🏫 வேதாகமத் தியானம் - மார்ச் 2026

 

"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1849
🔆 2026 மார்ச் 01, ஞாயிறு  

"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்." ( சங்கீதம் 23: 1) 

மெய்யான தேவ ஆசீர்வாதம் செல்வச்செழிப்பில் அல்ல, மாறாக கர்த்தர் நம்மோடு இருந்து நம்மை அவர் மேய்ப்பனைப்போல வழிநடத்தும் அனுபவத்தில் இருக்கின்றது என்பதே இன்றைய தியான வசனம் கூறும் அடிப்படை உண்மை. 

மனிதர்கள் பலரும் மிகுதியான சொத்துக்கள், நல்ல வேலை வாய்ப்புகள், செழிப்பான வாழ்க்கை, இவைதான் தேவ ஆசீர்வாதம் என்று எண்ணிக்கொள்கின்றனர். இந்த அடிப்படையிலேயே கணக்கிட்டுத்  தங்களை தேவன் ஆசீர்வதித்திருக்கிறார் என்று கூறிக்கொள்கின்றனர். ஆனால் தாவீது ராஜா அப்படி எண்ணவில்லை. ஏனெனில் அவர் மிகுதியான துன்பங்களுக்குப் பின்னர்தான் இராஜாவாக உயர்த்தப்பட்டார். இந்த அனுபவத்தில்தான் இன்றைய தியான வசனத்தை அவர் கூறுகின்றார். கர்த்தர் எனது மேய்ப்பனாக இருப்பதால் நான் தாழ்ந்து போகமாட்டேன் என்கின்றார் அவர். 

நாம் வீடுகளில் வளர்க்கும் ஆடுகளுக்கும் காட்டில் இயற்கையாக அலையும் ஆடுகளுக்கும் பெரிய வித்தியாசத்தை நாம் பார்க்க முடியும். வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளைவிட காடுகளில் வளரும் ஆடுகள் அதிக உடல் வலிமையுடனும், செழிப்புடனும் காணப்படும். 

ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுசெல்லும் மேய்ப்பர்கள் அவைகளைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பார்கள். எந்தப் பகுதிகளில் கொடிய விலங்குகளின் அபாயம் இருக்கும், எந்த வகை புற்கள் ஆடுகளின் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது என்பவை மேய்ப்பர்களுக்குத் தெரியும். எனவே, அவர்கள் அவைகளை கட்டுப்பாடுடன் மேய்ப்பார்கள். சில இடங்களுக்கு அவை போகவிரும்பினாலும் போகவிடமாட்டார்கள். ஆனால், காட்டில் வளரும் ஆடுகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. அவை தங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்லும், விரும்பியதை உண்ணும். 

ஒரு சிறிய கற்பனை செய்து பார்ப்போம்:- மேய்ப்பன் வளர்க்கும் ஆடுகள் காட்டு ஆடுகளைப் பார்க்கும்போது மனதினில், "ஆஹா, இந்த ஆடுகள் எவ்வளவு மகிழ்ச்சியாக விடுதலையுடன் வாழ்கின்றன. நமது மேய்ப்பன் நம்மை அவைகளைப்போல சுதந்திரமாக விடமாட்டேன் என்கிறான். நாமும் இவைகளைப்போல மேய்ப்பனில்லாமல் சுதந்திரமாக இருந்தால் நலமாக இருக்கும்" என எண்ணிக்கொள்ளும். ஆனால், அன்பானவர்களே, காட்டு ஆடுகளை எப்போது கொடிய விலங்குகள் தாக்கிக் கொல்லும் என்று தெரியாது. எனவே அவைகளுக்கு உயிர்ப்  பாதுகாப்பு இல்லை.  அவை செழிப்பாக வாழ்வதுபோலத் தெரிந்தாலும் மழையிலும் வெய்யிலிலும் வாடிவருந்தும். மட்டுமல்ல, எப்போதும் ஒரேபோல உணவு அவைகளுக்குக் கிடைப்பதில்லை.  

மேய்ப்பனிடம் வளரும் ஆடுகள் கட்டுப்பாடு இருந்தாலும்; காட்டு ஆடுகளைவிட மெலிவாக இருந்தாலும், அவைகளுக்கு மேய்ப்பனின்  தக்கப் பாதுகாப்பு உண்டு. வெயிலுக்கும் மழைக்கும் மறைவான கூடாரங்கள் உண்டு; உணவுக்கு உத்தரவாதம் உண்டு. இதுபோலவே நல்லாயனாம் இயேசு தனது பிள்ளைகளைக்  கட்டுப்பாடுடன் நடத்துகின்றார். அவரை அறியாத மற்றவர்கள் செய்வதுபோலவும் அவர்கள் வாழ்வதுபோலவும் தனது பிள்ளைகள் வாழ அவர் அனுமதிப்பதில்லை. 

தாவீது சிறு வயது முதல் ஆடுமேய்ப்பவராக இருந்ததால் இந்த உண்மைகளை உணர்ந்திருந்தார். எனவே, இதனை அவர் இன்றைய தியான வசனத்தில் ஆவிக்குரிய அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றார். கர்த்தரைத் தாவீது தனது மேய்ப்பராகக் கருதி வாழ்ந்ததுபோல நாமும் அவரையே நமது மேய்ப்பராகக் கொண்டு கட்டுப்பாடுடன் மேய்ப்பனின் ஆடுகளாக வாழ்வோம். அவர் நமது மேய்ப்பராக இருக்கும்போது நாம்  தாழ்வடைய மாட்டோம்;  கர்த்தரை அறியாத மக்கள் செழிப்பான வாழ்க்கை வாழ்வதைக் கண்டு மனம் சோர்வடையமாட்டோம். 

"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1850

🔆 2026 மார்ச் 02, திங்கள்   

"நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." ( யோசுவா 1: 5)

இன்று இந்த உலகத்தில் பெரிய தலைவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்படுவதை நாம் பார்க்கின்றோம். அப்படிப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள தலைவர்களை நாம் எளிதில் சென்று பார்த்துவிட முடியாது. அப்படி இருக்கும்போது அவர்களுக்கு எதிராக நாம் ஏதாவது செய்துவிடமுடியுமா? சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அவர்களைக் கொலைசெய்யும் நோக்கத்துடன் அவரது இல்லத்தில் நுழைந்த மனிதனைப் பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர் என்ற செய்தியைப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நாம் பார்த்தோம். இதுபோலவே கர்த்தர் தனது பிள்ளைகளுக்குப் பாதுகாப்புக் கொடுத்து எதிரிகளை அழிக்கின்றார். 

இதனையே இன்றைய தியான வசனத்தில் அவர் யோசுவாவிடம் கூறுகின்றார், "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்" என்று. தேவன் மனிதர்களிடையே வேற்றுமை பாராட்டுவதில்லை. எனவே, யோசுவாவிடம் இப்படிக் கூறினாரென்றால் அது நமக்கும் உரிமையான வாக்குறுதியாகவே இருக்கின்றது. ஆனால், இந்த வாக்குத்தத்தத்துக்கு ஒரு நிபந்தனையையும் தேவன் கொடுத்தார். ஆம், "என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக." ( யோசுவா 1: 7)

அதாவது, மோசே மூலம் கொடுக்கப்பட்டக்  கட்டளைகளுக்கு யோசுவா கீழ்ப்படிந்து நடந்தால் மட்டுமே இந்தப் பாதுகாப்பு அவனுக்கு உண்டு. இன்றும், புதிய ஏற்பாட்டு மக்களாகிய நமக்கு கிறிஸ்து பல கட்டளைகளைக் கொடுத்துள்ளார். அவற்றின்படி நாம் நடக்கும்போது,  "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் நமக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று யோசுவாவிடம் கூறிய வார்த்தைகள் நமது வாழ்க்கையிலும் நிறைவேறும்படி தேவன் கிருபை செய்வார். 

இந்த வசனம், நமக்கு எதிராகச் செயல்படும் மக்களை மட்டுமல்ல, நமக்கு எதிராக எழும்பும் பிரச்சனைகள், துன்பங்கள், நோய்கள், எதுவும் நம்மை எதிர்த்து நிற்காதபடி தேவன் நம்மைக் காத்துக்கொள்வார்; நம்மை விட்டு விலகவும் மாட்டார், நம்மைக் கைவிடவும் மாட்டார் என்பதனை விளக்குகின்றது. 

மேலும், அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அவர்கள் பதவியில் இருக்கும் வரையில்தான் உண்டு. ஆனால், இன்றைய தியான வசனத்தில் தேவன் கூறுகின்றார், "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை" என்று. மட்டுமல்ல அன்பானவர்களே, அரசியல் தலைவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு உறுதியற்றது. காரணம், அது பெலவீன மனிதர்களை, உண்மையற்ற மனிதர்களை  அடிப்டையாகக் கொண்டு செயல்படுவது.  நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களை அவரது சொந்த மெய்க்காப்பாளனே சுட்டுகொன்றதை நாம் அறிவோம். 

ஆம்,  தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது யோசுவாவுக்கு கூறிய வார்த்தைகள் நமது வாழ்க்கையில் நமக்கும் நிரைவேறும். எனவே, தேவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ உறுதிகொள்வோம். அப்போது நமக்குத் தேவ பாதுகாப்பு நிச்சயம் உண்டு. நாம் உயிரோடு இந்த உலகத்தில் வாழும் நாள்வரை அவர் நம்மைக் கைவிடாமலும் நம்மை விட்டு விலகாமலும் இருப்பார். 

"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1851

🔆 2026 மார்ச் 03, செவ்வாய்    

"இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்:    உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன்." ( எரேமியா 7:3)

எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் தனது குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனையும் துன்பமும் ஏற்பட்டதால் ஜோசியர்களையும் குறிசொல்பவர்களையும் நாடி ஓடினார். அவர்கள் அவருக்குப் பல்வேறு பரிகாரங்களைக் கூறினார்கள். அவைகளில் ஒன்று, "நீங்கள் குடியிருக்கும் வீட்டின் வாஸ்து சரியில்லை. எனவே, நீங்கள் வீட்டில் சில மாறுதல்களைச் செய்யவேண்டும்" என்பது. ஏற்கெனவே இருந்த கடனைவிட வீட்டை மாறுதல் செய்வதற்கு மீண்டும் அவர் கடன் வாங்கினார்.  ஆனாலும் வாழ்வில் மாறுதலும் ஆசீர்வாதமும் வரவில்லை. 

இன்னொரு பெரிய ஜோஸியரிடம் சென்று தனது பிரச்சனையைக் கூறி பரிகாரம் கேட்டார். அந்த ஜோசியர், "நீங்கள் இந்த வீட்டைவிட்டு வெளியேறி ஒரு வருடகாலம் வேறு வீட்டில் குடிஇருந்தால் உங்களது வாழ்வில் மாறுதல் வரும்" என்றார். அதனை நம்பி சொந்த வீட்டைவிட்டு வெளியேறி வாடகை வீட்டில் குடியேறினார். இந்த மாறுதல்கள் அவரது வாழ்வில் பிரச்சனைக்குமேல் பிரச்சனையையும் கடன் சுமையையும் அதிகரித்தது. ஆனால் வாழ்வில் எந்தமாறுதலும் ஏற்படவில்லை. 

ஆம் அன்பானவர்களே, இன்று இப்படி ஜோசியர்கள் செய்யும் செயல்பாடுகளைச்  சில ஏமாற்று கிறிஸ்தவ ஊழியர்களும் செய்கின்றனர். கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும் இத்தகைய ஊழியர்களிடம் செல்கின்றனர். ஜோசியர்கள் சொல்வதுபோல, "உங்கள் வீட்டில் செய்வினை வைத்துள்ளனர். செய்வினைத் தகடு உங்கள் வீட்டு வாசலில் புதைக்கப்பட்டுள்ளது,  அதனை எடுத்தால்தான் ஆசீர்வாதம் எனக்கூறி, அதனை அகற்றிட  ஜெபிப்பதாகக் கூறி, பணமும் பெற்றுக்கொண்டு    விசுவாசிகளை ஏமாற்றுகின்றனர். "யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை" (எண்ணாகமம் 23:23) என்றல்லவா வேதம் கூறுகின்றது?

நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு நம்மை மாற்றாமல் வீட்டை மாற்றுவதால் வந்துவிடாது. மந்திரத் தகடை அகற்றுவதால் வந்துவிடாது. தேவன் எந்த இடத்திலும் நம்மை ஆசீர்வதிக்கமுடியும்.  ஆம், "உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

இன்று வீட்டை மாற்றுவதிலும் வீட்டில் மாறுபாடுகள்  செய்வதிலும் அதிக பணம் செலவழிந்தாலும் மக்கள் அதனைப் பெரிதுபடுத்துவதில்லை. ஆசீர்வாதம் பெறுவதற்காக அந்த மாறுதல்களைச் செய்கின்றனர். ஆனால் பணம் செலவில்லாமல் தங்களது செயல்பாடுகளை மாற்றுவதில் மக்களுக்கு ஆர்வமிருப்பதில்லை. 

"நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்." (யாத்திராகமம் 20:24) என்று தேவன் வாக்களித்துள்ளனர். தேவனது பெயரை மகிமைப்படுத்தும் செயல்பாடுகளை நாம் செய்வோமானால் தேவன் நம்மை நாம் இருக்குமிடத்திலேயே ஆசீர்வதிப்பார். 

ஆம் அன்பானவர்களே, பிரச்சனையை நம்மிடம் வைத்துக்கொண்டு அதனை வேறு இடத்தில தேடுவதால் தீர்வு கிடைக்காது. நமது வழிகளை தேவனுக்கு உகந்ததாக மாற்றும்போது மட்டுமே நமக்கு ஆசீர்வாதம் கிடைக்கும். வீட்டில் மாறுபாடு செய்வதிலும் வீட்டை மாற்றுவதிலும் கவனம் செலுத்தாமல் நம்மை மாற்றிட முயல்வோம். தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன் என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

"இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக" (2 சாமுவேல் 7: 29)

"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1852

🔆 2026 மார்ச் 04, புதன்     

"இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்." ( வெளிப்படுத்தின விசேஷம் 16: 15)

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து நம்மை எச்சரிக்கும் வசனமாக இன்றைய தியான வசனம் உள்ளது. 

இயேசு கிறிஸ்து தான் உலகத்தில் வாழ்ந்தபோதும் தனது வருகையைத் திருடனின் வருகைக்கு ஒப்பிட்டுப் பேசினார். "உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்." ( மத்தேயு 24: 42- 44) என்றார் அவர். 

இன்றைய தியான வசனத்தில், "தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்" என்று கூறப்பட்டுள்ளது. இங்கு ஆண்டவர் குறிப்பிடும் ஆடை, இரட்சிப்பின் ஆடையாகும்; அந்த ஆடை இல்லாமையே நிர்வாணமாய் காணப்படுதல்.

காலியாண  வஸ்திரம் இல்லாமல் திருமண விருந்தில் கலந்துகொள்ள வந்த ஒரு மனிதனைக்குறித்து இயேசு கிறிஸ்து ஒரு உவமை கூறினார். அதில் ராஜா திருமண மண்டபத்தினுள் வந்து திருமண ஆடை இல்லாமலிருந்த மனிதனை நோக்கி,  "சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்." ( மத்தேயு 22: 12-13) என்று கூறினார்.

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவருமே தேவனால் அழைக்கப்பட்டவர்கள்தான். ஆனால் திருமண ஆடை எனும் இரட்சிப்பு அனுபவம் பெற்றவர்கள்தான் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். அப்படித் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்  விழித்துக்கொண்டு, தங்கள் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளவேண்டியதும்  அவசியம்; அப்படி இருப்பவர்களே பாக்கியவான்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. "அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்." ( மத்தேயு 22: 14) இயேசு கிறிஸ்து. 

தனது வருகையைத் திருடனின் வருகைக்கு இயேசு கிறிஸ்து ஒப்பிடுகின்றார். காரணம், திருடன் எப்போது வருவான் என்று நமக்குத் தெரியாததுபோல ஆண்டவரின் வருகையும் எப்போது நிகழும் என்று நமக்குத் தெரியாது. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். எனது நண்பன் ஒருவன் என்னிடம் கேலியாக, "இரண்டாயிரம் ஆண்டுகளாக வருகிறார், வருகிறார் என்று இதனைத்தான் கூறிக்கொண்டிருக்கிறார்கள், இன்னும் அவர் வரவில்லையே? என்றான். 

இப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு அப்போஸ்தலரான பேதுரு ஏற்கெனவே பதில் கூறிவிட்டார்:- "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." (2 பேதுரு 3: 9)

மேலும், இரட்சிக்கப்படாமல் அவரது வருகைக்குமுன் ஒருவேளை நாம் மரணமடைந்தால் அவர்முன் நாம் நிர்வாணமாகத்தானே நிற்போம்? எனவே, அவர் பொறுமையாக நமக்காகக் காத்திருக்கின்றார்.  "நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென எண்ணுங்கள்" (2 பேதுரு 3: 15) எனவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு அவரது மன்னிப்பை வேண்டுங்கள் என்று வேதம் நம்மை அறிவுறுத்துகின்றது.   

"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1853

🔆 2026 மார்ச் 05, வியாழன் 

"அதனாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே." ( எபிரெயர் 13: 6)

கர்த்தராகிய ஆண்டவர் நமக்கு சகாயம் செய்பவராக இருக்கின்றார். தன்னை விசுவாசித்து தனக்கு ஏற்புடைய மக்களாக வாழ்பவர்களுக்கு அவர் சாகயம் செய்யும் கேடகமாக இருக்கின்றார். எனவே, நாம் தைரியமாக இந்த உலகத்தில் வாழமுடியும். நமக்கு எதிராக மனிதர்கள் எதுவும் செய்திடமுடியாது. 

இன்றைய இந்த வசனத்தை மேலும் தெளிவாக அறிந்துகொள்ள நாம் இதன் முந்தின வசனத்தையும் சேர்த்து வாசிக்கவேண்டியது அவசியம். அதில் நாம், "நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே." ( எபிரெயர் 13: 5 & யோசுவா 1:5) என்று வாசிக்கின்றோம். அதாவது, நான் உன்னை விட்டு விலகமாட்டேன், உன்னைக் கைவிடமாட்டேன் என்று அவர் ஏற்கெனவே கூறியிருக்கிறாரே அதனை நாம் விசுவாசிப்போமானால் கர்த்தர் எனது சகாயர் என்று கூறி தைரியமாக இந்த உலகத்தில் வாழமுடியும். 

ஆம் அன்பானவர்களே, இன்று மனிதர்கள் பல்வேறு விதங்களில் பொருள் சேர்க்க ஆர்வமாக இருக்கின்றனர். காரணம், எதிர்காலம் குறித்த பயம். நாம் அதிகமாக செல்வம் சேர்த்து வைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் நிம்மதியாக வாழமுடியும் என்று மனிதர்கள் எண்ணுகின்றனர். இதுவே பண ஆசையாக உருவெடுக்கின்றது. எனவேதான், "நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்' என்று கூறப்பட்டுள்ளது. 

அதிகமாக பொருள் சேர்த்து வைத்துள்ள எல்லோரும் இறுதிவரை மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அதுபோல பொருள் இல்லாதவர்கள் மகிழ்ச்சி குறைந்தவர்களுமல்ல. கிறிஸ்து நமக்குள் இருந்து நம்மை நடத்தும் மகிழ்ச்சியே மேலான மகிழ்ச்சி. நாம் கிறிஸ்துவைப் புறக்கணித்துச் செல்வத்தை மட்டுமே சேர்த்து வைத்தோமானால் இந்த மகிழ்ச்சியை நாம் அனுபவிக்க முடியாது. மட்டுமல்ல, இறுதியில் வாழ்வில் சோகமே நமக்கு  வந்து சேரும். 

இப்படிக் கூறுவதால் செல்வம் சேர்த்து வைக்கவேண்டாம் என்று பொருளல்ல.  மாறாக, செல்வத்தைச் சேர்க்கும் ஆசையைவிட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்வதே மேலான செல்வம் என உணர்ந்து அவரை நாம் அடைந்துகொள்ளும் ஆசையை வளர்த்து அதற்காக முயலவேண்டியது அவசியம்.   

இந்த ஆர்வத்தில்தான் அப்போஸ்தலரான பவுல், "ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்." (பிலிப்பியர் 3;7,8) என்கின்றார். அதாவது, கிறிஸ்துவை அறியாமல் வாழும்போது நமக்கு இருக்கின்றது என்று நாம் எண்ணும் செல்வங்கள் அனைத்தும் ஒன்றுமில்லாமையே. 

இப்படி முயன்று நாம் கிறிஸ்துவை நமது வாழ்வில் ஆதாயமாக்கிக் கொள்வோமானால் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாம். இதுவே மேலான ஆவிக்குரிய வாழ்வு. இந்த அனுபவத்துக்காக வேண்டுதல் செய்வதையே தேவன் மேலான ஜெபமாக எண்ணுகின்றார்;  அதற்கு உடனடியாக பதிலும் கொடுக்கின்றார். 

"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1854

🔆 2026 மார்ச் 06, வெள்ளி  

"மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது." (1 யோவான்  4 : 3)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் அப்போஸ்தலரான யோவான் எழுதிய இந்த தியான வசனம் இன்றும் நிஜமாக இருக்கின்றது. உலக ஆசீர்வாதங்களை மட்டுமே போதித்து கிறிஸ்துவை விட்டு மக்களைப் பிரிக்கும் கிறிஸ்தவ போதகர்களை நாம் ஏற்கெனவே அறிவோம்.  ஆனால், இன்றைய தியானம் அதனைப்பற்றியதல்ல. 

கிறிஸ்துவை வாயினால்கூட அறிக்கைபண்ணாத அந்திக்கிறிஸ்துவின் சபை இப்போதும் இருக்கின்றது என்று நீங்கள் நம்புகிறீர்களா? யெகோவா சாட்சி சபைகளைப்பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் அதனைவிட வித்தியாசமான உபதேசங்களைக்கொண்ட,  வெளிப்பார்வைக்கு கிறிஸ்தவ சபைகள் போலவே இருக்கும் சபைகள் இருக்கின்றன.  இங்கு போதிக்கப்படும் உபதேசங்கள் சாத்தானின் உபதேசங்கள். 

மிகச் சமீபத்தில், கடந்த மார்ச் 1 ஆம் தேதி ஒரு அந்திக் கிறிஸ்து சபை ஊழியனை அவனது சபையின் முன்வைத்து சந்திக்க முடிந்தது. எனது நண்பர் ஒருவர் என்னிடம்,  "ஒரு நல்ல மனிதர்  இருக்கிறார். உனது ஊழியத்துக்கு அவரும் பயனுள்ளவராக இருப்பார்.  நான் அவரது சபைக்குச் சென்றதில்லை. ஆனால் அவர் எனக்குத் தினமும் வேத வசனங்களை அனுப்புவார்; அவற்றைப் படிக்கச் சொல்லுவார். உனக்கு விருப்பமானால் அவரைச் சென்று ஒருமுறை பார்த்துப் பேசு" என்று என்னிடம் கூறியதால் அவரைப் பார்க்கச் சென்றேன்.  

பொதுவாகவே கிறிஸ்தவ போதகர்கள் என்றால் எனக்கு அவர்களுடன் நட்புகொள்ள விருப்பமுண்டு. எனவேதான்  அவரைப் பார்க்கச் சென்றேன். "தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய மகா சர்வ வல்லமையுள்ள கர்த்தர்" என்று அங்குள்ள அறிவிப்புப் பலகையில் எழுதியிருந்தது. ஆனால் அங்கு சென்று அவரிடம் பேசியபோது அவர் கூறிய கருத்துக்கள் அவர் ஒரு அந்திக்கிறிஸ்து என்பதனை வெளிப்படுத்தியது. அவர் கூறி போதிக்கும் சில கருத்துக்களை  சுருக்கமாகக்  கீழே தருகின்றேன்:-

பழைய ஏற்பாடு மட்டுமே தேவ ஆவியால் எழுதப்பட்டது, எனவே அதனை மட்டுமே வாசிக்கவேண்டும். புதிய ஏற்பாடு, இயேசு எனும் ஒரு சாதாரண மனிதனை கடவுளாகக் காண்பிக்கவேண்டி புராணக் கதைகளைப்போல எழுதப்பட்டுள்ள கட்டுக்கதைகள். ஆண் துணை இல்லாமல் உலகினில் ஒருவரும் பிறக்கமுடியாது; செத்தவன் எவனும் உயிருடன் எழும்பவும் முடியாது. சர்வ வல்லவரான கர்த்தருக்கு உலகத்தை மீட்பதற்கு ஒரு மகன் தேவையில்லை. அவர் ஒரு வார்த்தைச்  சொன்னாலே நாம் இரட்சிக்கப்பட்டுவிடுவோம்." இன்னும் என்னென்னவோ பேசினார். நான் அவரிடம், "நீங்கள் பிரசங்கம் செய்வீர்களா?" என்று  கேட்டேன். "ஆம்,  இங்கு பலர் வருவார்கள்" என்றார். அதற்குமேல் அவரிடம் பேசுவது அறிவீனம் என்று வந்துவிட்டேன்.

அன்பானவர்களே, கிறிஸ்தவ வசனங்களை சுவரில் எழுதிப்போட்டு மக்களைக் கவரும் அனைவரும் மெய்யான கிறிஸ்தவ உபதேசத்தைப் போதிப்பார்கள் என்று கூறமுடியாது. எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதியிலேயே அந்திக்கிறிஸ்து சபை இருக்குமென்று நான் நினைத்துகூடப் பார்த்ததில்லை. எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் வேத வசனங்கள் உண்மை என்பதை எனக்கு இது மேலும் உறுதிப்படுத்துவதாக இருந்தது. 

"பிள்ளைகளே, இது கடைசிக் காலமாயிருக்கிறது;  அந்திக்கிறிஸ்து  வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்." (1 யோவான் 2:18)

"இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து". (1 யோவான் 2:22)

"தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய மகா சர்வ வல்லமையுள்ள கர்த்தர்" என்று இந்தச் சபையில் எழுதப்பட்டிருந்தாலும் இங்கு கர்த்தர் இருக்கவில்லை. காரணம் அப்போஸ்தலரான யோவான் கூறுகின்றார், "குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்." (1 யோவான் 2:23) என்று. 

வஞ்சக உபதேசங்களைப் போதித்து, சாத்தானைக்கொண்டு  நோய்களைத் தாற்காலிகமாகக்  குணமாக்கி அதன்மூலம் மக்களைக் கவர்ந்து நரகத்துக்கு நேராக நடத்தும் இத்தகைய ஊழியர்களிடம் சென்று சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுடன் இங்கு செல்லும் மக்கள் சத்திய சபைகளுக்குச் செல்லவும்,  இவர்கள் சத்தியத்தை அறிந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும்  ஜெபிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

"மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக் கிறிஸ்துவுமாய் இருக்கிறான்" (2 யோவான் 1:7)

"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1855

🔆 2026 மார்ச் 07, சனி   

"நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும் அறிந்திருக்கிறோம்." (1 யோவான்  5 : 15)

வேதாகமம் நமது உலக ஆசீர்வாதங்களுக்காக எழுதப்படவில்லை. மாறாக, இந்த உலக வாழ்க்கைக்குப்பின் உள்ள நித்திய ஜீவனை நாம் சுதந்தரித்துக்கொள்ள வழிகாட்டவே எழுதப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்துவும், "என்னுடைய ராஜ்ஜியம் இவ்வுலகத்துக்குரியதல்ல"  என்றுதான் கூறினார். ஆனால் மனிதர்கள் நாம் வேத வசனங்களுக்கு உலகப்பொருள் கொண்டு உலக ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக வேதாகமம் எழுதப்பட்டதாக எண்ணிக்கொள்கின்றோம். கேளுங்கள், தட்டுங்கள், தேடுங்கள் என்பன உலக ஆசீர்வாதங்களைத் தேடுவதைக் குறிப்பதல்ல. வேதாகம  வசனங்கள் அனைத்துமே ஆவிக்குரிய பொருள்கொண்டவை. 

வேதாகமம் எழுதப்பட்டபோது அவை தோல் சுருள்களில் எழுதப்பட்டன. அப்போது அவை தொடர்ச்சியாக எழுதப்பட்டிருந்தன. அதிகாரங்கள், வசன எண்கள் அப்போது கொடுக்கப்படவில்லை. 1227 ஆம் ஆண்டில் பழைய ஏற்பாடும் 1551 ஆம் ஆண்டில் புதிய ஏற்பாடும் அதிகாரங்கள் வசனங்களாகப் பிரிக்கப்பட்டன.    இவை குறிப்பிட்ட வேதப்பகுதிகளை நாம் எளிதில் கண்டுகொள்ள மட்டுமே உதவுகின்றன. நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது அவை எழுதப்பட்ட முறையின்படி அதிகார எண்களையும் வசன எண்களையும் மறந்து தொடர்ச்சியாக வாசிக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் பல வசனங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். 

இதை விடுத்து நமக்கு வேண்டிய குறிப்பிட்ட வசனத்தை மட்டும் நாம் வாசித்தோமானால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் நிலைமை ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. இன்றைய தியான வசனம், அவரிடம் எதைக்கேட்டாலும் அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்று கூறுவதால் இன்று பலரும் எதனையும்; எந்த உலக ஆசீர்வாதத்தையும்  அவரிடம் கேட்கலாம் என்று எண்ணிக்கொள்கின்றனர். அப்படித்தான் பல ஊழியர்களும் குருக்களும் போதிக்கின்றனர். 

ஆனால், இன்றைய வசனத்துக்கு முந்தின வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்." (1 யோவான்  5 : 14) அதாவது, எதனையும் கேட்பதல்ல, மாறாக நாம் கேட்பது அவரது சித்தத்துக்கு உகந்ததாக இருக்கவேண்டியது அவசியம். தேவனை அறிந்தவன்தான் தேவனது சித்தமறிந்து கேட்கக்கூடியவன்.  

இயேசு கிறிஸ்துவும் இப்படித்தான் ஜெபித்தார். இதனை நாம், "சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்". (மத்தேயு 26:39) என்று வாசிக்கின்றோம். 

உலக ஆசீர்வாத போதகர்கள் குறிப்பிடும் இன்னொரு வசனம், "அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங்கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்ளுவீர்கள்." ( யோவான் 16: 23, 24) 

இயேசு குறிப்பிடும் கேளுங்கள், மகிழ்ச்சி போன்ற வார்த்தைகள் ஆவிக்குரிய அர்த்தம் கொண்டவை. மகிழ்ச்சி என்பது ஆவிக்குரிய நிறைவின் மகிழ்ச்சியைக் குறிக்கின்றது. எனவேதான் இயேசு இந்த வசனத்தின் தொடர்ச்சியாக, "இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்." ( யோவான் 16: 25) என்கின்றார். அதாவது, பிதாவிடம் நாம் ஜெபிக்கவேண்டியதை அவர் இங்கு உவமையாகக் கூறுகின்றேன் என்கிறார். உலக ஆசீர்வாதங்களுக்காக இப்படி கேளுங்கள் என்று கூறவில்லை. 

இயேசு கற்பித்த ஜெபத்தில்கூட,  "உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக." ( மத்தேயு 6: 10) என்றுதான் கூறினார். அதாவது உமது பரலோக சித்தம் என்னவோ அதுவே எனக்கு இந்த பூமியில் செய்யப்படட்டும் என்று கற்பித்தார். 

ஆம் அன்பானவர்களே, எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பது உண்மை. அதுபோல, நாமும் அவரது சித்தமறிந்து கேட்கவேண்டும் என்பதும் உண்மை. இப்படி அவரது சித்தம் அறிந்து கேட்போமானால் அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்பதும் உண்மை.

"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1856

🔆 2026 மார்ச் 08, ஞாயிறு 

"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." (1 யோவான்  5 : 12)

ஒரு மனிதனுக்கு உயிர் இருக்கின்றதா இல்லையா என்பதனை நாம் அவனது சுவாசத்தைக் கொண்டு அறியலாம். மருத்துவர்கள் கைநாடி பிடித்துப் பார்ப்பார்கள். அது இதயத்துடிப்பை வெளிப்படுத்தும். இப்படித் துடிப்பு இருக்குமானால் அந்த மனிதனுக்கு உயிர் இருக்கின்றது என்று பொருள். இந்த உயிர்த்துடிப்பு மிகவும் குறைவாக இருக்குமானால் அவனைக் காப்பற்றிட அவனது இதயத்துடிப்பை அதிகரிக்க வகைபார்ப்பார்கள். 

இதுபோலவே கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும் ஒருவருக்குள் கிறிஸ்து எந்த அளவுக்கு இருந்து செயல்படுகின்றார் என்பதைப்பொறுத்தே அவரது ஆவிக்குரிய உயிர் இருக்கும். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14: 6) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா? ஆம், அவரே சத்தியமும் ஜீவனும். 

"தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்." (1 யோவான்  5 : 11) ஆம் அன்பானவர்களே, நித்திய ஜீவன் எனும் முடிவில்லா வாழ்வு கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கின்றது. அதை ஏற்கெனவே நமக்கு ஆயத்தமாய் வைத்திருக்கின்றார். அதனை நாம் சுதந்தரித்துக்கொள்ள முயலவேண்டியது அவசியம். எனவேதான் இன்றைய தியான வசனம், "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்" என்று கூறி நம்மை அறிவுறுத்துகின்றது. 

ஒருவனுக்குள் கிறிஸ்துவின் ஜீவன் இருக்கின்றது என்பதை நாம் எப்படி அறிந்துகொள்வது? அது மருத்துவர்களைப்போல நாடித்துடிப்பை வைத்து நாம் கண்டுபிடிக்கமுடியாது. மாறாக, நமது மாறுபட்ட வாழ்க்கைதான் அதனை வெளிப்படுத்தும். ஆலயங்களுக்குச் செல்வது, காணிக்கைகள் கொடுப்பது, வேதாகமத்தை வாசிப்பது, போன்ற செயல்கள் நம்மை வெளிப்பார்வைக்கு உயிருள்ளவர்கள்போலக் காண்பிக்கும்.  ஆனால், தேவன் இவற்றுக்கு மேலாக நம்மிடம் எதிர்பார்க்கின்றார். 

கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த வேதபாரகரும் பரிசேயர்களும் மேற்கூறிய அனைத்து நியமங்களையும் கடைபிடித்தவர்கள்தான்.  ஆனால் இயேசு அவர்களுக்கு "ஐயோ கேடு" என்று கூறுவதை நாம் வாசிக்கின்றோம் (மத்தேயு 23:13 - 32)  இப்படி அவர்களை சபிக்கக் காரணம் என்ன என்பதனையும் இயேசு கிறிஸ்து கூறுகின்றார்:-"அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்." ( மத்தேயு 23: 28)

அதாவது, வெளியே இந்தச் செயல்களை அவர்கள் செய்தாலும் அவர்களது உள்ளமோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கின்றது என்கிறார் இயேசு கிறிஸ்து. அதாவது, உயிரற்ற உடல் எப்படி அசுத்தமான புழுக்களால் நிறைந்து நாற்றமெடுக்குமோ அதுபோல கிறிஸ்துவாகிய உயிர் இல்லையானால் வெளிச்செயல்கள் இப்படியே தேவனுக்குமுன் நாற்றமெடுப்பதாக இருக்கும். கிறிஸ்து நமக்குள் வரும்போது மட்டுமே மாயமும் அக்கிரமமும் நம்மை விட்டு அகலும்.

ஆம், கிறிஸ்து நமக்குள் வரும்போது மட்டுமே நமது பரிசேய குணங்கள் மாறும். காரணம், அவர் நமக்குள் வரும்போது மட்டுமே நமக்குள் உயிர் உண்டாகும். நாம் அவருக்குள் உயிரடையும்போது மட்டுமே நமக்குள் இருக்கும் அசுத்தங்கள் வெளியேறும். மரித்து நான்கு நாட்கள் கடந்தபின் நாற்றமெடுத்த லாசரின் உடல் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையால் உயிர்பெறவில்லையா? "அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்." (ரோமர் 8:11)

சாவுக்கேதுவான நமது  சரீரங்கள் உயிர்ப்பிக்கப்பட கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அவர் நமக்குள் வரும்படி வேண்டுதல் செய்யவேண்டியது அவசியம். காரணம், அவர் நமக்குள் வரும்போது மட்டுமே நாம் உயிரடைந்து அவருக்குச் சாட்சிகளாக வாழமுடியும். ஆம், "குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்." நமக்குள் ஜீவன் இருக்கின்றதா என்பதை நாமே நிதானித்துப் பார்ப்போம். 

"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1857

🔆 2026 மார்ச் 09, திங்கள்  

"காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?" ( சங்கீதம் 94: 9)

இன்று தங்களது ஜெபங்களுக்குத் தேவனிடமிருந்து  பதில் கிடைக்கவில்லையானால் சிலர் தேவனைக் குற்றப்படுத்துவதுண்டு; முறுமுறுப்பதுண்டு. "எனது பாடுகள், துன்பங்களுக்காக நான் எவ்வளவோ ஜெபிக்கிறேன், இந்தக் கடவுளுக்குக் கண்ணும்  தெரியவில்லை, காதும் கேட்கவில்லை" என்பார்கள். இப்படித்  தங்களது தவறை மறைத்து மற்றவர்களைக் குற்றப்படுத்துவது மனிதர்களது இயற்கைக் குணம்.  

இத்தகைய மனிதர்களைப்பார்த்து இன்றைய தியான வசனம் கேட்கின்றது, "காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?" மனிதனே, உனது காதையும் கண்ணையும் உண்டாக்கியவர் தேவன்தான். அப்படியிருக்க அவர் எப்படி உனது துன்பங்களைப் பார்க்காமலும், உனது ஜெபத்தைக் கேட்காமலும் இருப்பார்? ஆம், "கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்." ( நீதிமொழிகள் 20: 12)

மனிதர்களது தேவனைக் குற்றப்படுத்தும் முமுறுப்புக்குத் தேவன் ஏசாயா தீர்க்கத்தரிசி  மூலம் பதில் கூறுகின்றார்:- "இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது." ( ஏசாயா 59: 1, 2)

அதாவது, நீ நினைப்பதுபோல எனது செவி மந்தமாகவுமில்லை, எனது கண் குருடாகவுமில்லை, எனது கை உனக்கு உதவமுடியும் குறுகிப்போகவுமில்லை என்கிறார் தேவனாகிய கர்த்தர்.  நமது பாவங்களே தேவனுக்கும் நமக்கும் இடையேத் தடுப்புச் சுவராக நின்று அவர் நமக்கு உதவிடமுடியாதபடி தடுக்கின்றன என்கிறார் அவர். 

ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் நாம் வீட்டின் மற்ற அறையினுள் இருப்பவர்களைப்  பார்ப்பதற்கு இடையிலிருக்கும் சுவரானது எப்படித் தடையாக இருக்கின்றதோ, அதுபோல நமது பாவங்கள் சுவராக எழும்பி தேவனுக்கும் நமக்கும் பிரிவினை உண்டாக்கிவிடுகின்றது. 

"என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்." ( எசேக்கியேல் 7: 4) என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

எனவே அன்பானவர்களே, நமது ஜெபங்களுக்குப் பதில் தரவில்லை என்று தேவனைக் குற்றப்படுத்துவதை விட்டுவிட்டு நாம் முதலில் நம்மைப் பரிசோதித்துப்பார்ப்போம். நம்மிலுள்ள குற்றங்கள், பாவங்களை அவரிடம் ஒளிவின்றி அறிக்கையிடுவோம். தேவனுக்கும் நமக்கும் இடையிலான தடுப்புச் சுவர் தகர்க்கப்படும்போது மட்டுமே தேவனுக்கும் நமக்குமிடையிலான உறவு வலுப்படும். காதையும் கண்ணையும் உண்டாக்கினவர் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். 

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1858

🔆 2026 மார்ச் 10, செவ்வாய்   

"என்னை விருந்துச்சாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே." ( உன்னதப்பாட்டு 2: 4)

விருந்து என்பது நாம் நமது உறவினர்களோடு கொண்டாடும் ஒரு அன்புப்பகிர்வு. நாம் நமக்குத் தெரிந்த எல்லோரையும் விருந்துக்கு அழைப்பதில்லை. அதுபோல எல்லோரிடமும் விருந்து உண்பதற்குச் செல்வதுமில்லை. ஒருவரோடு நாம் விருந்து உண்கின்றோமென்றால் அவர்களோடு நமக்கு நல்ல உறவு இருக்கின்றதென்று பொருள். 

இன்றைய தியான வசனத்தில் எனது அத்தும நேசர் என்னை விருந்துச் சாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார் என்று பாடுகின்றாள் அவருக்குப் பிரியமான ரூபவதி (அழகுள்ள பெண்). காரணம், அவரது அன்பு கொடிபோல என்மேல் பறந்துகொண்டிருக்கின்றது என்கின்றாள் அவள்.   தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழும் அவரது விசுவாசிகளைத்தான்  ரூபவதி என்று இங்குக் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், தேவனுடைய ராஜ்யத்தில் திராட்சை ரசத்துடன் கூடிய விருந்து உண்டு என்பதை இயேசு கிறிஸ்துவும் சீடர்களிடம் கூறினார். "நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( மாற்கு 14: 25) என்று நாம் வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, நாம் அவரது பிள்ளைகளாக இருப்போமானால் அவர் நம்மோடும் விருந்து உண்பதற்கு ஆசையாக இருக்கின்றார். அதற்காக நமது இருதயத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கின்றார். "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்." (வெளிப்படுத்தின விசேஷம் 3: 20) என்று கூறப்படவில்லையா? கதவைத் தட்டும் நேசருக்கு நாம்  இருதயத்தைத் திறக்கவேண்டியது மட்டுமே அவசியமாய் இருக்கின்றது. 

வெளிப்படுகின விசேஷத்தில் கூறப்படும் இந்த  அனுபவத்தை நாம் உன்னதப் பாட்டிலும் வாசிக்கின்றோம். "நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்." ( உன்னதப்பாட்டு 5: 2) ஆம், உறங்கிக்கொண்டிருந்தாலும் கதவைத் தட்டும் நேசரின் சத்தத்தைக் கேட்பதற்கு இதயமானது விழித்துக்கொண்டிருந்தது என்று இங்கு வாசிக்கின்றோம். 

இங்கு வேதாகமம் கூறும் விருந்து, உலக விருந்தினைப்போல வயிற்றை நிரப்பும் விருந்தல்ல. மாறாக, இருதயத்தை தேவ அன்பினால் நிரப்பும் விருந்து. தேவன் நம்மோடு கூடவே இருந்து,  தாய், தகப்பனைபோல உறவோடு குடும்பமாக வாழும் விருந்து. தாயைப் பிரிந்திருக்கும் ஒரு இரண்டு வயது குழந்தைக்கு உண்பதற்கும், விளையாடுவதற்கும்  நாம் எதனைக் கொடுத்தாலும் அந்தக் குழந்தை திருப்தியடையாது. மாறாக, அந்தக் குழந்தை தாயின் அரவணைப்பையே பெரிதாகக் கருதும். அதுபோல தேவனோடு ஐக்கியமாக நிரந்தரமாக வாழ்வதே பரலோக விருந்து. 

இந்த உலகினில் நாம் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழும்போது அவர் நம்மை இந்த விருந்துச்சாலைக்கு அழைத்துக்கொண்டுபோவார். அவரது அன்புக் கொடி நேசம் நம்மேல் பறக்கும். 

"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1859

🔆 2026 மார்ச் 11, புதன்    

"மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 4: 24)

நீதி, நியாயம் குறித்துப் பலரும் பேசுவதை நாம் பார்த்திருக்கலாம். பிரச்சனைகள் ஏற்படும்போது, "நீ செய்வது உனக்கே சரியாகத் தெரிகிறதா?" என்று மற்றவர்களைப் பார்த்துச் சிலர் சிலவேளைகளில் கோபத்தில் கேட்பதுண்டு.  அதற்கு மற்றவர், "நான் நியாயமாகத்தான் செய்கின்றேன்" என்பார்கள். அதாவது, இரண்டுபேரும் நீதி நியாயத்தைத் தாங்கள் கடைபிடிப்பதாகக் கூறிக்கொள்கின்றனர். அப்படியானால் எதுதான் மெய்யான நீதி? யார் கூறுவது உண்மை?

மேலும் சிலர் தங்களுக்குப் பிடித்தமானவர்கள் செய்யும் தவறையும் நியாயப்படுத்துவார்கள். சமீபத்தில், டீ கடை ஒன்றில் டீ அருந்திக் கொண்டிருக்கும்போது இருவர் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். சொந்த மனைவியைத் தள்ளிவிட்டு வேறொரு நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் நடிகர் ஒருவரது விசுவாசி அந்த நடிகருக்கு ஆதரவாக, "இதில் என்னத் தவறு இருக்கின்றது? அவருக்குப் பிடித்தவருடன் வாழ அவருக்கு உரிமை இல்லையா?" என்று கூறினார். அதற்கு மற்றவர், "உங்கள் மருமகன் இப்படி உங்கள் மகளைத் தள்ளிவிட்டு வேறொரு பெண்ணை மணந்துகொள்ள முயன்றால் இதுபோல பேசுவார்களா?" என்று கேட்டார். அதற்கு மற்றவர் பதில் பேசாமல் இருந்தார்.    

ஆம் அன்பானவர்களே, மனிதர்களது நீதிகள் இப்படி ஆளுக்கு ஆள் வேறுபடும் நீதியாகவே இருக்கின்றது.  ஒரு நீதிபதி குற்றவாளி என்று அறிவித்த மனிதன் மேல் முறையீடு செய்து இன்னொரு நீதிபதியால் விடுதலை பெறுவதை நாம் பார்க்கின்றோம். எனவே, மனிதர்களது நீதி தேவனுக்குமுன் அழுக்கான கந்தைபோலவே இருக்கின்றது.  "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது" (ஏசாயா 64:6)

இன்றைய தியான வசனம் மெய்யான நீதி மற்றும்  பரிசுத்தத்தைக் குறித்துக் கூறுகின்றது.  தேவன் ஒருவரே நீதியும் பரிசுத்தமும் உள்ளவராக இருக்கின்றார். "ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்."(1பேதுரு 3:18). எனவே, அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் மரித்து உயிர்த்தவரே நம்மை மெய்யான நீதியுள்ளவர்களாக மாற்ற முடியும். 

இன்றைய தியான வசனம், "தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்துகின்றது. நமது பாவங்களுக்காக மரித்து உயிர்த்த கிறிஸ்து நமக்குள் வரும்போது மட்டுமே நாம் அவரைத் தரித்துக்கொண்டவர்கள் என்று கூறமுடியும். இப்படி நாம் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டால் மட்டுமே மெய்யான நீதியும் பரிசுத்தமுமுள்ளவர்களாக மாறமுடியும். 

நாம் நீதியுள்ளவர்களாய் வாழ்கின்றோமென்றால் நாம் கிறிஸ்துவுக்குள் பிறந்தவர்கள் என்பது அதன்மூலம் விளங்கும். ஆம், "அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்." (1 யோவான்  2 : 29) கிறிஸ்து இயேசுவை வாழ்வில் தரித்துக்கொண்டு மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் வாழ்வோம்; அதாவது, பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்வோம். 

நீதியும், பரிசுத்தமும் இல்லாமால் ஒருவனும் தேவனை அறிவதும் இல்லை; அவரிடம் சேர்வதுமில்லை. 



"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1860

🔆 2026 மார்ச் 12, வியாழன்     

"சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது." (1 நாளாகமம் 21: 1)

தேவனுடைய பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்ட தேவ மனிதன் தாவீது. வல்லமையான சங்கீதங்களை நாம் இன்றும் பாடி மகிழ்ந்து தேவனைத் துதிக்கத்தக்கதாக பாடி அதனை எழுதிவைத்தவர். ஆனால்,  இங்கு அவர் சாத்தானால் வழிநடத்தப்படுவதை நாம் பார்க்கின்றோம்.

ஆட்டுத்தொழுவத்திலிருந்து எடுத்து அரசனாக தேவன் தாவீதை உயர்த்தியிருந்தார். தேவனே அவனை பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளில் தப்புவித்துக் காத்துவந்தார். ஆனால், சாத்தான் தாவீதின் உள்ளத்தில் பெருமையைத் தோன்றச்செய்தது. தனக்குக் கீழ் எத்தனை மக்கள் இருக்கின்றனர் என்று கணக்குப்பார்த்து அதனால் பெருமைகொள்ள அவன் சாத்தானால் ஏவப்பட்டான். 

"அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலரின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான்." (2 சாமுவேல் 24: 2)

தாவீதின் சேனாதிபதியான யோவாப் தேவ மனிதனல்ல. ஆனால் அவன் தாவீதின் ஒவ்வொரு உயர்வினையும் கண்டுவந்தவன். மக்களைக் கணக்கிடுவது தவறு என்று அவன் மூலம் தேவன் தாவீதுக்கு உணர்வுறுத்தினார். "அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்." (2 சாமுவேல் 24: 3) ஆனாலும் தாவீது மக்களைக் கணக்குப்பார்க்க யோவாபை ஏவினான். 

இதுவரை தேவனது கிருபையைச் சார்ந்து வாழ்ந்த தாவீது அந்தக் கிருபையினைத் தள்ளித் தனது சுயபலத்தை நம்பத் துவங்கினான். ஆனாலும், அவன் தேவ மனிதனாக இருந்ததால் தேவன் அவனைக் கைவிட்டுவிடவில்லை. அவன் செய்த தவறை ஆவியானவர் அவனுக்கு உணர்த்தினார். எனவே, "இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்." (2 சாமுவேல் 24: 10)

ஆனாலும் தேவன் அவன்மேல் கோபம்கொண்டார்.  அவன் கணக்குப்பார்த்து மகிழ்ந்த மக்களது எண்ணிக்கையைக் குறைவுப்படச் செய்தார். "ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்." (1 நாளாகமம் 21: 14) 

ஆம், தனது தாசனாகிய தாவீதுக்குப் பதிலாக இவ்வளவு பெரிய மக்களை தேவன் அழித்தார். தாவீதுக்குத் தேவன் ஏற்கெனவே வாக்களித்திருந்ததால் அவனை அழிக்காமல் பாதுகாத்தார். இதுவும் தேவனது கிருபையே. அன்பானவர்களே, தேவன் நம்மை நடத்திவந்த பழைய காலங்களை நாம் தாவீதைப்போல மறந்துவிடக்கூடாது. நமது உயர்வு நமது சுய பலத்தால் வந்ததல்ல, மாறாக தேவனது கிருபையினால் கிடைத்தது எனும் உணர்வு நமக்கு எப்போதும் இருக்கவேண்டியது அவசியம். நமது உயர்வைக்குறித்த பெருமை நமக்கு ஏற்படுமானால் நாம் எவ்வளவுதான் பெரிய தேவ மனிதனாக இருந்தாலும் சாத்தான் நம்மை வஞ்சிக்க முடியும். எனவே எச்சரிக்கையாக இருப்போம். 

"சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடை தந்திரங்கள் க்குத் தெரியாதவைகள் அல்லவே." (2 கொரிந்தியர் 2:11)

"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1861

🔆 2026 மார்ச் 13, வெள்ளி      

"நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது." ( யோவான் 4: 34)

இந்த உலகத்தில் உயிர்வாழ்வதற்காக உணவு உண்பவர்களும் உண்டு உண்பதற்காகவே உயிர்வாழும் போஜனப்பிரியர்களும் உண்டு. இதுபோலவே, தேவனை அறியவேண்டும் என ஆர்வமுடன் தேவனைத் தேடுபவர்களும் உண்டு, தேவனிடமிருந்து எப்போதும் எதையாவது கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் உலக ஆசைகளால் நிறைந்து ஜெபிப்பவர்களும் உண்டு. 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துத் தனது சுய சித்தத்தைத் தேடாமல் தன்னைக்குறித்த பிதாவின் சித்தம் அறிந்து செயல்படுத்துபவராக இருந்தார்.  உலகத்தின் மீட்புக்காக தனது உயிர் பலியாகவேண்டும் என்பதே பிதாவின் சித்தம் என்பதனை அவர் அறிந்திருந்தார். அந்தப் பிதாவின் சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் ஒவ்வொருவரைக் குறித்தும் தேவனுக்கு ஒரு சித்தமுண்டு. முதலில் நாம் நம்மைக்குறித்தத் தேவ சித்தத்தை அறியவேண்டியது அவசியம். அப்படி அறிந்துகொண்டோமானால் நமது வாழ்வில் நடக்கும் காரியங்களுக்காக நாம் அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சியோ துக்கமோ அடையமாட்டோம்.  அப்போஸ்தலரான பவுல் கிறிஸ்து தன்னை அவருக்கு வெளிப்படுத்தினவுடன், "நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார்." (அப்போஸ்தலர் நடபடிகள் 9:6) என்று வாசிக்கின்றோம்.

இதனால்தான் அவர் நமக்கும், "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,  தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான  சித்தம்  இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." (ரோமர் 12:2) என்று அறிவுறுத்துகின்றார். அதாவது, உலகம் செல்லும் வழியில் அதற்கேற்றபடி நடவாமல் நமது மனம் புதிதாகி நாம் தேவனுக்கேற்றவர்களாக மறுரூபமாகவேண்டும் என்கிறார். அப்போது தேவ சித்தம் இன்னதென்று நமக்குத் தெரியவரும். சுருக்கமாகக் கூறுவதானால் நாம் முதலில் மறுபடி பிறக்கவேண்டியது அவசியம். 

இன்று பெரும்பாலான மக்கள் தங்களது சுய சித்தத்தையே செய்து முடிக்க எண்ணுகின்றனர்; அதற்காகவே உழைக்கின்றனர்.  மருத்துவராக, பொறியியல் வல்லுனராக, வங்கி அதிகாரியாக, அல்லது IAS, IPS பணி அதிகாரியாக மாறவேண்டும் என்று சித்தமுள்ளவர்களாக இருக்கின்றனர். வேறு சிலர், அரசியலில் உயர்ந்த பதவி அடையவேண்டும் அல்லது மிகப்பெரிய தொழிலதிபராக வேண்டுமென்று எண்ணுகின்றனர். இவர்களில்  ஒருசிலர் தங்களது இலக்கை அடைந்தும் விடுகின்றனர். 

ஆனால் அன்பானர்களே, தங்களைக்குறித்த தேவ சித்தத்தைப் பெரும்பாலானவர்கள் அறிய விரும்புவதுமில்லை, அதனை அடைய முயற்சிப்பதுமில்லை. "என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது" என்று கூறிய இயேசு கிறிஸ்து அதனை அடைந்து மேன்மையடைந்தார். உலக ஆசைகளை நிறைவேற்ற அவரைத் தேடாமல் அவர்மேல் மெய்யான அன்புடன் அவரைத் தேடுவோமானால் நம்மைக் குறித்த அவரது சித்தத்தைக் கண்டுகொள்ளமுடியும். இயேசு கூறுவதுபோல அதனைச் செய்து  முடிப்பதே நம்முடைய மெய்யான போஜனமாயிருக்கிறது.

மட்டுமல்ல, பிதாவின் சித்தமறிந்து நாம் வாழும்போது நாமே கிறிஸ்துவுக்குச் சகோதரனும் சகோதரியாக இருக்கின்றோம். இதனையே இயேசு கிறிஸ்து, "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்." (மத்தேயு 12: 50) தேவ சித்தம் அறிந்து வாழ முயற்சி செய்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1862

🔆 2026 மார்ச் 14, சனி       

"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." (2 கொரிந்தியர் 3: 5)

மனிதர்கள் நாம் பலவீனமானவர்கள். மட்டுமல்ல, நமது வாழ்நாளைக்குறித்துக் கூட நாம் எதுவும் கூறமுடியாது. ஆனால் பலரும் இவற்றை எண்ணிப்பார்ப்பதில்லை. எதிர்காலத்தைக்குறித்து பல்வேறு கற்பனைகளையும் முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கின்றனர். இன்றைய தியான வசனம், நம்மால் இது முடியும் என்று ஒன்றையும் யோசிப்பதற்குக்கூட நாம் தகுதியற்றவர்கள் என்று கூறுகின்றது. உலக மனிதர்கள் இது முட்டாள்தனமான எண்ணம், இப்படி எண்ணிக்கொண்டிருந்தால் நாம் வாழ்வில் முன்னேறமுடியாது என்று கூறிக்கொள்கின்றனர். 

அன்பானவர்களே, நாம் எதிர்காலத்தைக்குறித்துத் திட்டமிடுவதில் தப்பில்லை, ஆனால் அந்தத் திட்டமிடுதல் தேவனுக்கு உகந்ததாக இருக்கவேண்டியது அவசியம். மட்டுமல்ல, நாம் நமது எதிர்காலத்தை; நமது குழந்தைகளது எதிர்காலத்தை, தேவ கரத்தினுள் ஒப்புவித்து ஜெபிக்கவேண்டியது அவசியம். காரணம், நம்மால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல. நமது திட்டங்களும் கற்பனைகளும் தேவன் நினைத்தால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். 

ஒரு மிகப்பெரிய செல்வந்தனாகிய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கு மூன்று ஆண்பிள்ளைகள். அதுவே அவனுக்கு ஒரு பெரிய பெருமையாக இருந்தது. மூன்று மகன்களையும் நன்றாகக் படிக்கவைத்தான் மூன்று மகன்களும் மருத்துவக் கல்லூரியில் படித்தனர். அவர்கள் படிப்பு முடிக்கும் காலத்தில் அவன் அவர்களுக்காக மருத்துவமனை ஒன்றையும் கட்டினான். ஆனால், மூத்த மகன் ஒரு பெண்ணைக் காதலித்து அவளோடு சென்று மாமனார் வீட்டில் தங்கிவிட்டான். இரண்டாவது மகன் கஞ்சா, மற்றும் போதைக்கு அடிமையாகி மருத்துவ படிப்பை முடிக்காமல்  போனான். மூன்றாவது மகனோ ஒரு விபத்தில் இறந்துபோனான்.  

எனவேதான் அப்போஸ்தலரான யாக்கோபு நமக்கு ஒரு தகுந்த அறிவுரைக் கூறுகின்றார்:-  "நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." ( யாக்கோபு 4: 13, 14) ஆம் அன்பானவர்களே, நமது தகுதி தேவனால் நிச்சயிக்கப்படுகின்றது. 

எனவே, நாம் தேவனது கிருபைக்கு வேண்டுதல்செய்து அடங்கியிருக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. யாக்கோபு கூறுகின்றார், "ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்." ( யாக்கோபு 4: 15)

ஆனால், நாம் தேவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வோமானால் தேவன் நம்மை நிச்சயமாக ஆசீர்வதிப்பார். நமக்கு எதிராகச்செயல்படும் செயல்பாடுகளையும் நமக்கு ஆதரவாக மாற்றுவார் அவர். நாம் யோசிப்பதற்கும் மேலான உயர்வு தேவனால் நமக்கு உண்டாகும்.  யோசேப்பின் வாழ்வில் அவருக்கு வந்தத் துன்பங்களை தேவன் ஆசீர்வாதமாக மாற்றவில்லையா? "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்." ( ஆதியாகமம் 50: 20) என்று மகிழ்ச்சியோடு அவனைக் கூறவைத்தார். 

யோசேப்பு தான் எகிப்துக்கு பிரதமராக வரவேண்டும்; பார்வோனுக்கு இணையானவனாக வரவேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் தேவன் அப்படி எண்ணினார். ஆம், நமது தகுதி நம்மால் அல்ல, தேவனால் மட்டுமே உண்டாகியிருக்கின்றது. இதனை நாம் உணர்த்துக்கொண்டோமானால் தேவனே  நமக்கு எல்லாமானவர் என்று எண்ணி அவரது கிருபைக்குக் காத்திருப்போம். நமது சுய பலத்தின்மேல் நம்பிக்கைகொள்ளாமல் கர்த்தரது கிருபைக்குக் காத்திருப்பதை சங்கீத ஆசிரியர் உணர்ந்திருந்ததால் கூறுகின்றார்:- 

"அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார். தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்." ( சங்கீதம் 147: 10, 11)

"விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1863

🔆 2026 மார்ச் 15, ஞாயிறு      

"கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய்." ( எண்ணாகமம் 11: 23)

நாம் எதனையும் பல்வேறு விதங்களில் சிந்தித்துப் பார்த்து, இது நம்மால் முடியும் அல்லது  முடியாது என்று தீர்மானிக்கின்றோம். ஆனால் தேவன் இத்தகைய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதனையும் அவரால் கூடாத காரியம் எதுவும் இல்லை என்பதனையும் பலவேளைகளில் எண்ணிப்பார்க்க மறந்துவிடுகின்றோம். காரணம், நாம் பொதுவாக எப்போதும் மனித  மனநிலையிலிருந்தே தேவனையும் பார்க்கின்றோம்.  

இஸ்ரவேல் மக்களை மோசே வனாந்தரத்தில் வழிநடத்தியபோது தேவன் அதிசயமாக அவர்களுக்குத் தூதர்கள் உண்ணும்  மன்னாவைப் பொழிந்து பசியாற்றினார். ஆனாலும் அந்த மக்களுக்கு மன்னாவின்மேல் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. "இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்." ( எண்ணாகமம் 11: 6) என்று வாசிக்கின்றோம். அதாவது அவர்கள் நாவு இறைச்சி உணவுக்கு ஏங்கத்துவங்கியது. 

அவர்கள் இருந்த இடமோ வனாந்தரம். அங்கு வேறு எந்த உணவுக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் இஸ்ரவேல் மக்களது ஏக்கத்தை மோசே தேவனிடம் தெரிவித்தபோது தேவன், "நீங்கள் ஒருநாள், இரண்டுநாள், ஐந்துநாள், பத்துநாள், இருபதுநாள் மாத்திரமல்ல, ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள்; அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள்; உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்". ( எண்ணாகமம் 11: 19, 20)

தேவன் கூறியது மனித கற்பனைக்கு எட்டாத ஒரு காரியம். எனவே, "அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே. ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான்." ( எண்ணாகமம் 11: 21, 22)

ஆறுலட்சம் மக்களுக்கு ஒரு மாதம் முழுவதும் உண்ணும்படி  இறைச்சி கொடுப்பேன் என்று தேவன் கூறியதை மோசேயாலேயே நம்ப முடியவில்லை. ஆம்,  தேவனோடு பேசி, நடந்து, தேவனது  நண்பனாக முகமுகமாய் தேவனோடு பேசக்கூடிய நிலையிலிருந்த மோசேயால்கூட தேவனது வார்த்தையினை நம்பமுடியவில்லை. எனவேதான் மோசேயிடம் தேவன், "கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய்" என்று இன்றைய தியான வார்த்தைகளைக் கூறுகின்றார். கூறியது மட்டுமல்ல, அவ்வாறே அவர்களுக்கு இறைச்சியை உண்ணக்கொடுத்தார். 

ஆம் அன்பானவர்களே, இன்று நமது சில பிரச்சனைகளுக்காக நாம் ஜெபித்தாலும் நம்மால் பலவேளைகளில் முழு விசுவாசம் ஏற்படுவதில்லை. மோசேயைப்போலவே இருக்கின்றோம். நமது விசுவாசம் அற்பமான விசுவாசமாகவே இருக்கின்றது. ஒருமுறை இயேசு கடல்மேல் நடப்பதைப்பார்த்துப்  பேதுருவும் தானும் அவ்வாறு நடக்க ஆசைப்பட்டார். கிறிஸ்துவும் அவரிடம் படகிலிருந்து இறங்கி  வருமாறு கூறினார். அவ்வாறே அவரும் கிறிஸ்துவை நோக்கி  கடல்மேல் நடந்தார். ஆனால், காற்று பலமாக வீசியதால் கிறிஸ்துவைவிட்டு சூழ்நிலையைப் பார்த்து அவிசுவாசம் கொண்டார். உடனேயே நீரில் மூழ்க ஆரம்பித்தார். பயந்து,  "ஆண்டவரே, என்னை இரட்சியும்" என்று கூவினார். "உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்." ( மத்தேயு 14: 31)

நாமும் பலவேளைகளில் மோசேயைப்போலவும் பேதுருவைப்போலவும் அற்ப விசுவாசிகளாக நடந்துகொள்கின்றோம். மருத்துவர்களின் அச்சம்தரும் வார்த்தைகள், பயமுறுத்தும் காரியங்கள், கடன் சுமைகள் இவைகள் ஏற்படுத்தும் பயங்கரமான சூழ்நிலைகளைப் பார்த்து அவிசுவாசம் கொள்கின்றோம். தேவனால் நமது வாழ்வில் நாம் நம்பமுடியாத அளவுக்கு மாற்றங்களைக் கொண்டுவரமுடியும் என்று விசுவாசிப்போம்; கர்த்தருடைய கைகள்  குறுகிப்போனவையல்ல என்பதற்கு  வேதாகமத்தில் பல நூறு சாட்சிகள் இருக்கின்றன. 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1864

🔆 2026 மார்ச் 16, திங்கள்       

"இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே." ( ஏசாயா 48: 17)

நமது தேவனாகிய கர்த்தர் உலக செல்வ ஆசீர்வாதங்களைத் தந்து நம்மை நடத்துபவரல்ல; மாறாக, நம்மை அவர் விரும்பும் பரிசுத்தமான வழியில் நாம் நடக்க விரும்புபவர், வழி நடத்துபவர். நான் பரிசுத்தர் எனவே நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் என்று கூறியவர் அப்படி நாம் பரிசுத்த வாழ்க்கை வாழ விரும்புபவராகவும்  அப்படி வாழ உதவி செய்பவராகவும் இருக்கின்றார்.  

இது எப்படியென்றால் ஒரு சிறந்த மருத்துவர் தன்னைப்போல தனது மகனும் மகளும் எதிர்காலத்தில் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்று ஆசைப்படுவதைப்போலவும், அவர்கள் அப்படி எதிர்காலத்தில் விளங்க அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதுபோலவும் ஆகும்.

ஆம், இதுபோலவே கர்த்தரின் பரிசுத்தமான வழியில் நாம் நடப்பதற்கு வழிகாட்டவும் நமக்கு முன்மாதிரியாக அந்தப் பரிசுத்த வழியில் நடந்து மாதிரி காண்பிக்கவும் இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். எனவேதான் அவர் கூறினார், " நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (யோவான் 14: 6) ஆம், பரிசுத்தரான பிதாவை அடைந்திட கிறிஸ்து ஒருவரே வழியும் உண்மையாய் இருக்கின்றார். 

இயேசு கிறிஸ்து உலகத்தில் இருந்த நாட்களில் தனது சீடர்களோடு இருந்து நடத்தினார். அவர் தனது மீட்புப் பணியினை நிறைவு செய்து மீண்டும் தந்தையிடம் செல்லுமுன்பாக தந்து சீடர்களை வழிநடத்தவும், தன்னை விசுவாசிப்பவர்களை பரிசுத்த வழியில் நடத்திடவும்  பரிசுத்த ஆவியனவரை வாக்களித்தார். பரிசுத்த ஆவியான "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்."( யோவான் 16 : 8 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

"பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே" என்று வாக்களித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று பரிசுத்த ஆவியாக நம்முடனிருத்து நடத்துகின்றார். 

ஆனால், இன்றைய பெரும்பாலான மக்களுக்கு இயேசு கிறிஸ்து உலக ஆசீர்வாதங்களை கொடுக்கும் ஒரு தெய்வமாகவே காண்பிக்கப்படுகின்றார். அன்பானவர்களே, இந்த உலகத்தில் நடக்கக்கூடிய காரியங்களைக்கொண்டே இது தவறான எண்ணம் என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். இன்று உலக அளவில் ஆசீர்வாதங்களை பெற்றுள்ளவர்கள் கிறிஸ்துவை அறிந்தவர்களல்ல. கிறிஸ்துவை அறியாத, அவரது போதனைகளைக் கடைபிடிக்காதவர்களே இன்று பெரும் உலக பணக்காரர்களாகவுள்ளனர். இதிலிருந்தே கிறிஸ்து உலக ஆசீர்வாதங்களுக்காக வரவில்லை என்பது தெளிவு.

கிறிஸ்து இல்லாத வாழ்க்கையில் எவ்வளவு பணமோ பதவியோ இருந்தாலும் அங்கு பரிசுத்தம் இருக்காது; தேவனுக்கு  ஏற்புடைய ஒரு வாழ்க்கை இருக்காது. சமுதாயத்தில் மதிப்போடு பார்க்கப்படும் பலர் சில வேளைகளில் தவறு செய்து சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளும்போது அவர்களைப்பற்றி வெளிவரும் செய்திகள், "ஐயோ, இவரா இப்படியெல்லாம் செய்தார்?' என உலகம் ஆச்சரியப்படுகின்றது. ஆனால் நாம் கிறித்துவுக்குள் இருந்தால் இந்த ஆச்சரியம் நமக்கு வராது. காரணம், கிறிஸ்து இல்லாத வாழ்க்கை இப்படித்தான் இருக்குமென்று நமக்குத் தெரியும்.

"நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." ( யோவான் 15: 5) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? திராட்சைக் கொடியாகிய அவரோடு நாம்  இணைக்கப்பட்டால் மட்டுமே கனியுள்ள வாழ்க்கை வாழ முடியும். 

எனவே அன்பானவர்களே, பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிற நம் தேவனாகிய கர்த்தரிடம் நாம் நம்மை இணைத்துக்கொள்வோம். அப்போது, அவரே பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப்  போதித்து நாம் நடக்கவேண்டிய பாதையில் நம்மை நடத்தி நித்திய ஜீவனை நாம் பெற்றிட உதவி செய்வார். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1865

🔆 2026 மார்ச் 17, செவ்வாய்        

"தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்." (2 தீமோத்தேயு 1: 7)

ஆவிகளைக்குறித்த பயம் ஆதிகாலம் முதல் மனிதர்களுக்குள் இருக்கின்றது. அசுத்த  ஆவியான சாத்தானைக்குறித்த பயம், இறந்தவர்கள் ஆவியாக அலைந்து திரிவார்கள் எனும் எண்ணம் இவை மனிதர்களுக்குள் இருக்கின்றது. பொதுவாக ஆவிகளை மனிதர்கள் இருளோடு கற்பனை செய்துகொள்கின்றனர். எனவே பலர் இருளான இடங்களுக்குச் செல்லப்  பயப்படுவதுண்டு. 

ஆனால் தேவன் நமக்கு இப்படிப் பயப்படுவதற்கான ஆவியைத் தரவில்லை என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். பரிசுத்த ஆவியானவரைக்குறித்து கிறிஸ்தவர்களில் சிலர்கூட பயப்படுவதுண்டு. காரணம், சில ஜெபக்கூட்டங்களில் பரிசுத்த ஆவி இறங்கியதாகக் கூறிச்  சிலர் தரையில் உருண்டு புரளுவது, விசித்திரமாக கூக்குரலிடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதுதான். ஆனால் வேதாகமம் இப்படிக் கூறவில்லை. பிசாசுபிடித்தவர்கள்தான் இப்படி உருண்டு புரள்வது, செத்தவர்கள்போல விழுந்து கிடப்பது என நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். பிசாசு பிடித்தவர்கள் இயேசு கிறிஸ்துவைக் கண்டபோது இப்படி விழுந்து புரண்டனர். 

ஆனால், பரிசுத்த ஆவியானவர் அமைதியின் ஆவியானவர். ஆவியானவர் இருக்குமிடத்தில் சமாதானம் இருக்கும், மகிழ்ச்சி இருக்கும். ஆவியானவர் வெளியரங்கமான பயமூட்டும் காரியங்களைச் செய்யமாட்டார். அவர் நமக்குள் இருந்து செயல்படுபவர். நமக்குப் போதிப்பவர், நாம் நடக்கவேண்டிய பாதையைக் காட்டுபவர். நமது இருதயத்தை சமாதானத்தால் நிறைப்பவர். நாம் ஆவிக்குரிய கனியுள்ள வாழ்க்கை வாழ உதவுபவர். ஆம், "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5: 22, 23)

மேலும், "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." ( எபேசியர் 5: 9) என்று கூறப்பட்டுள்ளது. ஆம்  அன்பானவர்களே, எனவே நாம் தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழவேண்டுமானால் இந்தப் பரிசுத்த ஆவியானவர் நமக்குத் தேவையாக இருக்கின்றார். இந்த ஆவியானவர் பயமுறுத்தும் ஆவியல்ல; மாறாக, நமக்கு ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கான  பலமும் கிறிஸ்துவில் இருந்ததுபோன்ற அன்புநம்மில் உருவாகவும்,   நமக்குத் தெளிந்த புத்தியும் தரக்கூடியவர். 

நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்பதற்குப் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருப்பதுதான் அடையாளம். இதனால்தான் அப்போஸ்தலரான பவுல், "மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்." ( ரோமர் 8: 14) என்று கூறுகின்றார். இந்த ஆவியானவரை நாம் பெறவில்லையானால் நாம் அவருடையவர்கள் அல்ல. "கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8: 9)

ஆவியானவர் நமக்குள் இருக்கின்றார் என்றால் நமது அப்பா நம்மோடு இருக்கின்றார் என்று பொருள். எனவே அவர் நமக்குள் வரும்போது நாம் பயப்படத் தேவையே இருக்காது. "அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்." ( ரோமர் 8: 15) என்று பவுல் அப்போஸ்தலர் கூறவில்லையா? 

இந்த ஆவியானவரைப்  பெற்றுக்கொள்ள ஆர்வமுடன் வாஞ்சிப்போம்.  அப்படிப் பெறும்போது நமது ஆவிக்குரிய வாழ்க்கையே மாறுதல் அடையும். "கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான்" என்கிறார் ஆண்டவராகிய இயேசு  கிறிஸ்து. 


"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1866

🔆 2026 மார்ச் 18, புதன்         

"அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்." ( யாக்கோபு 1: 14, 15)

பத்துக்கட்டளைகளின் இறுதிக் கட்டளை இச்சியாதிருப்பாயாக என்பது. அடுத்தவர்களது பொருட்கள்மேல்; மனிதர்கள்மேல்  அளவுக்கதிகமாக ஆசைப்படுவதே இச்சை. அல்லது, தனக்கு உடமை இல்லாத பொருள்மேல் ஆசைகொண்டு மனதளவில் அதனை விரும்புவது இச்சை என்று கூறலாம். பொதுவாக அனைத்துப் பாவங்களுக்கும் அடிப்படையானது இச்சையே. உலகின் முதல் பாவமும் இச்சையினால்தான் உலகினில் வந்தது.

"அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்." ( ஆதியாகமம் 3: 6) என்று வாசிக்கின்றோம். இன்றைய தியான வசனம் இதனையேத் தெளிவுபடுத்துகின்றது. 

நமக்கு உரிமையில்லாத ஒன்றின்மேல் நாம் ஆசைக்கொள்வது கூடப் பாவம்தான். பலர் அப்படி ஆசைகொண்டு அதனை நிறைவேற்றிட மனம்முழுவதும் எண்ணம்கொண்டிருந்தாலும் சமூகத்துக்குப் பயந்தும், அதனை நிறைவேற்றிட வாய்ப்பு இல்லாததாலும் உலகத்துக்கு நல்லவர்களாக இருக்கின்றனர். எனவேதான், ஆண்டவர் இயேசு, "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று." ( மத்தேயு 5: 28) என்று கூறுகின்றார். 

இப்படி இச்சையானது நம்மைப் பாவத்துக்கு நேராக இழுத்துச் செல்கின்றது. பெண்ணாசை எனும் இச்சையில் விழுந்த தாவீது உரியாவின் மனைவியை அடைவதற்காக அவனைக் கொலைசெய்தார்; பாவத்தில் விழுந்தார்.  நாபோத்துக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தின்மேல் ஆகாப் இராஜா இச்சைகொண்டதால் மனைவி யேசபேலின் ஆலோசனையின்படி நாபோத்தைக் கொன்றான் (1 இராஜாக்கள் 21).  அதுபோல, முப்பது வெள்ளிக்காசின்மேல் ஆசைப்பட்ட யூதாஸ் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்தான்; தற்கொலைசெய்து மாண்டான். 

இதனால்தான் இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான யாக்கோபு, "இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்" என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, இச்சை எனும் பாவத்தில் இருந்து மனித முயற்சியால் யாரும் எளிதில் விடுபடமுடியாது. ஆவியானவர் நமக்குள் இருந்து இயக்கும்போது மட்டுமே நாம் ஆவிக்கேற்ற மனிதர்களாக மாறமுடியும்; இத்தகைய இச்சையைகளிலிருந்து விடுபடமுடியும். பத்துக் கட்டளை உட்பட எந்தக் கட்டளையும் எது பாவம் என்று மட்டும் நமக்குக் கற்பிக்கும் ஆனால் அவைகளிலிருந்த்து விடுவிக்காது. எனவேதான் "......பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே." ( ரோமர் 7: 7) என்கின்றார் பவுல். 

ஆனால், அந்த நியாயப்பிரமாண கட்டளையல்ல, கிறிஸ்து இயேசுவின் மூலம் உண்டாகியுள்ள கிருபையே நம்மை இந்தப் பாவங்களிலிருந்து விடுவிக்க முடியும் என்கின்றார் அவர்.  எனவேதான்,  "பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்" ( கலாத்தியர் 5: 16) என்கின்றார். மேலும், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8: 2) என்றும் கூறுகின்றார். 

தேவ கட்டளைகளுக்கு மதிப்பளிப்போம்; அவைகளை வாழ்வில் கடைபிடிக்க நமது முயற்சியினை முற்றிலும் நம்பாமல் கிறிஸ்துவை விசுவாசிப்போம். அப்படி அவரை விசுவாசிப்பதன்மூலம்  உண்டாகியுள்ள கிருபையினைச் சார்ந்துகொள்வோம். அப்போதுதான் நாம் இச்சை உண்டாக்கும் பாவத்திலிருந்து விடுதலை அடையமுடியும். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1867

🔆 2026 மார்ச் 19, வியாழன்          

"லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்." (நெகேமியா 8: 11,12)

இன்றைய தியான வசனம் பாவ மன்னிப்பை பெற்றுக்கொண்ட இஸ்ரவேல் மக்களைப்பற்றி கூறுகின்றது.  பாபிலோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையான இஸ்ரவேலர் எருசலேம் நகரின் மதில் சுவரைப் பல்வேறு தடைகளுக்குப்பின் கட்டிமுடிந்தனர். அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் தேவனுக்கு நன்றி செலுத்தும்படி அனைவரும் ஒன்றுகூடினர். நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், லேவியர்களும் "தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்." (நெகேமியா 8: 8)

அடிமைத்தனத்தின் துன்பங்களை அனுபவித்திருந்த அந்த மக்களுக்குத் தங்களுக்கு விடுதலையளித்த தேவனுக்கு நன்றி செலுத்துவது முக்கியமான காரியமாக இருந்தது. தங்களது பாவங்களே தங்களது அடிமைத்தனத்துக்கு மூல காரணம் என்பதனை அவர்கள் உணர்த்துகொண்டனர். எனவே அவர்கள் நியாயப்பிரமாணம் வாசிக்கப்பட்டபோது தங்களது மனம் வருத்தப்பட்டு அழுதனர். 

"ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்". (நெகேமியா 8: 9)

"லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்". (நெகேமியா 8: 11)

ஆம் அன்பானவர்களே, இது என்றோ நடந்த சம்பவம் மட்டுமல்ல, இன்றும் பாவ உணர்வடையும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அனுபவிக்கும் மீட்பு அனுபவமாகும்.  நமது பாவங்களை நாம் உணர்த்து அறிக்கையிட்டு நமக்குள் மாற்றம் ஏற்படுத்துவதை நாம் உணர்ந்துகொள்ளும்போது நமக்குள் அழுகை ஏற்படுகின்றது. மனமகிழ்சி உண்டாகின்றது. அன்று இஸ்ரவேல் மக்கள் பாவ உணர்வடைந்து அழுதபோது, அழாதிருங்கள் இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்று லேவியர்கள்  மக்களை உற்சாகமூட்டினார்கள். 

இதுபோலவே பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு அதிசயமாக தேவனால் விடுவிக்கப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரி அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனான். பவுலும் சீலாவும், "அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். (அப்போஸ்தலர் நடப்படிகள்  16: 32, 33)

"பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூட தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான்." (அப்போஸ்தலர் நடப்படிகள்  16: 34) என்று வாசிக்கின்றோம். 

வேதவசனங்களை நாம் கேட்கும்போது தேவனுக்கேற்ற துக்கம் உண்டாகுமானால் நாம் இரட்சிப்பு அடைவது உறுதி. அந்தத் துக்கம் நமக்கு மகிழ்ச்சியையே உண்டாக்கும்.  "தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது." (2 கொரிந்தியர் 7: 10) என்று வாசிக்கின்றோம். 

வேத வார்த்தைகள் என்றைக்காவது உங்கள் உள்ளத்தில் பாவ உணர்வைத் தூண்டியுள்ளனவா? நான் இப்படிப்பட்டவனாக இருந்திருக்கிறேனே என என்றாவது நீங்கள் எண்ணிப்பார்த்ததுண்டா? அன்று இப்படி எண்ணியதால்தான் இஸ்ரவேலர் வேத வசனங்களைக் கேட்டு அழுதார்கள்; பவுல் கூறிய வேத வசனங்களைக்கேட்டு சிறைச்சாலை அதிகாரி மனம்திரும்பினான். ஆம், வேத வசனங்களை உலக ஆசீர்வாதம் பெறுவதற்காக வாசிக்காமல், நமது ஆத்தும அழுக்கை நீக்கும் வார்த்தைகளாக விசுவாசித்து வாசித்து ஏற்றுக்கொள்வோமானால் பாவ உணர்வடைவோம்; அப்போது மீட்படைவோம். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1868

🔆 2026 மார்ச் 20, வெள்ளி           

"என் கருவை உம்முடைய கண்கள் கண்டன; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தன."( சங்கீதம் 139: 16)

நாம் உலகினில் இல்லாமல் இருக்கும்போதே நம்மை அறிந்தவர் தேவன். அவரது திட்டபடியே நாம் தாயிடம் உருவானோம். இன்று தாயின் வயிற்றில் குழந்தை உருவாகியவுடனேயே மருத்துவர்கள் பல்வேறு முறை ஸ்கேன் (Scan) செய்து  குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்கின்றனர். குழந்தைகளின் உடல் உறுப்புக்கள் சரியாக வளர்ச்சியடைந்துள்ளனவா என்று பார்க்கின்றனர். சிலவேளைகளில் அப்படி சோதனை செய்து பார்த்துவிட்டு உடல் உறுப்புகள் குறைபாடுள்ளதாக இருந்தால் கருவைக் கலைத்துவிட சிபாரிசு செய்கின்றனர். 

ஆம் அன்பானவர்களே, நாம் இந்த உலகினில் தற்செயலாக உண்டாகிவிடவில்லை. நம் ஒவ்வொருவரும் எங்கு பிறக்கவேண்டும், யாருக்குப் பிள்ளைகளாகப்  பிறக்கவேண்டும், எப்படிப்பட்ட உருவம், நிறம்  உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பன தேவனால் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றாகும். 

இந்தஉலகினில் ஒவ்வொருவருக்கும் மனதினில் தங்கள் உருவத்தைக்குறித்த ஏதாவது ஒரு குறை இருக்கும். "நான் இன்னும் கொஞ்சம் வெண்மையாகப் பிறந்திருக்கலாம்", "இன்னும் நான் சற்று உயரமாக இருந்திருந்தால் நல்லதாக இருக்கும்", "எனது தலைமுடி பட்டுப்போல நீளமாக  இருந்திருந்தால் நல்லதாக இருக்கும்" அல்லது, "எனது தலைமுடி சுருளாக இருந்தால் அழகாக இருந்திருக்கும்" இப்படிப் பல எண்ணங்கள் இருக்கலாம். ஆனால் இன்றைய வசனம் கூறுகின்றது, "என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தன" என்று. ஆம் அவை ஏற்கெனவே தேவனால் திட்டமிடப்பட்டவை. 

இதுபோலச்  சிலர் பிறவியிலேயே சில குறைபாடுகளோடு பிறக்கின்றனர். ஆம், ஏதோ நோக்கத்துக்காக தேவன் அவர்களை அப்படிப் பிறக்கச் செய்திருக்கலாம்; அது நமக்குத் தெரியாது. எனவேதான், "மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ?" ( ஏசாயா 45: 9) என்று வசனம் கூறுகின்றது.

ஆனால், தேவன் நம்மை எப்படிப் படைத்திருந்தாலும் நாம் அவருக்கேற்ற பரிசுத்தமாய் நமது உடலைப் பேணவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. காரணம், தேவன் தனது சாயலாக மனிதர்களை உருவாக்கியுள்ளார். "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" (1 கொரிந்தியர் 6: 19) ஆம், நமது உடலை நாம் தேவனிடமிருந்து பெற்றுள்ளோம். எனவே அதனை அவரது ஆலயமாகப் பாதுகாக்கவேண்டியது நமது கடமை. 

நாம் எந்த உருவத்தில் இருந்தாலும் நாம் அவருக்கேற்ற பரிசுத்தர்களாக வாழ்கின்றோமா என்பதுதான் முக்கியம். உடல் அழகோ, நமது உலகச் செழிப்போ தேவனுக்கு முக்கியமல்ல. நாம் கருவாக இருக்கும்போதே நம்மை அறிந்து நம்மை உருவாக்கியவர் அவர். அவர் தான் உருவாக்கிய உடலை மனிதன் எப்படி இறுதிவரைப் பாதுகாத்தான் என்றுதான் பார்க்கின்றார். 

சிலர் மற்றவர்களோடு தங்களைப் பலவிதங்களில் ஒப்பிட்டுப் பார்த்து அவர்களைப்போல பொருளாதாரத்திலும் அந்தஸ்திலும் நாம் இல்லையே என்று ஏங்குவதுண்டு. சிலர் வெளிப்படையாகவே தங்களது பெற்றோரிடம், "என்னை நல்ல நிலையில் வைக்கமுடியவில்லையென்றால் ஏன் என்னைப் பெற்றீர்கள்?" என்று கேட்பதும் உண்டு.  இப்படிக் கேட்பது சாபத்துக்கு நம்மை இட்டுச்செல்லும். காரணம், இப்படிப் பேசும்போது  நாம் தேவனது திட்டத்துக்கு எதிராகச் செயல்படுகின்றோம் என்று பொருள். 

எனவேதான் ஏசாயா மூலம் தேவன் கூறுகின்றார், "தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!" ( ஏசாயா 45: 10) நாம் கருவாக இருக்கும்போதே நம்மைக் கண்ட தேவன் நம்மைக் கைவிடமாட்டார். அந்த விசுவாசத்தோடு வாழ்வைத் தொடருவோம்; அவர் நமக்குத் தந்த உடலை அவருக்கேற்ற பரிசுத்தமாகப் பாதுகாத்திடுவோம்.

"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1869

🔆 2026 மார்ச் 21, சனி            

"நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன். தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதனால் என்னை மறந்தார்கள்." ( ஓசியா 13: 5, 6)

மனிதர்களது நன்றிமறந்த குணத்தைக்குறித்து தேவன் வேதனையுடன் கூறும் வார்த்தைகளே இன்றைய தியான வசனம். 

இன்றும் நாம் நமது வாழ்வில் இப்படி நன்றிமறந்த மக்களைச் சந்தித்திருப்போம். தங்களது இக்கட்டான வேளைகளில் நம்மிடம் உதவிவேண்டி வரும் சிலர் பிற்பாடு அவர்களது வாழ்க்கையில் மாறுதல் ஏற்பட்டுச் செழிப்பைக் காணும்போது நாம் உதவியதை மறந்துவிடுவார்கள். மட்டுமல்ல, சிலவேளைகளில் நமக்கு எதிராகவும் செயல்படுவார்கள். இப்படிச் செய்வது நமக்கு மனவேதனையைத் தருமல்லவா?

இதுபோலவே, எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட இஸ்ரவேலர் வானந்தரம் வழியாக கானானை நோக்கி மோசேயால் வழிநடத்தப்பட்டனர். அந்த வனாந்தரத்தில் தேவன் பல்வேறு அதிசயங்களைச்  செய்து அவர்களை வழிநடத்தி கானானுக்குள் கொண்டு சேர்த்தார். கானானின் செழிப்பை அவர்கள் அனுபவித்தனர். ஆனால், பிற்பாடு தங்களை இக்கட்டான நிலையிலிருந்து மீட்டு வழிநடத்திய மெய்யான தேவனைப் புறக்கணித்து பிற தெய்வங்களை வழிபடத்துவங்கினர். 

இதனையே தேவன் இன்றைய தியான வசனத்தில், தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதனால் என்னை மறந்தார்கள் என்கின்றார். குறிப்பாக யோசுவாவின் காலத்துக்குப்பின் இஸ்ரவேலர் இப்படி மாறிப்போனார்கள். 

"அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து, தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள்." ( நியாயாதிபதிகள் 2: 11, 12)

இன்றும் இதுபோலவே பல கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். தங்களது வாழ்க்கையில் இக்கட்டுகளும், துன்பங்களும், நோய்களும் ஏற்படும்போது பல்வேறு பக்திக் செயல்பாடுகளிலும் ஜெபங்களிலும் ஈடுபடுகின்றனர். பல்வேறு ஊழியர்களைத்தேடி அவர்கள் நடத்தும் ஜெபக்கூட்டங்களில் கலந்துகொண்டு தேவனை ஆராதிக்கின்றனர். தேவனுக்கு ஏற்றதாக தங்களது பல செயல்பாடுகளை மாற்றிக்கொள்கின்றனர். ஆனால், தேவனிடம் தங்கள் மன்றாடியதைப் பெற்றுக்கொண்டபின்னர் மாறிப்போகின்றனர்.  பலவேளைகளில் தங்களுக்கு தேவன் செய்த அதிசயத்தை மேடையிலேறி சாட்சியாக அறிவிப்பதோடு தங்களது ஆவிக்குரிய வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். 

இத்தகைய குணத்தையே, "தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதனால் என்னை மறந்தார்கள்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. தேவனிடமிருந்து குறிப்பிட்ட உதவி கிடைக்கும்வரை அவருக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்துவிட்டு  பின்னர் பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதை தேவன் விரும்புவதில்லை. 

"எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டத் துன்பங்களைத் தேவன் மாற்றியபின் நாங்கள் மாறிவிட்டோம், நாங்கள் இன்று ஆவிக்குரிய ஆராதனைகளில்தான் கலந்துகொள்கின்றோம்" எனப் பலர்  கூறுவதுண்டு. ஆனால் அன்பானவர்களே, தொடர்ந்து ஆவிக்குரிய ஆராதனைகளில் கலந்துகொள்வதல்ல; மாறாக, நாம் நமது வாழ்க்கையினை ஆவிக்குரிய வாழ்க்கையாக மாற்றியிருக்கின்றோமா என்பதுதான் முக்கியம்.  மற்றவர்களிலிருந்து மாறுபட்ட வாழ்க்கையினையும் மாறுபட்டக் குணத்தையும்  தேவன் நம்மிடம் விரும்புகின்றாரேத்தவிர மாறுபட்ட ஆராதனை முறையையல்ல.  

இப்படி நாம் நம்மை மாற்றாமல்; நமது குணங்களை ஆவிக்குரியதாக மாற்றாமல்,  வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக இருப்போமானால் தேவன் நம்மைப்பார்த்தும் இப்படித்தான் வேதனையுடன்  "அவர்கள் மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதனால் என்னை மறந்தார்கள்" என்று கூறுவார்.  நமது வறட்சியான வாழ்க்கைச் சூழலில் நமக்கு உதவிய தேவனைக் காலமெல்லாம் மறக்காமல் மெய்யான ஆராதனைக் கிறிஸ்தவர்களாக அல்ல; மாறாக ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.

"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1870

🔆 2026 மார்ச் 22, ஞாயிறு             

"ஆதலால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான்." (2 நாளாகமம் 19: 7)

கடவுளுக்குப் பயந்து உண்மையாக நீதிவழங்கும் நீதிபதிகள் வெகுவாகக் குறைந்துபோய்விட்டனர். பணத்துக்கும் அதிகாரத்துக்கும் பயந்து அல்லது  அடிமையாகி நீதியைப் புரட்டும் நீதிபதிகளை நாம் பரவலாகப் பார்க்கின்றோம். இது இன்று நேற்றல்ல, மூவாயிரம் நாலாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே நடக்கும் செயல்தான். 

எனவேதான் யூதாவின் இராஜாவாகிய யோசாபாத் தான் நியமித்த நியாயாதிபதிகளுக்கு இந்த அறிவுரையைக் கூறுகின்றான். யோசபாத் யூதாவின் நகரங்களில் ஒவ்வொரு நகரத்திலும் நியாயாதிபதிகளை பதவியில் வைத்து அவர்களுக்கு இந்த அறிவுரையினைக் கூறுகின்றான்.  இதனை நாம்:- 

"அவன் யூதாவின் அரணான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து, அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்." (2 நாளாகமம் 19: 5, 6)  என்றான் என்று வாசிக்கின்றோம். 

தொடர்ந்து அவன் அவர்களைப்பார்த்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான். அதாவது நீங்கள் இன்று பரிதானம் வாங்கித்  தீர்ப்புச் சொல்வதுபோல இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் தேவனிடம் பரிதானம் கொடுத்து உங்களுக்கேற்ற தீர்ப்பினைப் பெறமுடியாது எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறுகின்றான்.  

இதனை வாசிக்கும் அன்பானவர்களே, "நான்தான் நீதிபதி இல்லையே?" என்று நீங்கள் ஒருவேளை எண்ணலாம்.   ஆனால் நமது வாழ்க்கையில் நமது வீடுகளில் நாம் செய்யும் காரியங்களுக்கும் இந்த வசனம் பொருந்தும் என்பதனை மறந்துவிடக்கூடாது. அதிக வரதட்சணைக் கொண்டுவந்த மருமகளை ஒருவிதமாகவும் மற்ற மருமகளை அற்பமாகவும் நடத்துவோமென்றால் நாம்  முகதாட்சணியம் பார்க்கின்றோம் என்று பொருள். 

பெற்ற மகளுக்கு ஒரு நியாயம், மருமகளுக்கு ஒரு நியாயம் என்று குடும்பத்தில் செயல்பட்டுக் கொண்டிருப்போமானால் நமக்கும் இந்த எச்சரிப்பைத் தேவன் கொடுக்கின்றார். குடும்பத்தில் ஒரு மகனைவிட, மகளைவிட  மற்ற மகனை,  மகளை வித்தியாசமாக நடத்துவது,  சொத்துக்களைப் பகிர்ந்துகொடுப்பதில் தனக்குப் பிடித்த மகனுக்கும் மகளுக்கும்  பாரபட்சம் பார்ப்பது இவைகளைத் தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். 

ஆவிக்குரிய சபைகளுக்குச் சென்று, பரிசுத்த ஆவியினால் நிறைந்துள்ளேன் எனத் துள்ளிக்குதித்து அந்நியபாஷை பேசும் ஒருவரது குடும்பத்தில்கூட இத்தகைய நிலை இருப்பதை அந்தக் குடும்பத்துச் சகோதரன் என்னிடம்கூறி வருத்தப்பட்டார். இத்தகைய மனிதர்களுக்குத் தேவன் எச்சரிக்கையாக இந்தச் செய்தியைக் கொடுக்கின்றார். 

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை. "நீ எந்த அளவையால் அளப்பாயோ அதே அளவையால் உனக்கும் அளக்கப்படும்" (மத்தேயு 7:2/) என்கிறார் தேவனாகிய கர்த்தர்.  

"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1871

🔆 2026 மார்ச் 23, திங்கள்             

"அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."( லுூக்கா 13: 26, 27)

வெளியரங்கமான பக்திச் செயல்பாடுகள் பல நம்மிடம் இருந்தாலும் மனம் திரும்பாத வாழ்க்கை வாழ்வோமானால் அவை அனைத்தும் தேவனுக்குமுன் அர்த்தமில்லாதவை என்பதனை இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து குறிப்பிடுகின்றார்.

இந்த வசனத்தின்மூலம் அவர் நமக்கு முக்கியமான ஒரு காரியத்தை உணர்த்துகின்றார். நாம் தினசரி ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்ளலாம், நமது ஊருக்கு அருகில் நடக்கும் நற்செய்திக் கூட்டங்களிலெல்லாம் பங்கெடுக்கலாம், அங்கு ஊழியர்கள் பேசும் பேச்சுக்களைக் குறிப்புகளாக நோட்டில் எழுதியெடுக்கலாம், மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி அத்தகையக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லலாம். ஆனால் இத்தகைய செயல்கள் மட்டும் நம்மைப் பரலோகத்துக்கு உரிமையாளர்களாக மாற்றாது என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.

ஆராதனைகளில் கலந்துகொண்டாலும், நற்செய்திக் கூட்டங்களில் கலந்துகொண்டு, கர்த்தருக்கு ஊழியம் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு நாம் இந்த உலகத்தில் பல்வேறு செயல்பாடுகளைச் செய்தாலும், நமது வாழ்க்கையில் தேவன் விரும்பும் கனிகள் இல்லையானால் இறுதி நியாயத்தீர்ப்பு நாளின்போது நாம் அவர்முன் தைரியமாக நிற்கமுடியாது. இதனை, பரலோகத்தின் வாசல்கள் அடைக்கப்பட்டபின்னர் நடக்கும் சம்பவமாக இயேசு கிறிஸ்து உவமையாகக் கூறினார்.

இன்றைய தியான வசனத்தின் முந்தின வசனமுதல் தொடர்ந்து வாசிப்போமானால், "வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."( லுூக்கா 13: 25 - 27) என்று கூறப்பட்டுள்ளதை நாம் காணலாம்.

இயேசு கிறிஸ்து கூறும் இந்த உவமையில், "உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே", என்பது ஆராதனைகளில் கலந்துகொண்டு நற்கருணை உட்கொள்வதையும் "நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே" என்பது ஆங்காங்கே நடைபெறும் பல்வேறு சுவிசேஷக் கூட்டங்களிலும் ஜெபக்கூட்டங்களில் பங்குபெறுவதையும் குறிக்கின்றது. சுருக்கமாக, இத்தகைய நமது செயல்பாடுகளை தேவனுக்கு எடுத்துச்சொல்லி நாம் இறுதிநாளில் தேவனது இரக்கத்தைப் பெறமுடியாது என்கின்றார் இயேசு கிறிஸ்து.
தேவன் நமது பக்திச் செயல்பாடுகளையல்ல, மாறாக நமது மாறுபட்ட வாழ்கையினைப் பார்க்கின்றார். நமது உடலும் மனமும் செய்வதை யல்ல, ஆவிக்குரிய வாழ்வில் நாம் எப்படி கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டிருந்தோம் என்பதையே அவர் பார்க்கின்றார். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." ( ரோமர் 8: 1) என்று கூறுகின்றார்.

ஆம், மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. நாம் 100 சதவிகிதம் மற்ற உலகமனிதர்களைப்போல வாழ்ந்துவிட்டு நம்மை அவருக்கு உகந்தவர்கள் என்று கூறிக்கொள்ள முடியாது. அப்படி இருப்போமானால் அவர் இறுதிநாளில் நம்மைப்பார்த்தும், "நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன்" என்பார். ஒன்றிரெண்டு ஆராதனை முறைகளைக் கைக்கொள்வதைவிட ஆவியின்படி வாழ முயற்சியெடுப்போம்.

"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1872

🔆 2026 மார்ச் 24, செவ்வாய்              

"கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு போகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை." ( உபாகமம் 32: 11, 12)

இன்றைய தியான வசனத்தை வாசித்தப்பின் கழுகுகளைக்குறித்து மேலும் அறிந்தால் நல்லது என்று தோன்றியது. வலைத்தளத்தில் கழுகுகளைக்குறித்துத் தேடியபோது  ஒரு செய்தி இந்த வசனத்துக்குப் பொருந்துவதாக இருப்பதைக் கண்டுபிடித்தேன். 

கழுகுக் குஞ்சுகள் சிறகுமுளைத்து பறக்கும் காலம் வரும்போது அவை எளிதில் தங்களது கூடுகளைவிட்டு வெளிவருவதில்லை. தாய்க்கழுகு கொண்டு வரும் உணவையே அவை எதிர்பார்த்துக் காத்திருக்கும். குஞ்சுகள் இப்படியே இருந்தால் நல்லதல்ல என்பது தாய்க் கழுகுக்குத் தெரியும். எனவே அது குஞ்சுகளை வெளியேற்ற, குஞ்சுகள் இருக்கும் கூட்டினைத் தனது அலகினால் கொத்திக்  கலைத்துவிடும். இப்போது குஞ்சுகளுக்குத் தங்கியிருக்கக் கூடு இல்லாமல்போகும். 

அப்போது அவை வேறு வழியின்றி தாய்க் கழுகை நோக்கிப்பார்க்கும். தாய்க் கழுகு குஞ்சுகளைத் தனது முதுகின்மேல்  அமரவைத்து உயரமாகப் பறந்து, குறிப்பிட்ட உயரம் வந்ததும் அவைகளைக்  கீழே தள்ளிவிடும். வேறு வழியின்றி குஞ்சுகள்  சிறகினை அடித்துப் பறக்க முயலும். தாய்க் கழுகு குஞ்சுகளைக் கவனமாகப் பார்த்துத் தனது சிறகினால் அவ்வப்போது தாங்கிக்கொள்ளும். 

ஆம் அன்பானவர்களே, யாக்கோபைத் தேவன் இப்படித்தான் தாங்கினார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. "கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இதற்கு முந்தின வசனத்தில் நாம் வாசிக்கின்றோம், "பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்." ( உபாகமம் 32: 10) என்று. 

யாக்கோபை வழிநடத்திய தேவன் இன்றும் மாறாதவராகவே இருக்கின்றார். நமது இன்றைய வாழ்க்கை பாழான நிலம் போலவும், ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளிபோலவும் இருக்கலாம். ஆனால் கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு போகிறதுபோலக் கர்த்தர் நம்மிடம் செயல்புரிந்து நம்மைத் தாங்கி நடத்துவார். 

தாய்க் கழுகு கூட்டினைக் கலைக்கும்போது குஞ்சுகளுக்குக் கவலையாகத்தான் இருக்கும். அமைதியாக இருந்து  வேளாவேளைக்கான உணவினை உண்டுவந்த குஞ்சுகள் இந்தத் துன்பத்தைத் தாங்கியாகவேண்டும். அதுபோல, உயரத்திலிருந்து தாய்க் கழுகு குஞ்சுகளை கீழே தள்ளும்போது அவைகளுக்குத் தாய்க் கழுகு தங்களிடம் கொடுமையாக நடப்பதுபோலத் தெரியும்.  ஆம், நமது வாழ்விலும் தேவன் இதுபோலச் சில காரியங்களை செய்கின்றார். அது நமது நன்மைக்காகவே என்பதை நாம் உணர்ந்துகொள்வோமானால் கலக்கமடையாமல் இருப்போம். 

கூடு கலைக்கப்படுவதுபோலவும், உயரத்திலிருந்து தள்ளிவிடப்படுவதுபோலவும் நமது வாழ்வில் பலவேளைகளில் துன்பங்கள் ஏற்படலாம். ஆனால் நாம்  தேவனுக்கு ஏற்புடையவர்களாக வாழும்போது அப்படி நிகழுமானால் கர்த்தர் நம்மேல் கண்வைத்துள்ளார் என்று பொருள். விசுவாசக் கண்கொண்டு பார்ப்போமானால் தாய்க் கழுகு அருகினில் செட்டைகளை விரித்து அசைவாடுவதைக் காணும் குஞ்சுகளைப்போல நாமும் அவரது பிரசன்னத்தைக் கண்டுணர முடியும். கூடு கலைக்கப்பட்டு, கைவிடப்பட்டதுபோல இருப்பதால்தான் கழுகுக் குஞ்சுகள் அடுத்த வாழ்க்கை நிலைக்குத் தயாராகின்றன.

ஆம், இதுபோலவே கர்த்தர் நம்மிடம் செயல்புரிகின்றார் என்பதனை துன்பவேளைகளில் நாம் மறந்திடக்கூடாது. "நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்." ( சங்கீதம் 34: 19)

"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1873

🔆 2026 மார்ச் 25, புதன்               

"ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்." ( பிலிப்பியர் 3: 7)

இந்த உலகத்தில் சிலவேளைகளில் நாம் குறிப்பிட்டச் சில காரியங்கள்மேல் ஆசைப்படுவதுண்டு. அவை கிடைக்காமல் போகும்போது மனதுக்கு வருத்தமாக இருக்கும். ஆனால் பல ஆண்டுகள் கழிந்தபின் நாம் அதனைவிட மேலான ஒன்றினைப் பெறும்போது, முன்பு நாம் ஆசைப்பட்டது கிடைக்காமல் போனது நல்லதுதான் என்று எண்ணத் தோன்றும். குறிப்பாகப் பிள்ளைகளுக்குத்  திருமண வரன் தேடும்போது நாம் சிறப்பானது எனக்கருத்தும் ஒரு வரன் தவறிப்போகும்போது நாம் வருத்தப்படலாம் ஆனால், பிற்பாடு அதனைவிடச் சிறப்பான வரன் அமைவதுண்டு.

இதுபோலவே சில வேளைகளில் நம்மிடம் இருந்த குறையே நமக்கு நன்மையாக மாறிவிடுவதுண்டு. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரது மகன் சரியாகப் படிப்பதில்லை. அவர் மகனைக்குறித்து அடிக்கடி  கவலைப்படுவார். இப்படியிருக்கும்போது ஒரு விபத்தில் மகனது  காலில் அடிபட்டுச் சிறிது ஊனமானது. இப்போது மகனைக்குறித்த அவரது கவலை மேலும் அதிகரித்தது. ஆனால், அந்த ஊனமே அவனுக்கு நல்ல வேலை கிடைக்கக் காரணமாக அமைந்துவிட்டது. ஆம், உடல் ஊனமுற்றோருக்கான சலுகைமூலம் அவன் நல்ல ஒரு வேலையில் சேர்ந்துவிட்டான்.  அவன் நல்ல உடல் தகுதியுடன் இருந்திருந்தால் அவனது குறைந்த மதிப்பெண்ணுக்கு அந்த வேலை கிடைத்திருக்காது. 
 
நல்ல நிலையிலிருந்த காலில் சிறிது குறைவு ஏற்பட்டு அந்த மகன் சிறப்பான வேலைவாய்ப்பைப் பெற்றது போலவே அப்போஸ்தலரான பவுல் கிறிஸ்துவை வாழ்வில் அடைந்துகொள்ள தனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளை நஷ்டமென்று எண்ணினேன் என்கின்றார். மிகப்பெரிய செல்வந்தனாகவும் உயர் பதவியிலும் இருந்த பவுல் அப்போஸ்தலர் தான் அறிந்துகொண்ட கிறிஸ்துவை அடைந்துகொள்ள அனைத்தையும் விட்டுவிட்டு அவருக்கு மெய்யான ஊழியனாக மாறினார். 

ஆம் அன்பானவர்களே, கிறிஸ்துவின் அன்பை முழுமையாக நாம் அனுபவித்து மகிழ நாம் சில காரியங்களை விட்டுவிடவேண்டியிருக்கிறது. எனக்கு உலகில் மிகப்பெரிய பதவியும் வேண்டும், செல்வமும் புகழும் வேண்டும் அதே வேளையில் கிறிஸ்துவும் எனக்கு வேண்டும் என்பவர்கள் அவரை வாழ்வில் அனுபவிக்கமுடியாது; அடையவும் முடியாது. நமது பலவீனமான வாழ்க்கைமூலம்தான் நாம் அவரது பலத்தை உணரமுடியும்; அவரது அன்பை அனுபவிக்கமுடியும்.

மட்டுமல்ல, பலவிதங்களில் பலவீனமாய் இருந்து நாம் அறிந்து மகிழும் கிறிஸ்து அனுபவத்தை செழிப்பாக வாழ்பவர்களிடம் கூறும்போது அவர்களுக்கு அது புரியாது.  காரணம், அவர்கள் செழிப்புதான் தேவ ஆசீர்வாதம் என்று எண்ணிக்கொண்டு வாழ்பவர்கள். பத்துபேர்களை அடித்து வீழ்த்தக்கூடிய பலமுள்ள ஒருவன் சாதிப்பதைவிட பலமற்ற ஒருவன் பெரிதாகச்  சாதிப்பது அனைவராலும் பாராட்டப்படுமல்லவா? 

அப்போஸ்தலரான பவுலிடம் தேவன் இதுகுறித்துப் பேசியதை அவர்,  "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்." (2 கொரிந்தியர் 12: 9) என்று கூறுகின்றார். 

மேலும், "அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." (2 கொரிந்தியர் 12: 10) என்கின்றார். இது வெறுமனே வாசிக்க வேண்டிய வசனமல்ல, நாம் அனுபவிக்கவேண்டிய ஆவிக்குரிய வசனம். இந்த உலகில் ஏதாவது ஒன்றில் குறைவுள்ளவர்களாக இருப்பீர்களென்றால் கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சிகொள்ளுங்கள். கிறிஸ்து உங்களோடு இருப்பார். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1874

🔆 2026 மார்ச் 26, வியாழன்                

"நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்." (1 யோவான்  2 : 25, 26)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அளித்த முக்கியமான வாக்குறுதி நித்திய ஜீவன் எனும் நிலைவாழ்வைப்பற்றியது. இந்த உலகம் நிலையற்றது, நமது உறவுகள், சொந்தங்கள், பெயர், புகழ், அதிகாரம் பணம் என அனைத்தும், நமது உலக வாழ்வும்  நிலையற்றவைகள். ஆனால், நமது ஆன்மா நிலையானது. அது வாழ்வுபெறவேண்டும். முடிவில்லாத காலமாக நமது ஆன்மா வாழ்ந்திருக்கவேண்டுமானால் நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு அவர் அளிக்கும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இல்லையானால் முடிவில்லா காலமும் அது நரக அக்கினிக்குள் நிம்மதியின்றித் தவிக்கவேண்டியதிருக்கும்.  

ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவ போதகர்கள் இதனைப்பற்றி போதிப்பதில்லை. இயேசு கிறிஸ்துவை உலக ஆசீர்வாதத்துக்கான ஒருவராகவே அவர்கள் போதிக்கின்றனர்.  இப்படிப் போதிப்பவர்கள் வஞ்சகர்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இதனையே, "உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்" என்று யோவான் குறிப்பிடுகின்றார்.

"இறத்தல்" என்பதனை கிறிஸ்தவம் பொதுவாக ஆத்தும அழிவோடு ஒப்பிட்டுக் கூறுகின்றது. நமது ஆத்துமா நரகப் படுகுழிக்குள் செல்வதே கிறிஸ்தவம் கூறும் மரணம்.  அதுபோல இந்த ஆத்தும மரணத்துக்குத் தப்பித்து வாழ்தலே நித்திய ஜீவனை அடைந்துகொள்வது; அல்லது மரணத்தை வெல்லுதல். இதனை இயேசு கிறிஸ்து உயிருடன் உலகினில் வாழும்போதே பலமுறை எடுத்துக்கூறினார். லாசருவின் சகோதரி மார்த்தாளோடு பேசும்போது "இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்." ( யோவான் 11: 25, 26)

யூதர்களுக்கும் அவர் இதனை எடுத்துச் சொன்னார். "ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( யோவான் 8: 51) ஆனால் யூதர்களுக்கு இயேசு கூறிய ஆவிக்குரிய சத்தியம் புரியவில்லை. அவர்கள் வெறும் உலக கண்ணோட்டத்துடன் மரணத்தைப் பார்த்தனர். 

"அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசுபிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய்." ( யோவான் 8: 52) என்றார்கள். 

இன்றும் பலரும் இந்த யூதர்களின் மனநிலையில்தான் இருக்கின்றனர். எனவே, இயேசு கிறிஸ்துவால் அற்புதங்களை செய்யமுடியும், தங்கள் நோய்களைக் குணமாக்கமுடியும், தங்களுக்கு உலக ஆசீர்வாதங்களைக் கொடுக்கமுடியும் என்று நம்பினாலும் அவர்களிடம் நாம் நித்தியஜீவனைப்பற்றி பேசும்போது ஏற்றுக்கொள்வதில்லை. அல்லது, அதுபற்றிய அக்கறையில்லாதவர்களாக இருக்கின்றனர். 

அன்பானவர்களே, வேதாகமம் இயேசுவின் அற்புதங்களை நாம் அறிந்து அவைகளைப் பெறவேண்டும் என்பதற்காக எழுதப்படவில்லை. மாறாக, அவரை நாம் விசுவாசித்து அவர்மூலம் நித்திய ஜீவனைப் பெறவேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டுள்ளது. ஆம், "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன." ( யோவான் 20: 31) என்று வாசிக்கின்றோம். 

அற்பகால உலக ஆசீர்வாதமும் ஆத்தும மரணமுமா? நித்தியத்துக்கும் ஆத்துமா அழிவில்லாமல் தேவனோடு ஐக்கியமாக வாழும் நித்திய ஜீவனா? இந்த இரு வழிகளையும் தேவன் நம்முன் வைத்துள்ளார். தேர்வுசெய்யவேண்டியது நாம்தான். 


"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1875

🔆 2026 மார்ச் 27, வெள்ளி                 

"உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல." ( மல்கியா 1: 10)

இஸ்ரவேலின் ஆசாரியர்கள் தேவனுக்கென்று பணிவிடை செய்தாலும் அதனை அவர்கள் மனப்பூர்வமாகச் செய்யவில்லை. ஆலயப்பணிகளை அவர்கள் ஒரு தொழிலாகச் செய்து வந்தனர். கோவிலைப் பராமரிப்பதற்கும், கோவிலில் பலி செலுத்துவதற்கும்  அவர்கள் மக்களிடம் பணம் பெற்று வந்தனர்.   

ஆனால் தேவன் அவர்களுக்கு அப்படிக் கட்டளையிடவில்லை. மாறாக, இஸ்ரவேலர் கர்த்தருக்கு அளிக்கும் காணிக்கைகளில் அவர்கள் தங்களுக்கான பங்கை எடுத்துக்கொள்ளலாம் என்றுதான் கூறியிருந்தார்.  "அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்." ( எண்ணாகமம் 18: 31) என்று கூறியிருந்தார். 

மட்டுமல்ல, மற்ற கோத்திரங்களுக்குக் கொடுத்ததுபோல லேவியருக்கென்றுத்  தனி பங்கினைத் தேவன் கொடுக்காமல் தசமபாகத்தை லேவியருக்கென்று நியமித்திருந்தார். இதனை நாம், "இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்." ( எண்ணாகமம் 18: 24) என்று வாசிக்கின்றோம். 

ஆனால் இதனைமீறி லேவியர்கள் கோவில் கதவுகளைத் திறந்து மூடுவதற்கும் யாராவது பலி செலுத்தவரும்போது பலிபீடத்தில் நெருப்பைப் பற்றவைத்து அந்தப் பலிப்பொருட்களை தகனிப்பதற்கும் பணம் வாங்கினர்.  இதனையே இன்றைய தியான வசனத்தில், "உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள்" என்று தேவன் கூறுகின்றார். 

சுருக்கமாகச் சொல்வதானால், தேவனுக்கான பணிவிடையினை அவர்கள் வருவாய் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாக மாற்றிவிட்டனர். எனவே, "உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல" என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, நாம் தேவனுக்கென்று எதனைச் செய்தாலும் அதன்மூலம் நமக்கு வருமானம் வருமா என்று எதிர்பார்ப்பதை தேவன் விரும்பவில்லை. தேவன்மேலுள்ள உண்மையான அன்புடன் செய்வதையே தேவன் விரும்புகின்றார். எனவேதான் அப்போஸ்தலரான பவுலும், "உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது." (1 கொரிந்தியர் 16: 14) என்று நமக்கு அறிவுறுத்துகின்றார்.  

இன்று ஆலயங்களுக்குகென்று நாம் செய்யும் காரியங்களை எந்த மனநிலையுடன் செய்கின்றோம் என்று எண்ணிப்பார்ப்போம்.  பணத்துக்காக நாம் செய்யாவிட்டாலும் புகழுக்காக, மற்றவர்களிடம் நல்மதிப்பைப் பெறவேண்டும் என்பதற்காக நாம் இப்படிச் செய்தாலும் நாமும் இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடப்படும் லேவியர்களைப் போன்றவர்களே. 

பணம், பெயர், புகழ் இவற்றுக்காக நாம் தேவனுக்கென்று  எதனைச் செய்தாலும் தேவன் அவற்றை அங்கீகரிப்பதில்லை. இதனையே இன்றைய தியான வசனம் மூலம்  உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.  மெய்யான தேவ அன்புடன் தேவனுக்கென்று நாம்  செயல்படும்போது மட்டுமே தேவன் நமது செயல்களை அங்கீகரிப்பார். 


"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1876

🔆 2026 மார்ச் 28, சனி                  

"சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும்." ( யோவான் 3: 14, 15)

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துச் சிலுவையில் உயர்த்தப்படவேண்டும் என்பதுதான் இன்றைய தியான வசனம் கூறும் உண்மை. இதுவே பிதாவாகிய தேவனின் முன்குறித்தலாகும். இதனையே பழைய ஏற்பாட்டுச் சம்பவம் மூலம் நமக்கு எடுத்துக்காட்டி விளக்குகின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.  

இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் பயணம் செய்தபோது தேவனுக்கும் மோசேக்கும் எதிராக முறுமுறுத்து தேவ சித்தத்துக்கு எதிராக நின்றனர். எனவே தேவன் தண்டனையாக கொள்ளிவாய்ச்  சர்ப்பங்களை அவர்களுக்குள் அனுப்பினார். அதனால் கடிபட்டு பலர் இறந்தனர். அப்போது இஸ்ரவேலர் மோசேயிடம் வந்து, "நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம், எனவே எங்களுக்காக தேவனிடம் மன்றாடும்" என்றனர். மோசே அப்படியே  தேவனிடம் ஜெபித்தார். 

"அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார்." ( எண்ணாகமம் 21: 8) அப்படியே மோசே பாம்பு உருவினைச் செய்து வைத்தபோது பாம்பால் கடிபட்ட இஸ்ரவேலர் அதனைப்பார்த்து குணமானார்கள். 

பழைய ஏற்பாட்டுச் சம்பவங்கள் புதிய ஏற்பாட்டுக்கால சம்பவங்களுக்கு நிழலாக (image) இருக்கின்றன. அவை நாம் அப்படியே பின்பற்றவேண்டியவை அல்ல. "இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால்........." ( எபிரெயர் 10: 1) என நாம் வாசிக்கின்றோம்.

தேவன் மோசேயிடம் கூறியதை எடுத்துக்கூறி நாம் சிலைவணக்கத்தை நியாயப்படுத்தமுடியாது. காரணம் தேவன் ஏற்கெனவே மோசேயிடம் கொடுத்தப் பத்துக்கட்டளையின் முதல் கட்டளையே,  "மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;" ( யாத்திராகமம் 20: 4) என்பதுகான். தேவன் தான் கூறியதை மாற்றிமாற்றி பேசுபவரல்ல. அவர் சொன்னது சொன்னதுதான்.  

ஆம் அன்பானவர்களே, பாம்பினால் கடிபட்டவர்கள்  மோசே கம்பத்தில் தூக்கிய வெண்கல பாம்பு உருவினைப்பார்த்து குணமானதுபோல பாவத்தின் பிடியால் சாகும் தறுவாயில் இருப்பவர்கள் சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்து மீட்பு அடைய முடியும். இதுவே வேதாகமம் கூறும் உண்மை. 

மோசே உருவாக்கிய பாம்பு உருவத்தை தேவன் வணங்கச் சொல்லவில்லை. ஆனால் இஸ்ரவேலர் அதனை வணங்க ஆரம்பித்தனர். அதற்குத் தூபம் காட்டிவந்தனர்.  எசேக்கியா ராஜா இதனைக் கண்டு கோபமடைந்து தகர்த்துப்போட்டார். "அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான்." (2 இராஜாக்கள் 18: 4) என்று வாசிக்கின்றோம். 

எசேக்கியா ராஜா செய்த இந்த நல்ல காரியத்துக்காக பிளவை நோயால் அவர் பாதிக்கப்பட்டு மரணத்துக்கு ஏதுவாக இருந்தபோது இதனையே தேவனிடம் எடுத்துக்கூறி, "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்." (2 இராஜாக்கள் 20: 3) என்று வாசிக்கின்றோம். 

எனவே, தேவன் அவரது வாழ்நாளை 15 ஆண்டுகள் நீட்டிக்கொடுத்தார். ஆம் அன்பானவர்களே, மோசே உயர்த்திய பாம்புச் சிலை இயேசு சிலுவையில் உயர்த்தப்பட்டதற்கு ஒரு முன்னடையாளம். அது சிலைவழிபாடை நியாயப்படுத்தக் கொடுக்கப்பட்ட சம்பவமல்ல. சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசு கிறிஸ்துவையே நோக்கிப்பார்த்து மீட்படைவோம். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1877

🔆 2026 மார்ச் 29, ஞாயிறு             

"சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்." ( சகரியா 9: 9)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மகிமையுடன் எருசலேம் நகருக்குள் நுழையும் நிகழ்வை கிறிஸ்து பிறப்பதற்குமுன் கிமு 520–518 காலகட்டத்தில் வாழ்ந்த சகரியா தீர்க்கதரிசி தரிசனமாக கூறுவதுதான் இன்றைய தியான வசனம். இந்தத் தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேறுதலாக, "இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்." ( யோவான் 12: 15)

திரளான மக்கள் "குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்." ( யோவான் 12: 13) இயேசு கிறிஸ்து கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா என வெளியரங்கமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிக்கையிடப்பட்ட நாள் இது. 

பொதுவாக இராஜாக்கள் குதிரைகள் மற்றும்  பல்லக்குகளில்தான் பயணம் செய்வார்கள். ஆனால், சமாதானத்தைக் குறிக்க அவர்கள் கழுதைகளில் பயணம் செய்வதுண்டு. ஒரு இராஜா கழுதையின்மேல் வருகின்றார் என்றால் அவர் சமாதானத்துடன் மக்களுடன் பேசுவதற்கு வருகின்றார் என்று பொருள். அவரைக்கண்டு பயப்படத் தேவையில்லை என்று பொருள்.

இயேசு கிறிஸ்து சமாதானத்தின் மன்னனாக பூமியில் வந்தார். ஆனால் மக்களும், ஆசாரியர்களும்,  அரசர்களும் அவரை மன்னனாக எண்ணவில்லை. காரணம் உலகத்திலுள்ள ஒரு அரசனுக்குரிய எந்த மேன்மையையும் அவர் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர் தன்னை ஒரு இராஜா என்று கூறத் தயங்கவில்லை.  "அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்." ( யோவான் 18: 37)

இன்றைய தியான வசனம், "அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்" என்று கூறுகின்றது. ஆம், இயேசு கிறிஸ்துவின் குணங்களை சகரியா தீர்க்கத்தரிசி அழகாக இன்றைய தியான வசனத்தில் எடுத்துக்கூறுகின்றார். 

ஆனால் இயேசு இப்படி எருசலேமுக்குள் நுழைவது திட்டமிட்டச் செயலல்ல. "இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்." (யோவான் 12: 16) என்று வாசிக்கின்றோம். அதாவது அவர்கள் திட்டமிட்டு இப்படிச் செய்யவில்லை; மாறாக, இயற்கையாகவே அவரைபற்றிக் கூறப்பட்டத் தீர்க்கதரிசனம் இப்படி நிறைவேறியது. 

இன்று நாம் கடமைக்காக குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு பவனிவந்தால் மட்டும் போதாது. அவர் மெய்யாகவே நம்மைத்தேடி வருகின்றார் என்பதனை உணர்ந்தவர்களாக இருக்கவேண்டியது அவசியம். இதனையே இன்றைய வசனத்தில்,  "சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.  ஆம், அவர் சீயோன் குமாரத்திகளாகிய நம்மிடம் வருகின்றார். 

சகரியாவின் தீர்க்கத்தரிசனம் கிறிஸ்துவின் காலத்துடன் முடிந்துவிடவில்லை. இன்றும் அது நம்மிடம் நிறைவேறுவதாக உள்ளது. இன்று முக்கிய பிரமுகர்களுக்கு சிகப்புக்கம்பள வரவேற்பு அளிப்பதுபோல மக்கள் தங்கள் ஆடைகளை வழியில் விரித்து இயேசு கிறிஸ்துவை வரவேற்றனர். அவரைச் சுமத்த கழுதை கம்பீரத்துடன் அதன்மேல் நடந்தது. ஆம், அவரைச் சுமந்ததால் அந்தக் கழுதைக்கும் மரியாதை கிடைத்தது. 

நாம் அவரை நமது உள்ளத்தில் சுமந்துகொள்ளும்போது பிதாவாகிய தேவன் நம்மை மகிமைப்படுத்துவார். மட்டுமல்ல, கிறிஸ்துவின் குணங்கள் நமக்குள் வந்துவிடும். அவர் நீதியுள்ளவராய் இருப்பதுபோல நாமும் நீதியுள்ளவர்களாக வாழ்வோம். அவர் இரட்சிக்கிறவர் ஆகையால் நாமும் இரட்சிக்கப்படுவோம். அவர் தாழ்மையுள்ளவராகையால் நாமும் தாழ்மையுள்ளவர்களாக மாறுவோம். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1878

🔆 2026 மார்ச் 30, திங்கள்              

"நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்." ( சங்கீதம் 23 : 4 )

பள்ளத்தாக்கு என்பது இருபுறமும் மலைகளோ உயரமான குன்றுகளோ இருக்கும் பகுதிகளுக்கு இடையேயுள்ள பள்ளமான பகுதியாகும்.  பொதுவாக அதிகமான தண்ணீர் கிடைப்பதால் பள்ளத்தாக்குகள் செழிப்பான பகுதிகளாக இருக்கும். ஆனால் இங்கு ஆபத்துக்களும் அதிகமாக இருக்கும். 

கொடிய விலங்குகள், விஷமுள்ள பாம்புபோன்றவை,  சீக்கிரமே சூழ்ந்துகொள்ளும் இருள், இவைதவிர திருடர்கள் பயம் இவை பள்ளத்தாக்குப் பகுதிகளின் குறிப்பிடத்தக்க பெரிய இடர்பாடுகளாகும்.  தாவீது சிறு வயதில் ஆடுமேய்த்துக்கொண்டு இப்படிப்பட்டப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அலைந்த தனது அனுபவத்தால் கூறுகின்றார்,  "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்" என்று. 

ஆம் அன்பானவர்களே, நமது வாழ்க்கையிலும் நாம்  இதுபோன்ற பள்ளத்தாக்குப் பகுதிகளைக் கடக்கவேண்டியதிருக்கும். நமக்கு எதிராகச் சிலர் செய்யும் செயல்பாடுகள், கொடிய பாம்பு போன்று அச்சுறுத்தும் நோய்நொடிகள், நமக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, அரசாங்கத் சலுகைகள் போன்றவை நமக்குக்   கிடைக்காமல் அநியாயமாகப் பிறரால் திருடப்படுத்தல் போன்ற  கொடுமைகளை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், "இவற்றுக்கு நான் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" என்று தாவீதைபோலக் கூறப் பழகுவோம். 

உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் எனத் தாவீது கூறுவதற்குத்   தாவீதுக்குத் தேவன் கோலாகவும் கைத்தடியாகவும் இருந்த  அனுபவத்தால்தான். அந்த தேவ பலத்தால் தாவீது கோலியாத்தைக் கொல்வதற்குமுன் ஒரு சிங்கத்தையும் கரடியையும் கொன்றார். 

இதனை நாம் "தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு விசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன்." ( 1 சாமுவேல் 17 : 34, 35 ) என்று கூறுவதால் அறியலாம். 

இந்த முன்னனுபவமே தாவீதுக்கு கோலியாத்தைக் கொல்வதற்கான மனதைரியத்தைக் கொடுத்தது. ஆம் அன்பானவர்களே, நாமும் தேவனை நம்மோடு இருப்பவராக கண்டுகொள்வோமானால் எந்த இடையூறுக்கும் பயப்படமாட்டோம். நமது வாழ்க்கை பள்ளத்தாக்கின் வழியாகவே இருந்தாலும் தேவன் நம்மோடு இருக்கின்றார் எனும் பலம் நம்மை வெற்றி வாழ்க்கை வாழச்செய்யும். இந்த அனுபவதால்தான் அப்போஸ்தலரான பவுல், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." ( பிலிப்பியர் 4 : 13 ) என்கின்றார். 

தேவன் நம்மோடு இருக்கும் உடனிருப்பை உறுதிப்படுத்திக் கொண்டவர்களாக வாழ்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳
📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1879

🔆 2026 மார்ச் 31, செவ்வாய்            

"அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி,  நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்" (யோவான் 4:28,29)

தேவனை வாழ்வில் நாம் அறிந்துகொள்ளவேண்டுமானால் நம்மிடம் திறந்த மனம் இருக்கவேண்டியது அவசியம்; நமது பாவங்களையும் மீறுதல்களையும்   ஏற்றுக்கொள்ளும் மனநிலை நமக்கு அவசியம். இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் சமாரிய பெண்மணி கூறும் கூற்றின் மூலம் உணர்ந்துகொள்கின்றோம். 

பொதுவாக நாம் நம்மைக்குறித்துப் பிறர் பெருமையாகப் பேசுவதை இரசிப்போம்; அதனைக்குறித்து மற்றவர்களிடமும் பெருமையாக எடுத்துக் கூறுவோம். ஆனால் நம்மை யாராவது குறிகூறினாலோ நமது தவறை எடுத்துச்சொன்னாலோ அதனை பெருமையாக மற்றவர்களிடம் கூறமாட்டோம். ஆனால் இங்கு இந்தச் சமாரிய பெண் இயேசு அவளது வாழ்க்கை முறைகேடுகளை எடுத்துச் சொன்னதை பெருமையாகக் கூறுகின்றாள். "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்" என்று எடுத்துக்கூறி மற்றவர்களை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்து வருகின்றாள்.  

இயேசு கிறிஸ்து அப்படி அவளைக்குறித்துக் கூறியவைதான் என்ன? இயேசு அவளிடம் பேசியபோது தான் அளிக்கும் ஜீவத் தண்ணீரைக்குறித்துக் கூறினார். அவள் அவரிடம் ஆண்டவரே அந்தத் தண்ணீரை எனக்குத் தாரும் என்று கேட்டாள். "இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார். அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். (யோவான் 4:16 - 18)

அவளுக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள், இப்போது ஆறாவதாக அவளோடு வாழ்பவனும் அவளது கணவனல்ல. அதாவது, அவளது வாழ்க்கை ஒழுக்கமற்ற வாழ்க்கை. இதனைத்தான் இயேசு கிறிஸ்து கூறினார். ஆனால் இந்தப் பெண்ணோ, "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்" என்று கூறி மற்றவர்களை அழைத்து வருகின்றாள்.  பொதுவாக நம்மைக்குறித்து நமக்கு நேராக யாராவது இப்படி நமது குற்றத்தை எடுத்துக்கூறினால் நாம் கோபப்படுவோம், அல்லது அவரிடம் பேசுவதைத் தவிர்த்து அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுவோம். 

அனால் இவள் மற்றவர்களை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்து வருகின்றாள். "நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்." ( யோவான் 4 : 39 ) என்று வாசிக்கின்றோம். மட்டுமல்ல, அவர்கள் இயேசு கிறிஸ்துவை தங்கள் ஊரில் தங்கவேண்டுமென்று அழைக்கின்றனர். அவரும் அங்கு இரண்டு நாட்கள் தங்கினார்.

அப்போது அவர்கள், "அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்." ( யோவான் 4 : 42 )

நமது பாவ வாழ்க்கையினை யாராவது ஒரு தேவ ஊழியர் நமக்கு எடுத்துக் கூறினால் நாம் இப்படிச் செய்வோமா? நான் ஆரம்பத்தில் ஆராதனைக்குச் சென்ற இந்தியன் பெந்தேகோஸ்தே சபை மூத்த போதகர் ஜான்சன் டேவிட் அவர்கள் இப்படிப் பலரிடம்  கூறுவார். அவர் மக்களது தவறுகளையும் பாவ வாழ்கையினையும் பொதுமக்கள்முன் கூறாமல் சம்பத்தப்பட்ட மனிதர்களிடம் தனிப்பட்ட முறையில் தான் கூறுவார். ஆனாலும்  மனவேதனை அடைந்து பலர் அவரது சபைக்குச் செல்வதைத் தவிர்த்து விடுவதுண்டு. என்னைப்பற்றியும் என்னிடமும் அவர் பல குறைகளை பலமுறை  கூறியதுண்டு. இத்தகைய போதகர்கள் இன்று அரிதாகவே இருக்கின்றனர். 

ஆனால் இந்தப் பெண்ணைப்போல "நான் செய்த எல்லா பாவங்களையும்  ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்" என்ற மனநிலையுடன் நாம் ஆவிக்குரிய காரியங்களில் செயல்படுவோமானால் மட்டுமே நாம்  கிறிஸ்துவை அதிகமாக அறிந்துகொள்ள முடியும். அப்போதுதான் நமது பாவங்களை உணர்ந்து அவற்றை விட்டுவிடமுடியும்; தேவனது இரக்கத்தையும் மீட்ப்பினையும் பெற்றுக்கொள்ளமுடியும். ஆம்,  "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." ( நீதிமொழிகள் 28 : 13 )


🦋 Meditation verse - யோவான் 4:28,29 / John 4:28-29

 "விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1879

🔆 2026 மார்ச் 31, செவ்வாய்            


"அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி,  நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்" (யோவான் 4:28,29)

தேவனை வாழ்வில் நாம் அறிந்துகொள்ளவேண்டுமானால் நம்மிடம் திறந்த மனம் இருக்கவேண்டியது அவசியம்; நமது பாவங்களையும் மீறுதல்களையும்   ஏற்றுக்கொள்ளும் மனநிலை நமக்கு அவசியம். இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் சமாரிய பெண்மணி கூறும் கூற்றின் மூலம் உணர்ந்துகொள்கின்றோம். 

பொதுவாக நாம் நம்மைக்குறித்துப் பிறர் பெருமையாகப் பேசுவதை இரசிப்போம்; அதனைக்குறித்து மற்றவர்களிடமும் பெருமையாக எடுத்துக் கூறுவோம். ஆனால் நம்மை யாராவது குறிகூறினாலோ நமது தவறை எடுத்துச்சொன்னாலோ அதனை பெருமையாக மற்றவர்களிடம் கூறமாட்டோம். ஆனால் இங்கு இந்தச் சமாரிய பெண் இயேசு அவளது வாழ்க்கை முறைகேடுகளை எடுத்துச் சொன்னதை பெருமையாகக் கூறுகின்றாள். "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்" என்று எடுத்துக்கூறி மற்றவர்களை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்து வருகின்றாள்.  

இயேசு கிறிஸ்து அப்படி அவளைக்குறித்துக் கூறியவைதான் என்ன? இயேசு அவளிடம் பேசியபோது தான் அளிக்கும் ஜீவத் தண்ணீரைக்குறித்துக் கூறினார். அவள் அவரிடம் ஆண்டவரே அந்தத் தண்ணீரை எனக்குத் தாரும் என்று கேட்டாள். "இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார். அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். (யோவான் 4:16 - 18)

அவளுக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள், இப்போது ஆறாவதாக அவளோடு வாழ்பவனும் அவளது கணவனல்ல. அதாவது, அவளது வாழ்க்கை ஒழுக்கமற்ற வாழ்க்கை. இதனைத்தான் இயேசு கிறிஸ்து கூறினார். ஆனால் இந்தப் பெண்ணோ, "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்" என்று கூறி மற்றவர்களை அழைத்து வருகின்றாள்.  பொதுவாக நம்மைக்குறித்து நமக்கு நேராக யாராவது இப்படி நமது குற்றத்தை எடுத்துக்கூறினால் நாம் கோபப்படுவோம், அல்லது அவரிடம் பேசுவதைத் தவிர்த்து அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுவோம். 

அனால் இவள் மற்றவர்களை இயேசு கிறிஸ்துவிடம் அழைத்து வருகின்றாள். "நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்." ( யோவான் 4 : 39 ) என்று வாசிக்கின்றோம். மட்டுமல்ல, அவர்கள் இயேசு கிறிஸ்துவை தங்கள் ஊரில் தங்கவேண்டுமென்று அழைக்கின்றனர். அவரும் அங்கு இரண்டு நாட்கள் தங்கினார்.
( யோவான் 4 : 42 )

நமது பாவ வாழ்க்கையினை யாராவது ஒரு தேவ ஊழியர் நமக்கு எடுத்துக் கூறினால் நாம் இப்படிச் செய்வோமா? நான் ஆரம்பத்தில் ஆராதனைக்குச் சென்ற இந்தியன் பெந்தேகோஸ்தே சபை மூத்த போதகர் ஜான்சன் டேவிட் அவர்கள் இப்படிப் பலரிடம்  கூறுவார். அவர் மக்களது தவறுகளையும் பாவ வாழ்கையினையும் பொதுமக்கள்முன் கூறாமல் சம்பத்தப்பட்ட மனிதர்களிடம் தனிப்பட்ட முறையில் தான் கூறுவார். ஆனாலும்  மனவேதனை அடைந்து பலர் அவரது சபைக்குச் செல்வதைத் தவிர்த்து விடுவதுண்டு. என்னைப்பற்றியும் என்னிடமும் அவர் பல குறைகளை பலமுறை  கூறியதுண்டு. இத்தகைய போதகர்கள் இன்று அரிதாகவே இருக்கின்றனர். 

ஆனால் இந்தப் பெண்ணைப்போல "நான் செய்த எல்லா பாவங்களையும்  ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்" என்ற மனநிலையுடன் நாம் ஆவிக்குரிய காரியங்களில் செயல்படுவோமானால் மட்டுமே நாம்  கிறிஸ்துவை அதிகமாக அறிந்துகொள்ள முடியும். அப்போதுதான் நமது பாவங்களை உணர்ந்து அவற்றை விட்டுவிடமுடியும்; தேவனது இரக்கத்தையும் மீட்ப்பினையும் பெற்றுக்கொள்ளமுடியும். ஆம்,  "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்." ( நீதிமொழிகள் 28 : 13 )

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்

"Inside the Seeds" 🌳

📖 AATHAVAN Biblical Meditation – No. 1879       

🔆 Tuesday, March 31, 2026

"So, the woman left her water jar, and went into the city and said to the men, 'Come, see a man who told me all the things that I have done; this is not the Christ, is it?'" (John 4:28-29)

If we are to know God in our lives, it is essential to have an open heart; a mindset that accepts our sins and transgressions is necessary. We realize this through the statement of the Samaritan woman in today’s meditation verse.

Generally, we enjoy it when others speak highly of us, and we proudly share those compliments with others. However, if someone points out our faults or highlights our mistakes, we do not proudly share that with anyone. But here, this Samaritan woman speaks with conviction about how Jesus pointed out the irregularities in her lifestyle. She brings others to Jesus Christ by saying, "Come, see a man who told me all the things that I have done."

What exactly did Jesus Christ say about her? When Jesus spoke to her, He spoke about the Living Water He provides. She asked Him, "Sir, give me this water."

"He said to her, 'Go, call your husband and come here.' The woman answered and said, 'I have no husband.' Jesus said to her, 'You have correctly said, "I have no husband"; for you have had five husbands, and the one whom you now have is not your husband; this which you have said is true.'" (John 4:16-18)

She had five husbands, and the sixth person she was living with was not her husband. In other words, her life was an immoral one. This is what Jesus Christ pointed out. Yet, this woman invites others, saying, "Come, see a man who told me all the things that I have done." Normally, if someone points out our faults directly to us like this, we would get angry or avoid speaking to them and leave the place.

But she leads others to Jesus Christ. We read in John 4:39: "From that city many of the Samaritans believed in Him because of the word of the woman who testified, 'He told me all the things that I have done.'" Not only that, they invited Jesus Christ to stay in their town, and He stayed there for two days (John 4:40).

Would we react this way if a servant of God pointed out our sinful life? The senior pastor of the Indian Pentecostal Church where I first attended, Pastor Johnson David, would speak like this to many. He would not mention people's mistakes and sinful lives in public but would address the concerned individuals privately. Nevertheless, many would feel hurt and avoid going to his church. He has also pointed out many of my own faults to me several times. Such pastors are rare today.

However, only if we function in spiritual matters with a mindset like this woman—"Come, see a man who told me all the sins I have committed"—can we know Christ more deeply. Only then can we realize our sins and forsake them; only then can we receive God’s mercy and redemption. Indeed, "He who conceals his transgressions will not prosper, but he who confesses and forsakes them will find compassion." (Proverbs 28:13)

Message by: Bro. M. Geo Prakash                                                                        

🦋 Meditation verse - சங்கீதம் 23 : 4 / Psalm 23:4

 "விதைகளின் உள்ளே" 🌳

📖 ஆதவன் வேதாகமத் தியானம் - எண் 1878

🔆 2026 மார்ச் 30, திங்கள்              


"நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்." ( சங்கீதம் 23 : 4 )

பள்ளத்தாக்கு என்பது இருபுறமும் மலைகளோ உயரமான குன்றுகளோ இருக்கும் பகுதிகளுக்கு இடையேயுள்ள பள்ளமான பகுதியாகும்.  பொதுவாக அதிகமான தண்ணீர் கிடைப்பதால் பள்ளத்தாக்குகள் செழிப்பான பகுதிகளாக இருக்கும். ஆனால் இங்கு ஆபத்துக்களும் அதிகமாக இருக்கும். 

கொடிய விலங்குகள், விஷமுள்ள பாம்புபோன்றவை,  சீக்கிரமே சூழ்ந்துகொள்ளும் இருள், இவைதவிர திருடர்கள் பயம் இவை பள்ளத்தாக்குப் பகுதிகளின் குறிப்பிடத்தக்க பெரிய இடர்பாடுகளாகும்.  தாவீது சிறு வயதில் ஆடுமேய்த்துக்கொண்டு இப்படிப்பட்டப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் அலைந்த தனது அனுபவத்தால் கூறுகின்றார்,  "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்" என்று. 

ஆம் அன்பானவர்களே, நமது வாழ்க்கையிலும் நாம்  இதுபோன்ற பள்ளத்தாக்குப் பகுதிகளைக் கடக்கவேண்டியதிருக்கும். நமக்கு எதிராகச் சிலர் செய்யும் செயல்பாடுகள், கொடிய பாம்பு போன்று அச்சுறுத்தும் நோய்நொடிகள், நமக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, அரசாங்கத் சலுகைகள் போன்றவை நமக்குக்   கிடைக்காமல் அநியாயமாகப் பிறரால் திருடப்படுத்தல் போன்ற  கொடுமைகளை நாம் அனுபவித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், "இவற்றுக்கு நான் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" என்று தாவீதைபோலக் கூறப் பழகுவோம். 

உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் எனத் தாவீது கூறுவதற்குத்   தாவீதுக்குத் தேவன் கோலாகவும் கைத்தடியாகவும் இருந்த  அனுபவத்தால்தான். அந்த தேவ பலத்தால் தாவீது கோலியாத்தைக் கொல்வதற்குமுன் ஒரு சிங்கத்தையும் கரடியையும் கொன்றார். 

இதனை நாம் "தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு விசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன்." ( 1 சாமுவேல் 17 : 34, 35 ) என்று கூறுவதால் அறியலாம்.

இந்த முன்னனுபவமே தாவீதுக்கு கோலியாத்தைக் கொல்வதற்கான மனதைரியத்தைக் கொடுத்தது. ஆம் அன்பானவர்களே, நாமும் தேவனை நம்மோடு இருப்பவராக கண்டுகொள்வோமானால் எந்த இடையூறுக்கும் பயப்படமாட்டோம். நமது வாழ்க்கை பள்ளத்தாக்கின் வழியாகவே இருந்தாலும் தேவன் நம்மோடு இருக்கின்றார் எனும் பலம் நம்மை வெற்றி வாழ்க்கை வாழச்செய்யும். இந்த அனுபவதால்தான் அப்போஸ்தலரான பவுல், "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." ( பிலிப்பியர் 4 : 13 ) என்கின்றார். 

தேவன் நம்மோடு இருக்கும் உடனிருப்பை உறுதிப்படுத்திக் கொண்டவர்களாக வாழ்வோம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்

"Inside the Seeds" 🌳

📖 AATHAVAN Bible Meditation – No. 1878                        

 🔆 Monday, March 30, 2026

"Even though I walk through the valley of the shadow of death, I fear no evil, for You are with me; Your rod and Your staff, they comfort me." (Psalm 23:4)

A valley is a low-lying area situated between mountains or high hills. Generally, valleys are fertile regions because of the abundance of water. However, they are also areas where dangers are prevalent.

The significant hardships of valley regions include wild beasts, venomous snakes, darkness that settles quickly, and the fear of thieves. David, drawing from his childhood experience of wandering through such valleys while shepherding sheep, declares: "Even though I walk through the valley of the shadow of death, I fear no evil."

Yes, dear ones, in our lives too, we may have to pass through similar "valley" phases. We might be enduring atrocities such as the schemes of people working against us, diseases that threaten us like venomous snakes, or the injustice of having our rightful job opportunities, promotions, and government benefits stolen by others. But let us practice saying, like David: "I fear no evil; for You are with me; Your rod and Your staff, they comfort me."

David spoke of God’s rod and staff comforting him because he had personally experienced God being his strength and support. By that divine strength, David killed a lion and a bear even before he slew Goliath.

We know this from his words: "But David said to Saul, 'Your servant was tending his father’s sheep. When a lion or a bear came and took a lamb from the flock, I went out after him and attacked him, and rescued it from his mouth; and when he rose up against me, I seized him by his beard and struck him and killed him.'" (1 Samuel 17:34-35)

This prior experience gave David the mental courage to defeat Goliath. Yes, dear ones, if we recognize God as the one who is with us, we will not fear any obstacle. Even if our life’s journey goes through a valley, the strength of knowing God is with us will enable us to live a life of victory. It is because of this experience that the Apostle Paul says: "I can do all things through Him who strengthens me." (Philippians 4:13)

Let us live as those who are assured of God’s constant presence with us.

Message by: Bro. M. Geo Prakash                                                                        

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ரோமர் 6 : 7 / Romans 6:7

  " ஆதவன் " தியானம் - 1951 2026 ஜூன் 11,   வியாழன்        "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே." ...