Thursday, December 26, 2013

தாகம்

தாகம் 


(இக்கட்டுரை "ஆதவன்" டிசம்பர் 2013 இதழில் பிரசுரமானது)

- எம். ஜியோ  பிரகாஷ்


தேவனை தங்களது உலக ஆசை இச்சைகளை நிறைவேற்றிடத் தேடுவோருக்கும் உண்மையயான ஆத்தும சிந்தையோடு  தேடுவோருக்கும்   மிகுந்த வேறுபாடு உண்டு

உலக ஆசைகளை நிறைவேற்ற விரும்பி தேவனை தேடுபவன் மேம்போக்கான எண்ணம் கொண்டவனாகவே இருப்பான். தேவனது வல்லமை மகத்துவங்களோ, தேவனிடம்  அன்புறவோ அத்தகைய மனிதனிடம் இருக்காது. ஆத்தும தாகம் என்பதை தேவனை தேடுபவனிடம் மட்டுமே காண முடியும்.

வெயிலில் நடந்து களைப்படைந்த   மனிதன் ஒரு குவளைத்  தண்ணீர் கிடைத்திடாதா என ஏங்குவதுபோல ஆத்தும  தாகங்கொண்டவன் தேவனைத் தாகங்கொண்டுத் தேடுவான்.

வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசுதவான்களிடம் இத்தகைய தாகம் இருந்தது. ஜீவ ஊற்றாகிய தேவனிடமிருந்து ஜீவ தண்ணீர் இருதயத்தில் பாய்ந்து நிரப்பிட வேண்டும் என்பதே அவர்களது நெஞ்சத்தின் பெரு விருப்பமாக இருந்தது. தேவன் இத்தகைய மன விருப்பத்துடன் மனிதர்கள் தன்னைத் தேடவேண்டுமேன்றே விரும்புகிறார். 

தாவீது ராஜா இத்தகைய இறை அனுபவத்தைக் கொண்டிருந்தார். அவர் ஒரு பெரிய ராஜாவாக இருந்தபோதும் அந்த ராஜ பதவியோ செல்வமோ அவருக்கு ஆத்தும திருப்தியைத் தரவில்லை. தேவ ஐக்கியமே அவரது தாகமாக இருந்தது. எனவேதான் அவர் ஆத்மார்த்த அன்புடன் கூறுகிறார்:

"மானானது நீரோடையை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங்கீதம் - 42:1)

நாம் தேவனைத் தேடுகிறோமா தேவனிடமிருந்து வரும் பொருள் ஆசீர்வாதங்களைத் தேடுகிறோமா? தேவனையேத் தேடுவோமெனில் அவர் இருதயத்தில் சுரக்கும்  ஜீவத்தண்ணீரால் நம்மைத் திருப்தியாக்குவார் .

No comments: