DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Saturday, November 29, 2025

🏫 வேதாகமத் தியானம் - நவம்பர் 2025

 "விதைகளின் உள்ளே" 🌳  

வேதாகமத் தியானம் எண் - 1729                                                                 ஆதவன் 01.11.2025 சனி        

"அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார்". (யோவான் 6:27)

இந்த உலகத்தில் நாம் உழைப்பது நமது தேவைகளைச் சந்திக்கவும் நமது பிள்ளைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டும்தான். நாம் இப்படி உழைத்து வாழவே தேவன் விரும்புகின்றார். சோம்பி இருப்பதை அவர் வெறுக்கின்றார். "ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே." ( 2 தெசலோனிக்கேயர் 3 : 10 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

ஆனால், நாம் இப்படி உலகத் தேவைகளுக்காக மட்டுமே உழைத்துக் கொண்டிருப்பதையும் தேவன் விரும்பவில்லை. இந்த உலக வாழ்க்கைக்குப்பின் நித்திய ஜீவன் எனும் முடிவில்லாத வாழ்வு ஒன்று உண்டு. உலகத் தேவைகளுக்காக நாம் சேமித்து வைப்பதுபோல நித்திய ஜீவனுக்காகவும் இந்த உலக வாழ்வின்போதே சொத்து சேர்க்கவேண்டியது அவசியம். அதனையே இன்றைய தியான வசனத்தில், "நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்" என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

நித்திய ஜீவனுக்கான போஜனமே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவரது வார்த்தைகளே மெய்யான உணவு.  அந்த உணவினை நாம் நமது இருதயத்தில் சேகரித்துவைத்துப் பயன்படுத்த முயலும்போது நாம் நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காக கிரியை நடப்பிக்க முடியும். எனவேதான், "ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" ( யோவான் 8 : 51 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்தை  நாம் சேகரிக்க அவரை விசுவாசிக்கவேண்டியதே வழி. ஆம், "அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது. " (யோவான் 6:29) என்றார் இயேசு. வார்த்தையான இயேசு எப்படி என்றென்றும் நிலைத்திருக்கின்றாரோ அதுபோலவே அவரது வசனங்களும் நிலைத்திருக்கும். "கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிற வசனம் இதுவே.' ( 1 பேதுரு 1 : 25 ) என்று பேதுரு நமக்கு அறிவுறுத்துகின்றார்.  

எனவே அன்பானவர்களே, நாம் அழிந்துபோகக்கூடிய உலகத் தேவைகளுக்காக மட்டுமல்ல, அழியாத நித்திய ஜீவனை அளிக்கக்கூடிய உணவையும் சேகரிக்க முயலவேண்டியது அவசியம். நாம் அழிவில்லாத அந்த தேவ வார்த்தையால்தான் மறுபடி பிறக்கும் அனுபவத்தைப் பெறுகின்றோம். அந்த அனுபவமே நம்மை நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றும். எனவேதான், "அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே." ( 1 பேதுரு 1 : 23 ) என்று நம்மை அறிவுறுத்தி அந்த அழிவில்லாத வார்த்தையாகிய உணவைச் சேகரிக்க நம்மை அறிவுறுத்துகின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

இறுதியாக, இன்றைய தியான வசனம், "அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார்" என்று கூறுகின்றது. ஆம் அன்பானவர்களே, பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவை உலகினில் அனுப்பிய நோக்கமே இதுதான். எனவே இப்படி நாம் வார்த்தையான கிறிஸ்துவின் மேல் விசுவாசம்கொள்ளும்போது பிதாவாகிய தேவனது சித்தத்துக்குக் கீழ்ப்படிக்கின்றோம்; நித்திய ஜீவனுக்குத் தகுதியாகின்றோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1730                                                                 ஆதவன் 02.11.2025 ஞாயிறு         

"நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சைச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சைச்செடியின் ஆகாதகொடியாய்  மாறிப்போனது என்ன?" ( எரேமியா 2 : 21 )

நாம் நம்பிக்கையில்தான் பல காரியங்களைச் செய்கின்றோம். நமது வீட்டில் ஒரு மாமரத்தையோ தென்னை மரத்தையோ நட்டுப் பராமரிக்கின்றோமென்றால் அதற்குக் காரணம், அவை வளர்ந்து நமக்கு நல்ல பலனைத்தரும் எனும் எதிர்பார்ப்பில்தான். அதுபோலவே, தேவன் இஸ்ரவேல் மக்களை ஒரு எதிர்பார்ப்போடு எகிப்திலிருந்து கொண்டுவந்து கானான் நாட்டுக்குள் நுழையச்செய்தார். இதனை நாம், "நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர். அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது." ( சங்கீதம் 80 : 8, 9 ) என்று வாசிக்கின்றோம்.

இஸ்ரவேல் மக்களைத்தான் திராட்சைச்செடி என்று வேதம் கூறுகின்றது. "சேனைகளின் கர்த்தருடைய திராட்சைத்தோட்டம்  இஸ்ரவேலரின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே" (ஏசாயா 5:7) என்று கூறப்பட்டுள்ளது.  

இப்படி தேவன் கொண்டுவந்த திராட்சைச்செடி அவரை ஏமாற்றிவிட்டது; அது அவர் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இதனை, "இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சைத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சைத்தோட்டம் உண்டு. அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சைச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சைப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது." ( ஏசாயா 5 : 1,2 ) என்று கூறுகின்றார் ஏசாயா. 

தோட்டத்தை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, பராமரித்து பாதுகாத்து வந்தபின்னரும் அது நல்ல கனிகளைக் கொடுக்கவில்லை. காரணம், அது தோட்டக்காரனின் எதிர்பார்ப்பின்படி இல்லாமல் காட்டுச்செடியின் குணத்தை தன்னுள்ளே கொண்டிருந்து  காட்டுத்திராட்சையாய் மாறிப்போனது. 

ஆம் அன்பானவர்களே, இன்று நாம்தான் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். நம்மை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவ அடிமைத்தனமாகிய எகிப்திலிருந்து மீட்டு பரம கானானை நோக்கி நடத்த விரும்புகின்றார். அவரது எதிர்பார்ப்புக்கு எதிராக நாம் காட்டுத் திராட்சையாக மாறிவிடக்கூடாது. அதற்கு நாம் அவரோடு இணைந்திருக்கவேண்டியது அவசியம். "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? 

"நீ எனக்குக் காட்டுத்திராட்சைச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?" என்று அவர் நம்மைப்பார்த்துக் கேள்விகேட்க நாம் அனுமதிக்கக்கூடாது. மாறாக, அவரோடு இணைந்திருந்து ஏற்ற கனிகொடுப்பவர்களாக மாறவேண்டியது அவசியம். அப்போது நம்மூலம் பிதாவாகிய தேவன் மகிமைப்படுவார்; நாம் அவருக்கும் சீடர்களாக இருப்போம். "நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்." ( யோவான் 15 : 8 ) என்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1731                                                                 ஆதவன் 03.11.2025 திங்கள்          

என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ( சங்கீதம் 144 : 1 )

இந்த உலகத்தில் நாம் ஒரு போராட்ட வாழ்க்கையே வாழவேண்டியுள்ளது. உலக காரியத்திலும் ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நமக்குப் போராட்டம் உண்டு. அப்போஸ்தலராகிய பவுல் இதனையே, "ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப்   போராட்டம்    உண்டு." (எபேசியர் 6:12) என்று கூறுகின்றார். 

இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றிபெறுவதற்கு நமக்குத் தேவனது பலம் அவசியமாய் இருக்கின்றது. அதற்கான பல்வேறு போராட்டக் கருவிகளை தேவன் நமக்குத் தந்துள்ளார். "ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்."  (எபேசியர் 6:13) என அறிவுறுத்துகின்றார் அப்போஸ்தலரான பவுல். இதுகுறித்து, எபேசியர் 6:14 - 17 வரையிலான வசனங்களை வாசித்துத் தெளிவடைக.  

தேவனோடு நாம் ஐக்கியமுள்ளவர்களாக இருப்போமானால் இன்றைய தியான வசனத்தில் தாவீது கூறுவதுபோல தேவனது இந்த சர்வாயுதங்களை எடுத்துக்கொண்டு போரிட நமது கைகளையும்  விரல்களையும்  யுத்தத்திற்கு அவர் பயிற்றுவிப்பார். அதாவது, இந்தப் போராட்டங்களில் நாம் வெற்றிபெறுவதற்கு நமக்கு உதவுவார்.  

தேவன் ஏன் எனக்குப் போராட்டத்துக்கான பயிற்சியைத் தருகிறார் என்றால், "அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்." ( சங்கீதம் 144 : 2 ) என்கிறார் தாவீது. இந்த வசனத்தில் தாவீது, தேவனுக்குப் பல்வேறு அடைமொழிகளைக்கொடுத்து மகிழுகின்றார். தேவன் இப்படிப்பட்ட குணங்களுள்ளவராக இருப்பதால் அவர் எனது கைகளுக்குப் போரிடும் பயிற்சியை அளிக்கின்றார் என்று கூறுகின்றார். 

ஆனால், கிறிஸ்தவ மக்களாகிய நமது இந்தப் போராட்டம் மற்ற மக்கள் போராடுவதுபோன்ற போராட்டமல்ல. இது தேவ கிருபையினைச் சார்ந்துகொண்டு  போராடும் போராட்டம். இன்றைய புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நாம் தேவனது கிருபையினை முற்றிலும் சார்ந்துகொண்டு வாழவேண்டியது அவசியம். காரணம், உலகத்தின் எதிரிகளையும் ஆவிக்குரிய எதிரிகளையும் நம்மால்  நமது சுய முயற்சியால் வெற்றிகொள்ள முடியாது. எனவே, நமது சுய பலவீனத்தை தேவனிடம் அறிக்கையிட்டு அவரது கிருபையினை நாம் சார்ந்து கொள்ளும்போது மட்டுமே நாம் வெற்றிபெறமுடியும். 

"என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று  அப்போஸ்தலரான பவுலிடம் தேவன் கூறவில்லையா? "ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். " என்கிறார் பவுல். 

நாமும் நமது உலக வாழ்க்கையில் போராட்டங்கள் வரும்போது நமது பலவீனங்களை உணர்ந்து, தேவனது கிருபையினைச் சார்ந்துகொண்டு வாழ்வோமானால் தாவீதைப்போல நம்மாலும் "என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று கூறமுடியும். காரணம், தேவனது கிருபையின் கரம் நம்மோடு இருந்து நமக்கு வெற்றியைத் தரும். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1732                                                                 ஆதவன் 04.11.2025 செவ்வாய்           

"பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா? ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்களென்று பார்க்கிறோம்." ( எபிரெயர் 3 : 18, 19 )

நாம் தேவன் வாக்களித்துள்ள நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளவேண்டுமானால் தேவன்மேல் அசையாத விசுவாசமுள்ளவர்களாகவும் நமது விசுவாசத்தைச் செயல்கள்மூலம் காண்பிப்பவர்களாகவும்  இருக்கவேண்டியது அவசியம். வெறுமனே தேவனை ஆராதிப்பதாலும்,  தேவன் அளிக்கும் பல்வேறு நன்மைகளையும் பெற்றுக்கொள்வதாலும்,  அதிசயங்களைப் பெற்றுக்கொள்வதாலும் நாம் நித்திய ஜீவனுக்குத் தகுதியாவதில்லை.  இந்தச் சத்தியத்தை தேவன் இன்றைய தியான வசனம் மூலம் நாம் புரிந்துகொள்ள விரும்புகின்றார். 

எகிப்திலிருந்து மோசே விடுவித்து அழைத்துவந்த இஸ்ரவேலரின் எண்ணிக்கை, மோசே மேற்கொண்ட முதலாவது கணக்கெடுக்கின்படி 6,01,730 ( எண்ணாகமம் 1 : 46 ). இந்த எண்ணிக்கையில் 20 வயதுக்கு மேற்பட்டு போர்புரிய பலமுள்ள மனிதர்கள்வரை அடங்குவர்.  இந்த மக்கள்முன்னர்தான் மோசேயைக்கொண்டு தேவன் பல்வேறு அதிசயங்களைச் செய்தார். அந்த அற்புதங்களையும், தேவன் மோசேயோடு பேசியதையும் இவர்கள் கண்டிருந்தனர். 

பின்னர் மோசே தேவன் வாக்களித்த கானான் தேசத்தைச் சுற்றிப்பார்க்க இஸ்ரவேல் மக்களின் பிரதிநிதிகளை அனுப்பினார். அவர்கள் மோசே கூறியபடி கானானுக்குச் சென்று நாற்பதுநாள் சுற்றிபார்த்துத் திரும்பினார்கள். அவர்களில் எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் மட்டுமே மோசேயிடமும் இஸ்ரவேல் மக்களிடமும் நம்பிக்கையூட்டும் செய்தியைச் சொன்னார்கள். ஆனால் அவர்களோடு சென்று வந்த மற்றவர்கள், "அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்." ( எண்ணாகமம் 13 : 33 )

எனவே தேவன், "என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும், அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள்." ( எண்ணாகமம் 14 : 22, 23 ) என்று கோபத்தில் கூறினார். மேலும், "எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை."  ( எண்ணாகமம் 14 : 30 ) என்றார். 

அதுபோலவே, மோசே இரண்டாம் முறை மக்கள்தொகை கணக்கிட்டபோது  6,01,730 ( எண்ணாகமம் 26 : 51) மக்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் மோசேயின் முதலாம் கணக்கெடுப்பின்போது 20 வயதுக்குக் குறைவாக இருந்து அப்போது எண்ணப்படாதவர்கள் மற்றும் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள். இந்தக் கணக்கெடுப்பில் "முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை. வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச்சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை." ( எண்ணாகமம் 26 : 64-65 )

இதனையே இன்றைய தியான வசனத்தில் எபிரேய நிருப ஆசிரியர் நமக்கு நினைவூட்டுகின்றார். தேவனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாத இஸ்ரவேலின் அவிசுவாசிகள் எப்படி கானானுக்குள் நுழைய முடியவில்லையோ அதுபோலவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் பூரண விசுவாசமுள்ளவர்களாக இல்லாமல்; நமது விசுவாசத்தைச் செயல்களால் அறிக்கையிடாமல்  இஸ்ரவேலரைப்போல வெறுமனே ஆராதனையையும், அற்புத சாட்சிகளையும், அதிசயங்களையும் பார்த்துக்கொண்டும் அவைகளைத்தேடி ஓடிக்கொண்டுமிருப்போமானால் நாமும் நித்திய ஜீவனுக்குள் நுழைய முடியாதவர்களாக மாறிப்போவோம். 

அன்று தேவன்மேல் முழு விசுவாசம் கொண்டிருந்த "தேசத்தைச் சுற்றிப் பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் மாத்திரம் உயிரோடிருந்தார்கள்." ( எண்ணாகமம் 14 : 38 ) அவர்கள் மட்டுமே கானானை சுதந்தரித்துக்கொண்டார்கள். இன்றும் நமக்கு முன்மாதிரிகையாக இவர்களே இருக்கின்றனர். 

"விதைகளின் உள்ளே" 🌳 
📖வேதாகமத் தியானம் எண் - 1733                                                                 🔆ஆதவன் 05.11.2025 புதன்            

"நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே." ( எபிரெயர் 13 : 5 )

நாம் ஏற்கெனவே பல தியானங்களில் பார்த்துள்ளபடி, பணம் சம்பாதித்தல் என்பது வேறு, பண ஆசை என்பது வேறு. நாம் பணம் சம்பாதிப்பதில் தவறில்லை, ஆனால் பண ஆசை கொண்டவர்களாக அலைவது தவறு.  பண ஆசை, மற்றவர்களுக்குள்ள செல்வங்களைப் பார்த்து அதுபோல நாமும் மாறவேண்டும் எனும் வெறியை மனிதனுக்குள் எழும்பப்பண்ணுகின்றது. அதுவே பல்வேறு குறுக்கு வழிகளில் பொருள் சேர்க்க நம்மைத் தூண்டுகின்றது.  

எனவேதான் இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்" என்று. அதாவது நாம் உழைக்கவேண்டும், பொருள் சம்பாதிக்கவேண்டும் ஆனால் அதன்மூலம் பெரிய பொருள் ஆசீர்வாதம் இல்லாவிட்டாலும் மற்றவர்களோடு நம்மை ஒப்பிடாமல் நமக்கு இருபவையே போதும் என்று எண்ணம் கொண்டவர்களாக வாழவேண்டும்.

ஆனால், தொடர்ந்து இந்த வசனம் கூறுகின்றது, "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே" என்று. அதாவது நாம் அப்படி நமக்கு இருபவையே போதும் என்று எண்ணும் மனநிலை கொண்டவர்களாக வாழ்வோமானால் தேவன் நம்மைக் கைவிடமாட்டார்.  நமது மனதின் எண்ணத்தை அவர் கனம் பண்ணுவார். நிச்சயமாக நம்மை வெட்கப்பட விடமாட்டார். "அதனாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் ji எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.' ( எபிரெயர் 13 : 6 ) என்று தொடர்ந்து கூறுகின்றார் எபிரெய நிருப ஆசிரியர். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்,  "முதலாவது  தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." (மத்தேயு 6:33) என்று கூறினார். அதாவது, நாம் முதலாவது தேவனுக்குரியவைகளைத் தேடும்போது நமது பிற உலகத் தேவைகளை அவர் சந்திப்பார். எனவேதான் இன்றைய தியான வசனமும், நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே என்று கூறுகின்றது. 

நாம் பண ஆசையை வெறுத்து, தேவனது ராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடும்போது தேவன் நம்மோடு இருப்பார்; நம்மைவிட்டு அவர் விலகமாட்டார். ஆனால், பெரும்பாலான மக்கள் இந்த வசனத்துக்கு எதிர் மறையாக நடக்கின்றவர்களாக இருக்கின்றனர். அதாவது முதலாவது பணத்தையும் பொருளையும் தேடுகின்றனர். எனவே, தேவனை விட்டு விலகிவிடுகின்றனர். ஆனால் உலக துன்பங்கள் நெருக்கும்போது தேவனை நோக்கி ஓடுகின்றனர். 

உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள் எனும் போதுமெனும் மனம் (Contented mind) நமக்கு  இருக்குமானால்  "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று அவர் சொல்லியிருக்கும் வசனம் நமது வாழ்வில் நிறைவேறுவதை நாம் அனுபவத்தில் கண்டுணரலாம். ஆம், ஒவ்வொரு வேத வசனத்தையும் நாம் வாழ்வாக்கும்போது மட்டுமே அவை அனைத்தும் உண்மையானவை என்பதனை நாம் உணர்ந்துகொள்ள முடியும். 

வசனங்களை வாழ்வாக்குவோம்; அப்போது அவர் நம்மைவிட்டு விலகாமல் நம்மோடு இருப்பார்; நமது தேவைகளைச் சந்திப்பார். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1734                                                                 ஆதவன் 06.11.2025 வியாழன்             

"நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்." (மீகா 7:9)

தேவனைவிட்டு நம்மைப் பிரிப்பவை நமது பாவங்களே. ஆனால் நம்மில் பலருக்கும் இந்தப் பாவ உணர்வு இருப்பதில்லை. இந்தப் பாவஉணர்வு நமக்கு வருமானால் நமக்குத் தேவன் செவிகொடுப்பார், நம்மை நமது துன்பங்களுக்கு நீங்கலாக்கி விடுவிப்பார் எனும் விசுவாசம் ஏற்படும். அத்தகைய பாவ உணர்வும் விசுவாசமும் தனக்குள் இருப்பதால் மீகா தீர்க்கதரிசி இன்றைய தியான வசனத்தில் நம்பிக்கையுடன்,  "அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்" என்கின்றார். 

சில வேளைகளில் வாழ்வில் நமது வீழ்ச்சியைக்கண்டு பிறர் நம்மைப்பார்த்து ஏளனம் செய்யலாம், கேலிபேசி மற்றவர்களிடம் நம்மைப்பற்றி குறைகூறலாம். அத்தகைய நிலைமை மீகாவுக்கும் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மீகா,  "நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார். என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார். " (மீகா 7:7,8) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நமது பாவங்கள் ஒருவேளை நமது இன்றைய இழிநிலைக்குக் காரணமாக இருக்கலாம். எனவே நாம் அவற்றை அவரிடம் அறிக்கையிட்டு அவர் செயல்படும்வரைக் காத்திருக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.  இதனையே மீகா, "நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்" என்று கூறுகின்றார். 

மட்டுமல்ல, என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்; அவருடைய நீதியைப் பார்ப்பேன் என்று தனது விசுவாசத்தைத் தொடர்ந்து அறிக்கையிடுகின்றார்.  

மனிதர்களது வாழ்வு இரண்டு பகுதிகளாக உள்ளது. ஒன்று, கிறிஸ்துவை அறியாமல் வாழ்ந்த இருளின் பகுதி. இரண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டபின் நமது வாழ்வில் வரும் ஒளியான இரண்டாவது பகுதி. ஆனால், பெரும்பாலான மக்கள் முதல் பகுதியிலேயே வாழ்ந்து தங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். மட்டுமல்ல, அந்த முதல் பகுதியில் வாழ்ந்துகொண்டு இரண்டாவது ஒளியின் பகுதியில் வாழும் மக்களைக்  கேலிசெய்கின்றனர். இது யதார்த்தமானதே என்கின்றார் இயேசு. ஆம், "ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்". (லூக்கா 16:8) என்று அவர் கூறவில்லையா? 

அதிக புத்திமான்களாக வாழ்ந்து நித்திய நரக அக்கினிக்குள் செல்வதைவிட, புத்தியில் குறைவுபட்டாலும் நித்தியஜீவனுக்குள் செல்வதே நல்லது; அதுவே புத்திசாலித்தனம். எனவே நாம் மீகா கூறுவதைப்போல, "நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்" என நமது பாவங்களை ஒத்துக்கொண்டு அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். பிறரது விமரிசனங்களைப் பார்க்காமல், நமது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு நமது நிலையிலேயே உறுதியாக உண்மையாக வாழ்வோம். 

அப்படி நாம் உண்மையாக வாழும்போது, இன்றைய தியான வசனம் கூறுவதன்படி அவர் நம்மை வெளிச்சத்திலே கொண்டுவருவார், நாம் அவருடைய நீதியைப் பார்ப்போம்.  


"விதைகளின் உள்ளே" 🌳 
📖 வேதாகமத் தியானம் எண் - 1735                                                                 🔆 ஆதவன் 07.11.2025 வெள்ளி      

"நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதனாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை." ( 1 யோவான்  3 : 1 )

தேவன் நமது அன்பான தகப்பன் என்று இயேசு கிறிஸ்து நமக்கு அடையாளம் காட்டினார். இது மிகப்பெரிய உரிமையல்லவா? நாம் இந்த அண்ட சராசரங்களையும் படைத்து ஆளும் மிகப்பெரிய செல்வந்தனின் பிள்ளைகள். ஆனால் இந்த உலகம் அவரை அறியாததால் நம்மையும் அறியவில்லை என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. இதனைத் தியானித்தபோது பத்திரிகையில் 2023 ஆம் ஆண்டு வெளியான ஒரு செய்தி என் நினைவில் வந்தது.  

சூரத்தைச் சார்ந்த  ஹரே கிருஷ்ணா டயமண்ட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சாவ்ஜி தோலாக்கியா, ரூ. 6,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு அதிபதி. அவர் தனது 21 வயது மகன் த்ரவ்யாவை, வாழ்க்கைப்  போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர வைப்பதற்காக, ரூ. 7,000 மட்டும் கையில் கொடுத்து கேரளாவிலுள்ள கொச்சி நகருக்கு  அனுப்பினார் — அங்கு தன்னால் முடிந்த அளவில் சிறு வேலைகளைச் செய்து வாழவேண்டும் என்பது அவனுக்குத்  தகப்பன் விதித்தக் கட்டளை. 

அப்போது த்ரவ்யா அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்துவந்தான். அவன் விடுமுறைக்கு இந்தியா வந்தபோது தந்தை அவனுக்கு ஒரு மாதத்திற்கான இந்தச் சவாலைக் கொடுத்தார். ஒரு மாதம் இந்த வாழ்க்கையினை அவன் வாழவேண்டும். த்ரவ்யா அதை தயங்காமல் ஏற்றுக் கொண்டான்.

இந்தச் சவாலுக்காக மூன்று நிபந்தனைகள் வைக்கப்பட்டிருந்தன:

  1. த்ரவ்யா எந்த நிலையிலும் தந்தையின் பெயரையோ, அவரின் செல்வாக்கையோ பயன்படுத்தக்கூடாது.

  2. ஒரே இடத்தில் ஒரு வாரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது.

  3. அவனிடம் இருக்கும் ரூ.7,000/- தை  அவசரநிலைக்காக மட்டும் பயன்படுத்தவேண்டும். அதை அவனது  தினசரிச்  செலவுக்குப்  பயன்படுத்தக் கூடாது.

த்ரவ்யா முதலில் சேரணல்லூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்தான். பின்னர் ஒரு கால் சென்டர், ஒரு செருப்புக்  கடை, மற்றும் மக்‌டொனால்ட்ஸ் உணவகத்திலும் வேலை பார்த்தான். ஒரு மாதத்தில் அவன் ரூ.4,000/- மட்டுமே சம்பாதித்ததாகக் கூறினான். ஆனால், தினமும் உணவுக்கு ரூ. 40/- கூட கிடைக்காத நிலை இருந்தது. சில நாட்கள் பட்டினிகிடந்தான்.   மேலும், ரூ.250 கூடுதல் செலவாக தங்குமிடத்திற்குத் தேவையாகி தெருஓரங்களிலும் கடைத் திண்ணைகளிலும் தங்கினான். வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்ததாகப் பின்னர் கூறினான்.

தந்தை எடுத்த இந்த முயற்சி அவரது மகனுக்கு வாழ்க்கையின் கடின உண்மைகளை உணரச் செய்து, சொத்து, செல்வம் என்பவற்றின் சௌகரியத்தில் சிக்காமல் வாழ்வதற்கான பாடத்தை கற்பித்த சிறந்த யோசனை எனக் கூறலாம். 

அந்தச் செல்வந்தனின் மகன் த்ரவ்யா கொச்சியின் தெருக்களில் அலைந்து, கடைத்திண்ணைகளில் உறங்கியபோது மக்களில் யாருக்கும் அவன் ஒரு செல்வந்தனின் மகன் என்று தெரியாது. ஆனால் அவனுக்கு மட்டும் தனக்கு ஒரு மிகப்பெரிய செல்வந்த தகப்பன் உண்டு என்பது தெரிந்திருந்தது. இந்தத் துன்பங்கள் கொஞ்ச நாட்களுக்குத்தான் என்று தெரிந்திருந்தது. இந்தப் பாடுகள் பிற்காலத்தில் மிகப்பெரிய தொழிலின் முதலாளியாக தான் சிறப்பாகப் பணிபுரிய ஒரு பயிற்சி என்பது தெரிந்திருந்தது. 

ஆம் அன்பானவர்களே, இதுபோல நாமும் தேவனை அறிந்துகொண்டோமானால் நாம் இந்த அண்டங்களின்  அதிபதியின் பிள்ளை நாம் என்பதனை அறிந்துகொள்வோம். அன்பான அவர் இந்த உலகவாழ்க்கை மூலம் மறுவுலக நித்தியஜீவனுக்கான பயிற்சியை நமக்கு அளிக்கின்றார் என்பதனையும் புரிந்துகொள்வோம்.  நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று புரிந்துகொள்வோம். 

உலகம் பிதாவாகிய தேவனை அறியாதபடியால் இந்தச் சத்தியங்களையும் அறியவில்லை; அவரது அன்பையும் உணரவில்லை; அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. எனவே, அவரை அறிந்துகொண்ட நாம் அவரது அன்பில் நிலைத்திருப்போம். நாம் மேலே பார்த்த அந்த செல்வந்த மகன்  பாடுகளை சகித்து நம்பிக்கையுடன் வாழ்ந்ததுபோல நாமும் நம்பிக்கையுடன் அவரது அன்பில் நிலைத்திருப்போம். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1736                                                                 🔆 ஆதவன் 08.11.2025 சனி 

"அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும். அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே." ( கலாத்தியர் 6 : 4, 5 )

ஒப்பிட்டுப்பார்க்கும் குணம் மனிதர்களுக்கு இயல்பிலேயே இருக்கின்றது. எல்லா உலக காரியங்களிலும் மனிதர்கள் தங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப்பார்க்கப்  பழகிவிட்டனர். சிறு வயதில் தன்னோடு படிக்கும் உடன் மாணவன் மாணவிகளைவிட அதிக மதிப்பெண் பெறவேண்டும், அவர்களைவிட விளையாட்டு, மற்றும் இதர போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெறவேண்டும் என எண்ணுகின்றனர். 

வயதானபின்னர் இந்த ஒப்பிடும் குணம் மற்றவர்களுக்கு - குறிப்பாகத் தங்களது குடும்பச் சொந்தங்களுக்கு, நம்மோடு வாழும் மற்றவர்களுக்கு  - இருப்பதுபோல அல்லது அதனைவிட அதிகமாக தனக்கு சொத்துசுகம், பதவி, அதிகாரம் வேண்டும் என மாறுகின்றது. அவர்களைவிட எதிலாவது குறைவுபட்டால் மனம் வேதனை அடைகின்றது. 

ஆனால், நாம் ஆவிக்குரிய வாழ்வில் இப்படி இருக்கக்கூடாது என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். நமது செயல்பாடுகள் எந்த அளவுக்கு தேவன் விரும்பும் ஆவிக்குரிய வாழ்வாக இருக்கின்றது என்று நமக்குள்ளேதானே  நாம் சுய பரிசோதனை செய்து பார்க்கவேண்டும் என்கின்றார் அவர். எனவேதான், "அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்" என்கின்றார். 

ஆம் நாம் தேவனுக்குமுன் எந்த அளவுக்கு ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறியுள்ளோம்; எந்த அளவு தேவனோடுள்ள ஐக்கியத்தில் வளர்ந்துள்ளோம்; எந்த அளவுக்கு விசுவாசவாழ்வில் தேறியுள்ளோம்  என நாம் நம்மைத்தானே சோதித்துப் பார்க்கவேண்டியது அவசியம். அப்போது மற்றவர்களைப்பார்த்து அல்ல; மாறாக, நமது ஆவிக்குரிய வாழ்வை நாமே நிதானித்து மேன்மை பாராட்டலாம். 

நாம் ஏன் இப்படி நம்மை நாமே சோதிக்கவேண்டும் என்பதற்குப் பதிலாக இன்றைய தியான வசனத்தின் இறுதியில் அப்போஸ்தலராகிய பவுல், "அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே" என்று கூறுகின்றார். அதாவது, நாம் செய்த நன்மை தீமைக்கான விளைவுகளை நாம்தான் அனுபவிக்கவேண்டும்; மற்றவர்களல்ல.  எனவே, நாம் மற்றவர்களைப் பார்க்காமல் நம்மை நாமே நிதானித்துப் பார்க்கவேண்டியது அவசியம். 

இன்று, மரித்தவர்களுக்காக உயிருடன் இருப்பவர்கள் ஜெபிக்கும்போது மரித்துப்போன ஆத்துமாக்களின் பாவங்களை தேவன் மன்னித்து அவர்களுக்கு  மறுவுலக பேரின்பத்தைத் தருவார் என சிலர் வேதாகமத்துக்குப் புறம்பாக எண்ணிக்கொண்டு ஜெபித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால்,  "அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை."  ( கொலோசெயர் 3 : 25 ) என்கிறார் அப்போஸ்தலராகிய பவுல். 

மேலும், "மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 20 : 12 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பான்.  எனவேதான் இன்றைய தியான வசனம், நாம் நமது  சுயகிரியையைச் சோதித்துப்பார்க்க அறிவுறுத்துகின்றது.  மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்பார்க்காமல், தேவனுக்குமுன் நாம் சரியாக இருக்கின்றோமா இல்லையா என்று நமது செயல்பாடுகளை நாமே நிதானித்துப்பார்த்துத் திருத்திக்கொள்ள வேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அதனையே இன்றைய தியான வசனம் வலியுறுத்துகின்றது. நமது வாழ்வை நிதானித்துப்பார்ப்போம்; தேவனுக்கு ஏற்றதாக மாற்றிக்கொள்வோம்.  


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1737                                                                 🔆 ஆதவன் 09.11.2025 ஞாயிறு 

"நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." ( ரோமர் 12 : 2 )

இடத்துக்கேற்ப நடிக்கும் மக்களை நாம் அன்றாட உலகினில் பார்க்க முடியும். பெரும்பாலான மக்கள் இப்படி நடிப்பவர்களாகவே இருக்கின்றனர். இப்படி நடிக்கக் காரணம் ஏதாவது சுய லாபம் கருதியதாகவே இருக்கும். பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, தங்களை நல்லவர்கள் எனப் பிறருக்குக் காண்பித்து நற்பெயர் எடுக்கவும் சிலர் இப்படி நடிக்கின்றனர். 

மேலும் பலர்,  எல்லோரும் செய்கிறார்களே என்று சில காரியங்களைச் செய்கின்றனர். அதாவது, உலகத்தோடு ஒத்துப்போகவேண்டுமென்று தங்களுக்கு விருப்பமில்லையெனினும் சில காரியங்களில் ஈடுபடுகின்றனர். இதனையே இன்றைய தியான வசனம், நீங்கள் இப்படி இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் இருங்கள் என்று கூறுகின்றது. 

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நீங்கள் இப்படி நடிக்காமல் "உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.' ( மத்தேயு 5 : 37 ) என்று கூறுகின்றார். 

தாவீதுராஜா  இத்தகைய மனிதர்களைத் தனது வாழ்வில் சந்தித்திருந்ததால் கூறுகின்றார், "வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான். யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்." ( சங்கீதம் 39 : 6 ) என்று. பொருள் சேர்க்கவேண்டுமென்று நல்லவனாக நடிப்பதை அவர் இங்குக் குறிப்பிடுகின்றார். இப்படி வேஷமாக நடித்து நடித்து சொத்துச் சேர்த்து வைக்கின்றார்கள் பலர். 

ஆனால் நீங்கள் இப்படி உலகத்துக்கு ஒத்த வேஷம்போடாமல், "தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." என்று அறிவுறுத்துகின்றார் பவுல் அப்போஸ்தலர். அதாவது, நம் ஒவ்வொருவரைக்குறித்தும் தேவனுக்கு ஒரு சித்தம் உண்டு. நாம் உலகத்துக்கு ஒத்தபடி நடக்காமல் நம்மைக்குறித்த தேவ சித்தத்தைப் பகுத்தறிந்து அதன்படி நடக்கவேண்டும் என அறிவுறுத்துகின்றார். 

நம்மைக்குறித்த தேவனுடைய பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று அறியவேண்டுமானால் நமது மனமானது புதிதாகவேண்டியது அவசியம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதற்கு, பழைய பாவ மனிதன் நம்மைவிட்டு அகலவேண்டும்.  இதுவே மீட்பு அனுபவம். தேவனிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்புக் கேட்கும்போது நாம் மறுபடிப்பிறந்து குழந்தைகளாகின்றோம். அப்போது வேஷம்போடும் குணம் நம்மை விட்டு அகலும்.  இப்படி நமது மனம் புதிதாகி மறுரூபமாகும்போதுதான் நாம் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவர்களாக மாற முடியும். 

"ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்". ( யோவான் 3 : 3 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா? 

இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம் நமது வேஷத்தை மாற்றாமல்; இந்த உலகத்துக்குரிய மக்களைப்பார்த்து அவர்களைப்போல நடக்கவேண்டுமென்று எண்ணாமல், தேவனுடைய பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறிந்து நமது மனம் புதிதாக மாறிட நம்மை அவருக்கு ஒப்புக்கொடுப்போம்.  


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1738                                                                 🔆 ஆதவன் 10.11.2025 திங்கள்  

"தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்." ( ரோமர் 1 : 28 )

தேவனை அறிதல் என்பது வேறு, தேவனைப்பற்றி அறிதல் என்பது வேறு. வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது பொதுவாக எல்லா இடங்களிலும், "தேவனை அறிதல்", "தேவனை அறியும் அறிவு"  போன்ற வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் பார்க்கலாம். 

ஒருவர் வேதாகமக் கல்லூரியில் படிப்பதன்மூலமும், பல்வேறு ஆவிக்குரிய பிரசங்கங்களைக் கேட்பதன்மூலமும், ஆவிக்குரிய செய்திகளைப் படித்து அறிவதன்மூலமும் தேவனைப்பற்றி அறியமுடியும். ஆனால், ஒருவர் இப்படி வேதாகமக் கல்லூரியில் படிப்பதாலும், வேதாகமத்தை வசிப்பதாலும் தேவனை அறிய முடியாது.  பெரும்பாலும்  இன்று இப்படி மூளை அறிவால் வேதாகமத்தை அறிந்தவர்களே போதகர்களாகவும் குருக்களாகவும் இருக்கின்றனர். 

புத்தன்,  காந்தி, கார்ல் மார்க்ஸ், லெனின், அல்லது வேறு ஏதாவது அரசியல் தலைவரின் வாழ்க்கையையோ பிரபலமான நபர்களைப்பற்றிய  சம்பவங்களையோ படிப்பதுபோல இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை வேதாகமம் மூலம் படித்துக்கொண்டு அவரை அறியாமல் இருப்போமானால் இந்தத் தலைவர்களைப் போலவே கிறிஸ்துவை நாம் அறிந்துள்ளோம் என்று பொருள்.   

தேவனை அறிதல் என்பது உன்னதமான ஒரு அனுபவம். அது அன்றாடம் அவரோடுள்ள ஐக்கியத்தில் நாம் வாழ்வது. நாம் நமது வீட்டில் நமது பெற்றோர், சகோதர சகோதரிகளோடு உறவோடு வாழ்வதுபோல தேவனோடு உறவோடு வாழ்ந்து, அவரது சித்தம் அறிந்து செயல்படுவது; அவரது வழிநடத்துதலை அனுபவிப்பது. ஆம், நமது தேவன் உயிரற்ற ஒருவரல்ல, அவர் இன்றும் ஜீவிக்கின்ற ஒருவராக இருக்கின்றார். எனவே அவர் உயிருள்ள மனிதனுக்கு ஒப்பாக இன்றும் செயற்படுகின்றார். அதனை அறிந்து வாழ்வதே தேவனை அறிவது. 

மனிதர்கள் இப்படித் தேவனைப் பற்றி மட்டும் அறிந்து வாழ்வில் தனிப்பட்ட முறையில் அவரை  அறியாமல் இருப்பதாலும் அவரை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியாலும், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

இப்படி மனிதர்கள் தேவனை அறியாமல் இருப்பதால் மனிதர்களது  மனம் எப்படி இருக்கின்றது என்பதனை விளக்கும்போது அப்போஸ்தலராகிய பவுல்,  அவர்கள் சகலவித அநியாயம், வேசித்தனம், துரோகம், பொருளாசை, குரோதம், பொறாமை, கொலை, வாக்குவாதம், வஞ்சகம், வன்மம்,  புறங்கூறல், அவதூறு, தேவபகை, துராகிருதம்,  அகந்தை, வீம்பு, பொல்லாதவைகளை யோசித்துப் பிணைத்தல்,  பெற்றாருக்குக் கீழ்ப்படியாமை, உணர்வில்லாமை, உடன்படிக்கைகளை மீறுதல், சுபாவ அன்பில்லாமை, இணங்காமை,  இரக்கமில்லாமை போன்ற குணங்களுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்கின்றார். (ரோமர் 1;29-31 வசனங்களை வாசிக்கவும்)

தேவனை நமது வாழ்வில் அறியாமல் வாழ்ந்துகொண்டு எத்தனை ஆராதனைகளில் கலந்துகொண்டாலும்   இத்தகைய குணங்கள் நம்மைவிட்டு மாறிடாது. 

அன்பானவர்களே, பெரும்பாலும் இதைவாசிக்கும் அனைவரும் பிறந்தது கிறிஸ்தவ குடும்பமாக இருந்தாலும் பெரும்பாலும் தேவனைப்பற்றி மட்டுமே அறிந்தவர்களாக இருக்கின்றோம். இதற்கு மேலான ஒரு அனுபவம் உண்டு; அதுதான் தேவனை அறியும் அனுபவம். அந்த அனுபவத்தை நாம் பெற்றுக்கொள்ள உண்மையாகவே விரும்பினோமென்றால் அதனை அவர் நமக்குத் தர தேவன் ஆவலாக உள்ளார். அந்த அனுபவத்தை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவர் உலகினில் வந்தார். அப்படி அவரை அறியும்போதுதான் நமது உள்ளான குணங்கள் தேவனுக்கு ஏற்றவையாக மாறும். 

"அன்பான ஆண்டவரே, நாம் எனது வாழ்வில் உம்மை அறிய விரும்புகின்றேன்; உம்மோடு உறவுடன் வாழ விரும்புகின்றேன். இதற்குத் தடையாக இருக்கும் எனது எல்லா பாவங்களையும் உம்மிடம் அறிக்கையிடுகின்றேன். என்னை உமது மகனாக, மகளாக ஏற்றுக்கொள்ளும்" என்று உண்மையான உள்ளத்துடன் வேண்டுதல் செய்வோம். தேவன் தன்னை நமக்கு வெளிப்படுத்துவார்; நம்மைப் புதுப் பிறப்பாக மாற்றுவார்.   


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1739                                                                 🔆 ஆதவன் 11.11.2025 செவ்வாய்   

"உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்." ( ஏசாயா 51 : 2 )

இன்றைய தியான வசனம் ஆபிரகாமையும் சாராளையும் நோக்கிப்பார்க்க நமக்கு அறிவுறுத்துகின்றது. வெறுமனே நோக்கிப்பார்க்க மட்டுமல்ல, அவர்களது விசுவாச வாழ்வை நாம் முன்மாதிரியாகக் கொண்டு வாழவேண்டும் என நம்மை அறிவுறுத்துகின்றது; அந்த விசுவாச வாழ்க்கைமூலம் அவர்கள் பெற்றுக்கொண்டதுபோல நாமும் ஆசீர்வாதங்களைப்பெறவேண்டும் என நம்மை அறிவுறுத்துகின்றது. 

ஆபிரகாமின் விசுவாசத்தைக்குறித்து நாம் அனைவருமே பல்வேறு முறை வேதாகமத்தில் வாசித்துள்ளோம். "தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்." ( ரோமர் 4 : 20-21 ) என்று ஆபிரகாமைக்குறித்துக் கூறப்பட்டுள்ளது. 

ஆபிரகாம் தனது வாழ்வில் விசுவாசத்தை இரண்டுமுறை மெய்ப்பித்தார். முதலாவது, தேவன் அவருக்கு ஈசாக்கை வாக்களித்தபோது. பிள்ளையற்றிருந்த அபிரகாமுக்குத் தேவன் ஒரு மகனைத் தருவேன் என வாக்களித்தபோது  அவரது வயது ஏறக்குறைய 75. ஆனாலும், தேவனது வாக்குத்தத்ததை ஆபிரகாம் விசுவாசித்தார். "அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்." ( ரோமர் 4 : 19 ) என்று கூறப்பட்டுள்ளது. அவரது விசுவாசத்தின்படியே அவருக்கு 100 வயதானபோது மகன் ஈசாக்குப் பிறந்தான். 

ஆம் அன்பானவர்களே, இருபத்தைந்து ஆண்டுகள் அவர் தேவனை விசுவாசித்துக் காத்திருந்தார்; இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அவரது நம்பிக்கையைக்குறித்து பலர் அவரைக் கேலி பேசியிருக்கலாம். பைத்தியகாரக் கிழவன் என்று எண்ணியிருக்கலாம். ஆனால், அவர்  தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானார்.

இரண்டாவதாக, தேவன் அந்த ஒரே மகன் ஈசாக்கைத் தனக்குத் தகனபலியாகக் கொடுக்கவேண்டும் என்று கூறியபோதும் ஆபிரகாம் தனது விசுவாசத்தை மெய்ப்பித்தார். தேவனது வார்தைக்குச் செவிகொடுத்து மகனைப் பலி செலுத்தத் தயாரானார். இதுகுறித்து தனது மனைவி சாராளிடம் கூறினால் அவள் சம்மதிக்கமாட்டாள்; மட்டுமல்ல, தடைசெய்வாள் என்று கருதியதால் அவளிடம்கூட இதனை அவர் தெரிவிக்கவில்லை. இதுவும் அவர் தேவன்மேல் கொண்டிருந்த விசுவாசத்தினால்தான். 

"ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாகுத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்துமெழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்." ( எபிரெயர் 11 : 18- 19 )

அதாவது, ஏற்கெனவே தேவன் கடற்கரை மணலைப்போலவும் வானத்து நட்சத்திரங்களைப்போலவும் உனது சந்ததியைப் பெருகச் செய்வேன் என ஆபிரகாமுக்கு வாக்களித்திருந்தார். மேலும், "ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்" (ஆதியாகமம் 21:12)என்றும் கூறியிருந்தார். எனவே, இப்படிக் கூறிய தேவன் அதனை நிச்சயமாய் நிறைவேற்றுவார் என ஆபிரகாம் விசுவாசித்தார். எனவே ஈசாக்கைத் தான் பலியாக ஒப்புக்கொடுத்தாலும் அவனை  மரித்தோரிலிருந்து எழுப்பவும்  தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, விசுவாசத்துடன் ஈசாக்கைப் பலிசெலுத்த முன்வந்தார். 

இன்றைய தியான வசனம் இந்தக் காரியங்களை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும் என்று கூறுகின்றது. ஆபிரகாமை நாம் விசுவாசத்தின் தந்தை என்று கூறுவது இதனால்தான்.  நாம் நமது வாழ்வில் எதிர்மறையான ஏதாவது நடந்துவிட்டால் அல்லது நமது ஜெபத்துக்கு உடனேயே பதில் கிடைக்காவிட்டால் கலங்குகின்றோம்; அவிசுவாச எண்ணம் கொள்ளுகின்றோம். ஆம் அன்பானவர்களே, அத்தகைய வேளைகளில் ஆபிரகாமை எண்ணிப்பார்ப்பார்ப்போம். 

"விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்." ( எபிரெயர் 11 : 11- 12 )

இன்றைய வசனம் கூறுவதன்படி, நாம்  தகப்பனாகிய ஆபிரகாமையும், தாயாகிய சாராளையும் நோக்கிப்பார்ப்போம்; தேவன்மேலுள்ள விசுவாசத்தில் உறுதிகொள்வோம்.  


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1740                                                                 🔆 ஆதவன் 12.11.2025 புதன்    

"மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." ( ரோமர் 8 : 10 )

கிறிஸ்து நாமக்குள் இருக்கின்றார் என்பதற்கு ஒரு அளவுகோல் இன்றைய தியான வசனமாகும். அதாவது நாம் பெயரளவுக்கு கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்வதிலும் ஆலயங்களுக்குச் செல்வதிலும் அர்த்தமில்லை. மாறாக, நாம் உண்மையாகவே கிறிஸ்தவர்கள் என்றால் கிறிஸ்து நமக்குள் வந்து தங்கியிருக்கவேண்டியது அவசியம். அப்படி கிறிஸ்து நமக்குள் வரும்போது நாம் அவரோடுகூட பாவத்துக்கு மரித்தவர்களாகின்றோம். இதுவே கிறிஸ்தவ வாழ்வு; மற்ற எந்த மார்க்கங்களும் காட்டாத, கிறிஸ்தவம் காட்டும்  மேலான பாதை.  

நாம் மரித்துவிட்டோமானால் நமது உடலின் எந்த உறுப்பும் வேலைசெய்யாது. எனவே நாம் நமது உடல் உறுப்புக்களால் எந்தப் பாவமும் செய்யமுடியாது. கிறிஸ்து நமக்குள் வரும்போது நாம் பாவத்துக்கு மரிக்கின்றோம். எனவேதான், "மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே" (ரோமர் 6:7) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர்.  

இதனையே இன்றைய தியான வசனத்தில், "கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்" என்று வாசிக்கின்றோம். மேலும், கிறிஸ்துவின் ஆவியின் பிரமாணம், பாவம், அதன் விளைவான நித்திய மரணம் இவைகளிலிருந்தும் நம்மை விடுகின்றது. "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே" (ரோமர் 8:2) என்று கூறுகின்றார் பவுல் அப்போஸ்தலர்.

ஆம் அன்பானவர்களே, இதற்காகவே பிதாவாகிய தேவன் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உலகினில் அனுப்பினார். அவர் சிலுவையில் பலியாகி தனது மாம்சத்தினாலே நமது பாவங்களை நிவிர்த்திசெய்தார். "அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்".(ரோமர் 8:3)

இன்று உலகத்தில் பலர் ஒவ்வொரு ஆண்டு துவங்கும்போதும் ஏதாவது ஒரு பாவ காரியத்தை விட்டுவிடவேண்டுமென்று மனதில் உறுதியெடுக்கின்றனர். ஆனால், அவர்களால் ஒருசில நாட்களுக்குமேல் அந்த உறுதியில் நிலைத்திருக்க முடிவதில்லை. காரணம், எந்த மனிதனாலும் இதனைச் செய்ய முடியாது. ஆம், கிறிஸ்து நமக்குள் இருந்தால் மட்டுமே நம் பாவத்துக்கு நீங்கலாகிவிடமுடியும்;  நமது சுய முயற்சிகளினால் நம்மால் பாவத்திலிருந்து விடுதலை பெறமுடியாது. 

இதனையே பவுல் அப்போஸ்தலர், "அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்." ( ரோமர் 7 : 18-19 ) என்கிறார். 

ஆம், நமது சுய முயற்சிகளல்ல; மாறாக,  கிறிஸ்துவே  நம்மை விடுவிக்க முடியும்.   "ஆகையால் குமாரன்   உங்களை  விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." (யோவான் 8:36) என்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். அவர் நமக்குள் வரும்போது இன்றைய தியான வசனம் கூறுவதன்படி, நமது சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1741                                                                 🔆 ஆதவன் 13.11.2025 வியாழன்     

"கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல் கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்." ( ஏசாயா 45 : 24 )

இன்று பலரும் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றினாலும் பெரும்பாலானவர்கள் தங்களது சுய அறிவினாலும் சுய ஆத்தும அனுபவங்களினாலும் அப்படிக் குறிப்பிட்ட மதங்களைப் பின்பற்றுவதில்லை. மாறாக, தங்களது பெற்றோர் காட்டிய வழிமுறைகளின்படி கடவுளை நம்புகின்றனர்; வழிபடுகின்றனர். 

எனவே பெரும்பாலான மக்களிடம் எந்த ஆத்தும அனுபவங்களும் மெய்யான ஆன்மீக உணர்வுகளும் இருப்பதில்லை. வரட்டுப் பிடிவாதத்தினாலும் குழந்தையாக இருந்தபோது கற்பிக்கப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையிலும் பலரும் கடவுளை வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால், இப்படி அல்லாமல் நாம் அவரை அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டியது அவசியம். தேவனை அறிந்துகொள்வதற்கான ஞானமுள்ளவர்களாக நாம் மாறவேண்டியது அவசியம். 

ஆனால் பலரும் அவரை ஏற்றுக்கொள்வதில்லை. கிறிஸ்துவை மெய்யான தேவனாக உணர்ந்துகொண்டவர்கள் அவரை ஏற்றுக்கொண்டு வைராக்கியமாகப் பின்பற்றுகின்றார்கள். 

தேவனை அறிந்து வழிபடுவதற்கும் அறியாமல் வழிபடுவதற்கும் வேறுபாடு உண்டு. இயேசு சந்தித்த சமாரிய பெண்மணி இப்படி அறியாமல் தேவனைத் தொழுதுகொண்டிருந்தவள்தான். எனவே அவளிடம் இயேசு கூறினார்,  "நீங்கள்   அறியாததைத்   தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுது கொள்ளுகிறோம்;      ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது". (யோவான் 4:22) என்று. 

இன்றைய தியான வசனம் மேலும் கூறுகின்றது, "அவருக்கு விரோதமாய் எரிச்சல் கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்" என்று. ஆம் அன்பானவர்களே, இன்றும் நாம் இதுகுறித்து பல்வேறு சாட்சிகளைக் கேட்கமுடிகின்றது. ஒருகாலத்தில் கிறிஸ்துவின்மேல் எரிச்சல்கொண்டு அவருக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருந்த பலர் கிறிஸ்துவால் தொடப்பட்டு கிறிஸ்துவிடம் வந்து இதனை சாட்சியாக அறிவிக்கின்றனர். "ஒருகாலத்தில் வேதாகமத்தைக் கண்டாலே எரிச்சல் ஏற்பட்டது; அதனை நான் நெருப்புவைத்து எரித்தேன்; அதற்காக வெட்கப்படுகிறேன் " என்று சாது சுந்தர்சிங் முதல் இன்றுவரை  பலர் சாட்சி கூறிக்கொண்டிருக்கின்றனர். 

மட்டுமல்ல, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கிறிஸ்தவம் நுழைய முடியாத இரும்புக் கோட்டைகளாக இருந்தன. இன்று அவை வேதாகமத்தை தங்களது நாடுகளில் அனுமதிக்க ஆரம்பித்துள்ளன. மட்டுமல்ல, அரபு நாடுகளிலும் பலர் இன்று கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொண்டிருக்கின்றனர். அங்குள்ள பல இஸ்லாமியர்கள் தாங்கள் கனவுமூலம் உணர்த்தப்பட்டு கிறிஸ்தவத்துக்கு மாறியதாகக் கூறுகின்றனர். 

ஆம் அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் கூறுவதன்படி, கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று சொல்லி அவர்கள் அவரை மெய்யான தேவனாகக் கண்டுகொண்டுள்ளதாகக் கூறுகின்றனர். மட்டுமல்ல, இன்றைய தியான வசனம் கூறுகின்றது,  அவருக்கு விரோதமாய் எரிச்சல் கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள் என்று. காரணம், தேவன் ஒவ்வொருவரும் சத்தியத்தை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கின்றார். அதனை வைராக்கியம்கொண்டு மறுதலித்து வாழ்பவர்கள்  இறுதிநாளில் அவருக்குமுன் வெட்கமடைவார்கள். 

இன்று கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு நாம் பெயரளவு கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால் போதாது. கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையும் உண்டென்று உணர்ந்து அவரை அறிந்து வாழும்போது மட்டுமே நாம் இறுதிநாளில் வெட்கப்படாமல் இருக்கமுடியும்; அவரது தொழுவத்தின் ஆடுகளாக மாற முடியும். 

"இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்". (யோவான் 10:16) என்றார் இயேசு. அவரது நீதியையும் வல்லமையையும் உணராமல் வாழ்பவர்கள் அனைவரும் தொழுவத்தைச் சாராத ஆடுகள். ஆனால், அத்தகைய ஆடுகளும் அவரது சத்தத்துக்குச் செவிகொடுக்கும் என்கிறார் இயேசு கிறிஸ்து. 

இயேசுவின் வார்த்தையினையே இன்றைய தியான வசனமும், "கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்" என்று உறுதி செய்கின்றது. எனவே, நாம் எத்தகையவர்களாக இருக்கின்றோம் என்று நம்மை நாமே நிதானித்துப்பார்ப்போம். ஏனெனில், கர்த்தரைச் சேராமல்; அவரது தொழுவத்தில் வந்தடையாமல் இருப்போமானால் இறுதிநாளில் நாமும் வெட்கப்படுவோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1742                                                                 🔆 ஆதவன் 14.11.2025 வெள்ளி      

"உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது." ( உபாகமம் 23 : 14 )

இஸ்ரவேலர் மோசேயால் எகிப்திலிருந்து கானானை நோக்கி வழிநடத்தப்பட்டபோது நாற்பது ஆண்டுகளாக பயணம் செய்தனர். கர்த்தரின் வார்த்தையின்படி பல நாட்கள் ஒரே இடத்தில் தங்கியிருப்பர். கர்த்தர் கட்டளையிடும்போது புறப்பட்டுத் தங்களது பயணத்தைக் தொடர்வர்.  தேவனே இந்த நாட்களில் அவர்களுக்குத் துணையாக இருந்து நடத்தினார். 

பாளையம் என்பது இஸ்ரவேலர் கூடாரமடித்துத் தங்கியிருக்கும் குடியிருப்புப் பகுதியாகும். தேவனாகிய கர்த்தர் இஸ்ரேலருக்குப் பாதுகாப்பாக அந்தக் குடியிருப்புப் பகுதியில் உலாவிக்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு இஸ்ரவேலரைவிட்டு அகன்றிடக்கூடாது என்பதில் மோசே உறுதியாக இருந்தார். தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர். எனவே பரிசுத்தக் குறைவு காணப்படுமேயானால் அவர் அகன்று போய்விடுவார்.  ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது என இஸ்ரவேலருக்கு அறிவுறுத்தினார்.  

ஆம் அன்பானவர்களே, இஸ்ரவேலருக்கு அன்று கிடைத்ததுபோன்ற பாதுகாப்பு ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நமக்கும் கிடைக்கவேண்டுமானால் நாமும் பரிசுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். ஆம், "நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக." ( லேவியராகமம் 11 : 45 ) எனும் வார்த்தைகள் இன்று நமக்கும் தேவனது வார்த்தையாக அறிவிக்கப்படுகின்றது. 

எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே." ( 1 பேதுரு 1 : 16 ) என்று நமக்கு நினைவூட்டுகின்றார். மேலும், எபிரெய நிருப ஆசிரியரும், "யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்;  பரிசுத்தமில்லாமல்  ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே." (எபிரெயர் 12:14) என்கின்றார்.

இன்றைய தியான வசனத்தில் தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம், "ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது" என்று. நமது உள்ளமாகிய தேவன் வசிக்கும் பாளையம் சுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். அதில் அசுத்தம் காணப்படுமேயானால் அவர் நம்மை விட்டு விலகிப் போய்விடுவார். நாம் தேவனை வாழ்வில் தரிசிக்கவும் அவரோடுள்ள உறவில் வளரவும் நமது இருதயம் சுத்தமானதாக இருக்கவேண்டியது அவசியம். 

எனவேதான், "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்". (மத்தேயு 5:8) என்றார் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. நமது இருதயத்தின் நினைவுகளே நமது வார்த்தைகள்மூலம் வெளிவருகின்றன. ஆம், "வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.  எப்படியெனில்,  இருதயத்திலிருந்து  பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும்            புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்". (மத்தேயு 15:18-20)

நம் தேவனாகிய கர்த்தர் நம்மை இரட்சிக்க நமது உள்ளமாகிய பாளயத்திற்குள்ளே வந்து உலாவ விரும்புகின்றார். ஆகையால், அவர் நம்மிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, நம்மை விட்டு விலகிப்  போகாதபடிக்கு, நமது உள்ளமாகிய பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது. 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1743                                                                 🔆 ஆதவன் 15.11.2025 சனி  

"துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதன் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்." ( ஏசாயா 57 : 20-21 )

குளத்துக்கும் கடலுக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம் அந்தத் தண்ணீரின் குணம். குளமானது அமைதலாக இருக்கும். ஆனால் கடலோ அமைத்தலின்றி, இரவும் பகலும் எப்போதும் குமுறிக்கொண்டே இருக்கும்.   இதுபோலவே துன்மார்க்கரின் உள்ளமும் எப்போதும் குமுறிக்கொண்டே இருக்கும். துன்மார்க்க உள்ளத்துக்கு அமைதி என்பது கிடையாது. 

குளத்துக்குள் போடப்படும் பொருட்களை குளம் அமைதியாக உள்வாங்கிக்கொண்டு அமைதலாக இருக்கும். ஆனால் கடலோ, அமர்ந்திருக்கக் கூடாமல், அதன் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. இதுவும் துன்மார்க்கனுக்கும் மற்றவர்களுக்குமுள்ள ஒரு வித்தியாசமாகும்.

துன்மார்க்கர்கள் பணத்துக்காகவும் பொருள் சேர்க்கவேண்டும் எனும் ஆசையினாலும் எந்த பாதகச் செயலையும் செய்வதற்கும் தயாராகவே இருப்பார்கள். இப்படிப் பணத்தைச் சேர்த்துத் துன்மார்க்கன் பெருமைகொண்டு அலைகின்றான். ஆம், "துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி,  கர்த்தரை   அசட்டைபண்ணுகிறான்.  (சங்கீதம் 10:3)

அன்பானவர்களே, இன்று அன்றாடம் செய்திகளை நாம் வாசிப்போமானால் நாட்டில் எத்தகைய அளவுக்குத் துன்மார்க்கர்களது பெருக்கம் உள்ளது என்பதனை நாம் அறிந்துகொள்ளலாம். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இன்று ஆண்களுக்கு ஈடாக துன்மார்க்கச் செயல்படுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம்.  துன்மார்க்கர்கள் பெருகுவது கடைசி காலத்தின் அறிகுறிகளில் ஒன்று. இதனை, "கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே." (யூதா 1:18) என்று அப்போஸ்தலரான யூதா நமக்கு நினைவூட்டுகின்றார்.  

இன்று தற்கொலைகள் பெருகுவதற்கு மனிதர்களது துன்மார்க்க குணமே முக்கிய காரணமாக இருக்கின்றது.  சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்கும்  கொந்தளிக்கும் கடலைப்போல தங்கள் வாழ்க்கையில் அசுத்தத்தையே வெளிப்படுத்தும் துன்மார்க்கன் தற்கொலை செய்து சாகின்றான்; ஆம் அவர்களுக்குச் சமாதானம் இல்லை. ஆனால் தேவன் துன்மார்க்கனது துன்மார்க்க குணத்தை வெறுக்கின்றாரேத்தவிர துன்மார்க்கனை நேசிக்கின்றார். எனவேதான், "துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." (எசேக்கியேல் 18:23) என்கிறார் தேவன். 

சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்கும் கடல்போல துன்மார்க்கனது வாழ்க்கை இருந்தாலும்; அதனால் அவனுக்குச் சமாதானம் இல்லாமலிருந்தாலும் தேவன் அவனை மன்னித்து அணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கின்றார்; அவனுக்குச் சமாதானம் அளிக்க விரும்புகின்றார்.  "துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்." (ஏசாயா 55:7)

ஆம் அன்பானவர்களே, மிகப்பெரிய துன்மார்க்க வாழ்க்கை வாழ்பவனையே தேவன் மன்னிக்கத் தயாராக இருக்கின்றார். நம்மில் யாரும் இத்தகைய பெரிய துன்மார்க்கர்கள் அல்ல. எனவே, நாம் அஞ்சிடாமல் தேவனது சமூகத்தில் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்; நம்மைச் சமாதானதால் நிரப்புவார். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1744                                                                 🔆 ஆதவன் 16.11.2025 ஞாயிறு  

"கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்." ( 2 கொரிந்தியர் 2 : 14 )

நாம் தேவனுக்குள் சிறப்பான ஆவிக்குரிய வாழ்க்கை  வாழ்வோமானால் தேவன் நமக்கும் நம்மைக்கொண்டு பிறருக்கும்  செய்யும் காரியங்களை இன்றைய தியான வசனம் எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.

நாம் சிறப்பான ஆவிக்குரிய வாழ்வு வாழ்வோமானால் அது உலக காரியமாக இருந்தாலும், ஆவிக்குரிய காரியமாக இருந்தாலும் சரி, தேவனது கரம் எப்போதும் நம்மோடு இருக்கும் என்பதால் முதலாவது, நம்மை அவர் எப்பொழுதும் வெற்றிசிறக்கப்பண்ணுவார். 

இரண்டாவது, தேவ கரம் நம்மோடு இருப்பதால் நாம் ஒரு சாட்சியுள்ள வாழ்க்கை வாழமுடியும். அந்தச் சாட்சி வாழ்க்கையையே இன்றைய தியான வசனம் அவரை அறிகிற அறிவின் வாசனை என்று கூறுகின்றது. நாம் செல்லும் எல்லா இடங்களிலேயும் நம்மைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை அவர் மக்களுக்கு வெளிப்படுத்துவார். அதாவது நமது சாட்சியுள்ள வாழ்க்கைமூலம் கிறிஸ்து மகிமைப்படுவார். 

ஆனால், இந்தக் கிறிஸ்துவின் வாசனையை எல்லோரும் உணர முடியாது. ஆம் அன்பானவர்களே, இந்த உலகத்தில் கிறிஸ்து வாழ்ந்தபோதுகூட எல்லா மக்களும் அவரது வாசனையை உணரவில்லை. எனவேதான் அவரைக் கொலைசெய்தனர். கிறிஸ்துவின் வாசனை மனம்திரும்ப விருப்பமில்லாத மக்களுக்கு வாசனையாகத் தெரியாது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 2 : 16 ) என்று கூறுகின்றார். 

கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவருமே கிறிஸ்துவின் வாசனையை உலகிற்கு வெளிப்படுத்த அழைக்கப்படுகின்றோம். கிறிஸ்துவை அறியாத மக்கள் நம்மூலம் அவரை அறியும் அறிவின் வாசனையை அனுபவிக்கவேண்டும். 

எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம் வெறுமனே வழிபாடுகளில் கலந்துகொண்டு கலைந்து செல்வது போதாது. கிறிஸ்து நமது உள்ளே வந்து நம்மை உயிர்ப்பிக்க இடம்தரவேண்டியது அவசியம். எனவேதான் அப்போஸ்தலராகிய பவுல், "கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும்,   ஆவியானது  நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்." (ரோமர் 8:10) என்று கூறுகின்றார். 

தனிப்பட்ட விதத்தில் கிறிஸ்துவோடுள்ள உறவில் வலுப்பெற்று வாழும்போது நமது ஆவியானது ஜீவனுள்ளதாக இருக்கும். நம்மிடம் அத்தகைய ஜீவன் இருந்தால் மட்டுமே நாம் மற்றவர்களுக்கு கிறிஸ்துவின் வாசனையை வெளிப்படுத்த முடியும். 

ஆராதனைக் கிறிஸ்தவர்களாக இல்லாமல் கிறிஸ்துவை நமக்குள் வரவேற்போம். அப்போது நாம் கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் வெற்றிசிறப்படைவோம்; நாம் செல்லும் எல்லா இடங்களிலேயும் அவரை அறிகிற அறிவின் வாசனையை நம்மூலம் தேவன் வெளிப்படுத்துவார்.  அவருக்கே துதியும் ஸ்தோத்திரமும். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1745                                                                 🔆 ஆதவன் 17.11.2025 திங்கள்   

"எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." ( 2 கொரிந்தியர் 3 : 5 )

இன்று உலகினில் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்களும் பெரிய பெரிய தொழிச்சாலைகளும் உள்ளன. ஒவ்வொரு நிறுவனங்களிலும் பல ஆயிரம்பேர் பணிபுரிகின்றனர். இது தவிர, நாடுகளின் அரசாங்கமானது மிகப்பெரிய வேலைவாய்ப்பை மக்களுக்கு அளிக்கின்றது. கோடிக்கணக்கான மக்கள் அரசுத் துறைகளில் பணிபுரிகின்றனர். இவர்களில் எல்லோரும் தேவனால் தகுதிபெற்றவர்களா? பெரும்பாலானவர்கள் தேவனை அறியாதவர்கள் அல்லவா? ஆனாலும் அனைத்தும் சிறப்பானதாகத்தானே நடைபெறுகின்றது? அப்படியானால் "எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது." இன்றைய தியான வசனம் சொல்வது பொய்யா?

அன்பானவர்களே, வேதாகம வார்த்தைகளுக்கு நாம் எப்போதுமே ஆவிக்குரிய பொருளையே காணவேண்டும். இன்றைய தியான வசனத்தை நாம் வெறுமனே உலகக் கண்ணோட்டத்தில் பார்ப்போமானால் நமக்கு இது வெற்று வார்த்தைகள் போலவே இருக்கும். இன்று பலரும் வேதாகம  வார்த்தைகளை மக்கள்  சரியாகப் புரிந்துகொள்ளாததற்கு இதுதான் காரணம். 

இன்றைய தியான வசனம் நூறு சதவிகிதம் ஆவிக்குரிய அர்த்தம் கொண்டது. நாம் தேவனுக்கு முற்றிலும் ஏற்புடையவர்களாக வாழவேண்டுமானால் அதுபற்றி யோசிக்கிறதற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல;  நமது சுய முயற்சிகள் மூலம் நாம் பரிசுத்தமாகி தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆகமுடியாது என்று பொருள்; கிறிஸ்து நமக்குள் வராமல் ஆவிக்குரிய சிந்தனையும் செயல்பாடுகளும் நம்மில் உருவாகாது என்று பொருள். 

இதனையே இயேசு கிறிஸ்து, "நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல்  உங்களால்    ஒன்றும்   செய்யக்கூடாது." (யோவான் 15:5) என்று கூறினார். தண்டோடு இணைந்திருக்கும் திராட்சைக் கொடியானது அந்தத் தண்டுமூலம் செடியின் சாரதைப்பெற்று கனி கொடுப்பதுபோல கிறிஸ்துவோடு இணைந்து இருக்கும்போது மட்டுமே நம்மால் கனிகொடுக்கமுடியும். 

தண்டோடு இணைந்திருப்பதுதான் நமது தகுதி. அந்தத் தகுதியை இழந்துவிட்டோமானால் நம்மால் எதுவும் செய்யமுடியாது. "ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்." ( யோவான் 15 : 6 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய வாழ்வில் கிறிஸ்துவோடு இணைக்கப்படாவிட்டால் நம்மால்  ஏதாகிலும் ஆகும் என்பது சிந்திக்கக்கூட முடியாதது. அப்படி வாழ நாம்  தகுதியானவர்கள் அல்ல.  இதற்கு நம்மைத் தகுதிபடுத்துபவர் பிதாவாகிய தேவனே. எனவேதான், எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார். 

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை." (யோவான் 6:37) என்றார். நமது  சுய முயற்சிகளல்ல; தேவனது கரமே நம்மைப் பரிசுத்தமாக்கிட முடியும். அவருக்கு நம்மை ஒப்புக்கொடுப்போம். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1746                                                                 🔆 ஆதவன் 18.11.2025 செவ்வாய்    

"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." (யோவான் 17:3)

இந்த உலக வாழ்வு கொஞ்ச நாளுக்குத்தான். ஆனால் இதன்பிறகு நாம் அனுபவிக்கப்போகும் வாழ்வு நித்திய பரலோக பேரின்பமாகவோ, நித்திய நரக அக்கினியாகவோ இருக்கும். நித்திய ஜீவன் எனும் முடிவில்லா பரலோக வாழ்வை நமக்கு அளிக்கவே கிறிஸ்து இயேசு உலகினில் வந்தார். அதனைப் பெற்றுக்கொள்ளும்  வழியையே இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். அதாவது, நாம் நித்திய ஜீவனை அடையவேண்டுமானால் பிதாவாகிய தேவனையும் அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிந்தவர்களாக வாழவேண்டியது அவசியம்.  

இன்று பிற மத சகோதரர்கள் அவர்கள் வணங்கும் தெய்வங்களுக்கு மாலை, அகர்பத்தி போன்றவற்றை ஏற்றி வழிபடுவதைப்  பார்த்துச் சில  கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் உருவப் படங்களுக்கும் சுரூபங்களுக்கும் அதுபோலச் செய்கின்றனர். இதுவே அவரை அன்பு செய்வது என எண்ணிக்கொள்கின்றனர். நாம் மெய்யாக கிறிஸ்துவிடம் அன்பு செலுத்துவோமானால் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு நாம் நீங்கலாகிவிடுவோம்; அவை நமக்கு அர்த்தமற்ற சடங்குகளாகத் தெரியவரும். இயேசு கிறிஸ்து கூறினார், "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்." ( யோவான் 14 : 23 )

அதாவது, வெளிப்படையான சில பக்திக் செயல்பாடுகளல்ல, மாறாக அவரது கட்டளைகளைக் கைக்கொள்வதே அன்பு. எனவேதான் கிறிஸ்துவின் அன்புச் சீடனான யோவான்,  "நாம் தேவனுடைய  கற்பனைகளைக்  கைக்கொள்வதே  அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." (1 யோவான் 5:3) என்று எழுதுகின்றார். ஆம் அன்பானவர்களே, அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே அவரிடத்தில் அன்புகூருவதாகும். 

இன்று உலகத்தில் சில குடும்பங்களில் நடக்கும் காரியங்கள் இதனை நமக்குத் தெளிவாகப் புரியவைக்கும்.  சில குடும்பங்களில் பிள்ளைகள் எவ்வளவு நல்ல உயர்ந்த நிலையில் இருந்தாலும் தாய் தகப்பனைச்   சரியாகக் கவனிப்பது கிடையாது. உணவோ, பொருளாதார உதவியோ செய்வது கிடையாது. ஆதரவற்ற முதியோர்களாக அவர்கள் வாழ்ந்துகொண்டிருப்பர். ஆனால் அவர்கள் இறந்தவுடன் அதே பிள்ளைகள் ஓடிவந்து மிகச் சிறப்பாக அவர்களது இறுதிச் சடங்கையும் அதன்பின்னர் மேலான விருந்தையும் ஏற்பாடுசெய்வார்கள். 

இது அவர்கள் தாய் தகப்பனை நேசிப்பதால் அல்ல, மாறாகத் தங்களது செல்வச் செழிப்பையும் பதவியையும் மற்றவர்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவே. உயிரோடிருக்கும் பெற்றோரை கவனிக்காமல், அவர்களுக்கு உதவாமல், அவர்கள் கேட்டதைக் கொடுக்காமல் அவர்கள் இறந்தபின்னர் இப்படித் தேவையில்லாத செயல்களைச்  செய்வது எப்படி அவர்களை அன்புசெய்வதாகும்? 

கிறிஸ்தவ வாழ்விலும் பலர் இப்படியே இருக்கின்றனர். தங்களது ஆத்துமாவில் ஜீவனற்றவர்களாக இருந்துகொண்டு ஆலயங்களுக்கு ஆயிரக்கணக்கான உதவிகளைச் செய்கின்றனர். நாம் மேலே பார்த்த உதாரணத்தைப்போல  தாய் தகப்பனுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருந்துகொண்டு அவர்கள் இறந்தபின்னர் ஓடிவந்து சில செயல்களை செய்து தங்களது பெருமையை ஊருக்குக் காட்டும் மக்களைப்போல தங்களது செல்வச் செழிப்பை மற்றவர்களுக்கு வெளிக்காட்டுவதற்கு ஆலயங்களுக்கு உதவுகின்றனர்; முதன்மையான இடங்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.  

இயேசு கிறிஸ்துக் கூறினார், "என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்." ( யோவான் 14 : 21 )

ஆம், கிறிஸ்து நமக்கு வெளிப்படவேண்டுமானால் வெளியரங்கமான பக்திக் செயல்பாடுகளல்ல; மாறாக, அவரது கற்பனைகளை நாம் கைக்கொள்ளவேண்டியது அவசியம்.  நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள  வேண்டுவோம். அப்போதுதான் அவரது கற்பனைகளை நாம் ஆவியானவரின் துணையுடன் சரியாகக் கைக்கொள்ள முடியும்; பிதாவையும் குமாரனையும் அறிந்தவர்களாகி  அவர் அளிக்கும் நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்ளமுடியும். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1747                                                                 🔆 ஆதவன் 19.11.2025 புதன்     

"வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது." ( நீதிமொழிகள் 28 : 9 )

பொதுவாக கிறிஸ்தவர்கள் அனைவருமே ஜெபிக்கின்றோம். ஆனால் நமது ஜெபங்களுக்கு பலவேளைகளில் தேவன் பதில் தருவதில்லை. இது தேவனது தவறல்ல, மாறாக பெரும்பாலும் நமது தவறாகவே இருக்கின்றது. நாம் ஜெபிப்பதை தேவன் கேட்கவேண்டுமானால் முதலில் அதற்கு நம்மைத் தகுதிப்படுத்தவேண்டியது அவசியம். 

தேவன் கேட்காத ஜெபங்களைக்குறித்து வேதத்தில் பல இடங்களில் நாம் வாசிக்கின்றோம். அவற்றில் முதலாவதாக வேதம் கூறுவது, பாவிகளுக்குத் தேவன் செவிகொடுப்பதில்லை என்பது. "பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்." (யோவான் 9:31)  

அடுத்து, பெருமைகொள்வது. தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கின்றார். எனவே, அவர்களது ஜெபங்களை அவர் கேட்பதில்லை; அவர்களுக்கு அவர் எதிராகவே இருக்கின்றார்.  "அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது." (யாக்கோ4பு 4:6)

மேலும், ஜெபம் என்பது வெறுமனே தேவனை நோக்கி நமது தேவைகளுக்காகக் கத்திக்கொண்டிருப்பதல்ல. அனால் பெரும்பாலானவர்கள் அப்படிதான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நமது ஜெபம் கேட்கப்படாமலிருக்க இது ஒரு காரணம். அப்போஸ்தலரான யாக்கோபு கூறுகின்றார், "நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்." ( யாக்கோபு 4 : 3 ) அதாவது, தேவ சித்தமில்லாத காரிங்களுக்காக ஜெபிப்பதை தேவன் கேட்பதில்லை. 

இப்படி, தேவன் கேட்க மறுக்கும் ஜெபங்களின் வரிசையில் இன்றைய தியான வசனம் கூறுகின்றது,  "வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது." என்று. "அதாவது தேவனும் வேண்டாம் அவரது வார்த்தைகளும் வேண்டாம் எனக்கு நான் கேட்பதுதான் வேண்டும்" என்று ஒருவர் கூறுவதற்கு இது ஒத்திருக்கின்றது. 

குமாரனாகிய இயேசு கிறிஸ்து பிதாவின் வார்த்தையாகவே இருக்கின்றார் என்று நாம் யோவான் சுவிசேஷத்தின் முதல் அதிகாரத்தில் முதல் வசனத்தில்  வாசிக்கின்றோம். "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது"  (யோவான் 1;1) ஆதியில் தேவனோடு இருந்த அந்த வார்த்தையே கிறிஸ்துவாக மனித உடலெடுத்து உலகினில் வந்தார். "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது." (யோவான் 1;14) என்று கூறப்பட்டுள்ளது. 

இந்தக் கிறிஸ்துவின் வார்த்தைகளே வேதம். இந்த வார்தைகளைக் கேட்காமல் இருப்பது அவரைப் புறம்பேத்  தள்ளுவது. அப்படி அவரது வார்த்தைகளைக் கேட்க மனதில்லாமல், அவற்றுக்குக் கீழ்ப்படிய மனமில்லாமல் இருந்துகொண்டு அவரிடம் ஜெபிக்கின்றோம் என்று கூறுவதில் அர்த்தமிருக்கின்றதா என்று நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். அத்தகைய ஜெபம் அருவருப்பானது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

இன்று வேதாகம வார்த்தைகளுக்கு பல கிறிஸ்தவர்களும் செவிகொடுப்பதில்லை. அவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் சபை போதனைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை தேவனுடைய வார்த்தைகளுக்குக் கொடுப்பதில்லை. ஆனால், துன்பங்களும் பிரச்சனைகளும் நெருக்கும்போது தேவ வார்த்தைகளைப் பிரசங்கிக்கும் ஊழியர்களைத்தேடி ஓடுகின்றனர். வார்த்தையான கிறிஸ்துவை நமக்குள் வரவழைப்போமானால் இப்படி ஓடவேண்டிய அவசியமே இல்லை. வேத வசனங்களுக்கு நமது செவியைச் சாய்த்து அவற்றுக்குக் கீழ்ப்படியும்போது நமது ஜெபங்களுக்குத் தேவன் பதிலளிப்பதை நாம் அனுபவிக்கமுடியும். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1748                                                                 🔆 ஆதவன் 20.11.2025 வியாழன்      

"நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை." ( 2 கொரிந்தியர் 4 : 8-9 )

கிறிஸ்துவுக்குள்  மெய்யான ஆவிக்குரிய வாழ்வு வாழும் மனிதர்களது மனநிலை மற்றும் வாழ்க்கையினை  அப்போஸ்தலராகிய பவுல் இன்றைய  தியான வசனத்தில் விளக்குகின்றார். 

துன்பங்கள், நெருக்கங்கள், சோர்வுகள், மனமடிவடைவுகள் இவைபோன்ற எதுவும் அவர்களை எதுவும் செய்திடமுடியாது. கைவிடப்பட்ட நிர்க்கதியான நிலை ஏற்பட்டாலும் தேவன் கூடவே இருக்கின்றார் எனும் உணர்வு நமது ஆவிக்குரிய வாழ்வை வெற்றியுடன் தொடரச்செய்யும். 

இப்படிக் கூறுவதால் ஆவிக்குரிய வாழ்வு வாழ்பவர்கள் மனம் சோர்வடைவதில்லை என்று பொருளல்ல; மாறாக, அப்படி சோர்வடைந்தாலும் தேவன் மேலான ஒரு ஆவிக்குரிய அனுபவத்தைக்கொடுத்து அவர்களது ஆவிக்குரிய வாழ்வை  உயிர்ப்பிப்பார். உலக மக்களைப்போல அவர்கள் தற்கொலைசெய்து அழிந்துபோகமாட்டார்கள்.

மிகப்பெரிய தீர்க்கத்தரிசியான எலியா யேசபேல் தன்னைக் கொலைசெய்ய முயலுவதை அறிந்தபோது  மனம் சோர்வடைந்து போனதை நாம் வாசிக்கின்றோம். "அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான். ( 1 இராஜாக்கள் 19 : 4- 5 )

இத்தனைக்கும்  இதே எலியா கர்த்தரே மெய்யான தெய்வம் என்பதனை வானத்திலிருந்து அக்கினியை இறக்கி மெய்ப்பித்து 450 பாலால் தீர்க்கத்தரிசிகளைக் கொன்றுபோட்டவர். அப்படித் தைரியமாகச் செயல்பட்டவர் இப்போது ஒரு பெண்ணுக்குப் பயந்து, "கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்" என்று ஜெபிக்கக்கூடிய பரிதாப நிலைக்கு வந்துவிட்டார். ஆனாலும், தேவன் அவரை மரிக்க விடவில்லை. "அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்." ( 1 இராஜாக்கள் 19 : 5 ) தனது அடியான் பசியோடு படுத்திருப்பதை தேவனால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியவில்லை.

ஆம் அன்பானவர்களே, இன்று நாமும் இதுபோல சிலவேளைகளில் நெருக்கங்கள் ஏற்படும்போது சோர்ந்து போகலாம். ஆனால், தேவன் எலியாவுக்குச் செய்ததுபோல நம்மையும்  தட்டியெழுப்பி போஜனம் தருவார்.  இது ஏனென்றால், ஆவிக்குரிய நாம் நமது உடலில் இயேசுவின் மரணத்தின் சரீரத்தை எப்போதும்  சுமந்துகொண்டிருக்கின்றோம் என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். "கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்." ( 2 கொரிந்தியர் 4 : 10 )

எனவே அன்பானவர்களே, நாம் தைரியமாக நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடவோம். நாம் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போவதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைவதில்லை;  துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போவதில்லை. தேவனுடைய அன்பின் கரம் எப்போதும் நம்மோடு கூடஇருக்கும். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1749                                                                 🔆 ஆதவன் 21.11.2025 வெள்ளி       

"மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது." ( 2 கொரிந்தியர் 4 : 17 )

ஆவிக்குரிய காரியங்கள் அனைத்தும் நாம் விசுவாசக் கண்கொண்டு பார்த்து விசுவாசிக்கவேண்டியவை. பழைய ஏற்பாட்டுக்கால பக்தர்களைப்போல நாம் கண்கொண்டு பார்த்து தேவனுக்குள் நடக்கவில்லை, மாறாக விசுவாசித்து நடக்கின்றோம். ஆம், "நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்." ( 2 கொரிந்தியர் 5 : 6 )

இப்படி நாம் தேவனை நம்பி ஏற்றுக்கொண்டு வாழ  தேவன்மேல் நாம் கொள்ளும் விசுவாசமே காரணமாக இருக்கின்றது. ஏனெனில், "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." ( எபிரெயர் 11 : 1 ) என்று வாசிக்கின்றோம்.  இப்படி,  காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

அதாவது இனிவரும் பரலோக வாழ்வு, நித்தியஜீவன், இவைகளை நாம் கண்ணால் காணவில்லை. ஆனால் அவை உண்மையானவை என்று வேதம் கூறுவதாலும் நமக்குமுன் வாழ்ந்த பரிசுத்தவான்கள் கூறுவதாலும் விசுவாசிக்கின்றோம். இப்படிக் காணாததை நாம் நம்பி விசுவாசித்து வாழ்வதுதான் விசுவாசவாழ்வு. இப்படி விசுவாச வாழ்வு வாழும்போது நாம் பல்வேறு உபத்திரவங்கள், துன்பங்களை அனுபவிக்கவேண்டியுள்ளது. ஆனால், இன்றைய தியான வசனம் கூறுகின்றது அவை யாவுமே அதி சீக்கிரமாக நீங்கிவிடும் என்று. மேலும், இதனை உபத்திரவம் என்று வெறுமனே கூறாமல், "லேசான உபத்திரவம்" என்று கூறுகின்றது.  

இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் பாடுகள் இனி வரவிருக்கும் மகிமைக்குமுன்னால் அற்பமானவைகளே; அவற்றோடு இந்தப் பாடுகளை ஒப்பிடமுடியாது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்". (ரோமர் 8:18) என்று கூறுகின்றார். ஆம்,  "ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்." ( 2 கொரிந்தியர் 4 : 18 )

எனவே, நாம் இந்தச் சிந்தனை உள்ளவர்களாக நமது ஆவிக்குரிய ஓட்டத்தைத் தொடரவேண்டியது அவசியம். உலகத்தில் நாம் காணும் துன்பங்கள், பிரச்சனைகள் இவை நமது விசுவாச வாழ்வைத் தகர்த்திடாமல் நாம் வாழவேண்டியது அவசியம். துன்பங்கள் தொடரும்போது, "அதிசீக்கிரத்தில் நீங்கும் இந்த இலேசான  உபத்திரவம்" என்றும்,  "நான் இப்போது அனுபவிக்கும் பாடுகள் இனி எனக்கு வெளிப்படவிருக்கும்  மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல" என்றும்  நமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொள்வோம்.  

அப்போஸ்தலரான பவுல் இப்படியே தனது வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடர்ந்து வெற்றிபெற்றார்; அதனையே இன்றைய தியான வசனத்தில் நமக்கு அறிவுரையாகக் கூறியுள்ளார். ஆம் அன்பானவர்களே, காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம். எனவே, விசுவாசத்தோடு நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடருவோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1750                                                                 🔆 ஆதவன் 22.11.2025 சனி  

"யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்? பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது." ( ஏசாயா 40: 27- 28)

அன்பானவர்களே, இன்றைய தியான வசனம் மனம் சோர்ந்து விரக்தியில் வாழும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளைத் தருகின்றது. 

நம்மில் பலரும் வாழ்வில் துன்பங்கள், பிரச்சனைகள், சோர்வுகள் ஏற்படும்போது சில வேளைகளில், "ஐயோ, நான் படும் கஷ்டங்களை தேவன் உணரவில்லையா? ஏன் அவர் எனக்கு நியாயம் செய்யாமல் இருக்கின்றார்? எனது ஜெபங்களை ஏன் அவர் கண்டுகொள்ளமாட்டேன் என்கின்றார்? " எனப் புலம்புவதுண்டு.  ஆனால், தேவன் அப்படிப் புலம்பும் தனது மக்களைப் பார்த்துக் கேட்கின்றார்,   "என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்கிறாய் ?"

மட்டுமல்ல, "அன்பான மகனே, மகளே,  இந்தப் பூமியையும் அண்டவெளியையும் படைத்து ஆளும் நான் அப்படி உனக்கு உதவ முடியாமல்  சோர்ந்து போய்விடவில்லை; இளைப்படைந்துவிடவுமில்லை, இதை நீ அறிந்துகொள். எனது  புத்தியும் வழிகளும்  ஆராய்ந்துமுடியாதது" என்று நமக்கு மேலும் திடனளிக்கிறார் தேவன்.  

சில காரியங்களுக்குப் பதில்தர  தேவன் காலதாமதம் செய்வது நமது வாழ்வில் மேலான காரியத்தை அவர் செய்ய விரும்புவதை பலவேளைகளில் குறிப்பதாக இருக்கின்றது. உதாரணமாக, லாசர் இறந்தபோது நடந்த சம்பவங்களை எண்ணிப்பாருங்கள். லாசர் நோயுற்று மரணமடையும் நிலையில்  இருந்ததை அவன் சகோதரிகள் இயேசு கிறிஸ்துவுக்குச் சொல்லியனுப்பினர்.  "இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார்" ( யோவான் 11: 4 ) என்று கூறினாரேத்  தவிர  உடனே லாசரை குணமாக்கச் செல்லவில்லை. 

"அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார்." ( யோவான் 11: 6) என்று வாசிக்கின்றோம். அப்போது லாசருவின் சகோதரிகள் என்ன எண்ணியிருப்பார்கள்? எங்கள் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றுதானே எண்ணியிருப்பார்கள்? எனவேதான் லாசர் மரித்து அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களுக்குப்பின் இயேசு வந்ததால் அவன் சகோதரி  "மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்."  ( யோவான் 11: 21) என்றாள்.

ஆனால், இயேசுவின் இந்தக் காலதாமதம் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. அதற்காகவே தேவன் காலதாமதம் செய்தார். ஆம், அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. நாம் மனித புத்தியின்படியும் காலங்களின்படியும் எண்ணுகின்றோம்; ஆனால், தேவனின் புத்தியும் காலங்களும் வேறு. 

எனவே, இன்றைய தியான வசனம் கூறுவதன்படி ஆவிக்குரிய யாக்கோபாகவும் இஸ்ரவேலாகவும் நாம் இருப்போமானால் துன்பங்கள் தொடரும்போது நமது வழிகள் கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், நமது நியாயம் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் கலங்கவேண்டியதில்லை.  பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்து போகாமல், இளைப்படையாமல் நமக்கு ஏற்ற பதிலைத் தந்து மகிழச்செய்வார். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1751                                                                 🔆 ஆதவன் 23.11.2025 ஞாயிறு   

"என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே, நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதன் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்." ( ஏசாயா 41: 8-9)

நேற்றைய தியான வசனத்தைப்போலவே இன்றும் நமக்குத் தேவன் ஆறுதலனான வார்த்தைகளைத் தருகின்றார். ஒரு காலத்தில் நாம் தேவனை அறியாதவர்களாக வாழ்ந்துவந்தோம். ஆனால் தேவன் கிருபையால் நம்மை இரட்சித்துத் தனது பிள்ளைகளாக  ஏற்றுக்கொண்டார். இதனையே அவர், நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதன் எல்லைகளிலிருந்து அழைத்து வந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று கூறுகின்றார். 

இப்படித் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட நாம் இஸ்ரவேலராகவும் அவரது  சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியாகவும் இருக்கின்றோம். இதனையே, "ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று." (கலாத்தியர் 3:14) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். ஆம் அன்பானவர்களே, புறஇனத்தாரான நாம் கிறிஸ்து இயேசுவின்மூலம் இந்த ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்கின்றோம். 

இப்படி நாம் அவருக்கேற்ற ஆபிரகாமின் சந்ததியாக இருப்பதால் நம்மைப்பார்த்து, "நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்" என்று அன்போடு கூறுகின்றார். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் தன்னிடம் வரும் எவரையும் தள்ளிவிடமாட்டேன் என்று கூறவில்லையா? "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" (யோவான் 6:37) என்று கூறினாரே ?

கிறிஸ்து இயேசுவை நாம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும்போது நாம் ஆபிரகாமைப்போல நிரந்தரமாக அவரது நண்பர்களாகின்றோம். எனவே, ஆபிரகாமுக்கு தேவன் வாக்களித்த அதே ஆசீர்வாதங்களும் நமக்கு உரியவை ஆகின்றன. 

எனவே எந்தச் சூழ்நிலையிலும் நாம் மனம் கலங்காமல் இருப்போம். துன்பங்கள், பிரச்சனைகள் நம்மை நெருக்கும்போது, "நான் தேவனின் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததி; தேவன் பூமியின் கடைஎல்லையிலிருந்து என்னை எடுத்து வந்துள்ளார்; என்னைப்பார்த்து நீ என் தாசன் என்கின்றார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், உன்னை வெறுத்துவிடவில்லை என்று கூறுகின்றார்" என்று நமக்குள்ளே கூறிக்கொள்வோம்.  

நமது வாழ்வில் துன்பங்கள், சோதனைகள் துரத்தும்போது தேவனின் இந்த வார்த்தைகள் நம்மை மனம் பதறாமல் இருக்கச்செய்யும். 



"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1752                                                                 🔆 ஆதவன் 24.11.2025 திங்கள்    

"நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்." ( 2 கொரிந்தியர் 12 : 10 )

பொதுவாக அனைவருமே வாழ்வில் எல்லாவற்றிலும் சிறந்தவையே நமக்குக் கிடைக்கவேண்டும், நிகழவேண்டும் என எண்ணுவோம். நல்ல பலமும் உடல் நலமும் வேண்டும்; நல்ல செழிப்பான வாழ்க்கை அமையவேண்டும், வாழ்வில் துன்பங்கள், நெருக்கடிகள் ஏற்படக்கூடாது என்று எண்ணுவோம்.   ஆனால் இன்றைய தியான வசனத்தில் பவுல் அப்போஸ்தலர் வித்தியாசமான மனநிலையுள்ளவராக; நமது எண்ணங்களுக்கு மாறாகக் கூறுகின்றார். 

"எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்" என்கின்றார் அவர். இது ஏன் என்பதனை நாம் புரிந்துகொள்வோமானால் நாமும் நமது வலிமையிலும், பொருளாதார வளர்ச்சியிலும் மேன்மைபாராட்ட மாட்டோம்; நமது பலவீனங்களிலும், நோய்களிலும், துன்பங்களிலும் மனம் மடிந்து போகமாட்டோம்.

மேலும், நமக்கு நல்ல உடல் நலமும் பண வசதியும் நெருக்கடியற்ற வாழ்க்கையும் அமையுமானால் நாம் தேவனை நினைக்கமாட்டோம். நமது உடல் பலமும் அதிகார பலமுமே எல்லாவற்றையும் நமக்குச் சம்பாதித்துத் தந்தது என எண்ணிக்கொள்வோம். மற்றவர்களை மதிக்கமாட்டோம். 

எனவேதான் இஸ்ரவேல் மக்களுக்குத் தேவன் மோசே மூலம் தேவன், "என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்." ( உபாகமம் 8 : 17, 18 ) என்று கூறினார். 

ஆம்  அன்பானவர்களே, செல்வத்தையும் இதர வசதிகளையும், நோயற்ற வாழ்வையும் நமக்குக் கொடுப்பவர் தேவனே. இதனை நாம் நமது பலவீனங்களில்தான் உணரமுடியும். ஒன்றுமில்லாத வேளைகளில், அடுத்த வேளை  செலவுக்குப் பணமில்லாமல் சிறுமைப்பட்டு நாம் தேவனை நோக்கிவேண்டும்போது அவரது அதிசயமான வல்ல கரத்தின் வலிமையை நாம் வாழ்வில் கண்டுணர முடியும். மருத்துவர்களால் கைவிடப்பட்ட குணமாக்க முடியாத நோயினால் வருந்தும்போதுதான் தேவனை நோக்கி ஜெபித்து அவரது வல்லாமையினால் குணமாகும் அதிசயத்தை வாழ்வில் கண்டுணர முடியும். ஆகையால்தான்,  "கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்" என்கின்றார் பவுல்.

ஆவிக்குரிய வாழ்வில் மேலான அனுபவங்களைப் பெற்று அனுபவித்தவர் அபோஸ்தலரான பவுல். அதனால் தான் பெருமை அடைந்துவிடக்கூடாது என்பதற்காகத்  தேவன் தனது உடலில் முள் போன்ற ஒரு நோயைக் கொடுத்தவுள்ளதாக அவர் கூறுகின்றார். "அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது." (2 கொரிந்தியர் 12: 7) என்கின்றார் அவர். 

ஆம் அன்பானவர்களே, நமது பலவீனமான வாழ்க்கையில் வரும் முட்களால்தான் தேவனது வல்லமையினை; அவரது கிருபையை;  நாம் அனுபவித்து உணரமுடியும். இன்று ஏதாவது பலவீனத்தால் பாதிக்கப்பட்டு கவலையுடன் இருப்பீர்கனென்றால் தேவன் பவுலிடம் கூறியதுபோல உங்களிடமும்  கூறுகின்றார், "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்"   (2 கொரிந்தியர் 12:9)

ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை நம்மேல் தங்கும்படி, நமது பலவீனங்களைக்குறித்து சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவோம். தேவ கிருபையினைச் சார்ந்துகொள்வோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1753                                                                 🔆 ஆதவன் 25.11.2025 செவ்வாய்     

"ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்." ( லுூக்கா 23: 42)

இன்று பலரும் பல்வேறு விதங்களில் ஜெபங்களைச் செய்துகொண்டிருக்கின்றோம். மேலும், கிறிஸ்தவ சபைகளில் பல்வேறு ஜெப முயற்சிகள் செய்யப்படுகின்றன. நள்ளிரவு ஜெபம், உபவாச ஜெபம், சங்கிலி ஜெபம்,  உள்ளிருப்பு ஜெபம், இளைஞர் ஜெபம், பெண்கள் கூடுகை, விசேஷித்த ஜெப ஆராதனை என்று இந்த ஜெப பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. ஆனால், இத்தகைய ஜெபக் கூடுகைகளில் பாவத்தைக்குறித்து எந்த அளவுக்கு மக்களுக்கு உணர்வூட்டப்படுகின்றது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அன்பானவர்களே, மனம் திரும்புதல் இல்லாத எந்த ஜெபமும் தேவனுக்குமுன் ஏற்புடையதல்ல என்பதனை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். . 

இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கும் ஜெபம் பெரிய பரிசுத்தவான் செய்த நீண்ட ஜெபமல்ல; மாறாக, கொலைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு திருடன் செய்த விண்ணப்பம்.  வெறும் ஏழு அல்லது எட்டு வார்த்தைகளைக்கொண்ட ஜெபம். இன்று கிறிஸ்தவர்கள் வேதாகமத்திலிருந்து பல்வேறு ஜெபங்களை உதாரணம் கொண்டு ஜெபிக்கின்றனர். யாபேஸின் ஜெபம், மோசேயின் ஜெபம், தாவீது, சாலமோன் இவர்களின் ஜெபம் இவற்றை பலர் பலவேளைகளில் பயன்படுத்துவதுண்டு. ஆனால் இந்தக் கொலைக்  குற்றவாளியின் ஜெபம் அவற்றைவிட மேலானது; இது வார்த்தைகளின் அலங்கரிப்பல்ல; மாறாக, மனம் வருந்தி இருதயத்திலிருந்து அவன் செய்த விண்ணப்பம். 

இந்த ஜெபத்தை அவன் இயேசு கிறிஸ்துவிடம் ஏறெடுக்குமுன் தன்னோடு சிலுவையில் அறியப்பட்டிருந்த சக திருடனை நோக்கிக் கூறும் வார்த்தைகளைக் கவனித்துப்பார்ப்போம். "நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?  நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே" ( லுூக்கா 23 : 40-41 ) என்கின்றான். 

அதாவது, அவன் தனது பாவத்தை உணர்ந்திருந்தான்; தான் தண்டிக்கப்படுவது முறையானதுதான் என்பதனை ஏற்றுக்கொண்டான். இயேசு கிறிஸ்து பாவமற்றவர் என்பதனையும், அவரே பாவங்களை மன்னிக்கின்ற மேசியா என்பதனையும் உணர்த்துகொண்டவனாக இருந்தான். எனவேதான், "ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்." என்று வேண்டினான். "இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( லுூக்கா 23 : 43 )

ஆம் அன்பானவர்களே, மனம் திரும்புதல் இல்லாத நீண்ட நெடிய ஜெபங்களும் உபவாசங்களும் தேவனுக்குமுன் எடுபடாது. மாறாக, மெய்யான மனஸ்தாபத்துடன் மனம் வருத்தி நாம் செய்யும் சிறு ஜெபத்தையும் தேவன் கனிவுடன் ஏற்றுக்கொள்கின்றார். வாழ்க்கையில் திருட்டையே தொழிலாகக்கொண்டு வாழ்ந்தவன் மனம்திரும்பி செய்த சிறு ஜெபத்துக்கு, "இன்று என்னோடுகூட பரதேசியில் இருப்பாய்" எனும் மேலான  ஒரு பதிலை கிறிஸ்துவிடம் பெற்றுக்கொண்டான்; பரலோக வாழ்வைப்  பெற்றுக்கொண்டான் என்றால் நமது ஜெபத்தைத் தேவன் கேட்கமாட்டாரா? 

நாம் நம்மையே நிதானித்துப்பார்ப்போம். நமது பாவ வழக்கை என்றாவது நம்மை இருதயத்தில் குத்துதல் ஏற்படுத்தியிருக்கின்றதா? இல்லையானால் எந்த உணர்வுமில்லாமல் வெறுமனே ஜெபித்துக்கொண்டிருக்கின்றோமா? ஆம் அன்பானவர்களே, "எனக்கு ஜெபிக்கத்  தெரியாது" என்று யாரும் எண்ணவேண்டாம். இந்தத் திருடன் ஜெபித்ததுபோல நம்மால் ஜெபிக்க முடியாதா? 

இந்தத் திருடன் தனது பாவங்களை உணர்த்ததுபோல உணர்ந்து, மெய்யாகவே அந்தப் பாவங்களைச் செய்ததற்காக மனம் வருந்தி அவரிடம் மன்னிப்பை வேண்டுவோமானால் தேவன் நிச்சயமாக நமது பாவங்களை மன்னித்து நம்மையும் ஏற்றுக்கொள்வார்.  ஆம், "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்". (1 யோவான் 1:9)


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1754                                                                 🔆 ஆதவன் 26.11.2025 புதன்      

"நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்." ( ஏசாயா 62: 3)

கிறிஸ்தவர்களில் பலரும் பொதுவாக இன்றைய தியான வசனத்தை இறந்தவர்களது கல்லறைகளிலும், நினைவு நாள் அட்டைகளிலும் அச்சிடுவார்கள்.  ஆனால் இந்த வசனம் இறந்தவர்களுக்காக அல்ல; மாறாக, கிறிஸ்துவால் மீட்கப்பட்ட மக்களுக்குக் கூறப்பட்டுள்ள வசனமாகும். 

ஒரு அரசனுக்கு கிரீடம், மணிமுடி என்பன அதிகாரத்தையும் மேன்மையையும் வெளிப்படுத்தும் அடையாளங்களாகும். அதாவது, இந்த வசனத்தில், நாம் ஒரு மதிப்பின் வலியுறுத்தலைக் காண்கிறோம். "அழகுள்ள கிரீடம்" மற்றும் "ராஜமகுடம்" ஆகிய உருவகங்கள் சிறப்பானவை. இவை,  அழகு மற்றும் விசேஷத்தைக் குறிக்கிறது. இது கடவுளுடைய மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல; அவர்கள் அவருடைய பார்வையில் விலைமதிப்பற்றவர்கள் என்பதைக் குறிக்கிறது. "கிரீடம்" என்ற சொல் மதிப்புமிக்க மற்றும் உயர்த்தப்பட்ட ஒன்றைக் குறிக்கிறது, இது ஒவ்வொருவருக்கும் கடவுளின் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க இடம் உண்டு என்பதை உணர்த்துகிறது.

இந்த வசனத்தின் ஆழத்தை நாம்  புரிந்துகொள்ள, இந்த வசனம் கூறப்பட்ட சூழல் மற்றும் அதன் பொருளை நாம் முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும்.  ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேலர்களுக்கு ஆறுதல், நம்பிக்கை மற்றும் மீட்பின் செய்திளை வழங்குவதில் பெயர்பெற்றவர். இஸ்ரவேல்  மக்கள் நாடுகடத்தலில் இருந்து திரும்பி வந்து, எருசலேமில் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் பல சவால்களை  எதிர்கொண்டனர். இந்த வசனத்தில் உள்ள உருவகம், கடவுள் தம் மக்களை உயர்த்துவார்  என்ற வாக்குறுதியைப் பிரதிபலிக்கிறது. அதாவது, ஏசாயா இந்த வசனத்தை அடிமைகளாக நாடுகடத்தப்பட்ட இஸ்ரவேல் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்த பிறகு அவர்களின் அதிகாரம் மீட்டெடுக்கப்படுவதை குறிப்பிட எழுதுகின்றார். 

இன்றைய புதிய ஏற்பாட்டுக்கால மக்களாகிய நாம் பாவத்துக்கு அடிமைகளாக வாழ்ந்து கிறிஸ்துவால் மீட்கப்பட்டு  கடவுளின் கையில் மகத்தான ஒருவராக மாற்றப்படுகிறோம் என்பதை இந்த வசனம் குறிக்கின்றது. மட்டுமல்ல, மீட்கப்பட்ட நம்முடைய உள்ளார்ந்த மதிப்பை இது நமக்கு நினைவூட்டுகிறது. நாம் கடவுளின் பிரியமான பிள்ளைகள் என்ற நம்முடைய அடையாளத்தை உணர்ந்துகொள்ள இது ஒரு ஊக்க வசனமாக அமைகிறது; நாம் தேவனால் ஒரு நோக்கத்துடனும் முக்கியத்துவத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

மீட்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் தேவனுக்கு ராஜாக்களும் ஆசாரியர்களுமாக இருக்கின்றோம். "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." (1 பேதுரு 2: 9) என்று பேதுரு குறிப்பிடுகின்றார். 
 
ஆம் அன்பானவர்களே, உலக வாழ்வில் ஒருவேளை வறுமை நம்மை வாட்டி வதைக்கலாம் ஆனால், கிறிஸ்துவால் மீட்கப்பட்ட நாம் அனைவரும் பிச்சைக்காரர்களல்ல; ராஜாக்கள். எனவேதான் ஏசாயா தொடர்ந்து இன்றைய தியான வசனத்தின் அடுத்த வசனத்தில் கூறுகின்றார், "நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப்பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்." ( ஏசாயா 62: 4) நாம் கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், ராஜமுடியுமாயிருகின்றோம் என்பது எத்தனை மேன்மையான காரியம்!! எனவே மகிழ்ச்சியாய் இருப்போம். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1755                                                                 🔆 ஆதவன் 27.11.2025 வியாழன்       

"நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்." ( எபேசியர் 5: 17)

இன்றைய தியான வசனம், நாம் தேவ சித்தமறிந்த புத்தியுள்ளவர்களாக வாழவேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகின்றது. நம் ஒவ்வொருவரது வாழ்வைக்குறித்தும் தேவனுக்கு ஒரு நோக்கம் உண்டு.  அதனை நாம் உணர்ந்துகொள்வதுதான் அறிவுடைமை என்று பவுல் கூறுகின்றார். அப்படி உணர்ந்துகொள்ளாதவர்கள் மதியற்றவர்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் என்கின்றார். 

ஒரு பள்ளி மாணவனுக்கு இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றிபெறுவதுதான் இலக்காக இருக்கமுடியும். அதற்கு அந்த மாணவன் தேர்வுக்கு முந்தினநாள் மட்டும் முயற்சி செய்தால் போதாது.  ஆண்டு முழுவதும் அவன் முயலவேண்டும். கொடுக்கபட்டக் காலத்தைச் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும். அப்படிப் பயன்படுத்தாத மாணவன் மதியற்றவன். இதுபோலவே ஆவிக்குரிய மனிதன் தன்னைக்குறித்த தேவ சித்தத்தை அறிந்திருக்கவேண்டு; அது நிறைவேறுவதற்காக செயல்படுபவனாக இருக்கவேண்டியது அவசியம்.  

இன்றைய தியான வசனம், கிறிஸ்தவ வாழ்வில் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை ஞானமாகப் பயன்படுத்துவதைப் பற்றி நமக்குக் கற்றுத்தருகின்றது.  நம்முடைய வாழ்வில் தேவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட தருணங்களைப் பற்றியும் உணர்வுள்ளவர்களாய் நாம் இருக்க வேண்டும் என்று உணர்த்துகின்றார் பவுல். நம்முடைய கவனத்தை எளிதில் கவர்ந்துவிடும் உலக இச்சைகள் நிறைந்த ஒரு உலகில் நாம் வாழ்கிறோம், அவை  நம்மை தேவனுடைய பாதையிலிருந்து  விலகிச் செல்ல வழிவகுக்கும். நன்மையான காரியங்களுக்காகவும், மற்றவர்களுடன் நம்முடைய விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளைத் தேடுவதிலும் நாம் முன்னோக்கிச் செயல்பட வேண்டும். 

"நாட்கள் பொல்லாதவைகளானதால்" என்ற சொற்றொடர் இந்த உலகினில் நாம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளால் நமது ஆவிக்குரிய வாழ்வு பாதிக்கப்படும் சூழல் நமக்கு உண்டு என்று எச்சரிக்கின்றது.  அனால், நாம் நம்முடைய செயல்கள் மூலம் ஒரு நேர்மறையான தாக்கத்தை உருவாக்க முடியும். நம்முடைய இருளான வாழ்க்கையில் ஒளியைப் பிரகாசிக்க ஆவன செய்ய நம்மால் முடியும். அதற்கு நாம் நமக்கு உலகினில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் தகுதியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.  

உலக வாழ்வில் நாம் சுறுசுறுப்பாக இருப்பது போல ஆவிக்குரிய காரியங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டியது அவசியம்.  ஆனாலும்,  செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து முடிப்பது மட்டுமல்ல, எல்லா காரியங்களையும் கிறிஸ்தவ அடிப்படை காரணிகளாகிய தயவு, அன்பு, மற்றும் இரக்கம் போன்ற முக்கியமான காரியங்களில் நாம் கவனத்தைச் செலுத்த வேண்டியது அவசியம். எனவேதான், "உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது." (1 கொரிந்தியர் 16:14) என்று கூறுகின்றார் பவுல். நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தருணமும் அன்பை வெளிப்படுத்த  ஒரு வாய்ப்பாக இருக்க முடியும். அதனை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஆம், கிறிஸ்தவ வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்று பவுலின் அறிவுறுத்தல் நமக்கு நினைவூட்டுகிறது.

உலகினில் நமக்குக் கொடுக்கப்பட்ட வாழ்நாள்  காலம் எவ்வளவு என்று நமக்குத் தெரியாது. எனவே, நாட்கள் குறுகியதாகவும் பொல்லாதவைகளாகவும் இருப்பதால் அவற்றை தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்வோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1756                                                                 🔆 ஆதவன் 28.11.2025 வெள்ளி        

"சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்." ( சங்கீதம் 9: 9)

இந்த உலகத்தில் தேவன்மேல் நம்பிக்கையும் விசுவாசமும் இன்றும் மக்களிடையே நிலைத்திருக்கக் காரணம் தேவன் பல மனிதர்களை சிறுமையானவர்களாகவும் எளிமையானவர்களாகவும் வைத்திருப்பதால்தான். வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது, செல்வம் படைத்த பெரிய மனிதர்களல்ல;  மாறாக,  சிறுமைப்பட்ட மக்களே தேவன்மேல் அதிகம் விசுவாசம் கொண்டு வைராக்கியமாக வாழ்ந்ததை நாம் காணலாம். மேலும், செல்வந்தர்கள் தங்களது செல்வத்தைப் பெருக்கவும், தங்கள் பெருமையினை வெளிக்காட்டவும் தேவ பக்தியுள்ளவர்களாக நடிக்கின்றனர். பொதுவாக, மேலான ஆவிக்குரிய அனுபவங்கள் மிகுந்த செழிப்பான வாழ்க்கை வாழ்பவர்களிடம் இருப்பதில்லை. 

இதற்குக் காரணம், சிறுமையும் எளிமையான மக்கள் தாங்கள் நெருக்கப்படும் காலங்களில் விசுவாசத்தில் தேவனைச்  சார்ந்துகொண்டு   அவரது வல்லமையுயையும், தேவன் அளிக்கும்  விடுதலையளிக்கும் இன்பத்தையும்  வாழ்வில் அனுபவித்தவர்கள். அவர்கள் தங்களது அனுபவங்களைத் தங்களது பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கின்றனர்.  

வேதாகமத்தை வாசிக்கும்போது சாதாரண ஏழை எளிய மக்களே  நமது ஆவிக்குரிய வாழ்விற்கு அதிகப் படிப்பினைகளைத் தருகின்றனர். தாவீது சிறுமையில் வாழ்ந்தபோது நெருக்கப்பட்டு  தேவனையே சார்ந்துகொண்டு அவரையே தஞ்சமாகக்கொண்டு வாழ்ந்து ராஜாவாக உயர்த்தப்பட்டார். மேலும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, நகோமி, கிதியோன் போன்று அனைவரும் தாழ்நிலையிலிருந்து நெருக்கப்பட்டு தேவனை நோக்கிப் பார்த்து அவரையே தஞ்சம் என்று வாழ்ந்தவர்களே. 

தனது வாழ்வில் கண்ட அனுபவத்தால் இன்றைய தியான வசனத்தைத் தாவீது கூறுகின்றார். ஆம், "எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை." ( சங்கீதம் 9: 18) என்று அவர் தொடர்ந்து கூறுகின்றார். 

தேவனுக்குப் பயந்த உண்மையுள்ள வாழ்க்கை வாழ்வோமானால் தேவன் தலைமுறை தலைமுறையாக எளியவர்களை ஆசீர்வதித்து உயர்த்துவார் என்று அன்னை மரியாளும் கூறுகின்றார். "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.  தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்." ( லுூக்கா 1: 50- 52) என்கிறார் அவர். நமது இருதய சிந்தையில் அகந்தை இருக்குமானால் அதனை அகற்றி இருதயத் தாழ்மையை வேண்டுவோம்.

அன்பானவர்களே, இன்று ஒருவேளை நமது பிரச்சனைகளைப் பார்த்து நாம் அவநம்பிக்கைக் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் அத்தகைய அவநம்பிக்கையை நம்மைவிட்டு அகற்றிட இன்றைய தியான வசனம் நமக்கு உதவியாக இருக்கின்றது. ஆம், நமது தேவன் சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். எனவே, மற்ற நேரங்களைவிட நெருக்கடியான வேளைகளில் நாம் தேவனை நோக்கி அதிக உறுதியான விசுவாசத்துடன் வாழவேண்டியது அவசியம். 

கர்த்தருக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழ உறுதியெடுப்போம். "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது."


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1757                                                                 🔆 ஆதவன் 29.11.2025 சனி         

"ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்." ( ஏசாயா 30: 18)

தேவன்மேல் நம்பிக்கைக் கொள்ளாமல் தங்களது சுய பலத்தையே நம்பி வாழும் மக்கள்தான் இந்த உலகத்தில் பெரும்பாலானவர்களாக இருக்கின்றனர்.  இந்த மக்கள் வாழ்வில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அவற்றிலிருந்த்து விடுதலைபெற, தேவனை நோக்கிப் பார்ப்பதைவிட தங்களது சுய பலத்தை நம்புகிறவர்களாகவே இருப்பார்கள்.  ஆனால்,  இப்படி வாழும்போது பிரச்சனைகள் நம்மைத்   தொடர்ந்து துரத்தவேச்  செய்யும். 

இன்றைய தியான வசனத்தை எழுதும் ஏசாயா தீர்க்கத்தரிசி முந்தின வசனங்களில் கூறுகின்றார். "அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த் துரத்துவார்கள்." ( ஏசாயா 30: 16) என்று. ஆம் அன்பானவர்களே, தேவனை விட்டு சுய பலத்தை நம்பி இப்படிப் பிரச்சனைகளுக்குத் தப்பி ஓடிவிடலாம் என்று எண்ணுகிறீர்கள் ஆனால் உங்களைத் துரத்தும் பிரச்சனைகள் உங்களை வேகமாய்த்  துரத்தும்  என்கிறார் தேவனாகிய கர்த்தர். 

ஆனால் அன்பானவர்களே, நமது தேவன் அன்பாகவே இருப்பதால் நம்மை விடுவிக்க அவர் ஆர்வமுள்ளவராகவே இருக்கிறார். அதனையே இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது,  நீங்கள் இப்படி நீங்கள் தேவனை விட்டுவிட்டு உங்கள்  சுய பலத்தை நம்பி ஓடினாலும், "உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கிவான்கள்." 

நம்முடைய தேவன் நீதி செய்கிற தேவனாக இருக்கின்றார். எனவே அவர் நம்மைக் கைவிடமாட்டார். நாம் இப்படி அவரைவிட்டு ஓடினாலும் நமக்கு இரங்கும்படி அவர் காத்திருக்கின்றார். எனவே, நாம் அவருக்கு நேராகத் திரும்பி அவருக்குப் பொறுமையாகக் காத்திருப்போமானால் நாம் பாக்கியவான்களாக இருப்போம். நாம் வேண்டும் காரியங்களில் நமக்கு அவர் நீதிசெய்வார். ஆம், நாம் அவருக்குப்  பொறுமையுடன் காத்திருக்கவேண்டியது அவசியம். 

இன்றைய தியான வசனம் கூறுகின்றது, "உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்; உங்கள்மேல் மனதுருகும்படி அவர் எழுந்திருப்பார்" என்று. இதனையே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அநீதியுள்ள ஒரு நியாயாதிபதி குறித்துக் கூறிய உவமையில் (லூக்கா 18) கூறினார். ஒரு விதவை அந்த நீதிபதியிடம் நீதிவேண்டி அவனைத் தொடர்ந்து தொந்தரவு செய்துக்கொண்டே இருந்தாள். அவளது உபத்திரவம் தாங்கமுடியாமல் அவளுக்கு அவன் நீதி வழங்கினான் என்று கூறுகின்றார்.   "அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமல் இருப்பாரோ ? " ( லுூக்கா 18: 7)

இதுபோலவே, தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் தேவன் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயம் செய்கிறார் என்று இயேசு கிறிஸ்து இந்த உவமை வழியாக நமக்குப் போதிக்கின்றார். ஆம், சுய பலத்தை நம்பி ஓடாமல் கர்த்தருக்குக் காத்திருக்கின்றவர்களுக்கு   கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள். அப்படிக் காத்திருக்கும் மக்களுக்கு இரங்கும்படி கர்த்தரும்  காத்திருப்பார். எனவே, நமது முயற்சிகளையும் பலத்தையும்  மட்டுமே நம்பிக்கொண்டு வாழாமல் நமது வாழ்வில் கர்த்தருக்கு முன்னுரிமைகொடுத்து பொறுமையுடன் காத்திருப்போம். அப்போது பாக்கியவான்களாகவும் இருப்போம்.


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1758                                                                 🔆 ஆதவன் 30.11.2025 ஞாயிறு         

"என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார்." ( எசேக்கியேல் 37: 14)

நாம் உயிருடன் இருக்கின்றோம் என்பதற்கு அடையாளம் நமது சுவாசம்தான். ஒருவர் மரணத்தருவாயில் இருக்கும்போது அவருக்கு இன்னும் உயிர் இருக்கின்றதா இல்லையா என்று பார்ப்பதற்கு அவரது மூக்கின்மேல் கைகளைவைத்து நாம் சோதிக்கின்றோம். அதுபோல, ஆவிக்குரிய வாழ்வில் நாம் உயிருடன் இருக்கின்றோம் என்பதற்கு அடையாளம் ஆவியானவர்தான். 

நாம் தேவனை அறியாதவர்களாக வாழ்ந்தபோது பாவத்துக்கு அடிமையாகி ஆவியில் மரித்தவர்களாக வாழ்ந்து வந்தோம். கிறிஸ்து நமது பாவங்களை மன்னித்து நம்மைப் புதுப்பிறப்பாக்கினார். இப்படி நாம் அவரை அறிந்தபின்னர் பாவத்தின் பிடியில் சிக்காமல் இருக்கவேண்டுமானால் நமக்குள் அவரது ஆவியானவர் வந்து நம்மை ஆட்சி செய்யவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் ஆவிக்குரிய உயிருள்ளவர்களாக மாற முடியும். இதனையே, "என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்" என்கிறார் தேவனாகிய கர்த்தர். தேவனுடைய ஆவி நம்மில் இருந்தால்தான் நாம் இயேசு கிறிஸ்துவை கர்த்தர் என்று அறிந்துகொள்ளமுடியும். இதனையே, "அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

அப்போஸ்தலரான பவுல்  "ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும்,   பரிசுத்த  ஆவியினாலேயன்றி  இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்." (1 கொரிந்தியர் 12:3) என்கின்றார். 

ஆவியானவர் நம்மை நிரப்பிடவேண்டியது அவசியம் என்பதனை எசேக்கியேலுக்கு விளக்கிட தேவன் அவரை உலர்ந்த எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார்.  "மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று;  நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்." ( எசேக்கியேல் 37: 11) என்று கூறி அவற்றுக்கு அவரைக்கொண்டு தீர்க்கத்தரிசனம் கூறும்படிச் சொன்னார். 

"எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்". ( எசேக்கியேல் 37: 10) என்று வாசிக்கின்றோம்.

இன்று புதிய ஏற்பாட்டுக்காலத்தில் நாம்தான் ஆவிக்குரிய இஸ்ரவேல் வம்சத்தார். இதோ, பாவத்தினால் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று;  நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என நாம் புலம்பிடவேண்டாம். நமக்கு உயிரூட்டிட பரிசுத்த ஆவியானவர் உண்டு. அன்று எசேக்கியேலிடம்,  "கர்த்தராகிய ஆண்டவர்   இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள்." ( எசேக்கியேல் 37: 5) என்று கூறச்சொன்னதுபோல இன்றும் நமக்குச் சொல்கிறார். 

நாம் ஆவிக்குரிய உயிரடைந்தவர்களாக மாறி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ள ஆவியானவரால் நிரப்பப்படவேண்டியது அவசியம். ஆம், "அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார்." நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்,  "கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்." (மத்தேயு 7:8) எனவே ஆவியானவரைக் கேளுங்கள் என்று நமக்குக் கூறவில்லையா?

ஆம், உலர்ந்துபோயிருக்கும் நமது ஆவிக்குரிய வாழ்வு உயிரடையவேண்டுமானால் நாம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்படவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் கர்த்தருக்கென்று நிற்கமுடியும். 


No comments: