DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, October 26, 2025

🏫 வேதாகமத் தியானம் - அக்டோபர் 2025

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1698                                                                  ஆதவன் 01.10.2025 புதன்     

"ஜீவ அப்பம் நானே." ( யோவான் 6 : 48 )

தேவன் இஸ்ரவேல் மக்களை  பாலைவனத்தின்வழியே மோசேமூலம் கானானை நோக்கி வழிநடத்தியபோது அவர்களுக்குத் தேவையான உணவு கிடைப்பது அரிதாக இருந்தது. மட்டுமல்ல, இஸ்ரவேல் மக்கள் மோசேக்கு எதிராக முறுமுறுத்து தாங்கள் அடிமைகளாக இருந்த எகிப்துத் தேசத்தில் கிடைத்த உணவுகூட சிறப்பானதாக இருந்ததே, எனவே எகிப்துக்குத் திரும்பிச் செல்வதே நல்லது எனும் முடிவுக்கு வந்துவிட்டனர். அப்போது மோசே தேவனை நோக்கி வேண்டிட தேவன் வானத்திலிருந்து மன்னாவைப் பொழிந்து அவர்கள் பசியாறச் செய்தார். 

நமது வாழ்க்கையிலும் ஒருவேளை நாம் கிறிஸ்துவை அறியாமல் வாழும் மக்களின் செழிப்பான உலக வாழ்கையினைக் கண்டு மனம் தடுமாறலாம். கிறிஸ்துவை அறிந்தபின்னரும் எனது வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லையே என எண்ணலாம். இதற்குக் காரணம் உலக ஆசீர்வாதங்களையே போதிக்கும் போதகர்களின் போதனைகள் நம்மைக் குழப்புவதுதான்; கிறிஸ்துவிடம் வந்துவிட்டால் ஆசீர்வாதம் பொழியும் என மக்களை அவர்கள் தவறான போதனையில் வழிநடத்துவதுதான்.   

அன்பானவர்களே, நமது வாழ்க்கை  இந்த உலகத்தோடு முடிந்துபோகும் வாழ்க்கையல்ல, இந்த உலக வாழ்க்கைக்குப்பின் முடிவில்லாத நித்திய ஜீவன் எனும் நிலைவாழ்வு உள்ளது. அதனை வாழ்வில் பெறுவதே மெய்யான ஆசீர்வாதம். பரம கானானாகிய அந்த நிலைவாழ்வை அன்று மன்னாவை உட்கொண்ட இஸ்ரவேல் மக்கள் அனுபவிக்கவில்லை.   "உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே". ( யோவான் 6 : 49-50 ) என்கின்றார் இயேசு கிறிஸ்து.  எனவே, இதுதான் இயேசு அளிக்கும் ஆசீர்வாதம். 

இயேசு கிறிஸ்துக் கூறியச் செய்திகள்  அனைத்தும் ஆவிக்குரிய பொருள்கொள்ளக்கூடிய சத்தியங்கள். ஆனால் யூதர்கள் அவர் கூறியதன் ஆவிக்குரிய பொருளைப் புரிந்துகொள்ளவில்லை. "என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது." ( யோவான் 6 : 55 ) என்று இயேசு கூறியதை அவர்களால் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும்  முடியவில்லை. அவர்கள், "எப்படி நாம் ஒரு மனிதனின் இரத்தத்தைக் குடித்து சதையைத் தின்பது?" என்று உலகக் கண்ணோட்டத்தில் இயேசு கூறிய வார்த்தைகளைப் பார்த்தனர். 

எனவேதான் இயேசு அவர்கள் தெளிவடையவேண்டும் என்பதற்காக, "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது." ( யோவான் 6 : 63 ) என்று கூறுகின்றார். ஆனாலும் அவரைப் பின்பற்றிய பலர் இயேசு கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரைவிட்டுப் பின்வாங்கிப் போய்விட்டார்கள். "அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள்." ( யோவான் 6 : 66 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்து கூறிய சத்தியம் ஆவிக்குரிய சத்தியம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமது பாவங்களைப் போக்குவதற்கு உலகத்தில் மனிதனாகப் பிறந்து பாடுபட்டு மரித்து உயிர்த்தார் எனும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அவரது இரத்தத்தால் பாவங்கள் கழுவப்படும் அனுபவத்தைப் பெறுவதுதான் அவரை உண்பதும் அவரது இரத்தத்தைக் குடிப்பதும். ஆம், இப்படி "இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்." ( எபிரெயர் 10 : 10 ) 

இது பிதாவாகிய தேவனது திட்டம். "நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்." ( 1 பேதுரு 2 : 24 ) என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. இந்த இயேசுவை நாம் வாழ்வில் பெற்றுக்கொள்ளும்போது அவரை உண்கின்றோம் என்று பொருள். அப்படி நாம் ஜீவ அப்பமாகிய அவரை உண்ணும்போது மட்டுமே நமது ஆத்தும பசியும் தாகமும் அடங்கும். "ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்." ( யோவான் 6 : 35 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

இதனை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லையானால் நாமும் உலக ஆசீர்வாதத்தை மட்டுமே எதிர்பார்த்து அவரைவிட்டுப் பின்வாங்கியவர்களைப்போலவே இருப்போம். வனாந்தரத்தில் இஸ்ரவேலர் அன்று காணக்கூடிய மன்னாவை உண்டும் மரித்தார்கள்; காணாத மன்னாவாகிய கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு உண்ணும்போது நாம் என்றென்றும் மரிக்காமல் நிலைவாழ்வைக் கொண்டவர்களாக இருப்போம்; மெய்யான ஆசீர்வாதமும் பெறுவோம்.

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1699                                                                  ஆதவன் 02.10.2025 வியாழன்     
 
"பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை. நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்." ( ஏசாயா 38 : 18-19 )

துதித்தல் என்பது வெறுமனே நாம் ஆண்டவரைப் புகழ்வதல்ல, மாறாக நாம் துதிப்பதன்மூலம் நமது நன்றியுணர்ச்சியினை வெளிப்படுத்துகின்றோம். ஏசாயா தீர்க்கத்தரிசி தேவனைத் தரிசித்தபோது அவர் கண்ட காட்சியினை அவர், "சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்". ( ஏசாயா 6:2-3) என்று விளக்குகின்றார். 

நாமும்  கிறிஸ்துவை வாழ்வில் அறிந்துகொண்டோமானால் நம்மையறியாமல் எப்போதும் தேவனைத் துதிக்கும் துதி நம்முடைய நாவில் இருந்துகொண்டே இருக்கும். அது வலுக்கட்டாயமாக நாம் முயலுவதால் அல்ல; மாறாக எப்படி நம்மை அறியாமல் நாம் சுவாசித்துக்கொண்டிருக்கின்றோமோ அதுபோல நம்மை அறியாமலேயே நமது இருதயத்திலிருந்து தேவனை நோக்கி எழும்பும் நன்றி உணர்வாக அது வெளிப்படும்.  

இப்படி நாம் தேவனைத்  துதிக்கின்றவர்களாக வாழ்வோமானால் நாம் ஆவியில் உயிருள்ளவர்களாக இருக்கின்றோம் என்று பொருள். இல்லையானால் வெளிப்பார்வைக்கு உயிருள்ளவர்கள் என்று கருதப்பட்டாலும் தேவனது பார்வையில் நாம் உயிரில்லாதவர்களாகவே இருக்கின்றோம் என்று பொருள். இதனையே, "மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா".  ( சங்கீதம் 115 : 17-18) என்று வாசிக்கின்றோம்.

தேவனை வாழ்வில் அனுபவித்த சங்கீத ஆசீரியர், "அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி. நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன்". ( சங்கீதம் 146 : 1-2 ) என்று கூறுகின்றார். மேலும் "கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." ( சங்கீதம் 147 : 1 ) என்று கூறப்பட்டுள்ளது. 

மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்" என்று. அதாவது, தேவனை வாழ்வில் அறிந்தவர்கள் அவரைத் துதிப்பது மட்டுமல்ல, தங்கள் பிள்ளைகளுக்கும் தேவனது மகத்துவத்தைப்பற்றி எடுத்துச் சொல்பவர்களாக இருப்பார்கள். அவர்களது சந்ததி தேவனை அறிந்த சந்ததியாக இருக்கும். 

"சங்கீதங்களினாலும்  கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும்  ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,  நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்". (எபேசியர் 5:19-21) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

மட்டுமல்ல, நாம் எந்த வேலையைச் செய்தாலும் அந்த வேலைகளுக்கிடையே தேவனை நாம் துதிக்கிறவர்களாக இருக்கவேண்டியது அவசியம். "கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி; வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்" (கொலோசெயர் 3:16-17) என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படித் தேவனை நாம் துதிப்பதால் என்ன நடக்கின்றது? முதலாவது நாம் தேவ ஐக்கியத்தில் வளர்க்கின்றோம், பாவத்துக்கு விலகி வாழ்கின்றோம், தேவனுக்குச் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ நம்மால் முடிகின்றது, எல்லாவற்றுக்கும் மேலாக, துதிக்கும் தேவ மனிதனைச் சாத்தான் நெருங்குவதில்லை. துதியின் சங்கீதமாகிய சங்கீதம் 136 ஐ வாசித்துப்பார்த்தால் தேவ மனிதன் எப்படியெல்லாம் தேவனைத் துதித்து மகிமைப்படுத்த நமக்கு அறிவுறுத்துகின்றார் என்பதனை நாம் புரித்துக்கொள்ளலாம்.  தேவனைத் துதித்து நாம் உயிருள்ளவர்களாக வாழ்வோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1700                                                                  ஆதவன் 03.10.2025 வெள்ளி      

"கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது. " ( 2 நாளாகமம் 19 : 7 )

இந்த உலகத்தில் பாவ காரியங்கள் பெருகி வருவதற்கு முக்கியமான காரணம் கர்த்தருக்குப் பயப்படும் பயம் மனிதர்களிடம் இல்லாமல் போனதுதான்.  ஒரு மனிதன் தேவனை வாழ்வில் அறிந்துகொண்டான் என்றால் அவனிடம் கர்த்தருக்குப் பயப்படும் பயம் ஏற்படும். அவன் தீமையையும் பாவ காரியங்களையம் வெறுப்பவனாக இருப்பான். இதனையே வேதம்,  "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம் " ( நீதிமொழிகள் 8 : 13 ) என்று கூறுகின்றது. 

நாம் பொதுவாக மனிதர்களுக்குப் பயந்து சில காரியங்களை செய்கின்றோம் அல்லது சிலவற்றைச் செய்யாமல் தவிர்க்கின்றோம். இப்படி மனிதர்களுக்குப் பயப்படுவது ஒருவேளை குறுகியகால நன்மைகளை நமக்குத் தரலாம்.  ஆனால் பலவேளைகளில் மனிதர்களுக்குப் பயப்படும் பயம் பல பிரச்னைகளை உருவாக்கும். நாம் கர்த்தரை நம்பிச் செயல்படுவோமானால் அனைத்துக் காரியங்களிலும் நமக்கு வெற்றி உண்டு. ஆம், "மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்." ( நீதிமொழிகள் 29 : 25 )

நாம் கர்த்தருக்குப் பயப்படும் பயத்துடன் வாழ்வதே அவரை அன்புசெய்வதாகும். இப்படி நாம் அவரை அன்புசெய்து அவருக்குப் பயந்து வாழ்வோமானால் நமது வாழ்வில் பயம் அகன்றுபோகும். "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல." ( 1 யோவான்  4 : 18 ) என்று இயேசுவின் அன்புச்  சீடனான யோவான் கூறுகின்றார். 

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இஸ்ரவேல் மக்கள் முரட்டாட்டமுள்ள இருதயமுள்ளவர்களாக இருந்தனர். அவர்களுக்கு தேவனிடம் அன்பைவிட பயம்தான் அதிகமாக இருந்தது. அதனால் அந்த மக்கள் தன்னைப்பற்றும் பயத்துடன் வாழவேண்டும் என்பதற்காக தேவன் மலைமேல் எழுந்தருளினார்.  இதனை, "மோசே ஜனங்களை நோக்கி; பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான்." ( யாத்திராகமம் 20 : 20 ) என்று வாசிக்கின்றோம். 

ஆனால் புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நமக்குத் தேவன் பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார். அன்பின் ஆவியான அவரே நம்மைத் தேவ பாதையில் நடத்துகின்றார்.   "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது." ( ரோமர் 5 : 5 ) என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார். 

ஏனோதானோ என்று வாழ்ந்துவிட்டு நாம் இறுதியில் தேவனுடைய தீர்ப்புக்குத் தப்பிவிடலாம் என்று எண்ணிக்கொள்ளக்கூடாது என்று இன்றைய தியான வசனம் நம்மை எச்சரிக்கின்றது. இதனையே இந்தத்  தியான வசனத்தின் இறுதியில் நாம் வாசிக்கின்றோம், "எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது. "

அதாவது, நாம் கர்த்தருக்குப் பயப்படும் பயத்துடன் எச்சரிக்கையாயிருந்து நமது வாழ்க்கையினை வாழவேண்டும்.  மனிதர்களுக்கு கையூட்டுக் கொடுப்பதுபோல தேவனுக்கு நாம் கையூட்டுக் கொடுத்து நியாயத்தீர்ப்பு நாளில் தப்பிவிட முடியாது. மட்டுமல்ல, அவர் அநியாயத் தீர்ப்புச் செய்வதுமில்லை, முகதாட்சிணியம் பார்ப்பதுமில்லை. 

கர்த்தருக்குப் பயப்படும் பயத்துடன் வாழ்வோம், நமது பிள்ளைகளையும் அதுபோன்ற பயத்துடன் வாழப் பழக்குவோம். அதற்கு முதலாவதாக தேவனையுடைய வார்த்தைகள் நமக்குள் விதைக்கப்படவேண்டியது அவசியம். வேத வசனங்களை அன்றாடம் வாசித்துத் தியானிப்போம். அப்போதுதான்  கர்த்தருக்குப் பயப்படும் பயத்துடன் நாம் வாழமுடியும். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1701                                                                  ஆதவன் 04.10.2025 சனி 

"யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்." (1 கொரிந்தியர் 1:22-23)

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து சீடர்கள் மக்களுக்குப் போதித்தபோது  அவர்களுக்கு யூதர்களும் கிரேக்கர்களும் மிகப்பெரிய சவாலாக இருந்தனர்.  ஏனெனில், யூதர்கள் பெரிய அறிவாளிகளாக இருந்தனர். அவர்கள் எதனையும் உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை. போதுமான சரியான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே ஒரு காரியத்தை யூதர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.  கிரேக்கர்கள் ஞானம் மிக்கவர்கள். கிரேக்க ஞானிகளது சிந்தனை இன்றும் உலக மக்களால் புகழப்படுகின்றன. 

ஆனால் தேவனை மனித அறிவாலும் மனித ஞானத்தாலும் அறிந்துகொள்ளமுடியாது எனும் சத்தியத்தை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை.. ஒருவன் தன்னைத் தாழ்த்தி தனது பாவங்களை உணர்ந்து மனம்திரும்பினால் மட்டுமே தேவனை வாழ்வில் அறியமுடியும். ஆனால் இதற்கு மாறாக, யூதர்கள் தங்கள் அறிவாலும் கிரேக்கர்கள் தங்களது ஞானத்தாலும் தேவனை அறிய முயன்றனர். எனவேதான், யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள் ஆனால்  நாங்களோ இவர்களைப்பற்றி கவலைப்படவில்லை; மாறாக, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம் என்று கூறுகின்றார் பவுல். 

இயேசு கிறிஸ்துவைப்பற்றிய போதனைகள்  யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருந்தாலும் அந்த "ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்." (1 கொரிந்தியர் 1:27) என்கின்றார் அவர். "எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று".(1 கொரிந்தியர் 1:27) 

யூதர்களும் கிரேக்கர்களும் அற்பமாக, அறிவில்லாதவர்கள், பைத்தியக்காரர்கள்  என்று  எண்ணிய மக்களைத் தேவன் தனக்காகத் தெரிந்துகொண்டார். அன்று இயேசு கிறிஸ்துவையும் யூதர்கள் இப்படி அற்பமாகவே எண்ணிக்கொண்டனர். அவரைத் தச்சனின் மகன்தானே என்று எண்ணிக்கொண்டனர்; அவரையும் பைத்தியக்காரர் என்றுதான் கூறினர்.  எனவேதான் "அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள்."  (லூக்கா 11:16) அதாவது இவர் இறைமகன் என்றால் மற்றவர்களைவிட மேலானவர் என்பதனை ஏதாவது அற்புதத்தை வானத்தில் தெரியும்படிக் காண்பித்துத் தன்னை மெய்ப்பிக்கவேண்டும் என்று  விரும்பினர்.

ஆனால் இயேசு கிறிஸ்து, "இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை." (லூக்கா 11: 29) என்றார். அதாவது யோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்ததுபோல தானும் இந்தப் பூமியின் வயிற்றினுள் மூன்றுநாட்கள் இருப்பதே தான் இறைமகன் என்பதற்கு அடையாளம் என்று உவமையாகக் கூறினார். 

இன்றும் கிறிஸ்தவத்துக்கு எதிரிகள் வெளியிலல்ல,  கிறிஸ்தவ போர்வைக்குள்ளேயே இருக்கின்றனர். தங்களது தப்பறையான போதனைகளால் மக்களது விசுவாசத்தை இவர்கள் கெடுத்துக்கொண்டிருக்கின்றனர். ஆம், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலர்கூட நாம் பார்த்த யூதர்களைப்போலவும் கிரேக்கர்களைப்போலவும் தான் இருக்கின்றனர். அவர்கள் வேதாகம சத்தியங்களை உறுதியாக நம்புவதில்லை. இவர்கள் தங்களது படிப்பறிவினாலும், உலக ஞானத்தாலும் வேதாகம உண்மைகளை அறிய முயலுகின்றனர்; அதனைத் திரித்துப் பிரசங்கிக்கின்றனர்.  இதன் விளைவே விடுதலை இறையியல் எனும் தப்பறை சிந்தனை. 

இவர்களுக்கு  நாம் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிப்பது இடறலாயும் பைத்தியமாயும் இருக்கின்றது. இயேசு கிறிஸ்துவைச் சோதிக்கும்படி அவரிடம் அடையாளத்தைக் கேட்டதுபோல நாம் ஆவிக்குரிய செய்திகளைக் கூறும்போது நம்மிடம், "இப்படிப் பேசுகின்றாயே, எழுதுகின்றாயே உன்னால் ஏன் பவுல் அப்போஸ்தலர் செய்ததுபோல அற்புதம் செய்யமுடியவில்லை?" என இடக்கான கேள்வியைக் கேட்கின்றனர்.  

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து யூதருக்கும் கிரேக்கருக்கும் மட்டுமல்ல, இன்று இவர்களுக்கும் பைத்தியமாய் இருக்கிறார். இந்த அறிவால் இவர்கள் அப்பாவி மக்களை நரகத்துக்கு நேராக நடத்துகின்றார்கள். ஆனால், பவல் அப்போஸ்தலர் கூறியதுபோல ஒன்று மட்டும் உண்மையாக இருக்கின்றது:-   "சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது". (I கொரிந்தியர்1:18) இரட்சிக்கப்படுகின்ற நாம் தேவ பெலத்தோடே சிலுவையின் உபதேசத்தை உறுதியாகப் பற்றிக்கொள்வோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1702                                                                  ஆதவன் 05.10.2025 ஞாயிறு  

"கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்." ( எண்ணாகமம் 9 : 23 )

தங்களது ஆவிக்குரிய வாழ்வினைத்  தேவனுக்கேற்றவிதத்தில், அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து  ஆரம்பம் செய்யும் பலர் பிற்பாடு பிரச்சனைகள்,  உலக ஆசை,  இச்சை இவைகளுக்கு அடிமைகளாகி தேவனைவிட்டுப் பின்வாங்கிவிடுகின்றனர். இஸ்ரவேல் மக்களது வாழ்க்கையும்  இப்படித்தான் இருந்தது. தேவனது  கட்டளைகளின்படியே கீழ்ப்படிந்து வாழ்ந்தவர்கள் பிற்பாடு முமுறுக்கத் துவங்கி தேவனுக்குக் கோபமூட்டுபவர்களாக மாறிவிட்டனர். 

இன்றைய தியான வசனத்தில் நாம் இஸ்ரவேல் மக்களுடைய ஆரம்பகாலக்  கீழ்ப்படிதலைக் குறித்து வாசிக்கின்றோம். மோசே தேவனிடம் பேசி தேவன் கூறுவதை மக்களுக்கு அறிவித்து வந்தார். அவர்களும் அவர் சொல்வதற்குக் கீழ்ப்படிந்தார்கள். இப்படிக் கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள். ஆனால் இவை அனைத்தும் அவர்கள் மனப்பூர்வமாகச் செய்த செயலல்ல. காரணம் அவர்கள் மனம்  தேவனையல்ல; மாறாக, கானான் தேசத்துச் செழிப்பையே நோக்கியதாக இருந்ததால் இப்படித் தேவனுக்கு ஆரம்பத்தில் கீழ்ப்படிந்தார்கள்; அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் ஒரே நோக்கத்துக்காக இப்படிக் கீழ்ப்படிந்தார்கள்.  

எனவே, வழியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அவர்களிடம் அந்தக் கீழ்ப்படிதல் இல்லாமல் போயிற்று. "அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்." ( யாத்திராகமம் 15 : 24 )

இதுபோலவே, இறைச்சி உணவின்மேல் ஆசைகொண்டு  "அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள்." ( யாத்திராகமம் 16 : 3 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, நாம் உலகத் தேவைகளுக்காக தேவனை நாடி வாழ்வோமானால் இஸ்ரவேலரைப்போலவே இருப்போம். பலர் ஆரம்ப காலங்களில் ஆவிக்குரிய ஆராதனைகளில் கலந்துகொண்டு கைதட்டி ஆர்ப்பரித்து தேவனை மகிமைப்படுத்தி அவரது வார்த்தைகளைத் தியானித்து வாழ்ந்துவிட்டு, பிரச்சனைகளையோ துன்பங்களையோ காணும்போது இஸ்ரவேல் மக்களைப்போல முமுறுத்து தேவனுக்குக் கோபமூட்டுபவர்களாக மாறிவிடுகின்றனர். நாம் இப்படி இருக்கக் கூடாது என்று தேவன் அறிவுறுத்துகின்றார். 

தனது வார்த்தைகளைத் தள்ளி வாழ்பவர்களை தேவன் உடனேயே வெறுத்துத் தள்ளிவிடுபவரல்ல. ஆவியானவர்மூலம் பல்வேறு விதங்களில் அவர்களைத் தனக்கு நேராகத் திருப்ப தேவன் முயலுகின்றார். அவரது குரலுக்குச் செவிகொடுப்பது அவசியம். "ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்". ( எபிரெயர் 3 : 7-8 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

ஏதாவது விதத்தில் தேவனை வாழ்வில் அறிந்தவர்களாக நீங்கள் இருப்பீர்களென்றால் ஆரம்ப காலத்தில் அவர் குரலுக்குச் செவிகொடுத்ததுபோல எப்போதும் செவிகொடுப்பவர்களாக வாழ முயற்சியெடுங்கள். "நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்." ( எபிரெயர் 3 : 14 ) இல்லையானால் தேவனால் தள்ளப்பட்டு பரிதபிக்கக்கூடிய நிலைக்குச் சென்றுவிடுவோம்.  

எனவே அன்பானவர்களே, இஸ்ரவேலரின் ஆரம்ப காலப்  பயணத்தைப்போல எப்போதும் கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குங்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுங்கள். அப்போது கர்த்தரது ஆசீர்வாதம் என்றும் நம்மோடு இருக்கும். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1703                                                                  ஆதவன் 06.10.2025 திங்கள்   

"கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்." ( யாத்திராகமம் 14 : 14 )

நாம் சிறு கைக்குழந்தையாக  இருந்தபோது  நம்மால் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்தோம். அப்போது நமது அனைத்துத் தேவைகளையும் நமது தாய்தான் செய்தார்கள். மட்டுமல்ல, நமது தகப்பனும், நெருங்கிய உறவினர்களும்  நமக்கான அனைத்துப் பணிவிடைகளையும் செய்தனர்; நாம் சும்மா இருந்தோம்.  இதுபோலவே நாம் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது நமக்கான அனைத்தையும் தேவனே செய்து முடிப்பார்.

இப்படிச் சொல்வதால், நாம் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கவேண்டுமென்று பொருளல்ல. மாறாக, நாம் நமது கடமைகளைச் செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது, நம்மால் முடியாத காரியங்களைக்   கர்த்தர் நமக்காகச் செய்வார். ஒருவேளை நம்மால் எதிர்த்துப் போராடமுடியாத நோயாக இருக்கலாம், பொருளாதார நெருக்கடியாக இருக்கலாம், நம்மை எதிர்த்துச் செயல்படும் எதிரிகளின் செயல்பாடாக இருக்கலாம் இவை அனைத்திலும் கர்த்தர் நமக்காக யுத்தம்பண்ணுவார்; நாம் சும்மாயிருப்போம்.

வேதத்தில் நாம் "கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர் அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்." ( நாகூம் 1 : 2 ) என்று வாசிக்கின்றோம். அவர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர். இங்கு "தம்முடைய சத்துருக்களுக்கு" என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அதாவது கர்த்தரது பிள்ளைகளுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் அவரது சத்துருக்கள். அவர்கள்மேல் அவர் கோபம் கொள்கின்றார். 

பழைய ஏற்பாட்டில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டில்கூட  நாம் "உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே." ( 2 தெசலோனிக்கேயர் 1 : 6 ) என்று வாசிக்கின்றோம். தேவனுடைய பிள்ளைகளுக்கு உபத்திரவம் கொடுப்பவர்களை அவர் உபாத்திரவப்படுத்துகின்றார்; உபத்திரவப்படுகின்ற தனது பிள்ளைகளுக்கு   இளைப்பாறுதலை  அளிக்கின்றார்.

கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வதால் நாம் நமக்கு எதிராகச் செயல்படுபவர்களை எதிர்த்துப் போராடவேண்டியதில்லை; அவர்களைப் பழிவாங்கும் செயல்களிலும் நாம் ஈடுபடக்கூடாது என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. ஆம், "பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம்." ( எபிரெயர் 10 : 30 )

கர்த்தர் நமக்காக யுத்தம் செய்யவேண்டுமானால் நாம் இந்தத் தியானத்தின் ஆரம்பத்தில் பார்த்ததுபோல நமது குணங்கள் குழந்தைத்தனமாக மாறவேண்டும்; தேவ வார்தைகளுக்கு நாம்  கீழ்ப்படியவேண்டும். ஆம், "அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு." ( ரோமர் 12 : 20 - 21 )

இப்படித் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்வோமானால்,  "கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்." என்கிறார் தேவனாகிய கர்த்தர். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1704                                                                  ஆதவன் 07.10.2025 செவ்வாய்    

"விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்." (கொலோசெயர் 3:5)

தேவன் அருவெறுக்கும் இரண்டு முக்கிய பாவங்கள் விபச்சாரம் மற்றும் விக்கிரக ஆராதனை. நம்முடைய தேவன் பரிசுத்தர். அவரை நாம் அறியவும், அடையவும் வேண்டுமானால் நாமும் அதற்கேற்ற பரிசுத்தமுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். ஆனால் உலகமானது இந்த இரண்டு பாவங்களில்தான் சிக்கிச்  சீரழிழிந்து கொண்டிருக்கின்றது. "யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே." ( எபிரெயர் 12 : 14 ) என்கிறார் எபிரெய நிருப ஆசிரியர். 

மேலும், அப்போஸ்தலரான பவுல், "விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே." ( எபேசியர் 5 : 5 ) என்று நம்மை அறிவுறுத்துகின்றார். 

நாம் இந்தப் பாவங்களிலிருந்து விடுபடவேண்டுமானால், "இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இப்படிக் கூறுவதால் பாவத்தைத் தூண்டும் உடல் உறுப்புக்களை நாம் ஒரேயடியாக அழித்துவிடவேண்டும் என்று பொருளல்ல, மாறாக அந்தப் பாவ உறுப்புக்களைக் கிறிஸ்துவோடுகூடச் சிலுவையில் அறைந்துவிடுங்கள் என்று பொருள். 

இந்தப் பாவங்களுக்கு நேராக நம்மை இழுத்துச் செல்வது இச்சை எனும் பாவம். ஏசா இச்சையால் இழுக்கப்பட்டு ஒருவேளைக் கூழுக்காக தனது சேஷ்டபுத்திரபாகத்தை யாக்கோபுக்கு விற்றுப்போட்டான். அதுபோல,  "ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்." ( எபிரெயர் 12 : 16 ) என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

ஆம் அன்பானவர்களே, அன்று ஏதேனில் முதல் மனிதன் கண்களின் இச்சையால் இழுப்புண்டுதான் பாவத்தில் சிக்கினான். எனவே நாம் இச்சை எனும் பாவத்துக்கு விலகும்போது மட்டுமே இத்தகைய பாவங்களிலிருந்து விடுதலை பெறமுடியும்.  "அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்." ( யாக்கோபு 1 : 14-15 )

நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து இதனால்தான்,  "உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்." ( மத்தேயு 18 : 9 ) என்று அறிவுறுத்தினார். 

நமது சுய பலத்தினால் இந்தப் பாவங்களிலிருந்து நாம் விடுபடமுடியாது; கர்த்தரின் ஆவியானவரே நம்மை விடுவிக்கமுடியும். "கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.' ( 2 கொரிந்தியர் 3 : 17 ) என்று நாம் வாசிக்கவில்லையா? எனவே, இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற நமது அவயவங்களை ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம், அப்போது மட்டுமே நாம் இவைகளிலிருந்து முழு விடுதலை பெற முடியும்; பரிசுத்தமாக வாழமுடியும்.

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1705                                                                  ஆதவன் 08.10.2025 புதன்     

"அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்." ( யாக்கோபு 1 : 14 - 15 )

இச்சை என்பது நமக்குச் சொந்தமில்லாத  ஒரு பொருள்மீதோ ஒரு நபர்மீதோ நாம் அளவுக்கதிக ஆசைகொண்டு அலைவதைக் குறிக்கின்றது.   உலகினில் இன்று நடைபெறும் குற்றச் செயல்பாடுகளில் 90% க்கும் மேலானவை இச்சை எனும் தவறான ஆசை காரணமாகவே நடைபெறுகின்றன. கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் தவிர இன்று நடைபெறக்கூடிய digital குற்றச் செயல்பாடுகளுக்கும் இச்சையே அடிப்படைக் காரணமாக இருக்கின்றது.  

பத்துக் கட்டளைகளின் இறுதிக் கட்டளையாக தேவன் இதனைக் கொடுத்துள்ளார். "பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக." ( யாத்திராகமம் 20 : 17 ) என்று வாசிக்கின்றோம்.

நாம் தவறாக ஆசைப்படும் காரியத்தை அடைகின்றோமா இல்லையா என்பது முக்கியமல்ல, மாறாக அப்படி ஆசைப்படுவதே பாவம் என்று கூறப்பட்டுள்ளது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே." (ரோமர் 7:7) என்று கூறுகின்றார். "ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவையல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்." ( 1 யோவான்  2 : 16 )

இச்சை ஏன் அல்லது எப்படிப் பாவமாக மாறுகின்றது என்பதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம். அதாவது, இச்சை நம்மைச் சோதனையில் சிக்கவைக்கின்றது. பின்பு அது கர்ப்பந்தரித்து வளர்ந்து  பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். ஆதியில் ஏதேனில் ஏவாள் இப்படித்தான் இச்சையில் சிக்கினாள். இதனை நாம், "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்." ( ஆதியாகமம் 3 : 6 ) என்று வாசிக்கின்றோம். 

இப்படி மனிதர்கள் மற்றவர்களிடம் இருக்கும் பொருட்கள்மீது இச்சைகொண்டு அலைவதற்குக் காரணம் அடிப்படை அன்பு இல்லாததுதான். இயேசு கிறிஸ்து மொத்தப் பத்துக் கட்டளைகளையும் இரண்டு கட்டளைகளுக்குள் அடக்கிவிட்டார்.  அதில் இரண்டாம் கட்டளையாக, "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக." ( மத்தேயு 22 : 39 ) என்றார். தன்னைத்தான் நேசிப்பதுபோல மற்றவர்களையும் நேசிக்கும்போதுதான் இச்சை நம்மைவிட்டு அகலும். 

தேவன் மிகவும் அருவருக்கும் பாவங்களான விபச்சாரம், பண ஆசையான விக்கிரக ஆராதனை இவைகளுக்கு அடிப்படை இச்சையே.  எனவே, இன்றைய தியான வசனம் எச்சரிப்பதை கருத்தில் கொள்வோம். இச்சை எனும் பாவத்தில் விழுந்து பின்பு அதனைக் கர்ப்பந்தரித்து, அது பூரணமாகி  மரணத்தை நமக்கு ஏற்படுத்துமுன் எச்சரிக்கையுடனிருந்து நம்மைக் காத்துக்கொள்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1706                                                                  ஆதவன் 09.10.2025 வியாழன்      

"நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்." ( தானியேல் 3 : 17 )

நம்முடைய தேவன் வல்லமையும் பராக்கிரமும் மிக்கவர். அவரது வல்லமை நம்மைக் காக்கும்போது எந்த அதிகாரமும் பிரச்னையும் நம்மை அழித்துவிடமுடியாது. இன்றைய தியான வசனத்தில் இதனையே,  "எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்" என்று கூறப்பட்டுள்ளது. எரிகின்ற அக்கினிபோன்ற பிரச்சனைகளும் மாகா பெரிய ராஜா போன்ற அதிகாரமுள்ளவர்களும் நம்மை எதிர்க்க முடியாமல் அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்து  விடுவிக்கின்றார்.  

சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் தங்களது உயிரே போனாலும் நேபுகாத்நேச்சார் நிறுத்திய பொற்சிலையை வணங்கமாட்டோம் என்று உறுதியாகச் சொல்லிவிட்டனர்; ராஜாவின் கட்டளைக்குப் பயந்து அவர்கள் தேவனை மறுதலிக்கவில்லை. ராஜா எங்களை நெருப்பில் தூக்கிப் போட்டாலும் நாங்கள் அவர் நிறுவியுள்ள பொற்சிலையை வணக்கமாட்டோம் என்று வைராக்கியமாகக் கூறினர். "நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்." என்று தேவன்மேலுள்ள தங்களது விசுவாசத்தை அறிக்கையிட்டனர். 

அப்படியே தேவன் அவர்களது விசுவாசத்தை கனம்பண்ணினார். அவர்கள் அக்கினிச் சூளையிலிருந்து தேவனால் அதிசயமாகக் காப்பாற்றப்பட்டனர். "அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்." ( தானியேல் 3 : 28 ) என்று அறிக்கையிட்டான்.  அதாவது கர்த்தரை அறியாத அவன் "சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்கின்றான். 

இதுபோலவே நாம் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலரான பேதுரு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதை வாசிக்கின்றோம். ஏரோது ராஜாவினால் கொலைசெய்வதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேதுரு தேவனால் அதிசயமாக விடுவிக்கப்பட்டார். (அப்போஸ்தலர்பணி  12:1-10) 

கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்டுச் சிறைச்சாலையில் அடைபட்டிருந்த பவுலும் சீலாவும் தேவனால் அதிசயமாக விடுவிக்கப்பட்டதையும் நாம், "நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 16 : 25-26 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கும் நம்முடையதேவன் தன்னை நம்புபவர்களுக்கும் தனக்குப் பயந்த வாழ்க்கை வாழ்பவர்களுக்கும் உயர்ந்த அடைக்கலாமாக இருந்து அவர்களை விடுவிக்கின்றார். "கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்" (சங்கீதம் 34:7)

நமக்கு எதிராகச் செயல்படும் எந்த அதிகாரத்துக்கும், நமக்கு நேரிடும் எந்தப் பிரச்சனைகளுக்கும் நாம் மனம் மடிவடைந்திடாமல் நமது விசுவாசத்தை அறிக்கையிட்டு உறுதியாக இருப்போம்.  ஆம், "அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். (2 சாமுவேல் 22:49) என்று கூறுவோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1707                                                                  ஆதவன் 10.10.2025 வெள்ளி  

"நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்." ( சங்கீதம் 34 : 18 )

நொறுங்குண்ட இருதயம் என்பது வாழ்க்கையில் எந்த நம்பிக்கையுமற்ற நிலையிலிருக்கும் மக்களது இருதயம். ஏதாவது காரணத்தால் இந்த இருதய நொறுக்குதல் ஒருவருக்கு ஏற்பட்டிருக்கலாம். நல்ல ஒரு படிப்புப் பின்னணி இருந்தும் படிப்புக்கேற்ற வேலையில்லாத நிலையாக இருக்கலாம், மருத்துவர்களால் கைவிடப்பட்ட கொடிய நோயாக இருக்கலாம், அனைத்துச் செல்வங்களையும் சொத்துக்களையும் இழக்கக்கூடிய மிகப்பெரிய கடன் பிரச்சனையாக இருக்கலாம், குடும்பத்தினரால் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலையாக இருக்கலாம்  அல்லது திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தபின்னரும் ஒரு குழந்தைபாக்கியம் இல்லாத நிலையாக இருக்கலாம். இத்தகைய நிலைமைகள் மனிதர்களது இருதயத்தை நொறுங்கச் செய்துவிடும். 

ஆனால் பலரும் இத்தகையச் சூழ்நிலை ஏற்படும்போது விசுவாசத்தில் தளர்ச்சியடைந்து பல்வேறு மாற்று தெய்வ வழிபாடுகளையோ, ஜோசியம் பார்த்தல் அல்லது ஜாதகம் கணித்தல் போன்ற வழிகளையோ நாடுகின்றனர். தற்காலிக மன அமைதிக்காக போதைப்பொருட்களை நாடுகின்றனர்.  மேலும் சிலர் தற்கொலை எனும் விபரீத முடிவினை எடுக்கின்றனர்.  ஆனால் இத்தகைய சூழ்நிலைகளில் தேவனை நோக்கித் திரும்புபவர்கள் வெகுசிலர்தான்.  அன்பானவர்களே, "தேவனுக்கேற்கும் பலிகள்   நொறுங்குண்ட  ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்".  சங்கீதம் 51:17 என்று நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். 

இந்த அண்டசராசரங்களையும் உருவாக்கியவர் அவர். உடைந்த உள்ளதோடு அந்தத் தேவனை நாம் நோக்கிப்பார்க்கும்போது அவரும் நம்மை நோக்கிப் பார்க்கின்றார்; நமக்கு ஆறுதலும் விடுதலையும் தருகின்றார். ஆம், "என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்." ( ஏசாயா 66 : 2 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். அதாவது எல்லாவற்றையும், எல்லோரையும் நான்தான் உருவாக்கினேன் என்றாலும் ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன் என்கின்றார்.

நோயுற்ற ஒருவன் தனது நோய்  தீரவேண்டுமானால் மருத்துவரிடம் வரவேண்டியது அவசியம். மருத்துவரிடம் வந்து அவர் தரும் மருத்துவ சிகிர்சைகளுக்கு உடன்பட்டு, அவரது ஆலோசனைகளுக்குத் தன்னைக்  கையளிக்கும்போதுதான்  அவன் நோயிலிருந்து விடுதலை பெறமுடியும். எனவேதான் பரம வைத்தியரான இயேசு இருகரம் நீட்டி அனைவரையும் அழைக்கின்றார், "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." ( மத்தேயு 11 : 28 ) என்று. 

அவரிடம் வருவது மட்டுமல்ல, அவரது கட்டளைகளாகிய நுகத்தை நாம் ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படியவேண்டியது அவசியம். அவரது கட்டளைகள் நமது பிரச்சனைகளைவிட பாரமானவைகள் அல்ல. எனவேதான் இயேசு கூறினார், "நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது." ( மத்தேயு 11 : 29- 30 )

எசேக்கியா ராஜா நோயிலிருந்து சுகம்பெற இருதயம் நொறுங்கி கண்ணீரோடு ஜெபித்தார்.   "உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்" (2 இராஜாக்கள் 20:5) என்றுகூறி தேவன் அவரைக் குணமாக்கினார்.  இதுபோலவே,  பரிசேயன் மற்றும் ஆயக்காரன் இருவரும் தேவனிடம் ஜெபித்தார்கள். இருதயம் நொறுங்கி ஜெபித்த  "ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்." ( லுூக்கா 18 : 13 ) இவனே நீதிமானாக்கப்பட்டான் என்கிறார் இயேசு.

நமது எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நாம் தேவனிடம் வரும்போது மேம்போக்காக ஜெபிக்காமல் நமது ஜெபத்தை அவர் கேட்கின்றார், நிச்சயமாக எனது ஜெபத்துக்குப் பதில் தருவார் எனும் எண்ணத்தோடு இருதயத்தின் ஆழத்திலிருந்து ஊக்கமாக ஜெபிப்போம்; குழந்தையில்லாமல் தவித்த அன்னாள் ஜெபித்ததைப்போல நமது  இருதயத்தை தேவ சமூகத்தில் ஊற்றிவிடுவோம். (1 சாமுவேல் 1;15) நிச்சயமாக நமது ஜெபத்துக்கு அவர் பதிலளிப்பார். ஆம், நமது தேவன்,  "இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்." ( சங்கீதம் 147 : 3 )  


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1708                                                                  ஆதவன் 11.10.2025 சனி   

"தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 12 : 6 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது தெய்வீகத்தை யூத மக்களுக்கு இந்த வசனத்தின்மூலம் விளக்குகின்றார். ஆனால்,  யூதர்கள் அதனை  முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. யூதர்களுக்கு எருசலேம் ஆலயம் சிறப்புமிக்கது. அவர்கள் அந்த ஆலயத்தின் பிரமாண்டத்தைப் பார்த்து வியந்தனர்.  அந்த ஆலயத்துக்குச் செல்வதை மிகவும் விரும்பினர். இயேசு கிறிஸ்துவும் ஆலயத்துக்குச் சென்றார். ஆனால் அவர் அங்கு சென்ற நோக்கம் வேறு,  மனிதர்கள் இன்று ஆலயங்களுக்குச் செல்லும் நோக்கம் வேறு. இங்கு இயேசு கிறிஸ்துத் தன்னை தேவாலயத்திலும் பெரியவர் என்று கூறுகின்றார். 

இன்றும் பல கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டச் சில  ஆலயங்களில் மட்டும் ஏதோ வல்லமை இருப்பதாக எண்ணிக்கொண்டு பல்வேறு ஆலயங்களைத்தேடி ஓடுகின்றனர். ஆனால் ஆலயத்தைவிடப் பெரியவரான இயேசு கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளும் மனநிலையினை  விட்டுவிடுகின்றனர். அவரை நாம் தேடி ஓடவேண்டிய அவசியமில்லை, அவர் இங்கே, நமது அருகாமையில்தான் இருக்கின்றார். அவரை நாம் கண்டுகொள்வோமானால் அவர் நம்முள்ளே வந்து தங்கிட ஆர்வமுள்ளவராக இருக்கின்றார். அப்போது நாமே அவரது ஆலயமாகிவிடுவோம். எனவேதான், "தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

"ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது;" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48-49 ) ஆம், மனிதர்களாகிய நமது இதயம்தான் தேவனது ஆலயம். அவர் அதனுள் வந்து தங்கிடவே விரும்புகின்றார்.

நாம் தேவாலயங்களை நம்புகின்றோமா அல்லது தேவாலயத்தைவிடப் பெரியவரை நம்புகின்றோமா என்று நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். கிறிஸ்து நமக்குள் இருப்பது ஒரு இரகசியம் என்கிறார் அப்போஸ்தலரான பவுல். கிறிஸ்துவுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது மட்டுமே இந்த இரகசியம் நமக்குப் புரியும். "புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." ( கொலோசெயர் 1 : 27 ) இப்படி நமக்குள்ளே அவரைக் கண்டுகொள்வோமானால் வெளியிலே தேடி அலையமாட்டோம். 

மட்டுமல்ல, இன்று இதனைப் புரிந்துகொள்ளாததால் கிறிஸ்தவர்கள் பல ஆயிரம் லட்சம் என பணத்தை கோவில்களை மின்விளக்குகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கின்றனர். தங்களையோ பரிசுத்தமாய் அலங்கரிக்க மறந்துவிடுகின்றனர். "அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது." ( 1 பேதுரு 3 : 4 ) என்று அப்போஸ்தலரான பேதுரு நம்மை அறிவுறுத்தவில்லையா? தேவாலயத்தைவிடப் பெரியவரை நாம் நமக்குள் கண்டுகொள்வோமானால் வெளி அலங்கரிப்புகளுக்கல்ல, மாறாக அகஅலங்கரிப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றவர்களாக இருப்போம்.

இறுதியாக, அப்போஸ்தலரான யோவானுக்குத் தேவன் வெளிப்படுத்தியதை நாம் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- "பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது. அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 21-22 )

ஆம், தேவாலயத்தை அழகுபடுத்துவதைவிட  தேவாலயத்தைவிடப் பெரியவரான சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருக்குப் பிரியமாக நம்மை அழகுபடுத்துவோம்.  காரணம், அவர்  தேவாலயத்திலும் பெரியவர். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1709                                                                  ஆதவன் 12.10.2025 ஞாயிறு    

"யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். " ( மத்தேயு 12 : 41 )

நேற்றைய தியானத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவாலயத்தைவிடப் பெரியவர் என்று பார்த்தோம். இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்துத் தன்னை யோனாவிலும் பெரியவர் என்று கூறுகின்றார்.

யோனா தீர்க்கத்தரிசி கிறிஸ்துவுக்குச் சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்தவர். இஸ்ரவேல் மக்கள் யோனா தீர்க்கத்தரிசியின் வாழ்க்கைச் சரித்திரத்தை நன்கு அறிந்திருந்தனர். யோனாவை மிகப்பெரிய தீர்க்கத்தரிசி என எண்ணிக்கொண்டனர். எனவே, இயேசு யோனாவை உதாரணம் காட்டிப் பேசுகின்றார். 

யோனாவைவிட இயேசு என்னென்ன விதத்தில் பெரியவர் என்று பார்ப்போமானால் இயேசு கூறியதன் பொருளை நாம் புரிந்துகொள்ள முடியும். முதலாவது, யோனா தேவனது அழைப்பைப் புறக்கணித்து ஓடிய சாதாரண மனிதன். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ தேவனுடைய வார்த்தை; அவரது ஒரே பேறான மகன் (யோவான் 1;14). பாவமில்லாத தலைமைக் குரு (எபிரெயர் 4:15)

யோனா, தேவனுக்குக் கீழ்ப்படியாமல் தப்பி ஓடியவர்; ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ சிலுவையின் மரணம்வரை பிதாவுக்குக் கீழ்ப்படிந்து நடந்தவர் (பிலிப்பியர் 2;8)

யோனா தனக்குத் தேவன் அளித்தச் செய்தியை மக்களுக்கு வெளிப்படுத்தியவர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ, தானே தேவனானதால் அதிகாரத்தோடு போதித்தவர் (மத்தேயு 7:28-29)

யோனா, மரணத்துக்கு அடையாளமாக மூன்றுநாள் மீனின் வயிற்றிலிருந்துவிட்டு வெளிவந்தவர்; இயேசு கிறிஸ்துவோ உண்மையாகவே மரணத்தை அனுபவித்து உயிர்த்து வெளிவந்தவர். 

யோனா, பாவத்துக்கு மனம்திரும்பவும் இல்லையானால் தேவன் அளிக்கும் தீர்ப்பு  உண்டு என்றும் பிரசாங்கத்தார்; நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனம் திரும்பும்போது உண்டாகும் பாவ மன்னிப்பு, மற்றும் மறுபடி பிறக்கும் அனுபவம் இவைகளைக்குறித்து பிரசங்கித்தார்; அந்த அனுபவங்களை மக்களுக்கு அளித்தார். 

யோனா, நினிவே நகருக்கு மட்டும் தேவனது செய்தியினைக் கொடுத்தார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ அனைத்து உலகத்தின் இரட்சகராக இருக்கின்றார். 

மேலும், நினிவே மக்களின் மனந்திரும்புதல் தற்காலிகமானது; அந்த நகரம் பின்னர் விழுந்தது (நாகூம் 3:1-7) ஆனால், இயேசு “தம்மைக் கேட்கிற எல்லாருக்கும்” நித்திய இரட்சிப்பை அளிக்கிறார் (எபிரெயர் 5:9).

தம்மை “யோனாவை விடப் பெரியவர்” என்று அறிவிப்பதன் மூலம், இயேசு தம்மையே வாக்களிக்கப்பட்ட மேசியா என்று அறிவித்தார்; ஆனால் பரிசேயர்கள் கேட்ட புதிய அடையாளத்தை அவர்களுக்கு அவர் கொடுக்கவில்லை.

ஆனால் இன்றும் பல கிறிஸ்தவர்கள் பரிதபிக்கத்தக்க விதத்தில் கிறிஸ்துவைவிட மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்றனர்.  எல்லா இறைவாக்கினர்களையும்விட, எல்லாப் புனிதர்களையும்விட இயேசு கிறிஸ்தவர் பெரியவர் என்பதனை உணர்ந்து அறிக்கையிட்டு அந்தச் சத்தியத்துக்குக் கீழ்ப்படியும்போதுதான் நாம் வாழ்வில் இரட்சிப்பு அனுபவத்தைப் பெறமுடியும். 

"அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்?" ( எபிரெயர் 2 : 4 )


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1710                                                                  ஆதவன் 13.10.2025 திங்கள்     

"தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்." ( மத்தேயு 12 : 42 )

தாவீது ராஜாவின் மகன் சாலமோன் இஸ்ரவேலில் மிகப்பெரிய அரசனாக இருந்தார். எருசலேம் ஆலயத்தைக் கட்டியவர் இந்த சாலமோன் ராஜாதான். தேவன் இரண்டுமுறை சாலமோனுக்குத் தரிசனமாகி அவருக்குத் தன்னை வெளிப்படுத்தினார். நீ விரும்புவதைக் கேள் என்று தேவன் கூறியபோது சாலொமோன் தேவனிடம் ஞானத்தைக் கேட்டார். இதனால் மகிழ்ந்த தேவன் சாலமோனுக்கு ஞானத்தையும் அவன் கேட்காத செல்வத்தையும் மிகுதியாகக் கொடுத்தார். 

"ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை." (1 இராஜாக்கள் 10:21) "சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக்குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்". ( 1 இராஜாக்கள் 4 : 26 ) "தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும்பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது." ( 1 இராஜாக்கள் 4 : 29, 30 )

இத்தனை ஆசீர்வாதங்களை தேவன் அவனுக்கு அளித்திருந்தாலும்,  ஆரம்பத்தில் தேவனுக்கு ஏற்புடையவனாய் வாழ்ந்த அவன் தனது சிற்றின்பப் பெண்ணாசையால் அழிந்தான். ஆயிரம் வைப்பாட்டிகளுடன் வாழ்வை வேசித்தனமாகச் செலவழித்தான் "அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்." ( 1 இராஜாக்கள் 11 : 3 ) என்று வாசிக்கின்றோம். 

ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ தேவனாக இருந்தவர். அற்பமான மனிதனாகிய சாலமோனைப் போன்றவரல்ல. அவர் தேவனுக்கு நிகராக இருந்தவர். தேவ குமாரனாக இருந்தவர். ஆனாலும் சாலமோனைப்போல பகட்டாக வாழவில்லை. 

"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், . தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். (பிலிப்பியர் 2:26-10)

ஆம் அன்பானவர்களே, இன்று  சாலமோனைப்போல மிகுதியான செல்வமும் ஞானமும் நமக்கு இருந்தாலும் சாலமோனிலும் பெரியவரான இயேசு கிறிஸ்துவை வாழ்வில் அறியாதவர்களாக இருப்போமானால் அதனால் எந்தப்  பயனுமில்லை. அத்தகைய வாழ்வு இறுதியில் சாலமோனின் வாழ்வைப்போலவே இருக்கும். எனவே, கிறிஸ்துவை நமது இருதயத்தில் வரவழைப்போம். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு பாவமன்னிப்பை வேண்டுவோம். சாலமோனைவிடப் பெரியவரான அவர் நம்மை ஆட்சிசெய்ய நம்மை அவருக்கு ஒப்படைப்போம். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1711                                                                  ஆதவன் 14.10.2025 செவ்வாய் 

"வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்; அதுபோல மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார்." ( எபிரெயர் 3 : 3 )

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவாலயத்தைவிடப் பெரியவர், யோனாவைவிடப் பெரியவர், சாலமோனைவிடப் பெரியவர் என்று கடந்த நாட்களில் தியானித்தோம். இன்றைய தியான வசனம் கூறுகின்றது அவர் மோசேயைவிட அதிக மகிமைக்குரியவர் என்று. 

இஸ்ரவேலரின் சரித்திரத்தில் மோசேக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை மீட்டு, அவர்களுக்குத் தேவன் அளித்த வாக்குத்தத்த நாடான கானானுக்கு அவர்களை  வழிநடத்தியவர் மோசே. "இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 36 ) 

இப்படி தேவனுக்கு முற்றிலும் ஏற்புடையவராக வாழ்ந்த மோசே ஒரு சிறிய காரியத்தில் தேவனுக்குக் கீழ்படியாமல்போனதால் அவரால் கானான் நாட்டிற்குள் நுழைய முடியவில்லை. ஆனால் முற்றிலும் தேவனுக்குக் கீழ்படிந்திருந்த இயேசு கிறிஸ்துவோ பரம கானானுக்குள் நுழைந்து நமக்காகப் பிதாவிடம் பரிந்துபேசக்கூடிய நிலையினை அடைந்தார். 

மோசே தேவனுக்கு உண்மையுள்ளவராய் இருந்தார். தேவனை முகமுகமாய்க் காணும் பேறுபெற்றார். ஆனால் அவர் தேவனுக்கு ஊழியக்காரனாகவே இருந்தார். நமது வீடுகளில் வேலைக்கு பணி ஆட்களை அமர்த்தும்போது அவர்களில் சிலர் மிகுந்த உண்மையுள்ளவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் இருப்பதுண்டு. அப்படியே மோசே தேவனுக்கு உண்மையுள்ளவராக இருந்தார். "ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்." ( எபிரெயர் 3 : 4. 5 ) என்று வாசிக்கின்றோம். 

ஒரு வீட்டில் பணி செய்யும் வேலைக்காரன் எவ்வளவுதான் உண்மையும் நேர்மையுமுள்ளவனாக இருந்தாலும் அவனைவிட  அந்த வீட்டு உரிமையாளரின் மகன் அதிக மதிப்புமிக்கவன். இதுபோல இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன். எனவே அவர் மோசேயைவிட மேலானவர். "கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம்." ( எபிரெயர் 3 : 6 ) அவர் வீட்டிற்கு மேலான குமாரனாக இருந்து நம்மை நடத்துவார். 

எனவே அன்பானவர்களே, மோசே மட்டுமல்ல, எந்த பரிசுத்தவானாக இருந்தாலும் அவர்கள் தேவனது பணியாளர்களே. நாம் பணியாளர்களையல்ல, வீட்டுக்கு உரிமையுள்ளவரையே பற்றிக்கொள்ளவேண்டும். அப்போதுமட்டுமே நாம் நித்தியஜீவனை அடைந்திட முடியும். "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்." ( யோவான் 14 : 2,3 ) என்று அவர் நமக்கு வாக்களித்துள்ளாரே!

வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்; வீட்டை உண்டுபண்ணினவரையே நோக்கிப்பார்ப்போம். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1712                                                                  ஆதவன் 15.10.2025 புதன்  

"எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக..," ( எபேசியர் 1: 20)

தேவாலயத்தைவிடவும், யோனா, சாலமோன், மோசே இவர்களைவிடவும் மேலானவரான இயேசு கிறிஸ்து எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் எல்லாப் பெயருக்கும் மேலாய் இயேசு கிறிஸ்துவின் பெயர் உயர்ந்ததாக உள்ளது.  

உலகில் பல்வேறு அதிகார அமைப்புக்கள் உள்ளன. சில நாடுகள் தாங்கள்தான் உலகையே ஆளுவதாக எண்ணிக்கொண்டு  பல்வேறு சட்டதிட்டங்களாலும் கொள்கைகளாலும் உலக நாடுகளை பயமுறுத்திக்கொண்டிருக்கின்றன. சில அரசியல் தலைவர்கள் தாங்கள் வானத்தின் அளவுக்கு அதிகாரம் படைத்தவர்கள் என்று எண்ணிக்கொண்டு வாழ்கின்றனர். ஆனால் தேவன் நினைத்தால் ஒரேநொடியில் தாங்கள் அழிந்துபோவோம் என்பதனை உணராமல் இருக்கின்றனர். 

இன்றைய தியான வசனம் கூறுகின்றது, இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் எல்லா பெயருக்கும் மேலான பெயரை இயேசு கிறிஸ்து பெற்றுள்ளார் என்று. "இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்". ( பிலிப்பியர் 2: 10, 11) என்று நாம் வாசிக்கின்றோம். 
 
பிசாசுகளும் அவரது வல்லமையினை அறிந்திருந்தன. பிசாசு பிடித்த மனிதன், "இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்." ( மாற்கு 5: 7) "பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டன." ( லுூக்கா 4: 41) என்று வாசிக்கின்றோம். ஆனால் யூத பரிசேயர்கள் அவரை அறியவில்லை; அவரது வல்லமையினை உணரவில்லை. அவர்கள், "இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்." ( மத்தேயு 12: 24)

அன்பானவர்களே, நாமும் கிறிஸ்துவின் வல்லமையை முழுவதும் நம்பவில்லையானால் யூத பரிசேயர்களைப்போலவே இருப்போம். அவரது வல்லமையினை நாம் உணர்ந்திருந்தோமானால் அவர் பூமியில் வாழ்ந்தபோது செய்ததுபோன்ற அற்புதங்களை நமது வாழ்வில் அவர் இப்போதும்  செய்ய வல்லவர் என்பதனையும் விசுவாசிப்போம்; அவர் நமது பாவங்களை மன்னிப்பவர், மீண்டும் நாம் பாவத்தில் விழாதபடிக்கு நம்மை அவரால் பாதுகாக்க முடியும் என்பதனையும் விசுவாசிப்போம். 

ஒரு நாட்டில் பல்வேறு அரசுத் துறைகள் செயல்படுகின்றன. ஒரு நாட்டின் பிரதமர் அல்லது அதிபருக்கு அந்த எல்லாத் துறைகள் மேலும் அதிகாரம் உண்டு. அவர் சொல்வதற்கு அந்தத் துறையினர் கீழ்ப்படிவார்கள். அன்பானவர்களே, இந்தப் பூமியிலுள்ள ஒரு சிறிய நாட்டின் பிரதமர் அல்லது அதிபருக்கே இத்தகைய அதிகாரம் இருக்குமானால்  இந்த சர்வ லோகத்தையும் படைத்து ஆளும் தேவாதி தேவனுக்கு எத்தனைப் பெரிய அதிகாரம் இருக்கும்!

எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையிலும்  மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் அவரையே வாழ்வில் பற்றிக்கொள்வோம். "எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்." (சங்கீதம் 91:9-12)

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1713                                                                  ஆதவன் 16.10.2025 வியாழன்   

"நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது." ( 1 யோவான்  1 : 3 )

ஐக்கியம் என்பது அன்பான உறவினைக் குறிக்கின்றது. வெறுமனே சேர்ந்து இருப்பது அல்ல, மாறாக சேர்ந்து இருந்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழும் வாழ்க்கையினையே ஐக்கியம் என்கின்றோம். சில குடும்பங்களில் எல்லோரும் சேர்ந்து இருந்தாலும் அவர்களுக்குள் சரியான உறவு இருப்பதில்லை. பத்து பதினைந்து ஆண்டுகள் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தும் ஒருவருக்கொருவர் பேசாத கணவன் மனைவிகள் உள்ள குடும்பங்கள் பல உண்டு. அதாவது வெளிப்பார்வைக்கு அவர்கள் ஒரே குடும்பம்; ஆனால் அவர்களுக்குள் ஐக்கியம் இல்லை. 

தேவன் தனது சபைகளும் விசுவாசிகளுக்குள் ஐக்கியதோடு இருக்கவேண்டுமென்று விரும்புகின்றார். சேர்ந்து ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்வதல்ல; மாறாக, விசுவாசிகளுக்குள் ஒற்றுமையும் அன்புறவும் அவசியம். பல சபைகளில் சேர்ந்து பாடி ஆராதித்து வந்தாலும் இரண்டு அல்லது மூன்று கோஷ்டிகளாக பிரிந்தவர்களாகவே விசுவாசிகள் இருக்கின்றனர். நிர்வாகிகள் அடாவடித்தனமாகச் செயல்படும்போது நிர்வாகத்துக்கு எதிராக ஒரு பிரிவினர் செயல்படுவது தவிர்க்கமுடியாதது. ஆனால் இதற்குக் காரணம் கிறிஸ்துவை தனிப்பட்ட வாழ்வில் அறியாத கிறிஸ்தவர்களாக இருப்பதுதான்.

அப்போஸ்தலர்கள் தங்களுக்குள் ஒற்றுமையுடன் ஒரே மனநிலையுடன் வாழ்ந்தனர். மட்டுமல்ல, விசுவாசிகளும் அவர்களோடு அதே ஐக்கியத்தில் வாழ்ந்தனர். "அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 : 46, 47 ) என்று வாசிக்கின்றோம். 

இதே ஐக்கியதோடு நாமும் வாழவேண்டுமென்று இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார். அதாவது நாம் அப்போஸ்தலர்கள் வாழ்ந்ததுபோல பிதாவோடும் குமாரனான கிறிஸ்துவோடும் ஐக்கியமுள்ளவர்களாக வாழவேண்டுமென்று கூறுகின்றார்.  இதனையே அவர், "நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது" என்கின்றார். 

அதாவது, பிதாவோடும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் நமக்கு ஐக்கியம் இருக்குமானால் ஒருவருக்கொருவர் ஐக்கியமுள்ளவர்களாக இருப்போம். இப்படி நாம் வாழவேண்டும் என்பதை வலியுறுத்தவே யோவான் இந்த நிருபத்தை எழுதுகின்றார். இதனையே அவர், "நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்" என்கின்றார். 

நமக்குள் ஒருவருக்கொருவர் ஐக்கியமுடன் வாழவேண்டுமென்றால் நாம் முதலில் பிதாவோடும் குமாரனோடுமுள்ள உறவை வலுப்படுத்தவேண்டியது அவசியம். அப்படி தேவ உறவு வலுப்படும்போதுதான் குடும்பத்திலும், நமது ஆலயத்திலும், ஊரிலும், நாட்டிலும் சமாதானம் பெருகும்.  எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "தேவனையும் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது." (2 பேதுரு 1;2) என்று கூறுகின்றார். நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது மட்டுமே நாம் தேவ உறவில் வலுப்படமுடியும். எனவே கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட அவற்றை அவரிடம் அறிக்கையிடுவோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1714                                                                  ஆதவன் 17.10.2025 வெள்ளி    

"உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே." ( ஏசாயா 44 : 2 )

மனிதர்கள் பொதுவாக இன்று பல்வேறுவித பயங்களால் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர். சிலர் நன்றாக வாழும்போதும் எதிர்மறையான எண்ணங்களால் பயத்துடன் வாழ்கின்றனர்.  தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம்குறித்து பயம், அவர்களது படிப்பு, திருமண காரியங்களைக்குறித்து பயம், உலகத்தில் ஏற்படும் பல்வேறு நோய்நொடிகளைக் கண்டு பயம்,  திடீரென ஏற்படும் மரணங்களைக் காணும்போது பயம் ...இப்படி மனிதர்களது பயங்கள் நீண்டுகொண்டே போகின்றன.

எனவேதான் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில்  பல்வேறு இடங்களில் தேவன், "பயப்படாதே" என்று நம்மைத் தைரியப்படுத்துகின்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் "பயப்படாதே விசுவாசமுள்ளவனாய் இரு" என்று தன்னிடம் வந்த நோயாளிகளைத் திடப்படுத்தினார். 

உளவியல் பார்வையில் பயத்தின் வகைகள் குறித்து பேசும்போது, அவற்றை பெரும்பாலும் இயற்கையாகப் பிறவியிலேயே உள்ள பயங்கள் மற்றும் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளப்படும் பயங்கள் என இருவகைப்படுத்துகின்றார்கள். இயற்கையான (Innate) பயங்கள் என்பவை நாம் பிறந்தபோதே நம்முள் பதியப்பட்டிருக்கும், பரிணாம வளர்ச்சியின் மூலம் நமது மூளையில் ஆழமாக பதிந்திருக்கும் பயங்கள் ஆகும். இதற்கு உயரமான இடங்களிலிருந்து பார்க்கும்போது உண்டாகும் பயம், பெரும் சத்தத்தைக் கேட்கும்போது உண்டாகும் பயம், திடீர் இயக்கங்களின் பயம் போன்றவை எடுத்துக்காட்டாகும். 

அனுபவ பயங்கள் என்பவை நமது  அனுபவம் அல்லது பார்வையின் மூலம் உருவாகும் பயங்களாகும். குழந்தை பருவத்தில் இருளின் பயம் போன்ற எளிய பயங்களிலிருந்து, பெரியவர்களின் பொது மேடையில் பேசும்போது ஏற்படும் பயம் போன்றவைகளை இதற்கு உதாரணம் கூறலாம்.  

ஆனால் எந்தப் பயமாக இருந்தாலும் தேவனால் அவற்றிலிருந்து நம்மை விடுவிக்கமுடியும். நம்மைத் தாயின் வயிற்றில் உருவானதுமுதல் பாதுகாத்து வருபவர் நமது தேவன். எத்தனையோ குழந்தைகள் தாயின் வயிற்றிலேயே இறந்துபோய்விடுகின்றன. சில பிறக்கும்போது இறக்கின்றன. வறுமை காரணமாக ஐந்து வயதாகுமுன் பல குழந்தைகள் இறக்கின்றன. ஆனால் இவை அனைத்திலுமிருந்து நம்மைப் பாதுகாத்து இந்தச் செய்தியை வாசிக்கும் இந்தநாள்வரை நம்மைக் கொண்டுவந்துள்ளார். 

இதற்குக் காரணம் தேவனது சுத்தக்  கிருபையே. எனவேதான் இன்றைய வசனம் கூறுகின்றது, "தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணை செய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே" என்று. ஆம், இம்மட்டும் கைவிட தேவன் இனியும் கைவிடமாட்டார். 

அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல." ( 1 யோவான்  4 : 18 ) என்று. அதாவது நாம் தேவன்மேல் பூரண அன்பு கொண்டு வாழ்வோமானால் பயம் நம்மைவிட்டு அகன்றுவிடும். காரணம், அகிலத்தையே படைத்த தேவன் நம்மோடு இருக்கின்றார் எனும் தைரியம். ஆம் அன்பானவர்களே, என்ன நடந்தாலும் பயப்படாமல் வாழ்வை எதிர்கொள்வோம். தேவனது கிருபையின் கரங்கள் நம்மோடு இருக்கின்றன என விசுவாசிப்போம்.

"மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54 : 10 ) எனவே, பயப்படாமல் தைரியமாக வாழ்வைத் தொடருவோம்.

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1715                                                                  ஆதவன் 18.10.2025 சனி    
 
"கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்." ( உன்னதப்பாட்டு 2 : 14 )

சாலமோனின் உன்னதப்பாட்டு எனும் இலக்கிய நடையிலான உருவக நூலானது வேதாகமத்தின் தனித்துவமான நூலாக உள்ளது. உண்மையான காதல் உணர்வு பாவமல்ல என்பதனையும் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு காதல் உணர்வுபோன்று இருக்கவேண்டுமென்றும் இந்நூல்மூலம் நாம் அறிகின்றோம். 

எப்போதும் தேவனிடம் எதையாகிலும் எதிர்பார்த்து ஜெபிக்கவேண்டும் எனும் பிச்சைக்கார மனநிலையை நாம் மாற்றி அவரை அன்புணர்வோடு அணுகும்போது  தேவனும் நம்மிடம் அன்பாக இருக்கின்றார். நம்மோடு நெருங்கி வருகின்றார் எனும் உண்மையினை இந்நூல் வாயிலாக நாம் உணர்ந்துகொள்கின்றோம்.

தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் ஆவிக்குரிய மனிதர்களை தேவன் கண்ணோக்கிப் பார்க்கின்றார். அவர்களோடு பேசுவதற்கு ஆர்வமுள்ளவராக இருக்கின்றார். பல்வேறு இக்கட்டுத் துன்பங்களால் வேதனையுற்று மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டு ஒதுங்கி வாழும் தனது பக்தர்களை தேவன், "கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே!" என்று அழைக்கின்றார். மகனே, மகளே நீ  கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் ஒளிந்து வாழ்வதுபோல வாழாதே, நான் உன்னைப் பார்க்க, உன்னோடு பேச ஆசைப்படுகின்றேன் என்கின்றார்.

அதனையே நாம், "உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்" என்று வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, தேவன் நமது ஜெபத்தைக் கேட்க ஆவலுள்ளவராக இருக்கின்றார். உலகத்துக்கு நாம் வெறுக்கப்பட்டவர்களாக இருக்கலாம் ஆனால் தேவனுக்கு நாம் அழகானவர்கள்; உலகம் நமது குரலைப் புறக்கணிக்கலாம், ஆனால் தேவனுக்கு நமது சத்தம் இன்பமாக இருக்கின்றது. 

இன்று நாம் நமது வறுமை, வேலையில்லாமை போன்ற காரணங்களால் உறவினர்களாலும், நமது நண்பர்களாலும் கைவிடப்பட்டவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு வெட்கப்பட்டு நாம் கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற புறாக்களைப்போல மறைந்து வாழ்பவர்களாக இருக்கலாம். பொது இடங்களில் மற்றவர்களோடு சேர்ந்து இருக்கும் தகுதி நமக்கு இல்லை என்று நமது மனமே நம்மைத் தனிமைப்படுத்தலாம். ஆனால் தேவன் நம்மை நேசிக்கின்றார்.  வீட்டிற்குள்ளேயே அடைபட்டு இருக்கும் நமது ஜெபங்களை தேவன்  கேட்கின்றார்; அவருக்கு நாம் இன்பமானவர்கள். 

இஸ்ரவேல் நாட்டிலுள்ள கழுகு இனங்களில் ஒன்று வயதானபின் சிறகுகள் உதிர்ந்து பறக்க முடியாமலும், இரைதேட முடியாமலும்  பெரிய கன்மலையின் பொந்துகளில் போய் ஒளிந்துகொண்டு அமைதியாகக் காத்திருக்குமாம். ஆனால் சில காலங்கள் கடந்தபின்னர் அவற்றின் இறகுகள் வளரத்துவங்கும். மீண்டும் அவை பெலனடைந்து வானில் சிறகடித்துப் பறக்கும். ஆம், இதுபோலவே,  "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்".(ஏசாயா 40:31)

எனவே, இன்று கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற புறாவாக நாம் இருந்தாலும் விசுவாசத்தை இழந்திடாமல் கர்த்தர் செயல்படும்வரை பொறுமையாகக் காத்திருப்போம். செட்டைகளை அடித்து எழும்பத்தக்கதாக தேவன் நம்மை உயர்த்துவார். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1716                                                                  ஆதவன் 19.10.2025 ஞாயிறு 

"அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்." ( 1 யோவான்  3 : 22 )

தேவனிடமிருந்து நாம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் முதலில் நாம் அவரது கற்பனைகளைக் கடைபிடிக்கவேண்டியது அவசியம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஆனால் இந்த உலகத்தில் தேவனை அறியாதவர்களும், ஜெபிக்காதவர்களும்கூட பல ஆசீர்வாதங்களைப் பெற்று வாழ்வதை நாம் காண்கின்றோம். காரணம் என்னவென்றால்,   தேவன் தனது கிருபையால் எல்லோருக்கும் உதவிகள் செய்கின்றார். அவரை விசுவாசிப்பவர்கள், விசுவாசியாதவர்கள், அவருக்கு எதிராகச் செயல்படுபவர்கள் எல்லோரையும் அவர் பராமரிக்கின்றார்.  துன்மார்க்கர்களும் உலகினில் பல ஆசீர்வாதங்களைப் பெற்று வாழ்கின்றனர். 

இப்படி இருந்தாலும், அவரது கற்பனைகளின்படி வாழ்பவர்களை அவர் சிறப்பாகக் கவனிக்கின்றார். இதற்கு பள்ளி ஆசிரியர்களைக்கொண்டு விளக்கம் தருவது எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்குமென்று எண்ணுகின்றேன். வகுப்பில் படிக்கும் மாணவர்களில் பல மாணவர்கள் நன்றாகப் படிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் கீழ்ப்படித்தலிலும், ஒழுக்கத்திலும் சிறப்பாக இருப்பதில்லை. ஆனால் ஒரு மாணவன் நன்றாகப் படிப்பது மட்டுமல்லாமல் ஆசிரியருக்குக் கீழ்ப்படிந்து பள்ளியின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து ஒழுக்கமாக  நடப்பானென்றால் அவனிடம் ஆசிரியர் தனி அன்பு கொள்வாரல்லவா? 

இதுபோல,  ஒரு குடும்பத்தில் எந்த மகன் தாய் தந்தையருக்கு ஏற்புடையச் செயலைச் செய்து அவர்களுக்குப்  பிரியமாக நடக்கின்றானோ அவனைப் பெற்றோர் அதிகம் அன்பு செய்வதில்லையா? தினமும் குடித்து ஊர்ச்சுற்றிக்கொண்டு கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து பொழுதைக்கழிக்கும் மகனிடம் குடும்பத்துப் பொறுப்பையும் இரகசியங்களையும் பகிர்ந்துகொள்வார்களா? 

இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 10 : 34, 35 ) என்று கூறுகின்றார். அதாவது, தேவனை அறியாத மக்களும் நீதியான வாழ்க்கை வாழும்போது அவருக்கு உகந்தவர்கள் ஆகின்றனர். ஆனால் நாம் தேவனுக்கு உகந்தவர்களாக அல்ல; மாறாக அவரது சொந்த பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். பிள்ளைகளுடைய உரிமைப்பேறு சிறப்பானது. 

ஆம் அன்பானவர்களே, நாம் தேவனது கற்பனைகளைக் கைக்கொண்டு வாழும்போது நாம் அவரது பிள்ளைகளாகின்றோம்; அப்போது, தேவன் நம்மில் மகிழ்ச்சிக்கொள்வது மட்டுமல்ல, அவர் நம்மில்வந்து நிலைத்திருக்கின்றார் என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான யோவான். "அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்." ( 1 யோவான்  3 : 24 )

மேலும், இப்படித் தேவனின் நிலைத்திருக்கும் மனிதன் தேவ சித்தமறிந்து விண்ணப்பம் செய்பவனாக இருப்பான். காரணம் அவன் அவரது மகன் / மகள் என்பதால்  தகப்பனது சித்தம் அவர்களுக்கு முழுமையாகத் தெரியும்.  இப்படி வாழும்போது, "நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்." ( 1 யோவான்  5 : 14 )  தேவன் சிலவேளைகளில் நமது ஜெபங்களுக்கு உடனேயே பதில் தந்து மகிழச்செய்வார்.  ஆனால், மேஜிக் போல உடனேயே நமது எல்லா விண்ணப்பங்களும் தேவன் எப்போதும் பதில் தருவதில்லை. பலவேளைகளில் நமது காத்திருத்தலை அவர் எதிர்பார்க்கின்றார். 

அவரது கற்பனைகளைக் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்து நாம் பொறுமையுடன் காத்திருக்கவேண்டியதும் அவசியமாகும். "நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது." ( எபிரெயர் 10 : 36 ). ஆம் அன்பானவர்களே, தேவ சித்தம் செய்து, பொறுமையுடன் காத்திருந்து தேவ ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1717                                                                  ஆதவன் 20.10.2025 திங்கள்  
     
"ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." ( ரோமர் 8 : 1 )

இந்த உலகமுடிவில் தேவனது நியாயத்தீர்ப்புக்குமுன் நாம் அனைவரும் நிற்கவேண்டியது வரும் என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. நியாயத்தீர்ப்புக்குப்பின் தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்தவர்கள் நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வினை அடைவார்கள்; துன்மார்க்கர்கள் நித்திய நரக அக்கினிக்கு இரையாவார்கள்.  இந்த நரக  அக்கினிக்கு இரையாவதே ஆக்கினைத் தீர்ப்பு. மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு இந்த ஆக்கினைத்தீர்ப்பில்லை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

ஏன் ஆக்கினைத் தீர்ப்பு இல்லையென்றால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குத் தரும் பரிசுத்த ஆவியானவர் எல்லா சத்திய வழியிலும் நம்மை நடத்துவதால்தான். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." (யோவான் 16:13) என்றார் இயேசு. சத்திய ஆவியானவர் நமக்குக் காண்பிக்கும் வழியில் நாம் நடக்கும்போது நாம் தேவனுக்கு எதிராகச் செயல்படுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, நமக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. 

மேலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக் கூறினார், "நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்". (யோவான் 16:7,8) இப்படிப்   பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், அவர் நம்மைக் கண்டித்து உணர்த்துவதால் நாம் பாவம் செய்ய மாட்டோம். எனவே, நமக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. 

இன்றைய தியான வசனம், தெளிவாகக் கூறுகின்றது, " கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல்" என்று. அதாவது நாம் நமது உடலின் இச்சைகளின்படி நடவாமல்  கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாக வாழவேண்டியது அவசியம். இந்த உலகினில் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் பொதுவாகத்  தங்களுக்கு கிறிஸ்துவும் வேண்டும் உலக இச்சைகளும் வேண்டும் என்று விரும்புகின்றார்கள். எனவே,  அவர்கள் தங்களது மனம்போல வாழ்கின்றனர்; கிறிஸ்துவை பெயரளவில் ஆராதிக்கின்றனர். 

அன்பானவர்களே, நாம் இப்படியில்லாமல் நம்மை ஆவியின்படி நடக்க ஒப்புக்கொடுக்கவேண்டும். ஆவியானவரின் சத்தத்தைக் கேட்கும் அனுபவம் நமக்கு வேண்டும். இன்று பலரும் வேத வசனங்களை கேட்கின்றனர். ஒரே வசனத்தைத் தாங்கள்  பிறந்ததுமுதல் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்; அதன் உள்ளார்ந்த பொருளைப் புரிந்துகொள்ளவில்லை; எனவே, அதனைத்  தங்களது வாழ்க்கை அனுபவமாக்குவதில்லை. 

ஆவியானவர் எச்சரிக்கையுடன் கூறுகின்றார், இன்று இந்த வேத வசனத்தைக் கேட்கும்போது, "இது என்ன எனக்குத் தெரிந்த வசனம்தானே ? இவன் என்னப் புதிதாகச் சொல்லிவிடப்போகிறான்?"  என்று எண்ணினீர்களென்றால் இந்த வசனம்  உங்களில் செயல்புரிய நீங்களே தடையாக இருக்கின்றீர்களென்று பொருள். "ஆண்டவரே, ஆவியால் வழிநடத்தப்படும் இந்த மேலான அனுபவத்தை எனக்குத் தாரும்" என்று ஜெபிப்பீர்களென்றால் தேவன் நிச்சயமாக இந்த அனுபவத்தால் உங்களை நிரப்புவார். ஆம், "கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான்."

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1718                                                                  ஆதவன் 21.10.2025 செவ்வாய்   

"ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." ( எபேசியர் 5 : 14 )

ஆவிக்குரிய சிந்தனையே இல்லாமல் உலக காரியங்களையே எண்ணி அவற்றுக்காகவே உழைத்துக் கொண்டிருந்தோமானால் நாம் இருளடைந்தவர்களாக இருப்போம். நம்மைக்கொண்டு யாருக்கும் எந்த பயனுமிராது. எனவே, ஆத்தும காரியங்களைக்குறித்து எந்தவித சிந்தனையுமில்லாமல் உலக காரியங்களையே எண்ணி வாழ்வதை தூக்கம் அல்லது செத்துப்போன வாழ்க்கை என்று அப்போஸ்தலரான பவுல் குறிப்பிடுகின்றார். இப்படி மரித்தவன்போல வாழும் நீ உனது தூக்கத்தைவிட்டு எழுந்திருந்தால் கர்த்தர் உன்னைப் பிரகாசிக்கச் செய்வார் என்று கூறுகின்றார் அவர். 

உலக காரியங்களில் அதிகமான தூக்கம் மனிதனின் வாழ்வை நாசமாக்கும். தூங்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து நமது அன்றாட வேலைகளைச் செய்யாமலிருந்தால் தரித்திரம்தான் நம்மைத் தொடரும். " ................ தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்." ( நீதிமொழிகள் 23 : 21 ) என்கின்றது நீதிமொழிகள். அதாவது சோம்பலாய் தூக்கத்திலேயே நாட்டம்கொண்டு இருப்போமானால் உடுத்துவதற்கு நல்ல ஆடை கூட இல்லாத நிலைமை ஏற்பட்டு கந்தலைக் கட்டிக்கொண்டு திரியவேண்டியிருக்கும்.

இதுபோலவே ஆவிக்குரிய வாழ்விலும் கிறிஸ்துவுக்குரிய நாமோ தூங்குவதற்கல்ல, மாறாக விழித்திருந்து செயல்படவும் அவர் வரும்போது அவரை எதிர்கொண்டுச் செல்லத் தகுதியுள்ளவர்களாகவும் வாழவேண்டியது அவசியம். எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள்." ( மாற்கு 13 : 35 )

ஆவிக்குரிய எண்ணமில்லாமல் இருப்பவர்களை அப்போஸ்தலரான பவுல் இரவுக்குரியவர்கள் என்றும் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்பவர்களை பகலுக்குரியவர்கள் என்றும் கூறுகின்றார். "தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 7, 8 ) என்கின்றார். 

ஆவிக்குரிய எண்ணமில்லாமல் வாழ்வது உயிருடன் இருந்தும் மரித்துப்போன வாழ்க்கை வாழ்வதற்குச் சமம் என்பதால் நாம் விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திருக்க வேண்டியது அவசியம்.  அப்பொழுது மட்டுமே கிறிஸ்து நம்மைப் பிரகாசிக்கச் செய்ய  முடியும். கிறிஸ்து நம்மைப் பிரகாசிப்பிக்கும்போது மட்டுமே நம்மூலம் மற்றவர்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளமுடியும். 

கிறிஸ்துவோடு நம்மை இணைத்துக்கொண்டு ஆவிக்குரிய வாழ்வில் வளருவோமானால் கிறிஸ்துவின் மெய்யான ஒளி நம்மேல் துலங்கும். இதனையே, "அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." என்கின்றார் பவுல்.  "ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 6 )

தேவனுடைய வீடாகிய நமது உடலும் ஆவிக்குரிய வாழ்க்கையும் விழிப்புள்ளதாகவும் உயிருள்ளதாகவும் இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் வீட்டு எஜமான் எப்போது வருவார் என்று நமக்குத் தெரியாது.  "நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்." ( மாற்கு 13 : 36 ) என்கின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ஒரு வகுப்பறையில் மாணவன் எப்போதும் தூங்கிக்கொண்டு இருப்பானென்றால் அவனால் எப்படித் தேர்வைச் சிறப்பாகச் சந்திக்கமுடியும்? 

நமது உடலானது பலவீனமானதுதான்; ஆனால் நமது ஆவி உற்சாகமுள்ளதாக இருக்கட்டும். உற்சாகமுள்ள ஆவியினால் நாம் செய்யும் விண்ணப்பங்களை தேவன் ஏற்றுக்கொள்வார். நமக்குப் பெலன் தருவார்.  "நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது" ( மாற்கு 14 : 38 ) என்றார்  இயேசு கிறிஸ்து. தூங்குகின்ற நாம் விழித்து மரித்தோரை விட்டு எழுந்திருப்போம்,  அப்பொழுது கிறிஸ்து நம்மைப் பிரகாசிப்பிப்பார். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1719                                                                  ஆதவன் 22.10.2025 புதன்    

"விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்துத் தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதனாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்." ( எபிரெயர் 11 : 7 )

நாம் நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வதுடன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் முழு விசுவாசம் கொண்டவர்களாக வாழவேண்டியதும் அவசியம்; அவரோடு ஐக்கியமான ஒரு உறவுடன் வாழவேண்டியது அவசியம். நோவா அப்படித்தான் வாழ்ந்தார்.  "நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்." ( ஆதியாகமம் 6 : 9 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த நோவா  நீதிமானாக மட்டுமல்லாமல் கர்த்தர்மேல் பூரண விசுவாசமுள்ளவனாக இருந்ததால் ஆசீர்வாதம் பெற்றார்.  "விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்து தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

பூமியிலே மனிதர்களுடைய பாவம் பெருகியதால் தேவன் மனவருத்தம் கொண்டார். பூமியிலுள்ள அனைத்து உயிர்களையும் அழித்து ஒழிக்க எண்ணம்கொண்டார். இதனை நாம், "மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது". ( ஆதியாகமம் 6 : 5, 6 ) என்று வாசிக்கின்றோம். 

நோவா நீதியுள்ள வாழ்க்கை வாழ்ந்ததால், "நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது." ( ஆதியாகமம் 6 : 8 ) எனவே தேவன் அவருக்குத் தான் பூமியிலுள்ள அனைத்தையும் அழிக்க திட்டம்கொண்டதை வெளிப்படுத்தினார். அவன் "தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்து இவ்வாறு தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்." 

அன்பானவர்களே, அன்று நோவா பேழையை உருவாக்கியபோது அதனைப் பார்த்தவர்கள், "இந்தக் கிழவன் பைத்தியக்காரன்" என்று எண்ணியிருப்பார்கள். வரப்போகின்ற அழிவை நோவா அவர்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களை மனம்திரும்புதலுக்கு அறிவுறுத்தியபோதும் அவன் கூறியதை நம்பியிருக்கமாட்டார்கள்.  "அதனாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான்."

விசுவாசத்தினாலே நோவா காணாதவைகளைக் குறித்து தேவ எச்சரிப்பு பெற்று செய்தி அளித்ததுபோல இன்றும் மக்களுக்கு எச்சரிப்பின் செய்தி பல்வேறு விதங்களில் அளிக்கப்பட்டுவருகின்றது. பல்வேறு தேவ ஊழியர்களின்  பிரசங்கங்கள், கட்டுரைகள், ஒளிப்பட வீடியோக்கள் வாயிலாக தேவ எச்சரிப்பின் செய்தி மக்களுக்கு அளிக்கப்படுகின்றது. ஆனால் அன்று நோவாவை அற்பமாக, பைத்தியக்காரனாகப் பார்த்ததுபோல இப்படிச்   செய்தியை அளிப்பவர்களையும் இன்று உலகம் பார்க்கின்றது; ஆம், கிறித்தவர்களே பலநேரங்களில் இத்தகைய எச்சரிப்பின் செய்திகளை நம்புவதில்லை. 

அன்று தேவனை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட நோவா விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான். அதுபோல, தேவனது எச்சரிப்பின் செய்தியை விசுவாசித்து ஏற்றுக்கொள்வோமானால் மட்டுமே நாமும் அந்த தேவ நீதிக்குச் சுதந்திரவாளியாக முடியும். "விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது." ( எபிரெயர் 10 : 38 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1720                                                                  ஆதவன் 23.10.2025 வியாழன்    

"அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்." (யோபு 23: 12) 

கொரோனா காலத்தை நம்மில் யாரும் மறந்திருக்கமாட்டோம். பகல் நேரமும் இரவு பன்னிரெண்டு மணிபோல சாலைகள் வெறிச்சோடிக்கிடக்க பகலில் சாலையில் நடப்பவர்களைத் திருடர்களைப் பிடிப்பதுபோல போலீசார் பிடித்து விசாரணை செய்த காலக்கட்டம் அது. அத்தியாவசிய உணவுக்குக்கூட யாரும் வெளியே எளிதில் சென்றுவிடமுடியாது; சென்றாலும் எதுவும் கிடைக்காது. 

அப்போது பலரும் உணவுப்பொருட்களை வீடுகளில் பதுக்கிவைத்து கவனமாக உண்டனர். அதுபோல தேவனது வாயின் வார்த்தைகளைத்  தனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டததாக  யோபு கூறுகின்றார். வீடுகளில் உணவுகள் கெட்டுப்போகாமல் இருக்க நாம் குளிர்சாதனப் பெட்டிகளில் சேகரித்து வைக்கின்றோம். இங்கோ பக்தனான யோபு தனது இருதயமான பெட்டியில் தேவ வார்த்தைகளைப் பாதுகாத்து வைத்துள்ளேன் என்கின்றார்.

உணவினைப் பாதுகாத்து வைப்பது மட்டும் முக்கியமல்ல, அதனைத் தகுந்த முறையில் பயன்படுத்தவேண்டியதும் அவசியம். எத்தனை கவனமாக நாம் உணவினைப் பாதுகாத்தாலும் அதனைப் பயன்படுத்தாவிட்டால் எந்தப் பயனுமில்லை.  தேவனது வார்த்தையான உணவினை யோபு பாதுகாத்து வைத்தது மட்டுமல்ல அதனைத் தனது வாழ்வில் பயன்படுத்தினார். இதனையே அவர், "அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை" என்று கூறுகின்றார். ஆம், தேவ வார்த்தையான உணவினை நாம் பாதுகாத்து அந்த வார்த்தைகளின்படி நடக்கவேண்டியது அவசியம். 

தேவனது வார்த்தைகள் எனும் உணவு நமக்கு வேதாகமம் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் எப்படி உண்ணுகின்றோம் என்பதே முக்கியம். ஏனெனில் தேவனது கிருபையின் காலத்தில் தேவ வசனமாகிய உணவு நமக்குக் கிடைக்கின்றது. ஆனால் இந்த உணவு கிடைக்காத பஞ்சம் வரும் என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. "இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." (ஆமோஸ் 8:11)

வேத வசனங்களை சுவைத்து உண்ணும் ஆர்வம் நமக்கு இருக்குமானால் அவற்றை நாம் நமது உள்ளத்திலும் காத்துக்கொள்வோம். எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு தேவன் அளித்த வார்தைகளைக்குறித்து அவர், "மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது" (எசேக்கியேல்3;3)  என்கின்றார். 

மேலும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார். "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.' ( யோவான் 1 : 1 ) என்று வாசிக்கின்றோம். அந்த வார்த்தையான இயேசு கிறிஸ்து உயிருள்ள உணவாகவும் இருக்கின்றார்.   "ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்." ( யோவான் 6 : 35 ) என்று தன்னை "ஜீவ அப்பம்" என்று குறிப்பிட்டார். ஆம், வாழ்வளிக்கும் வார்த்தையான அவரே உயிரளிக்கும் உணவுமாக இருக்கின்றார்.  

பக்தனாகிய யோபு தேவனுடைய வார்த்தைகளைத் தனது இருதயத்தில் பாதுகாத்ததுபோல நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நமது இருதயத்தில் பாதுகாத்து வைக்கவேண்டியது அவசியம்; எசேக்கியேலைப்போல அவரைச் சுவைத்து உண்ணவேண்டியது அவசியம். அவர் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் வந்து தங்கிட ஆர்வமுள்ளவராக இருக்கின்றார். "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டுகதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." (வெளி 3:20) என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ வார்த்தையான கிறிஸ்து எனும் உணவினை உள்ளத்தில் ஏற்றுக்கொள்வோம்; சுவைப்போம்; ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய் நமக்குள் அவரைக் காத்துக்கொள்வோம்.  அப்படியானால் யோபு கூறுவதுபோல அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்.


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1721                                                                  ஆதவன் 24.10.2025 வெள்ளி 

"நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்." ( ஓசியா 2 : 19 )

கிறிஸ்தவ விசுவாசிகள் அனைவருக்கும் கிறிஸ்து மணவாளன்; நாம் அவரது மணவாட்டிகள் அல்லது மணப்பெண்கள். வெளிப்படுத்தின விசேஷத்தில் மணவாளன் மணவாட்டி என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் சபையும் விசுவாசிகளுமே மணவாட்டிகள். கிறிஸ்துவே மணவாளன். 

இன்று கர்த்தர்  "நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்" என்கின்றார். நான் உன்னை எனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுகொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று ஒருவர் மற்றவரிடம் கூறுவதுபோல உள்ளது இது. அதாவது நம்மை அவருக்கு உரியவர்களாக மாற்றுவேன் என்கின்றார். இந்த உலகத்துக்குரிய திருமணங்கள் பலவேளைகளில் முறிவடைந்து விவாகரத்தில் போய் முடிவடையும். ஆனால் அப்படியில்லாமல் கிறிஸ்துவுடனான விவாகம் நித்தியமானது; முடிவில்லாதது. 

விசுவாசி ஒருவர் மீட்பு அனுபவம் பெறுகிறார் என்றால், அவரை தேவன் தனது மணவாட்டியாகத் தெரிந்துள்ளார் என்று பொருள். இப்படி கிறிஸ்து ஒருவரைத் தெரிந்துகொள்வது அவரது கிருபையினால்தான். இதனையே இன்றைய வசனத்தில், "நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்." என்று கூறப்பட்டுள்ளது. இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகளும் கூறியுள்ளார். "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு." ( எபேசியர் 2 : 8 ) ஆம், கிறிஸ்து நம்மைத் தெரிந்துகொண்டு அவரை நமக்கு வெளிப்படுத்துவது அவரது கிருபையினால்தான். 

இன்றைய வசனத்தில் நம்மை அவருக்கு மணவாட்டியாக அவர் தெரிந்துகொள்வேன் என்று கூறுகின்றார்.  அடுத்த வசனத்தில் அவர் கூறுகின்றார், "உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய்." ( ஓசியா 2 : 20 ) ஆம், நாம் அவரால் தெரிந்துகொள்ளப்படும்போதுதான் மேலான சத்தியங்களை அறிந்து கர்த்தரை அறிந்துகொள்ளமுடியும். 

அன்பானவர்களே, இந்த உலகத்திலுள்ள எல்லா ஆசீர்வாதங்களிலும் மிகப் பெரிய ஆசீர்வாதம் கிறிஸ்துவை அறிந்துகொள்வதுதான். நாம் ஒவ்வொருவரையுமே தனக்கு ஏற்புடையவர்களாக தெரிந்துகொள்ள கிறிஸ்து விரும்புகின்றார். ஆனால் அதற்கு நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டியது அவசியம். நாம் நமது உள்ளத்தினை எந்த ஒளிவுமறைவுமின்றி அவரிடம் திறந்து காட்டவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.  உண்மையான நீண்ட மண உறவுக்கு ஒளிவு மறைவு இல்லாத வாழ்க்கை அவசியம். 

மாய்மால வாழ்க்கை வாழ்ந்துகொண்டு வெறும் ஆராதனையிலும் வழிபாடுகளிலும் காலத்தைக் கழித்துக்கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை; அவரை நாம் தனிப்பட்ட விதத்தில் அறியவேண்டியதே அவசியம். அதற்கு நாம் நமது மாய்மாலங்களை விட்டுவிட்டு நமது உள்ளத்தினை எந்த ஒளிவுமறைவுமின்றி அவரிடம் திறந்து காட்டவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

நமது வாழ்க்கையின் எல்லா குறை நிறைகளும் அவருக்குத் தெரியும். எனவே நாம் அவருக்கு அஞ்சவேண்டியதில்லை. "ஆண்டவரே, எனது உண்மையான நிலைமை இதுதான்" என்று நமது பாவ நிலைமையை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை  வேண்டுவோம். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். "( I யோவான் 1:9) 

ஆம் அன்பானவர்களே, "நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்." என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. நம்மை ஏற்றுக்கொள்ள அவர் தயார்; அவரை ஏற்றுக்கொள்ள நாம் தயாரா? 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1722                                                                 ஆதவன் 25.10.2025 சனி  

"கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்." ( ஏசாயா 58 : 11 )

ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்களை கேட்கும்போதும், வாசிக்கும்போதும் எல்லோருக்கும் மகிழ்ச்சியுண்டாகின்றது. இன்றைய தியான வசனம் அப்படித்தான் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கின்றது. பலரும் இத்தகைய வாக்குத்தத்தங்களைத் தேடியே வேதாகமத்தை வாசிக்கின்றனர்; பல கிறிஸ்தவ ஊழியர்களும் இவைகளைப் பொறுக்கியெடுத்தே பிரசங்கிக்கின்றனர். 

பொதுவாக எல்லா தேவ வாக்குத்தத்தங்களைப்போலவே இந்த தேவ வாக்குறுதியும் ஒரு நிபந்தனையைக் கொண்டுள்ளது. நீர்ப்பாய்ச்சலான தோட்டம், வற்றாத நீரூற்று  போல நாம் இருக்கவேண்டுமென்றால் என்னசெய்யவேண்டும் என ஒரு நிபந்தனை இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனத்தில் கூறப்பட்டுள்ளது. "பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப் போலாகும்." ( ஏசாயா 58 : 10 ) அதாவது சுருக்கமாக, ஏழைகளுக்கு உதவிடவேண்டும் என்று  இந்த வசனம் கூறுகின்றது. 

"பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால்" என்பது நாம் ஆசீர்வதிக்கப்பட கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனை. இந்த வசனம் கூறும் பசியுள்ளவர்கள், சிறுமைப்பட்டவர்கள் என்பன வெளிப்பார்வைக்குத் தெரிவதுபோல உலக பொருளாதார வறுமையைக்குறித்தும் ஆகாரக் குறைவைக்குறித்தும் மட்டும் குறிப்பிடவில்லை; மாறாக, ஆத்துமாவில் பசியுள்ளவர்களையும் குறிக்கின்றது. மெய்யான தேவனை வாழ்வில் அறியாமல் ஆத்தும திருப்தியில்லாமல் அலையும் மக்கள் பசியுள்ளவர்கள்தான்.  பல்வேறு உலக துன்பங்களால் நொறுக்கப்பட்டு ஆவியில் சிறுமையடைந்து அலையும் மக்கள் பசியுள்ளவர்கள்தான்.  "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது." ( மத்தேயு 5 : 3 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?

மேலும் இதுபோல, நம்மிடம் இருப்பதை தேவையில் இருக்கும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதும் பசியுள்ளவனுக்கு இரங்குவதுதான். அன்று கோவில் வாசலில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த மனிதனுக்குக் கொடுக்க பேதுருவிடமும் யோவானிடமும் பொருள் எதுவும் இல்லை. ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இருந்தார். பேதுரு அந்த இயேசுவின் வல்லமையால் அந்தப் பிச்சைக்காரனுக்கு சுகம் கொடுத்தார். "அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி, வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டன. ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 3 : 6, 7 ) என்று வாசிக்கின்றோம். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எந்த இடத்திலும் பிச்சைகொடுத்ததாக நாம் வாசிக்கவில்லை. ஆனால், "உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும்." (லூக்கா 11:41) என்று கூறினார். ஆம் அன்பானவர்களே, எனவே இப்படி நம்மிடமிருக்கும் பொருளாலும், திறமைகளாலும் தேவைப்படும் மக்களுக்கு உதவுவதும் பசியுள்ளவர்களுக்கு உதவுவதுதான். 

இப்படித் தேவையிலுள்ளவர்களுக்கும் சிறுமைப்பட்டவர்களுக்கும் நம்மாலான உதவிகளை நாம் செய்யும்போது கர்த்தர் நித்தமும் நம்மை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் நமது ஆத்துமாக்களைத் திருப்தியாக்கி, நமது எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; அதாவது நமது தேவைகளைச் சந்தித்து ஆத்துமாவிலும் உலக பொருளாதார அளவிலும் நம்மைப் பலமுள்ளவர்களாக மாற்றுவார். அப்போது நாம் நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்போம்.


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1723                                                                 ஆதவன் 26.10.2025 ஞாயிறு   

"தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்" ( யோவான் 8 : 47 ) 

ஒரு வீட்டில் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழும் பிள்ளைகள் பெற்றோர் கூறுவதற்குச் செவிகொடுப்பவர்களாக இருப்பார்கள். ஆனால், சில குடும்பங்களில் எல்லா பிள்ளைகளும் அப்படிப் பெற்றோருக்குக்  கீழ்ப்படிந்து வாழ்வதில்லை. பெற்றோர் எவ்வளவுதான் அன்புசெய்து அவர்களைப் பராமரித்தாலும் அவர்கள் கீழ்ப்படிவதில்லை. இதுபோலவே, உலகிலுள்ள எல்லா மனிதர்களும் தேவனால் உண்டாக்கப்பட்டவர்கள்தான்; அவரால் பராமரிக்கப்படுபவர்கள்தான்.  ஆனால், எல்லோரும் அவருக்குக் கீழ்ப்படிவதில்லை. 

ஆனால், தேவ வசனங்களுக்குச் செவிகொடுத்து வாழ்பவர்களே வேத அடிப்படையில் தேவனால் உண்டானவர்கள். நாம் தேவனால் உண்டானவர்கள் என்பதை உணர்த்துக்கொண்டால் அவருக்குக் காத்திருந்து அவர் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்போம். எனவேதான் "தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்" ( யோவான் 8 : 47 ) என்று இயேசு கிறிஸ்து கூறினார். 

அப்படியானால் தேவனுக்குச் செவிகொடாதவர்கள் யார்? அவர்கள் பிசாசானவனால் உண்டானவர்கள் என்றார் இயேசு கிறிஸ்து. அவர் தனக்குச் செவிகொடாத யூதர்களைப்பார்த்துக் கூறினார், "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்." ( யோவான் 8 : 44 )

அதாவது தேவ வசனத்துக்குக் கீழ்ப்படியாதவர்கள்  தங்களது பிதாவாகிய பிசாசின் இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறார்கள். மேலும் இயேசு கிறிஸ்து கூறியதன்படிப் பார்த்தால்  அவர்கள், மனுஷகொலைபாதகர்கள்; சத்தியம் இல்லாதவர்கள்; பொய்யர்கள். நாம் தேவனால் உண்டானவர்களா இல்லை பிசாசானவனால் உண்டானவர்களா என்பதை நமது பக்தி முயற்சிகளோ, ஆராதனைகளோ வெளிப்படுத்துவதில்லை. மாறாக தேவனது வசனத்துக்கு எந்த அளவு நாம் செவிகொடுக்கின்றோம் என்பதே வெளிப்படுத்தும். 

நான் ஆவிக்குரிய வாழ்வின் ஆரம்பகாலத்தில் சென்ற ஆவிக்குரிய ஆலயத்தின் போதகர் மிகச்சிறப்பாக தேவனது வார்த்தைகளை பிரசங்கங்கம்  செய்வார். அவரும் மிகச்சிறந்த ஆவிக்குரிய மனிதர். ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த ஆலயத்தின் முன்வரிசையில் அமர்ந்திருக்கும் இரண்டு நபர்கள் கைகளை உயர்த்தி, துள்ளிக் குதித்து ஆராதிப்பதை பார்த்து நான் ஆச்சரியப்படுவதுண்டு. ஆனால் அந்தப் போதகர் ஆராதனை முடிந்தபின்னர் அவர்களைத் தனியே அழைத்துத் தேவன் தனக்கு வெளிப்படுத்தியதை அவர்களுக்குக் கூறிக் கண்டிப்பார். எனக்கு முதலில் இது குறித்து எதுவும் புரியவில்லை.  

ஆனால் பின்னர் அந்த இரண்டு நபர்களைப்பற்றி ஒரு நபர்மூலம் அறிந்துகொண்டேன். ஆலயத்தில் துள்ளிக் குதிக்கும் அவர்கள் ஒரே இடத்தில்  வியாபாரம் செய்பவர்கள். அவர்கள் இருவருக்கும் தொழில் போட்டி இருந்தது. ஆலயத்தில் ஆவியில் நிறைந்து துள்ளிக் குதிக்கும் அவர்கள் சண்டையிடும்போது ஒருவருக்கொருவர் கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் சாட்சிக்கேடாக வாழ்பவர்கள். அதே போட்டியில்தான் ஆலயத்திலும் போட்டிப்போட்டு ஆராதிக்கின்றனர். 

இது ஒரு உதாரணம்தான். பொதுவாக பல கிறிஸ்தவர்கள் இப்படித்தான் மற்றவர்களிடம் பொறாமையும், பகையுணர்வும், வெறுப்புணர்வும் கொண்டவர்களாக இருக்கின்றனர். கிறிஸ்து கூறுவதன்படி இவர்கள் தேவனால் உண்டானவர்களல்ல. ஆம் அன்பானவர்களே, "தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்" அல்லாதவன் அவர்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள். நம்மை நாம் தேவனுக்கு உரியவர்கள் எனக் கருதினால் தேவ வசனங்களுக்குச் செவிகொடுப்பவர்களாக வாழ்வோம். பக்தி முயற்சிகளும் ஆராதனைகளும் இரண்டாம் பட்சமே!!

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1724                                                                 ஆதவன் 27.10.2025 திங்கள்    

"மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 5 : 25 )

யூதர்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறும் இந்த வசனம், தேவனுடைய குமாரனின் வார்த்தைகளைக் கேட்காதவர்கள் மரித்தவர்கள் என்று கூறுகின்றது.  அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் குரலுக்குச் செவிகொடுக்காவிட்டால் நம்மில் உயிர் இருக்காது. "ஏனெனில் பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்." ( யோவான் 5 : 26 ) ஆம், ஜீவனுள்ள குமாரனாகிய கிறிஸ்துவுக்குள் ஜீவன் இருக்கின்றது. 

பெதஸ்தா குளக்கரையில் முப்பத்தியெட்டு ஆண்டுகாலமாக படுத்தப்படுகையாகக் கிடந்த மனிதனை இயேசு கிறிஸ்து குணமாக்கினார். ஆனால், அதனை ஓய்வுநாளில் செய்ததால் யூதர்கள் இயேசுவின்மேல் குற்றம் கண்டுபிடித்தனர். காரணம்,  மனிதநேயமற்ற செத்தவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களோடு உரையாடியபோது இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். "மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது" என்று கூறினார். ஆனால் அந்தக் காலத்தை யூதர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 

இன்றும் ஆவியில் உயிரில்லாத மனிதர்கள் உலகினில் பலர் உண்டு. அவர்கள் உயிர்பெறவேண்டுமானால் கிறிஸ்துவின் குரலுக்குச் செவிகொடுக்கவேண்டியது அவசியமாக இருக்கின்றது. "அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

கிறிஸ்துவின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளுவோமானால் நாம் உயிரில்லாதவர்கள் மட்டுமல்ல, இறுதிநாளில் நியாயத்தீர்ப்பின்போது அவரது வசனமே நம்மை நியாயம்தீர்க்கும்.  "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." (யோவான் 12:48) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?

எனவே, தேவனுடைய வார்த்தையாம் கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொள்ளும்போது நாம் உயிரடைவது மட்டுமல்ல, இறுதி நியாயத்தீர்ப்பின்போதும் தண்டனைக்குத் தப்புகின்றோம்.  எனவேதான், அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு கிறிஸ்துக் கூறினார். 

கிறிஸ்து உயிருடன் இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் அறிவிக்கப்பட்டதுபோல தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் நற்செய்தி சத்தம் ஆவியில் மரித்துப்போன மக்களுக்குப் பல்வேறு விதங்களில் இன்றும் அளிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் பலர் அன்று யூதர்கள் அவரைக் கேலிசெய்ததுபோல இன்றும் கேலிபேசிக்கொண்டிருக்கின்றனர்.  ஒவ்வொருவரும் தங்களது உண்மை நிலைமையை உணர்ந்து அந்தச் சத்தத்துக்குச் செவிகொடுக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அதனைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள்.  

ஆம், கிறிஸ்துமூலமாய் இரட்சிப்பின் செய்தி முதலில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. "முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்." ( எபிரெயர் 2 : 3, 4 ) என்கிறார் எபிரேய நிருப ஆசிரியர். 

தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சத்தத்துக்குச் செவிகொடுத்து உயிருள்ளவர்களாக மாறுவோம்; இறுதி நியாயத்தீர்ப்புத் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்வோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1725                                                                 ஆதவன் 28.10.2025 செவ்வாய்     

"என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?" ( எரேமியா 2 : 6 )

ஒரு குடும்பத்தில் அன்பாக வளர்க்கப்பட்ட மகனோ மகளோ பெற்றோருடன் ஏதோ மனத்தாங்கல் ஏற்ப்படும்போது அவர்களிடம் பேசாமல் அவர்களை ஒதுக்கிவைத்துவிடுவதுண்டு. அந்தப் பெற்றோர்கள் சிறுவயதுமுதல் அந்தப் பிள்ளைகளுக்கு பல நல்ல செயல்கள் செய்திருப்பார்கள். அந்தப் பிள்ளைகளது தற்போதைய நல்ல நிலைமைக்கு பெற்றோர்தான் காரணமாக இருப்பார்கள். ஆனால் பிள்ளைகள் இப்பொது அந்தப் பெற்றோருடன் பேசுவதில்லை. இது அந்தப் பெற்றோருக்கு எத்தனை மனவேதனையைக் கொடுக்கும்! 

இன்றைய தியான வசனத்தில் இதே மனவேதனையுடன் தேவன் இஸ்ரவேல் மக்களைப்பார்த்துக் கேட்கின்றார், "என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?" என்று.

முந்தின வசனங்களில் தேவன் கூறுகின்றார், "யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்..," ( எரேமியா 2 : 4, 5 )

அதாவது, இஸ்ரவேல் மக்களே, உங்களது பிதாக்களை நான் அவர்கள் அடிமைகளாக இருந்த எகிப்துதேசத்திலிருந்து விடுதலைப்பண்ணி  அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் வழிநடத்தி பாலும் தேனும் வழியும் கானானுக்குள் கொண்டுவந்தேன். இவ்வளவு செய்தும் உங்கள் பிதாக்கள் கர்த்தராகிய என்னை மறந்தார்கள். இப்படி என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்? என்கிறார் பரிசுத்தர். 

இதே வசனத்தை நமது வாழ்வில் இந்தநாளில் நாம் சிந்தித்துப்பார்ப்போம். நமது வாழ்க்கையிலும் தேவன் நமக்குப் பல்வேறு நல்ல காரியங்களைச் செய்திருக்கலாம். சுமார் பத்து ஆண்டுகளுக்குமுன் நமது வாழ்க்கை எப்படி இருந்தது; இப்போது எப்படி இருக்கின்றது என்று எண்ணிப்பார்ப்போம். ஆனால், இந்த இடைபட்டக் கால வளர்ச்சிக்கு நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோமா? அல்லது அவரை மறந்தவர்களாக வாழ்கின்றோமா? 

இப்படி நாம் நன்றியறிதலில்லாமல் அவரோடு ஐக்கியமில்லாமல் வாழ்வோமானால் அன்று இஸ்ரவேல் புத்திரரைப்பார்த்துக் கேட்டதுபோல தேவன் நம்மையும் பார்த்துக் கேட்பார். மகனே, மகளே என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் நீ  என்ன அநியாயத்தைக் கண்டாய்?  

"தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்." (கொலோசெயர் 3:15) என்று நமக்கு அறிவுறுத்துகின்றார் அப்போஸ்தலரான பவுல். எந்தவேளையிலும் நாம் நன்றியுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். நாம் நன்றியுள்ளவர்கள் என்பதனை தேவனுக்குக் காண்பிக்க ஒரே வழி அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதுதான். ஆம், தேவ குரலுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக வாழ்வோம்; நமது வாழ்க்கையால் அவருக்கு நன்றிசெலுத்துவோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1726                                                                 ஆதவன் 29.10.2025 புதன்      

"ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." ( எபிரெயர் 4: 16)

தேவனோடுள்ள உறவில் பழைய ஏற்பாட்டுக்கால மக்களுக்கும் நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் தேவனை பயப்படத்தக்க ஒருவராகவே பார்த்தனர். தேவனைக்கண்டு பயந்து நடுங்கினர். எனவே, அன்று இஸ்ரவேல் மக்கள்  "மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக,   பேசினால்  நாங்கள்   செத்துப் போவோம் என்றார்கள்." (யாத்திராகமம் 20:19) ஆனால் ஒரு சில பழைய ஏற்பாட்டுக்கால பரிசுத்தவான்கள் தேவனோடு பேசியுள்ளனர். ஆனாலும் அவர்கள் ஒரு தகப்பனோடு பேசுவதுபோல தைரியமாக அவரது குரலைக் கேட்டு மகிழவில்லை. மாறாக, அவரது குரலுக்கு ஒரு அதிகாரிக்குக் கீழ்ப்படிவதுபோலக் கீழ்ப்படிந்தனர்.  

ஆனால் இன்று நாம் தேவன் நம்மோடு பேசுவதை மகிமையான, மகிழ்ச்சியான காரியமாக எண்ணுகின்றோம். அதற்காக ஏங்குகின்றோம்.  ஆம் இதுதான் பழைய ஏற்பாட்டுக்காலத்துக்கும் புதிய ஏற்பாட்டுக்காலத்துக்குமுள்ள வேறுபாடு. 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கிருபையின் பிரமாணத்தை நமக்குத் தந்துள்ளார். நாம் தேவனைக்கண்டு பயப்படத்தேவையில்லை, அவர் நமது அப்பா என்று இயேசு கிறிஸ்து நமக்குத்  தேவனை அடையாளம் காட்டினார். அப்போஸ்தலரான பவுலும், "மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்." (கலாத்தியர் 4;6) என்று கூறுகின்றார். 
 
ஆம் அன்பானவர்களே, "அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்." (ரோமர் 8:15) எனவே கிறிஸ்துவிடம் நாம் நெருங்கிச்செல்லப்  பயப்படவேண்டாம். அதனையே இன்றைய தியான வசனத்தில், "தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்" என்று வாசிக்கின்றோம்.  அவரிடம் நாம் நெருங்கிச் செல்லும்போது இந்த வசனம் கூறுவதுபோல நாம் அவரது இரக்கத்தையும் சகாயஞ்செய்யும் கிருபையினையும் அடைவோம். 

பழைய ஏற்பாட்டில் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் கிருபாசனம் இருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் ஆசாரியன் மட்டுமே நுழைய முடியும். அதுவும், தன்னை மிருகங்களின் இரத்தத்தால் கழுவி பாவ நிவாரணம் பெற்று அவன் அங்குசென்று மக்களுக்காக வேண்டுதல் செய்வான். ஆனால், விண்ணகத்திலிருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துத்  தனது சுய இரத்தத்தைச் சிந்தி பிரதான ஆசாரியனாக நுழைந்துள்ளார். எனவே, நாம் அவரிடம் தைரியமாகச் செல்லலாம். 

காரணம்,  "இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்." (எபிரெயர் 10:10) கிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்ட அனைவருமே ஆசாரியர்கள்தான். எனவே நாம் தைரியமாக விண்ணக கிருபாசனத்தண்டையிலே சேரத் தகுதிபெற்றுள்ளோம். 

"நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 ) என்கின்றார் பேதுரு. எனவே நாம்  தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரமுடிகின்றது. 

ஆம் அன்பானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக ஏற்ப்படுத்தின இரட்சிப்பின் மேன்மை இதுதான். எனவே, அவரிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு அவரது மன்னிப்பை வேண்டுவோம். அப்படி மன்னிப்பைப் பெறும்போது, ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே நம்மால் சேர முடியும். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1727                                                                 ஆதவன் 30.10.2025 வியாழன்       

"அவன் (சவுல்) : ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 : 5 )

இன்றைய தியான வசனம் சவுலுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி. இந்த உரையாடல்மூலம் இயேசு கிறிஸ்துத் தன்னை சவுலுக்கு வெளிப்படுத்தினார். சவுல் பவுலாக மாறுகின்றார். 

இந்த வசனத்தை வாசிக்கும் பலரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ அறிவிப்புக்கு எதிராகச் செயல்படும் கிறிஸ்தவ எதிரிகள் மட்டும்தான் அவரைத் துன்புறுத்துபவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர். அது உண்மைதான் எனினும் இதனை நாம் சற்று ஆழமாகப் பார்க்கவேண்டியது அவசியம். 

பொதுவாக எல்லோரும் எந்த அறிவுரையையும், வேத வசனங்களையும் மற்றவர்களுக்குச் சொல்லப்பட்டதாகவே  எண்ணிக்கொள்கின்றனர். அன்பானவர்களே, இன்று தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் எல்லோருமே தங்களது வாழ்க்கையினை ஆராய்ந்து பார்க்க இந்த வசனம் உதவுவதாக உள்ளது. தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்கான பட்டயம். அது வசனத்தைக் கூறுபவனையும் வெட்டும், எதிரியையும் வெட்டும் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது. 

ஆம், "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." (எபிரெயர் 4:12) என்று வாசிக்கின்றோம். 

அதுபோலவே, "நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே" எனும் வார்த்தைகள் எதிரிகளை மட்டுமல்ல, கிறிஸ்தவர்களாகிய நம்மை நோக்கியும் வெட்டுவதாக இருக்கின்றது.  இன்று, கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பல அரசு அதிகாரிகள் ஊழல்வாதிகளாக இல்லையா? ஏமாற்றுக்கார்களாக நிதி மோசடி வழக்குகளில் கைதாகவில்லையா? கிறிஸ்தவ ஊழியர்கள் பலர் கொலை வழக்குகளிலும் பாலியல் வன்கொடுமை செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கைதுசெய்யப்படவில்லையா?  இவர்களெல்லாம் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் இல்லையா? கிறிஸ்து சவுலிடம் கூறியதுபோல இவர்களும் முள்ளின்மீது உதைக்கிறவர்கள்தானே? 

அன்று சவுல், "சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 : 4 ) இன்றும் அதே இயேசு கிறிஸ்து தனக்கு எதிராகச் செயல்படும் கிறிஸ்தவர்களைப் பார்த்துக் கேட்கின்றார், "நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?" ஆனால் பல கிறிஸ்தவர்களும் செவிடர்களாக, எந்த மனச்சாட்சியுமற்றவர்களாக தொடர்ந்து துன்மார்க்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

அன்பானவர்களே, அன்று அப்போஸ்தலராகிய பவுல் கிறிஸ்து தன்னிடம் இப்படிக் கேட்டபோது உடனேயே தன்னை அவருடைய சித்தத்துக்குக் கையளித்தார்.  "அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான்."  ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 : 6 ) அதுபோல தேவ சித்தத்துக்கு நம்மைக் கையளிக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

இதனை வாசிக்கும் யாராக இருந்தாலும் (என்னையும் சேர்த்து)  நம்மையே நிதானித்துப் பார்ப்போம். நமது  வாழ்வில் சவுலைப்போல முள்ளில் உதைத்துக்கொண்டிருக்கின்றோமா? அப்படி முள்ளில் உதைத்துக் கொண்டிருந்தால் எவ்வளவு ஜெபித்தாலும் நமது வேதனைகள் தீராது; பிரச்சனைகள் மாறாது. சவுலைப்போல, "நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்" என்று அவரது சித்தத்துக்குப் பணிந்து நடப்பதாக வாக்களிக்கும்போது மட்டுமே ஆசீர்வாதத்தினைக் காணமுடியும்; பவுலாக மாற முடியும்.   நாமும் கிறிஸ்துவிடம் கேட்போம், "ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?."

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1728                                                                 ஆதவன் 31.10.2025 வெள்ளி        

"நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது." ( லுூக்கா 16 : 15 )

சமூகத்தில் மதிப்பும் மரியாதையம் பெற்றுள்ள மனிதர்கள் சிலவேளைகளில் தங்களது துன்மார்க்கச் செயல்கள் காரணமாக போலீசாரால் கைதுசெய்யப்படுவதையும், நீதிமன்ற வாசல்களில் ஏறி இறங்குவதையும், சிறைச்சாலைகளில் அடைக்கப்படுவதையும் பார்க்க முடியும். குறிப்பாக, நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படும்போது மாற்றுக்கட்சியினரை ஆளும் கட்சியினர் இப்படிக் கைது செய்கின்றனர். 

ஆனால் கைதுசெய்யப்படும் மனிதர்கள் இதுவரை சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெற்று பெருமையாக வாழ்ந்தவர்கள். அதாவது அவர்கள் மனிதர்முன் நீதிமான்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டவர்கள். இப்போது இவர்கள்மேல் குற்றம் சுமத்துமனிதர்களும்  நீதிமான்கள்போல பேசுவார்கள். ஆனால் இருவருக்கும் மனநிலையில் அடிப்படையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை.

மனிதர்களாகிய நாம் ஒருவரின் பதவி, அவரிடமுள்ள செல்வம், அவருக்கு மக்கள் மத்தியிலுள்ள செல்வாக்கு இவைகளை மட்டும் பார்த்து அவர்களுக்கு மதிப்பளிக்கின்றோம். ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைமுறை, அவனது மனநிலை, இருதயத்தின் நினைவுகள் இவைகள் நமக்குத் தெரியாது. ஆனால் இவைகளை எல்லாம்  தேவன் அறிவார். எனவே, இத்தகைய மனிதர்களைப் பார்த்து இயேசு கிறிஸ்து கூறுகின்றார், "நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது."  மனிதனே, நீ உன்னைக்குறித்துப் பெருமையாக எண்ணிக்கொள்கின்றாய், மக்கள் உன்னை மதிக்கின்றனர், ஆனால், எனக்கு நீ அருவருப்பானவன் என்கின்றார் கர்த்தர்.

மனிதன் முகத்தைப் பார்க்கின்றான், ஆனால், கர்த்தரோ இருதயத்தில் மறைந்திருக்கும் நினைவுகளையும் பார்க்கின்றார்.  அன்று ஈசாயின் புதல்வர்களுள் ஒருவனை இஸ்ரவேலின் ராஜாவாக நான் தெரிந்துகொண்டேன், அவனை அபிஷேகம் செய் என்றுகூறி சாமுவேலை தேவன் ஈசாயின் வீட்டிற்கு அனுப்பினார். அப்போது, ஈசாயின் மகன் எலியாபைப் பார்த்து சாமுவேல் இவன்தான் கர்த்தர் தெரிந்துகொண்டவன்  என்று எண்ணினான். அப்போது, "கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்." (1 சாமுவேல் 16:7)

ஆம் அன்பானவர்களே, நாம் நமது உண்மைக் குணத்தை மறைத்து ஒருவேளை மக்களிடம் நல்ல பெயரையும் மதிப்பையும் பெறலாம். ஆனால், அப்படி மக்கள் நம்மை மேன்மையாகக் கருதுவது கர்த்தரின் பார்வைக்கு அருவருப்பாக இருக்கின்றது. மனிதக்கழிவுகள் நமக்கு அருவருப்பாக உள்ளன; ஆனால் பன்றிகளுக்கு அவை விருப்பமான உணவாக இல்லையா? நமது செயல்பாடுகள், இருதயத்தின் நோக்கம் அனைத்தையும் அவர் அறிவார். எனவே, நமது உண்மையான முகத்தை மனிதர்களுக்குமுன்னும் தேவனுக்குமுன்னும் காட்டி ஒளிவு மறைவற்றவர்களாக தேவன் நம்மை மேன்மையாகக் கருதக்கூடிய வாழ்க்கை  வாழ்வோம்.