Thursday, May 04, 2017

அன்னைத் தெரசா பேசுகிறார்....

அன்னைத் தெரசா பேசுகிறார்....  



                                                                                         
Michael Nabicht & Gaynell Cronin ஆகியோர் அன்னை தெரசா அவர்களைப்  பேட்டி கண்டு எழுதிய "Kiss" எனும் ஆங்கில நூலின் தமிழாக்கம்.  இந்நூலை  1997 ம் ஆண்டு தமிழாக்கம் செய்தவர்  எம்.ஜியோ பிரகாஷ்

ஆசியுரை

அன்பின் சின்னம் அன்னை தெரசா 1910 ஆகஸ்ட் 26 ல்  அல்பேனியாவிலுள்ள செகாப்ஜி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை ஒரு வியாபாரி. இவருக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உண்டு.

தெரசாவின் இயற்பெயர் ஆக்னஸ். சமூக சேவை செய்ய வேண்டும் எனும் உயர்த்த லட்சியம் இளமையிலேயே இருந்தது. எனவே லொரேட்டோ மிஷனில் உறுப்பினராகி, ஆசிரியர் பயிற்சி பெற்று தனது பதினெட்டாவது வயதில் கல்கத்தா வந்தடைந்தார். புனித மரியன்னை பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தனது இருபத்தொன்றாவது வயதில் துறவறம் பூண்டார். எதிர்பார்த்த  சமூக சேவை பணியை ஆசிரியர் பணியில் செய்ய முடியவில்லை. எனவே 1948 ஆகஸ்ட் 18 ல் லொரேட்டோ   சபையிலிருந்து வெளியேறினார். தனியாகச் செயல்பட திருத்தந்தை அனுமதியும் கிடைக்கவே மகிழ்ந்துபோனார் அன்னை தெரசா.

தற்போது இவர் ஆரம்பித்த மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் 105 நாடுகளில் 500 க்கு  மேற்பட்ட மையங்களில் இயங்குமளவுக்கு வளர்ந்துள்ளது.

அன்னை தெரசாவுக்கு கிடைத்த பரிசுகள். விருதுகள், பாராட்டுப் பத்திரங்கள் ஏராளம் ஏராளம். நடமாடும் புனிதை என்றே மக்களும் அழைத்தனர்.

இந்நூலாசிரியர் திரு. எம்.ஜியோ பிரகாஷ் அவர்கள் கட்டுரை, கவிதை, கதை எழுதுவதில் வல்லுநர். "நம் வாழ்வு" பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்து இதழியல் துறையில் சாதனைப் படைத்தவர்.

"முத்தம்" எனும் இந்நூலை வாசிப்பதன் மூலம் வாசகர்கள் மேலும் அன்னை தெரசாவின் வாழ்க்கையைப் பற்றியும், அதன் அர்த்தத்தையும், அவர்கள் கடவுளுக்காக, ஏழைகளுக்காக தன்னை அர்ப்பணித்த தியாகச் செயலையும் பிறரையும் அவர் பணியில் இணைத்து இயேசுவின் கனவை மலர்ச் செய்த நற்செயலை பற்றியும் நன்றாக அறிய முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள் !

பணி . பி. அமல்ராஜ் நேவிஸ்
பங்குத்தந்தை, கார்மல் நகர்   
20.10.1997


 என்னுரை 

நற்செய்திக்கு உயிருள்ள சாட்சியாக வாழ்ந்து மறைந்த அன்னை தெரசாவின் சமூக சேவை அனைவரும் அறிந்ததே. இந்த சமூக சேவைக்கு  அவர்களுக்கு அடித்தளமாக அமைத்தது அவர்களது ஆன்மீகவாழ்வுதான்.

இந்நூலில் அன்னைக் கூறியுள்ள கருத்துக்கள் அவர்களது ஆழ்ந்த இறை ஈடுபாட்டை காண்பிக்கிறது. ஏழைகளுடன் ஏழையாக அவர்களை வாழச் செய்த கிறிஸ்துவின் நற்செய்தியை நாம் புரிந்துகொள்ள இது வழிவகுக்கிறது.
 அன்னை தெரசா அவர்கள்  மைக்கேல் நபிசிட், கெய்நெல் க்ரோனின் ஆகியோருக்கு அளித்தப் பேட்டியில் கூறிய கருத்துக்களின் தமிழாக்கம் இந்நூல். 

இது நூலாக வெளிவர அருள்கூர்ந்த கிறிஸ்து இயேசுவுக்கு என்  முதன் நன்றி.  மிகுந்த ஆர்வமெடுத்து இதனைப் பிரசுரிக்கும் பணியாளர் அ . அல்போன்ஸ் அவர்களுக்கு நன்றி. சிறப்பாக ஆசியுரை வழங்கிய கார்மல் நகர் பங்குத்தந்தை அருட்திரு பி. அமல்ராஜ் நேவிஸ் அவர்களுக்கும் ஏன் நன்றி.

நூலில் பிரசுரமாகியுள்ள புகைப்படங்களை தந்து உதவிய எனது சகோதரன் திரு. எம்.சிறில் பெஞ்சமின், திரு.சகாய ராஜ்,   பணியாளர் அ . அல்போன்ஸ், நூலின் சில பகுதிகளை பிரசுரித்து ஊக்கப்படுத்திய "நம் வாழ்வு" வார இதழ், அழகிய நூலாக அச்சிட்டு வெளியிட்ட மேரா அச்சகத்தார் இவர்களுக்கும் எனது இதய நன்றி உரித்தாகிறது.   


 எம்.ஜியோ பிரகாஷ், 
புன்னை நகர்  
24.10.1997
    
------------------------------------

எங்களது ஜெபம் இதுதான் 

கீழ்காணும் இந்த ஜெபத்தை 
நாம் பிரச்சாரம் செய்வோமெனில் ......
நமது வாழ்க்கையில் 
இதனை மொழிபெயர்த்தோமெனில் ......
இது 
அனைத்து மாறுதல்களையும் செய்யும் 
என நான் நினைக்கிறேன்.
இது முழுவதும் 
கிறிஸ்துவால் நிரம்பியது.
இது 
ஏழையின் மறைபோதக சபையில் 
பெரிய மாறுதல்களைச் செய்துள்ளது.


"அன்பு இயேசுவே,
உமது மணத்தை 
நாங்கள் செல்லுமிடமெல்லாம் பரப்ப 
எங்களுக்கு உதவிபுரியும்.
எங்களது ஆன்மாவை 
உமது ஒளியால் நிரப்பியருளும்.
எங்களில்  முழுமையாக ஊடுருவி 
எங்கள் வாழ்வு 
உம்மைப் பிரதிபலிக்கச் செய்யும்.


எங்களால் ஒளிர்விடும்......
எங்களில் ஒளிர்விடும் 


நாங்கள் தொடர்புகொள்ளும் 
ஒவ்வொரு ஆன்மாவும் 
நீர் எம்மில் நிறைந்திருப்பதை  உணரச்செய்யும்.


அவர்கள் மேல் நிமிர்ந்து 
இனி எங்களையல்ல......
இயேசுவையே பார்க்கச் செய்யும்.


எங்களுடன் தங்கும் 
அப்படியெனில் நாங்களும் 
உம்மைப்போல ஒளிவீசுவோம் 
பிறருக்கு ஒளியாவோம் 


ஓ இயேசுவே !
ஒளியெல்லாம் உமதே.
எங்களது ஒன்றுமில்லை.
எங்கள் வழியாக பிறருக்கு ஒளிகொடுப்பது 
நீர்தான் !


உம்மைப் போதிக்காமல் போதிக்க 
எங்களுக்கு அருள் தாரும்.
வார்த்தைகளால் அல்ல வாழ்க்கையால் ..!


உமது அன்புப் பிடியினால் 
நாங்கள் செய்யம் இரக்கச் செயல்கள் 
அனைத்தும் 
உமது அன்பு எங்களில் ....
எங்கள் இருதயத்தில் நிறைந்திருப்பதை 
உறுதி செய்வதாக.!
ஆமென் "  




 கிறிஸ்துவை மணந்துள்ளோம் !



முழு மனதுடன்
கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்படைத்தல்.......
யாரும், எவரும் 
அவரது அன்பிலிருந்து 
நம்மைப் பிரிக்க முடியாதபடி 
கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்படைத்தல்
என்பதே எங்கள் வாக்குறுதி 


கிறிஸ்து 

வாழ்நாள் முழுமைக்குமான 
உண்மையான தனிப்பட்ட நண்பனாக 
எங்கள் ஒவொருவரையும் அன்புசெய்கிறார்.
எங்களையே அவர் மணந்துள்ளார்!


அவரது அன்பை ....

பிரிக்க முடியாத அவரது அன்பை 
நங்கள் செயலில் காட்டுகிறோம்.
அந்தச் செயல்தான் 
ஏழையினும் ஏழைகளுக்கு 
நாங்கள் செய்யும் சேவை.


ஜெப வாழ்வுதான் 

எங்களை நிலைத்திருக்கச் செய்கிறது.
கிறிஸ்துவுடன் எங்களுக்குள்ள 
இணைப்புதான் 
எங்களை நிலைத்திருக்கச் செய்கிறது
கிறிஸ்துவோடு கிறிஸ்துவாக 
ஒன்றிவிட்டதுதான் 
ங்களை நிலைத்திருக்கச் செய்கிறது
வாழ்வளிக்கும் அந்த 
அப்பத்தின் வாழ்வை (நற்கருணை)
செயலில் காட்டுவதுதான்  
எங்களை நிலைத்திருக்கச் செய்கிறது


நல்லது செய்தபடியே 

கிறிஸ்து இயேசு 
இவ்வுலகில் சுற்றித் திரிந்தார்.
நாங்களும் அவரைப்போலவே 
செய்ய முயலுகிறோம்.
ஏனெனில் 
கடவுள் எங்கள் வழியாக 
உலகை அன்புச்  செய்கிறார் 
என நாங்கள் நம்புகிறோம்.


தனது அன்பை பிரதிபலிக்க 

வானகத்  தந்தை 
கிறிஸ்துவை அனுப்பியதைப்போல 
கிறிஸ்து 
இன்று எங்களை அனுப்பியுள்ளார் !



பேசுவதைவிட .......


ஏழைகளைப் பற்றி பேசும் மக்களிடம்
பேசுவதைவிட 
ஏழைகளிடம் பேசுங்கள்.


பசியைப் பற்றி 
பலவிதமாய்ப் பேசுவார்கள்
ஆனால் 
"மதர் இந்தாருங்கள் ஐந்து ருபாய் 
இதைக்கொண்டு இந்த மக்களுக்கு 
ஏதாவது வாங்கிக்கொடுங்கள்"
என்று சொல்ல மாட்டார்கள்.
பசியைப் பற்றி 
மிகச் சிறப்பானச் சொற்பொழிவுகளை 
இவர்கள் கொடுப்பார்கள்.!


ஒருமுறை பம்பாயில் 
எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

பசியைப் பற்றிய ஒரு பெரிய 
கருத்தரங்கம் நடைபெற்றது.
நான் அங்கு செல்வேன் என 
பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.
நான் அங்குச்  சென்றேன். 
பல நூறு மக்கள் கூடியிருந்து 
பசியைப் பற்றி பேசி 
கருத்துக் பரிமாறிய 
அந்த மாநாட்டுப் பந்தலின் 
நுழைவாயிலிலேயே 
செத்துக் கொண்டிருக்கும் 
ஒரு ஏழை மனிதனைக் கண்டேன்.


நான் அவனை எடுத்து 
எனது இல்லத்துக்குக் கொண்டுச் சென்றேன் 
அவன் அங்கு இறந்து போனான்!
அவன் பசியால் இறந்துபோனான்!. 


மாநாட்டுப் பந்தலினுள்ளிருந்தவர்கள் 
"இன்னும் பதினைந்து ஆண்டுகளில் 
நமது உணவு உற்பத்தி 
இதனை சதவிகிதம்  அதிகரிக்கும்......
நமக்கு 'இந்த அளவு கிடைக்கும்'
என 
இத்தியாதி இத்தியாதி விசயங்களைப் 
பேசிக்கொண்டிருக்க 
இங்கு 
அந்த மனிதன் பசியால் செத்துப்போனான் !


இந்த வித்தியாசத்தை 
முரண்பாட்டைப் பாருங்கள் !



சிறு சிறுச்  செயல்களிலும் 


பகிர்ந்துகொள்ளல் , 
ஆழ் சிந்தனை, ஜெபம் ....  
இவை கூட்டு வாழ்வை வளர்க்க உதவுகின்றன.


அடுத்தவரிடமுள்ள அன்புணர்ச்சியால் 
அவர்களுக்கென 
சிறு சிறு செயல்கள் செய்தல் ......
அது 
ஒரு சிரிப்பாக இருக்கலாம் 
ஒரு வாளி தண்ணீரை 
எடுத்துக் கொடுப்பதிலாக இருக்கலாம் .....
மேசையில் உடனிருந்து 
கருத்துக் பரிமாற்றம் செய்வதில் இருக்கலாம்....
இவை சிறு சிறுக் காரியங்கள்தான்.


மற்றவர்களிடம் அப்படிச் செய்யும் 
தொடர்ந்த பகிர்தல் உணர்வு 
மற்றவர்களிடம் காட்டும் தொடர்ந்த உறவு 
சேர்ந்து பலி ஒப்புக் கொடுப்பதிலும் 
கிறிஸ்துவின் திருவிருந்தில் 
பங்கு கொள்வதிலும் ......
வணக்கங்கள் செய்வதிலும்.....
தியானங்கள் செய்வதிலும்...
மற்றவர்களது துயர்களை பகிர்தலிலும் 
புரிந்துகொள்ளுவதிலும் இருக்கவேண்டும் 


நாங்கள் எல்லாவற்றையும் 
சேர்ந்துதான் செய்கிறோம்.
அதுதான் எங்கள் பலம் என்று எண்ணுகிறேன்.



அன்பின் ஆரம்பம் 

அன்பு வீட்டில்தான் ஆரம்பமாகிறது.
இருபத்திநான்கு மணிநேரமும் காணும் 
நம் சகோதரரை அன்புசெய்யாவிடில் 
வெளியில் ஒருமுறை காண்பவரிடம் 
எப்படி நாம் அன்பு செலுத்தமுடியும்? 


ஒத்துணர்மையில் ......
பரிவுகாட்டுவதில்...
மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில்....
ஒரு புன்னகைப் பரிமாற்றத்தில் ....
நாம் அன்பைக் காண்பிக்க முடியும்.


ஆம்!
இத்தகையைச் சிறு சிறு விசயங்களில்தான்.


சிறு குழந்தைக்கு அன்புச்செய்ய 
எந்தச் சிரமமும் இல்லை.
ஒரு தடையுமில்லை.
அதனால் தான் கிறிஸ்து சொன்னார்:-
"சிறு குழந்தையாக  நீங்கள்
மாறாவிடில்..."



மனம் திரும்ப வேண்டும்!




எல்லா ஆத்துமங்களும் 
மனம் திரும்பவேண்டியது அவசியம்.
கடவுளைத் தங்கள் வாழ்வில் 
ஏற்றுக் கொண்டனர் எனில்  
அவர்கள் மனம் திரும்பிவிட்டனர்.


புனித வாழ்வில் வளருவதே 
மனம் திரும்புதலின் அடையாளம்.
கிறிஸ்துவைப் போல வாழ்வதே 
மனம் திரும்புதலின் அடையாளம்.


அவரைப் புறக்கணித்தால்....
அவரது பிரசன்னத்தைப் புறக்கணித்தால் ....
பிறகு அவர்கள் 
கண்டடைவதுவரை 
மீண்டும் மீண்டும் 
முயலவேண்டியிருக்கும்!




அது கிறிஸ்துதான் 




வாழ்வின் முடிவில் 
எத்தனைப் பட்டங்களை நாம் பெற்றுள்ளோம் 
எத்தனைச் செல்வங்களை நாம் சேர்த்துள்ளோம் 
எத்தனைப் பெரிய சாதனைகளை நாம் புரிந்துள்ளோம் 
என்பதைக்கொண்டு 
நாம் தீர்ப்பிடப்படப் போவதில்லை.


"பசியாயிருந்தேன் 
நீ எனக்கு உணவூட்டினாய் .....
நிர்வாணியாயிருந்தேன் 
என்னை உடுத்தினாய்.....
வீடற்றவனாயிருந்தேன் 
எனக்குப் புகலிடம் தந்தாய் ....
இவற்றின் அடிப்படையிலேதான் 
நாம் தீர்ப்பிடப் படுவோம் .


உணவுக்கான பசி மட்டுமல்ல .....
அன்புக்கான பசியும் ;
ஆடையில்லாத நிர்வாணமல்ல ......
மனித மாண்பு மறுக்கப்படும் நிர்வாணமும்;
செங்கற்களால் கட்டப்படும் வீடு 
இல்லாமை மட்டுமல்ல ...
மற்றவர்களால் புறக்கணிக்கப்படும் 
புகலிடமில்லாமையும் ....


ஆம்!
இத்தகையக் கடும் துன்பத்தில் 
தன்னை மாறுபடுத்தியிருப்பது 
கிறிஸ்துதான்!




இதுதான் என் வீடு 


 
கடவுள்தான் குடும்பங்களை அமைக்கிறார்.
கணவன், மனைவி, குழந்தைகளென்று, 
அவரது அன்பை வெளிப்படுத்த வேண்டி!


ஒருமுறை தெருவிலிருந்து 
ஆறு அல்லது ஏழு வயது 
பெண் குழந்தையொன்றை 
எனது குழந்தை இல்லத்துக்கு எடுத்து வந்தேன்.
அதனைக் குளிப்பாட்டினேன் ..
ஆடை அணிவித்தேன்..
உண்பதற்கு நல்ல உணவு கொடுத்தேன்.
ஆனால்...
அன்று மாலையே அக்குழந்தை 
என்னை விட்டு ஓடிவிட்டது!


அதே குழந்தையை 
இரண்டாம் முறையும் 
மூன்றாம் முறையும் 
இதேபோல ஏன் இல்லத்துக்கு கூட்டிவந்து 
சீராட்டினேன்.
ஆனாலும் அக் குழந்தை 
என்னை விட்டு ஓடி ஓடிப் போயிற்று .


மூன்றாம் முறை ஒரு சகோதரியை 
அக் குழந்தையைப் பின் தொடர அனுப்பினேன் 
அச்சகோதரி  குழந்தையை 
ஒரு மரத்தடியில் கண்டுபிடித்தாள்.
தாய், உடன்பிறப்புகளுடன் 
மகிழ்ச்சியுடன் அக்குழந்தை !
மரத்தடி அடுப்பில் அவளது தாய் 
உணவு சமைத்துக்  கொண்டிருந்தாள்....
தெருவில் தான் 
பிச்சை எடுத்தவைகளைக்கொண்டு !


மரத்தடியில் அவர்கள் சமைக்கிறார்கள் 
மரத்தடியிலேயே உண்கிறார்கள் 
அங்கேயே உறங்குகிறார்கள்...
அதுதான் அவர்கள் வீடு.


இப்போது நான் உணர்ந்துகொண்டேன் 
அக்குழந்தை 
ஏன் எங்களைவிட்டு ஓடியது என்று.
அவளது தாய் 
அவளை நேசிக்கின்றாள் ...
அவளும் தாயை நேசிக்கின்றாள்.
அவர்கள் 
ஒருவருக்கொருவர்   அழகானவர்கள் !


அக்குழந்தைச் சொன்னது ...
"வரமாட்டேன் 
இதுதான் என்  வீடு.."
ஆம்!
அன்னைதான் அவள் வீடு !



முத்தம் 


துன்பம்,நோக்காடு, 
அவமானம், நோய், தோல்விகள்....
இவை 
இயேசு தரும் அன்பு முத்தங்கள்தான்!


புற்று நோயால் மிகவும் பாதிக்கப்பட்ட 
ஒரு பெண்மணியைச் சந்தித்தேன்.
அவாள் மிக மிகக் கஷ்டப்பட்டாள்.
அவளிடம் நான் சொன்னேன்...
"சிலுவையில் தொங்கும் இயேசுவுக்கு 
மிக மிக அருகில் நீ வந்துவிட்டாய்,
அவர் உன்னை முத்தமிடுகிறார்!


அவள் என் கரங்களை
அன்புடன் பிடித்தபடிச் சொன்னாள்..
"மதர் தெரசா...தயவுசெய்து 
அவரிடம் என்னை முத்தமிடுவதை 
 சொல்லுங்கள்.."


மிக அழகான அனுபவம் .
அவள் புரிந்துகொண்டாள் !  
துன்பம் கடவுளின் கொடைதான்.
நம்மை கிறிஸ்துவைப்போல மாற்றிட...!
துன்பங்களை மக்கள் 
தண்டனையாக 
எடுத்துக்கொள்ளவேண்டாம் !



சிறந்தவராக .....


உன்னைப் படைத்த அதே அன்புக்கு காரம்தான் 
என்னையும் படைத்தது.
அவர் உனக்குத் தந்தையென்றால் 
எனக்கும் தந்தைதான்.
நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர்.
இந்துக்களும், முஸ்லிம்களும் 
மற்றுமுள்ள அனைவருமே 
நமது சகோதர சகோதரிகள்தான்.


இந்துக்களுக்கு மத்தியில் நாம் செய்யும் சேவை 
கடவுள் அவர்களையும் அன்பு செய்கிறார் 
கடவுள்தான் அவர்களையும் படைத்தார் 
அவர்களும் நமது சகோதரர்களே 
என்பதை பறைசாற்றுகின்றது.


உண்மையிலேயே நான் காணும் மகிழ்ச்சியை 
மகிழ்ச்சி என்று நான் நம்புவதை 
அவர்களுக்கும் அளிக்க விரும்புகின்றேன்.
ஆனால் அது என்னால் முடியவில்லை.
கடவுளால் மட்டுமே அது முடியும்.
நம்பிக்கை என்பது கடவுள் தரும் கொடை.
ஆனால் 
கடவுள் தன்னை எவரிடமும் திணிப்பதில்லை.


இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் 
முஸ்லிம்களுக்கும்...ஏன் ..
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் 
நம்மோடு சேர்ந்து அன்பு சேவை புரிய 
வாய்ப்பிருக்கிறது.
நம்மோடு சேர்ந்து அன்பு செய்து மகிழவும் 
அதனால் 
கடவுளது பிரசன்னத்தை உணரவும் 
வாய்ப்பிருக்கிறது.
அப்படிச் செய்யும்போது 
இந்துக்கள் சிறந்த இந்துக்களாகவும் 
கிறிஸ்தவர்கள் சிறந்த கிறிஸ்தவர்களாகவும் 
முஸ்லிம்கள் சிறந்த முஸ்லிம்களாகவும் 
மாறுவர்!



போதனை செய்யாமலேயே 


போதனை செய்யாமலேயே போதிப்பதற்கு 
நாம் பணிக்கப்பட்டுள்ளோம் 


வார்த்தைகளால் அல்ல வாழ்க்கையால் !
நமது முன்மாதிரிகளால்....
நமது செயல்களால்!


அன்புக்கான எல்லா வேலைகளும் 
சமாதானத்திற்கான வேலைகளே !



ஒன்று ஒன்றாக ஆரம்பிப்போம் !


இது எனது கடமை என்று நினைத்து
நான் ஏழைகளை சேவிக்கவில்லை.
அவர்களை நான் 
மனிதர்களாகப் பார்க்கிறேன் !


நான் ஒரு சமயத்தில் 
ஒருவருக்குத்தான் அன்பு செய்ய முடியும்.
நான் ஒரு சமயத்தில் 
ஒருவருக்குத்தான் உணவூட்டமுடியும் ..
வெறும் ஒரே ஒரு மனிதனுக்கே!


ஒருவருக்கொருவர் நெருக்கமாகும்போது 
கிறிஸ்துவுக்கு நெருக்கமாகிறோம்.
இயேசுவே சொன்னார்.. 
"சின்னஞ் சிறிய ஏன் சகோதரருக்கு 
செய்தவற்றை நீ எனக்கே செய்தாய்.."
எனவே நீங்கள் ஆரம்பியுங்கள்....
நானும் ஆரம்பிக்கிறேன்.


முதன் முதலில் நான் 
ஒரு மனிதனைதான் எடுத்து வந்து உதவினேன் 
அந்த ஒரு மனிதனுக்கு உதவியிராவிடில் 
இன்று நாற்பத்திரெண்டாயிரம் பேருக்கு 
உதவியவளாக இருந்திருக்க மாட்டேன் 
எல்லா வேலையுமே 
கடல் வெள்ளத்தின் ஒரு துள்ளி போலத்தான் ....
எடுத்த ஒரு துளியை 
நான் கடலில் சேர்க்காவிட்டால் 
பெரிய கடல் கூட 
தனது வெள்ளத்தில் 
ஒரு துளி குறைத்ததாகத்தான் இருக்கும் !
இதே தான் உனக்கும் 
உன் குடும்பத்திற்கும் 
நீ செல்லும் ஆலயத்திற்கும் பொருந்தும்.


எனவே உடனே ஆரம்பிப்போம் 
ஒன்று ...ஒன்று ...ஒன்று ..என 
துளித் துளியாய் 
நமது சேவைகளை !



உனது குடும்பத்தில்  


உனது குடும்பத்தில்  
உனது குழந்தைகளுக்கு 
கணவனுக்கு.....
மனைவிக்கு......
எதையெதைச் செய்கிறாயோ 
 அவற்றை 
கிறிஸ்துவுக்கே செய்கிறாய் !



தொழு நோயாளியிடம் 


ஒரு துண்டு  அப்பதைவிட ....
 உயிரளிக்கும் அந்த அப்பதைவிட 
சிறியவராக 
எப்படி அவரால் தன்னை மாற்ற முடியும்?
பலவீனனாக....உதவியற்றவனாக...


அழுகி நாற்றமடிக்கும் 
அவலட்சணமான 
ஒரு தொழுநோயாளியைவிட கீழாக 
தன்னை எப்படி அவர் மாற்ற முடியும்?


ஆம் 
அது அவர்தான்!
நாம் அதனை உணர வேண்டும்.
இரண்டும் இரண்டும் நான்கு 
என நாம் அறிவதைப்  போல 
அந்த மனிதரில் 
கிறிஸ்து இருப்பதை 
நாம் உணரவேண்டும்!



ஏழைகளுக்குச் செய்யும்போது .....


கிறிஸ்து தன்னை  
வாழ்வளிக்கும் அப்பமாக மாற்றினார்.


அவர் சொல்வதை 
நாம் புரிந்துகொள்கிறோமா 
என்பதை உறுதியாக அறிய ....
அவருக்கான நமது பசியை 
நிறைவு செய்ய .....
அவருக்கு நாம் செலுத்தும் அன்பை 
நிறைவாக்க !


இதுகூட அவருக்குப் போதுமானதாயில்லை 
எனவே தான் 
அவர் தன்னையே 
பசியுற்றோனாய் மாற்றினார் .
அவரது பசியை 
நமது அன்பினால் 
போக்க முடியும் 


ஏழைகளுக்கு இவற்றை நாம் செய்கையில் 
நமது அன்புக்கான அவரது பசியைப் போக்குகிறோம் !



அன்பு செயலாக வேண்டும் 


அன்பு 
அது அப்படியே இருப்பதில் 
எந்த அர்த்தமும் இல்லை.
அது 
செயலில் செலுத்தப்படவேண்டும் 
அந்தத் செயல்தான் சேவை.


கடவுளிடம் நமக்குள்ள அன்பை 
எப்படிச்  செயலில் காட்டுவது?
நமது குடும்பத்திற்கு 
உண்மையாய் இருப்பதில் ...
கடவுள் 
நமக்குத் பணித்துள்ள கடமைகளை 
நிறைவேற்றுவதில்.


ஆற்றலுள்ளவர்களாகவோ, இல்லாதவர்களாகவோ ....
பணக்காரர்களாகவோ, ஏழைகளாகவோ ...
நாம் எப்படி இருந்தாலும்
நாம் எவ்வளவு சேவை செய்துள்ளோம் 
என்பது பெரிதல்ல...
அதில் 
எத்தனை அன்பு கலந்து செய்தோம் 
வாழ்க்கை முழுவதும் 
மற்றவருடன் அன்பு பகிர்வு செய்வதில் 
எப்படி இருந்தோம் 
என்பதே பெரிது!



சிறுமலர் தெரசா போல...


நாம் அனைவருமே 
கடவுளை அன்புச்செய்ய விரும்புகிறோம்.
ஆனால் எப்படிச் செய்வது?


சிறுமலர் தெரசா 
இதற்கு நல்ல உதாரணம்.
அவள் 
சிறிய காரியங்களைக் கூட 
பெரிய அன்பு செலுத்திச் செய்தாள்.
அற்பக்  காரியங்கள்....
அளவிடமுடியா அன்பு !
அதனால் தான்
அவள் பெரிய புனிதை ஆனாள் .


நான் நினைக்கின்றேன் ....
நாமும் 
நமது வாழ்வில் 
இந்த அழகிய காரியத்தைச் 
செய்ய முடியும்!



இங்கு இறந்தவர்களில்...


எங்களது இல்லத்தில் 
மரணத் தருவாயில் இருப்பவர்களிடம் 
அவர்களது பாவம் மன்னிக்கப்பட்டு 
கடவுளைக் காண 
அவர்கள் விரும்புகிறார்களா ?
ஆசீர்வாதம் பெற விரும்புகிறார்களா ?
என்று கேட்போம்.
அவர்கள் "ஆமாம் " என்றால் 
அதற்கான ஏற்பாடுளைச் செய்வோம்.
கடவுளின் அமைதியில் மரணமடைய 
நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம். 


எல்லோரும் தெரிந்திருக்கிறார்கள் 
நாங்கள் அவர்களிடம் 
புனித பேதுருவுக்கு டிக்கெட் 
கொடுத்து விடுகிறோம் என்று.


ஆம் 
இங்கு இறந்தவர்களில்
ஒருவர்கூட 
கடவுளோடு சமாதானம் செய்யாமல் 
இறந்ததாக 
எனக்கு நினைவில்லை.



கடவுளின் வீட்டுக்குப் போகிறேன்...


தொடர்ச்சியாக 
துன்பத்துக்குமேல் துன்பம் அனுபவிக்கும் 
இந்த மகத்தான மக்கள் இல்லாவிட்டால் 
உலகம் எப்படி இருக்கும்?
என நான் எண்ணிப்பார்க்கிறேன் 
அன்பையும்   மதிப்பையும் இழந்து......


இறக்கப்போகும் மனிதன் 
எங்கள் இல்ல சகோதரியிடம் கூறினான்...
"நான் கடவுளின் வீட்டுக்குப் போகிறேன் "
அவன் எவரையும் சபிக்கவில்லை 
தனது துன்பம் பற்றி 
ஒன்று கூடக்  கூறவில்லை  
ஆனால் 
"கடவுளின் வீட்டுக்குப் போகிறேன் "
என்றுதான் கூறினான்.
பின் கண்களை மூடினான்.
அவன் வீட்டிற்குப் போய்விட்டான்.


மிகவும் சிறிதான அழகியச் செயல் ...
அவன் இயேசுவின் வீட்டிற்குச் சென்றுவிட்டான்.
கடவுளது முகத்தைத் தரிசிக்கச் சென்றுவிட்டான்.
அவனது இதயம் 
மிகவும்
தூய்மையானதாகவும் அழகானதாகவும் ஆனது.


ஏழைகளது பெருந்தன்மைகளையும் 
அவர்கள் நமக்கு எதை அளிக்கிறார்கள் 
என்பதையும் 
நாம் உணருவதில்லை.
இது ஆச்சரியமான ஒன்று!  



கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினால் .....


கிறிஸ்துவை முழுவதுமாக பின்பற்ற விரும்பினால் 
அவரது துன்பத்தில் 
நாம் பங்கேற்கவேண்டும்.
அவர் தருவதை தாங்கிக்கொள்ளும் 
தைரியத்தை நமக்கு அளிக்கும்படி 
ஜெபிக்கும் தைரியம் வேண்டும்.


போதுமான அளவு நாம் ஜெபிக்காததால் 
மனிதரது நிலையில்தான் 
நாம் எல்லாவற்றையும் பார்க்கிறோம் 
இறைத்தன்மையை நாம் பார்ப்பதில்லை.
அவற்றின்மீது கோபம் கொள்கிறோம் .


உள்ளுக்குள் புகையும் கோபம் 
இன்றைக்குள்ள தப்பு அபிப்பிராயங்களை 
துன்பங்களும் 
நமது மனச் சீற்றத்தாலும் 
கசப்புணர்வாலும்தான் 
ஏற்படுகின்றன என நான் எண்ணுகிறேன்.
காழ்ப்புணர்ச்சி ஒரு கொடிய தோற்று நோய்.
உள்ளுக்குள் புதையுண்டிருக்கும் கோபம் 
புற்று நோயைப்போன்றது !


துன்பங்கள் நம்மை தூய்மைப்படுத்தவும் 
புனிதப்படுத்தவும் 
கிறிஸ்துவைப் போல மாற்றவும் 
ஏற்படுத்தப்பட்டவைகளே !



நமக்காகப் பரிந்துபேசுபவர்கள் !


நம்மிடையே மிகப் பெரிய மனிதர்கள் 
இருக்கிறார்கள்.
நாம் அவர்களை அறிவதில்லை.
அவர்கள்தான் 
ஏழையிலும் ஏழைகள் !
தேவையற்றவர்கள் ...
கவனிப்பாரற்றவர்கள் ....
ஒடுக்கப்பட்டவர்கள் .....
போதைக்கு அடிமையானவர்கள் ...
முடவர்கள் , குருடர்கள் , நோயுற்றோர் ....
சாகும்தருவாயில் உள்ளவர்கள் ...
தங்களுக்கு என்று எதுவும், யாரும் 
இல்லாத மனித ஜீவன்கள்!


அவர்களது வாழ்க்கையே 
ஒரு ஜெபம் தான்.
தங்களை அறியாமலேயே 
அவர்கள் 
நமக்காக பரிந்து பேசுகிறார்கள்.
அதனால்தான் 
கல்கத்தாவிலுள்ள 
எனது இறப்போருக்கான இல்லத்தை 
அந்த மறை மாநிலத்துக்கே  முழுமையான 
ஒரு பொக்கிஷக்கூடம் என்கிறேன்!


அங்கிருக்கும் மக்கள் 
தங்களை அறியாமலேயே 
நமக்காகப் பரிந்து பேசுகிறார்கள் ! 



கடவுளின் அன்பு 




ஒரு கிறிஸ்துமஸ் நாளன்று 
எங்கள் இல்லத்துத் 
தொழு நோயாளிகளிடம் பேசிக்கொண்டிருந்தேன்.


"உங்களுக்கு வந்துள்ள தொழு நோய் 
கடவுள் அளித்துள்ள பரிசு" என்றேன் .


கடவுள் இத்தகையக் கொடிய வேதனையை 
அவர்களுக்கு அளித்துள்ளதால் 
அவர் அவர்களை 
எத்தனை அளவு நம்புகிறார் 
என்று தெரிகிறது.


கிறிஸ்து உலகில் வந்தபோது 
உணர்ந்தது போன்ற தனிமையை 
அவர்களும் உணர்கிறார்கள்.
மனிதத் தன்மைபூண்ட  கிறிஸ்துவும் 
தன் தந்தையை விட்டு தள்ளி இருந்து 
தனிமையைத்  தானே அனுபவித்தார்?  


முழுவதுமான அங்கங்களை இழந்த 
கோரமான ஒரு மனிதன் 
எனது சேலையைத் தொட்டு 
இழுக்கத் தொடங்கினான்.
"அதைத் திரும்பவும் சொல்லுங்கள் "
என்றான்.
"மதர் தெரசா !
இது கடவுளின் அன்புதான் என்பதை 
திரும்பவும் சொல்லுங்கள்...
துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள் 
நீங்கள் இப்படிப் பேசும்போது 
உங்களைப்  புரிந்துகொள்கிறார்கள் !  


கிறிஸ்து உண்மையிலேயே 
தனது சிலுவை வேதனையுடன் 
இத்தகைய இல்லங்களில் 
இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் .
நமது மக்களிடையே 
கல்வாரிக்  காட்சியை 
நீங்கள் 
தினமும் காணலாம் !



உயிர் வாழ்வதன் காரணம் 


நாம் உயிர் வாழ்வதன் 
உண்மையானக் காரணம் ....
முடிவில்லா வாழ்வின் மகிழ்ச்சி மீது 
நம்பிக்கைக் கொண்டு 
கடவுளின் அன்பை 
சூரியனைப் போலப் பிரகாசிப்பதற்கே !


ஆம்...
அதுதான் எல்லாம்!



கிறிஸ்துவை வீட்டிலேயே காண வேண்டும்!


நூற்றுக்கணக்கான 
இளம் அமெரிக்கர்களும்  ஐரோப்பியர்களும் 
இந்து மாதத்தில் சேர என 
இங்கு வருகின்றனர்.
அவர்கள் எத்தனையோ காண விரும்புகின்றனர்.
நான் எப்போதுமே 
அவர்களிடம் கேட்பேன்...
"கிறிஸ்து உங்களுக்குப் 
போதுமானவராக  இல்லையா?"


நமது இளைஞர்களுக்கு 
நாம் 
கிறிஸ்துவை அறிவிக்க முயல வேண்டும் 
அவர்கள் மேல்நோக்கிப் பார்த்து 
கிறிஸ்துவை அறிய வேண்டும் 
கிறிஸ்துவைத் 
தங்கள் வீட்டிலேயே 
அவர்கள் காண முடிய வேண்டும்!



தடையை நீக்கிவிட்டனர் 


தொழில் மயமாகிவிட்ட உலகில் 
அன்புசெய்து மகிழ்ச்சியடைவதை 
பல காரணிகள் 
மூச்சுத் திணற வைக்கின்றன.


மக்களிடம் அதிகம் அதிகம் இருந்தாலும் 
அவர்கள் மேலும் மேலும் விரும்புகின்றனர்.
அவர்கள் 
மன நிறைவற்றவர்கள் !


ஆஸ்திரேலியாவில் 
ஆறோ ஏழோ குழந்தைகளுள்ள 
ஒரு குடும்பத்தினர் 
தங்களுக்குள் கூடிப் பேசி 
தற்போது புதுக் தொலைக்காட்சிப்  பெட்டி 
வாங்க வேண்டாம் என முடிவு செய்தனர்.
அவர்கள் தங்களுக்குள் 
ஒருவருக்கொருவர் 
மகிழ்ச்சியடைவதையே விரும்பினர். 
தங்களுக்கு எது தேவையோ 
அது மற்றவர்களிடம் அதிகம் இருப்பதைக் 
கண்டு மகிழ்ந்தனர்.
புதுக் தொலைக்காட்சிப்  பெட்டி வாங்க 
வைத்திருந்த பணத்தை 
முதியோருக்காக ஏதாவது செய்யும்படி 
என்னிடம் தந்தனர்.


தங்களுக்கிடையே அன்பு செய்து மகிழ 
இடையூறாக இருந்த 
ஏதோ ஒரு தடையை 
அவர்கள் வெற்றிகொண்டுவிட்டனர் !
அத்துடன் அவர்கள் 
பகிர்ந்துகொள்ளுதலை உணர்ந்து கொண்டனர் 


பேசி மகிழ்தல்.. சிரித்தாள்...
அன்பு செய்தல்....
நையாண்டி செய்தல் ...
அனைத்தையும் உணர்ந்துகொண்டனர்.


அந்த மொத்தக் குடும்பமும் 
மகிழ்ச்சியானதாய் இருந்தது !



அன்பை அறிய வழி 


கிறிஸ்துவின் அன்பை அறிய 
சிறப்பான 
நிச்சயமான வழி ......
குடும்பத்தின் வழி தான்!



குடும்ப ஜெபம் 


குடும்ப ஜெபம் செய்யும் வழக்கத்தை 
கொண்டு வந்தோமெனில் 
அந்தக் குடும்பம் சேர்ந்திருக்கும் ...
குடும்பத்தினர் 
ஒருவருக்கொருவர் அன்பு செய்வர் 
வெறும் ஐந்து நிமிட ஒருங்கிணைப்பு!


"எங்கள் தந்தையே "
என்று ஆரம்பியுங்கள்.
அதுவே போதும். 
இல்லாவிடில், 
"ஏன் தேவனே உம்மை 
அன்பு செய்கிறேன்,
என் கடவுளே நான் வருந்துகிறேன்..
ன் கடவுளே 
உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன்.
நீர் எம்மை அன்பு செய்ததுபோல 
நாங்களும் ஒருவரை ஒருவர் 
அன்பு செய்ய 
எங்களுக்கு உதவும் ...."
என்போம்.


ஜெபத்திலேயே ஒருவருக்கொருவர் 
கற்பித்துக் கொடுக்கையில் 
நமது பலமும் 
அதிலிருந்து  வருகிறது !  


ஜெபம் - மாற்றம் !


குழந்தைகள் அறியும்படி 
பெற்றோர் கடவுளை பற்றி 
பேசவேண்டியது அவசியம்.
குழந்தைகளுக்கு கடவுளைப்பற்றி 
கேள்விகேட்கத் தெரியவேண்டும் 


ஒருமுறை 
கம்யூனிஸ்ட் ஒருவருக்கு 
ஒரு ஜெபத்தைக் கொடுத்தேன்.
அவர் அதனை வீட்டிற்குக் கொண்டுபோனார்.
அவர் குடும்பம் -  குழந்தைகள்  ...
அதைப்பார்த்து 
ஜெபிக்கத் தொடங்கினர்.


அவர் திரும்ப எனைச் சந்தித்தபோது 
இப்படிச் சொன்னார்:- 
"மதர், உங்கள் ஜெபம் 
எனது மொத்தக்  குடும்பத்தியும்  
வெகுவாக பாதித்துவிட்டது.
எனது குழந்தைகள் 
'கடவுள் என்பது யார்' என 
அறிய விரும்புகின்றனர் ...
நீங்கள் 
ஏன் இப்படிப் பேசித் திரிகிறீர்கள் 
என்றும் அறிய விரும்புகின்றனர்.
ஆம்!
அந்தக் குழந்தைகள் பசித்திருக்கின்றன!
எனவேதான் சேர்ந்து ஜெபிக்கவேண்டும் 
என்று சொல்கிறேன்.
பெற்றோர் முன்மாதிரியாக இருந்தால் 
எப்படி ஜெபிப்பது 
எப்படி ஒருவருக்கொருவர் அன்பு செய்வது 
எப்படிக் 
கவலைகளை பகிர்ந்துகொள்வது 
எப்படி மகிழ்ச்சியைப்  
பகிர்ந்து கொள்வது என்பதைக் 
குழாந்தைகள் புரிந்துகொள்வார்கள் !


குழந்தைகள் கவனிக்கின்றன 
கவனித்துக் கவனித்தே வளருகின்றன 
பெற்றோர் செய்வதைக் கவனித்து 
தாங்களும் செய்வது 
தங்களில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதை 
அவர்கள் உணர்கிறார்கள்!



சிறுவயது செயல்கள் 


ஒருநாள் ஒரு பெண் 
மிகவும்  கவலையாக என்னிடம் வந்தாள்.
அவளது மகள் 
கணவனையும் குழந்தைகளையும் 
விபத்தில் இழந்துவிட்டாளாம் !
அந்த மகளது மொத்தக்கவலையும் 
வெறுப்பாக மாறி 
இந்தத் தாய் மீது திரும்பிவிட்டதாம். 
அவள் இந்தத் தாயைப் 
பார்க்கக்கூட மாட்டாளாம் !


நான் சொன்னேன் 
'உங்கள் மகள் சிறு குழந்தையாய் 
இருக்கையில் 
என்னென்ன விருப்பப்பட்டாள் 
என்பதை எண்ணிப்பாருங்கள்.
அப்படி அவள் விருப்பப்பட்டவைகளை 
மறு  எதிர்பார்ப்புகள்  ஏதுமின்றி 
அவளுக்குக் கொடுங்கள்...


நான் சொன்னபடியே 
அந்தத் தாய் செய்தாள்.
மகள் விரும்பும் பூக்கள், 
ஆடைகளை மேசை மீது வைத்தல் 
போன்றவைகளை 
மகளிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் 
பதிலையும் எண்ணாமல் செய்தாள்.


பல நாட்கள் கழிந்தபோது 
அந்த மகள் தாயிடம் சொன்னாள் 
"அம்மா அருகில் வாருங்கள் 
நான் உங்களை நேசிக்கின்றேன்..
எனக்கு நீங்கள் வேண்டும் "


மிகவும் அழகிய செயல் !
சிறு வயதில் மகிழ்ச்சி தந்தவைகளை 
நினைவுறுத்தியதும் 
அந்த மகள் 
தாயுடன் இணைந்துகொண்டாள் .


அவளது குழந்தைப் பருவ வாழ்வு 
அவளது தாயின் அன்பு அரவணைப்பில் 
மகிழ்ச்சியானதாக இருந்திருக்கவேண்டும்! 



குழந்தைப் பராமரிப்பு 


தற்கால சமுதாயத்தின் பல தீமைகள் 
உடைத்த குடும்பங்களால்தான் 
ஏற்படுகின்றன 
பல தாய் தந்தையர்கள் 
தங்களது அவசர பணிகளால் 
வீட்டில் இருப்பதில்லை.
குழந்தைகள் பள்ளியிலிருந்து வரும்போது 
அவர்களை வரவேற்க 
யாரும் இருப்பதில்லை 
அவர்களை கவனிக்க ..
கவலையாயிருந்தால் 
அவர்களுக்கு தைரியம் சொல்ல...
அவர்கள் சந்தோஷத்துடன் இருந்தால் 
அவர்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள 
யாரும் இருப்பதில்லை 


குழந்தைகள் 
தங்களை ஏற்றுக்கொள்ள ...
அன்பு செய்ய ....
தங்களைப்  புகழ ....
தங்களால் பெருமை கொள்ள ...
யாராவது இருக்கவேண்டுமென 
ஏங்குகின்றனர்.
அப்படி யாராவது இல்லையெனில் 
தெருவுக்கு வருகின்றனர் .
அங்கு அவர்களை ஏற்றுக்கொள்ள 
நிறையபேர் இருக்கின்றனர்.
இதனால் 
குழந்தைகள் தப்பிப்போகலாம் 
பெரிய வெறுப்பும் அழிவும் 
இப்படிக் குழந்தைகள் செல்வதால் 
அக்குடும்பத்திற்கு ஏற்படலாம்.


அன்னை மரியாளையும் 
யோசேப்பையும் போல
நாம் குழந்தைகளைத் தேட வேண்டும்.
இயேசு காணாமல் போனபோது 
அவர்கள் தேடினார்கள். 
உட்கார்ந்து காத்திருக்கவில்லை,
அவரைக் கண்டடைவதுவரை 
அவர்களுக்கு ஓய்வில்லை !  


நாமும் 
குழந்தைகளைத் திரும்பக் கண்டுபிடிக்கவேண்டும் 
அக்குழந்தை தேவையானது என்று 
அது உணரச் செய்யவேண்டும்.
அக் குழந்தையைத் திரும்பப் பெறாவிடில் 
சிறப்படைய 
வேறு வழியே இல்லை.  



கரு கலைப்பு குறித்து 


நாம் கடவுளின் சாயலாய்ப் 
படைக்கப்பட்டுள்ளோம் 
மனிதனாக உருவெடுத்த 
கிறிஸ்துவின் சாயலாய் !   


எல்லாக் குழந்தைகளுமே 
'அன்பு செலுத்த -
அன்பு செலுத்தப்பட - 
எனும் மேலான காரியத்துக்காகவே 
படைக்கப்பட்டுள்ளனர் 


ஆரம்பம் முதல் .....
உயிர் ஆரம்பமானது முதல் .....
தாய் வயிற்றில் 
கருப்பிடித்தது முதல் ...
கடவுளின் வாழ்வு ஆரம்பிக்கின்றது.
உயிருள்ளக் கடவுளின் வாழ்வு !
அதனால்தான் 
கருவை அழிப்பது 
கடவுளின் உருவை அழிப்பது 
தப்பு என்கிறேன் !



ஏன் ஜெபிக்கவேண்டும்?



நமது வாழ்வில் ஏற்ற இறக்கங்களும் 
நோய்களும் துன்பங்களும் உண்டு.
இது சிலுவையில் ஒரு பகுதி.
அவரை முழுமையாக 
பிரதிபலிக்க விரும்புபவன் 
அவரது துயரில் பங்குபெற வேண்டும்.


அதனால்தான் நமக்கு ஜெபம் 
தேவையாகிறது.
எனவேதான் நமக்கு 
உயிரளிக்கும் அந்த உணவு 
தேவைப்படுகிறது.
வழிபாடுகள், தவ முயற்சிகள் 
எல்லாம் அதற்காகத்தான்.
பல விசயங்களை மனதில் குழப்புவதால் 
நாம் ஜெபத்தையே குழப்பிவிடுகிறோம் 


ஜெபம்தான் என்னையும் உன்னையும் 
எல்லோரையும் 
பிரிக்கமுடியா அன்புப்  பிணைப்பால்  
கிறிஸ்துவை அன்பு செய்ய உதவுகிறது .


"நான் உங்களை அன்பு செய்ததுபோல 
அன்பு செய்யுங்கள் ..."
என்றதன்படி நாம் நடக்கும்போது 
அந்தப் பிரிக்க முடியா அன்பு 
செயல்படுகிறது !



இதய அமைதி தேவை 


ஆழமான நம்பிக்கைதான் 
ஜெபம் செய்வதால் பெறும் கனி.
நம்பிக்கையின் கனிதான் அன்பு  
அன்பின் கனி தான் சேவை!


ஆனால்...
ஜெபம் செய்ய வேண்டுமானால் 
நமக்கு அமைதி தேவைப்படுகிறது .
இருதயத்தின் அமைதி!


நமது வாய், கண்கள்...
ஏன் மொத்த உடலையே உபயோகித்து 
ஜெபம் செய்ய 
ஆன்மா அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது .
இதற்கு அமைதி தேவை.
அந்த இருதய அமைதி
நம்மில் இல்லையெனில் 
நமக்கு ஜெபிக்கத் தெரியவில்லை 
என்பதே பொருள்!



விலை மதிப்பில்லாதவர்கள் 


நம்மில் கடவுள் கொண்டுள்ள அன்பை 
உணர்ந்து கொள்ள 
நமக்கு ஜெபம் தேவைப்படுகிறது .


ஏசாயா ஆகமத்திலுள்ள 
அழகிய பக்கங்களை 
நீங்கள் படிக்க வேண்டும்.
அதில் கடவுள் சொல்கிறார்:-
"நான் உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் 
நீ என்னுடையவன்.
தண்ணீர் உன்னை மூழ்கடிக்காது 
நெருப்பு உன்னைத் சுட்டெரிக்காது ...
சாம்ராஜ்யங்களை உனக்குத் தருவேன் 
நீ எனக்கு 
விலைமதிப்பில்லாதவன் !"


ஆம்!
நாம் அவருக்கு விலைமதிப்பில்லாதவர்கள் !


தெருவில் இறந்துகொண்டிருக்கும் மனிதன் 
அதோ ....அந்தக் கோடீஸ்வரன் ....
அந்தப் படு பாவி ...
எல்லோருமே அவருக்கு 
விலை மதிப்பில்லாதவர்கள்தான்  
ஏனெனில் 
அவர் நம்மை அன்பு செய்கிறார்!



தூய இதயம் தேவை 


ஜெபிக்க வேண்டுமென்றால் 
நமக்கு தூய இதயம் வேண்டும்.
தூய இதயத்தால் 
நாம் கடவுளைக் காணலாம் !


கிறிஸ்துவை அன்பு செய்து 
அவரது வாழ்வை நடத்திக் காட்டிட 
நமக்குத் தூய இதயம் வேண்டும் 


லாசரைப் போன்ற வாழ்வு ...
மரியாளை போன்ற வாழ்வு...
புனிதமான நற்கருணை வாழ்வு...
தவக்கால வாழ்வு !


வாழ்வது நானல்ல 
நம்மில் கிறிஸ்து வாழ்கிறார்.
அவர் நம்மில் வாழ 
நமது ஜெபத்தால் 
அவருக்கு வழிவிடுவோம் !


எத்தனை அதிகமாக வழிவிடுகிறோமோ 
அத்தனை அதிகமாக 
நாம் 
கிறிஸ்துவைப்போல வளர்வோம்!



கடவுளோடு பேசுதல் 


ஜெபத்தின் ஆரம்பம் அமைதிதான் !
அமைதியான இதயத்தில் 
கடவுள் பேசுகிறார்.
பிறகு நாம் கடவுளோடு 
பேசத்தொடங்குகின்றோம்........
நமது முழு இருதயத்தோடு!
அவர் கவனிக்கிறார்.


ஜெபத்தின் ஆரம்பம் விவிலியம்தான்.
கடவுள் பேசுவதை நாம் கேட்கிறோம்
திரும்பவும் 
நமது முழு இருதயத்தோடு  
கடவுளிடம் பேசுவோம்
அவர் கவனிக்கிறார் !


இதுதான் ஜெபம்!
இரண்டுபேருமே 
ஒருவருக்கொருவர் பேசுதல்;
ஒருவருக்கொருவர் கவனித்தால்!



தந்தைக்குத் தெரியும் 


ஜெபமே மகிழ்ச்சி...
ஜெபமே அன்பு....
ஜெபமே சமாதானம்...
அதனை நாம் விளக்க முடியாது.
அதனை 
ஜெபிப்பதில்தான் நாம் 
அனுபவித்தறிய முடியும் !


இது முடியாத ஒன்றல்ல....
கடவுள் 
கேட்பவர்களுக்கு கொடுக்கிறார்.
"கேளுங்கள், 
உங்களுக்கு கொடுக்கப்படும் "


தந்தைக்குத் தெரியும் 
குழந்தைக்கு எதைக் கொடுப்பதென்று .
அப்படியானால் 
எத்தனை அதிகமாக 
வணக்க தந்தைக்கு 
அது தெரிந்திருக்கவேண்டும்!



இதயத்தை மாற்று !


இதயத்தை மாற்று...
இதயத்தை மாற்றிடாமல் 
நாம் மாற்றமடைய முடியாது!


இடத்தை மாற்றுவது ஒரு தீர்வல்ல...
வேலையை மாற்றுவது ஒரு தீர்வல்ல...
இதயத்தை மாற்றுவதுதான் 
சரியான தீர்வு!


எப்படி அதனை மாற்றுவது?
ஜெபிப்பதால்!


இருதயத்தை  மாற்ற நாம் செய்யவேண்டியது 
கிறிஸ்துவுடன் ஒப்புரவு 
அதனை அடுத்து 
நற்கருணை உட்கொள்ளுதல் 
இதன்பின் 
நாம் 
அமைதியால் நிரப்பப்படுகின்றோம்!



உணரவேண்டும் !


கிறிஸ்து எங்கு இருக்கிறாரோ 
அங்கு மகிழ்ச்சி இருக்கும்....
அங்கு சமாதானம் இருக்கும்.....
அங்கு அன்பு இருக்கும்...


நமது வாழ்வின் அன்புக்காகவும் 
மகிழ்ச்சிக்காகவும் தான் 
அவர் தன்னையே 
உயிரளிக்கும் உணவாக்கினார்!


அவர் கொடுத்ததைப்போல 
வேறு யாரும் கொடுக்க முடியாது 
ஆம் 
அவர்தான் எக்காலத்திலும் 
இதற்குச் சான்றாக இருக்கிறார். 
நாம் அதனை 
உணரவேண்டியதுதான் 
பாக்கி இருக்கிறது!



கிறிஸ்துவே எல்லாம்!


கிறிஸ்துத்  தெளிவாகச் சொல்லிவிட்டார் 
செலுத்தப்படவேண்டிய அன்பு 
எனது அன்பு...
வாழவேண்டிய வாழ்வு 
எனது வாழ்வு...
பகிரப்படவேண்டிய மகிழ்ச்சி 
எனது மகிழ்ச்சி ....
உண்ணப்படவேண்டிய உணவு..
பருகப்படவேண்டிய பானம் ....
சொல்லப்படவேண்டிய உண்மை....
ஏற்றப்படவேண்டிய ஒளி ...
கொடுக்கப்படவேண்டிய சமாதானம் ...
எல்லாமும் நான்தான் !


ஆம் .....
கிறிஸ்துதான் அனைத்தும்  !



கிறிஸ்துவின் அன்பு


நம்மை அன்பு செய்ய...
நம்மோடு பகிர்ந்துகொள்ள 
நமது வாழ்வின் மகிழ்ச்சியாக ..
கிறிஸ்து 
எப்போதும் இருந்துகொண்டிருக்கிறார் !


அவரது அன்பு நிபந்தனையற்றது!
மென்மையானது..
மன்னிக்கக்கூடியது...
முழுமையானது!


விலையை மதிப்பிடாமல் 
அளவையால் அளக்காமல்    
எதுவும் செய்யாமல் 
தன்னையே பாதித்தாலும் 
அவர் அன்பைத் தருகிறார்.  


அன்பு 
உண்மையுள்ளதாய்  இருக்கவேண்டுமெனில் 
அது செலுத்துபவரைப் பாதிக்கவேண்டும் 
ஒரு சிறு குழந்தை 
கிறிஸ்துவுக்காக என்று 
மூன்று நாளைக்கு 
இனிப்பையே  தொடாமல் இருப்பது 
அதனைப் பாதிக்குமளவு 
அன்பு செலுத்துவதுதான்!


தனது மகனையே பலியாகத் தருவதில் 
வானகத் தந்தை  துன்புற்றார் 


என்னையும் உங்களையும் 
அன்பு செய்யும் முயற்சியில் 
கிறிஸ்துவும் துன்பம் அனுபவித்தார் !



வாழ்க்கையால் பேசவேண்டும் 


மக்கள் உங்களில் 
கிறிஸ்துவைக் காண அனுமதியுங்கள்!
நீங்கள் எப்படி ஜெபிக்கிறீர்கள் 
எப்படி ஒரு தூய வாழ்வு வாழ்கிறீர்கள் 
குடும்பத்தினருடன் எப்படிப் பழகுகிறீர்கள் 
உங்கள் குடும்பத்தில் 
எத்தகைய சமாதானம் நிலவுகிறது 
என்பதை அவர்கள் காணட்டும்.


அப்படியென்றால் நீங்கள் 
துணிவுடன் 
அவர்கள் கண்களைப்  பார்த்துச் 
சொல்லலாம் ...
"இதுதான் வழி"


நீங்கள் வாழ்க்கையால் பேசவேண்டும் ..
அனுபவத்தால் பேசவேண்டும்!



கிறிஸ்துவைக் கண்டவள் 


சில வாரங்களுக்கு முன் 
பாரிஸ் பல்கலைக்கழக 
பிரெஞ்சுப் பெண்பிள்ளை ஒருத்தி 
இங்கு வந்திருந்தாள் .
அவள் 
முனைவர் பட்டம் படிக்கிறாள். 


அவள் திடீரென்று ஒருநாள் 
என்னிடம் வந்து சொன்னாள் 
"நான் கிறிஸ்துவைக் கண்டேன்"


நான் கேட்டேன் , 
"நீ கிறிஸ்துவை எங்கு கண்டாய்?


"மரிப்பவர்களுக்கான 
உங்கள் இல்லத்தில்"


நான் கேட்டேன் 
"கிறிஸ்துவைக் கண்டதும் 
நீ என்ன செய்தாய்?"


"நான் பாவ பொறுத்தல் பெற்று 
நற்கருணை உட்கொண்டேன் "


இதற்குமுன் அவள் 
பாவப்  பொறுத்தல் பெற்று 
பதினைந்து ஆண்டுகள் ஆகின்றதாம்!


நான் அவளிடம் மீண்டும் கேட்டேன் 
"வேறு என்னைச் செய்தாய் நீ?"
அவள் சளைக்காமல் சொன்னாள்,
"நான் கிறிஸ்துவைக் 
கண்டுகொண்டேன் என்பதை 
என் பெற்றோருக்கு 
தந்தி மூலம் தெரிவித்தேன்."


பாரீசிலிருந்து 
இதனை ஆயிரம் மைல்கள் 
பயணம் செய்தும் ...
எத்தனையோ மனிதர்களைச் சந்தித்தும் 
காணாத கிறிஸ்துவை 
அவள் 
இந்த இல்லத்தில் கண்டிருக்கிறாள்!  



என்னில்  செயல்படுவது 


நான் ஒன்றைச் செய்வது 
அதைக் 
கிறிஸ்துவுக்காகவே செய்கிறேன் 
என்ற நம்பிக்கையுடன்தான்!


அது அவரது வேலைதான் 
என 
நிச்சயமாக நான் நம்புகிறேன் 
ஆம் 
மிக நிச்சயமாக!


எண்ணில் செயல்படுவது நானல்ல...
அவர்தான்!



மன்னிக்கும் மனம் 


உண்மையிலேயே 
கடவுள் நம்மிடம் 
மிக அன்பாக இருக்கிறார் 


உதாரணமாக....
பாவச்  சுமையுடன் 
ஒப்புரவு அருட்சாதனம் பெறச் செல்லும் நாம் 
வெறுமையுடன் திரும்புகிறோம் !
இதைவிட மேலான அன்பு 
என்னதான் இருக்க முடியும்?
மனித மூளையால் 
புரிந்துகொள்ள முடியாத 
சமாச்சாரம் இது !


எனவேதான் 
கிறிஸ்து 
தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார் 
"நான் உங்களை அன்பு செய்ததுபோல 
நீங்களும் ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள்"
ஆம்!
அவரைப்போல நமக்கும் 
அந்த மன்னிக்கும் மனப்பான்மை 
இருக்கவேண்டும்!



மரியாளின் புதுநன்மை தினம் 


கபிரியேல் தூதன் 
மங்கள வார்த்தை சொன்ன நாள் தான் 
மரியாளின் புதுநன்மை தினம் !
அன்று அவள்
மிக அழகான 
காரியம் ஒன்று செய்தாள்  


கிறிஸ்து தன்னில் குடிவந்துள்ளதை 
அறிந்ததும் 
அவசர அவசரமாக 
கருவுற்றிருக்கும் எலிசபெத்தம்மாளை 
சந்திக்கச் சென்றாள் .


அவளது வயிற்றிலிருந்த கரு 
என்னச் செய்த்து  என்று 
நாம் அனைவருக்கும் தெரியும் 


கிறிஸ்துவைக் கண்ட மகிழ்ச்சியில் 
அக்குழந்தை 
வயிற்றினுள்ளே துள்ளியது 
அக்குழந்தைதான் முதன் முதல் 
கிறிஸ்து வந்துவிட்டதை அறிவித்தது!


பிறக்காத குழந்தைக்கு 
கடவுளது வருகையை அறிவிக்கும்
வாய்ப்புக்  கிடைத்தது 
ஒரு 
ஆச்சரியமான  விசயம்தான்!



ஜெபத்துடன் செய்யும் சேவை 


கிறிஸ்துவின்பால் 
நாம் கொண்டுள்ள அன்பை 
வெளிப்படுத்துவதுதான் 
நாம் செய்யும்செயல்கள் 


மனது ஒப்ப, எந்தக் கைமாறையும் கருதாமல் 
ஏழையிலும் ஏழையான மக்களுக்கு 
செய்யும் சேவைகள் 
துயருறும் கிறிஸ்துவுக்குச் செய்யும் 
சேவைகள் தான்.


கிறிஸ்துவுக்கு ....
கிறிஸ்துவுக்காக ....
கிறிஸ்துவுடன் ...
ஜெபத்துடன் இணைத்து செய்யும்செவை 
நம்மை 
நிறைவடையச் செய்யும் .


எனவேதான் 
ஏழைகளின் மறைபோதக சபை 
ஆன்மீக வாழ்வில் 
உலகிற்கு நடுநாயகமாக நிற்கிறது   
என நினைக்கிறன் 



யாரோ ஒருவருக்கு.....


கடவுளை நாம் அன்பு செய்கிறோம் 
என்பதை 
எப்படி நிரூபிப்பது?
பிரிக்க முடியாத அன்புடனும் 
தன்னடக்கத்துடனும் 
கிறிஸ்துவை நாம் அன்பு செய்கிறோம் 
என்பதை 
எப்படித்தான் நிரூபிப்பது?


ஏழைகளிலும் ஏழையான 
எளிய மக்களுக்கு 
முழு மனதுடன் 
இலவச சேவை புரிவதில் !
அது கிறிஸ்துவுக்கான சேவை 
என்றுதான் நாம் நம்புகிறோம் .
கிறிஸ்துவுக்காக என்று நாம் செய்யாவிடில் 
அப்படிச் செய்வதில் 
அர்த்தமே இருக்காது!


டில்லியின் சமூக நலத்துறை அமைச்சர்  ...
ஒரு இந்துப் பிரமுகர் 
ஒருமுறை 
பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார் 
"மாதர்..
நீங்களும் நாங்களும் 
ஒரே சமூக சேவைப் பணிகளைத்தான் 
செய்கிறோம்..
ஆனால் நம்மிடையே 
மிகப் பெரிய வேறுபாடு ஓன்று உள்ளது. 
நாங்கள் இந்தப் பணிகளை 
ஏதோ ஒன்றிற்காகச் செய்கிறோம்....
நீங்கள் ..
யாரோ ஒருவருக்காகச் செய்கிறீர்கள்"


ஆம்!
அவர் சொன்னது சரிதான்.
எங்கள் பனியின் காரணத்தை 
அவர் கூற்று விளக்குகிறது.



ஏழை என்ற காரணத்தால் .... 


சகோதரிகள் எப்போதும் 
சிரிப்புடன்  சந்தோசமாக இருக்கிறார்கள்.
நாங்கள் சுதந்திரமானவர்கள்.....
நாங்கள் சுதந்திரமானவர்கள்.....


மக்கள் பூலோக காரியங்களில் 
மிகவும் சிரத்தையுடன் இருக்கிறார்கள் 
இந்தத் தொழில்மயமான உலகத்தில் ......
அதிகம் அதிகம் வேண்டும் 
என மக்கள் விரும்புகின்ற 
இந்த உலகத்தில்தான்.... 
நான் 
மிக மிக மோசமான 
கந்தல் உடையணிந்துள்ள 
மனிதர்களையும் 
பார்க்கிறேன்.   


ஒன்றுமில்லாமலிருந்தும் 
அவர்களால் 
எல்லாவற்றையும் கொடுக்க முடிகிறது 
"ஏழை"
என்ற சுதந்திரம் இருப்பதால்!



கிறிஸ்து வந்து தங்க......


கிறிஸ்து வந்து 
சில காலம் தங்க ஏதுவாக 
இன்னொரு நாசரேத்தாக மாற்றுவோம்.


நம்மிடையே குடிவர
கிறிஸ்துவும் தன்னை 
ஏழையாய் 
உருவேற்றவேண்டியிருந்தது  .


தன்னையே சிறியவராக....
பலமற்றவராக.....
உதவியற்றவராக......
யாரையாவது சார்ந்திருப்பவராக....
யாருமற்று  தனித்திருப்பவராக.... 
தேவையற்று, அன்பு செய்ய ஆளில்லாத 
கவனிப்பாரற்றவராக .


அவரது தாயைத் தவிர யாருக்கும் 
அவரை அடையாளம் தெரியவில்லை.
யோசேப்பு எனும் தச்சுச் தொழிலாளியின் 
மகனாகவே அவரைக் கருதினர்.
நாசரேத்திலிருந்து 
நல்லது எதுவும் வர முடியாது
என்றுதான் மக்கள் கருதினர்.


கிறிஸ்து செய்ததைத்தான் 
நாமும் செய்ய வேண்டும்  
சிறியவராக...உதவியற்றவராக..
நம்மை மாற்றி 
கடவுள் உலகை அன்பு செய்வதை 
அறிக்கையிடவேண்டும் 
அதுதான் நம் அறிக்கையிடவேண்டிய 
மிக நல்லச்  செய்தி !



நிறைவு பெற்றது