Tuesday, September 13, 2022

"எனக்குள்ளதைத் தந்துவிட்டாய், இந்த ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது தா"

 ஆதவன் 🖋️ 595 ⛪ செப்டம்பர் 14,  2022 புதன்கிழமை 

"நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்." (1 பேதுரு 4:14)

இன்றைய காலகட்டங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரானச் செயல்பாடுகளும் அவதூறானச் செய்திகளும் அதிகமாகப் பரவியுள்ளன. ஆனால் இத்தகைய செயல்பாடுகளுக்கு நாம் பதிலளிக்கவோ மற்ற உலக மனிதர்கள் செய்வதுபோல எதிர்ச்செயல் செய்யவோ வேதம் நமக்கு அறிவுறுத்தவில்லை.  

இப்படி நிந்திக்கப்படுவது நம்மை பாக்கியவானாக மாற்றுகின்றது என்கின்றது இன்றைய வசனம். அது ஏன்? எப்படி?

கிறிஸ்துவுக்கு உரிமையானவர்களாகிய நம்மேல் தேவனுடைய ஆவியானவர் குடிகொண்டுள்ளார். எனவே நம்மை ஒருவர் தூஷிப்பது, அவமானப்படுத்துவது, கேவலமாய் நடத்துவது இவை நம்மையல்ல நம்முள் இருக்கும் ஆவியானவரையே அப்படிச் செய்கின்றார்கள். இப்படி அவர்கள் நம்மை இழிவாய் நடத்தும்போது நாம் அமைதியாக இருந்தோமானால் நமது அமைதிச் செயல்பட்டு நம்மூலம் ஆவியானவர் மகிமைப்படுத்தப்படுகின்றார்.

இயேசு கிறிஸ்து துன்பங்களை சகித்தார். மட்டுமல்ல நமக்கும் அவ்வாறு சகிக்கவேண்டுமென்று அறிவுறுத்தினார். ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு என்பதே அவரது போதனை. அந்தப் போதனையின்படி வாழும்போது தேவன் மகிமைப்படுகின்றார். இப்படி வாழ்வது  சிரமமான காரியம்தான். ஆனால், நாம் அன்றாட ஜெபத்தில் தேவனிடம் பெலத்தைப் பெற்று இருப்போமானால் இந்தக்காரியத்தில் ஜெயம் பெறலாம். 

அன்னை தெரசா அவர்கள் ஒருமுறை கல்கத்தா நகரில் ஏழைகளுக்காக கடைகளில்  பணம் சேகரிக்கச் சென்றார். ஒரு கடைக்காரன் கோபத்தில் அவரது மேல் காறித்துப்பி விட்டான். அன்னை அவர்கள் சிரித்துக்கொண்டே அவனிடம், "எனக்குள்ளதைத் தந்துவிட்டாய், இந்த ஏழை குழந்தைகளுக்கு ஏதாவது தா" என்றார். இந்தச் செய்கை அவனை அழச் செய்தது. அன்னையிடம் மன்னிப்புக்கேட்டு அவர்களுக்கு உதவினான். 

ஒரு பள்ளியில் குறிப்பிட்ட ஒரு ஆசிரியருக்கு வேண்டப்படாதவர் ஒருவர் தனக்கு ஆதரவாகச் சிலரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு எப்போதும் அவரைப்பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு குறைகூறி மனு அனுப்பிக்கொண்டிருந்தார். அந்தப் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரைக் கூப்பிட்டு விசாரித்து அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அறிந்ததால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் பள்ளிக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் உண்மையுள்ளவராகப்  பணியாற்றிவந்தார். 

அந்த ஆசிரியர் நல்ல எழுத்தாற்றல் உள்ளவர். அவர் ஓய்வு நேரங்களில் கதைகள், நாவல்கள் எழுதிவந்தார்.  அவர் எழுதிய நாவலுக்கு இந்திய அரசு சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவித்தது. மறுநாள் அனைத்துப் பத்திரிகைகளிலும் , வானொலி , தொலைக்காட்சிகளிலும் அவரைபற்றியும் அவர் பணிபுரியும் பள்ளி பற்றியும் செய்திகள் வெளியாயின. பள்ளி நிர்வாகத்தின் பேட்டியும் தொலைக்காட்சிகளில் வெளியாயின.  ஆம், அந்த ஆசிரியரால் அந்தப்பள்ளி மகிமை அடைந்தது. இன்னொரு செய்தி, அவர் அந்தப் பரிசு பெற்ற நாவலில் தனது பள்ளி அனுபவத்தை, தான்  நிந்திக்கப்பட்ட அனுபவத்தையே கதையாக்கியிருந்தார்.

அன்பானவர்களே, இந்த ஆசிரியரைப்போலவே நாம் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; அந்த ஆசிரியர் அந்த நிந்தனையையே கதையாக்கி வெற்றிபெற்றதுபோல தேவன் நமக்கும்  ஜெயம் தருவார்.  ஆம், ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் நம்மேல்  தங்கியிருக்கிறார்; மற்றவர்களால் தூஷிக்கப்பட்டாலும் நம்மால் மகிமைப்படுகிறார்.

நமக்கு எதிரான நிந்தனைகளைச் சகித்து வாழ பெலன் வேண்டி ஜெபிப்போம். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பார். 

 தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                   

Monday, September 12, 2022

பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டுமானால், கனியுள்ள வாழ்க்கை நமக்கு இருக்கவேண்டும்.

 ஆதவன் 🖋️ 594 ⛪ செப்டம்பர் 13,  2022 செவ்வாய்க் கிழமை 

"தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்." ( பிலிப்பியர் 1 : 10, 11 )

இன்றைய வசனம் ஒரு கிறிஸ்தவன்  எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டுமென்று விளக்குகின்றது. மட்டுமல்ல, ஒரு ஊழியன் தன்னை நாடிவரும் மக்களுக்கு எதற்கு முன்னுரிமை கொடுத்து ஜெபிக்கவேண்டுமென்றும் விளக்குகின்றது. 

அப்போஸ்தலனாகிய பவுல் தனது செய்கையின்மூலம் நமக்கு வழிகாட்டுகின்றார். அதாவது ஒரு கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்துவின் விசுவாசி கிறிஸ்துவினால் வருகின்ற நீதியின் கனிகளால் நிரம்பியவனாக இருக்கவேண்டும். கனியற்ற வாழ்க்கை நம்மை பிறருக்கு எடுத்துக்காட்டாது. கனியுள்ள வாழ்வே நம்மை பிறருக்கு வெளிச்சமிட்டுக் காட்டும். அப்படிக்  கனியுள்ள வாழ்க்கை வாழும்போதுதான் தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும் என்கின்றார் பவுல் அடிகள். 

மேலும் இப்படி ஒரு கிறிஸ்தவ விசுவாசி வாழ்வதே அவனை கிறிஸ்துவின் நாளுக்கு, அதாவது கிறிஸ்துவின் வருகையின்போது அவருக்குமுன் தூய்மையானவர்களாகவும் இடறலற்றவர்களாகவும் இருக்கச் செய்யும்.  என்று கூறுகின்றார் பவுல் அடிகள். 

கனியற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு நாம் கிறிஸ்துவை அறிவிக்க முடியாது. ஒரு சாதாரண சினிமா நடிகன்கூட மக்களால் ரசிக்கப்படுபவனாக இருக்கவேண்டுமானால் அவனுக்குச் சிலத் தனித் தகுதிகள் வேண்டும். அப்போதுதான் மக்கள் அவனை ஏற்றுக்கொள்வார்கள். அதுபோல கிறிஸ்தவர்களை பிறர் ஏற்றுக்கொள்ளவேண்டுமானால், வித்தியாசமான கனியுள்ள வாழ்க்கை நமக்கு இருக்கவேண்டும்.  

இன்றைய வசனம் ஊழியர்களுக்கும் ஒரு படிப்பினையாக உள்ளது. அதாவது இங்கு அப்போஸ்தலனாகிய பவுல் தனது சபை மக்கள் இப்படிக் கனியுள்ளவர்களாக, தூய்மையுள்ளவர்களாக, கிறிஸ்துவின் வருகைக்குத் தகுதியுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்று விண்ணப்பம் பண்ணுகின்றார்.

அவர் வெறும் போதனையும், ஆடலும், பாடலும், துள்ளலும் செய்பவராக இருக்கவில்லை. தனது சபை மக்கள் மேற்படி தகுதியுள்ளவர்களாக விளங்கவேண்டுமென்று அவர்களுக்காக தேவனிடம் விண்ணப்பம் பண்ணுபவராக இருந்தார்.   தனது சபைக்கு வருபவர்கள் எல்லோரும் உலக ஆசீர்வாதம் பெற்றவர்களாகவும், செழிப்பானவர்களாகவும் மாறவேண்டுமென்று அவர் ஜெபித்துக்கொண்டிருக்கவில்லை. 

என்னை ஆவிக்குரிய வழியில் நடத்திய பாஸ்டர் ஜான்சன் டேவிட் ஐயா அவர்கள் இப்படிப்பட்டவராக இருந்தார். மிகப்பெரிய தீர்க்கதரிசியாகவும் இருந்தார் அவர். நாம் ஏதாவது தவறோ, விசுவாசக் கேட்டுக்கான காரியங்களோ செய்துவிட்டால் அது அவருக்குத் தெரிந்துவிடும். ஞாயிறு ஆராதனை முடிந்து அவரிடம் ஜெபிக்கச் செல்லும்போது கண்டித்துக் கூறுவார். "தம்பி , எச்சரிக்கையாயிருங்கள் ஆண்டவர் தொலைத்துவிடுவார் " என்று பயமுறுத்தும் விதமாக எச்சரிப்பார். தனிப்பட்ட விதத்தில் நல்ல நண்பனாக இருந்தாலும் ஆண்டவர் கூறிய காரியத்தை நம்மிடம் எச்சரித்துக் கூறாமல் இருக்கமாட்டார். 

ஆனால் ஆசீர்வாதத்தைத் தேடிவரும் விசுவாசிகள் அவரை விரும்புவதில்லை. அவர் எல்லோரையும் சபிப்பதாகக் குறை சொல்வார்கள். அவரது சபைக்கு அருகிலுள்ள பல விசுவாசிகள் அந்த சபையைவிட்டு பேருந்து ஏறி தொலைவிலுள்ள வேறு சபைகளுக்குச் செல்வார்கள். ஆம், விசுவாசிகளுக்கு தங்கள் பாவங்கள் குத்தப்பட்டு சூடு உண்டாக்கும் சபைகளைவிட ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட குளுகுளு சபைகள் பிடித்துள்ளது. அங்கு சென்று கைதட்டிப்பாடி நடனம் செய்வதே அவர்களுக்குப் பிடித்துள்ளது.  

எனது இன்றைய நிலைமையைச் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அவரால் கூறமுடிந்தது. அதுவே இன்றும் தேவன்மேல் அசைக்க முடியாத விசுவாசத்தை என்னுள் வளர்ந்துள்ளது. ஆனால் இத்தகைய ஊழியர்கள் எண்ணிக்கையில் மிகமிகக் குறைவாகவே இன்று உள்ளனர். 

அன்பானவர்களே, இதனை வாசிக்கும் நீங்கள் விசுவாசிகளாக இருந்தால், கனியுள்ள வாழ்க்கை வாழ ஒப்புக்கொடுங்கள். ஊழியராக இருந்தால் பவுலைப்போல உங்கள் சபை விசுவாசிகளின் உலக ஆசீர்வாதத்துக்காக அல்ல,  அவர்கள்  பரிசுத்தமும் கனியுள்ளவர்களுமாக மாறிட ஜெபியுங்கள்.  

 தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                       

Friday, September 09, 2022

ஐந்து காரியங்கள்

 ஆதவன் 🖋️ 593 ⛪ செப்டம்பர் 12,  2022 திங்கள் கிழமை

"கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்." ( 2 கொரிந்தியர் 13 : 11 )

ஆவிக்குரிய பல்வேறு அறிவுரைகளைக் கொரிந்திய சபைக்கு இரண்டு நிரூபங்கள்  மூலம் கூறிய பவுல் அடிகள், இறுதியாக ஐந்து  காரியங்களைக் கூறுகின்றார். அவையே இன்றைய தியானத்துக்குரிய வசனம். 

ஆவிக்குரிய மக்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டாலும், சிலர் எப்போதும் துக்க முகத்துடனேயே இருப்பார்கள். காரணம், இவர்கள் எப்போதும் தேவனிடம் எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அவை கிடைக்கவில்லை எனும் கவலைதான் இவர்களை முக வாட்டத்தோடு இருக்கச் செய்கின்றது. எப்போவாவது முகவாட்டம் நமக்கு ஏற்படலாம், கவலை ஏற்படலாம். ஆனால் ஆவிக்குரிய மனிதன் முகத்தின் நாம் சந்தோஷத்தைக் காணவேண்டும். தேவனிடம் விசுவாசமாக இருக்கும்போது மட்டுமே துக்கம் மாறி சந்தோஷம் வரும். எனவேதான் சகோதரரே சந்தோஷமாய் இருங்கள் என்று கூறுகின்றார்.

நாற்சீர் பொருந்துங்கள் என்பது நல்ல பண்புகளோடு வாழுங்கள் என்று பொருள்.   நல்ல கிறிஸ்தவ பண்புகளோடு வாழும்போதுதான் கிறிஸ்துவை நம்மூலம்  பிறர் அறிந்திடமுடியும். 

மன ஆறுதலோடு வாழுங்கள் (என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள் என்று ஒருங்கிணைந்த மொழிபெயர்ப்பில் கூறப்பட்டுள்ளது) ஆறுதலான சமாதான வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கை.

ஏக சிந்தையாயிருங்கள் என்பது, நீங்கள் எல்லோரும் ஓர் மனம் உள்ளவர்களாய் இருங்கள். மட்டுமல்ல, உங்கள் சிந்தனையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே ஏக எண்ணமாய்க் கொண்டிருங்கள் என்று பொருள்.

எல்லோரிடமும் மன சமாதானமாய் இருங்கள். சண்டைச் சச்சரவுகள் வேண்டாம். 

இப்படி வாழும்போது, அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார். என்கின்றார் பவுல் அடிகள். இங்கு முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது, ஜெபியுங்கள் என்றோ, வேதாகமத்தை வாசியுங்கள் என்றோ, காணிக்கை கொடுங்கள் என்றோ, ஆலய வழிபாடுகளிலும் ஜெபக்கூட்டங்களிலும் கலந்துகொள்ளுங்கள் என்றோ பவுல் அடிகள் கூறவில்லை. இவைகளை அவரது நிரூபங்களில் அவர் கூறியிருந்தாலும் இங்கு நிறைவாக, அவர்களைவிட முக்கியமாக இவைகளைக் குறிப்பிடுகின்றார். 

அதாவது ஆவிக்குரிய மனிதன், ஜெபிப்பதுடனும் வேதம் வசிப்பதுடனும் நில்லாமல் கூடவே, மகிழ்ச்சியாகவும், நற்குணங்கள் உள்ளவனாகவும், ஆறுதலுள்ளவனாகவும், ஆவிக்குரிய வாழ்க்கை வாழும் மற்றவர்களுடன் ஒரே சிந்தையுள்ளவனாகவும்,. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே - அவரது வசனங்களையே சிந்திப்பவனாகவும், எல்லோருடனும் சமாதானமுள்ளவனாகவும் வாழ்பவனாக இருக்க வேண்டும் என்கின்றார்.  

இப்படி வாழும்போது மட்டுமே அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணரான தேவன் உங்களோடுகூட இருப்பார் என்று இந்த வசனம் கூறுகின்றது. இன்று நம்மில் பலரும் ஜெபிக்கும்போது , "பவுலோடும் பேதுருவோடும் உமது அப்போஸ்தலர்களோடும் இருந்ததுபோல எங்களோடும் இரும் " என்று ஜெபிக்கின்றோம். அதற்கு முதல்படி பவுல் கூறும்  இந்த ஐந்து காரியங்களையும் நம்மில் ஆராய்ந்து சீர்படுத்தவேண்டியதுதான். 

அன்பானவர்களே, நாம் எல்லோருமே இவற்றை முதலில் நம்மிடம் உருவாக்குவோம். அப்போது சமாதானத்தின் தேவன் நம்மோடுகூட இருப்பார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                                                

"அதிகம் காணிக்கைக் கொடுப்பவனுக்கு தேவன் அதிகம் கொடுப்பார்" என்பது சாத்தானின் உபதேசம்.

  ஆதவன் 🖋️ 592 ⛪ செப்டம்பர் 11,  2022 ஞாயிற்றுக் கிழமை


"ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." ( 2 கொரிந்தியர் 11 : 3 )

ஆதியில் ஏதேன் தோட்டத்தில்  பாம்பு ரூபத்தில் வந்த சாத்தான் ஏவாளை வஞ்சித்தது. தேவனது வார்த்தையினை மாற்றிப்பேசி அவளைத் தான் சொல்லுவதுதான் சரி என்று நம்பச் செய்தது. இங்குத்  தவறான உபதேசங்களை பவுல் அடிகள் சாத்தானின் வஞ்சக உபதேசத்துக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றார். 

கிறிஸ்துவின்மேலான உண்மையான விசுவாசத்துக்குத் தடையான உபதேசங்கள், கிறிஸ்துவின்மேல் மெய்யான அன்பு ஏற்படுத்துவதற்குத் தடையான உபதேசங்கள் எல்லாமே சாத்தானின் வஞ்சக உபதேசங்கள்தான்.  

வேதத்தில் சொல்லப்படாத கிறிஸ்துவைப் பிரசங்கிப்பது சாத்தானின் வஞ்சக உபதேசம். ஒருவேளை இத்தகைய போதனைகளைக் கேட்க மக்கள்  கூட்டம் அதிகம் சேரலாம், மற்றபடி இது வேறொரு கிறிஸ்துவைப் போதிப்பதே,  "எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால்,  ( 2 கொரிந்தியர் 11 : 4 )  அது சாத்தானின் உபதேசம்.

புதிய ஏற்பாட்டின்படி  நமது உள்ளத்தையும் உடலையும் பரிசுத்தமாகப்  பாதுகாத்து உயிருள்ள  ஜீவ பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதே புத்தியுள்ள மெய்யான ஆராதனை. (ரோமர் 12:1) இதுவே ஆவிக்குரிய ஆராதனை. மட்டுமல்ல, இதுவே ஆவிக்குரிய ஆசீர்வாதத்தின் முதல் படி. ஆனால் ஒருவன், "நீ ஆயிரம் ரூபாய் காணிக்கைக் கொடுத்தால் உனக்கு பத்தாயிரமாகத் தேவன் திருப்பித் தருவார், அதிகம் காணிக்கைக் கொடுப்பவனுக்கு தேவன் அதிகம் கொடுப்பார்" எனப் பிரசங்கித்தால் அது ஏவாளை வஞ்சித்த சாத்தானின் உபதேசம்.  

ஏவாள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டாள்.  "தோட்டத்தின் நடுவிலிருக்கும் மரத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று தேவன் ஆதாம் ஏவாளிடம் கூறியிருந்தார். ஆனால் இன்று ஆசீர்வாத போதகர்கள் ஆசீர்வாதத்தின் அர்தத்தினையும் அதனைப் பெறும் வழிகளையும் மறைத்துப் பிரசங்கிப்பதுபோல சாத்தானும் ஏவாளிடம் மாற்றிப் போதித்தான்.  

"அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." ( ஆதியாகமம் 3 : 4, 5 )

இதனைத்தான் அப்போஸ்தலரான பவுல் அடிகள் இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில், "ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்." என்று குறிப்பிடுகின்றார்.

அன்பானவர்களே, பவுல் அடிகள் பயப்பட்டதுபோலவே இன்று நடைபெறுகின்றது. பிற மதத்து மக்கள்  இன்றைய பல ஊழியர்களது போதனைகள், அவர்களது செயல்பாடுகளால் கிறிஸ்தவ மார்க்கத்தின்மேல் சரியான புரிதல் கொள்ளமுடியாமல் இருக்கின்றனர். ஆம், சத்தியத்தை இப்படித் திரித்துப் போதிப்பது சாத்தானுக்கு ஏற்புடையதாக இருப்பதால் சாத்தான் இவர்களது ஊழியங்களைப் பரிபூரணமாக ஆசீர்வதித்திருக்கின்றான். 

தேவனுடனான நமது தனிப்பட்ட  உறவில் நாம் வளர்ந்தால் மட்டுமே நாம் இந்த வஞ்சக போதனைகளுக்குத் தப்பி சத்தியத்தை அறிய முடியும்.  ஆலயங்களுக்குச் செல்வது, வேதாகமம் வாசிப்பது, ஜெபக்கூட்டங்களில் பங்கு பெறுவது மட்டும் போதாது. நமது தனி ஜெபம்தான் தேவனோடுள்ள உறவைப் பலப்படுத்தும். அந்த உறவு பலப்படும்போது மட்டுமே சாத்தானின் தந்திரங்களுக்குத் தப்பி ஒரு மெய்யான ஜெயமுள்ள ஆவிக்குரிய  வாழ்வு வாழ முடியும்.   

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712   

Wednesday, September 07, 2022

சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பதுபோல ஊழியர்களுக்கும் ரசிகர் கூட்டம்

 ஆதவன் 🖋️ 591 ⛪ செப்டம்பர் 10,  2022 சனிக்கிழமை

"என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள்." ( எரேமியா 50 : 6 )

கிறிஸ்துவை விட்டு ஊழியர்களை மகிமைப்படுத்தும் கூட்டம் இன்று பெருகிவிட்டது. கவர்ச்சியாக பேசும் ஊழியனின் பின்னால் ஒரு கூட்டம், பொய் ஆசீர்வாதங்களையே பேசி மக்களை மயக்கும் ஊழியனின் பின்னால் ஒரு கூட்டம், ஊழியம் எனும் பெயரால் இசை ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் மனிதனின்பின்னாலும் கிளப் டான்ஸ் போல நடனமாடும் ஊழியனின் பின்னாலும் மதிமயங்கி ஒரு கூட்டம் என  இன்று சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பதுபோல ஊழியர்களுக்கும் ரசிகர் கூட்டம்.  

ஆம், இவர்களைத்தான் தங்கள் தொழுவத்தை மறந்த ஆடுகளாக எரேமியா காண்கின்றார்.  நமது தொழுவமும், தொழுவத்துக்கு வாசலும்  ஆயனும்  கர்த்தருமாகிய  இயேசு கிறிஸ்துதான். (யோவான் 10). ஆனால் இன்று தங்களைக் கிறிஸ்தவ  விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் கிறிஸ்துவைவிட இந்த ஊழியர்களை அன்புசெய்பவர்களாக இருக்கின்றனர்.  இந்த ஊழியர் அடிமை விசுவாசிகள் பதிவிடும் முகநூல் பதிவுகள், வாட்ஸப் செய்தி பகிர்வுகள் இவர்கள் குறிப்பிட்ட  ஊழியர்களின் விசிறிகள் என்பதை  வெளிக்காட்டுகின்றனவே தவிர இவர்கள் கிறிஸ்துவை அறிந்தவர்கள் என்பதைப் பிரதிபலிப்பதில்லை. தாங்கள் துதிபாடும்  இந்த ஊழியர்கள் பேசுவதும் செய்வதும் வேதத்துக்கு ஏற்புடைவைதானா என்று கூட இந்த விசிறிகள் பார்ப்பதில்லை.    

இந்த என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள் என்கின்றார் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஆம், இவர்கள் கிறிஸ்துவைவிட்டுக் காணாமல் போய்விட்டார்கள். இவர்களுக்கு உபதேசங்கள், போதனைகள் இவற்றை கிறிஸ்துவின் ஆவியானவர் கொடுக்கவில்லை. மாறாக இவர்கள் அடிமைகளாக இருக்கும் பிரபல ஊழியர்கள் தான் கொடுக்கின்றனர். அவர்கள்தான் இவர்களை வழி நடத்துகின்றனர். கிறிஸ்துவுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

இப்படி அடிமைகளாக இருக்கும் இந்த விசுவாசிகள் ஏதோ குறிப்பிட்ட ஒரு சம்பவத்தில் இவர்கள் நம்பிப்  பின்பற்றும் ஊழியர் பெரிய தவறு செய்யும்போது மனம் வேதனைப்பட்டு மற்றுமொரு பிரபல ஊழியனின் அடிமைகளாக மாறுகின்றனர். ஆம், அவர்கள் இன்றைய வசனம் கூறுவதுபோல மேய்ச்சலைத் தேடி , ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போகிறார்கள். ஆனாலும் இறுதிவரை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தங்களை ஒப்புவித்து அவரது வழிநடத்துதலுக்குள் வரத் தயங்குகிறார்கள். காரணம் கிறிஸ்துவின் மெய்யான உபதேசம் இவர்களுக்குக் கசக்கிறது; இவர்களது வாழ்க்கையின் அலங்கோலங்களை வெளிப்படுத்தி அவர்களது இருதயத்தைக் குத்துகின்றது. 

அன்பானவர்களே, குறிப்பிட்ட ஊழியர்களுக்கு அடிமை எனும் நிலையிலிருந்து வெளிவரும்போது மட்டுமே கிறிஸ்துவின் அன்பையும் வழிகாட்டுதலையும் ருசிக்க முடியும்; அப்போது மட்டுமே பாவத்திலிருந்து விடுதலையையும், பாவத்தை மேற்கொள்ளும் வல்லமையையும் பெற முடியும். 

தொழுவத்தை மறந்த ஆடுகளாய் ஒரு மலையிலிருந்து மறு மலைக்கு அலைந்துதிரியும் அவல  நிலையிலிருந்து விடுபட்டு பிரதான மேய்ப்பனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தொழுவத்துக்கு வந்து சேரும்போதே நாம் அவரால் அறிந்துகொள்ளப்பட்டவர்கள் ஆவோம்.  

"அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது."( யோவான் 10 : 4 ) என்று இயேசு கிறிஸ்து கூறிய இந்த வார்த்தைகள் வெறும் வசனமல்ல, ஆவிக்குரிய மேலான அனுபவம். ஆடுகள் தொழுவத்துக்குள் வரும்போது மட்டுமே இந்த அனுபவத்தைப் பெற முடியும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                                                

ஞானஸ்நானம் தேவனுக்கும் நமக்குமான ஒரு ஒப்பந்தம் (Agreement )

  ஆதவன் 🖋️ 590 ⛪ செப்டம்பர் 09,  2022 வெள்ளிக்கிழமை


"ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது." (1 பேதுரு 3:21)

ஞானஸ்நானம் என்பது விசுவாசிகள் மேற்கொள்ளவேண்டிய  முக்கிய கடமையாக வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞானஸ்நானம் பெறும் விசுவாசி கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதாக அறிக்கையிட்டு அதன் அடையாளமாக நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகின்றார்.  இது நீரில் மூழ்கி உடலின் அழுக்கை நீக்குதலல்ல, குளிப்பதுபோலத் தெரிந்தாலும் இது குளிப்பதல்ல. மாறாக அப்போஸ்தலரான பேதுரு கூறுவதுபோல தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கை. 

அதாவது இது தேவனுக்கும் நமக்குமான ஒரு ஒப்பந்தம் (Agreement ). இதுவரை உலக மனிதனாக வாழ்ந்த நான் இன்றுமுதல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை என் ஆத்தும இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன். இனி நான் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று நாம் அறிக்கையிடுகின்றோம்.   

ஆனால் இன்று பல கிறிஸ்தவ சபைகளில் ஊழியர்கள் இவை எதனையும் கணக்கில்கொள்ளாமல் சபையின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டி தங்கள் சபைக்கு  வருகின்ற எல்லோருக்கும் ஞானஸ்நானம் கொடுக்கின்றனர். ஞானஸ்நானத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அறிக்கைசெய்வதும், பாவத்திலிருந்து மனம் திரும்புவதும்  தான் முக்கிய அம்சம். ஆனால் இன்று பலர் கடமைக்காக, சாதாரண ஒரு கட்டளைக்குக் கீழ்படிவதுபோல எந்த வித ஆத்தும இரட்சிப்பு அனுபவமோ பாவ மன்னிப்பின் நிச்சயமோ இல்லாமல் ஞானஸ்நானம் பெறுகின்றனர். இதனால் சாட்சி வாழ்க்கையினை இவர்களிடம்  நாம் காண முடிவதில்லை. 

மனம் திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தை யோவான் ஸ்நானன் கொடுத்துவந்தார். (மத்தேயு 3) ஆனால் அவரிடம் இயேசு கிறிஸ்துவும் ஞானஸ்நானம் பெற்றார். அவர் மனம் திரும்புதலுக்காக ஞானஸ்நானம் பெறவில்லை. காரணம், பாவமில்லாத அவர் மனம் திரும்பவேண்டிய அவசியமில்லை. அவர் நீதியை நிலை நாட்டவே ஞானஸ்நானம் பெற்றார். (மத்தேயு 3: 15) ஆம், ஞானஸ்நானம் பெறவேண்டுமென்பது பிதாவாகிய தேவன் வகுத்துள்ள நீதி. அதற்குக் கீழ்படியவேண்டியே இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்றார்.   

எத்தியோப்பிய நிதி மந்திரி பிலிப்பு மூலம் இயேசு கிறிஸ்துவை அறிந்து விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுவதை நாம் அப்போஸ்தலர்  பணி புத்தகத்தில் வாசிக்கின்றோம். பிலிப்பு அவரிடம், நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் ஞானஸ்நானம் பெறத் தடையில்லை என்று கூறியபோது மந்திரி, "இயேசு கிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன்" என்று சொல்லி ஞானஸ்நானம் பெற்றார். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 37 )

அப்போஸ்தலரான பவுல், இயேசு கிறிஸ்துவை நேரடியாகத் தரிசித்து ஞானஸ்நானம் பெற்றார்.  ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 9 )

பிலிப்பு சமாரியாவில் நற்செய்தி அறிவித்தபோது சீமோன் எனும் மாயவித்தைக்காரனும் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றான்.  அவன் மெய்யான மனம் திரும்புதல் இல்லாமல் பிலிப்பு செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் கண்டு அதிசயித்து ஞானஸ்நானம் பெற்றான். ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:13  ) எனவேதான் அவன் பணத்தின்மூலம் பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவதற்கு முயன்றான். அப்போஸ்தலரான பேதுரு அவனைப்பார்த்து, "நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்." ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 8 : 22 ) என்கின்றார். 

அன்பானவர்களே, இன்றும் பலர் இப்படியே மாயவித்தைக்காரனான சீமோனைப்போல  மெய்யான மனம் திரும்புதல் இல்லாமல் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் ஞானஸ்நானம் பெறுகின்றனர். 

பலர் ஊழியர்களால் வற்புறுத்தப்பட்டு ஞானஸ்நானம் பெறுகின்றனர். இப்படி ஊழியர்களின் வற்புறுத்தலுக்கு உட்படாமல் மெய்யாகவே கிறிஸ்துவை ஏற்று, பாவ மன்னிப்பின் நிச்சயம் பெற்று ஞானஸ்நானம் பெறுவதே வேதம் காட்டும் வழி. இது தேவனுக்கும் நமக்குமான ஒரு ஒப்பந்தம் (Agreement ) என்பதை மறந்துவிடக் கூடாது. 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                                                

Monday, September 05, 2022

பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்

ஆதவன் 🖋️ 589 ⛪ செப்டம்பர் 08,  2022 வியாழக்கிழமை

"அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்" ( கலாத்தியர் 1 : 4 )

இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனிதனாகப் பிறந்ததற்கான காரணத்தை அப்போஸ்தலரான பவுல் இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.  அதாவது இந்த பொல்லாத உலக காரியங்களிலிருந்து நம்மை விடுவித்து; உலக பாவ இச்சைகள்,  நாட்டங்களிலிருந்து நம்மை விடுவித்து,  நம்மைக் காக்கும்படி பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படி தன்னை ஒப்புக்கொடுத்தார். 

பல்வேறு நீதிச் சட்டங்களை தேவன் கொடுத்திருந்தும் மனிதர்களால் அவற்றின்படி வாழ முடியவில்லை. மேலும், இந்த உலக மனிதர்களும்கூட பல நீதிகளைக் கூறியுள்ளனர்.  திருக்குறள், நன்னெறி, ஆத்திச்சூடி நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது,      திரிகடுகம்,   ஆசாரக்கோவை,  பழமொழி நானூறு,  சிறுபஞ்சமூலம்,  முதுமொழிக்காஞ்சி எனத் தமிழில் உள்ளதுபோல வேறு எந்த  மொழியிலும் நீதிநூல்கள் இல்லை. அனால் இவைகளால் மனிதர்களை நல்வழிப்படுத்த முடியவில்லை. உலகத்திலிருந்து விடுவிக்க முடியவில்லை. 

நீதி போதனைகள் மனிதர்களை நல்வழிப்படுத்தி தேவனுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கிட முடியாது. எனவேதான் இயேசு கிறிஸ்து உலகினில் பிறந்து இரத்தம் சிந்தி பாடுபட்டு நித்திய மீட்பினை ஏற்படுத்தினார். அவர்மேல் விசுவாசம்கொண்டு அவர் தரும் மீட்பினைப் பெறும்போது மட்டுமே நாம் பாவத்திலிருந்தும் உலக ஆசைகளிலிருந்தும் விடுதலை பெறமுடியும்.    

ஆனால் இந்த சத்தியங்கள் பவுல் அடிகள் காலத்திலேயே அப்போதிருந்த ஊழியர்களால் மறைக்கப்பட்டன. இப்போதுள்ள பண ஆசை ஊழியர்கள் மனிதர்களுக்கேற்பவும்  , மனிதர்களைத் திருப்திப்படுத்தவும்  பிரசங்கிப்பதுபோல வேத சத்தியங்களைத் திரித்தும் மறைத்தும் பிரசங்கித்தார்கள். ஆனால் அப்போஸ்தலரான பவுல் தான் அப்படிப்பட்டவனல்ல என்று கூறுகின்றார். 

"இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே." ( கலாத்தியர் 1 : 10 ). ஆம், மனிதரைப் பிரியப்படுத்தும்படி ஊழியம் செய்பவன் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்ல.

ஆசீர்வாதங்களையே பிரசங்கிப்பவன் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்ல. வேத சத்தியங்களின்படி கிறித்து ஏன் உலகத்தில் வந்தார் என்பதை எடுத்துக்கூறி, அவர் அளிக்கும் மீட்பினையும் மக்களுக்கு எடுத்துச்சொல்லி அதனை அடைந்திட மக்களுக்கு  வழி காட்டுபவனே கிறிஸ்துவின் ஊழியன். 

எனவே, உலக ஆசீர்வாதம் பெறுவதையே குறிக்கோளாகக்கொண்டு சத்தியத்தை மறுதலிக்கும்  ஊழியர்களைத் தேடி ஓடாமல் கிறிஸ்துவை நோக்கி ஓடக்கடவோம்.  இதனை எபிரெய  நிருப ஆசிரியர் அழகாகக் கூறுகின்றார், "அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்." ( எபிரெயர் 13 : 12,13 )

ஆம்  அன்பானவர்களே, கிறிஸ்துவின் சிலுவையினை அன்றாடம் சுமந்துகொண்டு பாளயத்துக்குப் புறம்பே (உலக ஆசைகளுக்குப் புறம்பே) அவரிடத்துக்குப் புறப்பட்டுப் போவோம். உலகம் கொடுக்க முடியாத நித்திய சமாதானத்தினாலும், பரிசுத்த வாழ்க்கை வாழ மீட்பு அனுபவத்தினாலும் அவர் நம்மை நிரப்பி நடத்துவார்.  

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                                                

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 15 : 19 / 1 Corinthians 15:19

" ஆதவன் " தியானம் - 1977 ஜூலை 07, செவ்வாய் 2026       "இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்...