Monday, February 06, 2023

ஆசீர்வாத வாக்குத்தத்தங்களை தேடிப் பொறுக்கிக்கொண்டிருக்கின்றனர்.

ஆதவன் 🌞 741 🌻 பிப்ருவரி 07,  2023 செவ்வாய்க்கிழமை 

"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன."  ( யோவான் 20 : 31 )

இன்று பல கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ ஊழியர்களும் சுவிசேஷம் என்று ஏதேதோ அறிவிக்கின்றார்கள். இயேசு கிறிஸ்துவிடம் வந்தால் உனக்கு வாழ்வில் ஆசீர்வாதம் வரும், நல்ல வேலை கிடைக்கும். மனை, வீடு, பணம், கார், மதிப்பு இவை எல்லாம் வரும் என்கின்றார்கள். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் வருமானத்தில் பத்தில் ஒன்று கொடுக்கவேண்டும். நீ ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பத்தாயிரமாக திருப்பிக்கிடைக்கும்.  எவ்வளவு கொடுக்கிறாயோ அவ்வளவுக்கு உனக்குத் திருப்பிக்கொடுக்கப்படும் என்கின்றனர்.

இன்னும் சிலர் உன் நோய்களெல்லாம் குணமாகும், சாபங்கள் மாறும், பில்லிசூனிய கட்டுகள் அறுபடும் இன்னும் என்னென்னவோ கூறி பணம் சம்பாதிக்கிறார்ளே தவிர மனம் திரும்பிய வாழ்க்கை வாழ்வதுபற்றியோ, மறுபடி பிறக்கும் அனுபவமே கிறிஸ்தவத்தின் முதல் படி என்பதுபற்றியோ பேசி மக்களை வழி நடத்துவதில்லை. இந்த சத்தியங்கள் ஒரு சில ஏழை எளிய ஊழியர்களால் மட்டுமே பிரசங்கிக்கப்படுகின்றன.  . 

இதனால் இன்று கிறிஸ்துவை அறியாத பிற மக்கள் கிறிஸ்தவம் என்றால் ஏதோ மாயாஜாலம் என எண்ணிக்கிக்கொள்கின்றனர். சுவிசேஷம் அறிவிக்கும் ஊழியர்களும் மாயாஜாலம் காட்டும் மந்திரவாதி அணிவதைப்போன்று கோட்டு சூட்டு அணிந்துகொள்வதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.   

இந்த உலக வாழ்க்கைக்குப்பின் முடிவில்லாத நித்திய ஜீவன் ஒன்று  உள்ளது. அந்த நித்திய ஜீவனை அடையவேண்டுமானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கவேண்டும். நமது பாவங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும் மீட்பு அனுபவத்தைப் பெறவேண்டும்.

இந்த நித்திய ஜீவனை அடைந்திட கிறிஸ்துவே வழி என்பதை மக்களுக்கு விளக்கிடவே சுவிசேஷம் எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பாவ நிவாரணத்துக்காக மிருகங்கள் பலியிடப்பட்டன. ஆனால் அந்த மிருகங்களின் இரத்தம் மனிதர்களது பாவங்களை அறுத்து மீட்பளிக்க முடியவில்லை. எனவே பாவமில்லாத தனது பரிசுத்த இரத்தத்தைச் சிந்தி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நித்திய ஜீவனுக்கான வழியை ஏற்படுத்தினார்.   

"வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்." ( எபிரெயர் 9 : 12 )

ஏனெனில், "இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது." ( எபிரெயர் 9 : 22 )

அன்பானவர்களே, இவையே கிறிஸ்தவத்தின் அடிப்படை. இந்தச் சத்தியங்களை அறிவிக்காத அல்லது இதன் அடிப்படையில் சுவிசேஷம் அறிவிக்காதவன் எல்லோருமே கள்ளரும் பொய்யரும், வாசல் வழியாக நுழையாமல் சுவர் ஏறிக்  குதிக்கும் எத்தருமாய் இருக்கிறார்கள். (வாசிக்க:- யோவான் 10:1)  

இந்த மீட்பின் சத்தியங்களை மக்களுக்குத் தெரிவிக்கவே சுவிசேஷம் எழுதப்பட்டது என்கின்றார் அப்போஸ்தலனாகிய யோவான்.  இவற்றை ஏற்றுக்கொள்ளும்போதுதான் நாம் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம். எனவேதான்  "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன."  ( யோவான் 20 : 31 ) என்று இன்றைய  தியானத்துக்குரிய வசனம் கூறுகின்றது.. ஆனால் கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் விசுவாசிகளும் ஊழியர்களும் ஆசீர்வாத வாக்குத்தத்தங்களை சுவிசேஷத்தில் தேடி பொறுக்கிக்கொண்டிருக்கின்றனர். பரிதாபம்.!!!

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Sunday, February 05, 2023

அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும்

ஆதவன் 🌞 740 🌻 பிப்ருவரி 06,  2023 திங்கள்கிழமை 


"சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்." ( தீத்து 1 : 15 )

இந்த உலகத்தில் நாம் சிலரைக் கவனித்திருக்கலாம், அவர்கள் எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களாக இருப்பார்கள். எந்த நல்ல காரியத்தையும் செய்யத் தடையாக இருப்பார்கள்.  எல்லோரையும் எல்லாவற்றையும் சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பார்கள். 

இத்தகைய மனிதர்களை ஆலயக் கமிட்டிகளிலும்  நாம் காணலாம். இவர்களை வைத்துக்கொண்டு எதனையும் நாம் எளிதாகச் செய்யமுடியாது. ஆனால், நாம் ஆராய்ந்து பார்த்தால் இத்தகைய மனிதர்கள் உண்மையில் நல்லவர்களாக இருக்கமாட்டார்கள். தாங்கள் இருப்பதுபோலவே எல்லோரும் இருப்பார்கள் என எண்ணுவதால் இவர்கள் மற்றவர்களைச் சந்தேகப்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதுதான் மனோதத்துவ உண்மை. இதனையே இன்றைய வசனம், அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும் என்று கூறுகின்றது. 

இத்தகைய மனச்சாட்சியில் அசுத்தமடைந்த  மனிதர்களிடம் எச்சரிக்கையாய் இருந்து அவர்கள் ஆரோக்கியமுள்ளவர்கள் ஆகும்படி கடித்துக்கொண்டு புத்திசொல்ல அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில் தனது சீடனான தீத்துவுக்கு எழுதுகின்றார்.

ஆலய காரியங்களில் இவர்கள் ஈடுபட்டாலும் இத்தகைய மனிதர்கள் தேவனை அறிந்தவர்களல்ல. "அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்." ( தீத்து 1 : 16 ) எனத் தொடர்ந்து எழுதுகின்றார் பவுல் அடிகள்.

ஆம், இத்தகைய மனிதர்கள் எந்த நற்செயலுக்கும் ஆகாதவர்களாய் இருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலான வேளைகளில் இத்தகைய மனிதர்கள் தலைமைப் பொறுப்பில் வந்துவிடுகின்றனர். எனவே எந்த நல்ல செயல்களையும் இவர்கள் செய்ய விடுவதில்லை. ஆலய பணிகளில் உண்மையான ஆர்வமுள்ளவர்கள், நேர்மையாளர்கள், பக்தியுள்ளவர்கள்  புறம்தள்ளப்படுகின்றனர்.

எனவே பொறுப்பிலுள்ளவர்கள் தங்களைத்  தாங்களே ஆராய்ந்துபார்த்து இத்தகைய இழிவான குணமிருந்தால் தங்களைத் திருத்திக்கொள்வதே மேல்.  இல்லையானால் ஆடுகளின் பிரதான மேய்ப்பனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாகும்போது தக்க பலனை அடைவார்கள். நம்மிடம் இத்தகைய அவலட்சண குணமிருக்கின்றதா என்று எண்ணிப்பார்த்து திருத்திக்கொள்வோம். 

இன்று இத்தகைய மனிதர்களால்  சில பல  இடங்களில் சபைகள் கேவலமடைந்து பிற இன  மக்கள்முன் சாட்சி இழந்து அவமானப்பட்டு நிற்கின்றன.  தேவனை நோக்கி ஓடவேண்டிய சபைகள் கோர்ட் வாசலையும் வக்கீல்களையும் நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய மனிதர்கள் மனம் திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையால் மீட்பு அனுபவம் பெறும்படி  ஜெபிக்கவேண்டியது கிறிஸ்தவர்களது முக்கிய கடமை. 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Friday, February 03, 2023

தேவனில் நாம் பெலன்கொள்ளும்போது.....

ஆதவன் 🌞 739 🌻 பிப்ருவரி 05,  2023 ஞாயிற்றுக்கிழமை 

"உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்." ( சங்கீதம் 84 : 5 )

இன்று மருத்துவர்களும் உடல் பயிற்சி சிறப்பு பயிற்றுனர்களும் மனிதர்கள் உடலளவில் எப்படி பலவான்களாக மாறுவது என்பது குறித்து விளக்குகின்றனர்.  ஆனால் இது எப்போதும் வெற்றி  பெறுவதில்லை. உடற்பயிற்சியே சிலரது உயிருக்கு உலைவைத்துள்ள செய்திகளை சமீபகாலங்களில் நாம் பத்திரிகைகளில் வாசிக்கின்றோம். 

உடற்பயிற்சிகளும் உடலைப் பேணி பாதுகாப்பதும் அவசியமானதே. ஆனால் நாம் முதலில் தேவனில் பெலன்கொள்ள வேண்டும். தேவனை அறிவதிலும் அவரின்மேல் கட்டப்படுவதற்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டும். உடல் பலத்தை கொண்டவனல்ல, மாறாக, தேவனில் பெலன்கொள்ளுகிற மனிதனே பாக்கியவான்  என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

தேவனில் நாம் பெலன்கொள்ளும்போது உலக பலவீனங்கள் நம்மை மேற்கொள்ள மாட்டாது. அதாவது நாம் தேவனில் பெலன் கொள்ளும்போது நாம் பாவங்களையும்  உலக இச்சைகளையும் மேற்கொண்டு அவற்றிலிருந்து விடுதலைபெற முடியும். இப்படி தேவனில் பெலன்கொள்ளும் மனிதர்கள் "பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்." ( சங்கீதம் 84 : 7 )

ஆம், கர்த்தரது  சன்னதியில் நாம் சென்று சேரவேண்டுமானால் தேவனில் பெலனடையவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.  எனவேதான் இன்றைய வசனம் இப்படி பெலனடையும் மனிதனை பாக்கியவான் என்று கூறுகின்றது. 

தேவனோடு நமது தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளும்போதே நாம் தேவனில் பெலனடைய முடியும். வெறுமனே ஆராதனைக் கிறிஸ்தவர்களாக இருப்போமானால் பெலனற்றவர்களாகவே இருப்போம்.  ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டாலும் நமது தனிப்பட்ட வாழ்வில் தேவனை அறியும் அறிவில் நாம் மேம்பட்டவர்களாகவேண்டும்.

மேலும், நாம் தேவனில் பெலன்கொள்ளும்போது உலக ஆசீர்வாதங்களும் நமக்கு உண்டு. உலகில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், பாடுகள், பிரச்னைகளைத் தங்கி அதனை உருவக்கடந்து செல்லும் பெலன் நமக்குக் கிடைக்கின்றது.  எனவேதான் இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனம் கூறுகின்றது,  "அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்." ( சங்கீதம் 84 : 6 ) அதாவது, துன்பம் எனும் அழுகையின் பள்ளத்தாக்கினைக் கடந்து தேவ ஆசீர்வாதம் எனும் மழை வறண்டுபோன அவர்களது வாழ்க்கையினை நிரப்பும்.  

உடல் பெலத்தால் மட்டுமே சாதனைகள் புரியமுடியும் என்று பலரும் தவறான எண்ணம் கொண்டுள்ளனர். உலகத்துக்கு வேண்டுமானால் இது உண்மையாக இருக்கலாம், ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் நாம் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவர்களாக இருக்கமுடியும். எனவேதான்  "நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்;" ( 2 கொரிந்தியர் 12 : 10 ) என எழுதுகின்றார் பவுல் அடிகள். 

உடல் பெலத்துக்கும், உடல் பராமரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நாம் நமது ஆத்துமா தேவனில்  பெலன்கொள்ள வேண்டியதற்கும் முக்கியத்துவம் கொடுப்போம்.  அதற்கு நமது இருதயம் செம்மையான வழிகளைப் பின்பற்றுமாறு செய்வோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Thursday, February 02, 2023

தெளிவான வார்த்தைகளையேப் பேசுவோம்.

ஆதவன் 🌞 738 🌻 பிப்ருவரி 04,  2023 சனிக்கிழமை 

"ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?"  ( 1 கொரிந்தியர் 14 : 23 )

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள அந்நியபாஷை இன்று பெரும்பாலும் கிறிஸ்தவ ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் சபைகளில் அதிகமாக பேசப்படுவதைக்காணலாம். இதுகுறித்து பலருக்கும் பலவித சந்தேகங்கள் உள்ளன. அந்நியபாஷை என்பது  உண்மையா? என்றும் அதுகுறித்து விளக்கம் தாருங்கள் என்றும் சிலர் கேட்கின்றனர். அந்நியபாஷை என்பது பொய்யல்ல. வேதத்தில் கூறப்பட்டுள்ள எதுவுமே பொய்யல்ல. ஆனால் இன்று சபைகளில் பேசப்படும் அந்நியபாஷைகள் உண்மையானவையா  என்பதுதான் கேள்வி. 

அந்நியபாஷையினை ஒரு வரம் என்று வேதம் கூறுகின்றது. (1 கொரிந்தியர் 12;10).  ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் எந்தச் சாட்சியும் இல்லாதவர்கள், ஏன், ஆவிக்குரிய வாழ்வே வாழாதவர்கள், வெளியரங்கமாக மக்களுக்குத் தெரியும் பொய்யரும், ஏமாற்றுக்காரரும் ஆவிக்குரிய சபைகளில் அந்நியபாஷையில் பேசுவதே இன்று  சந்தேகத்துக்குக் காரணமாக இருக்கின்றது. அது எப்படி தேவன் இந்த வரத்தைமட்டும் எல்லோருக்கும் பரவலாகக் கொடுத்துவிடுகின்றார் என்பதும் சந்தேகத்துக்குக் காரணமாக இருக்கின்றது.

பல ஊழியர்கள் தங்களை வல்லமையுள்ளவர்கள் என்று மக்கள் எண்ணவேண்டும் என்பதற்காக அந்நியபாஷை பேசுகின்றனர்.  "அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்." ( 1 கொரிந்தியர் 14 : 28 ) என்று வேதம் தெளிவாகக் கூறுகின்றது. அதாவது, சபையில் அந்நியபாஷை பேசவேண்டுமானால் அந்த சபையில் அதற்கு அர்த்தம் சொல்கின்ற வரம் பெற்றவர்கள் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் பேசக்கூடாது. 

மேலும், "யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும்." ( 1 கொரிந்தியர் 14 : 27 )

ஆனால், இன்று "லாப லாப"  என சத்தம் எழுப்பும் மக்கள் சபைகளில் இருக்கின்றார்களே தவிர அர்த்தம்கூறுபவர்களைக் காண முடியவில்லை. எனவேதான் இவர்களது அந்நியபாஷையில் சந்தேகம் எழுகின்றது.  

திருச்சபையின் ஆரம்ப நாட்களிலேயே  இந்த வரம் சிறிதளவு தான் தேவைப்பட்டது. எனவேதான் பவுல் அடிகள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இன்றும் இப்படி அந்நியபாஷை பேசுகிறேன் என்று கூச்சலெழுப்பிக்கொண்டிருந்தால் பவுல் அடிகள் கூறுவதுபோல நம்மைப் பைத்தியம் பிடித்தவர்கள் என்றுதான் பிறர் கூறுவார்கள். கிறிஸ்துவை அறியாதவர்கள் மத்தியில் அந்நியபாஷையால் எந்த நன்மையும்  ஏற்படப்போவதில்லை. இந்த தினசரி தியானம் முழுவதையும் நான் அந்நியபாஷையில் "லாப லாப ...ரீகாபாப ரீஎகாபா" என எழுதினால் யாருக்குப் பயன்படப்போகிறது? 

"நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்." ( 1 கொரிந்தியர் 14 : 19 ) எனும் பவுல் அடிகளின் வார்த்தைகளின்படி மற்றவர்களை உணர்த்தும்படித் தெளிவான வார்த்தைகளையேப்  பேசுவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, February 01, 2023

"ஆண்டவரே, உமது கிருபை எனக்குப் போதுமையா"

ஆதவன் 🌞 737 🌻 பிப்ருவரி 03,  2023 வெள்ளிக்கிழமை 

"நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." ( 2 கொரிந்தியர் 12 : 10 )

அப்போஸ்தலரான பவுல் அடிகள் தனது உடலிலிருந்த  "முள்" நீங்கும்படி தேவனிடம் வேண்டுதல் செய்கின்றார். அது என்ன வேதனை அல்லது  நோய்  என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆனால், அது நீங்கும்படி தேவனை நோக்கி மூன்று முறை வேண்டுதல் செய்தபோது தேவன் அவருக்கு, "என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் " ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று பதில் கூறிவிட்டார். ஆனால்,  பவுல் அடிகளின் வேதனை மறையவில்லை.

அதனைக் குறித்தே அவர் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தை எழுதுகின்றார், "நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." ( 2 கொரிந்தியர் 12 : 10 ) அதாவது, எனது வேதனை நீங்காவிட்டாலும் இந்த வேதனைகளில் நான் கிறிஸ்துவோடு நெருக்கமாய் இருப்பதை  உணர்கின்றேன். எனவே எனக்கு வரும் நெருக்கங்களிலும் துன்பங்களிலும் பிரியப்படுகின்றேன் என்கின்றார். 

அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் அனுபவம் உள்ளவர்கள் எல்லோருமே இந்த அனுபவத்தை அறிந்திருக்கலாம். எனது வாழ்வில் இதனை உணர்ந்துள்ளேன். வேலையில்லாமல், பணமில்லாமல் நெருக்கத்தின் காலத்தில் இருந்த நாட்களில் கிறிஸ்துவின் பிரசன்னமும் உடனிருப்பும் அதிகம் உணரத்தக்கதாய் இருந்தது. அந்த நெருக்கங்களே கிறிஸ்துவை இன்னும் அறியவும், அவரோடுள்ள அனுபவங்களில் வளரவும் உதவின. 

அதாவது செழிப்பான காலங்களைவிட செழிப்பில்லாத காலங்களில் மனிதர்களைத் தேவன் அதிகம் தங்கி நடத்துகின்றார். ஆம், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் " எனும் தேவ வார்த்தைகள் உண்மையும் நம்பிக்கை தருவதுமான வார்த்தைகள். 

இதுவே கிறிஸ்துவின் வாழ்வில் நடந்தது என்று ஒப்பிட்டுக் கூறுகின்றார் பவுல் அடிகள். "அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார். ( 2 கொரிந்தியர் 13 : 4 )

இதனை வாசிக்கும் சகோதரனே சகோதரியே, நோய், வறுமை, வேலையில்லாமை, கடன் பிரச்சனைகள் போன்ற பலவீனங்களால் ஒருவேளை நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். "ஆண்டவரே, உமது கிருபை எனக்குப் போதுமையா" என வேண்டுதல் செய்யும்போது அவர் தனது கிருபையால் ஆறுதலும் தேறுதலும் தருவார். உங்களது இந்த பலவீனம் தேவனை மேலும் அதிகமாக அறிந்திட உதவலாம். அப்போது  பவுலிடம் தேவன் கூறிய வார்த்தைகள் உண்மையானவை என்பதை பின்னாட்களில் உணர்ந்து தேவனை மகிமைப்படுத்துவீர்கள். 

உலக காரியங்களுக்காக ஓடி ஓடி அலைந்துவிட்டு "கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." என்று நாம் சொல்ல முடியாது. ஆவிக்குரிய வாழ்வு வாழ்ந்து, தேவனை மேலும் அறியவேண்டும் எனும் ஆர்வமிருந்தால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, January 30, 2023

நம்மைத் திருத்திக்கொள்வோம்.

ஆதவன் 🌞 736 🌻 பிப்ருவரி 02,  2023 வியாழக்கிழமை 

"இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்." ( மத்தேயு 18 : 10,11 )

காணாமல்போன ஆடு பற்றிய உவமையைக் கூறுமுன் இயேசு கிறிஸ்து இந்த வசனத்தைக் கூறுகின்றார். நூறு ஆடுகள் உடைமையாகக் கொண்ட ஒருவன் ஒரு ஆடு காணாமல்போனாலும் அதனைத் தேடித் கண்டுபிடிக்க முயல்வதைப்போல இயேசு கிறிஸ்து காணாமல்போன, தன்னைவிட்டுத் தூரமாய்ப்போன ஆடுகளான மனிதர்களைத் தேடிக்  கண்டுபிடிக்க ஆர்வமாயுள்ளார். நாம் வெறும் மனிதனாக ஒருவனைப் பார்க்கின்றோம்; ஆனால் இயேசு கிறிஸ்து அவனது ஆத்துமாவைக்குறித்து எண்ணுகின்றார். ஆத்துமா அழிவில்லாத எரி நரகத்திற்குள் சென்றுவிடக்கூடாது என்று அவர் கவலைகொள்கின்றார்.  

ஒருவரது பாவச் செயல்கள் நம்மை ஒருவரை அற்பமாக எண்ணச்செய்கின்றது. குடிகாரனாக, ஏமாற்று பேர்வழியாக, இருபத்துநான்கு மணிநேரமும் கெட்டவார்த்தைகள் பேசுபவனாக, விபச்சாரக்காரனாக, விபச்சாரியாக  ஒருவர்  இருக்கலாம். ஆனால் இப்படி எவரையும் அற்பமாக எண்ணக்கூடாது என்கின்றார் இயேசு கிறிஸ்து.      

இந்த வசனத்தில் மேலும் ஒரு சத்தியத்தை இயேசு கிறிஸ்து கூறுகின்றார். அதாவது, "அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்." என்கின்றார். நல்லவனோ கெட்டவரோ நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு தேவதூதன் உண்டு. அவர்கள் பிதாவின் சமூகத்தைத் தரிசிக்கிறவர்களாக இருக்கின்றார்கள் எனும் உண்மையினை இயேசு இங்குக் குறிப்பிடுகின்றார். எனவேதான் அற்பமாக ஒருவரையும் எண்ணக்கூடாது என்கின்றார். ஏனெனில் இந்தத் தூதர்கள் ஒருவரைக்குறித்து பிதாவுக்கு அறிக்கை கொடுக்கின்றனர். அதன் அடிப்படையில் கிருபையால் அவர் எந்தப் பாவியையும் இரட்சிக்க முடியும். 

பாவிகளை மட்டுமல்ல, இந்த உலகத்தில் நம்மை அறியாமலேயே நாம் சிலரை அற்பமாக எண்ணுகின்றோம். ஒருவரது குடும்பப் பின்னணி, பொருளாதார நிலைமை, அவர் செய்யும் வேலை, அவரது உடல் தோற்றம் இவைகளின் அடிப்படையில் நாம் மனிதர்களை எடைபோடுகின்றோம். இப்படி எடைபோட்டு ஒருவரை அற்பமாக எண்ணுவதும் தவறுதான். 

நல்லவர்களை மீட்க இயேசு கிறிஸ்து உலகினில் வரவில்லை. பாவிகளை இரட்சிக்கவே உலகினில் அவர் வந்தார். இதனையே இன்றைய வசனத்தில் அவர் கூறுகின்றார், "மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்." ஆம், நீதிமான்களுக்காக அவர் வரவில்லை. 

நாம் அன்றைய பரிசேயர்களைப்போல நம்மை நல்லவர்கள் என்று எண்ணிக்கொண்டு வாழ்வோமானால் நமது எண்ணங்களை மாற்றிக்கொள்வோம்.  இயேசு கிறிஸ்து கூறினார், "ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 21 : 31 ). இது நமக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்.

பொதுவாக நாம் எல்லோருமே (என்னையும் சேர்த்துதான்) இப்படி பாவிகளை அற்பமாகத்தான் எண்ணிக்கொள்கின்றோம். நம்மைத் திருத்திக்கொள்வோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

கர்த்தருக்குப் பயப்படும் பயம்

ஆதவன் 🌞 735 🌻 பிப்ருவரி 01,  2023 புதன்கிழமை 

"கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்." ( நீதிமொழிகள் 14 : 26 )

கர்த்தருக்குப் பயப்படுவதனால் ஏற்படும் நன்மைகளை இந்த  வசனம் விளக்குகின்றது. இந்த வசனத்தின்படி முதலாவது, கர்த்தருக்குப் பயப்படுவதால் நமது வாழ்க்கையைக்குறித்த உறுதியான நம்பிக்கை நமக்கு ஏற்படுகின்றது. இந்த உலகத்தில் நமக்கு ஏற்படும் பாடுகள், பிரச்சனைகள் இவற்றைத் தாங்கி நடக்க இந்த நம்பிக்கை நமக்கு உதவுகின்றது. 

மட்டுமல்ல, கர்த்தருக்குப் பயப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்வதால் நமது சந்ததி நல்ல அடைக்கலமான நிலையில் வாழ்வார்கள். அதாவது நமது பிள்ளைகளுக்கு இதன்மூலம் நாம் ஆசீர்வாதத்தைச் சேர்த்துவைக்கின்றோம்.

சரி, கர்த்தருக்குப் பயப்படுதல் என்பதுதான்  என்ன? அது ஒரு மாணவன் தனது ஆசிரியரைப்பார்த்து பயப்படுவதுபோல பயப்படுவதையோ, அல்லது திருடன் ஒரு போலீஸ் அதிகாரியைப் பார்த்துப் பயப்படுவதைப் போல் பயப்படுவதையோ அல்லது பணியிடத்தில் நமது உயரதிகாரியைப் பார்த்துப் பயப்படுவதுபோல பயப்படுவதையோ குறிக்கவில்லை.   கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது, தீமையான காரியங்களுக்கு விலகி, அவைகளை வெறுத்து வாழ்வதையே குறிக்கின்றது.

"தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்."( நீதிமொழிகள் 8 : 13 ) என்று வாசிக்கின்றோம்.  பெருமை, அகந்தை, தீய வழி, புரட்டு வாய் என இந்த வசனம் சில காரியங்களைக் குறித்துக் கூறுகின்றது. நாம் கர்த்தருக்குப் பயப்படுகின்றவர்கள் என்றால் நாம் இப்படியுள்ளத் தீய  குணங்களை செய்யாமலும் அவைகளை வெறுகிறவர்களாகவும் இருப்போம். 

இப்படிக் கர்த்தருக்குப் பயப்படுகிற வாழ்க்கை வாழ்வோமானால் நமது வாழ்க்கையில் நமக்குத் திடநம்பிக்கை உண்டு. எந்த எதிர்மறையான காரியங்கள் நமது வாழ்க்கையில் நடந்தாலும் உறுதியுடன் அவற்றைத் தாங்கிக்கொள்வோம். காரணம் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்கின்ற உறுதியான நம்பிக்கை.  மட்டுமல்ல, நமது பிள்ளைகளுக்கும் வாழ்வில் மேலான அடைக்கலம் கிடைக்கும்.

அற்ப உலக ஆதாயத்துக்காக குறுக்கு வழியில் நடந்து, ஏமாற்று, புரட்டு, கபடம் போன்ற காரியங்கள் செய்து பணம் சம்பாதித்து அதுவே ஆசீர்வாதம் என்று எண்ணி வாழ்வோமானால் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளதற்கு எதிரான காரியங்களே நமக்கு நடக்கும். ஆம், அப்போது நமது வாழ்க்கை குறித்தே நம்பிக்கை இல்லாமலும், சிறிது தோல்வியைக்கண்டாலும் தற்கொலை எண்ணங்களும் தான் நமக்கு ஏற்படும். மட்டுமல்ல நமது சந்ததியும் அடைக்கலமில்லாமல் அலைந்து திரியும் சந்ததிகளாக இருக்கும். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 1 : 50 / Luke 1:50

  " ஆதவன் " தியானம் - 1979 ஜூலை 09, வியாழன் 2026       "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுற...