Monday, August 02, 2021

மொழிப பிரச்னை

 

                                       - சகோ. எம். ஜியோ பிரகாஷ்  

"மீப காலங்களில் தமிழகத்தில் நிலவிவரும் மொழிப்  பிரச்சினை குறித்து நீங்கள் ஏன் எதுவும் எழுதவில்லை ? தமிழ் தமிழ் என்று ஒரு கூட்டம் மக்கள் தமிழ் பற்று கொண்டு  எழுதுவதும் பேசுவதுமாக இருக்கின்றனர். தமிழ்தான்  உலகின் முதல்மொழி என்று மெய்ப்பிக்க பிரயாசப்படுகின்றனர். இந்த நிலையில் கிறிஸ்தவர்கள் என்ன  செய்வது? அதுகுறித்து நீங்கள் ஏன் ஒன்றும் எழுதவில்லை?" என்று நண்பர்கள் சிலர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர்

இயேசு கிறிஸ்து கூறிய முதல் அன்புக்கட்டளையே , "உன்னிடத்தில் அன்புகூருவதுபோல அயலானிடத்திலும் அன்புகூருவாயாக என்பதுதான். எனவே நாம் எல்லோரிடமும் அன்பாக இருக்கவேண்டியது அவசியம்இதனடிப்படையில் பார்த்தால் நமது மொழியை நம் நேசிப்பதுபோல மற்றவர்களுக்கும் அவர்களது மொழியினை நேசிக்க உரிமை உண்டு. அதனை நாம் மதிக்க வேண்டும். ஆனால் ஒரு மொழியை மற்றவர்கள் மீது திணிப்பது என்பது கிறிஸ்தவ கட்டளைக்கு முரணானது

நாம் இன்று இந்தப் பரந்த உலகத்தில், ஆசியா கண்டத்தில், இந்தியப் பெருநாட்டின் தென்பகுதியில், தமிழகத்தில் குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில், குறிப்பிட்ட ஒரு இனத்தில் , குறிப்பிட்ட ஒரு தாய் தந்தையருக்கு மகனாக அல்லது மகளாக பிறக்க வேண்டுமென்பது  தேவனது முன்குறித்தல்அதன்படி நாம் பிறந்துள்ளோம்

மட்டுமல்ல, சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணியுள்ளார் என்று இந்த வசனம் குறிப்பிடுகின்றது. குறிப்பிட்ட வகை இரத்தம் உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு ஒரு மாதிரிதான் உள்ளது. உதாரணமாக பி பாசிட்டிவ் வகை இரத்தமுள்ள ஒரு இந்தியனுக்கு அதே பி பாசிட்டிவ் வகை இரத்தமுள்ள அமெரிக்கனும் ஆபிரிக்கனும் இரத்தம் தானம் அளிக்கலாம். எல்கைப்பிரிவுகள் மனிதர் வகுத்ததே தவிர மனிதர்கள்  குடியிருப்பின் எல்லைகளையும் தேவனே குறித்திருக்கின்றார்

"மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணிபூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்துமுன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;" ( அப்போஸ்தலருடைய  நடபடிகள் 17 : 26 ) 

எனவே அன்பானவர்களே, நமது மொழி குறித்தோ, ஜாதி குறித்தோ , நாட்டைக் குறித்தோ நாம் பெருமைப்படுவது அவசியமற்றது. தேவன்  நாம் இங்கு  பிறக்கவேண்டுமென்று முன் குறித்ததால்தான் நாம் இன்று இங்கு பிறந்துள்ளோமே தவிர அவர் வேறு இடத்தில நம்மைப் பிறக்கச்  செய்திருந்தால் நாம் அங்கு பிறந்திருப்போம்இன்று இந்த எண்ணம் இல்லாததால்தான் நாட்டில் பல்வேறு கலவரங்கள் ஏற்படுகின்றன.

உலகின் முதல் மொழி எங்கள் மொழிதான் என்று பெருமை நாம் பேசிக்கொள்ளலாம். அப்படியே  இருந்தாலும் அதனால் வேறு என்ன சாதித்துவிடப்போகிறோம் ? தமிழகத்தின் வறுமை ஒழிந்துவிடுமா?அவலட்சண ஆபாச செயல்பாடுகள் நாட்டில் குறைந்துவிடுமா? மேலும் "முந்தினோர் பிந்தினோராகவும் பிந்தினோர் முந்தினோராகவும் இருப்பர்".  என்று இயேசு கிறிஸ்து கூறியதை 'நமது மொழிதான் முதன்மையானது' என்று கூறுவோர் மறந்துவிடக்கூடாது. அன்பானவர்களே, எப்போதுமே தேவனுடைய பார்வை வேறு மனிதர்கள் பார்வை வேறு. "மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்;"(  1 சாமுவேல் 16 : 7 ) என்று தேவன் கூறவில்லையா

இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் " நான் உலகின் முதல் மொழியாகிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன்" என்று கூறி நரகத்துக்குத் தப்பிக்க முடியுமா? தேவன் நமது வாழ்க்கையைப் பார்க்கின்றார்.  ஆம் அன்பானவர்களே, குறுகிய மனநிலை நம்மிடமிருந்து அகன்றால் அது நாம் கிறிஸ்துவுக்குள்  இருக்கின்றோம் என்பதற்கு ஒரு அடையாளம். மேன்மைபாராட்டுகிறவன் தான் கர்த்தரை  அறிந்திருக்கிறதைக் குறித்தே மேன்மை பாராட்டக்கடவன்.  

இதுபோலவே, நான் பாரம்பரிய கிறிஸ்தவன் என்பதிலோ, நான் ஆவிக்குரிய  சபைக்குச் செல்கின்றேன் என்பதிலோ ஒரு பெருமையும் இல்லை.  கிறிஸ்துவுக்குள்  நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் புது  பிறப்பாக மாறுவதே முக்கியம்.  அப்படிப் புது பிறப்பு அல்லது மறுபிறப்பு அடைந்தவன் தன்னைக்குறித்தோ தனது இனம், மொழி, பாரம்பரியம் குறித்தோ  மேன்மை பாராட்டமாட்டான்.    

குறுகிய மனப்பான்மையினைக்  களைந்து தேவனது பார்வையில் அனைத்தையும் பார்க்கக் கற்றுக்கொள்வோம். அதற்கு முதலில் தேவனது இரட்சிப்பு அனுபவத்தைப் பெறுவதற்கு முயலவேண்டும். நமது பார்வைகளும் உலக நடப்புகளைக்குறித்த நமது எண்ணங்களும் அப்போது மாறும்பிறரை வெறுக்கும் மனநிலை மறையும்.  அப்போது மட்டுமே தேவனது ஆசீர்வாதத்தினை நாம் பெற முடியும்


No comments: