DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Saturday, August 30, 2025

💕 வேதாகமத் தியானம் - ஆகஸ்ட் 2025

 


                           - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1637                                                                      ஆதவன் 01.08.2025 வெள்ளி   

"என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, சகாயரும் இல்லை. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன." ( சங்கீதம் 22 : 11, 12 )

இன்றைய தியான வசனம் தாவீது தனக்கு உண்டான மிகுந்த நெருக்கடியில் பாடிய சங்கீதமாகும். தனது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் எனும் சூழ்நிலை. சவுலும் அவனது படைவீரர்களும் தாவீதைக் கொல்வதற்கு வகைத்தேடி நெருக்குகின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் தனது சுய முயற்சி பலன் தராது என்பதனைத் தாவீது உணர்ந்திருந்தார். எனவேதான் தேவனை நோக்கிக் கதறுகின்றார். 

"என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, சகாயரும் இல்லை" என்கின்றார். அதாவது தேவனே, எனக்கு உதவிசெய்ய யாருமில்லை; காளைகளும் பலத்த எருதுகளும் போல எதிரிகள் என்னைச் சுற்றி நிற்கின்றனர்,  நீர் என்னைவிட்டுத் தூரமாய்ச் சென்றுவிடாதேயும் என்கின்றார். 

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை நமக்கும் பல்வேறு சமயங்களில் ஏற்படலாம். நமக்கு உதவக்கூடிய மனிதர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாரும் இல்லாதிருக்கலாம். அத்தகைய வேளைகளில் தேவனைத் தவிர வேறு யாரையும் நாம் உதவிக்கு அழைக்க முடியாது. ஆனால், தேவன் நம்மோடு இருக்கின்றார் எனும் நிச்சயம் நமக்கு இருக்குமானால் நாம் இத்தகைய சூழ்நிலையிலும் தைரியமாக நிற்கலாம். இந்த நிச்சயம் தாவீதுக்கு இருந்ததால் தேவனை நோக்கிக் கதறினாலும் அடுத்த சங்கீதத்தில் நம்பிக்கையுடன் கூறுகின்றார்:- 

"நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்." ( சங்கீதம் 23 : 4 )

தாவீது ஆடு மேய்பவராக இருந்ததால் வனாந்தரத்தில் ஆடுகளுக்கு ஏற்படும் துன்பங்களை நன்கு அறிந்திருந்தார். கொடிய வனவிலங்குகள் ஆடுகளைக் கவர்ந்து செல்ல வருவதுண்டு. அப்போது மேய்ப்பர்கள் சேர்ந்து அவற்றைத் துரத்தி ஆடுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள்.  தேவனுக்கும் தனக்குமான  உறவையும் இத்தகையதாகத்   தாவீது  கருதியதால், தேவனே  மேய்ப்பனைப்போல வந்து எனக்கு உதவும் என்று விண்ணப்பம் செய்கின்றார். "என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து நெருங்கியிருக்கிறது" என்கின்றார். 


அன்பானவர்களே, நமக்கும் தேவனுக்குமான உறவு எப்படி இருக்கின்றது என்று சிந்தித்துப்பார்ப்போம். நாம் அவரது கட்டுப்பாட்டுக்குள் வாழும் ஆடுகளாக வாழ்கின்றோமா? அவரை அறிந்திருக்கின்றோமா? அவரை அறிந்திருந்தால் அவரால் அறியப்பட்டவர்களாகவும் இருப்போம். "நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." ( யோவான் 10 : 14. 15 ) என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

ஆபத்து நெருங்கியிருக்கலாம், உதவக்கூடியவர்கள் யாரும் இல்லாமலிருக்கலாம், அநேகம் காளைகளையும்  பலத்த எருதுகளையும் போலத் துன்பங்கள் நம்மை வளைத்துக்கொண்டிருக்கலாம் ஆனால் நல்ல மேய்ப்பனாம் கிறிஸ்துவோடு ஐக்கியத்துடன் வாழ்வோமானால் அவர் நம்மைவிட்டுத் தூரமாய்ச் சென்றுவிடமாட்டார். நமக்காக உயிரையும் கொடுத்த அவர் நமக்கு உதவாமல் போவதெப்படி?


 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1638                                                                      ஆதவன் 02.08.2025 சனி    

"ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளையத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்."( யாத்திராகமம் 33 : 11 )

மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் நுழையும்போது தேவன் மேகத்தில் எழுந்தருளி மோசேயோடு முகமுகமாய்ப் பேசினார். ஒரு நண்பனுடன் பேசுவதுபோல தேவன் மோசேயுடன் பேசினார் என்று கூறப்பட்டுள்ளது. மோசே இப்படி தேவனுடன் பேசும்போது அங்கு அவர் அருகில் நின்றுகொண்டிருந்த யோசுவா அவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார். 

இப்படி நமக்கு ஒரு வாய்ப்பு இருக்குமானால் எப்படியிருக்கும் என எண்ணிப்பாருங்கள்; அந்த  மகிமையான காட்சியை மனதில் எண்ணிப்பாருங்கள். நமது அருகில் இருக்கும் மனிதனிடம் தேவன் பேசுவதை  நாம் கேட்டால் எப்படி இருக்கும்? யோசுவாவினால் இந்த அற்புதமான காட்சியை மறக்கமுடியவில்லை. மட்டுமல்ல, அதுபோன்ற அனுபவம் தனக்கும் வேண்டும் எனும் ஆர்வம் யோசுவாவுக்கு இருந்தது. எனவேதான் அந்த இடத்தைவிட்டு மோசே பாளையத்துக்குத் திரும்பியபின்பும் யோசுவாவிற்கு  திரும்ப மனமில்லை. எனவே அவன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தார். அதாவது, யோசுவா மோசேயின் பணியாளனாக இருந்தாலும் மேலான தேவ நோக்கம் கொண்டவராக இருந்தார்; ஆவிக்குரிய வளர்ந்த ஒரு நிலையை அவர் விரும்பினார்.

ஆம் அன்பானவர்களே, இத்தகைய தேவனைவிட்டுப் பிரியாத மனநிலை நமக்கும் இருக்க வேண்டியது அவசியம். இப்படிச் சொல்வதால், நமக்குக் குடும்பம் இல்லையா என்று ஒருவேளை நீங்கள் எண்ணலாம். யோசுவாவுக்கும்  குடும்பம் இருந்தது, மனைவி மக்கள் இருந்தனர். ஆனால், அவற்றைவிட யோசுவா தேவனோடு பொழுதைக்கழிப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். "நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" ( யோசுவா 24 : 15 ) என்று தான் மட்டுமல்ல, தனது குடும்பமும் கர்த்தரையே சேவிப்போம் என்று உறுதியுடன் கூறினார். 

யோசுவாவின் இந்த அர்ப்பணிப்பான ஊழியத்தைத் தேவன் கனம்பண்ணத் தவறவில்லை. எனவேதான் மோசேக்குப்பின் யோசுவாவைத் தெரிந்துகொண்டார்.  "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." ( யோசுவா 1 : 5 ) என்று வாக்களித்தார். 


மேலும், "பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்." ( யோசுவா 1 : 6 ) என்று கூறி கானான் தேசத்தை இஸ்ரவேலருக்குப் பங்கிட்டுக்கொடுக்கும் பொறுப்பையும் தேவன் யோசுவாவிடம் ஒப்படைத்தார். 

சிறிய பொறுப்போ பெரிய பொறுப்போ, நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நாம் உண்மையும் உத்தமுமாகச் செய்யவேண்டியது அவசியம். மட்டுமல்ல, யோசுவாவைப்போல தேவனைச் சார்ந்துகொள்ளவேண்டியது மிக அவசியம். "தேவன் மோசேயோடு மட்டும்தான் பேசுவாரா?" என்று யோசுவா கேட்டுக்கொண்டு நிற்கவில்லை; பொறாமைப்படவில்லை. மாறாக, அதே அனுபவம் தனக்கும் வேண்டுமென்று விரும்பினார். 

ஆவிக்குரிய வாழ்வில் நாம் வளர்ச்சியடைந்து முன்னேற யோசுவா நமக்கு நல்ல ஒரு முன்மாதிரிகை. யோசுவாவைப்போல மேலானவற்றையே  நாடுவோம்.  "நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்". (கொலோசெயர் 3:1) என்று அப்போஸ்தலரான பவுல் நமக்கு ஆலோசனைக் கூறவில்லையா? "நிலவைக் குறிவையுங்கள்; நட்சத்திரங்களைச்  சுடுவீர்கள்"  

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1639                                                                      ஆதவன் 03.08.2025 ஞாயிறு     

"தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்."( யூதா 1 : 21 )

காத்திருக்கும் ஆவிக்குரிய அனுபவம் குறித்து இன்றைய தியான வசனம் கூறுகின்றது. ஆவிக்குரிய உன்னதமான ஒரு ஆலோசனையாக இன்றைய தியான வசனம், நாம் முதலில் தேவனுடைய அன்பைவிட்டு விலகிடாமல்  நம்மைத் தற்காத்துக்கொண்டு கிறிஸ்துவின் இரகத்தைப் பெறுவதற்குக் காத்திருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. தேவனை ஆராதிப்பது என்பது வேறு,  அவரது அன்பில்  நம்மைக் காத்துக்கொள்வது என்பது வேறு. தேவனை யாரும் ஆராதிக்கலாம்; அவரைத் தனிப்பட்ட விதத்தில் அறியாதவர்களும் ஆராதிக்கலாம்.  ஆனால், அவரது அன்பில் நாம் நம்மில் நிலைத்திருந்தால் மட்டுமே நாம் மெய்யான கிறிஸ்தவர்கள். 

தேவனை ஆராதிப்பவர்கள் அனைவரும் அவரை உண்மையாக அன்பு செய்வதில்லை. காரணம், வேத வசனம் கூறுகின்றது, "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்" ( 1 யோவான்  5 : 3 ) தேவன் தன்னை ஒருவர் ஆராதிப்பதைவிட ஆராதிக்கும் மனிதனின் தனிப்பட்ட சுபாவ மாற்றத்தை அதிகம் விரும்புகின்றார்; அவரது வசனங்களுக்குக் கீழ்ப்படிந்து பொறுமையாக காத்திருந்து வாழும் வாழ்வை விரும்புகின்றார். 

இன்றைய தியான வசனத்தில், துன்பங்களை மேற்கொண்டு தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து தேவனுடைய அன்பிலே நம்மைக்  காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டும் என்கின்றார் அப்போஸ்தலரான யூதா. கிறிஸ்துவின் இரகத்தைப் பெறுவதற்குக் காத்திருக்கவேண்டும் என்பது, நாம் நம்மில் தேவ அன்புள்ளவர்களாய் பொறுமையாய் சாட்சியுள்ள வாழ்க்கை  வாழ்ந்து வரவேண்டியதைக் குறிக்கின்றது. 

அப்போஸ்தலரான பவுல், "ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்." ( ரோமர் 8 : 23 ) என்று கூறுகின்றார். அதாவது, தேவனுடைய புதல்வரும் புதல்வியருமாக மாறிட நாம் காத்திருந்து, ஆர்வமுடன் தவித்து இருக்கவேண்டும் என்று கூறுகின்றார்.  அதனையே அப்போஸ்தலரான யூதா இன்றைய தியான வசனத்தில், "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்" என்று கூறுகின்றார். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தனது சீடர்களிடம், "ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 5 ) எருசலேம் என்பது பரிசுத்த நகரம். உங்களது பரிசுத்தத்தை இழந்துவிடாமல் அதில் நிலைத்திருந்து காத்திருங்கள் என்றும் நாம் பொருள் கொள்ளலாம். 

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து,  கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்". (ஏசாயா 40:31) காத்திருந்து ஆவிக்குரிய பெலனை பெற்றுக்கொள்வோம். அப்போது நமது ஆவிக்குரிய ஓட்டம் சிறப்பானதாக, தேவனுக்கு ஏற்றதாக இருக்கும். சீடர்கள் காத்திருந்துதான் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றார்கள்; உலகம் எத்திசையிலும் சாட்சியாக விளங்கினார்கள். 

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1640                                                                      ஆதவன் 04.08.2025 திங்கள்       

"எனக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்று சொல்லி, உன் செல்வத்தை நம்பின சீர்கெட்ட குமாரத்தியே, நீ பள்ளத்தாக்குகளைப்பற்றிப் பெருமைபாராட்டுவானேன்? உன் பள்ளத்தாக்குக் கரைந்து போகிறது." ( எரேமியா 49 : 4 )
  
இன்றைய தியான வசனம் "சீரிகெட்ட குமாரத்தி", என்று ஒரு வார்தையைக் கூறுவது கவனிக்கத்தக்கது. வேதாகமத்தில் பொதுவாக, குமாரத்தி என்பது தேவனுக்கு பயந்து அவருக்கு ஏற்புடையவர்களாய் வாழும் மக்களைக் குறிக்கும் வார்த்தையாகும். அப்படி விசுவாசம் கொண்டு வாழும் மக்கள் ஆபிரகாமின் பிள்ளைகள்; தேவபிள்ளைகள். "ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக." ( கலாத்தியர் 3: 7) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். அதாவது கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசம் கொண்டு வாழும் நாமே சீயோன் குமாரத்திகளும் ஆவிக்குரிய இஸ்ரவேலருமாய் இருக்கின்றோம். 

எனவே, சீர்கெட்ட குமாரத்தி என்பது தேவனை அறிந்து பின்னர் உலக ஆசையால் சிக்கி அவரது அன்பைவிட்டுப்பிரிந்து கெட்டுப்போன மக்களைக் குறிக்கின்றது. அவர்கள் தேவன்மேல் பற்றுறுதிகொள்ள மறந்தவர்கள்.   ஏன் இந்த மக்கள் அப்படிக் கெட்டுப்போனார்கள்? அவர்கள் உலக செழுமையை நாடியதால் கெட்டுப்போனார்கள். இதனையே, "நீ பள்ளத்தாக்குகளைப்பற்றிப் பெருமை பாராட்டுவானேன்?" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. மட்டுமல்ல, தொடர்ந்து அடுத்த வசனத்தில் தேவன் கூறுகின்றார், "இதோ, உன் சுற்றுப்புறத்தார் எல்லாராலும் உன்மேல் திகிலை வரப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் அவரவர் தம்தம் முன் இருக்கும் வழியே ஓடத் துரத்தப்படுவீர்கள்......" ( எரேமியா 49 : 5 )

பள்ளத்தாக்குகள் என்பது நீளமான, தாழ்வான வடிவமைப்புடன், மேல் நிலப்பரப்புகள் போன்ற மலைகள் அல்லது மேடுகளுக்கு நடுவில் அமைந்துள்ளவையாகும். இவை பெரும்பாலும் ஆறுகள் அல்லது நதிகளைக்  கொண்டிருக்கும்.  பள்ளத்தாக்குகள் மனித குடியிருப்புக்கும் விவசாயத்திற்கும் மிகவும் முக்கியமானவை, ஏனெனில் இவை தரிசு நிலம் மற்றும் நீர்வளங்களை வழங்குகின்றன. இவை செழிப்பான பகுதிகள். 

அதாவது, முதலில் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்துவிட்டுப்  பின்னர் செழிப்பான பள்ளத்தாக்குபோன்ற வாழ்வு அமைந்துவிட்டதால்  உன் செல்வத்தை நம்பின சீர்கெட்ட குமாரத்தியே, நீ உன் பள்ளத்தாக்குகளைப்பற்றி (செழிப்பைப்பற்றி) ஏன் பெருமை பாராட்டுகின்றாய்? என்று கேட்கின்றார் தேவன். மட்டுமல்ல, தொடர்ந்து தேவன் கூறுகின்றார், "உன் பள்ளத்தாக்குக் கரைந்து போகிறது." அதாவது இப்படி நீ என்னைவிட்டு அகன்று உன் செல்வத்தை மட்டுமே நம்பியதால் அது அழிந்துபோய்விடும் என்கின்றார் தேவன். 

வேதாகம பொது மொழிபெயர்ப்பில் இந்த வசனம் மிகத் தெளிவாக உள்ளது. "பற்றுறுதியற்ற மகளே, உன் பள்ளத்தாக்குகள்பற்றி பெருமையடிப்பானேன் ? உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்கிறாய்; 'எனக்கு எதிர் எவன் வருவான்' என்று சொல்லிக்கொள்கிறாய், உன்னைத் சுற்றியிருப்போர் அனைவரிடமிருந்தும் உனக்குத் திகில் வருவிப்பேன் என்கிறார் படைகளின் ஆண்டவராகிய தலைவர்." (எரேமியா 49 : 4, 5 )

எனவே அன்பானவர்களே, கிறிஸ்துவை அறிந்து அவரது புதல்வர்களும் புதல்வியருமாக வாழும் நாம் செழுமை, பணம், போன்ற உலக ஆசீர்வாதங்கள் வரும்போது பெருமையான மனநிலை கொள்ளாமல், தேவனை விட்டுபின்வாங்காமல் தாழ்மையான மனநிலையுடன் தேவன் தந்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்தி வாழவேண்டியது அவசியம். இல்லையானால், உன்னைத் சுற்றியிருப்போர் அனைவரிடமிருந்தும் உனக்குத் திகில் வருவிப்பேன் என்கிறார் தேவனாகிய கர்த்தர். மட்டுமல்ல, பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும் இல்லாமலாக்கிவிடுவேன் என்று நம்மை எச்சரிக்கின்றார். எனவே, எந்தநிலையிலும் பெருமைகொள்ளாமல் மனத் தாழ்மையுடன் தேவனுக்கு நன்றியுணர்வுடன் வாழ்வோம். 

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1641                                                                      ஆதவன் 05.08.2025 செவ்வாய்        

"ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிறபிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக." ( 1 கொரிந்தியர் 15 : 58 )

பொதுவாக மனிதர்கள் நாம் எந்தக் காரியத்திலும் அவசரம் காட்டுபவர்களாக இருக்கின்றோம். எந்த ஒரு செயலுக்கும் உடனடியாக பிரதிபலன் கிடைக்கவேண்டுமென்று எண்ணுகின்றோம். ஒரு மரத்தை நட்டால்கூட அது வளர்ந்து பலன்தர நாம் காத்திருக்கவேண்டியது அவசியம். ஆனால் பல ஆவிக்குரிய மனிதர்கள் தங்களது செயல்பாடுகளுக்குத் தேவன் உடனடி பதில் அளிக்கவில்லையானால் சோர்ந்துபோகின்றனர். 

ஆவிக்குரிய வாழ்க்கை பஞ்சுமெத்தை வாழ்க்கையல்ல. ஆவிக்குரிய வாழ்வில் நாம் பல பாடுகளையும், ஒறுத்தல்களையும் தேவனுக்காகச் செய்யவேண்டியது அவசியமாய் இருக்கின்றது; சாதாரண மனிதர்கள் செய்யும் பல செயல்களை நாம் செய்யமுடியாது. ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்கு மற்றவர்களிலிருந்து மாறுபட்ட ஒரு வாழ்க்கை அவசியம். இவற்றையே இன்றைய தியான வசனம் பிரயாசங்கள் (முயற்சிகள்) என்று கூறுகின்றது.  அதாவது நாம் தேவனுக்கென்று செய்யும் இத்தகைய முயற்சிகள் எதுவும் வீணானவையல்ல என்று கூறுகின்றது.  

ஒருமுறை ஒரு சகோதரன் என்னிடம், "பிரதர், நான் எனது தனிப்பட்ட வாழ்வில் தேவனை அறிந்து சுமார் ஐந்து ஆண்டுகளாக தேவனுக்காக வைராக்கியமாக எவ்வளவோ காரியங்களைச் செய்திருக்கின்றேன்.  எனது வாழ்வில் பல்வேறு காரியங்களை தேவனுக்காகத் தியாகம் செய்திருக்கின்றேன்.  ஆனால் எனது வாழ்வில் ஆவிக்குரிய வளர்ச்சியுமில்லை, பொருளாதார வளர்ச்சியுமில்லை. எனது வயதையொத்த நண்பர்கள் பலரும் வாழ்க்கையில் எவ்வளவோ முன்னேறிவிட்டனர். நான் மட்டும் இப்படியே பழைய நிலையிலேயே இருகின்றேன்" என்று புலம்பினார். 

இந்த நண்பருக்கு அவரது தவறுகளைச் சுட்டிக்காட்டினேன். முதலில், "தேவனுக்காக நான் பல காரியங்களை நான் செய்திருக்கிறேன் என்று நீங்கள் கூறுவது தவறு; அது உங்கள் பெருமை மனநிலையைக் குறிக்கின்றது. உங்களுக்காக தேவன் எதுவும் செய்யவில்லையென்று ஏன் எண்ணுகிறீர்கள்? நீங்கள் நோயில்லாமல் இதுவரை உயிருடன் வாழ்வதே தேவன் உங்களுக்குக் காட்டிய கிருபையால்தான். மேலும், மற்றவர்களுடன் உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியையும் பொருளாதார வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்ப்பது உங்களது இரண்டாவது  தவறு. மற்றவர்களோடு உங்களை ஒப்பிட்டுப்பார்க்காமல் உங்களுக்காக தேவன் நியமித்திருக்கும் வழியில் வாழ்வைத் தொடருங்கள்" என்று ஆலோசனை கூறினேன். அவர் நான் கூறியவற்றை ஏற்றுக்கொண்டாரோ இல்லையோ தெரியவில்லை ஆனால், ஏற்றுக்கொண்டதுபோலக் காண்பித்துக்கொண்டார்.  

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனத்தில் இதனையே அப்போஸ்தலரான பவுல், கர்த்தருக்குள் நாம் படும்  பிரயாசங்கள் வீணானவையாக இருக்காது என்று   அறிந்து,  உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக என்று நமக்கு அறிவுறுத்துகின்றார்.  அசையாத விசுவாசமுள்ளவர்களாக உறுதியுடன் தேவனுக்கென்று வாழும் வாழ்வில் நாம் நிலைத்திருக்கவேண்டியது அவசியம்.

தேவனுக்கென்று நாம் காண்பிக்கும் முயற்சிகள் ஒருபோதும் வீணாகாது.  ஒவ்வொருவரையும் குறித்துத் தேவனுக்கு ஒரு திட்டமுண்டு. அந்தத் திட்டப்படியே அவர் ஒவ்வொருவரையும் நடத்துகின்றார். அப்போஸ்தலரான் பவுல் பிலிப்பியருக்குக் கூறும் அறிவுரையுடன் இன்றைய தியானத்தை நிறைவு செய்வது சரியாக இருக்குமென்று எண்ணுகின்றேன்:-  

"நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைyகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்." ( பிலிப்பியர் 3 : 12 - 14 )

நாம் ஆவிக்குரிய வாழ்வில் தேர்ச்சியடைந்துள்ளோம் என்று கூறுவோமானால் இத்தகைய எண்ணமுடையவர்களாய் வாழவேண்டியது அவசியம். ஆம், "ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்." ( பிலிப்பியர் 3 : 15 )

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1642                                                                      ஆதவன் 06.08.2025 புதன்     

"நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங் கொண்டிருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 11 : 2 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உண்மையோடும் உத்தமத்தோடும் பின்பற்றுவதை அப்போஸ்தலரான பவுல் கற்புள்ள பெண்ணின் வாழ்க்கைக்கு ஒப்பிடுகின்றார். கற்புள்ள பெண் தனது கணவன் ஒருவனைத்தவிர வேறு எவர் முகத்தையும் திரும்பிப்பார்க்க மாட்டாள்; எவரிடமும் கணவனிடம் காட்டுவதுபோன்ற அன்பைக்காட்டமாட்டாள். கிறிஸ்துவின்மேல் இப்படி நாம் வைராக்கியமாக  அன்புகொண்டவர்களாக வாழவேண்டியது அவசியம். 

ஏனெனில் தனது சுய இரத்தத்தைச் சிந்தி நம்மை மீட்டவரும் மனிதர்களாகிய நமக்கும் பிதாவாகிய தேவனுக்கும் மத்தியஸ்தராக இருப்பவரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே. "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது." ( 1 தீமோத்தேயு 2 : 5, 6 ) என்று கூறப்பட்டுள்ளது. எனவேதான்  அவர் மட்டுமே நமக்கு மத்தியஸ்தர் என்று கூறுகின்றோம். 

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாவங்களைப் போக்கிட மிருகங்களின் இரத்தம்  பலியிடப்பட்டது. பிரதான ஆசாரியர்கள் மிருகங்களின் இரத்தத்தால் தங்களைச் சுத்திகரித்துக்கொண்டு ஆசரிப்புக் கூடாரத்தில்  நுழைந்து மக்களுக்காக விண்ணப்பம் செய்தனர்.   புதிய ஏற்பாட்டின் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே  பிரதான ஆசாரியராக இருக்கின்றார். அவரே பிதாவாகிய தேவனுக்குமுன் நின்று நமக்காக பரிந்துபேச முடியும். 

இதனையே நாம் எபிரெயர் நிருபத்தில், "கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்." ( எபிரெயர் 9 : 11, 12 ) என்று வாசிக்கின்றோம். எனவே, அவரே நமக்காக மத்தியஸ்தராக இருக்கமுடியும். 

இந்த வேதச் சத்தியங்களைவிட்டு உபதேசநாளைப் போதித்து நம்மை வேறு யாரும் வஞ்சித்துவிடக்கூடாது என்று தான் பயப்படுவதாக அப்போஸ்தலரான பவுல் குறிப்பிடுகின்றார். இதனையே அவர் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து,  "ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 11 : 3 ) என்று குறிப்பிடுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நம்மைக் கிறிஸ்தவர்கள் என   நாம் கூறிக்கொள்வது உண்மையானால், நாம் அவரை மட்டுமே நமது அனைத்துத் தேவைகளுக்கும் மத்தியஸ்தராக எண்ணிக்கொண்டு வாழவேண்டும். அவரிடமே நம்மை முற்றிலும் ஒப்படைக்கவேண்டும்.  இப்படி நாம் வாழவேண்டும் என்பதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல், "நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால்"  என்று கூறுகின்றார். கற்புள்ள பெண்களைப்போல வாழ்வோம். எனவே, "சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்." ( எபிரெயர் 3 : 12 )

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1643                                                                      ஆதவன் 07.08.2025 வியாழன்      

"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே." ( 1 பேதுரு 5 : 8, 9 )

விசுவாச வாழ்வில் நாம் வாழத் தடையாக இருப்பவை உலகத் துன்பங்கள்தான்.  கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் துன்பங்கள் கிடையாது என்று பொருளல்ல; நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்காக வாழும்போது மற்றவர்களைப்போன்ற துன்பங்கள் நமக்கும் ஏற்படும். எனவே இத்தகைய துன்பவேளைகளில் நாம் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம் என்று இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

"நீ இயேசு இயேசு என்று முட்டாள்த்தனமான வாழ்கின்றாயே, உனக்கு இந்தத் துன்பங்கள் ஏன் இன்னும் குறையவில்லை? கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத பலர் உன்னைவிட நல்ல நிலையில் இருக்கின்றனரே?" எண்பது போன்ற எண்ணங்களைச் சாத்தான் நமது இருதயத்தில் விதைக்கலாம்.  காரணம், இதேபோலவே ஏதேனில் ஆதாம் ஏவாளை வஞ்சித்தவன் அவன். அதனால் சபிக்கப்பட்டவன். அடிபட்ட பாம்பாகிய சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். எனவே, விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

சாத்தானின் வஞ்சகத்திலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள, தெளிந்த புத்தியுள்ளவர்களாக, விழித்திருக்க வேண்டியது அவசியம் என்று அப்போஸ்தலரான பேதுரு நமக்கு அறிவுறுத்துகின்றார். ஏனெனில், உலகத்திலுள்ள உங்கள் சகோதரர்களும் நீங்கள் அனுபவிப்பதுபோன்ற பாடுகளை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். என்கின்றார் பேதுரு. 

இன்று ஆசீர்வாத போதகர்கள் போதிக்கும் போதனைகள்தான் கிறிஸ்தவர்களுக்கு சாத்தான் விதிக்கும் வஞ்சக வலைகள். நீங்கள் இன்னும் உலக ஆசீர்வாதம் பெறவில்லையானால் உங்களிடம் ஏதோ தவறு இருக்கின்றது என்று அவர்கள் போதிப்பார்கள்; நீங்கள் தேவனுக்கு தசமபாக காணிக்கை கொடுக்கவில்லை, அதனால்தான் உங்களுக்குத் துன்பம் எனக் கூறி ஏற்கெனவே துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் உங்களை மேலும் துன்பத்துக்குளாக்குவார்கள். எனவே,  "தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்" ஆசீர்வாத போதனைகள் நம்மை ஆவிக்குரிய பின்மாற்றத்துக்கு நேராக இழுத்துச் செல்லலாம். 

ஆம் அன்பானவர்களே, உலகத்திலுள்ள மற்றவர்களைப்போன்ற துன்பங்கள்தான் நமக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் தேவன் நியமித்த காலத்தில் நம்மை அவற்றிலிருந்து விடுவிப்பார். இதனையே இன்றைய தியான வசனத்தின் முன்பு அப்போஸ்தலரான் பேதுரு, "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்." ( 1 பேதுரு 5 : 6, 7 ) என்று கூறுகின்றார். 

துன்பங்களைக்கண்டு பின்வாங்காமல் தெளிந்த புத்தியுள்ளவர்களாக விழிப்புடன் வாழ்வோம். சிங்கம்போன்ற சாத்தானின் தலையை ஏற்கெனவே இயேசு நசுக்கிவிட்டார்; எனவே சாத்தானுக்கு நம்மேல் எந்த அதிகாரமும் இல்லை; அவன் நம் காலின்கீழே. விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நிற்போம்.  "ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்." ( ரோமர் 8 : 18 ) என்று நமக்கு மேலும் பாடுகளைச் சகிக்க ஊக்கம் தருகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1644                                                                      ஆதவன் 08.08.2025 வெள்ளி       

"ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 17 )

கர்த்தரது சித்தம் அறிந்து வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு. அப்படி இல்லாமல் வாழ்வது அறிவற்ற வாழ்வு என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு பக்தர்களும் இப்படித் தேவசித்தம் அறிந்து செயல்பட்டவர்கள்தான்.  நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது வாழ்வில் அனைத்துச் செயல்களையும் பிதாவின் சித்தப்படியே செய்தார். 

தான் உணர்தியும் தேவ சித்தம் செய்யாத மனிதர்களுக்குத் தேவன் தண்டனையும் கொடுத்தார். உதாரணமாக மேரிபாவின் தண்ணீர் பற்றிய காரியத்தில் தேவனது சித்தம் மலையைப்பார்த்து மோசே  பேசவேண்டும் என்பது. ஆனால் மோசே "தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்" (எண்ணாகமம் 20;11) எனவே தேவன் மோசே மற்றும் ஆரோன்மீது கோபம்கொண்டார். காரணம், தேவ சித்தம் செய்யாததை தேவன் விசுவாசக் குறைவாகப் பார்த்தார்.  எனவே கர்த்தர் "மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற்போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்." ( எண்ணாகமம் 20 : 12 )

இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரிக்கவேண்டும் என்பது பிதாவாகிய தேவனது சித்தம். அதனை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார். ஆனால், அப்போஸ்தலரான பேதுரு இயேசுவின்மேலிருந்த  அன்பினால் அப்படி நடக்கக்கூடாது என்று கூறினார். அது இயேசு கிறிஸ்துவுக்கு மதியற்ற சிந்தனையாகவே இருந்தது. எனவேதான் அவர் "பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்."  (மத்தேயு 16:23)

மேலும் இயேசு தனது ஜெபத்தை தேவ சித்தத்துக்கு முழுவதும் தன்னை ஒப்புக்கொடுத்தே ஜெபித்ததை நாம் பார்க்கலாம், கெத்செமனே தோட்டத்தில் அவர் ஜெபித்தபோது, "முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்." ( மத்தேயு 26 : 39 )

எனவே, தேவ சித்தம் செய்து வாழ்வதையே தேவன் விரும்புகின்றார். இன்று பலவேளைகளில் நாமும் தேவ சித்தம் அறியாமல் அல்லது தேவ சித்தத்தை நாடாமல் பல காரியங்களைச்  செய்கின்றோம்.  இப்படி வாழ்வது மதியற்ற வாழ்வு என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.   தேவனோடு நமக்குத் தனிப்பட்ட ஐக்கியம் இருக்குமானால் அவர் தனது சித்தத்தை நமக்கு வெளிபடுத்துவார்.  அப்படித் தேவ சித்தம் அறிந்து வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். அப்போஸ்தலர்பணி நூலை நாம் வாசிக்கும்போது தேவன் அப்போஸ்தலர்களை தேவன் தனது சித்தப்படி  வழிநடத்திய அனுபவங்களை நாம் கண்டுகொள்ளலாம்.  

இதே அனுபவங்களுடன் தேவன் இன்றும் தனது அடியார்களை வழிநடத்துகின்றார்.  கனவுகள், காட்சிகள், குரல்மூலம் பேசுதல், வேதாகமத்தை வாசிக்கும்போது உள்ளத்தில் உணர்த்துதல் போன்ற பல்வேறு வகைகளில் தேவன் தனது சித்தத்தை வெளிப்படுத்தித் தருகின்றார். இந்த வழிநடத்துதலின்படி நடக்கும்போது நமக்கு இடறல் ஏற்படாது, மட்டுமல்ல தேவன் நம்மோடு இருக்கின்றார் எனும் உறுதி நமக்குள் ஏற்படுவதால் மனதைரியம் ஏற்படும். 

இன்றைய தியான வசனம் நாம் இத்தகைய அனுபவத்துடன் வாழவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. எனவேதான், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. 

ஆம் அன்பானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜெபித்ததைப்போல தேவ சித்தத்துக்கு நம்மை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். தேவ சித்தத்துக்குக் கீழ்படியாத அவரது தாசனாகிய மோசேயையே தேவன் தண்டித்தாரென்றால்  நாமெல்லாம் எம்மாத்திரம்? "ஆண்டவரே உம்  சித்தத்தை எனக்கு வெளிப்படுத்தும்; உம் சித்தம்போல என்னை நடத்தும்"  என்று ஜெபிப்போம். அதுவே புத்தியுள்ள செயல் என்று இன்றைய தியான வசனம் நமக்கு உணர்த்துகின்றது. 

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1645                                                                      ஆதவன் 09.08.2025 சனி        

"இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே". (ஏசாயா 48:17)

இன்றைய தியான வசனம் தேவனே மெய்யான, மேலான போதகராக இருக்கின்றார் என்பதனையும் அவரது வழிநடத்துதல் மட்டுமே நம்மை நேரான பாதையில் நடத்தும் என்பதனையும் நமக்கு உணர்த்துகின்றது. 

இந்த உலகினில் தங்களை தேவனுடைய ஊழியக்காரர்கள் என்று கூறிக்கொள்ளும் மனிதர்கள் வேதாகம வசனங்களுக்கு வெல்வேறு அர்த்தம் சொல்லி நம்மை நம்பவைக்கலாம். ஆனால், கர்த்தரது போதனையும் வேத வசனங்களுக்கு அவர் தரும் தெளிவும் வித்தியாசமானவை. காரணம், நம் தேவனாகிய கர்த்தர் வெறுமனே நாம் ஆராதிக்கும் ஒரு உருவமோ உயிரற்றவரோ அல்ல. நம்மிடமிருந்து ஆராதனையையும் புகழ்ச்சியையும் பெறுவதில் குறியாக இருபவரல்ல. மாறாக,  நாம் அவரைப்போல பரிசுத்தராகவும் அவரது சாயலாக மாறவும் வேண்டும் என ஆசைப்படுபவர்; அப்படி மாறிட நமக்கு உதவுபவர். 

எனவே, கர்த்தரது வழிநடத்தலுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுக்கும்போது நம்மை அவர் ஜீவவழியில் நடத்துவார்.  இன்றைய வசனத்தில் அதனைத்தான் அவர் கூறுகின்றார், "பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" என்று. ஆம் அன்பானவர்களே, அவரது வழி நடத்தலுக்கு நம்மை நாம் ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். மனிதர்களது உபதேசங்கள் கொஞ்சகாலம் நமக்குக் கைகொடுக்கலாம். ஆனால் நிரந்தரமான போதனையும் வழிநடத்துதலும் கர்த்தரிடமே உண்டு. 

"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்."( சங்கீதம் 32 : 8 ) என்று வாசிக்கின்றோம். அதாவது, அவர் நமக்குப் போதனை மட்டும் செய்பவரல்ல மாறாக நாம் நடக்கவேண்டிய வழியைக் காண்பிப்பதோடு அந்த வழியில் நாம் நடக்கின்றோமா என்பதனைக் கண்காணித்து நமக்கு ஆலோசனையும் வழங்குபவர். 

இஸ்ரவேல் மக்களை தேவன் அக்கினித் தூணினாலும் மேகத் தூணினாலும் வழிநடத்தினார். அந்த அக்கினி ஸ்தம்பமும் மேக ஸ்தம்பமும் அவர்களைச் சரியாக வழிநடத்தியது. அந்த வழி நடத்தலுக்கு அவர்கள் கீழ்ப்படிந்து பயணம் செய்ததால் தான் எதிரி ராஜாக்களை முறியடித்து கானான் தேசத்தில் நுழைய முடிந்தது. இதனை நாம் யாத்திராகமம் புத்தகத்தில் வாசிக்கலாம். "வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணப் புறப்படுவார்கள். மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம்பண்ணாதிருப்பார்கள்." ( யாத்திராகமம் 40 : 36, 37 )என்று வாசிக்கின்றோம்.

ஆம், பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம்  நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற தேவனாகிய கர்த்தர்   அவரே. இந்த உலகத்தில் வாழ்ந்த பல பரிசுத்தவான்களும் இப்படித் தேவனாகிய கர்த்தரின் வழிநடத்துதலின்படி நடந்து வாழ்வில் வெற்றிபெற்றவர்கள்தான்.

ஜார்ஜ் முல்லர் எனும் தேவ மனிதனது வாழ்க்கை, சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சாது சுந்தர்சிங் அவர்களது வாழ்க்கை இவற்றை நாம் வாசிக்கும்போது எப்படி தேவன் அவர்களை அன்றாட வாழ்வில் வழிநடத்தினார் என்று அறிவது வியப்பாக இருக்கும்.  அதே வழிநடத்துதலோடு இன்றும் அவர் தன்னைப் பற்றிக்கொள்ளும் விசுவாசிகளை வழிநடத்துகின்றார். ஆம், "அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கின்றார்". (எபிரெயர் 13:8).

அன்பானவர்களே, நாம் ஆலயங்களுக்குச் செல்லலாம், ஜெபக்கூட்டங்களில் பங்கு பெறலாம், ஆலயப் பணிகள் செய்ய உழைக்கலாம் ; ஆனால், தேவனோடு நமக்குத் தனிப்பட்ட உறவு இல்லையானால் எல்லாம் வீண்தான். அவரது வழிநடத்தலுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழும்போதுதான் தேவனது அருகாமையையும் அவர் நம்மை வழிநடத்துவதையும் வாழ்வில் கண்டுணர முடியும். 

இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணப் பல்வேறு  ஊழியர்களை நாடி ஓடுகின்றனர். அதே அளவு ஆர்வத்தினை அவர்கள் தேவன்மேல் வைத்தார்களானால் நலமாய் இருக்கும்.   "பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே, என்னிடம் வா"  என்று அறைகூவல்விடுத்து நம்மை அழைக்கின்றார் தேவன். அவரது குரலுக்குச் செவிகொடுத்து அவரிடம் வருவோமானால் ஊழியர்கள் காட்டும் வழியைவிட மேலான வழியை நமது வாழ்வில் தேவன் காட்டுவார். அவர் காண்பிக்கும் வழியே மேலான வழியாக இருக்கும். தேவ ஊழியர்கள் காட்டும் வழியையல்ல; தேவன் காட்டும் வழியை வாழ்வில் அறிந்திட முயல்வோம்.  


 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1646                                                                     ஆதவன் 10.08.2025 ஞாயிறு         

"ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்." ( ரோமர் 15 : 7 )

இந்த உலகத்தில் வாழும் நாம் தேவனது குணங்கள் உள்ளவர்களாக வாழவேண்டும் என்பதனை இன்றைய தியான வசனம் நமக்கு விளக்குகின்றது. தேவன் மனிதர்கள் அனைவரையும் ஜாதி, மதம், இனம் ஆகிய வேற்றுமைகளைக் கடந்து ஏற்றுக்கொள்வதுபோல நாமும் எல்லோரையும் ஏற்றுக்கொண்டு வாழவேண்டியது அவசியம். அப்போது மட்டுமே கிறிஸ்துவை நாம் மற்றவர்களுக்கு அறிவிக்க முடியும்.

ஆனால் இன்று இத்தகைய மனநிலை பொதுவான  மனிதர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் இல்லை என்றே  கூறலாம். பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளிடையேகூட ஒருவர் ஒருவரை மதிப்பதில்லை; ஏற்றுக்கொள்வதில்லை.  இன்றைய தியான வசனத்துக்கு முன்பு 14 ஆம் அதிகாரத்திலிருந்தே இதனையே அப்போஸ்தலரான பவுல் விளக்குகின்றார். ஒருவர் குறிப்பிட்ட ஒரு நாளை மற்ற நாளிலிருந்து சிறப்பான நாளாக கருதி அந்த நாட்களில் சில சிறப்பு செய்வது, குறிப்பிட்ட உணவுகளை உண்ணாமல் இருந்தால் மட்டுமே கடவுள் நம்மை அன்புசெய்வார் என எண்ணுவது இவைபோன்ற காரியங்கள் அவர்களது தனிப்பட்ட விருப்பம். அவற்றைக்குறித்து நாம் குறை கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்கின்றார் பவுல். 

நாம் நம்மை ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு மற்றவர்களை குறைகூறி அற்பமாக எண்ணுவோமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்கள். எனவே, தொடர்ந்து அப்போஸ்தலரான பவுல் சில காரியங்களை நமக்கு விளக்குகின்றார்.  "அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்னையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்." ( ரோமர் 15 : 1, 2 ) என்கின்றார். 

அதாவது நாம் ஆவிக்குரிய வாழ்வில் பலமுள்ளவர்கள் என்று எண்ணுவோமானால் ஆவிக்குரிய வளர்ச்சியடையாத மற்றவர்களது பலவீனத்தில் நாம் அவர்களைத் தாங்கவேண்டும்.  மட்டுமல்ல, நமது நடக்கையால் ஆவிக்குரிய பலம் குறைந்த மற்றவர்களுக்குப்  பக்திவிருத்திக்கேதுவான நன்னையுண்டாகும்படி அவர்களுக்குப்  பிரியமாய் நடக்கவேண்டும் என்கின்றார். 

எனக்குத் தெரிந்த ஒரு சகோதரன் ஆவிக்குரிய ஒரு சபைக்குச் சென்று ஆராதனை செய்து ஒருசில நாட்களில் அங்கு ஞானஸ்நானமும் பெற்றுக்கொண்டார். ஆனால் அவரது மனைவி பாரம்பரிய சபையிலேயே இருந்தார்.  அவர் சென்ற சபை பாஸ்டர், "நீங்கள் குடும்பமாக இங்கு ஆராதனைக்கு வந்து உங்கள் மனைவியும் ஞானஸ்நானம் பெற்றால் மட்டுமே குடும்ப ஆசீர்வாதம் பெறமுடியும்"  என்று பயமுறுத்திவிட்டார். அதுமுதல் அந்த வீட்டில் சண்டையும் சமாதானக் குறைவும் ஏற்படத்துவங்கியது. மனைவியை அடித்துத் துன்புறுத்தித் தான் செல்லும் சபைக்கு அழைத்துச்சென்று அவளையும் அங்கு ஞானஸ்நானம் பெற வைத்துவிட்டார்.  

மெய்யான மனம்திரும்புதலோ, தேவனை அறியும் அறிவோ இல்லாததால் இன்றும் அந்தக் குடும்பத்தில் சமாதானமில்லை. காரணம் அந்தக் குடும்பத் தலைவன் கிறிஸ்துவை வாழ்வில் அறியவில்லை; எனவே, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் கூறுவதுபோல கிறிஸ்துவைப்போல மற்றவர்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் அவரிடம் இல்லை. இதுபோல இன்று பல கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. 

ஆம் அன்பானவர்களே, முதலில் கிறிஸ்துவை நமது தனிப்பட்ட வாழ்வில் அறியவேண்டும். மேலும், பயமுறுத்துவதாலும், கட்டாயப்படுத்துவதாலுமல்ல, நமது நடக்கையால் மட்டுமே மற்றவர்களை நாம் ஆதாயப்படுத்த முடியும்.  "என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள்". (1 கொரிந்தியர் 7:14) சபை மாறுவதல்ல, நமது வாழ்க்கை கிறிஸ்துவுக்கு ஏற்றதாக மாறுவதே முக்கியம். 

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1647                                                                     ஆதவன் 11.08.2025 திங்கள்          

"நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 5 )

கிறிஸ்து இயேசுவினால் மீட்கப்பட்டவர்களை இன்றைய தியான வசனம் வெளிச்சத்தின் பிள்ளைகள், பகலின் பிள்ளைகள்  என்று கூறுகின்றது.  காரணம், நாம் மீட்கப்படும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மெய்யான ஒளியினிடம் வந்துவிடுகின்றோம். "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." ( யோவான் 1 : 9 ) நாம் அந்த ஒளியின் பிள்ளைகள் ஆகிவிடுகின்றோம். 

மீட்கப்படுவதற்குமுன் நாமெல்லோரும் இருளான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தோம். பாவத்தின் பிடியில் வாழ்ந்த நாம் கிறிஸ்துவின் அன்பை ருசியாதவர்களாக இருந்தோம். இப்போது, பிதாவாகிய தேவனின் சித்தப்படி நாம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினால் மீட்க்கப்பட்டு இந்த ஒளியினிடம் வந்துள்ளோம். அதற்காக நாம் பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரிக்கவேண்டும். எனவேதான், "இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்." ( கொலோசெயர் 1 : 13 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

இப்படி நாம் முன்பு இருளாக இருந்து இப்போது வெளிச்சத்திடம் வந்துள்ளபடியால் தொடர்ந்து அந்த ஒளியில் நாம் நடக்கவேண்டியது அவசியம். எனவேதான் "முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5 : 8 ) என்று வேத வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. அதாவது பாவமாகிய இருளின் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு கிறிஸ்துவின் ஒளியினிடம் வந்துள்ளோம். எனவே அவரோடுள்ள உறவில் நாம் தொடர்ந்து பயணிக்கவேண்டும்.  

நாம் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு மற்றவர்கள் வாழ்வதுபோன்றே வாழ்ந்து கொண்டிருப்போமானால் நாம் பொய்யர்கள் என்கின்றார் அப்போஸ்தலரான யோவான்.  "நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்." ( 1 யோவான்  1 : 6 ) அதாவது நாம் நம்மைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்வது பொய் என்று இந்த வசனம் கூறுகின்றது. 

மட்டுமல்ல, "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." ( 1 யோவான்  1 : 7 )

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவை அறிந்த நாமெல்லோரும்  வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கின்றோம். ஆனால் அந்த வெளிச்சத்தில் நாம் தொடர்ந்து நடக்கவேண்டியது அவசியம். அப்படி நடக்க கிறிஸ்துவோடு நமக்குத் தனிப்பட்ட ஐக்கியம் அவசியம். அந்த ஐக்கியம் இல்லாவிட்டால் நாம்  நம்மை அறியாமலேயே நமது பழைய பாவ வாழ்க்கைக்குச் சென்றுவிடுவோம். நம்மால் கிறிஸ்து விரும்பும் கனியுள்ள வாழ்க்கையினை வாழவும் முடியாது. எனவேதான் இன்றைய தியான வசனம்,  "நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே" என்று நமக்கு உணர்வூட்டுகின்றது. 

"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவரது குரலுக்குச் செவிகொடுப்போம்.

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1648                                                                     ஆதவன் 12.08.2025 செவ்வாய்           

"சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார்." ( ஏசாயா 40 : 29 )

இந்த உலகத்தில் நம்மைச் சோர்வடையச்செய்யும் காரியங்கள் பல உண்டு. நாம் எதிர்பார்த்தவை நடக்காதபோது, நாம் விரும்பியவை நமக்குக் கிடைக்காதபோது,  ஆசைப்பட்ட எதுவுமே நிறைவேறாமல் போகும்போது நாம் சோர்வடைகின்றோம். நாம் ஆவிக்குரிய வாழ்வில் தேவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழ்ந்தாலும் இப்படியே சிலவேளைகளில் நமக்கு நடக்கின்றது. அப்போது நாம் தேவன் என்னை மறந்துவிட்டார், எனது நீதியான வாழ்வை அவர் மதிக்காமல் என்னைத் தள்ளிவிட்டார் என்று மனம் சோர்ந்து போகின்றோம். 

இப்படி சோர்ந்து போகும் மக்களைப்பார்த்துத் தான் தேவன் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனங்களில் பதிவிடப்பட்டுள்ள வார்த்தைகள் இதனை நமக்கு உணர்த்துகின்றன. "யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்? பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது." ( ஏசாயா 40 : 27, 28 )

ஆவிக்குரிய இஸ்ரவேலராகவும் யாக்கோபாகவும் வாழும் நீ உனது வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், உன் நியாயம் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் ஏன் சொல்கின்றாய்? ஏன் புலம்புகின்றாய்? பூமியின் கடையாந்தரங்களைப் படைத்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? என்கின்றார் தேவனாகிய கர்த்தர். அதாவது, உனது நீதியுள்ள வாழ்க்கையும் உனது நியாயங்களும் எனக்குத் தெரியும். உனக்கு உதவுவதில் நான் சோர்ந்த்துவிடவில்லை, உனக்கு நிச்சயமாக பதில் செய்வேன் என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

ஆம், அவர் சோர்ந்துபோகிறவனுக்கு  பெலன் கொடுத்து, அவனது பெலனை பெருகப்பண்ணுகின்ற தேவன்.  ஆனால் நாம் பொறுமையாக அவருக்குக் காத்திருக்கவேண்டியது அவசியம். எனவேதான் தொடர்ந்து கூறுகின்றார், "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 )

வேத வசனங்களைக் கோர்வையாக வாசிக்கும்போது மட்டுமே நமக்கு அவற்றின் பொருள் முற்றிலும் விளங்கும். கழுகுபோல செட்டைகளை அடித்து நாம் எழும்பவேண்டுமானால் வெறுமனே காத்திருந்தால்  மட்டும் போதாது, நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலராக வாழ்ந்து காத்திருக்கவேண்டியது அவசியம். ஆம், யாக்கோபே, இஸ்ரவேலே உன் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் புலம்பவேண்டாம். 

இந்த அண்டசராசரங்களைப் படைத்து ஆட்சிசெய்கின்ற கர்த்தராகிய தேவன் சோர்ந்துபோய்விடவில்லை. மட்டுமல்ல, அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. ஏற்ற காலங்களையும் வேளைகளையும்  அறிந்த அவர் நிச்சயமாக நமக்கு ஆதரவாக இருப்பார்.  சோர்ந்துபோயிருப்போமானால் விசுவாசத்தோடு அவரைச் சார்ந்துகொள்வோம். அவர் நமக்குப் பெலன் கொடுத்து நம்மை நிமிரச்செய்வதுமட்டுமல்ல, அந்த பெலனில் நாம் பெருகும்படியும் செய்வார். 

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1649                                                                     ஆதவன் 13.08.2025 புதன்     

"கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது." ( நீதிமொழிகள் 19 : 23 )

கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது எல்லாவித தீமையான காரியங்களையும் வெறுத்து கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கின்றது. "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்." ( நீதிமொழிகள் 8 : 13 ) என்று நாம் வாசிக்கின்றோம். இப்படி கர்த்தருக்குப் பயப்படும் மனிதனது வாழ்வில் தீமை அணுகாது என்று கூறப்பட்டுள்ளது. 

இதனையே சங்கீத ஆசிரியர், "எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது." ( சங்கீதம் 91 : 9, 10 ) என்றும் கூறுகின்றார்.

அன்பானவர்களே, இன்று நாம் எல்லோருமே தீமை நம்மை அணுகக்கூடாது என்றுதான் ஜெபிக்கின்றோம். ஆனால் அப்படி ஜெபித்தால் மட்டும் போதாது கர்த்தருக்குப் பயப்படும் பயம் நமக்கு வேண்டும்.  பலரும் இன்று ஜெபத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நடைமுறை வாழ்க்கைக்குக் கொடுப்பதில்லை.  ஜெபம் மட்டுமல்ல, ஜெபிக்கும் நாம் தீமையை வெறுக்கின்றவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம். அதுவே கர்த்தருக்குப் பயப்படும்பயம். 

நாம் இப்படிக்  கர்த்தருக்குப் பயப்படும் வாழ்க்கை வாழும்போது தீமையான காரியங்கள்  நமது வாழ்வில் வராது என்று பொருளல்ல; சோதனைகள் நமது வாழ்வில் ஏற்படாது என்று பொருளல்ல, ஆனால்  ஆனால் அத்தகைய சோதனைகளில் தேவன் அவற்றிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளும் வழியையும் உண்டாக்குவார். "மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." ( 1 கொரிந்தியர் 10 : 13 )

ஆம், கர்த்தருக்குப் பயப்படும் வாழ்க்கை வாழும்போது அவர் நமது துன்பங்களை நாம் தாங்கத்தக்கப் பலத்தை நமக்குத் தருவார்.  மட்டுமல்ல, "கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்." ( சங்கீதம் 34 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது. 

கர்த்தருக்குப் பயப்படுத்தல் என்பது அவரது ஆசீர்வாதம் கிடைக்காமல் போகுமோ எனும் பயத்தில் வேதாகமத்தை வாசிப்பதும், ஜெபிப்பதும், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதும், உபவாசிப்பதும், காணிக்கைகள் கொடுப்பதும் அல்ல; மாறாக அவர்மீது மெய்யான அன்புகொண்டு அந்த அன்பினால் ஏவப்பட்டவர்களாக அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்வதைக் குறிக்கின்றது. அத்தகைய தேவ அன்புள்ள மனிதர்களது ஜெபங்கள் வித்தியாசமானதாக இருக்கும். அத்தகைய மனிதர்கள் பாவத்தை வெறுக்கின்றவர்களாக இருப்பார்கள். அதுவே கர்த்தருக்குப் பயப்படுதல். அதுவே  ஜீவனுக்கேதுவானது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 


அப்படி நாம் வாழும்போது கிறிஸ்து நமக்குள் இருப்பதை உணர்நதுகொள்ள முடியும். "மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 ) ஆம், கிறிஸ்து நமக்குள் இருக்கும்போது நமக்குப் பாவத்தைக்குறித்த பயம் ஏற்படும்; நாம் பாவம் செய்ய முடியாது.  அதுவே கர்த்தருக்கேற்ற பயம். அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. கிறிஸ்து நமக்குள் வர அனுமதிப்போம். நமது இருதயத்தை அவருக்குத் திறந்து அவரை வரவேற்போம். 

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1650                                                                     ஆதவன் 14.08.2025 வியாழன்      
 
"தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?" ( 1 யோவான்  4 : 20 )

பல கிறிஸ்தவ குடும்பங்களில் நாம் காணக்கூடிய ஒரு விஷயம் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்குள் ஒற்றுமை இல்லாமை.  அண்ணன் தம்பிகளுக்குள் பேச்சுவார்த்தை இருக்காது,  உடன்பிறந்த சகோதரிகளைத்  திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள்.  இதற்குக்  காரணம் பெரும்பாலும் பெற்றோர்கள் சேர்த்துவைத்தச்  சொத்துக்களைப் பங்கிடுவதில் வந்த மோதலாகத்தான்  இருக்கும். ஆனால் இவர்கள் ஆலயங்களுக்குக் காணிக்கைகளை  அள்ளி வழங்குவார்கள்.  இவர்களிடம் பக்திக் காரியங்கள் குறைவின்றிக்  காணப்படும்.

ஆனால், இவர்களது இத்தகைய தேவ அன்பு பொய்யானது, போலியானது  என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. "தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்." ( 1 யோவான்  4 : 21 ) என்கின்றார் அப்போஸ்தலரான யோவான். 

இயேசு கிறிஸ்துவும் சகோதர அன்பை வலியுறுத்திக் கூறினார். இதுகுறித்து அவர், "ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து." ( மத்தேயு 5 : 23, 24 ) என்று கூறினார். சகோதரர்களுக்குள் ஒற்றுமையில்லாமலிருக்கும்போது கொடுக்கும் காணிக்கையை தேவன் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் சகோதர சகோதரிகளுக்குள் நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருக்க்கும்போது அதுபற்றிய எந்தக்  குற்ற உணர்வுமின்றி அவர்களால் காணிக்கைகளும் ஆலய ஆராதனைகளும் அதிகம் செய்யப்படுகின்றன. 

குடும்பத்துக்குள் ஒற்றுமையில்லாமல் சகோதர அன்பில்லாமல் இருக்கும்போது ஏன் இப்படி இவர்கள் தேவனுக்கும் ஆலயங்களுக்கும் அள்ளி வழங்குகின்றார்கள் என்று பார்ப்போமானால் தங்களது சுய ஆசைகளை நிறைவேற்றவும் மக்களிடம் பெருமையடையவுமே எனபது புரியும். தேவனுக்கென்று நாம் எதனைச் செய்தாலும் அதனைப் பூரண அன்புடன் செய்யவேண்டியது அவசியம். அன்பில்லாமல் செய்யும் எவையும் அர்த்தமில்லாதவையே.  "எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை." ( 1 கொரிந்தியர் 13 : 3 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

அன்பானவர்களே, நாம் பொய்யான வாழ்க்கை வாழ்வது அர்த்தமில்லாதது. தேவனையும் நம்மைப்போன்ற ஒரு மனிதனாக நாம் எண்ணிவிடக்கூடாது. சகலமும் அவருக்குமுன் வெளியரங்கமாகவும் நிர்வாணமாகவும் இருக்கின்றன. இன்று உலகத்தில் ஒருவேளை நாம் மனிதர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றிடலாம். ஆனால் அதனால் எந்த நன்மையுமில்லை.  நியாயத்தீர்ப்பு நாளில் அவர், "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்" ( மத்தேயு 7 : 23)  என்று நம்மைத் துரத்தினால் அது எத்தகைய பரிதாபகரமானநிலையாக இருமென்று எண்ணிப்பாருங்கள்!!

ஆம் அன்பானவர்களே, சகோதரர்களுக்குள்ளான பகையை தேவன் அதிகம் வெறுக்கின்றார்.  எனவேதான் அப்போஸ்தலரான யோவான், "தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்" என்று கடினமாகக் கூறுகின்றார்.  மட்டுமல்ல, "தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?" என்று கேள்வியும்  எழுப்புகின்றார். நம்மிடம் இத்தகைய தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம். அப்போதுதான் நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்வதில் அர்த்தமிருக்கும். 

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1651                                                                     ஆதவன் 15.08.2025 வெள்ளி      

"ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 )

அனைவருக்கும் சுதந்திரதினவிழா நல்வாழ்த்துக்கள் !!

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவது  என்பது மகிழ்ச்சியானது. நமது நாடு ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்து விடுதலைபெற்ற நாளை நாம் சுதந்திரதின  நாளாகக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் இந்த அடிமைத்தனம் எப்படி நமது நாட்டுக்கு வந்தது என்பதனை நாம் எண்ணிப்பார்க்கவேண்டியது அவசியம். 

இந்தியாவின் அடிமைத்தனம் ஒரே நாளில் திடீரென்று வந்துவிடவில்லை. முதலில் இந்தியாவில் வணிகம் செய்வதற்கு என வந்த ஆங்கிலேயர்கள் தங்களது வலிமையை படிப்படியாக அதிகரித்து இறுதியில் ஆட்சியையேக்  கைப்பற்றி நம்மை அடிமைப்படுத்தினர். இதுபோலவே பாவம் மனிதர்களை அடிமைப்படுத்துகின்றது.  முதலில் சிறிதாக ஆரம்பித்து நம்மைப் படிப்படியாக பாவநிலைகளில் உயர்த்தி இறுதியில் மொத்த ஆத்துமாவையே பாவத்துக்கு அடிமையாக்கிவிடுகின்றது.   இப்படி நாம் பாவத்துக்கு அடிமையாகியுள்ளதால் இயேசு கிறிஸ்து கூறினார், "பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 34 )

ஒரு சிறுகதை படித்த ஞாபகம் உள்ளது. பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் செய்த வியாபாரி இரவு தனது  ஒட்டகத்தை வெளியில் கட்டிவைத்துவிட்டு கூடாரத்துக்குள் உறங்கினான்.  அன்று கடுமையான குளிராக இருந்தது. எனவே ஒட்டகம் வியாபாரியிடம், "வெளியே மிகவும் குளிராக இருக்கிறது, எனது தலையை மட்டும் கூடாரத்துக்கு உள்ளே வைத்துக்கொள்ள அனுமதிப்பாயா?" என்று கேட்டது. வியாபாரி, "சரி, வைத்துக்கொள்" என்றான். சிறிது நேரம் கழித்து ஒட்டகம் மீண்டும், "எனது கழுத்துவரை கூடாரத்துக்குள்ளே வைத்துக்கொள்ள இடம் தருவாயா ?" என்று வியாபாரியிடம் கேட்டது. இளகிய மனம்கொண்ட அந்த வியாபாரி, "சரி வைத்துக்கொள்" என்றான். சற்று நேரத்துக்குப்பின் அவனிடம் எதுவும் கேட்காமலேயே ஒட்டகம் தனது முழு உடலையும் கூடாரத்துக்குள் கொண்டு வந்துவிட்டது. வியாபாரி வெளியே குளிருக்குள் தள்ளப்பட்டான். 

ஆம் அன்பானவர்களே, ஆங்கிலேயர்களைப் போலவும் ஒட்டகத்தைப்போலவும் பாவம் மனிதர்களை அடிமைப்படுத்துகின்றது.  சிறிது இடம்கொடுத்தாலும் பாவம் முழு ஆத்துமாவையும் மேற்கொண்டு நம்மை நரகத்துக்கு நேராகக் கொண்டுசென்றுவிடும். 

இப்படிப் பாவம் நம்மை அடிமைப்படுத்தாமல் இருக்கவேண்டுமானால் நாம் கிறிஸ்துவின் போதனைகளில் நிலைத்திருக்கவேண்டியது அவசியம். அப்போது நாம் அவரது சீடர்களாய் வாழ்வது மட்டுமல்ல, பாவத்திலிருந்து விடுதலையும் பெறுவோம். எனவேதான் "இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்." ( யோவான் 8 : 31, 32 )  

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே சத்தியம். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (யோவான் 14:6) என்று அவர் கூறவில்லையா? ஆம், சத்தியமான அவரை நாம் அறிந்து ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே பாவத்தின் பிடியிலிருந்து விடுதலை பெறமுடியும். எனவே அவரை நமது வாழ்வில் அறிந்துகொள்ளவேண்டும் எனும் ஆர்வமும் அதற்கான செயல்பாடும் நமக்கு அவசியம். அது கடினமான காரியமல்ல. நமது இருதயத்தை அவர் ஆட்சிசெய்யும்படி அவருக்கு ஒப்படைக்கவேண்டியதே நாம் செய்யவேண்டியது. 

"அன்பான இயேசுவே, நான் செய்யும் பாவங்களை உண்மையிலேயே நான் வெறுக்கிறேன், அவற்றை விட்டுவிட முயன்றாலும் என்னால் விடமுடியவில்லை. எனது பாவத்திலிருந்து என்னை விடுவித்தருளும். உமது பரிசுத்த இரத்தத்தால் என்னைக் கழுவி உமது  மகனாக /  மகளாக என்னை ஏற்றுக்கொள்ளும். என்னை முற்றிலும் உமக்குக் கையளிக்கிறேன்" என்று வேண்டுவோம். நமது பாவங்களைத் தனிமையில் அவரிடம் அறிக்கையிடுவோம். அப்போது மெய்யான விடுதலை பெறுவோம். ஆம், குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1652                                                                     ஆதவன் 16.08.2025 சனி       

"கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்." ( சங்கீதம் 25 : 8 )

உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் தேவன் அன்புசெய்கிறார். எனவே, மனிதர்கள் தங்கள் பாவச் செயல்பாடுகளால் தேவனைவிட்டுத் தடம் மாறிச் செல்லும்போது அவர் பல்வேறு விதங்களில் அவர்களோடு இடைப்படுகின்றார். தோல்விகள், பிரச்சனைகள் இவைகள் மனிதர்கள் தங்களை நிதானித்துப் பார்க்கத்  தேவன் கொடுக்கும் சந்தர்ப்பங்கள். சில வேளைகளில் மனிதர்கள் தேவ வழியைவிட்டு விலகும்போது தனது ஊழியர்களைக்கொண்டு சரியான வழியினைக் காட்டுகின்றார். ஆனால் பல மனிதர்கள் தங்கள் பாவ வழிகளைத் திருத்திக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. 

ஆனால், கர்த்தரது குரலுக்குச் செவிகொடுக்கும்போது அதாவது கர்த்தரைக்குறித்த பயம் உள்ளத்தில் ஒருவனுக்கு ஏற்படும்போது அவனுக்குச் சரியான வழியைக் காட்டுகின்றார். இதனையே தாவீது, "கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்." ( சங்கீதம் 25 : 12 ) என்று கூறுகின்றார். 

நமது தேவன் பாவத்தை வெறுக்கிறாரேத் தவிர பாவிகளை நேசிக்கிறார். பாவிகள் அழிந்து நரக அக்கினிக்கு நேராகச் செல்வது தேவனது விருப்பமல்ல. அவர் நல்லவரும் உத்தமருமாய் இருக்கிறபடியால் பல்வேறு வழிகளில் தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அவர்கள் தங்கள் பாவ வழியைவிட்டு மனம்திரும்பி வரவேண்டுமென்று காத்திருக்கின்றார். அப்படி பாவிகள் மனம் திரும்பும்போது மகிழ்ச்சியடைகின்றார். 

இதனையே இயேசு கிறிஸ்து உவமையாகக் கூறினார். "உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18 : 12, 13 )

ஆம், கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறபடியால் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று நீடிய பொறுமையோடிருக்கின்றார். அவரது இரண்டாம் வருகை ஏன் தாமதிக்கின்றது என்பதைக் கூறவரும்போது அப்போஸ்தலரான பேதுரு, "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) என்று கூறுகின்றார். 

"கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்." எனும் வசனம் தாவீது தனது அனுபவத்தில் கண்டது.  பத்சேபாளிடம் விபச்சாரப் பாவத்தில் விழுந்து அதன் தொடர்ச்சியாக கொலை செய்தார். கர்த்தர் நல்லவரும் உத்தமருமாய் இருந்ததால் நாந்தான் தீர்க்கதரிசி மூலம் அவருக்கு வழியைத்  தெரிவித்தார். 

ஆம் அன்பானவர்களே, சிலவேளைகளில் நமது வாழ்க்கையிலும் நாம் வழி தவறலாம்; பாவம் செய்யலாம். ஆனால்  அப்படி வழி தவறும்போது கர்த்தர் பல்வேறு விதங்களில் நம்மை உணர்த்துவார். அந்தச் சத்தத்துக்கு நாம் செவிகொடுக்க வேண்டும். நமது வழிகள் தவறு என்றால் திருத்திக்கொள்ளவேண்டும். அவரது மன்னிப்பை வேண்டி அவரிடம் வரவேண்டும். அப்போது கிறிஸ்து கூறியதுபோல  சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது (பாவமே செய்யாத) ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், மனம்திரும்பிய பாவியான நம்மைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவார். 

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1653                                                                     ஆதவன் 17.08.2025 ஞாயிறு       

"நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்". ( யோபு 1 : 21 )

தேவன் நம்மை ஆவியால் நிறைத்து நடத்தும்போது உலகச் செல்வங்கள் அவ்வளவு பெரிதாக நமக்குத்  தெரியாது. ஒருவேளை நமக்கு மற்றவர்களைப்போலச்  செல்வச் செழிப்பு இல்லாமலிருந்தாலும்  நாம் மனம் சோர்ந்து போகமாட்டோம். இன்று நம்மில் யாரும் யோபுவைப்போன்ற இழப்புக்களைச் சந்தித்திருக்கமாட்டோம்.  ஆனாலும்  இன்றைய தியான வசனத்தைக் கூறும் யோபுவைப்போல நம்மால் கூறுவது மிகவும் கடினமே. கடினம் மட்டுமல்ல, நம்மால் இப்படிக் கூறமுடியுமா என்பதும் கேள்விக்குறியே. தேவன்மேல் நூறுசதம் விசுவாசம் இருந்தால் மட்டுமே ஒருவரால் இப்படிக் கூறமுடியும். 

யோபு சாதாரண செல்வந்தனல்ல, இன்றைய உலகப் பெரும் பணக்காரர்களைப் போன்றவர் அவர்.  "அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்." ( யோபு 1 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது. அந்தக்காலத்தில் இது மிகப்பெரிய செல்வம்தான். 

ஆனால் இத்தனைச் செல்வங்களையும், அவரது அனைத்துப் பிள்ளைகளையும் இழந்து நிற்கதியானபின்பும் அவர் தேவன்மேலுள்ள விசுவாசத்தை இழந்துவிடவில்லை.  "நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்" என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது, தேவனது சித்தத்தின்படி சாத்தான் யோபுவுக்கு இத்தனை இழப்புகளையும் கொடுத்தான். ஆனால் அனைத்தையும் யோபுவிடமிருந்து பறித்துக்கொண்ட சாத்தானால் யோபுவிடமிருந்த தேவனை மட்டும் பறித்துக்கொள்ள முடியவில்லை. காரணம், மகிமையான தேவனை அற்பமான சாத்தானால் நெருங்கமுடியவில்லை. 

இன்று நம்மால் யோபுவைபோல இந்த அளவுக்கு இழப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும்  நமக்குள்ளிருக்கும் மகிமையின் தேவனை யாரும் எளிதில் பறித்துக்கொள்ள முடியாது எனும் உறுதியுடன் நாம் வாழவேண்டியது அவசியம். நமக்குள் கிறிஸ்து வாழ்கின்றார் என்பது ஒரு விசுவாச இரகசியம் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். ஆம்,  "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." ( கொலோசெயர் 1 : 27 ) 

எனவே நாம் முதலில் அழிந்து போகின்ற உலக செல்வங்களைச்  சேர்ப்பதில் காண்பிக்கவேண்டிய ஆர்வத்தை கிறிஸ்துவை ஆதாயப் படுத்திக்கொள்வதில் செலுத்தவேண்டியது அவசியமாய் இருக்கிறது;  அவரை நமக்குள் மகிமையின் நம்பிக்கையாகக் கொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கிறது. அப்படிக் கொள்ளும்போது இந்த உலகத்தில் நமக்கு இழப்புக்கள் வந்தாலும் நாம் விசுவாசத்தை இழக்கமாட்டோம். 

அப்போஸ்தலரான பவுல் எனவேதான், "கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே." ( ரோமர் 8 : 36, 37 ) என்று கூறுகின்றார். "நான் ஜெயம் கொள்ளுகின்றேன்" என்று அவரை மட்டும் கூறாமல் "நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயம் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" என்று நம்மையும் சேர்த்துக் கூறுகின்றார். 

இத்தகைய உறுதியான விசுவாசம் நமக்கும் வேண்டுமென்று ஆவியானவரை வேண்டுவோம். "கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான்" (மத்தேயு 7:8) என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.  

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1654                                                                     ஆதவன் 18.08.2025 திங்கள்        

"பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய்வரும்." ( நீதிமொழிகள் 14 : 6 )

பரிகாசக்காரர்கள் என்பவர்கள் எதற்கெடுத்தாலும்  கோமாளிகள்போல மற்றவர்கள் சொல்வதையும் செய்வதையும்  அற்பமாகக் கூறிக்கொண்டு கேலி பேசுபவர்களைக் குறிக்கின்றது. ஆனால் இந்த உலகத்தில் இத்தகைய பரியாசக்காரர்களைச் சுற்றிலும் அதிக மக்கள் இருப்பார்கள். இவர்கள் அந்தக் கேலியையும் கிண்டல்களையும் இரசிப்பவர்கள். உலகம் இத்தகைய பரியாசக்கர்களை "நகைச்சுவை மன்னர்கள்" என்று கொண்டாடுகின்றது.  ஆனால் தேவன் இத்தகைய குணத்தை விரும்புவதில்லை. தனது மக்கள் இத்தகைய கேலி, பரிகாசம் செய்பவர்களோடு சேர்ந்திருப்பதையும்  அவர் வெறுக்கின்றார். 

இதனை நாம் முதலாவது சங்கீதத்தின் முதல் வசனத்திலேயே வாசிக்கின்றோம், "துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் ..."( சங்கீதம் 1 : 1 ) இருக்கிற மனிதன் பாக்கியவான் என்று. இதன் காரணம் என்னவென்றால் இத்தகைய பரியாசக் குணமுள்ளவர்கள் எதனையும் பரியாசமாகவே எடுத்துக்கொள்வார்கள். இவர்களிடம் ஆழமான அறிவுபூர்வமான தேடுதல் இருக்காது. எனவேதான் இன்றைய தியான வசனம், "பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்" என்று கூறுகின்றது. 

வலைத்தளத்தில் சிலர் ஏன் பரியாசக்காரர்களாக இருக்கிறார்கள் என்று தேடிப்பார்த்தபோது அதற்குச் சில காரணங்கள் கூறப்பட்டுள்ளதை அறிந்தேன்.   முதலாவது, தங்களது தவறை மறைந்திடச் சிலர்  இப்படிச் செய்கின்றனர், அடுத்து, மற்றவர்களை மதிக்காமை, மற்றவர்கள் முன்னேறுவது பிடிக்காமை, வாழ்வில் தாங்கள் எதிர்பார்த்த  வாய்ப்புக்கள்  கிடைக்காமை,  தங்களைப் பற்றிய  சுயமதிப்பு இல்லாமை,  கடுமையான தாழ்வுமனப்பான்மை.  பொதுவாக இத்தகைய மனிதர்களே பரியாசக்காரர்களாக இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. 

எனக்குத் தெரிந்த கிறிஸ்தவ நண்பரொருவர் இருந்தார். அவர் இருக்குமிடத்தில் சிரிப்பும் கூத்துமாக இருக்கும். அவருக்கு தனிப்பட்ட முறையில் இரண்டு மூன்றுமுறை ஆண்டவர் இயேசுவைக்குறித்தும் அவரது மீட்பு அனுபவத்தைக் குறித்தும் எடுத்துக்கூறியுள்ளேன். ஆனால் அவரது கேலிபேசும் குணம் அப்போதும் வெளிப்படும். நான் கூறுவதற்கு கேலியாக, நகைச்சுவையாக ஏதாவது சொல்லிச் சிரிப்பார். ஆனால் எதிர்பாராத வகையில் திடீரென்று நோய் பாதிக்கப்பட்டு அவர் இறந்துபோனார். ஆம், கேலிபேசிக்  கேலிபேசித்  தேவனை அவரால் வாழ்வின் இறுதிவரை அறியமுடியாமலேயே போய்விட்டது. 

மேலும் இன்றைய தியான வசனம் கேலிபேசுபவன் புத்தியில்லாதவன் என்று மறைமுகமாகக் கூறுகின்றது. எனவேதான் தொடர்ந்து கூறுகின்றது, "புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய்வரும்" என்று. அதாவது பரியாசக்காரனான மனிதனுக்கு அறிவு வராது, அப்படி இல்லாமல் புத்தியுள்ளவனாய் இருப்பவனுக்கோ அறிவு வரும். 

அப்போஸ்தலரான பேதுரு இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குறித்து பரிகாசக்காரர்கள் கூறுவதைப் பின்வருமாறு கூறுகின்றார்:-  "முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்." ( 2 பேதுரு 3 : 3, 4 ) பிற இணைத்து மக்கள் மட்டுமல்ல, இன்று பல கிறிஸ்தவர்களுமே இயேசுவின் இரண்டாம் வருகையினை கேலியாக எடுத்துக்கொள்பவர்களாகவே இருக்கின்றனர். 

இத்தகைய மனிதர்கள், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே என்கின்றார் யூதா. "கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே." ( யூதா 1 : 18, 19 )

ஆம் அன்பானவர்களே, பரிகாசக் குணம் நம்மிடம் இருக்குமானால் அதனை மாற்றிட முயலுவோம்;  புத்தியோடு சிந்திப்போம்; மற்றவர்களை மதிப்போம்.  அப்போது மட்டுமே வாழ்வில் தேவனை நாம் அறிய முடியும்.  

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1655                                                                     ஆதவன் 19.08.2025 செவ்வாய்         

"தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்." ( யாக்கோபு 4 : 8 )

மகிமையின் தேவனானவர் அழையா விருந்தாளியாக எவரிடமும் வரும் அற்ப மனிதனல்ல. அவருக்கான மகிமையினை நாம் கொடுக்கும்போது மட்டுமே அவர் நம்மிடம் வருவார். அவருக்கு மகிமையைச் செலுத்துவது என்பது உலகத் தலைவர்களைப் புகழ்வதுபோல புகழ்வதல்ல, மாறாக அவருக்குப் பயந்து அவருக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வது. இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் "உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்" என்று வாசிக்கின்றோம். 

அதாவது பாவக்கறைகள் முற்றிலும் நீங்கிட நாம் சுத்திகரிக்கப்படும்போது மட்டுமே அவர் நமக்குள் வந்து நம்மைச் சேர முடியும். இந்த உலகத்தில் வாழும் நாமே அசுத்தமான இடங்களில் வாழ விரும்புவதில்லை. நமது உறவினர்கள் சிலரது  வீடுகள் சுத்தமற்று, கழிவறைகள் நாம் பயன்படுத்த முடியாதபடி அருவெறுப்பான நிலையில் இருக்கும். ஆனால் அவர்களை நாம் பார்க்கச் செல்லும்போது அவர்கள் நம்மை அங்கு இரண்டுநாள் தங்கிச்செல்ல வற்புறுத்துவார்கள். அவர்கள் அன்பினால் அப்படி நம்மை அழைத்தாலும் அந்த வீடுகளின் சுகாதார நிலைமை நம்மை அங்கு தங்கிட  நமது மனதை அனுமதிக்காது. 

மனிதர்களாகிய நாமே இப்படியென்றால் பரிசுத்தரான தேவன் எப்படி அவலட்சணமான குணங்களுள்ள மனித இருதயத்தில் தங்க வருவார்? ஆம் பல மனிதர்கள் தேவனை அறிந்தும் அவர்களுக்குள் தேவன் வந்து மீட்பினைத் தர முடிவதில்லை. "அவர்கள் தேவனை அறிந்தும்,  அவரை   தேவனென்று  மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது." (ரோமர் 1:21) என்று வாசிக்கின்றோம். 

இங்கு அப்போஸ்தலரான பவுல், "அவர்கள்  அவரை  தேவனென்று  மகிமைப்படுத்தாமலும்" என்று கூறுவது கவனிக்கத்தக்கது. ஆம், நமது வாழ்க்கையால் அவரை நாம் மகிமைப்படுத்தவேண்டியது அவசியம். அவரை மகிமைப்படுத்துவது என்பது வெறும் ஆராதனை செய்வதல்ல, "உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்." என்று கூறியுள்ளபடி நம்மைப் பரிசுத்தமாக்குவது. எனவேதான் நமது பரிசுத்தத்துக்கு அழைப்பு விடுக்கின்றது இன்றைய தியான வசனம். 

நாம் நமது பாவங்களை கிறிஸ்துவிடம்  அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும்போது தூய்மையடைகின்றோம். அவரை அறிந்திட நமது பாவங்களே தடையாக இருக்கின்றன. எனவே, நமது பாவங்கள் அவரால் மன்னிக்கப்படும்போது நாம் கர்த்தரோடு இருப்போம்  அவர் நம்மோடு இருப்பார். வெளி அடையாளங்களான சடங்குகள் நம்மைத் தேவனை அறியவோ அவரிடம் நாம் சென்று சேரவோ உதவாது. 

இப்படி நாம் வெறும் சடங்குகளை ஆசரிக்கும் மனிதர்களாக அல்லாமல் அவரை அறிந்து வாழ்ந்தால் மட்டுமே அவரோடு இருப்போம்; அவரும் நம்மோடு இருப்பார். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு அவரைத் தேடினால் நமக்கு அவர் வெளிப்படுவார்.   "........சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார். (2 நாளாகமம் 15:2) நமது பாவக்கறைப்படிந்த கைகளை சுத்திகரித்து  இருதயத்தைப் பரிசுத்தமாக்கி அவரைத் தேடுவோம். அப்போது அவர் நமக்கு வெளிப்படுவார்.  

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1656                                                                     ஆதவன் 20.08.2025 புதன்          

"சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்." ( சங்கீதம் 7 : 2 )

ஆத்துமாவைப் பிடித்துச் சேதப்படுத்தும் சத்துருவாகிய சாத்தானை வேதம் சிங்கத்துக்கும் பாம்புக்கும்  ஒப்பிட்டுக் கூறுகின்றது. தான் இழந்துபோன பரலோக மகிமையை மனிதர்கள் சுதந்தரித்துக்கொள்ளக்கூடாது என்பதில் சாத்தான் மிகவும் தீவிரமாக இருக்கின்றான்.  அதற்காக அவன் மனிதர்களை பாவத்தில் வீழ்த்தி நரகத்துக்கு நேராக இழுத்துச்செல்ல முயலுகின்றான். 

எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்." ( 1 பேதுரு 5 : 8 ) என்று நம்மை எச்சரிக்கின்றார். 

இதனால்தான் இன்றைய தியான வசனத்தில் சங்கீத ஆசிரியர் தேவனிடம், "சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்." என்று வேண்டுதலாக மன்றாடுகின்றார். தேவனின் வல்லமையால் மட்டுமே நாம் சாத்தானை மேற்கொள்ள முடியும். ஆம்,  "சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய்." ( சங்கீதம் 91 : 13 ) என்று வாக்குத்தத்த வசனம் கூறுகின்றது. 

எனவே நாம் விழிப்பாய் இருக்கவேண்டியது அவசியம். நமது மனித முயற்சியால் சாத்தானை மேற்கொள்ளமுடியாது. ஆவியானவரின் பலம் நமக்குத் தேவை. "வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்." ( ஏசாயா 59 : 19 ) என்று வேத வசனம் கூறுகின்றது. எனவே நாம் ஆவியானவரின் பலத்துக்காக ஜெபிக்கவேண்டியது அவசியம். கிறிஸ்துவின் ஆவியாகிய பரிசுத்த ஆவியானவரே நமக்குப் பாவத்திலிருந்து முழு விடுதலையைத் தந்து வழிநடத்த முடியும். 

பாவ மன்னிப்பை நாம் பெறும்போது ஆவியானவர்மூலம் கிறிஸ்து நமது உள்ளத்தில் வருகின்றார். "மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 ) இப்படி நமது ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாக இருக்குமானால் சாத்தான் நம்மை மேற்கொள்ள முடியாது. "சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்" என ஜெபிக்கும் நாம் விடுவிக்கும் கிறிஸ்து நமக்கு உண்டு என்பதனை மறந்துவிடக்கூடாது.  விடுதலையளிக்கும் அவர் நமக்குள் வரும்படி வாஞ்சிப்போம், அப்போது நமது ஆத்துமா சாத்தானின் வஞ்சகத்துக்குத் தப்புவிக்கப்படும். 

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1657                                                                    ஆதவன் 21.08.2025 வியாழன்           

"அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 : 25 )

அப்போஸ்தலரான பவுல்மேல்  யூதர்கள் குற்றம் சுமத்தி அவர் உரோமையில் விசாரணைக் கைதியாக இருந்தார். அப்போது  அவரிடம் பேலிக்ஸ் ராஜா விசாரணை செய்தான். ராஜாவுக்கு பவுல் அப்போஸ்தலர் கூறிய பதில்களும் மறுமொழிகளும் சுவிசேஷ அறிவிப்புகளாகவே வெளிவந்தன. பவுல் பேசிய பேச்சுக்களைக் கேட்டு பேலிக்ஸ் பயமடைந்தான் என்று இன்றைய தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது. 

உண்மையினை நேருக்குநேர் சந்திக்க பலரும் விரும்புவதில்லை.  பேலிக்ஸ் ராஜாவும் அப்படியே இருந்தான். பவுல், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்தான் என்று வாசிக்கின்றோம். இந்த பயத்துக்குக் காரணம் என்ன? அவனிடம் நீதி, இட்சையடக்கம் போன்ற குணங்கள் இல்லை என்று பொருள். 

பொதுவாக மனிதர்களுக்குத் தங்களது குற்றங்கள் குறைகளையும் பாவங்களையும் பிறர் எடுத்துக்கூறுவது பிடிக்காது. அதிலும் ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுக்கு தங்களைப்  பிறர் குறைகூறுவது ஏற்கவே முடியாதது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே தங்களது வாழ்க்கையினை மாற்றிக்கொள்ள வழியுண்டு. விசாரணைக் கைதியான பவுல் பேசிய பேச்சுக்கள் பேலிக்சை உள்ளத்தில் குத்தியதால் அவன் பயமடைந்தான். ஆனாலும் அவன் மனம் திரும்பவில்லை.  

"ஆதவன்" வேதாகம தியானங்களைச் சில கிறிஸ்தவ ஊழியர்கள் விரும்புவதில்லை. சிலர் ஏதாவது தேவையற்ற விமரிசனங்களைச் சொல்வார்கள். ஆனால் நான் கவனித்த ஒரு விசயம், குறைகூறும் இந்த ஒருசில ஊழியர்கள் வாழ்க்கையில் ஏதாவது குறையுள்ளவர்களாக இருப்பர். உதாரணத்துக்குச் சில:-  தனது மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு தான் நடத்திய கடையில் பணிசெய்த பெண்ணை மனைவிபோல  சேர்த்துவைத்துக்கொண்டு வாழ்பவர்,  நிதி மோசடி வழக்குகளில் சிக்கி நீதிமற்றத்துக்கும் வீட்டுக்குமாக  அலைபவர், ரியல் எஸ்டேட் நடத்துவதாகக் விளம்பரம் செய்து பொய்களைக்கூறி ஒன்றுக்கும் உதவாத நிலத்தை அடுத்தவர் தலையில் கட்டிவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்.....  இவர்களே.

இதுபோன்ற செயல்பாடுகளைக் கொண்டவர்களுக்கு வேத வசனங்கள் கசக்கவேச் செய்யும்.  எப்போதும் ஆசீவாத வசனங்களையே கூறிக்கொண்டிருந்தால் பாராட்டுவார்கள். அப்போஸ்தலரான பவுல் பேசிய வார்த்தைகள் இதுபோலவே பேலிக்ஸ் ராஜாவை அச்சுறுத்தின. எனவே அவன், "நீ போகலாம், எனக்குச் சமயம் கிடைக்கும்போது உன்னை அழைப்பேன்" என்று கூறி அனுப்பிவிட்டான். 

அன்பானவர்களே, தேவன் எல்லோரும் மனம் திரும்பவேண்டுமென்று விரும்புவதால் பொறுமையோடு காத்திருந்து பல்வேறு விதமாகத் தன்னை மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார். அந்தச் சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்தாமல்  பேலிக்ஸ் ராஜாவைப்போல, "எனக்குச் சமயம் கிடைக்கும்போது பேசலாம், நீ போ "  என உதறிவிட்டோமானால் இரட்சிப்பு அனுபவத்தை நாம் பெறமுடியாது.  "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." ( 2 கொரிந்தியர் 6 : 2 )

குறிப்பிட்ட சில வேத வசனங்களைக் கேட்கும்போது நமக்கு எரிச்சலோ, கோபமோ பயமோ வருகின்றது என்றால் நம்மிடம் ஏதோ குறை இருக்கின்றது என்று பொருள். வசனத்தின்மேலோ, அதனைக் கூறுபவர் மேலோ கோபம் கொள்ளாமல் நம்மை ஆராய்ந்துபார்த்து தேவனிடம் மன்னிப்புக் கேட்டு மனம் திரும்புவோம். 


 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1658                                                                    ஆதவன் 22.08.2025 வெள்ளி 

"பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.
( 1 யோவான்  2 : 28 )

இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு இனிமேல் வரும்போது அவரைக்கண்டு பயப்பட்டு வெட்கப்பட்டு நாம் கைவிடப்பட்டவர்களாய்ப்  போய்விடக்கூடாது என இன்றைய தியான வசனத்தில் நமக்கு அறிவுறுத்துகின்றார் அப்போஸ்தலராகிய யோவான். நமது பள்ளிக்கு ஆய்வாளர் (Inspector) வரப்போகின்றார் என்று தெரிந்தால் நாம் எவ்வளவு கவனமாக ஏற்பாடுகளைச் செய்வோம்!!. அப்படி அவர் வரும்போது ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி பயப்படும்போது தெரிந்த கேள்விக்குக்கூட நம்மால் சரியாகப் பதில் கூறமுடியாது. நம்மிடம் ஆய்வாளர்  ஒரு சாதாரண கேள்வியைக் கேட்கும்போது  அதற்குப் பதில்சொல்லத் தெரியாமல் நாம் இருந்தால் எவ்வளவு வெட்கப்படுவோம்!!

நாம் கிறிஸ்து வரும்போது அப்படி பயந்து வெட்கத்துக்குள்ளாகிவிடக்கூடாது; நரகத்தின் மக்களாகிவிடக்கூடாது. நாம் அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமக்குப் பயம் வராது; மாறாக அவரை எதிர்பார்த்திருந்து அவர் எப்போது வருவார் என ஆவல்கொள்ளச்செய்யும்.  

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தின் முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான யோவான், "நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக." ( 1 யோவான்  2 : 27 ) என்கின்றார்.

அதாவது தேவனைச் சார்ந்து பரிசுத்த ஆவியானவரின் துணையையே விசுவாசமாய் ஏற்றுக்கொண்டு அபிஷேகத்தோடு வாழ்வோமானால்,  அனைத்தையும் அவரே நமக்கு உணர்த்திப் போதித்து  நம்மை வழி நடத்துவார். அதன்படி நாம் நிலைத்து வாழவேண்டும். அப்படி நிலைத்திருப்போமானால், அவர் வரும்போது பயப்படமாட்டோம்; வெட்கப்படமாட்டோம்.

அன்பானவர்களே, நாம் அதிகமாக பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்துக்காக ஜெபிக்கவேண்டியது அவசியம். ஏனெனில் சபைப் போதகர்களல்ல, ஆவியானவரே நம்மைச் சத்தியமான பாதையில் நடத்திட முடியும். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி வாழும்போது மட்டுமே நாம் அவர் வெளிப்படும்போது அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாய் இருக்கமுடியும். எனவேதான் ஆவியானவரின் அபிஷேகத்துக்காக நாம் அதிகம் ஜெபிக்கவேண்டியுள்ளது நமது அனைவரின் கடமையாகும்.        


 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1659                                                                    ஆதவன் 23.08.2025 சனி  
     
"கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்து குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார்." ( ஏசாயா 19 : 22 )

ஏற்கெனவே நாம் பல "ஆதவன்" தியானங்களில் பார்த்தபடி, எகிப்து என்பது வேதாகம அடிப்படையில் பாவ அடிமைத்தனத்தைக் குறிக்கின்றது. எகிப்தியர் என்பதும்  எனவே எகிப்து நாட்டைச் சார்ந்தவர்களைக் குறிக்காமல், பாவத்துக்கு அடிமையாகி பாவ வாழ்க்கை வாழ்பவர்களைக் குறிக்கின்றது. இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தபோது மோசே அவர்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து மீட்டு கானானை நோக்கி வழிநடத்தியதுபோல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மைப் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுப்  பரம கானானை நோக்கி வழிநடத்துகின்றார். 

மனம்திரும்பிய வாழ்க்கை வாழாமல் தொடர்ந்து பாவத்துக்கு அடிமையாக எகிப்து வாழ்க்கை வாழ்வோமானால் தேவன் நம்மை வாதையினால் அடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி அவர் அடிக்கும்போது தங்களது பாவ வாழ்க்கையினை உணர்ந்து அவர்கள்  கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள். அப்படி மனம்திரும்பும்போது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார் என்று கூறப்பட்டுள்ளது. இதனையே எரேமியா புத்தகத்திலும் நாம், "கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்." ( எரேமியா 10 : 24 ) என்று வாசிக்கின்றோம். 

எகிப்து வாழ்க்கை வாழும் மக்களை அவர் நேசிப்பதால் அவர்கள் எப்படியாவது மனம்திரும்பவேண்டுமென்று விரும்புகின்றார். அதனால் அவர்களைப் பல்வேறு தண்டனைகளால் தண்டிக்கின்றார். இது எப்படியென்றால் ஒரு தகப்பன் தான் அன்புசெய்யும் மகனைத் தண்டிப்பதுபோல என்று வேதம் குறிப்பிடுகின்றது. "கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்." ( எபிரெயர் 12 : 6 )

அன்பானவர்களே, நாம் இப்படித் தண்டிக்கப்படும்போது அது நமக்கு மனதுக்குத் துக்கமாக இருக்கும். ஆனால் அப்படி நாம் தண்டிக்கப்பட்டுத் தேவனது அன்பினை உணர்ந்துகொள்ளும்போது அது நமக்கு மிகப்பெரிய சமாதானத்தைத் தரும். ஆம், "எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்." ( எபிரெயர் 12 : 11 )

எனவே அன்பானவர்களே, நாம் தொடர்ந்து துன்பங்களை எதிர்கொள்வோமானால் நம்மை நாமே நிதானித்துப்பார்த்து நமது தவறான பாவ வழிகளை விட்டு தேவனிடத்தில் திரும்பவேண்டியது அவசியம். துன்பங்கள் தேவன் இன்னும் நம்மை அன்பு செய்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கின்றது. எனவே, எகிப்து வாழ்வு வாழ்வோமானால் அந்த வாழ்வைவிட்டு வெளிவர முயற்சியெடுப்போம். நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும் அனுபவத்தை வேண்டுவோம். 

கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடிப்பதும், அப்படி அடித்து அவர்களைக் குணமாக்குவதும் வேதம் கூறும் ஆவிக்குரிய காரியங்களாகும். எனவே, "கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்." ( ஓசியா 6 : 1 )

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1660                                                                    ஆதவன் 24.08.2025 ஞாயிறு  

"நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான்....." ( லுூக்கா 7 : 8 )

நூற்றுக்கு அதிபதி ஒருவன் கூறிய வார்த்தைகளே இன்றைய தியான வசனமாக அமைந்துள்ளது. அந்த அதிபதியின் வேலைக்காரன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தான். அந்த நூற்றுக்கு அதிபதி  இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான். அவர்கள் வந்து அதனைக் கூறியபோது இயேசு அவர்களுடன் அந்த நூற்றுக்கு அதிபதி வீட்டிற்குச் சென்றார். 

இயேசு தனது வீட்டிற்கு வருகின்றார் என்று கேள்விப்பட்ட அவன், தன் சிநேகிதரை நோக்கி: "நீங்கள் அவரிடத்தில் போய் நீர் எனது வீட்டிற்கு வர தான் தகுதியற்றவன்"  என்று கூறச் சொன்னதுமன்றி அவர் வீணாக அலைந்து சிரமப்படவேண்டாம், அவர் ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும் எனது வேலைக்காரன் குணமாவான் என்று தனது விசுவாசத்தை அறிக்கையிடுகின்றான். மேலும், "நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான்....." என்று கூறுகின்றான். 

ஆம், இந்த நூற்றுக்கு அதிபதி நமக்கு ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கின்றான். நூற்றுக்கு அதிபதி என்றால் நூறுபேர்கொண்ட படைப்பிரிவு வீரர்களுக்குத் தலைவன் என்று பொருள். இந்நாட்களில் காவல்துறையினர் செய்துவரும் பணிகளையும் அந்தக்காலத்தில் படைவீர்கள்தான் செய்துவந்தனர். இப்படிப் படைகளுக்குத் தலைவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் இரக்கமற்றவர்களாகவே இருப்பர். ஆனால் இந்தத் தலைவன் தனது வேலைகாரனது நோயினை தனது பிள்ளையின் நோய்போலவே  எண்ணி இயேசு கிறிஸ்துவிடம் நோயினைக் குணப்படுத்த வேண்டும் இரக்க குணமுள்ளவனாக இருக்கின்றான்.   

படைத்தலைவனுக்குக் கீழ்ப்  பணிபுரிபவர்கள் அவன் இடும் கட்டளைகளுக்குக் கீழ்படியவேண்டியது அவசியம். இதனையே அவன், "நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான்" என்று கூறுகின்றான். அற்ப அதிகாரம்கொண்ட மனிதனாகிய நான் சொல்வதையே எனது கீழ் பணிசெய்பவர்கள் கேட்கின்றார்கள், அப்படியென்றால் இந்த உலகையே படைத்து ஆளும் உமது  வார்த்தைக்கு எத்தனை பெரிய வல்லமை இருக்கும்!!! எனவே, "நீர் வீணாக அலையவேண்டாம், இருக்குமிடத்திலிருந்தே  ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும், எனது வேலைக்காரன் குணமாவான்" என்கின்றான் அவன்.  எத்தனை பெரிய விசுவாசம்!

"இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( லுூக்கா 7 : 9 )

ஆம் அன்பானவர்களே, பெரிய பதவியில் இருந்தாலும் தனது வேலைக்காரர்களை மனித மாண்போடு நடத்தியது, வேலைக்கார்களது துன்பத்தைத் தனது துன்பமாகப் பார்த்தது, இயேசு கிறிஸ்துவின் வல்லமையை முழுமையாக உணர்ந்துகொண்டது, தான் தனது வீட்டிற்குள் இயேசு கிறிஸ்துவை வரவழைக்கத் தகுதியில்லாதவன் என்று தன்னைத் தாழ்த்தியது...இவையே இந்த நூற்றுக்கு அதிபதி நமக்குத் தரும் பாடம். இத்தகைய குணங்கள் நமக்கு இருக்குமானால் அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டதுபோல இயேசு நம்மைக்குறித்தும் ஆச்சரியப்படுவார்; நமது வாழ்வில் அற்புதங்களையும் செய்வார். 

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1661                                                                    ஆதவன் 25.08.2025 திங்கள்   

"இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 13 : 24 )

சில முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது நிகழ்ச்சி அரங்கத்துக்குள் மிக முக்கியமான நபர்கள் (VIPs) நுழைந்திட தனி வாசல் வைத்திருப்பார்கள். அந்த வாசல் மற்ற பொதுமக்கள் நுழையும் வாசலைவிடக் குறுகியதாக இருக்கும். அந்த வாயில்வழியே அங்கீகரிக்கப்பட்ட முக்கியமான நபர்கள் மட்டுமே நுழையமுடியும். 

பரலோக வாசலும் இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கான குறுகிய வழியாகவே இருக்கின்றது. அந்த இடுக்கமான  வழி நித்தியஜீவனுக்கும் அகன்ற வழி நித்திய அழிவின் கேட்டிற்கும் கொண்டுசெல்வதாக இருக்கின்றது. இன்றைய தியான வசனம் மத்தேயு நற்செய்தியில் சற்று விரிவாக, "இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப்போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்." ( மத்தேயு 7 : 13, 14 ) என்று உள்ளது கவனிக்கத்தக்கது. 

இந்த அகன்ற மற்றும் குறுகிய இரு வழிகளும் நமது உலக வாழ்க்கையிலேயே ஆரம்பமாகிவிடுகின்றன. நாம் இந்த உலகத்தில் செல்வச்  செழிப்பையும், பகட்டையும் விரும்பி,  துன்மார்க்க சிற்றின்ப செயல்பாடுகளிலும் ஈடுபட்டு இந்த உலக இன்பமே மேலானது என எண்ணிப் பாவ வாழ்க்கையிலேயே  வாழ்வோமானால் நாம் விரிந்த வாசலில் நுழைந்திட விரைந்துகொண்டிருக்கின்றோம் என்று பொருள். மாறாக,  தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து அவரோடு ஐக்கியம் கொண்டவர்களாக,  உலக செல்வத்தைவிட தேவன்மேல் பற்றுதல்கொண்டவர்களாக, பாவகாரியங்களை வெறுத்து வாழ்வோமானால் குறுகிய வாசலை நோக்கிச் செல்கின்றோம் என்று பொருள்.  

இன்றைய தியான வசனத்தில், இடுக்கமான வாசல்வழியே  உட்பிரவேசிக்க அநேகர் வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஏன்? அன்பானவர்களே, ஒரு சிறிய மனிதன் நுழையக்கூடிய அளவேயுள்ள வாசல் வழியே ஒரு பெரிய யானை நுழைய முடியாதல்லவா? இதுபோலவே, உலகச் செல்வத்தில் திளைத்துப்  பாவ வாழ்க்கையில் கொழுத்த பாவ மனிதனால் அந்த இடுக்கமான வாசல் வழியே நுழைய முடியாது. அதாவது, ஒருவனது பாவ வாழ்வே அவன் அந்த வாசலில் நுழைவதற்குத் தடையாக அமைந்துவிடுகின்றது. இது மனிதன் அவனாகத் தனக்கு  ஏற்படுத்திக்கொண்ட கேடு. 

இதற்கு மாறாக, உடற்பயிற்சி செய்வதுபோல தனது ஆவிக்குரிய ஓட்டத்தை நல்லமுறையில் ஓடி, உணவுக் கட்டுப்பாடு செய்வதுபோல தனது உடலையும் மனத்தையும் ஒடுக்கி பாவத்துக்கு விலக்கி வாழும் மனிதன் எளிதாக அந்த இடுக்கமான வாசல்வழியே நுழைந்துவிடுவான். ஆம் அன்பானவர்களே, தன்னை ஒடுக்கி நூலாக மாற்றிக்கொள்பவன் ஊசி அளவு வாயிலுக்குள்ளும் எளிதில் நுழைந்து நித்திய ஜீவனுக்குள் சென்றுவிடுவான். 

இந்தச் சிந்தனை இருந்ததால்தான் அப்போஸ்தலரான பவுல், "ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்." ( 1 கொரிந்தியர் 9 : 26, 27 ) என்கின்றார். ஆம், இடுக்கமான வாயில்வழியே நுழைய முடியாமல் கொழுத்தவர்களாக மாறி  ஆகாதவர்களாக நாம் போகாதபடிக்கு ஆவிக்குரிய நமது வாழ்வை தேவனுக்கு ஏற்றதாக, மெலிவானதாக மாற்றுவோம். அதற்கான ஆத்தும சரீர முயற்சிகளில் ஈடுபடுவோம். 

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1662                                                                   ஆதவன் 26.08.2025 செவ்வாய்   

"என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்." ( சங்கீதம் 18 : 1 )

தனது அனைத்து எதிரிகளிடமுமிருந்தும்  கர்த்தர் தன்னை விடுவித்தபோது தாவீது மகிழ்ச்சியுடன் பாடும் வார்த்தைகளே இன்றைய தியான சங்கீத வசனம்.  இந்த வசனத்தில் தாவீது கர்த்தாவே உம்மில் அன்புகூருவேன் என்று கூறுகின்றார். கர்த்தர்மேல் அன்புகூருவது என்பது வெறுமனே வார்த்தைகளால் கூறுவதல்ல, மாறாக அவர்மேலுள்ள அன்பினால் கர்த்தர் வெறுக்கும் காரியங்களை நாமும் வெறுப்பது. 

தாவீது இப்படி கர்த்தர்மேல் அன்புகூர்ந்ததால் அவர் அவரை எல்லாத் துன்பங்களுக்கும் விடுதலையாக்கினார். எனவே அவர், "கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்." ( சங்கீதம் 18 : 2 ) என்று அனுபவித்துக் கூறுகின்றார் அவர். 

மேலும், "வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்." ( சங்கீதம் 18 : 34 ) என்று இந்த சங்கீதத்தில் நாம் வாசிக்கின்றோம். வெண்கலம் மிகவும் உறுதியான உலோகம். கர்த்தரிடம் அன்புகூந்ததால் அத்தகைய வெண்கலத்தினால் செய்யப்பட்ட வில்லையே கைகளால் வளைக்கும்படியான பலத்தைக் கர்த்தர் எனது கைகளுக்குத் தந்தார் என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, எத்தகைய எதிரான சக்தியாக இருந்தாலும்; நம்மை மூழ்கடிப்பதுபோன்ற பிரச்சனைகளாக இருந்தாலும் நாம் கர்த்தரிடம் மெய்யான அன்புகொண்டு வாழ்வோமானால் அவற்றை மேற்கொள்ள வெண்கலத்தைக் கையால் வளைப்பதுபோன்ற அசுர பலத்தைக் கர்த்தர் நமக்குத் தருவார். 

அப்போஸ்தலரான பவுல் கர்த்தரிடம் மிகவும் அன்புகூர்ந்தார். தனது உயிரையும் கர்த்தருக்காகக் கொடுக்கவும் அவர் தயாராக இருந்தார். எனவே, கர்த்தர் அவரை மிகவும் பலப்படுத்திப் பயன்படுத்தினார். எனவேதான் அவர்,  "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." ( பிலிப்பியர் 4 : 13 ) என்று துணிவுடன் கூறுகின்றார். குறிப்பிட்டக் காரியங்களை மட்டுமல்ல, எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு என்று அவர் கூறுகின்றார். 

நமது பாவங்கள் மன்னிக்கப்படும்போது மட்டுமே நாம் தேவனிடம் அதிக அனுப்புகூரமுடியும். "ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் ." ( லுூக்கா 7 : 47 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? எனவே அன்பானவர்களே, முதலில் நாம் நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். அப்போது மட்டுமே  நம்மால் அவரை அதிகம் அன்புகூரமுடியும். அப்படி மெய்யான அன்புகூரும்போது வெண்கல வில்லும் நமது புயங்களால் வளையும்படி, நமது கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிப்பார். 

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1663                                                                   ஆதவன் 27.08.2025 புதன்   

"வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்" ( யோவான் 6 : 58 )

இஸ்ரவேல் மக்களை மோசே கானானை நோக்கி வழிநடத்தியபோது அந்தப்பயணம் வானாந்தர வழியாக இருந்ததால் இஸ்ரவேல் மக்கள் மோசேயைநோக்கி முறுமுறுக்கத் துவங்கினர். எகிப்தில் நாங்கள் நன்றாகச் சாப்பிட்டுத் திருப்தியாக இருந்தோம், இந்த வனாந்தரத்தில் எங்களுக்கு அப்பமுமில்லை இறைச்சியுமில்லை என்று அவர்கள் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர். மோசே அதனை தேவனுக்குத் தெரிவித்தார். 

அப்போது தேவன் இறைச்சிக்காக காடைகளை அற்புதமாக அவர்களுக்கு அளித்தார்; அப்பத்துக்காக மன்னாவையும் வானத்திலிருந்து பொழியச் செய்தார்.  "இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள்." ( யாத்திராகமம் 16 : 35 ) என்று கூறப்பட்டுள்ளது. 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பரம கானானை நோக்கிய நமது பயணத்தில் இதுபோல தனது உடலாகிய அப்பத்தை நமக்குக் கொடுத்துள்ளார். மன்னாவை உண்ட இஸ்ரவேலர் மரித்துப்போனார்கள். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உண்பவர்கள் - அதாவது அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்கள் நித்திய ஜீவன் எனும் முடிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள். இதனையே இயேசு கிறிஸ்து, "வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்" என்று கூறுகின்றார். 

தேவன் கொடுத்த மன்னாவைக்குறித்து மோசேக்கு தேவன் ஒரு நிபந்தனை கொடுத்திருந்தார். அதாவது அந்தந்த நாளுக்குரிய மன்னாவை மட்டும் சேகரிக்கவேண்டும், அதில்  ஒன்றையும் மறுநாளுக்கென்று சேமித்து வைக்கக்கூடாது.  இதனை நாம், "மோசே அவர்களை நோக்கி: ஒருவனும் விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்; மோசேயின் சொல் கேளாமல், சிலர் அதில் விடியற்காலம்மட்டும் கொஞ்சம் மீதியாய் வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்." ( யாத்திராகமம் 16 : 19, 20 ) என்று  வாசிக்கின்றோம். 

இதுபோலவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை விசுவாசிப்பதோடுகூட தனது உடலையும் இரத்தத்தையும் நாம் உட்கொள்ள நற்கருணையை அளித்துள்ளார். மோசேக்கு தேவன் கூறியதுபோல நற்கருணை உட்கொள்ளவும்  நிபந்தனை உண்டு. அதாவது, கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் நாம் உட்கொள்ளவேண்டுமானால் நாம் பாவங்கள் கழுவப்பட்ட நிச்சயமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். ஆம், "இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்." ( 1 கொரிந்தியர் 11 : 27 )

ஆம் அன்பானவர்களே, நாம் பிழைப்பதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனும் வானக அப்பத்தை பிதாவாகிய தேவன் அளித்திருந்தாலும் அவர் நமக்கு உலகத்தில் அடையாளமாக அளித்துள்ள அப்பத்தை (நற்கருணையை) நாம் தகுதியுடன் உட்கொள்ளவேண்டியது அவசியம். முதலில் அவரை ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பை பெற்றவர்களாக நாம் மாறவேண்டும். இல்லையானால் மன்னாவை உட்கொண்ட இஸ்ரவேலர்  அழிந்துபோனதுபோல நாமும் நித்தியஜீவனை இழந்துவிடுவோம். மட்டுமல்ல, தகுதியில்லாமல் நற்கருணை உட்கொள்வது நமக்குக்  கேட்டையே உண்டாக்கும். எனவேதான், "இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்." ( 1 கொரிந்தியர் 11 : 30 ) என்கின்றார் அப்போஸ்தலராகிய பவுல்.

முதலில் கிறிஸ்து இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு அவரை ஆத்துமாவில் உட்கொள்ளவேண்டும்; அதன்பின் அதனை நற்கருணை உட்கொள்வதன்மூலம் விசுவாசத்தை உறுதிப்படுத்தவேண்டும். மன்னாவை இஸ்ரவேலர் உட்கொண்டதுபோல அல்லாமல் கிறிஸ்துவின் மன்னிப்பை பெற்று வாழ்க்கைமாற்றத்துடன்  நற்கருணையை உட்கொள்வோம். நமது ஆத்துமாவிலும் உடலிலும் கிறிஸ்துவே நிரம்பியிருக்கட்டும். 

 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1664                                                                   ஆதவன் 28.08.2025 வியாழன்    
  
"இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்." ( ஏசாயா 38 : 17 )

பிளவை நோயால் அவதியுற்று மரணப் படுக்கையில் இருந்த எசேக்கியா ராஜா  தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்தவர்தான்; தேவனுக்கென்று வைராக்கியமாகச் சில செயல்பாடுகளை மேற்கொண்டவர்தான். ஆனால் பிளவைநோய் முற்றி இனி அவர் பிழைக்கமாட்டார் எனும் நிலை ஏற்பட்டது.  ஏசாயா தீர்க்கதரிசிமூலம் இந்தச் செய்தி தீர்க்கதரிசனமாக அவருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது எசேக்கியா தனது முகத்தைத் தான் படுத்திருந்த கட்டிலின் அருகிலிருந்த சுவர்ப்புறமாகத் திருப்பி தேவனிடம் விண்ணப்பம் செய்து அழுதார்.  

"ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்." ( 2 இராஜாக்கள் 20 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது. தேவன் எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்டு அவருக்குச் சுகம் கொடுத்தார். அப்போது எசேக்கியா மனமகிழ்ச்சியுடன் கூறுகின்ற வார்த்தைகளே இன்றைய தியான வசனம். 

இன்றைய தியான வசனத்தில், "நான் தேவனுக்கென்று பல நல்ல செயல்பாடுகளைச் செய்தேன். அதனால் எனக்குச் சமாதானம் கிடைக்குமென்று எண்ணினேன் ஆனால் சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது". என்கின்றார் அவர்.  ஆம், உயிர் போகத்தக்க மிகப்பெரிய கசப்பான நிலைமை அவருக்கு வந்திருந்தது. ஆனால், "தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்" என்று அவர் தொடர்ந்து கூறுகின்றார். மட்டுமல்ல, "என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்" என்று தனது பாவங்கள் மன்னிக்கப்பட்ட உறுதியினையும் பெற்றுக்கொண்டதாகக் கூறுகின்றார். 

இன்றைய தியான வசனத்தின்மூலம் நாம் உணர்ந்துகொள்ளும் உண்மைகள் பல. அதாவது, தேவனுக்கு ஏற்ற வாழ்வினை நாம் வாழ்வதால் நமது வாழ்வில் எப்போதும் நோய்நொடியில்லாத சாமாதானம் நிலவும் என்று எண்ணிக்கொள்ள முடியாது. அவை மனித வாழ்வில் இயற்கை.  ஆனால், தேவன் அந்தக் கசப்பான சூழ்நிலைகளை மாற்றி நம்மை வாழவைப்பார். அந்த விசுவாசத்தோடு நாம் வாழ்வைத் தொடரவேண்டியது அவசியம். 

இரெண்டாவது, எந்தச் சூழ்நிலையிலும் நமது ஜெப வாழ்வை விட்டுவிடக்கூடாது. எசேக்கியா ராஜா ஜெபித்ததுபோல கண்ணீரோடு உள்ளத்தின் ஆழத்திலிருந்த்து ஜெபிக்கும் ஜெபத்துக்குத் தேவன் பதிலளிப்பவராக இருக்கின்றார். 

மூன்றாவது, எசேக்கியா தேவனுக்கென்று வைராக்கியமாகச்  சில செயல்பாடுகளை ஏற்கெனவேச்  செய்திருந்தார். "அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்." ( 2 இராஜாக்கள் 18 : 3, 4 ) என்று கூறப்பட்டுள்ளது. இப்படி நாமும் தேவனுக்கென்று உறுதியாகச் செயல்படுபவர்களாக  இருக்கவேண்டியது அவசியம். 

இப்படி இருந்ததால், "தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்."  என்று கூறுகின்றார் எசேக்கியா. ஆம் அன்பானவர்களே, எசேக்கியாவைப்போல, தேவன்மேல் உறுதியான விசுவாசம், தேவனுக்கென்று வைராக்கியமான செயல்பாடுகள், சூழ்நிலைகளைக் கண்டு கலங்கிடாமல் விசுவாசத்தோடு ஜெபிக்கும் குணம் உள்ளவர்களாக வாழ்வோமானால் தேவன் நமது வாழ்வின் கசப்புகளை மாற்றி நம்மை மகிழச்செய்வார். பாவ மன்னிப்பின் சந்தோஷத்தை நாம் அனுபவித்து மகிழக்  கிருபையாய் உதவிடுவார். 

 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1665                                                                   ஆதவன் 29.08.2025 வெள்ளி 

"நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே". ( ரோமர் 6 : 6, 7 )

இன்றைய தியான வசனத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள ஒரு கற்பனை செய்து பார்ப்போம்.  கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதுபோல நமது கைகளையும் கால்களையும் ஒரு சிலுவையில் அசைக்கமுடியாதபடி கட்டிவைத்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் நம்மால் எதுவும் செய்யமுடியாது அல்லவா?  நாம் உயிருடன்தான் இருப்போம் ஆனால் நமது உடல் உறுப்புகள் அசைக்கமுடியாதபடி கட்டப்பட்டுள்ளதால் நம்மால் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருப்போம்.  குறிப்பாக, நம்மால் பாவமும் செய்யமுடியாது. 

இதனையே அப்போஸ்தலரான பவுல், "பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்" என்று கூறுகின்றார். அதாவது,  நமது பழைய மனித இயல்புகள் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதுபோல அறையப்பட்டு, கிறிஸ்துவுக்குள் புதிய மனிதனாக நாம் மாறுகின்றோம் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

மேலும், கிறிஸ்துவோடு இப்படி வாழ்வதை இறப்பதற்கும் அவர் ஒப்பிடுகின்றார். இறந்துபோன மனிதனாலும் பாவம் செய்யமுடியாது. எனவேதான்,  "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே" என்கின்றார். ஆம், கிறிஸ்துவுக்குள் புதிய மனிதனானவன் கிறிஸ்துவைப்போல சிலுவையில் அறையப்பட்டவனாகவும், இறந்துபோனவனாகவும் இருக்கின்றான். அவனால் பாவம் செய்ய முடியாது. இப்படி நாம் இருப்போமானால் கிறிஸ்து பிழைத்திருப்பதுபோல பிழைத்தும் இருப்போம். எனவேதான், "ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்." ( ரோமர் 6 : 8 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

இது நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக் கூறிய சத்தியம்தான்; அதனையே அப்போஸ்தலரான பவுல் வேறு வார்த்தைகளில் கூறியுள்ளார்.  "தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்." (லூக்கா 9:24) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா? நமது உயிரை இரட்சித்துக்கொள்ள வேண்டுமானால் அவர் நிமித்தம் நாம் இறக்கவேண்டியது அவசியம்.  அப்படி இறந்தோமானால் அவர் கூறியுள்ளபடி அதை இரட்சித்துக் கொள்ளுவோம். 

எனவே நாம் தொடர்ந்து இன்னும் பாவத்துக்கு அடிமைகளாக ஊழியஞ்செய்யாதபடிக்கு, நமது பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனிதனை  அவரோடேகூடச் சிலுவையில் அறைந்துவிட்டு புதிய மனிதனாக வாழ முயலுவோம். இப்படிப் பாவத்துக்கு மரித்து நீதிக்குப் பிழைக்கும் மறுபடி பிறக்கும் அனுபவமே நாம் பரலோகராஜ்யத்தில் நுழைந்திட ஒரு முக்கியமான நிபந்தனை. இதனையே நிக்கொதேமுவிடம் இயேசு கூறினார், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" ( யோவான் 3 : 3 )

இந்த மறுபடி பிறக்கும் அனுபவத்தை பெற்றிட முயலுவோம். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு  கிறிஸ்துவின் இரத்தத்தால் அவை அனைத்தும் கழுவப்பட வேண்டுதல் செய்வோம்.  நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்படட்டும். 

"கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்." ( கலாத்தியர் 2 : 20 )
 
 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1666                                                                  ஆதவன் 30.08.2025 சனி  

"உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 35 )

இந்த உலகம் ஏழ்மையானவர்களையும், அற்பமாக எண்ணப்படுபவர்களையும்  மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களையும் அவர்களது சொல்லையும் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை. "இவன்தானே / இவள் தானே" எனும் ஏளனப்  பார்வையே இதற்குக் காரணம். இது தற்போதுள்ள நிலைமையல்ல, காலாகாலமாக இதுதான் இந்த உலகத்தின் நிலை. 

மோசேயையும் எபிரெயர்கள் அன்று அப்படிதான் எண்ணிக்கொண்டனர். எனவே சண்டையிட்டுக்கொண்டிருந்த இரண்டு எபிரேயர்களை மோசே கண்டு அநியாயம் செய்தவனை நோக்கி, "நீ உன் தோழனை அடிக்கிறது என்ன? " என்று கேட்டபோது அவன் மோசேயைப்பார்த்து, "உன்னை எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்?" என்று கேட்டான்.  (யாத்திராகமம் 2:13,14). ஆனால் தேவன் மோசேயை அப்படியே விட்டுவிடவில்லை. அந்த மோசேயையே அவர்களுக்குத் தலைவனாகவும் மீட்பனாகவும் ஏற்படுத்தினார். 

இன்று நமது ஊரில் அல்லது நாம் பணிசெய்யும் இடங்களில் நம்மையும் சிலர் இப்படி, "இவன் தானே / இவள்தானே" என  எண்ணலாம். அல்லது மோசேயிடம் கூறியதுபோல நேரடியாகவே நம்மைப்பார்த்துக், "நீ என பெரிய யோக்கியனா?" என ஏளனமாகப் பேசலாம். காரணம், நாம் கூறும் நியாயங்கள் அநீதி செய்பவர்களுக்கு ஏற்புடையவை ஆகாது. 

ஆனால் தேவன் நமது ஒவ்வொரு செயலையும் பார்த்துக்கொண்டிருக்கின்றார். நாம் படுகின்ற அவமானம், புறக்கணிப்பு  இவைகளை அவர் அறிவார். நாம் தேவனோடு நெருங்கிய தொடர்புகொண்டு அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது தேவன் நிச்சயமாக நம்மைப் புறக்கணித்த மக்கள் மத்தியில் நம்மை தலை நிமிரச்செய்வார். 

புறக்கணிக்கப்பட்ட இந்த மோசேதான் அடிமைப்பட்டிருந்த மக்களை  பிற்காலத்தில் விடுவித்து எகிப்தைவிட்டு கானானை நோக்கி வழி நடத்தினார்.  இதுபோல நாம் வாழும் சமூகத்தில் தேவன் நம்மை பிற்காலத்தில் உயர்த்திவைக்க நமது சிறுமைப்படுதல் அவசியமாயிருக்கின்றது. மனிதர்களைத் தேவன் பயன்படுத்துமுன் தனக்கு ஏற்புடையவர்கள் ஆக்கும்படி பல்வேறு துன்பங்களால் புடமிடுகின்றார். எனவே துன்புறும் மனிதர்களைப்பார்த்து நாம் அற்பமாக எண்ணிவிடக்கூடாது. தேவன் அவர்கள் பக்கம் இருந்து செயல்பட்டுக்கொண்டிருக்கலாம். அது நமக்குத் தெரியாது. 

மோசேயைத் தேவன் உடனேயே உயர்த்திவிடவில்லை. மோசேயைப்பற்றி கூறப்பட்டுள்ள மேற்படி சம்பவம் நடைபெற்று நாற்பது ஆண்டுகளுக்குப்பின்னர்தான் தேவன் மோசேக்குத் தரிசனமாகி அவரை மக்களுக்குத் தலைவனாக ஏற்படுத்தினார். 

அன்பானவர்களே, நமது ஊரிலோ பணிசெய்யும் இடங்களிலோ நியாயமாகச் செயல்படும் அற்பமானவர்களை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். ஆம்,  ஒருவேளை தேவன் அத்தகைய மனிதர்களோடு இருந்து செயல்பட்டுக்கொண்டிருப்பார்.  அற்பமாக, அவலட்சணமாகக் காணப்படும் புழுதான் பின்னர் அழகிய வண்ணங்களோடு சிறகடித்து வானில் பறக்கின்றது.


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1667                                                                  ஆதவன் 31.08.2025 ஞாயிறு   

"பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை" ( தானியேல் 4 : 35 )  

பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் கூறிய வார்த்தைகளே இன்றைய தியான வசனமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 

நமது படிப்பும் திறமைகளும் நமக்கு நல்ல பொருள் சம்பாதிக்கும் வாய்ப்பினைத் தந்திருக்கலாம். ஆனால், அந்த நிலையில் நாம் தேவனை இரண்டாவது இடத்துக்குத் தள்ளி எனது சுயத் திறமையால்தான் இவைகளைச் சம்பாதித்தேன் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளுதல் தேவனுக்கு ஏற்புடைய செயலல்ல. 

இதுபோல, பொருளாதாரத்தில் நமது தாழ்ந்த நிலையும் சில நேரங்களில் நமக்கு வரும்  துன்பங்களும் வீழ்ச்சிகளும் நம்மை நாம் உணர்ந்து திருத்திக் கொள்வதற்காகவும்      இருக்கலாம்.  தேவன் சில வேளைகளில் அப்படி நாம் திருந்திட சில தாழ்நிலைமையை நமக்கு ஏற்படுத்துவார். அந்தத் தாழ்த்தப்பட்டத் தருணங்களை நாம் நமது மன மாற்றத்துக்குத் தேவன் தரும்  வாய்ப்பாக எண்ணிப்  பயன்படுத்தி நம்மைத் திருத்திக்கொள்ளவேண்டும்.  

பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ஒரு பெருமை எண்ணம் மனதில் இருந்தது. அவன் உண்டாக்கிய அரண்மனை, மாட மாளிகை இவைகளைப்பார்க்கும்போது அவனுக்குள் தனது வல்லமையினை எண்ணி பெருமை ஏற்பட்டது.  "இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்." ( தானியேல் 4 : 30 ) அவன் இந்த வார்த்தைகளைக் கூறவும் வானத்திலிருந்து தேவ சப்தம் உண்டாகி:- 

"மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று கூறியது." ( தானியேல் 4 : 32 )

அப்படியே அவன் குறிப்பிட்ட காலம்வரை மாட்டைப்போலப்  புல்லைத் தின்றுகொண்டிருந்தான். அந்தத் தேவ சப்தம் கூறிய காலம் நிறைவுற்றபோது நேபுகாத்நேச்சாருக்கு புத்தி வந்தது. அதன்பின் அவன் இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகளைக் கூறுகின்றான். என் கையின் பலத்தால் நான் கட்டி எழுப்பிய மகா பாபிலோன் அல்லவா? என்று பெருமையாகப் பேசியவன் இப்போது, "அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை" என்கின்றான்.  

அன்பானவர்களே இந்தத் தாழ்மை எப்போதும் நமக்கு இருக்கவேண்டும். நம்மால் செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை. அவர் நினைத்தால் நாம் எவ்வளவு மேலான நிலையில் இருந்தாலும் ஒரு நொடியில் கீழே தாழ்த்த முடியும். அதுபோல கீழ்நிலையில் இருக்கும் நம்மை ஒரு நொடிப்பொழுதில் உயர்த்தவும் முடியும். அவருக்கு அடங்கி அவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழவேண்டியது அவசியம்.  

உபாகமத்தில் இதுபற்றி தேவன் மோசேமூலம் கூறுகின்றார், " என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்." ( உபாகமம் 8 : 17, 18 )

நமது படிப்பு, குடும்ப பாராம்பரியம், நமது திறமை, சுய பலம், போன்ற  வீண் பெருமைகளை  விட்டு, தேவ பலத்தை நம்பி வாழவேண்டியது அவசியம். "தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்." ( லுூக்கா 1 : 51,52 ) என்கின்றது தேவ வசனம்.

No comments: