Wednesday, May 24, 2023

மீகாள் நமக்கு ஒரு எச்சரிக்கை

ஆதவன் 🌞 848🌻 மே 25, 2023  வியாழக்கிழமை  

         

"தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்." ( 2 சாமுவேல் 6 : 14 )


தேவனை ஆராதிப்பதில் ஒவ்வொருவரும் ஒரு முறையினைப் பின்பற்றுகின்றனர். ஆராதனையின் முறைமைகளைத் தேவன் பார்ப்பதில்லை. மாறாக ஆராதிப்பவர்களின் இதயத்தையே பார்க்கின்றார். இன்று அமைதியாக தேவனை ஆராதிக்கும் சபைகளும் உண்டு ஆர்ப்பரித்து உற்சாகமாக ஆராதிக்கும் சபைகளும் உண்டு. ஆர்ப்பரித்து ஆராதிப்பவர்கள் அமைதியாக ஆராதிப்பவர்களை செத்த சபையினர் என்றும் , அமைதியாக ஆராதிப்பவர்கள் ஆர்ப்பரித்து ஆராதிப்பவர்களை கூத்தாடி சபைகள் என்றும் விமர்சிக்கின்றனர்.

இப்படி ஒருவர் செய்யும் ஆராதனையைக் குறைகூற யாருக்கும் அதிகாரம் இல்லை. தேவனே இருதயங்களை நோக்கிப்பார்க்கின்றவர். அவருக்கே யார் தன்னை உண்மையாக ஆராதிக்கிறார்கள் என்று தெரியும். தேவன் ஆராதனையினை இப்படித்தான் செய்யவேண்டுமென்று எந்தக் கட்டளையும் தரவில்லை. இருதய சுத்தத்திற்கே தேவன் முன்னுரிமை கொடுக்கின்றார்.

தாவீது இஸ்ரவேலின்மேல் ராஜாவானபின்பு அதுவரை கிபியாவிலிருந்த கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.   "தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்.." ( 2 சாமுவேல் 6 : 3 ) அப்போது தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.

ஒரு பெரிய ராஜா சணல் ஆடையினை உடுத்திக்கொண்டு தெருவில் நடனமாடியது சவுலின் குமாரத்தியாகிய தாவீதின் மனைவி மீகாளுக்கு  கேவலமான காரியமாகத் தெரிந்தது. "கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்." ( 2 சாமுவேல் 6 : 16 )

அன்பானவர்களே, இப்படி இருதயத்தில் தாவீதை அவமதித்ததற்கு தேவன் கொடுத்தத் தண்டனை மிகக் கொடியது. ஆம், "அதனால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது." ( 2 சாமுவேல் 6 : 23 ) என்று கூறப்பட்டுள்ளது. 

"ஆதவன்" தியானங்களில் சில வேளைகளில் பிறரை விமரிசிப்பதுபோல உங்களுக்குத் தெரியலாம், ஆனால் அவை வேத சத்தியங்களை அவர்கள் மீறி அதற்கு முரணாக பிரசங்கிப்பதை தவறு என்று காட்டவேதவிர அவர்களது ஆராதனை முறைகளை விமரிசிப்பதற்கு அல்ல. வேத சத்தியங்களை புரட்டிப் பேசுவதை நாம் விமரிசிக்கலாம்.  காரணம், தவறான போதனைகள் மனிதர்களை நரகத்தின் மக்களாக்கிவிடும் என்பதால்.

மற்றவர்கள் செய்யும் ஆராதனைகள், பிற சபைகளை,  தனி நபர்களது ஆராதனை முறைமைகளை விமரிசனம் செய்வதை நாம் விட்டுவிடுவது நல்லது. சவுலின் மகள் மீகாள் நமக்கு ஒரு எச்சரிக்கை.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Sunday, May 21, 2023

வேதத்தை நேசிப்போம், வாசிப்போம்

  ஆதவன் 🌞 847🌻 மே 24, 2023  புதன்கிழமை  

".............நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்." ( ஓசியா 4 : 6 )


இன்றைய தியானத்துக்குரிய வசனம் நாம் தேவனுடைய வேதத்தின்மேல் பற்றுக்கொண்டு அதனை நேசித்து நமது வாழ்வை அதற்கு ஏற்றாற்போல மாற்றி வாழவேண்டியதன் அவசியத்தைக் குறிக்கின்றது. தேவன் ஆதிகாலமுதல் பல்வேறு தீர்க்கதரிசிகள், பக்தர்கள் மூலம் தனது வார்த்தைகளை வெளிப்படுத்தி அவற்றை மக்கள் மறந்திடாமல் இருக்க அவர்களைக்கொண்டு பதிவுசெய்தும்  வைத்துள்ளார். தோள்சுருள்கள், கற்பலகைகள், சுட்ட மண் பலகைகள், போன்றவற்றில் தேவனுடைய வார்த்தைகள் பதிவுசெய்யப்பட்டு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

வேதத்தை இந்த உலகத்திலிருந்து அழிக்க முயன்ற மனிதர்கள் அழிந்தார்களேதவிர வேதம் என்றும் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றது. தேவன் அற்புதமாக இப்படித் தனது வார்த்தைகளைப் பாதுகாப்பதன் நோக்கம் தனது மக்கள் அவற்றைப் படித்து உணர்ந்து தனக்கேற்ற வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காகவே.  ஆனால் வேதத்தை உண்மையான ஆர்வத்துடன் படிப்பவர்கள் வெகு சொற்பமே. இதனையே தீர்க்கத்தரிசி ஓசியா முலம் தேவன், "என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்." ( ஓசியா 8 : 12 ) என்று கூறுகின்றார்.

இருளில், அந்தகாரத்தில் வசிக்கும் மக்களுக்கு விளக்கும் வெளிச்சமும் வேதமே.  "கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி." ( நீதிமொழிகள் 6 : 23 ) என்று வசனம் கூறுகின்றது. 

அன்பானவர்களே, இன்றைய வசனம் வேதத்தை மறப்பவர்களின் பிள்ளைகள் தேவனால் மறக்கப்பட்டுவிடுவார்கள் என்று ஒரு எச்சரிக்கையினை விடுக்கின்றது. தேவனால் மறக்கப்படுதல் எவ்வளவு அவலமானது என்று எண்ணிப்பாருங்கள். நாம் ஒருவேளை இன்று இந்த உலகத்தில் வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம்  ஆனால் நமது பிள்ளைகளது எதிர்காலம் நமது கையில் என்பதை மறந்துவிடக்கூடாது. உலகத்தில் சொத்து சுகங்களை நமது பிள்ளைகளுக்காகச் சேர்த்துவைக்க முயலும் நாம் அவர்களுக்கான தேவ ஆசீர்வாதங்களுக்காகவும் முயலவேண்டியது அவசியம். 

வேதாகமத்தை அந்நிய காரியமாக எண்ணாமல் ஆர்வமுடன் வாசித்து அதன் மகத்துவங்களை உணர்ந்து விசுவாசத்தில் வளரவேண்டியது அவசியம். சொத்து சுகங்கள், அதிக ஆஸ்திகள் சம்பாதிக்க உடல் பலமில்லாதவர்களும், பெரிய படிப்பு பதவிகள் இல்லாதவர்களும் இந்த ஆசீர்வாதத்தை நமது பிள்ளைகளுக்காகச் சேர்த்திட முடியும்.  

வேதத்தை  நேசிப்போம், வாசிப்போம் வாழ்வாக்குவோம்.

"கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." ( சங்கீதம் 1 : 2, 3 )

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

பரத்திலிருந்து வருகிற ஞானம்

ஆதவன் 🌞 846🌻 மே 23, 2023  செவ்வாய்க்கிழமை    

"பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. " (யாக்கோபு 3:17)


இந்த உலகத்தில் சில காரியங்களில் வல்லவர்களாக விளங்குபவர்களை ஞானிகள் என்று கூறுகின்றனர். இப்படி  உலகத்தில் இசை ஞானி, கலை ஞானி, நடனகலா ஞானிகள் உள்ளனர். உலகத்துக்கு இந்த கலைஞர்கள் ஞானிகளாக இருந்தாலும் தேவனது பார்வையும் அவர் ஞானம் என்று கருதுவதும் வேறு விதமானது.  

உலக மனிதர்களது ஞானம் அவர்களை அகந்தையுள்ளவர்களாக மாற்றுகின்றது.  இத்தகைய உலக ஞானிகள் மற்றவர்களை அற்பமாக எண்ணுபவர்களாகவும், பிறரை மதிக்காதவர்களாகவும், பரிசுத்த வாழ்கைக்குத் தூரமானவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால், பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

எனவே, தேவன் தனக்குப் பயப்படுபவர்களையே ஞானிகளாக எண்ணுகின்றார். உலகத்துக்கு அவர்கள் பேதைகளாக இருக்கலாம், ஆனால் தேவனது பார்வையில் அத்தகைய மனிதர்களே ஞானிகள். எனவேதான் நீதிமொழிகள் நூல் கூறுகின்றது, "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" ( நீதிமொழிகள் 1 : 7 ) என்று. 

சங்கீதம் 111 இல் நாம் வாசிக்கின்றோம், "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு" ( சங்கீதம் 111 : 10 ) என்று. 

நாம் இந்த உலகத்தில் சிறந்த திறமையோ அறிவோ இல்லாதவர்களாக இருக்கலாம். பள்ளிப் படிப்பு படிக்க வாய்ப்பற்று எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகக்கூட இருக்கலாம். ஆனால் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு வாழ்வோமானால் நாமே அவரது பார்வையில் ஞானமுள்ளவர்கள்.  

பள்ளிப்படிப்பு படிக்காத , இரண்டு கண்களும் தெரியாத ஒரு பாட்டியைக்குறித்து நான் கேள்விப்பட்டதுண்டு. ஆவிக்குரிய வரங்களால் நிறைந்த அந்தப் பாட்டியிடம் ஜெபித்து ஆசீர்வாதம்பெற பிரபல மருத்துவர்கள், பொறியாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் வந்து காத்திருப்பதுண்டு. ஆம், அவர்கள் உலகத்தைப் பொறுத்தவரை படிக்காத ஒரு பெண், ஆனால் தேவனது பார்வையில் ஞானி. உலகத்துக்குத் தெரியாத பல விஷயங்களை தேவன் அவர்களுக்கு வெளிப்படுத்திக் கொடுக்கின்றார்.  

அன்பானவர்களே, நாம் பல்வேறு பட்டங்கள் பெற்றவர்களாக இருக்கலாம், தேவனுக்குமுன் அவை போதாது. நாம் தேவ ஞானத்தால் நிரப்பப்படவேண்டும். அதற்குக் கர்த்தருக்குப் பயப்படும் பயம் - அதாவது கர்த்தருக்கு ஏற்புடைய ஒரு வாழ்வு வாழவேண்டுமென்று முடிவெடுத்து நம்மை அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டியது அவசியம். அப்படி நாம் கர்த்தருக்குப் பயந்த வாழ்க்கை வாழும்போது நம்மை அவர் பரலோக ஞானத்தால் நிரப்புவார். 

அப்போது நாம் இன்றைய தியான வசனம் கூறுவதுபோல முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளவர்களாகவும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்தவர்களாகவும், பட்சபாதமில்லாதவர்களாகவும், மாயமற்றவர்களாகவும் இருப்போம்.

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Saturday, May 20, 2023

நீதியின் கிரீடம்

ஆதவன் 🌞 845🌻 மே 22, 2023  திங்கள்கிழமை    

"நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில்  பங்குள்ளவர்களாயிருப்போம்." ( எபிரெயர் 3 : 14 )

இன்று நாம் அரசியலில் பல விசித்திரங்களைக்காண  முடியும்.  பதவிக்காக கொள்கைகளையும் தலைவர்களையும் மாற்றும் மனிதர்கள் அதிகம். எனவே சிலர் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அந்த அரசாங்கத்தில் மந்திரிப்பதவி பெற்றுவிடுகின்றனர். அரசியல் தலைவர்களும் எதிர்காலத்தில் குறிப்பிட்ட  ஜாதி மக்களது  ஓட்டுக் கிடைக்கவேண்டும் என்பதற்காக  இத்தகைய கட்சிமாறிகளை ஆதரிக்கின்றனர். மொத்தத்தில், அரசியல் தலைவர்களும் கட்சிமாறிகளும்  மக்களது நன்மையினையல்ல, மாறாகத் தங்களது சுய நலனையே நாடுவதால் இப்படிச் செய்கின்றனர். 

ஆனால் இத்தகைய தகிடுதத்தம் தேவனிடம் எடுபடாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் கொண்டவர்களாக இருப்போமானால் அந்த விசுவாசத்தில் இறுதிவரை நிலைத்து நிற்கவேண்டும். அங்கே  கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்பது தேவனுக்குப் பிரியமில்லாதது. தேவனைப் பொறுத்தவரை ஒரே எஜமானுக்குத்தான் நாம் ஊழியம்செய்ய முடியும். அரசியல்வாதிகளைப்போல சுய லாபம் கருதி மாறிமாறித் தலைவனை மாற்ற முடியாது. 

இயேசு கிறிஸ்துக்  கூறினார்,  "இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது." ( மத்தேயு 6 : 24 )

ஒரே வழி, ஒரே தலைவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான். அவர்மேல் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். இதற்கு மாறாக, பதவி, பணம், புகழ் இவற்றுக்காக கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தில் குறைவுபடுவோமானால் அவரோடு நமக்கு எந்தப் பங்கும் இருக்காது. 

இன்றைய வசனம், ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருப்போமாகில் என்று கூறுகின்றது. அதாவது இந்தப்பூமியில் நாம் வாழும் இறுதிநாள்வரை என்று பொருள். இறுதி நாள்வரை நாம் கிறிஸ்துவின்மேலுள்ள நமது விசுவாசத்தில் தளர்வடையாக்கூடாது. இப்படி ஆரம்பத்தில் கொண்ட  விசுவாசத்தைக் இறுதிவரைக் காத்துக்கொள்பவர்களே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஜீவ கிரீடத்தைப் பெறுவார்கள்.  

அன்பானவர்களே, அப்போஸ்தலராகிய பவுல் கூறுவதுபோல நாமும் கூறத்தக்க ஒரு வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். 

"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்." ( 2 தீமோத்தேயு 4 : 8 )

✴️✴️✴️✴️✴️✴️✴️✴️✴️                                                                              
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Friday, May 19, 2023

கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ?

ஆதவன் 🌞 844🌻 மே 21, 2023  ஞாயிற்றுக்கிழமை      

".... கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?"  ( மீகா 2 : 7 )


பொதுவாக மனிதர்களாகிய நாம் பலவேளைகளில் கர்த்தரது வல்லமையையும் பராக்கிரமத்தையும் உணர மறந்துவிடுகின்றோம். குறிப்பாக நமக்கு ஒரு மாபெரும் இக்கட்டு நேரும்போது நமக்கு அவிசுவாசம் வந்துவிடுகின்றது. கர்த்தரது ஆவியின் வல்லமையினை நாம் உணர மறந்துவிடுகின்றோம். 

இன்றைய வசனத்தின் பிற்பகுதி, "செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?" என்று கூறுவது கவனிக்கத்தக்கது. அதாவது, நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ்வோமென்றால் நிச்சயமாக அதிசயமான வழிகளில்  நமது இக்கட்டு, பிரச்சனைகளிலிருந்து அவர் நம்மை விடுவித்து நடத்துவார் என்றுபொருள். 

இஸ்ரவேல் மக்களை கானானுக்கு வழிநடத்திய மோசேக்கு எதிராக அந்த மக்கள் கிளர்ச்சி செய்தனர்.  மன்னாவைத்தவிர உண்பதற்கு வேறு எதுவும் இல்லை. எங்களுக்கு உண்பதற்கு இறைச்சி வேண்டுமென்று கூப்பாடுபோட்டனர். அந்த மக்களின் எண்ணிக்கை இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும் 6,03,550. அப்படியானால் அதற்கு குறைந்த வயதுள்ள ஆண்கள், மொத்தப் பெண்கள் எவ்வளவு இருந்திருக்கவேண்டும்!!! ஆனால் மோசே தேவனை நோக்கி முறையிட்டபோது தேவன் அந்த மக்களின் விருப்பப்படி இறைச்சி தருவதாக வாக்களித்தார். 

ஒருநாள் இரண்டுநாள் மட்டுமல்ல, ஒரு மாதமளவும் இறைச்சியை உண்பீர்கள்  என்றார் தேவன். இதனைப் பெரிய மக்கள் கூட்டத்துக்கு ஒருமாதமளவு இறைச்சி எப்படிக் கொடுக்கமுடியுமென்று  மோசே கேட்க, "அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்." ( எண்ணாகமம் 11 : 23 ) அப்படியே இஸ்ரவேல் மக்கள் இறைச்சியை உண்டார்கள். 

புதிய ஏற்பாட்டிலும்கூட, இயேசு கிறிஸ்து போதனை செய்துமுடித்து அங்கிருந்த மக்களுக்கு உணவு அளிக்க விரும்பினார். இந்த மக்களுக்கு சாப்பிடக்கொடுக்க அப்பங்களை எங்கே வாங்கலாம் என்று பிலிப்புவிடம் கேட்டார். ஒவ்வொருவனும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டாலும் இருநூறு பணத்துக்கு அப்பம் வாங்கினாலும் போதாதே என்று கைவிரித்த பிலிப்பு கூறுவதைப் பாருங்கள், "இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்" ( யோவான் 6 : 9 ) எம்மாத்திரம் என்று கூறப்பட்ட அந்த ஐந்து வாற்கோதுமை அப்பத்தையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஐயாயிரம் பேர் உண்ணவும் மிச்சமாக 12 கூடைகள் நிறையும்படியும் செய்தார் இயேசு கிறிஸ்து.

அன்பானவர்களே,  "கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ?" என்று வேதம் நம்மைத் திடப்படுத்தும் வசனத்தைத் தருகின்றது. நாம் நேர்மையான, தேவன் விரும்பும் வழியில் நடக்கிறவர்களென்றால் கர்த்தரின் ஆவி குறுக்கிடாமல் நமது வாழ்விலும் மாபெரும் அதிசயங்களைச் செய்யும். கலங்காதிருங்கள். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

தேவனால் அறியப்படுதல்

ஆதவன் 🌞 843🌻 மே 20, 2023  சனிக்கிழமை          


"தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்." ( 1 கொரிந்தியர் 8 : 3 )

ஒருமுறை இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை வேதாகமத்தில் வாசித்துவிட்டு என்னிடம், "கடவுள்தான் உலகத்திலுள்ள எல்லோரையும் அறிந்திருக்கின்றாரே? பின்னர் எப்படி நாம் , தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான் என்று கூறமுடியும்? இந்த உலகத்திலுள்ள கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், வேறு தெய்வ வழிபாடுகளைச் செய்பவர்கள் அவர்களைக் கடவுள் அறியவில்லையா?" என்று கேட்டார். அவருக்கு நான் கூறிய பதிலினை விளக்கமாக இன்றைய தியானமாகத் தருகின்றேன்.

இங்கு தேவனால் அறியப்படுதல் என்பது, தேவனால் தனி அக்கறையோடு நடத்தப்படும் அனுபவத்தைக் குறிக்கின்றது.  கோடிக்கணக்கான மக்கள் உலகத்தில் வாழ்ந்தாலும் குறிப்பிட்டச் சிலரை மட்டும் தேவன் தனிப்பட்ட முறையில் உயர்த்துகின்றாரே அது அவர்களை அவர் அறிந்திருப்பதால்தான்.  அப்போஸ்தலரான யோவான், பேதுரு, பவுல் போன்றவர்கள், ஏன்..... சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சாது சுந்தர்சிங் மற்றும் இன்று நம்மிடையே வாழும் பலர் இவர்களைத் தேவன் தனி அக்கறையோடு நடத்துவதற்கு காரணம் அவர்கள் இப்படி தேவனால் அறியப்பட்டவர்களாக வாழ்வதால்தான்.  

ஒரு தகப்பனுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மூத்த மகன்  குடித்து, எந்த பொறுப்புமற்று ஊதாரியாகத் திரிகின்றான். மற்றவன் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்து அவர் துவங்கிய தொழிலையும்  சிறப்பாக நடத்துகின்றான். தகப்பன் இரண்டு மகன்களையும் நேசித்தாலும் எந்த குடும்ப சம்பந்தமான முடிவுகளையும் தொழில் முடிவுகளையும் இளைய மகனிடம் பேசியே எடுக்கின்றான். காரணம் தகப்பன் இளைய மகனை அறிந்திருக்கின்றான். இப்படியே தேவனில் அன்புகூருகிறவன் தேவனால் அறியப்பட்டிருக்கின்றான் 

தேவனால் அறியப்பட்டவர்களது வாழ்க்கை வித்தியாசமானதாக இருக்கும். வெளிப்பார்வைக்கு அவர்கள் மற்றவர்களைப்போலவும் அல்லது மற்ற மனிதர்களைவிட தாழ்ந்தவர்களாகவும் தெரியலாம். ஆனால் தேவனது பார்வையில் அவர்கள் உயர்ந்தவர்கள். அது உடனே தெரியாது, ஆனால் வெளியே தெரியும்போது பலரை ஆச்சரியப்படவைக்கும். 

இன்றைய வசனம் கூறும் , "தேவனில் அன்புகூருதல்" என்பதன் பொருளை அப்போஸ்தலரான யோவான் பின்வருமாறு கூறுகின்றார், "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." ( 1 யோவான்  5 : 3 )

அவருடைய கற்பனைகள் பாரமானவைகள் அல்ல என்கின்றார் யோவான். காரணம்,  எல்லாவற்றுக்கும் மேலாக தேவனை நேசிப்பதும், தன்னைத்தான் நேசிப்பதுபோல மற்றவர்களையும் நேசிப்பதும் தான் அவரது கட்டளை 

"நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்." ( 1 யோவான்  5 : 2 ) ஆம், நாம் மற்றவர்களிடம் காண்பிக்கும் அன்புச்  செயல்களே நாம் அவரையும் அன்புசெய்வதற்கு அடையாளம். கிறிஸ்து இயேசுவை வாழ்வில் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போதுதான் நமது இருதயம் மாறுதல் அடைந்து எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும். 

எனவேதான் வசனம் சொல்கிறது, "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." ( 1 யோவான்  5 : 12 ) குமாரனாகிய கிறிஸ்துவை இருதயத்தில் வரும்படி அழைப்போம். அப்போதுதான் நாம் அவரதுக் கட்டளைகளைக் கடைபிடிக்கமுடியும். அப்போது அவர் நம்மை அறிந்துள்ளதை அன்றாட தனிப்பட்ட அனுபவங்களால்  நாம் அனுபவபூர்வமாக உணர முடியும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

Tuesday, May 16, 2023

உடலாகிய ஆலயம்

 ஆதவன் 🌞 842🌻 மே 19, 2023  வெள்ளிக்கிழமை            



"தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?" ( 2 நாளாகமம் 6 : 18 )

தேவனுக்கென்று ஆலயம் எழுப்பிய சாலமோன் அதன் பிரதிஷ்டையின்போது ஜெபித்த ஜெபத்தின் ஒரு பகுதிதான் இன்றைய தியான வசனம். இந்த வசனத்தில் சாலமோன்,  தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? என்று கேள்வி எழுப்புகின்றார்.  இந்தக் கேள்வியின் உண்மையான பொருள், தேவன்  அப்படி மனிதர்களோடு வாசம்பண்ண மாட்டார் என்பதே. ஆனால்,  இந்தக் கேள்விக்கு மாறாகக்  கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகினில் மனிதனாக வந்து மனிதர்களோடு வாழ்ந்தார். வானங்களும், வானாதி வானங்களும்  தாங்க முடியாத தேவன் சாதாரண மனிதனைப்போல ஆனார்.  

அப்போஸ்தலரான யோவான் இதனைக்குறித்து, "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை." ( யோவான் 1 : 10 ) என்று எழுதுகின்றார். 

மேலும் ஆச்சரியமான காரியம் என்னவென்றால்,  பூமியில் தேவன் வாசம்பண்ணுவாரோ என்றும் வானங்களும் வானாதி வானங்களும் தாங்கக்கொள்ளாதே என்றும் கூறப்பட்ட வல்லவரான தேவன் மனிதர்களது சின்ன இதயத்துக்குள்ளே வந்து தங்குகின்றார்.  இது ஆச்சரியமல்லவா?

இப்படி தேவன் வந்து தங்கும் இடமாக மனிதர்களது இருதயம் இருப்பதால் தான் நாமே தேவனது ஆலயமாக இருக்கின்றோம்.  

"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?"
( 1 கொரிந்தியர் 3 : 16 )

"உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்ல வென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 )

பூமியிலே மனிதர்களோடு தங்குவாரோ என சந்தேகத்தோடு சாலமோன் விண்ணப்பம் பண்ணினார். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதர்களோடு மட்டுமல்ல, மனிதர்களுக்குளேயே வந்து தங்கிவிட்டார். அன்பானவர்களே, அப்படியானால் நாம் எவ்வளவு பேறுபெற்றோர் என்று எண்ணிப்பாருங்கள். இத்தகைய தேவன் வந்து தங்கும் நமது உடலாகிய ஆலயத்தை நாம் எவ்வளவு தூய்மையாக பாதுகாக்கவேண்டும்!!!

எனவேதான் அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள், "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 ) எனக் கூறுகின்றார். 

நமது உடலாகிய ஆலயத்தைக் கெடுக்காமல்  தேவன் விரும்பும்வண்ணம் பரிசுத்தமாகக்  காத்துக்கொள்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712                                                                                                Website :- www.aathavanmonthly.blogspot.com 

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - எசேக்கியேல் 13 : 10 / Ezekiel 13:10

" ஆதவன் " தியானம் - 1980 ஜூலை 10, வெள்ளி  2026       "சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம...