Wednesday, December 18, 2013

வில்லியம் கேரி

tamilArticle.com
வில்லியம் கேரி வேத புத்தகத்தைப் பல மொழிகளில் மொழி பெயர்த்து உலகின் மூன்றில் ஒரு பகுதிக்கு கொடுத்து உதவியவர். இன்றைய மிஷனரி இயக்கங்களின் தந்தை என்ற நிலையை அடைந்தவர். அவரது சிறு வீட்டிலே செருப்பு செப்பனிடும் வாலிபனாகக் கண்டவர்கள் எவரும் அவரை இந்த அளவுக்கு எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.

வில்லியம் கேரி தீரச் செயலைச் செய்ய ஆரம்பித்து அதை விடாது தொடர்ந்து செய்து முடிப்பார். தீரச் செயல்களில் மிகவும் விருப்பம் கொண்டவர். ஒரு முறை ஒரு மரத்தின் உச்சியில் இருக்கும் குருவிக் கூட்டை ஆராய்ந்து பார்ப்பதற்காக அவர் மரத்தில் ஏறிய போது அவர் வழுக்கி கீழே விழுந்தார். கரம், கால்களில் அடிபட்ட அவருக்குக் கட்டுகள் போட்டு அவரை அவரது தாயார் படுக்கையில் படுக்க வைத்தார். ஆனால் சிறுவனான கேரியினால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் மறுபடியும் சென்று மரத்தில் ஏறி அந்தக் குருவியின் கூட்டைக் கையிலே கொண்டு வருவதை அவர் தாயார் கண்டார்கள்.

தனது பன்னிரண்டு வயதில் கேரி தன் பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டார். அவர் தந்தையார் செருப்புத் தைக்கும் செம்மான் ஒருவருக்கு உதவியாளனாக கேரியை பணிக்கு அமர்த்தினார். அவர் ஆத்மீகத்தில் அவ்வளவு ஈடுபாடு இல்லாதவராக இருந்தார். ஆனாலும் ஓர் ஆலயத்தில் பாடகர் குழுவில் சேர்ந்து பாடல்களைப் பாடினார்.
ஒரு சிறந்த கிறிஸ்தவ குடும்பத்திலே அவர் பிறந்திருந்தாலும், தனது பாடகர் நண்பர்களுடன் சேர்ந்து பல சமயம் தவறாக ஆணை இடுவது, பொய் சொல்வது, கீழ்த்தரமான கதைகளை பேசுவது இவைகளில் அவர் விருப்பம் காட்டினார்.

வார்டு என்னும் வாலிபன் அவரோடு சக பயிற்சியாளனாக செருப்புக் கடையில் பயிற்சி பெற்று வந்தான். வார்டின் ஆழமான அசைக்க முடியாத கிறிஸ்தவ ஜீவியத்தின் நற்சாட்சி வில்லியம் கேரியினைத் தொட்டது. வில்லியம் அவ்வப்போது ஜெபிக்க ஆரம்பித்தார். ஒருமுறை வில்லியம் தன்னுடைய எஜமானனின் நாணயம் ஒன்றினை எடுத்துச் செலவழித்து விட்டு அதற்குப் பதிலாக ஓர் உடைந்த செல்லாத நாணயத்தை அதில் வைத்து விட்டார். ஆனால் அவருடைய எஜமான் அதைக் கண்டுபிடித்து எல்லாருக்கும் முன்பாகவும் அவரை அவமானப்படுத்தி விட்டார். இந்த அனுபவம் கேரி தன் இதயத்தை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்க நடத்தியது.

வில்லியம் பாவத்தைக் குறித்து ஆழமாக உணர்த்தப்பட்டார். இதை அறிந்த அவருடைய போதகர் அவரை அழைத்து இயேசுகிறிஸ்துவை தன் வாழ்க்கையிலே ஏற்றுக் கொள்வதின் மூலமாக மட்டுமே அவர் பிள்ளையாக முடியும் என்பதை அவருக்கு விவரித்தார். அது மட்டுமல்ல, நல்ல பிள்ளையாக வாழ்க்கை நடத்துவதோ, அல்லது ஒழுங்காக ஆலயத்திற்குச் செல்வதோ, ஒருவனை கிறிஸ்துவின் பிள்ளையாக மாற்றாது என்பதையும் அவருக்குத் தெளிவாக விவரித்தார். இவைகள் எல்லாவற்றையும் கேட்கக் கேட்க அவர் மிகவும் ஆழமாகத் தொடப்பட்ட படியினாலே மிகவும் அதிகமாகக் கதறி அழுதார்.

மனவேதனை அடைந்த அவர் முழங்காலில் நின்று, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே என்னுடைய உள்ளத்தில் வந்து என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் கழுவியருளும். இப்போது நான் உம்மை ஏற்றுக் கொள்;ள ஆயத்தமாக இருக்கிறேன் என்று கூறினார். அப்போதே இயேசுகிறிஸ்து அவருடைய இருதயத்தில் வந்தார். அவர் புது சிருஷ்டியாக மாற்றப்பட்டார்.
வில்லியம் புதிய செருப்புகளைத் தைப்பதும் பழையவைகளை பழுது பார்ப்பதுமான வேலையோடு நில்லாமல் இங்கிலாந்து தேசத்தில் உள்ள மோல்டன் என்னும் பட்டணத்தின் ஒரு சிற்றாலயத்தில் போதகராகப் பணி ஏற்றார். இயேசுகிறிஸ்துவின் இராஜ்யத்தை விரிவடையச் செய்வதே என்னுடைய முதன்மையான பணி என்றும், செருப்புகளை தைப்பதும், பழுது பார்ப்பதும் தன்னுடைய செலவுக்குதான் என்பார்.

அவர் செருப்புகளைத் தைத்துக் கொண்டிருக்கும் போது அவர் பக்கத்திலேயே ஒரு புத்தகத்தை வைத்து வாசித்துக்  கொண்டிருப்பார். இவ்விதமாக அவர் கிரேக்கு, இலத்தீன், எபிரெயர், பிரெஞ்சு, இத்தாலி, டச்சு மொழிகளைக் கற்றார். எபிரெய மொழியைக் கற்பதற்காக 15 கிலோ மீட்டர் தூரம் நடக்கவும் முன் வந்தார்.

கேப்டன் குக் என்பவருடைய கடற் பயணங்கள் என்று சொல்லப்படும் ஒரு புத்தகத்தை வில்லியம் கேரி படித்ததன் மூலமாக தென்கடல் தீவுகளில் அநேகமாயிரம் மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய அவசியத்தை அந்நாட்களில் உணர்ந்தார். தானே ஒரு பெரிய உலகப் படத்தை வரைந்து அதைச் செருப்புத் தைக்கும் தன்னுடைய பட்டறையின் சுவற்றிலே மாட்டி வைத்து, அதில் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் உள்ள மக்கள் தொகையையும் அந்த மக்களைப் பற்றிய குறிப்புகளையும் அதிலே குறித்து வைத்திருந்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் அவர் இத்தேசப்படத்திற்கு முன்பாக முழங்கால் படியிட்டு, அதிலே உள்ள கிறிஸ்து அல்லாத தேசங்களின் மக்களுக்காக ஜெபிக்க ஆரம்பித்தார். இவ்விதமாக ஜெபிப்பதின் மூலம் ஆண்டவருடைய நற்செய்தியை எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற ஒரு நிரந்தரமான பாரம் அவருடைய உள்ளத்திலே எழுந்தது. இயேசுகிறிஸ்துவைப் பற்றி அறியாத மக்களுக்காக ஜெபிக்க ஒரு ஜெபக்குழுவை கேரி அமைத்தார். மேலும் மிஷனரி பணிகளுக்கான தேவைகள் பற்றி தன் உடன் ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டு இவைகளைப் பற்றி அவர் தொடர்ந்து எழுதினார்.

1791-ம் ஆண்டு வில்லியம் கேரி போதகராக அபிஷேகம் செய்யப்பட்டார்.
பாப்டிஸ்து சபை போதகர்களுடைய ஆண்டு நிறைவுக் கூட்டம் ஒன்றில் 1792-ம் ஆண்டில் வில்லியம் கேரி ஆண்டவருடைய செய்தியைக் கொடுப்பதற்காக அழைக்கப்பட்டார். கடவுளிடம் இருந்து பெரிய காரியங்களை எதிர்பார். கடவுளுக்காக பெரிய காரியங்களை சாதிக்கப் பார் என்பதே அவருடைய செய்தியின் மையமாக இருந்தது. இந்தக் கருத்தே அவர் வாழ்க்கை முழுவதிலும் அவர் குறிக்கோளாகவும் மாறி விட்டது. இந்தக் கூட்டத்தின் விளைவாக பாப்டிஸ்து மிஷனரி சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அச்சங்கம் உடனடியாக ஒரு மிஷனரியை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கும் முன் வந்தது.

இந்தியாவில் வில்லியம் கேரி

கேரி ஒரு மிஷனரியாகச் செல்வதற்கான வழி இப்போது திறந்து விட்டது. ஆனால் எங்கு மிஷனரியாகச் செல்வது என்ற கேள்வி எழுந்தது. மேற்கு ஆப்பிரிக்கா அல்லது தென்கடல் தீவுகளுக்கு மிஷனரியாகச் செல்லலாம் என்ற எண்ணம் கேரியினிடத்தில் இருந்தது. ஆனால் ஆண்டவர் கேரிக்காக இந்தியாவைத் தம் மனதிலே வைத்திருந்தார். ஆகவே டாக்டர் தாமஸ் என்ற ஒரு மனிதனைக் கேரியைச் சந்திக்கும் படியாக அனுப்பினார். டாக்டர் தாமஸ் என்பவர் இந்தியாவில் இருந்தவர். இந்தப் பெருமகனாருடைய வாழ்க்கையின் மூலமாகவும் அதிகமாகக் கவரப்பட்ட கேரி இந்தியாவிற்கு மிஷனரியாக அவருடன் கூடச் செல்வதற்காக தீர்மானம் செய்து கொண்டார். பாப்டிஸ்து மிஷனரி சங்கத்தின் தலைவரும் இன்னும் அவரோடு சேர்ந்த ஒரு சிலரும் கேரியைத் தங்களுடைய ஜெபத்தாலும் பொருளாலும் தாங்குவதாக அவரிடத்தில் வாக்குறுதி கொடுத்தனர். வில்லியம் கேரி தன் குடும்பத்துடனும் டாக்டர் தாமஸீடனும் 1793-ம் ஆண்டு ஜீன் மாதம் 13-ம் தேதி கப்பல் ஏறினார். நீண்ட பிரயாணத்திற்குப் பின்பு நவம்பர் மாதத்தில் கல்கத்தாவில் வந்து pஇறங்கினார். கேரியோடு அவர் மனைவியும், 4 பிள்ளைகளும், அவருடைய மைத்துனியும் இருந்தார்கள். மிஷனரியாக கேரி இந்தியாவிற்கு வந்த போது அவர் 33 வயது நிரம்பியவராக இருந்தார்.

தனது நீண்ட கடற்பிரயாணத்திலேயே வில்லியம் கேரி வங்காள மொழியைக் கற்க ஆரம்பித்தார். பிறகு அவர் இந்துஸ்தானி, பாரசீகம், மராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றார். இந்தியா வந்து இறங்கிய உடனேயே அவர் இந்திய மக்களோடு வங்க மொழியில் பேசவும் ஆண்டவருடைய வார்த்தையைப் பிரசங்கிக்கவும் வேத வசனங்களை மொழி பெயர்க்கவும் ஆரம்பித்தார். நிச்சயமாகவே ஆண்டவர் கேரியினைத் தம்முடைய உயர்ந்த திட்டத்திற்காக நடத்தினார். மொழிகளைக் கற்கும் வாஞ்சையை அவருக்குக் கொடுத்தார்.

இந்தியாவில் அவர் வாழ்ந்த முதல் வருடத்தில் அவருடைய குடும்பத்தின் மக்கள் அனைவருமே ஒருவர் பின் ஒருவராக நோய்வாய்ப்பட்டனர். அவருடைய அருமையான ஐந்து வயது மகன் பீட்டர் இறந்து போனான். இந்து, முஸ்லீம் வேலை ஆட்கள் புதைகுழி வெட்ட முன் வரவி;ல்லை. தன்னுடைய சுகவீனத்தில் ஏற்பட்ட பலவீனத்தோடு கேரி தாமாகவே புதைகுழி வெட்டினார். அந்தச் சமயத்தில் இரண்டு பேர் அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அதைக் கண்ட கேரி நன்றி பெருக்கோடு கண்ணீர் வடித்தார்.

தன் குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு சாயத் தொழிற்சாலையில் பொறுப்பாளராக கேரி வேலை செய்ய ஆரம் பித்தார். அதுமட்டுமல்ல, வேத வசனங்களை அச்சடிப்பதற்கு ஓர் அச்சுக் கூடமும் ஆரம்பித்தார். வியாபாரத் தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் குறுகிய காலத்தில் கேரி தனது வேலையை இழந்தார். தொடர்ந்து அவரது அச்சுக்கூடமும் தீக்கிரையானது என்றாலும் இச்சம்பவங்கள் கேரியை எந்த விதத்திலும் மனந்தளர்ந்து போகச் செய்யவில்லை. அவருடைய உள்ளத்தில் அடிக்கடி எழுந்த ஒரே கேள்வியானது, நான் எவ்வகையில் இந்தியாவுக்கு உதவ முடியும்? என்பதே
கடவுள் கேரியை பயன்படுத்திய விதம்

கேரி ஏழு ஆண்டுகள்  கடுமையாக உழைத்தார். அந்த ஊழியத்தின் முதல் கனியான கிறிஸ்னு பால் என்னும் ஒரு தச்சனுக்கு கேரி ஞானஸ்நானம் கொடுத் தார். ஒரு கிறிஸ்தவனாக மாறுவதற்கு அநேக பாடு களைக் கடந்து வந்த  போதிலும் கிறிஸ்னு  பால் உண்மையான ஒரு கிறிஸ்தவனாக நிலைத்திருந்தான். அவன்  வாழ்க்கையின் மூலமாக  இன்னும் பலரை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினான்.

1798-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து நான்கு பேர் வந்து கேரியோடு கூட ஊழியத்தில் பங்கு  பெற்றார்கள். செராம்பூர் என்ற இடத்தில் அவர்கள் ஒரு பெரிய அருட்பணி மையத்தை ஏற்படுத்தினர். அங்கிருந்து pஇந்தியாவினுடைய பல பாகங்களுக்குச் சென்று கிறிஸ்துவைப் பிரசங்கித்தார்கள். ஆண், பெண்களுக்காகத் தனித்தனிப் பள்ளிகளை ஏற்படுத்தினர். சிறிய புத்தகங்களையும் வேத புத்தகங்களையும் அச்சிட ஒரு பெரிய அச்சுக்கூடமும் வைத்திருந்தனர்.

1800-ம் ஆண்டு செராம்பூர் கல்லூரியினைக் கேரி நிறுவினார். மேலும் ஓர் அனாதை இல்லத்தையும் ஒரு தொழுநோய் மருத்துவமனையையும் ஏற்படுத்தினார். கேரி இந்தியாவில் ஊழியம் செய்த 22 ஆண்டு காலத்தில் 765 பேர் கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத் தப்பட்டனர். கேரி மரிப்பதற்கு முன்னால் இந்தியாவில் 26 சபைகள் எழும்பின.

கல்கத்தாவில் உள்ள அரசாங்கக் கல்லூhயில் கேரி வங்கமொழி பேராசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் சமஸ்கிருதத்தையும் மராட்டியையும் கூட அவர் அதே கல்லூhயில் போதித்தார். 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அவருடைய வருவா யில் பெரும் பகுதியை கடவுளுடைய ஊழியத்திற் கென்றே பயன்படுத்தினார். ஒரு சிறு பகுதியை மட்டும் தன் செலவுக்காக வைத்துக் கொண்டார்.

புதிய ஏற்பாடு முழுவதும் வங்காள மொழியில் 1800-ம் ஆண்டு மொழி பெயர்க்கப்பட்டது. தனது மரணத் திற்கு முன்பாக இவர் புதிய ஏற்பாட்டை நாற்பதுக்கு மேலான மொழிகளிலும், இருபதுக்கு மேலான மொழி களில் முழு வேதாகமத்தையும் மொழி பெயர்த்திருந்தார். இதன்படி உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு வேதாகமத்தை மொழி பெயர்த்துக் கொடுத்தார்.

இவரது வேண்டுக்கோளுக்கிணங்க அரசாங்கம் இறந்த கணவனோடு அவனது மனைவியையும் உயிரோடு எரிக்கும் “உடன்கட்டை ஏறுதல்” என்னும் பழக்கத்தை எதிர்த்து, ஒரு சட்டத்தை இயற்றி அதற்குத் தடை விதித்தது. அது மட்டுமல்ல, உயிர்ப்பலியாக பச்சிளங்குழந்தைகளைக் கங்கை நதியிலே தூக்கி எறியும் பழக்கமும் தடை செய்யப்பட்டதற்கு இவரே காரணமாய் இருந்தார்.
இப்படியாக மாபெரும் சாதனைகளைப் புரிந்த கேரி தன்னை ஒரு பயனற்ற ஊழியன் என்றும், சிறிதளவே பயன்பட்டவன் என்றும் கூறினார். “நான் மறைந்த பின்பு கலாநிதி கேரியைப் பற்றி நீங்கள் எதுவும் பேசாமல் கேரியின் இரட்சகரைப் பற்றியே பேச வேண்டும்” என்று தன்னுடைய இறுதி நாட்களில் தன்னைச் சந்திக்க வந்த நண்பர் ஒருவரிடத்தில் கூறினார்.

வங்க மொழியில் புதிய ஏற்பாட்டில் 8-ம் பதிப்பினை அவர் முடித்த பின்பு தனது 72-ம் வயதில் “என்னுடைய வேலை முடிந்தது. ஆண்டவருடைய சித்தத்திற்குக் காத்திருப்பதை விட இதற்கு மேல் இனி நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை” என்றார். இரு ஆண்டுகளுக்குப் பிறகு 1834-ம் ஆண்டு ஜீன் மாதம் அவர் மரித்தார். அவருடைய உடல் தாம் நேசித்த இந்தியாவிலேயே இளைப்பாறுதலுக்காக அடக்கம் செய்யப்பட்டது. தன்னுடைய தாய் நாட்டிற்கு ஒரு முறை கூட திரும்பிச் செல்லாத படி 41 ஆண்டுகள் அவர் கடுமையாக இந்தியாவிலேயே உழைத்தார். அவருடைய திருப்பணியின் கனிகளானது இன்றும் நம்முடைய கண்களால் காணக் கூடிய நிலையில் உள்ளன. இவ்விதமாக திறம்பட அரியதோர் சேவையினைச் செய்த இவரை “இந்திய அருட்பணியின் தந்தை” என்று அழைப்பது மிகவும் பொருத்தமாகும்.

No comments: