Thursday, January 26, 2023

"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்"

ஆதவன் 🌞 731 🌻 ஜனவரி 28,  2023 சனிக்கிழமை 

"நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்." ( லுூக்கா 6 : 45 )

இயேசு கிறிஸ்து கூறிய இந்த வசனத்தின் பொருளில் ஒரு தமிழ் பழமொழியும்  உண்டு. அது, "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது. நம்மிடம் இருப்பதுதான் நம்மிலிருந்துவெளிப்படும்; நம்மிடம் இருப்பதைத்தான் நாம் பிறருக்குக் கொடுக்க முடியும். 

இதனை நாம் நமது அனுபவங்களில் பார்க்கலாம். பலர் கூடியுள்ள வீட்டு நிகழ்ச்சிகளிலோ கடைவீதிகளில் சந்திக்கும்போதோ  சிலர் எப்போதும் சொத்துகளைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். "அங்கே ஒரு அரை ஏக்கர் கிடக்கிறது, இங்கே ஒரு பத்து சென்ட் நிலம் கிடக்கிறது..." என்பதாக இருக்கும் இவர்களது பேச்சு. 

பெண்கள் பெரும்பாலும் சேலைகள், நகைகள் பற்றியே பேசுவார்கள். சிலர் எப்போதும் பக்கத்து வீட்டுக்காரர்களைப்பற்றியே பேசுவார்கள். அவர்களது குறைகள், அல்லது அவர்கள் வீட்டில் அடக்கும் நிகழ்ச்சிகள் இவைகளையே பேசுவார்கள். மேலும் சிலர் தங்களைப்பற்றி, தங்கள் குடும்பம், பிள்ளைகள், தங்களது தொழில், பதவி இவைகளைப்பற்றியே பேசுவார்கள். மற்றவர்கள் இவர்கள் பேசுவதைக் கவனிக்கிறார்களா என்றுகூட இவர்கள் பார்ப்பதில்லை.  

ஆம், இவர்கள்  ஏன் இப்படிப் பேசுகிறார்கள் என்று பார்ப்போமானால் அந்த எண்ணங்களே இவர்களது இருதயத்தில் நிறைந்துள்ளது என்று பொருள். அவையே வார்த்தைகளாக வெளிவருகின்றன. 

ஆவிக்குரிய காரியங்களிலும் இதுவே நடைபெறுகின்றது. தங்களை ஆவிக்குரியவர்கள் என்று கூறிக்கொண்டாலும் பண ஆசை உள்ளவர்கள், பேசும் பேச்சுக்கள் ஜெபங்கள் இவை அனைத்தும் இவர்களது இந்த ஆசையைத் தீர்ப்பதற்காகவே இருக்கும். 

உலக ஆசீர்வாதங்களை மட்டுமே  பிரசங்கிக்கும் ஊழியர்களின்  இருதயமும் உலக இச்சையால் நிரம்பியவையே. இத்தகைய ஊழியர்களால் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சத்தியங்களைப் பிரசங்கிக்க முடியாது. தங்களது இருதயத்தின் ஆசையையே அவர்கள் மற்றவர்களுக்குப் போதனையாகக் கொடுப்பார்கள். அவர்களது போதனைகள் மற்றும் செயல்பாடுகள் இவை இன்னும் அதிகம் பணம் சேர்க்கும் எண்ணத்தின் அடிப்படையிலேயே இருக்கும்.

நமது இருதயத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பாடுகள் பட்டு உருவாக்கிய இரட்சிப்பு குறித்த ஆர்வமும், அவர்மேல் உண்மையான அன்பும்  இன்னும் நாம் ஆவிக்குரிய வளர்ச்சிநிலையினை அடையவேண்டும் எனும் எண்ணமும் இருக்குமானால் அவை குறித்தே பேசுவோம். அவைகள் குறித்தே சிந்திப்போம்.

அன்பானவர்களே, நமது இருதயத்தில் எத்தகைய சிந்தனைகள் இருக்கின்றன என்பதை நிதானித்துப்பார்ப்போம். இன்னமும் இருபத்திநான்கு மணி நேரமும் உலக காரியங்களையே சிந்தித்து, அவைகளையே பேசிக்கொண்டிருப்போமானால் நாம் நம்மை ஆவிக்குரிய மக்கள் என்று கூறிக்கொள்வது பொய்.   நமது உண்மை நிலையினை தேவன் அறிவார்.  "நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்."
( 1 யோவான்  3 : 20 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

நமது விசுவாசத்தை வாழ்வில் வெளிப்படுத்துவோம்;

ஆதவன் 🌞 730 🌻 ஜனவரி 27,  2023 வெள்ளிக்கிழமை 

"தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுடாமோ?" ( யாக்கோபு 2 : 19, 20 )


இந்த உலகத்திலுள்ள மக்கள் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான். ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அற்பமாக எண்ணுவதும், கேலி பேசுவதும் உண்டு. 

ஆனால் இந்த உலகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் அதிக பாவச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். நான் கம்யூனிச இயக்கத்தில் இருந்தபோது பல கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைப் பார்த்துள்ளேன். பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைவிட நல்ல நேர்மையான  வாழ்க்கையே வாழ்கின்றனர். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோருமே நல்லவர்களாய் இருந்திருந்தால்  இந்த உலகம் அமைதிப் பூங்காவாக இருந்திருக்கும். ஆனால் அப்படி இல்லை. 

இதனையே அப்போஸ்தலரான யாக்கோபு இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் தெளிவுபடுத்துகின்றார். அதாவது நீ உன்னை கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்று கூறிக்கொள்கிறாய், அது நல்லதுதான் ஆனால் பிசாசுகளும் கூட கடவுள் ஒருவர் உண்டு என நம்பி நடுங்குகின்றன. நீ உனது செயல்களை மாற்றிடாமல் இருந்தால் உனக்கும் பிசாசுக்கு வித்தியாசமில்லை என்பதே அவர் கூறுவது.

தேவனை விசுவாசிக்கிறேன் என்று கூறிக்கொண்டு ஆலயங்களுக்குச் செல்வதும், ஜெபக்கூட்டங்களில் கலந்துகொள்வதும்,  காணிக்கைகள் கொடுப்பதும், வேதாகமத்தை வாசிப்பதும் மட்டும் போதாது. நமது செயல்பாடுகள் தேவனுக்கேற்ற செயல்பாடுகளாக இருக்கவேண்டும். 

தேவனை விசுவாசிக்கும் நாம் நேர்மையாக வாழ்ந்து பிறருக்குச் சாட்சியாக விளங்கவேண்டும். தேவனையும் ஆராதித்துவிட்டு வாழ்க்கையில் துன்மார்க்கச் செயல்பாடுகள் இருக்குமானால் நாம் தேவன்மேல் கொண்டுள்ள விசுவாசமும், நமது தேவ பக்தியும் வீண். நாம் ஒரு செத்த வாழ்க்கையே வாழ்கின்றவர்களாக இருப்போம். அதனையே இந்த வசனம், "வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டாமோ?" என்று கூறுகின்றது.

கடவுள்மேலுள்ள நமது விசுவாசம் உண்மையானால் அவரை முற்றிலும் நம்புகிறவர்களாக இருப்போம். அவரால் எனது வாழ்க்கையில் தேவையான அனைத்தையும் தர முடியும் என்று நம்புகிறவர்களாக இருப்போம்.  

இன்றைய வசனத்தைத் தொடர்ந்து யாக்கோபு ஆபிரகாமின் விசுவாசத்தை எடுத்துக்கூறுகின்றார். ஆபிரகாம் தேவனை வெறுமனே விசுவாசிக்கமட்டும் செய்யவில்லை; விசுவாசத்தைச் செயலில் காட்டினார். ஜீவனுள்ள தேவனை விசுவாசிக்கும் நாமும் நமது விசுவாசத்தை வாழ்வில் வெளிப்படுத்துவோம்; அப்போதுதான் மற்றவர்களும்  தேவனை விசுவாசிக்கமுடியும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Wednesday, January 25, 2023

நமது எண்ணம்போலவே நமது ஆவிக்குரிய வாழ்க்கையும் இருக்கும்.

ஆதவன் 🌞 729 🌻 ஜனவரி 26,  2023 வியாழக்கிழமை 

"உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்." ( லுூக்கா 11 : 36 )

ஆவிக்குரிய வாழ்வின் மிக முக்கிய ஒரு சத்தியத்தை இயேசு கிறிஸ்து இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.  பொதுவாக ஜெபிப்பது, உபவாசிப்பது, காணிக்கைகள் கொடுப்பது இவைகளையே கிறிஸ்தவத்தில் ஊழியர்களும் விசுவாசிகளும் முக்கியமானதாகக் கருதுகின்றனர். ஆனால் இயேசு கிறிஸ்து நமது சரீரம் தூய்மையானதாக இருக்கவேண்டுமென்று கூறுகின்றார். 

நமது உடலானது தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கும் ஆலயமாயிருக்கிறது. அதனால்தான் இயேசு கிறிஸ்து கூறுகின்றார், இந்த ஆலயமாகிய உனது சரீரம் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால் ஒரு விளக்கு வெளிச்சம் கொடுப்பதுபோல நீ மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பவனாக இருப்பாய். வெளிச்சம் கொடுக்கும் வாழ்க்கையே இருளிலுள்ள மக்களுக்குக் கிறிஸ்துவை அறிவிக்க உதவிடும்.

அதாவது, நமது உடலால் நாம் பாவம் செய்யாமல் அதனைப் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்ளவேண்டியது அவசியம். அப்போஸ்தலனாகியபவுல் அடிகளும் ,  "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 ) என்று கூறுகின்றார். 

இன்று பலஆவிக்குரிய கிறிஸ்தவர்களும் பரிசுத்த ஆவியானவரின் வரங்களைப்  பெற்று மக்களிடம் தங்களை வெளிச்சம்போட்டுக் காட்ட விரும்புகிறார்கள்.  சிறப்பான வரங்கள் தங்களுக்கு இருந்தால் அது மக்கள் மத்தியில் தங்களை மதிப்புமிக்கவர்களாக மாற்றுமென்று நினைத்து வரங்களுக்காக ஜெபிக்கின்றார்கள். ஆனால் தேவனுக்குமுன் நமது உடலால் நாம் எப்படி இருக்கின்றோம் என்று எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகின்றனர். 

நமது ஒவ்வொரு உறுப்புக்களாலும்  நாம் பாவம் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே வரங்களுக்காக அல்ல; நம்மைத் தூய்மையானவர்களாகக் காத்துக்கொள்ள ஜெபிக்கவேண்டியதே முக்கியம். 

"ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 ) என எச்சரிக்கிறார் பவுல் அடிகள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் "ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு." ( லுூக்கா 11 : 35 ) என எச்சரிக்கிறார். நமது உடலை பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள நமது சுய முயற்சியால் கூடாது. எனவே அதற்கான பலத்தை முதலில் தேவனிடம் வேண்டுவோம். அப்போது தேவனது ஆவியானவர்தாமே நம்மை பரிசுத்த பாதையில் நடத்துவார். நமது எண்ணம்போலவே நமது ஆவிக்குரிய வாழ்க்கையும் இருக்கும்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Tuesday, January 24, 2023

கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.

ஆதவன் 🌞 728 🌻 ஜனவரி 25,  2023 புதன்கிழமை 

"அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்." ( எபேசியர் 4 : 30 )

நாம் நமது பாவங்களிலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மீட்கப்படும்போது பரிசுத்த ஆவியானவரை முத்திரையாகப் பெற்றுக்கொள்கின்றோம்.  இந்த ஆவியானவர் நமக்குள்ளேயே இருக்கின்றார். நமக்கு வழிகாட்டுகின்றார், நாம் எப்படி நடக்கவேண்டுமென்று போதிக்கின்றார். 

ஆனால் தேவன் வலுக்கட்டாயமாக தனது எண்ணத்தை மனிதர்களிடம் திணிப்பது கிடையாது. அவர் மனிதர்களுக்கென்று தனிப்பட்ட உரிமையையும், முடிவெடுக்கும் திறனையும் கொடுத்துள்ளார். நமக்கு அறிவுரையும், வழிகாட்டுதலும் ஆவியானவர் தருவாரேத்  தவிர நம்மை அவற்றைக் கடைபிடிக்க வலுக்கட்டாயப் படுத்தமாட்டார். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல், தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் என்று கூறுகின்றார். நாம் தேவ வழிகளைவிட்டு விலகும்போது, தேவனுக்கு ஏற்பில்லாத செயல்களைச் செய்யும்போது, பேசும்போது அது ஆவியானவரைத் துக்கப்படுத்துகின்றது. 

நமது தாய், தகப்பன்களை உதாரணமாகக் கொண்டு இதனை நாம் புரிந்துகொள்ளலாம். நமது பெற்றோர்கள் நம்முடனேயே இருந்தாலும் நமது சில  செயல்கள் அவர்களைத் துக்கத்துக்குள்ளாக்குகின்றது. காரணம் அவர்கள் அவற்றில் பிரியப்படுவதில்லை. நமது பார்வையில் நாம் செய்வதும் பேசுவதும் சரிபோலத் தெரிந்தாலும்  அது சில வேளைகளில் அவர்களைத் துக்கப்படச் செய்கின்றது. 

இதுபோலவே, நமது செயல்பாடுகள் தேவனைத் துக்கப்படுத்துகின்றன. ஆவியானவர் உடனேயே நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுவதில்லை. அவர் வேதனையோடு அமைதியாக இருக்கின்றார். ஆனால் நாம் தொடர்ந்து தேவனுக்கு எதிரானச் செயல்பாடுக்கைச் செய்யும்போது ஆவியானவரின் தொடர்பினையும் ஆலோசனைகளையும் இழந்துவிடுகின்றோம்.  தேவனைவிட்டு விலகிவிடுகின்றோம். 

அன்பானவர்களே, ஆவியானவரின் குரலைக்கேட்கும் அனுபவத்தையும் அப்படிக் கேட்டபடியே நடக்கவும் நாம் முற்படவேண்டும். இல்லையெனில் சாதாரண உலக மனிதர்களுக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். 

"நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்." ( சங்கீதம் 32 : 8, 9 )

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Monday, January 23, 2023

நமது விசுவாசத்தை வலுப்படுத்துவோம்.

ஆதவன் 🌞 727 🌻 ஜனவரி 24,  2023 செவ்வாய்க்கிழமை

"சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." ( யாக்கோபு 1 : 7 )

ஜெபத்தைக்குறித்த ஒரு சத்தியத்தை இன்றைய வசனம் எடுத்துக் கூறுகின்றது. நாம் ஜெபிக்கும்போது தேவ சித்தமறிந்து ஜெபிக்கவேண்டியது அவசியம். மேலும், இன்றைய வசனம், ஜெபிக்கும்போது சந்தேகமில்லாமல் உறுதியாக ஜெபிக்கவேண்டும் என்று கூறுகின்றது.   

சிறு குழந்தைகளாய் இருந்தபோது நாம் நமது அம்மா அப்பாவிடம் ஏதாவது கேட்கும்போது நாம் கேட்பது தேவையானது அல்லது நல்லது என அவர்கள் கருதினால்,  "வாங்கித் தருகிறேன் என்று கூறுவார்கள்".  நாம் அப்போது அவர்கள்மீது சந்தேகப் படமாட்டோம். கையில் காசு வந்தவுடன் வாங்கித்தருவார்கள் என்று பொறுமையோடு காத்திருப்போம். ஆனால் அவர்கள் சொன்னதுபோல நாம் கேட்டதை வாங்கித்தரும்போது நமது உள்ளம் மகிழ்ச்சியடையும். 

தேவனும் நமது தாயாகவும் தகப்பனாகவும் இருப்பதால் நாம் நமது மண்ணக தாய் தகப்பனை நம்புவதுபோல தேவனை விசுவாசிக்கவேண்டும். இயேசு கிறிஸ்துவும் ஜெபத்தைப்பற்றிக்  கூறும்போது, "நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்." ( மாற்கு 11 : 24 ) என்று கூறினார். 

ஆனால் நாம் அனைவருமே இந்த விஷயத்தில் இந்த உறுதியைக் கைக்கொள்ளத் தவறிவிடுகின்றோம். விசுவாசத்தைப்பற்றி எவ்வளவுதான் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினாலும், எழுதினாலும் சில வேளைகளில் நமக்கும் சந்தேகம் வந்துவிடுகின்றது.

இப்படி சந்தேகப்படும் நம்மை எச்சரிப்பதுபோல இன்றைய வசனம் நமக்குக் கூறுகின்றது, சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக." என்று.

கடல் அலையானது நிம்மதியின்றி அலைந்து குமுறுவதுபோல சந்தேகப்படும் மனிதனின் உள்ளமும் குமுறும், குழம்பும். விசுவாசம் என்பதை ஆவியின் வரங்களில் ஒன்றாகவும் (1 கொரிந்தியர் 12:9) ஆவியின் கனிகளில் ஒன்றாகவும் (கலாத்தியர் 5:22) வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது விசுவாச வரத்தை நாம் தேவனிடம் வேண்டிப் பெறும்போது அது நம் வாழ்க்கையில் கனியாக வெளிப்படும். எனவே நாம் அனைவருமே நமது ஜெபங்களில் இந்த வரத்தைப் பெறும்படி வேண்டுவோம்.   

ஏனெனில், "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்." ( எபிரெயர் 11 : 6 ) என்கிறது தேவ வசனம். தேவனுக்குப் பிரியமாக இருக்க முயற்சிப்போம்; நமது விசுவாசத்தை வலுப்படுத்துவோம்.

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Sunday, January 22, 2023

நமக்காகச் சிலுவையில் அறையுண்டது ஊழியனா, கிறிஸ்துவா?

ஆதவன் 🌞 726 🌻 ஜனவரி 23,  2023 திங்கள்கிழமை





உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்?  (1 கொரிந்தியர் 1:11,12) 

கிறிஸ்துவைவிட்டு ஊழியர்களைத் தேடி  ஓடும் மக்கள் கூட்டம் இன்று பெருகிவிட்டது. சினிமா நடிகர்களுக்கு  ரசிகர்கள் பட்டாளம் இருப்பதுபோல இன்று கிறிஸ்தவ ஊழியர்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் பெருகிவிட்டது. இது இன்று நடப்பதல்ல; கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்திலேயே இருந்துள்ளது. இதனையே அப்போஸ்தலனாகிய பவுல் கண்டிக்கின்றார். 

தனிப்பட்ட ஊழியர்களை முன்னுதாரணமாகக் கொண்டு வாழும்போது நாம் கிறிஸ்துவைவிட்டு விலகிவிடுகின்றோம். ஊழியரின் தவறான போதனைகளை அங்கீகரிக்கின்றோம் என்று பொருள்.  ஊழியர்கள் என்பவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட நட்சத்திர அந்தஸ்து கொடுப்பது தவறு. ஊழியர்களுக்கு மரியாதையும் கனமும் கொடுக்கவேண்டுமேத் தவிர அவர்களை அரசியல் தலைவனைப்போலோ, சினிமா நடிகனைப்போலோ பின்பற்றவேண்டிய அவசியமில்லை. 

கிறிஸ்துவின் ஒளியை உள்வாங்கி நற்செய்தி அறிவிப்பவர்களே ஊழியர்கள். ஆனால் தனிப்பட்ட ஊழியர்களை நாம் சார்ந்துகொள்ளும்போது கிறிஸ்துவின் நற்செய்தியை அவர்கள் தவறாகவோ திரித்தோ பிரசங்கித்தாலும் கைதட்டி ரசிக்கும் ரசிகர்கள் ஆகிவிடுகின்றோம். 

"நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்." என்கிறார் பவுல் அடிகள். இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள கிறிஸ்துவின் ஊழியர்களாது பெயர்களை எடுத்துவிட்டு அந்த இடத்தில் உங்களது தற்போதைய அபிமான ஊழியரின் பெயரைப் போட்டு இந்த வசனத்தைச்சொல்லிப்பாருங்கள்.

இந்த வசனத்தின் இறுதியில் பவுல் கேட்கின்றார்:- "பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? " என்று. அன்பானவர்களே, நீங்கள் தேடி ஓடும் இந்த குறிப்பிட்ட ஊழியனா உகளுக்காகச் சிலுவையில் அறையப்பட்டார்? சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே நோக்கிப்பார்க்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

எவ்வளவு பிரபல பிரசங்கியாக இருந்தாலும், எவ்வளவு ஆழமான இறையியல் கட்டுரைகளை ஒருவர் எழுதினாலும் நாம் அவரது கருத்தை நமக்காக எடுத்துக்கொள்ள வேண்டுமேதவிர அவரை சினிமா நடிகர் போலக் கருதி அவர்  பின்னால் ஓடுபவர்களாக  இருப்போமானால் நாம் கிறிஸ்துவைவிட்டு விலகி விக்கிரக ஆராதனை செய்கின்றோம் என்று பொருள்.  

நமக்காகச்  சிலுவையில் அறையுண்டது ஊழியனா, கிறிஸ்துவா?
  
தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

Friday, January 20, 2023

அரசாங்கத்திடம் லஞ்சம் கொடுத்துக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதவன் 🌞 725 🌻 ஜனவரி 22,  2023 ஞாயிற்றுக்கிழமை

"இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்." ( எஸ்றா 7 : 6 )

வேத அறிஞனான எஸ்றா  எனும் தேவ மனிதனைக் குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. தேவனுடைய ஆலயத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்ட அவரது சிறப்புகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன. 

முதலாவது, "எஸ்றா தேறின வேதபாரகனாயிருந்தான்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது தேறின வேத அறிஞராக அவர் இருந்தார். மட்டுமல்ல, அவர் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கவில்லை. மாறாக, "கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்." ( எஸ்றா 7 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. 

எஸ்றா அப்படி இருந்ததால், தேவனாகிய கர்த்தரின் கரம் அவர் மேல் இருந்தது. எனவே, "அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்." 

வேத அறிஞரான எஸ்றா தனது சுய லாபத்துக்காக அரசாங்கத்திடம் உதவி கேட்கவில்லை; மாறாக தேவனுடைய பழுதுபட்ட ஆலயத்தைக் கட்டி எழுப்ப உதவிகோரினார். 

ஆனால் தங்களை வேத அறிஞர்கள் என்றும் கிறிஸ்தவத்தின் பிரதிநிதிகள் என்றும் கூறிக்கொள்ளும் இன்றைய பிரபல ஊழியர்களை நினைத்துப்பாருங்கள். இவர்கள் தங்களது பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்குத் தேவையான உதவிகளுக்கு அரசாங்கத்திடம் லஞ்சம் கொடுத்துக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.  தாங்கள்  வருமானவரி மோசடியிலிருந்து விடுபடவும், தங்கள்மேலுள்ள கோர்ட்கேஸ் தள்ளுபடியாகவும் அரசாங்க உதவியை நாடித் திரிகிறார்கள். 

தேவனாகிய கர்த்தருடைய கரம் அவர்கள்மேல் இல்லாதபடியினால்,  அதிகாரத்திலுள்ளவர்கள்  கேட்டவைகளையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்துத் தங்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் சாதாரண மக்கள் இந்த அறிவு இல்லாமலிருப்பதால் இந்தப் பிரபலங்களை கடவுளின் பிரதிநிதிகளாக நம்பி இவர்கள்பினால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எஸ்றாவைப்போல உண்மையும் உத்தமுமான ஊழியர்கள் இன்றும் உண்டு. அவர்களை நாம்தான் தேடிக் கண்டுகொள்ளவேண்டும். ஆனால் அப்படித் தேடி அவர்களைகூட அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லையானால் அத்தகைய  விசுவாசி எப்படி தேவனைக் கண்டுகொள்ளமுடியும்?  

பரிதாபத்துக்குரிய நிலையில் கிறிஸ்தவ விசுவாசிகள்! பரிசுத்த ஆவியானவர் நமது மனக்கண்களைத் திறந்திட வேண்டுதல்செய்வோம்; உண்மையின் வெளிச்சத்தில் தேவனைத் தேடுவோம். 

தேவ செய்தி:- ✍️ சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                  தொடர்புக்கு:- 9688933712

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - லுூக்கா 1 : 50 / Luke 1:50

  " ஆதவன் " தியானம் - 1979 ஜூலை 09, வியாழன் 2026       "அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுற...