இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Monday, April 29, 2024

மனமேட்டிமை

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,177     💚 ஏப்ரல் 30, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்." (நீதிமொழிகள் 16: 5 )

மனிதர்கள் வாழ்வில் தங்களைவிட்டு கண்டிப்பாக நீக்கவேண்டியகுணம் பெருமை அல்லது அகந்தைபெருமையுள்ளவன் வாழ்வில்செழிப்பதுபோலத் தெரிந்தாலும் அவன் முடிவு  பரிதாபகரமானதாக இருக்கும்எனவே வேதம் பெருமை  குணத்தை நம்மைவிட்டு அகற்றிட அறிவுறுத்துகின்றதுஉலகில் நல்லவர்களாக வெளிப்பார்வைக்குத் தெரியும் பலரும்  பொய்யையும் நீதியற்றச் செயல்களையும் பலவேளைகளில்  செய்கின்றனர்காரணம் பெருமைக்கு அடிமையாவதேபெருமை,அகந்தை இவை மனிதனை எந்த அவலட்சணமானச்  செயலையும் செய்யத்தூண்டும்பெருமைக்கு அடிமையானவன்  நல்லவனாக இருக்க முடியாதுஎனவேதான் வேதம், "பெருமையுள்ளவனுக்கு தேவன் எதிர்த்துநிற்கின்றார்,    தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." ( 1 பேதுரு 5 : 5 ) என்று கூறுகின்றது.

உங்கள் ஊர்களில் கூட இத்தகைய பெருமையுள்ள மனிதர்களை நீங்கள்  சந்தித்திருக்கலாம்கல்லூரிப் பேராசிரியர்கள்வங்கி  அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் பலர் ஏதோ  உலகமே இவர்கள் கைவசம்போல எண்ணிக்கொண்டு  செயல்படுவதை பார்த்திருக்கலாம்இது தவிர, பிரதமர்கள், அமைச்சர்கள்முதலமைச்சராக இருப்பவர்கள்இருந்தவர்கள் இவர்களது பெருமைஅகந்தை இறுமாப்பு  இவைகளையும் நாம் பார்த்திருக்கின்றோம்.

"தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்." ( லுூக்கா 1 : 51 ) என்ற வசனத்தின்படி தேவன் அவர்களைச் சிதறடித்ததனால்  அவர்களில் பலருக்கு ஏற்பட்ட அலங்கோல முடிவுகளையும் நாம் கண்டிருக்கின்றோம்ஆம் தேவன் அகந்தையுள்ளவர்களை எப்போதும்   விட்டுவைக்கமாட்டார்.

அற்பமான உலகப் பதவிகளுக்கே மனிதர்கள் இந்தப்பெருமை  பாராட்டுகிறார்கள்ஆனால் இந்த அண்டசராசரங்களைப்  படைத்த தேவன் எவ்வளவு தாழ்மையுள்ளவராக இருந்தார்  என்பதை நாம் வேதாகமத்தைப் படித்தால் புரியும்தனது  சீடர்களின் பாதங்களைக் கழுவியது ஒரு சிறிய சான்றுஅப்போஸ்தலரான பவுல் அவரதுத் தாழ்மையைக் குறித்துச்  சுருக்கமாகப் பின்வறுமாறு கூறுகின்றார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச்  சமமாயிருப்பதைக் கொள்ளையாடினப் பொருளாய் எண்ணாமல்தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து  மனுஷர் சாயலானார்." (பிலிப்பியர் 2 : 6, 7)

அன்பானவர்களேஇப்படி அடிமை நிலைக்குத் தன்னைத்  தாழ்த்தி தாழ்மைக்கு முன்னுதாரணமாக இருக்கும் தேவன் எப்படிபெருமையுள்ளவர்களை ஆதரிக்கமுடியும்?

வாழ்வில் எவ்வளவோ சம்பாதித்தும் நிம்மதியில்லைசெழிப்பு   இல்லைபிள்ளைகளுடைய வாழ்வு சரியில்லை என்பதுபோன்ற  மனக்கவலைகளுடன் இருக்கும் அன்பானவர்களேஉங்கள்  வாழ்வை எண்ணிப்பாருங்கள்உங்கள் அகந்தையானச்  செயல்களால் யாரையாவது அற்பமாய் எண்ணியிருந்தால்  அல்லது அவர்கள் மனம் நோக்கச் செய்திருந்தால் தேவனிடம்   மன்னிப்பு வேண்டுங்கள். ".....அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும்அவருடைய  வழிகள் நியாயமுமானவைகள்அகந்தையாய் நடக்கிறவர்களை தாழ்த்த அவராலே ஆகும்." ( தானியேல் 4 : 37 ) அதேபோலத் தாழ்மையுள்ளவர்களை உயர்த்தவும் அவராலே  கூடும்.

ஆம்மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு  அருவருப்பானவன்கையோடே கைகோர்த்தாலும் (அதாவது, கைகளைச் சேர்த்துக்  குவித்து ஜெபித்தாலும்) அவன் தண்டனைக்குத் தப்பான்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Sunday, April 28, 2024

கடுகுவிதையளவு விசுவாசம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,176      💚 ஏப்ரல் 29, 2024 💚 திங்கள்கிழமை 💚



"கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்தேயு 17:20) 

இன்றைய தியான வசனம் பலருக்கும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக இருக்கின்றது. இந்த உலகினில் கோடிக்கணக்கான விசுவாசிகள் இருக்கின்றனரே, அப்படியானால் ஒருவரிடம் கூடவா கடுகளவு விசுவாசம் இல்லாமலிருக்கின்றது என்று எண்ணிக்கொள்கின்றனர். பின்னர் ஏன் இயேசு கிறிஸ்து கூறியதுபோன்று  எவராலும் மலையை அசைக்கமுடியவில்லை என்றும்  எண்ணிக்கொள்கின்றனர். 

இன்றைய வசனம்,  நாம் தேவனைப் பற்றும் விசுவாசத்தால் எந்த வல்ல செயலையும்  செய்ய முடியும் என்பதனை வலியுறுத்த இயேசு கிறிஸ்து கூறியது. மலையைப் பெயர்த்து அப்புறப்படுத்த இயேசு கூறவில்லை. இப்படி நடக்குமானால் உலகினில் வேடிக்கையான குழப்பமான சூழ்நிலையே ஏற்படும். ஹிமாச்சல பிரதேசத்தில் வசிக்கும் விசுவாசி இமயமலையைப் பெயர்த்து கன்னியாகுமரிக்கு அனுப்புவார். கன்னியாகுமரி விசுவாசி இங்குள்ள மலையை சென்னைக்குப் போ என  அனுப்புவார். உலகமே திக்குமுக்காடிப்போகும். 

வேதாகம வசனங்களை நாம் ஆவிக்குரிய பொருளில்தான் பார்க்கவேண்டும். கடுகளவு விசுவாசம் என்பது கிறிஸ்துவை நம்புவதாக இருக்கலாம் அல்லது அவர்மேலுள்ள நம்பிக்கையை ஏதாவது சிறு செயல்மூலம் நாம் வெளிப்படுத்துவதில் இருக்கலாம். அப்படி நாம் நமது விசுவாசத்தை வெளிப்படுத்தும்போது மலைபோன்ற பெரிய தடைகள் நம்மைவிட்டு அகலும். 

எனது சாட்சியைக்குறித்து பல முறை நான் குறிப்பிட்டுள்ளேன். கடவுள் நம்பிக்கையே இல்லாமலிருந்தபோது ஒரு சகோதரன் என்னை வற்புறுத்தி அழைத்ததால் வேறு வழியின்றி அவருடன் ஜெபிக்கச் சென்றேன். அன்பானவர்களே, அப்படி நான் வேறு வழியில்லாமல் அவர் வற்புறுத்தி அழைத்ததால் அவருடன் சென்றேன். அப்படி நான் சென்றதுதான் கடுகளவு விசுவாசம். அதாவது நான் எனது விசுவாசத்தை அன்று வாயினால் அறிக்கையிடாவிட்டாலும் அவருடன் ஜெபிக்க ஒத்துக்கொண்டு சென்றதன்மூலம் வெளிப்படுத்தினேன், அந்தக் கடுகளவு விசுவாசம் மலைபோன்ற இருளை என்னைவிட்டு அகற்றியது.      

இதுபோல என்னை வற்புறுத்தி ஜெபத்துக்கு அழைத்துச்சென்ற அந்தச் சகோதரனின்  விசுவாசமும் பலன் தந்தது. ஆம், கிறிஸ்து எனக்குத் தன்னை வெளிப்படுத்தி பாவமன்னிப்பு அளிப்பார் என்று அவர் நம்பியிருந்தார். அந்தச் சகோதரனின் விசுவாசத்தை தேவன் கனம் பண்ணினார்.  

அவிசுவாசம், இருளான வாழ்க்கைச்சூழல், தீராத நோய்கள், குடும்பப் பிரச்சனைகள், பாவச் செயல்பாடுகள்  இவைகளெல்லாம் நம்மைச் சுற்றி இருக்கும் மலைகள். கடுகளவு விசுவாசத்தோடு கிறிஸ்துவைநோக்கி நாம் பார்ப்போமானால் இந்த மலைகள் நம்மைவிட்டு அப்புறப்படுத்தப்படும். "உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்று இயேசு கிறிஸ்து கூறியது ஆவிக்குரிய அர்த்தத்தில்தான். 

ஆனால் நாம் ஆவிக்குரிய அனுபவங்களில் வளர வளர உலக காரியங்களிலும் நாம் வல்ல செயல்கள் செய்யமுடியும். ஆனால் மந்திரவாதிகள்போல அற்புதம்செய்து மற்றவர்களை நம் பக்கமாகத் திருப்ப இயேசு கிறிஸ்து சொல்லவில்லை. கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொள்வோம். நமது மற்றும் நம்மைச் சார்ந்தவர்களது ஆவிக்குரிய வாழ்வில் உள்ள மலைகளை நாம் இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Saturday, April 27, 2024

கணவன் மனைவியாக இணைந்து வாழ்வதுபோல

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,175      💚 ஏப்ரல் 28, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்." ( எபேசியர் 5 : 30 )

திருச்சபை என்று நாம் கூறுவது உலகிலுள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைப்பிரிவுகளைக் குறிப்பதாக இருந்தாலும்  வேத அடிப்படையில் திருச்சபை என்பது விசுவாசிகளின் கூட்டத்தைக் குறிக்கின்றது. கூட்டம் என்று சொல்வதால் பெரிய எண்ணிக்கையாக இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. இரண்டு மூன்று விசுவாசிகள் சேர்ந்திருந்தாலும் அது ஒரு சபை.  இப்படி கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு சபையாக வாழும் நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

அப்போஸ்தலரான பவுல் கிறிஸ்துவுக்கும் விசுவாசிகளான சபைக்குமுள்ள உறவினை கணவன் மனைவி உறவுக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார். கணவனும் மனைவியும் தகப்பனையும் தாயையும் விட்டுப் பிரிந்து அவர்களுக்குள் ஒரே உறவாக இருப்பார்கள். அதுபோல கிறிஸ்தவ விசுவாசியும் அதுவரை வாழ்ந்த உலக வாழ்க்கையைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவோடு ஐக்கியமாக வாழவேண்டும் என்கின்றார். 

இதனையே, "இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்." ( எபேசியர் 5 : 31, 32 ) என்று கூறுகின்றார். 

எபேசியர் ஐந்தாம் அதிகாரத்தில் அப்போஸ்தலரான பவுல் கணவன் மனைவிக்குமுள்ள உறவினை திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள ஐக்கியத்துக்கு ஒப்பிட்டுப் பல காரியங்களைக் கூறுகின்றார். அவர் கூறும் காரியங்கள் குடும்ப வாழ்க்கைக்கும் பொருந்தும் சபைக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவுக்கும் பொருந்தும்.

இப்படி அவர் கூறும் முக்கியமானஒரு காரியம், "தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான்." ( எபேசியர் 5 : 29 ) இந்த உலகினில் கணவன் மனைவியைப் பராமரித்துக் காப்பாற்றுகின்றான். அதுபோல கிறிஸ்துவின் சபையை பாராமரித்துக் காப்பவர் ஊழியர்களோ விசுவாசிகளோ அல்ல. மாறாக, கர்த்தர். கர்த்தர் எப்படி தனது சபையினைக் காப்பாற்றி பராமரித்து நடத்துகின்றாரோ அதுபோல கணவனும் மனைவியைக் காத்து நடத்தவேண்டும்.

இன்றைய தியான வசனம் கூறுவது இரண்டு விதங்களில் பொருந்தக்கூடியது. ஒன்று குடும்ப உறவு. இரண்டு கிறிஸ்துவுக்கும் சபைக்குமுள்ள உறவு. இந்த உறவுபடி  கணவனும் மனைவியும் உறவோடு இருக்கவேண்டும். அதே உறவோடு விசுவாசிகள் கிறிஸ்துவோடு உறவுடன் இருக்கவேண்டும். காரணம் நாம் அனைவருமே அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.

கணவன் மனைவி உறவினை அப்போஸ்தலராகிய பவுல் இங்கு முன்னிலைப்படுத்துவதுபோல சில இடங்களில் குறிப்பிட்டாலும் சபையாகிய விசுவாசிகளுக்கும் கிறிஸ்துவுக்குமுள்ள உறவையே முக்கியமாக அவர் தெளிவுபடுத்த முயலுகின்றார். எனவேதான் அவர், "இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்." என்று முடிக்கின்றார்.  

அன்பானவர்களே, தகப்பனையும் தாயையும் விட்டுப்பிரிந்து கணவன் மனைவியாக இணைந்து வாழ்வதுபோல உலக ஆசை இச்சைகளை விட்டுப் பிரிந்து எந்தச் சூழ்நிலையிலும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்திடாமல் வாழவே நாம்  அழைக்கப்பட்டுள்ளோம்.   ஆம், நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Thursday, April 25, 2024

இடறல்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,174     💚 ஏப்ரல் 27, 2024 💚 சனிக்கிழமை 💚


"என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்" (லூக்கா 7:23)

இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து குறிப்பிடும் இடறல் என்பது நாம் ஏற்கெனவே கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடுகளையும்  போதனைகளையும்தான்.  கிறிஸ்தவ மார்க்கமே நம்பிக்கையின் அடிப்படையிலானதுதான். அந்த நம்பிக்கைக்கு எதிரான, முரணான போதனைகளும் செயல்பாடுகளும் நம்மை கிறிஸ்துவின்மேல் பூரண விசுவாசம் கொள்ளவிடாமல் தடுக்கின்றன. அல்லது இடறச்செய்கின்றன. நாம் நடக்கும்போது வழியில் கிடக்கும் கற்கள் நம்மைச் சிலவேளைகளில் இடறிவிடுகின்றன. அதுபோலவே கிறிஸ்தவ கோட்பாடுகளுக்கு முரணான போதனைகள் விசுவாசிகளை இடறச் செய்கின்றன. 

ஆனால் இயேசு கிறிஸ்து இடறல்கள் வருவது அவசியம் என்றும் கூறினார். காரணம் கிறிஸ்துவின்மேல் உண்மையான  விசுவாசம் கொண்டவர்களுக்கு அந்த இடறல்கள் அவர்களை மேலும் மேலும் விசுவாசத்தில் வளர உதவுகின்றன. விசுவாசத்தின் தந்தை என்று நாம் கூறும் ஆபிரகாமை எடுத்துக்கொள்வோம். அவரது விசுவாசத்துக்கு எதிராக  வந்த இடறல்தான் அவரை விசுவாச வீரனாக்கியது. 

இயேசு கிறிஸ்து கூறினார்,  "இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! "(மத்தேயு 18:7) ஆனால் ஆபிரகாமுக்கு வந்த இடறல் மனிதனால் வந்ததல்ல; மாறாக தேவனே அவரது விசுவாசத்தை நமக்குக் காட்டிட முன்குறித்துச் செய்த செயல் அது. 

இரட்சிப்புக்கு  ஏதில்லாத  வெறும் ஆசீர்வாத போதனைகள் இடறுதலுக்கேதுவானவைகள்; சில தேவையற்ற சடங்காச்சார  வழிபாட்டுமுறைமைகள் இடறுதலுக்கேதுவானவைகள்.   காரணம் அவை கிறிஸ்துவின்மேல் நாம் உறுதியான விசுவாசம் கொள்ளவிடாமல் தடுக்கின்றன. கிறிஸ்துவைவிட உலக செல்வங்களுக்கு முன்னுரிமைகொடுக்க நம்மை அவை தூண்டுகின்றன. ஆனால் இன்று மட்டுமல்ல அப்போஸ்தலரான பவுல் அப்போஸ்தலரின் காலத்திலேயே இப்படிப்பட்ட முரணான இடறலான போதனைகள் பலரால் போதிக்கப்பட்டன.  

எனவேதான் அவர் தனது நிருபத்தில் இதுகுறித்து எச்சரித்து எழுதினார். "சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்." (ரோமர் 16:17) ஆம் அன்பானவர்களே, எனவே, இடறலான போதனைகளைப் போதிப்பவர்களைவிட்டு நாம் விலகிவிடவேண்டும்.

ஒருவர் தவறுதலான இடறலான போதனையைக் கொடுக்கின்றார் என்பதனை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்? அது தேவனோடு நாம் வளர்த்துக்கொள்ளும் தனிப்பட்ட உறவினால்தான் முடியும். வெறுமனே ஆலயங்களுக்குச் சென்று போதகர்கள் போதிப்பதை மட்டும் நாம் கேட்டுக்கொண்டிருந்தால்  போதாது. நாம் தேவனோடு நமது தனிப்பட்ட உறவினை வளர்த்துக் கொள்ளவேண்டும். அப்படி கொள்ளும்போதுதான் ஆவியானவர் நமக்குச் சரியான வழியைக் காட்டுவார்.  

"எப்பொருள் யார்யார்வாய்க்  கேட்பினும் - அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று வள்ளுவரும் கூறியுள்ளார். எனவே அன்பானவர்களே, யார் போதிக்கின்றார்கள் என்று பார்க்கவேண்டாம். அவர் எத்தனை பெரிய கூட்டம் சேர்க்கும் பிரசங்கியாக இருந்தாலும் அப்படியே ஒருவர் கூறுவதைக் கேட்டு நம்பவேண்டாம்.  ஆவியானவர் தரும் வெளிச்சத்தில் வேத வசனங்களின் மெய்ப்பொருளைக் கண்டுகொள்வோம். அப்போது நாம் இடறமாட்டோம். "என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்"என்று இயேசு கிறிஸ்து கூறியபடி இடறலற்றவர்களாக இருந்து பாக்யவான்களாக வாழ்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்   

Wednesday, April 24, 2024

முற்றிலும் தேவனையே சார்ந்து வாழவேண்டும்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,173    💚 ஏப்ரல் 26, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚


"சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பிஇஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது."(1 நாளாகமம் 21 : 1)

தேவன் தனது மக்கள் தங்கள் சுய பெலத்தையோ தங்களது  செல்வத் திரட்சியையோ நம்பி வாழாமல் தன்னையே முற்றிலும் நம்பி தன்னையே சார்ந்து வாழவேண்டும் என விரும்புகின்றார்அப்படி வாழ்ந்தவர்தான் தாவீதுஅதுதான் அவரது வளர்ச்சிக்குக்காரணம்ஆனால் இப்போது தாவீதுக்கு ஒரு விபரீதமான  ஆசை சாத்தானால் ஏற்படுகின்றதுராஜாவாகிய தனது கீழ்  எவ்வளவு மக்கள் இருக்கின்றனர் என்பதை அறிய ஒரு ஆசை.  இதற்கு  இரண்டு காரணங்கள் இருந்திருக்கலாம்ஒன்று தனக்குக்கீழ்  எவ்வளவு மக்கள் இருக்கின்றனர் என்பதை அறிவதில் ஒரு  அற்பப்பெருமை எண்ணம்இரண்டாவது எதிரிகள் போரிட்டு   வருவார்களென்றால் போருக்குப் போகத்தக்க மக்கள் தன்னிடம் எவ்வளவுபேர் இருக்கின்றார்கள் என்பதை அறிவது.

தனது வாழ்வின் துவக்கமுதல் தேவனையே சார்ந்து  வாழ்ந்தவர்தான் தாவீதுஆடுகளுக்குப் பின்னாகத்திரிந்த ஒரு ஆட்டு இடையன்ஆனால் அவரைத் தேவன் ராஜாவாக உயர்த்தி இஸ்ரவேல்மீதும் யூதாவின் மீதும் ஆட்சிசெய்யவைத்தார். ஆனால், தாவீது இங்கு தனது பழைய விசுவாச நிலையிலிருந்து சற்று பின்வாங்கிவிட்டார்எந்த ஒரு ஆயுதமும் கையில்  இல்லாமல் ஒரு கூழாங்கல்லால் மட்டுமே   கோலியாத்தை  வெற்றிகொள்ள தேவன் தனக்குத் துணைநின்றதை அவர்  இப்போது மறந்துவிட்டார்ஆனால் இன்று தனது பலத்தை அறிய தனது  மக்களை எண்ணிக் கணக்கிடத் துணிந்துவிட்டார்அதாவது  தேவன்மேல் இருந்த பழைய விசுவாசம் அவருக்குக்  குறைந்துவிட்டதுஇது தேவனது பார்வைக்கு ஆகாத ஒரு  செயலாகி விட்டது.

முன்புஅவர் தனது சுய பலத்தை நம்பாமல் தேவனையே நம்பி கோலியாத்தைஎதிர்த்தார்."நீ பட்டயத்தோடும்ஈட்டியோடும்கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்நானோ நீ நிந்தித்த  இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய  சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில்  வருகிறேன்." ( 1 சாமுவேல் 17 : 45 ) என்று அறிக்கையிட்டு கோலியாத்தைக் கொன்றார்

எனவே மக்களைக் கணக்கிடும்படி தாவீது செய்த "இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார்." ( 1 நாளாகமம் 21 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியாளர்கள் செய்யும் தேவனுக்கு விரோதமானச்  செயல்களை மக்களையும் பாதிக்கும் என்பது இங்கு உணர்த்தப் படுகின்றதுஎனவே தகுந்த ஆட்சியாளர்களைத் தேர்வு  செய்வதில் நாம் கவனமாக இருக்கவேண்டியுள்ளது.

அன்பானவர்களேதேவன் நமது வாழ்வில் பல அற்புதங்கள்  செய்திருக்கலாம்அதிசயமாக நம்மை வழிநடத்தியிருக்கலாம் ஆனால் அப்போது நாம் நமது விசுவாசத்தில் எப்படி இருந்தோம் இப்போது எப்படி இருக்கின்றோம் என்று நம்மை நாமே சோதித்து அறியவேண்டியது அவசியம்தேவன்நாம் அவரையே சார்ந்து வாழவேண்டுமென விரும்புகின்றார்நம்மைச் சுற்றியுள்ள  சூழ்நிலைகளைப் பார்த்தோமானால் நாம் விசுவாசத்தைவிட்டு  நழுவி விடுவோம்

எனவே சூழ்நிலைகளைப் பார்க்காமல் சூழ்நிலைகளையே மாற்றவல்ல தேவனையே நோக்கிப்பார்க்கவேண்டும்ஒருவேளை  சூழ்நிலையை மாற்றாவிட்டால் சூழ்நிலைக்கேற்ப நம்மை  மாற்றுவார்இது நம்மைப்பார்க்கும் மற்றவர்களுக்கு அதிசயம்போலத் தெரியும்.

எனவே நூறு சதம் தேவனையே நம்பிவாழும் விசுவாச  வரம்வேண்டி தேவனிடம் மன்றாடவேண்டியது நமது கடமைஅதுவே மற்றவர்களிடமிருந்து நம்மைத் தனித்துவம்  மிக்கவர்களாக அடையாளம் காட்டும்தேவன்மீது மற்றவர்களும் விசுவாசம்கொள்ள இதுவே வழியாக இருக்கும்.


தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   

Monday, April 22, 2024

தைரியமாய் அவரிடம் சேர்வோம்

 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,172     💚 ஏப்ரல் 25, 2024 💚 வியாழக்கிழமை 💚



"ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்." ( எபிரெயர் 4 : 16 )

நாம் தைரியமாய் ஒரு உயர் அதிகாரியிடம் சென்று நமது பிரச்சனைகளையும் நமது விருப்பங்களையும் கூறவேண்டுமானால் அவரோடு நமக்கு நல்ல உறவு இருக்கவேண்டும். ஒரு மாவட்ட ஆட்சித்தலைவரிடம்கூட  சென்று நாம் துணிவுடன் பேச முடியாது. அப்படியிருக்கும்போது நாட்டின் முதலமைச்சரிடமோ பிரதமரிடமோ நாம் எப்படித் துணிவுடன் சென்று பேசமுடியும்? 

ஆனால் அந்த உயர் பதவியில் இருப்பவர் நமது  தகப்பனாராகவோ தாயாகவோ இருந்தால் நாம் துணிவுடன் தைரியமாகச் சென்று பேசுவோம். காரணம் அவர்கள் நம்மைப் பெற்றவர்கள், நம்மைப்பற்றி அறிந்தவர்கள், வீட்டில் நம்மோடு வாழ்ந்து நாம் உண்ணும் உணவை உண்டு, நாம் வீட்டில் அனுபவிக்கும் பிரச்சனைகளை நம்மைப்போல அனுபவித்து வாழ்கின்றவர்கள்.  

இதனையே இன்றைய தியான வசனத்தின் முந்தைய வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." ( எபிரெயர் 4 : 15 )

இப்படி எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருப்பதால் நாம் அவரிடம் துணிவுடன் சென்று பேச முடியும். இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களையும் அவர் ஏற்கெனவே அனுபவித்துள்ளார். அவர் நமது தகப்பனாக, தாயாக இருப்பதால் நம்மைப்பற்றி முற்றிலும் அறிந்திருக்கின்றார். 

எனவே அன்பானவர்களே, முதலில் நாம் தேவனோடுள்ள நமது உறவினைச் சரிசெய்யவேண்டியது அவசியம். அவரோடு ஒரு மகனாக மகளாக உறவுடன் வாழ நம்மை ஒப்புக்கொடுத்து வாழ வேண்டும். அப்படி ஒரு உறவுடன் வாழ்வோமானால் இன்றைய தியான வசனம்  கூறுவதுபோல அவரது இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே நாம் சேர முடியும்.  

பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் என்று கூறியுள்ளபடி நாமும் அவரைப் போலப்  பாவமில்லாதவராக இருக்கவேண்டியது அவசியம். கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும்போதுதான்  பாவ மன்னிப்பைப் பெறுகின்றோம்; அவரோடு ஒப்புரவாகின்றோம். அப்படி தேவனோடு ஒப்புரவாகும்போதுதான்  நாம் அவரது பிள்ளைகளாகின்றோம். அப்படிப் பிள்ளைகளாகும்போது தான் இன்றைய வசனம் கூறுவதுபோல அவரை நெருங்கிட நமக்குத் தைரியம் பிறக்கும். 

எனவே அன்பானவர்களே, நம்மை அவருக்கு ஒப்புவித்து ஜெபிப்போம். அன்பான பரம தகப்பனே, உமக்கு விரோதமாக நான் செய்த பாவங்களுக்காக மெய்யாகவே மனம் வருந்தி மன்னிப்பு  வேண்டுகின்றேன். கல்வாரியில் நீர் சிந்தின உமது பரிசுத்த இரத்தத்தால் என்னைக் கழுவியருளும். உமது  விலையேறப்பெற்ற இரட்சிப்பினை நான் அடைந்திடவும் அதனால் உமது பிள்ளையாகிடவும் வரம்தாரும். உமது  இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் உமது உதவி கிடைக்கும் கிருபையை நான் அடையவும் உதவியருளும். மீட்பர் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே. ஆமென். 

 தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்