Friday, September 23, 2022

கிறிஸ்துவுக்கு விருப்பமில்லாத செயல்களை நம்மைவிட்டு அகற்றுவோம்.

 ஆதவன் 🖋️ 609 ⛪ செப்டம்பர் 28,  2022 புதன்கிழமை

"பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 )

உலகத்தால் கறைபடாதபடித் தங்களைக் காத்துக்கொண்ட  தானியேல் மற்றும் அவரது நண்பர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைக்குறித்து சொல்லப்பட்ட வசனம்தான் இன்றைய தியானத்துக்குரியது. 

பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றி அங்குள்ள மக்களைக் கைதியாக பாபிலோனுக்குக் கொண்டுசென்றான். அப்படிக் கொண்டுபோகப்பட்டவர்களுள்  தானியேலும் அவரது நண்பர்களும்  இருந்தனர். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் கைதியாகக் கொண்டுபோகப்பட்ட மனிதர்களில் அழகும், கல்வியும், ஞானமும் உள்ளவர்களைத் தனது அரண்மனையில் பணியில் அமர்த்த விரும்பி, அத்தகைய வாலிபர்களைக் கண்டுபிடிக்க  தனது பிரதானிகளுக்குக் கட்டளைக் கொடுத்தான்.  அவர்கள் தானியேலையும் அவரது நண்பர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களயும் சிறந்தவர்களாக கண்டறிந்து அரசனின் முன்பாக நிறுத்தினர். 

"ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படிசெய்யவும் கட்டளையிட்டான்." ( தானியேல் 1 : 5 ) ஆனால் தானியேலும் அவரது நண்பர்களும் ராஜ உணவினை தங்களைப் பராமரித்தவனிடம் , "எங்களுக்கு வெறும் பருப்பும் காய்கறிகளும் போதும்; ராஜ உணவு வேண்டாம் என்று மறுத்துவிட்டனர். 

பராமரிப்பாளன், "அப்படியல்ல, ராஜா உங்களைப் பார்க்கும்போது நீங்கள் மற்றவர்களைவிட முகம் வாடிப்போனவர்களாக கண்டால் எனக்குத்தான்  தண்டனைத்தருவான்" என்றான். அப்போது தானியேல், பத்துநாள் எங்களுக்கு நாங்கள் கேட்பதுபோல  வெறும் பருப்பும் காய்கறிகளும் தந்து எங்களைச் சோதித்துப் பாரும்." என்று கூற, அவன் சம்மதித்து அவர்கள் கேட்ட உணவைக்கொடுத்துவந்தான்.  "பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது." ( தானியேல் 1 : 15 )

அன்பானவர்களே, இன்று இதுபோல வாழவே நாம் அழைக்கப்படுகின்றோம். உலக ஆசை இச்சைகளை மறுத்து, கிறிஸ்துவுக்காக வாழும் வாழ்வையே தேவன் விரும்புகின்றார். இறைச்சி, திராட்சைரசம் என ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் தானியேல் மற்றும் அவரின் நண்பர்களது முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இதுபோலவே ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் நமக்கு ஒருவேளை மற்றவர்களைப்போல சிறப்பான உலக செல்வங்கள் இல்லாமலிருக்கலாம். ஆனால்,  ராஜ உணவு உண்டவர்களைவிட  எக்காரணம்கொண்டும் நாம் தாழ்ந்துபோகமாட்டோம். 

தானியேலையும் அவரது நண்பர்களையும் சோதிக்க பத்துநாட்கள் குறிக்கப்பட்டதுபோல நமக்கும் தேவன் ஒரு குறிப்பிட்ட நாளை நியமித்திருப்பார். தேவன் குறித்த அந்த நாட்கள் நிறைவேறும்போது மற்றவர்களிலிருந்து நாம் வேறுபட்டு உயர்த்திருப்பதை இந்த உலகம் கண்டு அதிசயிக்கும்.  கிறிஸ்துவுக்கு விருப்பமில்லாத செயல்களை நம்மைவிட்டு அகற்றுவோம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712    

Thursday, September 22, 2022

தேவன் கிளி ஜோசியம்போல பேசுபவரல்ல; அவர் பிரத்தியட்சமாக பேசுபவர்

 ஆதவன் 🖋️ 608 ⛪ செப்டம்பர் 27,  2022 செவ்வாய்க்கிழமை

"நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்." ( ஏசாயா 30 : 21 )

இன்றைய வசனம் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் பற்றிக் கூறுகின்றது. கர்த்தரது வார்த்தைக்குக்  கீழ்ப்படிந்து வாழும்போது நாம் அவரது மக்களாகின்றோம். பரலோக சீயோனுக்கு நாம் சொந்தக்காரர்கள் ஆகின்றோம். அப்படி வாழ்பவர்கள் கர்த்தரது பரிசுத்த நகரான எருசலேமில் வாழ்பவர்களாக இருப்பார்கள்.  இன்றைய தியான வசனத்துக்கு முந்தின வசனங்களில் ஏசாயா இதனைத்தான் பின்வருமாறு கூறுகின்றார்:- 

"சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்." ( ஏசாயா 30 : 19 )

மட்டுமல்ல இப்படி வாழும் மக்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று வழிநடத்தக்கூடிய தேவனது வார்த்தைகளை அவர்களே கேட்பார்கள். இதனையே ஆவியானவரின் வழிநடத்துதல் என்கின்றோம். இந்த தேவனது வழிநடத்தும் வார்த்தைகளே  நம்மை நீதி நியாயம் உள்ள மனிதர்களாக மாற்றி நம்மை நீதியின் பாதையில் நடந்திடும். 

இப்படி நம்மை வழிநடத்திடும் பரிசுத்த ஆவியானவரைத்தான் இயேசு கிறிஸ்து நமக்கு வாக்களித்தார். 

"நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். "அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்"( யோவான் 16 : 7, 8 )

இயேசு கிறிஸ்து வாக்களித்த பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதல் நமக்குத் தேவையென்றால், நாம் முதலில் அதனை விரும்பவேண்டும். இயேசு கிறிஸ்து கூறியபடி அவருக்கு உகந்தவர்களாக வாழ  நம்மை அவருக்கு  முற்றிலும் ஒப்படைக்கவேண்டும்.  

இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் ஆவியானவருக்குத் தங்களை ஒப்புவிக்காமல், அவரது வழிநடத்துதலின்படி வாழ விரும்பாமல் இருந்துகொண்டு தங்களது தேவைகள், பிரச்சனைகளுக்கு மட்டும் அவரைத் தேடுகின்றனர். அவர்கள் தேவனது குரலை குறுக்கு வழியில் கேட்க முயலுகின்றனர். கண்களை மூடி வேதாகமத்தைத் திறந்து விரலை வேதாகமத்தில் வைத்து அங்கு காணும் வசனத்தை தேவன் தங்களுக்குத் தந்த வழிகாட்டும் வசனமாக எண்ணிக்கொள்கின்றனர்.   

இப்படி நாம் தேவ குரலைக் கேட்க வேதாகமம் நமக்கு அறிவுறுத்தவில்லை.  நமது தேவன் கிளி ஜோசியம்போல பேசுபவரல்ல. அவர் பிரத்தியட்சமாக பேசுபவர். நமது பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்தி நம்மை நீதியின் பாதையில் நடத்துபவர். 

அன்பானவர்களே, தேவனுக்கும் அவரது வழிநடத்துதலுக்கும் நம்மை முற்றிலும் ஒப்படைப்போம். அப்போது, நாம் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று நம்மை வழிநடத்தும் தேவனது வார்த்தைகளை நமது காதுகள் கேட்கும். இந்த வழிநடத்துதல் தான் தேவனுக்கேற்ற பரிசுத்தராக நம்மை வாழவைக்கும்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712               

ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே

 ஆதவன் 🖋️ 607 ⛪ செப்டம்பர் 26,  2022 திங்கள்கிழமை

"லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள்." ( லுூக்கா 17 : 32 )

இயேசு கிறிஸ்து தனது உபதேசத்தில் பல்வேறு இடங்களில் பழைய ஏற்பாட்டிலிருந்து உதாரங்களைக் காட்டி விளக்கியுள்ளார். இன்றைய வசனத்தில் ஆதியாகமத்திலிருந்து ஒரு சம்பவத்தை உதாரணம் காட்டுகின்றார். 

ஆணடவராகிய இயேசு கிறிஸ்து தனது இரண்டாம் வருகையினைக் குறித்துக் கூறும்போது இந்த வசனத்தைக் கூறுகின்றார். இந்த உலக செல்வங்கள் மகிமைகள் இவற்றையே எண்ணிக்கொண்டு, செல்வம் சேர்ப்பத்திலும் இந்த உலக நாட்டங்களிலும் ஈடுபட்டு  தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாமல் போனால் எல்லோரும் அழிந்துபோவீர்கள் என்கிறார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  

சோதோம் கொமோராவை தேவன் அழிக்கும் முன்பு லோத்துவைக் காப்பாற்றுவதற்குத் தனது தூதனை அனுப்பினார். அந்தத் தூதன் "அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு,  "உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்." ( ஆதியாகமம் 19 : 17 )

இதனையே இயேசு கிறிஸ்து இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். சோதோம் கொமோராவுக்கு நேர்ந்ததுபோன்ற அழிவு பூமிக்கு வரப்போகின்றது. எனவே, அந்த மக்களைப்போல அறிவிலிகளாய் இராமல் உங்கள் ஜீவனைக் காத்துக்கொள்ளுங்கள் என்கின்றார் இயேசு கிறிஸ்து. 

இயேசு கிறிஸ்து கூறினார், "லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது." ( லுூக்கா 17 : 28, 29 ) இப்படியான அழிவுக்குத் தப்பித்துக்கொள்ளுங்கள் என்கின்றார்.

இப்படி கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்படியாவிட்டால் என்ன நடக்கும் என்பதை விளக்க  இயேசு இன்றைய வசனத்தில், " லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்" என்கின்றார்.  அந்தத் தூதன் லோத்துவிடம், "உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்". ஆனால், அவர்களது சொத்துக்கள், வீடு, இதர ஆஸ்திகளை எண்ணி அவன் மனைவி தூதனது கட்டளையினை மீறி திரும்பிப் பார்த்தாள். ஆம்,  "அவன் மனைவியோ பின்னிட்டுப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள்."( ஆதியாகமம் 19 : 26 )

இந்த உலகத்தில் நம்மைக் கிறிஸ்துவைவிட்டுப் பிரிக்கும் பல்வேறு இச்சை காரியங்கள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமானது பொருளாசை. அந்த ஆசைதான் லோத்தின் மனைவியைப் பின்னிட்டுப்பார்க்கத் தூண்டியது. எனவேதான் இயேசு கிறிஸ்து அவளை நமக்கு எச்சரிப்புக்காக எடுத்துக்காட்டுகின்றார்.

அன்பானவர்களே, கிறிஸ்துவை நோக்கி வந்தபின்பு நாம் உலக ஆசைகள், பிரச்சனைகள் துன்பங்களைக்கண்டு கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைவிட்டுப்  பின்னிட்டுப் பார்க்கக் கூடாது. அந்தத் தூதன் லோத்துக்குக் கூறியதுபோல மலையை நோக்கி நாம் ஓடவேண்டும். அந்தக் கன்மலை கிறிஸ்துவே. (1 கொரிந்தியர் 10:4) உலகக் கவர்ச்சி, மாயைகளில் நாட்டம்கொண்டு பின்னிட்டுப்பார்த்தால் லோத்தின் மனைவியைப்போல ஆகிவிடுவோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712        

முன்னோர்களின் சாபங்களும் நம்மைத் தொடராமல் பாதுகாக்கப்படுகின்றோம்

 ஆதவன் 🖋️ 606 ⛪ செப்டம்பர் 25,  2022 ஞாயிற்றுக்கிழமை

"பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்." ( எரேமியா 31 : 29, 30 )

புதிய உடன்படிக்கைக்கால மேலான ஒரு ஆசீர்வாதத்தை எரேமியா தீர்க்கதரிசி இங்குக் கூறுகின்றார். தாய் தகப்பன் செய்யும் மீறுதல்கள் பிள்ளைகளைப் பாதிக்கும் என்பது பழைய ஏற்பாட்டு கற்பனை. "குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்" ( யாத்திராகமம் 34 : 7 ) என்று கூறப்பட்டுள்ளது.

"பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்." ( உபாகமம் 5 : 9 )

இதனையே சாபங்கள் என்று கூறுகின்றோம். அதனையே இங்கு "பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பழைய முறைமை மாற்றப்படும் என்று எரேமியா கூறுகின்றார். 

தாய் தகப்பன் செய்த பாவமல்ல, அவனவன் செய்த பாவமே அவனைத் தண்டிக்கும் என்கின்றார். அதனையே,  "அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்." என்று கூறப்பட்டுள்ளது. 

ஆம், இன்று நாம் கிறிஸ்து இயேசுவினால் நமது பாவங்கள் கழுவப்பட்டு, கிறிஸ்துவுக்குள் புதுப்பிறப்பு அடைந்திருந்தோமானால் முன்னோர்களின் சாபம் நம்மைத் தொடராது. ஏனெனில், "மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்." ( கலாத்தியர் 3 : 13 )

பாவங்களிலிருந்த்து நாம் மீட்கப்பட்டு கிறிஸ்துவின் மறுபிறப்பு அனுபவத்தைப்பெறும்போது மட்டுமே நமக்கு இந்த பெரும் பாக்கியம் கிடைக்கின்றது. கிறிஸ்துவின் மீட்பு மற்றும் மறுபிறப்பு அனுபவத்தைப் பெறாதவர்கள் இன்னும் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருப்பதால் அவர்களை முன்னோர்களின் சாபம் தொடரும். 

கிறிஸ்துவின் கிருபையினால் உண்டான மீட்பினை பெறாமல் வெறும் கட்டளைகளையே நம்பி கைக்கொண்டிருப்பது (அதாவது நியாயப்பிரமணத்தையே நம்பியிருப்பது) ஒருவரை சாபத்துக்கு நீங்கலாக்காது. ஒருவருக்குள் கிறிஸ்து வரும்போது மேலான கட்டளைகளுக்கு நேராக அவரை நடத்துவார். இதனையே அப்போஸ்தலராகிய பவுல் அடிகள், "நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள் என்று எழுதியிருக்கிறதே." ( கலாத்தியர் 3 : 10 )

இது ஏனென்றால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிபவன் அப்படி ஒரு கட்டளை இருப்பதால் கீழ்படிகின்றான். ஆனால் மறுப்பிற்ப்பு அனுபவம் பெற்றவர்கள் தேவனுடைய ஆவியானவரால் நடத்தப்படுவதால் இயல்பிலேயே நீதி, நேர்மையாய் நடக்கிறார்கள். தேவ அன்புடன் அப்படிச் செய்கிறார்கள். 

அன்பானவர்களே, கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படும்போது கிடைக்கும் மேலான அனுபவம் இதுதான். பாவங்கள் கழுவப்படுவதுமட்டுமல்ல முன்னோர்களின் சாபங்களும் நம்மைத் தொடராமல் பாதுகாக்கப்படுகின்றோம். கிறிஸ்துவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்து பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுவோம். அவர் நம்மை மேலான ஆசீர்வாதங்களுக்குள் நடத்துவார்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                             

Wednesday, September 21, 2022

கிறிஸ்துவுக்குள் வேர்கொண்டவர்களாக வாழும்போதே நாம் வளர்ச்சியடைகின்றோம்

 ஆதவன் 🖋️ 605 ⛪ செப்டம்பர் 24,  2022 சனிக்கிழமை

"உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்." ( சங்கீதம் 84 : 5, 6 )

நாம் கர்த்தருக்குள் வாழ்வது மட்டுமல்ல,ஆவிக்குரிய அனுபவங்களில் வளருபவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம். குழந்தைகள் பலமற்றவர்கள். நாம் வளர வளர பலம் கொள்ளுகின்றோம். கிறிஸ்துவுக்குள் வேர்கொண்டவர்களாக வாழும்போதே நாம் வளர்ச்சியடைகின்றோம். "ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,"( கொலோசெயர் 2 : 6 ) என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகின்றார். 

இப்படிக் கிறிஸ்துவுக்குள்  பலம் கொள்ளுகின்ற மனிதன்தான் இருதயத்தில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கமுடியும். இப்படி பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.

இதனால்தான் அப்போஸ்தலனாகிய பேதுருவும், "நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்." ( 2 பேதுரு 3 : 18 ) என்று கூறுகின்றார். 


"நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக" ( எபேசியர் 4 : 14,15 ) என்கின்றார் பவுல் அடிகள்.

இப்படிப் பலம் கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதை இன்றைய தியான வசனத்தின் பிற்பகுதி விளக்குகின்றது. இப்படிப்  பலம் கொள்ளும் மனிதர்கள் அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள். அதாவது துன்பங்கள் பிரச்சனைகளை அவர்கள் சந்தித்தாலும் அதனைக் கடந்து தங்கள்  வாழ்வைக்  களிப்பான நீரூற்றாக மாற்றிக்கொள்கிறார்கள்.  மட்டுமல்ல, ஆவிக்குரிய மழை அவர்கள்மேல் பொழியும். அவர்கள் நீர் நிறைந்த  குளங்களைப்போல  ஆவியின் அருளினால் நிரம்பி அனைவருக்கும் பயன்தருபவர்களாக மாறுவார்கள். 

அன்பானவர்களே, என்றோ ஒருநாள் பெற்ற பாவ மன்னிப்பின் அனுபவத்தோடேயே நாம் நின்றுவிடக்கூடாது. அந்த அனுபவத்தில் வளரும்போதுதான் நாம் மீட்பு பெற முடியும். ஆம், இறுதிவரை நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்   என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். ஆவிக்குரிய வாழ்வில் தினமும் வளருவோம். நாம் நீர் ஊற்றி வளர்க்கும் மரமோ செடியோ வளருவதை நாம் பார்க்கும்போது நமக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அதுபோல நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரும்போதே கிறிஸ்துவும் மகிழ்ச்சியடைவார். 

ஏனெனில் வளரும்போதுதான் மரமானது ஏற்ற கனிகளைக் கொடுக்கும். நாம் கனி கொடுப்பவர்களாக வாழ்வதே தேவனுடைய சித்தம். ஆவிக்குரிய வளர்ச்சிபெற்று கனிகொடுக்காத மரங்கள் அக்கினியில் சுட்டெரிக்கப்படும். 

"இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்." ( மத்தேயு 3 : 10 ) வளருவோம்; பெலனடைவோம்; அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுவோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                       

Monday, September 19, 2022

வானக உணவினை உண்ணும்போது பலமடைகின்றோம்.

 ஆதவன் 🖋️ 604 ⛪ செப்டம்பர் 23,  2022 வெள்ளிக்கிழமை

"அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்." ( 1 இராஜாக்கள் 19 : 4, 5 )

ஆவிக்குரிய வாழ்வில் எப்போதுமே மகிழ்ச்சியும் செழிப்பும் மட்டுமே இருக்கும் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. துன்பங்களும், கஷ்டங்களும் நம்மைத் தொடரலாம், வனாந்தரம் போன்ற வறண்ட சூழல் ஏற்படலாம். 

எலியா மிகப்பெரிய தீர்க்கதரிசிதான். ஆனால் அவரும்கூட உலக வாழ்க்கை வெறுத்து ஆண்டவரிடம் சாவை வேண்டக்கூடிய நிலைமைக்கு வந்துவிட்டார்.  ஆகாபின் மனைவி யேசபேல் எலியாவின்மேல் கோபமாகி அவரைக் கொலைசெய்யத் தேடினாள். அப்போது எலியா மிகவும் மனமடிவுக்குள்ளானார்.   "கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல" என்று வேதனையோடு ஜெபித்தார். 

அன்பானவர்களே, எலியாவுக்கு வந்ததுபோன்ற மனமடிவு நமக்கும் ஏற்படலாம். ஆனால், தேவன் நம்மை அப்படியே விட்டுவிடமாட்டார். வேதனையோடு படுத்து உறங்கிய எலியாவுக்குத் தேவன் தனது தூதனை அனுப்பி உணவளித்து பலப்படுத்தினார். "அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவு பகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்து போனான்." ( 1 இராஜாக்கள் 19 : 8 )

நாமும் இதுபோல தேவ பர்வதத்தை நோக்கியே பயணம் செய்கின்றோம். கர்த்தருடைய தூதன் அளித்த உணவின் பலத்தால் எலியா நாற்பது நாள் இரவும் பகலும் ஓரேப் பர்வதம் வரை நடந்தார். தேவதூதன் அளித்த உணவின் பலம் அவருக்கு  எந்த பலவீனமுமில்லாமல் நாற்பது நாட்கள் நடக்கக் கூடிய சக்தியைக் கொடுத்தது. ஆவிக்குரிய வாழ்வில் நாம் சோர்ந்துபோகும்போது இதேபோல பெலனைத் தேவன் நமக்கும் தருவார். 

ஆம், நமது பலவீனத்தில் கர்த்தரது பலத்தை நாம் அனுபவிக்கமுடியும். "என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" ( 2 கொரிந்தியர் 12 : 9 ) என்று அப்போஸ்தலனாகிய பவுலைப் பலப்படுத்திய தேவன் நம்மையும் அதுபோலப் பலப்படுத்துவார். 

கர்த்தருடைய ஒரு தூதன் எலியாவைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். நமக்கோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே தூதன் கொடுத்ததைவிட மேலான உணவினை நேரடியாக நமக்குக் கொடுத்துள்ளார். 

"என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்."( யோவான் 6 : 55, 56 )

எனவே நாம் எலியாவைப்போல மனமடிவு ஏற்படும்போது இந்த வானக  உணவினை உண்ணும்போது பலமடைகின்றோம். ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காகத்  தனது உடலையும் இரத்தத்தையும் உணவாகத் தந்துள்ளார். இதனை விசுவாசித்து அவர் நமக்காக மரித்தார் எனவே நம்மை முற்றும் முடிய இரட்சிப்பார்  என விசுவாசிக்கும்போது; உண்ணும்போது  எலியாவைப்போல பலமடைகின்றோம். எலியா நடந்ததுபோல்  பரம கானானை நோக்கி தொய்வில்லாமல் நாமும் நடப்போம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                     

Sunday, September 18, 2022

ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல..

 ஆதவன் 🖋️ 603 ⛪ செப்டம்பர் 22,  2022 வியாழக்கிழமை 


"நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்." ( யோவான் 17 : 18 )

இந்த உலகத்தில்  நாம் பணி செய்யும் இடங்களில் நமது பணி நிமித்தமாக நாம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றோம். உயர் அதிகாரிகளாக இருந்தாலும் சிறிய பதவிகளில் இருந்தாலும் நமது பணிக்கேற்ப சில வேலைகளுக்காக நாம் அனுப்பப்படுகின்றோம். 

நாம் ஒரு ஆசிரியராக இருந்தால், தேர்வு மையங்களில் பணி புரிய, விடைத்தாள்களைத் திருத்தும் செய்யச் செல்லவேண்டியிருக்கும். ஒரு வங்கி அதிகாரி,  மேலதிகாரிகளின் கூட்டத்திற்கோ, கடன் கொடுப்பது சம்பந்தமாக கிராமங்களுக்கோ செல்ல வேண்டியதுண்டு. அலுவலக உதவிப்பணியாளர் என்றால், அலுவலக சம்பந்தகமாக தபால் நிலையத்துக்கோ, தேநீர் கடைக்கோ செல்லவேண்டியது வரும். இப்படி நாம் ஒவ்வொருவருமே ஒரு பணிக்காக அனுப்பப்படுகின்றோம்.  இப்படி அனுப்பப்படும்போது நமக்கு நியமிக்கப்பட்டப் பணியை நாம் சிறப்பாகச் செய்யவேண்டியது அவசியம். 

இதுபோலவே, பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவை தனது பணிக்காக இந்த உலகத்தில் அனுப்பினார். இந்த உலகம் மீட்புப்பெறவும் அதனால் கிறிஸ்து இயேசு பிதாவோடு இருப்பதுபோல நாமும் அவர் இருக்கும் இடத்தில அவரோடுகூட இருக்கத் தகுதிபெறும்படி நம்மை மாற்றிடவும் அவர் அனுப்பப்பட்டார்.  (யோவான் 17:21) பிதாவாகிய தேவன் கொடுத்த இந்தப்பணியை அவர் தனது இரத்தத்தைச் சிந்தி செய்து முடித்தார். அவர் மாதிரி காட்டியதுபோல வாழ்ந்து மக்களை அதே வழியில் நடத்திட சீடர்களை அனுப்பினார். 

எனவேதான், "நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்." ( யோவான் 17 : 18 ) என்று பிதாவிடம் அவர்களுக்காக மன்றாடினார். 

இந்தப்பணி கடினமான பணி என்பதை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார். வஞ்சக ஓநாய்கள் நிறைந்த உலகம் இது. நல்லவைகளை எப்போதுமே இந்த உலகம் ஏற்றுக்கொள்ளாது என்பது இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். எனவேதான் சீடர்களை இந்தப் பணிக்கு அனுப்பும்போது அவர் கூறினார், "ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடமற்றவர்களுமாய் இருங்கள். "( மத்தேயு 10 : 16 )

அன்பானவர்களே, இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகள் சீடர்களுக்கு மட்டுமல்ல, இன்று உலகினில் கிறிஸ்துவுக்கு ஏற்ற சாட்சியாக வாழமுயலும் எல்லோருக்கும் பொருந்தும். நாம் நமது சாட்சியுள்ள வாழ்க்கையால் கிறிஸ்து இயேசுவை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதற்காகவே கிறிஸ்து நம்மை அனுப்பியுள்ளார். எனவே, இந்த ஓநாய் குணமுள்ள மக்களிடம் நாம் பாம்பைப்போல  முன்னறிவுள்ளவர்களாகவும் புறாவைப்போல கபடம் இல்லாதவர்களாகவும் நடந்து கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும்.

ஆம், காடுகளில் வாழும் ஓநாய்களை சமாளிக்க நமக்குப் பாம்பைப்போன்ற  முன்னறிவு தேவை;  ஓநாய்களை நம் பக்கம் திருப்பி அவைகளை மனம் திரும்பிடச் செய்ய நமக்கு புறா போன்ற கபடமற்ற உள்ளம் தேவை. 

கிறிஸ்து நமக்குத் தந்துள்ள பணியை நாம் சிறப்பாகச் செய்திட முயல்வோம்; அதற்காக வேண்டுதல் செய்வோம். நமது தலைமை ஆயனாம் இயேசு கிறிஸ்துவும் நமக்காக ஜெபித்துள்ளார். (யோவான் 17) எனவே நாம் நமது பணியினை தயக்கமின்றி தைரியமாகத் தொடர்ந்து செய்வோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 15 : 19 / 1 Corinthians 15:19

" ஆதவன் " தியானம் - 1977 ஜூலை 07, செவ்வாய் 2026       "இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்...