INFORMATION:-

CONTACT US ON 9688933712 / 7639022747 TO GET DAILY SCRIPTURE MEDITATION ON WhatsApp

Friday, April 23, 2021

கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவை அன்புசெய்வோம்

                                                            - சகோ. எம் . ஜியோ பிரகாஷ்  


கிறிஸ்தவ ஆன்மீகம் என்பது இன்று சுயம் சார்ந்த ஒன்றாக; அதாவது, விசுவாசிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் தங்களது சுய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள மட்டுமே தேவனைத் தேடுவதாக இருக்கின்றது. தேவனைத் தேடுபவர்களைப்போல பலரும் ஆலயங்களுக்குச் சென்றாலும் அவர்கள் தேடுவதோ உலகப் பொருட்களையும் உலக ஆசீர்வாதங்களையுமே.   எனவேதான் அந்த உலக ஆசீர்வாதங்களை எப்படியாவது பெற்றிட வேண்டி காணிக்கைகளையும் இன்னும் பல்வேறு ஆவிக்குரிய காரியங்களையும் செய்கின்றனர். மற்றபடி அவர்களுக்கு கிறிஸ்து இயேசுவின்மேல் எந்தத் தனிப்பட்ட அன்போ பாசமோ இருப்பதாகத் தெரியவில்லை. 


பெரும்பாலான கிறிஸ்தவ ஊழியர்களும்கூட மக்களை இதுபற்றி தெளிவுபடுத்துவதோ, மெய்யான ஆன்மீகத்துக்கு நேராக மக்களை வழி  நடத்துவதோ இல்லை. காரணம் அவர்களும் உலக இச்சைகளிலும் பண ஆசையிலும் மூழ்கிப்போய் உள்ளனர். பிரபல ஊழியர்கள் மட்டுமல்ல, சிறிய அளவில் ஊழியம்செய்யும் ஊழியர்கள்கூட இப்படியே இருக்கின்றனர்.


இதற்கு முக்கிய காரணம், இன்று ஊழியம் செய்யும் பலரும் ஊழிய அழைப்பைப் பெற்றவர்களல்ல. அவர்களில் பலரும் கடமைக்காக ஊழியம் செய்பவர்களாகவே இருக்கின்றனர். வேறு வேலை கிடைக்காததால் ஊழியத்துக்கு வந்தவர்கள், பெற்றோரின் நிர்ப்பந்தத்தால் (ஊழியத்துக்கு எனது மகனை ஒப்புக்கொடுப்பேன் என பொருத்தனை செய்துவிட்டதால்)  ஊழியத்துக்கு வந்தவர்கள், சுய மன ஆசையால் ஊழியத்துக்கு வந்தவர்கள், நல்ல வேலையில் இருந்து பணி நிறைவுபெற்றபின் பொழுதுபோக்க ஊழியம் செய்பவர்கள் எனப் பல்வேறு வித ஊழியர்கள் உள்ளனர்.


இதுபோலவே விசுவாசிகளும் இருக்கின்றனர். இன்று விசுவாசிகள் என்று கூறிக்கொள்வோர் எதற்காக தேவனைத் தேடுகிறார்கள் என்று பார்ப்போமானால் அவர்களது பதில் வித்தியாசமாக இருக்கும். நான் சிலரிடம் பேச்சுவாக்கில் இந்தக் கேள்விகளைக் கேட்பதுண்டு. "நீங்கள் எதற்காகக்  கோவிலுக்குப் போகிறீர்கள் ? " அல்லது நீங்கள் தேவனிடம் என்ன வேண்டுவீர்கள்?"


இந்தக் கேள்விகளுக்கு பெரும்பாலோனோர் கூறிய பதில்கள் :- 

* கோவிலுக்குச் செல்வது கிறிஸ்தவ கடமை என்று வேதம் கூறுகின்றது, அதனால் செல்கிறேன்

* சிறுவயதுமுதல் கோவிலுக்குச் சென்று பழகிவிட்டதால் போகவில்லையானால் மனது உறுத்தும் அதனால் போகிறேன்.

*  எனது தேவைகளை ஆண்டவரிடம் கேட்பதற்குச் செல்கிறேன் 

* நோய்கள் , கடன் பிரச்சனைகள், பிள்ளைகளின் திருமண காரியங்கள், வேலை வாய்ப்பு கிடைக்க, தேர்வில் வெற்றிபெற, நல்ல மதிப்பெண் கிடைக்க......இப்படியே தொடரும் அவர்களது பதில்கள். 


இதற்கு  மேல் ஒருவர்கூட என்னிடம் வேறு பதில்கள் கூறவில்லை. அதாவது அனைவரும் தேவனைவிட தேவன் தரும் ஆசீர்வாதத்தையே விரும்புகின்றனர் என்பது தெளிவாக தெரிந்தது.  தேவனே நம்மிடம் வருவது   எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் என்று ஒருவர்கூட நினைக்கவில்லை. எனவே தேவனே நீர் எனக்கு வேண்டுமென்றோ  நீர் எப்போதும் என்னோடுகூட இருக்கவேண்டுமென்றோ வேண்டியதில்லை.


ஏதேனில் ஆதாம் ஏவாள் இப்படியே இருந்தனர். அவர்கள் தேவனைவிட தேவனால் படைக்கபட்டக் கனியையே அதிகம் விரும்பினர். எனவே, தேவ கட்டளையைப் புறக்கணித்து விலக்கபட்டக் கனியைப் புசித்தனர். 

  

பவுல் அடிகள் தனது சீடனான தீமோத்தேயு குறித்துக் கூறும்போது  "மற்றவர்களெல்லாரும் (தீமோத்தேயு தவிர மற்ற எல்லோரும்) கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள்." (  பிலிப்பியர் 2 : 21 ) என்று கூறுகிறார். அன்பானவர்களே இதுவே இன்றும் தொடர்கிறது.

 

இப்படி தேவனைப் புறக்கணித்து தேவனால் படைக்கப்பட்டப் பொருட்கள்மேல் ஆசைகொள்வதுகுறித்து வேதம் பின்வருமாறு கூறுகின்றது. "தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; " (  ரோமர் 1 : 25, 26 )


தேவனைவிட தேவனால் படைக்கபட்டப் பொருட்கள்மேல் ஆசைகொண்டு அவைகளை அடைந்திட வேண்டுவது சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவிப்பதே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.


"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?" (  சங்கீதம் 42 : 1 , 2 ) கோடைகாலத்தில் தண்ணீர் தாகத்தால் தவிக்கும் மான் எப்படி தாகம் தீர்க்கும் நீரோடையை நாடி வாஞ்சித்து கதறுகிறதோ அதுபோல ஜீவனுள்ள தேவன்மேல் எனது இருதயம் தாகமாயிருக்கிறது என்று தாவீது ராஜா கூறுகிறார்.

 

ராஜாவாகிய அவருக்கும் பல உலகத் தேவைகள் இருந்தன. ஆனால் அவற்றைவிட அவரது மனமானது தேவனையே தேடியது. மட்டுமல்ல, நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? என ஏங்கினார் அவர். எனவேதான் தேவன் தாவீதைத் தனது இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டார்.  இந்த ஆசை நமக்கு இல்லையானால் நமது ஆன்மீக பக்தி முயற்சிகள் அனைத்துமே வீணானவைகளே.


அன்பானவர்களே நமக்குப்  பலப்  பிரச்சனைகள் தேவைகள் இருக்கலாம். ஆனால் பிரச்சனைகளுக்கு மூல தீர்வான தேவனைத் தேடுவதை  விட்டுவிட்டு அவரிடமிருந்து பெறவேண்டியவைகளையே பலரும் தேடுகிறோம். 


ஆனால் இயேசு கிறிஸ்துக் கூறினார், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." (  மத்தேயு 6 : 33 ) 


இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகளின்மேல் விசுவாசமில்லாததாலேயே பலரும் இப்படி இருக்கின்றனர். அன்பானவர்களே, இப்படியே இருப்போமானால் ஒருவேளை நாம் இந்த உலகினில் விரும்பியதைப் பெறலாம். ஆனால் கிறிஸ்துவை வாழ்வில் அறியாதவர்களாகவே மரிக்கவேண்டியிருக்கும். நமது  வாழ்வில் கிறிஸ்துவை  சுவைக்கும் அனுபவம் இல்லையானால் நாம் மரித்தபின்னும் அதனை சுவைக்கமுடியாது. நித்திய பேரின்பத்தையும் அடையமுடியாது. 


கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவை அன்புசெய்யும் மேலான நிலையினை வேண்டுவோம். அதுவே மெய்யான இறை அனுபவத்தை நமக்குக்  கொடுக்கும். 

No comments: