிகளை செய்து முடிப்பது. எஜமான் அவனை வேலைக்காரனாகத்தான் பார்ப்பானேதவிர அவன் தனக்கு உதவுவதால் அவனைத் தனியாக சிறப்பாகக் கவனிக்கமாட்டான். அதனைத்தான் இயேசு கிறிஸ்து,

"உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தை மேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ?" ( லுூக்கா 17 : 7 ) என்று கூறுகின்றார்.

மேலும், "தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே." (  லுூக்கா 17 : 9 ) ஆம் வேலைகாரனது வேலை தனது எஜமான் கட்டளையிட்டவைகளைச் செய்து முடிப்பது. "அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்." ( லுூக்கா 17 : 10 ) அதாவது நாம் தேவனது ஊழியங்களுக்காகச் செய்யும் செயல்கள் குறித்து நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை. அது நமது கடமை.

இதில் நாம் கவனிக்கவேண்டியது ஒன்று உண்டு. அதாவது வேலைக்காரன் செய்த செயல்களுக்குக் கைமாறாக எஜமான் ஒன்றும் கொடுக்காமல் விட்டுவிடமாட்டான். மாறாக, அவனுக்கென்று நியமிக்கபட்டக் கூலியைக் கொடுப்பான். அதாவது நியமிக்கப்பட்ட பணியை வேலைக்காரன் செய்வது அவனது கடமை. அதற்கானக் கூலியைக் கொடுப்பது எஜமான்.

ஆனால் நமது பரலோக எஜமான் தனது ஊழியர்களை மதிப்போடு நடத்துகின்றார். "ஒருவன் எனக்கு ஊழியம்செய்தால் பிதாவானவர் பண்ணுவார் என்று கூறியுள்ளார்". ஆனால் ஊழியக்காரர்கள் நிலைமை இன்று வேறாக இருக்கின்றது. எஜமானின் விருப்பம், சித்தம் இன்னது என்று தெரியாமல் ஊழியம் செய்யும் ஊழியர்கள் பலருண்டு. ஊழியத்தை தேவனுக்கென்று செய்யாமல் தங்களது பிழைப்புக்காகச் செய்யும் பலருண்டு. 

மேலும் பல ஊழியர்கள் எஜமான் குறிப்பிட்டப் பணியைச் சரியாகச் செய்யாமல் இருந்துகொண்டு வலுக்கட்டாயமாக எஜமானிடம் கூலியைப் பெற முயலுகின்றனர். அதுவே கிறிஸ்தவ ஊழியம் மக்கள் மத்தியில் அதன் இலக்கை அடையமுடியாததற்குக் காரணம். ஆம், இன்று எஜமான் கூலியைக் கொடுப்பான் எனும் நம்பிக்கையும் பலருக்கு இல்லை; எஜமான் விரும்பும் சித்தப்படியான வேலையும் பலர் செய்வதில்லை. ஆனால், குறுக்கு வழியில் தங்களை நம்பி வரும் விசுவாசிகளிடம் பல்வேறு தந்திர உபாயங்களைப் பயன்படுத்தி தங்கள் பிழைப்பை நடத்த முயலுகின்றனர் பல ஊழியர்கள்.

அன்பானவர்களே, ஊழியம் செய்பவர்கள் மட்டுமல்ல, நாம் இன்று வேறு உலக வேலைகள் செய்தாலும் இந்த நல்ல குணம் நமக்கு வேண்டும். செய்யக்கூடிய வேலையை நாம் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சனையில்லாமல் உண்மையாக வேலைச் செய்யவேண்டியது அவசியம். எனவேதான் அப்போஸ்தலரான கூறுகின்றார், "எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்."( கொலோசெயர் 3 : 24 )

இப்படி உண்மையாய் பணி செய்யும்போது நிச்சயமாக தேவனது பார்வையிலும் மனிதர்களது பார்வையிலும் நாம் மதிப்புமிக்கவர்களாக விளங்குவோம்

                 - சகோ. எம். ஜியோ பிரகாஷ்

 

No comments: