Thursday, October 13, 2022

பூரணராகும்படி கடந்து போவோமாக.

 ஆதவன் 🖋️ 625 ⛪ அக்டோபர் 14,  2022 வெள்ளிக்கிழமை

"நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்." (13:11) 

இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் மீட்பு அனுபவத்தைப் பெறும்போது நாம் மறுபடி பிறந்தவர்களாகின்றோம். இந்த மறுபடி பிறக்கும் அனுபவமே தேவனுடைய ராஜ்யத்தில் நாம் நுழைவதற்கு முதல்படி. எனவேதான் இயேசு கிறிஸ்துக்  கூறினார், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" ( யோவான் 3 : 3 ) இந்த வார்த்தைகளை இயேசு கிறிஸ்து நிக்கோதேமு எனும் யூத போதகரிடம் கூறினார். தேவனுடைய வார்த்தைகளைக் கற்று போதிக்கும் போதகர்களுக்கும்கூட மறுபடி பிறக்கவேண்டியது அவசியமாயிருக்கிறது.  

இப்படி நாம் மறுபடி பிறக்கும்போது குழந்தைகளாய் மாறுகின்றோம். இந்த அனுபவத்துக்குப்பின் வேத வசனங்கள் நாம் இதுவரை வாசித்துப் புரிந்துகொண்டதைவிட  வித்தியாசமான முறையில் நமக்குப் புரியத் துவங்கும். 

இன்றைய வசனம் இப்படி ஆவிக்குரிய மறுபிறப்பு அனுபவம் பெற்றவர்களுக்கு அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதாகும்.

மறுபிறப்படைந்து  நாம் புதிதாய்ப்பிறந்த குழந்தையாகும்போது முதலில் முற்றிலும் ஆவிக்குரியச் சத்தியங்களை அறிந்து அதன்படி வாழ முடியாமல் குழந்தைகள்போலத்தான் இருப்போம். எனவே நாம் இப்படிக்  குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசி, குழந்தையைப்போலச் சிந்தித்து, குழந்தையைப்போல யோசித்துக் கொண்டிருப்போம்.  ஆனால் நாம் இதே குழந்தைகள்போல எப்போதும் இருக்கக்கூடாது. நமக்கு ஆவிக்குரிய வளர்ச்சி வேண்டும். அப்போது மட்டுமே நாம் முழுமையான  புருஷர்களைப்போலாகி ஆவிக்குரிய வளர்ச்சியடைந்து குழந்தைக்கேற்றவைகளை ஒழிக்கமுடியும். 

இதனையே எபிரெயர் நிருபத்திலும் நாம் வாசிக்கின்றோம். "பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்." ( எபிரெயர் 5 : 13 )

ஆவிக்குரிய வளர்ச்சி நாம் எடுக்கும் முயற்சியில்தான் இருகின்றது. வெறுமனே ஆராதையில் கலந்துகொண்டு ஒருசில பக்தி காரியங்களில் ஈடுபடுவது போதாது. நாம் தேவன் அருளும் ஞானப் பாலின்மேல் ஆர்வமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். அப்போதுதான் நம்மில் ஆவிக்குரிய வளர்ச்சி இருக்கும். எனவேதான் அப்போஸ்தலரான பேதுரு, "நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்." ( 1 பேதுரு 2 : 3 ) என்று அறிவுறுத்துகின்றார். 

"சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்." ( 1 கொரிந்தியர் 14 : 20 ) என்கின்றார் பவுல் அடிகள். 

குழந்தைகளாய் இருக்கும் நாம் அப்படியே இருந்துவிடாமல் பூரணமாகவேண்டும்.  மனம்திரும்புதல், விசுவாசம், ஞானஸ்நானம், ஆவியின் வரங்கள், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு போன்ற அடிப்படை சத்தியங்களுக்கும் மேலாக நாம் வளரவேண்டும். இந்த சத்தியங்கள் கிறிஸ்தவத்தின் அடிப்படை அஸ்திபாரமானவை. ஆனால் நாம் இதற்குமேல் கட்டப்படவேண்டும். இதற்குமேல் நாம் வளரும்போது மட்டுமே பாவத்தை மேற்கொண்டு வெற்றிச்சிறக்க முடியும். நமது பரிசுத்த பிரதான ஆசாரியனான இயேசு கிறிஸ்துவோடு மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் நுழைய முடியும். 

இதனையே எபிரெய நிருப ஆசிரியர் கூறுகின்றார், "கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக."  ( எபிரெயர் 6 : 1,2 )

ஆம் அன்பானவர்களே, மறுபடி பிறந்த அனுபவத்தைப் பெற்றிடத் தேவனிடம் நமது பாவங்களை அறிக்கையிட்டு வேண்டுவோம்.  அப்படி மறுபடி பிறந்து குழந்தைகளாக மாறியபின் தேவ வசனமாகிய பாலை உண்டு ஆவிக்குரிய வளர்ச்சி பெறுவோம்.  கிறிஸ்தவத்தின் அஸ்திபார உபதேசக் கட்டளைகளை நிறைவேற்றி அடுத்தகட்டமாக பூரண மனிதர்களாக மாறி  கிறிஸ்துவோடு மகா பரிசுத்த ஸ்தலத்தினலுள் நுழைந்திடத் தகுதி பெறுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Tuesday, October 11, 2022

ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்.

ஆதவன் 🖋️ 624 ⛪ அக்டோபர் 13,  2022 வியாழக்கிழமை

"இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்" ( ஓசியா 8 : 14 )

இன்று ஆலயங்களை பகட்டாகக்  கட்டுவதற்கு கோடிக்கணக்கான பணம் செலவழிக்கப்படுகின்றது. ஆலயக் கோபுரங்கள் அருகிலுள்ள பிற ஊர்களிலுள்ள கோபுரங்களைவிட உயரமாக இருக்கவேண்டுமென்று போட்டிபோட்டு உயர்த்தப்படுகின்றன.  ஆலய கட்டுமானத்துக்கு நன்கொடை சேகரிப்பதில் ஆலயக் கமிட்டியினர்   கடினமாக உழைக்கின்றனர். சேர்க்கப்படும் நன்கொடையில் ஒரு பகுதி, அதை சேகரிக்கும் குழுவினரின் உணவுக்காகச்  செலவிடப்படுகின்றது. ஆம், கடினமான உழைப்புத்தான்!. 

ஆனால், இப்படி நன்கொடை சேகரிப்பதில் நாட்டம்கொண்டு அலைபவர்களும் அதற்கு உடந்தையாக இருக்கும் ஊழியர்களும் தங்களது தனிப்பட்ட வாழ்வில் கிறிஸ்துவை அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. நன்கொடை சேகரிப்பதிலும் ஆலயப் பணிகளிலும் காட்டும் ஆர்வத்தைத் தேவனை அறியும் அறிவில் வளரவேண்டும் என்று எத்தனைபேர் முயலுகின்றனர்?

இப்படி தனிப்பட்ட முறையில் தேவனை அறியாமல் இருந்துகொண்டு ஆலயப்பணிகளுக்காக உழைப்பதையே இன்றைய வசனம் வேதனையோடு குறிப்பிடுகின்றது, "இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்" என்று. 

அன்பானவர்களே, புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழும் கர்த்தருடைய விசுவாசிகளான நாம் தான் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள். நமது உடல்தான் பரிசுத்த ஆவியின் ஆலயமாயிருக்கிறது. "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" ( 1 கொரிந்தியர் 6 : 19 ) என எழுதுகின்றார் பவுல் அடிகள். 

ஆம், நாம் நம்முடையவர்களல்ல; தேவனுக்கானவர்கள். தேவனுக்கு உரியதான நமது உடல் பரிசுத்தமாக இருக்கவேண்டியது அவசியம்.  

"நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?"( 1 கொரிந்தியர் 3 : 16 )

நாம் முதலில் கட்டவேண்டியது நமது உடலான ஆலயத்தை. உடலால் பாவிகளாக இருந்துகொண்டு வானுயர ஆலயம் கட்ட முயலுவதிலோ, கட்ட உதவுவதிலோ அர்த்தமில்லை. அதனை தேவன் விரும்புவதுமில்லை. தன்னை உண்டாக்கினவரை மறந்து ஆலயத்தைக் கட்டுவோர் தங்களது சுய பெருமைக்காகவே சில, பல  செயல்களைச்  செய்கின்றனர். நாம் மண்ணினாலல்ல கிறிஸ்து இயேசுவின்மேல் நமது சரீரமாகிய ஆலயத்தைக் கட்டவேண்டும். அதாவது,  போடப்பட்ட அஸ்திபாரமாகிய கிறிஸ்துவின்மேல் நாம் நமது ஆவிக்குரிய வாழ்வைக் கட்டவேண்டும். (1 கொரிந்தியர் 3:11,12) என்கிறார் பவுல் அடிகள். 

நாம் நமது உடலான ஆலயதைக் காட்டாமல் பெருமைக்காகவும் மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறவேண்டியும் மண்ணாலான ஆலயத்தைக் கட்டுவதில் கவனம் செலுத்திக் கொண்டு நமது உடலான ஆலயத்தை கட்டாமல் இருந்து அதனைக் கெடுத்துவிட்டோமானால் அது நமது ஆத்துமாவுக்குப் பெரிய அழிவையே கொண்டுவரும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல் அடிகள் பின்வருமாறு எச்சரிப்பு கலந்த அறிவுரைகூறுகின்றார்:- "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 )

 தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

அவரது வருகை சமீபம்

 ஆதவன் 🖋️ 623 ⛪ அக்டோபர் 12,  2022 புதன்கிழமை

"உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்." ( மத்தேயு 24 : 42 )

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையினைக்குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. இயேசு கிறிஸ்து தனது வருகையினைக் குறித்தும் தனது வருகைக்கு முன் என்னென்ன அடையாளங்கள் நடக்கும் என்பதனையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் பல அடையாளங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. இவை  இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமாய் இருக்கின்றது என்பதை நமக்கு உணர்த்துகின்றன. ஆனால் எப்போது அவர் வருவார் என்பது ஒரு மறைபொருளாகவே இருக்கின்றது. 

இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முக்கியமான ஒரு முன்னடையாளம் கள்ளத்  தீர்க்கதரிசிகளின் பெருக்கம். அது இன்று மிக அளவில் இருப்பது அவரது வருகை சமீபம் என்பதை உணர்த்துகின்றது.  

வருகைக்குமுன், "கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்." ( மத்தேயு 24 : 24 ) என்று இயேசு கிறிஸ்துக்  கூறினார். கிறிஸ்துவோடு நெருங்கிய உறவோடு நாம் வாழாமல் இருப்போமானால் இந்தக்  கள்ளத்  தீர்க்கதரிசிகளை அடையாளம் காண முடியாது.

இயேசு கிறிஸ்து தனது வருகைக்கு முன்னதான சில அடையாளங்களைக் கூறினாரேத் தவிர தான் எப்போது வருவேன் என்பதைக் கணக்குப்பார்க்கச் சொல்லவில்லை. இன்று பல ஊழியர்கள் இயேசு கிறிஸ்துவின் வருகை எப்போது இருக்கும் என்பதைத் தங்களது மூளை அறிவினால் கணக்குப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.  விசுவாசிகளை அறிவுறுத்துவதாக எண்ணிக்கொண்டு பல்வேறு பட விளக்கங்களையும் கொடுக்கின்றனர். 

அன்பானவர்களே, அந்தநாள் நமக்கு முன்னமேயே அறியக்கூடிய நாள் அல்ல. அதனை தேவன் மறைவாகவே வைத்துள்ளார். "அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்." ( மத்தேயு 24 : 36 ) என்று இயேசு கிறிஸ்து தெளிவாகக் கூறிவிட்டார். இதற்குமேல் அவரது வருகையை ஆராய்ச்சி பண்ணுவது அறிவுடைமையல்ல. 

இயேசு கிறிஸ்து கூறினார், "நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்." ( மத்தேயு 24 : 44 ) ஆயத்தமாய் இருப்பது என்பது கிறிஸ்துவின் கட்டளைகளைக் கடைபிடித்து, பரிசுத்தமான ஒரு வாழ்வு வாழ்வதைக் குறிக்கின்றது. 

அப்போஸ்தலரான பேதுருவும், "கர்த்தருடைய நாள் இரவில் திருடன் வருகிறவிதமாய் வரும் " (2 பேதுரு 3:10) என்று எச்சரித்துக்  கூறுகின்றார். 

இயேசு கிறிஸ்து கூறினார், "திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்." ( மத்தேயு 24 : 43 ). தனது வருகையினைக்குறித்து கிறிஸ்துவே அறியார் என்றும் கூறப்பட்டுள்ளது. ".......................... பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்." ( மாற்கு 13 : 32 )

பிதாவிடம் கேள்விப்பட்ட அனைத்தையும் சீடர்களுக்கு அறிவித்த இயேசு கிறிஸ்து நமக்கு இது தேவையென்றால் சொல்லாமல் இருந்திருப்பாரா? எனவே குருவுக்கு மிஞ்சிய சீடனாக நாம் விரும்பவேண்டாம். கிறிஸ்துவின் வருகைக்குறித்து நாள் கணக்கிடுபவனும் கள்ளதீர்கதரிசிகளில் ஒருவனே. கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி வாழ மக்களை வழிநடத்தவேண்டியது அவசியமேத்தவிர வருகையைக் குறித்த ஆராய்ச்சி தேவையில்லாதது. ஆனால், இன்று ஆவிக்குரிய சபை என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சில சபைகளில் இதுவே முக்கிய ஆராய்ச்சியும் போதனையுமாய் இருக்கின்றது. 

ஆவியானவரின் வழிநடத்துதலின்படி வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். பரிசுத்தமுள்ள வாழ்க்கை வாழ அவரது துணையை நாடுவோம். ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருந்து அவரை அண்டிக்கொள்வோம்; கிறிஸ்து எப்போது வந்தாலும் அவரைச் சந்திக்க ஆயத்தமாய் இருப்போம்.  

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Monday, October 10, 2022

பரிதானம் (லஞ்சம்)

 ஆதவன் 🖋️ 622 ⛪ அக்டோபர் 11,  2022 செவ்வாய்க்கிழமை

"பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்". ( நீதிமொழிகள் 15 : 27 )


பரிதானம் என்பது லஞ்சம் வாங்குவதைக் குறிக்கின்றது. லஞ்சம் வாங்குவதன் காரணம் பொருளாசையாகும். சிலர் குறைந்த வருமானத்திலும் நேர்மையாக வாழுகின்றனர். ஆனால் பலர் நல்ல வேலை, நல்ல உயர்ந்த பதவி, நல்ல சம்பளம் இருந்தும் லஞ்சம் வாங்கி வாழுகின்றனர். இன்றைய வசனம் கூறுகின்றது, பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான். அதாவது பொருளாசைப்பிடித்து குறுக்கு வழியில் செல்கிறவனது வீடு சமாதானமின்றி கலைந்துபோகும். லஞ்சத்தை வெறுக்கிறவனோ பிழைப்பான். 

யோவான் ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்துவந்தபோது பலரும் அவரிடம் வந்தனர். அப்போது, "போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும்  இருங்கள் என்றான்." (லூக்கா 3:14) இந்தக்காலத்தில் போலீசார் செய்யும் பணியை அந்தக்காலத்தில் போர் சேவகர்கள் செய்து வந்தனர். அவர்களிடம்தான் யோவான் "பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும்  இருங்கள்" என்று கூறுகின்றார். லஞ்சம் வாங்குவதற்காக காவல்துறையில் உள்ள சிலர் இப்படிப் பொய் குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர்.

பழைய ஏற்பாட்டிலும்கூட பல வசனங்கள் பரிதானம் எனும் லஞ்சம் வாங்குவதைக் கண்டிக்கின்றன.. "பரிதானம்  வாங்காதிருப்பாயாக;  பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும்." (யாத்திராகமம் 23:8)

"நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்". (உபாகமம் 16:19)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறினார், "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல." ( லுூக்கா 12 : 15 ) பொருளாசை பிடித்து அதிகமான பணத்தைக் குறுக்கு வழியில் சேர்பவனுக்கு அது எந்த விதத்திலும் உதவாது. அது அவனுக்கு வாழ்வு அல்ல. அது நமது ஆத்துமாவை நரகத்துக்கு நேராக இழுத்துச் சென்றுவிடும்.

அப்போஸ்தலரான பவுல் அடிகளும், "திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை."( 1 கொரிந்தியர் 6 : 10 ) என்று கூறுகின்றார். 

இதனை வாசிக்கும் அன்புச்  சகோதரனே சகோதரியே, தெரிந்தோ தெரியாமலோ இதுவரை நீங்கள் இந்தக்காரியத்தில் ஈடுபட்டிருந்தால் தேவனிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புங்கள். தொடர்ந்து இதே காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டு எவ்வளவு ஜெபித்தாலும் தேவன் அதனைக் கேட்பதில்லை; குடும்ப சமாதானமும் வருவதில்லை. இன்றைய வசனம் கூறுவதுபோல பரிதானம் வாங்கி கலைந்துபோன குடும்பங்கள்   ஒன்று இரண்டல்ல, பல்வேறு சாட்சிகளை நான் கேட்டுளேன்; பார்த்துள்ளேன். கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்துக் கீழ்ப்படிவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.  

"நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்" (எபிரெயர் 13:5)

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Sunday, October 09, 2022

கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே

 ஆதவன் 🖋️ 621 ⛪ அக்டோபர் 10,  2022 திங்கள்கிழமை

"நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது." ( எபேசியர் 4 : 26 )

இன்று நாம் தினசரி செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிச் செய்திகளிலும் பல்வேறு கொலைகள், கொலை முயற்சிகள், கற்பழிப்புகள், ஏமாற்று போன்ற செய்திகளை அதிகமாகப் படிக்கின்றோம்; பார்க்கின்றோம். இதுவரை நாம் கேள்விப்படாத புதிய புதிய முறைகளில் கொலைகள் நடக்கின்றன. பெரும்பாலான மூர்க்கமான காரியங்கள் நடைபெறுவதற்குக் காரணம் கோபம்தான். 

கோபம் வராத மனிதர்கள் உலகினில் இல்லை. ஆவிக்குரிய மனிதர்களும் கோபமடைவது தவிர்க்கமுடியாதது. இயேசு கிறிஸ்துவும் சில வேளைகளில் கோபமடைந்தார்.  அனால் மற்றவர்களைவிட நாம் இந்தக் கோப விஷயத்தில் வித்தியாசமாக இருக்கவேண்டும். அதனையே அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். அதாவது, "கோபம் கொண்டாலும் பாவ காரியங்களில் ஈடுபடாதிருங்கள்" என்கின்றார்.  மேலும் அந்தக் கோபத்தை இருதயத்தில் வைத்துக்கொண்டு இருக்காதிருங்கள். நீங்கள் கோபமடைந்தாலும் சூரியன் மறைவதற்குள் அது தணியக்கடவது என்கின்றார். 

ஏனெனில், இரவு நேரங்களில்தான் மனமானது பல தேவையில்லாத விஷயங்களைச்  சிந்திக்கும். அது பல்வேறு பாவக்  காரியங்களில் ஈடுபடச் செய்யும். சூரியன் மறைவதற்குள் கோபம் தணியாவிட்டால் எப்படிப் பழிவாங்கலாம் என்று மனம் சிந்திக்கும்.   எனவேதான் பகல் பொழுதைவிட இரவு நேரங்களில் கொலைகளும் இதர சட்டத்துக்குப் புறம்பானச் செயல்களும் அதிகமாக நடக்கின்றன.  

நீதிமொழிகள் புத்தகத்தில், "உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது" ( நீதிமொழிகள் 27 : 4 ) என்று வாசிக்கின்றோம். ஆம், கோபம் நிஷ்டூரமானச் செயல்களைச் செய்ய நம்மைத் தூண்டிவிடும்.

"உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்." ( பிரசங்கி 7 : 9 ) என்கின்றது பிரசங்கி. அதாவது இந்த வசனம் கோபம் கொள்பவன் மூடன் என்று கூடுகின்றது. "மூடனுக்குக் கோபம் மூக்கின்மேலே" என்று ஒரு தமிழ் பழமொழியே உண்டு. பொதுவாக இந்த உலகத்தில் கிறிஸ்துவை அறியாத ஞானிகள்கூட  அதிக பொறுமையுடன் இருக்கின்றனர். ஆம், ஞானம் பொறுமையை உண்டாக்கும்.

சரி, ஆவிக்குரிய நாம் இந்தக் கோபத்தை அடக்குவது எப்படி? அது அப்போஸ்தலரான பவுல் அடிகள் கூறுவதுபோல எல்லாவற்றுக்காகவும் ஸ்தோத்திரம் செய்யும்போது மட்டுமே அடங்கும். ஏனெனில் அப்படிச் செய்யும்போது கோபம் தணிந்து தேவ சமாதானம் நமக்குள் வரும். அப்போது இன்றைய வசனம் கூறுவதுபோல சூரியன் மறைவதற்குள் நமது கோபம் நம்மைவிட்டு மறையும்.  ஆம், "எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது." ( 1 தெசலோனிக்கேயர் 5 : 18 )  

மேலும், கோபத்தை அடக்காமல் இருந்தோமானால் நாம் தேவ நீதி செயல்பட விடாமல்  தடுப்பவர்களாக இருப்போம். தேவன் ஒவ்வொரு காரியத்தையும் நீதியாய் நடப்பிக்கின்றார். நாம் கோபம் கொண்டு விரைந்து செயல்படும்போது தேவன் செயல்படமுடியாமல் போகின்றது. "மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே."( யாக்கோபு 1 : 20 )

அன்பானவர்களே, கூடுமான மட்டும் கோபத்தைத் தவிர்ப்போம். அப்படி கோபம் கொண்டாலும் பவுல் அடிகள் கூறுவதுபோல அதனை வைராக்யமாகக் கொள்ளாமல் இரவு விடிவதற்குள் மறந்துவிடுவோம். அப்படி மறப்பதற்கு பவுல் அடிகள் கூறுவதுபோல அனைத்துக்காகவும் ஸ்தோத்திரம் செய்வோம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

Friday, October 07, 2022

ஆபிரகாம் விசுவாசித்து ஒரு பரதேசியைப்போல அங்கு வாழ்ந்திருந்தார்

 ஆதவன் 🖋️ 620 ⛪ அக்டோபர் 09,  2022 ஞாயிற்றுக்கிழமை

"விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போல சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்." ( எபிரெயர் 11 : 9 )

ஆபிரகாமுக்குத் தேவன் மிகப்பெரிய ஆசீர்வாதத்தை வாக்களித்திருந்தார். ஆபிரகாம் அதனை முழு விசுவாசத்தோடு ஏற்று வாழ்ந்தார். தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் என்ன? "நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்." ( ஆதியாகமம் 17 : 8 ) என்பதே அது. 

ஆராமில் குடியிருந்தபோது "கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ( ஆதியாகமம் 12 : 1, 2 ) என்று வாக்களித்தார். அந்த தேவ வாக்குறுதியை நம்பி தனது வீடு வாசல், சொத்துக்களை விட்டுவிட்டு ஆபிரகாம் பயணமானார். தான் போகுமிடம் எது என்பது தெரியாமலே ஆபிரகாம் புறப்பட்டுப் போனார். (எபிரெயர் 11:8)

ஆனால் தேவன் வாக்களித்த வாக்குறுதி உடனேயே நிறைவேறிடவில்லை. தேவன் அளித்த வாக்குத்தத்தை ஆபிரகாம் விசுவாசித்து ஒரு பரதேசியைப்போல அங்கு வாழ்ந்திருந்தார். அவரோடு வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கும்  யாக்கோபும்  கூடாரங்களிலே குடியிருந்தார்கள். 

பரதேசி என்பதற்கு வீடு வாசல் அற்றவன் என்று பொருள். ஒரு உதாரணத்துக்கு இப்படி எண்ணிப்பாருங்கள்... பேருந்து நிலையங்களின் அருகில் கூடாரம் அடித்துத் தங்கியிருக்கும் பரதேசியாகிய நரிக்குறவர் ஒருவரிடம், "இந்த நகரத்தை உனக்குச் சொந்தமாகத் தருவேன்". என்று கூறுவதுபோல உள்ளது தேவன் கூறுவது. இப்படிக் கூறுவதை எளிதில் நம்பிவிடமுடியாது. ஆனால், தேவனிடம் அசைக்க முடியாத விசுவாசமுள்ளவனாகிய ஆபிரகாம் அதனை நம்பினார்.  

அப்படி நம்பியதால், "தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்." ( எபிரெயர் 11 : 10 ) என்று கூறப்பட்டுள்ளது. 

தனது தேசத்தை விட்டுவிட்டு வந்த ஆபிரகாம் இங்குள்ளச் சூழ்நிலைகளைப்  பார்த்து தேவனது வாக்குறுதியைச் சந்தேகித்து  மீண்டும் தனது சுய தேசத்துக்குத் திருப்பிச்செல்ல எண்ணவில்லை. அப்படி எண்ணியிருந்தால் அவரால் திரும்பிச் சென்றிருக்கமுடியும். இதனையே,  "தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்." ( எபிரெயர் 11 : 15,16 ) என்று கூறப்பட்டுள்ளது. 

ஆனால் ஆபிரகாமுக்குத் தேவன் அளித்த வாக்குத்தத்தம் நிறைவேற ஏறக்குறைய  450 ஆண்டுகள் ஆயின. அதனைப் பார்ப்பதற்கு ஆபிரகாம் உயிரோடு இல்லை. மரணமட்டும் ஆபிரகாம் தேவனது வாக்குறுதியை விசுவாசித்து பின்மாறாமல் இருந்து தனது சந்ததிகள் ஆசீர்வாதமான தேசத்தை சுதந்தரிக்கக் காரணமானார். அன்பானவர்களே, கர்த்தரது வாக்குறுதிகளை நம்பி பொறுமையோடு காத்திருப்போம். பொய் சொல்ல தேவன் மனிதனல்ல. 

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 )

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

அதிசயங்களையே போதிக்கும் ஊழியர்கள் கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று அறியாதவர்களே

 ஆதவன் 🖋️ 619 ⛪ அக்டோபர் 08,  2022 சனிக்கிழமை

"சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்." ( மத்தேயு 16 : 16 )

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் அனைவருமே கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படித் தன்னை அறிக்கையிட்ட பேதுருவை நோக்கிக் கூறினார்:- 

"யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்." ( மத்தேயு 16 : 17 )

மேற்படி வசனத்தின்மூலம் நாம் அறிந்துகொள்வது கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கையிடவேண்டுமானால் நமக்குப் பிதாவாகிய தேவன் அருளும் ஆவிக்குரிய வெளிப்பாடு வேண்டும். இயேசு கிறிஸ்துவோடு இருந்த சீடர்களுக்கே இப்படி வெளிப்பாடு தேவையாயிருக்கும்போது நமக்கு அது எவ்வளவு அதிகம் தேவை!

இயேசு கிறிஸ்துவைப் பலரும் பலவிதமாக எண்ணியிருந்தார்கள். சிலர் யோவான் ஸ்நானகன் என்றும், வேறு சிலர் எரேமியா அல்லது எலியா என்றும்  அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் எண்ணிக்கொண்டனர். (மத்தேயு 16:14) மற்றபடி அவரைப் பார்த்த பலரும் மரியாளின் மகனாக யோசேப்பின் மகனாகத்தான் பார்த்தனர்.

இன்றும் இயேசு கிறிஸ்துவிடம் அதிசய அற்புதங்களை எதிர்பார்த்து வரும் விசுவாசிகளும், அற்புத அதிசயங்களையே போதிக்கும் ஊழியர்களும் இப்படிக் கிறிஸ்துவை  தேவனுடைய குமாரனென்று அறியாதவர்களே. இயேசு கிறிஸ்துவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கவேண்டுமானால் அவர் உலகினில் வந்த நோக்கத்தை அறிந்திருக்கவேண்டும். அதனை அப்போஸ்தலரான யோவான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது." ( யோவான் 20 : 31 ) ஆம், நித்திய ஜீவனுக்காக கிறிஸ்துவைத் தேடுபவர்கள் மட்டுமே இயேசுவை தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிந்தவர்கள். இயேசு கிறிஸ்து மந்திரவாதம்போல அதிசயங்களைச் செய்துகாட்ட வரவில்லை. அவர் அதிசயங்களை செய்தது மக்கள் தான் சொல்வதை நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் ; அதனால் மீட்பு அனுபவம் பெறவேண்டும் என்பதகற்காகவே.

உலக ஞானத்தினாலும் கல்வி அறிவினாலும் ஒருவேளை தேவனைப்பற்றி அறியலாம் ஆனால் தேவனை அறியமுடியாது. இதுபோல பரலோக ராஜ்ய ரகசியங்களை அறிந்தவர்களே கிறிஸ்துவை தேவனுடைய குமாரனாக அறியமுடியும். அதற்கு சிறு குழந்தைக்ளுக்குள்ள கபடமற்ற இருதயம் தேவை. எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்"( மத்தேயு 11 : 25 ) என்று. 

அன்பானவர்களே, எல்லோரும் சொல்வதாலோ அல்லது நமக்குச் சிறு வயதில் ஞாயிறு மறைக்கல்வி வகுப்பில் சொல்லிக்கொடுத்ததாலோ நாம் இயேசு தேவனுடைய குமாரன் என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அவரை வாழ்வில் உணர்ந்து அனுபவித்து பேதுருவைப்போல அறிக்கையிடும் நிலைமைக்கு வரவேண்டும். கிறிஸ்துவின் ஜீவன் நமக்குள் இருந்தால் மட்டுமே நாமும் பேதுருவைப்போல இயேசுவை "ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து." என்று உறுதியாக உண்மையாக அறிக்கையிடமுடியும்.  இல்லாவிட்டால் நாம் சாதாரண ஒரு மதவாதியாக நமக்குச் சொல்லிக்கொடுத்ததை மட்டும் கிளிப்பிள்ளைபோலத் தான்  கூறிக்கொண்டிருப்போம். 

கிறிஸ்துவை வாழ்வில் அறிந்து, அவர் தேவனுடைய குமாரன் என்று  அறிக்கையிட வேண்டிய கிருபைக்காக வேண்டுவோம்.

தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ்                                                          தொடர்புக்கு- 96889 33712

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 15 : 19 / 1 Corinthians 15:19

" ஆதவன் " தியானம் - 1977 ஜூலை 07, செவ்வாய் 2026       "இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்...