DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Friday, November 22, 2024

கலாத்தியர் 4: 6 / Galatians 4:6

 'ஆதவன்' 💚டிசம்பர் 01, 2024. ஞாயிற்றுக்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,393

"மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்." ( கலாத்தியர் 4: 6)

பழைய ஏற்பாட்டு பக்தர்கள் கடவுளை பல்வேறு விதமாக அழைத்து வழிபட்டனர். அரண், கன்மலை, சர்வ வல்லவர், ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் என்று பல்வேறு முறையில் தேவனை அழைத்தனர். அதுமட்டுமல்ல, தேவனை அவர்கள் பயப்படத்தக்கவராகவே பார்த்தனர். கடவுளிடம் ஒரு பயத்துடனே நெருங்கினர். ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு புதிய முறையில் தேவனை நமக்கு அறிமுகப்படுத்தினார். 

தேவன் பயப்படத்தக்கவரல்ல, மாறாக அவர் ஒரு தகப்பனைப் போன்றவர். எனவே அவரை அப்பா என்று அழைக்க நமக்குக் கற்பித்தார். "பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே" என்று கூறும்போது பிதாவோடு நமக்கு ஒரு நெருக்கம் உண்டாகின்றது. வேறு எந்த அடைமொழியையும்விட அப்பா என்று தேவனை நாம் அழைக்கும்போது அவரது பிள்ளைகளைப்போலாகின்றோம். 

நாம் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு தேவனோடு ஒப்புரவாகும்போது அவரது பிள்ளைகளாகின்றோம். அப்படி "புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்." என்று கூறப்பட்டுள்ளது. குமாரனுடைய ஆவி என்பது இயேசு கிறிஸ்துவின் ஆவியைக்குறிக்கின்றது. இயேசு கிறிஸ்துவுக்கு அவர் பிதா என்றால் நமக்கும் பிதாதான்  என்பதுதான் இந்த வசனம் கூறுவது. 

"ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்." ( கலாத்தியர் 4: 7) அடிமைகள்தான் எஜமானனுக்குப் பயப்படுவார்கள். நாம் அடிமைகளல்ல; மாறாக கிறிஸ்துமூலமாய் தேவனுடைய உரிமைக்குரியவர்கள் ஆகின்றோம். 

இன்றைய தியான வசனம் மூலம் நாம் அறிவது, நமக்குள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆவி செயல்பட நாம் அனுமதிக்கவேண்டும். அப்போதுதான் அவர் பிதாவுக்கு உரிமையானவரும் பிதாவிடம் உரிமையோடு நெருங்கக்கூடியவருமாக இருந்ததுபோல நாமும் பிதாவை நெருங்கமுடியும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "..........கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8: 9) என்று. 

முன்பு நாம் நியாயப்பிரமாணக்  கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து தேவனுக்குத் தூரமானவர்களாக வாழ்ந்தோம். "நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்" (கலாத்தியர் - 4: 4,5) என்று கூறப்பட்டுள்ளது. எனவே அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது நாமும் அவரது குமாரர்களும் குமாரத்திகளுமாகின்றோம். 

ஆம் அன்பானவர்களே, நாம் நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பு பெறும்போது அவரோடுகூட பிதாவை அப்பா என்று கூப்பிடும் உரிமையினைப் பெறுகின்றோம். அப்பா பிதாவே என்று நாம் ஜெபிப்பதில் அர்த்தம் இருக்கவேண்டுமானால்; அப்படிக் கூப்பிடுவதை அவர் அங்கீகரிக்கவேண்டுமானால் நாம் பாவ மன்னிப்பு பெறவேண்டியதுதான் முதல் தேவையாக இருக்கின்றது.  

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           


AATHAVAN💚 December 01, 2024. 💚 Sunday
Scripture Meditation - Number: 1,393

“And because ye are sons, God hath sent forth the Spirit of his Son into your hearts, crying, Abba, Father.” (Galatians 4:6)

In the Old Testament, believers addressed and worshipped God in various ways: as their refuge, rock, Almighty God, the God of Abraham, Isaac, and Jacob. They often approached Him with reverence and fear, seeing Him as an awe-inspiring presence. However, our Lord Jesus Christ introduced a new way of knowing God.

God is not someone to be feared but rather a Father. Jesus taught us to call Him "Abba," meaning "Father." When we pray, “Our Father who art in heaven,” it establishes a closeness with Him. Among all the titles we may use to call upon God, addressing Him as “Abba” emphasizes our identity as His children.

When our sins are forgiven, and we are reconciled to God, we become His children. Galatians 4:6 states that because we are His children, God sent the Spirit of His Son into our hearts, enabling us to cry out, "Abba, Father." The Spirit of the Son refers to the Spirit of Jesus Christ. If Jesus calls Him Father, then He is our Father too.

“Wherefore thou art no more a servant, but a son; and if a son, then an heir of God through Christ." (Galatians 4:7) Servants fear their masters, but we are not servants.  Instead, through Christ, we are rightful heirs of God.

Today's meditation teaches us to allow the Spirit of Jesus Christ to work within us. Only then can we approach the Father with confidence, as Jesus did. This is why Apostle Paul states, "If anyone does not have the Spirit of Christ, they do not belong to Christ." (Romans 8:9).

Previously, we lived distant from God, bound by the law. "But when the fulness of the time was come, God sent forth his Son, made of a woman, made under the law, to redeem them that were under the law, that we might receive the adoption of sons.”  (Galatians 4:4-5). By believing and accepting Him, we too become His sons and daughters.

Yes, dear ones, when we confess our sins to Christ and receive forgiveness, we gain the privilege of calling God "Abba, Father." To truly experience the meaning of addressing Him as Father and to be recognized as His children, the first requirement is to receive forgiveness for our sins.

Message by: Bro. M. Geo Prakash

Wednesday, November 20, 2024

யோவான் 6 : 9 / John 6:9

 'ஆதவன்' 💚நவம்பர் 30, 2024. 💚சனிக்கிழமை           வேதாகமத் தியானம் - எண்:- 1,392


"இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான்." ( யோவான் 6 : 9 )

தேவனுடைய அளப்பரிய வல்லமையினை உணராமல் சூழ்நிலைகளை மட்டுமே பார்த்து பலவேளைகளில் நாம் கலங்கிவிடுகின்றோம். அல்லது நமக்கு இருக்கும் அற்பமான வருமானத்தைக்கொண்டு எப்படி இந்த உலகத்தில் மற்றவர்களைப்போல் நாமும் வாழ முடியும்? என ஏக்கத்துடன் நமக்குள் கேள்வி கேட்டுக்கொள்கின்றோம். இதுபோலவே பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா எண்ணிக்கொண்டு கூறுவதே இன்றைய தியான வசனம்.

இயேசு போதித்து முடித்தபின் அந்தப் போதனையைக் கேட்கக் கூடியிருந்த மக்களை பசியோடு அனுப்ப விரும்பாமல் அவர்களுக்கு உணவளிக்க விரும்பினார். "இந்த மக்களுக்கு பசியை ஆற்றிட நாம் எங்கே சென்று உணவு கொள்ளலாம்? என்று சீடர்களைப்பார்த்து கேட்டார். அப்போது அவருடைய சீடராகிய பிலிப்பு, "இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கினாலும் இவர்களுக்கு உணவளிக்க அது போதாதே!!"  என்றார். அதனைத் தொடர்ந்து இன்னொரு சீடரான அந்திரேயா இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, இதுபோலவே பலவேளைகளில் நாமும் கலங்கி நிற்கின்றோம். அந்திரேயா  கூட்டத்தைப் பார்த்து மலைத்து, "ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்?" என்று  கூறியதுபோல நாமும், ஐயோ எனக்கு இவ்வளவுதானே வருமானம் வருகின்றது, எனக்குச் செலவுகள் அதிகம் இருக்கின்றதே என்று நமது செலவுகளைப் பட்டியலிட்டுப் பார்க்கின்றோம்.  'இத்தனைச் செலவுகளைச் சமாளிக்க இந்த வருமானம் எம்மாத்திரம்?' என ஏங்குகின்றோம். 

ஆனால் அதே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் ஐயாயிரம் மக்களது பசியைத் தீர்த்ததுமல்லாமல் சாப்பிட்டு முடித்தபின் மிச்சமாக பன்னிரண்டு கூடைகளை  நிரம்பச்  செய்தது. 

இந்த அதிசயம் நடைபெறக்  காரணம் ஒரு  சிறுவன். இதுகுறித்து சாது சுந்தர்சிங் அவர்களுக்குத் தேவன் வெளிப்படுத்தினதை அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:- 'அந்தச் சிறுவன், "நான் இயேசுவின் பிரசாங்கத்தைக் கேட்கச் செல்கிறேன்" என்று தன் தாயிடம் கூறியபோது  அவள் அவனுக்கு இந்த உணவை ஏற்பாடுசெய்து கொடுத்து அனுப்பியிருந்தாள். அங்கு அன்று அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பலரிடம் உணவுகள் இருந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். இந்தச் சிறுவன் மட்டும் ஆர்வத்துடன் தனது உணவைக் கொடுக்க முன்வந்தான்.' ஆம் அன்பானவர்களே, நமக்கு உள்ளது குறைவாக இருந்தாலும் அந்தக் குறைவிலிருந்து நாம் மற்றவர்களுக்குக்  கொடுக்கும்போது நமது தேவைகளை தேவன் அதிசயமாகச் சந்திப்பார்; மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நம்மை ஆசீர்வாதமாக மாற்றுவார். 

அன்று எலியாவுக்கு அப்பம் கொடுத்த சாறிபாத் விதவை வேறு எதுவுமில்லாதவள். கையிலிருந்த கடைசி மாவில்  அப்பம்சுட்டு  சாப்பிட்டுவிட்டு நானும் மகனும் பசியால் சாகத்தான் வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தவள். ஆனால் அந்தச் சூழ்நிலையிலும் அவள் அந்த அப்பத்தை எலியாவுடன் பகிர்ந்துகொண்டாள். ஆசீர்வாதத்தைப்  பெற்றுக்கொண்டாள். (1 இராஜாக்கள் 17: 10 - 16)

"கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்." ( லுூக்கா 6 : 38 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

AATHAVAN 💚 November 30, 2024 💚 Saturday
Bible Meditation - No. 1,392

"Here is a boy who has five barley loaves and two fish, but what are they for so many?" (John 6:9)

Often, we fail to recognize the boundless power of God and instead focus only on the surrounding circumstances, leading to doubt and despair. Similarly, we may question with longing, "How can I live like others in this world with my limited resources?" This is precisely the sentiment expressed by Andrew, Peter's brother, in today's meditation verse.

After Jesus finished teaching, He did not wish to send the crowd away hungry but desired to provide them food. Turning to His disciples, He asked, "Where shall we buy bread for these people to eat?" Philip responded, "Even if we had two hundred denarii worth of bread, it would not be enough for everyone to have a bite!" Then, Andrew remarked as recorded in today's verse.

Yes, dear ones, like Andrew, we often find ourselves overwhelmed by life's challenges. Observing the crowd, Andrew doubted, "How can five barley loaves and two fish be enough for so many?" Similarly, we lament, "This is all the income I have, but my expenses are overwhelming!" We list our expenses and wonder, "How can I manage with so little?"

However, those same five loaves and two fish not only fed five thousand people but also resulted in twelve baskets of leftovers!

This miracle happened because of the selflessness of a young boy. Sadhu Sundar Singh shared a revelation about this event, stating, "When the boy told his mother that he was going to hear Jesus preach, she prepared this food and sent him. Although many in the crowd likely had food, they remained silent. Only this boy eagerly offered what he had."

Beloved, even if we have little, when we share from what we have, God will miraculously meet our needs and make us a blessing to others.

Consider the widow of Zarephath who had nothing left but a handful of flour for her last meal. She believed she and her son would die of hunger after eating it. Yet, even in that dire situation, she shared her bread with Elijah and received abundant blessings. (1 Kings 17:10–16)

"Give, and it will be given to you. A good measure—pressed down, shaken together, and running over—will be poured into your lap. For with the measure you use, it will be measured to you." (Luke 6:38)

Message by: Bro. M. Geo Prakash
       

மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை

 'ஆதவன்' 💚நவம்பர் 29, 2024. 💚வெள்ளிக்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,391


"மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகள் எல்லாம்  பிதாவினால் உண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள்." (1 யோவான்  2 : 16)

இந்த உலகத்தில் நம்மை அதிகம் பாவத்துக்குள்ளாக்கும் காரியங்கள் சிலவற்றை அப்போஸ்தலரான யோவான் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை என அவைகளை வகைப்படுத்திக் கூறுகின்றார். ஆம், இவைகளே நம்மைப் பாவத்துக்கு நேராக இழுத்துச் செல்கின்றன. இச்சை என்பது எதன்மேலாவது நாம் கொள்ளும் அதிகப்படியான ஆசையைக் குறிக்கின்றது. 

மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை இவையே ஏதேனில் ஆதாம் ஏவாள் பாவம் செய்யக் காரணம். "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்." ( ஆதியாகமம் 3: 6) என்று வாசிக்கின்றோம். அதாவது அவர்களது கண்களும் கனியை உண்ணவேண்டும் எனும் உடல் ஆசையும் அவர்களைப் பாவத்தில் வீழ்த்தியது.

இன்றும் மனிதர்கள் செய்யும் பல பாவ காரியங்களுக்கு கண்களும் இத்தகைய உடல் ஆசைகளும்தான் காரணமாக இருக்கின்றன. அடுத்ததாக இன்றைய தியான வசனம் கூறும் பாவம்,  "ஜீவனத்தின் பெருமை". அதாவது தனது வாழ்க்கையைக்குறித்த பெருமை. கண்களால் கண்டதை உடல் அனுபவித்தபின் அதனை மேலும் சேர்த்து வைக்கிறான் மனிதன். இது அவனுக்கு அதிகாரத்தையும் "தான்" எனும் அகம்பாவ பெருமையையும் கொடுக்கின்றது. மற்றவர்களை அவமதித்து அற்பமாக எண்ணத் துவங்குகின்றான். எனவேதான் அப்போஸ்தலரான யோவான்  இவையெல்லாம்  பிதாவினால் உண்டானவைகளல்ல, மாறாக அவைகள் உலகத்தினால் உண்டானவைகள் என்று கூறுகின்றார்.

அப்படி அவை உலகத்தினால் உண்டானவை ஆதலால் அவைகள் நிரந்தரமல்ல. காரணம், இந்த உலகமே நிரந்தரமல்ல பின் எப்படி இந்த நிரந்தரமில்லாத உலகத்தால் உண்டானவை நிரந்தரமாக இருக்க முடியும்? எனவேதான் அவர் தொடர்ந்து கூறுகின்றார், "உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்." (1 யோவான்  2 : 17)

இப்படி நாமும் இவற்றுக்கு அடிமைகளாக வாழ்வோமானால் கண்களின் இச்சைக்கும் மாம்சத்தின் இச்சைக்கும் அடிமைகளான ஆதாமும் ஏவாளும் மேலான தேவ தொடர்பை இழந்ததுபோல   நாமும் தேவனது ஐக்கியத்தை இழந்துவிடுவோம். "எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது." ( ரோமர் 8: 7) மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை இவைகளை மேற்கொண்டு ஆவியின் சிந்தையின்படி வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். 

மாம்சசிந்தையை மேற்கொண்டு ஆவியின் சிந்தைபடி வாழும்போதுதான் நாம் மெய்யான சமாதானத்தையும் நித்திய ஜீவனையும் பெற்று மகிழ முடியும். ஆம், "மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்." ( ரோமர் 8: 6)

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

AATHAVAN 💚 November 29, 2024, 💚 Friday

Scripture Meditation - No: 1,391

"For all that is in the world—the lust of the flesh, the lust of the eyes, and the pride of life—is not of the Father but is of the world." (1 John 2:16)

In today's meditation verse, the apostle John identifies certain things in this world that lead us into sin. He categorizes them as the lust of the flesh, the lust of the eyes, and the pride of life. These are the very things that draw us directly into sin. Lust refers to excessive desire for something.

The lust of the flesh and the lust of the eyes were the reasons behind Adam and Eve's sin. As we read in Genesis 3:6: "So when the woman saw that the tree was good for food, that it was pleasant to the eyes, and a tree desirable to make one wise, she took of its fruit and ate. She also gave to her husband with her, and he ate." Their eyes and their bodily desires led them to fall into sin.

Even today, many sinful acts committed by humans are driven by these bodily desires and the eyes. Next, the meditation verse points out the sin of "the pride of life"— pride in one's life. After experiencing what the eyes see and the body desires, humans seek to accumulate more, which gives them authority and a sense of arrogance. This leads to belittling others and viewing them as inferior.

This is why the apostle John emphasizes that these things are not from the Father but from the world. Since they originate from the world, they are not eternal. The world itself is not eternal, so how can things born of the temporal world be everlasting? Hence, he continues in verse 17: "The world and its desires pass away, but whoever does the will of God lives forever."

If we live as slaves to these desires, we risk losing our connection with God, just as Adam and Eve lost their divine fellowship due to their subjugation to the lust of the flesh and the eyes. Romans 8:7 says: "Because the mind governed by the flesh is hostile to God; it does not submit to God's law, nor can it do so."

We are called to abandon the mindset of the flesh and live according to the Spirit's perspective. When we live this way, forsaking the desires of the flesh and the eyes, we attain true peace and eternal life. As Romans 8:6 declares: "For to be carnally minded is death, but to be spiritually minded is life and peace."

Message by: Bro. M. Geo Prakash

Tuesday, November 19, 2024

தேவனை அறிதல்; வாஞ்சையாய் இருத்தல்

 'ஆதவன்' 💚நவம்பர் 28, 2024. 💚வியாழக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,390


"அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்." ( சங்கீதம் 91 : 14 )

இன்றைய தியான வசனம் நாம் அனைவருமே அதிகம் வாசித்துள்ள 91 ஆம் சங்கீத வசனமாகும். இன்றைய இந்த தியான வசனத்தில் இரண்டு காரியங்களைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது. அதாவது கர்த்தரை அறிதல் மற்றும் அவர்மேல் வாஞ்சையாய் (பற்றுதலாய்) இருத்தல்.  

முதலில் நாம் அவரை அறிந்தவர்களாக இருக்கவேண்டும். அறிதல் என்பது பெயரளவில் அவரது பெயரையும் அவர் செய்யும் அற்புதங்களையும் அறிவதல்ல; மாறாக தனிப்பட்ட முறையில் நாம் நமது வீட்டிலுள்ள அப்பா, அம்மா அல்லது கணவன், மனைவி இவர்களைக்குறித்து  அறிந்திருப்பதைப்போல அவரை அறிவதைக் குறிக்கின்றது.    

நமக்கு நமது அப்பா அம்மாவுக்கு என்ன உணவு பிடிக்கும், என்ன செய்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதை அறிந்திருக்கின்றோம். இதுபோல ஒரு கணவனும் மனைவியும் தங்களது வாழ்க்கைத் துணைவரின் விருப்பங்களை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். தங்களுக்குள்ள குடும்ப மற்றும் தனிப்பட்டப் பிரச்னைகளைக்குறித்து ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்வார்கள்.   சுருக்கமாகக் கூறவேண்டுமானால் அவர்களுக்குள் எந்த ரகசியமும் இருக்காது. 

இதுபோல நாம் தேவனோடுள்ள உறவில் இருப்பதுதான் அவரை அறிதல். தேவன் நாம் என்ன செய்வதை அதிகம் விரும்புவார், அவரை மகிழ்ச்சிப்படுத்த நாம் என்ன செய்யவேண்டும், நமது பிரச்சனைகள் துன்பங்கள் மட்டுமல்ல, நமது மகிழ்ச்சியான தருணங்கள் இவை அனைத்தையும் நாம் அவரோடு பகிர்ந்துகொள்வது இவை தேவனை நாம் அறிந்திருந்தால் நமக்குள் இருக்கும். இப்படி தேவனை நாம் அறிந்தவர்களாக இருக்கவேண்டும். மேலும் இது, தேவனது பெயரை அறிவதையல்ல, மாறாக அவரை நமது உள்ளத்தில் அனுபவித்து அறிவதைக் குறிக்கின்றது. 

மட்டுமல்ல, "அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்." ( 1 யோவான்  2 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தேவ கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிந்து நடப்பது அவரை நாம் அறிந்துள்ளோம் என்பதனை வெளிப்படுத்தும். குறிப்பாக தேவனது அன்புக் கட்டளைக்குக் கீழ்ப்படிவது. "பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.. அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்." (1 யோவான் 4:7,8)

இரண்டாவது காரியம் அவர்மேல் வாஞ்சையாய் இருத்தல் அல்லது பற்றுதலாய் இருத்தல். பலரும் தேவன்மேல் பற்றுதலாய் இருப்பது என்பதை ஆலயங்களுக்குச் செல்வதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அது மட்டுமல்ல, மாறாக, என்ன துன்பங்கள் வந்தாலும் யோபுவைபோல தேவன்மேலுள்ள விசுவாசத்தில் தளர்ந்திடாமல் அவர்மேல் தொடர்ந்து அன்புகூர்ந்து அவர் கட்டளைகளுக்குக் கீழ்படிவது.  "ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்" (1 பேதுரு 2:19) என்கின்றார் பேதுரு. 

ஆம் அன்பானவர்களே, இப்படி நாம் வாழ்வோமானால் "அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்." என்று இன்றைய தியான வசனம் கூறுவதுபோல அவர் நம்மை அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுவித்து உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

'AATHAVAN' 💚 November 28, 2024, 💚 Thursday
Bible Meditation - Number: 1,390

"Because he has set his love upon Me, therefore I will deliver him; I will set him on high, because he has known My name." (Psalm 91:14)

Today's meditation verse is one of the most frequently read verses from Psalm 91. This verse highlights two significant aspects: knowing the Lord and having a deep affection (attachment) for Him.

1. Knowing the Lord

First, we must strive to truly know Him. Knowing the Lord doesn’t simply mean being familiar with His name or the miraculous works He performs; it signifies a personal and intimate relationship, akin to how we know our parents, spouse, or close family members.

For example, we know what kind of food our parents like or what makes them happy. Similarly, a husband and wife are well aware of each other's preferences, and they openly share their personal and familial problems. In such relationships, there are no secrets.

Likewise, knowing the Lord means being in such an intimate relationship with Him. It involves understanding what pleases God, what makes Him rejoice, and sharing with Him not only our sorrows and troubles but also our moments of joy. This kind of intimate connection is what it means to know the Lord. It is not about merely knowing His name but experiencing Him in our hearts.

Furthermore, Scripture says: "Now by this we know that we know Him, if we keep His commandments." (1 John 2:3) This means that obedience to God’s commandments, especially His command to love, is evidence that we know Him. "Beloved, let us love one another, for love is of God; and everyone who loves is born of God and knows God. He who does not love does not know God, for God is love."
(1 John 4:7-8)

2. Setting Our Love Upon Him

The second aspect is having a deep affection or attachment to the Lord. Many assume that being attached to God simply means attending church services, but it goes far beyond that. It is about steadfast faith and unwavering love for God, regardless of challenges, just as Job exhibited in his life. Peter says: "For this is commendable, if because of conscience toward God one endures grief, suffering wrongfully."
(1 Peter 2:19)

Yes, dear ones, when we live this way, as the verse says: "Because he has set his love upon Me, therefore I will deliver him; I will set him on high, because he has known My name," God will deliver us from all afflictions and place us in a high refuge.

Monday, November 18, 2024

உதடுகளும் நாவும் காக்கப்படட்டும்

 'ஆதவன்' 💚நவம்பர் 27, 2024. 💚புதன்கிழமை               வேதாகமத் தியானம் - எண்:- 1,389

 
"என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும், என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லை..." ( யோபு 27 : 2, 3 )

மனிதர்களில் பலர் உண்மையும் நேர்மையுமான வாழ்க்கை வாழ்ந்தாலும் துன்பங்கள் தொடரும்போது, "நான் நல்லவனாக வாழ்ந்து என்ன பயன்? மற்றவர்களைப்போல் நானும் தவறான காரியங்களில் ஈடுபட்டால் என்ன?" என்று தங்களுக்குள் எண்ணுவதும் சிலவேளைகளில் தவறான காரியங்களில் ஈடுபடுவதும் உண்டு. 

ஆனால் இன்றைய தியான வசனத்தைக் கூறும் யோபு அனுபவித்தத் துன்பங்களை நாம் அறிவோம். அனைத்துச் செல்வங்களையும், குழந்தைகளையும், உடல் நலத்தையும் இழந்து உயிர் மட்டும் உடம்பில் ஒட்டிக்கொண்டு இருக்கும்போது அவர் கூறுகின்றார், "என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும், என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லை..." அதாவது, என்னதான் துன்பங்கள் வந்தாலும் நான் தேவனுடைய காரியங்களில் உண்மையாகவே இருப்பேன் என்கிறார்.

யோபு இப்படியான மனநிலை உள்ளவராக இருந்ததால்தான் யோபு முதல்  அதிகாரத்தில் முதல் வசனமாகக் கூறப்பட்டுள்ளது, "ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்." ( யோபு 1 : 1 ) என்று. உத்தமன், சன்மார்க்கன், பொல்லாப்புக்கு விலகுகிறவன் என்று யோபுவைப்பற்றி நாம் வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே யோபு இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்ததால்தான் இறுதியில் தான் இழந்தவை அனைத்தையும் இரண்டுமடங்காய்ப் பெற்று அனுபவித்தார். "கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்."  ( யோபு 42 : 12 ) என்று கூறப்பட்டுள்ளது. 

தேவனுக்குமுன் நாம் உண்மையும் உத்தமுமாக வாழும்போது தேவன் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார் என்பதற்கு யோபு நமக்கு ஒரு உதாரணமாக இருக்கின்றார். யோபுவைபோல நாமும் "என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும், என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லை..." என உறுதியெடுக்கவேண்டும்; அதனைச் செயலில் காண்பிக்கவேண்டும். 

மற்றவர்களை எப்படி வாழ்கின்றார்கள் என நாம் பார்க்கவேண்டிய அவசியமில்லை. நமது வாழ்வின் தாழ்மையைக் காரணம் காட்டி நேர்மை தாவறவேண்டியதில்லை. யோபுவைபோல வாழ முயற்சியெடுப்போம்.  "உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்." ( நீதிமொழிகள் 28 : 20 ) என்று வேதம் கூறுகின்றது.

இன்றைய தியான வசனத்தை நமது வாழ்வாக்க முயற்சியெடுப்போம். நமது உதடுகள் தீமை சொல்லாமலும் நமது நாவு கபடம் பேசாமலும் இருக்கட்டும்.

"உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்." (சங்கீதம் 34:13)

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

AATHAVAN 💚 November 27, 2024, 💚 Wednesday
Scripture Meditation – No. 1,389

 "As long as my breath is in me, and the Spirit of God is in my nostrils, my lips will not speak wickedness, nor my tongue utter deceit." (Job 27:2, 3) 

Many people live lives of truth and integrity, but when troubles persist, they sometimes question, "What is the point of living righteously? What if I, too, engage in wrongful acts like others?" Occasionally, such thoughts lead to lapses in integrity.

However, today's meditation verse reflects the stance of Job, who endured immense suffering. Losing all his wealth, children, and health, and clinging to life by a thread, he still declared:
"As long as my breath is in me, and the Spirit of God is in my nostrils, my lips will not speak wickedness, nor my tongue utter deceit." This shows Job's commitment to staying true to God, no matter the challenges he faced.
  
Because of his steadfastness, Job is described in the very first verse of his book: "There was a man in the land of Uz whose name was Job, and that man was blameless and upright, one who feared God and turned away from evil." (Job 1:1)

Yes, beloved, because Job lived such a life, he ultimately received double of all he had lost. The Bible says: "The Lord blessed the latter days of Job more than his beginning." (Job 42:12)

Job stands as an example that living a life of truth and integrity before God will bring His blessings. Like Job, we, too, must resolve:
"As long as my breath is in me, and the Spirit of God is in my nostrils, my lips will not speak wickedness, nor my tongue utter deceit." Not only should we affirm this, but we should also live it out in our actions.

We need not compare our lives with others or compromise our integrity due to our circumstances. Instead, let us strive to live like Job. The Bible says: "A faithful man will abound with blessings, but whoever hastens to be rich will not go unpunished." (Proverbs 28:20)

Let us work to make today's meditation verse a reality in our lives. May our lips refrain from speaking wickedness, and our tongues avoid deceit.

"Keep your tongue from evil and your lips from speaking deceit." (Psalm 34:13)   

Sunday, November 17, 2024

மாற்கு 13 : 31

 'ஆதவன்' 💚நவம்பர் 26, 2024. செவ்வாய்க்கிழமை    வேதாகமத் தியானம் - எண்:- 1,388


"வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை." ( மாற்கு 13 : 31 )

ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் தேவன் பூமியையும் வானத்தையும் வானிலுள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் பூமியிலுள்ள ஊரும் பிராணிகள்,  பறவைகள், மிருகங்கள் புற்பூண்டுகள் இவற்றையெல்லாம் படைப்பதையும் ஒவ்வொன்றையும் படைத்து அவை நல்லதெனக் கண்டார் என்றும் வாசிக்கின்றோம்.  இறுதியாக அவர் மனிதனைப் படைத்தார். 

ஆனால் அப்படி அனைத்தையும் படைத்து நல்லதெனக் கண்ட தேவன் அவை அனைத்தும் அழித்து ஒழிக்கப்படும் என்கின்றார். ஆம், "அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்; வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும்." ( மாற்கு 13 : 24, 25 ) அதாவது இவை அனைத்தும் அழிக்கப்பட்டு ஒழிந்துபோகும் என்று வாசிக்கின்றோம். 

வானம், அவர் பார்த்துப்பார்த்து உண்டாக்கி நல்லதெனக்கண்ட பூமி இவை அனைத்தும் அழிக்கப்படும். ஆனால், அவரது வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை என்கின்றார். வார்த்தை என்பது தேவனைக் குறிக்கின்றது. இதனை நாம் யோவான் நற்செய்தியில், "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ( யோவான் 1 : 1 ) என வாசிக்கின்றோம். 

ஆதியிலே வார்த்தையாக இருந்தவர்தான் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. இதனையும் அப்போஸ்தலரான யோவானே "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." ( யோவான் 1 : 14 ) என்று குறிப்பிடுகின்றார். அதாவது அவர் உருவாக்கியவை அனைத்தும் அழிக்கப்படும் ஆனால் வார்த்தையான அவரே நிலைத்திருப்பார். 

அன்பானவர்களே, நாம் இன்று பூமியில் சொத்துசுகங்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றோம். ஆனால் பூமியும் வானமும் அழிக்கப்படும்போது இவையும் அழிக்கப்படும். ஆனால் வார்த்தையான அவர் மட்டும் நிலைத்திருப்பார். நாம் அவரோடு இணைந்த வாழ்வு வாழ்வோமானால் அவர் நிலைத்திருப்பதுபோல நாமும் அவரோடு நிலைத்திருப்போம். இதனையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்." ( யோவான் 6 : 57 ) என்று கூறினார். 

இயேசுவைப் புசிப்பது என்பது அவரை நமது உள்ளத்தில் முழுமையாக ஏற்றுகொல்வதைக் குறிக்கின்றது.  நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரோடு இணைந்த  வாழ்க்கை வாழும்போது நாம் அவரைப் புசிக்கின்றோம். அவர் எத்தனை இனிமையானவர் என்பதனை வாழ்வில் ருசிக்கின்றோம். மட்டுமல்ல, அவர் நிலைத்திருப்பதுபோல நாமும் அவரோடு நிலைத்திருப்போம். இதற்காக இயேசு கிறிஸ்து ஏற்கெனவே பிதாவிடம் ஜெபித்துவிட்டார். "...........நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17 : 24 )

அவரைத் தனிப்பட்ட முறையில் வாழ்வில் ஏற்றுக்கொண்டு ருசிக்க முயலுவோம். அப்போது,  வானமும் பூமியும் ஒழிந்தாலும் ஒழியாத வார்த்தையான தேவனோடு  நாமும் ஒழியாமல் நிலைத்திருப்போம். இதுவே நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வு. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்         

சங்கீதம் 71 : 1

 'ஆதவன்' 💚நவம்பர் 25, 2024. 💚திங்கள்கிழமை         வேதாகமத் தியானம் - எண்:- 1,387


"கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்." ( சங்கீதம் 71 : 1 )

நாம் வாழ்வில் சிறுமை அடையும்போது நமது உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் வெட்கமடைந்து போகின்றோம். அவர்களோடு நம்மால் சகஜமாக பழகமுடிவதில்லை.  இதற்குக் காரணம் ஒன்று நமது மனநிலை இன்னொன்று நமது சிறுமையைப்பார்த்து மற்றவர்கள் நம்மை அற்பமாக எண்ணுவதும் நடத்துவதும். சிலர் வெளிப்படையாகவே சிறுமையானவர்களை அற்பமாக நடத்துவதுண்டு. சிலவேளைகளில் நமது பிள்ளைகளின் வாழ்க்கையை; அவர்களது வேலைவாய்ப்பற்ற நிலைமையை அல்லது அவர்களது திருமணத் தோல்விகளைக் குறிப்பிட்டு நம்மை வெட்கப்படும்படியான பேச்சுக்களை நாம் கேட்க நேரிடும்.  

இத்தகைய அற்பமடையும் சூழ்நிலை இன்றைய சங்கீத ஆசிரியருக்கும் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் கூறுகின்றார், "தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்." ( சங்கீதம் 71 : 11 ) ஆம், இவனது வாழ்க்கை இவ்வளவுதான்; இனி இவன் முன்னேறப்போவதில்லை என்று கூறிக்கொள்கின்றனர். 

ஆனால் இத்தகைய சிறுமையடைந்தவர்களைப் பார்த்துத் தேவன் கூறுகின்றார், "உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்" ( ஏசாயா 61 : 7 ) ஆம் அன்பானவர்களே, தேவனையே நாம் சார்ந்து வாழும்போது நமது வெட்கத்துக்குப் பதிலாக இரண்டு மடங்கு பலனும் மகிழ்ச்சியும் நமக்குத் தேவன் தருவார். இன்று நீங்கள் இப்படி வெட்கப்பட்டு மற்றவர்களைவிட்டுத் தனித்து வாழ்கின்றீர்களா? கவலைபடாதிருங்கள்.

அப்போஸ்தலரான பவுல் அடிகளுக்கு இந்த நம்பிக்கை அதிகமாக இருந்தது. அந்த நம்பிக்கையில் அவர் கூறுகின்றார், "நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்..." ( 2 தீமோத்தேயு 1 : 12 ) ஆம், நாம் விசுவாசித்திருக்கின்றவர் யார் என்பது நமக்குத்தெரியும். அவரும் நம்மைப்போல ஒடுக்கப்பட்டும் வெட்கப்பட்டும் அவமானத்துக்கும் உள்ளானவர்தான். அவருக்கு நமது நிலைமை நன்கு தெரியும். 

"அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; .." ( ஏசாயா 53 : 3 ) புறக்கணிக்கப்படும் நம்மைவிட்டுச் சிலர் தங்கள் முகங்களைத் திருப்பிக்கொள்வதுபோல நமது ஆண்டவராகிய இயேசுவை அவரது அற்பமான நிலையில் கண்டவர்கள் முகங்களைத் திருப்பிக்கொண்டனர்.  

"அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்." ( ஏசாயா 53 : 7 )

ஒடுக்கப்பட்டு வெட்கமடையும்போது நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்போல அமைதியாக நம்பிக்கையுடன் இருப்போம்.  நமது வெட்கப்படுதல் நிரந்தரமல்ல; காரணம், நாம் விசுவாசிக்கிறவர் இன்னார்  என்று அறிவோம்.  அவர் ஒருபோதும் நம்மை வெட்கத்திலேயே அமிழ்ந்துபோக விடமாட்டார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                    

Saturday, November 16, 2024

கலாத்தியர் 3:29

 'ஆதவன்' 💚நவம்பர் 24, 2024. ஞாயிற்றுக்கிழமை      வேதாகமத் தியானம் - எண்:- 1,386


"நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்". (கலாத்தியர் 3:29)

சுதந்திரவாளி,  சுதந்திரம் எனும் வார்த்தைகளை நாம் வேதாகமத்தில் பல இடங்களில் வாசிக்கின்றோம். இது முறையே உரிமையுடையவன், உரிமை எனும் அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது. இன்றைய தியான வசனம் கூறுகின்றது, நாம் கிறிஸ்துவுக்கு உரிமையுடையவர்களாக இருப்போமானால் நாமே ஆபிரகாமின் சந்ததி. வாக்குத்தத்தங்களுக்கு உரிமையுள்ளவர்கள். 

ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார்  அதுவே அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆம் அன்பானவர்களே, தேவன் நமது நீதிசெயல்களைப்பார்த்து நம்மை இரட்சிப்பதில்லை. மாறாக அவர்மேல்கொள்ளும் விசுவாசத்தால் நாம் இரட்சிக்கப்படுகின்றோம். "அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக." ( கலாத்தியர் 3 : 6, 7 )

கிறிஸ்தவ மார்க்கமே விசுவாச மார்க்கம்தான். கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசமே நம்மை மீட்படையச் செய்கின்றது. மட்டுமல்ல, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தும் ஆபிரகாமுக்குப் பலித்ததுபோல கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொள்ளும் நமக்கும் பலிக்கின்றது. "................................அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது." ( ரோமர் 4 : 16 ) என்று வாசிக்கின்றோம். 

எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்" என்று. நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்களாகும்போது நாமே ஆபிரகாமின் சந்ததியாக இருக்கின்றோம். மட்டுமல்ல, அந்த வாக்குறுதியின்படி நாம் உரிமைக் குடிமக்களாகின்றோம். 

அடிமைக்கும் உரிமைக் குடிமகனுக்கும் வித்தியாசமுண்டு. அடிமைகளாக நாம் இருப்போமானால் கிறிஸ்துவிடம் நமக்கு உரிமைகள் எதுவும் இல்லாதவர்களாக இருப்போம். "அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது." ( கலாத்தியர் 4 : 30 )

நாம் அடிமைகளாக புறம்தள்ளப்படாமல் இருக்கவேண்டுமானால் நாம் விசுவாசத்தால் கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு உரிமையுள்ளவர்களாக மாறவேண்டியது அவசியம். நாம் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருப்போம். எனவே கிறிஸ்துவின்மேல் பூரண விசுவாசமுள்ளவர்களாக வாழ்வோம். பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரது வாக்குறுதிகளுக்கு உரிமையுள்ளவர்களாக மாற முயலுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

Thursday, November 14, 2024

யோவான் 4 : 42

 'ஆதவன்' 💚நவம்பர் 23, 2024. 💚சனிக்கிழமை              வேதாகமத் தியானம் - எண்:- 1,385


"அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்." ( யோவான் 4 : 42 )

இன்று கிறிஸ்துவை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொள்ளும் பலரும் பொதுவாக இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களையே பெரிதாகக் கூறிக்கொண்டு வாழ்கின்றனர். அன்றும் இதுபோலவே அவரதுபின்னே  சென்ற திரளான மக்களில் பலரும் அவர் செய்த அற்புதங்களைப் பார்க்கவும் அனுபவிக்கவுமே சென்றனர். எனவே அவர்களில் பலரும் அவரை ஆத்தும இரட்சகராக கண்டுகொள்ள முடியவில்லை. 

ஆனால் இதற்கு மாறாக, அவரது அற்புதங்களையல்ல, அவரது வாயின் வார்த்தைகளை நாம் வாசித்து உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இரட்சிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும். இப்படியே சமாரியா மக்கள் அவரை உலக இரட்சகராக அறிந்துகொண்டனர். அதனையே அவர்கள் இன்றைய தியான வசனத்தில் "அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம்." என அறிக்கையிடுகின்றனர். அதாவது, அற்புதங்களைக் கண்டு அல்ல மாறாக, அவருடைய உபதேசத்தைக் கேட்டு அறிந்துகொண்டோம் என்கின்றனர்.   

யூதர்கள் சமாரியர்களை அற்பமாக, தீண்டத்தகாதவர்களாக எண்ணினார்.  ஆனால் அந்தச் சமாரியர்கள்தான்  இயேசுவின் வார்த்தைகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு அவரை உலக இரட்சகராகக் கண்டுகொண்டனர். ஆனால் அவரது வல்ல செயல்களைக் கண்டும் அவரது வார்த்தைகளைப் புறக்கணித்த  யூதர்களில் பலரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தன்னை நம்பவேண்டும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்து அவர்கள் மத்தியில் வல்ல செயல்கள் பல செய்தார். 

நான் சொல்வதை நம்புங்கள் அல்லது நான் செய்யும் வல்ல செயல்கள் அற்புதங்களைக் கண்டாவது என்னை நம்புங்கள் என்றார் அவர். "நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்." ( யோவான் 14 : 11 ) என்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் வெறுமனே இயேசு கிறிஸ்துவிடம் அற்புதங்களையும் அதிசயங்களையும் எதிர்பார்த்து அவரிடம் வருவதைவிட அவரது வார்த்தைகளை அறியும் ஆர்வமுள்ளவர்களாகவும் அவற்றை முழுவதுமாக ஏற்றுக்கொள்பவர்களுமாகவும் வாழவேண்டியது அவசியம்.  இறுதிநாளில் அவர் தனது வசனத்தின்படியே நியாயம்தீர்ப்பார். "என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 ) என்றார் இயேசு. 

உலக ஆசீர்வாதங்களைக் கண்டு அனுபவிக்க ஓடிய பெரும்பாலான யூதர்களைப்போல அல்லாமல் அவருடைய உபதேசத்தை கேட்டு அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசித்த சமாரியர்களைப்போல நாமும் மாறவேண்டியதே நாம் செய்யவேண்டியது.  அப்போதுதான்  நல்ல சமாரியன் இயேசு என்றும் நம்மோடு இருப்பார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

Tuesday, November 12, 2024

"என்னத்திற்காக வந்திருக்கிறாய்?"

 'ஆதவன்' 💚நவம்பர் 22, 2024. 💚வெள்ளிக்கிழமை   வேதாகமத் தியானம் - எண்:- 1,384


"அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார்." ( மத்தேயு 26 : 49, 50 )

இன்றைய தியான வசனம் கெத்சமெனி தோட்டத்தில் இயேசுவைக் கைதுசெய்ய  பிரதான ஆசாரியனும் மூப்பர்களும் திரளான மக்களும் யூதாஸ்  இஸ்காரியாத்தோடு வந்தபோது நடந்த சம்பவத்தைக் குறிக்கின்றது. 

இந்த யூதாஸ் இயேசு கிறிஸ்துவோடு மூன்றரை ஆண்டுகள் வாழ்ந்தவன்தான்; அவரைபற்றியும் அவர் செய்த அற்புதங்களையும் கண்ணால் பார்த்தவன்தான். இப்போதும் அவன் இயேசுவை வாழ்த்தவே செய்தான், அவரை முத்தமிட்டான்.  இந்தச் சம்பவம் அவன் வெளிப்பார்வைக்கு  இயேசு கிறிஸ்துவோடு வாழ்பவனாக இருந்தாலும்  உண்மையில் அவரோடு வாழவில்லை என்பதையே குறிக்கின்றது. 

இந்த சம்பவங்கள் நம்மை நாமே நிதானித்துப்பார்க்கவும்  நம்மைத் திருத்திக்கொள்ளவும்  அறிவுறுத்துகின்றது. ஆம் அன்பானவர்களே, இந்த யூதாசைபோலவே நம்மில் பலரும் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். ஆலய ஆராதனைகளில் பல ஆண்டுகள் கலந்துகொண்டு இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ளோம் என்று கூறிக்கொள்கின்றோம். யூதாஸ் அவரைப் புகழ்ந்ததுபோல அவரை நமது நாவினால் துதிக்கின்றோம். அவரது சிலுவையை முத்தமிடுகின்றோம். 

ஆனால் இயேசு கிறிஸ்து யூதாஸிடம் கேட்டது போல நம்மிடம், "சிநேகிதனே / சிநேகிதியே  என்னத்திற்காக வந்திருக்கிறாய்?" என்று  கேட்டால் என்ன பதில் கூறுவோம்?  இதுவே நாம் சிந்திக்கவேண்டியது. நம்மில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகித மக்களும் இந்தக் கேள்விக்கு ஏதாவது ஒரு உலக ஆசீர்வாதம் சம்பந்தமான பதிலையே கூறுவார்கள். ஆனால் இந்தக் கேள்விக்கு யூதாஸ் எந்தப்பதிலும் கூறவில்லை. 

நாம் உண்மையில் எதற்காக இயேசு கிறிஸ்துவைத் தேடுகின்றோம்? எதற்காக அவரிடம் வந்து அவரை முத்தம் செய்கின்றோம். உலக ஆசீர்வாதங்களை மட்டுமே நாடி நாம் அவரிடம் வருவோமானால் நாமும் யூதாசைப் போன்றவர்களே. ஆம் அவன் முப்பது வெள்ளிக்காசு கிடைக்கும் என்பதற்காகவே இயேசு கிறிஸ்துவிடம் வந்து அவரை வாழ்த்தி முத்தமிட்டான். நாம் அவனைப்போல அறிவிலிகளாக இருக்கக்கூடாது. 

நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு மீட்பு அனுபவம் பெறவேண்டும் எனும் ஆர்வத்தில் அவரிடம் வருவோமானால் நாம் அவரை வாழ்வில் நம்முள் பெற்று அனுபவிக்கலாம். இல்லாவிட்டால் நாமும் யூதாசைப் போலவே அவரை முத்தமிட்டு நெருங்குகின்றவர்களாகவே இருப்போம். 

"சிநேகிதனே / சிநேகிதியே  என்னத்திற்காக வந்திருக்கிறாய்?" என்று நம் ஒவ்வொருவரிடமும் இயேசு கிறிஸ்து இப்போதும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றார். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்