Thursday, June 06, 2024

பிதாவின் ஆவியானவர்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,224                          💚 ஜூன் 15, 2024 💚 சனிக்கிழமை 💚

"நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்." ( யோவான் 14 : 16 )

பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய ஒரு உண்மையினை இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். அதாவது பரிசுத்த ஆவியானவர் பிதாவின் ஆவியானவர். ஒருவருக்கு பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் வேண்டுமானால் முதலில் அவர் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசமுள்ளவராக இருக்கவேண்டும். அப்படி விசுவாசமுள்ளவராக இருக்கும்போதுதான் அவரது பரிந்துரையின்பேரில் பிதாவானவர் பரிசுத்த ஆவியானவரை ஒருவருக்குக் கொடுக்கின்றார். 

பாரம்பரிய சபைகளில் திடப்படுத்துதல் ஆராதனை என்று ஆராதனை செய்து சிலச் சடங்குகள் செய்து ஆவியானவரை ஒருவர் பெற்றுக்கொண்டதாகக் கூறிக்கொள்கின்றனர். பரிசுத்த ஆவியானவரைப் பெறுவது வெறும் சடங்குமுறைகள் சம்பந்தப்பட்டதல்ல. அது மேலான ஒரு ஆவிக்குரிய அனுபவம். பரிசுத்த ஆவியானவரை ஒருவர் பெற்றுக்கொள்ளும்போது அவரது ஆவிக்குரிய வாழ்வில் பெரிய மாறுதல் உண்டாகும். காரணம், அவர் பெற்றுக்கொண்டது பிதாவின் ஆவியானவர். அந்த ஆவியானவர் ஒருவரில் வரும்போதுதான் அவர் கிறிஸ்துவைக் குறித்தச்  சாட்சியை உறுதியாகக் கூறமுடியும்.

இதனையே இயேசு கிறிஸ்து, "பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்." ( யோவான் 15 : 26 ) என்று கூறினார்.

ஆவியானவர் ஒருவரில் வரும்போதுதான் ஒருவர் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ முடியும். இன்று இந்தச் சத்தியம் மறைக்கப்பட்டு வெறும் சடங்குகள் மூலம் பரிசுத்த  ஆவியானவரைப் பெற்றுக்கொண்டதாகப்  பலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் பல சபைகளிலோ வெறும் கூப்பாடுபோட்டு அலறுவதுதான் பரிசுத்த ஆவியின் அனுபவம் என்று நம்பப்படுகின்றது.  எனவே, இப்படிக் கூப்பாடுபோட்டுத் துள்ளும் பலரிடம் ஆவிக்குரிய கனிகளை நாம் காணமுடிவதில்லை. 

அன்று உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களிடம் கூறினார், "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 ) என்று. நாம் கிறிஸ்துவுக்குச் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ நமக்கு உதவிபுரிபவரே பரிசுத்த ஆவியானவர். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்தவம் வெறும் சடங்குகளோடு சம்பந்தப்பட்ட மார்க்கமல்ல, அது அனுபவபூர்வமானது. ஒவ்வொரு வசனமும் சத்தியமானது. அவற்றை வெறுமனே கூறிக்கொள்வதாலோ ஒரு சில வெளிச் செயல்பாடுகளாலோ ஒருவர் அவற்றை அனுபவிக்கமுடியாது. ஆவியானவரின் அபிஷேகம் பெற்ற ஒவ்வொரு மனிதனுக்கும் அவர் தன்னோடு இருக்கும் நிச்சயம் இருக்கும். அப்படி இருந்தால் மட்டுமே நாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டவர்கள்.  

இதுவரை பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் பெறவில்லையானால் நாம் அதற்காக இயேசு கிறிஸ்துவிடம் மன்றாடவேண்டியது அவசியம். அவர் வரும்போது  "பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்." ( யோவான் 16 : 8 ) என்றார் இயேசு கிறிஸ்து. எனவே, அவர் நம்மில் வரும்போதுதான் நம்மால் பாவத்தை மேற்கொள்ள முடியும். இந்தச் சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் நம்மை நிறைக்கும்படி மன்றாடுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,223     💚 ஜூன் 14, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே." ( யோவான் 5 : 39 )

பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி 300 க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் இருப்பதாக சில அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தத்  தீர்க்கதரிசனங்கள் போதுமான அளவு துல்லியமாக கிறிஸ்துவே மேசியா என்பதனைக் குறிப்பிடுவன.  இதனையே இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். 

பரிசேயரும் சதுசேயரும் இயேசு கிறிஸ்துதான் வரவேண்டிய மேசியா என்பதனை ஏற்றுக்கொள்ளவில்லை.  இன்றைக்கும் யூதர்கள் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், கிறிஸ்து பிறப்பதற்கு நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே கிறிஸ்துவைக் குறித்துத் துல்லியமான தீர்க்கத்தரிசனங்கள் கூறப்பட்டுள்ளன என்பது ஆச்சரியமான உண்மையல்லவா?

கிறிஸ்துவைக் குறித்தத் தீர்க்கத்தரிசனங்கள் உண்மையாகவே நிறைவேறியுள்ளது ஆச்சரியமான உண்மையென்றால், அந்தக்  கிறிஸ்துக்  கூறியவையும் நிச்சயம் நிறைவேறும் என்று நாம் நம்பலாம் அல்லவா? ஆம்,  அவற்றை சந்தேகமில்லாமல் விசுவாசிக்கவேண்டியதே நாம் செய்யவேண்டியது. இயேசு கிறிஸ்து அளித்த வாக்குறுதிகளில் முக்கியமானது நித்தியஜீவன். "நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." ( 1 யோவான்  2 : 25 )

இயேசு கிறிஸ்து இதனைத் தெளிவாகக் கூறினார், "குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது." ( யோவான் 6 : 40 ) என்றார். எனவே, நித்தியஜீவன் என்பது மெய்யானது. 

ஆம் அன்பானவர்களே, வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளபடி வேத வாக்கியங்களுக்குள் நித்திய ஜீவன் உள்ளது. ஏனெனில் அவை வார்த்தையான தேவனாகவே இருக்கின்றன. அவரது வார்த்தைகளால் நமக்கு நித்திய ஜீவன் எனும் முடிவில்லாத வாழ்க்கை உண்டு என்பதால் நாம் வேத வசனங்களை ஏற்றுக்கொண்டு தியானித்து வாழவேண்டும். 

நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது கடமைக்காக வாசிக்காமல், குறிப்பிட்ட ஆசீர்வாத வசனங்களைத் தேடி வாசிக்காமல் அந்த வேத வசனங்களுக்குள் இருக்கும் சத்தியத்தை உணர்ந்து வசித்துப் பழகவேண்டும். வேத வசனங்கள் கிறிஸ்துவைக் குறித்து சாட்சி கூறுபவை மட்டுமல்ல, அவை நாம் நித்தியஜீவனை அடைந்திட உதவுபவை. 

இன்று பல கிறித்தவ ஊழியர்கள் இயேசுவின் காலத்துப் பரிசேயரையும்  சதுசேயரையும் போலவே இருக்கின்றனர். அவர்கள் கிறிஸ்துவை நித்திய ஜீவனின் ஊற்றாகப் பார்க்காமல் அதிசயங்கள் செய்யும் அற்புதராக மட்டுமே பார்த்துப்  பழகி அப்படியே மக்களுக்குப் போதிப்பவர்களாக இருக்கின்றனர்.  ஆம் அன்பானவர்களே, நாம் வேதாகமம் வாசிக்கும் முறைமையை ஆராய்ந்து பார்ப்போம். வேத வசனங்கள் கூறும் மெய்யான சத்தியத்தை  உணர்ந்துகொள்ள வாசிப்பவர்களாக மாறும்போது மட்டுமே நித்தியஜீவனை நாம் அடைந்திட முடியும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                    

Wednesday, June 05, 2024

ஆவியானவர் நமக்குத் துணையாக இருப்பார்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,222      💚 ஜூன் 13, 2024 💚 வியாழக்கிழமை 💚

"நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." ( ஆகாய் 2 : 5 )

நமது தேவன் தனது மக்களோடு பல்வேறு சமயங்களில் உடன்படிக்கை செய்துகொள்பவராக இருக்கின்றார். இது ஏனென்றால் தனது மக்கள் நம்பிக்கையோடு தங்களது வாழ்வைத்  தொடரவேண்டும் என்பதற்காகவே. இன்றைய வசனம் எகிப்திலிருந்து புறப்பட்டபோது இஸ்ரவேல் மக்களோடு தேவன் செய்த உடன்படிக்கையினைக் குறித்துக் கூறுகின்றது. ஆனால் இஸ்ரவேல் மக்கள் அந்த உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை. 

அதாவது எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்களோடு தேவன் உடன்படிக்கைச் செய்திருந்தும் அவர்கள் அந்த உடன்படிக்கைக்கு கீழ்ப்படிந்து நடக்கவில்லை.   வேற்று தெய்வங்களை வழிபடவும் தேவனது கட்டளைகளை புறக்கணிக்கவும் செய்தனர். எனவே தேவன் அவர்களைப் புறக்கணித்து பல்வேறு சமயங்களில் வேற்று அரசர்களுக்கு அடிமைகள் ஆக்கினார். 

இதுபோலவே, நாம் எகிப்தாகிய நமது பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலையாகும்போது தேவன் நம்மோடு உடன்படிக்கை பண்ணுகின்றார்.  இந்த உடன்படிக்கை இஸ்ரவேல் மக்களோடு பண்ணிய உடன்படிக்கை போன்றதல்ல என்று நாம் எபிரெய நிருபத்தில் வாசிக்கின்றோம். 

"அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எபிரெயர் 8 : 9 )

அன்பானவர்களே, இன்று பாவ வாழ்க்கையான எகித்தைவிட்டு வெளிவரும் நம்மோடு தேவன் பண்ணுகின்ற உடன்படிக்கை இஸ்ரவேல் மக்களோடு பண்ணிய உடன்படிக்கையைவிட மேலானது. இதனையே,  "அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்." ( எபிரெயர் 8 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது.

மோசேயோடு உடன்படிக்கைச் செய்து கட்டளைகளை கற்பலகைகளில் எழுதியதுபோல அல்லாமல் இன்று நமது உள்ளமாகிய பலகையில் தேவன் தனது உடன்படிக்கையினை எழுதியுள்ளார். பாவ எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து  நாம் வெளிவரும்போது ஆவியானவர் நம்மோடு உடன்படிக்கை பண்ணுகின்றார். எனவே, "நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைப்பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள்." என்று ஆகாய்  தீர்க்கத்தரிசி மூலம் தீர்க்கத்தரிசனமாகக் கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, புதிய உடன்படிக்கையின் மக்களாகிய நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ ஆவியானவர் நமக்குத் துணையாக இருப்பார். எனவே நாம் பயப்படாமல் நமது ஆவிக்குரிய பயணத்தைக் தொடர்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்               

உபத்திரவப்படுவது நல்லது

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,221      💚 ஜூன் 12, 2024 💚 புதன்கிழமை 💚

"நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்." ( சங்கீதம் 119 : 67 )

உபத்திரவங்கள் நம்மை ஆவிக்குரிய வாழ்வில் நடப்பதற்கு உறுதுணையாக இருக்கின்றன. காரணம் எந்த உபத்திரவமும் நமக்கு ஏற்படவில்லையானால் நாம் தேவனைவிட்டு விலகிச் சென்றுவிடுவோம். உபத்திரவம் என்பது தேவன் அளிக்கும் தண்டனையாகவும் அவரை நோக்கி நம்மை இழுக்கும் கயிறாகவும் இருக்கின்றது என்றும் நாம் கூறலாம். வேதாகமத்தில் "சிட்சை" என்று இது கூறப்பட்டுள்ளது. 

நாம் நமது குழந்தைகள் தவறு செய்யும்போது சிறு தண்டனைகள் கொடுப்பதுபோல தேவன் நமக்குச் சில தண்டனைகளைக் கொடுத்து நல்வழிப் படுத்துகின்றார். இதனையே இன்றைய தியான வசனம்,  "நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்." என்று கூறுகின்றது. அதாவது வாழ்வில் உபத்திரவம் வருவதற்குமுன் வழிதப்பி நடக்கின்றோம். உபத்திரவம் வந்தபின் புத்தி தெளிந்து அவரது வார்த்தைகளைக் காத்து நடக்கின்றோம்.  

எனவேதான் இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து, "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 ) என்று சங்கீத ஆசிரியர் கூறுகின்றார். 

நாம் வழி தப்பி நடக்கும்போது நம்மை நல்வழிப் படுத்துவதற்காக சிலவேளைகளில் தேவன் பிறர் மூலம் நமக்கு உபத்திரவங்களைக் கொடுக்கின்றார்.  ஆனால் நாம் தேவனுக்கு நேராக நமது வழிகளைத் திருப்பும்போது நம்மை உபத்திரவப்படுத்துகின்றவர்களுக்கு தேவன் உபத்திரவத்தைக் கொடுத்து  நமக்கு இளைப்பாறுதலைத் தருவார். "உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே." ( 2 தெசலோனிக்கேயர் 1 : 6 ) என்று கூறப்பட்டுள்ளது. 

அன்பானவர்களே, இப்படி வேதம் கூறுவதால் நாம் நமக்கு உபத்திரவம் வரும்வரை தேவனைத் தேடாமல் வாழவேண்டுமென்று பொருளல்ல; மாறாக, நமக்கு பிரச்சனைகளும் துன்பங்களும் வாழ்வில் ஏற்படும்போது நாம் நம்மையே நிதானித்து நமது வழிகளைத் திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று பொருள். 

"உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. ( 1 பேதுரு 1 : 15, 16 ) எனவே, நம்மை பரிசுத்தராக்குவதற்கே துன்பங்கள்நமக்கு வருகின்றன என்பதை உணர்ந்து தேவனது வார்த்தையைக் காத்து நடக்க முயலுவோம். 

மேலும், இந்த உபத்திரவம் நமக்கு தேவன்மேல் நம்பிக்கையையும் வளரச்செய்கின்றது. இதனையே அப்போஸ்தலரான பவுல், "உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். ( ரோமர் 5 : 3, 4 ) என்று கூறுகின்றார். 

ஆம், உபத்திரவப்படுவதற்கு முன் நாம் வழிதப்பி நடக்கின்றோம்  அதன் பின்போ அவருடைய வார்த்தையைக் காத்து நடக்கின்றோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

மனதிருந்தால் என்னிடத்தில் திரும்பு

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,220      💚 ஜூன் 11, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚


"இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை." ( எரேமியா 4 : 1 )

நமது தேவன் யாரையும் வலுக்கட்டாயம் பண்ணுபவரல்ல. எந்தநிலையிலும் முடிவெடுக்கும் உரிமையினை மனிதர்களிடமே  கொடுத்துவிடுகின்றார்.   ஆதியில் ஏதேனிலும் தேவன், "நீ தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் கனிகளையும் உண்ணலாம் ஆனால், நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை மட்டும் உண்ணவேண்டாம் என்று கூறினார்". உண்ணவேண்டாம் என்று தேவன் கூறியது ஒரு கட்டளையே தவிர அவர் மனிதனைக் கட்டாயம்பண்ணவில்லை. அந்த மரத்தின் கனியை உண்பதா வேண்டாமா  என்று முடிவெடுக்கும் உரிமையினை மனிதனிடமே விட்டுவிட்டார்.

அதுபோலவே, தேவன் பல்வேறு நியாயாதிபதிகள், தீர்க்கத்தரிசிகள் மூலம் மனம் திரும்புதலுக்கேற்ற செய்திகளை இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் அந்த மக்கள் தேவனது வார்த்தைகளுக்கு முற்றிலும் செவிகொடுக்கவில்லை. அவர்களைப் பார்த்துதான் தேவன் கூறுகின்றார், "இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று. மட்டுமல்ல, அப்படித் தேவனிடம் திரும்பினால் நீ இனி அலைந்து திரியமாட்டாய்.

மனம் திரும்பு என்று கட்டளையாகக் கூறாமல், "நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு" என்று கூறுகின்றார்.  சில வேளைகளில் நாம் நமது நண்பர்களை குறிப்பிட்ட நாளில் நமது வீட்டிற்கு அழைக்கும்போது அவர்கள், "முடிந்தால் வருகின்றேன்" என்பார்கள். நாம் அவர்களுக்கு, "முடிந்தால் அல்ல, உனக்கு மனமிருந்தால் வா....மனமிருந்தால் முடியும்" என்று கூறுவோம். 

அதுபோலவே தேவன் மனம் திரும்புவது குறித்துக் கூறுகின்றார்.  அவர் பல்வேறு விதங்களில் மனம்திரும்புதலுக்கேற்ற செய்திகளை பலர் மூலம்  கொடுத்தும் மனம் திரும்பாத மக்களைப்பார்த்துக் கூறுகின்றார், "நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று" அப்படி நீ மனம்திரும்பி உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை என்கின்றார்.

பலருடைய வாழ்க்கை அலைந்து திரிகின்ற வாழ்கையாக இருக்கின்றது. பிழைப்புக்காக, வருமானத்துக்காக, ஆசீர்வாதங்களைப்  பெறுவதற்காக என அலைந்து திரிகின்றார்கள். பலர் பல்வேறு திருத்தலங்களை நாடி அலைகின்றனர். ஆம் அன்பானவர்களே, இந்த அலைச்சல் நமக்குத் தேவை இல்லாத ஒன்று. நம்முடைய பாவ வாழ்க்கையிலிருந்து மனம் திரும்பினால்  போதும், அப்போது நாம் அலைந்து திரியமாட்டோம். இதனையே, "நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

நமது பிரச்னைகளுக்குத் தீர்வு நம்மிடம்தான் உள்ளது. நமது மனதை தேவனுக்கு நேராகத் திருப்பும்போது நாம் பல்வேறு ஆலயங்களைத் தேடியும் ஊழியர்களைத் தேடியும் அலைந்து திரியாமல் தேவன் நமக்குள்ளே இருப்பதால் மனச் சமாதானத்தோடு வாழ்வோம். "நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு" என்று மனதுருக்கத்தோடு தேவன் நம்மிடம் கூறுகின்றார்.  அவரது சத்தத்துக்குச் செவிகொடுத்து அலைச்சலில்லாமல் வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

Tuesday, June 04, 2024

அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,219     💚 ஜூன் 10, 2024 💚 திங்கள்கிழமை 💚

"அப்பொழுது யாக்கோபு: "உன் சேஷ்டபுத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு" என்றான். அதற்கு ஏசா: "இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்." ( ஆதியாகமம் 25 : 31, 32 )

இஸ்ரவேலரின் வழக்கத்தின்படி சேஷ்டபுத்திரபாகம் என்பது ஒவ்வொரு குடும்பத்தின் முதல் மகனும் தங்கள் தந்தையிடமிருந்து ஒரு சிறப்பு வாரிசு உரிமையைப் பெறுவதைக் குறிக்கும். முதற்பேறான மகன் குடும்பத்தின் ஆசாரியனாக இருப்பான் (கடவுளால் அந்தப் பணி லேவியர்களுக்கு மாற்றப்படும் வரை), அந்த மகன் தந்தையின் சுதந்தரத்திலும் தந்தையின் அதிகாரத்திலும் இருமடங்கைப் பங்காகப்  பெறுவான்.

இன்றைய தியான வசனம் இரண்டு  சகோதரர்களின் உரையாடல். மட்டுமல்ல, இந்த உரையாடல் மூலம் இருவரின் குணங்களை நாம் காண முடிகின்றது.  யாக்கோபு எப்படியாவது தனது அண்ணனை ஏமாற்றி சேஷ்ட புத்திரபாகத்தை அடைந்துவிட எண்ணுகின்றான். அவன் அண்ணன் ஏசாவோ வயிற்றுக்கே முன்னுரிமை கொடுத்து சேஷ்டபுத்திரபாகத்தை விட்டுக்கொடுக்கின்றான். ஒருவேளை உணவை உண்ணாதிருப்பதால் யாரும் உடனே செத்துவிட மாட்டார்கள். ஆனால் ஏசா கூறுகின்றான், "இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்."

ஏசாவின் பலவீனத்தை யாக்கோபு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டான். "அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்." ( ஆதியாகமம் 25 : 34 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, "வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்." ( நீதிமொழிகள் 20 : 17 )

நமது ஊர்களில் சில குடிகாரர்கள் இருப்பார்கள். அவர்களுக்குக் குடிப்பதற்கு சிறு தொகையினைக் கொடுத்தால்கூட விலை உயர்ந்த பொருட்களைக் கொடுத்துவிடுவார்கள். சில கிராமங்களிலுள்ள பண்ணையார்கள் இப்படி ஊரிலுள்ள குடிகாரர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொள்வதுண்டு. 

இன்றைய தியான வசனமும் செய்தியும் நமக்கு கூறுவது இதுவே; அதாவது நாம் இந்த இரண்டு சகோதரர்களைப்போலவும் இருக்கக் கூடாது. அடுத்தவர்களது பலவீனத்தைப் பயன்படுத்தி அதன்மூலம் லாபம் சம்பாதிப்பவர்களாகவும், அற்ப உடல் தேவைக்காக மேலான ஆசீர்வாதங்களை உதறித் தள்ளுபவர்களாகவும் நாம் இருக்கக்கூடாது. 

இன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலானவர்கள் யாக்கோபைப் போலவும் ஏசாவைப்போலவே இருக்கின்றனர். யாரையாவது ஏமாற்றி பொருள் சேர்த்து விடவேண்டுமென்று ஒரு கூட்டமும்,  தேவ ஆசீர்வாதத்தை இழந்தாலும் உலக ஆசீர்வாதத்தால் தாங்கள்  நிரம்பிடவேண்டுமென்று எண்ணும் ஒருகூட்டமும்  கிறிஸ்தவர்களிடையே உண்டு.  

அன்பானவர்களே, நாம் நம்மைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து ஏற்றவேளையில் அவர் நம்மை உயர்த்திட அவருக்கு அடங்கி வாழ்வோம். அப்போதுதான்  மெய்யான ஆசீர்வாதம் நமக்கு உண்டு. "ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்." ( 1 பேதுரு 5 : 6 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்            

Sunday, June 02, 2024

தேவனை அறியும் அறிவை வேண்டுவோம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,217      💚 ஜூன் 08, 2024 💚 சனிக்கிழமை 💚

"ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதி யுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்." ( கொலோசெயர் 1 : 12, 13 )

பிதாவாகிய தேவனைக்குறித்து அப்போஸ்தலரான பவுல் முக்கியமான ஒரு சத்தியத்தை இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார்.  அதாவது நாம் குமாரனாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்தில் பங்குள்ளவர்களாக வேண்டுமானால் பிதாவாகிய தேவனின் சித்தம் நமக்குத் தேவையாக இருக்கின்றது. அவரே நம்மை ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு  நம்மைத் தகுதியுள்ளவர்களாக்குகின்றார். எனவே பிதாவாகிய தேவனை நாம் ஸ்தோத்தரிக்கவேண்டும். 

அவரே நம்மை இருளின் அதிகாரத்தினின்று விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்துகின்றார். இதனையே இயேசு கிறிஸ்துவும், "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்." ( யோவான் 6 : 44 ) என்று குறிப்பிட்டார். ஆம், பிதாவின் சித்தத்தால் நாம் குமாரனை அறிகின்றோம்; அவரோடு சேருகின்றோம்.

பிதா என்னை இழுத்துக்கொள்ளவில்லை, எனவே நான் கிறிஸ்துவை அறியவில்லை; ஏற்றுக்கொள்ளவில்லை   என்று கூறி நாம் கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொள்ளாமல் விலகி நின்றுவிடக்கூடாது. காரணம் இயேசு கிறிஸ்து தொடர்ந்து கூறினார், "எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்." ( யோவான் 6 : 45 )

அதாவது, நாம் நமது ஜெபங்களில் கேட்கவேண்டியது உலக ஆசீர்வாதங்களையல்ல, மாறாக சத்தியத்தை அறியும் ஆவலில் பிதாவிடம் மன்றாடவேண்டும். இப்படி சத்தியத்தை அறிந்திடும் ஆவல் உள்ளவர்களாய் வாழ்பவர்களுக்கு பிதாவாகிய தேவன் தனது குமாரனை வெளிப்படுத்துவார். ஒருவருக்கு ஆர்வமிருக்கும் ஒன்றை நாம் அவருக்குக் கொடுக்கும்போதுதான் அவருக்கு அதன் மதிப்பு அதிகமாகத் தெரியும். "ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்." என்றார் இயேசு கிறிஸ்து. 

இப்படி பிதாவாகிய தேவன் நம்மை "ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்குத் தகுதியுள்ளவர்களாக்கி, இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்துகின்றார். 

அன்பானவர்களே, நாம் வெறுமனே இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொள்வதில் அர்த்தமில்லை. ஆலய வழிபாடுகளிலும் ஜெபக்கூட்டங்களிலும் கலந்து கொள்வது மட்டும் போதாது. தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவை நாம் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். இப்படி நாம் பிதாவையும் குமாரனாகிய கிறிஸ்துவையும் அறிந்தவர்களாக வாழ்வதே மெய்யான கிறிஸ்தவ வாழ்வு. அப்படி அறிவதே நித்தியஜீவன் எனும் நிலைவாழ்வு. 

"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? ஆம் அன்பானவர்களே, நாம் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்களாக வேண்டுமானால் பிதாவையும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் வெறுமனே ஆராதிப்பவர்களாக அல்ல.  தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களாக  இருக்கவேண்டும். அத்தகைய தேவனை அறியும் அறிவை வேண்டுவோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 11 : 13 / Luke 11:13

" ஆதவன் " தியானம் - 1981 ஜூலை 11, சனி  2026       "பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந...