இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Thursday, December 26, 2013

தேவ கிருபையும் தாழ்மையும்

தேவ கிருபையும்  தாழ்மையும்


(இக்கட்டுரை "ஆதவன்" அக்டோபர் 2013 இதழில் பிரசுரமானது) 

- எம் . ஜியோ பிரகாஷ்

மனிதர்களாகிய நாம் தேவனுக்குமுன் பதரும் குப்பையுமானவர்கள். ஆனால் தேவ கிருபையே நம்மை உயர்ந்து நிற்கச் செய்கிறது. இந்தக் கிருபையைப்  பெறுவது எப்படி? "பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்" (1 பேதுரு -5:5) என்கிறது வேதம் 

தேவனே கிருபையைத் தாரும் என ஜெபிப்பதால் கிருபை கிடைத்து விடுவதில்லை. அது நம்மைத்    தாழ்த்தும்   போது மட்டுமே கிடைக்கிறது. இன்று ஆவிக்குரிய சபைகளின் தலைவர்களும் பல ஊழியர்களும் தங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவர்களாக, உயர்ந்தவர்களாக எண்ணிப்  பெருமையடைகின்றனர். இதனால் கிருபையை இழக்கின்றனர்.

ஒரு சபையின் ஊழியரைவிட அந்த சபையிலிருக்கும் விசுவாசி தேவனோடு அதிக நெருக்கம் உள்ளவராக தேவனோடு நடப்பவராக இருக்கலாம். ஆனால் பல ஊழியர்கள் அதனை உணர்வதில்லை. ஆராதனை நடத்துவதாலோ பிரசங்கம் செய்வதாலோ தங்களை மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் எனும் எண்ணம் கொண்டு கிருபையை இழந்தவராகின்றனர்.

நாம் ஒருவருக்கொருவர் சகோதரரே.. சகோதரர்களுக்குள் மேன்மை பாராட்ட இடமில்லை. ஒருவர் போதிப்பதலோ பத்திரிகை ஊழியம் செய்வதாலோ அவர் மற்றவரை விட உயர்ந்தவரில்லை. தேவன் அவருக்குக் கொடுத்தத்  திறமையை அவர் தேவனுக்காகப்  பயன்படுத்துகிறார் என்பதைவிட வேறு ஒன்றுமில்லை. இதற்காக ஒருவர் பெருமைகொண்டு தன்னை மற்றவரைவிட மேன்மை பொருந்தியவராக எண்ணுவாரெனில்   தேவ கிருபையை இழந்துவிடுகின்றார்.

இன்று கிறிஸ்தவர்களை எதிர்க்க சாத்தான் இந்தப் பெருமையையே ஆயுதமாக பயன்படுத்துகின்றான். ஆரம்பத்தில் நன்றாக ஓடத்துவங்கிய பல விசுவாசிகளும் ஊழியர்களும் சாத்தானின் இந்த வஞ்சக வலையில் விழுந்துத் தங்கள் மேன்மையை இழக்கின்றனர். தேவனே கிருபை தாரும் என்று ஜெபிப்பதைவிடத் தேவனே எனக்குத் தாழ்மையைத் தாரும் எனத் தாழ்த்தி ஜெபிப்போம்; தாழ்மை குணத்தோடு வாழ்வோம். அப்போது தேவ கிருபை நம்மைச்  சூழ்ந்துகொள்ளும் 





   
 

1 comment:

Unknown said...

you have correctly pointed the root of evil among modern so called christians