ஆதவன் 🖋️ 699 ⛪ டிசம்பர் 27, 2022 செவ்வாய்க்கிழமை
"அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." (1 யோவான் 4 : 19) / "We love him, because he first loved us." (1 John 4: 19) தொடர்பு முகவரி:- சகோ. எம். ஜியோ பிரகாஷ், 18E1, திருச்சிலுவைக் கல்லூரிச் சாலை, புன்னை நகர், நாகர்கோவில் - 629 004. Cell-96889 33712 & 7639022747. 18E, Holy Cross College Road, Punnai Nagar, Nagercoil - 629 004, Kanyakumari District, India
Sunday, December 25, 2022
பலவான்களைத் தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்
இருளிலிருந்து ஒளியைநோக்கி ...
ஆதவன் 🖋️ 698 ⛪ டிசம்பர் 26, 2022 திங்கள்கிழமை
"சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்" ( யோவான் 3 : 21 )
இருளிலிருந்த மக்களை விடுவித்து ஒளியைநோக்கி நடத்திட ஒளியாகிய இயேசு கிறிஸ்து மனிதனாக உலகினில் வந்தார். இங்கு "மெய்யான ஒளி" எனும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்படியானால், பொய்யான ஒளி என்று ஒன்றும் இருக்கின்றது என்பது விளங்குகின்றது. பலரும் பொய்யான ஒளியை மெய்யான ஒளி என எண்ணி மோசம்போகின்றனர். ஆத்தும இரட்சிப்பில்லாத போலி அற்புதங்கள் போலி ஆசீர்வாதங்கள் இவை பொய்யான ஒளியினால் ஏற்படுபவை. ஆம், எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே" (II கொரிந்தியர் 11:14) என எழுதுகின்றார்.
மெய்யான ஒளியான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் பிரகாசிக்கச் செய்பவரல்ல.; அவர் எந்த மனிதனையும் பிரகாசிக்கச்செய்பவர். அவர் மனிதரிடம் வேற்றுமை பாராட்டுபவரல்ல. ஆனால் இந்த உலகம் அன்று இயேசு கிறிஸ்துவை அறியாமல் இருந்ததுபோலவே இன்றும் அறியவில்லை. "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை." ( யோவான் 1 : 10 )
ஆம் அன்பானவர்களே, ஒளியைப் பகைக்கிறவனாக ஒருவன் இருக்கிறானென்றால் அவன் இருள் நிறைந்தவனும், ஒளியை ஏற்றுக்கொள்ள முடியாதவனுமாய் இருக்கிறான் என்று பொருள். தேள், பூரான், கரப்பான், இன்னும் கற்களுக்கடியில் பதுங்கி வாழும் உயிரினங்களும் இரவில் நடமாடும் விலங்கினங்களும் ஒளியை விரும்புவதில்லை. அவை இருளையே நாடிச்செல்லும். அதுபோலவே ஜீவ ஒளியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஒருவன் பகைக்கிறானென்றால் அவனது இருதயம் இருளின் ஆட்சியிலும் பொய்யான ஒளியின் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றது என்று பொருள்.
இதனையே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, "பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்." ( யோவான் 3 : 20 ) என்று குறிப்பிடுகின்றார். ஆனால், "சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்" ( யோவான் 3 : 21 )
சத்தியத்தின்படி வாழ்ந்து, நமது செயல்கள் தேவனுக்குள்ளான தூய்மையான செயல்கள் என்று கருதினால் நாம் ஒளிக்குத் தூரமானவர்கள் அல்ல. அதே நேரம் நாம் கிறிஸ்தவர்களாக வாழ்ந்தாலும் நமது செயல்கள் இருளின் செயல்பாடுகளாக இருக்குமேயானால் நாம் இன்னும் மெய்யான ஒளியை நமக்குள் பெறவில்லை என்று பொருள்.
"இருளில் நடக்கிற ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது." ( ஏசாயா - 9:2 ) என்று ஏசாயா இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்து தீர்க்கதரிசனம் கூறினார். ஆம், இருளில் நடக்கிற ஜனங்கள் சிறிய ஒளியையல்ல, பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மட்டுமல்ல, அந்த ஒளி மரண இருளில் குடியிருப்பவர்கள்மேல் பிரகாசித்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனும் மெய்யான ஒளி, இன்று கிறிஸ்துவைப் பகைக்கும், வெறுக்கும் மனிதர்களையும் பிரகாசிக்கச் செய்யக்கூடியது. இதற்கு ஆயிரக்கணக்கான உயிருள்ள சாட்சிகள் உண்டு. கம்யூனிச சித்தாந்தத்தில் மூழ்கி கிறிஸ்துவைக்குறித்து அவமானமாய்ப் பேசித்திரிந்த நானும் இதற்கு ஒரு சாட்சியே.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
மனுஷர்மேல் பிரியமும் நம் ஒவ்வொரு கிறிஸ்தவன் மூலமும் உலகினில் உண்டாவதாக.
ஆதவன் 🖋️ 697 ⛪ டிசம்பர் 25, 2022 ஞாயிற்றுக்கிழமை
"அந்நேரமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்." ( லுூக்கா 2 : 13, 14 )
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள் !!!
கிறிஸ்து பிறந்தவுடன் அவரைப்பற்றி அறிவிக்கப்பட்ட முதல் அறிவிப்பு, கிறிஸ்து பிறந்ததால் பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று கூறுகின்றது. சமாதானக் காரணர் என்றே இயேசு கிறிஸ்து அறியப்படுகின்றார். அவர் பல இடங்களில் மக்களையும் சீடர்களையும் பார்த்துக் கூறிய வார்த்தைகள் சமாதான வார்த்தைகளே.
மனிதனது பாவச் செயல்பாடுகளே சமாதானக் குறைவுக்குக் காரணம் என்பதால் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பல்வேறு கட்டளைகள் கொடுக்கப்பட்டன. இக்கட்டளைகள் மனிதனை பாவத்தில் விழாமல் காப்பாற்றும் என எண்ணப்பட்டது. இவற்றை நியாயப்பிரமாணக் கட்டளைகள் என்று கூறுகின்றோம். பத்துக் கட்டளைகளைத் தவிர, யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம் நூல்களில் பலக் கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை மொத்தம் 613 கட்டளைகள் என்று வேத அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். ஆனாலும் பாவமும் தொலையவில்லை சமாதானமும் வரவில்லை.
ஆனால் பலியாக இறப்பதற்காகவே உலகினில் பிறந்த கிறிஸ்து, தனது இரத்தத்தால் நித்திய மீட்பை உண்டுபண்ணி பாவத்தை மன்னிக்கும் மீட்பை உண்டுபண்ணி அந்தப் பாவங்களில் மனிதர்கள் விழுந்துவிடாமல் அவர்களை வழிநடத்திட பரிசுத்த ஆவியானவரையும் நமக்குத் தந்துள்ளார். கிறிஸ்துவின் கிருபைக்குள் வந்துவிடும்போது பாவத்தை மேற்கொள்ளும் வல்லமை நமக்குக் கிடைக்கின்றது. சமாதானமும் கிடைக்கின்றது.
இதனையே நாம் ரோமர் நிருபத்தில், "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 ) என்று வாசிக்கின்றோம்.
இரண்டாவது மனிதத்தன்மையுடன் பிறரிடம் நடக்கக்கூடிய மன நிலை. இதுவும் கிறிஸ்து இயேசுவால் வந்ததே. கட்டளைகளைப் பார்க்காமல் மனிதரை மதித்து நடக்கவேண்டிய மனநிலை. இதனால்தான் இயேசு கிறிஸ்துக் கூறினார், " மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது". ஆகவே சட்டங்கள் மனிதனுக்காகவேத் தவிர மனிதன் சட்டத்திற்காக அல்ல. எந்தச் செயலைச் செய்யும்போதும் முதலில் நாம் பார்க்கவேண்டியது மனித நலம். மனித நலமா தேவ கட்டளையா என்று பிரச்சனைவரும்போது மனித நலனை முன்னிலைப்படுத்தி நாம் செயல்படும்போது அதுவே தேவனுக்குப் பிரியமானதாக ஆகின்றது. இல்லாவிடில் நாம் ஒரு வறட்டு வேதாந்தியாகவே உலகுக்குத் தெரிவோம்.
அன்பானவர்களே, இன்றைய கிறிஸ்துப் பிறப்பு நமக்கு இத்தகைய சிந்தனையைத் தர தேவனை வேண்டுவோம். பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் நம் ஒவ்வொரு கிறிஸ்தவன் மூலமும் உலகினில் உண்டாவதாக.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு :- 9688933712
Friday, December 23, 2022
பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
ஆதவன் 🖋️ 696 ⛪ டிசம்பர் 24, 2022 சனிக்கிழமை
"நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது." ( 1 யோவான் 4 : 10 )
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாகப் பிறந்தது தேவன் உலகத்தின்மேல் கொண்ட அன்பினை வெளிப்படுத்துகின்றது. நாம் இன்று அவரிடம் அன்புகூருவதற்குமுன்பே அவர் நம்மீது அன்பு கூர்ந்தார். அப்படி அன்புகூர்ந்ததால் தந்து குமாரனை பாவப்பரிகார பலியாக உலகினில் அனுப்பினார். இப்படி அவர் நம்மீது அன்புகூர்ந்ததால் அன்பு உண்டாகியிருக்கிறது.
தேவன் மனிதர்களுக்காக ஏற்படுத்திய நித்திய ஜீவனை சாத்தானால் மோசம்பண்ணப்பட்டு மனிதர்கள் இழந்துபோவது தேவனுக்கு வேதனை தந்தது. ஆனால் மனிதர்கள் சாத்தானின் தந்திரத்தை எதிர்த்து நிற்க முடியாதவர்களாகி அவனுக்கு அடிமைகளாகிவிட்டனர். ஆம், பாவம் செய்பவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று இயேசு கிறிஸ்து கூறியபடி மனிதர்கள் பாவத்துக்கு அடிமைகளாகிவிட்டனர்.
எனவே, "பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்." ( 1 யோவான் 3 : 8 ) இதுவே கிறிஸ்து உலகினில் மனிதனாக வெளிப்பட்டதன் நோக்கம்.
அன்பானவர்களே, நாம் இன்று ஒரு அரசியல் தலைவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதுபோல இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். குடில்களும், அலங்கார விளக்குகளும், வகை வகையான இனிப்புகளும் உண்டு, புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் சென்று கறி சாப்பாடு சாப்பிட்டு சாதாரண உலக மக்களைப்போல இந்த நாளைக் கொண்டாடுவது ஏற்புடையதுதானா என்று எண்ணிப்பார்க்கவேண்டும்.
இயேசு கிறிஸ்து உண்மையில் இதே நாளில்தான் பிறந்தாரா என்று யாருக்கும் தெரியாது ஆனால், அவர் இந்த உலகத்தில் பிறந்தார் என்பது சரித்திர உண்மை. உலக வரலாற்றையே அவரது பிறப்புதான் இரண்டாகப் பிரித்தது. அவர் பிறந்த நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் அந்த நோக்கத்தை நிறைவேற்றிடாமல் வெறும் கொண்டாட்டங்கள் அர்த்தமற்றவையே.
வெறும் ஒருநாள் கொண்டாட்டத்தை தேவன் விரும்புவதில்லை. இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார் என்றும், சாத்தானின் பாவப்பிடியிலிருந்து நம்மை விடுவிக்க வெளிப்பட்டார் என்றும் விசுவாசிக்கவேண்டும். நமக்கு நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வு அவரால் மட்டுமே உண்டு என்பதை விசுவாசிக்கவேண்டும். நமது பாவங்களை உணர்ந்து மனம் திரும்பிய வாழ்வு வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். இவை இல்லாத கொண்டாட்டங்கள் அர்த்தமிழந்தவையே. அவைகளினால் எந்தப் பயனும் இல்லை.
ஆம், நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. அதனைநாம் மறந்துவிடக்கூடாது. அவர்மேல் விசுவாசம்கொண்டு மனம் திரும்பிய வாழ்க்கை வாழ இந்தநாளில் முடிவெடுத்து நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு நித்திய ஜீவனுக்கான வழியில் நடக்க முயலுவோம்.
"குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் " ( யோவான் 3 : 36 )
செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
Thursday, December 22, 2022
மனித அறிவினால் அவரை அறிந்துகொள்ள முடியாது
ஆதவன் 🖋️ 695 ⛪ டிசம்பர் 23, 2022 வெள்ளிக்கிழமை
"இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்." ( லுூக்கா 2 : 34 )
சிமியோன் எனும் நீதிமான் கூறிய வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வசனம். தேவனுடைய கிறிஸ்துவை காணுமுன் நீ மரணமடைய மாட்டாய் என்று அவருக்கு ஏற்கெனவே பரிசுத்த ஆவியினால் அறிவிக்கப்பட்டிருந்தது. நியாயப்பிராமண கட்டளையை நிறைவேற்றிட ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க இயேசுவின் தாய்தகப்பன் இயேசு கிறிஸ்துவை ஆலயத்துக்குக் கொண்டுசென்றபோது பரிசுத்த ஆவியின் அறிவிப்பின்படியே சிமியோன் ஆலயத்துக்கு வந்திருந்தார்.
சிமியோனைப்பற்றி, "அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்." ( லுூக்கா 2 : 25 ) என்று கூறப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்துவைக்குறித்து சிமியோன், "அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்" என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்.
ஆம், ஆண்டவர் தனது ஊழியத்தை ஆரம்பித்தபோது இது நிறைவேறத் துவங்கியது. பலர் அவரைக்குறித்து இடறலடைந்தனர். பலருடைய இருதய சிந்தையை அவர் வெளிப்படுத்தியதால் அவர்கள் இருதயம் குத்தப்பட்டது.
ஆனாலும் அவர்கள், "இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்." ( மாற்கு 6 : 3 ) இன்றும் இயேசு கிறிஸ்துவைக் குறித்த இந்த இடறல் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. அவரை சாதாரண உலக மகான்களில் ஒருவராகவே பலர் எண்ணி இடறலடைகின்றனர்.
இங்கு சிமியோன் எப்படி இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டார் என்று பார்ப்போம். முதலாவது அவன் நீதியும் தேவ பக்தியுள்ளவனுமாய் இருந்தான் ஏற்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவன்மேல் பரிசுத்த ஆவியானவர் இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று நாம் விசுவாசித்து அறிக்கையிட பரிசுத்த ஆவியானவரது வெளிப்பாடு நமக்குத் தேவையாக இருக்கின்றது.
"ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்." ( 1 கொரிந்தியர் 12 : 3 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.
ஆனால் இன்றும் சிமியோன் கூறியதைப்போல பலருக்கும் கிறிஸ்து இடறலாகவே இருக்கின்றார். காரணம் அவரது போதனைகள். இவற்றைக் கடைபிடிப்பது கூடாத காரியம் என்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் இன்றும் சொல்லக்கேட்கலாம். ஆம், மனித அறிவினால் அவரை அறிந்துகொள்ள முடியாதுதான். எனவேதான் பரிசுத்த ஆவியானவரின் துணை நமக்குத் தேவையாய் இருக்கின்றது.
சந்தேகத்தோடும் இடறலோடும் வாழாமல் ஆவியானவரின் துணையினை வேண்டுவோம்; அவரே நமக்கு கிறிஸ்துவைக்குறித்தத் தெளிவைத் தருவார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத பிறருக்கும் ஆவியானவர் இந்த வெளிப்பாடைக் கொடுக்கும்படி ஜெபிப்போம். பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லமுடியாது.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
Wednesday, December 21, 2022
இயேசு கிறிஸ்து நமக்குத் தந்த வாக்குத்தத்தம்.
ஆதவன் 🖋️ 694 ⛪ டிசம்பர் 22, 2022 வியாழக்கிழமை
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
Tuesday, December 20, 2022
ஞானத்தின் ஆரம்பம்
ஆதவன் 🖋️ 693 ⛪ டிசம்பர் 21, 2022 புதன்கிழமை
"கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது." ( நீதிமொழிகள் 19 : 23 )
கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழவேண்டும் எனும் எண்ணத்தில் நாம் செயல்படுவதையே குறிக்கின்றது. உலக மனிதர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கோ, மாணவன் ஆசிரியருக்கோ, திருடர்கள் காவலர்களைக்கண்டோ பயப்படுவதுபோன்ற பயமல்ல. இது கர்த்தர்மேலுள்ள அன்பால் நாம் அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்வது. கர்த்தருக்கு நாம் இப்படிப் பயப்படும்போதே நாம் ஞானிகள் ஆகின்றோம். அதாவது தேவனை அறிந்து கொள்கின்றோம்.
"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்." ( சங்கீதம் 111 : 10 ) என்கின்றார் சங்கீத ஆசிரியர். இப்படிக் கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; என்று கூறும் இன்றைய தியான வசனம், அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது என்றும் கூறுகின்றது.
இதனையே சங்கீத ஆசிரியர், "எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது." ( சங்கீதம் 91 : 9, 10 ) என்றும் கூறுகின்றார்.
அன்பானவர்களே, இன்று நாம் எல்லோருமே தீமை நம்மை அணுகக்கூடாது என்றுதான் ஜெபிக்கின்றோம். ஆனால் அப்படி ஜெபித்தால் மட்டும் போதாது கர்த்தருக்குப் பயப்படும் பயம் நமக்கு வேண்டும். இன்று ஜெபத்தை வலியுறுத்தும் ஊழியர்கள் அதிகம். எதற்கெடுத்தாலும் "ஜெபியுங்கள், ஜெபியுங்கள்" என்று மக்களுக்கு அறிவுரைகூறும் பலரும் நடைமுறை வாழ்க்கையில் நாம் எப்படி இருக்கவேண்டுமென்று கூறுவதில்லை. ஆம், ஜெபிப்பதையும் , வேதம் வாசிப்பதையும் வலியுறுத்துகின்றனர் ஊழியர்கள். இவைகளைக் கடைபிடிப்பது எளிது. ஆனால் வாழ்க்கை எனும் சிலுவை சுமக்கும் அனுபவம் நேர்மையான வாழ்க்கையில் அடங்கியுள்ளது.
இப்படிக் கூறுவதால் ஜெபிக்கவேண்டாமென்றோ வேதம் வாசிக்கவேண்டாமென்றோ பொருளல்ல. (இன்று பலரும் இப்படி குறுகிய கண்ணோட்டத்துடன் நான் சொல்வதைத் தவறுதலாக புரிந்துகொள்கின்றனர்). ஜெபிக்கவேண்டியது நமது சுவாசம்போல. ஜெபிக்காத ஆவிக்குரிய வாழ்க்கை ஜீவனில்லாதது. ஆனால் அந்த ஜெபம் நான் முதலில் கூறியதுபோல கர்த்தருக்குப் பயப்படும் ஞானத்துடன் கூடிய ஜெபமாக இருக்கவேண்டும். நூறு சதவிகித உலக ஆசைகளுக்காக ஜெபித்துவிட்டு, நானும் ஜெபிக்கிறேன் என்று திருப்தி அடைவது ஏற்புடைய ஒன்றல்ல.
கர்த்தருக்குப் பயப்படும் வாழ்க்கை வாழ்வோம்; அப்போது ஜீவனைக் கண்டடைவோம். அதைக் கண்டால் திருப்தி அடைந்து சமாதானத்துடன் நிலைத்து நிற்போம்; தீமை நம்மை அணுகாது.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
Monday, December 19, 2022
லோத்தின் மனைவி
ஆதவன் 🖋️ 692 ⛪ டிசம்பர் 20, 2022 செவ்வாய்க்கிழமை
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
Sunday, December 18, 2022
ஆவியானவரின் அபிஷேகத்துக்காக நாம் அதிகம் ஜெபிக்கவேண்டியுள்ளது.
ஆதவன் 🖋️ 691 ⛪ டிசம்பர் 19, 2022 திங்கள்கிழமை
இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு இனிமேல் வரும்போது அவரைக்கண்டு பயப்பட்டு வெட்கப்பட்டு நாம் கைவிடப்பட்டவர்களாய்ப் போய்விடக்கூடாது என இன்றைய தியான வசனத்தில் நமக்கு அறிவுறுத்துகின்றார் அப்போஸ்தலராகிய யோவான். நமது பள்ளிக்கு ஆய்வாளர் (Inspector) வரப்போகின்றார் என்று தெரிந்தால் நாம் எவ்வளவு கவனமாக ஏற்பாடுகளைச் செய்வோம்!!. அப்படி அவர் வரும்போது ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி பயப்படும்போது தெரிந்த கேள்விக்குக்கூட நம்மால் சரியாகப் பதில் கூறமுடியாது. நம்மிடம் ஆய்வாளர் ஒரு சாதாரண கேள்வியைக் கேட்கும்போது அதற்குப் பதில்சொல்லத் தெரியாமல் நாம் இருந்தால் எவ்வளவு வெட்கப்படுவோம்!!
நாம் கிறிஸ்து வரும்போது அப்படி பயந்து வெட்கத்துக்குள்ளாகிவிடக்கூடாது; நரகத்தின் மக்களாகிவிடக்கூடாது. நாம் அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமக்குப் பயம் வராது; மாறாக அவரை எதிர்பார்த்திருந்து அவர் எப்போது வருவார் என ஆவல்கொள்ளச்செய்யும்.
இன்றைய தியானத்துக்குரிய வசனத்தின் முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான யோவான், "நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக." ( 1 யோவான் 2 : 27 ) என்கின்றார்.
அதாவது தேவனைச் சார்ந்து பரிசுத்த ஆவியானவரின் துணையையே விசுவாசமாய் ஏற்றுக்கொண்டு அபிஷேகத்தோடு வாழ்வோமானால், அனைத்தையும் அவரே நமக்கு உணர்த்திப் போதித்து நம்மை வழி நடத்துவார். அதன்படி நாம் நிலைத்து வாழவேண்டும். அப்படி நிலைத்திருப்போமானால், அவர் வரும்போது பயப்படமாட்டோம்; வெட்கப்படமாட்டோம்.
அன்பானவர்களே, நாம் அதிகமாக பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்துக்காக ஜெபிக்கவேண்டியது அவசியம். ஏனெனில் சபைப் போதகர்களல்ல, ஆவியானவரே நம்மைச் சத்தியமான பாதையில் நடத்திட முடியும். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து.
பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி வாழும்போது மட்டுமே நாம் அவர் வெளிப்படும்போது அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாய் இருக்கமுடியும். எனவேதான் ஆவியானவரின் அபிஷேகத்துக்காக நாம் அதிகம் ஜெபிக்கவேண்டியுள்ளது.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
Saturday, December 17, 2022
ஒருநாள் கூத்து அல்ல
ஆதவன் 🖋️ 690 ⛪ டிசம்பர் 18, 2022 ஞாயிற்றுக்கிழமை
"தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்."( யூதா 1 : 21 )
இன்று பலரும் பாவ மன்னிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டவுடன் நேராக நித்தியஜீவனுக்குத் தாங்கள் தகுதிப்பட்டுவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர். குறிப்பாக பல பெந்தேகொஸ்தே சபை விசுவாசிகள் இப்படி இருக்கின்றனர். இத்தகைய மனிதர்களது சுவிசேஷ அறிவிப்புகள் விகற்பமாக இருக்கும். இவர்கள் தங்களை பரலோகத்துக்குத் தகுதியானவர்கள் எனவும் மற்றவர்கள் எல்லோரும் நரகத்தின் மக்கள் எனவும் எண்ணிக்கொள்கின்றனர்.
ஒருமுறை நண்பர் ஒருவரது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு ஒரு பெந்தேகொஸ்தே சகோதரர் சுவிசேஷம் அறிவிக்க வந்தார். வந்தவுடன் அவர் நண்பரின் மனைவியிடம், "சிஸ்டர்.....நீங்க பரலோகத்துக்குப் போகவேண்டாமா?" என்று ஆரம்பித்தார். நண்பரின் மனைவி கூலாக, "உங்ககிட்ட இன்னும் எத்தன டிக்கெட் இருக்கு?" என்றார். அந்தச் சகோதரர் இப்படியொரு பதிலை எதிர்பார்க்காததால் திகைத்துவிட்டார். நண்பரின் மனைவியின் கேள்வி அவரைப் பதில் சொல்லமுடியாதபடி வாயை அடைத்துப்போட்டது.
அன்பானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறினார், இறுதிவரை நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்" என்று. இரட்சிக்கப்படுவது ஒருநாள் அனுபவமல்ல, மாறாக அன்றாடம் சிலுவை சுமக்கும் அனுபவம். மட்டுமல்ல, தேவனுடைய அன்பிலே நம்மைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டும் என்கின்றார் அப்போஸ்தலரான யூதா இன்றைய தியான வசனத்தில்..
கிறிஸ்துவின் இரகத்தைப் பெறுவதற்குக் காத்திருக்கவேண்டும். அதாவது நம்மில் தேவ அன்புள்ளவர்களாய் பொறுமையாய் வாழ்ந்து வரவேண்டும். தேவ அன்பு நம்மில் இருக்குமேயானால் நாம் யாரையும் அற்பமாக எண்ணமாட்டோம், யாரையும் நரகத்தின் மக்கள் என்று நியாயம்தீர்க்கமாட்டோம்.
இரட்சிப்பு எனும் புத்திரசுவிகாரமும் நித்திய ஜீவனும் என்றோ ஒருநாள் பெற்ற பாவ மன்னிப்பு அனுபவத்தினால் கிடைப்பதல்ல; அது ஒரு தொடர் அனுபவம். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்." ( ரோமர் 8 : 23 ) ஆம் அது காத்திருந்து, தவித்து பெறவேண்டிய அனுபவம்.
மற்றவர்களை அற்பமாக எண்ணி, தாங்கள் பரலோகத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகிவிட்டோம் எனக் கருதிக்கொள்பவர்கள் தங்கள் மன மேட்டிமையை அறிக்கையிட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டியது அவசியம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
Friday, December 16, 2022
ஆயக்காரரும் வேசிகளும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள்
ஆதவன் 🖋️ 689 ⛪ டிசம்பர் 17, 2022 சனிக்கிழமை
"விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்." ( எபிரெயர் 11 : 31 )
Thursday, December 15, 2022
நித்திய கிருபையுடன் நமக்கு இரங்குவார்
ஆதவன் 🖋️ 688 ⛪ டிசம்பர் 16, 2022 வெள்ளிக்கிழமை
Wednesday, December 14, 2022
நீதியுமுள்ள வாழ்க்கை
ஆதவன் 🖋️ 687 ⛪ டிசம்பர் 15, 2022 வியாழக்கிழமை