DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, February 23, 2025

❤️வேதாகம முத்துக்கள் - பிப்ருவரி 2025

 


                                - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

வேதாகமத் தியானம் - எண்:- 1,455

'ஆதவன்' 💚பிப்ருவரி 01, 2025. 💚சனிக்கிழமை

"பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதனாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்." (1 யோவான்  2 : 18)

நான் சிறுபிள்ளையாக இருந்தபோது ஞாயிறு வேதாகமப்பள்ளியில் அந்திக்கிறித்து குறித்து எனது ஆசிரியைப் பல சம்பவங்களைக் கூறியுள்ளார். அதாவது, "அந்திக்கிறித்து என்பவன் கொடூரமானவனாக இருப்பான். அவன் வரும்போது கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்களைப் பிடித்து அடித்துத் தன்னை வணங்கும்படிச் சொல்லுவான். அவனை ஏற்றுக்கொண்டு அவனை வணங்காதவர்களை அவன் எண்ணைச்சட்டியில் போட்டு வறுத்தெடுப்பான்.  ஆனால் அவனை வணக்காமல் நாம் கிறிஸ்துவின்மேல் உறுதியான விசுவாசத்துடன் இருப்போமானால் கிறிஸ்து நம்மை விண்ணகத்தில் ஏற்றுக்கொள்வார்"  என்று கூறினார். 

அந்தச் சிறு வயதில் எப்போது அந்திக்கிறிஸ்து வருவானோ என்று பயந்திருக்கிறேன். நம்மைப்பிடித்து அவனை வணங்கச் சொன்னால் நாம் என்னச்செய்வோம்? என எண்ணியிருக்கிறேன். ஆனால் சற்று வளர்ந்தபிற்பாடு இதெல்லாம் கட்டுக்கதை என்று எனது பழைய பயத்தை எண்ணிச் சிரித்திருக்கின்றேன். இதுபோலவே இன்றும் பல கிறிஸ்தவர்கள் அந்திக்கிறிஸ்து குறித்து  பல்வேறு தவறான எண்ணமுடையவர்களாகவே  இருக்கின்றனர். 

ஆனால் இன்றைய தியான வசனம், "இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்" என்று கூறுகின்றது. அப்படியானால் அந்த அந்திக்கிறிஸ்துக்கள் யார்? யோவான் அப்போஸ்தலர் கூறுகின்றார், "........பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து." (1 யோவான்  2 : 22) என்று. ஆம் அன்பானவர்களே, இப்படி மறுதலிக்கும் கூட்டம் இப்போதும் கிறிஸ்தவ உலகினில் உண்டு. 

யெகோவா சாட்சிகள் எனும் பிரிவினர் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை மெய்யான தேவனாக ஏற்றுக்கொள்வதில்லை. அவர் "யெகோவா தேவனின் முதல் சாட்சி" என்கின்றனர். இன்னும் ஒரு பிரிவினர், "இயேசு கிறிஸ்துதான் எல்லாம்" என்று கூறி பிதாவாகிய தேவனை மறுதலிக்கின்றனர். இயேசு கிறிஸ்து கூறினார், "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17: 3) என்று. அதாவது, நாம் பிதாவாகிய தேவனையும் விசுவாசிக்கவேண்டும் அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கவேண்டும். இப்படிச் செய்பவர்களுக்கே நித்தியஜீவன் உண்டு. 

இதற்கு மாறாக, "........பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து." என்கிறது தேவனுடைய வார்த்தைகள்.  அந்திக்கிறிஸ்து நம்மை உடலளவில் கொடுமைப்படுத்தமாட்டான், மாறாக, நம்மை விசுவாசத்தைவிட்டு விலகச் செய்வான். அத்தகைய அநேக அந்திக்கிறிஸ்துகள் இப்போதும் இருக்கிறார்கள்; அதனாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம் என்று இன்றைய வசனம் எடுத்துக்கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே, எனவே நாம் வஞ்சிக்கப்படாமல் இருக்கவேண்டுமானால் வேதாகமத்தை நன்கு அறிந்து உணர்ந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம். குறிப்பாக யோவான் 17 ஆம் அதிகாரம் பிதா குமாரன் இடையேயுள்ள உறவைத் தெளிவாக நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அந்திகிறித்தவ போதனைகளால் நமது உள்ளம் ஏமாற்றப்படாமல் காத்துக்கொள்வோம். 

உலகத்தின் தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்து பிதாவோடு இருக்கிறார். அந்தப் பிதாவே அவரை உலகிற்கு அனுப்பினார். இப்படி விசுவாசிப்போமானால் கிறிஸ்துவின் மகிமையை நாம் காண்போம். "பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17: 24) என்று இயேசு கிறிஸ்து பிதாவிடம்  ஜெபிக்கவில்லையா?

இதுவே சத்தியம் இதனை ஏற்றுக்கொள்ளாதவர்களே அந்திக்கிறிஸ்துக்கள் 


வேதாகமத் தியானம் - எண்:- 1,456
'ஆதவன்' 💚பிப்ருவரி 02, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை

"நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்." ( எபிரெயர் 7: 19)

மனிதர்களாகிய நாம் தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழவும் இறுதியில் நிலைவாழ்வு எனும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளவும் தேவன் என்றுமே விரும்புகின்றார். இதற்காகவே அவர் மோசே வழியாகப்  பல்வேறு கட்டளைகளை மனிதர்களுக்குக் கொடுத்து வழிநடத்தினார். இவைகளையே நியாயப்பிரமாணக் கட்டளைகள் என்கின்றோம்.

ஆனால் தேவன் அருளிய பழைய ஏற்பாட்டுக்கால நியாயப்பிரமாணக் கட்டளைகளால்  மனிதர்களைப் பூரணப்படுத்தித் தேவனுக்கு ஏற்புடையவர்களாக மாற்றிட முடியவில்லை. இதனையே இன்றைய தியான வசனம், "நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்." என்று கூறுகின்றது. அதாவது, நியாயப்பிரமாணக் கட்டளைகளல்ல, மாறாக கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் கொள்ளும் நம்பிக்கையே நம்மை விடுதலையாகி தேவனிடத்தில் கொண்டு சேர்க்கின்றது. 

நியாயப்பிரமாணக் கட்டளைகள் எது பாவம், எது பாவமல்ல என்று எடுத்துகூறுமேத்தவிர அவை நம்மை பாவத்திலிருந்து விடுதலை அளிக்க உதவாது.  இதனைச் சரிப்படுத்தவே புதிய உடன்படிக்கையினை தனது இரத்தத்தின்மூலம் கிறிஸ்து ஏற்படுத்தினார். இதற்காகவே அவர் பூமியில் மனிதனாக வந்தார். இதனை நாம் ரோமர் நிருபத்தில், "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8: 3) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்து தனது மேலான கிருபையினால் உண்டாக்கிய மீட்பினை நாம் விருதாவாக (வீணான ஒன்றாக) எண்ணிவிடக்கூடாது. நியாயப்பிரமாணக் கட்டளைகளே போதுமென்றால் கிறிஸ்து பாடுபட்டு மரித்தது வீணான காரியமாக இருக்கும். "நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." ( கலாத்தியர் 2: 21) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.

நியாயப்பிரமாணம் சுய நீதியை உண்டாக்குகின்றது; கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசமோ தேவ நீதிக்கு நேராக நம்மை நடத்துகின்றது.   எனவே கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால் மட்டும் நாம் நம்மை நீதிமான்களாக எண்ண  முடியாது. அப்படி எண்ணிக்கொண்டு வாழ்வோமானால் இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களைப்போலவே நாமும் இருப்போம். எனவே, கிறிஸ்துவின்மேல் முழு விசுவாசமுள்ளவர்களாக வாழ்வோம். 

"நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்...."( பிலிப்பியர் 3: 9) எனத் தொடர்கிறார் அப்போஸ்தலரான பவுல். நாம் கட்டளைகளைக் கடைபிடிப்பதாலல்ல மாறாக நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.


வேதாகமத் தியானம் - எண்:- 1,457
'ஆதவன்' 💚பிப்ருவரி 03, 2025. 💚திங்கள்கிழமை

"இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதன் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்." ( ஓசியா 8: 14)

இஸ்ரவேல், யூதா என்பவை தேவன் சிறப்பாகத் தெரிந்துகொண்ட தேவனுடைய மக்களைக் குறிக்கின்றது. புதிய ஏற்பாட்டின்படி ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாகிய நாமே இஸ்ரவேலராய், யூதர்களாய்  இருக்கின்றோம். 

தேவன் தனது மக்கள் தன்னையே உண்மையாய் சேவித்துத் தனக்கு ஏற்ற வாழ்க்கை வாழவேண்டுமென்று விரும்புகின்றார். ஆனால் அவர் தெரிந்துகொண்ட மக்களாகிய நாமோ அவரது கட்டளைகளை மறந்து - அவரை மறந்து, வீணான வழிபாட்டு முறைமைகளையும் மண்ணான ஆலயங்களைக் கட்டுவதியிலும், திருவிழா, அசனப்பண்டிகை என பல்வேறு காரியங்களிலும் ஈடுபட்டு மெய் தேவனாகிய அவரை மறந்த வாழ்க்கை வாழ்வதிலும் விருப்பமுற்று செயல்படுபவர்களாக இருக்கின்றோம்.    

மட்டுமல்ல, இன்றைய தியான வசனத்தில், "யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்" என்றும்  கூறப்பட்டுள்ளது. அதாவது,  தேவனை மறந்து உலகச் செல்வங்களைப் பெருக்குவதிலும் பொருள்தேடி அலைவதிலும் மக்கள் காலத்தைக் கடத்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

தேவனுக்கு உரிய மரியாதையைத் தராமல், அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் வெறும் பக்திகாரியங்களில் ஈடுபடுவதிலும், உலகச் செல்வத்தைச் சேர்ப்பதற்கு அலைவதிலும்  நாட்டம்கொண்டு ஓடும் மக்களைப்பார்த்துத் தேவன் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார், "நான் அதன் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்" என்று. அதாவது, தேவனை மறந்து வாழும் வாழ்க்கை தற்போதைக்குச் செழிப்புப்போல இருந்தாலும் அவை இறுதிவரை நமது வாழ்வில் நிலைநிற்பதில்லை, அழிந்துவிடும்  என்கிறார் தேவனாகிய கர்த்தர்.  

அன்பானவர்களே, நாம் கட்டவேண்டியது மண்ணினாலான ஆலயங்களியல்ல, மாறாக நமது உடலாகிய ஆலயத்தை. இன்றைய தியான வசனத்தில் ஓசியா தீர்க்கத்தரிசி கூறுவது போலவே அப்போஸ்தலராகிய பவுலும்,   நமது உடலாகிய ஆலயத்தை நாம் கெடுத்தால் நமக்குத் தேவன் கெடுதல் செய்வார் என்று எச்சரிக்கின்றார். 

"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." (1 கொரிந்தியர் 3: 16, 17)

ஆம் அன்பானவர்களே, எனவே நாம் நமது உடலாகிய ஆலயத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்க முன்னுரிமை கொடுக்கவேண்டியது அவசியம். ஆலயப்பணிவிடைகள் செய்ய ஓடுவதைவிட தனிப்பட்ட விதத்தில் நாம் தேவனோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். நம்மை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுவதும்  அரணான பட்டணங்களை (உலகச் செல்வங்களை) பெருகப்பண்ணுவதும் வீணானதே. "நான் அதன் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்." என்கிறார் தேவனாகிய கர்த்தர். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,458
'ஆதவன்' 💚பிப்ருவரி 04, 2025. 💚செவ்வாய்க்கிழமை

"நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்... " ( எரேமியா 31: 16)

இந்த உலகத்தின் துன்பங்கள் பாடுகள் சிலவேளைகளில் நம்மை அதிகமாகப் பாதித்துவிடுவதுண்டு. எத்தனை பெரிய மனிதனாக இருந்தாலும் சில இழப்புக்களை நம்மால் எதிர்கொள்ள முடிவதில்லை. துன்மார்க்க மனிதர்களுக்கு மட்டுமல்ல, நல்ல பல செயல்கள் செய்து தேவனுக்கேற்றபடி வாழ்ந்தாலும் இத்தகைய பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படுவது இயற்கை. 

"எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்." ( பிரசங்கி 9: 2)

இப்படி எல்லோருக்கும் எல்லாம் ஒரேவிதமாக நடந்தாலும், கர்த்தர்மேல் விசுவாசம்கொண்டு, அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்வோமானால் இத்தகைய துன்பங்களில் நமக்கு அவர் ஆறுதலளிக்க வல்லவராய் இருக்கின்றார். எனவேதான் அவர் இன்றைய தியான வசனத்தில் நம்மோடு பேசுகின்றார், "நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர்விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்; உன் கிரியைக்குப் பலனுண்டு."

சில வேளைகளில் துன்பங்கள் நெருக்கும்போது பலரும் கூறும் வார்த்தைகள்:-  "நான் என்ன பொல்லாப்புச் செய்தேன்? எவ்வளவோ நல்ல காரியங்களைச்  செய்திருக்கிறேன். எனக்கு ஏன் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்கின்றது?" ஆனால், தேவன் எதனையும் நோக்கமில்லாமல் செய்வதில்லை. தேவனுக்கேற்ற உண்மையுள்ள வாழ்க்கை வாழ்வோமானால், ஒரு இழப்பு இன்னொரு மேலான நல்ல காரியத்தை நமது வாழ்வில் கொண்டுவரும்.

"ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே." ( எபிரெயர் 6: 10) என்று வேத வசனம் கூறுகின்றது. மனிதர்களைப்போல அவர் எதனையும் மறந்துவிடுபவரல்ல. எனவே, துன்பங்களை நாம் சந்திக்கும்போது, தேவன் நமக்கு அதனை மேற்கொள்ள ஒரு வழியையும் ஆயத்தப்படுத்தி வைத்திருப்பார். கார்த்தரைவிட்டுப் பின்வாங்கிடாமல் அந்த விசுவாசத்தோடு காத்திருப்போம்.

ஏனெனில், "மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." (1 கொரிந்தியர் 10: 13)

விசுவாசத்தைத் துவங்குகிறவரும் முடிகிறவருமான கர்த்தர் நாம் நமது விசுவாச வாழ்வைக் காத்துக்கொள்ள உதவுவாராக.!


வேதாகமத் தியானம் - எண்:- 1,459
'ஆதவன்' 💚பிப்ருவரி 05, 2025. 💚புதன்கிழமை

"புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்" ( ஏசாயா 40: 8)

இந்த முழு உலகத்தையும் படைத்து ஆளும் தேவன் எப்படி நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கின்றாரோ அதுபோலவே அவரது வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளும் என்றும் அழியாதவையாக இருக்கின்றன. அந்த அழியாத தேவ வார்த்தைகளினாலேயே இந்த அண்டசராசரங்கள் அனைத்தும் உருவாகின. நாமும் இந்த தேவனுடைய வார்த்தையினாலேயே இரட்சிப்பு அல்லது மறுபடியும் பிறக்கும் அனுபவத்தைப் பெறுகின்றோம். 

இதனையே அப்போஸ்தலரான பேதுரு, "அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே". (1 பேதுரு 1: 23) என்று கூறுகின்றார். தேவனுடைய வார்த்தைகள் நம்மை பாவத்திலிருந்து மீட்டு, விடுதலை அளித்து நாம் நித்திய ஜீவனை அடைந்துகொள்ள உதவுவனவாக உள்ளன. 

மட்டுமல்ல, தேவனுடைய வார்த்தைகளே அனைத்தையும் உருவாக்குகின்றன, காக்கின்றன, அழிக்கவும் செய்கின்றன. "இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தைகளினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது." (2 பேதுரு 3: 7) என்று வாசிக்கின்றோம். 

இன்றைய தியான வசனத்தினைத் தொடர்ந்து எழுதும்போது அப்போஸ்தலரான பேதுரு, "மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே."  (1 பேதுரு 1: 24, 25) என்று கூறுகின்றார். அதாவது, சுவிசேஷ அறிவிப்பு என்பது தேவனுடைய அழியாத வார்த்தைகளை எடுத்துரைப்பதுதான். 

தேவனுடைய அழிவில்லாத வார்த்தைகள் புல்லைப்போலவும் பூவைப்போலவும் அழிபவையல்ல. மாறாக, தேவன் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கின்றாரோ அவற்றை அவரது வார்த்தைகள் செய்து முடிக்காமல் அவரிடம் திரும்புவதில்லை. ( ஏசாயா 55: 10, 11) எனவே நாம் தேவனுடைய வார்தைகள்மேல் ஆர்வமுடையவர்களாகவும் அவற்றை இருதயத்தில் பதித்துக் காத்துக்கொள்பவர்களாகவும் வாழவேண்டியது அவசியம். 

இந்தச் சத்தியத்தை பக்தனாகிய யோபு நன்கு உணர்ந்திருந்தார். எனவேதான் கூறுகின்றார், "அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்." (யோபு 23: 12) என்று. நாம் இன்று உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமலிருக்க  குளிர்சாதன பெட்டிகளில் (Fridge) பாதுகாத்து வைப்பதுபோல யோபு தேவ வார்த்தைகளைத் தனது இருதயமாகிய பெட்டியில் வைத்துப் பாதுகாத்துவந்தார். 

ஆம் அன்பானவர்களே, அப்படி அவர் தேவ வார்த்தைகளைக் காத்துக்கொண்டதால்தான்  துன்பங்களைச் சகிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார். நாமும் தேவ வார்த்தைகளை நம்முள் வைத்து பாதுகாப்போம். இக்கட்டுக்காலங்களில் அவையே நமக்கு கைகொடுக்கும் மருந்து. 

வேதாகமத் தியானம் - எண்:- 1,460
'ஆதவன்' 💚பிப்ருவரி 06, 2025. 💚வியாழக்கிழமை

"பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன்." ( லுூக்கா 12: 49)

பரிசுத்த ஆவியானவரை வேதம் அக்கினி, அதாவது நெருப்புக்கு ஒப்பிடுகின்றது. அந்த நெருப்பினை கிறிஸ்தவர்களாகிய நாம் பெற்று உயிர்த்துடிப்புடன் ஆவியில் அனலாக இருக்கவேண்டியது அவசியம். காரணம், ஆவியானவரின் வல்லமை நம்முள் அக்கினியாக இருந்து செயல்படும்போதுதான் நாம் உலகத்தின் பாவ அசுத்தங்களை உதறித்தள்ளி ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறமுடியும்.  

இதனையே இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து "பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன்" என்று கூறுகின்றார். அவர் பூமியில் மனிதனாக வந்ததன் நோக்கமே நம்மைப் பாவங்களிலிருந்து மீட்டு இரட்சிக்கத்தான். எனவே, பாவத்தைச் சுட்டெரிக்கும் பரிசுத்த ஆவியானவர் எனும் அக்கினி உலகினில் பற்றியெரியவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். 

யோவான் ஸ்நானகன், "நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுப்பார்." ( லுூக்கா 3: 16) என்று கூறினார். ஆம் அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவரின் அக்கினி அபிஷேகம் நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியம். அப்போதுதான் நாம் தேவனுக்கேற்ற வெற்றிகரமான வாழ்க்கை வாழ முடியும். 

இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்து பரலோகம் சென்றபின்னர் இந்த அக்கினி ஆவியை முதன்முதல் தனது சீடர்களுக்கு அளித்தார். "அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 2 : 3, 4 ) என்று வாசிக்கின்றோம்.

ஆனால், கிறித்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கும் ஆவியானவரைபற்றிய புரிதலும் தெளிதலும் இல்லை.  ஆவிக்குரிய வாழ்வில் குளிரும் அனலுமின்றி வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். சாதாரண உலக மனிதர்களைப்போல வாழ்கின்றனர். "இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 16 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

உலகினில் இந்தச் சத்திய ஆவியானவராகிய அக்கினியைப் போடவந்த கிறிஸ்துவையும் அவரது வார்த்தைகளையும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளாததால் பலரால் தங்கள் வாழ்க்கையில் ஆவியானவரைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. "உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." ( யோவான் 14 : 17 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

பல கிறிஸ்தவர்களுக்குப்  பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய சரியான புரிதலில்லாததால் அது குறிப்பிட்ட கிறிஸ்தவ சபைப் பிரிவினருக்கு உரிய ஒரு போதனை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆவிக்குரிய ஆராதனை செய்பவர்களைச் சிலவேளைகளில், "அல்லேலூயா கூட்டத்தினர்" என்று கேலியும் செய்கின்றனர்.   

ஆனால் வேத சத்தியம் என்னவென்றால்,  நாம் கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக்கொள்ளும்போது ஆவியானவர் நமக்குள் வருகின்றார். அவரே நம்மை நடத்துகின்றார். இதனையே, "அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்." என்றார் இயேசு கிறிஸ்து. 

கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒரு நெருப்புப் பொறியாக இருக்கவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். அந்த அக்கினியை அவர் கிறிஸ்து மூலம் பூமியில் போட்டுள்ளார். அது நம்மில் பற்றி எரியவேண்டும்; மட்டுமல்ல, அந்த நெருப்பு பரவி உலகினை நிரப்பவேண்டுமென்று அவர் விரும்புகின்றார்.    

கிறிஸ்துவின் இருதய ஆசையை நாம் நிறைவேற்றுபவர்களாக இருக்கவேண்டுமென்றால் நம்மை  அக்கினியின் ஆவியானவர்  நிரப்பி அபிஷேகிக்கவேண்டும். அதற்காக தேவனிடம் காத்திருந்து ஜெபிப்போம்; என்னை நிரப்பும் இயேசு தெய்வமே என்று மன்றாடுவோம். ஆவியில் அனலுள்ளவர்களாக வாழ்வோம். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,461
'ஆதவன்' 💚பிப்ருவரி 07, 2025. 💚வெள்ளிக்கிழமை

"நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்." (ஆமோஸ் 5:14)

இன்று பெரும்பாலான நற்செய்திக் கூட்டங்களில் ஆசீர்வாத உபதேசங்களே போதிக்கப்படுகின்றன. "ஆசீர்வாத உபவாசக்  கூட்டம்" என்று விளம்பரப்படுத்தி மக்களை வரவழைத்து,   தங்களது கூட்டங்களில் கலந்துகொள்ளும் எல்லோரும் ஆசீர்வதிக்கப்படுவதாக பல ஊழியர்களும் கூறிக்கொள்கின்றனர். ஆனால் இன்றைய தியான வசனம் இது தவறு என்பதை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.

ஊழியர்கள் நடத்தும் நற்செய்திக் கூட்டங்களில் கலந்து கொள்வதால் மட்டுமே நாம் தேவனிடமிருந்து நன்மைகளைப்  பெற்றுக்கொள்ளமுடியாது. உபவாசம் என உணவு உண்ணாமல் இருப்பதால் தேவன் நம்மை ஆசீர்வதிக்க முடியாது.  "ஆதவன்" வேதாகத் தியானத்தைப்போன்ற தியானப் பிரசங்கக் கட்டுரைகளை வாசிப்பதால் மட்டுமே ஒருவர் தேவனது ஆசீர்வாதத்தினைப் பெறமுடியாது. வேதாகமத்தை வாசிப்பதாலோ, தியான கூட்டங்களில் கலந்துகொள்வதாலோ ஒருவர் தேவ ஆசீர்வாத்தினைப் பெற்றுக்கொள்ளமுடியாது. 

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுவதன்படி  "நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்." ஆலய வழிபாடுகளிலும் நற்செய்திக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு  தேவனை ஆராதித்துவிட்டு  தனிப்பட்ட முறையில் நம்மை மாற்றிக்கொள்ளாமல் தீமையான வழிகளிலேயே தொடர்ந்து நடப்போமானால் தேவன் நம்மோடு இருந்து செயல்பட முடியாது.  

அப்போஸ்தலரான பவுலும் இதனால்தான் நாம் வெற்று ஆராதனை செய்பவர்களாக அல்ல, புத்தியுள்ள ஆராதனை செய்பவர்களாக வாழவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றார். முதலில் நாம் நம்மைத் தேவனுக்கு ஏற்ற ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். "அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12: 1)

இப்படித் தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து புத்தியுள்ள ஆராதனைச் செய்யாமல் இருந்துகொண்டும் ஒருவர் பல்வேறு பக்திக் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.  ஆலயங்களுக்குத் தவறாமல் செல்வதையும், ஜெபிப்பதையும், வேதம் வாசிப்பதையும் மேன்மையாகக் கருதிக்கொண்டு, இத்தகையச் செயல்களில் தாங்கள் ஈடுபட்டுள்ளதால் தேவன் தங்களோடு இருப்பதாக எண்ணிக்கொண்டு வாழ்வது தவறு. "நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்." என்று இன்றைய தியான வசனம் வழியாக தேவன் நம்மோடு பேசுகின்றார். 

தேவன் நம்மோடு இருக்கவேண்டுமானால், நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். தேவனுக்குமுன் நமது வாழ்க்கை எப்படி இருக்கின்றது?  தனிப்பட்ட நமது செயல்பாடுகள் எத்தகையவை?  நமது தவறான செயல்பாடுகளை முதலில் திருத்த முயலுவோம். தவறுகளுக்குத் தேவனிடம் மனம் வருந்தி மன்னிப்பை வேண்டுவோம். அப்பொழுது நாம் எண்ணுகிறபடியும் சொல்லுகிறபடியும் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் நம்மோடு இருப்பார்.


வேதாகமத் தியானம் - எண்:- 1,462
'ஆதவன்' 💚பிப்ருவரி 08, 2025. 💚சனிக்கிழமை

"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." ( ஏசாயா 60:2)

இந்த உலகத்தில் நாம் தேவனுக்கு ஏற்புடைய வாழ்வு வாழ்வோமானால் இக்கட்டுக்காலங்களில் நிச்சயமாக அவர் நமக்கு உதவிசெய்திடுவார். இந்த மொத்த உலகமும் இருளான நிலைக்குச் சென்றாலும் தேவபிள்ளைகளுக்கு மகிமையான ஒளியான வாழ்க்கை உண்டு. அதனையே, "இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.

இந்த உலகத்தில் செழிப்புடன் வாழும் சிலரை நாம் ஆவிக்குரிய கண்களோடு பார்க்கும்போது அவர்களது ஏழ்மைநிலை நமக்கு விளங்கும். அதுபோல,  உலக வாழ்க்கையில் செழிப்பு இல்லாத வாழ்க்கை வாழ்வதுபோலத் தெரியும் ஆவிக்குரிய மக்கள் உண்மையில் செழிப்பானவர்களாக இருப்பதையும் நாம் உணர்ந்துகொள்ளலாம். இதனை நாம் குறிப்பாகத் துன்ப காலங்களில் அறிந்துகொள்ளலாம்.

எகித்திலிருந்து விடுதலையான இஸ்ரவேல் மக்களை மோசே கானானை நோக்கி வழிநடத்தியபோது பார்வோனின் குதிரை வீரர்கள் அவர்களை அழிப்பதற்காகப் பின்தொடர்ந்து வந்தனர். இஸ்ரவேல் மக்கள் அற்பமானவர்களாக இருந்தனர். அவர்களுக்குப் போர்ப்  பயிற்சியோ போர்செய்ய ஆயுதங்களோ இல்லை. ஆனால் தேவன் அவர்களோடு இருந்தார். அப்போது தேவனுடைய தூதன்  அக்கினித்தூணாகவும் மேகத் தூணாகவும் இருந்து இஸ்ரவேல் மக்களைக் காவல்காத்தார்.  எகிப்தியர் இஸ்ரவேலரை நெருங்கியபோது கர்த்தருடைய தூதன் இஸ்ரவேல் மக்களுக்குப் பின்னாக வந்து நின்று அவர்களைக் காத்துக்கொண்டார்.

இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார் எனும் வார்த்தையின்படி, "அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று." ( யாத்திராகமம் 14: 20) ஆம், எகிப்தியருக்கு இருளாக இருந்தபோது தேவனுடைய மக்கள் வெளிச்சத்தில் நடந்தனர். 

ஆம் அன்பானவர்களே, தேவன் தனது பிள்ளைகளை எப்போதும் கைவிடுவதில்லை. காரிருள்போல வாழ்க்கைத் தெரிந்தாலும் இஸ்ரவேலரைக் காப்பாற்ற அக்கினித்தூணாக நின்று தேவனுடைய தூதன் காத்ததுபோல நம்மையும் காத்துக்கொள்வார். எனவே, தேவனுக்குமுன் உத்தமமாக நடக்கும்போது நாம் அச்சப்படாத தேவையில்லை. 

இதுபோல, ஈசாக்கை அற்பமாக எண்ணிய அபிமெலெக்கும் அவனோடிருந்தவர்களும் ஈசாக்கினிடம் வந்து, "நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்." ( ஆதியாகமம் 26: 28) என்று  கூறுமளவுக்கு தேவன் தான் தெரிந்துகொண்ட ஈசாக்கை ஆசீர்வதித்தார். ஆம், உண்மையான உத்தமமான வாழ்க்கை வாழும்போது நம்மோடு தேவன் இருப்பதை ஒருநாள் உலகம் கண்டுகொள்ளும்.

தேவனுக்கு உகந்த வாழ்க்கை வாழும்படி நம்மை ஒப்புக்கொடுப்போம். அப்போது, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடினாலும் நம்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை நம்மேல் காணப்படும். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,463
'ஆதவன்' 💚பிப்ருவரி 09, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை

"நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்." ( புலம்பல் 3: 40, 41)

மனம்திரும்பிய வாழ்வு வாழ இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது.  நாம் வெறுமனே ஜெபித்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை முதலில் நமது இருதயம் தேவனுக்கு நேராகத் திருப்பப்படவேண்டியது அவசியம். இதனையே, "நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்." என்று கூறப்பட்டுள்ளது. கைகளை விரித்து ஜெபிப்பதுடன் நமது இருதயமும் தேவனுக்கு நேராக உயர்த்தப்படவேண்டியது அவசியம்.  

இன்று மக்களில் பலரும் தாங்கள் சார்ந்துள்ள கிறிஸ்தவ சபைப்பிரிவினைக்குறித்து பெருமைகொள்பவர்களாக, அது குறித்து வைராக்கியம் பாராட்டுபவர்களாக இருக்கின்றனர். ஆனால் தேவனுக்கு அது முக்கியமல்ல, மனம்திரும்பிய ஒரு வாழ்க்கையும் கனிகொடுக்கும் கிறிஸ்தவ வாழ்வையும் அவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். 

கிறிஸ்துவின் காலத்து யூதர்களுக்குத் தங்களை ஆபிரகாமின் சந்ததியினர் என்று கூறிக்கொள்வதில் ஒருவித பெருமை இருந்தது. இது தவறு, மனம்திரும்புதல்தான் முக்கியம் என்பதனை அவர்களுக்கு உணர்த்த யோவான் ஸ்நானகன் அவர்களைப்பார்த்துக் கூறினார்:-  "மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( லுூக்கா 3: 8)

ஆம் அன்பானவர்களே, "நான் ரோமன் கத்தோலிக்கன், நான் சி .எஸ்.ஐ. சபையில் வைராக்யமுள்ளவன், நான் பெந்தேகோஸ்தே சபையில் ஆவிக்குரிய ஆராதனை செய்கிறேன், நான் சால்வேஷன் ஆர்மி.... நான் லுத்தரன் சபை..." என்பதுபோல நாம் கூறிக்கொள்வதில் நமக்கு எந்தப் பெருமையும் இல்லை.  கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிற தேவனால்  அதுபோலவே கற்களிலிருந்தும் இதுபோல பல்வேறு சபை மக்களை உருவாக்க முடியும்.  

நம்முடைய இருதயம் தேவனை நோக்கி உயர்த்தப்படவேண்டியது அவசியம். நம்முடைய இருதயங்கள் தேவனை நோக்கித் திருப்பப்பட்டு நாம் கனிகொடுக்கும் வாழ்க்கை வாழாவிட்டால் நம்மால் கனியுள்ள வாழ்க்கை வாழ முடியாது. "இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்". ( லுூக்கா 3: 9) என்கிறார் யோவான்.

நாம் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்த தவறுகளை, நமது கடந்துவந்த வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். வெறுமனே கைகளை உயர்த்தியும் கும்பிட்டும் வழிபடாமல் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம். மனம்திரும்பிய வாழ்க்கையை விரும்புவோம். "நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்" எனும் வார்த்தைகள் நமக்கு எச்சரிப்பாக இருக்கட்டும். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,465
'ஆதவன்' 💚பிப்ருவரி 10, 2025. 💚திங்கள்கிழமை

"அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்." ( யோவான் 11: 37)

தேவனது மேலான நோக்கம் என்ன என்று அறியாமல் எதனையும் குறுகிய கண்ணோட்டத்தோடு  பார்க்கும் மனிதர்களின் மனநிலையினை இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நம்மைக்குறித்தும் சிலர் இத்தகைய பேச்சுக்களை பேசலாம். "அப்படிச் செய்திருக்கக் கூடாதா? இப்படிச்செய்திருக்கக் கூடாதா?" என்று குறைகூறிக்கொண்டிருப்பார்கள்.

ஒரு சிறந்த ஓவியர்  தனது தூரிகையால் ஓவியம் வரைந்து கொண்டிருக்கும்போது முதலில் நாம் அவர் என்ன வரைகின்றார் என்பதனைக் கண்டு பிடிக்கமுடியாது. எந்த அழகும் அதில் இருக்காது. ஆனால் ஒரு சில நாட்கள் கழித்து அவர் அந்த ஓவியத்தை வரைந்து முடித்த பின்னர் அதன் அழகை நாம் கண்டுணரமுடியும். இதுபோலவே, சிலைவடிக்கும் சிற்பி கல்லை செதுக்கும்போது அவன் என்னசெய்ய முயலுகின்றான் என்பது நமக்குத் தெரியாது. முடிவில் அவனது செயலை நாம் பாராட்டுவோம்.

இதுபோலவே நமது வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளும் அமைகின்றன. நமது வாழ்வில் தேவன் கொண்டுள்ள திட்டம் நமக்குத் தெரியாததால் நாம் பலவேளைகளில் அவரைக் குறை சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.  ஆம் அன்பானவர்களே, ஆனால் எதற்கும் ஒரு தேவ நோக்கம் உண்டு. எனது வாழ்வில் நல்ல வேலை கிடைக்கவில்லை எனும் கவலை எனக்கு இருந்தது உண்மை. ஆனால் தேவன் என்னைக்குறித்து வேறு திட்டம் வைத்திருந்தார்.  உலக வேலை கிடைத்திருந்தால் ஒருவேளை அதிகம் பொருள் சம்பாதித்திருப்பேன். ஆனால் மெய்யான செல்வமான கிறிஸ்து இயேசுவை அறியாமல் போயிருப்பேன்.

லாசர் மரித்துப்போனபோது அங்கு கூடியிருந்த யூதர்கள் இயேசுவைகுறித்துக் கூறிய வார்த்தைகளே இன்றைய தியான வசனம். குருடனுடைய கண்களைத் திறந்த அவரால் லாசரைச் சாகாமலிருக்கச் செய்திருக்கவும் முடியும். ஆனால் தேவனது சித்தம் அதனைவிட மேலானது. லாசர் சாகவேண்டும்; அவனை நான்காம் நாளில் உயிரோடு எழுப்பவேண்டும், அதன்மூலம் கிறிஸ்து மகிமைப்படவேண்டும்.  அவன் சாகாமல் இருந்தால் இவை நடைபெற்றிருக்காது. 

இதுபோலவே கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோதும் நடந்தது. "ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்." ( லுூக்கா 23: 35)

ஆனால் கிறிஸ்து மரித்து கிறிஸ்து மகிமையடைய வேண்டுமென்பதே பிதாவின் சித்தம்.அதன்மூலமே அவர் இந்த மகிமையை அடைந்தார். இதனையே நாம், "என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்." ( எபிரெயர் 2: 9) என்று வாசிக்கின்றோம். 

நமது வாழ்விலும் சிலவேளைகளில் நம்மைக் குறித்துச் சிலர் இதுபோல அற்பனான காரியங்களைப்  பேசலாம். ஆனால் தேவனோடு நாம் உறவில் வாழும்போது தேவன் தனது சித்தத்தை நமக்கு வெளிப்படுத்துவதால் நாம்  கவலைப்படாமல் இருக்க முடியும். சர்வ வல்லவரான தேவன் நம்மோடு இருந்து நமது முன்னிலைமையிலும் பின்னிலைமையை உயர்த்தும்போது கிறிஸ்துவின் மகிமை நம்மூலம் மற்றவர்களுக்கு வெளிப்படும். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,466
'ஆதவன்' 💚பிப்ருவரி 11, 2025. 💚செவ்வாய்க்கிழமை

"நான்சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்." ( சங்கீதம் 40: 17)

இன்றைய தியான வசனம் தாவீது ராஜா தனது நிலைமையைக்குறித்து தேவனுக்குத் தெரியப்படுத்தி ஜெபிக்கும் ஜெபமாக உள்ளது. இந்த வசனத்தின் முற்பகுதியில் தாவீது தனது நிலைமையை தேவனுக்கு எடுத்துக் கூறுகின்றார். "நான்சிறுமையும் எளிமையுமானவன்" என்று அறிக்கையிடுகின்றார்.

தாவீது ராஜாவாக இருந்தாலும் அது அவரது வாழ்வில் உடனடியான வளர்ச்சியல்ல.  குடும்பத்தில் அற்பமாக எண்ணப்பட்டார்; சவுலினாலும் சொந்த மகனாலும் அவருக்கு வாழ்வில் நெருக்கடிகள் வந்தன. அவரது உயிரைப்பறிக்க அவர்கள் தொடர்ந்து முயன்றனர். தொடர்ந்து பல எதிரி ராஜாக்களுடன் போரிடவேண்டியிருந்தது. ஆனால் தேவன் எளியவனாகிய தாவீதை கிருபையால் தங்கி வழிநடத்தினார். 

தேவனோடு ஐக்கியத்தில் அவர் வாழ்ந்தார். எனவே, தேவனது உடனிருப்பை தாவீது உணர்ந்திருந்தார். எனவேதான்  அவர் இந்த ஜெபத்தில் கூறுகின்றார், "கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர், எனவே எனக்கு உதவி செய்ய தாமதிக்காமலிரும்" என்று. ஆம், அவர் வேண்டியது போலவே தேவன் தாவீதின்மேல் நினைவாயிருந்து அவரை எல்லா இக்கட்டுகளுக்கும் எதிரிகளுக்கும் விடுவித்து  நடத்தினார். 

அன்பானவர்களே, இந்த உறுதி நமக்கும் இருக்கவேண்டியது அவசியம். தாவீது கூறுவதுபோல நம்மால் "கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்" என்று கூறிட முடியுமா? தேவனோடு நமக்குத் தெளிவான உறவு இருக்குமானால் மட்டுமே நம்மால் இப்படிக்கூற முடியும். 

அப்போஸ்தலரான பவுல் இந்த உறுதி கொண்டவராக இருந்தார். தனது ஊழியத்தில் தேவன் துணையாக இருந்து நடத்தியதை அவர் உணர்ந்திருந்தார். எனவே அவர் கூறுகின்றார், "கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்." (2 தீமோத்தேயு 4: 17) இதனால்தான் பவுலின் நிரூபங்கள் இன்றும் நமது ஆவியை உயிர்ப்பிக்கின்றவையாக இருக்கின்றன.

தேவனது உடனிருப்பு இருக்குமானால் பவுல் கூறுவதுபோல சிங்கம் போன்ற கொடிய துன்பங்கள் நம்மை எதிர்கொண்டாலும் நாம் பலப்பட்டவர்களாக இருக்க முடியும். ஆனால் எல்லாவற்றுக்கும் அடிப்படை இன்றைய தியான வசனத்தில் தாவீது கூறுவதுபோன்று, "நான்சிறுமையும் எளிமையுமானவன்" என்று நம்மைத் தாழ்த்தக்கூடிய மனநிலை. மேடான இடத்திலிருந்து தண்ணீர் எப்படி தாழ்ந்த இடத்தை நோக்கிப் பாயுமோ அதுபோலவே தேவனது கிருபை தாழ்ந்த இதயமுள்ளவர்கள்மேல் பாய்கின்றது.

"அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்." ( லுூக்கா 1: 48) என்று அன்னை மரியாள் தன்னை அடிமை என்றுத் தாழ்த்தவில்லையா? அதனால்தான் எல்லாச் சந்ததிகளும் அவரைப் பாக்கியவதி என்கின்றார்கள். எளிமையான மனதுள்ளவர்களாக வாழ்வோம்; அப்போது கர்த்தர் நம்மேல் நினைவாயிருப்பார். நமக்குத் துணையாக இருந்து நம்மை விடுவிப்பார். 

வேதாகமத் தியானம் - எண்:- 1,467
'ஆதவன்' 💚பிப்ருவரி 12, 2025. 💚புதன்கிழமை

"மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது." ( லுூக்கா 15: 31)

நாம் ஒரு தகப்பனுக்குள்ள உரிமையோடு,  உறவோடு தேவனோடு வாழவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். நாம் பிச்சைக்காரர்களல்ல; உரிமையுள்ள பிள்ளைகள். அந்த உரிமையோடு நாம் வாழ்வதையே  அவர் எதிர்பார்க்கின்றார். ஆனால் பலரும் இன்று பிச்சைக்காரர்களாகவே தேவனுக்குமுன் நின்று பல்வேறு விண்ணப்பங்களுடன் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். 

நமது குடும்பத்தை எடுத்துக்கொள்வோம். நாம் ஒரு தாய் தந்தையருக்கு மகனாக, மகளாக பிறந்திருக்கின்றோமென்றால் அவர்களுக்கு உரிய அனைத்திலும் நமக்கு உரிமை உண்டு. நாட்டின் சட்டம் கூட அதனையே சொல்கின்றது. அந்தத் தகப்பனோ தாயோ அதனை மறுக்காதவரை அவர்களது  சொத்தில் பிள்ளைகளுக்கு பூரண உரிமை உண்டு. 

இந்த நீதியையே தேவனும் பின்பற்றுகின்றார். அதனையே அவர் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். தப்பனிடம் வற்புறுத்தி சொத்துக்களை கேட்டு வாங்கிய இளைய மகன் அனைத்தையும் இழந்து, பின்னர் மனம் திரும்பி தகப்பனிடம் வந்தபோது தகப்பன் அவனை ஏற்றுக்கொண்டான். மட்டுமல்ல, அந்த மகன் திரும்பி வந்ததை மகிழ்வுடன் கொண்டாடுகின்றான். இது மூத்த மகனுக்கு சற்று எரிச்சல் ஏற்படுத்துகின்றது. அதனைத் தகப்பனிடம் வெளிப்படுத்துகின்றான். 

அந்த உவமையில் இந்த இடத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த மேலான சத்தியத்தை நமக்கு வெளிப்படுத்துகின்றார், "மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது." ஆம் அன்பானவர்களே, நாம் தேவனோடு உறவோடு வாழும்போது தேவனுக்குரிய அனைத்துக்கும் நாம் இயல்பிலேயே உரிமையுள்ளவர்கள் ஆகின்றோம். மற்றவர்களைப்போல் நாம் கெஞ்சிக்கொண்டு அலையவேண்டியதில்லை. அதாவது, நாம் தேவனது ராஜ்யத்தையும் அவரது நீதியையும் தேடுபவர்களாக ஆவிக்குரிய வாழ்க்கை வாழும்போது நாம் அவரது பிள்ளைகளாகின்றோம். 

எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார்,  "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்". (மத்தேயு 6:33) ஒரு பிச்சைக்காரனுக்கு இரக்கப்பட்டு நாம் சில காரியங்களைக் கொடுக்கலாம். ஆனால் மேலான செல்வங்களை கேட்காமலேயே சொந்த பிள்ளைகளுக்கு நாம் கொடுப்போமல்லவா? அப்படியே தேவனும் "உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" என்கின்றார். 

அன்பானவர்களே, நாம் தேவனுக்கு மகனாக / மகளாக மாறி எப்போதும் அவரோடேயே நாம் இருக்கவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். உலகத்தின் பாவ நாட்டங்களை நாம் பின்பற்றி வாழ்வோமானால் அவரோடு நமக்கு நெருங்கிய உறவு இருக்க முடியாது. பாவ நாட்டங்களையும் உலக மனிதர்களைப்போன்ற ஆசை இச்சைகளையும் விட்டு எப்போதும்  அவரோடு வாழ முயலுவோம். அப்போது அவர் நம்மைப்பார்த்தும் கூறுவார், "மகனே / மகளே  நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ள தெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது." என்று. 


வேதாகமத் தியானம் - எண்:- 1,468
'ஆதவன்' 💚பிப்ருவரி 13, 2025. 💚வியாழக்கிழமை

"மரம் நல்லதென்றால், அதன் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதன் கனியினால் அறியப்படும்." ( மத்தேயு 12 : 33 )

மனிதர்களைப்பற்றி நாம் அறிந்துகொள்ள அவர்களை மரங்களுக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து ஒரு உண்மையினை  விளக்குகின்றார். பொதுவாக நாம் மனிதர்களது  பேச்சு மற்றும் செயல்களைப்பார்த்து  ஒரு  சிலரை நல்லவர்கள் என்றும் சிலரைக் கெட்டவர்கள் என்றும் எண்ணிக்கொள்கின்றோம். பல அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வைத்திருப்பது இப்படித்தான். 

அரசியல்வாதிகள் பொதுவாகவே பொய்யின் பிறப்பிடமாக இருக்கின்றனர். ஆட்சியைப்பிடிக்க எந்த பொய்யையும் கூற அவர்கள் அஞ்சமாட்டார்கள். தங்கள் கூறுவதை நிறைவேற்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் கூறுவார்கள்.  உதாரணமாக, சமீபத்தில் ஒரு கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்சம் செலுத்துவோம் என்று கூறினார்கள். இது முடியாத காரியம் என்றாலும் அவர்கள் சொன்னார்கள். அறிவில்லாத மக்களும் நம்பினார்கள். 

ஆம் அன்பானவர்களே, நல்லவர்கள்போல பேசும் எல்லோரும் நல்லவர்களல்ல. அவர்களது செயல்பாடாகிய கனிகள்தான் அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்பதனை வெளிப்படுத்தும். மரமானது அதன் கனியினால் அறியப்படும். ஆட்சிக்கு வந்தபின்னர் அரசியல்வாதிகளது அவலட்சணமான கனிகள் உலகுக்குத் தெரியவருகின்றன. 

அரசியலில் மட்டுமல்ல, நமது குடும்பங்களிலும் நாம் பணி  செய்யும் இடங்களிலும் இத்தகைய மனிதர்களைப் பார்க்கலாம். தேவனுக்கு ஊழியம் செய்யும் ஊழியர்களிடையேயும் இத்தகைய மனிதர்களைப் பார்க்கலாம். அழகான கவர்ச்சிகரமான பிரசங்கம் செய்யும் எல்லோரும் நல்லவர்களாக இருப்பதில்லை. அவர்கள் வெளிக்காட்டும் பண்புகளே அவர்களது உண்மைத் தன்மையினை உலகுக்கு உணர்த்தும்.

நாம் உலகினில் எல்லா மனிதர்களையும் தனிப்பட்ட முறையில் அறிந்து அவர்களைக் கணிக்க முடியாவிட்டாலும் பொது வாழ்க்கையில் இருக்கும் மனிதர்களையாவது அவர்களது செயல்களைப்பார்த்து நாம் கணிக்கமுடியும். ஆனால் இன்று மக்கள் பொதுவாகவே யாருக்கு அதிக மக்கள் ஆதரவு இருக்கின்றதோ அவர்களை நல்லவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர்.  இப்படித்தான் இன்றைய இளைஞர்கள் நடிகர்கள் திரைப்படத்தில் நடிப்பது உண்மையென நம்பி  அவர்களை நல்லவர்கள் என்று எண்ணி அவர்கள்பின் ஓடுகின்றனர்.

"நல்லமரம் கெட்டகனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்டமரம் நல்லகனிகளைக் கொடுக்கமாட்டாது." ( மத்தேயு 7: 18) என்றார் இயேசு கிறிஸ்து. கிறிஸ்துவோடு நாம் ஒட்டவைக்கப்படும்போதுதான் நாம் கிறிஸ்துவின் பண்புகளைக் கொண்டவர்களாக வாழ முடியும். நமது வேர் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுப் பரிசுத்தமாக இருக்குமானால் மட்டுமே நாம் பரிசுத்தமாக இருக்க முடியும்; நல்ல கனிகளை நாம் கொடுக்கிறவர்களாக வாழமுடியும். ஆம், "வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும்." ( ரோமர் 11 : 16 )

எனவே நாம் சுயமாக முடிவெடுத்துச் சிலரது செயல்களைப் பார்த்து நல்லவர்கள், கெட்டவர்கள் என்று முடிவெடுக்காமல் அவர்கள் வெளிப்படுத்தும் கனிகளைக் கவனித்துப்பார்ப்போம். மரம் நல்லதென்றால், அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டதென்றால், அதன் கனியும் கெட்டதாகவே இருக்கும். ஒரு மனிதனது வேரானது கிறிஸ்துவோடு இணைந்து பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் அவனிலிருந்து வெளிப்படும் கனிகளும் பரிசுத்தமாயிருக்கும்.

மற்றவர்களும் அரசியல்வாதிகளும் மட்டுமல்ல, நாமும் நல்ல கனி கொடுப்பவர்களாக மாறவேண்டுமானால் கிறிஸ்துவோடு நம்மை இணைக்கவேண்டியது அவசியம். இல்லையானால் மற்றவர்களை குறைகூறும் நாமும் நல்ல கனிகொடுக்க முடியாது.  "நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15: 5) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்துவோடு நம்மை இணைத்து உலகுக்குக்  கனிகொடுப்பவர்களாக வாழ முயற்சியெடுப்போம். 

  
வேதாகமத் தியானம் - எண்:- 1,469
'ஆதவன்' 💚பிப்ருவரி 14, 2025. 💚வெள்ளிக்கிழமை

"மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது." ( ஏசாயா 66: 3)

இன்றைய தியான வசனம், துன்மார்க்க வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தேவனுக்கு பலிகளையும் காணிக்கைகளையும் ஆராதனைகளும் செலுத்தும் மக்களைக்குறித்து கூறப்பட்டுள்ளது. இந்த துன்மார்க்கர்கள் தங்களது பாவச் செயல்பாட்டில் தொடர்ந்து விருப்பமுள்ளவர்களாகவே இருக்கின்றனர் என்று இந்த வசனம் கூறுகின்றது. 

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஆடு மாடுகளை தேவனுடைய சந்நிதியில் கொன்று அவைகளின் இரத்தத்தை  தங்கள்மேல் தெளித்து பாவ மன்னிப்பு பெறுவது குறித்து நாம் லேவியராகமத்தில் வாசிக்கலாம். உண்மையான மனம்திரும்புதல் இல்லாமல் இப்படிக் கடமைக்காகச் சில செயல்பாடுகளைச் செய்யும் மக்களை இன்றைய தியான வசனம் குறிப்பிடுகின்றது. 

இன்று இத்தகைய பலிசெலுத்துதல் இல்லையெனினும் நாம் மிருகங்களின் இரத்தத்தைவிட மேலான இரத்தமான கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தை நமது ஆத்தும மீட்புக்காக பெற்றுள்ளோம். எனவே, தேவ சந்நிதியில் நாம் ஆராதனை செய்யும்போது அல்லது ஆலயங்களுக்கு என பெரிய காணிக்கைகளைச்  செலுத்தும்போது இதனை நாம் மனிதில் கொண்டு நம்மைத் திருத்திக்கொள்ள சில காரியங்களை இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

தேவ சந்நிதியில் மாட்டை பலிக்காக கொல்லும் மனிதன் தனது  உடன் சகோதரனைக் கொல்வதுபோன்ற செயலை அவனுக்கு எதிராகச் செய்பவனாகவும், ஆட்டைப் பலிசெலுத்துபவன் தனக்கு நாயைப்போல விசுவாசமாக உழைப்பவனுக்கு கழுத்தறுப்பதுபோல துரோகம் செய்பவனாகவும், காணிக்கை செலுத்துபவன் அருவருப்பான பன்றியின்  இரத்தத்தைக்  காணிக்கை செலுத்துவதுபோல அருவருப்பான தவறான வழிகளில் சம்பாதித்த பணத்தைத் தேவனுக்கென்று காணிக்கை செலுத்துபவனாகவும், தேவனுக்கு ஆராதனை செய்கிறேன் என்று கூறிக்கொள்பவன் விக்கிரக ஆராதனை செய்பவனாகவும்  இருக்கிறான் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

இன்றைய தியான வசனம் தொடர்நது கூறுகின்றது, "இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது" என்று. அதாவது இவர்களிடம் யாரும் இப்படிச் செய் என்று கூறாமல் அவர்களாகவே இப்படிச் செய்கிறார்கள். அவர்களது இயற்கைக் குணமே  அவர்களை இப்படிச் செய்ய வைக்கின்றது. அப்படிச் செய்வதில் அவர்கள் விருப்பமுள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள். 

பலிகளும் ஆராதனைகளும் காணிக்கைகளையும் செலுத்தும் நாம் இப்படிப் பிற  மனிதர்களை நமது பேச்சினாலும் செயல்களாலும் கொல்லுகிறவர்களாகவும், நாயைப் போல நமக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு துரோகமாக  கழுத்தறுக்கிறவர்களாகவும், பன்றி இரத்தத்தைப் போல அசுத்தமானவற்றை தேவனுக்கு காணிக்கை என படைக்கிறவர்களாகவும், பொருளாசை எனும்   விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கின்றோமா என்பதனை எண்ணிப்பார்ப்போம். அப்படிச் செய்துகொண்டிருப்போமானால் நம்மை இனியாவது திருத்திக்கொள்வோம்.  

இப்படி மக்களுக்கு அறிவுறுத்தும் தேவனுடைய மேலான வார்த்தைகளை பல்வேறுமுறைக் கேட்டும் தங்களைத் திருத்திக்கொள்ள விருப்பமில்லாத மக்களைப் பார்த்துத் தொடர்ந்து அடுத்த வசனத்தில் தேவன் கூறுகின்றார், "நான் கூப்பிட்டும் மறுஉத்தரவு கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்." ( ஏசாயா 66: 4)

தேவனையுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து நமது தவறுகளைத் திருத்திக்கொள்வோம். தேவனுடைய பயங்கரம் நம்மேல் வராமல் காத்துக்கொள்வோம்.

வேதாகமத் தியானம் - எண்:- 1,470
'ஆதவன்' 💚பிப்ருவரி 15, 2025. 💚சனிக்கிழமை

"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது." ( சங்கீதம் 42: 1)

இன்றைய தியான வசனத்தை நாம் ஏற்கெனவே "ஆதவன்" தியானத்தில் தியானித்துள்ளோம். ஆனால் இன்று புதிய ஒரு கண்ணோட்டத்தில் இந்த வசனத்தை நாம் தியானிக்கப் போகின்றோம். தாவீது ராஜா இந்தத் தியான  வசனத்தில் தனது மனதின் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார். அவரது ஆத்துமா ஏன் தேவனை வாஞ்சித்துக் கதறுகின்றது என்பதனை இதே சங்கீதத்தின் மூன்றாவது வசனத்தில் கூறுகின்றார்:- 

"உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று." ( சங்கீதம் 42: 3) என்கிறார். அதாவது அவரது எதிரிகள் அவரைக் கிண்டல் செய்கின்றனர். "நீ என்ன பெரிய பக்திமானா? நீ தேவனை நோக்கி ஜெபித்து என்ன பலன்? நீ ஜெபிக்கும் உனது தேவன் உண்மையுள்ளவர் என்றால் இப்போது அவர் எங்கே? ஏன் உன் ஜெபத்துக்கு அவர் பதிலளிக்கவில்லை? என்பதுபோன்ற பேச்சுக்களால் வேதனையுற்ற அவர் கண்ணீரோடு ஜெபிக்கின்றார். அந்த வேதனை பாலை நிலத்தில் தண்ணீருக்காக மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல இருக்கின்றது என்கின்றார். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துச் சிலுவையில் தொங்கியபோதும் மக்கள் இதுபோலவே அவர் மனதினை வேதனையுறச் செய்தனர். "மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்." ( மத்தேயு 27: 42, 43) என்று வாசிக்கின்றோம். 

தாவீது கதறியதுபோல இயேசு கிறிஸ்துவும் இந்த வேதனையில் சிலுவையில் கதறினார். "ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்." ( மத்தேயு 27: 46) ஆனால், பிதாவாகிய தேவன் அவரைக் கைவிடவில்லை; மகிமையான வாழ்வை அவருக்கு அளித்தார். 

ஆம் அன்பானவர்களே, இந்த உலகத்தில் நாம் ஒருவேளை இன்று இதுபோல மற்றவர்களால் அற்பமாக, அவமானமாக எண்ணப்படலாம். "இயேசு, இயேசு, என்று கூறிக்கொண்டு ஜெபித்துக்கொண்டு இருக்கிறானே இவன் / இவள்  ஜெபிக்கும் இயேசு உண்மையுள்ளவரென்றால் ஏன் இவன் / இவள் இப்படியே இருக்கிறான் / ள் ? வாழ்வில் ஒரு மாற்றத்தையும் காணமுடியவில்லையே என்று எண்ணிக்கொள்ளலாம், சிலர் வெளிப்படையாகவே இப்படிக் கூறலாம். ஆனால் நீரோடையை வாஞ்சித்துக் கதறுவதுபோன்ற நமது ஜெபங்கள் வீணாகாது.  தேவன் நமக்குப் பதில் செய்யாமல் இருக்கமாட்டார். தாவீது ஜெபித்ததுபோல; இயேசு கிறிஸ்து ஜெபித்ததுபோல,  தொடர்ந்து ஊக்கமுடன் ஜெபிப்போம்.     


வேதாகமத் தியானம் - எண்:- 1,471
'ஆதவன்' 💚பிப்ருவரி 16, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை

"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன." (யோவான் 20:31)

இன்று நற்செய்தி அறிவிப்பு என்ற பெயரில் பல்வேறுவிதமான  குழப்படியான போதனைகள் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். கிறிஸ்துவைவிட தங்களையே முதன்மைப்படுத்தும் ஊழியர்கள், புனிதர்களை முன்னிலைப்படுத்தும் திருச்சபைகள், அதிசயம், அற்புதம் என உலக ஆசீர்வாதங்களை மட்டுமே ஆன்மிகம் என்ற பெயரில் போதிக்கும் அவலம், இவைபோன்றவை  கிறிஸ்தவத்தின் சாபக்கேடாக  இருப்பது மறுக்கமுடியாத உண்மை.

சுவிசேஷம் ஏன் எழுதப்பட்டது என்பதற்கும் இன்று கிறிஸ்தவ உலகில் நடக்கும் தப்பறையான நிலைமைகளுக்கும் விளக்கமாக அப்போஸ்தலரான யோவான் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார்.  அதாவது, நற்செய்தி அறிவிப்பு என்பது,  முதலில் இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று மக்களுக்குத் தெளிவுபடுத்துவது. காரணம், அப்படி மக்கள் தெளிவடையும்போது மட்டுமே அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடைய முடியும்.  மனித வாழ்க்கை இந்த உலகோடு முடிவடைவதல்ல; மாறாக என்றும் முடிவில்லா ஒரு வாழ்க்கை மனிதர்களுக்கு உள்ளது. அதுவே நித்திய ஜீவன் அல்லது நிலைவாழ்வு.

இப்படி, இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாம் விசுவாசிக்கும்படியாகவும், அப்படி விசுவாசித்து அவருடைய பெயரால் நித்தியஜீவனை அடையும்படியாகவும், சுவிசேஷம் எழுதப்பட்டுள்ளது என்று கூறுகின்றார். ஆனால் இன்றைய பெரும்பாலான சுவிசேஷ அறிவிப்புகளில் கிறிஸ்துவும் அறிவிக்கப்படுவதில்லை நித்திய  ஜீவனைப் பற்றியும் பலரும் பேசுவதில்லை. ஆனால் தேவனோ, "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், சித்தமுள்ளவராயிருக்கிறார்." (1 தீமோத்தேயு 2: 4) அதற்காகவே தனது அடியார்களைக்கொண்டு சுவிசேஷத்தை எழுதும்படிச் செய்தார். 

ஆனால் இன்று ஏனோதானோ மனநிலையில் ஏதேதோ பேசுகின்றார்கள். சம்பந்தமில்லாமல் பாரம்பரிய வழிபாடுகளைக் கைக்கொண்டு வருகிறார்கள். ஆனால் இவை எதுவும் நம்மை,  நமது ஆத்துமாவை இரட்சிப்புக்கு நேராக நடத்துவதில்லை.  பாரம்பரிய சடங்குமுறை வழிபாடுகள் தேவனை அறிய  உதவுவதுமில்லை.

"தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."  (யோவான் 3:16) என்று வேதம் கூறுகின்றது. ஆனால், நாம் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையவேண்டும் என்று பிதாவாகிய தேவன் கொண்ட இந்த மேலான சித்தத்தையும் அதற்காக அவர் தனது குமாரனை உலகினில் அனுப்பியதையும்  தெளிவுபடுத்தி போதிக்காமல் உலக ஆசீர்வாதங்களையே பலரும் போதித்துக்கொண்டும் அதற்காகவே விசுவாசிகளை வேண்டுதல்கள் செய்யச் சொல்லியும் பழக்கப்படுத்தியுள்ளனர்; இவர்கள் தங்களை தேவ ஊழியர்கள் என்றும் கூறிக்கொள்கின்றனர்.

அன்பானவர்களே, பிதாவாகிய தேவனால் உலகினில் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவே பிதாவோடு நம்மை இணைப்பவர். அவர் மட்டுமே நமக்காக பிதாவிடம் பரிந்து பேசமுடியும். "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது." (1 தீமோத்தேயு 2: 5, 6) என்று வாசிக்கின்றோம்.

எனவே நாம் முதலில் கிறிஸ்துவிடம் அசைக்கமுடிடியாத விசுவாசம் கொண்டவர்களாக வாழவேண்டும். அவர் மட்டுமே நமக்காக பிதாவிடம் பரிந்து பேச முடியும் என்பதை நம்பவேண்டும். அவரே நம்மை பாவத்திலிருந்து விடுவித்து நித்திய ஜீவனுக்கு நேராக வழிநடத்த முடியும் என்பதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இவைகள் அனைத்தையும்  ஏற்றுக்கொள்பவர்களே மெய்யான கிறிஸ்தவர்கள். 

எனவேதான் "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன." என்கின்றார் அவருடைய அன்புச் சீடனாகிய யோவான். வேதாகம வசனங்களை விசுவாசிப்போம்;  ஏற்றுக்கொள்வோம்; கீழ்ப்படிவோம்; நித்தியஜீவனுக்குப் பங்குள்ளவர்கள் ஆவோம். 

  
வேதாகமத் தியானம் - எண்:- 1,472
'ஆதவன்' 💚பிப்ருவரி 17, 2025. 💚திங்கள்கிழமை

"நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்". (ரூத் 1:16)

இன்றைய தியான வசனம் மோவாபிய பெண்ணான ரூத் கூறுவதாகும். ரூத் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட யூத இனத்தைச் சார்ந்தவளல்ல. ஆனால், யூதரான தனது மாமியாரை அதிகமாக  நேசித்ததால் மாமியார் வழிபடும் கர்த்தரையே வழிபட திடனாக முடிவெடுத்தவள். அதற்காக தனது சொந்த நாட்டையும் மக்களையும் விட்டு தனது மாமியாரைப் பற்றிக்கொண்டு அவளோடு யூதாவுக்கு வந்தவள்.

தனது கணவன், இரண்டு மகன்களோடு  பஞ்சம்பிழைக்க மோவாபிய நாட்டில் சென்று வாழ்ந்தவள் தான் ரூத்தின் மாமியார் நகோமி. ஆனால் அவளது கணவனும் இரண்டு மகன்களும் இறந்தபின்னர் தனது சொந்த நாட்டிற்குத் திரும்புகின்றாள் அவள். அப்போது தனது இரண்டு மருமகள்களையும் ஆசீர்வதித்து திரும்பிச்சென்று தங்கள் பெற்றோருடன் தங்கிவாழவும் வேறு ஒருவரை மணமுடித்துக்கொள்ளவும் கூறுகின்றாள். அப்போது ஒரு மருமகள் மாமியாரை முத்தம்செய்து திரும்பிச் சென்றுவிட்டாள்.

ஆனால் இன்னொரு மருமகளான ரூத்தோ, "நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்". என்று கூறி மாமியார் நகோமியோடு யூதாவுக்குத் திரும்பினாள். 

அன்பானவர்களே, இப்படி ரூத்தைப்போல நாம் தேவனிடம் வைராக்கியமாக இருக்கின்றோமா? மாமியாரை நேசிப்பது ஒருவேளை ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் யாரும் தங்களது இறை நம்பிகையினை எளிதில் மாற்றிவிடுவதில்லை. ரூத்தோ, "உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்" என்று உறுதியாகக் கூறுகின்றாள்.  

தேவனுக்காக அவள் எடுத்த இந்த வைராக்கியமாக முடிவினை தேவனும் கனம் பண்ணினார். நமது இரட்சகராக இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் வரிசையில் ரூத்தின் பெயரும் இடம்பெற தேவன் கிருபை செய்தார். மத்தேயு முதல் அதிகாரத்தில், "போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;  ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்;(மத்தேயு 1:5,6)  என்று வாசிக்கின்றோம்.

நாம் அதிகமாக பேசும் பழைய ஏற்பாட்டு பக்தனாகிய தாவீது ராஜாவின் பூட்டிப்பாட்டியானாள் இந்த ரூத்து. இதனை நாம் ரூத் புத்தகத்திலும் வாசிக்கலாம், "சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான். ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்." (ரூத் 4:21, 22)

இன்றும் பிற மார்கங்களிலிருந்து மனம்திரும்பி கிறிஸ்தவத்துக்கு வந்தவர்கள் ரூத்தைப்போல பரம்பரைக் கிறிஸ்தவர்களைவிட கிறிஸ்துவை மெய்யாகவே அறிந்து நேசிப்பவர்களாக இருக்கின்றனர். விசுவாசத்தில் உறுதியாக இருக்கின்றனர். "உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்" என்று ரூத் கூறுவதுபோல பழைய மத நம்பிக்கைகளை விட்டு கிறிஸ்துவின்மேல் பற்றுகொண்டவர்களாக மாறிவருகின்றனர். 

ஆம் அன்பானவர்களே, "எல்லா தெய்வமும் ஒன்றுதான்; எல்லா ஆறுகளும் ஒரே கடலில்தான் சென்று சேருகின்றன" என்று மூடத்தனமாக பேசிக்கொண்டும் மனதில் எண்ணிக்கொண்டும் செயல்படுவோமானால் நாம் விசுவாசத்தில் குறைவுள்ளவர்கள் என்று பொருள். தனது பரம்பரைத் தெய்வத்தையும் உறவுகளையும் கர்த்தருக்காகத் தியாகம் செய்த ரூத்தைப்போல நாம் உறுதியாக இருப்போமானால் நம்மையும் தேவன் கனம்பண்ணுவார்; ஆசீர்வதித்து நடத்துவார்.  


வேதாகமத் தியானம் - எண்:- 1,473
'ஆதவன்' 💚பிப்ருவரி 18, 2025. 💚செவ்வாய்க்கிழமை

"இதோ, கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும்." ( எரேமியா 30: 23)

தேவனுடைய வார்த்தையின்படி வாழும்போது மட்டுமே நாம் அவருக்கேற்ற ஒரு வாழ்க்கை வாழமுடியும். இல்லாவிடில் துன்மார்க்க எண்ணங்களும் செயல்பாடுகளும் நம்மில் குடிகொண்டு நம்மை துன்மார்க்க வாழ்க்கையினுள் கொண்டுசென்றுவிடும். இப்படி வாழ்ந்தோமானால் நமது  நிலைமை எப்படி முடியும் என்பதனையே இன்றைய தியானவசனம்  நமக்கு எடுத்துக்கூறி நம்மை எச்சரிக்கின்றது. 

துன்மார்க்கம் என்பது ஒரேநாளில் மனிதனில் செயல்படும் காரியமல்ல. அது ஒரு தொடர் நிகழ்வு. சிறிய சிறிய காரியங்களில் நாம் தேவனையும் அவரது வார்த்தைகளையும் அசட்டை செய்யும்போது இறுதியில் அது நம்மை முழுவதும் துன்மார்க்கத்துக்குள் கொண்டு சென்றுவிடும். மதுவுக்கு அடிமையான பல இளைஞர்களும் கூறும் சாட்சி இதனை நமக்குப் புரியவைக்கும். 

பல இளைஞர்கள் தங்கள்  நண்பர்களால் மதுவுக்கு அடிமையானதாகக் கூறுகின்றனர். முதலில் சிறிய அளவில் "ஒருபெக்" (peg) என்றுதான் மதுவைச் சுவைக்கின்றனர். பின்னர் அது படிப்படியாக அதிகரித்து முழுகுடிகாரர்களாக ஒருவரை மாற்றுகின்றது. இதுபோலவேதான்  பாவமும். தேவ வார்த்தையை முதலில் சிறிதாக மீறி நடந்து தொடர்நது அது துன்மார்க்கத்தில் கொண்டு சேர்கின்றது. ஆனால் தேவன் இப்படித் துன்மார்க்கத்தில் வாழ்பவர்களை நோக்கிக் கூறுகின்றார்,  "கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும்." என்று.

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனவேதான் தனது வார்த்தையின்படி வாழ்பவர்களை கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். "ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது." ( மத்தேயு 7: 24, 25) என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் அவரது வார்த்தையின்படி வாழும்போது உறுதியான மலையின்மேல் வீட்டைக்கட்டிய மனிதனைப்போல உறுதியுள்ள வாழ்க்கை வீட்டினை நமக்காக கட்டியவர்களாக இருப்போம். இல்லையானால் மணலின்மேல் வீட்டைக் கட்டிய மூடனுக்கு ஒப்பாவோம். இன்றைய தியான வசனம் கூறுவதுபோல எந்த நேரத்திலும் கர்த்தருடைய கோபம் அத்தகைய கீழ்ப்படியாத வாழ்க்கை வாழும்போது ஒருவருக்கு நேரிடலாம்.   

புத்தியுள்ள மனிதர்களாக கற்பாறையான இயேசு கிறிஸ்துவின்மேல் நமது வீட்டைக் கட்டுவோம். அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதே அப்படிக் கட்டுவதாகும். அப்படிக் கட்டும்போது நாம் நீதியுள்ள வாழ்க்கை வாழ முடியும்; எத்தகைய புயற்காற்றும் நம்மை மேற்கொள்ள முடியாது. 


வேதாகமத் தியானம் - எண்:- 1,474
'ஆதவன்' 💚பிப்ருவரி 19, 2025. 💚புதன்கிழமை

"என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை." ( ஏசாயா 45: 6)

இன்றைய தியான வசனம் தேவன் எதற்காக நம்மைத் தெரிந்துகொண்டார் என்பதனை விளக்குகின்றது. அதாவது, கர்த்தரைத் தவிர வேறு தேவன் ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் உள்ள மக்கள் அறியப்படும்படிக்கு என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நாம் நமது சாட்சியுள்ள வாழ்க்கை மூலம் அவரை உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்பதற்காக நம்மைத் தெரிந்துகொண்டார்.

இதனையே நாம் அப்போஸ்தலர்ப்பணி நூலில், "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்". ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 ) என்று நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துத் தனது சீடர்களிடம் கூறுவதன்மூலம் அறியலாம். 

இதுவரைக் கர்த்தரைத் தனிப்பட்ட வாழ்வில் அறியாதிருந்த நமக்கு அவர் தன்னை வெளிப்படுத்தியது இதற்காகத்தான் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதனையே இன்றைய தியான வசனத்தின் பிற்பகுதியில், "நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை." என்று கூறப்பட்டுள்ளது. "நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்" என்று கூறுவது பரிசுத்த ஆவியின் வல்லமையினைக் குறிக்கின்றது.  

ஆம் அன்பானவர்களே, இப்படி அவரை அறியாதிருந்த நமக்கு அவர் தன்னை வெளிப்படுத்தி, ஆவியின் அபிஷேகத்தைத் தந்து தேவனுக்கு உண்மையுள்ள சாட்சிகளாய் வாழ நியமித்துள்ளார். இப்படி ஆவியின் வல்லமை பெற்றுத் தேவனுக்கு உண்மையான சாட்சிகளாய் வாழ்வோமானால் அவரால் பெற்ற இரட்சிப்பு நமக்கு வாழ்வில் மதிலாக இருந்து நம்மைக் காத்துக்கொள்ளும். நமது வாயில் கர்த்தரைத் துதிக்கும் துதி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

இதனையே ஏசாயா தீர்க்கத்தரிசி மூலம் தேவன் கூறுகின்றார், "இனிக்கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன்மதில்களை இரட்சிப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய்."( ஏசாயா 60 : 18 ) மட்டுமல்ல, "உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்." ( ஏசாயா 60 : 20 ) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

நமது தேவனைத் தவிர வேறு ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் உள்ள மக்கள் அறியப்படும்படிக்கு நாமே அவருக்குச் சாட்சிகள். இதற்காகவே நம்மேல் நம்பிக்கையுடன் அவரை அறியாதிருந்த நமக்குத் தன்னை வெளிப்படுத்தியுள்ளார் தேவன். அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்வோம். 

அப்படி அறிவிப்பதன்மூலம் தேவனும் நம்மை ஆசீர்வதிப்பார். கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; நமது துக்கநாட்கள் முடிந்துபோகும். சாட்சி வாழ்வு வாழ நம்மையே ஒப்புக்கொடுப்போம்.  


வேதாகமத் தியானம் - எண்:- 1,475
'ஆதவன்' 💚பிப்ருவரி 20, 2025. 💚வியாழக்கிழமை


"என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்: (சேலா). தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்." ( சங்கீதம் 57: 3)

தன்னைக் கொல்வதற்குப் பின்தொடர்ந்த சவுலுக்குத் தப்பி ஓடுகையில் மலையிலிருந்த ஒரு குகையில் தாவீது பதுங்கிக்கொண்டார்.  இன்றைய தியான வசனம் தாவீது அத்தகைய இக்கட்டான வேளையில் தேவனை நோக்கிப் பாடியது. 

தேவன்மேல் தாவீது கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையினை இந்த வசனம் வெளிப்படுத்துகின்றது. "அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்" என்று உறுதியுடன் அறிக்கையிடுகின்றார் தாவீது. இன்றைய தியான வசனத்தின் இரண்டு வசனங்களுக்கு முன் அவர் தேவனிடம் மன்றாடுகிறார். அப்போது அவர்  கூறுகின்றார், "எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்." ( சங்கீதம் 57: 1)

பருந்து வானத்தில் வட்டமிடும்போது தாய்க்கோழியின் சிறகின்கீழ் பாதுகாப்புக்காக ஒதுங்கும் கோழிக்குஞ்சுகளை நாம் பார்த்திருப்போம். அதுபோல, விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன் என்று இந்த வசனத்தில் தாவீது கூறுகின்றார். அதன்பின்பு அவர் கலங்கவில்லை. தேவன்மேல் பாரத்தை வைத்துவிட்டு அமைதியாகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நமக்கு இந்த தியான சங்கீதம் ஒரு வழிகாட்டுதலாக இருக்கின்றது. வெறுமனே ஜெபித்துக்கொண்டிருப்பதல்ல, தாவீது உறுதியாக விசுவாசத்துடன், "தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்." என அறிக்கையிட்டதுபோல நமது இக்கட்டான சூழ்நிலைகளில் விசுவாச அறிக்கையிட்டு பொறுமையாகக் காத்திருக்கவேண்டியது அவசியம்.  அதனைத் தேவன் நிச்சயம் கனம்பண்ணுகிறார். எதிர்மறையான வாழ்க்கைச் சூழலிலும் நாம் சூழ்நிலைகளைப் பாராமல் நமது விசுவாசத்தில் உறுதியுடன் இருக்கவேண்டியது அவசியம். 

புதிய ஏற்பாட்டில் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம் சுகம் பெற்ற பலரும் விசுவாசம் எனும் ஆயுதத்தையே பயன்படுத்தி வெற்றிபெற்றனர். 

இன்றைய தியான வசனத்தைப்போல வேதாகமம் முழுவதும் நமது விசுவாசத்தை வளர்க்க உதவும் பல தேவ வார்த்தைகள் பரவியுள்ளன. எனவே, நாம் வேதாகமத்தை வாசிக்க வாசிக்க நமக்குள் விசுவாசம் உறுதிப்படும். ஆம், "எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை." ( சங்கீதம் 9: 18) நம்பிக்கையோடு நமது பிரச்சனைகளை அவருக்குத் தெரிவித்து தேவனது அதிசயங்களை வாழ்வில் எதிர்பார்ப்போம். தாவீது தனது நம்பிக்கையை வார்த்தைகளால் வெளிப்படுத்தியதுபோல நமது நம்பிக்கையையும் தேவனிடம் அறிக்கையிடுவோம். 

நம்மை விழுங்கப்பார்க்கிறவன் எந்த சத்துருவாக இருந்தாலும் தேவன்  பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, நம்மை இரட்சிப்பார்: தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். "வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார். ( ஏசாயா 59:19) பயப்படாமல் விசுவாசத்தோடு இருப்போம். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,476
'ஆதவன்' 💚பிப்ருவரி 21, 2025. 💚வெள்ளிக்கிழமை

"பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்." (3 யோவான்  1 : 2)

இன்றைய தியான வசனம் பொதுவாக திருமண வீடுகளில் மணமக்களை வாழ்த்த அதிக அளவில் பயன்படுத்தப்படும் வேத வசனமாகும். "நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்" எனும் வார்த்தைகள் இடம்பெறுவதால் இது புதுமணமக்களை வாழ்த்தப்  பயன்படும் வசனமாக இருக்கின்றது. ஆனால், இந்த வசனம் நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர்ந்து அனுபவிக்கவேண்டிய வசனமாகும். 

இந்த வசனம் வெறுமனே ஒருவரை வாழ்த்தாமல் ஒரு நிபந்தனையுடன் வாழ்த்துவதை பெரும்பாலும் நாம் உணர்வதில்லை. அதாவது,  'உன் ஆத்துமா வாழ்கிறதுபோல" எனும் வார்த்தைகள்தான் அந்த நிபந்தனை.  முதலில் நமது ஆத்துமா வாழவேண்டும். அதாவது நமது ஆத்துமா அழிவுக்குத்தப்பி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் மீட்கப்பட்டு வாழ்வடையவேண்டும். அப்படி நமது ஆத்துமா வாழும்போது அதுவே  ஆவிக்குரிய ஆசீர்வாதமாகும்.

இப்படி நமது ஆத்துமா ஆசீர்வாதமாக வாழும்போது, மற்ற எல்லா ஆசீர்வாதங்களும் நமக்கு வாழ்வில் ஏற்படும். இதனையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்." ( மத்தேயு 6: 33) என்று கூறினார். 

மேலும், "உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்." ( நீதிமொழிகள் 11: 25) என்று வேத வசனம் கூறுகின்றது. "உதாரகுணம்" என்பதற்கு ஆங்கில வேதாகமத்தில்  liberal soul எனும் வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பெருந்தன்மையான குணம் அல்லது  தாராளமனப்பான்மை என்றும் கூறலாம். இந்தத் தாராளகுணம் கிறிஸ்து நம்மில் பெருகும்போதுதான் நமக்குள் ஏற்படும். 

இப்படி நாம் நமது ஆத்துமாவில் பெருந்தன்மையான குணத்தோடு வாழும்போது நாம் ஆத்துமாவில் வாழ்கின்றோம் என்று பொருள். இப்படி வாழ்பவர்களைப் பார்த்துதான் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான யோவான்,  "உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்." என்று கூறுகின்றார். 

இதனாலேயே சங்கீத ஆசிரியரும், "என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்". ( சங்கீதம் 86: 2) என்றும், "உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்." ( சங்கீதம் 86: 4) என்றும் மன்றாடுகின்றார். 

நாமும் நமது ஆத்துமா வாழும்படி தேவனைநோக்கி மன்றாடவேண்டியது அவசியம். மட்டுமல்ல, நமது ஆத்துமா வாழும்படியான தேவனுக்கேற்ற செயல்பாடுகளில் ஈடுபடுபடவேண்டியதும் அவசியம். இப்படி நாம் வாழும்போது இன்றைய தியான வசனம் கூறுவதுபோல எல்லாவற்றிலும் நாம் வாழ்ந்து சுகமாக இருப்போம். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,477
'ஆதவன்' 💚பிப்ருவரி 22, 2025. 💚சனிக்கிழமை

"தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 12: 6)

இந்த உலகத்தில் மனிதர்களால் கட்டப்பட்ட வானுயர்ந்த தேவாலயங்கள் பல உண்டு. இந்த ஆலயங்களுக்கு மனிதர்கள் முன்னுரிமைகொடுத்து காணிக்கைகள் கொடுத்தும் திருயாத்திரைகள் சென்றும் ஆராதித்து வருகின்றனர்.  ஆனால் இயேசு கிறிஸ்து வெளிப்படையாக யூதர்களிடம் தன்னைப்பற்றி தேவாலயத்திலும் பெரியவர் என்று குறிப்பிடுகின்றார். இது தேவ தூஷணமாக யூதர்களுக்குத் தோன்றியது. 

இயேசு கிறிஸ்து தேவாலயத்திலும் பெரியவர் என்று தன்னைக் கூறும்போது தானே தேவன் என்று கூறுகின்றார்.   மேலும் இயேசு கிறிஸ்து தன்னைக் குறித்துத்  தெளிவாகக்  கூறினார்:-  "சாலமோனிலும் பெரியவர்" (மத்தேயு 12:42), "யோனாவிலும் பெரியவர்" (மத்தேயு 12:49) "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே இருக்கிறேன்" (யோவான் 8:58) என்று. மேலும் எபிரெயர் நிருபத்தில், "மோசேயைப் பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார்." (எபிரெயர் 3:3) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, இத்தகைய வல்லமையும் மகத்துவமும் உள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அற்பமான நம்மைப்போன்ற மனிதர்களுக்குள் வந்து தங்கிட விரும்புகின்றார். அப்படி அவர் நமக்குள் வந்து தங்கும்போது நாமே அவரது ஆலயமாக மாறுகின்றோம். தேவன் தங்கும் இடம்தான் ஆலயம். "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்" ( யோவான் 14: 23) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?

எனவே நாம் நமது உடலைப்  பரிசுத்தமாய் காத்துக்கொண்டு அவருக்கு ஆராதனை செய்யவேண்டும்.  தேவாலயத்திலும் பெரியவர் நமக்குள் இருப்பதால் நாம் அவருக்கேற்ற புத்தியுள்ள ஆராதனை செய்பவர்களாக வாழவேண்டும். அப்போஸ்தலரான பவுல் இதனால்தான், "அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." ( ரோமர் 12: 1) என்று கூறுகின்றார். 

ஆனால், தேவாலயத்திலும் பெரியவர் நமக்குள் இருக்கின்றார் என்று கூறிக்கொண்டு நாம் ஆலயங்களுக்குச் செல்லாமல் இருப்பது அறிவீனம். அது வீண் பெருமையையே நமக்குள் விதைக்கும். இயேசு கிறிஸ்து தன்னைத்  தேவாலயத்திலும் பெரியவர் என்று கூறினாலும் அவரும் ஆலயத்துக்குச் சென்றுகொண்டுதான் இருந்தார். 

ஆலயத்தில் நாம் விசுவாசிகளோடு ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்துகின்றோம். கூடி  ஜெபிக்கின்றோம், சேர்ந்து ஆராதிக்கின்றோம், நமது ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றோம். மட்டுமல்ல, நமது சாட்சியுள்ள செயல்பாடுகள் ஆலயத்துக்குவரும் மற்றவர்களை கிறிஸ்துவின் அன்புக்குநேராக வழிநடத்திட வாய்ப்பு உருவாகும். 

அன்பானவர்களே, தேவாலயத்திலும் பெரியவரான கிறிஸ்து நமக்குள் வந்து தங்கிட இடம்கொடுக்கவேண்டும்; அத்துடன் நமக்குள் வந்திருக்கும் அவரை நமது சாட்சியுள்ள வாழ்க்கையால் மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டும். இப்படி நாம் வாழும்போது நாம் மெய்யான ஆலயமாக வாழ்வது மட்டுமல்ல, தேவாலயத்திலும் பெரியவர் தொடர்ந்து நமக்குள் இருந்து செயல்படுவார். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,478
'ஆதவன்' 💚பிப்ருவரி 23, 2025. 💚ஞாயிற்றுக்கிழமை

"உமது பரிமளத்தைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளத்தைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." ( உன்னதப்பாட்டு 1: 3)

வேதாகமத்திலுள்ள உன்னதப்பாட்டு எனும் புத்தகம் மற்ற அனைத்து வேத புத்தகங்களையும்விட வித்தியாசமானது.   வெறுமனே பார்க்கும்போது இவை காதல் கவிதைகள் போலவே இருக்கும். ஆம், இவை காதல் கவிதைகள்தான்; ஆனால் இந்தக் காதல் பாடல்கள் கிறிஸ்து எனும் மணவாளனுக்கும் விசுவாசிகளாகிய நமக்கும் இடையேயுள்ள உறவினைக்  குறிப்பாய் உணர்த்துகின்றன. அதாவது, எப்படி ஒரு ஆணும் பெண்ணும் இயற்கையான தூய காதல் உணர்வால் வாழ்வார்களோ அதுபோல நாம் கிறிஸ்துவுடன் வாழ இந்தப்பாடல்கள் நமக்குக் குறிப்பால் உணர்த்துகின்றன. 

கிறிஸ்துவின் அன்பை உணர்ந்துகொண்ட கன்னிகைகளான அவரது விசுவாசிகள்  அவரை நேசிக்கிறார்கள். இதனையே,  "உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." என்று இந்த தியான வசனம் கூறுகின்றது. 

அப்போஸ்தலரான பவுலும்  இதனையே, "நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்." (2 கொரிந்தியர் 11: 2) என்று குறிப்பிடுகின்றார். கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு என அவர் கூறுவது கவனிக்கத்தக்கது. கற்புள்ள கன்னிப்பெண் ஒரே ஒரு ஆணிடம் மட்டுமே அன்பாய் இருப்பாள். அதுபோல நாமும் கிறிஸ்து எனும் ஒரே புருஷனுக்கு நம்பிக்கையுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். 

இன்றைய தியான வசனத்தில் கிறிஸ்துவின் அன்பை உணர்ந்த பக்தன் கூறுகின்றான், "உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளத்தைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." என்று. இதனையே உத்தமமாய் தேவனைப் பின்பற்றுபவர்கள் பெறும் கிறிஸ்துவை அறியும் அறிவுக்கு ஒப்பிடுகின்றார் அப்போஸ்தலரான பவுல். "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." (2 கொரிந்தியர் 2: 14) என்று கூறுகின்றார். 

இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து அடுத்த வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டு வந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்." ( உன்னதப்பாட்டு 1: 4)

மணவாளனுக்குக் காத்திருந்த பத்துக் கன்னியர் உவமையில் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இதனையே கூறினார்.  மணவாளனுக்குக் காத்திருந்தவர்களில் ஐந்துபேர் புத்தியில்லாதவர்கள்; அதாவது ஆயத்தமாய் இல்லாதவர்கள்.  புத்தியில்லாத அந்தக் கன்னியர்கள் தங்கள் விளக்குகளுக்கு  எண்ணெய் வங்கச் செல்லும்போது மணவாளன் வந்துவிட்டார். எனவே அவர்களால் மணவாளனோடு அறையினுள் செல்ல முடியவில்லை. 

"அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாணவீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( மத்தேயு 25: 10 - 12) என்று வாசிக்கின்றோம். 

எனவே அன்பானவர்களே, நாம் புத்தியுள்ள கன்னியர்களைப்போல கிறிஸ்துவாகிய அவர் ஒருவரையே வாழ்வில் தேடுபவர்களாகவும், அவரது பரிமளதைலங்களின்  இன்பமான வாசனையினை நுகர்பவர்களாகவும், அவருக்காக காத்திருப்பவர்களாகவும் அவரைச் சந்திக்க எப்போதும் ஆயத்தமாய் இருப்பவர்களாகவும் வாழவேண்டியது அவசியம்.  அப்படியானால் மட்டுமே நித்தியத்தில் மணவாளனாகிய  அவரோடுகூட மகிழ்ந்திருக்க முடியும். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,479
'ஆதவன்' 💚பிப்ருவரி 24, 2025. 💚திங்கள்கிழமை

"மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்." ( கலாத்தியர் 6: 7)

நமது வாழ்வில் ஏற்படும் தீமையான காரியங்கள், நன்மையான காரியங்கள் இவைகள் அனைத்தும் நமது செயல்களின் பின்விளைவுகளே.  எனவே, கடவுள் நமது வாழ்வில் செய்யும் செயல்களைக்குறித்து நாம் அவரைக் கேலிசெய்ய முடியாது; அல்லது குற்றம்சாட்ட முடியாது. இதனையே இன்றைய தியான வசனம் நமக்குக் கூறுகின்றது. 

நாம் செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் அதற்கேற்ற பிரதிபலன் உண்டு. நெற்பயிரை பயிர் செய்துவிட்டு கோதுமையை அறுவடைசெய்ய முடியாது. துன்மார்க்கத்தில் வாழ்ந்துவிட்டு வாழ்வில் நன்மையை நாம் எதிர்பார்க்கமுடியாது. 

இன்றைய வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் விதைத்தல், அறுத்தல் என்பனவற்றின் மூலம் நன்மை செய்வதையும் அதனால் அடையும் பயனையும்  குறிப்பிடுகின்றார். நன்மைகள் செய்யும்போது அதற்கேற்ற நன்மைகள் நமக்குத் பிரதிபலனாகக் கிடைக்கும் என்பதே அவர் கூறவரும் முக்கிய கருத்து. இதனையே அவர் தொடர்ந்து வரும் வசனத்தில்,  "நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்." ( கலாத்தியர் 6: 9) என்று குறிப்பிடுகின்றார். 

இதுபோலவேதான் மனிதர்களது ஆவிக்குரிய வாழ்க்கையும் இருக்கின்றது. நாம் முழுவதும் உலக ஆசைகளை மனதில் சுமந்துகொண்டு அதற்காக உழைத்துக்கொண்டு ஆவிக்குரிய பிரதிபலன்களை தேவனிடம்  எதிர்பார்க்கமுடியாது. ஆம்,  "தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்." ( கலாத்தியர் 6: 8)

ஆனால் நாம் ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்படுவோமானால் மற்ற ஆசீர்வாதங்களைத் தேவன் நமது வாழ்வில் கூட்டித் தருவார். 

மட்டுமல்ல, இந்த உலகத்தில் நாம் ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் செய்வோமானால் அதற்கேற்ற விளைச்சல்தான் நமக்குக் கிடைக்குமேத்தவிர  ஐந்து ஏக்கர் கொடுக்கும் விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. இதுபோலவே தேவன் ஆவிக்குரிய காரியங்களில் பிரதிபலனைக் கொடுக்கின்றார். இதனையே அப்போஸ்தலரான பவுல், "பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்." (2 கொரிந்தியர் 9: 6) என்று கூறுகின்றார். 

இன்றைய தியான வசனம் கூறுவதுபோல, தேவன் மனிதர்கள் தன்னைக் கேலிசெய்யும் விதத்தில் அற்பனான காரியங்களை ஒருபோதும் செய்யமாட்டார். மனிதர்களைப்போல அவர் அற்பக்  குணமுள்ளவரல்ல. எனவே, தேவன்மேல் நம்பிக்கையாக இருந்து நல்ல செயல்களைச் செய்ய முயலுவோம். நமது வாழ்வில் எதனைச் செய்கின்றோமோ அதற்கேற்ற  பிரதிபலனை நாம் தேவனிடமிருந்து நிச்சயம் பெறுவோம்.   


வேதாகமத் தியானம் - எண்:- 1,480
'ஆதவன்' 💚பிப்ருவரி 25, 2025. 💚செவ்வாய்க்கிழமை

"அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்." ( எபிரெயர் 8: 10) & ( எரேமியா 31: 33)

இஸ்ரவேல் மக்கள் தனக்கு உகந்த வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காக தேவன் மோசேமூலம் பல்வேறு கட்டளைகளைக் கொடுத்திருந்தார். ஆனால் அந்த மக்கள் கட்டளையைக் கட்டளையாகப் பார்த்தார்களேத் தவிர மனித நேயத்தையும் மனிதாபிமானத்தையும் இழந்தவர்களாக இருந்தனர். உதாரணமாக, ஓய்வுநாளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை நோயுற்றிருந்த மக்களிடம் காண்பிக்கவில்லை. 

ஓய்வுநாள் குறித்தக் கட்டளையை யூதர்கள் தவறுதலாகவே புரிந்து மனிதாபமற்ற முறையில் கடைபிடித்து வந்தனர். எனவே  இயேசு கிறிஸ்து இதனை "மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது" ( மாற்கு 2: 27) என்று தெளிவுபடுத்தினார். சுருங்கக் கூறினால் அவர்கள்  இதுபோல தேவனது பல  கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. 

எனவே தேவன் மக்களோடு புதிய உடன்படிக்கை செய்யத் திட்டமிட்டார். இதனை எரேமியா தீர்க்கதரிசிமூலம் கூறினார், "அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்." ( எபிரெயர் 8: 10) & ( எரேமியா 31: 33)

தான் உண்டாக்கும் புதிய உடன்படிக்கை எத்தகையதாக இருக்கும் என்பதையும் தேவன் கூறினார். அதாவது தான் பண்ணிய பழைய உடன்படிக்கையினைப்போல அல்லாமல் புதிய உடன்படிக்கை அவர்கள் கடைபிடிக்கும் வகையில் இருக்கும். அவர்களைப் புறக்கணித்ததுபோல புதிய உடன்படிக்கை மக்களை நான் புறக்கணிப்பதில்லை என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இதனை நாம் "அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எபிரெயர் 8: 9) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் கிருபையினாலும்  சத்தியத்தினாலும் உருவாக்கப்பட்ட புதிய உடன்படிக்கை கற்களில் எழுதப்படாமல் நமது இருதயங்களில் எழுதப்பட்டுள்ளது. மட்டுமல்ல, அது ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினால் எழுதப்பட்டுள்ளது. இதனையே அப்போஸ்தலரான பவுல் கொரிந்தியருக்கு எழுதுகின்றார்:-  "ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது." (2 கொரிந்தியர் 3: 3)

கிறிஸ்துவின் மூலமாய் கொடுக்கப்பட்ட இந்தப் புதிய உடன்படிக்கை நம்மை ஆவியில் உயிர்ப்பிக்கின்றதாக இருக்கின்றது. பழைய உடன்படிக்கைக் கட்டளைகளைக் கைக்கொள்ளாதவன் கல்லெறிந்து கொல்லப்படுவதுபோல புதிய உடன்படிக்கையை மீறும்  மக்கள் கொல்லப்படுவதில்லை. காரணம், "...........அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது." (2 கொரிந்தியர் 3: 6) ஆம் அன்பானவர்களே, நாம் பெற்ற பெரியபேறு இதுதான். 

இந்த உலகத்தில் புதிய உடன்படிக்கையினை மீறுபவர்கள் கல்லெறிந்து கொல்லப்படுவதில்லை என்றாலும் இயேசுகிறிஸ்துவின்  இரத்தத்தால் உண்டான புதிய  உடன்படிக்கையின் மக்களாகியநாம் அவரது உடன்படிக்கையினை மீறி நடப்போமானால் நமக்கு  மிகப்பெரிய ஆக்கினை உண்டு என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. 

ஆம், "தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்." ( எபிரெயர் 10: 29) எனவே, கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் உண்டான புதிய உடன்படிக்கையை மீறிடாமல் அவருக்கேற்ற வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 


வேதாகமத் தியானம் - எண்:- 1,481    
'ஆதவன்' 💚பிப்ருவரி 26, 2025. 💚புதன்கிழமை                                                   
"அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது." ( எபேசியர் 3: 12)

அன்பானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால் நமக்கு மரணத்துக்குப் பின் உள்ள வாழ்வைக்குறித்து தைரியம் கிடைக்கின்றது; அது குறித்த நிச்சயம் உள்ளதால் நம்பிக்கை ஏற்படுகின்றது;. தேவனிடம் சேரும் வாய்ப்பும் உள்ளது. இந்தத் தியான வசனத்துக்கு விளக்கமெழுதுமுன் நான் வலைத்தளத்தில் நாத்தீகவாதிகளின்  இறுதி காலத்தைக்குறித்துத் தேடிப்பார்த்தேன். இரண்டு முக்கிய நாத்தீகவாதிகளின் இறுதி நிலை குறித்து அங்கு கூறப்பட்ட செய்தி ஆச்சரியப்படவைத்தது; மட்டுமல்ல நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியவை அனைத்தும் மெய்யான சத்தியம் என்பதனை உணரச்செய்தன. அவைகளைக் கீழே தருகின்றேன்:- 

ஜோசப் ஸ்டாலின் – (சோவியத் புரட்சியாளர் மற்றும் அரசியல்வாதி). அவரது மரணத்துக்குப்பின் அவர் மகள் ஸ்வெட்லானா நியூஸ்வீக் பத்திரிகை நடத்திய பேட்டியில் கூறினார்,   "என் தந்தை கடினமான மற்றும் பயங்கரமான மரணத்தை அடைந்தார்... கடவுள் நீதிமான்களுக்கு மட்டுமே எளிதான மரணத்தை அளிக்கிறார். கடைசி தருணத்தில், அவர் திடீரென கண்களைத் திறந்து, அறையில் உள்ள அனைவரையும் பார்த்தார். அது ஒரு பயங்கரமான பார்வையாக இருந்தது, பைத்தியக்காரத்தனமான அல்லது கோபமான பார்வை. அவரது இடது கை மேலே உயர்த்தப்பட்டது, அது மேலே ஏதோ ஒன்றை சுட்டிக்காட்டுவதாகவும், அங்கிருந்த அனைவரையும் சபிப்பதாகவும் இருந்தது. அந்த சைகை முழுவதும் அச்சுறுத்தலாக இருந்தது, அவரது முகம் அகோரமாக காட்சியளித்தது ... மறுநாள் காலையில் அவர் இறந்துவிட்டார்."

வால்டேர் – பிரபலமான கிறிஸ்துவ எதிர்ப்பு நாத்திகவாதியான இவர் தனது இறுதி நாளில் மருத்துவரான டாக்டர் ஃபோச்சினிடம் கூறினார்: "...நான் கடவுளாலும் மனிதர்களாலும் கைவிடப்பட்டுள்ளேன். நீங்கள் எனக்கு ஆறு மாதங்கள் வாழ்நாள் கூட்டித் தந்தால் நான் மாறின ஒரு  மனிதனாக வாழ்வேன், நான் எனது சொத்தில் பாதியை உங்களுக்கு தருகிறேன்." என்றார்.  இது சாத்தியமில்லை என்று மருத்துவர் கூறியபோது அவர் சொன்னார், "அப்படியானால் நான் இறந்து நரகத்திற்குச் செல்வேன்! என்று கூறி கண்ணீர் விட்டார்." அவரது நர்ஸ் கூறினார்: "ஐரோப்பாவின் மொத்த பணத்தை எனக்குத் தந்தாலும் இன்னொரு  நாத்திகவாதியின் மரணத்தை நான் பார்க்க விரும்பவில்லை! இரவு முழுவதும் நான் மன்னிப்புக்காக அழுதேன்"

இதற்கு மாறாக, விசுவாச கிறிஸ்தவர்களின் கடைசி காலங்கள் அமைதியாக மகிழ்ச்சியாக அமைந்துள்ளதையும் பார்க்க முடிகின்றது. அவற்றில் இரண்டு சாட்சிகள்;- 

"ஒரு மருத்துவமனை செவிலியராக பணியாற்றும்  நான் பலருடைய  கடைசி வார்த்தைகளைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளேன்.  அவற்றில் மிக அழகான ஒன்று, நான் ஒருமுறை ஒரு தேவ பக்தியுள்ள நோயாளி பெண்ணின் படுக்கையறைக்குள் நுழைந்து, அவரது படுக்கையின் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தபோது அவள் சொன்னாள்: 'ஓ, தயவுசெய்து அங்கே அமராதீர்கள் — என்னை அழைத்துச் செல்ல தேவன் அனுப்பியுள்ள எனது தேவதூதன் அங்கே அமர்ந்திருக்கிறார்!"

ஒரு நண்பரின் மைத்துனர் புற்றுநோயால் இறக்கும் தருணத்தில், மிகவும் உற்சாகமாகக்  கூவினார், "அவர் (இயேசு) இங்கே இருக்கிறார்! அவர் இங்கே இருக்கிறார்! அவர் நம்மைச் சுற்றி இருக்கிறார்" என்று  பின்னர் அவர் தலையை தலையணையில் வைத்து, தூங்கச் சென்று, மீண்டும் எழுந்திருக்கவில்லை.

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து லாசரும் செல்வந்தனும் உவமையில் இதனைத்தான்  தெளிவுபடுத்தியுள்ளார். ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. அந்தத் திட நம்பிக்கையே நமக்கு மீட்பளிக்கின்றதாகவும் இருக்கின்றது. 


வேதாகமத் தியானம் - எண்:- 1,482    
'ஆதவன்' 💚பிப்ருவரி 27, 2025. 💚வியாழக்கிழமை                                                   
"நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்." ( எபிரெயர் 3: 14)

மனிதர்களில் பலருக்கும் வித்தியாசமான ஒரு குணமுண்டு. எதனையும் புதிதாக வாழ்வில் பெறும்போது அந்தப் பொருளின்மேல் அதிக பற்றுக்கொண்டு அதனை நன்கு பராமரிப்பார்கள். அதன்பிறகு அதன்மேலுள்ள நாட்டம் குறையக்குறைய அதனைக் கவனிப்பின்றி விட்டுவிடுவர்.  இதனைத்  தமிழில், "புது மாடு குளிப்பாட்டுவதுபோல" என்பார்கள். அதாவது ஒருவர் புதிதாக ஒரு பசுமாட்டை வாங்கினாரென்றால் முதலில் சில நாட்களுக்கு அதனை நன்கு குளிப்பாட்டி பராமரிப்பார். பின்னர் அதனை அதிகம் கவனிப்பின்றி விட்டுவிடுவார் என்பது இதன் பொருளாகும்.

இதுபோல பலர் புதிய ஆண்டு துவக்கத்தில் சில கெட்ட பழக்கவழக்கங்களை புதிய ஆண்டில் கைவிட்டுவிடவேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் ஒரு மாதம்கூட அவர்களால் அவர்களது எண்ணத்தை நிறைவேற்றிட முடிவதில்லை. அதாவது,  அவர்களது முயற்சி நல்லதுதான் ஆனால் அது தொடராதபட்சத்தில் எந்த பலனும் இருப்பதில்லை. 

பலரது ஆவிக்குரிய வாழ்க்கையும் இப்படியே இருக்கின்றது. தேவனை வாழ்வில் அறிந்த ஆரம்பக் காலங்களில் காட்டும் செயல்பாடுகள் வரவரக் குறைந்து போவதுண்டு. மட்டுமல்ல, தேவனை அறிந்த ஆரம்பகாலங்களில் இருந்த விசுவாசமும் பலரிடம் குறைந்து போவதுண்டு. ஆனால் இப்படி இருப்போமானால் நாம் கிறிஸ்துவிடம் பங்கில்லாதவர்கள் ஆகிவிடுவோம். இதனையே, ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்." என்று இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார்.

இப்படி தேவன்மேலுள்ள அன்பில் நாம் குறைந்துபோவதை தேவன் விரும்புவதில்லை. எனவேதான் வெளிப்படுத்தின விசேஷத்தில் எபேசு சபை தூதனுக்குத் தேவன் கூறுகின்றார், "ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு." ( வெளிப்படுத்தின விசேஷம் 2: 4) என்று. 

இப்படி ஆவிக்குரிய வாழ்வில் நாம் தளர்ச்சியடைவது தேவனிடமுள்ள அன்பில் நாம் குறைவுபடுகின்றோம் என்பதன் வெளிப்பாடாக இருக்கின்றது. மட்டுமல்ல, நமது ஆவிக்குரிய வாழ்வில் இது வீழ்ச்சியைக் கொண்டுவருவதாகவும் இருக்கின்றது. எனவேதான் தொடர்ந்து கூறப்பட்டுள்ளது, "ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 2: 5)

ஆம் அன்பானவர்களே, நமது ஆவிக்குரிய வாழ்வு இந்தத் தியான ஆரம்பத்தில் கூறியதுபோல புதிய மாட்டைக் குளிப்பாட்டுவதுபோல அல்லாமல் தொடர்ந்து அதே தீவிரத்தோடு இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் இந்த உலக துன்பங்களையும் பாவங்களையும் மேற்கொள்பவர்களாக வாழ முடியும். 

எனவே நம்மை நாமே நிதானித்துப்பார்ப்போம். கிறிஸ்துவை வாழ்வில் அறிந்த ஆரம்பகால அன்பு அவரிடம் நமக்கு இருக்கின்றதா? இல்லையானால் நம்மை நாமே திருத்திக்கொண்டு ஆரம்பகால செயல்பாடுகளைத் தொடர முயற்சியெடுப்போம்.  நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில் மட்டுமே  கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.


வேதாகமத் தியானம் - எண்:- 1,483    
'ஆதவன்' 💚பிப்ருவரி 28, 2025. 💚வெள்ளிக்கிழமை  

"புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்." ( எபிரெயர் 12: 24)

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது இரத்தத்தால் உண்டாக்கிய புதிய உடன்படிக்கையின் மக்களாக நாம் இருக்கின்றோம். இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனிடம் நமக்காக பரிந்துபேச இந்த இரத்தத்தின்மூலம் அதிகாரம் பெற்றிருக்கின்றார். பிதாவுக்கும் நமக்கும் மத்தியஸ்தராக அவர் இருக்கின்றார். அதனையே இன்றைய தியான வசனம்,  "புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசு" என்று கூறுகின்றது.

மேலும் இந்த வசனம் கிறிஸ்துவின் இரத்தம் ஆபேலின் இரத்தத்தைப் பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகின்ற இரத்தம் என்று கூறுகின்றது. ஆபேலின் இரத்தம் தன்னைக் கொலை செய்த தனது சகோதரனுக்காக தேவனிடம் கதறி பழிவங்கச் சொன்ன இரத்தம். ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தமோ நமது பாவங்கள் கழுவப்பட்டு நாம் சுத்திகரிக்கப்பட  தேவனிடம் பரிந்து பேசும் இரத்தம்.  "அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்." ( எபிரெயர் 13: 12) என்று வாசிக்கின்றோம். 

ஆம், "அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." (1 யோவான்  1 : 7) என்று வாசிக்கின்றோம். அதாவது கிறிஸ்துவின் இரத்தம் நம்மைச் சுத்திகரிக்கும் இரத்தம். 

ஆபேலின் இரத்தம் சிந்தப்பட மூல காரணம் சகோதரர்களுக்குள் எழுந்த பொறாமை. ஆனால் கிறிஸ்துவின் இரத்தம் நம்மீது அவர் கொண்ட அன்பினால் சிந்தப்பட்ட இரத்தம். இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தால் நாம் அவரோடு சகோதர உணர்வோடும் அன்போடும் நெருங்கியவர்களாகின்றோம்.

ஆபேலின் இரத்தம் பூமியில் மண்ணோடு மண்ணாக அழிந்துபோன இரத்தம். அனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமோ புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணின  இரத்தம். இதனையே, "ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்...' ( எபிரெயர் 10: 19, 20) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆபேலின் இரத்தம் வெறுமனே சிந்தப்பட்ட மனித இரத்தம். ஆனால்  எல்லாவற்றுக்குமேலாக அனைவருக்கும் நித்திய மீட்பை அளிக்கும் இரத்தமாக கிறிஸ்துவின் இரத்தம் இருக்கின்றது. "வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்." ( எபிரெயர் 9: 12) என்று கூறப்பட்டுள்ளது.

ஆம் அன்பானவர்களே, நாம்,   ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினிடத்திற்கு வந்துசேர்ந்துள்ளோம். எனவே நாம் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். பாவ மன்னிப்பு; நித்திய மீட்ப்பு; தேவனிடம் சேரும் வாய்ப்பு இவை அனைத்தும் கிறிஸ்துவின் இரத்தத்தால் நமக்கு உண்டாயிருக்கின்றது. கிறிஸ்துவின் இரத்தத்தை அவமதிக்காமல் நம்மை அது கழுவி சுத்திகரிக்கும்படி வேண்டுவோம்; நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம்.