DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Sunday, September 28, 2025

வேதாகமத் தியானம் - செப்டம்பர் 2025

 
          - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1668                                                                  ஆதவன் 01.09.2025 திங்கள்    

"என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்." ( எரேமியா 33 : 3 )

மனிதர்களாகிய நாம் இந்த உலகத்தில் பல்வேறு காரியங்களை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றோம். புத்தகங்கள் வழியாகவும், இணையதளங்கள் வழியாகவும் புதிய செய்திகளை அறிந்திட முயலுகின்றோம். ஆனால் இவை அனைத்தும் நமது உலக வாழ்க்கைக்கு உதவுமேத்தவிர இவைகளால் நமது ஆத்துமாவுக்கு எந்த பயனும் கிடைப்பதில்லை. நாம் இவைகளை அறியும் ஆர்வத்தைப்போல தேவ காரியங்களையும் அறிய ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டியது அவசியம். 

அன்பானவர்களே, நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்படும் மறுபிறப்பு அனுபவத்தை வாழ்வில் பெற்றிருப்போமானால் நாம் இப்படி தேவனுடைய காரியங்களை அறிந்திட ஆர்வமுள்ளவர்களாக இருப்போம். "நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." ( கொலோசெயர் 3 : 1 ) என்று அப்போஸ்தலரான பவுல் கூறுவது கவனிக்கத்தக்கது.  

பொதுவாக, ஆவிக்குரிய மேலான காரியங்களை நம்மில் பலரும் அறிய முயலுவதில்லை. பெரும்பாலும் நமக்குப் போதிக்கும் போதகர்களும் குருக்களும் தாங்கள்  இறையியல் கல்லூரிகளில் படித்த உண்மைகளை மட்டும் எடுத்துக்கூறும் ஆற்றலுள்ளவர்களாக இருக்கின்றனர். ஆனால் ஆவிக்குரிய உண்மைகளும் அனுபவங்களும் இவற்றுக்கு அப்பாற்பட்டவை. அவை வேதாகமத்தின் பரிசுத்தவான்கள் அனுபவித்த அனுபவ உண்மைகள். இவற்றை நாமும் அறிந்துகொள்ள வேண்டுமானால் தேவனை நோக்கிக் கூப்பிடவேண்டியது அவசியம்.

தேவன் ஆபிரகாமை வழிநடத்தினார், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, யோசுவா எனப்  பலரை வழிநடத்தினார்.  அதே தேவன் இன்று நம்மையும் தனிப்பட்ட முறையில் வழிநடத்த ஆர்வமுள்ளவராக இருக்கின்றார். அதனையே இன்றைய தியான வசனத்தில், "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்." என்று தேவன் கூறுகின்றார். 

பல வேத உண்மைகள் நமக்குத் தெரிவதில்லை. சில குழப்பமாக இருக்கின்றன. ஆனால் இவைகளுக்கான விளக்கத்தை தேவ வழிநடத்துதலோ அனுபவமோ இல்லாத ஊழியர்கள் நமக்குப் புரியவைக்க முடியாது. தேவனுடைய பரிசுத்த ஆவியானவர்தான் பலவற்றை நமக்குப் போதித்து வழிநடத்த முடியும். எனவே, "என்னை நோக்கிக் கூப்பிடு" என்கின்றார் தேவன்.

வெறும் உலக ஆசீர்வாதங்களுக்காக மட்டும் அவரை நோக்கிக் கூப்பிட்டுக் கொண்டிருப்போமானால் நமது வாழ்வின் இறுதிவரை நாம் மேலான தேவ சத்தியங்களை அறிந்துகொள்ளமுடியாது. மட்டுமல்ல, நாம் தேவனை நோக்கி இப்படி மேலான பரம காரியங்களை அறிந்திட கூப்பிடுபவர்களாக இருந்தால் தேவன் நம்மேல் அன்புள்ளவராக இருப்பார். "எனது மகன் / மகள் என்மேல் எவ்வளவு அன்புள்ளவராக இருக்கிறார் என்று மனமகிழ்வார். மட்டுமல்ல, மேலான காரியங்களை நமக்கு விளக்கியும் தருவார். 

ஆம் அன்பானவர்களே, தேவ காரியங்களை அறிய இறையியல் படிப்புத் தேவையில்லை. தேவனை அறியும் ஆர்வமே போதும். இறையியல் படிப்பு படிக்காத நான் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இறையியல் கட்டுரைகளை பல்வேறு பத்திரிகை மற்றும் ஊடகங்களில் எழுதியுள்ளேன். இறையியல் படித்த பல ஊழியர்கள் எனது செய்திகளை எடுத்துப் பயன்படுத்துகின்றனர். இதனை பெருமைக்காகக் கூறவில்லை; மாறாக,  தேவனை நோக்கிக் கூப்பிடும்போது அவர் நமக்கு வேத உண்மைகளைப் புரியவைப்பார் என்பதனை விளக்கவேக் கூறுகின்றேன். 

ஆர்வமுடன் அவரை நோக்கிக் கூப்பிடும்போது நமக்கு உத்தரவு கொடுத்து, நாம் அறியாததும் நமக்கு  எட்டாததுமான பெரிய ஆவிக்குரிய காரியங்களை அவர் நமக்கு அறிவித்துப் புரியவைப்பார். 

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1669                                                                  ஆதவன் 02.09.2025 செவ்வாய்     

"எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்." ( நீதிமொழிகள் 1 : 33 )

இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செவிகொடுத்தல் எனும் வார்த்தை, கர்த்தரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழும் வாழ்க்கையைக் குறிக்கின்றது. இப்படி நாம் கர்த்தரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வோமானால் பெரிய துன்பங்களுக்கு விலகி எந்த ஆபத்துகளுக்கும் பயப்படாமல் அமைதியான வாழ்க்கை வாழமுடியும் என்று இந்த வசனம் கூறுகின்றது. 

இதனையே நாம் யாத்திராகமம் நூலிலும் "நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்." ( யாத்திராகமம் 15 : 26 ) என்று வாசிக்கின்றோம். 

ஆனால் பலரும் ஆராதனைகளுக்கும் காணிக்கைகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவதை கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து வாழும் வாழ்க்கைக்குக்  கொடுப்பதில்லை.  ஆம் அன்பானவர்களே, காணிக்கைகளையும் பலிகளும் முக்கியமல்ல, கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து வாழும் வாழ்க்கையே முக்கியம். "கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்." ( 1 சாமுவேல் 15 : 22 ) என்று சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் தேவன் நமக்கு அறிவுறுத்துகின்றார்.

மேலும், "பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?' ( எபிரெயர் 12 : 25 ) என்று எச்சரிக்கின்றார் எபிரெய நிருப ஆசிரியர். 

"மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 3 : 22 ) என்று இயேசு கிறிஸ்துவைக்குறித்து தீர்க்கதரிசனமாகக்  கூறியுள்ளார். 

எனவே, தேவனுடைய கட்டளைகளுக்கு முக்கியாயத்துவம் கொடுத்து வாழ்வோம். குறிப்பிட்ட ஒரு சில கட்டளைகளுக்கு மட்டுமல்ல, அனைத்துக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து வாழ்வோம். அப்படி வாழ்ந்திட நமக்கு உதவியாக இருக்க ஆவியானவரின் வல்லமையினை வேண்டுவோம். ஏனெனில் நமது பலவீனமான மனித இயல்பினால் நாம் தேவனது கட்டளைகளைக் கடைபிடிக்கமுடியாது. எனவேதான் ஆவியானவரை தேவன் வாக்களித்து நமக்குத் துணையாளராகத் தந்துள்ளார். 

தேவ கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வோம்; அப்போது, எந்த விக்கினமுமின்றி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாக இருப்போம். 


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1670                                                                  ஆதவன் 03.09.2025 புதன்      

"கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது: கடைசி நாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள்." ( எரேமியா 30 : 24 )

நம் ஒவ்வொருவரையும் குறித்து தேவன் ஒரு திட்டம் வைத்துள்ளார். நம் ஒவ்வொருவரையும் குறித்து மேலான எண்ணம் கொண்டுள்ளார். ஆனால் மனிதர்கள் தேவனது சித்தத்தை அறிவதில்லை, அதன்படி நடப்பதுமில்லை. நமது வாழ்வில் தேவனது கோபம் வெளிப்பட இதுவே காரணமாக இருக்கின்றது இதனையே, "கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது" என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. அதாவது நாம் அவரது திட்டத்துக்கு நேராக வரும்வரை அவரது கோபம் நம்மேல் இருக்கும். 

இந்த உலகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக்குறித்து மேலான திட்டங்கள் வைத்து செயல்படுகின்றனர். அதற்காகத் தாங்கள் உழைக்கும் உழைப்பின் பணத்தைச் செலவிடுகின்றனர். லட்சக்கணக்கான பணத்தை பிள்ளைகளின் படிப்புக்காகச் செலவழித்தும் அந்தப் பிள்ளைகள் தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்து பெற்றோரின் எண்ணத்துக்கு  முரணாக நடந்தால் அந்தப் பெற்றோருக்கு எத்தகைய மனவேதனையும் கோபமும் ஏற்படுமென்று எண்ணிப்பாருங்கள்!

இதுபோலவே நம்மைக்குறித்த தேவ திட்டத்துக்கு முரணாக நாம் நடக்கும்போது தேவன் கோபம் கொள்கின்றார். ஆனால் மனிதர்களாகிய நாம் பலவேளைகளில் துன்பங்கள் பலவற்றை அனுபவித்தபின்னர் நம்மைக் குறித்தத்   தேவனது திட்டத்துக்கு நேராக வருகின்றோம். அப்போதுதான்  தேவன் நம்மை ஏன் துன்பங்களுக்கு உள்ளாக்கினர் என்பதனை உணர்ந்து கொள்கின்றோம். இதனையே சங்கீத ஆசிரியர்,  "நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதனால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்." ( சங்கீதம் 119 : 71 ) என்று கூறுகின்றார். 

இன்றைய தியான வசனத்தில் இதனையே நாம், "கடைசி நாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள்." என்று வாசிக்கின்றோம். இது, பெற்றோரின் திட்டத்துக்கு எதிராகச் செயல்பட்ட பிள்ளைகள் தங்களது வாழ்வின் பல தோல்விகளுக்குப்பின் பெற்றோரின் நல்ல நோக்கத்தை உணர்ந்துகொள்வதைப்போல இருக்கின்றது. அப்போது அவர்கள், "எனது அப்பாவும் அம்மாவும் என்னிடம் கோபப்பட்டபோது நான் அவர்களுக்குச் செவிகொடாமல் இருந்தேன், இப்போது அவர்கள் கோபம் நியாயமானது என்பதனை உணர்கின்றேன்" என்று கூறுவார்கள். இதுபோலவே தேவனது கோபத்தின் காரணத்தை நாம் பின்னாட்களில் உணர்ந்துகொள்வோம்.  

அன்பானவர்களே, எனவே நாம் முதலிலேயே நம்மைக்குறித்த தேவ சித்தத்தை உணர்ந்தவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்போஸ்தலராகிய பவுல் "இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்..." ( கொலோசெயர் 1 : 9 ) ஜெபிக்கின்றோம் என்று கொலோசெய சபையார் இப்படி தேவசித்தம் அறிந்தவர்களாக வாழ ஜெபிப்பதாகக்  கூறுகின்றார். 

நாமும் நமது அன்றாட வாழ்வில், "தேவனே என்னைக்குறித்த தேவ சித்தத்தை எனக்கு காண்பியும், அதன்படி நான் வாழ எனக்கு உதவி செய்யும்"  என்று வேண்டுதல் செய்வோம். "தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும் அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்." ( லுூக்கா 12 : 47 ) என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. நாம் ஏன் இன்னும் அடிக்கப்படவேண்டும்? 


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1671                                                                  ஆதவன் 04.09.2025 வியாழன்      

"...அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன." ( எரேமியா 32 : 19 )

இன்று திருடர்களையும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிவதற்காக பல நிறுவனங்களிலும் பல பொது இடங்களிலும் CCTV காமெராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்படுவதுடன் அவர்கள் தாங்கள் அதனைச் செய்யவில்லை என்று மறுதலிக்க முடியாத ஆதாரங்களாகவும் அவை உள்ளன. 

இதுபோல, நாம் வொவொருவரும் செய்யும் செயல்பாடுகள் இந்த CCTV காமெராக்களைவிட அதிக சக்திவாய்ந்த கர்த்தரது கண்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதனையே இன்றைய தியான வசனத்தில் நாம்,  "உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன" என்று வாசிக்கின்றோம். இப்படி அவர் மக்களை நோக்கிப்பார்த்து அவர்களது செயல்களுக்கேற்ற பிரதிபலனை அளிக்கிறவராக இருக்கின்றார். அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி அவர் இப்படி மனிதர்களைக் கண்காணிக்கின்றார். 

உலக நீதிமன்றங்களும் மக்களும் ஒருவர் செய்யும் செயலை மட்டும் பார்த்து அவர்களைத் தீர்ப்பிடுகின்றனர். ஆனால் தேவன் மனிதர்கள் ஒரு செயலை செய்யும்போது அந்தச் செயலை மட்டும் பார்க்காமல் எந்த நோக்கத்துக்காக அதனை அவர்கள் செய்தனர் என்பதனையும் எண்ணிப்பார்க்கின்றார். ஆம், அவர் யதார்த்தத்தின்படி தீர்ப்பிடுபவர். இதனையே,  "....அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்." ( ஏசாயா 11 : 3, 4 ) என்று ஏசாயா கூறுகின்றார். 

எனவே, நாம் பேசும் ஒவ்வொரு பேச்சும், செயல்பாடுகளும் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன்  இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில், நியாயத்தீர்ப்பு நாளில் நாம் செய்யும் ஆராதனைகளும், கலந்துகொள்ளும் ஜெபக்கூட்டங்களும், காணிக்கைகளும், உபவாசங்களுமல்ல தேவனுக்கேற்ற நமது செயல்பாடுகளே அவரது கண்களுக்குமுன் நிற்கும்.  

தவறான பாவக் காரியங்களில் ஈடுபடும் ஒரு மகனோ மகளோ தனது பெற்றோர் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அந்தச் செயலைச் செய்யமாட்டார்களல்லவா?  திருடரும் கொள்ளைக்காரரும் யாரும் பார்க்கும்போது திருடுவதில்லையல்லவா? இதுபோல நமது ஒவ்வொரு பேச்சும், செயலும் தீவிரமாகத்  தேவனால் கண்காணிக்கப்படுகின்றன என்பதனை உணர்ந்தால் நாம் வித்தியாச குணமுள்ள மனிதர்களாக மாறுவோம். 

"இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது." ( வெளிப்படுத்தின விசேஷம் 22 : 12 ) என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1672                                                                  ஆதவன் 05.09.2025 வெள்ளி       

"எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்; ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்." ( பிரசங்கி 9 : 3 )

இந்த உலகத்தில் வாழும் எல்லா மனிதர்களுக்கும் எல்லா காரியங்களும் ஒருபோலவே நடைபெறுகின்றன. பிறப்பு, நோய்கள், விபத்துக்கள், துன்பங்கள், இறப்பு போன்ற அனைத்துக் காரியங்களும் அனைவருக்கும் பொதுவானவை. மதம், இனம், நாடு, ஜாதி பாகுபாடுகளைக் கடந்து இவை அனைவருக்கும் ஒன்றுபோலவே நடைபெறுகின்றன. பிரபலமானவர்கள் பிரபலமற்றவர்கள் என அனைத்து மனிதர்களுக்கும் இவை ஏற்படாமல் இருப்பதில்லை. மட்டுமல்ல, வெளிப்பார்வைக்கு மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எல்லோரும் நிஜவாழ்வில் அப்படி மகிழ்ச்சியை அனுபவிப்பவர்களுமல்ல. 

இப்படி எல்லோருக்கும் எல்லாம் ஒரேமாதிரி நடப்பதால் மனிதர்கள் தீமையினால் நிறைந்திருக்கிறார்கள் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.   'நாம் நல்லவர்களாக வாழ்ந்து என்ன பயன்? எல்லோரையும்போல வாழ்ந்து நமது வாழ்வை முடித்துக்கொள்ளலாமே? என்று எண்ணுகின்றார்கள் மக்கள். இதனையே  "அவர்களது இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள்" என்று வசனம் கூறுகின்றது. 

அதாவது, எல்லோருக்கும் நடைபெறுவதைப் பார்த்து மனிதர்கள் தெய்வபயமற்றவர்களாக மாறிவிடுகின்றனர். ஆனால், தேவனது பொதுவான நியமனம்  "எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்." ( பிரசங்கி 9 : 2 ) என்பதுதான். 

எனவே அன்பானவர்களே, நாம் வெறும் உலக கண்ணோட்டமுடையவர்களாக வாழ்ந்தால் தவறான எண்ணம்கொண்டு இறுதியில் கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? எனும் சந்தேக படுகுழிக்குள் விழுந்துவிடுவோம். "தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக்கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்." ( பிரசங்கி 8 : 17 ) என்கின்றார் பிரசங்கி. 

ஆனால்,  புதிய ஏற்பாட்டின் காலத்தில் வாழும் நாம் ஆவியின் பிரமாணத்துக்குள் வந்துவிடுவதால்  தேவன் ஆவிக்குரிய கண்ணோட்டத்துடன் இவைகளைப் பார்க்க நமக்கு அறிவைத்தருகின்றார். எனவே இவைகளை நாம் ஓரளவு புரிந்துகொள்ள முடியும். "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்." ( 1 கொரிந்தியர் 2 : 12 ) என்று அப்போஸ்தலரான பவுல் கூறுவதன்படி தேவனது ஆவியினால் நாம் இப்படி மனிதர்களது வாழ்வில் நடைபெறும் எதிர்மறையான காரியங்களின் காரணங்களையும் புரிந்துகொள்ளமுடியும். 

ஆனால், "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." ( 1 கொரிந்தியர் 2 : 14 )

எனவே அன்பானவர்களே, எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவித்தாலும் அதுகுறித்து நாம் நிலைதடுமாறவேண்டாம். ஆவிக்குரிய வாழ்வில் தொடர்ந்து உறுதியாக இருப்போம்.  அப்படிச்  சில எதிர்மறையானச்  செயல்கள் நடைபெறுவதன் ஆவிக்குரிய காரணத்தை நாம் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படும்போது மட்டுமே  தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். அத்தகைய ஆவியின் வழிநடத்தலை பெற்றிட விரும்பி வேண்டுவோம்; தேவன் அதனைத் தந்து நம்மை வழிநடத்துவார்.   


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1673                                                                  ஆதவன் 06.09.2025 சனி       

"நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்."  ( ஏசாயா 51 : 7 )

தன்னை அறிந்து, தனக்கு உகந்தவர்களாக வாழும் மக்களுக்கு தேவன் இன்றைய தியான வசனத்தின்மூலம் ஆறுதலான வார்த்தைகளைத் தருகின்றார். அந்த மக்களையே அவர்"நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே" என்று கூறி அழைக்கின்றார். ஆம் தேவனை மெய்யாக அறிந்தவர்கள் தேவனது நீதியை அறிந்திருப்பார்கள்;  காரணம் வேத வசனம் அவர்களது இருதயத்தில் பதிக்கப்பட்டிருக்கும். 

ஆனால் அவர்கள் இந்த பொல்லாத உலகத்தில் வாழ்வதால் தங்களை அறியாமல் ஒருவித பயம் சிலவேளைகளில் அவர்களை மேற்கொண்டுவிடுகின்றது. சில வேளைகளில் வேலைசெய்யும் பணியிடங்களில் இந்த தேவ மக்களுக்கு எதிராகச்  சிலர் எழும்புவதுண்டு. அவர்கள் நிந்திக்கலாம், பல்வேறு தூஷண வார்த்தைகளை இவர்களுக்கு எதிராகக் கூறலாம். காரணம், தேவனை அறிந்தவர்கள் நீதியாக வாழ்வது அவர்களோடு பணிசெய்யும் அல்லது உடன்வாழும் மக்களுக்கு ஏற்றதாக இருக்காது.

உதாரணமாக, ஒரு அரசாங்க அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர் ஒருவருக்கு லஞ்சம் வாங்கிட அதிக வாய்ப்பு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம், ஆனால், அவர் நீதி, நேர்மை எனப்பேசி லஞ்சத்துக்கு எதிராக இருப்பாரானால் அதே துறையில் அவரோடு பணிபுரியும் மற்றவர்களுக்கு அவரது செயல்பாடுகள் லஞ்சம் வாங்கிடத் தடையாக இருக்கும். எனவே அவர்கள் அந்த உண்மையுள்ள பணியாளனை நிந்தித்து தூஷண வார்த்தைகளைப் பேசுவார்களல்லவா?  

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பணிபுரிபவர்களென்றால், உங்களைப்பார்த்துத் தேவன்கூறுகின்றார், "நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள்." என்று. 

இதே நிலைமையை  சில குடும்பங்களில் வாழ்க்கைப்பட்டுச் செல்லும் பெண்கள் சந்திக்க நேரிடலாம். மாமியார், நாத்தனார் ஏன் கணவன்கூட சில வேளைகளில்  நிந்தித்துத் தூஷண வார்த்தைகளைப் பேசலாம். ஆனால் தேவன் கூறுவதுபோல நாம் நமது நீதி நேர்மையை விட்டுவிடாமல் தேவன்மேல் விசுவாசத்தோடு வாழ்வோமானால் நமது துன்பத்தை அவர் மாற்றி மகிழ்ச்சிப்படுத்துவார். 

இன்றைய தியான வசனம் எல்லோருக்கும் பொதுவான வசனமல்ல; மாறாக தேவ நீதியை அறிந்த மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. எனவேதான்  "நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே" என்று கூறப்பட்டுள்ளது. அன்பானவர்களே, நாம் எல்லோரும் இந்த வசனத்தின்படி ஆசீர்வாதத்தைப் பெறவேண்டுமானால் நீதியை அறிந்தவர்களாக தேவ வார்த்தைகளை இருதயத்தில் பதித்தவர்களாக மாறவேண்டியது அவசியம். நீதியின் சூரியனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்த்து பாவங்களை அறிக்கையிடும்போது அவரது  மன்னிப்பைப் பெற்று நீதியின் மக்களாக நாம் மாற முடியும்.  அப்படி நாம் மாறும்போது மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருப்போம்.

 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1674                                                                  ஆதவன் 07.09.2025 ஞாயிறு        

"நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை. நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( ஏசாயா 43 : 11-12 )

நம்முடைய தேவன் நம்மிடமிருந்து வெறுமனே  ஆராதனையையும் வழிபாடுகளையும் புகழ்ச்சியையும் மட்டும் எதிர்பார்ப்பவரல்ல. அவர் மனித சுபாவம் மற்றும் மனித மனம் கொண்டவராகவே இருக்கின்றார். இப்படி இருப்பதால் அவர் நாம் பேசும்போது நமக்குப்  பதில் தருபவராகவும், நமக்கு வழி காட்டுபவராகவும் இருக்கின்றார். நாம் ஒருவரிடம் பேசும்போது அவர் நமக்கு மறுமொழி கூறாமலும் பதில் பேசாமலும் இருந்தால் எப்படி இருக்கும்? அது வெற்றுப் பேச்சாகத்தானே இருக்கும்? 

நமது தேவன் அப்படி நமது ஜெபங்களையும் பேச்சையும் கேட்காத ஒரு உயிரற்றவரல்ல. நமது பேச்சை அவர் கேட்கின்றார், நமது மனதின் ஏக்கங்களை அறிகின்றார், நமக்கு அறிவிக்கின்றார், நம்மை இரட்சித்து வழிநடத்துகின்றார்.  இப்படிச் செய்யக்கூடிய வேறு எந்த தெய்வங்களும் இல்லை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

இப்படிப்பட்ட  உயிருள்ள தேவனால் நாம் இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருக்கின்றோம். இதனையே அப்போஸ்தலரான பவுல், "வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்." ( 1 கொரிந்தியர் 8 : 5-6 ) என்று கூறுகின்றார். 

எதற்காக நமது தேவன் இப்படி நம்மோடு பேசி வழிநடத்துகின்றார் என்றால் நாம் அவருக்கு சாட்சியுள்ள வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காகவே என்று இன்றைய தியான வசனம் தொடர்ந்து, "நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்." என்று கூறுகின்றது. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், "நீங்கள் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" (அப். 1:8) என்று கூறவில்லையா?  ஆம், கர்த்தரைத் தவிர வேறு தேவன் இல்லை என்பதனை நாம் உறுதியாக விசுவாசிக்கும்போதுதான் நாம் அவருக்குச் சாட்சியுள்ளவர்களாக வாழமுடியும். 

இந்த மெய்தேவனை நமக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதாமே இந்தப் பூமியில் வந்து நமக்கு வெளிப்படுத்தினார். ஆம்,  "அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்." ( 1 யோவான்  5 : 20 )

எனவே அன்பானவர்களே, நமது தேவனாகிய கர்த்தரையல்லாமல் வேறு இரட்சகர் இல்லை என்பதனை அவரே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணியுள்ளதால் நாம் விசுவாசத்தில் உறுதியுடன் இருக்கவேண்டியது அவசியம். அவர் செய்ததுபோல செய்யத்தக்க அந்நிய தேவன் எதுவும் இல்லை. எனவே, இன்றைய தியான வசனம் கூறியுள்ளபடி அவரே மெய்யான தேவன் என்பதற்கு நாம் சாட்சிகளாக விளங்கவேண்டியது அவசியம் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துக் கூறுகின்றார். அவருக்குச் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்வதன்மூலம் மெய்யான தேவனை அறியாத மற்றவர்களுக்கும் அவரே மெய்யான தேவன் என்பதனைப்  புரியவைப்போம். 

 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1675                                                                  ஆதவன் 08.09.2025 திங்கள்         

"இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 21 : 8 )

தேவன் மனிதர்களை முழு சுதந்திரமுள்ளவர்களாகவே படைத்துள்ளார். மனிதர்கள் தங்கள் மனதின் விருப்பத்தின்படி முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஒரு இயந்திரத்தைப்போல மனிதர்களை தேவன் படைத்திருந்தால் எல்லோரும் அவரது கட்டுப்பாட்டில் ஒரு ரோபோ போல செயல்பட்டுக் கொண்டிருப்போம். அது முழுமையான மகிழ்ச்சியை மனிதர்களுக்குத்  தந்திருக்காது.  சுதந்திரமாக முடிவெடுக்கும்போது ஒருவருக்கு அது  மனமகிழ்ச்சியைக்  கொடுக்கும்.  

இந்த உலகத்தில் தேவன் மனிதர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வழிகளை அவர்களுக்கு முன்வைத்துள்ளார். இது ஏதேன் தோட்டத்திலேயே தேவன் வைத்திருந்த வழிமுறைதான். ஜீவனுக்குப்போகும் வழி மற்றும் நித்திய அழிவுக்குச் செல்லும் வழி இவைகளை தேவன் அன்று ஆதாம் ஏவாளுக்குக் கட்டளை மூலம் காண்பித்திருந்தார். அதாவது, தேவன் கட்டளையைக்  கொடுத்துவிட்டு  அதன்படி நடக்கலாமா வேண்டாமா எனும் முடிவினை மனிதர்களே எடுக்கும்படிச் செய்திருந்தார். ஆனால் அவர்களோ தங்களது சுய ஆசை விருப்பதினிமித்தம் அழிவுக்கான வழியினைத் தெரிந்துகொண்டனர். 

அதுபோலவே இன்றும் இந்த உலகத்தில் இரண்டு வழிகள் இருக்கின்றன. அதனையே, "இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." இன்று வழியை மட்டும் தேவன் மனிதர்களுக்குக் கொடுக்கவில்லை, மாறாக எந்த வழியில் நடக்கவேண்டுமென்றும் காண்பித்திருக்கின்றார். அவையே பல்வேறு தேவ கட்டளைகளாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. மட்டுமல்ல, ஜீவவழியில் நடந்து வெற்றிபெற்ற பரிசுத்தவான்களது வாழ்க்கை வரலாறுகளையும் நமக்கு வேதாகமம் மூலம் காண்பித்திருக்கின்றார். 

இவைகளுக்கு மேலாக நம்மை நேர்மையான வழியில் வழிநடத்தும் பரிசுத்த ஆவியானவரைத் துணையாளராகத் தந்துள்ளார். ஆம், "நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்." ( சங்கீதம் 32 : 8 ) என்று தேவன் கூறுகின்றார். நமக்குமுன் ஜீவவழியும் மரணவழியும் இருந்தாலும் தேவனைச் சார்ந்து வாழ்வோமானால் எந்த வழியில் நடக்கவேண்டுமென்று அறிவுரைகூறி நாம் நடக்கவேண்டிய வழியை அவர் நமக்குக் காண்பிப்பார். 

ஆனால் தேவனை அறிய விரும்பாமல் துன்மார்க்க வாழ்விலேயே மகிழ்ச்சிகொண்டு வாழ்வோமானால் நாம் ஜீவனுக்குச் செல்லும் சமாதான வழியினை அறியாமல் போய்விடுவோம். இதனையே,  "சமாதானவழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே." ( ரோமர் 3 : 17-18 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். ஆம், தெய்வபயமில்லாமல் நாம் வாழ்வோமானால் நாம் சமாதான வழியினை அறியமுடியாது. 

மரணத்துக்குப்போகும் வழி செழிப்பான பகட்டான வழியாக நமக்குத் தெரியும். அந்த உலகக் கவர்ச்சியில் மயங்கி நாம் தடுமாறி மரணவழியிலேயே தொடர்ந்து பயணம்செய்யும் அபாயம் உண்டு. எனவே, "கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்." ( சங்கீதம் 27 : 11 ) என்று நாம் ஜெபிக்கவேண்டியது அவசியம். 

எனவே, கர்த்தர் நம்முன் வைத்துள்ள இரண்டு வழிகளையும் நாம் தெளிவாகப்  புரிந்து சரியான வழியில் நடக்கவேண்டுமானால் நாம் ஜெபத்திலும், வேதாகம உண்மைகளை அறிவதிலும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டியதும் தேவனோடு ஐக்கியமுள்ளவர்களாக வாழவேண்டியதும்  அவசியம். அப்படி இருப்போமானால், அவர் நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியை நமக்குக் காண்பிப்பார்; நமக்கு ஆலோசனையும் கூறுவார். 

 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1676                                                                  ஆதவன் 09.09.2025 செவ்வாய்          

"அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கின்றன." ( சகரியா 4 : 10 )

பாபிலோனியரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைபெற்று வெளிவந்த இஸ்ரவேலர்கள் தாங்கள் அடிமைப்பட்டபோது  தகர்க்கப்பட்ட  கர்த்தரது ஆலயத்தை பழுதுபார்த்துத் திரும்பக்  கட்டியெழுப்ப முயன்றனர். செருபாபேல் முன்னின்று இந்த ஆலயக் கட்டுமானப் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். ஆனால், இஸ்ரவேலரின் எதிரிகள் ஆலயக் கட்டுமானம் நடைபெறக்கூடாது என்பதிலேயே குறியாக இருந்து அதனைத் தடுத்து நிறுத்த முயன்று கொண்டிருந்தனர். அப்போது சகரியா தீர்க்கத்தரிசிமூலம் கர்த்தரது திடப்படுத்தும் வார்த்தைகள் அவர்களுக்கு வந்தன. 

இஸ்ரவேலரின் ஆலயக் கட்டுமானப்பணியினை அவர்களின் எதிரிகள் பலரும் ஏளனம் செய்தனர். அவர்களை அசட்டைபண்ணினர். ஆனால் சகரியா மூலம் கர்த்தர் கூறுகின்றார், "பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கின்றன" என்று. தூக்குநூல் என்பது கட்டுமானப்பணிகளுக்கு கொத்தனார்கள் பயன்படுத்தும் அளவுநூல்.  இந்தத் தூக்குநூலின் உதவியால் சுவரின் சாய்மானத்தைக் கணக்கிட்டுச் சரிசெய்வார்கள். அதாவது, ஆலயக் கட்டுமானப் பணிகளைக்  கர்த்தர் சந்தோஷமாகப் பார்த்தார். 

இதுபோலவே ஆவிக்குரிய காரியங்களிலும் இன்று  நடைபெறுகின்றது. எருசலேம் ஆலயம் தகர்க்கப்பட்டதுபோல மனிதர்களது உடலாகிய ஆலயத்தைச்  சாத்தான் கெடுத்துத் தகர்த்துவிட்டான்; மனிதர்களது ஆத்துமாக்களைச் சிறைபிடித்துவிட்டான். சாத்தானுக்கும் பாவத்துக்கும்  மக்கள் அடிமைகளாகிவிட்டனர். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மீட்கப்படும்போது தகர்க்கப்பட்ட நமது தகர்க்கப்பட்ட மனித ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்ப முயலுகின்றோம் என்று பொருள். இப்போது, நமது இந்த ஆவிக்குரிய புதிய முயற்சியினை அன்று இஸ்ரவேலரின் ஆலயக்கட்டுமானத்தை எதிரிகள் அற்பமாகப் பார்த்து அசட்டைசெய்ததுபோல நமது ஆவிக்குரிய வாழ்வின் எதிரிகளாக நண்பர்களும் குடும்பத்தினரும் நம்மை அற்பமாக எண்ணி அசட்டைசெய்யலாம். 

ஆனால், பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்ததுபோல நமது ஆவிக்குரிய முயற்சிகளை கர்த்தர் சந்தோஷமாகப்  பார்க்கின்றார். எனவே, மனிதர்களது அற்பமான பார்வைகளைக்கண்டு நாம் மனம் மடியவேண்டாம். 

எனது ஆரம்பகால ஆவிக்குரிய வாழ்க்கையில் என்னிடம் சிலர் ஏளனமாக "என்ன, உனக்கு என்ன ஆனது? நீயும் இந்த அல்லேலூயா கூட்டத்தில் சேர்ந்து கைத்தட்டத் துவங்கிவிட்டாய்" என்றும்,  "பெந்தெகொஸ்தேகாரர்கள்  உன்னை மூளைச்சலவைச் செய்துவிட்டனர்" என்றும் கூறியதுண்டு. "அந்த ஓலைக் கொட்டகைக்குப்போய் என்ன புதிதாகப் பெற்றுக்கொண்டாய்?" என்று கேள்வி கேட்டனர். ஆனால்  அதனை, செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைக் கர்த்தர்  சந்தோஷமாய்ப் பார்த்ததுபோலச்  சந்தோஷமாகப்  பார்த்தார். இன்று அவர்களில் சிலர் என்னிடம், "பிரதர், எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்" என்கின்றனர். 

ஆம் அன்பானவர்களே, ஆவிக்குரிய காரியத்தில் நாம் மற்றவர்களது கேலி, நம்மை அவர்கள் அற்பமாகப் பேசுவது இவைகளை எண்ணிக் கலங்காமல் கர்த்தரை மட்டும் நோக்கிப்பார்க்கவேண்டும்.  மற்றவர்களை நாம் சந்தோஷப்படுத்தத் தேவையில்லை, நமது ஆவிக்குரிய செயல்பாடுகள் கர்த்தரை சந்தோசப்படுத்துவதாக இருந்தால் போதும்.  "கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்தும், நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கின்றன." ( நீதிமொழிகள் 15 : 3) எனவே எச்சரிக்கையுடன் நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடருவோம். 


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1677                                                                  ஆதவன் 10.09.2025 புதன் 

"வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது." ( சங்கீதம் 124 : 7-8 )

குருவி பிடிக்க குறவர்கள் வலைகளை விரிப்பதுண்டு. பிடித்தக் குருவிகளை கூண்டுகளில் அடைத்து விற்பனைசெய்து பிழைப்பு நடத்துவார்கள் அவர்கள். ஒருமுறை சாத்தான்குளம் பகுதியில் கடலை பயிரிடப்பட்டிருந்த  ஒரு தோட்டத்தில் இப்படி வலைவிரித்து அவர்கள் குருவிகளை பிடிக்க முயன்றதைப் பார்த்தேன். அவர்கள் விரித்திருந்த வலையில் பல குருவிகள், மைனாக்கள் சிக்கியிருந்தன.  ஆனால் அவைகளை வலையிலிருந்து அவர்கள் பிடிக்குமுன் அவர்களது கூட்டத்தைச் சார்ந்த சிறுவன் ஒருவன் தவறுதலாக வலையை அகற்ற அவற்றில் சிக்கியிருந்த பல குருவிகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புபோல வேகமாகத் தப்பிப் பறந்தன. 

தாவீது சிறுவயதில் வானாந்தரங்களில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்தபோது இதுபோன்ற சம்பவங்களைப்  பாத்திருப்பார். எனவே, பாவம் மற்றும் சாத்தானின் பிடியில் சிக்கியிருந்த தனது ஆத்துமா தேவனது கிருபையால் அவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டதை அவர் இன்றைய தியான வசனத்தில் இப்படி வலையிலிருந்து தப்பிய குருவிகளுக்கு ஒப்பிடுகின்றார். அதாவது கர்த்தரது கிருபையால் இத்தனை வேகமாக வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று என்று குறிப்பிடுகின்றார். ஆம், தேவன் நாம் எப்போது அவரிடம் நெருங்கி வருவோம் என்று காத்திருக்கின்றார். நாம் ஓரடி அவரை நோக்கி எடுத்துவைத்தாலே போதும் நமது ஆத்துமா பிழைக்கும். சகேயுவின் வாழ்க்கை  (லூக்கா 19) நமக்கு இதனை உணர்த்துவதாக உள்ளது. 

ஆம் அன்பானவர்களே, சாத்தான் நம்மை மோசம்போக்கிட தந்திரமான வலைகளை விரித்துள்ளான். உலக மனிதர்கள் பலரும் அறிந்தும் அறியாமலும் அந்த வலைக்கண்ணியில் சிக்கிக்கொள்கின்றனர். ஆனால் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் நமக்கு விடுதலை உண்டு.  அவரது பார்வை நம்மீது படும்போது நாம் எத்தனை பாவிகளாக இருந்தாலும் நம்மைக் கட்டியுள்ள பாவக்கண்ணிகள் தெறித்து உடைந்துபோகும்.  எனவேதான் நமக்கு தேவனது உதவி அதிகமாகத் தேவைப்படுகின்றது. இதனை அறிந்திருந்ததால் சங்கீத ஆசிரியர், "எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்." ( சங்கீதம் 121 : 1 ) என்று தேவனை நோக்கி உதவிக்குக் கெஞ்சுகின்றார். 

பாவக்கண்ணிகள் நம்மைக் கட்டி  அடிமைப்படுத்தியுள்ளதை இயேசு கிறிஸ்து, "பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 34 ) என்று கூறினார். மட்டுமல்ல, இந்தப் பாவக்கண்ணிகள் குமாரனாகிய கிறிஸ்துவால் மட்டுமே உடைக்கப்படமுடியும். ஆம்,  "ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 )

கிறிஸ்துவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு மனம்திரும்பும்போது வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிப் பிழைக்கும். நம்மைக் கட்டியிருக்கும் பாவக்கண்ணி தெறிக்கும்; நாம் தப்புவிக்கப்படுவோம்.  இதனையே அப்போஸ்தலரான பவுல், "கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.'" ( ரோமர் 8 : 2 ) என்று கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, வேடனுடைய கண்ணிக்குத் தப்பிய குருவியைப்போல அவரது கிருபையால் மட்டுமே நமது ஆத்துமா தப்பிப்பிழைக்கும். பாவங்கள் கண்ணிக்குத் தப்பிய குருவியைப்போல நம்மைவிட்டுப்  பறந்துபோகும். "மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார்." ( சங்கீதம் 103 : 12 ) என்று வாசிக்கின்றோம். எனவே, வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய உதவிக்குக் கெஞ்சி ஜெபிப்போம். நமது ஆத்துமா விடுதலை அடையும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                    📞 Contact: 96889 33712                                                                            🌐 Website: aathavanmonthly.blogspot.com  

"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1678                                                                  ஆதவன் 11.09.2025 வியாழன் 

"ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்." ( ஏசாயா 30 : 18 )

இந்த உலகத்தில் நாம் காதலர்கள் ஒருவருக்கொருவர் காத்திருப்பதைப் பார்த்திருக்கின்றோம். பேருந்து நிலையங்களிலும், உணவுவிடுதிகளிலும், கடற்கரைகளிலும் இப்படித் தங்கள் துணைகளுக்காகக்  காத்திருக்கின்றனர். இப்படிக் காத்திருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. இதுபோலவே, நம்மை உண்மையாக அன்பு செய்யும்  கர்த்தர் நமக்காகக் காத்திருக்கின்றார். மனிதர்களாகிய நாமும்  அவருக்காகக் காத்திருக்கவேண்டுமென்று அவரும் ஆசைப்படுகின்றார். 

கர்த்தர் இப்படிக் காத்திருப்பது நாம் அவரோடு இணைந்திருக்க வேண்டும் எனும் ஒரே நோக்கத்துக்காகத்தான். பாவத்திலேயே மூழ்கி அழிந்துகொண்டிருக்கும் மனிதர்கள் எப்போது மன்னிப்பைவேண்டி தன்னிடம் வருவார்கள் என்று தேவன் காத்திருக்கின்றார். காத்திருக்கும் கர்த்தரை நாம் கண்டுகொள்ள உலகக் காதலர்கள் காத்திருப்பதுபோல குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லவேண்டுமென்று அவசியமில்லை. நாம் உண்மையாக விரும்பினால், எங்கும் அவரை நாம் கண்டுகொள்ளலாம்.  கர்த்தர் இதனையே, "உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்" என்று கூறப்பட்டுள்ளது. 

உலக காதலர்களைப்போல நாமும் கர்த்தருக்குக் காத்திருக்கவேண்டியது அவசியம். ஆம் அன்பானவர்களே, நமது ஆத்தும இரட்சிப்புக்கு நாம் காத்திருந்து ஜெபிக்கவேண்டியது அவசியம். இதனையே அப்போஸ்தலரான பவுல், "அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?" ( ரோமர் 8 : 23-24 ) என்று கூறுகின்றார். 

நமது உள்ளத்தைக்  கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து நாம் காத்திருக்கவேண்டும். ஆம், காணமுடியாத தேவன் நமக்கு அளிக்கும் இரட்சிப்பினை நாம் நம்பிக்கையுடன் காத்திருந்து பெறவேண்டியது அவசியம். "நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம்." ( ரோமர் 8: 25)

இப்படிக் காத்திருப்பவர்களை தேவன் கைவிடமாட்டார். நிச்சயமாக அவர் காத்திருக்கும் மக்களுக்குப் பதில் தருவார். தனது மகிமையை அவர்கள் உணர்ந்துகொள்ளும்படி கிருபைசெய்வார். எனவேதான் இன்றைய தியான வசனத்தின் இறுதிப்பகுதியில் கூறப்பட்டுள்ளது, "கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்" என்று. தாவீது ராஜா இப்படிக் கர்த்தருக்குக் காத்திருந்து நன்மைகளைப் பெற்றுக்கொண்டதால் கூறுகின்றார்,  "கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்" ( சங்கீதம் 40: 1) என்று. 

ஆம் அன்பானவர்களே, சிலவேளைகளில் தேவனது பதில் கிடைக்கக் காலதாமதம் ஆகலாம். ஆனால் அவர் ஒருபோதும் நம்மைக் காத்திருந்து ஏமாறவிடமாட்டார். "நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்." ( நீதிமொழிகள் 13: 12) கர்த்தரும் நமக்கு இரங்கும்படிக் காத்திருப்பார், நம்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார் என்பதனையும் நாம் மறந்து விடாமல்  விசுவாசத்தோடு காத்திருந்து ஜெபிப்போம். 

 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1679                                                                  ஆதவன் 12.09.2025 வெள்ளி 
 
"என்னைத் தேடுகிற என் ஜனத்துக்குச் சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கிடையாகவும் இருக்கும்." ( ஏசாயா 65 : 10 )

கர்த்தரைத் தேடுவது என்பது, தவறவிட்டப் பொருளை விளக்கினைப் பற்றவைத்து இருளில் தேடுவதுபோல தேடுவதைக் குறிப்பிடவில்லை. மாறாக, நமது வாழ்வில் நாம் கர்த்தருக்கேற்ற வாழ்க்கைவாழ முயலுவதைக் குறிக்கின்றது; கர்த்தர் அருவருக்கும் பாவக் காரியங்களுக்கு விலகி வாழ்வதைக் குறிக்கின்றது.   

இப்படிக்  கர்த்தரைத் தங்களது வாழ்வில் தேடும் மக்களுக்கு  மேலான ஆசீர்வாதம் உண்டு என்பதனை இன்றைய தியான வசனம் எடுத்துக் கூறுகின்றது. வரலாற்றுப் பின்னணியில் பார்ப்போமானால்  "சாரோன் சமவெளி" செழிப்பான ஒரு பகுதியாகும். இங்கு வளரும் ரோஜாக்கள் உலகின் மிகச்சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. உன்னதப்பாட்டு தேவனை சாரோனின் ரோஜாவுக்கு ஒப்பிட்டு,  "நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன்." ( உன்னதப்பாட்டு 2 : 1 ) என்று கூறுகின்றது. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் நாம் சாரோனின் ரோஜாவுக்கு ஒப்பிடுகின்றோம்.

இன்றைய தியான வசனம் கூறும்  உருவகம் தேவனை உண்மையுடன் தேடும் அவருடைய மக்களுக்குச்  சமாதானம், வளம், பாதுகாப்பு ஆகியவற்றால் நிறைந்த எதிர்காலம் உண்டு என்பதனைச் சுட்டிக்காட்டுகிறது. இதுபோல இன்றைய தியான வசனத்தில் ஆகோரின் பள்ளத்தாக்கு பற்றியும் வாசிக்கின்றோம். இந்தப் பள்ளத்தாக்கு, ஆகானின்  பாவத்துடனும் (யோசுவா 7:26) அதன் விளைவாக இஸ்ரவேலருக்கு ஏற்பட்ட துன்பத்துடனும் தொடர்புடையது. ஆனால் அது மாடுகள் அமைதியாய் படுக்கும் இடமாக, அதாவது மக்களுக்கு நம்பிக்கையையும் ஓய்விடத்தையும் அளிக்கும் இடமாக மாறும் என்று குறிப்பிடப்படுகிறது.

மொத்தத்தில் இன்றைய தியான வசனம் நமக்குக் கூறும் செய்தி, நாம் தேவனைத் தேடும் மக்களாகவும் அவரது ஐக்கியத்தை விரும்புபவர்களாகவும் இருப்போமானால் நமக்கு ஆசீர்வாதம் உண்டு என்பதனை எடுத்துக் கூறுகின்றது. "ஆட்டுத்தொழுவம், மாட்டுக்கிடை" எனும் வார்த்தைகள் உருவகமாக சமாதானத்துடன் வாழும் வாழ்கையினைக் குறிப்பதாக உள்ளது. பகலில் உணவுத்தேடி அலையும் ஆடுகளும் மாடுகளும் இரவில் இளைப்பாறும் இடங்களாக இவை உள்ளதுபோல, தேவனைத் தேடும் மக்களுக்கு இளைப்பாறுதல் உண்டு என்பதனை இன்றைய தியான வசனம் உருவகமாகக் கூறுகின்றது. 

இன்று உலக மக்கள் இளைப்பாறுதலும் அமைதியுமற்று அலைகின்றனர் அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதுபோல  ஆட்டுத் தொழுவமாகவும் (யோவான் 10) மாட்டுக்கிடையாகவும் இருக்கின்றார். மேலும், "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" ( மத்தேயு 11 : 28 ) என்று அவர் நம்மை அன்புடன் அழைக்கவில்லையா?

ஆம் அன்பானவர்களே, நமக்குப் பூரணமான சமாதானமும், செழிப்பும் வேண்டுமானால் பணத்தைத் தேடுபவர்களாக அல்ல, மாறாக நாம் கர்த்தரை நமது வாழ்வில் அன்றாடம் தேடுகின்றவர்களாக வாழவேண்டியது அவசியம். அப்போது, செழிப்பான பள்ளத்தாக்குகளில் ஆடுமாடுகளை அமைதியாகத் தங்கவைப்பதுபோல தேவன் நம்மையும் அமைதியுடன் வாழ வகைசெய்வார். "கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்." ( சங்கீதம் 105 : 4 )


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1680                                                                  ஆதவன் 13.09.2025 சனி  

"அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள்." ( எரேமியா 2: 27)

தேவனுக்கு ஏற்பில்லாத வாழ்க்கை வாழ்வதையும் அவரை வாழ்வில் தேடாமல் வாழ்வதையும் தேவனுக்கு நமது முதுகினைக் காட்டுவதாக இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  பிரதமரோ, முதல்வரோ வரும்போது அவர்களை சந்திக்க நமக்கு வாய்ப்புக் கிடைக்குமானால் அதனைப் புறக்கணித்து அவர்களுக்கு நமது முகத்துக்குப் பதில் முதுகைத் திருப்பிக் காட்டிக்கொண்டு நிற்போமானால் அது நாம் அவர்களுக்குச் செய்யும் எத்தனை பெரிய அவமரியாதை!! 

ஒரு ராஜாவைப்போன்ற தேவன் இதுபோலவே நம்மைத் தேடி நமக்காகக் காத்துக்கொண்டு நிற்கின்றார். ஆனால் பெரும்பாலான மனிதர்களும் அவரை நோக்கிப்பார்க்காமல் தங்களது உலக நாட்டங்களில் ஆர்வம்கொண்டு அவருக்கு முதுகினைக் காட்டிக்கொண்டு நிற்கின்றார்கள். அதாவது,  அவருக்கு  உரிய மரியாதையினைக் கொடுக்கத் தவறியவர்களாக இருக்கின்றனர் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

ஆனால், இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம்,  "தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள்." என்று. அதாவது தேவனுக்கு எந்த மரியாதையையும் கொடுக்காமல் அவருக்கு ஏற்பில்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தங்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்போது மட்டும், "ஆண்டவரே எங்களை இரட்சியும்" என்று கூப்பாடுபோட்டு ஜெபிக்கின்றனர். மட்டுமல்ல, பல்வேறு காணிக்கைகளையும் பொருத்தனைகளையும் செய்து கொள்கின்றனர்.  இப்படி மனிதர்களில் பெரும்பாலானவர்களும் தேவனை அற்பமாகக்   கருதுகின்றனர். 

இப்படி வாழ்வோமானால், "உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப்பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்." ( எரேமியா 2: 19)

இதுபோன்று தங்களது தேவைக்கு நம்மைப் பயன்படுத்தும் மக்களை நமது வாழ்வில் நாம் பார்த்திருக்கலாம். ஆனால் சர்வ லோகத்தையும் படைத்து ஆளும் தேவனை இப்படி நாம் தேவைக்குமட்டும் பயன்படுத்தலாம் என்று எண்ணிவிடக்கூடாது. 

தேவனுக்குத் தனது முதுகையேக்  காட்டி பாவத்திலேயே வாழும் மனிதன் தனது மனம் திரும்புதலுக்காக அவரைநோக்கி ஜெபிப்பதை தேவன் அங்கீகரிப்பார். மாறாக, மனம்திரும்பும் எண்ணம் சிறிதும் இல்லாமல் உலகத் தேவைக்காக மட்டுமே அவரை நோக்கிப்பார்க்கும்போது தேவன் அதனை அங்கீகரிப்பதில்லை. 

எனவே அன்பானவர்களே, தேவனுக்கு நமது முதுகினைக் காட்டிவாழும் வாழ்க்கை வாழ்ந்துகொண்டடிருப்போமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்களாக மாறிவிடுவோம். நமது முகத்தை அவருக்கு நேராகத் திருப்பி நமது பாவங்கள் மன்னிக்கப்பட மன்றாடுவோம். அப்போது நாம் கூப்பிடும்போது தேவன் நமக்குச் செவிகொடுப்பார். தமது முகத்தை நமக்கு அவர் மறைக்கமாட்டார்.  "அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை." ( சங்கீதம் 34: 5) என்று தாவீது கூறுவதுபோல நாம் வெட்கப்படாமல் இருப்போம்; நமது வாழ்க்கையும் பிரகாசமடையும். 


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1681                                                                  ஆதவன் 14.09.2025 ஞாயிறு   

"என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." ( பிலிப்பியர் 4 : 13 )

இந்த உலகத்தில் மனிதர்கள் தங்களது உடல் பலம், பதவி அதிகாரம், பணம்,  இவற்றின் அடிப்படையில் பெருமைகொண்டு,  "எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" என்று கூறுவதுண்டு. இப்படித்  தமிழக அரசியலில் பதவி வெறிகொண்டு தங்களுக்கு வானளவு அதிகாரம் உள்ளதாகப் பெருமையடித்து  அழிந்துபோனவர்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். 

ஆனால், மனிதர்களாகிய நாம் பலவீனமானவர்கள். நம்மால் நம்மைக்கொண்டு எதனையும் செய்யமுடியாது என்ற அறிவு நமக்கு வேண்டும். ஆம் அன்பானவர்களே, தேவன் நினைத்தால் ஒரே நொடியில் நம்மை எதுவுமில்லாதவர்களாக மாற்றிடமுடியும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.' ( 2 கொரிந்தியர் 3 : 5 ) என்று கூறுகின்றார். 

அப்போஸ்தலரான யாக்கோபும், "நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்" ( யாக்கோபு 4 : 14-15 ) என்று கற்தரைச்சார்ந்து முடிவுகளெடுக்க நமக்கு அறிவுறுத்துகின்றார். 

நாம் நம்மை தேவனுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுத்து வாழ்வோமானால் அவரது ஆவியினால் எல்லாம் ஆகும். இன்றைய தியான வசனத்துக்கு இணையான பழைய ஏற்பாட்டு வசனம், "பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 4 : 6 ) என்று கூறுகின்றது. ஆம், நமது மனித பலத்தினால் அல்ல தேவனுடைய ஆவியினாலே எல்லாம் கூடும். 

அப்போஸ்தலரான பவுல் கூறுவதுபோல நாமும் கூறவேண்டுமானால் நாம் கிறிஸ்து நமக்குள் வளர்ந்து நம்மைப் பலப்படுத்தவேண்டியது அவசியம். வேதாமகத்தில் நாம் பார்க்கும் அனைத்துப் பரிசுத்தவான்களும் நம்மைப்போன்ற பாடுள்ள பலவீனமான மனிதர்கள்தான். ஆனால் அவர்கள்மூலம் தேவன் வல்ல செயல்கள் செய்தார். இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு நமக்குப் பின்வருமாறு  நினைவுறுத்துகின்றார்:- "எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை." ( யாக்கோபு 5 : 17 )

ஆம் சாதாரண மனிதர்கள் தேவனது வல்லமையால் அசாதாரணச் செயல்களைச்  செய்தனர். "மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 14 : 15 ) என்கின்றார் பேதுரு. 

"எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு" என்று கூறுவது தற்பெருமை. ஆனால் "பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" என்று கூறுவது நம்மைத் தேவனுக்கு முற்றிலும் ஒப்புக்கொடுப்பதற்கு அடையாளம். கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து வாழ்வோம். அப்போது இந்த உலகத்தில் பாவங்களை மேற்கொண்டு வாழும் பலம் நமக்குக் கிடைக்கும். இதுவே மிகப்பெரிய பலம். இந்த பலத்தை முதலில் நாம் பெற்றுக்கொள்வோமானால் மட்டுமே நமது ஆவிக்குரிய வாழ்க்கை வெற்றியுள்ள வாழ்க்கையாக அமையும். 


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1682                                                                  ஆதவன் 15.09.2025  திங்கள்    

"மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள்." ( சங்கீதம் 4 : 2 )

உலகப் பொருட்களுக்கு இன்றைய வசனம் இரண்டு பெயர்களைக் கொடுத்துள்ளது. அவை "வீணானவை", "பொய்யானவை" என்பனவாகும். இப்படி வீணானவைகளையும் பொய்யானவைகளையும் விரும்பி எதுவரை என் மகிமையை அவமானப்படுத்துவீர்கள்? என்று கேட்கின்றார் பரிசுத்தரான தேவன்.   

மேலும், கர்த்தருக்கு நாம் செலுத்தவேண்டிய மகிமையைச் செலுத்தாமல் இருப்பது அவரை அவமானப்படுத்துவதாகும். உலகப் பொருட்களுக்கும் தேவனுக்கும் நாம் செலுத்தவேண்டிய முக்கியத்துவம் வெவ்வேறானவை. உலகப் பொருட்களா தேவனா என்று கேள்வி எழும்பும்போது நாம் தேவனுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அப்படிக் கொடுக்காமலிருப்பது அவரை அவமானப்படுத்துவதாகும். 

இந்த உலகத்தில் பலவேளைகளில் மற்றவர்களைத் திருப்திப்படுத்தவேண்டுமென்று  கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுக்கத் தவறிவிடுகின்றோம். இது நமது சுய லாபத்துக்காகவோ பயத்தினாலோ இருக்கலாம். ஆனால் நாம் சூழ்நிலைகளைப் பார்க்காமல் கர்த்தருக்கே முக்கியத்துவம் கொடுத்து அவரை மகிமைப்படுத்தினோமென்றால் நிச்சயமாக அவர் நம்மை அவமானப்படவிடமாட்டார். 

அன்று "மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி. அவனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்."  (யாத்திராகமம் 32 : 1 )  அவர்களுக்குப் பயந்த  ஆரோன் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கி அவர்கள்முன் வைத்து, எகிப்திலிருந்து உங்களை வரவழைத்துக்  கொண்டுவந்த தேவன் இவரே" என்று கூறினான்.  

மட்டுமல்ல, "ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான். மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்கத் தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்." ( யாத்திராகமம் 32 : 5, 6 )

இப்படி நாமும்  கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய ஆராதனையைப் பிறருக்குச் செலுத்தும்போது நாமும் அவமானமடைந்து கர்த்தரையும் அவமானப்படுத்துகின்றோம்; நிர்வாணிகளாகின்றோம் என்று பொருள். இப்படித்தான்  ஆரோன் செய்த செயல் இருந்தது "ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான்." ( யாத்திராகமம் 32 : 25 ) என்று வாசிக்கின்றோம். "நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்." ( ஏசாயா 42 : 8 ) என்கின்றார் பரிசுத்தர். 

விக்கிரகங்கள் என்பது சிலைகள் மட்டுமல்ல, தேவனைவிட்டு வேறு உலக காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் குறிக்கும். பொருளாசை மிகப்பெரிய விக்கிரக ஆராதனை. "விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. " ( எபேசியர் 5 : 5 ) என்று பவுலடிகள் கூறுகின்றார்.

நமது இரட்சிப்பின் ஆடையினை உரிந்து நம்மை அவமானப்படுத்திட சாத்தான் பொருளாசையினை நமது இருதயத்தில் விதைக்கின்றான்.  எனவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். இயேசு கிறிஸ்துவோடு பன்னிருவருள் ஒருவனாக இருந்த யூதாஸ் சாத்தான் இருதயத்தில் விதைத்தப்  பொருளாசையால் இரட்சிப்பை இழந்து அவமானடைந்து தற்கொலை செய்துகொள்ளவில்லையா? எனவே அன்பானவர்களே, கர்த்தரது மகிமையை அவமானப்படுத்திடாமல், வீணானதை விரும்பி, பொய்யை நாடாமல் நம்மைக் காத்துக்கொள்வோம். 


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1683                                                                  ஆதவன் 16.09.2025  செவ்வாய்     

"தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையேக்  கொடுத்திருக்கிறார்." ( 2 தீமோத்தேயு 1 : 7 )

இன்றைய தியான வசனம் பரிசுத்த ஆவியானவருக்கும் அசுத்தஆவிக்குமுள்ள வித்தியாசத்தை நாம் உணர்ந்துகொண்டு ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறிச்செல்ல உதவிசெய்கின்றது. 

அசுத்தஆவி பிடித்த மனிதன் ஒருவனைக்குறித்து நாம் மாற்கு சுவிசேஷத்தில் வாசிக்கின்றோம். "அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது" ( மாற்கு 5 : 3-4 ) என்று கூறப்பட்டுள்ளது. புத்தித் தெளிவில்லாத அவன்  மனிதர்களுக்கு தீங்குசெய்துவிடுவான் என்று அவனை சங்கிலிகளால்  கட்டிவைத்திருந்தார்கள். அவன் அவற்றையும் முறித்துவிட்டு அடக்கமுடியாதபடி மக்களுக்குக் கெடுதல் செய்துகொண்டிருந்தான்.  

அதாவது, அசுத்த ஆவிபிடித்த இந்த மனிதன் பயமுறுத்துபவனும், புத்தித் தெளிவில்லாதவனும், அன்பற்றவனுமாக இருந்தான். ஆனால் இதற்கு மாறாக, பரிசுத்த ஆவியானவர் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியானவராக இருக்கின்றார். அவர் நமக்குத் திடன் தருகின்றார்.  அன்பினால் நம்மை வழிநடத்துகின்றார், நாம் சரியான வழியில் நமது ஆவிக்குரிய வாழ்வைத்தொடர தெளிவான புத்தியைத் தருபவராக இருக்கின்றார். மட்டுமல்ல, நம்மை ஆவிக்குரியக் கனிதருபவர்களாக மாற்றுகின்றார். "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22-23 )

அசுத்த ஆவி பயமுள்ள ஆவி என்று கூறப்பட்டுள்ளது. நாம் அசுத்த ஆவிபிடித்த மனிதனைப்போல பயமுள்ள ஆவியைப்பெறவில்லை.  மேலும், வேதாகமத்தை நாம் வாசிக்கும்போது அனைத்து இடங்களிலும் "அசுத்தஆவி பிடித்தவன்" அல்லது "பிசாசு பிடித்தவன்" என்ற வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் பார்க்கலாம். நாமும் பொதுவாக, "பிசாசு பிடித்தவன்" என்றுதான் கூறுவோம். ஆனால் தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் நம்மை இப்படிப் பிடிப்பவரல்ல, மாறாக நம்மேல் வருபவர்; நம்மீது இறங்குபவர்.  அவர் வரும்போது நாம் பெலனடைகின்றோம்; சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை வாழ்கின்றோம். "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்"  ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 ) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா?

சாட்சியுள்ள வாழ்க்கையே பரிசுத்தஆவி பெற்றவர்களுக்கு அடையாளம். ஆனால், "பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்று இயேசு கிறிஸ்துக்  கூறியதற்கு மாறாக இன்று பல கிறிஸ்த ஊழியர்கள் சாட்சியில்லாத வாழ்க்கை வாழ்பவர்களாக இருக்கின்றனர்;  வஞ்சிக்கிற அசுத்த ஆவிகளைக்கொண்டவர்களாக இருக்கின்றனர். பிற மதத்தினர் மத்தியில் இவர்கள் கிறிஸ்தவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர். பத்திரிகைகளில் கிறிஸ்தவ ஊழியர்கள்பற்றி வரும் பலச்செய்திகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. 

இன்றைய தியான வசனத்தின் அடிப்படையில் பார்ப்போமானால் ஏதாவது கூறி மக்களைப்  பயமுறுத்தும் ஊழியர்கள் (குறிப்பாகத் தசமபாக காணிக்கை கொடுக்கவில்லையானால் சாபம் வரும் என மக்களைப் பயமுறுத்தி பணம் சம்பாதிப்பவர்கள்), அன்பில்லாத ஊழியர்கள், வேதத்தைத் தெளிவாக போதிக்காத ஊழியர்கள் போன்றோர் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றவர்களல்ல.  ஆவிகளைப் பகுத்தறியும் வரம் (1 கொரிந்தியர் 12:10) இருந்தாலே நாம் இவர்களைத் தெளிவாக இனம்காணமுடியும். 

ஆம் அன்பானவர்களே, தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். அதுவும் நமது ஆவிக்குரிய நன்மைகளுக்காகவே கொடுத்துள்ளார். இந்த ஆவியானவரையே  வாழ்வில் பெற்றுக்கொள்ள வாஞ்சிப்போம். அப்போதுதான் நாம் ஆவிக்குரிய வாழ்வில் வெற்றிபெற்று கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழமுடியும்.  


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1684                                                                  ஆதவன் 17.09.2025  புதன்      

"அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்." ( சங்கீதம் 147 : 13-14 )

இன்றைய தியான வசனம் நாம் கர்த்தருக்குப் பயந்து நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழும்போது நமக்கு வரும் ஆசீர்வாதத்தினை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.  நாம் கர்த்தருக்குப் பயந்து அவரது கிருபையைச் சார்ந்து வாழும்போது நமக்கு ஆசீர்வாதம் உண்டு. இதனையே இன்றைய தியான வசனத்தின் ஒரு வசனத்துக்குமுன் நாம்  பின்வருமாறு வாசிக்கின்றோம்:- "தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்." ( சங்கீதம் 147 : 11 ) என்று. 

இப்படிக்  கர்த்தர் நம்மேல் பிரியமாக இருந்து என்னவிதமான ஆசீர்வாதங்களைத் தருகின்றார் என்பதே இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துவது. இதில் முதலாவதாகக் கூறப்பட்டுள்ளது, "உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்" என்று. அதாவது இது நமக்கு தேவனது பாதுகாப்பு உண்டு என்பதனைக் கூறுகின்றது. நமது வீடுகளில் கதவின் தாழ்ப்பாள்களை நாம் உறுதியாக வைத்திருப்போம். காரணம், கதவுகளின் தாழ்ப்பாள் உறுதியாக இருந்தால்தான் திருடர்களிடமிருந்து நமக்குப் பாதுகாப்புக் கிடைக்கும். 

இதுபோலவே சாத்தான் நம்மைத் தாக்கி அழிக்காதபடி வலுவான  பாதுகாப்பாகக் கர்த்தர் இருப்பார். நமக்கு மட்டுமல்ல, நம்மூலம் நமது பிள்ளைகளுக்கும்  இந்தப்பாதுகாப்புக் கிடைக்கின்றது. 

இரண்டாவதாக இன்றைய தியான வசனத்தில் நாம்,  "அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்குக்கின்றார்" என்று வாசிக்கின்றோம். இந்த உலகத்தில் மனிதர்களைப் பாதிக்கும் பெரிய பிரச்சனை சமாதானக் குறைவு. மனச்சமாதானமில்லாமல் பெரிய பெரிய செல்வந்தர்களும் புகழ்பெற்ற பிரமுகர்களும் பலவேளைகளில் மனச்சமாதானமின்றி தற்கொலை செய்து மடிவதை நாம் பார்க்கின்றோம். ஆனால் கர்த்தரைத் தேடுபவர்களுக்குப் பூரண சமாதானம் உண்டு.  ஆம், "கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன் கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்." ( சங்கீதம் 29 : 11 )

இறுதியாக, "உசிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்." என்று கூறப்பட்டுள்ளது. இது, உணவு, உடை, உறைவிடம் போன்ற உலக ஆசீர்வாதங்களைக் குறிக்கின்றது. வெறுமனே கோதுமையினால் என்று கூறாமல், "உசிதமான கோதுமையினால்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது "மிகச்சிறப்பான" என்று பொருள். ஆம் அன்பானவர்களே, கர்த்தரை மகிமைப்படுத்தும் வாழ்வு வாழும்போது அவர் நம்மை இப்படி மிகச்சிறப்பாக ஆசீர்வதிக்கின்றார். 

ஆதலால் நாம் தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகி ஆவிக்குரிய ஆராதனை செய்து நம்மை முழுவதும் அவருக்கு ஒப்புக்கொடுத்து அவரது கிருபைக்குக் காத்திருப்போம். அப்போது கர்த்தர் நம்மேல் பிரியமாய் இருந்து தனது வாக்கை நமக்கு நிறைவேற்றுவார். நமது பாதுகாப்பு, குழந்தைகளின் பாதுகாப்பு, உண்மையான பூரண மனச்சமாதானம் இவற்றோடுகூட நமக்கு இந்த உலகத்தில் மேலான ஆசீர்வாதம் இவைகளைக் கர்த்தர் நமக்கு வாக்களித்துள்ளார்.  அவரது கிருபையினைப் பற்றிக்கொள்வோம். 

"ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்." ( எபிரெயர் 12 : 28 )


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1685                                                                  ஆதவன் 18.09.2025  வியாழன்       

"நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?" ( லுூக்கா 6 : 41 )

மனிதர்கள் பலருக்குமிருக்கும் பொதுவான குணம் மற்றவர்களிடம் குறைகாண்பது.  ஆனால் இப்படிக் குறைகூறும் மனிதர்கள் பலரும் தங்கள் கூறும் அதே குறைபாடு தங்களிடம் இருப்பதை உணர்வதில்லை. மற்றவர்களுக்கு அழகான அறிவுரைகளை வாரிவழங்கும் பலரும் அந்த அறிவுரைகளின்படித் தாங்களே நடப்பதில்லை. இப்படி இருக்கக்கூடாது என்று இன்றைய தியான வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அறிவுறுத்துகின்றார். 

மனிதர்கள் ஏன் இப்படி இருக்கின்றார்கள் என்பதற்கு மனோதத்துவ விளக்கம் பின்வருமாறு கூறுகின்றது:- "நம்முடைய பிரச்சினையில் நாம் சிக்கிக்கொண்டிருக்கும் போது உணர்ச்சிகள் நம்மை குழப்பி, அதிகமாக  யோசிக்கவும் மோசமாக  கற்பனை செய்யவும் வைக்கிறது. ஆனால், வேறொருவருக்கு அறிவுரை கொடுக்கும்போது, நம்மால் தெளிவாகவும், யதார்த்தமாகவும், சமநிலையான மனநிலையில் இருக்க முடிகிறது." 

ஆனால் இது மெய்யான காரணமல்ல. எல்லோரும் தங்களை நல்லவர்களாகவும், மற்றவர்களைவிட மேலானவர்களாகவும் எண்ணிக்கொள்வதுதான் இதற்கு உண்மையான காரணம். மேலும், அதே குற்றத்தையும் தவறையும் தாங்களே செய்திருந்தாலும் மற்றவர்களுக்கு அறிவுரைகூறும்போது எல்லோரும் தங்களை நல்லவர்கள் என்று எண்ணுவார்கள் என்று இவர்கள் நினைக்கின்றனர். 

ஆனால், ஆவிக்குரிய வாழ்வில் நாம் இப்படி இருப்பது முறையல்ல. நாம் வாழ்வில் நம்மையே சுய ஆய்வு மிகவும் அவசியம். உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் யதார்த்தமாகச் சிந்தித்துச் செயல்படும்போது நாம் குறைகூறும் பழக்கத்திலிருந்து விடுபடுவோம். அப்போஸ்தலரான பவுல் இப்படியே வாழ்ந்தார். பல நிருபங்களில் பல்வேறு சபைகளுக்கு அறிவுரைகளை அவர் எழுதியுள்ளார். பல்வேறு சபைகளில் பிரசங்கங்கள் செய்துள்ளார்.  இப்படித் தான் பிரசங்கம் செய்து மற்றவர்களை வழி நடத்தினாலும் தானும் அதற்கேற்ப வாழவேண்டும் எனும் எண்ணம் அவருக்கு இருந்ததால் கூறுகின்றார்,  "மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்." ( 1 கொரிந்தியர் 9 : 27 ) என்று. 

உலக வாழ்வில் மட்டுமல்ல, ஆவிக்குரிய வாழ்விலும் நாம் மற்றவர்களைக் குறைகூறி அவர்களைக் குறித்து நாமே தீர்ப்பிட்டு வாழ்வோமானால் நாமும் தேவனுக்குமுன் அதேபோல தீர்ப்பிடப்படுவோம் என்கின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ஆம், "ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்." ( மத்தேயு 7 : 2 )

உலகிலுள்ள எல்லா மனிதர்களும் ஒரேபோன்ற அறிவுடையவர்களல்ல; எல்லோரும் ஒரே சிந்தனையுள்ளவர்களல்ல. வயது அதிகரித்தாலும் பலர் அறிவில் சிறுபிள்ளைகளைப்போலவே இருக்கின்றனர்.  ஆவிக்குரிய வாழ்வில் மனிதர்களது விசுவாச அளவும் இப்படியே இருக்கின்றது. எனவே எல்லோரும் நம்மைப்போல இருக்கவேண்டுமென்று எண்ணி அவர்களது ஆவிக்குரிய செயல்பாடுகளை நாம் குறைகூறக்கூடாது என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். "பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே." ( 1 கொரிந்தியர் 8 : 11 )

எனவே, எல்லாச் சூழலிலும் மற்றவர்களைக் குறைகூறுமுன்னும் அல்லது மற்றவர்களுக்கு அறிவுரைகூறுமுன்னும் நமக்கு அந்தத் தகுதி இருக்கின்றதா, நம்மிடம் குறை இருக்கின்றதா  என்று எண்ணிப்பார்த்துச் செயல்படுவோம். முதலில் நமது கண்ணிலுள்ள உத்திரத்தை உணர்ந்து அகற்றுவோம்; அதன்பின்னர் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்த்து அகற்ற முயலுவோம். அப்போது நாம் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே தேவனும் நமக்கு அளப்பார். 


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1686                                                                  ஆதவன் 19.09.2025  வெள்ளி       

"வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 4 : 11 )

இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்குப்பின் அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவுக்கு மிகப்பெரிய சாட்சிகளாய் இருந்தனர். அவர்களது வல்லமையான பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவிக்குரிய எழுப்புதலை ஏற்படுத்தின.  எனவே பிரதான ஆசாரியனாகிய அன்னாவும் காய்ப்பாவும் அவர்களைப்பிடித்து விசாரித்து இயேசு கிறிஸ்துவைக்குறித்து பிரசங்கிக்கக்கூடாது என்று கண்டித்தனர். அப்படி அவர்களை விசாரணை செய்தபோது அப்போஸ்தலரான பேதுரு இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். 

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை கட்டடம் கட்டும்போது பயன்படுத்தும் பிரதானக் கல்லான  மூலைக்கல்லுக்கு வேதம் ஒப்பிடுகின்றது. கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டும்போது மூலைக்கல் சிறப்பான அங்கீகாரம் பெறும். அந்தக்கல்லை நாட்டும்போது ஜெபித்து, ஆசீர்வதித்து நாட்டுவார்கள். ஆனால் அந்தச் கல்லோ பார்வைக்கு மாற்றக்கற்களைவிட எந்த வேறுபாடுமில்லாததாகவே  இருக்கும். மட்டுமல்ல, சிலவேளைகளில் கொத்தனார்கள் கட்டுமானத்துக்கு ஆகாது என ஒதுக்கிய கல்லாகவும் இருக்கும்.  

இதுபோலவே நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இருந்தார். அவர் மனிதர்களால் ஒதுக்கப்பட்டார்; புறக்கணிக்கப்பட்டார். யூதர்களுக்கு அவரது மகிமை தெரியவில்லை. அன்பானவர்களே, இன்று ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நாமும்கூட பலவேளைகளில் இப்படியே தள்ளப்பட்ட கற்களைப்போல குடும்பத்தினரால், சமூகத்தால், ஒதுக்கப்படலாம்; அற்பமாக எண்ணப்படலாம். ஆனால்,  ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நாமும் ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகக் கட்டப்பட்டு வருகின்றோம். 

"மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்". ( 1 பேதுரு 2 : 4-5 ) என்கின்றார் அப்போஸ்தலரான பேதுரு. 

சாதாரண பெயர் கிறிஸ்தவர்களுக்கு இப்படி ஒதுக்கப்படும் அல்லது புறக்கணிக்கப்படும் அனுபவம் இருக்காது. காரணம் அவர்கள் உலகத்தோடு ஒத்து வாழ்வதால் உலகம் அவர்களை ஏற்றுக்கொள்ளும். ஆனால் ஆவிக்குரிய விசுவாசிகளுக்கு அப்படியல்ல, அவர்களை குடும்பமும் அவர்கள் வாழும் சமூகமும் அவர்களைப் புறக்கணிக்கும்; அற்பமாகக் கருதும். இதனால்தான், "நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது." ( யோவான் 15 : 19 ) என்று கூறினார் இயேசு கிறிஸ்து. 

எனவே நமது ஆவிக்குரிய வாழ்வில் மனிதர்களின் புறக்கணிப்பைத் தாண்டி நாம் முன்னேறவேண்டியது அவசியம். விலையேறப்பெற்ற மூலைக்கல்லாகிய அவரை உறுதியாகப் பற்றிக்கொள்ளாவிட்டால் நாமும் இடறுகின்றோம் என்று பொருள்.  "ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று" ( 1 பேதுரு 2 : 7 ) 

மெய்யாக அவரை மட்டுமே விசுவாசிப்பவர்களுக்கு மூலைக்கல்லாகிய கிறிஸ்து விலையேறப்பெற்றவர். மற்றவர்களுக்கோ தாங்கள் வழிபடும் மற்றவர்களில் ஒருவராக மட்டுமே அவர் இருப்பதால் இடறுதலுக்குரிய கல்லாகவே இருக்கின்றார்.


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1687                                                                  ஆதவன் 20.09.2025  சனி        

"சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 25 )

சிதறுண்ட ஆடுகள் அல்லது வழிதப்பிய ஆடுகள் என்பது கிறிஸ்துவை அறியாமல் நாம் வாழ்ந்த பழைய வாழ்கையினைக் குறிக்கின்றது. இப்படி வழிதப்பிய ஆடுகளின் நிலைமை எப்படியிருக்கும் என்பதனை நாம் உணர்ந்துகொண்டால் மட்டுமே கிறிஸ்துவால் மீட்கப்படும் அனுபவத்துக்குப்பின் நமது வாழ்க்கை மாற்றம் எப்படி இருக்கும் என்பதனையும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். 

வழிதவறிய ஆடுகளுக்கு முதல் பிரச்சனை உணவு மற்றும் உறைவிடம்தான். மேய்ப்பனிடம் வாழும்போது அவைகளுக்கு ஏற்றவேளையில் உணவு, தண்ணீர் கிடைக்கும். மட்டுமல்ல, தங்குவதற்கு நல்ல தொழுவம் இருக்கும். மழை, வெயில் நேரங்களில் போதிய தங்கும் வசதி கிடைக்கும். மேலும், மேய்ப்பனிடம் வாழும்போது கொடிய வனவிலங்குகளிடமிருந்து போதிய  பாதுகாப்புக்  கிடைக்கும். 

கிறிஸ்துவாகிய நல்லாயனை விட்டுவிலகி வாழ்ந்தபோது நாம் சிதறுண்ட, வழிதவறிய  ஆடுகளைப்போலத்தான் இருந்தோம். நம்மைப் பல்வேறு பிரச்சனைகளும் தேவைகளும் நெருக்கிக்கொண்டிருந்தன.    ஆனால், இப்பொழுதோ நமது ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கின்றோம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. எனவே கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு அவரிடம் திரும்பியுள்ள நமக்கு இப்போதுப் போதிய உணவு, உறைவிடம் பாதுகாப்பு உண்டு. 

நல்லாயனாம் இயேசு கிறிஸ்து நமக்குப் பிதாவாகிய தேவன் அளித்த மாபெரும் கொடை. ஏனெனில் வழிதவறிய நமது மீட்புக்காகவே பிதாவாகிய தேவன் அவரை உலகுக்கு அளித்தார். அதுவும் மிகப்பெரிய பாடுகளை அவர் ஏற்றுகொள்ளச் செய்து அவரை நமக்கு அருளினார். ஆம்,  "நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்." ( ஏசாயா 53 : 6 ) என்று வாசிக்கின்றோம். 

இந்த நல்லாயனாம் இயேசு கிறிஸ்துக் கூறுகின்றார்:- "நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்." ( யோவான் 10 : 14-15 ) என்று. நமக்குப் பாதுகாப்பு அளிக்கும் கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கின்றார்; நமது தேவைகளை அறிந்திருக்கின்றார்.  மட்டுமல்ல, நமக்காக தனது உயிரையும் கொடுத்தவர் அவர் என்பதனையும்  நாம் மறந்துவிடக்கூடாது.  

சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்த நாம் இப்போது நல்லாயனிடம் வந்துவிட்டோம். எனவே, தாவீது கூறியதுபோல "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்." ( சங்கீதம் 23 : 4 ) என்று மகிழ்ச்சியுடன் கூறி அவரோடு இணைந்து தொடர்ந்து வாழ்வோம். 

 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1688                                                                  ஆதவன் 21.09.2025 ஞாயிறு        

"மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே." (1 கொரிந்தியர் 15: 48)

ஆதாமையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ள வசனமே இன்றைய தியான வசனம். நாம் மண்ணான ஆதாமைப் போன்றவர்களா இல்லையானால் வானத்துக்குரிய கிறிஸ்துவைப் போன்றவர்களா என்று நிதானித்துப்பார்க்க இந்த வசனம் துணை செய்கின்றது.

மண்ணான ஆதாம் எப்படிப்பட்டவன்? அவன் தேவனுக்குக்  கீழ்ப்படியாதவன்; தனது இச்சையின்படி நடந்தவன்.  ஆதாமும் ஏவாளும் தேவ கட்டளையைவிட தங்களது கண்களின் இச்சையையே பெரிதாக எண்ணினர். "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்." ( ஆதியாகமம் 3: 6) என்று கூறப்பட்டுள்ளது. மண்ணுக்குரிய மனிதர்களாக வாழ்பவர்கள் இப்படி ஆதாமைப் போல உலக நாட்டம் இச்சைகளில் சிக்கியவர்களாக இருப்பார்கள்.  

ஆனால், இதற்கு மாறாக வானத்துக்குரிய கிறிஸ்துவோ பிதாவுக்கு முற்றிலும் கீழ்ப்படிபவராக வாழ்ந்தார், உலகில் தன்னை நெருக்கி நின்ற  பாவ இச்சைகளை மேற்கொண்டவராக இருந்தார்.  "நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." ( எபிரெயர் 4: 15) என்று நாம் வாசிக்கின்றோம். ஆம், எல்லா விதத்திலும் அவர் நம்மைப்போல சோதிக்கப்பட்டார். ஆனால் அந்தச் சோதனைகளை அவர் வென்றார். 

இன்றைய தியான வசனம், மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே என்று கூறுகின்றது. அதாவது, நாம் ஆதாமைபோல உலக இன்பங்களில் நாட்டம்கொண்டு வாழ்வோமானால் நாமும் மண்ணான ஆதாமைப் போன்றவர்களே. ஆனால் நாம் கிறிஸ்துவுக்குரிய மேலான எண்ணமுடையவர்களாய் வாழ்வோமானால் வானத்துக்குரிய அவர் எப்படிப்பட்டவரோ, அப்படியே நாமும் இருப்போம். 

மேலும், அப்போஸ்தலராகிய பவுல் கூறுகின்றார், இப்போது நாம் இந்த உலகத்தில் ஆதாமைப்போல மண்ணான உடம்பினைப் பெற்றிருக்கின்றோம். ஆனால், நாம்  வானத்துக்குரிய கிறிஸ்துவுக்கு உரிய வாழ்க்கை வாழ்வோமானால் அவரைப்போல வானவர் சாயலையும் பெறுவோம். மாம்சமும் இரத்தமும் மேலுலக வாழ்வைச்  சுதந்தரிக்கமுடியாது என்பதால் நாம் உருமாற்றமடைந்து வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.  "சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை." (1 கொரிந்தியர் 15: 50) என்று வாசிக்கின்றோம். 

எனவே கிறிஸ்து இருக்கும் மேலான ஆவிக்குரிய பரலோக வாழ்வில் நுழைந்திட இப்போது இந்த உலகத்தில் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  (1 கொரிந்தியர் 15: 49)

அன்பானவர்களே, நாம் ஆதாமைப்போல இவ்வுலகப்   பொருட்களில் மட்டுமே இச்சைகொண்டு மண்ணின் சாயலை அணிந்துகொள்வோமானால் ஆதாமைப்போல புறக்கணிக்கப்பட்டவர்களாக இருப்போம்.  மாறாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இருக்கும் பரலோகத்துக்குரிய மேலானவைகளை நாடுவோமானால் நாம் வானத்துக்குரியவர்கள் ஆவோம். அப்போது, வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரிய நாமும் அப்படிப்பட்டவர்களாவோம்.  

"நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்." ( கொலோசெயர் 3: 1-2) கிறிஸ்து இருக்குமிடத்திலுள்ள மேலானவைகளையே தேடுவோம்.

 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1689                                                                  ஆதவன் 22.09.2025 திங்கள்         

"யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்." ( யோசுவா 3: 5)

கானானை நோக்கிய இஸ்ரவேலரின் பயணம் முழுவதும் கர்த்தரது வழிநடத்துதலின்படியே இருந்தது. இஸ்ரவேலர் பெரிய போர்ப்பயிற்சி பெற்றவர்களல்ல. ஆனால் அவர்கள் பயிற்சிபெற்ற; பல போர்களைச் சந்தித்த அனுபவமுள்ள எதிரிப்  படைகளுடன் மோதி வெற்றிபெற்றனர். இவை அனைத்தும் தேவன் செய்த அற்புதச் செயல்தான். ஆனால் இப்போதோ அவர்களுக்குக் கானானில் நுழைந்திடத் தடையாக இருப்பதோ யோர்தான் நதி. 

மோசேக்குப்பின் இஸ்ரவேல் மக்களை கானானை நோக்கி வழிநடத்திய யோசுவா இஸ்ரவேல் மக்களைப்பார்த்து இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். நதியைப்பார்த்து நீங்கள் பயப்படவேண்டாம். உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்று அவர் மக்களைப் பரிசுத்தத்துக்கு நேராக வழிநடத்தினார். ஆம் அன்பானவர்களே, இன்று நாம் பல்வேறு தேவைகளுக்காக தேவனைத் தேடி ஓடுகின்றோம். ஆனால் நமது வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதனை எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகின்றோம். 

"கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன்." ( லேவியராகமம் 20: 26) என்று கர்த்தர் கூறுவதைப் பார்க்கின்றோம். நாம் கிறிஸ்தவர்களென்றால் மற்றவர்களிலிருந்து வேறுபிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று பொருள். உலக மக்களைப்போல தாறுமாறாக வாழ்ந்துகொண்டு நமது தேவைக்கு மட்டும் தேவனைத் தேடி ஓடுவதில் அர்த்தமில்லை. பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்த அனுபவம் நமக்குத் தேவை. 

மற்றவர்களைப்போல அல்லாமல் பரிசுத்தர்களாக நாம் வாழவேண்டியது அவசியம்; ஒரு வேறுபிரிக்கப்பட்ட மக்களாக வாழவேண்டியது அவசியம். "ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்." ( லேவியராகமம் 20: 7) நாம் பரிசுத்தர்களாக மாறும்போதுதான் தேவனைத் தரிசிக்க முடியும்; அவரோடு ஐக்கியம் கொள்ளமுடியும்;  அவரது கிருபையினைப் பெறமுடியும். எனவேதான்,  "யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே." ( எபிரெயர் 12: 14) என்று கூறப்பட்டுள்ளது. 

அன்பானவர்களே, நம்மால் நமது சுய முயற்சியால் நாம் பரிசுத்தர்களாக மாறமுடியாது. அது கிறிஸ்து நம்மில் செயல்படும்போது மட்டுமே முடியும். காரணம், நாம் பரிசுத்தமாகவேண்டும் என்பதற்காகவே கிறிஸ்துச்  சிலுவையில் பலியானார். பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் மிருகங்களைப் பலியிட்டு அவற்றின் இரத்தத்தால் தங்கள் பாவங்களைச் சுத்திகரித்து பாவமன்னிப்பு பெற்றனர். ஆனால் புதிய ஏற்பாட்டின்கால மக்களாகிய நாமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கின்றோம்.  ஆம், "இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்." ( எபிரெயர் 10: 10)

ஒருவேளை இதனை வாசிக்கும் நீங்கள் இன்று பல்வேறு தேவைகளுக்காக ஒரு அற்புதத்தை தேவனிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். ஆனால், அந்த அற்புதத்தை வாழ்வில் பெறவேண்டுமானால் யோசுவா கூறுவதைப்போல முதலில் பாவங்கள் மன்னிக்கப்பட்டுப் பரிசுத்தமாகவேண்டியது அவசியம். பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிடும்போது மட்டுமே அவை மன்னிக்கப்பட்டு பரிசுத்தமாக முடியும். ஆம், உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; அப்போது நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்று கூறியுள்ளபடி வாழ்க்கையில் அற்புத மாற்றத்தினைக் காண முடியும். 

இன்றே கிறிஸ்துவிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார். "...அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்." (1 யோவான்  1 : 7)
 
 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1690                                                                  ஆதவன் 23.09.2025 செவ்வாய்          

"ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்." ( மல்கியா 4 : 2 )

நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நீதியின் சூரியன் என்று அழைக்கப்படுகின்றார். நாம் தேவனுக்குப் பயந்த வாழ்க்கை வாழ்வோமானால் நமக்கு ஆசீர்வாதம் உண்டு என்பதனை இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

"தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்"  ( நீதிமொழிகள் 8 : 13 ) என்று வாசிக்கின்றோம். இப்படிநாம் கர்த்தருக்குப் பயந்து தீமையை வெறுத்து வாழ்வோமானால் நம்மேல் நீதியின் சூரியனாகிய இயேசு பிரகாசிப்பார். அந்த ஆசீர்வாதம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதனையே, "அதின் செட்டையின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்" என்று வசனம் கூறுகின்றது. அதாவது, ஆரோக்கியமான வாழ்வு, கொழுத்த கன்றுகளைப்போல செழிப்பான வாழ்வு நமக்கு உண்டு என்று கூறப்பட்டுள்ளது. 

இதற்கு,  தீமையை வெறுத்து வாழ்ந்த யோசேப்பு நமக்கு ஒரு உதாரணம்.  பாவம் செய்யும்படியான சூழ்நிலை தனக்குக் கிடைத்தபோதும் அவன்  "நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி" ( ஆதியாகமம் 39 : 9 ) என்று கூறி பாவத்துக்கு விலகி ஓடினான். இப்படி தேவனை அன்புசெய்து அவன் பாவத்துக்கு விலகியதால் தேவன் அவனை எகிப்தின் பார்வோனுக்கு இணையாக உயர்த்தினார். ஆம், அவன்  கொழுத்த கன்றுபோல ஆகிவிட்டான். இதுபோலவே கர்த்தருக்குப்பயந்து வாழ்ந்த ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீது இஸ்ரவேலின்மேல் இராஜாவாக உயர்த்தப்பட்டார். 

வேதாகமம் முழுவதும் நாம் இப்படிக் கர்த்தருக்குப் பயந்து வாழ்ந்த பரிசுத்தவான்கள் பலரது வாழ்க்கை மாற்றத்தினைக் காணலாம். நாமும் இப்படி வாழ்வோமானால், "உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்." ( ஏசாயா 60 : 20 ) என்று ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தேவன் நமக்குக் கூறுகின்றார். 

மட்டுமல்ல, கர்த்தருக்குப் பயப்படும் பயம் நமக்கு இருக்குமானால் அவர் தலைமுறை தலைமுறையாக நமது பிள்ளைகளுக்கும் இரக்கம் பாராட்டுவார் என்று அன்னை மரியாள் கூறுகின்றார். ஆம், "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 ) என்று அவர் பாடுவதை நாம் வாசிக்கின்றோம். 

எனவே, கர்த்தர்மேல் பற்றுக்கொண்டு அவருக்குப் பயந்த வாழ்க்கைவாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். ஆலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் கலந்துகொள்வது மட்டும் போதுமென்று பல கிறிஸ்தவர்கள்  எண்ணிக்கொண்டு மற்றநேரங்களில் தேவனுக்குப் பயப்படாத துன்மார்க்க வாழ்க்கை வாழ்கின்றனர். ஆராதனை, வழிபாடுகளைவிட தேவன் அவருக்குப் பயந்த வாழ்க்கையையே விரும்புகின்றார். 

இப்படி நாம் கர்த்தருக்குப் பயந்து வாழ்வோமானால் நமது வாழ்க்கையில் நீதியின் சூரியனாகிய இயேசு கிறிஸ்து உதிப்பார். அப்போது வாழ்வில் ஆரோக்கியம் இருக்கும். நமது தலைமுறை பிள்ளைகளும்  தேவ ஆசீர்வாதத்தினைப் பெறுவார்கள். 

 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1691                                                                  ஆதவன் 24.09.2025 புதன்         

"அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது." ( சங்கீதம் 44 : 3 )

மனிதர்களாகிய நாம் பலவீனமானவர்கள். நம்மால் நமது சுய முயற்சியால் பெரிய காரியங்களைச்  சாதிக்கமுடியுமென்பது  கூடாத காரியம். இந்த உலகத்தில் சாதாரண மனிதர்கள் பெரிய பெரிய சாதனைகளைச் செய்வதை நாம் பார்க்கின்றோம். ஆனால் அந்தச் சாதனைகள் நிலைத்து நிற்பதுமில்லை சாதனைகள் புரிந்தவர்கள் சிறப்பாக வாழ்ந்ததுமில்லை. ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நாம் நமது செயல்களை தேவ சித்தத்துடன் அவருக்குப் பிரியமாகச் செய்வோமானால் தேவன் நம்மேல் அன்பாயிருந்து காரியத்தை வாய்க்கச்செய்வார். 

மக்கள் தங்கள் சுய பலத்தைச் சாராமல் தன்னையே சார்ந்து வாழவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். இதனையே, "அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார்." ( சங்கீதம் 147 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. குதிரை, வீரனுடைய கால்கள் என்பன தேவனைச் சாராது தங்களது சுயபலத்தை நம்புவதைக் குறிக்கின்றது. மேலும், "இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது." ( சங்கீதம் 33 : 17 ) என்று நாம் வாசிக்கின்றோம். அதாவது, நாம் தப்புவிக்கப்பட மனித பலம் அல்லது சுயபலம் வீண் என்று கூறப்பட்டுள்ளது.  

இதுபோலவே, இஸ்ரவேல் மக்கள் கானானைச்  சுதந்தரித்தது அவர்களது சுயபலத்தினால் அல்ல; மாறாக, கர்த்தர் அவர்கள்மேல் அன்புகூர்ந்ததால்தான் என்று வேதம் கூறுகின்றது. "கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார்." ( உபாகமம் 7 : 8 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம் அன்பானவர்களே, நாம் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ முயற்சியெடுத்து அவருக்கு உகந்தவர்களாக வாழ்வோமானால் அவர் நம்மேல் அன்பாயிருப்பார். அப்போது, நமது வெற்றி அவரால் ஏற்படும். "அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது" என்று கூறியுள்ளபடி நமது வாழ்க்கையும் அவரால் வெற்றியுள்ள வாழ்க்கையாக மாறும்.  

மீகா தீர்க்கத்தரிசி "தடைகளை நீக்கிப்போடுகிறவர்" என்ற ஒரு புதிய பெயரைத் தேவனுக்குக் கொடுக்கின்றார். ஆம்,  "தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்." ( மீகா 2 : 13 ) என்கின்றார். இஸ்ரவேலர் மீது அன்புகொண்டு அவர்களை பாலைவனத்தில் மேகத்தூணிலும் அக்கினித் தூணிலும் இருந்து பாதுகாத்து வழிநடத்தியத்  தேவன் நம்மேல் அன்புகூரும்போது நமக்குமுன்பாக நடந்து தடைகளை அகற்றி நம்மையும் பாதுகாப்பார். 

எனவே அன்பானவர்களே, "அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை" என்று கூறியுள்ளபடி நாமும் நமது சுயபலம் நமக்கு வெற்றியைத் தராது என்பதனை உணர்ந்து தேவனுக்கு ஏற்ற செயல்பாடுகளை செய்து அவரது அன்புக்குரியவர்களாக வாழ முயற்சியெடுப்போம். எந்தச் சிறிய செயலைச் செய்யும்போதும் நமது பலத்தை மட்டுமே  நம்பாமல், தேவ பலம்  நமக்கு வேண்டுமென்று வேண்டுவோம். அப்போது அவர் நமக்குத் துணையாக நின்று பாதுகாத்து வெற்றியைத் தருவார். அவரது  வலதுகரமும், அவரது  புயமும், அவரது முகத்தின் பிரகாசமும் நம்மை இரட்சிக்கும். 


 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1692                                                                  ஆதவன் 25.09.2025 வியாழன்        

"ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்." ( யாத்திராகமம் 4 : 10 )

ஒருமுறை கைவினைஞர்கள் நடத்திய  கண்காட்சி ஒன்றில் பல்வேறு வகையான பொம்மைகளும்  விதவிதமான அழகுப்பொருட்களும் அடுக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தேன். அந்தப் பொருட்களுக்கு மத்தியில் சில கண்ணைக்கவரும் பொருட்கள் நாம் தூக்கி எறியும் தேங்காய் சிரட்டையால்  செய்யப்பட்டவையாக இருந்தன. கைவினைஞர்கள் தங்கள் திறமையால் தேங்காய் ஓடுகளை அழகிய கலைப்பொருட்களாக மாற்றியிருந்தனர். அவற்றின் விலையும் மிக அதிகமாக இருந்தன. 

ஆம், எதற்கும் உதவாது எனத் தூக்கி எறியப்படும் தேங்காய் ஓடுகள் கைவினைஞர்கள் திறமையால் பலரும் கவரும் கலைப்பொருளாகிவிட்டன. அவற்றை வாங்கிச்செல்வோர் அதனைத் தங்களது வீட்டு வரவேற்பறைகளின் ஷோ கேஸ்களில்  பெருமையுடன் வைத்து மற்றவர்கள் பார்த்து வியக்கவைக்கும் கலைப்பொருட்களாக அவை மாறிவிட்டன.  

தேவனும் இதுபோல அதிசய கைவினைஞராக இருக்கின்றார். உலக மக்களால் அற்பமாகத்  தூக்கியெறியப்படும் மக்களை அவர் யாரும் எதிர்பார்க்கமுடியாத அளவுக்கு உயர்த்துகின்றார். அப்படி உயர்த்தப்பட்ட மனிதர்களில் ஒருவர்தான் மோசே. மோசேயை அவர் வாழ்ந்த காலத்தில் அவரது திக்குவாயை முன்னிட்டு மக்கள் இப்படி அற்பமாக எண்ணியிருக்கலாம்; பேசியிருக்கலாம். எனவேதான் தேவன் அவரைத் தனது பணிக்கு அழைத்தபோது மோசே, "நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்" என்று தனது அற்பமான நிலையினை தேவனிடம் அறிக்கையிடுகின்றார். 

நாமும் இதுபோல இன்று நாம் வாழும் சமுதாயத்தில் மக்களால் நமது ஜாதி, வேலை, பொருளாதார நிலைமை இவற்றை முன்னிட்டு அற்பமாக எண்ணப்படலாம். ஆனால் தேவன் அப்படி எண்ணுபவரல்ல. தூக்கியெறியப்பட்ட தேங்காய்ஓட்டினை விலை உயர்ந்த கலைப்பொருளாக மாற்றிய கலைஞனைப்போல உலகப் படைப்பின் கலைஞானாகிய தேவனால் நம்மை மாற்றி உயர்ந்த இடத்தில் வைத்திடமுடியும்.  மோசேயை தேவன் அப்படிதான் மாற்றி பயன்படுத்தினார். 

"உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார். இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 35-36 ) என்று வாசிக்கின்றோம். 

ஆனால் நாம் செய்யவேண்டியது ஓன்று உண்டு. நாம் நமது அற்பமான நிலைமையை மோசேயைப்போல அறிக்கையிட்டு தாழ்மையாக இருக்கவேண்டியது அவசியம். "மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்" ( எண்ணாகமம் 12 : 3 ) என்று கூறியுள்ளபடி சாந்தமான குணம் நமக்கு இருக்குமானால் கர்த்தர் நம்மைப் பயன்படுத்துவார். 

ஆம் அன்பானவர்களே, நாமும் மோசேயைப்போல நமது பலவீனங்களை தேவனிடம் ஒளிவில்லாமல் அறிக்கையிடுவோம். "ஆண்டவரே, எனக்கு மற்றவர்களைப்போல அறிவில்லை, எனக்குப் பெரிய படிப்பு இல்லை,  உடல்நலமில்லை, எனது உடல் உறுப்பு ஊனமானதாக இருக்கின்றது,  எனக்கு பேச்சாற்றல் இல்லை, எனக்கு நல்ல வேலையில்லை, எனக்குப்  பொருளாதார வசதியில்லை, மற்றவர்கள் விரும்பத்தக்க அந்தஸ்து எனக்கு இல்லை" என்று நமது எந்தக் குறைவாக இருந்தாலும் அதனை தேவனிடம்  எடுத்துக்கூறுவோம். 

தேவன் மோசேயுடன் பேசுவதற்கு முன்னும் பேசிய பின்னரும் மோசே வாக்குவல்லவன் அல்ல; திக்குவாயும் மந்த நாவும் உள்ளவனாகவே இருந்தார். ஆனால் தேவனது கையின் கருவியாக அவர் பயன்படுத்தப்பட்டார்; உயர்த்தப்பட்டார். இந்த மோசே நமக்கு ஒரு பாடமாக இருக்கின்றார். 


"விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1693                                                                  ஆதவன் 26.09.2025 வெள்ளி         

"கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்." ( 1 நாளாகமம் 16 : 11 )

நமது அன்றாட வாழ்வில் உலகப் பொருட்களையல்ல; மாறாக, கர்த்தரைத் தேடுபவர்களாக நாம் வாழவேண்டியது அவசியம் என்று இன்றையத்  தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

கர்த்தரைத் தங்களது உலக ஆசை இச்சைகளை நிறைவேற்றிடத் தேடுவோருக்கும் உண்மையயான ஆத்தும சிந்தையோடு  தேடுவோருக்கும்   மிகுந்த வேறுபாடு உண்டு. வழிபாட்டு முறைமைகளும் தாங்கள் சார்ந்திருக்கும் சபைப் பிரிவிற்கும் அடிமையாகியிருப்பவர்கள் கர்த்தரைத் தேடுபவர்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் தங்களது சுய விருப்பத்தையும் எண்ணங்களையும் நிறைவேற்றிட ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்பவர்கள். 

மேலும், உலக ஆசைகளை நிறைவேற்ற விரும்பி தேவனைத்  தேடுபவன் தேவனைக்குறித்த மேம்போக்கான எண்ணம் கொண்டவனாகவே இருப்பான். தேவனது வல்லமை மகத்துவங்களோ, தேவனிடம்  அன்புறவோ அத்தகைய மனிதனிடம் இருக்காது. ஆத்தும தாகம் என்பதை தேவனை தேடுபவனிடம் மட்டுமே காண முடியும். வெயிலில் நடந்து களைப்படைந்த   மனிதன் ஒரு குவளைத்  தண்ணீர் கிடைத்திடாதா என ஏங்குவதுபோல ஆத்தும  தாகங்கொண்டவன் தேவனைத் தாகங்கொண்டுத் தேடுவான்.

வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசுதவான்களிடம் இத்தகைய தாகம் இருந்தது. ஜீவ ஊற்றாகிய தேவனிடமிருந்து ஜீவ தண்ணீர் இருதயத்தில் பாய்ந்து நிரப்பிட வேண்டும் என்பதே அவர்களது நெஞ்சத்தின் பெரு விருப்பமாக இருந்தது. தேவன் இத்தகைய மன விருப்பத்துடன் மனிதர்கள் தன்னைத் தேடவேண்டுமேன்றே விரும்புகிறார். 

தாவீது ராஜா இத்தகைய இறை அனுபவத்தைக் கொண்டிருந்தார். அவர் ஒரு பெரிய ராஜாவாக இருந்தபோதும் அந்த ராஜ பதவியோ செல்வமோ அவருக்கு ஆத்தும திருப்தியைத் தரவில்லை. தேவ ஐக்கியமே அவரது தாகமாக இருந்தது. எனவேதான் அவர் ஆத்மார்த்த அன்புடன் கூறுகிறார்: "மானானது நீரோடையை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங்கீதம் - 42:1)

தேவனது அன்பை நாம் வாழ்வில் ருசித்திருப்போமானால் அவரை நாம் உண்மையாக அன்புசெய்து அவரைத் தேடுகிறவர்களாக இருப்போம்.  உலகப் பொருட்கள்மேல் நாம் அன்புகொண்டு வாழ்வோமானால் அவற்றைத் தேடுபவர்களாகவும் அவற்றுக்காக ஜெபிப்பவர்களாகவுமே இருப்போம். "தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்" ( சங்கீதம் 14 : 2 ) என்று வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, இந்த உலகத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களிடையே தன்னைத் தேடுபவர்கள் உண்டுமா என்று அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். 

அவரைத் தேடும் மனமுள்ள மனிதர்களைக் காணும்போது அவரும் மகிழ்ச்சியடைகின்றார். "முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்"( உன்னதப்பாட்டு 2 : 2 ) என்று அவர் கூறத்தக்கதாக  உண்மையாய் அவரைத்தேடும்  மனிதர்களை அவர் பார்க்கின்றார். உலக முட்களுக்கிடையே பூத்திருக்கும் அழகிய லீலிமலர்போல அவருக்கு அவர்கள் இருக்கின்றனர்.  

தேவனிடமிருந்து எதனையும் பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் எண்ணத்தில் அவரைத் தேடாமல் அவரே நமது வாழ்வில் எல்லாமாக இருக்கவேண்டும் எனும் ஆவலில் நாம் அவரைத் தேடும்போது தேவன் நம்மேல் அன்புகூருகின்றார். நாம் தேவனைத் தேடுகிறோமா தேவனிடமிருந்து வரும் பொருள் ஆசீர்வாதங்களைத் தேடுகிறோமா? தேவனையேத் தேடுவோமெனில் அவர் இருதயத்தில் சுரக்கும்  ஜீவத்தண்ணீரால் நம்மைத் திருப்தியாக்குவார். அது என்றும் வற்றாத நீரூற்றாக நமது இருதயத்தில் சுரந்துகொண்டிருக்கும். 

"வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" ( யோவான் 7 : 38 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா? கிறிஸ்துவிடம் விசுவாசம் கொள்வது என்பது அவர் தரும் உலக ஆசீர்வாதங்களுக்காக என நாம் எண்ணிக்கொள்வோமானால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்பவர்களாக இருப்போம். அப்படி வாழ்வது தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளைக் கட்டுவது போன்றதாகும். 

அத்தகைய மனிதர்களைப்பார்த்து தேவன் வேதனையுடன் கூறுகின்றார், "என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்" ( எரேமியா 2 : 13 ) என்று. எனவே, இந்த இரண்டு தீமைகளையும் செய்பவர்களாக அல்லாமல் கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுவோம்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுவோம்.

 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1694                                                                  ஆதவன் 27.09.2025 சனி          

"அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே." ( ஏசாயா 28 : 9 )

இன்றைய தியான வசனம் தேவனை அறியும் அறிவை அவர் யாருக்கு அளிப்பார். என்பதனை விளக்குவதாக உள்ளது. பொதுவாகப்  பலரும் இறையியல் கல்லூரிகளில் படிப்பதுதான் தேவனை அறியும் வழி என எண்ணிக்கொள்கின்றனர். எனவேதான் பல திருச்சபைகளில் இறையியல் படிப்புப் படித்தவர்களை குருக்களாகவும் போதகர்களாகவும் நியமிக்கின்றனர். ஆனால் இறையியல் படிப்புக்கும் தேவனை அறியும் அறிவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  தேவனை வாழ்வில் அறியவேண்டுமானால் நாம் சிறு குழந்தையின் உள்ளத்தைப் பெறவேண்டியது அவசியம். இதனையே இன்றைய தியான வசனம்"அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே." என்று கூறுகின்றது. 

யோவான் நற்செய்தியில் நாம் நிக்கொதேமு எனும் ஒரு போதகரைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு தேவனிடமிருந்து வந்தவர் என்று நிக்கொதேமு அறிந்திருந்தார். ஒருவரிடம் தேவன் இல்லையானால் இயேசு செய்வதுபோல அற்புதங்களைச் செய்யமுடியாது என்றும் அறிந்திருந்தார். எனவேதான் அவர் இயேசுவைநோக்கி,  "ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றார்." ( யோவான் 3 : 2 )

ஆனாலும் அவர் தனிப்பட்ட வாழ்வில் தேவனை அறியவில்லை; இஸ்ரவேலில் அவர் போதகனாக இருந்தும் தேவனை அறியவில்லை! எனவேதான் இயேசு அவரிடம், "நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?" ( யோவான் 3 : 10 ) என்று கேட்கின்றார். மட்டுமல்ல, இயேசு அவரிடம், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( யோவான் 3 : 3 ) ஆம், தேவனுடைய ராஜ்யத்துக்குரியவர்களாக நாம் மாறவேண்டுமானால் நிக்கோதேமுவைபோல "இயேசு ஆண்டவர், இறைமகன்" என்று கூறினால் மட்டும் போதாது மறுபடி பிறக்கவேண்டும்; குழந்தைகளாக மாறவேண்டும். 

இப்படி மறுபடி பிறந்த அனுபவமுள்ளவர்களுக்கு வேத வசனங்கள் வித்தியாசமாக, புதிய வெளிப்பாடுகளைக் கொடுக்கும். ஆம் அவர்களுக்குத் தேவன்  அறிவைப் போதிப்பார்; உபதேசத்தை உணர்த்துவார். எனவேதான் இயேசு இந்த அனுபவம் பெற்றவர்களை பாலகர்கள் என்று கூறினார். மேலும், "அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது." ( லுூக்கா 10 : 21 ) என்று வாசிக்கின்றோம்.

இந்த அனுபவம் இருந்ததால் தாவீதுராஜா  கூறுகின்றார், "தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது." ( சங்கீதம் 131 : 2 ) என்று. 

ஆம், தேவனை அறிய சிறு குழந்தையின் உள்ளம் நமக்கு வேண்டியது அவசியம். "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" (  மத்தேயு 19 : 14, மாற்கு 10 : 14 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?

நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும் மீட்பு அனுபவம் பெறும்போது மறுபடி பிறந்தவர்களாக மாறுகின்றோம். நாம் எத்தனை வாதானவர்களாக இருந்தாலும் நமது எண்ணங்களும் மனதும் புதிதாகி பழையன ஒழிந்து நாம் புதிதாகுகின்றோம். பாவத்துக்கு நீங்கலாகி குழந்தையின் மனநிலையினை அடைகின்றோம். எனவே இந்த அனுபவம் பெற்று நாம் தேவனை முழுவதும் அறிந்திட நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம்.  அப்போது தேவனை அறிவது மட்டுமல்ல, தாயின் பால்மறந்த பிள்ளைகளாக மாறிவிடும் நமக்கு அவர் அறிவைப் போதிப்பார்; உபதேசத்தை உணர்த்துவார்.

 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1695                                                                  ஆதவன் 28.09.2025 ஞாயிறு           

"பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்." ( சகரியா 2 : 7-8 )

உலக இன்பம்,  பாவம் இவற்றுக்கு உட்பட்ட பாபிலோனின் அடிமை வாழ்க்கை - கர்த்தருக்கு ஏற்புடைய ஆவிக்குரிய சீயோன் வாழ்க்கை -  இவற்றில் கிறிஸ்துவுக்குரியவர்களாகிய நாம் பாபிலோன் வாழ்க்கையிலிருந்து விடுபட்டுவரவேண்டும் என்றும் அப்படி விடுபடும்போது தேவனது ஆசீர்வாதமும் பாதுகாப்பும் நமக்கு உண்டு என்றும்  இன்றைய தியான வசனம் விபரிப்பதாக உள்ளது.   

யூதா  மக்கள் பாபிலோனியருக்கு அடிமைப்பட்டு சுமார் எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டபோது அவர்கள் தங்களது பூர்விகமான நாட்டையும் எருசலேமையும்  மறந்தவர்களாக பாபிலோனின் செழிப்பிலேயே மனத்திருப்தி கொண்டவர்களாக வாழத்துவங்கிவிட்டனர். அப்படித் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களையே இன்றைய வசனத்தில் சீயோன் என்று குறிப்பிடப்படுகின்றது. பிற பெண்கள்மீது ஆசைகொண்டு தங்கள் குடும்பத்தை மறந்து அவர்களோடு சேர்ந்து வாழும் சில ஆண்களைப்போல யூதா மக்களது இந்த வாழ்க்கை அமைந்துவிட்டது.  அவர்கள் பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்க முடிவுசெய்துவிட்டார்கள். 

எனவே சகரியா தீர்க்கதரிசி மூலம் தேவன் அவர்களுக்குக் கூறுகின்றார், "பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். பிற்பாடு மகிமையுண்டாகும்.  நீ கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவன். இதனை மறந்து வாழாதே. இதனை உங்களுக்கு அறிவிக்க உங்களைக்  கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு (பாபிலோனுக்கு) என்னை அனுப்பினார்" என்கின்றார் சகரியா. நாம் ஏற்கெனவே பல 'ஆதவன்' தியானங்களில் கூறியுள்ளபடி பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழலாட்டமாக இருக்கின்றது. எனவே, இன்றைய தியான வசனத்தையும் நாம் புதிய ஏற்பாடு கூறும் சத்தியத்துக்கு நேராகப் பார்க்கவேண்டியது அவசியம்.  

யூதா மக்கள் பாபிலோனியருக்கு அடிமைகளாக அதன் செழிப்பில் மயங்கி  வாழ்ந்ததுபோல சீயோன் எனும் கர்த்தரது மக்களாகிய நாம் பாவத்துக்கு அடிமையாக வாழ்ந்து  கொண்டிருக்கின்றோம்;  தொடர்ந்து, பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற மக்களாக இருக்கின்றோம் என்று பொருள். இப்படி பாபிலோனின் அழகில் மயங்கி உன்னைத்தானே  அழித்துக்கொண்டிருக்கும் சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். அப்படியானால் பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

ஆம் அன்பானவர்களே, இன்று உலகக் கவர்ச்சியிலும், மாயத்திலும் சிக்குண்டு அவற்றுக்கு அடிமைகளாகி வாழ்ந்துகொண்டிருக்கின்ற  நமக்கு வாழ்வில் மகிமையுண்டாக வேண்டுமானால் நாம் பாபிலோன் வாழ்க்கையிலிருந்து வெளிவரவேண்டியது அவசியம். அப்போது கர்த்தர் நமக்கு முழு பாதுகாப்புக் கொடுப்பார். 

அடிமை வாழ்வு நிரந்தரமல்ல; அதன் செழிப்பும் என்றும் நிலைத்து நிற்காது. ஆனால் நாம் பாபிலோன் வாழ்விலிருந்து வெளிவரும்போது தேவனது ஆசீர்வாதமும் பாதுகாப்பும் உண்டு. அதனையே இன்றைய தியான வசனத்தின் இறுதியில் நாம் "உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்" என்று வாசிக்கின்றோம். ஆம், நாம் அவருக்கு நேராகத் திரும்பும்போது அவர் நம்மைத் தனது கண்மணிபோலக் கருதுகின்றார். எனவே எவரும், எதுவும் நம்மைத் தீண்டிடாமல் பாதுகாக்கின்றார்.   

பாபிலோன் வாழ்விலிருந்து தன்னிடம் திரும்பும் மக்களைப்பார்த்து, "சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 2 : 10 ) நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். பாபிலோனின் செயல்பாடுகள் நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்வோம். அப்போது தேவனது பாதுகாப்பு நமக்கு நிச்சயமாக உண்டு. 

 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1696                                                                  ஆதவன் 29.09.2025 திங்கள்        

"இந்த வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ? இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்." ( ஆகாய் 1 : 4, 5 )

எருசலேம் ஆலயத்தைப்பற்றிக் கூறப்பட்டுள்ள இன்றைய தியான வசனம் இன்று நமது உடலாகிய ஆலயத்துக்குப் பொருந்துவதாக இருக்கின்றது. 

நமது உடலே பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாய் இருக்கின்றது என்று வேத வசனம் கூறுகின்றது (1 கொரிந்தியர் 3:16 மற்றும் 1 கொரிந்தியர் 6:19) மேலும், "உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48-49 ) என்று நாம் வாசிக்கின்றோம்.  அதாவது, வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவரான தேவன் மனிதர்கள் கைகளால் மண்ணினாலும், செங்கல், சிமெண்ட்  கொண்டு கட்டும் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடப்பவரல்ல. அவர் நமது உள்ளத்தில் தங்கி நம்மை நடத்த விரும்புகின்றவர். 

தேவன் வந்து தங்கும் நமது உடலாகிய ஆலயம் தூய்மையாக இருக்கவேண்டியது அவசியம். ஆனால், தேவனுக்கெதிரான நமது செயல்பாட்டினால் இந்த உடலாகிய ஆலயமானது பாழ்பட்டதாய் இருக்கின்றது என்று ஆவியானவர் கூறுகின்றார். 

ஆனால் தங்களது உடலாகிய ஆலயம் கெட்டு பாழாய்க்கிடக்கும்போது அதுபற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாமல் மனிதர்கள் சொகுசாய்த் தங்களது பாவ வாழ்க்கையில் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். இதனையே, "இந்த வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?" என்று இன்றைய வசனம் கேள்வி எழுப்புகின்றது. 

ஆனால் இப்படி நமது உடலாகிய ஆலயத்தைக் கெடுத்து வாழ்வோமானால் அது ஆசீர்வாதத்தையல்ல, நமக்குச் சாபத்தையே கொண்டுவரும். ஆம், இதனையே தொடர்ந்து வரும் வசனங்களில் நாம் வாசிக்கின்றோம், "நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்." ( ஆகாய் 1 : 6 ) என்று கூறப்பட்டுள்ளது. 

திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள் என்பது உழைப்புக்கேற்ற பலனை அனுபவிக்காமல் இருக்கிறீர்கள் என்றும்,  நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை,   குடித்தும் பரிபூரணமடையவில்லை, வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை என்பவை என்னதான் இருந்தும் உங்களுக்கு வாழ்வில் ஆசீர்வாதமோ நிறைவோ வருவதில்லை  என்பதனையும் கூறுகின்றது.  மேலும், கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான் என்று கூறப்பட்டுள்ளது சம்பாதிக்கும் எதுவும் நிலைத்து நிற்காமல் போகின்றது என்பதனை உணர்த்துகின்றது.

எனவே, "சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்" என்று. அதாவது, நமக்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது? ஏன் நமது வாழ்க்கை ஆசீர்வாதமில்லாத ஒரு வாழ்க்கையாக இருக்கின்றது? என்று சிந்தித்துப்பாருங்கள் என்று ஆவியானவர் கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, பலவேளைகளில் நமது ஆசீர்வாதக் குறைவிற்கு நமது செயல்பாடுகளே காரணமாக அமைந்துவிடுகின்றன. எனக்கு ஏன் இந்த நிலைமை? பதவி உயர்வு, சம்பளஉயர்வு எனக் கிடைத்தபோதும் ஆசீர்வாதமில்லாத வாழ்க்கை ஏன் வந்தது என்று சிந்தித்துப்பார்க்க தேவன் நம்மை அறிவுறுத்துகின்றார். நமது செயல்பாடுகளை தேவனுக்கு ஏற்றதாக மாற்றி நமது உடலாகிய ஆலயத்தைப் பரிசுத்தமாக்கும்போது தேவன் நம்மில் வந்து தங்குவார். நிறைவான அவர் நம்மில் வரும்போது நமது குறைவுகள் அனைத்தும் நிறைவாகும். 

 "விதைகளின் உள்ளே" 🌳 
வேதாகமத் தியானம் எண் - 1697                                                                  ஆதவன் 30.09.2025 செவ்வாய்         

"நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்." ( எசேக்கியேல் 22 : 30 )

நான் சிறுவனாக இருந்தபோது வீட்டிலிருந்து நண்பர்களூடன் பள்ளிக்கூடத்துக்கு நடந்து செல்வேன். எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் பாதை முழுவதும் புன்னை மரங்களும் முந்திரி மரங்களும் அடர்ந்து காடுபோலக் காட்சியளிக்கும். வழியில் சில தோட்டங்களும் இருக்கும். அவைகளில் மண் சுவரினால் வேலியடைந்திருப்பார்கள்.   அங்கு கொய்யா, மா, சப்போட்டா போன்ற மரங்களும் சிறிய காய்கறிச் செடிகொடிகளும் வளர்த்திருப்பார்கள். வேலி இருப்பதால் அவை பாதுகாப்பாக செழிப்பாகச் சோலைவனமாக  இருக்கும். 

ஒருமுறை பெரிய மழை பெய்தபோது ஒரு தோட்டத்தின்  வேலிச்சுவர் சில இடங்களில் தகர்ந்துபோய் ஆடுமாடுகள் நுழையக்கூடிய விதமாக மாறிவிட்டது. அந்தத்  தோட்ட உரிமையாளர் வெளியூர் சென்றிருந்ததால் பழுதுபட்ட வேலியை உடனே  சரிசெய்யவில்லை. எனவே,  இரண்டே நாட்களில்  மரங்கள் அனைத்தும் ஆடுமாடுகளுக்கு இரையாகி  அந்தத் தோட்டம் நாசமாகிப் போனது.  பின்னர் அந்த வேலியைச் சரிசெய்யும்வரை அங்குப்  பெரிய தடிக்கம்புடன் ஒரு மீசைக்காரக் காவல்காரர் நியமிக்கப்பட்டார். தோட்டம் மீண்டும் பாதுகாப்பானது. 

இஸ்ரவேல் மக்களை திராட்சைக்கொடியாக தேவன் எகிப்து தேசத்திலிருந்து கொண்டுவந்து நாட்டினார். ஆனால் அவர்களது துன்மார்க்கச் செயல்களால் தேவன் அவர்களுக்கு அளித்த பாதுகாப்பு வேலியைத் தகர்த்துப்போட்டார். "இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்? காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது." ( சங்கீதம் 80 : 12-13 ) என்று வாசிக்கின்றோம். ஆம், பாதுகாப்பற்ற தோட்டத்தை காட்டுப்பன்றியும் வெளியின் மிருகங்களும் மேய்ந்துபோடும். எனவே பாதுகாப்பு அவசியம். 

நாம் மேலே பார்த்தச் சம்பவத்தில் வேலி தகர்ந்து திறந்துபோன தோட்டத்தைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட தோட்டக்காரரைப்போல தேவனுக்கெதிராக செயல்பட்டு தேவ பாதுகாப்பற்று வாழும் மக்களை அழிக்க சாத்தான் ஆடுமாடுகள்போலவும், சிங்கம்போலவும்  வருகின்றான். வேலி தகர்ந்து திறப்பாகிப்போனதால் அவனுக்கு அது எளிது. ஆனால் திறப்பாகிப்போன இடத்தில் நிறுத்தப்பட்டக் காவல்காரரைப்போல அந்த மக்களுக்காகக் காவலாக இருந்து  ஜெபிக்க தேவமனிதர்கள் தேவை.   அதனையே, "இப்படி நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்." என்கிறார் தேவன். 

மோசே இப்படித் திறப்பில் நின்று ஜெபித்ததை நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். இஸ்ரவேலர் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தனர்  "ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின்வாயிலே நின்றான்." ( சங்கீதம் 106 : 23 ) என்று கூறப்பட்டுள்ளது. ஆபிரகாம் லோத்துவுக்காக திறப்பிலே நின்று ஜெபித்தார் (ஆதியாகமம் 18:17-33) யோபு தனது   நண்பர்களுக்காக ஜெபித்தார் (யோபு 42:10) எல்லாவற்றுக்கும் மேலாக நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக ஜெபித்தார். (யோவான் 17:20- 26)

அப்போஸ்தலரான பவுலும், "நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்" ( 1 தீமோத்தேயு 2 : 1 ) என்று அறிவுறுத்துகின்றார்.

ஆம் அன்பானவர்களே, இப்படியே நாம் நமது தேசத்துக்காகத் திறப்பிலே நின்று ஜெபிக்கவேண்டியது அவசியம். தேவன் அதனை எதிர்பார்க்கின்றார். ஆனால் நாம் முதலில் நம்மை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். காரணம், சிதறடிக்கின்ற சாத்தான் எப்போதும் நமக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றான்.  அரணைக் (வேலியை) காத்துக்கொள்வோம், வழியைக் காவல் பண்ணுவோம், அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள்வோம், நமது பெலனை மிகவும் ஸ்திரப்படுத்துவோம் ( நாகூம் 2 : 1 ). இந்த பலத்தோடு திறப்பிலே நின்று தேவனை அறியாத நமது உறவினர்களுக்காக, நண்பர்களுக்காக,  தேசத்துக்காக ஜெபிப்போம். 

Meditation verse - எசேக்கியேல் 22 : 30 / Ezekiel 22:30

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1697                                                                  ஆதவன் 30.09.2025 செவ்வாய்         


"நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்." ( எசேக்கியேல் 22 : 30 )

நான் சிறுவனாக இருந்தபோது வீட்டிலிருந்து நண்பர்களூடன் பள்ளிக்கூடத்துக்கு நடந்து செல்வேன். எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் பாதை முழுவதும் புன்னை மரங்களும் முந்திரி மரங்களும் அடர்ந்து காடுபோலக் காட்சியளிக்கும். வழியில் சில தோட்டங்களும் இருக்கும். அவைகளில் மண் சுவரினால் வேலியடைந்திருப்பார்கள்.   அங்கு கொய்யா, மா, சப்போட்டா போன்ற மரங்களும் சிறிய காய்கறிச் செடிகொடிகளும் வளர்த்திருப்பார்கள். வேலி இருப்பதால் அவை பாதுகாப்பாக செழிப்பாகச் சோலைவனமாக  இருக்கும். 

ஒருமுறை பெரிய மழை பெய்தபோது ஒரு தோட்டத்தின்  வேலிச்சுவர் சில இடங்களில் தகர்ந்துபோய் ஆடுமாடுகள் நுழையக்கூடிய விதமாக மாறிவிட்டது. அந்தத்  தோட்ட உரிமையாளர் வெளியூர் சென்றிருந்ததால் பழுதுபட்ட வேலியை உடனே  சரிசெய்யவில்லை. எனவே,  இரண்டே நாட்களில்  மரங்கள் அனைத்தும் ஆடுமாடுகளுக்கு இரையாகி  அந்தத் தோட்டம் நாசமாகிப் போனது.  பின்னர் அந்த வேலியைச் சரிசெய்யும்வரை அங்குப்  பெரிய தடிக்கம்புடன் ஒரு மீசைக்காரக் காவல்காரர் நியமிக்கப்பட்டார். தோட்டம் மீண்டும் பாதுகாப்பானது. 

இஸ்ரவேல் மக்களை திராட்சைக்கொடியாக தேவன் எகிப்து தேசத்திலிருந்து கொண்டுவந்து நாட்டினார். ஆனால் அவர்களது துன்மார்க்கச் செயல்களால் தேவன் அவர்களுக்கு அளித்த பாதுகாப்பு வேலியைத் தகர்த்துப்போட்டார். "இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்? காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது." ( சங்கீதம் 80 : 12-13 ) என்று வாசிக்கின்றோம். ஆம், பாதுகாப்பற்ற தோட்டத்தை காட்டுப்பன்றியும் வெளியின் மிருகங்களும் மேய்ந்துபோடும். எனவே பாதுகாப்பு அவசியம். 

நாம் மேலே பார்த்தச் சம்பவத்தில் வேலி தகர்ந்து திறந்துபோன தோட்டத்தைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட தோட்டக்காரரைப்போல தேவனுக்கெதிராக செயல்பட்டு தேவ பாதுகாப்பற்று வாழும் மக்களை அழிக்க சாத்தான் ஆடுமாடுகள்போலவும், சிங்கம்போலவும்  வருகின்றான். வேலி தகர்ந்து திறப்பாகிப்போனதால் அவனுக்கு அது எளிது. ஆனால் திறப்பாகிப்போன இடத்தில் நிறுத்தப்பட்டக் காவல்காரரைப்போல அந்த மக்களுக்காகக் காவலாக இருந்து  ஜெபிக்க தேவமனிதர்கள் தேவை.   அதனையே, "இப்படி நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்." என்கிறார் தேவன். 

மோசே இப்படித் திறப்பில் நின்று ஜெபித்ததை நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். இஸ்ரவேலர் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தனர்  "ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின்வாயிலே நின்றான்." ( சங்கீதம் 106 : 23 ) என்று கூறப்பட்டுள்ளது. ஆபிரகாம் லோத்துவுக்காக திறப்பிலே நின்று ஜெபித்தார் (ஆதியாகமம் 18:17-33) யோபு தனது  நண்பர்களுக்காக ஜெபித்தார் (யோபு 42:10) எல்லாவற்றுக்கும் மேலாக நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்காக ஜெபித்தார். (யோவான் 17:20- 26)

அப்போஸ்தலரான பவுலும், "நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும்பண்ணவேண்டும்" ( 1 தீமோத்தேயு 2 : 1 ) என்று அறிவுறுத்துகின்றார்.

ஆம் அன்பானவர்களே, இப்படியே நாம் நமது தேசத்துக்காகத் திறப்பிலே நின்று ஜெபிக்கவேண்டியது அவசியம். தேவன் அதனை எதிர்பார்க்கின்றார். ஆனால் நாம் முதலில் நம்மை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். காரணம், சிதறடிக்கின்ற சாத்தான் எப்போதும் நமக்கு எதிராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றான்.  அரணைக் (வேலியை) காத்துக்கொள்வோம், வழியைக் காவல் பண்ணுவோம், அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள்வோம், நமது பெலனை மிகவும் ஸ்திரப்படுத்துவோம் ( நாகூம் 2 : 1 ). இந்த பலத்தோடு திறப்பிலே நின்று தேவனை அறியாத நமது உறவினர்களுக்காக, நண்பர்களுக்காக,  தேசத்துக்காக ஜெபிப்போம். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்           

 “Inside the Seeds” 🌳

Scripture Meditation No. 1697

AATHAVAN — Tuesday, 30.09.2025

“I searched for a man among them who would build up the wall and stand in the gap before Me for the land, so that I would not destroy it; but I found no one.” (Ezekiel 22:30)

When I was a little boy, I used to walk to school with my friends. The path from my house to the school was lined with large punnai and cashew trees, giving it the look of a small forest. Along the way were gardens enclosed by mud walls. Inside, they cultivated guava, mango, sapota trees, and small vegetable plants. Because of the fence, these gardens flourished like lush groves, safe and protected.

Once, after heavy rains, a portion of the mud wall of one garden collapsed, leaving an opening wide enough for cattle to enter. The owner was away, and since the fence was not repaired immediately, in just two days all the trees were eaten and destroyed by cattle. Later, until the wall was rebuilt, the owner appointed a strong, Mustache watchman with a thick staff to guard the garden. From then on, the garden was safe again.

In the same way, God brought the people of Israel out of Egypt and planted them as His vineyard. But because of their wicked deeds, the hedge of protection God had given them was broken down. The psalmist laments: “Why have You broken down its walls, so that all who pass that way pick its fruit? A boar from the forest eats it away, and whatever moves in the field feeds on it.” (Psalm 80:12–13). Yes, without protection, the vineyard is ravaged by wild boars and beasts. Protection is essential.

Satan comes like cattle and like a roaring lion to destroy people who live without God’s protection. When the hedge is broken, he finds it easy to enter. Just as the watchman was appointed to guard the breached garden, God needs His people to stand in the gap and intercede as watchmen for those vulnerable lives. Therefore, God says: “I searched for a man among them who would build up the wall and stand in the gap before Me for the land, so that I would not destroy it; but I found no one.” (Ezekiel 22:30).

Moses once stood in the gap to intercede. When Israel sinned against God, “So He said that He would destroy them, if Moses, His chosen one, had not stood in the gap before Him, to turn away His wrath from destroying them.” (Psalm 106:23). Abraham stood in the gap and prayed for Lot (Genesis 18:17–33). Job prayed for his friends (Job 42:10). Above all, our Lord Jesus Christ prayed for us (John 17:20–26).

The apostle Paul also exhorts us: “First of all, then, I urge that requests, prayers, intercession, and thanksgiving be made in behalf of all people.” (1 Timothy 2:1).

Dear beloved, we too must stand in the gap and pray for our nation. God expects this from us. Yet, before doing so, we must strengthen ourselves, because Satan, the destroyer, always works against us. The prophet warns: “The one who scatters has come up against you. Guard the fortress, watch the road; strengthen your back, summon all your strength.” (Nahum 2:1).

With this strength, let us stand in the gap and intercede for our relatives, friends, and our nation who do not yet know the Lord.

God’s Message through Bro. M. Geo Prakash

Saturday, September 27, 2025

🦋 Meditation verse - ஆகாய் 1 : 4, 5 / Haggai 1:4–5

 "விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1696                                          ஆதவன் 29.09.2025 திங்கள்        


"இந்த வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ? இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்." ( ஆகாய் 1 : 4, 5 )

எருசலேம் ஆலயத்தைப்பற்றிக் கூறப்பட்டுள்ள இன்றைய தியான வசனம் இன்று நமது உடலாகிய ஆலயத்துக்குப் பொருந்துவதாக இருக்கின்றது. 

நமது உடலே பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாய் இருக்கின்றது என்று வேத வசனம் கூறுகின்றது (1 கொரிந்தியர் 3:16 மற்றும் 1 கொரிந்தியர் 6:19) மேலும், "உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 48-49 ) என்று நாம் வாசிக்கின்றோம்.  அதாவது, வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவரான தேவன் மனிதர்கள் கைகளால் மண்ணினாலும், செங்கல், சிமெண்ட்  கொண்டு கட்டும் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடப்பவரல்ல. அவர் நமது உள்ளத்தில் தங்கி நம்மை நடத்த விரும்புகின்றவர். 

தேவன் வந்து தங்கும் நமது உடலாகிய ஆலயம் தூய்மையாக இருக்கவேண்டியது அவசியம். ஆனால், தேவனுக்கெதிரான நமது செயல்பாட்டினால் இந்த உடலாகிய ஆலயமானது பாழ்பட்டதாய் இருக்கின்றது என்று ஆவியானவர் கூறுகின்றார். 

ஆனால் தங்களது உடலாகிய ஆலயம் கெட்டு பாழாய்க்கிடக்கும்போது அதுபற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாமல் மனிதர்கள் சொகுசாய்த் தங்களது பாவ வாழ்க்கையில் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். இதனையே, "இந்த வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?" என்று இன்றைய வசனம் கேள்வி எழுப்புகின்றது. 

ஆனால் இப்படி நமது உடலாகிய ஆலயத்தைக் கெடுத்து வாழ்வோமானால் அது ஆசீர்வாதத்தையல்ல, நமக்குச் சாபத்தையே கொண்டுவரும். ஆம், இதனையே தொடர்ந்து வரும் வசனங்களில் நாம் வாசிக்கின்றோம், "நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்." ( ஆகாய் 1 : 6 ) என்று கூறப்பட்டுள்ளது. 

திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள் என்பது உழைப்புக்கேற்ற பலனை அனுபவிக்காமல் இருக்கிறீர்கள் என்றும்,  நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை,   குடித்தும் பரிபூரணமடையவில்லை, வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை என்பவை என்னதான் இருந்தும் உங்களுக்கு வாழ்வில் ஆசீர்வாதமோ நிறைவோ வருவதில்லை  என்பதனையும் கூறுகின்றது.  மேலும், கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான் என்று கூறப்பட்டுள்ளது சம்பாதிக்கும் எதுவும் நிலைத்து நிற்காமல் போகின்றது என்பதனை உணர்த்துகின்றது.

எனவே, "சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்" என்று. அதாவது, நமக்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது? ஏன் நமது வாழ்க்கை ஆசீர்வாதமில்லாத ஒரு வாழ்க்கையாக இருக்கின்றது? என்று சிந்தித்துப்பாருங்கள் என்று ஆவியானவர் கூறுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, பலவேளைகளில் நமது ஆசீர்வாதக் குறைவிற்கு நமது செயல்பாடுகளே காரணமாக அமைந்துவிடுகின்றன. எனக்கு ஏன் இந்த நிலைமை? பதவி உயர்வு, சம்பளஉயர்வு எனக் கிடைத்தபோதும் ஆசீர்வாதமில்லாத வாழ்க்கை ஏன் வந்தது என்று சிந்தித்துப்பார்க்க தேவன் நம்மை அறிவுறுத்துகின்றார். நமது செயல்பாடுகளை தேவனுக்கு ஏற்றதாக மாற்றி நமது உடலாகிய ஆலயத்தைப் பரிசுத்தமாக்கும்போது தேவன் நம்மில் வந்து தங்குவார். நிறைவான அவர் நம்மில் வரும்போது நமது குறைவுகள் அனைத்தும் நிறைவாகும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                         

"Inside the Seeds" 🌳                                                                  Scripture Meditation No. 1696

AATHAVAN – Monday, 29.09.2025

“Is it time for you yourselves to live in your paneled houses while this house remains desolate?” Now then, the Lord of armies says this: “Consider your ways!” (Haggai 1:4–5)

The verse spoken about the Temple in Jerusalem applies today to our own bodies, which are the temple of God.

The Scripture says, “Do you not know that you are a temple of God and that the Spirit of God dwells in you?” (1 Corinthians 3:16) and “Or do you not know that your body is a temple of the Holy Spirit within you, whom you have from God, and that you are not your own?” (1 Corinthians 6:19).

Moreover, we read: “The Most High does not dwell in houses made by human hands; as the prophet says: ‘Heaven is My throne, and the earth is the footstool of My feet; what kind of house will you build for Me?’ says the Lord, ‘Or what place is there for My rest?’” (Acts 7:48–49).

This means that the Almighty God, who created heaven and earth, does not remain confined within walls made of mud, bricks, or cement by human hands. Instead, He desires to dwell in us and lead us.

Therefore, it is necessary for our body—the temple of God—to remain pure. But because of our disobedience, the Holy Spirit says this temple often lies in ruins.

Yet people continue to live comfortably in their sinful lifestyles, without even realizing that their inner temple is broken down. That is why today’s verse questions us: “Is it time for you yourselves to live in your panelled houses while this house remains desolate?”

If we defile this temple of our body, it will not bring blessing but rather a curse. Indeed, the following verse warns: “You have sown much only to harvest little; you eat, but there is not enough to be satisfied; you drink, but there is not enough to become drunk; you put on clothing, but there is not enough for anyone to get warm; and the one who earns, earns wages to put into a money bag with holes.” (Haggai 1:6).

This means:

  • You labour, but cannot enjoy its full reward.
  • You eat, but never feel satisfied.
  • You drink, but never feel filled.
  • You clothe yourself, but still lack warmth.
  • You earn wages, but what you earn slips away and does not remain.

Therefore, the Lord of Armies says: “Consider your ways!” (Haggai 1:7). In other words: Why has your life turned this way? Why do blessings seem absent?

Yes, beloved, many times it is our own actions that block blessings. God asks us to reflect: “Why is my life like this? Even after promotions and salary hikes, why does my life feel without blessing?”

When we align our ways with God and purify our body as His temple, He will come and dwell in us. When the One who is fullness dwells in us, all our emptiness will be filled with His abundance.

— Message: Bro. M. Geo Prakash        

Friday, September 26, 2025

🦋 Meditation verse - சகரியா 2 : 7-8 / Zechariah 2:7–8

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1695                                           ஆதவன் 28.09.2025 ஞாயிறு           


"பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்." ( சகரியா 2 : 7-8 )

உலக இன்பம்,  பாவம் இவற்றுக்கு உட்பட்ட பாபிலோனின் அடிமை வாழ்க்கை - கர்த்தருக்கு ஏற்புடைய ஆவிக்குரிய சீயோன் வாழ்க்கை -  இவற்றில் கிறிஸ்துவுக்குரியவர்களாகிய நாம் பாபிலோன் வாழ்க்கையிலிருந்து விடுபட்டுவரவேண்டும் என்றும் அப்படி விடுபடும்போது தேவனது ஆசீர்வாதமும் பாதுகாப்பும் நமக்கு உண்டு என்றும்  இன்றைய தியான வசனம் விபரிப்பதாக உள்ளது.   

யூதா  மக்கள் பாபிலோனியருக்கு அடிமைப்பட்டு சுமார் எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டபோது அவர்கள் தங்களது பூர்விகமான நாட்டையும் எருசலேமையும்  மறந்தவர்களாக பாபிலோனின் செழிப்பிலேயே மனத்திருப்தி கொண்டவர்களாக வாழத்துவங்கிவிட்டனர். அப்படித் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களையே இன்றைய வசனத்தில் சீயோன் என்று குறிப்பிடப்படுகின்றது. பிற பெண்கள்மீது ஆசைகொண்டு தங்கள் குடும்பத்தை மறந்து அவர்களோடு சேர்ந்து வாழும் சில ஆண்களைப்போல யூதா மக்களது இந்த வாழ்க்கை அமைந்துவிட்டது.  அவர்கள் பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்க முடிவுசெய்துவிட்டார்கள். 

எனவே சகரியா தீர்க்கதரிசி மூலம் தேவன் அவர்களுக்குக் கூறுகின்றார், "பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். பிற்பாடு மகிமையுண்டாகும்.  நீ கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவன். இதனை மறந்து வாழாதே. இதனை உங்களுக்கு அறிவிக்க உங்களைக்  கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு (பாபிலோனுக்கு) என்னை அனுப்பினார்" என்கின்றார் சகரியா. நாம் ஏற்கெனவே பல 'ஆதவன்' தியானங்களில் கூறியுள்ளபடி பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டின் நிழலாட்டமாக இருக்கின்றது. எனவே, இன்றைய தியான வசனத்தையும் நாம் புதிய ஏற்பாடு கூறும் சத்தியத்துக்கு நேராகப் பார்க்கவேண்டியது அவசியம்.  

யூதா மக்கள் பாபிலோனியருக்கு அடிமைகளாக அதன் செழிப்பில் மயங்கி  வாழ்ந்ததுபோல சீயோன் எனும் கர்த்தரது மக்களாகிய நாம் பாவத்துக்கு அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்;  தொடர்ந்து, பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற மக்களாக இருக்கின்றோம் என்று பொருள். இப்படி பாபிலோனின் அழகில் மயங்கி உன்னைத்தானே  அழித்துக்கொண்டிருக்கும் சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். அப்படியானால் பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 

ஆம் அன்பானவர்களே, இன்று உலகக் கவர்ச்சியிலும், மாயத்திலும் சிக்குண்டு அவற்றுக்கு அடிமைகளாகி வாழ்ந்துகொண்டிருக்கின்ற  நமக்கு வாழ்வில் மகிமையுண்டாக வேண்டுமானால் நாம் பாபிலோன் வாழ்க்கையிலிருந்து வெளிவரவேண்டியது அவசியம். அப்போது கர்த்தர் நமக்கு முழு பாதுகாப்புக் கொடுப்பார். 

அடிமை வாழ்வு நிரந்தரமல்ல; அதன் செழிப்பும் என்றும் நிலைத்து நிற்காது. ஆனால் நாம் பாபிலோன் வாழ்விலிருந்து வெளிவரும்போது தேவனது ஆசீர்வாதமும் பாதுகாப்பும் உண்டு. அதனையே இன்றைய தியான வசனத்தின் இறுதியில் நாம் "உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்" என்று வாசிக்கின்றோம். ஆம், நாம் அவருக்கு நேராகத் திரும்பும்போது அவர் நம்மைத் தனது கண்மணிபோலக் கருதுகின்றார். எனவே எவரும், எதுவும் நம்மைத் தீண்டிடாமல் பாதுகாக்கின்றார்.   

பாபிலோன் வாழ்விலிருந்து தன்னிடம் திரும்பும் மக்களைப்பார்த்து, "சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." ( சகரியா 2 : 10 ) நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். பாபிலோனின் செயல்பாடுகள் நம்மிடம் இருந்தால் திருத்திக்கொள்வோம். அப்போது தேவனது பாதுகாப்பு நமக்கு நிச்சயமாக உண்டு. 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                 

"Inside the Seeds" 🌳
Scripture Meditation No. 1695
AATHAVAN – 28.09.2025, Sunday

"Ho, Zion! Escape, you who are living with the daughter of Babylon.” For the Lord of armies says this: “After glory He has sent me against the nations that plunder you, for the one who touches you, touches the apple of His eye.” (Zechariah 2:7–8)

The verse for today emphasizes that as people belonging to Christ, we must escape from the Babylonian life—life enslaved by worldly pleasures and sin—and live the spiritual life of Zion, pleasing to the Lord. When we break free from Babylon, God’s blessing and protection will surely rest upon us.

When the people of Judah had been in captivity under the Babylonians for nearly seventy years, they began to forget their homeland and Jerusalem. They became content with the prosperity of Babylon. In today’s passage, God calls such chosen people of His “Zion.” Their state was like men who, forgetting their own families, run after other women and dwell with them. The people of Judah chose to settle with the daughter of Babylon.

Therefore, through the prophet Zechariah, God spoke to them: “Ho, Zion! Escape, you who are living with the daughter of Babylon. After glory you will have honour. You are the one chosen by the Lord—do not forget it. To declare this to you, He has sent me to the nations (Babylon) who plundered you.” As we have often mentioned in many Aathavan meditations, the Old Testament is a shadow of the New Testament. So, today’s verse must be read in the light of the New Testament truth.

Just as the people of Judah, who belonged to the Lord, lived as slaves in Babylon, fascinated by its prosperity, so too we, the people of Zion, fall into bondage to sin and continue to live as if dwelling with the daughter of Babylon. To such people God says: “Zion, who destroys yourself being deceived by Babylon’s beauty, escape! Then you will have glory,” says the Lord of armies.

Yes, beloved, today we who are caught in the charms and deceptions of the world, living enslaved to them, must come out of the Babylonian life if we long for glory in our lives. When we do so, the Lord Himself will give us full protection.

Slavery is never permanent; its prosperity will not last forever. But when we escape from the Babylonian life, God’s blessing and protection are assured. That is why at the end of today’s passage we read: “The one who touches you, touches the apple of His eye.” (Zechariah 2:8). Indeed, when we turn to Him wholeheartedly, He considers us as the apple of His eye. Therefore, He will not allow anyone or anything to harm us.

To those who return to Him from Babylon, the Lord declares: “Shout for joy and rejoice, daughter of Zion; for behold I am coming, and I will dwell in your midst,” declares the Lord. (Zechariah 2:10). Let us examine ourselves today. If we still find traces of Babylonian ways in us, let us correct ourselves. Then God’s protection will surely be ours.

Message of God :- Bro. M. Geo Prakash

Thursday, September 25, 2025

🦋 Meditation verse - ஏசாயா 28 : 9 / Isaiah 28:9

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1694                                           ஆதவன் 27.09.2025 சனி          


"அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே." ( ஏசாயா 28 : 9 )

இன்றைய தியான வசனம் தேவனை அறியும் அறிவை அவர் யாருக்கு அளிப்பார். என்பதனை விளக்குவதாக உள்ளது. பொதுவாகப்  பலரும் இறையியல் கல்லூரிகளில் படிப்பதுதான் தேவனை அறியும் வழி என எண்ணிக்கொள்கின்றனர். எனவேதான் பல திருச்சபைகளில் இறையியல் படிப்புப் படித்தவர்களை குருக்களாகவும் போதகர்களாகவும் நியமிக்கின்றனர். ஆனால் இறையியல் படிப்புக்கும் தேவனை அறியும் அறிவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.  தேவனை வாழ்வில் அறியவேண்டுமானால் நாம் சிறு குழந்தையின் உள்ளத்தைப் பெறவேண்டியது அவசியம். இதனையே இன்றைய தியான வசனம்"அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே." என்று கூறுகின்றது. 

யோவான் நற்செய்தியில் நாம் நிக்கொதேமு எனும் ஒரு போதகரைக் குறித்து வாசிக்கின்றோம். அவர், இயேசு தேவனிடமிருந்து வந்தவர் என்று அறிந்திருந்தார். ஒருவரிடம் தேவன் இல்லையானால் இயேசு செய்வதுபோல அற்புதங்களைச் செய்யமுடியாது என்றும் அறிந்திருந்தார். எனவேதான் அவர் இயேசுவைநோக்கி,  "ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றார்." ( யோவான் 3 : 2 )

ஆனாலும் அவர் தனிப்பட்ட வாழ்வில் தேவனை அறியவில்லை; இஸ்ரவேலில் அவர் போதகனாக இருந்தும் தேவனை அறியவில்லை! எனவேதான் இயேசு அவரிடம், "நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?" ( யோவான் 3 : 10 ) என்று கேட்கின்றார். மட்டுமல்ல, இயேசு அவரிடம், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( யோவான் 3 : 3 ) ஆம், தேவனுடைய ராஜ்யத்துக்குரியவர்களாக நாம் மாறவேண்டுமானால் நிக்கோதேமுவைபோல "இயேசு ஆண்டவர், இறைமகன்" என்று கூறினால் மட்டும் போதாது மறுபடி பிறக்கவேண்டும்; குழந்தைகளாக மாறவேண்டும். 

இப்படி மறுபடி பிறந்த அனுபவமுள்ளவர்களுக்கு வேத வசனங்கள் வித்தியாசமாக, புதிய வெளிப்பாடுகளைக் கொடுக்கும். ஆம் அவர்களுக்குத் தேவன்  அறிவைப் போதிப்பார்; உபதேசத்தை உணர்த்துவார். எனவேதான் இயேசு இந்த அனுபவம் பெற்றவர்களை பாலகர்கள் என்று கூறினார். மேலும், "அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது." ( லுூக்கா 10 : 21 ) என்று வாசிக்கின்றோம்.

இந்த அனுபவம் இருந்ததால் தாவீதுராஜா  கூறுகின்றார், "தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது." ( சங்கீதம் 131 : 2 ) என்று. 

ஆம், தேவனை அறிய சிறு குழந்தையின் உள்ளம் நமக்கு வேண்டியது அவசியம். "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" (  மத்தேயு 19 : 14, மாற்கு 10 : 14 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?

நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படும் மீட்பு அனுபவம் பெறும்போது மறுபடி பிறந்தவர்களாக மாறுகின்றோம். நாம் எத்தனை வாதானவர்களாக இருந்தாலும் நமது எண்ணங்களும் மனதும் புதிதாகி பழையன ஒழிந்து நாம் புதிதாகுகின்றோம். பாவத்துக்கு நீங்கலாகி குழந்தையின் மனநிலையினை அடைகின்றோம். எனவே இந்த அனுபவம் பெற்று நாம் தேவனை முழுவதும் அறிந்திட நமது பாவங்களை கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு மன்னிப்பை வேண்டுவோம்.  அப்போது தேவனை அறிவது மட்டுமல்ல, தாயின் பால்மறந்த பிள்ளைகளாக மாறிவிடும் நமக்கு அவர் அறிவைப் போதிப்பார்; உபதேசத்தை உணர்த்துவார்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                

“Inside the Seeds” 🌳

Scripture Meditation No. 1694
AATHAVAN – Saturday, 27.09.2025

“To whom would He teach knowledge, And to whom would He interpret the message? Those just weaned from milk, Those just taken from the breast.” (Isaiah 28:9)

Today’s meditation verse explains to whom God gives the knowledge of knowing Him. Generally, many think that studying in theological colleges is the way to know God. Therefore, in many churches, theologically trained people are appointed as priests and preachers. But theological education has nothing to do with the knowledge of God. To truly know God in our lives, we must have the heart of a little child. That is exactly what today’s verse says: “To whom would He teach knowledge, And to whom would He interpret the message? Those just weaned from milk, Those just taken from the breast.”

In the Gospel of John, we read about Nicodemus, a teacher. He knew that Jesus came from God. He also understood that unless God is with someone, he could not perform such miracles as Jesus did. That is why he came to Jesus and said: “Rabbi, we know that You have come from God as a teacher; for no one can do these signs that You do unless God is with him.” (John 3:2)

Yet, in his personal life, he did not know God; even though he was a teacher of Israel, he did not know God! That is why Jesus asked him: “Are you the teacher of Israel, and yet you do not understand these things?” (John 3:10). Not only that, Jesus also said to him: “Truly, truly, I say to you, unless someone is born again he cannot see the kingdom of God.” (John 3:3).

Yes, if we want to become heirs of the kingdom of God, it is not enough to say like Nicodemus, “Jesus is Lord, the Son of God.” We must be born again; we must become like children.

For those who have this experience of being born again, the Scriptures give new meanings and fresh revelations. Yes, to them God teaches knowledge and makes them understand His instruction. That is why Jesus referred to such people as little children. Furthermore, it is written: “At that very time He rejoiced greatly in the Holy Spirit, and said, ‘I praise You, Father, Lord of heaven and earth, that You have hidden these things from the wise and intelligent, and have revealed them to infants. Yes, Father, for this way was well pleasing in Your sight.’” (Luke 10:21)

Having this experience, King David said: “I have certainly soothed and quieted my soul; Like a weaned child resting against his mother, My soul within me is like a weaned child.” (Psalm 131:2).

Yes, to know God, we need the heart of a little child. Did not Jesus Christ say: “Allow the children to come to Me; do not forbid them, for the kingdom of God belongs to such as these.” (Mark 10:14; Matthew 19:14)

When we receive the experience of redemption through the cleansing blood of Jesus Christ, we are born again. No matter how grown-up we are, our mind and heart are renewed; the old things pass away, and we become new. We are set free from sin and attain the childlike heart. Therefore, let us confess our sins to Christ and seek forgiveness, so that we may gain this experience. Then, not only will we know God, but as little children weaned from their mother’s milk, He will teach us knowledge and make us understand His instruction.

Message by: Bro. M. Geo Prakash

Wednesday, September 24, 2025

🦋 Meditation verse - 1 நாளாகமம் 16 : 11 / 1 Chronicles 16:11

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1693                                           ஆதவன் 26.09.2025 வெள்ளி         


"கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்." ( 1 நாளாகமம் 16 : 11 )

நமது அன்றாட வாழ்வில் உலகப் பொருட்களையல்ல; மாறாக, கர்த்தரைத் தேடுபவர்களாக நாம் வாழவேண்டியது அவசியம் என்று இன்றையத்  தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

கர்த்தரைத் தங்களது உலக ஆசை இச்சைகளை நிறைவேற்றிடத் தேடுவோருக்கும் உண்மையயான ஆத்தும சிந்தையோடு  தேடுவோருக்கும்   மிகுந்த வேறுபாடு உண்டு. வழிபாட்டு முறைமைகளும் தாங்கள் சார்ந்திருக்கும் சபைப் பிரிவிற்கும் அடிமையாகியிருப்பவர்கள் கர்த்தரைத் தேடுபவர்கள் என்று சொல்லமுடியாது. அவர்கள் தங்களது சுய விருப்பத்தையும் எண்ணங்களையும் நிறைவேற்றிட ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்பவர்கள். 

மேலும், உலக ஆசைகளை நிறைவேற்ற விரும்பி தேவனை தேடுபவன் மேம்போக்கான எண்ணம் கொண்டவனாகவே இருப்பான். தேவனது வல்லமை மகத்துவங்களோ, தேவனிடம்  அன்புறவோ அத்தகைய மனிதனிடம் இருக்காது. ஆத்தும தாகம் என்பதை தேவனை தேடுபவனிடம் மட்டுமே காண முடியும். வெயிலில் நடந்து களைப்படைந்த   மனிதன் ஒரு குவளைத்  தண்ணீர் கிடைத்திடாதா என ஏங்குவதுபோல ஆத்தும  தாகங்கொண்டவன் தேவனைத் தாகங்கொண்டுத் தேடுவான்.

வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசுதவான்களிடம் இத்தகைய தாகம் இருந்தது. ஜீவ ஊற்றாகிய தேவனிடமிருந்து ஜீவ தண்ணீர் இருதயத்தில் பாய்ந்து நிரப்பிட வேண்டும் என்பதே அவர்களது நெஞ்சத்தின் பெரு விருப்பமாக இருந்தது. தேவன் இத்தகைய மன விருப்பத்துடன் மனிதர்கள் தன்னைத் தேடவேண்டுமேன்றே விரும்புகிறார். 

தாவீது ராஜா இத்தகைய இறை அனுபவத்தைக் கொண்டிருந்தார். அவர் ஒரு பெரிய ராஜாவாக இருந்தபோதும் அந்த ராஜ பதவியோ செல்வமோ அவருக்கு ஆத்தும திருப்தியைத் தரவில்லை. தேவ ஐக்கியமே அவரது தாகமாக இருந்தது. எனவேதான் அவர் ஆத்மார்த்த அன்புடன் கூறுகிறார்: "மானானது நீரோடையை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங்கீதம் - 42:1)

தேவனது அன்பை நாம் வாழ்வில் ருசித்திருப்போமானால் அவரை நாம் உண்மையாக அன்புசெய்து அவரைத் தேடுகிறவர்களாக இருப்போம்.  உலகப் பொருட்கள்மேல் நாம் அன்புகொண்டு வாழ்வோமானால் அவற்றைத் தேடுபவர்களாகவும் அவற்றுக்காக ஜெபிப்பவர்களாகவுமே இருப்போம். "தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்" ( சங்கீதம் 14 : 2 ) என்று வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, இந்த உலகத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களிடையே தன்னைத் தேடுபவர்கள் உண்டுமா என்று அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். 

அவரைத் தேடும் மனமுள்ள மனிதர்களைக் காணும்போது அவரும் மகிழ்ச்சியடைகின்றார். "முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்"( உன்னதப்பாட்டு 2 : 2 ) என்று அவர் கூறத்தக்கதாக  உண்மையாய் அவரைத்தேடும்  மனிதர்களை அவர் பார்க்கின்றார். உலக முட்களுக்கிடையே பூத்திருக்கும் அழகிய லீலிமலர்போல அவருக்கு அவர்கள் இருக்கின்றனர்.  

தேவனிடமிருந்து எதனையும் பெற்றுக்கொள்ளவேண்டும் எனும் எண்ணத்தில் அவரைத் தேடாமல் அவரே நமது வாழ்வில் எல்லாமாக இருக்கவேண்டும் எனும் ஆவலில் நாம் அவரைத் தேடும்போது தேவன் நம்மேல் அன்புகூருகின்றார். நாம் தேவனைத் தேடுகிறோமா தேவனிடமிருந்து வரும் பொருள் ஆசீர்வாதங்களைத் தேடுகிறோமா? தேவனையேத் தேடுவோமெனில் அவர் இருதயத்தில் சுரக்கும்  ஜீவத்தண்ணீரால் நம்மைத் திருப்தியாக்குவார். அது என்றும் வற்றாத நீரூற்றாக நமது இருதயத்தில் சுரந்துகொண்டிருக்கும். 

"வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" ( யோவான் 7 : 38 ) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா? கிறிஸ்துவிடம் விசுவாசம் கொள்வது என்பது அவர் தரும் உலக ஆசீர்வாதங்களுக்காக என நாம் எண்ணிக்கொள்வோமானால் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்பவர்களாக இருப்போம். அப்படி வாழ்வது தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளைக் கட்டுவது போன்றதாகும். 

அத்தகைய மனிதர்களைப்பார்த்து தேவன் வேதனையுடன் கூறுகின்றார், "என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்" ( எரேமியா 2 : 13 ) என்று. எனவே, இந்த இரண்டு தீமைகளையும் செய்பவர்களாக அல்லாமல் கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுவோம்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்              

“Inside the Seeds” 🌳

Scripture Meditation No. 1693
AATHAVAN – Friday, 26.09.2025

"Seek the Lord and His strength; Seek His face continually." (1 Chronicles 16:11)

Today’s meditation verse teaches us that in our daily life, we should not be seekers of worldly possessions, but rather seekers of the Lord.

There is a vast difference between those who seek God to fulfil their worldly desires and those who seek Him with true spiritual longing. Those who are bound to denominational rituals or merely follow worship patterns cannot be called true seekers of the Lord. Such people attend worship to satisfy their own wishes and ideas rather than to truly pursue Him.

Moreover, the one who seeks God only to satisfy worldly desires has a superficial motive. They do not experience the majesty of God’s power or a loving relationship with Him. True spiritual thirst can only be found in those who earnestly seek the Lord. Just as a weary traveller under the hot sun longs for a cup of water, so too does the soul-thirsty person long after God.

Such thirst was evident in the saints mentioned in the Scriptures. Their hearts’ deepest longing was to be filled with the living water flowing from the fountain of life, who is God Himself. God desires that people seek Him with this kind of longing.

King David had such a divine experience. Though he was a great king, neither his throne nor his riches satisfied his soul. His true thirst was for communion with God. That is why he cried out in loving devotion: "As the deer pants for the water brooks, So my soul pants for You, God." (Psalm 42:1)

If we have truly tasted the love of God, then we will love Him sincerely and seek Him earnestly. But if our affection is upon worldly things, then we will pray and pursue those things. As it is written: "The Lord has looked down from heaven upon the sons of mankind To see if there is anyone who understands, Who seeks after God." (Psalm 14:2). Yes, beloved, among the multitudes living in this world, the Lord is still watching to see if there are those who seek Him.

When He finds those who truly seek Him, His heart rejoices. Of such people He can say: "Like a lily among the thorns, So is my darling among the young women." (Song of Solomon 2:2). In the midst of the world’s thorns, such seekers are like beautiful lilies blossoming before His eyes.

If we seek God not to gain something from Him, but because He Himself is everything to us, then He delights in us. Let us ask ourselves: Do we seek the Lord Himself, or do we only seek the blessings that come from Him? If we truly seek Him, He will satisfy us with the living water that flows from His heart—an unfailing fountain within us.

Did not Jesus Christ say: "The one who believes in Me, as the Scripture said, ‘From his innermost being will flow rivers of living water.’" (John 7:38)? If we believe in Christ only for the sake of worldly blessings, then we deceive ourselves. Such a life is like building cracked cisterns that cannot hold water.

Concerning such people, God laments: "For My people have committed two evils: They have abandoned Me, The fountain of living waters, To carve out for themselves cisterns, Broken cisterns That do not hold water." (Jeremiah 2:13). Therefore, let us not be among those who commit these two evils, but rather let us seek the Lord and His strength; let us seek His face continually.

Message by: Bro. M. Geo Prakash