படைத்தவரை விட்டு படைப்பை தொழுது சேவிப்பது .....

                                        - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


"தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்.....இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சை ரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்..." (ரோமர்- 1:25,26)

படைத்தவரை சேவிப்பது, படைக்கப்பட்ட பொருட்களை சேவிப்பது என இரு வேறு நிலைகளை பவுல்  அடிகள் இங்கு விளக்குகின்றார். அன்று ஏதேனில் துவங்கியது இந்த நிலை. ஆதாமும் ஏவாளும் படைத்த தேவனது கட்டளையை மீறி தேவன் தடை செய்த படைக்கப்பட்ட பொருளான கனியின்மேல் ஆசை கொண்டார்கள். அதனால் தேவனது சாபத்துக்கு உள்ளானார்கள்

இன்றும் மனிதன் இதையே செய்கின்றான். தேவனைவிட உலகப் பொருட்கள்மேல் ஆசை கொள்வது சிருஷ்டியை தொழுது சேவிப்பதுதான். இப்படி தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட பொருள்மேல் ஆசை கொள்வதால்தான் இழிவான "இச்சை" மனிதனில் பிறக்கின்றது என இந்த வசனம் சொல்கிறது

தேவனுக்கு ஒப்பானது உலகினில் எதுவுமே இல்லை. ஆனால் இன்று மனிதர்கள் பணம், பதவி , பெண் ஆசை, மண்ணாசை என  இழிவான இச்சைகளில் சிக்கி தேவனது சாபத்துக்கு உள்ளாகின்றார்கள். மட்டுமல்ல இப்படி இழிவான இச்சைகளில் சிக்கி இருப்போர் "அவைகளை செய்கின்ற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாய் இருக்கிறார்கள்." (ரோமர் -1;32)

படைத்தவரை விட்டுப் படைக்கப்பட்டப் பொருள்களின்மேல் இச்சைகொண்டு அலைவது மனிதனில் பல்வேறு பாவ காரியங்களைத் தோன்றச்  செய்கின்றது. இன்று உலகினில் காணப்படும் பல்வேறு பாவங்களுக்குக் காரணம் படைத்தவரை விட்டு படைக்கப்பட்டப் பொருள்களின்மேல் மனிதன் நாட்டம்கொண்டு அலைவதுதான்.  இதனை அப்போஸ்தலரான் பவுல் அடிகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:-

"தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,  புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்."  (ரோமர் 1:25-31)

"நாங்கள் ஆவிக்குரிய ஆராதனை செய்யும் ஆவிக்குரிய மக்கள்" என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பல விசுவாசிகளும் அவர்களை வழிநடத்தும் ஊழியர்களும் உண்மையில் தேவனை விட்டு பண ஆசை எனும் உலக இச்சையில் மூழ்கி இருக்கின்றனர். இப்படிச் செய்வது, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது  சேவிப்பதுதான்.

அன்பானவர்களே, மனிதனது வேசித்தன செயல்பாடுகளுக்கு காரணமும் இச்சையே. அதாவது தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்ட ஆண்களையும் பெண்களையும்  (பெண்கள் ஆண்கள் ஆசை கொள்வதும் ஆண்கள்மேல் பெண்கள் ஆசைகொள்வதும்) பொருட்களையும்  விரும்புவதே. இதன்பொருட்டே உலகம் இன்று விலை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. ஆம் இவை அனைத்துக்கும் காரணம் தேவனை விட்டு தேவனால் படைக்கப்பட்டவைகள் ஆசை கொள்வதே.

அன்பானவர்களே, எந்த சூழ்நிலையிலும் தேவனே போதுமென வாழ்வோம். நமது அனைத்துத் தேவைகளையும் அவரே சந்திப்பார்ஆமென்.   

 

Comments

அதிகமாகப் படிக்கப்பட்டச் செய்திகள்