Wednesday, October 11, 2017

இந்தியாவில் கிறிஸ்தவம் இன்னும் சரியாக அறிவிக்கப்படவில்லை

இந்தியாவில் கிறிஸ்தவம் இன்னும் சரியாக அறிவிக்கப்படவில்லை


- சகோ .எம் . ஜியோ பிரகாஷ் 


கிறிஸ்தவ ஊழியர்களது வேலை,  கிறிஸ்துவை மக்களுக்கு அறிவிப்பதன் மூலம் அவர்களை ஒரு சிறந்த ஆவிக்குரிய மனிதனாக மாற்றுவதே. தேவன் தனது இரட்சிப்பின் பணியை மனிதர்களைக்கொண்டே செய்கிறார்.  எனவே,  தேவனது திட்டத்துக்கு ஏற்ப சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டியது சுவிஷேஷகர்களது கடமையாகும். 

ஆனால் இன்று கிறிஸ்துவை ஒரு ஆத்தும இரட்சகர் என்று அறிவிப்பதைவிட அவர் ஒரு அற்புதர் என்றே அறிவிக்கப்படுகிறது. கிறிஸ்து ஒரு ஆத்தும இரட்சகர் என்று அறிவிப்பதை பல சுவிஷேஷகர்கள் விரும்புவதில்லை. காரணம் அப்படி போதித்தால் மக்கள் கூட்டம் சேராது. அற்புதம் என்றால் தான் கூட்டம் சேரும். இப்படி கிறிஸ்துவை ஒரு அதிசயம் செய்யும் மந்திரவாதியாகவே பல ஊழியர்களும் அறிவிக்கின்றனர். இதனால் கிறிஸ்துவை அறியாத மக்களும் பிற மத மக்களும் கிறிஸ்தவத்தை சரியாக புரிந்துகொள்ள முடியாமலும் தாங்கள் நம்பியிருக்கும் மத கோட்பாடுகளுடன் ஒப்பிடுகையில் கிறிஸ்தவத்தில் ஆன்மிகம் ஒன்றுமில்லை என்றுமே கருத்துகின்றனர் . 

ஒருமுறை வங்கி ஒன்றில் உயர் பதவி வகிக்கும் ஒரு பிராமண சகோதரர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கிறிஸ்தவத்தைப்பற்றி பல விசயங்களை கேட்டார். அவர் பல கிறிஸ்தவ பத்திரிகைகளையும் பல ஊழியர்களது பிரசங்கங்களையும்  கேட்டவர். அவர் என்னிடம் பேச்சு வாக்கில் சொன்னார், "இந்து மத போதனைகளில் உள்ளான மனித மாற்றத்தைப் பற்றி நிறைய கூறப்பட்டுள்ளன. ஆன்மிகம் என்பது உலக விசயங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால் உங்கள் கிறிஸ்தவத்தில் அதுபோல எதுவும் இல்லையே. வெறும் அற்புதம் அதிசயம் பற்றித்தானே கூறுகிறார்கள், எழுதுகிறார்கள் " என்றார் அவர். 

அவரிடம் நான் மெய்யான கிறிஸ்தவ போதனைகளை பற்றி சொன்னபோது இதுவரை நான் இவைகளை அறியவில்லை. எனக்கு இவைகள் அறிவிக்கப்படவும் இல்லை என்றார். இதுதான் உண்மை. ஆம், இந்தியாவில் கிறிஸ்தவம் இன்னும் சரியாக அறிவிக்கப்படவில்லை. கிறிஸ்தவர்களில் பெரும்பான்மை யோர்கூட சரியான சுவிசேஷ அறிவைப் பெறவில்லை. 

"எந்த மனுஷனையும் கிறிஸ்து  இயேசுவுக்குள் தேறினவனாக  நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து , எந்த மனுஷனுக்கும்  புத்திசொல்லி , எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம் " (கொலோசெயர் - 1:28)  என எழுகிறார் பவுல் அடிகள். ஒரு மனிதனை கிறிஸ்து இயேசுவுக்குள்ளான மனிதனாக மாற்ற வேண்டுமானால் அவனுக்கு கிறிஸ்துவை அறிவிக்கவேண்டும். அவர் செய்த அற்புதத்தையல்ல.

இன்று பல போதகர்கள் ஏதாவது செய்து மக்களை ஆதாயப்படுத்த விரும்புகிறார்கள். இப்படி மக்களை ஆதாயப்படுத்தினால் அவர்கள் வெறும் அரசியல் தலைவனை ஏற்றுக்கொள்வதைப்போல கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்களே தவிர  அவரை ஆத்தும இரட்சகராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது இன்று அல்ல தொடக்க காலத்திலும் இருந்தது . எனவே தான் பவுல் அடிகள், " யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள் , கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம். அவர் யூதருக்கு இடறலாகவும் கிரேக்கருக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார்." (1 கொரிந்தியர் - 1:22,23) 

மேலும் பவுல் அடிகள் கூறும்போது, " என் பேச்சும் பிரசங்கமும் மனுஷ ஞானத்துக்குரிய நய வசனமுள்ளதாயிராமல் ஆவியினாலும்  பெலத்தினாலும்  உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது. "   (1 கொரிந்தியர் - 2:5) என்று கூறுகிறார். நய வசனமும் அதிசயமும் தேவையற்றவை. ஒரு ஊழியரிடம் தேவனுடைய பரிசுத்த ஆவியின் பெலன் இருக்குமானால் அவனது சுவிசேஷ அறிவிப்பே வித்தியாசமானதாக இருக்கும். ஆனால் துரதிருஷ்ட வசமாக இன்று ஊழியம் செய்யும் பிரபல ஊழியர்கள் அனைவருமே நய வசனிப்பில் நிறைந்தவர்களாக இருக்கிறார்களே தவிர தேவ ஆவியின் பெலன் அற்றவர்களாகவே பெரும்பாலும் இருக்கின்றனர். 

இன்று சுவிசேஷ அறிவிப்பு என்பது பத்தில்  ஒரு பங்கு காணிக்கை கொடுத்தால் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் என்பதும் , கர்த்தர் உங்களை மென்மேலும் உயர்த்துவார் என்பதும், ஆசீர்வதிப்பார் என்று கூறுவதும் தானேதவிர மெய்யான ஆசீர்வாதம் என்பது என்ன  என்பதோ கர்த்தர் அந்த மெய் ஆசீர்வாதத்தை யாருக்கு அளிப்பர் என்பதோ, தேவ ஆசீர்வாதத்தை பெற கூறப்பட்டுள்ள ஆசீர்வாத வாக்குத்தத்தங்களுக்கு முன் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளோ,    தேவனுக்கு ஏற்புடையோராய் வாழாவிட்டால் என்ன நேரும் என வேதத்தில் கூறப்பட்டுள்ள சாபங்களோ  பெரும்பாலான ஊழியர்களால் கூறப்படுவதில்லை. கூறினால் அவர்களுக்கு கூடும் அந்தப் பெரிய கூட்டத்தின் பெரும்பகுதி இடத்தைக் காலிசெய்துவிட்டு ஓடிவிடும்.

கிறிஸ்துவை இதுவரை அறியாதவர்களை அப்படி அறியாமையிலேயே வைத்திருக்கிற முதல் எதிரியும் சாத்தானும்  பிரபல ஊழியர்கள் நடந்தும்   கிறிஸ்தவ  டி .வி . நிகழ்ச்சிகளே. இவற்றைப் பார்த்து எவரும் கிறிஸ்துவை அறிய முடியாது. அவர்கள் அறிவிப்பது " இன்னொரு கிறிஸ்துவை" அல்லது "வேறொரு கிறிஸ்துவை ". எனவே கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை தேர்தெடுத்துப் பாருங்கள். டி .வி . நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு முன் சுவிசேஷத்தைக்  கவனமாக படியுங்கள். நீங்கள் படித்த சுவிஷேஷத்துக்கு விரோதமாக போதிக்கும் போதகர்களது நிகழ்ச்சிகளை புறக்கணியுங்கள்.

அன்பானவர்களே நீங்கள் இன்னும் அற்புதங்கள் வழியாகவே கிறிஸ்துவைத் தேடுகிறவர்களாக இருந்தால் மிகவும் பரிதபிக்கத்தக்கவர்களாகவே இருப்பீர்கள். அப்போஸ்த்தலாரான பேதுரு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்டவராகவே பிரசங்கித்தார். "நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசு வையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாகினார் என்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவீர்கள்". (அப்.பணி - 2;36)  என்று பேதுரு பிரசங்கித்தபோது மூவாயிரம் பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். ஆம் , அவர்கள் அற்புதத்துக்காக கிறிஸ்துவிடம் வரவில்லை.

கிறிஸ்து சிலுவையின் வழியைத்தான் மீட்பின் வழியாக கொடுத்தாரே தவிர ஆசீர்வாத வழியையல்ல. ஒருவன் தன் சிலுவையை அனுதினமும் சுமந்துகொண்டு  தன்னைப் பின்பற்றவேண்டும் என்றார் அவர். சிலுவை சுமப்பவனே கிறிஸ்தவன்.

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அனுதினமும் தேவாலயத்தில் கூடினார்கள். எதற்கு? வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கிறதற்காகவும் , கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளரவும், ஜெபிக்கும்படியும், ஐக்கியத்தில் வளரும்படியும் கூடினார்கள். இன்று கிறிஸ்தவ கூட்டங்களில் மக்கள் எதற்க்காக கூடுகிறார்கள்? உலக ஆசீர்வாதத்திற்காகவும், தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் நடக்கவேண்டுமென்பதற்காகவும், நோய் குணமாகவும், தொழில் விருத்தியடைய வேண்டுமென ஊழியரை ஜெபிக்கச் சொல்வதற்கும் மட்டுமே. இங்கு கிறிஸ்து எங்கு இருக்கிறார்?

இரண்டு மூன்று ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்து தேசத்தைச் சார்ந்த ஒரு சுவிசேஷக குழுவினர் இந்தியாவில் கிறிஸ்துவின் சுவிசேஷம் எப்படி அறிவிக்கப்பட்டுள்ளது என ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் அவர்கள் கண்டு கூறிய உண்மை, " இந்தியாவில் இன்னும் சரியான சுவிசேஷம் அறிவிக்கப்படவில்லை. ஆவிக்குரிய சபை என தங்களைக் கூறிக்கொள்ளும் சபை விசுவாசிகளுக்குக் கூட கிறிஸ்தவத்தின்  அடிப்படை சத்தியங்கள் தெரியவில்லை". 

குருடருக்கு வழி காட்டும் குருடர்களால் வழிநடத்தப்படும் கிறிஸ்தவ விசுவாசிகள் ஊழியர்களிடமும் பாஸ்டர்களிடமும் வைக்கும் நம்பிக்கையை கிறிஸ்துவின்மேல் என்று வைக்கிறார்களோ அப்போதுதான் சரியான சத்தியத்தை அறிய முடியும் பிறருக்கும் அறிவிக்க முடியும்.

"கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திராமல்  மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல ; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனே பிதாவையும் குமாரனையும் உடையவன். ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தை கொண்டு வராமலிருந்தால் அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும் , அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர் கிரியைகளுக்கு பங்குள்ளவனாயிருக்கிறான் " (2யோவான் 9-11) அப்போஸ்தலரான யோவான் கூறுவது இதுவே , தவறான போதகர்கள் என்பது இன்று டி .வி . நிகழ்ச்சிகளையும் குறிக்கும். அந்த நிகழ்ச்சிகளுக்கு பொருளுதவி செய்வது அவர்களது துர் உபதேசத்துக்கு துணைபோவதாகும். ஏனெனில் கிறிஸ்துவின் போதனையை கொண்டு வராதவன் கிறிஸ்துவினு டையவனல்ல.

"சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது , இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது (1 கொரிந்தியர் -1:18)

ஆசீர்வாத செய்திகள் சிலுவை உபதேசத்தை மறுதலிக்கின்றன. அவற்றைக்கேட்பவர்கள் கெட்டுப்போவார்கள். இரட்சிக்கப்படு கிறவர்களுக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது. அவர்கள் பெலத்தின்மேல் பெலனடைவார்கள்.  





   


No comments: