ஆதவன் 🌞 727 🌻 ஜனவரி 24, 2023 செவ்வாய்க்கிழமை
"சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." ( யாக்கோபு 1 : 7 )
ஜெபத்தைக்குறித்த ஒரு சத்தியத்தை இன்றைய வசனம் எடுத்துக் கூறுகின்றது. நாம் ஜெபிக்கும்போது தேவ சித்தமறிந்து ஜெபிக்கவேண்டியது அவசியம். மேலும், இன்றைய வசனம், ஜெபிக்கும்போது சந்தேகமில்லாமல் உறுதியாக ஜெபிக்கவேண்டும் என்று கூறுகின்றது.
சிறு குழந்தைகளாய் இருந்தபோது நாம் நமது அம்மா அப்பாவிடம் ஏதாவது கேட்கும்போது நாம் கேட்பது தேவையானது அல்லது நல்லது என அவர்கள் கருதினால், "வாங்கித் தருகிறேன் என்று கூறுவார்கள்". நாம் அப்போது அவர்கள்மீது சந்தேகப் படமாட்டோம். கையில் காசு வந்தவுடன் வாங்கித்தருவார்கள் என்று பொறுமையோடு காத்திருப்போம். ஆனால் அவர்கள் சொன்னதுபோல நாம் கேட்டதை வாங்கித்தரும்போது நமது உள்ளம் மகிழ்ச்சியடையும்.
தேவனும் நமது தாயாகவும் தகப்பனாகவும் இருப்பதால் நாம் நமது மண்ணக தாய் தகப்பனை நம்புவதுபோல தேவனை விசுவாசிக்கவேண்டும். இயேசு கிறிஸ்துவும் ஜெபத்தைப்பற்றிக் கூறும்போது, "நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்." ( மாற்கு 11 : 24 ) என்று கூறினார்.
ஆனால் நாம் அனைவருமே இந்த விஷயத்தில் இந்த உறுதியைக் கைக்கொள்ளத் தவறிவிடுகின்றோம். விசுவாசத்தைப்பற்றி எவ்வளவுதான் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினாலும், எழுதினாலும் சில வேளைகளில் நமக்கும் சந்தேகம் வந்துவிடுகின்றது.
இப்படி சந்தேகப்படும் நம்மை எச்சரிப்பதுபோல இன்றைய வசனம் நமக்குக் கூறுகின்றது, சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." என்று.
கடல் அலையானது நிம்மதியின்றி அலைந்து குமுறுவதுபோல சந்தேகப்படும் மனிதனின் உள்ளமும் குமுறும், குழம்பும். விசுவாசம் என்பதை ஆவியின் வரங்களில் ஒன்றாகவும் (1 கொரிந்தியர் 12:9) ஆவியின் கனிகளில் ஒன்றாகவும் (கலாத்தியர் 5:22) வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது விசுவாச வரத்தை நாம் தேவனிடம் வேண்டிப் பெறும்போது அது நம் வாழ்க்கையில் கனியாக வெளிப்படும். எனவே நாம் அனைவருமே நமது ஜெபங்களில் இந்த வரத்தைப் பெறும்படி வேண்டுவோம்.
ஏனெனில், "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்." ( எபிரெயர் 11 : 6 ) என்கிறது தேவ வசனம். தேவனுக்குப் பிரியமாக இருக்க முயற்சிப்போம்; நமது விசுவாசத்தை வலுப்படுத்துவோம்.
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு:- 9688933712