Wednesday, December 18, 2013

அப்போஸ்தலரான பவுல்

அப்போஸ்தலரான பவுல் 

புனித பவுல் (சின்னப்பர்). இவரது இயற் பெயர் சவுல் என்பதாகும். இவர் கி.பி. 9 தொடக்கம் 67 வரை வாழ்ந்தார். சிசிலியாவின் தர்சு பட்டினத்தைச் சேர்ந்த உரோம குடிமகனாவார். இவர் யூத மதத்தை பின்பற்றி வந்தார். இவர் ஆரம்பத்தில் அக்காலத்தில் இயங்கிய கிறிஸ்தவரைத் தேடி அழிக்கும் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். தமஸ்குவில் கிறிஸ்தவர் பலர் இருப்பதாக அறிந்து அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு கொண்டுவருவதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு தமஸ்கு செல்லும் வழியில் ஒளி வடிவில் இயேசு அவர் முன் தோன்றினார்.
பின்னர் பவுல் இயேசுவை விசுவாசித்து மனம் மாறினார். இயேசுவை ஏற்ற பின்னர் மறை பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பவுல் ஆரம்ப கிறிஸ்தவ மறை பரப்புனர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். கிறிஸ்த்து எல்லோருக்கும் பொதுவானவர் யூதருக்கு மட்டும் உரியவரல்ல என்ற கருத்தை வலியுறுத்தினார். எனவே இவர் பிற இனத்தவரின் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார்.
 மன மாற்றத்துக்கு முன்
புனித பவுல் தன்னைப் பற்றி விவிலியத்தில் எழுதியுள்ள படி, அவர் சிசிலியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு உரோம குடிமகனாவார். அவரது குடும்பம் மிகவும் செல்வந்தக் குடும்பமாகும். இஸ்ரவேலின் பெஞ்சமின் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பரிசேயராவார். இளமையில் யூத மத சட்டங்களை கற்று தேர்ந்தார் .
அப்போது கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய காலமாகும். பல கிறிஸ்தவர் தமது நம்பிக்கை காரணமாகக் கொலை செய்யப்பட்டனர். பவுல் கிறிஸ்தவரை அழிக்க திடங்கொண்டு ஆட்சியாளரிடம் அதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு கிறிஸ்தவரைத் துன்புறுத்தினார் . கிறிஸ்தவர் இவரது பெயரைக் கேட்டாலே அஞ்சினார்கள். இவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது தமஸ்குவில் கிறிஸ்தவர் இருப்பதாக கேள்விப்பட்டார். அங்கிருக்கும் கிறிஸ்தவரை கைது செய்து எருசலேம் நகருக்கு அழைத்து வரும்படி தமஸ்குவிற்கு புறப்பட்டார்.

மனமாற்றம்

தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவரைச் சுற்றிப் பிரகாசித்தது. சவுல் தரையிலே விழுந்தார். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே பேசுகிற ஒலியைக் கேட்டார். அதற்கு சவுல்: ஆண்டவரே, நீர் யார், என்றார். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். சவுல் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்னசெய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றார். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவரோடு பிரயாணம் செய்த மனிதர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது பார்வையற்று இருந்தார்.கூட இருந்தவர்கள் சவுலை கைலாகுகொடுத்து, தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். சவுல் மூன்று நாள் பார்வை இல்லாதவராய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தார். பின்பு கர்த்தர் அன்னியா என்பவரை சவுலிடம் அனுப்பினார். அப்பொழுது அன்னியா போய், சவுல் இருந்த வீட்டுக்குள் பிரவேசித்து, அவர்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். பின்பு அவன் உணவுண்டு பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீடருடனே சிலநாள் இருந்து, தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.
 

மறைப்பரப்பு

பவுலின் வாழ்வில் அகவை 45-57 வரையான காலப்பகுதி மிகவும் முக்கியமானதாகும். இக்காலப்பகுதியில் மூன்று மறைப்பரப்பு பயணங்களை மேற்கொண்டார். இவையனத்தும் அந்தியோக்கியாவில் ஆரம்பித்து எருசலேம் நகரில் முடிவடந்தன.

கடைசி நாட்கள்

கைது

பவுல் எருசலேமில் இருந்தபோது, யூதரல்லாதோரை தேவலயத்துக்குள் கூட்டிவந்ததாக பொய்யுரைத்து யூதர்கள் கூட்டமாய் ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவரைத் தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டு போனர்கள். அவர்கள் அவரைக் கொலை செய்ய எத்தனித்தனர். எருசலேம் முழுவதும் கலக்கமாயிருக்கிறது என்று போர்ச் சேவகரின் சேனாபதிக்குச் செய்திவந்தது. உடனே அவன் போர்ச் சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடிவந்தான். சேனாபதியையும் போர்ச்சேவகரையும் மக்கள் கூட்டம் கண்டபோது பவுலை அடிக்கிறதை நிறுத்தினார்கள். சேனாபதி அருகேவந்து பவுலைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான். அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள் சந்தடியினாலே உண்மையை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று, இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் பவுலைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது.

கொலைச் சதி

அவர்கள் பவுலைக்; கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், பவுல் சேனாபதியிடம் தான் மக்களுடன் பேசும்படி அனுமதியை பெற்று கோட்டை படிகள் மேலிருந்தவாறு மக்களுக்கு இயேசுவைப் போதித்தார். இதனால் மேலும் கோபமடைந்த கூட்டம் மேலும் உக்கிரமாய் பவுலை கொலை செய்யும்படி கூக்குரலிட்டனர். பின்னர் நடந்த விசாரனைகளில் பவுலை குற்றப்படுத்த முடியாமல் போகவே, யூதர் விசாரணையின் போது கொலை செய்யச் சதி செய்தனர். இதை அறிந்த சேனாதிபதி பவுலை மிகுந்த காவலுக்கு மத்தியில் செசரியா பட்டணத்திற்குத் தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்தில் அனுப்பினான்.

சிறைவாசம்

செசரியா பட்டணத்தில் நடந்த விசாரனகளிலும் பவுல் வெற்றிகொண்டார். எனினும் அவர் விடுதலைக்காகக் கொடுக்க வேண்டிய பணத்தைச் செலுத்தாத காரணத்தினால் தேசாதிபதியாகிய பேலிக்ஸ் பவுலை இரண்டு வருடம் சிறையிலிட்டார். இதற்குள் புதிய தேசாதிபதியாக பொர்க்கியுபெஸ்து என்பவன் வந்து யூதரை சந்தோசப்படுத்தும் நோக்கில் பவுலின் சிறைக் காலத்தை நீடித்தான்.

மீள் விசாரணை

புதிய தேசாதிபதியாகிய பேலிக்சை அனுகிய யூதர் வழியில் பவுலை கொலைச் செய்யும் உள்நோக்கத்துடன் விசாரணையின் பொருட்டு பவுலை எருசலேமுக்கு அனுப்பும் படி கேட்டனர். ஆனால் பவுல் தேசாதிபதியாகிய பேலிக்சிடம் உரோமில் அரசன் முன்பாக தனது விசாரணை நடத்தும் படி உத்தரவைப் பெற்று எருசலேம் செல்வதைத் தவிர்த்தார். செசரியா பட்டணத்திலிருந்து உரோம் நகர் வரை பவுலை ஒரு கப்பலில் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் கப்பல் வழியில் புயலை எதிர்கொண்டு பல நாட்களாகக் கடலிலிருந்தது. பின்பு உரோமை வந்தடைந்த பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடம் முழுவதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தார். தேசாதிபதியாகிய பேலிக்ஸ் பவுல் மீது பற்று கொண்டவராகக் காணப்பட்டமையாலும், உரோம் நகரில் யூத மதத்தினர் பெரும்பான்மையாக இல்லாத காரணத்தினாலும் பவுல் மீதான வழக்கை யூதர் கைவிட்டனர்.

மரணம்

பவுலின் மரணம் பற்றிய தகவல் விவிலியத்தில் காணப்படவில்லை. எனினும் அவர் உரோமில் வேத சாட்சியாக மரித்தார் என்பது மரபு

No comments: