DAILY MEDITATION ON WHATSAPP

ஆதவன் தினசரி வேதாகமத் தியானத்தை வாட்சப் இல் பெறுவதற்கு 96889 33712 அல்லது 76390 22747 எண்களில் தொடர்பு கொள்ளவும் / To get daily Scripture Meditation on WhatsApp kindly contact 9688933712 or 7639022747

Wednesday, January 28, 2026

🏫 வேதாகமத் தியானம் - ஜனவரி 2026

 


                - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1790                                                       🔆 ஆதவன் 01 .01.2026 வியாழன்             

"உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்."( நீதிமொழிகள் 3: 6)

"ஆதவன்" வேதாகத் தியான வாசகர்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மகிழ்ச்சிகரமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

புதிய ஆண்டு துவங்கிவிட்டால் எங்கும் பல்வேறு ஆசீர்வாத வாக்குறுதிகளைத்தான் நாம் கேட்கமுடியும். இது வாடிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பத்தில், "இந்த ஆண்டு உங்களைத்  தேவன் அளவில்லாத ஆசீர்வாதத்தால் நிரப்பப்போகிறேன் என்கிறார்" என்று ஆசீர்வாத வாக்குறுதிகளைப் பல ஊழியர்கள் கூறுவார்கள்.  ஆனால் அந்த ஆண்டு முடிந்து புதிய ஆண்டு துவங்கும்போதும், "கடந்த  ஆண்டில் நீங்கள் அனுபவித்தத் துன்பங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் மாற்றி, தேவன் உங்களை இந்தப் புதிய ஆண்டில்  ஆசீர்வாதத்தால் நிரப்பப்போகிறேன் என்கிறார்" என்று  புதிய வாக்குறுதியைக்  கூறுவார்கள். அப்படியானால் சென்ற ஆண்டில் இவர்கள் கூறியது பொய்யா: தேவன் கூறியது பொய்யா? 

அன்பானவர்களே, நாம் ஞானமுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். ஆண்டுகள் மாறுவதால் வாழ்க்கையில் பிரச்சனைகள்  மாறப்போவதில்லை.  ஒரு ஆண்டு துடிக்கின்றது என்றால், பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வந்துள்ளது என்று பொருள். ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. புதிய ஆண்டிலாவது நமக்கு நல்லது ஏதேனும் நடக்காதா எனும் ஏக்கம் அனைவருக்கும் இயல்பிலேயே இருக்கின்றது. இந்த ஏக்கத்தைப் பல ஊழியர்கள் தவறாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். 

ஆனால் தேவன் நமது வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு ஆண்டு மாறுவதல்ல; முதலில் நாம் அவரது வழிக்குத் திரும்பவேண்டியது அவசியமாய் இருக்கிறது. 

இதனையே இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுரையாகக் கூறுகின்றது. ஆசீர்வாத வாக்குத்தத்தங்களைத் தேடி ஓடாமல் முதலில் "உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  

நமது வாழ்வில் ஒவ்வொரு கணமும் நாம் அவரை எண்ணி, அவரை நம்பி, அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை  வாழவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அப்படி வாழும்போது அவர் நம்மை ஒரு அரச குமாரனாக நடத்துகின்றார். ஒரு ராஜா,  அல்லது இந்தக்காலத்துக்கு ஏற்ப கூறுவோமானால் ஒரு பிரதமரோ முதலமைச்சரோ வருகிறார் என்றால் அவர் வருமுன் முதலில் அவர் பயணிக்க இருக்கும் சாலைகள் சீர்ச்செய்யப்படும். தேவன் இதுபோலவே தனது வழியில் நடக்கும் பிள்ளைகளுக்காக வழியை ஆயத்தம் செய்கின்றார். இதனையே இன்றைய தியான வசனம், "அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்" என்று கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே, ஆண்டு ஆரம்பித்துவிட்டதால் ஆங்காங்கே நடக்கும் வாக்குத்தத்தைக் கூட்டங்களில் கலந்துகொண்டு அவர்கள் மனோதத்துவ அடிப்படையில் கூறும் ஆசீர்வாத வாக்குறுதிகளைக் கேட்டுத் திருப்தியடைந்து அதுவே போதும் என்று வாழ்வோமானால் 2027 ஆம் ஆண்டிலும்  இதுபோலவே புதிய வாக்குத்தத்தத்துக்காக ஓடவேண்டியிருக்கும். 

புதிய ஆண்டில் தேவன் எனக்கு என்னச்  செய்வார் என்று சிந்திப்பதைவிட்டு, நான் தேவனுக்காகப் புதிய ஆண்டில்  என்னச் செய்யப்போகிறேன் என்று சிந்தித்து நமது வழிகளை அவருக்கு ஏற்புடையதாக்குவோம். அப்பொழுது அவர் நமது பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1791                                                       🔆 ஆதவன் 02 .01.2026 வெள்ளி              

"இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்." ( ஏசாயா 54: 7)

நம்முடைய தேவன் இரக்கங்களின் பிதாவாக இருக்கின்றார். அதாவது மன்னிப்பதிலும் ஆறுதல் அளிப்பதிலும் அவருக்கு நிகர் யாருமில்லாத தனித்துவமிக்கவராக இருக்கின்றார். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். " (2 கொரிந்தியர் 1:3) என்று கூறுகின்றார்.

அவர் மன்னிக்கும் பிதாவாக இருப்பதால் நாம் அவருக்கு எதிராகப்  பாவம் செய்யும்போதும் அவர் உடனேயே நம்மைத் தண்டித்துவிடுவதில்லை. ஆனால், ஆவிக்குரிய வாழ்வில் அவருக்கு ஏற்புடையவர்களாக வாழும் நாம் சிலவேளைகளில் பாவங்கள் செய்யும்போது நம்மைவிட்டுத் தனது பிரசன்னத்தை விலக்குகின்றார். அப்போது நாம் ஆவிக்குரிய கைவிடப்பட்ட நிலைமையை அடைகின்றோம்; தேவன்  நம்மைவிட்டு வெகு தொலைவில் சென்றுவிட்டதுபோல உணர்கின்றோம். 

ஆனால், அவர் இரக்கமுள்ளவராக இருப்பதால் நமது பாவங்களை நாம் உணர்ந்து மன்னிப்பு வேண்டும்போது நம்மை அவர் மன்னித்து மீண்டும் சேர்த்துக்கொள்கின்றார். இதனையே, "இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன்." என்று கூறுகின்றார். இன்றைய தியான வசனத்தைத் தொடர்ந்து நாம் வாசிக்கின்றோம், "அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்." ( ஏசாயா 54: 8)

ஆம் அன்பானவர்களே, தேவனுடைய கோபம் இமைப்பொழுதுதான். அதாவது நாம் கண்ணைமூடித் திறப்பதுபோல அவ்வளவு குறைவான நேரமே அவரது கோபம் நம்மேல்  இருக்கின்றது. மீண்டும், ஒரு தாய் தனது பிள்ளையைச் சேர்த்துக்கொள்வதுபோல நம்மை அவர் மீண்டும் தன்னோடு சேர்த்துக்கொள்கின்றார்.  ஆனால் அவரது இமைப்பொழுது நமக்குச் சிலவேளைகளில் அதிக நேரம்போலத் தெரிகின்றது. எனவே நாம் அந்த வேளைகளில் பொறுமையுடன் காத்திருக்கவேண்டியது அவசியம். 

சிலவேளைகளில் நமது வாழ்வில் தொடரும் பிரச்சனைகளைப்  பார்த்து நாம் கலக்கமடைந்து, "ஒருவேளை தேவன் என்னைத் தள்ளிவிட்டாரோ?" என்று கருதலாம்.  ஆனால் தேவன் அப்படி நம்மைத் தள்ளிவிடுவதில்லை. "பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை." (யோவான் 6:37) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா? 

எனவே அன்பானவர்களே, பிரச்சனைகள், துன்பங்கள் நமது வாழ்வில் தொடரும்போது நாம் கலக்கமடையவேண்டியதில்லை.  அவர் நம்மைத் தள்ளிவிடமாட்டார். நம்மைச் சீர்படுத்துவதற்காக இமைப்பொழுது நம்மை அவர் கைவிட்டாலும் உருக்கமான இரக்கங்களால் நம்மைத் தம்மோடு மீண்டும் சேர்த்துக்கொள்ளுவார்.  இந்த இமைப்பொழுது கைவிடப்படுதல் நமது ஆவிக்குரிய வாழ்வில் அவசியமானது. காரணம்,  தேவனது இந்த இமைப்பொழுது கைவிடப்படுவதிலும் சேர்த்துக்கொள்வதிலும் ஆவிக்குரிய மனிதர்கள் மேலும் இன்பமடைகின்றனர்; ஆவிக்குரிய வாழ்வை உற்சாகமுடன் தொடருகின்றனர்.


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1792                                                       🔆 ஆதவன் 03 .01.2026 சனி           

"தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்." ( சங்கீதம் 78: 70)

"தெரிந்தெடுத்தல்" (Select) "தேர்வுசெய்தல்" (Elect) எனும் இரு வார்த்தைகளும் பார்வைக்கு ஒன்றுபோலத் தெரிந்தாலும் இரண்டுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. "தெரிந்தெடுத்தல்" என்பது இருக்கும் பல பொருள்களிலிருந்து விரும்பும் ஒன்றை நாம் தெரிந்து கொள்வது. தேர்வு செய்தல் என்பது குறிக்கப்பட்ட மக்களிலிருந்து ஒருவரை நாம் தேர்ந்தெடுப்பது.  நாம் தேர்தல்களில் நமக்கு கொடுக்கப்பட்ட வேட்பாளர்களிலிருந்து ஒருவரை தேர்வு செய்கின்றோம். 

தேவன் எப்போதுமே தனக்கு வேண்டிய மனிதர்களை தெரிந்திடுகின்றார். அவர் தேர்வு செய்வதில்லை. மனிதர்களது உள்ளான மனம் அவருக்குத் தெரிவதால் அவர் மனிதர்களை இப்படித் தெரிந்தெடுக்கின்றார். இப்படியே அவர், தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். ஆபிரகாமையும் இதுபோலவே அவர் தேர்தெடுத்தார். 

எந்த ஒரு உலகப் பதவிக்கு நாம் விண்ணப்பித்தாலும் அவர்கள் நமது படிப்பு, நமது திறமைகள், முன் அனுபவங்கள் இவைகளை அடிப்படையாகக்கொண்டு தான் நம்மைத் தேர்வு செய்வார்கள். ஆனால் தேவனோ, எந்தப் படிப்பும், திறமையும் முன் அனுபவங்களும் இல்லாதவர்களைத் தெரிந்துகொண்டு அவர்களைத் தகுதிப்படுத்துகின்றார். 

இது ஏன் என்பதனை அப்போஸ்தலரான பவுல், "ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்." (1 கொரிந்தியர் 1: 27, 28) என்று விளக்கமாகக் கூறுகின்றார். 

எல்லோரும் இரட்சிக்கப்பட தேவன் விருப்பமுள்ளவராக இருந்தாலும் அவர்களில் சிலரை மட்டும் அவர் தெரிந்து கொண்டவர்களாக எண்ணி நடத்துகின்றார். "அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்." ( மத்தேயு 22: 14) என்று நாம் வாசிக்கவில்லையா?

தேவன் மனிதர்களில் சிலரை இப்படித் தெரிந்துகொள்வதற்கு நாம் எந்த மனித அளவுகோலைக்கொண்டும் கணித்திடமுடியாது.  "கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்?" (ரோமர் 11:34) என்று கூறியுள்ளபடி நாம் அவரது சிந்தனையை அறியமுடியாது. அவர் தனக்குச் சித்தமானவர்களைத் தெரிந்துகொள்கிறார்.

நாம் பலவேளைகளில் சில ஊழியர்கள் தவறு செய்யும்போது அவர்களைக்குறித்துப் பலவிதமாகப் பேசுகின்றோம். அப்படிப் பேசுவது நாம் தேவனது தெரிந்துகொள்ளுதலைக் கேலி செய்கின்றோம் என்று பொருள். "தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்." ( ரோமர் 8: 33) ஆம், தேவன் நினைத்தால் அவர்களை நீதிமான்களாக மாற்றுவார். ஆம், ஆட்டுத் தொழுவதிலிருந்து தாவீதைத் தெரிந்துகொண்டதுபோல அவர் அவர்களைத் தெரிந்தெடுத்திருக்கலாம். தாவீதும் பாவம் செய்தார். ஆனால் தேவன் தாவீதை தூக்கி நிறுத்தினார்.  

அன்பானவர்களே, தேவ ஊழியர்கள் செய்யும் தவறான உபதேசங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்த  வேண்டியது நமது கடமை. ஏனெனில் தவறான உபதேசங்கள் பலரை நரக படுகுழிக்குள் இழுத்துச்சென்றுவிடும். அதனை நாம் தடுக்கவேண்டியது அவசியம். அதே வேளையில் அத்தகைய ஊழியர்களைத்   தனிப்பட்டவிதத்தில்  கேலி செய்து அவமதித்துப் பேசுவது தேவனுக்கு எதிரான பாவம். அப்படிச் செய்யும்போது நாம் தேவனது தெரிந்துக்கொள்ளுதலை அவமதிக்கின்றோம். 

"மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்?  அவன்  நின்றாலும்  விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே   அவன்  உத்தரவாதி;  அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே." ( ரோமர் 14:4)

தவறான உபதேசங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்; தவறான ஊழியர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம். அவர்களைத் தெரிந்தெடுத்த தேவனுக்கு அவர்கள் கணக்குக் கொடுத்துக்கொள்வார்கள்.  

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1793                                                       🔆 ஆதவன் 04 .01.2026 ஞாயிறு           

"உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்." ( ஏசாயா 61 : 7 )

தேவனுடைய மெய்யான அசீர்வாதம் நமக்கு நமக்கு உண்டாகும்போது நமது வாழ்வில் பெரிய மாறுதல் ஏற்படுவதை நாம் காண முடியும். இந்த உலகத்தில் செல்வமும் வசதியும் பதவியும் உள்ளவர்களையே பலரும் மதிக்கின்றனர். மட்டுமல்ல, பலர் தங்கள் உறவினர்களில் வசதி குறைந்தவர்களைக்கூட மதிப்பதில்லை. அப்படி மதிப்புக் குறைவாக நடத்தப்படுவது அந்த எளிய மனிதர்களுக்கு வெட்கத்தை உண்டாக்குகின்றது. 

பல்வேறு செழிப்புகளை வாழ்வில் அனுபவித்த யோபு, தனது ஏழ்மை நிலையில் ஏற்பட்ட அவமானத்தைப் பின்வருமாறு கூறுவதை நாம் வாசிக்கின்றோம்;- 

"எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள். என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள். என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள். என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன். நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று." ( யோபு 19 : 13-16 )

அன்பானவர்களே, இத்தகைய நிலைமை ஒருவருக்கு ஏற்படும்போது அது எத்தகைய அவமானகரமான காரியமாக இருக்குமென்று எண்ணிப்பாருங்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் எந்த மனிதரோடும் அதிகம் பேசுவதில்லை; யார் எந்த விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்தாலும் கலந்துகொள்வதில்லை. நானும் அவரைக்குறித்துத் தவறுதலாக எண்ணியிருந்தேன்.  ஒருமுறை அவரோடு மனம்திறந்து பேசக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அப்போதுதான் எனக்கு அவரது இந்த நிலைமையின் காரணம் புரிந்தது. மிகச்சிறப்பான வாழ்க்கை வாழ்ந்த அவர் இப்போது மிக ஏழ்மை நிலையில் இருக்கின்றார். குடியிருப்பதுகூட வாடகைவீடுதான். ஆனால் அவரைப் பார்க்கும்போது வறுமை தெரியாது.   

ஆம் அன்பானவர்களே, யோபுவைப் போல மனதளவில் வெகுவாக  அவமானத்தைச் சந்தித்திருந்தார் அவர். எனவே, ஒதுங்கியே வாழ்ந்து வருகின்றார்.    இப்போது சில கிறிஸ்தவ சகோதரர்கள் அவரைக் கிறிஸ்துவுக்குள்  வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.  எனவே, இப்பொது மனதளவில் அவர் கிறிஸ்துவுக்குள் மகிழ்ச்சியாகவே இருக்கின்றார் என்பதனை அறிந்தேன். "உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்" எனும் தேவ வார்த்தைகள் அவரை விசுவாசம்கொள்ள  வைத்துள்ளன. இந்த வார்த்தைகளின் ஊக்கத்தால் இப்பொது தனது தாழ்மை நிலையிலும் மகிழ்ச்சியாக விசுவாசத்துடன் வாழ்கின்றார். 

இன்று பல மனிதர்கள் இப்படி அவமானத்துக்குள்ளான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பல தற்கொலைகள் இந்த அவமானத்தால் நிகழ்வதை நாம் தினசரி செய்தித்தாள்களில் வாசிக்கின்றோம். 

எனவே, இதை வாசிக்கும் நண்பர்கள் இன்று ஒருவேளை இதே நிலைமையில் இருந்தாலும் இப்படி அவமானமோ, மனமடிதாலோ அடையத் தேவையில்லை. காரணம் வாழ்வளிக்கும் தேவ வார்த்தைகள் நமக்கு உண்டு. விசுவாசத்தால் தேவ வார்த்தைகளை ஏற்றுக்கொண்ட யோபுவின் வாழ்க்கை ஆசீர்வாதம் பெறவில்லையா? ஆம், "கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்". ( யோபு 42 : 12 ) என்று கூறியுள்ளபடி வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் சந்தோஷம் ஏற்படும்; இரட்டிப்பான சுதந்தரமும்  நித்திய மகிழ்ச்சியும்  நிச்சயம் உண்டாகும்.

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1794                                                       🔆 ஆதவன் 05.01.2026 திங்கள்            

"கெட்டச்  சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாய் இருக்கிற மனுஷர்களால் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு." ( 1 தீமோத்தேயு 6 : 5 )

எந்தக் காலத்தையும்விடப் புத்தாண்டு ஆரம்பத்தில் இன்றைய தியான வசனம் கூறுவதுபோன்ற சிந்தனையுள்ள மனிதர்களை நாம் அதிகம் காணலாம். இன்றைய தியான வசனம் இவர்களை நாம் இனம்கண்டு நம்மைக் காத்துக்கொள்ளவே எழுதப்பட்டுள்ளது. நாம் ஆவிக்குரிய வாழ்க்கையினை சிறப்பாக வாழ்வதற்குப் பவுல் அப்போஸ்தலர் கூறும் சில ஆலோசனைகளை நாம் தியானிக்கலாம்.  

இன்றைய தியான வசனத்தில், கெட்டச் சிந்தனை உள்ளவர்கள், உண்மையில்லாதவர்கள், மக்களது தேவ பக்தியைத் தங்களுக்கு ஆதாயம் தரக்கூடிய தொழிலாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்கள் இவர்களை நாம் விட்டுவிலகிடவேண்டும் என்கிறார் பவுல். ஏன் இவர்களை விட்டு விலகிடவேண்டும் என்றால் இவர்களால், மாறுபாடான தர்க்கங்கள் உருவாகும் என்கிறார் அவர். 

இத்தகைய மனிதர்களை நாம் அடையாளம் கண்டுகொள்ள முதலில் நமது ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படவேண்டும். மேலும், சபை  பாகுபாடு இல்லாமல்  அடிப்படை வேத  சத்தியங்களை உணர்ந்துகொள்ளும் ஆர்வம் நமக்கு இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது மட்டுமே நாம், யார்  கெட்டச் சிந்தனை உள்ளவர்கள், உண்மையில்லாதவர்கள், மக்களது தேவ பக்தியைத் தங்களுக்கு ஆதாயம் தரக்கூடிய தொழிலாக பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்கள் என்பதனைக் கண்டுகொள்ளமுடியும். 

இத்தகைய மனிதர்களோடு நாம் கலந்திருப்போமானால் அவர்களது செயல்பாடுகள் மெய்யான ஆவிக்குரிய மனிதர்களுக்கு முரண்பாடாகத் தெரியும். எனவே அவர்களோடு உண்மை நிலைமையினை நாம் விளக்கும்போது தர்க்கங்கள் உருவாகும். இது நமது ஆவிக்குரிய வளர்ச்சியினைப் பாதிக்கும். எனவே நாம் இவர்களை விட்டு விலகவேண்டியது அவசியம்.  

ஆனால் எப்படி இருந்தாலும், இப்படி வேதத்துக்கு  "எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,  பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்." ( 2 தீமோத்தேயு 2 : 25-26 ) என்று கூறுகின்றார் பவுல்.

மேலும், இத்தகைய தவறான உபதேசம் செய்யும் மனிதர்களை வேத புரட்டர்கள் என்று கூறுகின்றார் பவுல். ஆம், "வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு." (தீத்து 3:10)  

இன்று பல கிறிஸ்தவ ஊழியர்கள் இப்படியே வேத புரட்டர்களாக இருக்கின்றனர். நம்மால் முடியுமானால் இவர்களுக்கு வேதம் கூறும் உண்மையின்படி போதிக்கவும் வாழவும் நாம் அறிவுறுத்தலாம். அது முடியாதென்றால் இவர்களை விட்டு நாம் விலகி இருப்பது நலம். சத்தியம் தெரிந்தும் இவர்களை ஆதரிப்போமானால் நாமும்  இவர்களது தவறான வேத  புரட்டுக்கு ஆதரவாளர்கள் என்பதை உறுதிப்படுத்துவதுடன் நமக்குத் தேவ ஆசீர்வாதம் கிடைப்பதற்கு நாமே தடையாக இருப்போம். எனவே, புத்திச் சொல்லக் கூடுமானால்,  இவர்களுக்குப் புத்திச் சொல்வோம்; முடியாதென்றால் புத்தி சொல்லாமலே அத்தகைய மனிதர்களை விட்டு விலகுவோம்.

ஐந்தறிவுள்ள மிருகங்கள்கூட தங்களுக்கு ஏற்பில்லாத உணவை உட்கொள்ளாது. அப்படியிருக்க ஆறறிவுள்ள ஆவிக்குரிய மனிதர்கள் நாம் எத்தகைய நன்மையான ஆவிக்குரிய உணவினை உட்கொள்ள ஆர்வமுள்ளவர்களாய்  இருக்க வேண்டியது அவசியம்!!!

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1795                                                     🔆 ஆதவன் 06.01.2026 செவ்வாய்  

"இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?" ( ஆமோஸ் 9: 7)

தேவன் அனைவரையும் ஒரேவிதமாக நேசிக்கின்றார்; பெருமை எண்ணம் நமக்கு இருக்குமானால் நாம் தேவனை அறியமுடியாது எனும் உண்மைகளை இன்றைய தியான வசனம் நமக்கு விளக்குகின்றது. 

இஸ்ரவேல் மக்களுக்குத் தங்களைப்பற்றிய ஒரு பெருமை இருந்தது. அதாவது, தாங்கள்தான் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்,  மற்றவர்கள் அனைவரும் தேவனை அறியாத புற இனத்தவர்கள், எனவே தேவன் தங்களைத்தான் அதிகம் நேசிக்கின்றார் என்பதுதான் அந்தப் பெருமை. 

ஆனால், தேவன் அப்படி மனிதர்களுக்குள் வேறுபாடு பார்ப்பதில்லை.  அவர் இஸ்ரவேல் மக்களை மட்டுமல்ல, அனைவரையும் நேசிக்கின்றார். தேவன் பிற இனத்து மக்களையும் இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்ததுபோல அவர்களது வெவ்வேறு அடிமைத்தனங்களிலிருந்து  விடுத்துள்ளார். எனவே இஸ்ரவேல் மக்களே நீங்கள் பெருமைபாராட்டவேண்டாம் என்கிறார் தேவனாகிய கர்த்தர். நீங்கள் எனக்கு வெறும் எத்தியோப்பியரின் புத்திரரைப்போலவே  இருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.  மட்டுமல்ல, நான் உங்களை எகிப்திலிருந்து விடுவித்ததுபோல  பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ? என்று கேட்கின்றார். 

அதாவது உங்களை மட்டுமல்ல, நான் மற்ற இனத்து  மக்களையும் உங்களை நேசிப்பதுபோல நேசிப்பதால் நான் அவர்களையும் விடுவித்துள்ளேன் என்கின்றார். இஸ்ரவேலரின் வரலாறு நமக்கு எடுத்துக் கூறப்பட்டதுபோல மற்றவர்களின் வரலாறு நமக்குக் கூறப்படாததால்  நாம் இதனை அறியாமல் இருக்கின்றோம். ஆம், இஸ்ரவேலரே நீங்கள் பெருமை பாராட்டவேண்டாம் நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இதனையே அப்போஸ்தலரான பவுல் தேவன் தனக்கு வெளிப்படுத்திய இரகசியம் என்று கூறுகின்றார். "அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாய் இருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்." ( எபேசியர் 3 : 3 ) என்கின்றார். 

யூதர்களை தேவன் நேசிப்பதுபோல மற்றவர்களையும் நேசிக்கின்றார். ஆம், "யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்." (ரோமர் 10:12) மேலும்,  "யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்." (கலாத்தியர் 3:28)  என்று நாம்  வாசிக்கின்றோம்.

நாங்கள்தான் வேதத்தை உருவாக்கியவர்கள், நாங்கள்தான் தேவனோடு பேசியவர்கள்,  என்று பெருமை பாராட்டிக்கொண்டிருக்கும் யூதர்கள் அந்தப் பெருமையினால் இன்றுவரை மெய்யான மேசியாவைக் கண்டுகொள்ளவில்லை.  ஆம், "அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள்." (ரோமர் 11:7) ஆம் அன்பானவர்களே, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேலரால் புறஇனத்தவர்கள் எனக் கருதப்படும் நாம் கிறிஸ்துவாகிய மேசியாவைக் கண்டுகொண்டுள்ளோம்.  

தேவனை அறிந்துகொள்ள மேலான இறையியல் அறிவோ, வம்ச பெருமையோ உதவாது. தாழ்மையான உள்ளமே தேவனை நாம் வாழ்வில் அறிந்துகொள்ள உதவும். நமது  வேதஅறிவு,  படிப்பு, பதவி, பணம் இவைகளைக்குறித்த பெருமை நமக்கு இருக்குமானால் இஸ்ரவேலரைப்போல நாமும் கிறிஸ்துவை வாழ்வில் அறியாதவர்களாகவே இருப்போம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1796                                                     🔆 ஆதவன் 07.01.2026 புதன்   

"நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்". (பிலிப்பியர் 3:12)

ஒரு மனிதனின் வளர்ச்சி அவனது மனதின் அடிப்படையிலேயே இருக்கும். நாம்  ஏதாவது ஒரு காரியத்தில் முழுமை அடைந்துவிட்டோம்  என்று எண்ணுவோமானால்  நமது வளர்ச்சியும் அத்துடன் நின்றுவிடும். ஒரு பானையில் தண்ணீர் பிடிக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம், அந்தப் பானை நிறைந்துவிட்டது என்றால் அதற்குமேல் அதனில் நாம் நீர் நிரப்ப முடியாது அல்லவா?. 

ஆவிக்குரிய காரியத்திலிலும் இப்படியே இருக்கின்றது. ஆவிக்குரிய வாழ்க்கை மிகப்பெரிய கடலைப் போன்றது. அதன் முழுமையினை  யாரும் அடைந்திடமுடியாது. அனுதினமும் நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ந்துகொண்டே இருக்கவேண்டும். 

ஒரு சில ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் தங்களது வேத அறிவைப் பெருமையாகக் கருதி, 'நான் வேதாகமத்தை ஐந்து முறை வாசித்துவிட்டேன், ஏழுமுறை வாசித்துவிட்டேன்; வசன எண்ணைக் கூறினால் அந்த வசனத்தைச் சொல்லுவேன்" என்று பெருமையடைவதுண்டு. எத்தனைமுறை வேதாகமத்தை வாசித்தோம் என்பதல்ல, அப்படி வாசித்தததால் நமது ஆவிக்குரிய உள்ளான வாழ்வு எந்த அளவு வளர்ச்சியடைந்துள்ளது என்பதே முக்கியம். தேவ ஐக்கியமில்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டு எத்தனை முறை வேதாகமத்தை வாசித்தாலும் அதனால் எந்தப் பயனுமில்லை.  அது சிலர் போட்டிக்காக திருக்குறளை படித்து ஒப்பிப்பதுபோலவே இருக்கும்.

வேதாகம வாசிப்பு நம்மில் எந்த அளவு ஆவிக்குரிய தேறுதலைக் கொடுத்துள்ளது? வேதாகமத்தை வாசிப்பதல்ல, அதைவிட தேவனால் நாம் எந்த நோக்கத்துக்காகப்   பிடிக்கப்பட்டோமோ அந்த இலக்கை நாம் அடைந்திடவேண்டும் என்பதே முக்கியம். எழுதப் படிக்கத்தெரியாத பலர் மிகச் சிறந்த ஆவிக்குரிய வாழ்க்கை வாழவில்லையா? எனவேதான், "நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்" என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

நமது இலக்கு எத்தனை முறை வேதாகமத்தை வாசித்தோம் என்பதோ, எத்தனை ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்துகொண்டோம் என்பதோ, எத்தனைமுறை உபவாசம் இருந்தோம் என்பதோ அல்ல; மாறாக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அடைவதுதான். நமது ஆவிக்குரிய ஓட்டம் அவரை அடைந்துகொள்வதற்கான ஓட்டமாக இருக்கவேண்டியது அவசியம். "சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்". (பிலிப்பியர் 3:13, 14) என்ற பவுல் அடிகளின் சிந்தை நமக்கு இருக்கவேண்டும். 

நாம் ஆவிக்குரிய வாழ்வில் தேறியுள்ளோம் என்பதற்கு நம்மில் உருவாகும் இத்தகைய சிந்தைதான் அடையாளம். "ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்". (பிலிப்பியர் 3:15)

எனவே அன்பானவர்களே, நமது சில சில ஆவிக்குரிய செயல்[பாடுகளை எண்ணி நாமே பெருமையடைந்திடாமல் தேறிய ஆவிக்குரிய மனிதர்களாக மாற முயலுவோம். பல கிறிஸ்தவ சபைப் பிரிவுகளில் சபை விசுவாசிகளின் ஆவிக்குரிய செயல்பாடுகளின் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை மேன்மையாகக் கருதுகின்றார்கள். தேவன் எண்ணிக்கையையல்ல, மாறாக விசுவாசிகளின் ஆவிக்குரிய தரத்தை எடைபோடுகின்றார். நமது செயல்பாடுகளின் எண்ணிக்கையல்ல, அவற்றில் எந்த அளவு அன்புகலந்து செய்தோம் என்பதே தேவனுக்கு முக்கியம். 

எனவே நாம் ஆவிக்குரிய வாழ்வில் முற்றும் தேறிவிட்டோம் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நாம் எந்த நோக்கத்துக்காகப் பிடிக்கப்பட்டோமோ அதை நாம்  பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய் நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடருவோம். 


"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1797                                                     🔆 ஆதவன் 08.01.2026 வியாழன்    

"நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்." (2 தெசலோனிக்கேயர் 2: 14)

நல்ல உயர் பதவியில் உள்ள ஒருவர், தனது பிள்ளைகளும்  நன்கு படித்து வருங்காலத்தில் தன்னைப்போல உயர் பதவியில் வரவேண்டுமென்று விரும்புவதுண்டு. இன்று அதுபோல பல IAS, IPS அதிகாரிகளின் பிள்ளைகள் உயர் பதவிகளை அடைவதை நாம் உலகினில் காண்கின்றோம். அந்தத் தாய் தகப்பனுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. 

இதுபோலவே தேவனும் விரும்புகின்றார். தான் படைத்தத் தனது பிள்ளைகள் தன்னைப்போல மாறவேண்டும், தான் அடைந்துள்ள மகிமையினை அடையவேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ஆம், நாம் கிறிஸ்து அடைந்த மகிமையினை  மறுவுலகினில் சென்று காணவேண்டும், அதே மகிமையை நாமும் அடையவேண்டும் என்பதே தேவனுடைய சித்தம். சுவிசேஷம் அதற்காகவே உலகினில் அறிவிக்கப்பட்டு வருகின்றது. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகினில் இருந்தபோது பிதாவிடம் இதற்காக ஜெபித்ததை நாம் பின்வரும் வசனங்களில் காணலாம் ;- 

"நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்." (யோவான் 17:22)

"பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்". 
(யோவான் 17:24)

இதனையே இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் தெசலோனிக்கேயே  சபையினருக்கு எழுதுகின்றார். தேவன்  இத்தகைய மகிமையான காரியத்துக்கு அழைத்திருப்பதால் நீங்கள் வெறும் உலக ஆசை, கவர்ச்சி, இன்பம் இவைகளுக்கு அடிமையாகாதிருங்கள் என்கின்றார் அவர். 

ஒருவர் படிப்பிலோ விளையாட்டிலோ  மேலான நிலையினை அடைந்து பரிசுகளும் பதக்கங்களும் வெல்கின்றார் என்றால் அது சாதாரணமாய் அவருக்குக்  கிடைத்துவிட்டதல்ல; மாறாக. அதற்காக அவர் கடினமாக உழைக்கவேண்டியிருக்கின்றது. அதிகாலை உறக்கத்தைத் தியாகம் செய்யவேண்டும், ஆசைப்படும் சில உணவுகளைத் தவிர்க்கவேண்டும், பொழுதுபோக்காக நண்பர்களுடன் நேரத்தை வீணடிப்பதை விட்டுவிடவேண்டியிருக்கும். இத்தகைய சில தியாகங்கள் செய்யும்போது அவர் தான் விரும்பிய மேலான நிலையினை அடைகின்றார்.  

ஆம் அன்பானவர்களே, நாம் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டு அவர் நம்மை அழைத்துள்ளார்; அதற்கு, நாமும் சில உலக ஆசைகளைத் தியாகம் செய்யவேண்டும். இதற்கு அடிப்படையாக,  முதலில் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள இரட்சிப்பு அனுபவத்துக்கு  அவர் நம்மை அழைக்கின்றார். முதன்முதல் அதனைப் பெற நாம் ஆர்வம் காண்பிக்கும்போது  தொடர்ந்து நமது வாழ்வு அவருக்கு ஏற்புடையதாக மாறும். அதுவே பிற்காலத்தில் நாம் அவரது மகிமையைக் காணவும் அந்த மகிமையை நாமும் அடையவும் உதவும். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1798                                                     🔆 ஆதவன் 09.01.2026 வெள்ளி     

"நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சைச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சைச் செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?" ( எரேமியா 2: 21)

நாம் நல்ல பலன் தரவேண்டும் எனும் ஆர்வத்தில் சிலவேளைகளில் வீடுகளில் உயர்குல மரக்கன்றுகளை (high breed tree plants)  வாங்கி நடுவதுண்டு. ஆனால், சிலவேளைகளில் அவை அனைத்தும் உண்மையில் அப்படி  உயர்குல மரங்களாய் இருப்பதில்லை. நாம் எதிர்பார்க்கும் பலனைத் தருவதுமில்லை. அப்போது  நாம் ஏமாற்றமடைகின்றோம். இதுபோல, பூச்செடிகளிலும் சிலவேளைகளில் நாம் மணமற்ற காட்டுப் பிச்சிச் செடிகளை வாங்கி ஏமாறுகின்றோம். 

நமது தேவனும் தான் இப்படி இஸ்ரவேலரை நம்பி ஏமாற்றமடைந்ததை "நீ எனக்குக் காட்டுத்திராட்சைச் செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?" வருத்தத்தோடு குறிப்பிட்டுக் கேட்கின்றார்.

ஆம் அன்பானவர்களே, இன்றைய புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நாமே ஆவிக்குரிய இஸ்ரவேலராக இருக்கின்றோம். நம்மை தேவன் தனக்கு ஏற்றவர்களாக வாழ அழைத்துள்ளார். நம்மேல் அவர் முழு நம்பிக்கைக் கொண்டுள்ளார். ஆனால், பெரும்பாலான வேளைகளில் நாம் அவரது எதிர்பார்ப்பின்படி வாழ்வதில்லை; கனிகொடுக்கும் வாழ்க்கை வாழ்வதில்லை. காரணம், நாம் முற்றிலும் அவரில் நிலைத்திருப்பதில்லை. 

நாம் நற்கனிகொடுக்கும் திராட்சைச் செடியாக மாறவேண்டுமானால் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட வாழ்க்கை வாழவேண்டியது அவசியம். எனவேதான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." (யோவான் 15:4) என்று கூறினார். 

கிறிஸ்துவை அறியாத சாதாரண மக்களும் பலர் நல்ல வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்களிலும் சில கனிகள் காணப்படுகின்றன. ஆனால் கிறிஸ்துவை அறிந்த நாம் இன்றைய தியான வசனம் கூறுவதுபோல உயர்குல  திராட்சைச் செடிகள். எனவே சாதாரண செடியைப்போல அல்லாமல் நாம் மிகுந்த கனிகளைக் கொடுக்கவேண்டியது அவசியம். எனவேதான், "நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." 
(யோவான் 15:5) என்றார் இயேசு கிறிஸ்து. 

மேலும், அதிகக் கனிகொடுப்பதன்மூலம் நாம் நம்மைத் தெரிந்துகொண்ட பிதாவாகிய தேவனையும் மகிமைப்படுத்துகின்றோம்; கிறிஸ்துவுக்கு மெய்யான சீடர்களாக மாறுகின்றோம். "நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்". (யோவான் 15:8)

ஆம், தேவன் நம்மை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சைச்செடியாக நாட்டியுள்ளார். எனவே நாம் அவருக்கு ஆகாத காட்டுத்திராட்சைச் செடிகளைப்போல மாறிப்போகாமல் உயர்குல திராட்சைச் செடிகளைப்போல, நற்கனி கொடுப்பவர்களாக மாறிட முயலுவோம். நம்மால் இதைச் செய்ய இயலாது என்பதால் அவர் நமக்குத் துணையாளரான பரிசுத்த ஆவியானவரைத் தந்துள்ளார். கனிதரும் வாழ்க்கை வாழ்ந்திட ஆவியானவரின் துணையை வாழ்வில் அன்றாடம் நாடுவோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1799                                                     🔆 ஆதவன் 10.01.2026 சனி      

"அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை." ( மாற்கு 16: 11)

சில காரியங்களை மனிதர்கள் நம்புவது கடினமான காரியமாகவே இருக்கின்றது. மீன் கருவாடாக மாறுவதை நாம் ஏற்றுக்கொள்ளலாம்; நம்பலாம். ஆனால் காய்ந்த கருவாடு மீனாக மாறுவதை நம்ப முடியாது. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் இப்படியே நடைபெற்றது. உலகத்தில் இறந்துபோன யாரும் உயிருடன் எழுந்தது கிடையாது. எனவே அப்படி இறந்த ஒருவர் உயிருடன் எழுந்துவிட்டார் என்பதனை அவரோடுகூட இருந்தவர்கள்கூட  நம்பாததில் அதிசயமில்லை.

"வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்." (மாற்கு 16:9) அவள் உடனேயே அவருடன் இருந்தவர்களுக்கு அதனை அறிவித்தாள். அவர்கள் நம்பவில்லை என்று வாசிக்கின்றோம். ஆனால் இயேசு கிறிஸ்து எந்தவித முன்னறிவிப்புமின்றி எழுந்துவிடவில்லை. தான் மரித்து மூன்றாம்நாள் உயிர்ந்தெழுவேன் என்று தான் உயிரோடிருக்கும்போதே சீடர்களுக்கு அறிவித்தார். மட்டுமல்ல, மிகப்பெரிய அதிசயமான செயல்களை அவர் உயிரோடிருக்கும்போதே செய்துக் காண்பித்தார். ஆனாலும் சீடர்கள் அவர் உயிர்த்ததை முதலில் நம்பவில்லை. 

ஆனால், சீடர்கள் அவிசுவாசத்தில் தொடர்ந்து இருக்கவில்லை. அவர்கள் அவர் உயிர்த்ததை பின்னர் நம்பினர். காரணம், அவர்கள் இயேசு கிறிஸ்துவின்மேல் மெய்யான அன்புகொண்டு வாழ்ந்தவர்கள். கிறிஸ்துவின் அன்பை அவர் உலகினில் வாழ்ந்தபோது ருசித்தவர்கள். அவர் இறந்தபின்னரும் அவர் நினைவாகவே இருந்தவர்கள். இன்றும் இதே காரியம்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கிறிஸ்து உயிரோடிருப்பதை வாயால் அறிவித்தாலும் பல கிறிஸ்தவர்கள் முழுமையான விசுவாசமாக ஏற்றுக்கொள்வதில்லை. 

ஆம் அன்பானவர்களே, இப்போதும் தங்கள் வாழ்வில் இயேசு கிறிஸ்துச் செயல்பட்டுக்கொண்டிருப்பதை அனுபவத்தால் கண்டுகொண்டவர்கள் கூறுவதைப் பலர் ஏற்றுக்கொள்வதில்லை.  அன்றும் இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்தபின்னர் எல்லோருக்கும் காணப்படவில்லை. அப்போஸ்தலர்களுக்குத்தான் தரிசனமானார். "அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்." (அப்போஸ்தலர் 1:3)
"ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.  (அப்போஸ்தலர் 10:41)  பேதுரு. 

ஆனால் அன்றைய யூதர்களில் பலரும் அப்போஸ்தலர்கள் கூறியதை விசுவாசித்தனர். ஆயிரக்கணக்கானப்பேர் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். காரணம், அப்போஸ்தலர்கள் மூலம் இயேசு கிறிஸ்து பல தெளிவான திருஷ்டாந்தங்களினாலே தம்மை உயிரோடிருக்கிறவராக அவர்களுக்குக்  காண்பித்தார். எனவேதான் கிறிஸ்தவம் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கின்றது. 
 
இன்றும் பலர்  இயேசு கிறிஸ்து உயிருள்ளவராக இருப்பதனை விசுவாசிப்பதில்லை. அவர் இன்றும் பேசுகின்றார், இன்றும் செயல்படுகின்றார், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களைக் குணமாக்கியதுபோல இன்றும் பலரை நோய்களிலிருந்து குணமாக்குகின்றார். ஆம் அன்பானவர்களே,  "இயேசுகிறிஸ்து  நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." (எபிரெயர் 13:8) ஆனால், அதனை நம்மில் பலரும் கண்டு உணர முடியாமல் இருப்பதற்குக் காரணம், தங்களது வாழ்வில் அவரது ஐக்கியத்ததை நாடாமலும், விரும்பாமலும் இருப்பதுதான்.  

"கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா". (1 கொரிந்தியர் 15:14) என்று பவுல் அப்போஸ்தலர் கூறுவதன்படி, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை விசுவாசிப்பது மட்டுமல்ல, அந்த உயிர்த்தெழுந்த அனுபவத்தை வாழ்வில் அனுபவிப்பதுதான் மெய்யான கிறிஸ்தவ வாழ்வு. இல்லையானால் நமது கிறிஸ்தவ வாழ்வும் விசுவாசமும் வீணாகவே இருக்கும். 

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                      📞 Contact: 96889 33712                                                                    🌐 Website: aathavanmonthly.blogspot.com 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1800                                                     🔆 ஆதவன் 11.01.2026 ஞாயிறு      

"உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆதலால் நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும், பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்". (ஏசாயா 17:10,11)

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய நாம் தேவனை நமது வாழ்வில் மறந்தவர்களாக வாழ்வோமானால் நமக்கு எந்த ஆசீவாதமும் கிடைப்பதில்லை என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

இன்றைய தியான வசனத்தை அன்றாடம் நாம் காணும் உலக நடப்போடு ஒப்பிட்டுப்பார்த்தால் தவறாகவே தெரியும். காரணம், இன்று செழிப்பான வாழ்க்கை வாழ்பவர்கள் எல்லோரும் தேவனைத்  தேடுபவர்களும், அவரது சித்தப்படி வாழ்பவர்களுமல்ல. துன்மார்க்கமாய் வாழ்பவர்கள் மற்றவர்களை வஞ்சித்து வாழ்பவர்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் இவர்கள்தான் செழிப்பாக வாழ்கின்றனர். ஆம், துன்மார்க்கன் செழிப்பான் என்றுதான் வேதம் கூறுகின்றது. மட்டுமல்ல, அவர்கள் இருதயம் விரும்புவதைவிட அதிகமாக அவர்களுக்கு நல்லது நடக்கின்றது என்று கூறுகின்றது. 

"துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள். ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும்; கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.  அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. (சங்கீதம் 73:3-7) என்று வாசிக்கின்றோம். 

எனவே, இன்றைய தியான வசனம் எல்லோருக்குமான பொது வசனமல்ல. மாறாக, தேவன் தெரிந்துகொண்ட ஆவிக்குரிய மக்களுக்கானது. தேவன் நம்மை உலகத்தைவிட்டுப் பிரித்தெடுத்து வேறு வழியில் நடத்த விரும்புகின்றார். எனவே, நாம் அவரது சித்தத்துக்கு எதிராக நடக்கும்போது நமக்கு அவர் வேதனைகளைத் தருகின்றார். அப்படி ஆவிக்குரிய மக்களாகிய நாம் உலக மக்களைப்பார்த்து அவர்களைப்போல நடப்போமானால் நமக்கு வேதனையும், துன்பமுமே தொடரும்.  

இதனையே, "உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும், பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்" என்று இன்றைய வசனம் கூறுகின்றது. 

ஆம் அன்பானவர்களே, ஒருவேளை நமது மனமானது துன்மார்க்க மக்களைப் பார்க்கும்போது அவர்களது செழிப்பான வாழ்க்கையினைக் கண்டு தடுமாற்றமடையலாம். "நான் மட்டும் நல்லவனாக வாழ்ந்து என்ன பயன்?" என எண்ணி தேவனது  வழியை விட்டு விலகலாம். ஆனால் அன்பானவர்களே, தேவனது வழியில் நடக்கும் நமக்கு மகிமையான எதிர்காலம் உண்டு  என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.  

இதனை உணர்ந்ததால்தான் துன்மார்க்கன் செழிப்பான என்று கூறும்  சங்கீத ஆசிரியர் இறுதியில், "உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை." (சங்கீதம் 73:24,25) என்று கூறுகின்றார். 

உலக செழிப்பின் பாதையில் நடந்து உலகினில் இன்பத்தையே அனுபவித்து இறுதியில் நரக படுகுழிக்குள் செல்வதைவிட, தேவனது ஆலோசனையின்படி நடந்து மகிமையில் அவரால் ஏற்றுக்கொள்ளப்படுவதே மேலானது. எனவே, துன்மார்க்கர்களது செழிப்பை நினைத்து மனம் தளர்ச்சியடையாமல், நமது பெலமாகிய கன்மலையையே நினைத்து நமது இரட்சிப்பாகிய தேவனை மறவாமலிருப்போம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1801                                                     🔆 ஆதவன் 12.01.2026 திங்கள்       

"தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்." ( யோவான் 7: 24)

இந்த உலகத்து நீதிபதிகளின் தீர்ப்புக்கும் தேவனுடைய தீர்ப்பிடுதலுக்கும் மிகுந்த வித்தியாசம்  உள்ளது. உலக நீதிமன்றங்கள் மனிதர்களின் சாட்சிகளின் அடிப்படையில் நீதிவழங்குகின்றன. மட்டுமல்ல, பொய் சாட்சிகள், மற்றும் பலவேளைகளில் பணத்தின் ஆதிக்கம் இவற்றின் அடிப்படையில் உலக நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அநியாய தீர்ப்புக்களாக பலவேளைகளில் மாறிவிடுகின்றன. 

ஆனால் தேவனை யாரும் பணத்தாலும் பொய் சாட்சியாலும் ஏமாற்ற முடியாது. "மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்க வேண்டியதாயிருக்கவில்லை." (யோவான் 2:25) என்று நாம்  வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, நமது உள்ளத்திலிருப்பதை அவர் அறிவார். நமது வாயில் சொல் பிறக்குமுன்பே அதனை அவர் அறிவார். 

இந்த உலகத்தில் அன்றாட வாழ்வில் நாம் மற்றவர்களைக்குறித்து எளிதில் தீர்ப்பிட்டுவிடுகின்றோம். உண்மையான நிலைமை நமக்குத் தெரியாது. நமது நண்பர்கள், உறவினர்கள் இவர்களைக்குறித்து நாம் பலவேளைகளில் எண்ணிக்கொள்வது தவறான கணிப்பாகவே இருக்கும். எனவேதான் இயேசு கிறிஸ்து, "தோற்றத்தின்படி தீர்ப்புச்செய்யாமல், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள்." என்று கூறுகின்றார். யூதர்கள் அன்று இயேசுவைக் குறித்தும்  இப்படித்தான் தவறாகத்  தீர்ப்பிட்டனர். 

தேவன் தீர்ப்பிடுவது கண் கண்டபடி அல்ல, மாறாக நீதியின் அடிப்படையில்தான். சில காரியங்கள் மனிதர்களது கண்பார்வைக்குத் தவறுபோலத் தெரிந்தாலும் தேவனது பார்வையில் நீகியுள்ளதாக இருக்கும். எனவே, நாம் மற்றவர்களைத் தவறாகத் தீர்ப்பிடும்போது தேவனுக்கு எதிரான பாவத்தைச் செய்தவர்களாக மாறிவிடுகின்றோம். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்." ( மத்தேயு 7: 1) என்று.

மேலும், உலக பார்வையில் நீதிமான்களாக உலாவரும் பலர் தேவனுக்குமுன் துன்மார்க்கர்களாகவும், உலகம் பாவிகள் என்று கருதும் பலர் தேவனது பார்வையில் இரக்கம் பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். காரணம், தேவன் ஒருவரே மனிதர்களின் மனதின் ஆழத்தை அறிந்தவர். அவர் ஒரு செயலை மட்டும் கருத்தில்கொண்டு மனிதர்களுக்குத் தீர்ப்பு வழங்குவதில்லை. அந்தச் செயல் செய்யப்பட்டதன் நோக்கத்தையும் பார்க்கின்றார். அதாவது, அவர் எதார்த்தத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகின்றார். ( ஏசாயா 11: 4)

"நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்." ( யோவான் 8: 16) என்றார் இயேசு. இயேசு கிறிஸ்து பிதாவோடு ஐக்கியமாக இருந்ததால் நீதியான தீர்ப்பு வழங்குகின்றார். அதுபோல, நமக்குள் தேவனது ஆவியானவர் குடியிருக்கும்போது மட்டுமே நம்மால் மற்றவர்களைச்  சரியாக எடைபோடமுடியும். எனவே, எந்தச் சூழ்நிலையிலும் மற்றவர்களை; அவர்களது செயல்களை நாம் தீர்ப்பிடாமல் வாழ்வோம்.

அப்போஸ்தலரான பவுல் எனவேதான் நமக்கு அறிவுறுத்துகின்றார், "ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள்  காலத்துக்குமுன்னே  யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்." (1 கொரிந்தியர் 4:5) எனவே, மற்றவர்களை தீர்ப்பிடாமல் வாழ்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1802                                                     🔆 ஆதவன் 13.01.2026 செவ்வாய்      

"அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்." ( லுூக்கா 4: 32)

தன்னிடம் அதிகாரம் உள்ளவர்தான் அதிகாரத்தோடு பேசமுடியும். ஒரு ராஜாவுக்குள்ள அதிகாரம் சாதாரண குடிமக்களுக்கு இல்லை. எனவே, சாதாரண குடிமகன் கூறும் வார்த்தைகளுக்கு எந்த அதிகாரியும் கீழ்ப்படிவதில்லை. மட்டுமல்ல, தன்னிடம் எந்த அதிகாரமும் இல்லாதவன் மற்றவர்களுக்குக் கட்டளையிடுவது கேலிக்குரியதாக மாறிவிடும். 

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக பூமியில் வந்திருந்தாலும் அவர் மெய்யான தேவ குமாரனாக இருக்கின்றார். எனவே அவரது போதனை அதிகாரமுள்ளதாக இருந்தது. இதனை அவரது போதனைகளைப் பார்க்கும்போது நாமே உணர்ந்துகொள்ளலாம். பழைய ஏற்பாட்டுக் கட்டளைகள் பொதுவாக, "செய்யாதிருப்பாயாக" என்று ஆலோசனை போலக்  கூறும். ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, திட்டவட்டமாக, "பூர்வத்தாருக்கு இப்படிக் கூறப்பட்டுள்ளது ஆனால்  "நான்" உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று உறுதியாக கூறுவதை நாம் பார்க்கலாம். 

மேலும் சில உதாரணங்களாக பின்வரும் இந்த வசனங்கள் அவர் அதிகாரமுள்ளவர் என்பதனை உறுதிப்படுத்தும்.  "தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்" (மத்தேயு 5:22) "உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து" (மத்தேயு 5:24) என்று உறுதியாகக் கட்டளையாகக் கூறுவதை நாம் பார்க்கலாம். 

அசுத்த ஆவிகளையும் அவர் இப்படியே அதிகாரத்தோடு துரத்தினார். அவர் இப்படிப் பேசியதால், "எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்." ( லுூக்கா 4: 36) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளில் அதிகாரம் உள்ளது. அவர் கூறுவது கூறுவதன்படியே ஆகும். இதனை அவரிடம் தனது வேலைக்காரனுக்காக சுகம் வேண்டி வந்த நூற்றுக்கு அதிபதி ஒருவன் நன்றாக அறிந்திருந்தான். எனவேதான் அவன் கூறினான், "ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்." ( மத்தேயு 8: 8) என்று.

இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளில் அதிகாரம் இருக்கக் காரணம் அவர் பேசிய வார்த்தைகள் பிதாவாகிய தேவனின் வார்த்தைகள். அவர் பேசச்சொன்னதையே அவர் பேசினார். எனவே அவரது வார்த்தைகளில் அதிகாரம் இருந்தது. ஆம்,  "நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்" (யோவான் 12:49, 50) என்றும் அவர் கூறவில்லையா? 

எனவே அன்பானவர்களே, அதிகாரமுள்ள இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்போம். அவரது வார்த்தைகளுக்காகக் காத்திருப்போம். அந்த ஜீவனுள்ள வார்த்தைகளே நம்மை வாழவைக்கும். நூற்றுக்கு அதிபதி வேண்டியதுபோல, "ஆண்டவரே, ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்" என்று வேண்டுதல் செய்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1803                                                     🔆 ஆதவன் 14.01.2026 புதன்       

"கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்." ( யாக்கோபு 4: 10)

கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுதல் என்பதைப் பலரும் அவரது ஆலயத்தில் தாழ்மையுடன் நடந்துகொள்வதை மட்டுமே குறிப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். ஆலயங்களைக்  கடந்து செல்லும்போது வணங்குவது, ஆலயங்களில் முகங்குப்புற விழுந்து வணங்குவது, ஆலய வளாகத்தினுள் தாழ்மையுடன் பேசுவது இவைகளையே கர்த்தருக்குமுன்பாகத் தாழ்மைப்படுத்தல் என்று எண்ணிக்கொள்கின்றனர். 

சாதாரண விசுவாசிகள் மட்டுமல்ல, பல கிறிஸ்தவ ஊழியர்களும் குருக்களும் இப்படியே இருக்கின்றனர். ஆலயத்தில் தாழ்மையைக்குறித்து அழகாகப்  பிரசங்கம் செய்வார்கள், தாழ்மையுள்ளவர்கள்போல நடிப்பார்கள். ஆனால், தனிப்பட்டமுறையில் அவர்களை நாம் அணுகும்போது  அரசாங்க அதிகாரிகள்போல நடந்துகொள்வார்கள். குருக்கள், ஆயர்கள் எனும் பொறுப்புக்கள் மந்திரிப்பதவி போன்றதல்ல, அது தேவனுக்குப் பணிசெய்ய தேவன் தந்துள்ள வாய்ப்பு என்பதனை இவர்கள் மறந்துபோயினர்.

இதற்குக் காரணம் பலரும் கர்த்தர் தங்களை உயர்த்துவதற்குப் பொறுமையாகக் காத்திருப்பதில்லை. தங்களைத் தாங்களே உயர்த்திக்கொள்ள விரும்பிச் செயல்படுகின்றனர். எனவேதான் அவர்கள் தாழ்மை எனும் குணத்தை இழந்தவர்களாக இருக்கின்றனர்.  

கர்த்தர் ஆலயத்தில் மட்டும் இருக்கவில்லை; அவர் எங்கும் நிறைந்துள்ளார். எனவே, எல்லா இடத்திலும், எல்லோரிடமும்  மனத்தாழ்மையுடன் நடந்துகொள்வதுதான் கர்த்தருக்குமுன் தாழ்மைப்படுத்தல் என்பதன் பொருள். ஆம் அன்பானவர்களே, பெருமையுள்ளவர்களுக்குத்  தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களிடம்தான் கிருபையாக இருக்கின்றார்.  

"அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்." (1 பேதுரு 5:5) என்று அப்போஸ்தலரான பேதுரு கூறவில்லையா? ஓடுகின்ற நீர் தாழ்ந்த இடங்களைத்தேடித்தான் பாய்ந்துசெல்லும். அதுபோல உள்ளத்தில் தாழ்ந்த குணமுள்ளவர்களிடம்தான் தேவ கிருபை பாய்ந்து வரும். 

இன்றைய தியான வசனம் கூறும் சத்தியத்தை அன்னை மரியாள் நன்கு உணர்ந்திருந்தால் "தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதய சிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்." ( லுூக்கா 1: 51, 52) என்று கூறுகின்றார்.

ஆதியில் அழகிய தேவதூதனாக விளங்கிய லூசிபர் அவனது அகந்தையினால் சாத்தானாக மாறினான். "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்." (ஏசாயா 14:12-15) 

ஆம் அன்பானவர்களே, நாம் தாழ்மையாக இருக்கும்போதுதான் தேவன் நம்மை உயத்தமுடியும். "நான்" எனும் அகந்தைகொண்டு வாழ்வோமானால் அதுவே சாத்தான் விழுந்ததுபோல நமது அழிவுக்கான வித்தாக அமையும்.  "அழிவுக்கு  முன்னானது  அகந்தை;  விழுதலுக்கு  முன்னானது  மனமேட்டிமை". (நீதிமொழிகள் 16;18) எனவே, மனத்தாழ்மையைத் தரித்துக்கொண்டு தேவனது ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1804                                                     🔆 ஆதவன் 15.01.2026 வியாழன்       

"மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்." ( எபேசியர் 4: 24)

நம்முடைய தேவன் பரிசுத்தர். அந்தப் பரிசுத்தர் தன்னைப்போலவே தான் படைத்த மனிதர்களும் மாறவேண்டுமென்று விரும்புகின்றார். இந்த உலகத்தில்கூட நல்ல பதவியில் இருக்கும் தாய்தகப்பன்மார் தங்கள் பிள்ளைகள் தங்களைப்போல உயர்பதவி அடையவேண்டுமென்று விரும்புவதில்லையா? அதுபோலவே தேவனும் விரும்புகின்றார். 

இன்றைய தியான வசனத்தில், "தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்." என்று கூறப்பட்டுள்ளது. காரணம், நாம் தேவ சாயலாக உருவாக்கப்பட்டவர்கள். ஆனால் உலக வாழ்க்கையில் பாவத்தில் விழுந்து நாம் தேவ சாயலை இழந்துவிட்டோம். ஆம், நமக்குள்ளிருக்கும் நமது பழைய மனிதன் தேவ சாயலை இழந்தவனாக இருக்கின்றான்.  

"தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்." ( ஆதியாகமம் 1: 27)  என்று வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, மனிதர்களை தேவன் தனது உருவத்திலும் தனது குணத்திலும் உண்டாக்கினார். ஆம், "தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக" ( ஆதியாகமம் 1: 26) என்று தனக்குள் கூறி மனிதனை உண்டாக்கினார்.

ஆனால், மனிதனுக்குள் இருக்கும் இச்சை எனும் பாவம்தான் மனிதர்களை பாவத்துக்கு நேராக இழுத்து தேவ சாயலை இழக்கச் செய்கின்றது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி......" ( எபேசியர் 4: 22, 23) என்று கூறுகின்றார். அதாவது, இச்சை எனும் பாவத்தால் கெட்டுப்போன பழைய மனிதனை விட்டுவிட்டு உள்ளத்தில் புதிய ஆவியுள்ள புதிய மனிதனாக நாம் மாறிடவேண்டும். 

மேலும், "மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும்" என்று இன்றைய தியான வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் பொய்யான நீதியும் உலகினில் இருக்கின்றது என்று பொருள். அது மனிதர்கள் கூறும் நீதி. மனிதர்களது நீதிகள்  அழுக்கான கந்தை போன்றவை. "நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது." (ஏசாயா 64:6) என்று நாம் வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, நாம் தேவ நீதியின்படி நடக்கவே அழைக்கப்பட்டுள்ளோம். உலக நீதிநூல்கள் கூறும் நீதிகள் நல்லவைதான். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது உண்டாகும் தேவ நீதியே நம்மை தேவனுக்குமுன் மேன்மையடையச்செய்யும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு புதுபிறப்பாக நாம் மாறும்போது மட்டுமே நாம் தேவ நீதியைக் கன்டுகொள்ளமுடியும்.  

அழுக்கான கந்தைபோல இருக்கும் பொய்யான மனித நீதியைவிட்டு மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ள இன்றைய தியான வசனம் அழைக்கின்றது. மெய்யான நீதியின்படி வாழ்ந்திட, முதல்படியாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். அவரது தேவ ஆவியானவர் நம்மில் வரும்போது அந்த பரிசுத்த ஆவியானவரே நம்மை மெய்யான தேவ நீதியில் நடத்திடமுடியும். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1805                                                     🔆 ஆதவன் 16.01.2026 வெள்ளி        

"என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே." ( சங்கீதம் 84: 3)

சாதாரண மனிதர்கள் ஒரு காரியத்தைப் பார்க்கும் பார்வைக்கும் கவிஞர்களும் கலைஞர்களும் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் உண்டு. கவிஞர்கள் கலைநயத்தோடு ஒரு காரியத்தை மேலான சம்பவங்களுடன் ஒப்பிட்டு உவமையாகக் கவிபாடுவார்கள். அத்தகைய கலைநயத்தோடு சங்கீத ஆசிரியர் கூறும் வார்த்தைகள்தான் இன்றைய தியான வசனம். 

நாம் பொதுவாக ஆலயங்களில் சிட்டுக்குருவிகள், அடைக்கலான் குருவிகள் மற்றும் புறாக்கள் கூடுகட்டி வாழ்வதைப் பார்க்கலாம். அவை அப்படி ஆலயங்களைத் தேர்ந்தெடுக்கக் காரணம் ஆலயமாடங்களில் மனிதர்கள் அதிகமாகச் செல்வது கிடையாது. எனவே அவைகளுக்கு அங்கு கூடுகட்டி குஞ்சுகளை வளர்ப்பது மிகுந்த பாதுகாப்பு. இன்றும்கூட நாம் பல ஆலயங்களில் குருவிகள், புறாக்கள் வாழ்வதைக் காணலாம். 

இப்படி ஆலயத்தில் தங்கியிருக்கும் இந்தக் குருவிகளைப் பார்த்த சங்கீத ஆசிரியர், "என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சங்கீதம் 84: 3, 4) என்று பாடுகின்றார். 

அதாவது, இயற்கையான இந்த நிகழ்வை மனிதர்களது ஆவிக்குரிய வாழ்க்கையோடு ஒப்பிட்டு, மனிதர்கள் தேவனைச் சார்ந்து வாழவேண்டும், தேவனை எப்போதும் துதிக்கவேண்டும் என்று கூறுகின்றார். குருவிகள் எப்போதும் "கீச் கீச்" என்று குரலெழுப்பிக்கொண்டே இருக்கும். அதனைத் தேவனைத் துதிப்பதற்கு அவர் ஒப்பிட்டு, "அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள்" என்று கூறுகின்றார். 

அடைக்கலான் குருவி, தகைவிலான் குருவி போன்றவை தேவ சமூகத்தில் இருப்பதால் அவைகளுக்குப் பாதுகாப்பு இருக்கின்றது. மட்டுமல்ல, அவை எப்போதும் தேவனைத் துதித்துக்கொண்டே இருக்கின்றன அதுபோல நாம் வாழ்வோமானால் நமக்கும் வாழ்வில் பாதுகாப்பு உண்டு என்பதுதான் சங்கீத ஆசிரியர் கூறவரும் கருத்து. 

இப்படிக் கூறுவதால் நாமும் எப்போதும் ஆலயங்களில் சென்று தங்கியிருக்கவேண்டும் என்று பொருளல்ல; மாறாக, இன்று நாமே ஆலயமாக இருக்கின்றோம். நமது உள்ளமாகிய ஆலயத்தில் நாம் தேவனை நிறுத்தி அவரையே எப்போதும் சார்ந்துகொள்ளவேண்டும். மட்டுமல்ல, நன்மையான காரியங்களோ தீமையான காரியங்களோ, எது நடந்தாலும் தேவனைத் துதிக்கும் துதி எப்போதும் நமது நாவில் இருக்கவேண்டும்.  தொழுமரத்தில் கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையிலும்,  "நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்". (அப்போஸ்தலர் 16:25) என்று நாம் வாசிக்கின்றோம். தேவன் அவர்களை அற்புதமாக விடுவித்தார்.  

ஆம் அன்பானவர்களே, குருவிகள் மூலம் நமக்கு வேதம் காட்டும் இந்த ஆவிக்குரிய அனுபவத்தை நமது வாழ்வாக்குவோம். நமது உள்ளமாகிய ஆலயத்தில் தேவனை உயர்த்திவைத்து எப்போதும் அவருக்குத் துதிசெலுத்தி வாழ்வோம். சங்கீத ஆசிரியரைப்போல இயற்கையில் காணும் சம்பவங்களை ஆவிக்குரிய வாழ்க்கையோடு சங்கீத ஆசிரியரைப்போல நாமும் ஒப்பிட்டுப்பார்த்துத் தேவனை மகிமைப்படுத்துவோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1806                                                     🔆 ஆதவன் 17.01.2026 சனி         

"இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." ( யோவான் 16: 32)

தனித்துவிடப்படுதல் என்பது மிகக்கொடுமையான ஒரு வாழ்க்கை அனுபவம். அதுவும் நாம் முழுவதும் நம்பியிருக்கும் நமது உறவினர்கள், நண்பர்கள், எப்போதும் நம்மோடு இருப்பார்கள் என நாம் நம்பியிருந்தவர்கள் நமக்குத் துன்பமான சூழ்நிலை ஏற்படும்போது நம்மைவிட்டுப் பிரிந்துசெல்வதை நம்மால் பொறுத்துக்கொள்ளமுடியாது.   சில குடும்பங்களில் துன்பவேளைகளில் கணவன் மனைவிகளுக்குள்ளே பிரிவினை வருவதுண்டு. பல குடும்பங்களில் வயதான பெற்றோர் இப்படித் தனித்து விடப்படுகின்றனர். 

யோபுவோடு சேர்ந்து அனைத்துச் செல்வங்களையும் அனுபவித்த யோபுவின் மனைவி யோபுவின் வாழ்வில் துன்பம் வந்தபோது, "அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்". (யோபு 2:9) அதாவது,  "இன்னும் நீ ஏன் வாழவேண்டும்? செத்துத் தொலை" என்று கூறுவதுபோலக் கூறுகின்றாள்.  

ஆம் அன்பானவர்களே, நம்மோடு மகிழ்ச்சியான காலங்களில் உடனிருப்பவர்களெல்லாம் துன்பகாலத்திலும் நம்மோடு இருப்பார்கள் என்று கூறமுடியாது. இதுபோலவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்விலும் நடந்தது. அவரோடு உண்டு உறங்கிய அவரது சீடர்கள் துன்பவேளையில் அவரைவிட்டு ஆளுக்கொருபக்கமாக ஓடிவிட்டார்கள். இதனை இயேசு கிறிஸ்து முன்னமேயே அறிந்திருந்தார். எனவே, "நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்" என்று தீர்க்கத்தரிசனமாகக் கூறுகின்றார், 

ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எப்போதும் பிதாவோடுள்ள உறவை விட்டுவிடாதிருந்தார். பிதாவாகிய தேவன் அவரோடுகூடவே இருந்தார். எனவேதான் அவர் கூறுகின்றார், "ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்." இந்தப் பிதாவின் உடனிருப்புதான் அவருக்குப் பாடுகளைத் தங்கிச்செல்ல பெலன்கொடுத்தது. 

இன்று நமது வாழ்க்கைக்கு இது ஒரு பாடமாகும். இன்று நாம் ஒருவேளை நல்ல நிலையில் இருக்கலாம். எனவே நம்மைச் சுற்றிலும் நண்பர்களும், உறவினர்களும் இருக்கலாம். ஆனால், அதுவே நிரந்தரமல்ல. தனித்துவிடப்படும் சூழல் எல்லோருக்கும் ஏதாவதொருகாலத்தில் ஏற்படும். ஒன்றாக ஒற்றுமையாக வாழும் கணவன் மனைவிகள் அவர்களில் ஒருவர் மரணமடையும்போது தனித்துவிடப்படுகின்றனர். 

ஆம் அன்பானவர்களே, தேவன் மட்டுமே நம்மைத்  தனித்து விட்டுவிடாமல் கூடவே இருப்பவர். இன்பமோ, துன்பமோ அவர் நம்மோடு கூடவே இருக்கின்றார். ஆண்டவராகிய இயேசு பிதாவின் ஐக்கியத்தில் இருந்ததால் தனித்துவிடப்படவில்லை. நாமும் அதுபோல தேவ உறவை வலுப்படுத்தி அவரைச்  சார்ந்துகொள்வோம். அப்போது உலக மனிதர்களால் தனித்துவிடப்படும் சூழ்நிலையிலும் நாம், "நான் தனித்திரேன், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்னுடனேகூட இருக்கிறார்" என்று கூறி தைரியமாக வாழமுடியும். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1807                                                     🔆 ஆதவன் 18.01.2026 ஞாயிறு          

"அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்". ( ரோமர் 5: 3, 4)

நான் PUC படிக்கும்போது ஒரு ஆங்கிலத் துணைப்பாடநூல் பாடமாக இருந்தது. அதில் ஒரு சிறுகதை, ஒரு மனிதன் துன்பங்களைச் சிரமத்துடன் கடந்துசெல்வதும் பல ஆண்டுகளுக்குப்பின் அந்தத் துன்பங்களை எண்ணிப்பார்த்து அவன், "இதற்கா நாம் அன்று இவ்வளவு வேதனை அடைந்தோம்?" என எண்ணி  மகிழ்ச்சியடைவதும் குறிக்கப்பட்டிருந்தது.  ஆம், இப்போது துன்பமாகக் காணப்படும் பல காரியங்கள் பிற்பாடு எண்ணிப்பார்க்கும்போது, நமக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக்கொடுக்கும். 

படிக்கின்ற மாணவர்களுக்குத் தேர்வு பெரிய உபத்திரவம்போலவே இருக்கும். ஆனால் மேல்நிலைக்குச் செல்ல அந்தத் தேர்வை அவர்கள் கடந்துசெல்லவேண்டியது அவசியமாகும். இது போலவே நமது அன்றாட வாழ்க்கையில் வரும் உபத்திரவங்கள் நமக்குத் தேவன் நடத்துகின்ற தேர்வு போன்றதாகும். இந்த உபத்திரவங்கள் வழியாகத் தேவன் நம்மைச் சோதித்துத் தகுதிப்படுத்துகின்றார். இதனை அறிந்திருந்த யோபு, "ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக  விளங்குவேன்." (யோபு 23:10) என்று கூறுவதை நாம் வாசிக்கின்றோம். 

தேவன் மனிதர்களை உபத்திரவங்களின் மத்தியிலிருந்துதான் தேர்வு செய்கின்றார். "இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்." (ஏசாயா 48:10) எப்படி நாம் உபத்திரவங்களை மேற்கொள்ளுகின்றோம் என்பதனை அவர் பார்த்துக்கொண்டிருக்கின்றார். 

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல், "உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்" என்கின்றார். அதாவது உபத்திரவம் நமக்குப் பொறுமையாக இருக்கவும் தேவன்மேல் நம்பிக்கையாக இருக்கவும் வழி செய்கின்றது. இப்படி தேவன்மேல் நம்பிக்கைகொள்ள உபத்திரவம் காரணமாக இருப்பதால் உபத்திரவங்களில் மேன்மைபாராட்டுகின்றோம் என்கிறார் பவுல். 

உபத்திரவங்களின்போது நாம் பொறுமையை எப்படிக் காத்துக்கொள்கின்றோம் என்பதில் நமது உண்மையினை தேவன் கண்டறிகின்றார். எனவேதான் அப்போஸ்தலரான யாக்கோபு,  "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்." (யாக்கோபு 1:12) என்கின்றார். 

ஆம் அன்பானவர்களே, உலகத்தில் நமக்கு உபத்திரவம் உண்டு. ஆனால் அதனை நாம் எத்தகைய பொறுமையோடு காத்துக்கொள்கின்றோம் என்பதனையே தேவன் எடைபோட்டு நம்மை மேன்மைப்படுத்துகின்றார். தேவன் இரக்கமும் உருக்கமும் உள்ளவராக இருக்கின்றார். அவர் நம்மை எபோதும் உபத்திரவத்திலேயே வைத்துக் கொடுமைப்படுத்தமாட்டார். "இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்;  கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்;  கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமும் உள்ளவராக இருக்கிறாரே" (யாக்கோபு 5:11)

எனவே, நமது வாழ்வில் உபத்திரவங்கள் ஏற்படும்போது அவை தேவன் நமக்கு வைத்திருக்கும் தேர்வு என எண்ணி விசுவாசத்தோடு அந்த உபத்திரவங்களைக்  கடந்துசெல்வோம். அதற்கான பெலனைத் தேவன் நமக்குக் கொடுக்கும்படி அனுதினமும் ஜெபிப்போம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1808                                                     🔆 ஆதவன் 19.01.2026 திங்கள் 

"நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்." ( ரோமர் 6: 13)

நாம் தேவனை அறியாதிருந்த காலங்களில் பல்வேறு பாவங்களுக்கு அடிமைகளாக இருந்தோம். நமது உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பினாலும் நாம் பாவம் செய்தோம். அதாவது நாம் அப்போது நமது உடலின் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடுத்து வாழ்ந்துவந்தோம்.  

ஆனால் நமது பாவங்களை நாம் அப்போது உணரவில்லை. நாம் செய்த பல செயல்கள் பாவம் என்று நமக்குத் தெரியவுமில்லை. காரணம், நாம் பாவத்துக்கு முற்றிலும் அடிமைகளாக இருந்தோம். மதுவுக்கு அடிமையான மனிதன் சுய உணர்வின்றி மதுபோதையில் உளறிக்கொண்டிருப்பான். ஆனால், நம்மிடம் அவன், "நான் நல்ல ஸ்டெடியாக இருக்கிறேன்" என்றுதான் கூறுவான். அதுபோலவே நாமும் பாவம் நம்மை பலவீனப்படுத்தியுள்ளதை அறியாமல் வாழ்ந்துவந்தோம். 

"பாவமா? நான் என்ன பெரிய பாவம் செய்தேன்? நான் கொலைசெய்யவில்லை, திருடவில்லை, யாரையும் கற்பழிக்கவில்லை.." என்று நம்மை நாமே நியாயப்படுத்திக்கொண்டு வாழ்ந்தோம். பாவம் என்பது கொடூரமான செயல்களைச் செய்வது மட்டும்தான் என்று நாம் எண்ணிக்கொண்டு வாழ்ந்ததால் இப்படிக் கூறிக்கொண்டிருந்தோம். இன்றும் பலர் இதுபோலவே தங்களை நியாயப்படுத்திக்கொண்டு பாவ உணர்வின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆம் அன்பானவர்களே, நாம் தேவ சாயலாய் உருவாக்கப்பட்டவர்கள். அந்தத் தேவ சாயலை இழக்கக்கூடிய செயல்பாடுகள் அனைத்தும் பாவமே. பொய், பொறாமை, வஞ்சகம், அடுத்தவர் வளர்ச்சிகண்டு மனஎரிச்சல், அவதூறு, வேண்டாத பகையுணர்வு, இடத்துக்கேற்றபடி பேசுவது, உள்ளொன்றுவைத்து புறமொன்று பேசுவது ...போன்ற செயல்களும் பாவமே. 

நம்மை இந்தப் பாவ அடிமைத்தனத்திலிருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தனது இரத்தத்தைச் சிந்தி மீட்டார். அதாவது, நாம் பாவத்தால் ஆத்தும மரணம் அடைந்து நரகப்படுகுழிக்குள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக கிருபையினால் நம்மை மீட்டார். இதனையே, "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்." ( ரோமர் 6: 23) என்று வாசிக்கின்றோம். 

பாவத்தில் வாழும் மனிதன் இந்த உலக வாழ்க்கைக்குப்பின் வரவிருக்கும் நித்திய ஜீவனை  சுதந்தரிக்கமுடி யாது. எனவே, நம்மேல் உள்ள அன்பினால் கிறிஸ்து நம்மை பாவத்திலிருந்து மீட்டார். கிறிஸ்துவால் மீட்கப்பட்ட  நாம் இப்போது கிறிஸ்துவுக்கு உரியவர்கள். எனவே, நாம் மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகவும்  நமது  அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தவர்களாகவும் வாழவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் பவுல் அப்போஸ்தலர். 

நாம்  பெரிய கடன்பட்டிருக்கும்போது, அந்தக் கடனிலிருந்து விடுபட வழியின்றி சொந்த வீடு, மனைகளையே விற்பனை செய்யக்கூடிய நிலை ஏற்படும்போது ஒருவர் நமது அனைத்துக் கடன்களையும் எந்த எதிர்பார்ப்புமின்றி செலுத்தித் தீர்ப்பாரென்றால் நாம் அவருக்கு எத்தகைய நன்றியுள்ளவர்களாக இருப்போமென்று எண்ணிப்பாருங்கள்! இப்படியே நமது பாவங்களை மன்னித்த  அவருக்கு நன்றியுள்ளவர்களாக நாம் வாழவேண்டும்! 

எனவே அன்பானவர்களே, நம்மிடம் எத்தனை பெரிய பாவம் இருந்தாலும் அதனைத் தேவனுக்குத் தெரியப்படுத்தி தயக்கமின்றி அவரிடம் திரும்பிவருவோம். "சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்." ( எரேமியா 3: 22) என்கிறார் ஏசாயா தீர்க்கத்தரிசி. அவர் கூறுவதுபோல "இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர்." என்று கூறி  அவரிடம் திரும்பி, நமது அவயவங்களை  நமக்காக மரித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து வாழ்வோம். நமது அவயவங்கள் நீதிக்குரிய ஆயுதங்களாக மாறட்டும்.

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1809                                                     🔆 ஆதவன் 20.01.2026 செவ்வாய்  

"ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்." ( எரேமியா 2: 32)

வாழ்க்கையில் நமக்கும்  நமது குடும்பத்திலும்  சம்பவிக்கும் முக்கியமான நிகழ்வுகள் பல உண்டு. அப்படிப்பட்ட வேளைகளில் நாம் அந்த நாளுக்காக பல நாட்களுக்குமுன்பிருந்தே ஆயத்தங்களைச்  செய்ய ஆரம்பித்துவிடுவோம். அந்த நாளையும் அந்த நாளுக்கான செயல்பாடுகளையும் நாம் மறப்பதில்லை. காரணம் நாம் அந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்று பொருள். 

நமது குடும்பத்தில் ஒரு திருமணம் ஏற்பாடு செய்துள்ளோம் என்று வைத்துக்கொள்வோம். திருமண ஏற்பாடுகளை ஒரு சில மாதங்களுக்குமுன்னேயே நாம் ஆரம்பித்துவிடுவோம். மட்டுமல்ல, பல்வேறு தங்க நகைகளையும், புதிய ஆடைகளையும் வாங்கி தயாராக இருப்போம். அப்படி எதிர்பார்த்திருந்த  திருமண நாள் வரும்போது மணப்பெண் தனது நகைகளை அணிய மறப்பாளா? திருமணத்துக்காக பல ஆயிரம் பணம்கொடுத்து வாங்கிவைத்துள்ள ஆடைகளை அணிய மறப்பாளா? மறக்கமாட்டாள் அல்லவா? காரணம் அந்த நாள் அவளது வாழ்க்கையில் முக்கியமான நாள். 

தேவன்மேல் இதேவித ஆர்வமும் ஆசையும் நமக்கு இருக்குமானால் நாம் அவரை மறக்கமாட்டோம். தேவன் நாம் அவரை அன்புசெய்து அவரையே எண்ணி வாழவேண்டுமென்று விரும்புகின்றார். இந்த உலகத்தில் காதலிக்கும் இருவரில் முதலில் யாராவது ஒருவர்தான் தனது காதலை மற்றவருக்கு வெளிப்படுத்துவார்கள்  (Propose). அதன்பின்னர் மற்றவரும் அவரைக் காதலிப்பார். இதுபோல, தேவன்தான் நம்மை முதலில் அன்பு செய்துள்ளார்; அதன்பின்னரே நாம் அவரை அன்புச் செய்கின்றோம். "அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." (1 யோவான்  4 : 19) என்கின்றார் இயேசுவின் அன்புச் சீடனான யோவான். 

இன்றைய தியான வசனம் தேவன் வேதனையுடன் கூறும் வார்த்தைகளாகும்.  நான் எவ்வளவு அன்புடன் இந்த மக்களை நேசித்துக்கொண்டிருக்கின்றேன், ஆனால் அவர்கள் பலநாட்களாக என்னை மறந்துவிட்டார்கள் என்கின்றார்.  நாம் அவரை உண்மையாக நேசிப்போமென்றால் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம். இந்த உலகத்திலும்கூட நாம் ஒருவரிடம் அன்புள்ளவர்களாக இருப்போமென்றால் அவர் சொல்வதைக் கேட்போமல்லவா? ஆம்,  "நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல." (1 யோவான்  5 : 3)

இதற்கு, குறிப்பிட்ட நேரத்தில்மட்டும் தேவனது தேவையை உணர்ந்து அவரிடம் ஜெபிக்காமல் முதலில் தேவனிடம் நாம் ஐக்கியமுள்ளவர்களாக வாழவேண்டியது அவசியம். அதற்கு நாம் அவரை வாழ்வில் மறக்காமல் இருக்கவேண்டியது அவசியம். அப்படி மறக்காமல் வாழ்வோமானால் அவரது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவோம்.

இன்றைய தியான வசனத்தில் தேவன் தனது ஜனங்கள் ஒன்றிரெண்டு நாட்கள் மட்டுமல்ல, "எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்" என்று வேதனைப்படுகின்றார். ஆம் அன்பானவர்களே, இன்று நம்மில் சிலருக்கு அறுபது அல்லது அறுபத்தைந்து அல்லது எழுபத்தைந்து வயதாகக் கூடஇருக்கலாம். ஆனால்,  இத்தனை ஆண்டுகளாகப்  பலரும் தேவனை அறியாமல்தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். ஆனால்  தேவன் அவர்களை அன்புசெய்வதால் அவர்களையும் உலகில் பல நன்மைகளைக்கொடுத்து வாழவைத்துள்ளார். 

எனவே அன்பானவர்களே, தேவனை அறியும் ஆர்வத்துடன் நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு அவரிடம் திரும்புவோம். வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக அல்ல; தேவனைத் தனிப்பட்ட முறையில் அறிந்த ஆவிக்குரிய மக்களாக மாறுவோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

📖 வேதாகமத் தியானம் எண் - 1810                                                     🔆 ஆதவன் 21.01.2026 புதன்   

"ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெப ஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள். அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள்." ( யோவான் 12: 42, 43)

தங்களது உள்ளத்தில் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தாலும் அதனை வெளியில் சொன்னால் தங்களது வேலை போய்விடும் எனப்பயந்து அதனை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள விரும்பாத அதிகாரிகளைக்குறித்து இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம்.  காரணம் அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

இன்றும் பல கிறிஸ்தவர்கள்,  மற்றும் கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொள்பவர்கள், கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவியவர்கள் சிலர் அரசாங்கச்  சலுகைகளுக்காக, பதவிகளுக்காக, தங்களை கிறிஸ்தவர்கள் என்று வெளிப்டையாகக்  கூறிக்கொள்ளத் தயங்குவதுண்டு. பிற மார்க்கங்களிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு விசுவாசிகளானவர்கள் தாங்கள் முன்பிருந்த மார்க்கத்தில் அனுபவித்த சலுகைகள் பறிபோய்விடுமென்று சலுகைகள் பெற விண்ணப்பிக்கும்போது தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதனை வெளிப்படுத்துவதில்லை.  தங்களது பழைய சான்றிதழ்களையே இணைத்து அரசாங்கச்  சலுகைகளைப்பெற விண்ணப்பிக்கின்றனர். 

தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மார்க்கத்துக்கு மாறிய ஒரு பெண் அதனை மறைத்து பஞ்சாயத்துத் தலைமை பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுப், பின்னர் எதிர்க்கட்சியினர் அதனை ஆதாரபூர்வமாக நிரூபித்ததால் நீதிமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டச் செய்தி  சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியானது.  ஆம், இவர்கள் இன்றைய தியான வசனத்தில் கூறியுள்ள இயேசுவின் காலத்தில் விசுவாசிகளான அதிகாரிகளைப்போல தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்புகிறவர்கள். 

நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொண்டு அதனை வெளிப்படையாக அறிவிப்பதற்கு வெட்கப்பட்டோமென்றால் அதனால் என்ன பயன்? "என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?" (யாக்கோபு 2:14)  எனக் கேள்வியெழுப்புகின்றார் யாக்கோபு. 

ஆம் அன்பானவர்களே, மிகப்பெரிய விசுவாச காரியங்களை நாம் செய்யவில்லையானாலும் கிறிஸ்துவை நாம் விசுவாசிப்பதை  வெளிப்படையாக அறிவிக்கவாவது முடியாதா? கிறிஸ்தவர்களாக மாறியதால் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர், பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளனர். "வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்" ( எபிரெயர் 11: 36, 37) 

ஆனால் நமக்கு அத்தகைய பயமுறுத்தல்கள் எதுவும் இல்லை. இப்படியிருக்க, வெறும் உலக நன்மைகளுக்காக கிறிஸ்துவை மறுதலிப்பது அவமானமல்லவா? "வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?" ( யாக்கோபு 2: 20, 21)

மனிதரால் வரும் மகிமையை விரும்பி கிறிஸ்துவை மறுதலிப்போமானால் நாம் பரிதபிக்கக்கூடியவர்களாகவே இருப்போம். "என் தேவன் எனது தேவைகளை நிறைவாக்குவார்; மனிதர்களது தயவை நம்பி நான் உலகினில் இல்லை" என்று உறுதியான விசுவாசம் நமக்கு இருக்குமானால் மனுஷரால் வருகிற மகிமைக்காக தேவனை மறுதலிக்கமாட்டோம். 

"விதைகளின் உள்ளே" 🌳 

வேதாகமத் தியானம் எண் - 1811                                                    📖 🔆 ஆதவன் 22.01.2026 வியாழன்    

"இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்." ( யோபு 16: 19)

இந்த உலகத்தில் சில வேலைகளுக்கு நாம் விண்ணப்பிக்கும்போது சமூகத்தில் மதிப்புப்பெற்ற மனிதர்களிடமிருந்து நற்சான்று (Conduct Certificate) பெற்று நம்மை சமர்ப்பிக்கச்சொல்வார்கள். காரணம், வேலைக்குத் தேர்வு செய்யப்படும் நபர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்று அவர்கள் கருதுவதுதான். ஆனால், இந்த உலகத்தில் நமக்கு இப்படி நற்சான்று தரும் நபர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக இருப்பதில்லை. 

நமது தொகுதி மக்களவை உறுப்பினர் (M.P) அல்லது சட்டமன்ற உறுப்பினர் (M.L.A)  இவர்களிடம் நாம் சான்று பெறுகின்றோம். ஆனால் நமக்குச் சான்றளிக்கும் இவர்கள் பெரும்பாலும் நம்மைவிட நற்சாட்சி குறைந்தவர்களே. அதாவது, நல்ல சான்றுள்ள வாழ்க்கை வாழாத நபர்கள் நமக்கு நற்சான்று அளிக்கின்றார்கள்!!  

ஆனால், மனிதர்களது சான்றல்ல, தேவன் நம்மைக்குறித்து அளிக்கும் சான்றே முக்கியம். தேவன் அளிக்கும் சான்று உலக மனிதர்கள் அளிக்கும் சான்றுகளைப் போன்றதல்ல. யூதர்கள் இயேசு கிறிஸ்துவைக்குறித்துக்  குறைகூறியபோது அவர் அதுகுறித்துக்  கவலைப்படவில்லை. காரணம் அவர் மனிதர்களது சாட்சியையல்ல, பிதாவின் சாட்சியையே பெரிதாகக் கருதினார்.  

"என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை."   இதுபோலவே, 
( யோவான் 5: 37) என்று அவர் யூதர்களுக்குத் தெளிவாகக் கூறினார். மேலும், "நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாய் இருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறார் என்றார்." ( யோவான் 8: 18)

யோபுவைக்குறித்து அவரது நண்பர்கள் பல்வேறு பழிசுமத்தினர். அவற்றைக்கண்டு யோபு கலங்கவில்லை. எனவேதான், "என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்" என்று அவர்  துணிவுடன் கூறுகின்றார். அதாவது, நீங்கள் என்னைக் குறித்துக் கூறுவதல்ல, என்னைக்குறித்து பரலோகம் கூறும் சான்றே எனக்குப் போதும் என்கின்றார் அவர். ஆம் அன்பானவர்களே, இத்தகைய மேலான சான்றுள்ள வாழ்க்கை வாழவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். 

இன்று நமது வாழ்கையினைக்குறித்து மனிதர்கள் பல்வேறுவிதமாகப் பேசலாம்; நமது ஆவிக்குரிய செயல்பாடுகளை அவர்கள் விமர்சிக்கலாம். ஆனால், நமக்குத் தேவை மனிதர்களது சாட்சியல்ல, மாறாக, பரலோகத்தில் நம்மைக்குறித்துக் கூறப்படும் சாட்சியே முக்கியம். இன்று பல கிறிஸ்தவ ஊழியர்களைக்குறித்து அவதூறான செய்திகள் வெளிவருவதுண்டு. அதுகுறித்து அவர்கள் வேதனையடைந்து சோர்ந்துபோவதுண்டு. சிலர் தங்களது நியாயத்தை எடுத்துக்காட்ட பல்வேறு சான்றுகளை அடுக்குவதுண்டு. ஆனால், நாமல்ல, நமது வாழ்கையினைக்குறித்து தேவன் சான்றளிக்கும்விதமாக நாம் வாழவேண்டியதே முக்கியம். அத்தகைய சான்றே மேலான சான்றாக அமையும். 

தேவனோடு நாம் ஐக்கியமாக வாழ்வோமானால் நம்மைக்குறித்துத் தேவன் என்னச் சான்று வைத்துள்ளார் என்பதனை நாமும் யோபுவைபோல  உணர்ந்துகொள்ளமுடியும். நமது ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு இது முக்கியமானதாகும். அற்பமான மனிதர்கள் நமக்கு எதிராக  நிலைகுலையச்செய்யும் வார்த்தைகளைப் பேசும்போது நாம் இயேசு கிறிஸ்துவைப்போல, யோபுவைபோல தைரியமாக நிதானமாக இருக்கமுடியும். 

மேலும் அப்படிச் சான்றுள்ள வாழ்கையினைநாம்  வாழ்வோமானால் 
"அதனாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே." (எபிரெயர் 13:6) என்கின்றார் எபிரெய நிருப ஆசிரியர். ஆம் அன்பானவர்களே,                    தேவனிடம் நற்சான்றுபெற்றிட நமது வாழ்க்கையினை அவர் மெச்சிக்கொள்ளும்விதத்தில் வாழ்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳  
📖  வேதாகமத் தியானம் எண் - 1812                                                    
🔆 ஆதவன் 23.01.2026 வெள்ளி     

"ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்." ( எபேசியர் 5: 14)

ஆவிக்குரிய வாழ்வில் எந்தவித ஆர்வமுமின்றி, தேவனை அறியும் ஆர்வமின்றி, வெற்றுச் சடங்கு வழிபாட்டு முறைமைகளில் கலந்துகொண்டு அதனால் திருப்திப்பட்டுக்கொண்டு வாழ்வது நாம் தூங்குவதற்கு ஒப்பாகும். மட்டுமல்ல, அது ஆவிக்குரிய வாழ்வின் மரணமுமாக இருக்கின்றது. 

இன்று உலகினில் பலரும் தேவனை அறியும் ஆர்வமின்றி, அவரைத் தேடாமல் வாழ்கின்றனர். மட்டுமல்ல, தங்களது  உலகத் தேவைகளுக்காக மட்டுமே ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டு, வேண்டுதல்கள் செய்துகொண்டு  அதனால் மனநிறைவடைந்தவர்களாக வாழ்கின்றனர். எனவே இப்படிப்பட்டவர்களது உள்ளத்தில் எந்தவித ஒளியும் இருப்பதில்லை. இத்தகைய மனிதர்கள் உறங்குபவர்கள் அல்லது மரித்தவர்கள் என்று வேதம் கூறுகின்றது.

கிறிஸ்துவை ஆராதிக்கின்றோம் என்று கூறும் நாம் இப்படி ஒளி இழந்தவர்களாக வாழக்கூடாது. எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாய் இருக்கக்கடவோம்." (1 தெசலோனிக்கேயர் 5: 5, 6) என்கின்றார்.

கிறிஸ்துவை வாழ்வில் அறியாதவர்கள் இப்படி ஆவிக்குரிய தூக்கத்தில்தான் இருப்பார்கள். எனவே, நாம் அவர்கள் தூங்குகிறதுபோலத் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாய் இருக்கக்கடவோம் என்கின்றார் பவுல். அப்படி தூங்காமல் விழித்திருக்கும்போதுதான் கிறிஸ்து நம்மை ஒளிர்விக்கமுடியும். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறியாத மக்கள் இருளில் இருந்ததாகவும் கிறிஸ்து உலகினில் வந்தபோது அவர்கள் வெளிச்சத்தைக் கண்டதாகவும் நாம் வாசிக்கின்றோம். "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது" (மத்தேயு 4:15) ஆம், இருளும், மரண இருளும் சூழ்ந்த மக்களை கிறிஸ்துவாகிய மெய்யான ஒளி ஒளிரச் செய்தது. ஆம், "உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி." (யோவான் 1:9)

கிறிஸ்துவால் நாம் ஒளிர்வடைந்தவுடன் ஒரு மின்சார விளக்கைப்போலவோ, மெழுகுவர்த்தியைப்போலவோ ஒளிர்வோம் என்று பொருளல்ல, மாறாக நாம் நமது செயல்பாடுகளை மாற்றுவோம் என்று பொருள். கிறிஸ்துவை அறியாதபோது இருந்த துன்மார்க்க, கெட்ட குணங்கள் மாறி, நாம் மக்கள் முன்பு நல்லது செய்பவர்களாக  கிறிஸ்துவுக்குச் சான்றுபகரும் வாழ்க்கை வாழ்பவர்களாக மாறுவோம் என்று பொருள். 

ஆம் அன்பானவர்களே, நாம் கிறிஸ்துவைப்போல உலகிற்கு ஒளி கொடுப்பவர்களாக மாறவேண்டும் என்று தேவன் விரும்பகின்றார். அதற்கு முதலில் நாம் நமது ஆவிக்குரிய தூக்க நிலையிலிருந்து விழிக்கவேண்டும்; கிறிஸ்துவை அறியாத மரித்துப்போன மக்களைப்போல வாழாமல் அவர்களைவிட்டு எழுந்து வித்தியாசமானவர்களாகவேண்டும்.  அப்பொழுது கிறிஸ்து நம்மை  பிரகாசிப்பிப்பார்; நாமும் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்பவர்களாவோம். 

"விதைகளின் உள்ளே" 🌳  
📖  வேதாகமத் தியானம் எண் - 1813                                                    
🔆 ஆதவன் 24.01.2026 சனி      

"ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது." (2 கொரிந்தியர் 3: 3)

வேதாகமத்தில் நாம் பல்வேறு பரிசுத்தவான்கள் எழுதிய நிரூபங்களை வாசிக்கின்றோம். இந்த நிரூபங்கள் அவர்கள் கிறிஸ்துவோடு வாழ்ந்ததால் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு என்று கூறலாம். கிறிஸ்து அனுபவம் அவர்களது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள், மாற்றங்கள் இவற்றை அவர்கள் எழுதிவைத்துள்ளனர். மேலும், இவை எழுதப்பட மேலான நோக்கமுண்டு. அதாவது, இவற்றை வாசிக்கும் மக்கள் அவர்கள் பெற்ற அதே கிறிஸ்து அனுபவங்களைப் பெற்று கிறிஸ்துவை அறிந்து ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையவேண்டும் என்பதே அந்த நோக்கமாகும். 

அப்போஸ்தலரான பவுல், யாக்கோபு, பேதுரு, யோவான், யூதா இவர்கள் எழுதிய நிரூபங்கள் வேதாகமத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை வாசிக்கும்போது நமது ஆவிக்குரிய வாழ்வில் மேலான மாற்றங்கள் ஏற்படுவதை நாம் உணரலாம். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் நற்செய்திகள் மூலம் இயேசு கிறிஸ்துவின்  வாழ்க்கை வரலாறு, அவர் செய்த புதுமைகள், அவரது போதனைகளை நாம் அறிந்துகொள்கின்றோம். ஆனால், நிரூபங்கள் அந்தப் போதனைகளை வாழ்வாக்கிய மக்களின் அனுபவமாகும். எனவே, அவை நமக்கு மிகவும் தேவையாக இருக்கின்றன.

இன்றைய தியான வசனத்தில் அப்போஸ்தலரான பவுல் கொரிந்து சபை மக்களை தனது ஊழியத்தினால் உருவாகிய நிரூபங்கள் என்கின்றார். ஏற்கெனவே பவுல் அப்போஸ்தலர் பல்வேறு நிரூபங்கள் எழுதியபோதிலும் அவரது போதனை மற்றும் வாழ்க்கையால் கொரிந்து  சபை மக்களை உயிருள்ள நிரூபங்களாக மாற்றியுள்ளார். அதனையே அவர், "நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது" என்கின்றார். 

எல்லோரும் எப்போதும் எழுதப்பட்டிருக்கும் நிரூபங்களை வசித்துக் கொண்டிருக்கமுடியாது. ஆனால் உயிருள்ள சாட்சியுள்ள விசுவாச மக்களை எல்லோரும் அன்றாட வாழ்க்கையில் சந்திக்க முடியும். அப்படி சந்திக்கும்போது அவர்களது சாட்சியுள்ள வாழ்க்கையே கிறிஸ்துவை எடுத்துப் போதிக்கும்.  

ஆம் அன்பானவர்களே, நாமும் இப்படி நிரூபங்களாக வாழவே அழைக்கப்பட்டுள்ளோம். இன்று கிறிஸ்தவத்தில் போதனைகள் அதிகம். ஆனால் பவுல் கூறுவதுபோல தேவனுடைய ஆவியினால்  இருதயங்களாகிய சதையான பலகைகளில் எழுதப்பட்ட உயிருள்ள சாட்சிகள் குறைவு.  கிறிஸ்துவை அறியாத மக்கள் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ள நிரூபங்களை வாசிப்பது கிடையாது. ஆனால் அவர்கள் கிறிஸ்தவ விசுவாசிகளை உலகினில் சந்திக்கின்றனர். எனவே, நமது இருதயத்தில் கிறிஸ்துவின் நிரூபங்கள் எழுதப்பட்டிருக்குமானால் நமது வாழ்க்கை நாம் போதிக்காமலேயே அவர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ள உதவும். 

நாம் வேதாகமத்தையும் அப்போஸ்தலர்களின் நிரூபங்களையும் வாசிக்கும்போது இந்த எண்ணத்துடன் விண்ணப்பத்துடன் வாசிப்போம். "ஆண்டவரே, உமது வார்த்தைகளும் உமது பரிசுத்தவான்களது எழுத்துக்களும் என்னை மாற்றட்டும். அவை எனது இருதயமாகிய  சதையான பலகையிலே எழுதப்படவும் நான் வாழ்க்கை மாற்றமடைந்து போதிக்காமல் உம்மைப் போதிக்கவும் அருள்தாரும்" என்று வேண்டுதல் செய்வோம். அப்போது நாமே கிறிஸ்துவின் நிருபமாய் மாறிடுவோம்.      

"விதைகளின் உள்ளே" 🌳  
📖  வேதாகமத் தியானம் எண் - 1814                                                    
🔆 ஆதவன் 25.01.2026 ஞாயிறு       

"உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்." ( யாத்திராகமம் 20: 2, 3)

தேவனாகிய கர்த்தர் மோசேக்கு அளித்த பத்துக்கட்டளைகளில் முதலாவது கட்டளை இன்றைய தியான வசனம்.  இந்தக் கட்டளையினைத் தொடந்து,  "மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்" ( யாத்திராகமம் 20: 4) என்று தேவன் கூறுகின்றார்.  

"வேறு தேவர்கள்", "விக்கிரகம்" என்ற வார்த்தைகள் பொதுவாக வேறு மத தெய்வங்களை மட்டும் குறிப்பதாக நம்மில் பலரும் எண்ணிக்கொள்கின்றோம். எனவே, அப்படி நாம் அவற்றை வணங்காததால் நாம் வேறு தெய்வங்களையோ, சிலைகளையோ வழிபடவில்லை என்று எண்ணிக்கொள்கின்றோம்.  ஆனால் அது முற்றிலும் சரி என்று கூறிடமுடியாது.

வேதாகம அடிப்படையில் மண்ணாலோ, பொன்னாலோ, மரத்தாலோ செய்யப்பட்டச் சிலைகளை வணங்குவது மட்டுமல்ல, கூடவே,  தேவனைத் தவிர நாம் யாருக்கு, எவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் அது விக்கிரக ஆராதனைதான், அது அந்நிய தெய்வ வழிபாடுதான். 

மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் இருக்கின்ற எந்தப் பொருளும் தேவனுக்கு ஈடானவை அல்ல. எனவே, இவைகளில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தாலும் அது விக்கிரக ஆராதனைதான். ஆனால் பொதுவாக மனிதர்கள் நாம் இந்த உலகப் பொருட்களுக்குத்தான் முன்னுரிமைகொடுத்து இவைகளை வாழ்வில் அதிகமாகச் சேர்க்கவேண்டுமென்று ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

நாம் ஒருவேளை நேரடியாகச் சிலைகளை வணங்காமல் இருக்கலாம். ஆனால், நம்மிடம் பணவெறி அல்லது பொருளாசை எனும் பாவம் இருக்குமானால் நாம் விக்கிரக ஆராதனை செய்கின்றோம் என்றுதான்  பொருள். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே." ( எபேசியர் 5: 5) என்று கூறுகின்றார்.

மேலும், "விபசாரம், அசுத்தம், மோகம், துர்யிச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்." ( கொலோசெயர் 3: 5) என்று அவர் நமக்கு ஆலோசனைக் கூறுகின்றார். 

இதுபோல சிலருக்கு பெருமை, பதவி வெறி, போன்றவை வாழ்வில் விக்கிரகமாக இருக்கின்றன. நம்மை யாராவது மேன்மைப் படுத்தியவில்லை; மதிக்கவில்லையானால் நமக்குள் சிலவேளைகளில் கோபமும் வருத்தமும் ஏற்படுகின்றது. காரணம், நம்மையே நாம் ஒரு விக்கிரகமாக எண்ணிக்கொண்டு மற்றவர்களது மதிப்புக்காக ஏங்குவதுதான். ஆம் அன்பானவர்களே, இத்தகைய குணங்களை நமக்குள் வைத்துக்கொண்டு நாம் சிலைகளை வணங்காமல் இருந்தாலும் நாம் சிலைவழிபாட்டுக்காரர்கள்தான். சுருக்கமாகக் கூறுவோமானால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வேறு எவற்றுக்கு நாம் வாழ்வில் முன்னுரிமை கொடுத்தாலும் அவைகள் நமது வாழ்வில் விக்கிரகங்கள்தான். 

இன்று, நம்மைப்  பாவ அடிமைத்தனமாகிய எகிப்திலிருந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரட்சித்து வழிநடத்தி வருகின்றார். எனவேதான் "உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே" என்று அவர் கூறுகின்றார். எனவே அவரையே நாம் முன்னிலைப்படுத்தி வாழவேண்டியது அவசியம். நம்மை இப்படித் தனது  சுய இரத்தத்தைச் சிந்தி மீட்ட கிறிஸ்துவைத் தவிர வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம் என்று இன்றைய தியான வசனம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

இறுதியாக அன்பர்களே, நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலைகளை வணங்குவதைக் குறித்து எச்சரிக்காமல் பொருளாசையைக்  குறித்தே முக்கியமாக எச்சரித்தார். ஆம், "பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்." ( லுூக்கா 12: 15) காரணம் பொருளாசை என்பது வேறுதெய்வ வழிபாடு; அதுவே சிலை வழிபாடு. அது நம்மை எகிப்தாகிய பாவ அடிமைத்தனத்திலிருந்து மீட்ட கிறிஸ்துவுக்கு எதிரான பகை.

"விதைகளின் உள்ளே" 🌳  
📖  வேதாகமத் தியானம் எண் - 1815                                                    
🔆 ஆதவன் 26.01.2026 திங்கள்        

"மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்." ( யோவான் 10: 1, 2)

ஒரு வீட்டின் உரிமையாளரிடம் வீட்டின் திறவுகோல் இருப்பதால் அவர் தைரியமாகக் கதவைத் திறந்து வீட்டினுள்  செல்வார். ஆனால் திருடர்களிடம் திறவுகோல் இல்லாததால் வாசல் வழியாக நுழையமுடியாமல் வேறு வழியாக வீட்டினுள் நுழைய முயற்சிசெய்வார்கள். அப்படி  வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான் என்று கூறுகின்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. 

நாமே ஆடுகளாக இந்த உலகமாகிய தொழுவத்தினுள் இருக்கின்றோம். இந்த ஆடுகள் அனைத்தும் இரட்சிப்பு அனுபவம் பெற்று பரலோகத்தை அடைந்திடவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார். இந்த மீட்பு அல்லது இரட்சிப்பு அனுபவத்தை கிறிஸ்து இயேசு ஒருவர் மட்டுமே மக்களுக்கு அளிக்கமுடியும். காரணம், அவரே தனது சுய இரத்தத்தைச் சிந்தி இரட்சிப்பை உண்டாக்கி பிதாவாகிய தேவனுக்குமுன் நாம் தைரியமுடன் நிற்க  நமக்கு அருள்செய்துள்ளார். எனவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயர்தான் திறவுகோல். 

ஆம், "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" (அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 12) என்று நாம் வாசிக்கின்றோம். எனவே, யாராவது கிறிஸ்துவின் பெயரைத்தவிர வேறு பெயரை முன்னிலைப்படுத்தி நம்மை வழிநடத்தினால் அது ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிற முயற்சி. அப்படி ஏறுகின்றவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

மட்டுமல்ல, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான் வாசல். இந்த வாசல் வழியாக நாம் மீட்பு அனுபவத்துக்குள் நுழையும்போதுதான் செழிப்பான மேய்ச்சலைக் கண்டுகொள்ளமுடியும். "நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்." ( யோவான் 10: 9) என்று இயேசு கிறிஸ்து கூறவில்லையா? 

கிறிஸ்துவாகிய மீட்பரின் பெயரை புறம்தள்ளி வேறு பெயர்களையும், வேறு நபர்களையும் முன்னிலைப்படுத்தி அவற்றின்மூலம்  பரலோகத்தை அடைந்திடலாம்; தேவ சந்நிதியை அடைந்துவிடலாம்  என்று போதிக்கும் பல்வேறு மார்க்கங்கள் உலகினில் உள்ளன.  கிறிஸ்தவர்களுக்குள்கூட ஒரு சில பிரிவினர் பல்வேறு பரிசுத்தவான்களது  பரிந்துரைகள் வழியாக நாம் மீட்பு பெறலாம் என்று மக்களை வழிநடத்தும் நிலை உள்ளது. அன்பானவர்களே, தன்னிடம் வீட்டின் திறவுகோல் இருக்கும்போது வீட்டு உரிமையாளன் வேறு முயற்சிகளில் ஈடுபடுவானா என்பதனை நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். கிறிஸ்துவாகிய வாசல்  இருக்கும்போது தைரியமாக அந்த வாசல் வழியாக நுழையாமல்  வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.

"வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்" என்று இன்றைய தியான வசனத்தின் இறுதியில் நாம் வாசிக்கின்றோம். ஆம் அன்பானவர்களே, நம்மை ஆன்மீக வழிநடத்தும் மேய்ப்பர்கள் கிறிஸ்துவாகிய வாசல் வழியாக வருகின்றாரா இல்லையா என்பதனை ஆடுகளாகிய நாம் கருத்தாய்க்  கண்காணித்து அவர்களைப் பின்பற்றவேண்டியது அவசியம்.  

கிறிஸ்துவை முன்னிலைப்படுத்தி வரும் உண்மையான மேய்ப்பர்கள் ஆடுகளைப் பராமரிப்பார்கள். மற்றவர்கள் கூலிக்கு மாறடிப்பவர்கள். அவர்களது போதனைகளையும் அறிவுரைகளையும் பின்பற்றுவது நமக்கு அழிவையே கொண்டுவரும். அத்தகையவர்கள் மேய்ப்பர்களே அல்ல; அவர்கள் கூலியாட்கள்.   எனவேதான் இயேசு கிறிஸ்துக் கூறினார். "மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்." ( யோவான் 10: 12)

எச்சரிக்கையாக இருப்போம். கிறிஸ்துவாகிய வாசல்வழியாக வரும் போதகர்களை மட்டும் ஏற்றுக்கொள்வோம். 

"விதைகளின் உள்ளே" 🌳  
📖  வேதாகமத் தியானம் எண் - 1816                                                    
🔆 ஆதவன் 27.01.2026 செவ்வாய்        

"ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக." ( கொலோசெயர் 2: 6, 7)

சிலவேளைகளில் நாம் அதிக விலைகொடுத்து உயர் ரக பழ மரங்களை வீடுகளில் நட்டு வளர்ப்போம். ஆனால், எவ்வளவு உரம் இட்டுத் தண்ணீர் பாய்ச்சினாலும் சிலவேளைகளில் அவை வேர்பற்றி வளர்வதில்லை. நாம் நட்டப்படியே வளர்ச்சியின்றி இருக்கும். இதுபோல, சில குழந்தைகளும்  இருப்பதுண்டு.  எவ்வளவு சத்தான உணவுகளைக் கொடுத்தாலும் அக்குழந்தைகளுக்கு வயதுக்கேற்ற வளர்ச்சி இருக்காது. இத்தகைய குழந்தைகளைச் "சவலைக்குழந்தைகள்" என்பார்கள். 

இதுபோல கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாக வாழும் நாமும் அவரை அறிந்துகொண்ட அறிவோடு நின்றுவிடக்கூடாது.  அப்படி இருப்போமானால் நாமும் சவலைக்குழந்தைகள் போன்றவர்கள்தான். எனவே, ஆவிக்குரிய வளர்ச்சி நமக்கு அவசியம். 

இன்றைய தியான வசனத்தில் பவுல் அப்போஸ்தலர், கிறிஸ்துவை அறிந்தபின்னர் நாம் அந்த அறிவில் வளர்ந்தவர்களாக மாறவேண்டும்; ஆவிக்குரிய நமது வளர்ச்சி சிறப்பானதாக இருக்கவேண்டியது அவசியம்; நாம்  அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், மாறவேண்டும் என்கின்றார். மேலும், அப்படி நாம் வாழ்கின்றோம் என்பது நமது விசுவாச வாழ்க்கையின் மூலம்தான் வெளிப்படும் என்று கூறுகின்றார்.

நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடைய  என்னசெய்யவேண்டும் என்பதனை இன்றைய தியான வசனம், "அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக." என்று ஆலோசனை கூறுகின்றது.  அதாவது, முதலில் நமக்கு தேவனுக்கேற்றபடி வாழவேண்டும் எனும் ஆர்வம் இருக்கவேண்டும். பின்னர் தொடர்ந்து ஜெபத்திலும் ஸ்தோத்திரத்திலும் நிலைநிற்கவேண்டும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்" (கொலோசெயர் 4:2) என்று கூறுகின்றார். 

இப்படி நாம் வாழும்போது ஆவிக்குரிய வாழ்வில் நாம் வேர்கொண்டவர்களாக மாறமுடியும். இன்றைய தியான வசனம் மேலும்,  "அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும்" என்று கூறுகின்றது. ஒவ்வொரு கட்டிடத்துக்கும்  அடித்தளமான கல் ஒன்று இருக்கும். அதுவே மூலைக்கல். கட்டடம் கட்டும்போது அதன்மேல் ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கிக்  கட்டுவார்கள்.  அதுபோல நாமும் கிறிஸ்து எனும் மூலைக்கல்மேல் நமது ஆவிக்குரிய வாழ்வை ஒவ்வொரு நற்செயல்களால்  கட்டவேண்டும்.   

கிறிஸ்துவுக்குள் நமது ஆவிக்குரிய வாழ்வு வேர்பற்றியதாக இருக்கின்றதா? மூலைக்கல்லான அவர்மேல் நமது ஆவிக்குரிய வாழ்வைக் காட்டுகின்றோமா? என்பதே நமது ஆவிக்குரிய வளர்ச்சியின் அளவுகோல். பெரிய மரங்கள் புயற்காற்றையும் வெள்ளத்தையும் தங்கி நிற்கக் காரணம் அவைகளின் ஆழமான வேர்தான். அதுபோல கட்டிடங்களின் பலம் அவற்றின் அடித்தளம்தான். கிறிஸ்துவே வேர்; அவரே நமது விசுவாச வாழ்வின் அடித்தளம்.

எனவே அன்பானவர்களே, நாம் நமது ஆவிக்குரிய வாழ்வை ஆராய்ந்து பார்ப்போம். கிறிஸ்துவின்மேல் உள்ள நமது விசுவாசம் வளர்ச்சி குன்றியதாக அல்ல, அது அனுதினமும் வளர்ச்சியடையவேண்டும். நாம் அவருக்குள் நடந்துகொண்டு, போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகவேண்டும். இதுவே ஆவிக்குரிய வளர்ச்சி.  இந்த வளர்ச்சி இருந்தால் மட்டுமே நம்மால் கனிகொடுக்கும் வாழ்க்கை வாழமுடியும்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                      📞 Contact: 96889 33712                                                                     🌐 Website: aathavanmonthly.blogspot.com

"விதைகளின் உள்ளே" 🌳  
📖  வேதாகமத் தியானம் எண் - 1817                                                    
🔆 ஆதவன் 28.01.2026 புதன்         
 
"நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்." ( சங்கீதம் 3: 5)

நாம் இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருநாளும் தேவன் கிருபையாய் நமக்குத் தருவதாகும். இரவு உறங்கச்செல்லும் நாம் மறுநாள் கண்விழிப்போம் என்பதே நிச்சயமில்லாத ஒன்றாகும். ஆம், பலர் இரவு உறக்கத்திலேயே இறந்துபோகின்றனர். 

மட்டுமல்ல, இரவு பல்வேறு பயங்கரங்களுக்கு உதவிபுரிகின்றது. திருடர்கள் இரவுவேளைகளில் கொள்ளையிட வந்து வீட்டிலுள்ள மக்களை கொல்வதும் உண்டு. ஆம் அன்பானவர்களே, நாம் படுத்து உறங்குவதும் காலையில் விழித்துக்கொள்வதும் தேவனது கிருபையினால்தான். 

தாவீது ராஜாவுக்கு அவரது சொந்த மகன் அப்சலோமே எதிரியாகமாறி அவரது உயிரைப்பறிக்க முயன்றான். மகனுக்குப் பயந்து ஓடி மலைகளின் குகைகளில் பதுங்கி வாழவேண்டிய சூழ்நிலை தாவீதுக்கு ஏற்பட்டது. ஆனாலும் தேவன் தாவீதைப் பாதுகாத்தார். இக்கட்டான வேளையிலும் தாவீது தேவனை நம்பி நிம்மதியாக உறங்கினார். எனவேதான் மகிழ்ச்சியோடு "நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்" எனப் பாடுகின்றார். அவர் கூறுவதுபோல கர்த்தரே அவரைத் தாங்கினார். 

இந்த தேவ பாதுகாப்புத் தனக்குத் தொடர்ந்து உண்டு என்று தாவீது உறுதியாக நம்பினார். எனவேதான் அடுத்த சங்கீதத்தில் அவர் கூறுகின்றார், "சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்." ( சங்கீதம் 4: 8) சமாதானமான உறக்கம் ஒரு வரம் என்பார்கள். தாவீது அதனை அனுபவித்தார். 

இன்று பலரது வாழ்வில் உறக்கமில்லாமையே பெரிய நோயாக இருப்பதை நாம் பார்க்கலாம். இரவு தூக்கமில்லாததால் தூக்கமாத்திரைகளை உட்கொண்டு பலர் தூங்குகின்றார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். வாழ்வின் பிரச்சனைகளை நினைத்துப் பயம். நாளைய தினத்தை எப்படிச் சாமளிக்கப்போகின்றோம் எனும் எண்ணம், தீராத நோய்கள், பிள்ளைகளால் ஏற்படும் பிரச்சனைகள், கடன்பாரங்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. தாவீதுக்கு அப்சலோம் பயமுறுத்தலாய் இருந்ததுபோல பலரை இவைபோன்ற காரணங்கள் பயமுறுத்தி தூக்கத்தைக் கெடுக்கின்றன. 

எனவே அன்பானவர்களே, தாவீது கர்த்தரைச் சார்ந்துகொண்டதுபோல நாமும் கர்த்தரைச் சார்ந்துகொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. சமாதான காரணரான அவரே நமக்குச் சமாதானத்தைத் தரமுடியும்.  எந்தப் பிரச்சனையாக இருந்தாலும்  பிரச்சனையை அவரிடம் விட்டுவிடுவோம். "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." ( மத்தேயு 11: 28) என்று நமது அன்பு ஆண்டவர்  கூறவில்லையா? அவரிடம் பிரச்சனைகளை விட்டுவிட்டு  சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வோம்; அவரே நம்மை சுகமாய்த் தாங்குவார்.  

"விதைகளின் உள்ளே" 🌳  
📖  வேதாகமத் தியானம் எண் - 1818                                                    
🔆 ஆதவன் 29.01.2026 வியாழன்        

"கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்." ( சங்கீதம் 34: 7)

தேவனுக்குப் பயந்த வாழ்க்கை வாழும்போது நமக்குக் கிடைக்கும் தேவ பாதுகாப்பைக்குறித்து இன்றைய தியான வசனம் விளக்குகின்றது. 

தேவனுக்குப் பயப்படுதல் என்பது ஒரு தலைமை ஆசிரியருக்குப் பயப்படும் மாணவனைப்போலவோ,  உயர் அதிகாரிக்குப் பயப்படும் அலுவலர்களைப் போலவோ பயப்படுவதைக் குறிக்கவில்லை. மாறாக,   நமது அனைத்துச் செயல்களையும் கண்காணித்து நமது செயல்பாடுகளுக்கு ஏற்ற தீர்ப்பு வழங்கும் நீதியுள்ள தேவன் ஒருவர் இருக்கின்றார் எனும் எண்ணத்துடன் தேவனது கட்டளைகளைக் கடைபிடித்து வாழ்வதைத்தான்  குறிக்கின்றது. அப்படி நாம்  வாழும்போது தேவன் தனது தூதர்களை அனுப்பி நம்மைப் பாதுகாப்பார் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

எலிசா தீர்க்கத்தரிசியின் வாழ்வில் நடந்த சம்பவம் இதனை நமக்கு உறுதிப்படுத்துகின்றது. சீரியாவின் இராஜா இஸ்ரவேலுக்கு எதிராக யுத்தம் செய்ய வரும்போதெல்லாம் தீர்க்கத்தரிசியாகிய எலிசா அதனை முன்னமேயே தீர்க்கத்தரிசனமாக இஸ்ரவேலின் இராஜாவுக்கு அறிவித்து விடுவார். அதனால் இஸ்ரவேலின் இராஜா தகுந்த ஆயத்தமாய் இருந்து சீரியாவின் இராஜாவின் கைகளுக்குத் தன்னைக் காத்துக்கொண்டான். எலிசா தீர்க்கத்தரிசிதான் இப்படி இஸ்ரவேலின் இராஜாவுக்கு உதவுகின்றார் என்பதை அறிந்த சீரியாவின் இராஜா எலிசாவைப் பிடிக்க படைவீரர்களை அனுப்பினான்.  எலிசா மலையின்மேல் குகையில் தங்கியிருந்தார். 

ஒருநாள் "தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்." (2 இராஜாக்கள் 6: 15)

ஆனால், சீரியரின் ராணுவத்திடமிருந்து தன்னைப் பாதுகாக்கத் தேவன் தனது தூதர்களை முன்கூட்டியே அனுப்பியிருந்ததை எலிசா கண்டுகொண்டார். எனவே அவர் தனது வேலைக்காரனைப் பார்த்து,  "பயப்படாதே; அவர்களோடு இருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்." (2 இராஜாக்கள் 6: 16)

"அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்." (2 இராஜாக்கள் 6: 17) அதனால் சீரிய இராணுவத்தால் எலிசாவைப் பிடிக்கமுடியவில்லை.

ஆம் அன்பானவர்களே, தேவனுக்குப் பயந்த வாழ்க்கை வாழும்போது இதுபோல தேவன் தனது பிள்ளைகளைப் பாதுகாக்கின்றார். விசுவாச பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் இத்தகைய தேவதூதர்களது பாதுகாப்பைத்  தேவன் அளிக்கின்றார். "இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் ப9ரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 18: 10) என்று இயேசு கிறிஸ்துக் கூறவில்லையா?

நாம் தேவனுக்கு இராஜாக்களும் ஆசாரியர்களுமாய் இருக்கின்றோம். இந்த உலகத்தில் அதிகாரத்தில் இருக்கும் தலைவர்களுக்கு பாதுகாப்பை உலக அரசாங்கங்கள் கொடுப்பதுபோல் தேவன் தனது பிள்ளைகளுப் பாதுகாப்பளிக்கின்றார்.  எனவே, உலக மனிதர்களுக்குப் பயப்படாமல் தேவனுக்கு மட்டும் பயந்த வாழ்க்கை வாழ்வோம். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களைப் பாதுகாக்கின்றார்;  விடுவிக்கிறார்.

"விதைகளின் உள்ளே" 🌳  
📖  வேதாகமத் தியானம் எண் - 1819                                                    
🔆 ஆதவன் 30.01.2026 வெள்ளி         

"ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்." (2 தீமோத்தேயு 4: 3, 4)

அப்போஸ்தலரான பவுல் தனது சீடனான தீமோத்தேவுக்குக் கூறிய இன்றைய இந்தத்  தியான வார்த்தைகளின்படி இன்று பரவலாக கிறிஸ்தவ மார்க்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். இன்று நடப்பதை தீர்க்கத்தரிசனமாக பவுல் அன்றே கூறிவிட்டார் என்றுதான் நாம் இதைக் கருதமுடிகின்றது.  

இன்று ஆரோக்கியமான; மெய்யான  கிறிஸ்தவ உபதேசங்களை அதிகமாக மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. காரணம், பலரும் குறுக்கு வழியில் தேவ ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்ள ஓடுகின்றனர். பல போதகர்களும் வேதம் கூறும் மெய்யான ஆசீர்வாதத்தினை மக்களுக்குப் போதிக்காமல் எப்படி உலக ஆசீர்வாதத்தினைப் பெறுவது என்றுதான் போதிக்கின்றனர். அதற்காகச்  சிறப்பு ஜெபக்கூட்டங்களும், ஆசீர்வாதக் கூட்டங்களும் நடத்திக்கொண்டிருக்கின்றனர். காணிக்கைக் கொடுத்தால் ஆசீர்வாதம் எனும் மிகக் குறுக்குவழியை மக்கள்முன் வைத்துள்ளனர்.

இந்த உலக வாழ்க்கைக்குப்பின் நித்தியமான மறுவுலக வாழ்வு ஒன்று உண்டு. அதனை நாம் எப்படிப் பெற்றுக்கொள்வது என்பதனை நமக்குக் காண்பிக்கவும், அந்த உண்மையினை எடுத்துக்கூறவும், அதற்கு நம்மைத் தகுதிப்படுத்தவுமே கிறிஸ்து இயேசு உலகினில் வந்தார். ஆனால் இன்றைய பெரும்பாலான ஊழியர்கள் இதனைப் போதிக்காமல் கிறிஸ்துவை மாயாஜாலம் செய்யும்  மந்திரவாதியாக மட்டுமே உலகுக்கு எடுத்துக்காட்டிப் போதிக்கின்றனர். மக்களும் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற இப்படிபட்டப் போதனைகளை போதிக்கும் போதகர்களைச் சார்ந்துகொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, அவர்கள் கூறும் கட்டுக்கதை உபதேசங்களுக்குச் சாய்ந்து போய்க்கொண்டிருக்கின்றனர். 

"வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கின்றன; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கின்றன." (2 தீமோத்தேயு 3: 16, 17) என்று வாசிக்கின்றோம். 

தேவ ஆவியினால் அருளப்பட்டுள்ள தேவ வார்த்தைகள் அனைத்தும் மனிதர்களை கிறிஸ்துவுக்குள் தேறினவர்களாகவும்,  நற்செயல்கள் செய்யத் தகுதியுள்ளவர்களாக்கவும் மாற்றிட  எழுதப்பட்டுள்ளன.  மேலும் அவைகள் மனிதர்களுக்கு உபதேசத்தையும் அவர்கள் தவறும்போது கண்டிக்கவும், மனிதர்கள் தங்களது வழியினைச் சீர்படுத்தவும், நீதியான வாழ்க்கை வாழ வழிகாட்டவும்  எழுதப்பட்டவை. ஆனால், இதனை மறுதலித்து வேதத்திலுள்ள ஆசீர்வாத பகுதிகளை மட்டுமே பொறுக்கியெடுத்து போதிக்கும் போதகர்கள்தான்  மக்களது சுய இச்சைகளுக்கேற்ற போதகர்கள். பெரும்பாலான மக்கள் அவர்களைச் சார்ந்துகொள்கின்றனர். 

இத்தகையவர்களைக்குறித்து அப்போஸ்தலரான பவுல், "ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்." ( பிலிப்பியர் 3: 18) என்கின்றார். ஆனால், இன்றைய உலகினில் உண்மையான சுவிசேஷ அறிவிப்பு செய்பவர்கள் பெரும்பாலான மக்களால் பகைஞர்களாகவே பார்க்கப்படுகின்றனர். அப்போஸ்தலரான பவுலையும் சிலர் அப்படிதான் பார்த்தனர். எனவேதான் அவர், "நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ?" ( கலாத்தியர் 4: 16) என்கின்றார். 

எனவே அன்பானவர்களே, நமது சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தேடாமல் சத்தியத்தைப் போதிக்கும் போதகர்களைச் சார்ந்துகொள்வோம். கட்டுக்கதைகள் நம்மை இரட்சிக்காது; கிறிஸ்துவின் மெய்யான சுவிசேஷம் மட்டுமே நம்மை நித்திய ஜீவனுக்கு நேராகக் கொண்டுசெல்லும்.  எச்சரிக்கையுடன் இருந்து விலையேறப்பெற்ற நமது ஆத்துமாவைப்  பாதுகாத்துக்கொள்வோம்.

"விதைகளின் உள்ளே" 🌳  
📖  வேதாகமத் தியானம் எண் - 1820                                                    
🔆 ஆதவன் 31.01.2026 சனி          

"நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை." (1 யோவான்  3 : 1)

ஒரு நாட்டின் இராஜாவின் மகன் ஒருமுறை கடல் பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி கடலின் நடுவேயிருந்த தீவு ஒன்றில் கரை ஒதுங்கினான். அங்கிருந்த மக்களுக்கு அவன் ஒரு இராஜகுமாரன் என்பது தெரியாது. வழிதப்பி வந்துள்ள சாதாரண கப்பல் பயணி என அவனை அவர்கள் எண்ணிக்கொண்டனர். அவனது பசியாற அவர்கள் தாங்கள் உண்ணும் அற்பமான உணவையும், தாங்கள் தங்கியிருக்கும் கூரை வீட்டினுள்ளும் அவனைத் தங்கவைத்தனர். 

அந்த மக்கள் நடுவே அவன் சில நாட்கள் இருந்தான். பிற்பாடு அவர்கள் அவனைத் தங்களில் ஒருவனாக அற்பமாக நடத்தத் துவங்கி அவனைத் தங்களுக்காக வேலைசெய்யவைத்தனர். அப்போது அவன் தனது பழைய ராஜகுமார வாழ்க்கையினை எண்ணிப்பார்த்தான். இளவரசனாக எவ்வளவு மதிப்புடன் வாழ்ந்தோம், இப்போது இந்த அறிவில்லாத மக்கள் கூட்டத்தில் வந்து சிக்கிக்கொண்டோமே என்று மனம் கலங்கினான். தனது முன் நிலையினை அவன் அவர்களுக்கு எடுத்துச் சொன்னாலும் அவர்கள் அதனை நம்பவில்லை.

காரணம்,  அந்த மக்கள் அந்த இராஜாவை அறியவில்லை; எனவே இராஜாவின் மகனையும் அறியவில்லை.  இதுபோலவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது இருந்தார். தேவனை அறியாத மக்கள் மத்தியில் தேவனை அறிந்த மனிதனும்  இன்று இப்படியே இருக்கின்றான். கிறிஸ்துவையே அறியாத உலகம் நம்மை அறியாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை. இதனையே, "உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை." என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது. 

கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட்ட நாம் தேவன் நம்மோடு பேசுவதையும், அவர் நம்மோடுகூட உடன்வருவதையும் உணருகின்றோம். இதுதான் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு. அதாவது நாம் இந்த சர்வலோகத்தையும் படைத்த தேவனுடைய சொந்த பிள்ளைகளாக இருக்கின்றோம். அவர் நம்மை அன்பு செய்வதால் நம்மோடு உறவாடுகின்றார். ஆனால் தேவனை வாழ்வில் அறியாதவர்கள் இதனை அறிவதில்லை; நம்மையும் அறிவதில்லை. நாம் கூறினாலும் இவற்றை ஏற்றுக்கொள்வதில்லை.

எனவே, நாம் மேலே பார்த்த இராஜகுமாரனைப்போல இந்த உலகத்தில் இருக்கின்றோம். நமக்கு ஒரு பரம தகப்பன் உண்டு என்பதை நாம் உணர்ந்திருக்கின்றோம். ஆனால் நமது அற்பமான நிலையினைக்கண்டு உலகம் நம்மை அற்பமாக எண்ணுகின்றது. அல்லது அவர்களில் ஒருவராக எண்ணுகின்றது. இதனை நாம் அவர்களுக்குப் புரியவைக்க முடியாது. காரணம், அவர்கள் இன்னும் தேவனையே அறியவில்லை. 

ஆனால் தேவன் நமக்கு உலக மக்களைக்குறித்தும், உலக நடவடிக்கைகளைக்குறித்தும் வெளிப்பாடுகளைத் தருகின்றார். மட்டுமல்ல, நம்மை ஆண்டவராகிய இயேசு, பிதா அவருக்குத் தந்தவர்கள் என்கின்றார். எனவே, நமக்காக அவர் ஏற்கெனவே ஜெபித்துள்ளார். "பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." ( யோவான் 17: 24) என்று நமக்காக வேண்டுகின்றார்.

உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. ஆனால் கிறிஸ்து நம்மை அறிந்துள்ளார் என்பதே மேன்மை. ஆம், இதுவே நமது மேன்மை. மட்டுமல்ல, "நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்." என்று நமது எதிர்காலத்துக்காக பிதாவிடம் ஜெபித்துள்ளார். எனவே, உலக மக்களின் புறக்கணிப்பு, உலகத்திலுள்ள மற்றவர்களைவிட நமக்கு இருக்கும் குறைவுகள் இவற்றைக்குறித்துக் கவலைப்படாமல் தேவனது அன்பில் தொடர்ந்து நிலைத்து வாழ்வோம். உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியாமலிருப்பது ஆச்சரியமல்ல. 


No comments: