Thursday, December 22, 2022

மனித அறிவினால் அவரை அறிந்துகொள்ள முடியாது

ஆதவன் 🖋️ 695 ⛪ டிசம்பர் 23,  2022 வெள்ளிக்கிழமை

"இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்." ( லுூக்கா 2 : 34 )

சிமியோன் எனும் நீதிமான் கூறிய வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வசனம். தேவனுடைய கிறிஸ்துவை காணுமுன் நீ மரணமடைய மாட்டாய் என்று அவருக்கு ஏற்கெனவே பரிசுத்த ஆவியினால் அறிவிக்கப்பட்டிருந்தது. நியாயப்பிராமண கட்டளையை நிறைவேற்றிட ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க இயேசுவின் தாய்தகப்பன்  இயேசு கிறிஸ்துவை ஆலயத்துக்குக் கொண்டுசென்றபோது பரிசுத்த ஆவியின் அறிவிப்பின்படியே சிமியோன் ஆலயத்துக்கு வந்திருந்தார். 

சிமியோனைப்பற்றி, "அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்." ( லுூக்கா 2 : 25 ) என்று கூறப்பட்டுள்ளது. 

இயேசு கிறிஸ்துவைக்குறித்து சிமியோன், "அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்" என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார். 

ஆம், ஆண்டவர் தனது ஊழியத்தை ஆரம்பித்தபோது இது நிறைவேறத் துவங்கியது. பலர் அவரைக்குறித்து இடறலடைந்தனர். பலருடைய இருதய சிந்தையை அவர் வெளிப்படுத்தியதால் அவர்கள் இருதயம் குத்தப்பட்டது. 

ஆனாலும் அவர்கள், "இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்கு சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்." ( மாற்கு 6 : 3 ) இன்றும் இயேசு கிறிஸ்துவைக் குறித்த இந்த இடறல் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. அவரை சாதாரண உலக மகான்களில் ஒருவராகவே பலர் எண்ணி இடறலடைகின்றனர். 

இங்கு சிமியோன் எப்படி இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டார் என்று பார்ப்போம். முதலாவது அவன் நீதியும் தேவ பக்தியுள்ளவனுமாய் இருந்தான் ஏற்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவன்மேல் பரிசுத்த ஆவியானவர் இருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று நாம் விசுவாசித்து அறிக்கையிட பரிசுத்த ஆவியானவரது வெளிப்பாடு நமக்குத் தேவையாக இருக்கின்றது. 

"ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்." ( 1 கொரிந்தியர் 12 : 3 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல்.

ஆனால் இன்றும் சிமியோன் கூறியதைப்போல பலருக்கும் கிறிஸ்து  இடறலாகவே இருக்கின்றார். காரணம் அவரது போதனைகள். இவற்றைக் கடைபிடிப்பது கூடாத காரியம் என்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் இன்றும் சொல்லக்கேட்கலாம்.  ஆம், மனித அறிவினால் அவரை அறிந்துகொள்ள முடியாதுதான். எனவேதான் பரிசுத்த ஆவியானவரின் துணை நமக்குத் தேவையாய் இருக்கின்றது. 

சந்தேகத்தோடும் இடறலோடும் வாழாமல் ஆவியானவரின் துணையினை வேண்டுவோம்; அவரே நமக்கு கிறிஸ்துவைக்குறித்தத் தெளிவைத் தருவார்.  கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத பிறருக்கும் ஆவியானவர் இந்த வெளிப்பாடைக் கொடுக்கும்படி ஜெபிப்போம். பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லமுடியாது. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Wednesday, December 21, 2022

இயேசு கிறிஸ்து நமக்குத் தந்த வாக்குத்தத்தம்.

ஆதவன் 🖋️ 694 ⛪ டிசம்பர் 22,  2022 வியாழக்கிழமை

"நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன்." ( 1 யோவான்  2 : 25,26 )

இயேசு கிறிஸ்து உலகினில் வந்தபோது பல்வேறு சமயங்களில் பல்வேறு வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். ஆனால் அவை அனைத்துமே நித்திய ஜீவனை நாம் அடைந்திடவேண்டும் என்பதற்காகவே. நித்திய ஜீவனை மக்களுக்கு அளிப்பதே கிறிஸ்துவின் நோக்கம். அதற்கான வழியைக் காண்பிக்கவே அவர் உலகினில் வந்தார். எனவேதான் அப்போஸ்தலனாகிய யோவான், நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதும் ஒரு வாக்குத்தத்தம் என்று கூறாமல்,  "நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்." என்கின்றார். அதாவது அது ஒன்றுதான் இயேசு கிறிஸ்து நமக்குத் தந்த வாக்குத்தத்தம். 

நமது தேவன் வெறுமனே வாக்குத்தத்தங்களைக் கொடுத்துவிட்டு மறந்துவிடுபவரல்ல. அவற்றை எப்படியாவது நிறைவேற்றிட வல்லவர். வானமும் பூமியும் மாறினாலும் தேவனுடைய வார்த்தைகள் மாறுவதில்லை. எனவேதான் அப்போஸ்தலரான பவுலும், "எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே." ( 2 கொரிந்தியர் 1 : 20 ) என்கின்றார்.

தேவனுக்குத் தான் படைத்த மக்களோடு உடன்படிக்கை பண்ணவேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், மனிதர்கள்மேல் அன்பு கொண்டுள்ளதால் அவர் மனிதர்களோடு உடன்படிக்கை பண்ணுகின்றார். முதலில் நோவாவோடு உடன்படிக்கை பண்ணினார். பின்னர் ஆபிரகாமோடு உடன்படிக்கைபண்ணினார்.  அவற்றை நிறைவேற்றவும் செய்தார். 

"நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.....உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்." ( ஆதியாகமம் 17 : 4 & 6 ) என்ற வாக்குத்தத்தத்தின்படி ஆபிரகாம் மிகப்பெரிய மக்கள் கூட்டமாக; ஒரு தேசமாகவே  மாறினான்.

"நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்". ( ஆதியாகமம் 17 : 8 ) என்ற வாக்குத்தத்தின்படி கானான் தேசத்தை ஆபிரகாமின் சந்ததிற்குக் கொடுத்தார். 

இதே வாக்குமாறாத தேவனே இன்றைய வசனத்தில் கூறியுள்ளபடி, "நித்தியஜீவனை அளிப்பேன்" என்கின்றார். இதனை எழுதிய அப்போஸ்தலரான யோவான் தொடர்ந்து எழுதுகின்றார், "உங்களை வஞ்சிக்கிறவர்களைக் குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியுள்ளேன்". ஆம், இயேசு கிறிஸ்து கூறிய நித்திய ஜீவனைப் பிரசித்திப்படுத்தாமல்  வேறு உலக ஆசீர்வாதங்களைப்  போதிக்கும் போதகர்களே  வஞ்சிக்கிறவர்கள். இத்தகைய வஞ்சிக்கும் போதகர்களே  இன்று உலகில் அதிகமாக உள்ளனர். 

அன்பானவர்களே, எச்சரிக்கையாக இருப்போம். கிறிஸ்துவின் வாக்குத்தத்தத்தை மறுதலிக்கும் வஞ்சக போதனைகளுக்கு விலகி நம்மைக் காத்துக்கொவோம். 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Tuesday, December 20, 2022

ஞானத்தின் ஆரம்பம்

ஆதவன் 🖋️ 693 ⛪ டிசம்பர் 21,  2022 புதன்கிழமை

"கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது." ( நீதிமொழிகள் 19 : 23 )

கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது கர்த்தருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழவேண்டும் எனும் எண்ணத்தில் நாம் செயல்படுவதையே குறிக்கின்றது. உலக மனிதர்கள் தங்கள்  உயர் அதிகாரிகளுக்கோ, மாணவன் ஆசிரியருக்கோ, திருடர்கள் காவலர்களைக்கண்டோ பயப்படுவதுபோன்ற பயமல்ல. இது கர்த்தர்மேலுள்ள அன்பால் நாம் அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ்வது. கர்த்தருக்கு நாம் இப்படிப் பயப்படும்போதே நாம் ஞானிகள் ஆகின்றோம். அதாவது தேவனை அறிந்து கொள்கின்றோம்.

"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்." ( சங்கீதம் 111 : 10 ) என்கின்றார் சங்கீத ஆசிரியர்.  இப்படிக்  கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; என்று கூறும் இன்றைய தியான வசனம், அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது என்றும் கூறுகின்றது. 

இதனையே சங்கீத ஆசிரியர், "எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது." ( சங்கீதம் 91 : 9, 10 ) என்றும் கூறுகின்றார்.

அன்பானவர்களே, இன்று நாம் எல்லோருமே தீமை நம்மை அணுகக்கூடாது என்றுதான் ஜெபிக்கின்றோம். ஆனால் அப்படி ஜெபித்தால் மட்டும் போதாது கர்த்தருக்குப் பயப்படும் பயம் நமக்கு வேண்டும். இன்று ஜெபத்தை வலியுறுத்தும் ஊழியர்கள் அதிகம். எதற்கெடுத்தாலும்  "ஜெபியுங்கள், ஜெபியுங்கள்" என்று மக்களுக்கு அறிவுரைகூறும் பலரும் நடைமுறை வாழ்க்கையில் நாம் எப்படி இருக்கவேண்டுமென்று கூறுவதில்லை. ஆம், ஜெபிப்பதையும் , வேதம் வாசிப்பதையும் வலியுறுத்துகின்றனர் ஊழியர்கள். இவைகளைக் கடைபிடிப்பது எளிது. ஆனால் வாழ்க்கை எனும் சிலுவை சுமக்கும் அனுபவம் நேர்மையான வாழ்க்கையில் அடங்கியுள்ளது. 

இப்படிக் கூறுவதால் ஜெபிக்கவேண்டாமென்றோ வேதம் வாசிக்கவேண்டாமென்றோ பொருளல்ல. (இன்று பலரும் இப்படி குறுகிய கண்ணோட்டத்துடன் நான் சொல்வதைத் தவறுதலாக புரிந்துகொள்கின்றனர்). ஜெபிக்கவேண்டியது நமது சுவாசம்போல. ஜெபிக்காத ஆவிக்குரிய வாழ்க்கை ஜீவனில்லாதது. ஆனால் அந்த ஜெபம் நான் முதலில் கூறியதுபோல கர்த்தருக்குப் பயப்படும் ஞானத்துடன் கூடிய ஜெபமாக இருக்கவேண்டும். நூறு சதவிகித உலக ஆசைகளுக்காக ஜெபித்துவிட்டு, நானும் ஜெபிக்கிறேன் என்று திருப்தி அடைவது ஏற்புடைய ஒன்றல்ல.  

கர்த்தருக்குப் பயப்படும் வாழ்க்கை வாழ்வோம்;  அப்போது ஜீவனைக் கண்டடைவோம். அதைக் கண்டால்  திருப்தி அடைந்து சமாதானத்துடன் நிலைத்து நிற்போம்; தீமை நம்மை அணுகாது. 


தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Monday, December 19, 2022

லோத்தின் மனைவி

ஆதவன் 🖋️ 692 ⛪ டிசம்பர் 20,  2022 செவ்வாய்க்கிழமை

"உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ." ( ஆதியாகமம் 19 : 17 )

சோதோம் கொமோரா நகரங்கள் மிகப்பெரிய விபச்சார பாவத்தில் இருந்ததால் தேவன் அந்த நகரங்களை அழிக்கத் தீர்மானித்தார். ஆனால் அந்த நகரத்தில் லோத்து குடும்பத்தோடு இருந்ததால் தேவன் அந்த நாகரத்தை அழிக்குமுன் லோத்துவை அந்த நகரத்திலிருந்து வெளியேற்ற தனது தூதர்களை அனுப்பினார். காரணம் லோத்து அந்த நகரத்தின் பாவங்களுக்கு உடன்படவில்லை. "நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க" ( 2 பேதுரு 2 : 8 ) என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

அந்தத் தூதர்கள் லோத்துவிடம் கூறிய வார்த்தைகளே இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகள். 

இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள காரியங்கள்,  முதலாவது ஜீவன் தப்ப ஓடிப்போ என்பதாகும். அதாவது உன் உயிர் தப்பிப்பிழைக்க வேண்டுமானால் இங்கிருந்து ஓடிப்போ என்பதாகும். இன்று இந்த வார்த்தைகள் நமக்கும் பொருந்துவனவாகும். நாம் நமது ஆத்துமாவைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் பாவ காரியங்களுக்கு விலகி ஓடவேண்டியது அவசியம். சோதோம் கொமோரா நகரங்களில் மிகுதியாக இருந்த பாவங்கள் வேசித்தனமும் விபச்சாரமுமாகும். இவையே தேவன் அருவருக்கும் மிக முக்கிய பாவங்கள். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுலும் இவைகளுக்கு விலகி ஓடச் சொல்கின்றார். "வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்" (1 கொரிந்தியர் 6 : 18 ), " "விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்." ( 1 கொரிந்தியர் 10 : 14 ) என்கின்றார் அவர். ஆம், நாம் பாவத்துக்கு விலகி யோசேப்பைபோல ஓடவேண்டியது அவசியம். 

இன்றைய வசனத்தில் கூறப்பட்டுள்ள அடுத்த காரியம், "பின்னிட்டு பாராதே"  என்பதாகும். பாவகாரியங்களுக்கு விலகி ஓடியபின் அவைகளை மறந்துவிடவேண்டும். திரும்பிப்பார்த்தோமானால் பாவம் நம்மை மீண்டும் இழுத்து படுகுழியில் தள்ளிவிடும். 

அடுத்து, "இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே" என்று கூறப்பட்டுள்ளது. இது தயங்கி நிற்கும் செயலாகும். நாம் பாவத்தைத் திரும்பிப் பார்க்காமல் இருக்கலாம் ஆனால் தயங்கி நின்றுவிடக்கூடாது. பாவத்தைவிட்டு ஓடும் ஓட்டத்தை நிறுத்திவிடக்கூடாது. நிற்போமானால் நாம் மீண்டும் பாவத்தில் வீழ்வது உறுதி. 

இறுதியாகக் கூறப்பட்டுள்ள வார்த்தைகள், "நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ" என்பதாகும். ஆம் நாம் பாவத்தால் அழியாமல் இருக்கவேண்டுமானால் கல்வாரி மலைக்கு ஓடி அடைக்கலம் புகுந்திடவேண்டும். 

பாவம் நம்மைச் சூழ்ந்து நாம் பாவத்தால் ஜெயிக்கப்படுவோம் எனும் சூழ்நிலை ஏற்படும்போது ஜீவன் தப்ப ஓடி, பின்னிட்டுப் பாராமால், தயங்கி நில்லாமல், அழியாதபடிக்கு கல்வாரி நாதரை சரணடையவேண்டியதே நாம் செய்யவேண்டியது. தயங்கி நின்று பின்னிட்டுப் பார்ப்போமானால் லோத்தின் மனைவியைப்போல உப்புத்தூணாகிவிடுவோம் (அழிந்துவிடுவோம்) . எனவேதான்,  "லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்." ( லுூக்கா 17 : 32 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Sunday, December 18, 2022

ஆவியானவரின் அபிஷேகத்துக்காக நாம் அதிகம் ஜெபிக்கவேண்டியுள்ளது.

ஆதவன் 🖋️ 691 ⛪ டிசம்பர் 19,  2022 திங்கள்கிழமை

"பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.
( 1 யோவான்  2 : 28 )

இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு இனிமேல் வரும்போது அவரைக்கண்டு பயப்பட்டு வெட்கப்பட்டு நாம் கைவிடப்பட்டவர்களாய்ப்  போய்விடக்கூடாது என இன்றைய தியான வசனத்தில் நமக்கு அறிவுறுத்துகின்றார் அப்போஸ்தலராகிய யோவான். நமது பள்ளிக்கு ஆய்வாளர் (Inspector) வரப்போகின்றார் என்று தெரிந்தால் நாம் எவ்வளவு கவனமாக ஏற்பாடுகளைச் செய்வோம்!!. அப்படி அவர் வரும்போது ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி பயப்படும்போது தெரிந்த கேள்விக்குக்கூட நம்மால் சரியாகப் பதில் கூறமுடியாது. நம்மிடம் ஆய்வாளர்  ஒரு சாதாரண கேள்வியைக் கேட்கும்போது  அதற்குப் பதில்சொல்லத் தெரியாமல் நாம் இருந்தால் எவ்வளவு வெட்கப்படுவோம்!!

நாம் கிறிஸ்து வரும்போது அப்படி பயந்து வெட்கத்துக்குள்ளாகிவிடக்கூடாது; நரகத்தின் மக்களாகிவிடக்கூடாது. நாம் அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமக்குப் பயம் வராது; மாறாக அவரை எதிர்பார்த்திருந்து அவர் எப்போது வருவார் என ஆவல்கொள்ளச்செய்யும்.  

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தின் முந்தின வசனத்தில் அப்போஸ்தலரான யோவான், "நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக." ( 1 யோவான்  2 : 27 ) என்கின்றார்.

அதாவது தேவனைச் சார்ந்து பரிசுத்த ஆவியானவரின் துணையையே விசுவாசமாய் ஏற்றுக்கொண்டு அபிஷேகத்தோடு வாழ்வோமானால்,  அனைத்தையும் அவரே நமக்கு உணர்த்திப் போதித்து  நம்மை வழி நடத்துவார். அதன்படி நாம் நிலைத்து வாழவேண்டும். அப்படி நிலைத்திருப்போமானால், அவர் வரும்போது பயப்படமாட்டோம்; வெட்கப்படமாட்டோம்.

அன்பானவர்களே, நாம் அதிகமாக பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்துக்காக ஜெபிக்கவேண்டியது அவசியம். ஏனெனில் சபைப் போதகர்களல்ல, ஆவியானவரே நம்மைச் சத்தியமான பாதையில் நடத்திட முடியும். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி வாழும்போது மட்டுமே நாம் அவர் வெளிப்படும்போது அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாய் இருக்கமுடியும். எனவேதான் ஆவியானவரின் அபிஷேகத்துக்காக நாம் அதிகம் ஜெபிக்கவேண்டியுள்ளது. 

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712


Saturday, December 17, 2022

ஒருநாள் கூத்து அல்ல

 ஆதவன் 🖋️ 690 ⛪ டிசம்பர் 18,  2022 ஞாயிற்றுக்கிழமை

"தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்."( யூதா 1 : 21 )

இன்று பலரும் பாவ மன்னிப்பு அனுபவத்தைப் பெற்றுக்கொண்டவுடன் நேராக நித்தியஜீவனுக்குத் தாங்கள் தகுதிப்பட்டுவிட்டதாக எண்ணிக்கொள்கின்றனர். குறிப்பாக  பல பெந்தேகொஸ்தே சபை விசுவாசிகள் இப்படி இருக்கின்றனர். இத்தகைய மனிதர்களது சுவிசேஷ அறிவிப்புகள் விகற்பமாக இருக்கும். இவர்கள் தங்களை பரலோகத்துக்குத் தகுதியானவர்கள் எனவும் மற்றவர்கள் எல்லோரும் நரகத்தின் மக்கள் எனவும் எண்ணிக்கொள்கின்றனர். 

ஒருமுறை நண்பர் ஒருவரது வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு ஒரு பெந்தேகொஸ்தே சகோதரர் சுவிசேஷம் அறிவிக்க வந்தார். வந்தவுடன் அவர் நண்பரின் மனைவியிடம், "சிஸ்டர்.....நீங்க பரலோகத்துக்குப் போகவேண்டாமா?" என்று ஆரம்பித்தார். நண்பரின் மனைவி கூலாக, "உங்ககிட்ட  இன்னும் எத்தன  டிக்கெட் இருக்கு?" என்றார்.   அந்தச் சகோதரர் இப்படியொரு பதிலை  எதிர்பார்க்காததால் திகைத்துவிட்டார். நண்பரின் மனைவியின் கேள்வி அவரைப் பதில் சொல்லமுடியாதபடி வாயை அடைத்துப்போட்டது. 

அன்பானவர்களே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறினார், இறுதிவரை நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்" என்று. இரட்சிக்கப்படுவது ஒருநாள் அனுபவமல்ல, மாறாக அன்றாடம் சிலுவை சுமக்கும் அனுபவம். மட்டுமல்ல,  தேவனுடைய அன்பிலே நம்மைக்  காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டும் என்கின்றார் அப்போஸ்தலரான யூதா இன்றைய தியான வசனத்தில்.. 

கிறிஸ்துவின் இரகத்தைப் பெறுவதற்குக் காத்திருக்கவேண்டும். அதாவது நம்மில் தேவ அன்புள்ளவர்களாய் பொறுமையாய்  வாழ்ந்து வரவேண்டும். தேவ அன்பு நம்மில் இருக்குமேயானால் நாம் யாரையும் அற்பமாக எண்ணமாட்டோம், யாரையும் நரகத்தின் மக்கள் என்று நியாயம்தீர்க்கமாட்டோம். 

இரட்சிப்பு எனும் புத்திரசுவிகாரமும் நித்திய ஜீவனும்  என்றோ ஒருநாள் பெற்ற பாவ மன்னிப்பு அனுபவத்தினால் கிடைப்பதல்ல; அது ஒரு தொடர் அனுபவம்.  எனவேதான் அப்போஸ்தலரான பவுல் கூறுகின்றார், "ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்." ( ரோமர் 8 : 23 ) ஆம் அது காத்திருந்து, தவித்து பெறவேண்டிய அனுபவம்.

மற்றவர்களை அற்பமாக எண்ணி, தாங்கள் பரலோகத்துக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகிவிட்டோம் எனக் கருதிக்கொள்பவர்கள் தங்கள் மன மேட்டிமையை அறிக்கையிட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருக்க வேண்டியது அவசியம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Friday, December 16, 2022

ஆயக்காரரும் வேசிகளும் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள்

 ஆதவன் 🖋️ 689 ⛪ டிசம்பர் 17,  2022 சனிக்கிழமை

"விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்." ( எபிரெயர் 11 : 31 )


பொதுவாகவே நாம் அனைவருக்கும் விபச்சாரத் தொழில் செய்யும் பெண்கள்மேல் ஒரு வெறுப்பும் அருவருப்பும் தோன்றக்கூடும்.  அவர்களைக்குறித்து நாம் எண்ணும் எண்ணங்கள் அவர்களது தொழிலைப்பற்றி வெளிப்டையாகத் தெரிவதால்தான். ஆனால் சமூகத்தில் பலரால் மேன்மையாகக் கருதப்படும் சிலரும் ரகசியமாக விபச்சாரம் செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களை நாம் அறியாமல் மேன்மையாகக் கருதுகின்றோம்.

நான் முன்பு ஒரு தொண்டுநிறுவனத்தில் பணிசெய்தபோது எயிட்ஸ் தடுப்புத் திட்டத்திற்காகப்  பல விபச்சாரப் பெண்களோடு பேசக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.  விபச்சார பெண்களின் கதைகளைத் தொகுத்து அப்போது வெளியிட்டோம்.  நான்தான் அவைகளைத் தொகுத்தேன். அதற்காக விபச்சாரப் பெண்களைப் பேட்டி கண்டு அவர்கள் இந்தத் தொழிலுக்கு வரக் காரணமென்ன, அவர்களது குடும்பப்பின்னணி,  இந்தத் தொழிலை மனப்பூர்வமாகச் செய்கிறார்களா, எனப் பல கேள்விகள்கேட்டு தொகுத்து வெளியிட்டோம். அப்போது, பல பெண்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்க நேர்ந்தது. 

விபச்சாரம் செய்தாலும் தேவனிடம் ஜெபிக்கும் பெண்களைக் கண்டேன்.  அவர்கள் பிறந்தச் சூழ்நிலைதான்  பல பெண்களை இந்தத் தொழிலில் ஈடுபடச் செய்துள்ளது. ஒருமுறை நான் சென்ற ஒரு குக்கிராமத்தில் சுமார் 25 கூரை வீடுகள் இருந்தன. அங்குள்ள பெண்கள் பிறந்ததுமுதல்  அதிகம் வெளியுலகுக்குச் சென்றதில்லை. அங்கேயே பிறந்து, இதுதான் வாழ்க்கை என வாழ்கின்றனர்.  

வெளியுலகில் நாம் சந்திக்கும் பெண்களைவிட மனதளவில் பல நல்ல குணமுள்ள பெண்களை நான் சந்தித்தேன். தேவன் எனக்குச் சில உண்மைகளைப்  புரியவைக்கவே இந்த வாய்ப்பினைத் தந்தார் என எண்ணுகின்றேன்.  தேவனது நியாயத் தீர்ப்பு, இயேசு கிறிஸ்து கூறிய வசனங்கள் இவைகளை நான் அப்போது எண்ணிப்பார்த்தேன். "ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 21 : 31 ) என்றார் இயேசு கிறிஸ்து. 

இன்றைய தியான வசனத்தில் எபிரெய நிருப ஆசிரியர், "விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடே கூடச் சேதமாகாதிருந்தாள்." என்று கூறுகின்றார். ராகாப் ஒரு வேசிதான்.  ஆனால் அவளது விசுவாசம் அவளைக் காப்பாற்றியது. மட்டுமல்ல, அவள் பெயர் கிறிஸ்துவின் கலைமுறை பட்டியலில் இடம்பெற எதுவாகவும் இருந்தது. ஆம், அவள் தாவீது ராஜாவின் பூட்டியானாள். 
வாசிக்க:- (மத்தேயு - 1: 5,6) ஒப்பிட்டு வாசிக்கவும் (ரூத் - 4:17)

அதாவது இன்றைய வசனம் இரண்டு காரியங்களை நமக்கு உணர்த்துகின்றது. ஒன்று யாரையும் மேலோட்டமாகப்பார்த்து நாம் நியாயம்தீர்க்கக்கூடாது என்பது. இரண்டாவது, விசுவாசத்தினால் வரும் மேன்மையைக் குறிக்கின்றது. நமது எந்த இழி நிலைமையையும் மாற்றி நம்மை ராஜாக்களாகவும் ஆசாரியராகவும் மாற்றிட கிறிஸ்து இயேசுவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசம் உதவிடும். கிறிஸ்துவின் மேல் நாம் கொள்ளும் விசுவாசம் நம்மைச் சேதப்படுத்தாது.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - ஓசியா 6 : 1 / Hosea 6:1

" ஆதவன் " தியானம் - 1978 ஜூலை 08, புதன் 2026       "கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் ...