Tuesday, June 13, 2023

உபத்திரவத்திலே பொறுமை

ஆதவன் 🔥 868🌻 ஜூன் 14, 2023  புதன்கிழமை


"இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே." ( யாக்கோபு 5 : 11 )

இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ள பொறுமை என்பது சாதாரணமாக நாம் கூறும் பொறுமையையல்ல; மாறாக தேவன்மேலுள்ள விசுவாசத்தில் உறுதியாக இருந்து தேவன் எனது காரியங்களை நலமாக முடித்துவைப்பார் என்று பொறுமையோடு காத்திருந்து நம்புவது, துன்பங்களைப் பொறுமையாகச் சகிப்பது, இவைகளையே பொறுமை என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஒருவர் தான் நல்ல நிலையில் இருக்கும்போது பொறுமையாக இருப்பது பெரிய காரியமல்ல.  மாறாக, வாழ்வில் எதிர்மறையான காரியங்கள் நிகழும்போதும் அமைதியாக, பொறுமையாக இருப்பது மகத்தான காரியமாகும். பக்தனான யோபு அப்படிதான் இருந்தார். தனது பிள்ளைகள், சொத்துக்கள், உடல்நலம் அனைத்தும் பாதிக்கப்பட்டபின்னரும் அவர் தேவன்மேல் வைத்திருந்த விசுவாசத்தில் தளர்வடையவில்லை.  எல்லாத் துன்பத்துக்கும்  மேலாக அவரது உயிரான மனைவியே அவரை அவமதித்துப் பேசும்போதும் யோபு பொறுமையாகப் பேசுகின்றார். 

யோபு இரண்டாம் அதிகாரத்தில் வாசிக்கும்போது, "அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்." ( யோபு 2 : 9 ) யோபின் மனைவி கூறுவதை தற்போதைய வார்த்தைகளில் கூறவேண்டுமானால், "நீர் இன்னுமா கடவுளை நம்புகிறீர்? அவரை தூஷித்துவிட்டு செத்துத் தொலையும் "  என்பதுதான். 

அதற்கு யோபு கூறும் பதில், "நீ பைத்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ" ( யோபு 2 : 10 ). 

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்." ( ரோமர் 12 : 12 ) என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, இன்றைய தியான வசனத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ளது, "கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே". அதாவது, கர்த்தர் மிகுந்த  உருக்கமும் இரக்கமுமுள்ளவராய் இருப்பதால் யோபுவுக்கு வந்ததுபோன்ற ஆசீர்வாத முடிவு பொறுமையாக இருக்கும்போது நமக்கும்  வரும் என்று பொருள். 

ஆம், "கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்." ( யோபு 42 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, பொறுமை இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தின் வழி. 

அன்பானவர்களே, நாம் எல்லோரும் யோபுவைபோல வாழ்வது சிரமமான காரியம்தான். மனித பலத்தால் இது முடியாதுதான். ஆனால், இத்தகைய விசுவாசம் நமக்கு வேண்டுமென்று நாம் விரும்பி ஜெபிக்கலாமல்லவா? அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதுபோல நம்பிக்கையிலே சந்தோஷமும்; உபத்திரவத்திலே பொறுமையும்; ஜெபத்திலே உறுதியும் நமக்கு வேண்டுமென்று வேண்டுவோம். ஆவியானவர் அதனை நமக்குத் தந்தருள்வார். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Monday, June 12, 2023

நீ திரும்பினால் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்

ஆதவன் 🔥 867🌻 ஜூன் 13, 2023  செவ்வாய்க்கிழமை


"நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று  விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்."(எரேமியா 15:19)

ஒரு சிலரது வாழ்க்கை எந்தவிதச் சிக்கல்களுமின்றி நன்றாகச் சென்றுகொண்டிருக்கும். ஆனால் திடீரென்று வாழ்க்கையில் பெரிய சறுக்குதல் ஏற்பட்டு அவர்கள் நிலைகுலைந்துபோவதுண்டு. இந்தச் சறுக்குதலுக்குக் காரணம் என்னவென்று அவர்கள் குழம்பிச் சில தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமுண்டு. வாஸ்து வல்லுனர்களையும் ஜோசியர்களையும்  நாடி பரிகாரங்கள் செய்வதும், மற்றவர்களால்தான் தங்களுக்கு இந்தச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என எண்ணி மேலும் மேலும் தங்களுக்குத் துன்பத்தை வருவித்துக்கொள்வதுமுண்டு. "பொறாமைக் கண்கள்" "கண்திருஷ்டி",  "என் வளர்ச்சியைப்பார்த்து யாரோ எனக்குச் செய்வினை வைத்துவிட்டார்கள்'  இப்படித்தான் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வாழ்வின் சறுக்குதலுக்குக் காரணம் கண்டுபிடிக்கிறார்கள். 

அன்பானவர்களே, சிலவேளைகளில் தேவன் நாம் அவரிடம் திரும்பி வரவேண்டும் என்பதற்காகச் சில துன்பங்களையும் சறுக்குதல்களையும் நமது வாழ்வில் ஏற்படுத்துகின்றார். நமது துன்பங்களுக்குப் பிறரைக் குற்றம் சாட்டுவதைவிட்டுவிட்டு நாம் மனம்திரும்பி கர்த்தரிடம் வரவேண்டுமென்று இன்றைய வசனம் மூலம் கர்த்தர் பேசுகின்றார். 

நமது தவறான வழிகளைவிட்டு மனம்திரும்பி கர்த்தரிடம் வந்தோமென்றால் நம்மைத் திரும்பவும் சீர்படுத்துவேன் என்று இன்றைய வசனத்தில் கர்த்தர் நமக்கு நல்ல செய்தியைத் தருகின்றார்.  "நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். நீ எந்த இடத்திலிருந்து வீழ்ச்சியைச் சந்தித்தாயோ அதே இடத்துக்கு வரும்படி திரும்பச் சீர்படுத்துவேன் என்கிறார் கர்த்தர்.

மட்டுமல்ல, "நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது, தீழ்ப்பான (அருவருப்பான) காரியங்களிலிருந்து விலகி விலையேறப்பெற்ற கர்த்தரது வார்த்தைகளைப் பிரித்தெடுத்து  அதன்படி வாழ்வாயானால் நீ கர்த்தரது வாய்போல இருப்பாய்; உன்னை வெறுப்பவர்களிடம் அல்லது உனக்குக் கெடுதல் செய்தவர்களிடம் நீ செல்லாமல் அவர்கள் உன்னைத்தேடி வருவார்கள் என்கிறார் கர்த்தர்.  

மேலும் இன்றைய வசனத்துக்கு அடுத்த வசனமாக, "உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." (எரேமியா 15:20) என்று கூறப்பட்டுள்ளது.

நமது தோல்விகள், சறுக்குதல்கள்,பிரச்சனைகள், துன்பங்கள் எல்லாவற்றுக்கும் பிறரைக் காரணமாக எண்ணாமல் நம்மை நாமே நிதானித்துப்பார்ப்போம். அப்படி "நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்" என வாக்களிக்கும் கர்த்தர், உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்றும் உறுதிகூறுகின்றார்.  

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Sunday, June 11, 2023

நம்மேல் கர்த்தர் உதிப்பார்

ஆதவன் 🔥 866🌻 ஜூன் 12, 2023  திங்கள்கிழமை

"இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்." ( ஏசாயா 60 : 2 )

கர்த்தரால் வேறுபிரிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையினை இன்றைய வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. கர்த்தரால் வரும் ஆசீர்வாதம் இதுதான். இருளான வாழ்க்கை ஒளியாக மாறுகின்றது; அவரை ஏற்றுக்கொள்ளும்போது எந்த மனிதனையும் அவர் இருளிலிருந்து  ஒளிக்குள் கொண்டுவருவார். இதனையே அப்போஸ்தலரான யோவான், "உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிபிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி" (யோவான் 1:9) என்று கூறுகின்றார். 

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் கானானை நோக்கிப் பயணித்த தனது மக்களை தேவன் ஒளியால் வழிநடத்தியது,   இன்றைய புதிய ஏற்பாட்டுக்காலத்தில் பரம கானானை நோக்கி நம்மை வழிநடத்தும் ஆவிக்குரிய ஒளியாக இருக்கின்றது. பழைய ஏற்பாட்டுச் சம்பவங்கள் புதிய ஏற்பாட்டுக்கு நிழலாட்டமாய் இருக்கின்றன. முதன்முதலில் எகிப்து நாட்டில் தேவன் தனது ஒளியால் மக்களை வேறுபிரித்துக்காட்டும் அதிசயத்தைச் செய்தார். பார்வோன் மனது கடினப்பட்டு இஸ்ரவேலரை விடுவிக்க மறுத்தபோது மோசே மூலம் அதிசயம் செய்து தனது மக்களை வேறுபிரித்துக் காட்டினார்.  

"மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று. மூன்றுநாள் மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது." ( யாத்திராகமம் 10 : 23 ) என்று வாசிக்கின்றோம்.

மேலும், இஸ்ரவேல் மக்களை விடுவித்து அனுப்பியபின்னர் பார்வோன் மனம் கடினப்பட்டு அவர்களை அழித்து ஒழிக்க மீண்டும் தனது படைகளோடு பின்தொடர்ந்தான். அப்போது இஸ்ரவேலர் முன்னால்  சென்ற கர்த்தரது தூதனானவர் விலகி அவர்களுக்குப் பின்னால் பாதுகாப்பாக வந்தார். மேகஸ்தம்பமும் விலகி அவர்களுக்குப் பின் வந்தது.  "எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தன; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று." ( யாத்திராகமம் 14 : 20 )

அன்பானவர்களே, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படியே இருளான மக்கள் மத்தியில் ஒளியாக வந்தார். "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது" ( மத்தேயு 4 : 15 ) என்று வாசிக்கின்றோம். உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிபிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளியான அவரிடம் நாம் சேரும்போது பாவ இருளைவிட்டு நாம் மெய்யான ஒளியினிடம் சேர்ந்து அவரைப்போல ஒளிருவோம். 

அன்று இஸ்ரவேல் மக்களை எப்படி எகிப்தியரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டி அவர்களை கானானுக்கு நேராக வழி நடத்தினாரோ அதுபோல அவரை ஏற்றுக்கொள்ளும்போது  பிற மக்களிடமிருந்து நம்மையும்   வேறுபடுத்தி நடத்துவார். 

எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று என்று கூறப்பட்டுள்ளதுபோல, பிற மக்களிடமிருந்து அவர் நம்மை வேறுபிரிக்கும்போது  நமக்கு அவரே  வெளிச்சமாக இருப்பார். அந்த வெளிச்சத்தை எகிப்தியர் கண்டு ஆச்சரியப்பட்டதுபோல நம்மை அற்பமாகவும் அலட்சியமுமாக நடத்தியவர்கள் கண்முன் நமது ஒளி ஆச்சரியப்படத்தக்கதாக விளங்கும். 

கானானை நோக்கிப் பயணித்த இஸ்ரவேலர்மேல் உதித்த கர்த்தரின் ஒளி, பரம கானானை  நோக்கிப் பயணிக்கும் பயணிகளாக நாம் விளங்குவோமென்றால்  நம்மேலும் உதிக்கும்.  ஆம்,  நம்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை நம்மேல்  காணப்படும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 


Saturday, June 10, 2023

தேவன் பொல்லாங்கினால் ஒருவனையும் சோதிக்கிறவரல்ல.

ஆதவன் 🔥 865🌻 ஜூன் 11, 2023  ஞாயிற்றுக்கிழமை

"ஆனால் கர்த்தரால் சுமரும் பாரம் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவனவன் வார்த்தையே அவனவனுக்குப் பாரமாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள்." ( எரேமியா 23 : 36 )


ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் சபைகளில் ஊழியர்களும் சரி விசுவாசிகளும் சரி துன்பங்கள் பிரச்னைகள் ஏற்படும்போது, "கர்த்தர் தண்டித்துவிட்டார்", "கர்த்தருக்கு விரோதமாய் என்ன செய்தீர்கள் என்று எண்ணிப்பாருங்கள், மன்னிப்புக் கேளுங்கள்" என்று கூறுவதுண்டு. இது தேவனை சாதாரண மனிதனைப்போல எண்ணி பேசுவதாகும். ஒரு பள்ளி ஆசிரியரைப்போல கையில் பிரம்புடன் தேவன் காத்து நிற்பதுபோலவும் தவறு செய்தவுடன் நம்மை அடித்துவிடுவார் என்று கூறுவதுபோலவும்  உள்ளது. 

"கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 23 : 34 ) என்கிறார் எரேமியா. 

ஆனால், நாம் ஆவிக்குரிய வாழ்வு வாழும்போது நமது சிறு தவறுகள், குற்றங்களுக்குத் தேவன் சிறிய தண்டனை தருவார். அது தாய் தகப்பன் பிள்ளைகளைத் திருத்துவதற்குத் தரும் சிறு தண்டனைகள் போன்றவை.  இவை பாரமல்ல, மாறாக தேவ அன்பின் தண்டனை. "கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.  நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?" ( எபிரெயர் 12 : 6, 7 ) என்கின்றார் பவுல் அடிகள். 

மனிதர்களது இயல்பான குணம் தனது தவறை உணராமல் இருப்பது. நெருப்பு சுடும் என்பது தெரிந்தும் நெருப்பில் கையை வைத்துவிட்டு சுட்டவுடன் கடவுள் தண்டித்துவிட்டார் என்று கூறமுடியுமா? நமது தவறான செயல்களே பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணமாகிவிடுகின்றது.  

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு, "சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்." ( யாக்கோபு 1 : 13, 14 ) என்று கூறுகின்றார். 

இதனை உணராமல் மக்கள் பேசுவதால்தான், "கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்".

அன்பானவர்களே, நமது வழிகளை ஆவியானவருக்கு ஒப்புவித்து நாம் வாழவேண்டும். அவர் நம்மை நடத்துவதற்கு ஒப்புக்கொடுக்கவேண்டும். ஒரு பிரச்சனை, துன்பம் ஏற்படும்போது தேவனைக் குற்றம் சொல்வதைவிட்டு நாம் செல்லும் வழி தவறானால் திருத்திக்கொண்டு வாழ்வதே அறிவுடைமை. 

ஆவிக்குரிய வாழ்வு வாழும்போதுதான் நமக்குத் தேவன் தரும் அன்புத் தண்டனைக்கும் நமது தவறான செயல்பாடுகளால் உண்டான பாரமான பிரச்சனைகளுக்கும் வித்தியாசம் தெரியும். அன்புத் தண்டனைகளை ஏற்றுக்கொண்டு நம்மைத் திருத்திக்கொள்வோம். பாரமான பிரச்சனைகளுக்கு முடிவு வேண்டுமானால் நமது மொத்த வாழ்வின் வழியினையும் மாற்றி தேவனுக்கேற்ற  வழிக்குத் திரும்பிடவேண்டும். 

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Friday, June 09, 2023

நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்

ஆதவன் 🔥 864🌻 ஜூன் 10, 2023  சனிக்கிழமை

"என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;" ( எரேமியா 7 :  23 )


பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் பல்வேறு கட்டளைகளையும் பலிகளையும் நியமங்களையும் மக்களுக்கு நியமித்திருந்தார்அதன்படி பலிசெலுத்துவது ஒன்றுதான்   தேவனுக்கு   ஏற்புடைய  செயல் என்று மக்கள் நினைத்திருந்தனர்தேவனுக்குப் பலி செலுத்துவதற்குக் காட்டிய முக்கியதுவத்தை   தேவனுடைய வாக்குக்குக் கீழ்படிவதற்குச் செலுத்தவில்லை. 

அதாவது அவர்கள் பல கட்டளைகளையும் கட்டளையாகப் பார்த்தனரேத்தவிர தேவன் விரும்பும் அன்பையும்இரக்கத்தையும் நீதியையும் விட்டுவிட்டனர். குறிப்பாக,   பலியிடுவது   சம்பந்தமான   கட்டளையை நிறைவேற்றுவதில் காட்டிய ஆர்வத்தை மனிதநேயத்திலும் பிறரை அன்பு செய்வதில் காட்டவில்லை.

எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள்நீதிமான்களையல்லபாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்." ( மத்தேயு 9 : 13 )

பலியையல்லஇரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுகொள்ளுங்கள் என்று கூறிய இயேசு கிறிஸ்து இன்னுமொரு இடத்தில் "பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால்குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்." ( மத்தேயு 12 : 7 ) என்று கூறுகின்றார்.

இன்றைய வசனத்தின் முந்தின வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலேதகனபலியைக்குறித்தும்மற்றப் பலிகளைக்குறித்தும் நான்அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும் என்  வாக்குக்குச் செவிகொடுங்கள்." எரேமியா 7 :  22 )

சில வீடுகளில் மகன் தாய் தகப்பனுக்கு ஏற்பில்லாத செயல்பாடுகளில் ஈடுபடும்போது வேண்டிய உறவினர்களை வைத்துப் பேசிப்பார்ப்பார்கள். அதற்கும் மகன் கீழ்ப்படியாமல் தாய் தகப்பனுக்கு விரோதமாகச் செயல்பட்டால் அந்தத் தாயும் தகப்பனும் மனம் வெதும்பி, "நீ என் மகனுமில்லை; நான் உனக்குத் தாயுமில்லை" எனக் கூறுவதுண்டு. அதுபோலவே தேவனும் கூறுகின்றார்,  "என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்;" என்று. செவிகொடுக்கவில்லையானால் நீங்கள் எனது மக்களல்ல என்று பொருள். 

அன்பானவர்களே,இன்றும் இயேசு கிறிஸ்துவின் காலத்து நிலைதான் தொடர்கின்றதுபலகிறிஸ்தவ சபைகளில்   வருமானத்தில்  பத்தில் ஒன்று  காணிக்கைக் கொடுப்பது வலியுறுத்தப்படுவதன் அளவுக்கு  இயேசு கிறிஸ்து கூறிய தேவனுக்குக் கீழ்படிவதைக்குறித்துப் போதிப்பதில்லை.   இரக்கம்நீதி   இவற்றைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைப்பது  கிடையாது. 

என் வாக்குக்குச் செவிகொடுங்கள்அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள் என தேவன் கூறுவது நாம் அனைவருக்கும் ஒரு அறிவுரையாக இருக்கட்டும்அவர் இரண்டே இரண்டு கட்டளைகளைத்தான் கூறினார்ஒன்று எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பதுஇரண்டாவது தன்னைத்தான் நேசிப்பதுபோல பிறரை நேசிப்பது

கிறிஸ்துவின் இந்த கட்டளைகளுக்கு   முரணான   வாழ்க்கைஅன்பற்ற போதனைகள் நாம் தேவ ஜனமாக இருக்கத்  தடையானவைகள் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். . ஆம் அன்பானவர்களேபலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நாம் அறிந்துகொண்டால் பிறரைக் குற்றப்படுத்தமாட்டோம். கட்டளைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனித நேயத்துக்குக் கொடுப்போம். தேவன் காட்டிய அன்பு வழியில் நடப்போம்அதுவே  கிறிஸ்துவுக்கு ஏற்புடைய வழி.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Thursday, June 08, 2023

கிரயத்துக்குக் (விலைக்கு) கொள்ளப்பட்டீர்களே....!

ஆதவன் 🔥 863🌻 ஜூன் 09, 2023  வெள்ளிக்கிழமை


"கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்." ( கலாத்தியர் 5 : 24 )

கிறிஸ்து இயேசு மூலம் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெற்றவர்களது மன நிலையினை இன்றைய வசனம் விளக்குகின்றது. நாம் நமது பாவங்கள் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு மீட்பு அனுபவம் பெறும்போது அவருடையவர்கள் ஆகின்றோம். அதாவது, அப்போது அவர் நம்மை தனது இரத்தத்தால் விலைகொடுத்து வாங்கிவிடுகின்றார் என்று பொருள்.  

இதனை அப்போஸ்தலரான பவுல் அடிகள், "கிரயத்துக்குக் (விலைக்கு)  கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்." ( 1 கொரிந்தியர் 6 : 20 ) என்று கூறுகின்றார். எனவே நாம் கிறிஸ்துவினுடையவர்கள். இப்படி கிறித்துவினுடையவர்களான நாம் நமது உடலையும் அதன் ஆசைகளையும் கொன்றவர்கள் ஆகின்றோம். அதாவது, கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதுபோல நமது உடலையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்துவிட்டோம். 

நாம் உண்மையாகவே ஆவிக்குரிய வாழ்வு வாழ்கின்றவர்களென்றால் மற்றவர்களிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுவது இந்தக் குணம்தான். நமது உலக ஆசைகள் குறையும், உடலின் இச்சைகள் மறையும். இப்படி நான் ஒருமுறை ஒரு நண்பரிடம் கூறியபோது அவர் அப்படியானால் ஆவிக்குரிய சபைப் போதகர்கள் ஏன் விபச்சாரப் பாவத்திலும், பெண்கள் சம்பந்தமான வழக்குகளிலும்,  பண ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு போலீஸ் விசாரணையிலும் சிக்கியுள்ளனர்? என்று என்னிடம் கேட்டார். 

அன்பானவர்களே ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொள்ளும் எல்லோரும் ஆவிக்குரியவர்கள் அல்ல. அவர்கள் கிறிஸ்துவின் மீட்பு அனுபவம் பெறாமலே கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறேன் என்று கூறிக்கொள்பவர்கள். இதுவே கிறிஸ்தவத்தையும் ஆவிக்குரிய மேலான நிலையினையும் கிறிஸ்தவர்களே அறியமுடியாமல் போகக் காரணம். பிரபல ஊழியர்களும்கூட இப்படி இருப்பதால் கிறிஸ்துவை அறியாத பிற மதத்தினர் கூட கிறிஸ்துவை அறியமுடியவில்லை.

இதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள்,  "அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே. அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்."( ரோமர் 9 : 7,8 ) என்று கூறுகின்றார். அதாவது, இத்தகையவர்கள் தங்களை தேவனுடைய பிள்ளைகள், ஆவிக்குரியவர்கள்  என்று கூறிக்கொள்கின்றனர்.  (அதாவது பெயரளவில் கிறிஸ்தவர்கள்) ஆனால், இத்தகையவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல என அப்போஸ்தலரான பவுல் அடிகள் இந்த வசனத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

"நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும்கடவோம்." ( கலாத்தியர் 5 : 25 ) என்று பவுல் அடிகள் கூறுவதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்வில் பிழைத்திருப்போமென்றால் ஆவிக்கேற்றபடி நடப்போம். 

அன்பானவர்களே, நாம் மற்றவர்களையும் ஊழியர்களையும் பார்க்கவேண்டிய அவசியமில்லை. தேவனது வார்த்தைகளைக் கவனிப்போம், அந்த வார்த்தைகள் நம்மில் செயல்பட இடம்கொடுப்போம். கிறிஸ்துவினுடையவர்களாக நாம் வாழும்போது நமது மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறவர்களாக நாம் மாறுவோம். மற்றவர்களுக்கும் சாட்சியாக விளங்குவோம்.  அத்தகைய வாழ்வு வாழ நமக்கு உதவுபவரே பரிசுத்த ஆவியானவர். வசனத்தை விசுவாசிக்கும்போது நம்மில் மாற்றங்கள் ஏற்படுவதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Tuesday, June 06, 2023

கர்த்தரின் நியாயத் தீர்ப்பு பயங்கரமானது

ஆதவன் 🔥 862🌻 ஜூன் 08, 2023  வியாழக்கிழமை


"அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்." ( 1 பேதுரு 1 : 17 )

இந்த உலக வாழ்க்கையுடன் நமது வாழ்வு முடிந்துவிடுவதில்லை. உடல் அழிந்தாலும் அழியாத நமது ஆன்மா இந்த உலக வாழ்க்கைக்குப்பின் நாம் செய்த செயல்களுக்கேற்ப நித்திய பரலோக பேரின்பத்துக்கோ அல்லது நித்திய நரக அக்கினிக்கோ செல்லவேண்டியிருக்கும். ஆனால் இதனைப் பெரும்பாலானோர் நம்புவதில்லை. இந்த உலகத்தில் வாழ்வதுதான் பரலோகமும் நரகமும் என்கின்றனர். இந்த உலகத்தில் செழிப்புடன் வாழ்வது பரலோக வாழ்க்கையென்றும் துன்பப்படுவது நரக வாழ்க்கையென்றும் கூறிக்கொள்கின்றனர். 

நித்திய நியாயத்தீர்ப்பையும் மறுவுலக வாழ்வையும் குறித்து இயேசு கிறிஸ்து பல உவமைகள் கூறியுள்ளார். செல்வந்தனும் ஏழை லாசரும் பற்றிய உவமை மிகத் தெளிவாக நமக்கு இதனை உணரவைக்கும். ஆனாலும் பலரும் இதனை ஒரு கதையாக எண்ணிக்கொள்கின்றனர்.  இதற்காகவே அப்போஸ்தலரான பேதுரு இன்றைய வசனத்தில்  "பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள்." என்று கூறுகின்றார்.

இந்த உலகத்தில் நாமெல்லோரும் பரதேசிகள். அதாவது குடியுரிமை இல்லாதவர்கள். நமது குறியுரிமை நாம் ஏற்கனவே கூறியபடி பரலோகம் அல்லது நித்திய நரகம். எனவே இப்படி பரதேசிகளாய் இந்த பூமியில் வாழும் நாள்வரை பயத்துடன் நடந்துகொள்ளுங்கள் என்கிறார். 

நமது கர்த்தரின் நியாயத் தீர்ப்பு பயங்கரமானது; எதார்த்தமானது. அவரது கண்களுக்கு நாம் செய்யும் எந்த அநியாயச் செயலும், பேச்சும் தப்பிடாது.  அவர் மனிதர்களைப்போல கண்டபடி நியாயம் தீர்க்கமாட்டார். எதார்த்தமாய் செய்யபட்டக் காரியத்தின் உண்மை நிலையினை அறிந்து மனிதர்களை நியாயம்தீர்ப்பார்.  "கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்." ( ஏசாயா 11 : 4 )

இந்த நியாயம் தீர்க்கும் உரிமையினை பிதாவாகிய தேவன் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அளித்திருக்கிறார் என்று வேதம் கூறுகின்றது. "அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்." ( யோவான் 5 : 22 )

வேதாகமம் மட்டுமல்ல, இஸ்லாமியர்களின் புனித நூலான குரானிலும் ஈஸா நபி (இயேசு கிறிஸ்து) உலகத்தை நியாயம் தீர்ப்பார் என்று கூறப்பட்டுள்ளது. "பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்." ( வெளிப்படுத்தின விசேஷம் 16 : 7 )

அன்பானவர்களே, நியாயத் தீர்ப்பு உண்மையானது, நீதியானது எனவே அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்வோம். நீதி, நியாயம், பரிசுத்தத்தோடு வாழ்வோம். "ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்." ( 2 கொரிந்தியர் 5 : 10 )

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - எசேக்கியேல் 13 : 10 / Ezekiel 13:10

" ஆதவன் " தியானம் - 1980 ஜூலை 10, வெள்ளி  2026       "சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம...