DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Monday, December 29, 2025

🏫 BIBLE MEDITATION - TAMIL - DECEMBER 2025

                   - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1759                                                                 🔆 ஆதவன் 01.12.2025 திங்கள்          

"அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்..." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 5: 41)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து பிரசங்கம் செய்த சீடர்களை பிரதான ஆசாரியனும் சதுசேய சமயத்தார்களும் பொறாமை கொண்டு கைதுசெய்து சிறைச்சாலையில் வைத்தனர். ஆனால், கர்த்தருடைய தூதன் இரவிலேயே அவர்களை சிறைச்சாலையிலிருந்து விடுவித்தான். அவர்கள் வெளியே வந்து மறுபடியும்  கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கம் செய்தார்கள்.  

அவர்களை மறுபடியும் கைதுசெய்து விசாரணை செய்தார்கள். அப்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து இனிமேல் போதிக்கக்கூடாது என்று அவர்களை எச்சரித்தார்கள். "அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 5: 29) என்று கூறியதால் அவர்களை அடித்து அவமானப்படுத்தினார்கள். அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய் மீண்டும் கிறிஸ்துவைக்குறித்து பிரசங்கம் செய்தார்கள். 

ஆம் அன்பானவர்களே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் நடைபெற்றதுபோல இன்றும் நமது நாட்டில் கிறிஸ்தவர்களுக்குப் பல்வேறு அவமதிப்புகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.  பல கிறிஸ்த ஊழியர்கள் கொலைசெய்யப்படுகின்றனர்; கிறிஸ்தவ ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன. மட்டுமல்ல, பல அரசாங்கச் சலுகைகள் கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்படுவதையும் நாம் பார்க்கமுடிகின்றது. இதுவும் ஒருவித அவமானம்தான். ஆனால் அன்றுமுதல் இன்றுவரை இந்த அவமதிப்பும், கொலைகளும் கிறிஸ்தவத்தை எதுவும் செய்யமுடியவில்லை. காரணம், ஜீவனுள்ள கற்பாறையான கிறிஸ்துவின்மேல் நாம் கட்டப்பட்டிருக்கின்றோம். 

அன்று அப்போஸ்தலர்களைக்  கொடுமைப்படுத்தியபோது கமாலியேல் எனும் நியாயசாஸ்திரி கூறிய வார்த்தைகளே இன்றும் உண்மையாக இருக்கின்றன. "இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்; தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 5: 38-39)  

"தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது" என்று கமாலியேல் கூறியபடி இன்றும் கிறிஸ்தவம் ஒழியாமல் இருப்பதே அது தேவனால் உண்டானது என்பதற்குச் சான்று. 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இதுபோலவே மனிதர்களால் அவமதிக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டவராகவே இருந்தார். ஆம், "அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்." ( ஏசாயா 53: 3) என்று வாசிக்கின்றோம். 

இப்படி அவமதிக்கப்பட்ட கிறிஸ்துதான் இன்று மொத்த உலகத்திலும் அதிக மக்களால் தேவனும் கர்த்தருமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். எனவே, நமது வாழ்விலும் நாம் மற்றவர்களால் அவமதிக்கப்படும்போது இவற்றை எண்ணிப்பார்ப்போம். அவமதிப்பு நமது வளர்ச்சிக்கான உரமாக இருக்கின்றது. அப்போஸ்தலர்கள் அவமதிப்பை பெரிதாக எண்ணாமல் புறப்பட்டுப்போய் கிறிஸ்துவை அறிவித்தனர். நாமும் அதுபோல அவமதிப்பை அற்பமாக எண்ணி நமது கிறிஸ்தவ வாழ்வை உறுதியுடன் தொடர்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1760                                                                 🔆 ஆதவன் 02.12.2025 செவ்வாய்      

"துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை." ( சங்கீதம் 119: 61)

தேவனுடைய வார்த்தைகள் நமது உள்ளத்தில் பதிந்து ஏற்ற செயல்புரியவேண்டுமானால் நமது இருதயம் பண்பட்டதாக மாறவேண்டியது அவசியம். இல்லையானால் நெருக்கடிகள், துன்பங்கள், இழப்புகள் ஏற்படும்போது நாம் தேவனை விட்டுப் பின்மாறிபோய்விடுவோம். 

இன்றைய தியான வசனத்தில் சங்கீத ஆசிரியர், "துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை" என்கின்றார்.   அதாவது, நான் உமது வேதத்தில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன், எனவே எனக்குத் துன்மார்க்கர்கள் மூலம் இழப்புக்கள் ஏற்பட்டபோதும்; பல்வேறு எதிர்மறையான சம்பவங்கள் வாழ்வில் ஏற்பட்டபோதும்,  நான் உமது வேதத்தை மறக்கவில்லை. அதனை நான் அசட்டைபண்ணவில்லை என்கின்றார். 

இதனையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்  வேத வார்த்தைகள் நமது உள்ளத்தில் பதிந்து பலன்தரவேண்டியது அவசியம் என்பதனை வலியுறுத்த விதைக்கிறவன் உவமை வழியாக நமக்கு அறிவுறுத்தினார். 

"கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில், சில விதைகள்  வழியருகே விழுந்தன; ஆகாயத்துப் பறவைகள் வந்து அவற்றை பட்சித்துப்போட்டன. சில விதைகள்  அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தன. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயின. சில விதைகள்  முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முட்கள் வளர்ந்து, அவை பலன் கொடாதபடி, அவற்றை நெருக்கிப்போட்டன. (மாற்கு 4:3-7)

நமது இருதயம் வழியருகே விதைக்கப்பட்ட விதைகளை ஏற்றுக்கொண்டதுபோல தேவ வசனங்களை ஏற்றுக்கொள்கின்றதா? இல்லை, மண்ணில்லாத கற்பாறை போன்றதாக இருக்கின்றதா?,  இல்லையானால் பிரச்னையெனும் முட்கள் நெருக்கும்போது நெருக்கமடைந்து பலன்தராத நிலத்தைப்போல இருக்கின்றதா? என்று சிந்தித்துப்பார்ப்போம்.  நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள், "ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தன."  (மாற்கு 4:8) அதுபோல நாம் பலன்தரவேண்டுமானால் இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, வேதத்தை நாம் மறக்கக்கூடாது. 

ஆம் அன்பானவர்களே, நமது இதயமானது வேத வசனங்களை தேவ வார்த்தைகளாக ஏற்றுக்கொள்ளவேண்டியது அவசியம்.  இதனையே அப்போஸ்தலராகிய பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதிய நிரூபத்தில், "ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது." (1 தெசலோனிக்கேயர் 2:13)

வேத வசனங்களை தேவ வசனமாகவே ஏற்றுக்கொள்வோமானால் நமக்குள் அது பெலன் செய்யும். துன்மார்க்கரின் கூட்டங்கள் போல பிரச்சனைகள் நம்மைக் கொள்ளையிட்டாலும் நாம் அவருடைய வேதத்தை மறக்கமாட்டோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1761                                                                 🔆 ஆதவன் 03.12.2025 புதன்        

"பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்." ( எபிரெயர் 2 : 14 )

டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் விழாவைக் கொண்டாடிட உலகம் தயாராகிவிடுகின்றது. "தேவன் ஆவியாயிருக்கிறார்".  (யோவான் 4:24) என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த ஆவியான தேவன் நம்மைப்போல மனித உடலெடுத்து இரத்தமும் சதையுமானவராக மாறினார். 

இன்று மனிதர்கள் அவரது மனித தோற்றத்தை மட்டுமே மனதில் கொண்டு அவரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் உலகத்தில் பிறந்த சாதாரண மனிதன் என்று எண்ணிக்கொள்கின்றனர். உலகில் பிறந்த பல்வேறு ஞானிகளைப்போல கிறிஸ்துவும் ஒரு ஞானி என்று பலரும் கருதுகின்றனர். அவரைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளாத மக்களும் அவரை ஒரு ஞானி என்று ஏற்றுக்கொண்டு கூறுகின்றனர். ஆனால், இவரே உலகத்தைப் படைத்தத்  தேவாதிதேவன் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. கிறிஸ்தவர்கள் பலரும்கூட இயேசு கிறிஸ்துதான் உலகத்தைப் படைத்தார் எனும் சத்தியம் தெரியாமல் இருக்கின்றனர். எனவேதான் அவரை சர்வ வல்லவராக அவர்களால் பார்த்து விசுவாசிக்க முடியவில்லை. 

பல்வேறு தீர்க்கதரிசிகள் மூலம் மனிதர்களிடம் பேசிய தேவன் "இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்." ( எபிரெயர் 1 : 2 ) என்று கூறப்பட்டுள்ளது. அப்போஸ்தலரான பவுல், "இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்" (1 கொரிந்தியர் 8:6) என்று கூறுகின்றார். சரி, இப்படி சர்வ வல்லவராக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏன் இரத்தமும் சதையுமான மனிதனாக மாறினார்? அதனையே இன்றைய தியானத்துக்குரிய வசனத்தைத் தொடர்ந்து வாசிக்கும்போது நாம் அறியலாம். 

இன்றைய தியான வசனம் கூறுவதனைத் தொடர்ந்து, "மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்கு உள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்."( எபிரெயர் 2 : 14, 15 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அதாவது மரணத்தின் அதிபதியான சாத்தானை அழித்து, மரண பயத்தினால் அடிமைப்பட்டிருந்த மக்களை அதிலிருந்து விடுவிக்க அவர் மனித உடலெடுத்தார். எனவே இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து,  அவர் நமக்காக மனித உடலெடுத்து நமக்காகப் பாடுபட்டார் என்பதையும்  விசுவாசிக்கும்போது  நாம் பாவத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும் மரண பயத்திலிருந்தும்  விடுதலை  பெறுகின்றோம்.

அவரது காலத்து  மக்கள் அவரை மரியாளின் மகனாக, யோசேப்பின் மகனாக எண்ணியதுபோல நாமும் எண்ணிக்கொண்டிருக்கக் கூடாது. வேதாகமத்தில் கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது பேசிய பேச்சுக்கள், செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றைச்  சரித்திரக் கதைபோல வாசித்து அவரது மனிதத் தன்மையை மட்டும் நாம் எண்ணிக்கொண்டு அவரது சர்வ வல்லமையையும், உலகத்தோற்றத்துக்குமுன்னே அவர் இருக்கின்றார் எனும் சத்தியத்தையும் மறந்துவிடக்கூடாது. 

கிறிஸ்தவத்தின்  ஆரம்ப காலத்தில் பலரும் இயேசுவை மனிதராகக் கண்டிருந்ததால் அவர்களுக்கு கிறிஸ்துவை தேவனாக ஏற்றுக்கொள்வதில் பல சந்தேகங்கள், சிக்கல்கள்  இருந்தன.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்." ( 2 கொரிந்தியர் 5 : 16 ) என்று கூறுகின்றார். 

ஆம், கிறிஸ்து உலகம் தோன்றுவதற்கு முன்னரேயே இருக்கின்றார்; அவரே உலகத்தைப் படைத்தார். "சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்." (ரோமர் 11:36) 

பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அவர் மனிதனானார். எனவே, கிறிஸ்துவை முழுமையாக விசுவாசித்து அவர் வழங்கும் பாவ மன்னிப்பு அனுபவத்தையும் பெற்று வாழும்போதுதான் மெய்யான தேவனையும் அவரது மீட்பினையும் தேவ ஆசீர்வாதங்களையும் பெற்றவர்களாக மாற முடியும். வெறுமனே உலக மக்கள் கொண்டாடுவதுபோல நாமும் அவரது பிறப்பின் நாளைக் கொண்டாடிக்கொண்டு இருப்போமானால் அவரை அறியாதவர்களாகவே இருப்போம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1762                                                                 🔆 ஆதவன் 04.12.2025 வியாழன்         

"இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்." ( லுூக்கா 2: 34)

இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, இன்றும் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாக இயேசு கிறிஸ்து இருக்கின்றார்; அவர்  பலருக்கும் இடறலாகவே இருக்கின்றார். காரணம் அவரது போதனைகள். இவற்றைக் கடைபிடிப்பது கூடாத காரியம் என்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர்கூட  இன்றும் சொல்லக்கேட்கலாம்.  மேலும், இவர் உண்மையிலேயே தேவனா? இல்லை சாதாரண மனிதனா? மகானா? என்று பலர் இடறலடைகின்றனர். 

இன்றைய தியான வசனம், சிமியோன் எனும் நீதிமான் கூறிய வார்த்தைகளாகும். தேவனுடைய கிறிஸ்துவை காணுமுன் நீ மரணமடைய மாட்டாய் என்று அவருக்கு ஏற்கெனவே பரிசுத்த ஆவியினால் அறிவிக்கப்பட்டிருந்தது. நியாயப்பிராமண கட்டளையை நிறைவேற்றிட இயேசுவை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க அவரது தாய் மரியாளும் தந்தை யோசேப்பும்  அவரை ஆலயத்துக்குக் கொண்டுசென்றபோது பரிசுத்த ஆவியின் அறிவிப்பின்படியே சிமியோன் ஆலயத்துக்கு வந்திருந்தார். 

இந்தச் சிமியோனைப்பற்றி வேதாகமத்தில், "அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்." ( லுூக்கா 2: 25) என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சிமியோன், "அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்" என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்துத் தீர்க்கதரிசனமாகக் கூறினார். 

ஆம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துத்  தனது ஊழியத்தை ஆரம்பித்தபோது இது நிறைவேறத் துவங்கியது. பலர் அவரைக்குறித்து இடறலடைந்தனர். பலருடைய இருதய சிந்தையை அவர் வெளிப்படுத்தியதால் அவர்கள் இருதயம் குத்தப்பட்டது. அவர்கள், "இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்." ( மாற்கு 6: 3) 

இன்றும் இயேசு கிறிஸ்துவைக் குறித்த இந்த இடறல் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. அவரை சாதாரண உலக மகான்களில் ஒருவராகவே பலர் எண்ணி இடறலடைகின்றனர். ஆனால் அன்று சிமியோன் அவரை அடையாளம் கண்டுகொண்டார். காரணம், அவர்  நீதியும் தேவ பக்தியுள்ளவருமாய் இருந்தார்; அவர்மேல் பரிசுத்த ஆவியானவர் இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று நாம் விசுவாசித்து அறிக்கையிட பரிசுத்த ஆவியானவரது வெளிப்பாடு நமக்குத் தேவையாக இருக்கின்றது. 

இதனையே, "ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்." (1 கொரிந்தியர் 12: 3) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். எல்லோரும் கூறுவதாலும், நாம் சிறு பிள்ளைகளாய் இருக்கும்போதே போதிக்கப்பட்டதாலும் நாம் அவரை தேவனென்று கூறிக்கொண்டிருக்காமல் மெய்யாகவே அவரை அறிந்து அவரே நமது பாவங்களைக் கழுவி இரட்சிக்கவல்ல தேவாதிதேவன் என்று உணர்ந்து ஏற்றுக்கொள்ளவேண்டியது அவசியம்.  

ஆம், கிறிஸ்துவைக் குறித்த பூரண நம்பிக்கையில்லாமல் சந்தேகத்தோடும் இடறலோடும் வாழாமல் அவரே மீட்பர் என்று உறுதியுடன் அறிக்கையிட்டு வாழவேண்டியது அவசியம். அதற்கு  ஆவியானவரின் துணை நமக்குத் தேவையாக இருக்கின்றது. ஆவியானவரே  நமக்குக்  கிறிஸ்துவைக்குறித்தத் தெளிவைத் தருவார்.  அவரை அறிந்துகொண்டபின்னர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத பிறருக்கும் ஆவியானவர் இந்த வெளிப்பாடைக் கொடுக்கும்படி ஜெபிப்போம். பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லமுடியாது. 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1763                                                                🔆 ஆதவன் 05.12.2025 வெள்ளி          

"அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்." ( யோவான் 1 : 46 )


மனிதர்களாகிய நாம் பலவேளைகளில் கிறிஸ்துவை அறியாத பிற மக்களைப்பற்றியும், பிற ஊர்கள், அல்லது பிற இனத்து  மக்களைப்பற்றியும் தப்பான எண்ணம் கொண்டுள்ளோம். ஆனால் தேவ வார்த்தையால் எல்லோரும் பயனடையவேண்டுமானால் மனிதர்கள்,  இடங்களுக்கு எதிரான அல்லது மனிதர்களின் பிரிவுகளுக்கு எதிரான தப்பெண்ணங்களை நாம் மாற்றவேண்டியது அவசியம். யாரையும் எவரையும் அற்பமாக எண்ணாமல் எதனையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும், காரணம், சிலவேளைகளில் நாம் தேடாத இடத்தில் நன்மையைக் காண முடியும். 

வேத உண்மைகளைப் பற்றிய தவறான கருத்துக்களை மாற்றுவதற்குச்  சிறந்த வழி, அதைச் சோதிப்பதாகும். நாத்தான்வேலிடம் எந்த வஞ்சகமும் இல்லை. அவரிடம் பாசாங்குத்தனமில்லை. அவர் ஒரு போலித்தனமானவர் அல்ல; நேர்மையற்றவர் அல்ல; அவர் உண்மையிலேயே நேர்மையான, தெய்வீக மனிதர். ஆனால், கிறிஸ்துவைப்பற்றி பிலிப்புக்  கூறியதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 

ஆனால் மனிதர்களின் எண்ணம் உண்மையில் என்னவென்று கிறிஸ்துவுக்குத் தெரியும். உண்மையிலேயே  சில பலவீனமான,  மற்றும் பாவமான விஷயங்கள் எல்லாரிடமும் காணப்படுகின்றன,  எனவே, நாத்தான்வேலை இயேசு கோபிக்கவில்லை. நாத்தான்வேல் அத்தி மரத்தின் கீழ் இருந்தபோது என்ன நடந்தது என்பதை இயேசு கண்டார். ஒருவேளை அவர் அப்போது தீவிரமான ஜெபத்தில் இருந்திருக்கலாம், எனவேதான், "பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது  உன்னைக் கண்டேன் என்றார்". (யோவான் 1:48)

அந்தக்காலத்தில் நாசரேத்தின் தன்மை அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. அற்பமான ஒரு ஊராக அது இருந்தது. எனவே, மேசியா அத்தகைய ஒரு ஊரிலிருந்த்து வருவது சாத்தியமா என்று நத்தனியேல் கேட்டார். இன்றும் இதுபோலவே கிறிஸ்துவை அறியாத பிற மதத்தினர் பலரும் தங்கள் மனதை மதத்திற்கு எதிரான தப்பெண்ணத்தால் நிரப்பி, பின்னர் பரிசோதனை இல்லாமல் உடனடியாக முடிவெடுக்கின்றார்கள். பல மனிதர்களும் காரியத்தை  ஆராய மறுக்கிறார்கள்;  ஏனென்றால் அது உண்மையாக இருக்க முடியாது என்று ஏற்கெனவே தங்கள் உள்ளத்தில்  அவர்கள் நிர்ணயித்துள்ளனர். 

ஆம், ஒருவருக்கு இதனை விளக்கிச் சொல்லி புரியவைப்பதைவிட அவரையே வந்து பார்த்து முடிவெடுக்கச் சொல்வதே சிறந்தது. இதனையே பிலிப்பு நாத்தான்வேலிடம் "வந்து பார்" என்று கூறினார்.  

இன்று பல ஊழியர்கள் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கக் காரணம் வலுக்கட்டாயமாக மக்களிடம் கிறிஸ்துவைத் திணிக்க முயல்வதால்தான். "இந்தக் கிறிஸ்தவ போதனையில் எங்கள் மதத்தில் கூறப்படாத என்ன பெரிய சத்தியம் இருக்கப்போகிறது?" என்று கிறிஸ்துவை அறியாத மக்கள் கேட்கலாம்; நினைக்கலாம். அவர்களுக்கு நாம் பெரிய விளக்கமோ, போதனைகளோ கொடுக்கத் தேவையில்லை. நம்மிடம் கேள்வியும் விளக்கமும் கேட்பவர்களிடம் பிலிப்பு கூறியதைப்போல, "வந்து பார்" என்று கூறுவோம்.  

அதாவது, அவர்கள் வந்து நம்மிடம் கிறிஸ்துவைக் காணும்படியான ஒரு வாழ்வு வாழ்வோம். ஆம், அப்போது அவர்கள் நம்மில் இருக்கும் கிறிஸ்துவைப் பார்த்து தங்கள் சொந்த அனுபவத்தினால் திருப்தி அடைவார்கள். கிறிஸ்துவை அறிவிக்க பக்கம் பக்கமாய் எழுதவேண்டியதில்லை. நாமே நிரூபங்களாய் இருக்கிறோம். நம்மை வாசித்தே மற்றவர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ள முடியும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 3 : 3 ) என்று கிறிஸ்துவை அறிந்த மக்களை நிருபங்கள் என்கின்றார். 

நிரூபங்களாக வாழ்வோம். அவர்கள் வந்து பார்த்து நம்மில் கிறிஸ்துவைக்  கண்டுகொள்ளட்டும். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1764                                                                🔆 ஆதவன் 06.12.2025 சனி        

"வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே." ( யோவான் 5 : 39 )

பெதஸ்தா குளத்தின் கரையில்  38 ஆண்டுகள் வியாதியால் படுத்திருந்த மனிதனை இயேசு கிறிஸ்து ஓய்வுநாளில் குணமாக்கியதால் யூதர்கள் அவரிடம் குற்றம்கண்டுபிடித்து வாக்குவாதம் செய்தனர். அவர்களோடு உரையாடியபோது இயேசு இன்றைய  தியான வசனத்தைக் கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்துவைக் குறித்து யூதர்களது நூல்களில் பல்வேறு தீர்க்கதரிசனங்கள் கூறப்பட்டுள்ளன. அவையே பழைய ஏற்பாட்டு நூல்களும் யூதர்களது பிற நூல்களும். பழைய ஏற்பாட்டில் இயேசுவைப் பற்றிய  300 க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்களை மேற்கோள் காட்டுகிறார்கள் சில வேத அறிஞர்கள். வேறு சிலர்,  574 வசனங்கள் உள்ளன என்கின்றனர்.  இயேசு கிறிஸ்துவைக் குற்றப்படுத்தியது யூத அறிஞர்கள்தான். அவர்கள் வேதத்தை நன்கு அறிந்தவர்கள். எனவேதான் அவர்களிடம் இயேசு கிறிஸ்து, "வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்" என்று குறிப்பிடுகின்றார்.  

இன்று நாமும் பழைய ஏற்பாட்டு நூல்களை வாசிக்கும்போது இயேசு கிறிஸ்துவைக்குறித்து அவை கூறுவதைக் கண்டுகொள்ளமுடியும். ஆம் அன்பானவர்களே எப்போதும் நாம் பழைய ஏற்பாட்டு வசனங்களை இயேசு கிறிஸ்துவுடனோ அவரது போதனைகளுடனோ ஒப்பிட்டுத் தெளிவடையவேண்டியது அவசியம். ஆனால் அது அறிவுபூர்வமான ஒப்பிடுதலாக இருக்கவேண்டும். 

ஒருமுறை ஒரு சகோதரன் என்னைத் தொலைபேசியில் அழைத்து, "பிரதர், எனக்கு ஒரு சந்தேகம். அதனைத் தெளிவுபடுத்த முடியுமா?" என்று கேட்டார்.  "சரி, கூறுங்கள்" என்றேன். அவர் கேட்ட சந்தேகம் எனக்கு அவரது முட்டாள்தனமான அறிவைப் புலப்படுத்தியது. 

அவர் என்னிடம், "பிரதர், லூக்கா நற்செய்தியில் சகேயு பற்றிய செய்தியின் இறுதியில் சகேயு மனம்திரும்பி இயேசு கிறிஸ்துவிடம், "ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்." ( லுூக்கா 19 : 8 ) என்று கூறப்பட்டுள்ளது அப்படித்தானே? " என்றார். "ஆமாம், இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்?" என்று கேட்டேன். 

அவர் கேட்டார், "பிரதர், என்னிடம் ஒரு லட்சம் ரூபாய் தான் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நான் மனம் திரும்பிவிட்டேன். எனவே அதில் பாதியாகிய ரூ.50,000/- த்தை ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். இது தவிர நான் ஒருவரிடம் ரூ.20,000/- அநியாயமாக வாங்கியிருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நான் அவருக்கு நான்கு மடங்காகத் திரும்பிச் செலுத்தவேண்டும். அப்படியானால் நான் அவருக்கு ரூ.80,000/- கொடுக்கவேண்டும். ஆனால் இப்போது என்னிடம் ஏழைகளுக்குக்  கொடுத்துப்போக மீதியாக வெறும் ஐம்பதாயிரம் மட்டும்தானே இருக்கிறது; நான் எப்படி நான்குமடங்கு திரும்பிச் செலுத்த முடியும்? நான் எப்படி சகேயுவைபோல பாவ மன்னிப்பு பெறமுடியும்?" என்றார். 

அன்பானவர்களே, இது பொய்யான கற்பனையல்ல; நடந்த சம்பவம். என்னிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்டச் சகோதரன் படிப்பறிவில்லாத மனிதரல்ல; ஒரு B.A  பட்டதாரி.    இப்படிப்பட்ட அறிவுடைய  மக்கள் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலேயே வாழ்கின்றார்களென்றால் இயேசு கிறிஸ்துவின் காலத்தில் எத்தனை அதிகமாக இருந்திருப்பர்!!. இவர்கள் எப்படி வேத வசனங்களை ஆராய்ந்திருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள். எனவேதான் அவர்களால் கிறிஸ்துவை அடையாளம் காணமுடியவில்லை. 

இதுபோலவே இன்று பல போதகர்கள்; குருக்கள்  இருக்கின்றனர். தான் நித்திய ஜீவனை அளிக்கவே வந்ததாக வேத வசனங்கள் கூறுவதை ஆராய்ந்துபார்த்து உறுதிப்படுத்த இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்துக் கூறினார். ஆனால் இன்று இறையியல் பயின்ற இவர்கள் வேத வசனங்களுக்கு உலக அர்த்தம்கொண்டு, இயேசு ஏழைகள் பணக்காரர் என்ற வேறுபாடுகள் இல்லாத  சமதர்ம உலகை உருவாக்க வந்ததாகப் போதித்துக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் மேலே என்னிடம் சந்தேகம் கேட்டச்   சகோதரனைப்போன்ற அறிவுள்ளவர்கள். இவர்கள் ஒருபோதும் கிறிஸ்துவை வாழ்வில் அறிந்துகொள்ள முடியாது. 

ஆம் அன்பானவர்களே, வேதவாக்கியங்களை ஆவியானவரின் உதவியோடு ஆராய்ந்து பார்ப்போமானால் அவைகளால் நமக்கு  நித்தியஜீவன் உண்டென்று கண்டுகொள்வோம்;  அவை கிறிஸ்துவைக்குறித்து  சாட்சிகொடுக்கிறவை என்பதனையும் உணர்ந்துகொள்வோம். வேதாகமத்தை வாசிக்குமுன்,  சங்கீத ஆசிரியர் மன்றாடுவதுபோல, "உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்" (சங்கீதம் 119:18) என்று  வேண்டுதலோடு வாசிப்போம். அப்போது தேவன் நமக்கு வேதத்திலுள்ள அதிசயங்களைத் தெளிவாகப்  புரியவைப்பார்.  


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1765                                                              🔆 ஆதவன் 07.12.2025 ஞாயிறு         

"அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்." ( யோவான் 5 : 27 )

இன்று கிறிஸ்தவர்கள் பலருக்கும்கூட கிறிஸ்துவுக்கும் பிதாவாகிய தேவனுக்குமுள்ள உறவு, அதிகாரங்கள் இவைகளைப்பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கின்றது. சில கிறிஸ்தவ பிரிவுகள் (உதாரணமாக யெகோவா சாட்சிகள்) பிதாவாகிய தேவனே எல்லாம் என்றும் கிறிஸ்து அவரது சாட்சி மட்டுமே என்று  கூறுகின்றன.  இன்னும் சில கிறிஸ்தவ பிரிவுகள் "இயேசு மாத்திரம்" என்று கூறுகின்றன. இயேசு கிறிஸ்துதான் பிதா என்கின்றனர் இவர்கள். 

ஆனால் வேதத்தில் பல இடங்களில் பிதாவும் கிறிஸ்துவும் வெவ்வேறு அதிகாரமுள்ளவர்கள் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலானவராக பிதாவாகிய தேவன் இருக்கின்றார். அவர் கிறிஸ்துவைவிடப் பெரியவர். "நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா   என்னிலும்  பெரியவராயிருக்கிறார்". (யோவான் 14:28) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? 

அந்த சர்வ வல்லவரான பிதாவே இயேசு கிறிஸ்துவை உயர்த்தியிருக்கிறார். "பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். (பிலிப்பியர் 2:11) ஆம், பிதாவே கிறிஸ்துவுக்கு எல்லா நாமத்துக்கும் மேலான நாமத்தை அளித்துள்ளார். 

மட்டுமல்ல, தேவ குமாரனாகிய இந்தக் கிறிஸ்து நம்மைப்போல இரத்தமும் சதையுமுள்ள மனிதனாக உலகினில் வாழ்ந்தார். நம்மைப்போல பாடுகளை அனுபவித்தார். அதாவது அவர் பாவம்தவிர எல்லாவற்றிலும் நம்மைப் போலானார். இப்படி  "அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

"அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்." ( யோவான் 5 : 22 )

ஆம் அன்பானவர்களே, நம்மை நியாயம்தீர்க்கும் அதிகாரத்தை பிதாவாகிய தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அளித்துள்ளார். அதாவது, இறுதிநாளில் நம்மை பிதாவாகிய தேவனல்ல, கிறிஸ்துவே நியாயம் தீர்ப்பார். 

"அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்". (மத்தேயு 25:31-33) என்று இயேசு கிறிஸ்து கூறினார்.  

எனவேதான் நாம் கிறிஸ்துவின் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ  அழைக்கப்படுகின்றோம். ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இதனை உணராமல் கிறிஸ்துவின் வல்லமை வெறும் உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டுமே பயன்படும் என எண்ணி உலக ஆசீர்வாதங்களுக்காகவே ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்பானவர்களே, கிறிஸ்து அன்பானவர்தான்; இரக்கமுள்ளவர்தான், ஆனால் அவரே நீதியுள்ள நியாயாதிபதியாக வரவிருக்கிறவர். எனவே நாம் அவருக்குப் பயந்த ஒரு வாழ்வு வாழவேண்டியது அவசியம். 

"நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." (லூக்கா 12:5) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1766                                                              🔆 ஆதவன் 08.12.2025 திங்கள்        

"இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் கிரியையகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன்". ( எரேமியா 7 : 3 )

சிலரது வாழ்வில் தோல்வியே தொடர்கதையாக நடப்பதுண்டு. பல்வேறு தொழில் முயற்சிகளில் மாறிமாறி முயன்றும் எதுவும் ஏற்ற பலனைத் தருவதில்லை. எனவே இப்படி முயற்சி செய்த பலர் தொழில் ஆசீர்வாதம் வேண்டி பல்வேறு ஆலயங்களில் சென்று ஜெபிக்கின்றனர். பல்வேறு பொருத்தனைகள் செய்கின்றனர். அத்தகைய மனிதர்களுக்கு இன்றைய தியான வசனம் மூலம் அறிவுரை கூறுகின்றார் தேவன். 

நீங்கள் பல்வேறு இடங்களுக்கும்   ஓடிக்கொண்டிருக்கவேண்டாம்; உங்களை இந்த இடத்திலேயே  குடியிருக்கப்பண்ணுவேன் என்கிறார் தேவன். அதாவது நீங்கள் இப்பொழுது செய்துகொண்டிருக்கும் இதே தொழில் முயற்சியை நான் ஆசீர்வதித்து உங்களை இதிலேயே குடியிருக்கச் செய்வேன் என்கிறார் தேவன். 

ஆம்  அன்பானவர்களே, தேவன் நினைத்தால் நம்மை எந்த இடத்திலும், எந்தத் தொழிலிலும் உயர்த்தி வாழவைக்கமுடியும். ஆனால் இன்று நாம் ஆசீர்வதிக்கப்பட முடியாததற்கு சிலவேளைகளில் தேவன் விரும்பாத  நமது சில செயல்பாடுகளே காரணமாக இருக்கின்றன. அதனையே இன்றைய தியான வசனம், உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று அறிவுறுத்துகின்றது.  

தொழில் செய்வதில் உண்மை, வாழ்க்கையில் தூய்மை இவை இரண்டையும் தேவன் ஒருவரிடம் எதிர்பார்க்கின்றார்.  எனக்குத் தெரிந்த ஒரு நண்பருக்கு சரியான வேலை இல்லை. அவரது மனைவி பள்ளி ஆசிரியையாக இருந்தார். அவர் தனது கணவருக்கு ஏதாவது நல்ல தொழில் துவங்கிக்கொடுக்க வேண்டுமென்று எண்ணி வங்கியில் கடன் ஏற்பாடுசெய்து  ஒரு தொழிலை ஆரம்பித்துக் கொடுத்தார். அந்தக் கணவனோ அந்த நிறுவனத்தில் ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தி சிறிதுகாலம் நன்றாகத் தொழிலை  நடத்தினார். பின்னர் அந்தப்பெண்ணுடன் தவறான உறவை வளர்த்துக்கொண்டு நிறுவனத்துக்குளேயே அவலட்சணமான காரியங்களில் ஈடுபட்டுத்  தொழிலைச் சரியாகக் கவனிக்காமல் பெரிய நஷ்டமடைந்தார். 

அவரது குணம் தெரியாத மனைவி, மேலும் முயன்று அவருக்கு வேறொரு தொழிலை ஆரம்பித்துக் கொடுத்தார். அந்த மனிதன் தனது குணத்தை மாற்றவில்லை. எனவே, இதிலும் தோல்வியடைந்தார். மனைவியின் நகைகள் அனைத்தையும் இழந்து, கடன் அதிகமாகி, சொந்த வீட்டையும் இழந்து இப்போது பல்வேறு ஆலயங்களுக்கு நேர்ச்சை, காணிக்கை என செய்து ஓடிக்கொண்டிருக்கிறார். தனது தவறை இன்னும் அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 

ஆனால், எல்லோரையும் தேவன் இப்படித் தண்டிப்பதில்லை. பலர் துன்மார்க்கமாகவே வாழ்ந்தும் செழிப்பாகத் தொழில் செய்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், தேவன் சிலரை அதிகமாக நேசிப்பதால் இப்படித் துன்பங்களைக் கொடுத்து அவர்களைத் தனது வழிக்குத் திருப்ப முயலுகின்றார். ஆம், "கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்." (எபிரெயர் 12:6) என்று வேதம் நமக்குக் கூறவில்லையா? 

அன்பானவர்களே, ஒரு உதாரணத்துக்கு தொழில் ஆசீர்வாதமில்லாத நிலைமை குறித்து இந்தத் தியானத்தில் விபரித்தேன். தொழில் ஆசீர்வாதம் மட்டுமல்ல, நமது அனைத்துக் குடும்ப ஆசீர்வாத காரியங்களுக்கும் இது பொருந்தும். எனவே, நமக்கு எந்த ஆசீர்வாதம் வேண்டுமானாலும் முதலில் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம். ஆசீர்வாதங்களுகாக தம்மை நோக்கி வருபவர்களிடம் இன்றைய தியான வசனம் மூலம் தேவன் கூறுகின்றார்:-  "உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன்".


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1767                                                            🔆 ஆதவன் 09.12.2025 செவ்வாய் 

"உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்." ( ஏசாயா 47 : 13 )  

பாபிலோனுக்கு எதிராகக் கூறப்பட்ட வார்த்தைகளே இன்றைய தியான வசனம்.  செல்வச் செழிப்பு, பகட்டு, ஆடம்பரம் இவைகளுக்குப் பெயர்போனதுதான் பாபிலோன். எவ்வளவு செழிப்பு அங்கு இருந்ததோ அதேபோல மூடநம்பிக்கைகளும் அதிகமாக பாபிலோனில் இருந்தது. ஜோதிடம், சிலைவழிபாடு இவை மிகுதியாக அங்கு இருந்தன. ஆனால் பிரச்சனைகள் அழிவுகள் வந்தபோது அவர்களது வழிபாட்டுச் சிலைகளும், ஜோதிடமும், நாள்பார்த்தலும் அவர்களைக் காப்பாற்றவில்லை.

புதிய ஏற்பாட்டில், வெளிப்படுத்தல் புத்தகம் பாபிலோனை உலக ஊழல் மற்றும் கடவுளுக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாகக் காட்டுகின்றது. வெளிப்படுத்தல் 18 ஆம் அதிகாரம்  "மகா பாபிலோனின்" வீழ்ச்சியை விவரிக்கிறது, இது தீமையின் இறுதித் தோல்வி மற்றும் தேவனின் ராஜ்யத்தை நிறுவுவதற்கான ஒரு உருவகமாகும்.  "மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று." ( வெளிப்படுத்தின விசேஷம் 18 : 2 ) என்று வாசிக்கின்றோம். இந்த உருவகம் பகட்டு, செழிப்பு, சிலைவழிபாடு,  ஒழுக்கச் சிதைவு போன்ற செயல்களுக்கு எதிரான எச்சரிக்கையாக இருக்கின்றது. 

"நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே! கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார்." ( ஏசாயா 14 : 4-5 ) என்ற வார்த்தையின்படியே பாபிலோனின் செழிப்பு  அழிந்துபோயிற்று 

இன்றும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பலர் பாபிலோனின் மனநிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். பல்வேறு செழிப்பின் சிந்தனைகள் அவர்களை ஆக்கிரமித்துள்ளன. ஆவிக்குரிய ஆராதனைகளில் கலந்துகொண்டாலும் மேலும் மேலும் சொத்துச் சேர்க்கவேண்டுமென்று  தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 

இந்தக் கிறிஸ்தவர்கள் ஒருவேளை நேரடியாக ஜோசியம் நாள்பார்த்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் இருதயத்தில் பெருமை எனும் சிலையை நிறுத்தியுள்ளனர். பிற இனத்து மக்களின் பல்வேறு குணங்கள், செயல்பாடுகள் இவர்களிடம் உண்டு. 

ஆனால் தேவன் கூறுகின்றார், உன் பாபிலோன் மனநிலையினையையும் செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திப்பாய். அப்படித் தேவன் எதிராக எழும்பும்போது பாபிலோன் போன்ற மகிமை, அழிந்துபோகும். அதனை எந்தவிதத் திட்டங்களாலும் மீட்டெடுக்க முடியாது. எனவே எச்சரிக்கையாய் இரு என்கிறார் கர்த்தர். 

பாபிலோனின் வீழ்ச்சி; மனித பெருமை, சிலை வழிபாடு (விக்கிரகங்களை வழிபடுவது மட்டுமல்ல; பொருளாசையும் விக்கிரக ஆராதனையே) மற்றும் பல்வேறு பாவ வாழ்க்கைக்கு எதிரான தேவனின் தீர்ப்பை நமக்குக் குறிப்பால் உணர்த்துகின்றது. இது பூமிக்குரிய வாழ்க்கையின் நிலையற்ற தன்மை மற்றும் கடவுளின் நீடித்த வல்லமையை நினைவூட்டுகிறது. மேலும், இது தேவநீதி மற்றும் தீமையின் மீது நீதியின் வெற்றி போன்ற வேதாகம உண்மைகளை உறுதிசெய்கின்றது. 

எனவே அன்பானவர்களே, நாம் மனதில் பாபிலோனின் நிலை இருக்கின்றதா என்று ஒவ்வொருவரும் நம்மை நாமே சோதித்துப் பார்த்துக்கொள்வோம். அப்படி இருக்குமானால் நம்மைத் திருத்திக்கொள்வோம். இல்லையானால், "உனது முயற்சியினால் நீயே உன்னைப் பாதுகாத்துக்கொள்" என்றுகூறி தேவன் நம்மை வீட்டு விலகிச் சென்றுவிடுவார். ஆம், அதனையே இன்றைய தியான வசனத்தில் தேவன், "இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்"  என்று கிண்டலாகக் கூறுகின்றார். 

தேவன் நம்மைக் கைவிட்டுவிடாதபடி நம்மைக் காத்துக்கொள்வோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1768                                                            🔆 ஆதவன் 10.12.2025 புதன்  

"பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்......" ( மத்தேயு 3 : 7-8)

ஒருவர் மனம் திரும்பி தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்வதையே தேவன் விரும்புகின்றார். வெறும் சடங்குகளை கடைபிடிப்பது அர்த்தமற்றது என்பதை இன்றைய தியான வசனத்தில் யோவான் ஸ்நானகன் விளக்குகின்றார். 

இன்று தங்களை ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் பல சபைகளில் ஞானஸ்நானம் என்பது உறுப்பினர் சேர்க்கைக்கான ஒரு சடங்காக நடத்தப்படுவதைக் காணலாம்.  மெய்யான மனம் திரும்புதல் இருக்கின்றதோ இல்லையோ தங்கள் சபைக்கு வரும் மக்களை தண்ணீர் தொட்டியில் மூழ்குமாறு செய்வதே இவர்களது பெரிய பணியாக இருக்கின்றது. மெய்யாக மக்களை வழிநடத்தி ஆவிக்குரிய சத்தியத்தில் நடத்தும் ஊழியர்கள் இன்று மிகமிகக் குறைவாகவே இருக்கின்றனர்.  

நான் ஆரம்பகாலத்தில் ஆராதனைக்குச் சென்று ஞானஸ்நானம் பெற்ற கொட்டாரம் இந்திய பெந்தெகொஸ்தே சபையின் ( IPC ) போதகர் ஜான்சன் டேவிட் அவர்கள் மிகப்பெரிய தீர்க்கத்தரியாக இருந்தார். சபைக்கு வரும் ஒவ்வொரு விசுவாசியையும் அவர் நன்கு அறிந்தவர். அவரது சபையில் பல ஆண்டுகளாக ஆராதனைக்கு வந்தும் ஞானஸ்நானம் கொடுக்கப்படாமல் பலர் இருந்தனர். காரணம், ஒருவரது ஆவிக்குரிய தகுதியை அறிந்துகொள்ளாமல் அவர் உடனேயே யாருக்கும் ஞானஸ்நானம் கொடுப்பதில்லை. 

அதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் பார்க்கின்றோம். தன்னிடம் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த பரிசேயர்,  சதுசேயர்களை அவர் விரியன் பாம்புக் குட்டிகளே! என்று அழைக்கிறார். காரணம் அவர்களிடம் மனம்திரும்புதல் இல்லை. மாறாக எல்லோரும் ஞானஸ்நானம் பெறுவதைப்பார்த்து அவர்களும் ஒரு சடங்குபோல ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்தனர். 

ஆனால் அவர்களுக்குத் தாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்று  மனதில் தங்களைக் குறித்த ஒரு பெருமை இருந்தது. அதனை யோவான் கண்டுகொண்டார். எனவேதான், "ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 3 : 9 ) என்கின்றார். 

ஞானஸ்நானம் பெறுவது முக்கியமானது என்றாலும் அதன்முன்னர் மனம் திரும்புதல் அதனைவிட அவசியமாய் இருக்கின்றது. எனவேதான், "மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்......" என்று அறிவுறுத்துகின்றார்.  ஆவிக்குரிய மனிதனிடம் ஆவிக்குரிய கனி இருக்வேண்டும். "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." ( எபேசியர் 5 : 9 ) என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22-23 ) என்கிறார் அப்போஸ்தலராகிய பவுல். பாவ, மன்னிப்பு நிச்சயம், மனம்திரும்புதல், இதனை வெளிப்படுத்தும் கனிகள் இவை ஆவிக்குரிய வாழ்வுக்கு மிக அவசியம்.  

ஆனால், மனம்திரும்புதல் இல்லாத இத்தகைய தண்ணீர் தொட்டி முழுகுதல் சபைகளுக்கு உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கலாமேத் தவிர, இதனால் எந்தப் பயனுமில்லை. இத்தகைய ஞானஸ்நானம் பெற்றவர்கள் "நான் முழுக்கு ஞானஸ்நானம் பெற்றுள்ளேன்" என்று கூறிக்கொள்வதில் அர்த்தமில்லை; மாறாக, அது மற்றவர்களுக்குமுன் நான் பெரியவன் என்று தன்னை உயர்த்தும் பெருமையின் வெளிப்பாடாகவே இருக்கும். இதனையே இன்றைய தியான வசனம் மூலம் விளக்குகின்றார் யோவான் ஸ்நானகன். 

ஞானஸ்நானம் என்பது மனம்திரும்புதலின் அடையாளமாக இருக்கின்றது. "அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்". ( அப்போஸ்தலர் 19:3-5)

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1769                                                            🔆 ஆதவன் 11.12.2025 வியாழன்   

"அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்." ( யோவான் 9 : 34 )

"ஏழைச்சொல் அம்பலம் ஏறாது" என்று ஒரு பழமொழி உண்டு. ஆம், இந்த உலகம் அதிகாரபலம் பணபலம் உள்ளவர்களது பேச்சுக்களைத்தான் உண்மை என்று ஏற்றுக்கொள்ளும்.  பணமும் அதிகாரமும் இல்லாதவர்கள் எவ்வளவு நல்ல கருத்துக்களைச்  சொன்னாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வதில்லை. 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு பிறவிக்குருடனுடைய கண்களைத் திறந்து அவன் பார்வை அடையும்படிச் செய்தார். அவன் கிறிஸ்துவுக்கு மிகப்பெரிய சாட்சியாக இருந்தான். "பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விப்பட்டதில்லையே. அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான்." ( யோவான் 9: 32-33) என்று வாசிக்கின்றோம். அதாவது அவன் இயேசு தேவனிடமிருந்து வந்த தேவ குமாரன் என்று அறிக்கையிட்டான். ஆனால் யூதர்கள் அவன் கூறியதை  நம்பவில்லை. மட்டுமல்ல, அவனை அவர்கள் அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள்.

ஆம் அன்பானவர்களே, இதுபோன்ற காரியங்கள் இப்போதும் நடைபெறுவதை நாம் காணலாம். எனக்குத் தெரிந்த ஒரு மனிதன் முழுக் குடிகாரனாக இருந்தான். குடித்துவிட்டு ஆங்காங்கே விழுந்துகிடப்பான். அவன் குடும்பமும் ஏழ்மை நிலையில்தான் இருந்தது. ஆனால் அவன் ஏதோ ஒரு சூழலில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டான். அவனது வாழ்க்கை மாறியது. ஒரு சில ஆண்டுகளில் அவன் கிறிஸ்துவைக்குறித்து மற்றவர்களுக்கு போதனை செய்யும் சகோதரனாக மாறிவிட்டான். மதுபாட்டில்களை ஏந்திய அவனது கைகள் இப்போது வேதாகமத்தைச் சுமந்துகொண்டிருக்கின்றன.  

ஆனால் பாரம்பரியமாக ஆலயங்களுக்குச் சென்றுகொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் அவனை அற்பமாகத்தான் இன்னும் எண்ணுகிறார்கள். அவனது பேச்சை,  "குடிகாரன் பேச்சு" என்று ஏளனமாகக் கூறி கிண்டல்செய்கின்றனர். மேலும் சிலர், பணத்துக்காக அவன் மதம் மாறிவிட்டதாக அற்பமாகக் கூறிக்கொண்டிருக்கின்றனர். 

ஒருகாலத்தில் அவன் குடிகாரனாக இருந்தது மெய்தான், ஆனால் அவனது வாழ்க்கை இப்படி மாறியது எப்படி என்றோ, அவனது வாழ்வில் இந்த மாறுதலைச் செய்தவர் எத்தனை மகத்தானவர் என்றோ யாரும் எண்ணுவதில்லை. அன்று பிறவிக் குருடன் கர்த்தரைக் கண்டுகொண்டதுபோல குடிகாரனான அவன் கிறிஸ்துவைக் கண்டுகொண்டான். ஆனால் பாரம்பரிய கிறிஸ்தவர்கள் தொடர்ந்து ஆலயங்களுக்குச் சென்றும் அவரைத் தங்கள்  வாழ்வில் கண்டுகொள்ளவில்லை. 

எனவேதான் இயேசு கிறிஸ்து அவர்களைப் பார்த்துக் கூறினார்,  "காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன்." ( யோவான் 9 : 39 ) என்று. 

அன்பானவர்களே, கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் யாரையும் அற்பமாகவும் கேவலமானவர்களாகவும் எண்ணாதிருப்போம். ஒருவரது தனிப்பட்ட வாழ்வில் கிறிஸ்து எப்படிச்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குத் தெரியாது; தேவனோடு அவர்களுக்குள்ள தனிப்பட்ட உறவு குறித்து நமக்குத் தெரியாது. அப்படி அவர்களைப் புறக்கணிப்போமானால் "காண்கிறோம்" என்று நம்மைக்குறித்து எண்ணிக்கொண்டிருக்கும் நாம் உண்மையில்  தேவனை அறியாத குருடர்களாகவே இருப்போம்; யூதர்களுக்கு இயேசு கிறிஸ்து கூறியதுபோல, தேவனுடைய நியாயத்தீர்ப்பு நம்மேல் வரும். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1770                                                            🔆 ஆதவன் 12.12.2025 வெள்ளி    

"ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்." ( கொலோசெயர் 3: 13)

பாவ மன்னிப்பின் நிச்சயத்தை நாம் பெறவேண்டுமானால் முதலில் நாம் பிறருக்கு எதிராகச் செய்த பாவத்தை உணர்ந்து மன்னிப்புப் பெறவேண்டியது முதல் தேவையாக இருக்கின்றது.  நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக் கூறிய ஒரு ராஜாவின் இரக்கமில்லாத  ஊழியன் உவமை (மத்தேயு 18:23-35) இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கின்றது. ஆம் அன்பானவர்களே, நமது பாவங்கள் மன்னிக்கப்பட நாம் மற்றவர்களது பாவங்களை மன்னிக்கவேண்டியது முதல் தேவையாக இருக்கின்றது. எனது அனுபவத்தில் நான் கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப் பெற இதுவே முதல் காரணமாக இருந்தது. 

நான் 1990 ஆம் ஆண்டு பிறரது தூண்டுதலின்பேரில் அப்போதிருந்த கோட்டாறு ஆயர் ஆரோக்கியசாமி அவர்களுக்கு ஒரு குருவானவரைக் குறித்து அவர் எனக்கு எதிராகச் செயல்படுவதாக  ஒரு முக்கியமான குற்றச்சாட்டைக் கூறி ஒரு மனு அனுப்பினேன். அதில் நானும் என்னோடு இன்னொரு நண்பனும் கையெழுத்திட்டிருந்தோம். ஆனால் ஆயர் அவர்கள் அதன்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு அது எரிச்சலாக இருந்தது. அப்போது நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்தேன். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப்பின் ஒரு சகோதரன் என்னை வற்புறுத்தி ஒரு ஜெபத்துக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்போது முழு விருப்பமில்லாமல் அந்த நண்பரோடு சென்றிருந்தபோதும் எனக்கு நான் செய்த பல பாவங்களில் இந்தக் குருவுக்கு எதிராக மனு அனுப்பிய பாவமே மேலான பாவமாக இருதயத்தில் உணர்த்தப்பட்டது. "ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" என்று இன்றைய தியான வசனம் கூறுவதன்படி அந்தக் குருவானவர் எனக்கு எதிராகச் செய்த செயலை நான் மனப்பூர்வமாக மன்னித்தேன். ஆனால் அந்தக் குருவானவரை நேரில் சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போனதால் அவரிடம் இது குறித்து கூறமுடியவில்லை. 

இது நடந்தது 18.11.1993 அன்று. அன்று இரவியிலேயே கிறிஸ்துவின் பாவ மன்னிப்பின் மகிழ்ச்சி என்னை நிரப்பியது.  ஆம் அன்பானவர்களே, "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்." ( மத்தேயு 6: 14) என்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துக் கூறுவது மேலான ஆவிக்குரிய சத்தியம் என்பதனை அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன்.    

இன்று பலரும் வாழ்வில் கிறிஸ்துவை அறியாமலிருக்க இதுவே முக்கிய காரணமாக இருக்கின்றது. ஏதோ ஒரு சூழலில் நமக்கு எதிராக ஒருவர் செய்த காரியத்தையே மனதில் சுமந்துகொண்டு நாம் எவ்வளவு ஜெபித்தாலும் நாம் தேவனோடு ஐக்கியமாக முடியாது. காரணம், "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்." ( மத்தேயு 6: 15) என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

இதனை வாசிக்கும் அன்புச் சகோதரனே, சகோதரியே, இப்படி யாராவது ஒருவர்மேல் உங்களுக்குப் பகை உணர்வு இருக்கின்றதா என்று நிதானித்துப்பாருங்கள். அப்படி இருக்குமானால், "ஆணடவரே, நான் அவர்களை முற்றிலும் மன்னித்துவிட்டேன்" என்று கூறி ஜெபியுங்கள். அப்படி ஜெபிக்கும்போது நாம் அறியாமலேயே நமக்குள்ளிருக்கும் பகை உணர்வு மறைந்துவிடுவதை உணரலாம்.  அப்போது கிறிஸ்துவின் சமாதானம் நமது உள்ளத்தை நிரப்பி நம்மை வேறு மனிதனாக மாற்றும். 

ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் என்பதே கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனையாக இருக்கின்றது.  எனவே, மற்றவர்கள்மேலுள்ள வெறுப்புணர்வை,  அவர்கள் நமக்கு எதிராகச் செயல்பட்டதை, நாம் அவர்களுக்கு எதிராகச் செயல்கள் செய்ததை உணர்ந்து மன்னிப்பை வேண்டுவோம். "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்". (1 யோவான் 1:9)


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1771                                                            🔆 ஆதவன் 13.12.2025 சனி   

"தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" ( ரோமர் 8: 32)

பொதுவாக நாம் பிதாவாகிய தேவனை அன்புக்கும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை கிருபைக்கும் உதாரணங்களாக வேதத்தில் பல இடங்களில் வாசிக்கின்றோம். அப்போஸ்தலரான பவுல், "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக." (2 கொரிந்தியர் 13: 14) என்று பல நிரூபங்களில் ஆசீர்வதிக்கின்றார். 

பிதாவாகிய தேவனின் அன்பு நாம் எண்ணிப்பார்க்க முடியாதது. அதனை நாம் உணர்ந்துகொள்ளும்போதுதான் தேவ அன்பை நாம் ருசிக்கமுடியும்.  "தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்". (1 யோவான் 4;16) என்றும் நாம் வாசிக்கின்றோம்.

நாம் நமது பிள்ளைகள்  எந்தத் துன்பமும் அடைந்திடாமல் மகிழ்ச்சியாக வாழ என்னென்ன செய்யமுடியுமோ அத்தகைய காரியங்களையும்  அவர்களுக்குச் செய்கின்றோம். எந்தத் தாயும் தகப்பனும் தனது பிள்ளைகள் துன்பப்பட்டுச் சாகவேண்டுமென்று விருப்புவதில்லை. ஆனால் நம்மேல் கொண்ட அன்பினால் பிதாவாகிய தேவன் அப்படி விரும்பினார். சொந்த மகனா? தான் உருவாக்கிய மக்களா? எனும் கேள்விக்கு அவர் தான் உருவாக்கிய மக்களே முக்கியம் என்று தனது செயலால் உறுதிப்படுத்தினார். 

இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு உண்டாகாது என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.  "நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்;  இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது." (எபிரெயர் 9:22) எனவே, மனுக்குலத்தின் பாவங்கள் மன்னிக்கப்பட பாவமில்லாத இரத்தம் சிந்தப்பட்டாகவேண்டும். பிதாவாகிய தேவன் இதற்குக் கழுவாயாகத் தனது சொந்த மகனையே பூமிக்கு அனுப்பி பாடுபட்டு மரிக்கும்படிச் செய்தார்.   இதனையே இன்றைய தியான வசனத்தில், "தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர்" என்று கூறப்பட்டுள்ளது. 

இப்படித் தனது மகனையே நமக்காகக் கொடுத்தவர், "மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?" என்று இன்றைய தியான வசனம் நமக்குக் கேள்வியெழுப்பி நம்மைத் திடப்படுத்துகின்றது. அதாவது, நமக்காகத் தனது சொந்த மகனையே தந்தாரே அப்படிப்பட்டவர் நமக்கு மற்ற ஆசீர்வாதங்களை எப்படித் தராமல் நம்மைக் கைவிடுவார்? 

ஆம் அன்பானவர்களே, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இதனால்தான்,  "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6: 33) என்று நமக்குக் கற்பித்தார். பிதாவாகிய தேவனின் நாம்மேலுள்ள இந்த அன்பினைப் புரிந்துக்கொண்டோமானால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளில் நமக்கு நம்பிக்கை ஏற்படும். 

இதனால்தான் இயேசு கிறிஸ்துவின் அன்புத் சீடர் யோவான், "நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்." (1 யோவான் 5:14) என்று கூறுகின்றார். 

நம் எல்லோருடைய மீட்புக்காகவும் தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் கிறிஸ்துவை நமக்கு ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு எப்படித் தராமல் இருப்பார்? நிச்சயமாக நமது வேண்டுதல்களை அவர் கேட்காமல் இருக்கமாட்டார். நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டுள்ள தைரியம்.  

எனவே, இந்த விசுவாசம் நம்மில் குறைந்திடாமல் வாழ்வோம். நம்மில் விசுவாசக் குறைவு ஏற்படும்போது பிதாவாகிய தேவனின் இந்த அன்பினை எண்ணிப்பார்ப்போம். நிச்சயம் நமக்கு நம்பிக்கை ஏற்படும். ஆம், நமக்காகத் தனது மகனையே பலியாக்கியவர் நமது வேண்டுதல்களை புறக்கணிக்கமாட்டார். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1772                                                            🔆 ஆதவன் 14.12.2025 ஞாயிறு    

தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான். (1 தெசலோனிக்கேயர் 4: 7- 8)

நம்முடைய தேவன் பரிசுத்தர் என்று நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். நாம் அவரது பிள்ளைகளாய் இருப்பதால் நாமும் அவரைப்போல பரிசுத்தமுள்ளவர்களாக வாழவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். இதனையே, "நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே." (1 பேதுரு 1: 16) என்று அப்போஸ்தலரான பேதுரு நமக்கு லேவியராகமத்திலிருந்து மேற்கோள் காட்டி (லேவியராகமம் - 11:45, 19:2) நினைவூட்டுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் நமது தேவனைப்போல பரிசுத்தமுள்ளவர்களாக மாறவேண்டும் என்பதே அவரது சித்தம். "நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. " (1 தெசலோனிக்கேயர் 4: 3) என்று வாசிக்கின்றோம். 

ஆனால் மனிதர்களாகிய நம்மால் நமது மனித பலவீனங்களால் அப்படி ஒரு பரிசுத்தமான வாழ்வு வாழமுடியாது என்பதனை தேவன் அறிவார். எனவேதான் நம்மை பரிசுத்த வழியில் வழிநடத்திட பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார். அந்தப் பரிசுத்த ஆவியானவரின் குரலைக்கேட்டு நாம் நடக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அதனைக் கேட்காமல் வாழ்வோமானால் நாம் பரிசுத்த ஆவியானவரை மட்டுமல்ல, அவரை நமக்குத் தந்துள்ள தேவனையே அசட்டைப் பண்ணுகின்றோம் என்று பொருள். இதனையே, "ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்" என்று இன்றைய தியான வசனம் மூலம் அப்போஸ்தலரான பவுல் நமக்குக் கூறுகின்றார்.  

மேலும், நாம் கிறிஸ்துவுக்கேற்ற சாட்சியுள்ள வாழ்க்கை வாழ பரிசுத்த ஆவியின் பலம் நமக்குத் தேவை என்று உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துத் தனது சீடர்களிடம் கூறினார்.  "பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்". (அப்போஸ்தலர் 1:8). 

ஆம் அன்பானவர்களே, தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். அதன்மூலம் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ விரும்புகின்றார். எனவேதான் அதற்கு நமக்கு உதவுவதற்காக பரிசுத்த ஆவியானவரைத் துணையாளராகத் தந்துள்ளார். எனவே அந்த ஆவியானவரை நாம் அசட்டைப் பண்ணுவோமானால் மனிதரையல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறவர்களாக இருப்போம்.  "ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்;  ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை." (மத்தேயு 12:31) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?

பரிசுத்த ஆவியானவரைத்  தூஷணம் செய்வது என்பது அவரை அவமதித்துப் பேசுவதும் செயல்படுவதும் மட்டுமல்ல; அவருக்குக் கீழ்ப்படியாமல் வாழ்வதும் அவரைத் தூஷிப்பதுதான். எனவே ஆவியானவரை அசட்டைப் பண்ணாமல் வாழ்வோம். 
 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1773                                                            🔆 ஆதவன் 15.12.2025 திங்கள்     

"அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதனிமித்தமும் செத்துப்போனான்." (1 நாளாகமம் 10: 13)

இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுலின் வீழ்ச்சியைக்குறித்து இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. சவுலின் வாழ்கையினைப்போல நமது வாழ்க்கை ஆகிவிடாதபடிக்கு நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். 

சவுலை தேவன்தான் தெரிந்துகொண்டார். உண்மையில்  அரசனாகவேண்டும் எனும்  ஆசையோ அதற்கான முயற்சியோ சவுலுக்கு இல்லாமல்தான் இருந்தது. தனது தகப்பனின் காணாமல்போன கழுதைகளைத்தேடித் தான் அவன் சென்றான். ஆனால் கழுதையைத்தேடிச் சென்றவனுக்கு ராஜமேன்மை கிடைத்தது.  ஆனாலும் அவன் தனக்குத் தேவன் கொடுத்த இந்த உயரிய வாழ்வை தேவனுக்கு ஏற்புடையதாக வாழவில்லை. 

இதுபோலவே நம்மில் பலரும் பலவேளைகளில் வாழ்கின்றோம். தேவன் நமது தகுதிக்கு மேலாக  நம்மை உயர்த்தும்போது தேவனுக்குக் கொடுக்கவேண்டிய மகிமையைக் கொடுக்காமல் மறுதலித்துப் போகின்றோம். சவுலிடம் தாவீதுக்கு எதிராக பொறாமை, வஞ்சகம், முரட்டாட்டமான செயல்கள் அதிகம் இருந்தன.  மட்டுமல்ல, தாவீதைக் கொலை செய்ய பலமுறை அவன் முயன்றான். மேலும் தேவனுக்கு உரிய மகிமையைச் செலுத்தாமல் தனது மனம் எடுத்தத் தீர்மானத்தின்படி பலிசெலுத்தினான்.

எனவேதான் சாமுவேல் தீர்க்கதரிசி அவனைப் பார்த்து, "இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்." (1 சாமுவேல் 15: 23) 

இன்று பலர் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தேவனுக்குக் காணிக்கைகளையும் பொருத்தனைகளையும் செய்வது போலத்தான் அன்று  சவுல் செய்துகொண்டிருந்தான். ஆம், தேவனுக்குக்  கீழ்ப்படியும் வாழ்க்கைதான்  அனைத்துக்கும் மேலான தேவன் விரும்புகின்ற செயல் என்பதனை அவன் மறந்துபோனான். எனவே, சாமுவேல் அவனைப்பார்த்து, "கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்". (1 சாமுவேல் 15: 22) என்று கூறுகின்றார். 

இவை அனைத்துக்கும் மேலாக, சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல்,  கர்த்தரைத் தேடாமல், குறிசொல்பவர்களைத் தேடி அலைந்தான்.  இப்படி அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே, சிலவேளைகளில் தேவன் தனது கிருபையால் நமக்கு நாம் கேட்காத  செல்வத்தையும், பதவியையும் தரலாம். ஆனால் அப்படிப்பட்டச் சூழ்நிலைகளில் நாம் தேவனை மறந்தவர்களாக, எல்லாம் எனது பலத்தினால் கிடைத்தது என்று பெருமைகொண்டு இறுமாப்படையாமல் வாழவேண்டியது அவசியம். சவுலின் வீழ்ச்சி நமக்கு ஒரு எச்சரிப்பாகும்.  எந்த உயர்விலும், செலவச் செழிப்பிலும் மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யாமல், தேவனை மட்டும் மகிமைப்படுத்தி அவருக்கு நன்றியறிதலுள்ள வாழ்க்கை வாழ்வோம். 

 "விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1774                                                            🔆 ஆதவன் 16.12.2025 செவ்வாய்      

"நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்;   தகப்பன்   சிட்சியாத   புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12: 7)

சிட்சை அல்லது தண்டனை என்பது நம்மைத் திருத்துவதற்கான  ஒரு வழி. இன்றைய இளைஞர்கள் பல்வேறு தவறான வழிகளில் செல்ல பெற்றோர் அவர்களைச் சரியாகக் கண்டித்து வளர்க்காததே முக்கிய காரணம். பழைய காலங்களில் பொதுவாக எல்லா வீடுகளிலும் பிள்ளைகளைக் கண்டித்து வளர்த்தனர். தகப்பனிடம் பெரும்பாலான பிள்ளைகள் அதிக பயத்துடன் இருந்தனர். சில வீடுகளில் பிள்ளைகளை அடிப்பதற்காக கூரைகளில் பிரம்பு அல்லது வேப்பங்குச்சி சொருகி வைத்திருப்பார்கள்.  ஆம், "பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்". (நீதிமொழிகள் 23:13) என்று வேதமும் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

மட்டுமல்ல, அப்போது பெற்றோர்களும் ஆசிரியர்களிடம், "டீச்சர் என் மகன் / மகள் நல்லா படிக்கிறானா?" என்று கேட்பது மட்டுமல்ல, "வீட்டில் நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறான், நல்லா அடிகொடுங்க" என்று கூறுவார்கள்.  அப்போது பிள்ளைகளும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் பயந்து வாழ்ந்தனர்; நல்ல குணமுள்ளவர்களாக இருந்தனர்.  இப்படிப் பெற்றோர் ஆசிரியர்களிடம் தங்கள் பிள்ளைகளைக் கண்டிக்கச் சொல்வது தங்கள் பிள்ளைகள் நல்ல குணமுள்ளவர்களாக வாழவேண்டும் என்பதற்காகத்தானேத்  தவிர அவர்களைக்  கொடுமைப்படுத்துவதற்கல்ல. 

இப்படி பெற்றோர்கள் தண்டிப்பது பிள்ளைகளுக்குத் துன்பமாகத் தெரிந்தாலும் அதன் பலனை பின்னாட்களில் நாம் காண முடியும். ஆம், "எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்." ( எபிரெயர் 12: 11)

இதுபோலவே தேவன் தனது பிள்ளைகளை நடத்துகின்றார். அவர் பிரம்பையும் வேப்பங்குச்சியையும் கொண்டு அடித்துத் திருத்தாமல் பல்வேறு துன்பங்களைக்கொடுத்துத் தனக்கு ஏற்புடையவர்களாக நாம் மாறிட நம்மை அவர் தண்டிக்கிறார். எனவே, நாம் தண்டனைக்குப் பயந்து நமது உலகத்  தகப்பன்மாருக்கு  அடங்கி நடப்பதுபோல தேவனுக்கும் அடங்கி நடக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது என்கின்றார் எபிரெய நிருப ஆசிரியர். "நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?" ( எபிரெயர் 12: 9) என்று வாசிக்கின்றோமல்லவா? 

மேலும், உலக தகப்பன்மார் அவர்களுக்கு நல்லதாகத் தோன்றும் வழிகளில் நாம் நடக்கவேண்டி நம்மைத் தண்டித்தார்கள் தேவனோ நாம் அவரைப்போல பரிசுத்தமுள்ளவர்களாக நாம் மாறவேண்டும் என்பதற்காக நம்மைத் தண்டிக்கின்றார். இதனையே, "அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்." ( எபிரெயர் 12: 10) என்று கூறப்பட்டுள்ளது. 

"தகப்பன்   சிட்சியாத  புத்திரனுண்டோ?" என்று இன்றைய தியான வசனம் ஒரு கேள்விக்குறியுடன் முடிவடைகின்றது. எனவே அன்பானவர்களே, நாம் துன்பங்களை அனுபவிக்கின்றோமென்றால் தேவன் நம்மைத் தனது பிள்ளைகளாக எண்ணி நடத்துகின்றார் என்று பொருள். துன்பங்கள் வாழ்வில் வரும்போது முறுமுறுக்காமல் நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். நமது குற்றங்கள் என்ன என ஆராய்ந்து பார்த்து நம்மைத் திருத்திக்கொள்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1775                                                            🔆 ஆதவன் 17.12.2025 புதன்    

"பொல்லாங்குச் செய்கிறவன் எவனும் ஒளியைப்  பகைக்கிறான்தன் கிரியைகள்  கண்டிக்காத படிக்கு  ஒளியினிடத்தில்              வராதிருக்கிறான்".    (யோவான் - 3:20)

பொதுவாக பெரிய பெரிய பாவச் செயல்களும் குற்றங்களும் இரவில்தான் நடைபெறுகின்றன. குற்றவாளிகளுக்கு இருள் பாதுகாப்புக் கொடுக்கின்றது.   திருடர்களைப்   பாருங்கள்   அவர்கள்  எங்கே திருடச் சென்றாலும் அங்குள்ள விளக்குகளைத் தான்   முதலில் அணைப்பர்.

இதுபோலவே, உலகினில் ஒளியை   விரும்பும்   உயிரினங்களுக்கும்  இருளை    விரும்பும்     உயிரினங்களுக்கும்   மிகப்    பெரிய  வித்தியாசமுண்டுஆந்தைகூகைதேள், கரப்பான்,பூரான்,    இவை    போன்ற   உயிரினங்கள் ஒளியை விரும்புவதில்லை.  அவை எப்போதும்    இருளான இடங்களைத் தேடிப்  பதுங்கி உயிர்வாழும். கற்களின் அடியிலும், மரப் பொந்துகளிலும்  அவை   தங்கியிருக்கும்.  அவை மறைந்திருக்கும் பொருளை அகற்றினால் அந்த ஒளியை அவைகளால் தாங்கமுடியாமல் அவை உடனே இருளைத்தேடி ஓடும். பல்வேறு கொடிய வனவிலங்குகளும் இரவில்தான் வேட்டையாடும். 

ஆம்,  இதுபோலவே மனிதர்களது நிலைமை இருக்கின்றது. எப்படி ஒளியான  இடத்தில் இருளின்  உயிர்களுக்கு  விருப்பமில்லையோ அதுபோலவே இருளான பாவ குணமுள்ள மனிதர்களும் இருக்கின்றார்கள். இதனைத்தான் இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து,  "பொல்லாங்குச்  செய்கிறவன் எவனும் ஒளியைப்  பகைக்கிறான்தன்   கிரியைகள்  கண்டிக்காத படிக்கு  ஒளியினிடத்தில்              வராதிருக்கிறான்".    (யோவான் - 3:20) என்று கூறுகின்றார். 

இதனை ஒரு உதாரணம் மூலம் விளக்கலாம்       திருமண  வீடுகளில்   மேடையில்   மணமக்கள்   அமர்ந்திருக்கும்போது   நல்ல  ஆடைகளை அணிந்துள்ள    விருந்தினர்கள்    மேடையில்    ஏறி  நேரடியாக  மணமக்களை  வாழ்த்துவார்கள்மேடை வண்ண  விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக்கொண்டிருக்கும்ஆனால்  அங்கு  அரைகுறை ஆடையுடனோ நிர்வாணமாகவோ ஒரு  மனிதன் வர நேர்ந்தால் அவன் மேடையில்  வருவானா?   வெட்கப்பட்டுத்  தன்  மானத்தை மறைக்க இருளான இடத்தைத் தேடி ஓடுவானல்லவா?

ஆம், இன்று இயேசு கிறிஸ்துவை பலர் ஏற்றுக்கொள்ளத் தயங்கிட இதுவே காரணமாக இருக்கின்றது. ஏனெனில் கிறிஸ்து மெய்யான ஒளியாக இருக்கின்றார். அந்த ஒளியிடம் பாவ மனிதன் நெருங்கிட முடிவதில்லை; அவர்களது பாவ குணம் ஒளியான கிறிஸ்துவை நெருங்க விடுவதில்லை.  காரணம், கிறிஸ்தவம் பாவத்தையும் பாவ மன்னிப்பையும் வலியுறுதிப் போதிக்கின்றது. இந்தப் போதனை பாவ இருளிலிருக்கும் மனிதர்களுக்குக் கசப்பாகத் தெரிகின்றது. மேலும்,  பாவ வாழ்க்கை வாழும் பலரும் தங்களது பாவ வாழ்க்கையை நியாயப்படுத்துகின்றனர். "நான் என்ன பாவம் செய்தேன்?" எனக் கேள்வி  எழுப்புகின்றனர்.  அல்லது, "இதெல்லாம் பாவமா? உலகத்தில் எல்லோரும் இப்படித்தானே வாழ்கின்றனர்?" என்கின்றனர். அதாவது அவர்கள் தங்கள் வாழ்க்கை மாற்றத்துக்கோ, கிறிஸ்துவை அறியவோ தயாராக இல்லை. 

ஆனால் இப்படி வாழ்வது அவர்களது நரக வாழ்க்கைக்கு அடித்தளமாகவும் அமைகின்றது. இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறியதுபோல, "ஒளியானது   உலகத்தில்   வந்திருந்தும்  மனுஷருடைய   கிரியைகள்    பொல்லாதவைகளாய்     இருக்கிற படியால் அவர்கள் ஒளியைப்  பார்க்கிலும்  இருளை விரும்புகிறதே  அந்த ஆக்கினை தீர்ப்புக்கு  காரணமாயிருக்கிறது" (யோவான் -3:19) என்றபடி கிரிஸ்துவை நெருங்காமல் பாவத்திலேயே வாழ்வோமானால் இறுதியில் ஆக்கினைத் தீர்ப்படைவோம்.  

இதற்கு மாறாக, பாவ இருளிலுள்ள மனிதன் தனது பாவங்களை உணர்ந்து கிறிஸ்துவிடம் வரும்போது ஒளியடைகிறான். யோவான் தனது சுவிசேஷத்தின் ஆரம்பத்திலேயே கிறிஸ்துவைக் குறித்து,  "உலகத்திலே வந்து எந்த  மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே  அந்த  மெய்யான ஒளி" (யோவான் -1:9) என்று குறிப்பிடுகின்றார்.  ஆம், மெய்யான   அந்த ஒளியிடம்  வரும் போது  மட்டுமே  இருளான மனிதன்  பிரகாசமடைய முடியும். 

நீதியின் சூரியனான இயேசு கிறிஸ்து நம்மை ஒளியடையச்  செய்ய  நம்மை அவருக்கு முற்றிலும்  ஒப்படைக்க வேண்டியது அவசியம். நாம் இருளான வாழ்க்கை வாழ்பவர்களாக இருந்தால் மனம் திரும்பி நமது பாவங்களுக்கு மன்னிப்பு பெற்று அவரிடம் திரும்புவோம். ஏற்கெனவே கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றவர்களாக இருந்தால்  "உன்னிலுள்ள   வெளிச்சம் இருளாகாதபடிக்கு  எச்சரிக்கையாய்   இரு " ( லூக்கா - 11:35) என்று கிறிஸ்து நம்மை எச்சரிக்கின்றபடி நம்மிலுள்ள கிறிஸ்துவின்  ஒளி இருளடைந்திடாமல் எச்சரிக்கையாக இருப்போம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1776                                                            🔆 ஆதவன் 18.12.2025 வியாழன்     

"மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்." (கலாத்தியர் 3:13)

சிலர் வாழ்வில் தேவ ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு குடும்ப சாபங்கள் தடையாக இருக்கின்றன. முன்னோர்கள் செய்த சில அக்கிரமச்செயல்கள் பிள்ளைகளைப் பாதிப்பதுண்டு. ஆனால் இதனைப் பலர் ஏற்றுக்கொள்வதில்லை.  இது எப்படி நியாயமாகும் என்று பலர் கேள்வி எழுப்புவதுண்டு. 

ஆனால், முன்னோர்கள் சம்பாதித்து வைத்தச் சொத்துக்களையும்  பெற்றோரின் சொத்துக்களையும் அனுபவிக்கும் உரிமை பிள்ளைகளுக்கு உள்ளதல்லவா? அதுபோலவே அவர்கள் செய்த அக்கிரமச்  செயல்களும் பிள்ளைகளைப் பாதிப்பதுண்டு.  காரணம், பலர் அக்கிரமமான செயல்கள்மூலம் அதிகமான சொத்துக்களைச் சேர்க்கின்றனர்.  அப்படிச் சேர்க்கப்படும் சொத்துக்களை அனுபவிக்கும் சந்ததிகளுக்கு அவர்கள் செய்த அநியாயங்களின் பலன்கள் வந்தடைகின்றன. 

ஆவிக்குரிய வாழ்விலும் இதுவே உண்மையாக இருக்கின்றது. 

வேதாகம அடிப்படையில் பழைய ஏற்பட்டுச் சட்டங்கள் (நியாயப்பிரமாணங்கள்) முன்னோர்களது சொத்துக்கள் போன்றவை. அவைகளை மாற்றி, "கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசம்" எனும் கிருபையின் மேலான சொத்தினை நமக்குத் தரும்படி கிறிஸ்து உலகினில் வந்தார்.  இன்றைய தியான வசனம் நமக்குக் கூறுகின்றது, "கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்" என்று. அதாவது, நியாயப்பிரமானத்தைச் "சாபம்" என்று இங்கு பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார்.  அதாவது பழைய ஏற்பாட்டுச்சட்டங்களைத் தான் சாபம் என்று கூறுகின்றார். காரணம், இந்தச் சட்டங்கள் எது பாவம் என்று மட்டும் நமக்கு அறிவுறுத்துகின்றனவேத் தவிர, பாவத்திலிருந்து முழு விடுதலையைத் தருவதில்லை. 

ஆம் இதனையே பவுல் அப்போஸ்தலர், "இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே  தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை". (ரோமர் 3:20) என்று கூறுகின்றார். அதாவது எது பாவம் என்று நியாயப்பிரமாணம் கூறுகின்றதே தவிர அந்தப் பாவங்களிலிருந்து அவை மனிதனை முற்றிலும் விடுவிப்பதில்லை. ஆனால், இன்றும் பலரும் நியாயப்பிரமாண கட்டளைகளைக் கிளிப்பிள்ளைப்போல வாயினால் கூறிக்கொண்டு அவற்றுக்கு முரணாக நடந்துகொண்டிருக்கின்றனர்.

மேலும் நியாயப்பிரமாணத்தினால் மனிதர்களது சுய நீதி வெளிப்படுகின்றதேத்  தவிர மேலான தேவ நீதி அவற்றின்மூலம் வெளிப்படுவதில்லை. எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல், "நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல்,              கிறிஸ்துவைப் பற்றும்  விசுவாசத்தினால்  வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்," (பிலிப்பியர் 3:9) என்று கூறுகின்றார். 

எனவேதான் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்து சிலுவை மரணத்தை ஏற்று நியாயப்பிரமாணத்தின் சாபத்துக்கு நம்மை நீங்கலாக்கினார். இதனையே, "மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்". என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

முன்னோர்களின் சொத்து போன்ற நியாயப்பிரமாணம் மோசேமூலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இயேசு கிறிஸ்துவின்மூலம் மேலான கிருபையின் பிரமாணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையே அப்போஸ்தலரான யோவான், "எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின." ( யோவான் 1: 17) என்று கூறுகின்றார். ஆம், "விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்." ( ரோமர் 10: 4)

கிறிஸ்துவை விசுவாசிக்காமல் நியாயப்பிரமாண கட்டளைகளை மட்டும் பற்றிக்கொண்டிருப்போமானால் நமக்குச் சாபமே வரும். எனவே, "......................நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன்." ( யோசுவா 7: 12) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1777                                                            🔆 ஆதவன் 19.12.2025 வெள்ளி 

"நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது." ( லுூக்கா 17: 26,27)

இன்று பெரும்பாலான கிறிஸ்தவ போதகர்கள் உலக ஆசீர்வாதங்களையேப் போதித்து மக்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கின்றார். மக்களும் இப்படிப் போதிக்கும் ஆசீவாதப்  போதகர்களை மேன்மையாகவும் கிறிஸ்துவின் வருகையினைப்பற்றி போதிக்கும் ஊழியர்களை கேலியாகவும் எண்ணி தங்களது பொருள் ஆசீர்வாதத்தினால் திருப்தியாகி தேவனைவிட்டு விலகிச் சென்று விடுகின்றனர்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துத் தனது வருகைக்குமுன் என்னென்ன நிகழும் என்று தீர்க்கத்தரிசனமாக முன்கூறியுள்ளார். வேதாகமத்தை வாசிக்கும்போது அதுகுறித்த தெளிவை இக்காலத்துச் சம்பவங்களுடன் நாம் ஒப்பிட்டுப் பார்த்து  உணர்ந்துகொள்ளலாம். ஆனால், இன்றைய தியான வசனம் கூறும் உண்மை மற்றும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை,  உலக ஆசீர்வாதத்துக்காகவே தேவனைத் தேடும்  மக்களுக்கு எந்தவித புரிதலையும், உணர்த்துதலையும் கொடுக்காது. எனவே அவர்கள் வழக்கமான முறைமைகளின்படி வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.  இதனையே இன்றைய தியான வசனம், "ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்" என்று கூறுகின்றது. 

இயேசு கிறிஸ்து தனது இரண்டாம் வருகையினைக் குறித்துக் கூறும்போதுதான்  இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். நோவாவின் நாட்களில் பூமியில் அக்கிரமம் பெருகி இருந்தது.  "தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்." ( ஆதியாகமம் 6: 12) என்று வாசிக்கின்றோம். எனவே, தேவன் தான் உருவாக்கிய மக்களை அழிக்க சித்தம் கொண்டார்.

ஆனால் தேவனுக்குமுன் உத்தமனாய் நடந்த நோவாவுக்கு கடவுளின் கண்ணில் தயவு கிடைத்தது. எனவே உலகினைத் தான் அழிக்கும்போது அவனையும் அவன் குடும்பத்தையும் காப்பாற்றிட மரத்தால் ஒரு பேழை செய்யுமாறு கூறுகின்றார். நோவா பேழை செய்யும்போது அதனைப் பார்த்தவர்கள் அவனைக் கேலி செய்திருக்கலாம். அவர்களுக்கு நோவா அழிவைக்குறித்துப் போதித்திருக்கலாம். ஆனால், அவர்கள் அவனை நம்பவில்லை; மனம் திரும்பவுமில்லை. புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள், இயல்பான தங்கள் வாழ்வைத் தொடர்ந்தார்கள். ஆனால் எல்லோரும் இறுதியில் அழிவுற்றனர். 

இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்து இன்னொரு உதாரணமும் கூறுகின்றார். "லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்." ( லுூக்கா 17: 28)

இங்கும் லோத்து தனது மருமக்களிடம் சென்று வரவிருக்கும் அழிவினைக் கூறி எச்சரித்தார். ஆனால் அவர்கள் அதனை கேலியாக எண்ணினர். "அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது." ( ஆதியாகமம் 19: 14)

இதே நிலைதான் இன்றும் தொடர்கின்றது. இயேசு கிறிஸ்துவின் வருகையினைப்பற்றி கூறினால் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள்கூட நம்புவதில்லை, நம்பினாலும் தங்கள் குணங்களை மாற்றி தேவனிடம் உண்மையாய் மனம்திரும்பி வருவதில்லை. 

இன்றைய தியான வசனத்தின் இறுதியில் நாம் வாசிக்கின்றோம், "ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது" என்று. ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மின்னலைப்போல வரும் என்று இயேசு கிறிஸ்துக் கூறினார். "மின்னல் வானத்தின் ஒரு திசையில்தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்". (லூக்கா 17:24) மின்னல் வானில் தோன்றுவதை நாம் பார்த்திருக்கின்றோம். அதாவது அவர் அந்த மின்னல் வேகத்தில் வருவார் என்பது உவமையாகக் கூறப்பட்டுள்ளது. சரியான ஆயத்தமில்லாத வாழ்க்கை வாழும் மக்கள் அந்தக் குறுகிய காலஅவகாசத்தில் தப்பிப்போக எதனையும் செய்யமுடியாது.  

அன்பானவர்களே, வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள ஆசீர்வாத வசனங்களையல்ல, கிறிஸ்துவின் இரண்டாம் வருகை குறித்து வேதாகமம் கூறும் சத்தியங்களை உணர்ந்துகொண்டு மனம்திரும்பிய வாழ்க்கை வாழவே  நாம் அழைக்கப்படுகின்றோம். நோவா, லோத்து காலத்து மக்களைப்போல நாம் உணர்வற்று வாழ்வோமானால் ஜலப்பிரளயம் வந்து அவர்கள் எல்லாரையும் அழித்துப்போட்டதுபோல நாமும் அழிவுறுவோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1778                                                            🔆 ஆதவன் 20.12.2025 சனி  

"நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்." ( எசேக்கியேல் 3: 11)

இந்த உலகம் பொல்லாங்கனாகிய பிசாசின் பிடியினில் இருக்கின்றது. எனவே பலவீனமான மனிதர்களை அவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றான். அதாவது அவர்கள் பிசாசிடம் சிறைப்பட்டவர்களாக உள்ளனர். ஆனால், நாம் கிறிஸ்துவால் மீட்கப்படும்போது அவரது பிள்ளைகளாக மாறுகின்றோம். இதனையே அப்போஸ்தலரான யோவான், "நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும்  பொல்லாங்கனுக்குள்  கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்." (1 யோவான் 5:19) என்று கூறுகின்றார். 

இன்றைய தியான வசனம்,  கிறிஸ்துவால் மீட்கப்பட்ட நீ போய், பிசாசுக்கு அடிமையாகி பாவத்தினால் சிறைப்பட்ட ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்  என்று கூறுகின்றது. 

பொதுவாக கிறிஸ்துவின் நற்செய்தியைப் பலரும் விரும்பிக் கேட்பதில்லை. அதுபற்றி நாம் கவலைப்படாமல் அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களுக்கு கிறிஸ்துவை அறிவிக்கவேண்டியது அவசியம். கிறிஸ்துவை அறிவிக்க பெரிய பேச்சாற்றலும், எழுத்தாற்றலும், உடல் வலிமையும் தேவையில்லை. காரணம், கிறிஸ்துவை நாம் நமது வாழ்வால் மற்றவர்களுக்கு அறிவிக்க முடியும்.  மட்டுமல்ல,  சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் நமது வாழ்வில் சந்திக்கும் கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு கிறிஸ்துவைப்பற்றி அறிவிக்கும்போது அவர்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள்.  

இப்படி நற்செய்தியை அறிவிப்பது நமது கடமை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துத் தான் பரலோகம் செல்லுமுன் சீடர்களிடம் கூறினார், "நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.  விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." ( மாற்கு 16: 15,16) என்று. 

எனவேதான் அப்போஸ்தலராகிய பவுலும், "சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ." (1 கொரிந்தியர் 9:16) என்று கூறுகின்றார். 

கிறிஸ்துவின் இரத்தத்தால் உண்டாகும் பாவ மன்னிப்பு, இரட்சிப்பு, நித்திய ஜீவன் போன்றவற்றையே  நாம் அறிவிக்கவேண்டும். இதனையே, "கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இவையே கர்த்தராகிய ஏசு கிறிஸ்து அறிவிக்கச்சொன்னச்  செய்தி.  இந்தச் சத்தியங்களை நாம் கூறும்போது மற்றவர்கள் அதனை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதனை நாம் அறிவிக்கவேண்டியது அவசியம்.  

இப்படிக் கூறுவதால்,  பைத்தியக்காரன் கூறிக்கொண்டு இருப்பதுபோல நாம் கூறவேண்டும் என்று பொருளல்ல. இந்தச் சத்தியங்களை  இடம், காலம், நேரம் அறிந்து ஞானத்தோடு நாம்  அறிவிக்கவேண்டும். இன்று இந்த ஞானமும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலும் இல்லாமல் சில ஊழியர்கள் செயல்படுவதால் பிறரால் தாக்கப்படுகின்றனர்; அவமதிக்கப்படுகின்றனர். ஒரு இடத்தில் நம்மை ஏற்றுக்கொள்ளாவிட்டால் வலுக்கட்டாயமாக அங்கு நாம் நுழைந்து கிறிஸ்துவை அறிவிக்க அவர் சொல்லவில்லை; அவரும் அப்படிச் செய்யவில்லை.  

ஆம், "எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 10: 14, 15) என்றுதான் அவர் கூறியிருக்கிறார்.

எனவே, சிறைப்பட்ட மக்களிடம் சென்று அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்போம். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும் என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1779                                                            🔆 ஆதவன் 21.12.2025 ஞாயிறு  

"நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்." ( சங்கீதம் 34: 4)

இந்த உலகத்தில் பல்வேறு காரியங்கள் மனிதர்களைப் பயமடையச் செய்கின்றன. நோய்கள், கடன் பாரங்கள், நமக்கு எதிராகச் சிலர் செய்யும் காரியங்கள், வேலைவாய்ப்பில்லாததால் எதிர்காலத்தைக்குறித்த பயம் போன்றவை நம்மைக்  கலக்கமடையச் செய்கின்றன.  இத்தகைய பயங்களுக்கு நமது நண்பர்கள், உறவினர்கள் நமக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறி தைரியப்படுத்தலாம். ஆனால், நாம் தனித்திருக்கும்போது அனைத்துப் பயங்களும் மீண்டும் நம்மைச் குழ்ந்துகொள்கின்றன. 

இன்றைய தியான வசனத்தில் தாவீது தனது அனுபவத்திலிருந்து கண்டுகொண்டதை எழுதிவைத்துள்ளார். "இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்." ( சங்கீதம் 34: 6) என்கின்றார் அவர். அதாவது, மனிதர்களைப்போல வெறும் ஆறுதல் வார்த்தைகளை மட்டும் தேவன் நமக்குத் தருவதில்லை; மாறாக, நம்முடைய  எல்லாப் பயத்துக்கும் நம்மை நீங்கலாக்கிவிடுகின்றார். 

பயம் நம்மைவிட்டு அகலவேண்டுமானால் முதலில் நாம் கர்த்தரிடம் அன்புள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம்.  உலக மனிதர்களிடமும், நண்பர்களிடமும், நமது உறவினர்களிடமும் நமது வேதனை, பயங்கள் இவற்றை பகிர்ந்துகொள்வதைவிட கர்த்தரிடம் பகிர்ந்துகொள்ளும் நிலைக்கு நாம் வரவேண்டும். அவரிடம் நாம் அன்புகொள்ளும்போது நாம் அவரிடம் ஒரு நண்பனிடம் பகிர்ந்துகொள்வதைப்போல நமது பிரச்சனைகளைப் பகிர்ந்துகொள்ளமுடியும். 

அப்படி நாம் கர்த்தரிடம் பூரண அன்புகொள்ளும்போது அந்த அன்பு பயத்தைப் புறம்பேத் தள்ளிவிடும் என்கின்றார் அப்போஸ்தலராகிய யோவான். "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல." (1 யோவான் 4:18) நமக்குள் பயம் ஏற்படுகின்றது என்றால் நாம் இன்னும் தேவன்மேல் கொள்ளும் அன்பில் முழுமை அடையவில்லை என்று பொருள். தேவனிடம் பூரண அன்பு இருக்குமானால், "நான் அன்புசெய்யும் தேவன் என்னை அன்பு செய்கிறார், எனவே நிச்சயமாக என்னை எனது எல்லாத் துன்பத்திலிருந்தும் விடுவிப்பார்" என்றுச் சொல்லி தைரியமாக இருக்கமுடியும்.  

மருத்துவர்களால் கைவிடப்பட்ட தீராத நோய் நம்மைத் தாக்கும்போது எந்த மனிதனும் நம்முடைய பயத்தைப் போக்கிட முடியாது. மிகப்பெரிய கடன் நம்மை நெருக்கி நமது சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிடக்கூடிய நிலை வரும்போது எந்த உறவினரும் நமக்கு முழுத் தீர்வையும் கொடுக்கமுடியாது. ஆம் அன்பானவர்களே, அத்தகைய சூழ்நிலைகளில் கர்த்தர் மட்டுமே நமக்கு உதவிடமுடியும். அப்போது நாமும் தாவீதைப்போல "நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்." என்று கூறமுடியும். 

பிரச்சனைகள் ஏற்படும்போது மட்டும் தேவனைத் தேடி அவரிடம் ஜெபிப்பது சரியானத் தீர்வாக இருக்காது. எப்போதுமே நாம் உண்மையான உள்ளத்துடன் தேவனை அன்புசெய்து வாழவேண்டியது அவசியம்.  பிரச்சனைகள் ஏற்படும்போதுமட்டும் ஆலயம் ஆலயமாக ஓடுவது அவரை அன்புசெய்வதல்ல; மாறாக, உண்மையான இதயத்துடன் நமது குடும்பத்தில் உள்ளவர்களிடம் நாம் அன்பு செலுத்துவதுபோல அவரை அன்புசெய்வதையே அவர் விரும்புகின்றார். அப்போது அவர் நமக்குச் செவிகொடுத்து நமது எல்லா பயங்களுக்கும் நம்மை நீங்கலாக்கி விடுவார். 

மட்டுமல்ல, கர்த்தரிடம் பூரண அன்பு கொள்ளும்போது மட்டுமே நாம் பரிசுத்தமாக வாழமுடியும்; பாவத்தை மேற்கொள்ளமுடியும். இப்படி நாம் பரிசுத்தமாகும்போது அவருக்குப் பிரியமானவர்கள் ஆகின்றோம். எனவே,  அவர் நம்மை எந்தக் குறையுமில்லாமல் நடத்துவார். இதனையே இன்றைய தியான வசன சங்கீதத்தில் தொடர்ந்து தாவீது "கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை." ( சங்கீதம் 34: 9) என்று கூறுகின்றார். 

கர்த்தருக்குப் பயந்த பரிசுத்த வாழ்க்கை வாழ்வோம்; அப்போது அவர் நமக்குச் செவிகொடுத்து, நம்முடைய எல்லாப் பயத்துக்கும் நம்மை நீங்கலாக்கிவிடுவார். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1780                                                          🔆 ஆதவன் 22.12.2025 திங்கள்   

"உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது." ( சங்கீதம் 42 : 10 )

சில ஆண்டுகளுக்குமுன் எனது நண்பர் ஒருவர் தனது வறுமை நிலையின் வேதனைகளை என்னிடம் விபரிக்கும்போது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் அவரை அடிக்கடி இகழ்ச்சியாக நடத்துவது  குறித்து வேதனையுடன்  கூறினார். 

என்னிடம் இந்தச் சம்பவத்தைக் கூறிய நண்பர் ஒரு ஆவிக்குரிய மனிதர். எப்போதும் தேவனைக்குறித்துதான் பேசுவார். ஆனால், பொருளாதாரத்தில் மிகவும் வறிய நிலையில் இருந்தார். அவரது மைத்துனர் மிகவும் செல்வச் செழிப்புடன் இருந்தார். அவர் பொது நிகழ்ச்சிகளில் எனது இந்த நண்பரைச் சந்திக்கும்போதெல்லாம், "என்னடே, பைபிளும் கையுமாய் திரிகிறாய், ஜெபிக்கிறாய், ஆனால் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றத்தையும் காணோமே?" எனக் கிண்டலாகக் கேட்பாராம். 

இந்தச் சம்பவத்தை என்னிடம் கூறிய நண்பர் தொடர்ந்து, "பிரதர், அவர் என்னை இப்படிக் கேலிசெய்யும்போதெல்லாம் எனது மனம் மிகவும் மடிந்துபோகின்றது. எனது ஜெபங்களுக்கு ஏன் தேவன் பதில்கொடுக்காமல் இருக்கிறார் என்று எண்ணும்போது எனது விசுவாசமே தளர்வடைகின்றது" என்றார் வேதனையுடன். 

இன்றைய தியான ஆசிரியரும்  இதுபோன்ற குத்தலான வார்த்தைகளைக் கேட்டிருப்பார். ஆனால் அவரிடம் இப்படிக் கேட்டவர்கள் அவரது சொந்த மக்களல்ல; எதிரிகள். ஆனால், அவர் எதிரிகளின் பேச்சால் மனம் துவண்டாலும் தேவனை நோக்கிப்பார்த்து தனது ஆத்துமாவுக்கு,  "என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்." ( சங்கீதம் 42 : 11 ) என்று ஆறுதல் கூறுகின்றார். 

தாவீது ராஜாவும் இதுபோன்ற மக்களைத் தனது வாழ்க்கையில் எதிர்கொண்டிருந்தார். எனவேதான் அவர், "என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 57 : 4 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, இதுபோன்ற சிங்கம், ஓநாய், நரி  போன்ற மனிதர்கள் நடுவில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த துஷ்ட மிருகங்களின் குணத்தைத்தான் அவர்கள் வெளிப்படுத்துவார்கள். அதற்காக நாம் கவலைகொண்டு மனம் மடிந்திடத் தேவையில்லை. தேவன்மேலுள்ள விசுவாசத்தில் தளர்ந்திடாமல் இருப்போம்.  

"அவர்களுக்குத்  தானியமும்  திராட்ச்சைரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்". (சங்கீதம் 4:7) என்று தாவீது கூறுவதுபோல நம்மைக் கேலிபேசும் செழிப்புமிக்க மக்கள் தங்கள்  செல்வத்தால் பெறும் மகிழ்ச்சியைவிட நிலையான அதிக சந்தோஷத்தால் தேவன் நமது இருதயத்தை நிரப்புவார்.  

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1781                                                          🔆 ஆதவன் 23.12.2025 செவ்வாய்    

"ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக." ( 1 கொரிந்தியர் 15 : 58 )

அப்போஸ்தலராகிய பவுல் கொரிந்துநகர விசுவாசிகளுக்கு கூறியுள்ள இந்த அறிவுரை அவர்களுக்கு மட்டுமல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு வாழும் அனைவருக்காகவும்தான். 

ஆவிக்குரிய வாழ்க்கை என்பது கடினமான பாதை; அது சிலுவை சுமக்கும் அனுபவம். பவுலும் பர்னபாவும்,  "சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்". (அப்போஸ்தலர் 14:22) என்று நாம் வாசிக்கின்றோம். ஆம், நாம் அநேக உபத்திரவங்களின் வழியாகத்தான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும். 

ஆனால் கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள அன்பினால் நாம் அந்தத் துன்பங்களை ஏற்றுக்கொண்டு ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறுகின்றோம். எப்படி இருந்தாலும் சிலவேளைகளில் ஆவிக்குரிய வாழ்வில் சோர்வுகள் வந்துவிடுகின்றன. எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல், "கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக." என்று கூறி நம்மைத் தேற்றுகின்றார்.  

இக்கால வாழ்க்கைக்குப்பின் மேலான மகிமையான மறுவுலக வாழ்வு நமக்கு உண்டு. இப்போது நாம் துன்பத்தை அனுபவித்தாலும் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மறுமையில் நாம் அனுபவிக்கப்போகும்  மகிமையோடு ஒப்பிடும்போது ஒன்றுமில்லாதவையே.  எனவேதான், "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." (ரோமர் 8:18) என்கின்றார் பவுல். 

எனவே நாம் சோர்ந்துவிடாமல் எப்போதும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாக இருக்கவேண்டும். ஒரு மாணவன் எதிர்காலத்தில் மருத்துவராகி சிறப்படையவேண்டுமானால் அவன் பல ஆண்டுகள் முயலவேண்டியதிருக்கின்றது. எம்.பி.பி.எஸ். படிப்பு மட்டுமே ஐந்து ஆண்டுகள் படிக்கவேண்டும். மட்டுமல்ல, அதற்காக பல லட்சக்கணக்கான பணம் செலவழிக்கவேண்டும். ஆனால் இவை அனைத்தும் வீணானவை அல்ல என்பது அந்த மாணவனுக்குத் தெரியும். எனவே உற்சாகமாகப் படிப்பைத் தொடருகின்றான்.  

எனவே அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வின் கடினமான பாதையைக் கண்டு நாம் பின்மாறிவிடாமல் உண்மையாக நமது பயணத்தைக் தொடர்வோம். இன்று பலர் ஆவிக்குரிய வாழ்வில் பின்மாறிடக் காரணம் பல ஊழியர்கள், போதகர்களின் தவறான உபதேசம். கிறிஸ்துவிடம் வந்துவிட்டால் அனைத்தும் உடனேயே கிடைக்கும் என்று போதிக்கின்றனர். உலக ஆசைகளை மட்டுமே நிறைவேற்றிட கிறிஸ்துவைத் தேடும் மக்கள், அது கிடைக்காதபோது, "ஜெபித்து என்னப்பயன்,  வாழ்க்கை முன்பு போலேதானே இருக்கிறது? " என்று கூறிப் பின்மாறுகின்றனர். 

அன்பானவர்களே, கிறிஸ்தவ வாழ்க்கைப் பாதை கிறிஸ்து நடந்ததுபோன்ற கடினமான சிலுவையின் பாதை. மனம் தளராமல் அதனில் நாம் பயணிக்கவேண்டும். எனவே, பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1782                                                        🔆 ஆதவன் 24.12.2025 புதன்     

"இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்." ( மத்தேயு 1 : 23 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்புத் தற்செயலாக விபத்துபோல நடந்த ஒரு செயலல்ல. அது பிதாவாகிய தேவன் ஆதியில் ஏதேனில் கொடுத்த வாக்குத்தத்தத்தின் நிறைவு. சாத்தானின் வஞ்சக செயலுக்காகத் தேவன் சாத்தானைச் சபித்தார். அப்போது தேவன் கூறினார், "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்." ( ஆதியாகமம் 3 : 15 )

தேவன் வாக்களித்த அந்தப் பெண்ணின் - மரியாளின் - வித்துதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இதனை ஏசாயா மூலமும் தேவன் முன்னறிவித்தார். (ஏசாயா 7:14) இப்படி முன்குறிக்கப்பட்டுப் பிறந்த கிறிஸ்துவானவர் தான் இம்மானுவேலராக இருக்கிறார். அதாவது, தேவனாகிய அவர் நம்மோடு இருக்கிறார். 

தேவன் ஆதிகாலமுதல் மனிதர்களுக்குள் வாழுவதற்கு விருப்பமுள்ளவராகவே இருக்கிறார். அவர் மனிதர்களோடு மனிதராக வாழ விரும்புபவர். இதனை நாம்,  "நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்." ( லேவியராகமம் 26 : 12 ) என்று வாசிக்கின்றோம். நம் நடுவில் உலாவி, நம்மோடு வாழ விரும்புகின்றார் அவர்.  

ஆம் அன்பானவர்களே, காண முடியாத தேவன் மனிதர்களைப்போல இரத்தமும் சதையுமுள்ள மனிதனாக மாறி நம்முடனே வாழ்வதற்கு பூமியில் வந்த நாள்தான் கிறிஸ்துப் பிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தக் கிறிஸ்துப் பிறப்பு நாளில் நாம் தேவன்  நம்மோடிருக்கிறார் என்பதனை நினைவுகூருகின்றோம்; இந்த நிகழ்வைக் கொண்டாடுகின்றோம். ஆனால், இந்த நாளில் கிறிஸ்துவை நாம் அறியாமல் வாழ்ந்துகொண்டு இந்த விழாவைக் கொண்டாடுவதில் அர்த்தமில்லை. அப்படிக் கொண்டாடுவது மற்ற சமயத்தினர் கொண்டாடும் சாதாரண விழாக்களைப்போலவே இருக்கும். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்குள் இருப்பது ஒரு இரகசியம். முதலாவது நாம் கிறிஸ்து நமக்குள் இருக்கும் இந்த  இரகசியத்தை உணரவேண்டும்; அந்த அனுபவத்தைப் பெறவேண்டும். இதனையே, அப்போஸ்தலரான் பவுல், "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." ( கொலோசெயர் 1 : 27 ) என்று கூறுகின்றார். இந்த இரகசியத்தை வாழ்வில் அறியாமல்;  கிறிஸ்துவை அறியாமல்;  அவர் இம்மானுவேலராக நமக்குள் இருக்கிறார்  என்பதனை உணராமல் இருப்போமானால் நாம் கொண்டாடும் கிறிஸ்துப் பிறப்பு விழாவில் அர்த்தமில்லை.

இம்மானுவேல் என்று பெயரிடப்பட்ட கிறிஸ்து அந்தப் பெயருக்கேற்ப  நம்மோடிருக்கிறார்.  அவர் எங்கோ நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடப்பவரல்ல, நமக்குள் வாழ்கின்றவர்;  அவர் எங்கோ இருந்துகொண்டு நமது துதியையும் வணக்கத்தையும் பெற்றுக்கொண்டு இருப்பவரல்ல;  மாறாக, அவர் நம்மோடு இருக்கிறவர். இந்தக் கிறிஸ்துவை அறிந்துகொள்ள முதலில் நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிடுவோம். அவரது இரத்தத்தால் கழுவப்பட மன்றாடுவோம். அப்போது அவர் நமக்குள் வந்து தங்குவார். ஆம், அவர் இம்மானுவேலர்; நம்மோடு வாழும் தேவன். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1783                                                        🔆 ஆதவன் 25.12.2025 வியாழன்      

"பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்." ( லுூக்கா 2 : 10, 11 )

அனைவருக்கும் நம் மீட்பரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நாள் நல்வாழ்த்துக்கள்!!

கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்து நாம் வேதாகமத்தில் வாசிக்கும்போது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதன்முதலில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த இடையர்களுக்குத்தான் அறிவிக்கப்பட்டது என்று பார்க்கின்றோம். மேசியாவாகிய மீட்பர் பிறப்பார் என்று வேதத்தில் முன்குறிக்கப்பட்டிருந்ததால் ஞானிகளும், வேத வல்லுனர்களும் அதனை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கல்ல, படிப்பறிவில்லாத இடையர்களுக்கே அவரது பிறப்பு முதலில் அறிவிக்கப்படுகின்றது. 

தேவதூதன் அறிவித்த கிறிஸ்துப் பிறப்பின் செய்தி, "பயப்படாதிருங்கள்" என்ற தைரியமூட்டும் வார்த்தைகளால் ஆரம்பிக்கின்றது. மேலும், தேவதூதன், "எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி" அறிவிப்பதாகக் கூறுகின்றான். கிறிஸ்துவின் பிறப்பு எல்லோருக்கும் மகிழ்ச்சியான செய்தி. ஆனால், அதிகாரவெறி, பதவிமோகம் கொண்டவர்களுக்கு அது கேட்கக்கூடாத வேண்டாதசெய்தி. எனவேதான் ஏரோது ராஜா அவரது பிறப்பைக்கேட்டுக் கலக்கமடைந்தான். 

மேசியாவாகிய கிறிஸ்து பிறந்துள்ளார் என்று கேள்விப்பட்ட சாஸ்திரிகள் ஏரோது ராஜாவின் அரண்மனைக்கு வந்து, "யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள். ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுங்கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்." ( மத்தேயு 2 : 2, 3 ) என்று வாசிக்கின்றோம். 

கிறிஸ்துவின் பிறப்பில் நாம் பல்வேறு மனநிலையுள்ள மனிதர்களைப் பார்க்கின்றோம். மேசியா ராஜாவாக அரச குடும்பத்தில்தான் பிறப்பார் என்று சாஸ்திரிகள் எண்ணினார்கள்.  எனவே ஏரோதின் அரண்மனைக்குள் வந்து விசாரித்தார்கள். ஏரோது ராஜா தனது அரச பதவிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று எண்ணிக் கலங்கினான். எருசலேம் நகரத்தார்,  ஏற்கெனவே ஏரோதின் பதவி அதிகாரத்தின்கீழ் பல துன்பங்களை அனுபவித்தவர்கள். அவர்கள், இவனது துன்பமே பெரியதாக இருக்கின்றது, இதற்கிடையில் இன்னுமொரு ராஜா வேறு பிறந்துள்ளாரா என்று எண்ணிக் கலங்கினார்கள். ஆம், அவரது பிறப்பு பலருக்கு மகிழ்ச்சியையும் சிலருக்கு கலக்கத்தையும் கொண்டுவந்தது. 

ஆனால் தேவதூதர்சேனைகள் இடையர்களுக்கு வெளிப்பட்டபோது,  "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்." ( லுூக்கா 2 : 14 ) அதாவது, கிறிஸ்துவின் பிறப்பு உன்னதத்தில் பிதாவாகிய தேவனுக்கு மகிமையான காரியமாக இருந்தது. கிறிஸ்து சமாதான காரணராக வந்தார். அவரால் இந்தப் பூமியில் சமாதானம் உண்டானது. மட்டுமல்ல, மனுஷர்மேல் பிரியம் எனும் அன்புணர்வு கிறிஸ்துவால் உலகுக்கு அளிக்கப்பட்டது. 

கிறிஸ்துவின் பிறப்பு பலருக்கு விழுதல், பலருக்கு எழுப்புதல், சிலருக்கு கலக்கம், பலருக்கு மகிழ்ச்சி! ஆம் அன்பானவர்களே, நாம் இருக்கும் மனநிலைதான் கிறிஸ்துப் பிறப்பின் மகிழ்ச்சியைக் கொடுக்கமுடியும். ஏரோதைப்போல பணம், பதவி, சிற்றின்பம் இவையே நமது நோக்கமென்றால் நிச்சயமாக கிறிஸ்துவின் பிறப்பின் மகிழ்ச்சி நம்மை நிரப்ப முடியாது. மேய்ப்பர்களைப்போல தாழ்மையுள்ளவர்களாய் வாழ்வோமென்றால், நம்மால் உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாகும்.  

கிறிஸ்துவை ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க அவரது தாய் மரியாள் கொண்டுவந்தபோது, சிமியோன் எனும்  தேவபக்தியுள்ள மனிதன் "அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்." ( லுூக்கா 2: 34) என்று தீர்க்கத்தரிசனமாக அறிவித்தார். 

ஆம், ஆண்டுகள் இரண்டாயிரம் கடந்தபின்னரும் சிமியோன் கூறியதே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், அவருக்கு ஏற்புடையவர்களாக வாழும் நாம் பயப்படாதிருப்போம் ஏனெனில்  அவருடைய பிறப்பு இப்படி வாழும் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியாக இருக்கின்றது. 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1784                                                        🔆 ஆதவன் 26.12.2025 வெள்ளி       

"உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்." ( யோவான் 4: 42)

எந்த உண்மையும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நம்புவதைவிட நாம் தனிப்பட்ட விதத்தில் உணர்ந்து அனுபவித்து அறிவது மேலானது. எப்படித்தான் ஒருவர் தான் கண்டு அனுபவித்ததை விளக்கிக்கூறினாலும் நாமாக அதனை உணர்ந்து அனுபவிக்காவிட்டால் நாம் முற்றிலும் தெளிவடையமாட்டோம். 

இதுவரை நாம் கண்டிராத புதுவித வெளிநாட்டுப் பழம் ஒன்றினை ஒருவர் நம்மிடம் காண்பிக்கின்றார் என்றும் அந்தப் பழத்தினை அவர் மட்டுமே சாப்பிட்டு ருசித்துள்ளார் என்றும் வைத்துக்கொள்வோம். அந்தப் பழத்தின் சுவையை அவர் நம் நாட்டிலுள்ள ஒரு பழத்துடன் ஒப்பிட்டு  இதன் சுவை அந்தப் பழத்தின் சுவையைவிட வித்தியாசமானது, இனிமையானது என்று கூறி விளக்கலாமேத்தவிர அந்தப் பழத்தினை நாமாக உண்டு சுவைத்துப்பார்த்தால் மட்டுமே நம்மால் அதனை முற்றிலும் உணரமுடியும்.  

இதுபோன்றதே தேவனை அறிவது. நம்மில் பலரும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் அவரை உண்மையாய் அறிந்துகொண்டவர்கள் வெகுசிலர்தான். நாம் சிறுவயதுமுதல் பெற்றோர்களால் போதிக்கப்பட்டவைகளை நம்பி அவரை ஆராதிப்பவர்களாக இருக்கின்றோம். இப்படிக் கிறிஸ்துவை அறிவதும் அவரைத் தனிப்பட்ட விதத்தில் உணர்ந்து அறிந்துகொள்வதும் வெல்வேறு அனுபவங்களாகும். 

இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணிடம் பேசும்போது, தானே வரவிருக்கும் மேசியா என்பதனை,  "உன்னுடன் பேசுகிற நானே அவர்" (யோவான் 4:26) என்று தெளிவுபடுத்தினார். பின்னர் அந்தப்பெண் ஊருக்குள் சென்று "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்." ( யோவான் 4: 29). அவள் கூறியதைக் கேட்டு ஊரிலிருந்த அவர்களும் அவரைப் பார்ப்பதற்கு வந்தனர். 

பின்னர் அவர்கள் இயேசுவைத் தங்களோடு தங்கும்படி அழைத்தனர். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சென்று தாங்கினார். அங்கு அவர்களோடு  தங்கி விண்ணுலகில் மேலான சத்தியங்களை அவர்களுக்கு விளக்கிப் புரியும்படிச் செய்தார். அதன்மூலம் அவர்கள் கிறிஸ்துவை உண்மையான மேசியாவாகக் கண்டுகொண்டனர். 

ஆம் அன்பானவர்களே, இந்தச் சமாரியர்களைப்போல கிறிஸ்துவை உணர்ந்து அறிந்துகொள்வதே மேலான அனுபவம். மற்றவர்கள் அவரை இரட்சகர், என்று கூறுவதால் அல்ல; மறைக்கல்வி வகுப்புகளில் சொல்லித் தந்ததால் அல்ல; மாறாக, அந்த இரட்சிப்பை நாம் பெற்றுக்கொண்டவர்களாக; அந்த இரட்சிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு அவரை இரட்சகர் என்று அறிக்கையிடவேண்டும். இப்படித்தான் சமாரியர்கள் அவரை அறிந்துகொண்டனர். எனவேதான் அவர்கள், "உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்."

கிறிஸ்தவ மார்க்கம் விசுவாச மார்க்கம். ஆனால், அது குருட்டுத்தனமான விசுவாச மார்க்கமல்ல. ஒருவிதத்தில் விஞ்ஞானபூர்வமான விசுவாசமார்க்கம். விஞ்ஞானத்தில் பல்வேறு கோட்பாடுகள் உண்டு. அவைகளை உறுத்திப்படுத்திட  பல்வேறு நிபந்தனைகளும் பரிசோதனைகளும் உண்டு. அதுபோலவே வேதாகம சத்தியங்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. அனைத்து வாக்குத்தத்தங்களும் நிபந்தனையோடு கூடியவை. வேதம் கூறும் நிபந்தனைகளுக்கு நாம் சரியாக இருப்போமானால் அவைகூறும் உண்மையினை நாம் அனுபவிக்க முடியும். 

அப்படி வாழும்போது நாமும் சமாரியர்களைப்போல, "கிறிஸ்துவைக்குறித்து வேதாகமம் கூறுவதாலோ, எனக்குப் போதிக்கப்பட்டதாலோ அல்ல; மாறாக, அந்த வசனங்கள், வாக்குறுதிகளை நானே கேட்டு, உணர்ந்து வேதாகமம் கூறும் அனைத்தும் முற்றிலும் உண்மை என்று அறிந்து கிறிஸ்துவே மெய்யான உலக  இரட்சகர் என்று விசுவசிக்கிறேன்." என்று உறுதியாகக் கூறமுடியும். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1785                                                        🔆 ஆதவன் 27.12.2025 சனி        

"நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்." (2 பேதுரு 1: 16)

"உண்மை தனது காலணிகளை அணியுமுன் பொய்யானது உலகத்தைச் சுற்றிவந்துவிடும்" என்று ஒரு கூற்று உண்டு. காரணம், மனிதர்கள் பெரும்பாலும் உண்மையைவிட பொய்யை அதிகமாக நம்புகின்றனர் என்பதே.  எனவேதான் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அரசியல்வாதிகளால் ஆட்சியைப் பிடிக்கமுடிகின்றது.  பல ஏமாற்றுப்பேர்வழிகள்  பல்வேறு கவர்ச்சிகரமானத் திட்டங்களை அறிவித்துப் பொதுமக்களின் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஓடுகின்றனர்; ஆனாலும் மக்கள் பொய்யையே நம்புகின்றனர்.

பல மதங்கள் கூறும் செய்திகளும் இப்படிக் கடவுளைக்குறித்துக் கூறும்  கற்பனையாகவே உள்ளன. எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் பெரும்பாலான மக்கள் அவற்றை நம்புகின்றனர். காரணம், அவை மனிதர்களுக்குப் பிடித்தக்  காரியங்களையே கதையாகக் கூறுகின்றன.  அவை மனிதர்கள் என்ன விரும்புகின்றார்களோ அதற்கேற்ற அழகிய கற்பனைகளைக் கொண்டுள்ளன. அவற்றால் யாரும் பாதிக்கப்படுவதில்லை. அவை மனிதர்களது இருதயத்தை ஊடுருவிக் குத்துவதில்லை; மனிதர்களது தவறை உணர்த்துவதில்லை. பலவேளைகளில் அவை கூறும் கடவுளின் செயல்கள் சாதாரண மனிதர்கள் செய்யும் செயலைவிட மோசமானவையாக உள்ளன. ஆனால் மக்கள் அவற்றையே விரும்பி நம்புகின்றனர்.

ஆனால், கிறிஸ்தவ கோட்பாடுகள் மனிதர்களது இருதயத்தை நேரடியாகத் தாக்குகின்றன. மனிதர்களது இருதய மாற்றத்தை வலியுறுத்துகின்றன. உடம்பில் ஏற்படும் புண்ணுக்கு மற்ற மதங்கள் ஒத்தடம்கொடுக்கின்றன. தற்காலிக நிவாரணம் அளிக்க முயலுகின்றன. எளிதான பரிகாரங்களைக் கூறுகின்றன. எனவே, மக்களும் அதனை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் கிறிஸ்தவம் அறுவை சிகிர்ச்சை செய்வதுபோல மனித இருதயத்தை அறுத்துச் சீர்படுத்த முயலுகின்றது. தேவ வசனங்கள் இந்த அறுவைச் சிகிர்ச்சையைச் செய்கின்றன. 

நமக்காக கிறிஸ்து அனைத்துப் பரிகாரத்தையும் சிலுவையில் செய்து முடித்துவிட்டார். எனவே, அவருக்கு நமது இருதயத்தை ஒப்புக்கொடுக்கும்போது நாம் எந்தப் பரிகாரமும் செய்யவேண்டியதில்லை. 

ஆம் அன்பானவர்களே, தேவ வசனங்கள் மனிதனில் அறுவை சிகிர்ச்சை செய்கின்றன. இதனையே நாம், "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." ( எபிரெயர் 4: 12) என்று வாசிக்கின்றோம். ஆம், தேவ வசனங்கள் மனிதனது ஆவி, ஆத்துமா, உடல் இவற்றை ஊடுருவி எடைபோடுகின்றன. இவற்றை பரிசுத்தப்படுத்த வலியுறுத்துகின்றன. இதனைப் பலரும் விரும்புவதில்லை. எனவே கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். 

ஆனால், அப்போஸ்தலரான பேதுரு இந்த வார்த்தையாம் தேவனோடு இருந்து அவரை அனுபவித்தவர். எனவேதான் அவர், "ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே." ( யோவான் 6: 68) என்று அறிக்கையிட்டார். அப்போஸ்தலரான யோவான், "ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்." (1 யோவான்  1 : 1) என்றார். 

ஆம் அன்பானவர்களே, மற்ற மார்க்கங்களைப்போல கட்டுக்கதைகளின் தொகுப்பல்ல கிறிஸ்தவம். நேரடியான சாட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டச் சரித்திர சான்றுடன் கூடியது.  அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களால் உறுதியுடன் நமக்கு சான்றளிக்கப்பட்டது. நாமும் உறுதியாக இந்த வேதம் கூறும் உண்மைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வாக்குவோமென்றால், அந்த வார்த்தைகள் இன்றும் உயிருள்ளவையாக நம்மில் செயல்படுவதை உணர்ந்துகொள்ளலாம். இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே கிறிஸ்தவம் கூறுவது கட்டுக்கதையல்ல என்பதனை உணர்ந்துகொள்ளமுடியும்.  

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1786                                                        🔆 ஆதவன் 28.12.2025 ஞாயிறு         

"நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்." (2 கொரிந்தியர் 5: 16)

மாம்சத்தின்படி கிறிஸ்துவை அறிதல் என்பது உலகினில் அவரது பிறப்பின் குடும்பப் பின்னணியைக்கொண்டு பார்ப்பதைக் குறிக்கின்றது. பல மனிதர்களும் கிறிஸ்துவின் மனிதத்  தோற்றத்தை மட்டுமே மனதில் கொண்டு அவரை இரண்டாயிரத்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் உலகத்தில் பிறந்த சாதாரண மனிதன் என்று எண்ணிக்கொள்கின்றனர். கிறிஸ்தவர்கள் பலரும்கூட இயேசு கிறிஸ்துதான் உலகத்தைப் படைத்தார் (எபிரெயர் 1:2) எனும் சத்தியம் தெரியாமல் இருக்கின்றனர். 

கிறிஸ்தவர்களில் பலரும் தாவீதின் வம்சத்தில் அவர் பிறந்ததால் தாவீதின் குமாரன் என்கின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்து இப்படி அவரை அழைப்பதே தவறு என்று கூறுவதை நாம் வாசிக்கின்றோம். "தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்." (லூக்கா 20:44) அவர். ஆம் அன்பானவர்களே, பூமியின் கணக்குப்படி அவர் தாவீதின் குமாரனாக இருக்கலாம், ஆனால் அது அவரது உண்மையான அடையாளமல்ல; அவர் சர்வ வல்லவரான ஆண்டவர். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல், "நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்." என்று கூறுகின்றார். அதாவது, அவரை நாங்கள் தாவீதின் மரபில் வந்தவராக, யோசேப்பு, மரியாளின் மகனாக அறிந்திருந்தாலும் இனி ஒருபோதும் அப்படி நாங்கள் அறிய மாட்டோம். அவர் சர்வ வல்லவரான தேவன் என்று மட்டுமே நாங்கள் இனி அவரை அறிவோம் என்கின்றார். நமது மீப்புக்காகவே அவர் மனிதனானார்; உண்மையில் அவர் வெறும் மனிதனல்ல. 

ஆனால், பல போதகர்களும் குருக்களும் கிறிஸ்து பிறப்பு நாளில் அவரை ஒரு குழந்தையாகவே எண்ணிப் பிரசங்கம் செய்கின்றனர். சிலர், "பாலன் இயேசுவிடம் கேளுங்கள்; குழந்தையைப்போல நாம் கேட்பதை அவர் தருவார்" என்று கூறுவதைக் கேட்டிருக்கிறேன். இந்தமாதிரி பிரசங்கங்கள் இவர்கள் இன்னும் அவரை மாம்சத்தில்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதனை உறுதிசெய்கின்றது. அவர் இன்னும் குழந்தையல்ல.  

சர்வ வல்லவராக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏன் இரத்தமும் சதையுமான மனிதனாக மாறினார் என்பதனை எபிரேய நிருப ஆசிரியர்,  "பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்."( எபிரெயர் 2: 14, 15) என்று கூறுகின்றார்.

எனவே, இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து,  அவர் நமக்காக மனித உடலெடுத்து நமக்காகப் பாடுபட்டார் என்பதை  விசுவாசிக்கும்போது  நாம் பாவத்திலிருந்தும், சாத்தானின் பிடியிலிருந்தும் மரண பயத்திலிருந்தும்  விடுதலை  பெறுகின்றோம்.

கிறிஸ்தவத்தின்  ஆரம்ப காலத்தில் பலரும் இயேசுவை மனிதராகக் கண்டிருந்ததால் அவர்களுக்கு கிறிஸ்துவை தேவனாக ஏற்றுக்கொள்வதில் பல சந்தேகங்கள், சிக்கல்கள்  இருந்தன.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்." (2 கொரிந்தியர் 5: 16) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, அவரது மனிதத் தன்மையை மட்டும் நாம் எண்ணிக்கொண்டு அவரது சர்வ வல்லமையையும், உலகத்தோற்றத்துக்குமுன்னே அவர் இருக்கின்றார் எனும் சத்தியத்தையும் மறந்துவிடக்கூடாது. அப்படி நாம் கிறிஸ்துவை சர்வ வல்லவராக விசுவாசித்து வாழும்போதுதான் மெய்யான தேவனையும் அவரது மீட்பினையும், வல்லமையையும் தேவ ஆசீர்வாதங்களையும் பெற்றவர்களாக மாற முடியும். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1787                                                       🔆 ஆதவன் 29.12.2025 திங்கள்          

"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி  தேவனால் உண்டாயிருக்கிறது." (2 கொரிந்தியர் 3:5)

அற்பமான மனிதர்களாகிய நமது தகுதியின்மையையும், தேவனது கிருபையினையும் இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துவதாக உள்ளது. 

இன்று மனிதர்கள் பலரும் தங்களது அற்பமான திறமைகளை மேன்மையாக எண்ணி வாழ்கின்றனர். இசை, நடிப்பு, பாட்டு, எழுத்து, பேச்சாற்றல்,  பணம், பதவி அதிகாரம் என மனிதர்கள் மேன்மைபாராட்ட பல விஷயங்கள் உள்ளன. ஆனால், தேவனுக்குமுன் இவை அனைத்தும் அற்பமும் குப்பையுமானானவையே. இந்தத் திறமைகளை தேவன் நமக்குத் தந்திருந்தால் அதற்காக தேவனுக்கு நன்றிசெலுத்தி வாழ்வேண்டுமேத் தவிர அவற்றுக்காக பெருமைபாராட்டுவது அறிவீனம். 

"மிதிபட்ட  ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?" (ரோமர் 9:21) எனும் வசனத்துக்கேற்ப பரம குயவனாகிய தேவன் தனது விருப்பப்படி ஒவ்வொரு மனிதனையும் உருவாக்கியுள்ளார். ஒவ்வொருவரைக்குறித்தும் தேவனுக்கு ஒரு நோக்கமுண்டு. அது உலகத்தில் பெயர் பெறுவதல்ல; மாறாக, நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள திறமைகளை நாம் எந்த அளவு தேவனது சித்தமறிந்து பயன்படுத்துகின்றோம் என்பதே. 

அன்பானவர்களே, நமது தகுதிக் குறைவை எண்ணி; நமது தாழ்ந்த நிலைமையை எண்ணி  நாம் கவலைப்படத் தேவையில்லை. தேவனால் ஒருவனை எந்த நேரத்திலும் உயர்த்தவும் தாழ்த்தவும் முடியும். இதனை அறிந்திருந்ததால்தான் அன்னை மரியாள், "தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்." ( லுூக்கா 1: 51-53) என்று பாடுகின்றார். 

மேற்படி வசனத்தில் நாம், "இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்" என்று வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, "எல்லாம் என்னால்தான்" என்று வாழ்வதுதான் அகந்தை. அத்தகைய அகந்தையுள்ளவர்களை அவர் சிதறடிக்கின்றார்;   தாழ்மையானவர்களை உயர்த்துகின்றார்.

இதனால்தான் அப்போஸ்தலரான பவுல், "எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி  தேவனால் உண்டாயிருக்கிறது." என்று கூறுகின்றார். நமக்கு மற்றவர்களைவிட எவ்வளவு திறமை, செல்வம், நல்ல வேலை, பதவி அதிகாரம்   இருந்தாலும் அதனைக்குறித்து மேன்மைபாராட்டாமல் தேவனுக்கு நன்றிசெலுத்தி வாழ்வோம். நமது திறமைகளும் பணமும் பதவியும் தேவன் நினைத்தால் ஒரே நொடியில் இல்லாமல் போயிடும் என்ற பயத்துடன் வாழ்வோம். 

வேதாகமத்தில் நாம் யோபுவின் வாழ்க்கையினை வாசிக்கும்போது இது தெளிவாகப் புரியும். எல்லாவற்றையும் பெற்றுச்  செலவச் சீமானாக வாழ்ந்த யோபு ஒரே நாளில் அனைத்தையும் இழக்கவில்லையா? அதுபோல தேவனது கிருபையால் இழந்த அனைத்தையும் இரெட்டிப்பாகப்  பெற்றுக்கொள்ளவில்லையா? ஆம், அன்பானவர்களே, நாம் நம்மால் எந்தத் தகுதியுமானவர்கள் அல்ல; நம்முடைய தகுதி  தேவனால் உண்டாயிருக்கிறது. எனவே, இந்த உணர்வுடன் தேவனுக்கு அஞ்சி வாழ்வோம்.

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1788                                                      🔆 ஆதவன் 30 .12.2025 செவ்வாய்           

"உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்கு உட்படப்பண்ணாதேயும்." ( சங்கீதம் 119: 31)

வேதாகமம் முழுவதும் நாம் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்ந்த பல தேவ மனிதர்களின் சாட்சிகளைக்குறித்து வாசிக்கின்றோம். இந்த  மனிதர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள் நமக்கு தேவன்மேல் நாம் விசுவாசம்கொள்ளத் தூண்டுதலாக இருக்கின்றன. இதனையே சங்கீத  ஆசிரியர், "உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது." ( சங்கீதம் 119: 24) என்று கூறுகின்றார். 

நமது வாழ்க்கையில் நாம் பல்வேறு துன்பங்கள், சோதனைகளைக் கடக்கும்போது நமக்குமுன் உலகத்தில் வாழ்ந்த இந்த மக்களது சாட்சிகள் நமக்குத் திடனளிக்கின்றன. ஆம் அன்பானவர்களே, எனவேதான் நாம் வேதாகமத்தைக் கருத்துடன் வாசித்துத் தியானிக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. 

ஆவிக்குரிய வாழ்க்கையில் பரிசுத்தவான்களது சாட்சிகள் நமது ஆவிக்குரிய ஓட்டத்தை ஒழுங்காக ஓடிட உதவுகின்றன. எனவேதான் எபிரெய நிரூப ஆசிரியர், "ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்" ( எபிரெயர் 12: 1) என்று கூறுகின்றார். 

இந்தப் பரிசுத்தவான்களின் சாட்சி வாழ்க்கை நமக்கு வாழ்க்கையில் குறுக்கிடும்  பாரமான துன்பங்கள் யாவற்றையும்,  நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு ஓடிட வழிகாட்டுகின்றன. மட்டுமல்ல, இந்த சாட்சிகள்மூலம் நமது விசுவாசம் வலுப்பெறுகின்றது. நமக்குமுன் வாழ்ந்த மக்களுக்குத் தேவன் இத்தகைய அதிசயமான காரியங்களைச் செய்திருக்கின்றாரே, எனவே எனக்கும்  அப்படிச் செய்வார் எனும் விசுவாசம் நமக்குள் வளருகின்றது. 

"உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்" என்று இன்றைய தியான வசனம் கூறுவது வெறுமனே அந்தச் சாட்சிகளது வாழ்க்கையில் நடந்தவைகளைக்குறித்து நாம் ஆச்சரியம்  கொள்வதைக் குறிப்பிடவில்லை. மாறாக, அதுபோன்ற வாழ்க்கை வாழும்போது நமக்கும் வாழ்க்கையில் அத்தகைய அதிசய சம்பவங்கள் நடக்கும் என்று உணர்த்துவதாகும். அப்படி நாம் அந்தச் சாட்சிகள்மேல் பற்றுதலாய் இருக்கும்போது, நம்மாலும்  பாவத்தைத் தள்ளிவிட்டு கிறிஸ்துவைநோக்கி ஆவிக்குரிய ஓட்டத்ததை ஓடமுடியும். 

ஆம் அன்பானவர்களே, வேதத்தில் கூறப்பட்டுள்ள பரிசுத்தவான்களது சாட்சிகள் நம்மை உணர்வூட்டுகின்றன. அதுபோன்ற வாழ்க்கை வாழ நம்மைத் தூண்டுகின்றன. பாவத்தை விலக்கி விசுவாசத்துடன் நமது ஆவிக்குரிய வாழ்க்கையை ஓட உதவுகின்றன. எனவேதான், "உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்கு உட்படப்பண்ணாதேயும்." என்கிறார் சங்கீத ஆசிரியர். 

வேதாகமத்தை ஆர்வமுடன் வாசிப்போம்; பரிசுத்தவான்களது வாழ்க்கையில் தேவன் செய்த வல்ல செயல்களை அறிந்து தேவனைத் துதிப்போம்; நாமும் அவர்களைப்போல வாழ்ந்திட அவை நமக்குத் தூண்டுகோலாய் அமையும். அப்படி நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும்போது தேவன் நம்மை வெட்கத்துக்குள்ளாக்கமாட்டார். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1789                                                       🔆 ஆதவன் 31 .12.2025 புதன்            

"தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்." (கொலோசெயர்  3:15)

ஆண்டின் இறுதிநாளில் வந்திருக்கின்றோம். இந்த ஆண்டில் நமது வாழ்வில் பல்வேறு நன்மையான காரியங்களும், பிரச்சனைகளும், துயரமான காரியங்களும் நடந்திருக்கலாம். ஆனால் அவை அனைத்தையும் நாம் கடந்து வந்துள்ளோம். 

பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. எனவே நாம் பிரச்னைகளைத் தவிர்த்து ஓடிவிடமுடியாது. அவைகளை மேற்கொண்டு வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய தியான வசனம், "தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது" என்று கூறுகின்றது. சாதாரண உலகம் கொடுக்கும் சமாதானமல்ல; மாறாக தேவன் கொடுக்கும் சமாதானத்தால் நமது இருதயம் நிறைவடையவேண்டும். 

பலரது வாழ்வில் எவ்வளவுதான் பொருளாதாரச் செழிப்பு இருந்தாலும் குடும்பத்தில் சாமாதானம் இருப்பதில்லை. காரணம், குடும்பத்திலுள்ளவர்கள் ஒரே சாரீரம்போல வாழ்வதில்லை. நமது உடலின் அணைத்து உறுப்புக்களும் நலமாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியுடன்  இருக்கமுடியும். அதுபோல குடும்ப உறுப்பினர்களிடையே ஒரே சரீரம்போன்ற உணர்வு இருந்தால் மட்டுமே குடும்ப சமாதானம் இருக்கமுடியும். குறிப்பாக, கணவன் மனைவிகளுக்கிடையே ஐக்கியமில்லாத பல குடும்பங்களில் உண்மையான மகிழ்ச்சி இருப்பதில்லை. அவர்கள் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் ஒரே சரீரம்போல ஐக்கியமாக வாழ்வதில்லை. 

மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்றுதான் தேவன் அவனுக்கு ஏற்ற துணையாக பெண்ணைப் படைத்தார். "பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்". (ஆதியாகமம் 2:18) என்று வாசிக்கின்றோம். தேவ சித்தமான இந்த ஏற்ற துணையை மனிதர்கள் அலட்சியம் செய்வதால் தேவ சமாதானம் குடும்பங்களில் குறைவுபடுகின்றது. 

எனவேதான் இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்."

இன்றைய தியான வசனம் இறுதியாகக் கூறுகின்றது,  "நன்றியறிதல் உள்ளவர்களாகவுமிருங்கள்" என்று. ஆம் அன்பானவர்களே, இந்த ஆண்டில் தேவன் நமது வாழ்வில் செய்த அனைத்துச் செயல்களுக்கும் நாம் நன்றிகூறும் உள்ளம் உள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். நன்மையான காரியங்களுக்கு மட்டுமல்ல, பிரச்னைகளுக்காகவும், துன்பங்களுக்காகவும் நாம் நன்றி செலுத்தவேண்டியது அவசியம். காரணம், துன்பங்கள் நம்மைச் செதுக்கி கிறிஸ்துவுக்குள் வளர உதவுகின்றன. 

குடும்ப உறவுகளுக்குள் ஒரே சரிரம் போன்ற ஐக்கியம், வாழ்வில் நடந்த அனைத்து நல்ல, கெட்ட காரியங்களுக்கு நன்றி சொல்லும் மனம் இவையே இன்றைய தியான வசனம் வலியுறுத்தும் உண்மை. இவை நம்மில், நமது குடும்பத்தில் வளர குடும்பங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம். இவைகளை நாம் வாழ்வில் கடைபிடித்து வாழ்வோமென்றால், இன்றைய தியான வசனம் கூறுவதுபோல தேவசமாதானம் நமது இருதயங்களிலும் இல்லங்களிலும்  நிரம்பும். 


No comments: