இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Wednesday, July 28, 2021

கிறிஸ்தவன் இன்றைய காலத்தில் என்ன செய்யவேண்டும் ?


                                            - சகோ . எம். ஜியோ பிரகாஷ் 


(கிறிஸ்துவின் ஒளி தங்களில் இல்லாததால் ஊழியர்கள் தாறுமாறானப் பேச்சையும் செயல்பாடுகளையும் கொண்டுள்ளனர். இன்றையக் காலச் சூழலில் கிறிஸ்தவர்கள் மற்றவர்களைப்போல் வாழாமல், வேதாகமம் காட்டும் வழியில் வாழத் தங்களை ஒப்புக்கொடுத்தாலே மிகப்பெரிய மாறுதல் உண்டாகும்) 


கிறிஸ்து அனுபவத்தைத்  தங்கள் வாழ்வில் அனுபவிக்காதவர்கள், அல்லது கிறிஸ்துவின் மறுபிறப்பு அனுபவத்தைப் பெறாதவர்கள் கிறிஸ்துவின் சுவிஷேஷப் பணியைச் செய்கிறேன் எனத்  தாறுமாறானச் செயல்களில் ஈடுபடுவதும், வேதத்துக்கு முரணான பேச்சு மற்றும் செயல்களில் ஈடுபடுவதும்  கிறிஸ்தவத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளாதததற்கு முக்கிய காரணமாகும். 


இறையியல் கல்லூரியில்  படித்துவிட்டதால் மட்டுமே ஒருவன் கிறிஸ்துவை அறிந்திட முடியாது. அதுபோல இறையியல் படிப்பு படிக்காதவன் கிறிஸ்துவை அறியாதவன் என்றும் கூறிட முடியாது. கிறிஸ்து கூறிய மறுபிறப்பு அனுபவம் பெற்று, கிறிஸ்துவை தனது வாழ்வில்  அனுபவித்து அறிந்தவன் மட்டுமே கிறிஸ்துவை அறிந்தவன். கிறிஸ்துவோடு நெருங்கிய தொடர்பில் நாளுக்குநாள் வளரவேண்டுமெனும் ஆவல் உள்ளவன் மட்டுமே கிறிஸ்துவை அறிந்தவன், பாவத்தின்மேல் அருவருப்புக்கொண்டு அதனை விட்டுவிட ஆசிப்பவன்தான் கிறிஸ்துவை அறிந்தவன்.   

 

ஆனால் இன்று இறையியல் கல்லூரிகளில் பயின்று  விட்டு வெறும் படிப்பறிவைக்கொண்டு கிறிஸ்துவை அறிவிக்க முயல்வதுதான்   கிறிஸ்தவத்தின் சாபக்கேடாக இருக்கின்றது; கிறிஸ்தவ வேதாகம வாழ்க்கை  அனுபவம்  (Biblical Practical Experience)  கொஞ்சம்கூட இல்லாத மனிதர்கள் கிறிஸ்துவைப்  போதிப்பதுதான் கிறிஸ்தவத்தின் இன்றைய  சாபக்கேடாக இருக்கின்றது; கிறிஸ்துவின் ஒளி தங்கள் வாழ்வில் பிரகாசிக்க இடம்தராமல், தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் ஊழியம் செய்வதுதான் இன்று கிறிஸ்தவத்தின் சாபக்கேடாக இருக்கின்றது.


இதனால் இவர்கள் வேதாகம வசனங்களை தேவ ஒளியில் புரிந்துகொள்ளாமல் தங்களது மூளை அறிவால் உலக அர்த்தம்கொண்டு கிறிஸ்து கூறிய மகிமையான உண்மைகளை இவர்கள் மறைத்துவிடுகின்றனர். இயேசு கிறிஸ்து உலக காரியங்களுக்காக இந்த உலகில்  வரவில்லை; உலக நீதி போதனை  செய்யவும் வரவில்லை. உலக நீதி போதனை ஞானிகள் பலர் உலகினில் வாழ்ந்துள்ளனர். பல நீதி நூல்களை எழுதியுள்ளனர். எனவே  அதற்காக கிறிஸ்து உலகினில் வந்து இரத்தம் சிந்தி மரிக்கத் தேவையில்லை.  


இந்த உலக வாழ்க்கைக்குப்பின் முடிவில்லாத ஒரு வாழ்க்கை; அதாவது நித்திய ஜீவன் உள்ளது. அதற்கு மக்களை வழிகாட்டி அதனை அடையத்  தகுதிப்படுத்திடவே இயேசு கிறிஸ்து உலகினில் வந்தார். இயேசு கிறிஸ்து மக்களுக்கு உபதேசிக்கும்போது பல்வேறு சமயங்களில்  "தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள்," ( லுூக்கா 12 : 31 ) என்று பிரசங்கித்தார். மேலும் பிலாத்துவின்முன் நியாய விசாரணையின்போது இயேசு  கிறிஸ்து இதனைத் தெளிவாகக் கூறினார்.  "என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற் குரியதல்ல என்றார்."( யோவான் 18 : 36 ) 


இதனையே அப்போஸ்தலரான யோவான், "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது." ( யோவான் 20 : 31 ) என்று கூறுகின்றார்.


இன்று விடுதலை இறையியல் (Liberation Theology) எனும் சாக்கடை உபதேசம் தங்களைப்  பாரம்பரிய கிறிஸ்தவ சபை எனப் பெருமையாகக் கூறிக்கொள்ளும் சபை ஊழியர்களால்  உபதேசிக்கப்படுகின்றது.  இதற்கு இவர்கள் இயேசு கிறிஸ்து தனது பணி  வாழ்க்கையின் துவக்கத்தில் கூறிய, "கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலை  யாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்" ( லுூக்கா 4 : 18, 19 ) என்ற வசனத்தை ஆதாரமாகக் கூறுகின்றனர். 


இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்குதல், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை,  நொறுங்குண்டவர்களை விடுதலை செய்தல்   எனும் வார்த்தைகள் சமூக அவலங்களின் மூழ்கி இருக்கும் மனிதர்களை அந்தக் கட்டுகளிலிருந்து விடுதலை பண்ணுவது என இவர்கள் அர்த்தம் கொண்டு கம்யூனிச சித்தாந்தத்தை வேதாகம வார்த்தைகளுடன் ஒப்பிட்டு விடுதலை இறையியல் (Liberation Theology) என்று ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கியுள்ளனர். 


ஆனால் இயேசு கிறிஸ்து தனது ஊழியத்தை ஆரம்பிக்கும்போது வேதாமத்திலிருந்து மேற்கோள் காட்டிய வார்த்தைகள் இறைவாக்கினர் ஏசாயா கூறியது. இயேசு கிறிஸ்து வாசித்த ஏசாயாவின் வார்த்தைகள் தொடர்ந்து பின்வருமாறு முடிவடைகின்றது:-  "சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்." ( ஏசாயா 61 : 3 ) எனவே இயேசு கூறிய வார்த்தைகள் முழுவதும் ஆவிக்குரிய பொருளினாலே தவிர உலக அர்த்தத்திலல்ல.


மேலும் இயேசு கிறிஸ்து தனது வாழ்க்கையில் எந்தக் காலத்திலும் அரசியல் போராட்டங்களிலோ அரசுக்கு எதிரான கிளர்ச்சியிலோ ஈடுபடவில்லை. ஆனால் அவரது போதனையால் கவரப்பட்டு அவரைப் பின்சென்ற மக்கள் கூட்டம் மிகுதியாகவே இவர் ஒருவேளை மக்கள் ஆதரவுடன் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிவிடுவாரோ எனும் பயம் ஆட்சியாளர்களுக்கு இருந்தது. மக்களும் அவரைத் தங்களுக்கு  ராஜாவாக ஆக்கிட முன்வந்தனர். ஆனால் அவர்  வெறுத்து ஒதுங்கினார்.


இதனை, "ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்." ( யோவான் 6 : 15 )  என வாசிக்கின்றோம். அவர் சமூக சீர்திருத்தவாதியாக இருந்தால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராஜாவாக மாறி எளிதாக சமுதாய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க முடியும். 


இயேசு கிறிஸ்து அரசாங்கத்தை மதித்தார், அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியைத் தவறாமல் செலுத்தினார். வரி வசூலிப்பவர்கள் வந்து அவரது சீடன்  பேதுருவைக் கேட்டபோது   "நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்." ( மத்தேயு 17 : 27 )


மேலும் பரிசேயர் அவரிடம் வந்து: "போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராய் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள். ( மாற்கு 12 : 14 )


"அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். " ( மாற்கு 12 : 17 ) என்று கூறப்பட்டுள்ளது. 


அப்போஸ்தலரான பவுல் அடிகளும் புரட்சி செய்யச் சொல்லவில்லை. அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து வாழவே அறிவுறுத்தினார். "எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது." ( ரோமர் 13 : 1 ) எனத் தெளிவாகக் கூறுகின்றார். மேலும், "அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்." ( ரோமர் 13 : 2 ) என்று எச்சரிக்கின்றார்.


"ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்." ( ரோமர் 13 : 7 )

 

இயேசு கிறிஸ்து சமுதாய புரட்சியாளரோ சமுதாய மறுமலர்ச்சியாளரோ அல்ல. அவர் தேவனுடைய குமாரன். அவரே கர்த்தர். கர்த்தராகிய அவரை வெறும் சமுதாய புரட்சியாளராகப் பார்ப்பவன் இன்னமும் இருளில் இருக்கின்றான் என்பதே உண்மை. 


இயேசு கிறிஸ்துவின் அடிப்படைப் போதனையை கிறிஸ்தவர்களல்லாத பிற மதத்தினர் கூட நன்கு அறிந்துள்ளனர். ஆனால் கிறிஸ்தவ மக்களை வழிகாட்டும் ஊழியர்களுக்கு அதுபற்றிய தெளிவில்லை அல்லது தெரியவில்லை. எனவேதான் இன்று  மூன்றாம்தர அரசியல் தலைவனைப்போல பேசி சிறைச்சாலைக்குச்  செல்லும் அவலநிலை  கிறிஸ்தவ ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து கூறிய மேலான ஆவிக்குரிய அனுபவத்துக்கான குணங்களை கிறிஸ்த ஊழியன் முதலில் பெற வேண்டும்.

 

"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு." ( மத்தேயு 5 : 39 )


"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்." ( மத்தேயு 5 : 44 )


ஆனால் தெரு நாய்போல சண்டை போட்டுக்கொண்டு அலையும் ஊழியர்கள் இன்று தங்களை கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் என்று  கூறிக்கொள்கின்றனர்.  "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல." ( ரோமர் 8 : 9 ) கிறிஸ்துவின் ஆவி சண்டை பண்ணுகின்ற ஆவியல்ல.


கிறிஸ்துவின் போதனையின் அடிப்படையிலேயே அப்போஸ்தலர்கள் போதித்தனர்.  "ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்."
( ரோமர் 12 : 17 ) என்கின்றார் பவுல் அடிகள். 

கிறிஸ்தவ முறைமைகளை எதிர்ப்பவர்களை நாமும் அவர்களைப்  போல எதிர்த்துச் சண்டையிட  அறிவுறுத்தவில்லை. இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் கிறிஸ்தவம் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. ஆனால் தேவனது வல்லமையினால் இன்றும் நிலைத்து நிற்கின்றது. 

"நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?" ( 1 கொரிந்தியர் 6 : 7 )

"எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள்."
( 1 பேதுரு 2 : 17 )

அப்படியானால் கிறிஸ்தவத்துக்கு எதிராகப் பேசுபவர்களை செயல்புரிபவர்களையும் நாம் ஒன்றுமே செய்யக்கூடாதா? அது கோழைத்தனமல்லவா? என்று சிலர் சொல்லக்கூடும்.  அது  கோழைத்தனமல்ல, அதுவே கிறிஸ்தவ போதனை. 


"நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடையய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்." ( 1 பேதுரு 4 : 14 ) என்கின்றார் தலைமை அப்போஸ்தலர் பேதுரு.


மேலும், "ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்." ( 1 பேதுரு 4 : 16 ) என்று கூறப்பட்டுள்ளது.


தேவன் மனிதனைப்போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்புரிபவர் அல்ல. அவர் நீடிய பொறுமை உள்ளவர் என்று வேதம் கூறுகின்றது. அந்தப் பொறுமைக்கு கிறிஸ்தவர்கள் ஒத்துழைக்கவேண்டும். கவிட்டைக்கு முந்தின நாய்போல ஓடக்கூடாது என தேவன் எதிர்பார்க்கின்றார். நாம் அவருக்குமுன் செயல் படத்துவங்கினால் "நீயே பார்த்துக்கொள்" என்று அவர் சும்மா இருப்பார். நம்மை தேவனுக்கு ஒப்புவித்து அமைதியாக காத்திருக்கும்போதுதான் தேவன் செயல்படுவார். அவரது வல்லமை அப்போதுதான் வெளிப்படும். அது மிகப்பெரிய மாறுதலைக் கொண்டுவரும். 


ஆம், "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்." ( சங்கீதம் 37 : 5 )


"கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன் மேலும் எரிச்சலாகாதே."( சங்கீதம் 37 : 7 )


இஸ்ரவேலரை எகிப்திலிருந்து மோசே அழைத்துகொண்டு வந்தபோது பார்வோனுக்குப் பயப்பட்ட இஸ்ரவேலரைப் பார்த்து மோசே கூறினார், "பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்." ( யாத்திராகமம் 14 : 13 ). அதுபோலவே கர்த்தர் இஸ்ரவேலருக்காக யுத்தம் செய்தார். அவர்களை விடுவித்தார். 


இதுவே இன்று கிறிஸ்தவர்களுக்கான தேவ அறிவுரை. நாம் அமைதியாக இருக்கவேண்டியது அவசியம். தேவன் செயல்புரிய  காத்திருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் மிகப்பெரிய அதிசயத்தைக் காண முடியும். ஆம், மோசே கூறியதுபோல,  "கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்". ( யாத்திராகமம் 14 : 14 ). ஆமென். 

1 comment:

kaitzais said...

The Poker Room Near Casinos in Arizona
We are now at Arizona's top casino to enjoy 코인바카라 all 더킹 바카라 the 바카라 games 888 스포츠 and action at Casinos near Phoenix. With our near-midwest location and our long-standing partnership 오피주소