- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,088 பிப்ரவரி 01, 2024 வியாழக்கிழமை 💚
ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,090 💚 பிப்ரவரி 03, 2024 💚 சனிக்கிழமை 💚
ஏனெனில், கடமைக்காக ஜெபிப்பவர்களும் அதிகாலை வேளைகளில் எழுந்து ஜெபிக்கலாம். எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர், "சிறு வயதுமுதலே எங்கள் பெற்றோர்கள் எங்களை அதிகாலையில் ஜெபிக்க எழுப்பி விட்டுவிடுவார்கள், எனவே அதுவே பழக்கமாகிவிட்டது" என்பார்கள். ஆனால் இவர்கள் ஜெபம் என்று தங்களுக்கு சிறு வயதுமுதல் பெற்றோர்களால் கற்றுகொடுக்கப்பட்ட முறையில் தினமும் ஜெபிக்கிறார்களேதவிர தேவனோடு நெருங்கிய ஐக்கியத்தோடு ஜெபிப்பதுபற்றி தெரியவில்லை என்கின்றனர்.
இதுபோலவே உபவாச ஜெபமும். நாம் சாப்பிடாமல் இருப்பதால் தேவன் நமது ஜெபத்தைக் கேட்டுவிடுவார் என நம்பி உபவாசம் இருப்பது ஏற்புடைய உபவாசமல்ல. மேலும் இப்படி ஜெபிக்கும் பலரும்கூட தங்களது உலக தேவைகளை நிறைவேற்றவே இப்படி உபவாசமிருக்கின்றனர். பெரும்பாலும் பொருத்தனை பண்ணி ஜெபிப்பவர்களும் தங்களது உலக ஆசீர்வாதங்களுக்காகவே அப்படி ஜெபிக்கின்றனர்.
சிலர் ஒருநாளின் பத்தில் ஒரு பகுதியாகிய இரண்டுமணி நாற்பது நிமிடங்கள் ஜெபிக்கவேண்டும் என்கின்றனர். இப்படிக் கறாராக கணக்குபார்த்து ஜெபிப்பவர்களிடம் தேவ அன்பு நிச்சயம் இருக்கமுடியாது. ஏனெனில் இவர்கள் ஜெபத்தை ஒரு கட்டளையாக நிறைவேற்றுகிறார்கள் என்றுதான் கூற முடியும்
ஆனால் இருதய வேதனையோடும் நம்பிக்கையோடும் வரும் கண்ணீரின் ஜெபத்தை தேவன் கேட்டுப் பதிலளிக்கின்றார். அத்தகைய ஜெபமானது கர்த்தரது சமூகத்தில் இருதயத்தை ஊற்றிவிடும் ஜெபமாகும். எசேக்கியா ராஜா இப்படித்தான் ஜெபித்தார். சாமுவேலின் தாய் அன்னாள் இப்படித்தான் ஜெபித்தாள். இயேசு கிறிஸ்துவும் பலத்தச் சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபித்தார்.
அதிகாலையில் எழுந்து ஜெபிப்பது நல்லது; அது ஏற்புடையதே. ஆனால் அப்படி ஜெபிப்பதாலேயோ, உபவாசமிருப்பதாலோ , மணிக்கணக்கு பார்த்து ஜெபிப்பதாலேயோ தேவன் நமது ஜெபத்தைக் கேட்பதில்லை. அவர் நமது உடைந்த உள்ளத்தைத்தான் பார்க்கின்றார். நமது தவறுகளை எண்ணி மனம் வருந்தி உள்ளம் உடைவது. தேவனை இன்னும் நெருங்கவேண்டும் என ஆவல்கொண்டு வருந்தி உடைவது; பிறரை அவமதித்ததை எண்ணி வருந்தி உடைவது....உள்ளான மன ஏக்கத்துடன் வேண்டிவது. ......இத்தகைய ஜெபங்களைப் பல மணிநேரம் ஜெபிக்காவிட்டாலும் தேவன் உடனேயே கேட்டுப் பதிலளிப்பார்.
அன்பானவர்களே, மெய்யான விசுவாசத்தோடு, மன உருக்கத்துடன், ஒரு உடைந்த உள்ளதோடு நமது விண்ணப்பங்களை தேவ சந்நிதியில் ஊற்றுவோம் , தேவன் நிச்சயம் நமக்கு அடைக்கலமாய் இருப்பார்.
கடவுள் உண்டுமா கிடையாதா எனும் சர்ச்சை ஆதிமுதல் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. இல்லை என்பவர்களும் உண்டு என்பவர்களும் பல்வேறு ஆதாரங்களைக் கூறிக்கொண்டிருக்கின்றனர். பவுல் அப்போஸ்தலர் இங்கு அதனைத் தெளிவுபடுத்துகின்றார். அதாவது உலகினில் நாம் காணும் படைப்புகளே கடவுள் உண்டு என்பதற்கும் அவரது வல்லமை, தேவத்துவம் இவற்றிற்கும் சான்று என்கின்றார். உண்டாக்கப்பட்ட பொருட்களில் அவை தெளிவாய்க் காணப்படும் என்கின்றார்.
மனிதனது உடலே ஒரு அதிசயம். மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் எவ்வளவு நேர்த்தியாய் அமைக்கப்பட்டுள்ளன என்று பாருங்கள். மனித மூளைக்கு இணையான கம்ப்யூட்டர் இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை. மனித கண்களுக்கு இணையான காமெரா இதுவரைக் கண்டுபிடிக்கப்படவில்லை. மனித உடலை ஆய்வு செய்த கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு விஞ்ஞானி மனிதனது நரம்பு மண்டலம் அமைக்கப்பட்டுள்ள வித்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார். மனிதனது நரம்பு மண்டலத்தைப் பார்த்துவிட்டு அவர் பின்வருமாறு கூறுகின்றார்:-
"மனித உடலில் இரத்த நாளங்களும் நரம்புகளும் அமைக்கப்பட்டுள்ள விதம் என்னை ஆச்சரியப்படச் செய்தது. இரண்டு இரத்த நாளங்கள் இணையும் இடம், பிரியும் இடம் இவை உலகில் உள்ள ஒரு பிளம்பர் குடிநீர் குழாயில் இணைப்புக்கு கொடுப்பதுபோலவும் ஒரு எலெக்ட்ரிஷியன் மின்சார உபகரணங்களுக்கு இணைப்புக்கு கொடுப்பதுபோலவும் மிக நேர்த்தியாக திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளன. நிச்சயமாக இவைகள் தானாக உருவாகச் சாத்தியமே இல்லை. இதனைத் தாவீது ராஜாவும் ஆவியில் கண்டு களிகூர்ந்து பின்வருமாறு கூறுகின்றார், "நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்." ( சங்கீதம் 139 : 14 )
மேலும், விண்வெளிக் கோள்களின் அமைப்பைப் பல விஞ்ஞானிகள் கண்டு பிரமித்துள்ளனர். நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங்குடன் சென்று திரும்பிய ஆல்ட்ரின் விண்ணிலிருந்து பூமியைப் பார்க்கும்போது வேதம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ள பல வேத வசனங்கள் தனக்கு விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்தாலே தேவனைப் பற்றியும் அவரது மகத்துவங்களைப் பற்றியும் வியந்து அறிக்கையிடுவார் என்று அவர் குறிப்பிடுகின்றார். இவர் தனது வாழ்வின் பிற்பகுதியில் கர்த்தரது ஊழியக்காரனாக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .
இதுவரை உலகம் கண்ட விஞ்ஞானிகளில் மிகப்பெரியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். இவரது கோட்பாடுகளின் அடிப்படையிலேயே விண்வெளிக்கு ராக்கெட்களை அனுப்புகின்றனர். அவர் கடவுளை ஏற்றுக்கொள்ளவில்லையெனினும் விண்வெளியின் கோள்கள் அனைத்தையும் ஒரு மிகப்பெரிய மூளை சிந்தித்து ஞானமாய் வடிவமைத்துள்ளது என்கின்றார். ஆனால் அந்த மிகப்பெரிய மூளைதான் தேவன் என்பதை இந்த மேதை இறுதிவரைக் கண்டுகொள்ளவில்லை.
சங்கீத புத்தகத்திலும் "வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; ......" ( சங்கீதம் 19 : 1- 4 ) என்று படிக்கின்றோம்.
எனவேதான் அப்போஸ்தலரான பவுல், தேவனது வல்லமையும் மகத்துவமும் உலகப் படைப்புகளில் தெளிவாகத் தெரிவதால் "அவர்கள் (கடவுள் இல்லை என்று வாதிடுபவர்கள்) சாக்குபோக்குச் சொல்ல இடமில்லை" என்று குறிப்பிடுகின்றார். அதாவது அவர்கள் நியாயத் தீர்ப்புநாளில் இதனைக் காரணமாகச் சொல்லித் தப்பித்துக்கொள்ளமுடியாது என்கின்றார்.
தேவனை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு அவருக்கு ஏற்பில்லாத பாவ வாழ்க்கை வாழ்வதும் கடவுள் இல்லை என்று கூறுவதற்கு ஒப்பானதுதான். ஆம் அன்பானவர்களே, தேவனுக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழ்வோம். "தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்; .." ( சங்கீதம் 53 : 1 )
"அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்." ( சங்கீதம் 106 : 43 )
நமது சுய யோசனையில் சார்ந்துகொண்டு தேவனுக்கு எதிராக நாம் செயல்பட்டு வாழ்வோமானால் தேவனது பார்வையில் அது அக்கிரமமாக இருக்கும். அத்தகைய அக்கிரமம் நம்மைச் சிறுமைப்படுத்திவிடும் என எச்சரிக்கின்றது இன்றைய தியான வசனம்.
இஸ்ரவேல் மக்களது வாழ்கையினைப் பார்த்தால் அவர்கள் எப்போதும் தேவனுக்கு எதிராகச் செயல்படுபவர்களாகவே இருந்தனர். எகிப்திலிருந்து விடுதலையாகி கானான் தேசத்தை அவர்கள் சுதந்தரித்தபின் தேவன் அவர்களைப் பல்வேறு நியாயாதிபதிகள் மூலம் நடத்தினார். இறுதியில் அவர்கள் சாமுவேலிடம் தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்று முறையிட்டு அவர் அவர்களுக்கு சவுலை ராஜாவாக ஏற்படுத்தினார்.
இஸ்ரவேல் மக்கள் தங்களை மீட்டு இரட்சித்து வழிநடத்திய தேவனைவிட்டு அவ்வப்போது விலகி அந்நிய தேவர்களை வழிபடத்துவங்கினர். எப்போதெல்லாம் அவர்கள் தடம் மாறினார்களோ அப்போதெல்லாம் தேவன் அவர்களை எதிரி ராஜாக்களுக்கு அடிமைகளாக்கி அவர்களைச் சிறுமைப்படுத்தினார். பின்னர் தேவனிடம் மன்னிப்புக் கேட்டு முறையிடும்போது விடுவித்தார். ஆனாலும் அவர்கள் சிறிதுகாலத்தில் மீண்டும் வழி தவறினர்.
இப்படி, "அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள்."
அன்பானவர்களே, இன்று நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களாக இருக்கலாம். ஆவிக்குரிய வாழ்வில் தேறியவர்களாக இருக்கலாம். ஆனால் நமது வாழ்வு சிறுமைப்படுத்தப்பட்ட வாழ்வாக இருக்குமானால் நாம் நம்மையே சோதித்துப் பார்க்கவேண்டியது அவசியம். அநேகந்தரம் தேவன் நமது பாவங்களையும் தவறுகளையும் மன்னித்து விடுவித்தும் நாம் நமது சுய யோசனையினால் அவருக்கு விரோதமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். நம்மை ஆய்வுசெய்து பார்ப்போம்.
இன்றும் நமக்கு ஏற்படும் பல்வேறு துன்பங்கள் பிரச்சனைகளுக்கு நாம் நமது சுய யோசனையினால் அவருக்கு விரோதமாய்ச் செயல்படுவது காரணமாக இருக்கலாம். எனவே "என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே." ( எபிரெயர் 12 : 5 ) என்று அறிவுறுத்துகின்றது வேதம். மட்டுமல்ல இப்படி தேவன் நம்மைக் கடிந்துகொள்ளும்போது நாம் உணர்வடைந்து மனம் திரும்பவேண்டியது அவசியம்.
தேவன் இஸ்ரவேலர் தன்னைவிட்டு விலகி பாவம் செய்தபோது அவர்களை விடுவித்தாலும் எல்லோரும் அந்த விடுதலையின் பலனை அனுபவிக்கவில்லை. பலர் அழிக்கப்பட்டனர். எனவே நாம் எச்சரிக்கையாக இருந்து தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். இஸ்ரவேலரைப்போல வணங்கா கழுத்துள்ளவர்களாக வாழ்வோமானால் எப்போதும் தேவ துணை நமக்குக் கிடைக்காது.
எனவேதான் நீதிமொழிகள் நம்மை எச்சரிக்கின்றது, "அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்." ( நீதிமொழிகள் 29 : 1 )
பெரிய வியாழன் மற்றும் துக்கவெள்ளி நாட்களில் நடைபெறும் ஆராதனைச் சடங்குகளில் கலந்துகொள்ளும் பலருக்கு இயேசுவின் பாடுகளும் மரணமும் மனதில் ஒரு உணர்ச்சியைத் தூண்டி கண்களில் கண்ணீர் வரவைக்கலாம். இது மன உணர்ச்சியினால் ஏற்படும் ஒரு தூண்டுதல். ஒரு சோகமான திரைப்படத்தைப் பார்க்கும்போது பலர் அழுவதுண்டு; சிலருக்கு புத்தகங்களில் படிக்கும் கதைகள் இப்படி உணர்ச்சியினைத் தூண்டலாம். ஆனால் அடுத்தச் நாட்களில் எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்.
அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் சித்திரவதைகளும் மரணமும் உணர்ச்சிவசப்பட்டு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அழுது மறந்துபோவதற்கல்ல. இப்படிப் பரிதாபப்பட்டுத் தனக்காக மக்கள் அழுவதை இயேசு விரும்பவுமில்லை. அதனையே தன்னைப் பார்த்து அழுத பெண்களுக்கு அவர் கூறுகின்றார், "நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்".
பாவமும் மரணமும் எவ்வளவு கொடூரனானவை என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனால் மக்களுக்கு அதனைப்பற்றி அக்கறையில்லாமலிருந்தது. அவர்கள் உணர்ச்சிவசப்பட்டும் அவர்மேல் பரிதாபம்கொண்டும் அழுதனர். எனவே தங்களது பாவ வாழ்க்கையிலிருந்து மனம்திரும்பாமல், தங்களது குழந்தைகளது மனம்திரும்புதலைகுறித்து கவலைகொள்ளாமல் வெறும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அழுவதில் பிரயோஜனமில்லை என்பதையே இயேசு கிறிஸ்து இங்குக் குறிப்பிடுகின்றார்.
மேலும் அவர் அந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து, "பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்." ( லுூக்கா 23 : 31 ) நமது வாழ்க்கைப் பட்ட மரம்போல இருக்கையில் அதனைக்குறித்துக் கவலையற்று வாழ்ந்துகொண்டு கிறிஸ்துவின் பாடுகளைக்குறித்து கண்ணீர்விடுவதில் அர்த்தமில்லை.
அன்பானவர்களே, இதுவரை வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையானது போதும். இத்தகைய உணர்ச்சிவசப்படுவது ஒன்றுக்கும் உதவாது. நாம் மனம்திரும்பாமல்போனால் இறுதியில் அது நம்மை நரகத்துக்கு நேராகக் கொண்டுசென்றுவிடும். "ஆண்டவரே, ஆண்டவரே உமக்காக துக்கவெள்ளிக்கிழமைதோறும் அழுதேனல்லவா?" என்று நாம் கூறி தப்பிட முடியாது. ஏனெனில், மனம் திரும்பாமல் இருந்துகொண்டு வெறுமனே பிரசங்கங்களைக் கேட்பதோ தேவனுடைய ஆலயத்தில் நற்கருணை உட்கொள்வதோ கூட நம்மை பரலோகத்துக்கு உரிமையாளராக்காது என்று இயேசு கிறிஸ்து ஏற்கெனவே பின்வருமாறு தெளிவாகக் கூறியுள்ளார்:-
"அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."( லுூக்கா 13 : 26 , 27 )
அன்பானவர்களே, இந்த நாட்களில் நாம் அழுவது வெறும் உணர்ச்சிவசப்பட்டு, இயேசு கிறிஸ்துவின்மேல் பரிதாபப்பட்டு அழும் கண்ணீராக இல்லாமல், பாவத்துக்கு மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கும் கண்ணீராக இருக்கட்டும். அதனையே இயேசு கிறிஸ்து விரும்புவார்.
No comments:
Post a Comment