Sunday, September 04, 2022

அவரை எதிர்கொள்ள எப்போதும் நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டியது அவசியம்.

 ஆதவன் 🖋️ 588 ⛪ செப்டம்பர் 07,  2022 புதன்கிழமை

"கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே" ( யாக்கோபு 5 : 7, 8 )

இன்றைய தியானத்துக்குரிய வசனத்தில் அப்போஸ்தலரான யாக்கோபு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நாம் காத்திருக்கவேண்டியதை விவசாயத்துடன் ஒப்பிட்டுப் பேசுகின்றார். 

விவசாயம் செய்பவர்கள் குறிப்பிட்டக் காலங்களைக் கணக்கிட்டு விவசாயத்துக்கான முன் ஏற்பாடுகளைச் செய்வார்கள். அக்டோபர் மாதம் மழை வரும் என்பது தெரியுமானதால் விவசாயம் செய்பவர்கள் விதைகளையும் விவசாயத்துக்குத் தேவையான பொருட்களையும் சேகரித்துவைத்து மழையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். முதல் மழை விழுந்ததுமே விதையை விதைத்து விடுவார்கள்.  

சில ஆண்டுகளில் மழை குறிப்பிட்ட காலத்தில் பெய்யாமல் கால தாமதம் ஆகிவிடும். அப்போது விவசாய வேலைகள்  தாமதமாகத் துவங்கும். எந்த விவசாயியும் மழை வருவதற்குத் தாமதமாகிவிட்டால் விதையை விதைக்க மாட்டான்.  பெறுமையோடு காத்திருந்து நிலத்தைப் பண்படுத்துவான். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபமானதால் நாமும் விவசாயிகள் முன் தயாரிப்புச் செய்வதுபோல பொறுமையோடு காத்திருந்து நமது இருதயங்களை ஸ்திரப்படுத்தவேண்டும்  என்கின்றார் யாக்கோபு. 

இன்று பல ஊழியர்களும் வருகைக்கு ஆயத்தப்படுதல் குறித்துப் பேசுகின்றனர். வருகைக்கு ஆயத்தப்படுதல் என்பது சிறப்பான பலவிதச்  செயல்பாடுகளைச் செய்வதல்ல, மாறாக, வேதத்தில் கூறப்பட்டுள்ள வாழ்க்கை வாழ்வதுதான். 

நாம் வாழவேண்டிய வழிமுறைகள், போதனைகள் எல்லாமே ஏற்கெனவே வேதத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றின்படி வாழ்வதுதான் வருகைக்கு ஆயத்தப்படுதல். ஆனால் பல கிறிஸ்தவர்களுக்கும் இயேசுவின் இரண்டாம் வருகை குறித்து பேசும்போது அது சிரிப்புக்குரியதாகத்தான் தெரிகின்றது. "இரண்டாயிரம் ஆண்டுகளாக இயேசு வருகிறார் என்றுதான் கூறிக்கொண்டிருக்கிறார்கள் எப்போதுதான் வருவார்?" என்கின்றனர். இவர்களுக்கு அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார்:- 

"அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்." ( 2 பேதுரு 3 : 4 )

"தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) ஆம், எல்லோரும் மனம்திரும்பித்  தூய ஒரு வாழ்க்கை வாழவேண்டும், ஒருவருமே கெட்டுபோய்விடக்கூடாது என்பதற்காகவே அவரது வருகை தாமதமாகின்றது. 

மேலும், நமது காலத்தில் அவர் வருகின்றாரோ இல்லையோ நாம் எப்போது மரித்தாலும் அவரை எதிர்கொள்ளவேண்டியது வரும். அது எப்போதும் நிகழலாம். எனவே நாம் எப்போதும் ஆயத்தமாய் இருக்கவேண்டியது அவசியம். 

அன்பானவர்களே, அப்போஸ்தலரான யாக்கோபு கூறுவதுபோல ஒரு விவசாயி பருவகாலத்துக்குக் காத்திருந்து முன் ஏற்பாடுகள் செய்வதுபோல நாமும் கிறிஸ்துவின் வருகைக்கு முன்னேற்பாடுகள் செய்து காத்திருக்கவேண்டியது அவசியம். அவர் வரும்போது கைவிடப்பட்டவர்களாக நாம் ஆகிவிடக்கூடாது. ஆவியானவரின் துணையோடு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாவோம்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                           தொடர்புக்கு- 96889 33712                                                

மனிதன் பாவத்தினாலும் விசுவாசக் குறைவினாலும் பாதிக்கப்படும்போது, தேவன் அவனைத் தள்ளிடாமல் இருக்கிறார்.

  ஆதவன் 🖋️ 587 ⛪ செப்டம்பர் 06,  2022 செவ்வாய்க்கிழமை

"நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." ( ஏசாயா 57 : 16 )

நாம் அனைவருமே அவரைப்போல பரிசுத்தர்களாக மாறவேண்டும் என தேவன் எதிர்பார்க்கின்றார். ஆனால், மனிதர்கள் அப்படி முற்றிலும் பரிசுத்தமாக வாழ முடியவில்லை. எனவே எத்தனைத்தான் புனித வாழ்வு வாழ்ந்தாலும் சில நேரங்களில் மனிதர்கள் தவறு செய்துவிடுவதுண்டு. அனால், தேவன் அன்புள்ளவராக இருப்பதால் மனிதர்களை மன்னிக்கின்றார். எப்போதும் அவர் கோபப்படுவதில்லை. ஏனெனில் அப்படி அவர் கோபப்பட்டு மனிதர்களை புறம்தள்ளுவாரென்றால் எல்லோருமே சோர்ந்துபோவோம். அதனையே இன்றைய வசனத்தில் கூறுகின்றார்.

இதேபோல நோவாவின்காலத்திலும் மனிதர்கள் தங்களைக் கெடுத்துப் பாவம்செய்தபோது தேவன் கூறினார், " என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப்போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்." ( ஆதியாகமம் 6 : 3) இது மனிதர்கள் சில வேளைகளில் கூறுவது போல இருக்கின்றது. கொடிய நோய்வாய்ப்பட்டு மரணத்தை நெருங்கும் மனிதர்களுக்கு மருத்துவர்களே அந்த மனிதர்களது வீட்டாரிடம், " இனி ரெம்ப நாள் செல்லாது, அவர் இருக்கப்போவது இன்னும் ஒன்று  ரெண்டு மாதங்கள்தான். அவர் ஆசைப்பட்டு கேட்பதெல்லாம் அவருக்கு கொடுங்கள்" என்பார்கள். அதுபோலவே தேவன் பாவ வியாதி பிடித்த மனிதர்களது வாழ்வைப்பற்றி வேதனையுற்று இப்படிக்  கூறுகின்றார்.  போகட்டும், அவன் இருக்கப்போகும் நாட்கள் நூற்று இருப்பது வருஷம்தானே ?

எனவேதான் பலவீனமான மனிதன் பாவத்தினாலும் விசுவாசக் குறைவினாலும் பாதிக்கப்படும்போது, தேவன் கோபங்கொண்டு அவனை முற்றிலும் தள்ளிடாமல் இருக்கிறார். ஆம், "அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்." ( மத்தேயு 12 : 20 )

சில வேளைகளில் நமக்குள் நமது ஆவிக்குரிய வாழ்க்கையினைக் குறித்து சந்தேகம் எழுந்துவிடும். மங்கி எரிகிற திரிபோல ஒளி இழந்து காணப்படுவதுபோலத்தெரியும். 'ஐயோ , நான் செய்த இந்தச்  செயல் தேவனுக்கு ஏற்புடைய செயல் அல்ல .... எனவே அவர் என்மேல் கோபமாயிருப்பார்' என எண்ணக்கூடும். ஆனால் அப்படி நாம் மனம் மடிந்திடத் தேவையில்லை. மங்கி எரியும் திரிதானே என்று அணைத்திடமாட்டார். 

எப்போது நாம் நமது உள்ளத்தில் நமது தவறை, பாவத்தை உணர்ந்து கொள்கின்றோமோ அப்போதே தேவன் நம்மேலுள்ள கோபத்தை மாற்றிவிடுகின்றார். "ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே." என்பதே தேவனுக்குரிய தாய் உள்ளத்தின் எண்ணம். 

ஆனால், இந்த வசனம் துன்மார்க்கனுக்குப் பொருந்துவதில்லை. ஏனெனில் துன்மார்க்கன் தான் செய்த தவறை உணர்வதுமில்லை, அவனது உள்ளத்தில் தேவனைப்பற்றிய எண்ணம் எழுவதுமில்லை. எனவே துன்மார்க்கர்களது ஆவி தேவனால் கைவிடப்பட்டு பல வேளைகளில் தற்கொலைமூலம் மாய்ந்து பாதாளத்துக்குப் போகின்றது. 

அன்பானவர்களே, நாம் மெய்யான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வோமென்றால்  எனவே தைரியமாக ஆவிக்குரிய வாழ்வைத் தொடரலாம். சிறு சிறு தவறுகள், பாவங்களுக்கு தேவனிடம் மன்னிப்பு கேட்டு ஆவிக்குரிய வாழவைத் தொடர்வோம். 

ஏனெனில், நமது தேவன் எப்போதும் வழக்காடமாட்டார்; அவர் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், தான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், அவரது முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகும் என்பது அவருக்குத் தெரியும். 

தேவன் இத்தனை அன்பானவர் என்பதனை நாம் உணர்ந்து கொள்ளும்போது தான் அவரிடம் நமது அன்பும் அவருக்கேற்ற வாழ்க்கையை நாம்  கண்டிப்பாக வாழவேண்டுமெனும் எண்ணமும் ஆசையும் நம்மை நிரப்பும். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                                       தொடர்புக்கு- 96889 33712                                          

Saturday, September 03, 2022

நாம் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருப்போம்

 ஆதவன் 🖋️ 586 ⛪ செப்டம்பர் 05,  2022 திங்கள்கிழமை

"தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே."( 2 கொரிந்தியர் 6 : 16 )

நமது தேவன் மனிதர்களோடு உறவுகொண்டு வாழ விரும்புகின்றவர். அவர் பேசக்கூடாத ஒரு சிலையல்ல. இந்த விருப்பத்தில் தேவன் மனிதர்களோடு மனிதனாக உலாவியதை நாம் ஆதியாகமத்தில் வாசிக்கின்றோம். ஆதாம் ஏவாளோடு அவர் ஏதேன் தோட்டத்தில் உலாவினார். "பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்." ( ஆதியாகமம் 3 : 8 ) என வாசிக்கின்றோம்.

உயிருள்ள மனிதரோடுதான் உறவுகளை, நமது உணர்ச்சிகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். நாம் விக்கிரகங்களை வணங்கும்போது நமது இருதயமும் கண்களும் அந்த விக்கிரகத்தை நோக்குமேயல்லாமல் அதற்குமேலாக தேவனை நோக்காது; நமது ஆத்துமாவில் அது எந்த உணர்ச்சியையும் தூண்டாது. 

இன்றைய வசனம், "நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே" என்று கேள்வி எழுப்புகின்றது. ஆம், நாமே ஜீவனுள்ள தேவன் வசிக்கும் ஆலயம்.  இதனை 1 கொரிந்தியர் 3:16, 6:19 வசனங்களிலும் நாம் வாசிக்கலாம். இந்த ஆலயத்தை நாம் கெடுத்தால் தேவன் நம்மைக் கெடுப்பார்.  "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." ( 1 கொரிந்தியர் 3 : 17 ) என்றும் வாசிக்கின்றோம். தேவனது ஆலயமாகிய நமது உடலாகிய ஆலயத்தை விக்கிரக ஆராதனை செய்யும்போது நாம் கெடுக்கின்றோம். 

மேலும், வேதாகம அடிப்படையில் சிலைவழிபாடு எனும் விக்கிரக ஆராதனை என்பது வெறும் சிலையை வழிபடுவதை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, தேவனுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை உலக பொருட்களுக்கு கொடுப்பதும் சிலைவழிபாடுதான். ஆம், பொருளாசையும் சிலைவழிபாடே. 

"விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே." ( எபேசியர் 5 : 5 ) என எழுதுகின்றார் அப்போஸ்தலரான பவுல். 

அதாவது, இன்றைய தியானத்துக்குரிய வசனத்தின் ஒட்டுமொத்தக் கருத்து, நமது உடல் தேவனுடைய ஆலயம். இதனை தேவன் தனக்காக முற்றிலும் நாம் பயன்படுத்த விரும்புகின்றார். இந்த உடலில் மனிதர்களோடு மனிதனாக வாழ்ந்து தன்னை வெளிப்படுத்த விரும்புகின்றார். எனவே, அவருக்குக் கொடுக்க வேண்டிய முதலிடத்தை அவருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு மிஞ்சியது அனைத்துமே சிலைவழிபாடுதான். 

அதனையே இன்றைய வசனம், தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? என்று சொல்லுகின்றது. ஆம், கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்றால் அவருக்கே நமது உடலாகிய ஆலயத்தில் முதலிடம் கொடுக்கவேண்டும். அப்படி நாம் வாழும்போது மட்டுமே அவர் நமக்குள் உலாவி நமது தேவனாக இருப்பார்; நாம் அவரது மக்களாக இருப்போம். 

இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தாங்கள் மண்ணினால் செய்யப்பட்டச் சிலைகளை வாங்காததால் தாங்கள் சிலைவழிபாடு செய்யவில்லை என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் மிகப்பெரிய பொருளாசையில் சிக்கி இருக்கின்றனர். பொருளுக்காகவும், புகழுக்காகவும், பதவிக்காகவும் அலையும் எல்லோருமே விக்கிரக ஆராதனைக்காரர்கள்தான்.

அன்பானவர்களே, தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது?  தேவன் நமக்குள்ளே வாசம்பண்ணி, உலாவி, நமது தேவனாயிருக்கவும் நாம் அவரது  ஜனங்களாயிருக்கவும் இடம்கொடுப்போம். அப்போது மட்டுமே நாம் தேவன் சொன்னபடி, ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருப்போம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                                               தொடர்புக்கு- 96889 33712                                                

நல்ல மனிதர்கள் பூனையைப் போன்றவர்கள்

  ஆதவன் 🖋️ 585 ⛪ செப்டம்பர் 04,  2022 ஞாயிற்றுக்கிழமை


"நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்." ( சங்கீதம் 37 : 23 )

தேவன் நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் சிந்தனைகளையும் அறிந்துகொண்டிருக்கின்றார். மனிதனின் அன்றாடச்  செயல்பாடுகள்  அவருக்கு மறைவானவையல்ல. உத்தமமாய்த், தனக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும் மக்களிடம் அவர் பிரியமாய் இருக்கிறார். அத்தகைய மனிதர்களது வாழ்க்கையினை அவர் பொறுப்பெடுத்துக்கொள்கின்றார். எனவே இத்தகைய நல்ல மனிதர்களது செயல்பாடுகள் கர்த்தரால் உறுதிப்படும். அவற்றில் எந்தக் குழப்பமும் இடர்பாடும் ஏற்படாது. கர்த்தர் அவர்களது செயல்பாடுகளில் பிரியமாய் இருக்கின்றார்.  

அத்தகைய நல்ல மாந்தர்கள் "விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்." ( சங்கீதம் 37 : 24 ) என்று அடுத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்போது எதிர்பாரா விதமாகச் சில தவறுகளை நல்ல மனிதர்களும் செய்யலாம். ஆனால் அப்படி அவர்கள் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை. ஏதாவது வழியில் அவர்களது தவறினை  தேவன் உணர்த்திக்கொடுத்து அவர்களைத் தாங்குகின்றார். 

தாவீது ராஜா தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் எதிர்பாராத விதமாக உரியாவின் மனைவியிடம் பாவத்தில் விழுந்துவிட்டார். ஆனால் தேவன் அவரை அப்படியே தள்ளிவிடவில்லை. நாத்தான் தீர்க்கதரிசி மூலம் அவரது பாவத்தை உணர்த்திக்கொடுத்து மீண்டும் தன்னோடு சேர்த்துக்கொண்டார். காரணம் தாவீதின் மனம். அவர் நாத்தான் தனது பாவத்தை உணர்த்தியதும் மனம் திரும்பி அழுது மன்னிப்பு வேண்டினார். 

அவர் எழுதிய பாவ மன்னிப்பின் சங்கீதம் (சங்கீதம் 51) இன்றும் நாம் பாவத்தில் விழும்போது நாம் ஜெபிக்க ஏற்ற ஜெபமாக இருக்கின்றது. 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்து அவரோடே இருந்தும் அப்போஸ்தலரான பேதுரு, கிறிஸ்துவை மறுதலிக்கவும் சபிக்கவும் செய்தார். ஆனால், தனது தவறுக்கு மனம் வருந்தி அழுதார். கிறிஸ்து அவரை மீண்டும் சேர்த்துக்கொண்டார். தலைமை அப்போஸ்தலராகவும் ஏற்படுத்தினார்.

ஆம், "நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்." ( நீதிமொழிகள் 24 : 16 ). அதாவது பூனையைப் போன்றவர்கள் நல்ல மனிதர்கள். எழுதரம் விழுந்தாலும் மனச்சாட்சியில் குத்தப்பட்டு தங்களது பாவங்களை தேவனிடம் அறிக்கையிட்டு மனம் திரும்பிடுவார்கள். ஆனால் துன்மார்க்கரோ பன்றியைப்போல எத்தனைத்தரம் கழுவினாலும் சேற்றிலேயே இன்பம்கண்டு அதில்தானே மூழ்கியிருப்பார்கள்.

அன்பானவர்களே, நாம் பலவீனமானவர்கள்தான். எனவே நாம் அடிக்கடி தேவனுக்கு ஏற்பில்லாதச் செயல்பாடுகளைச் செய்துவிடலாம். ஆனால், அதிலேயே மூழ்கிடாமல் தேவனிடம் பாவங்களை அறிக்கையிட்டு மனம்திரும்பவேண்டும்.  இப்படி வாழும்போது நமது வழிகளில் கர்த்தர் பிரியமாய் இருப்பார். நமது நடைகளை உறுதிப்படுத்துவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                

Friday, September 02, 2022

என்னில் நிலைத்திருங்கள்

 ஆதவன் 🖋️ 584 ⛪ செப்டம்பர் 03,  2022 சனிக்கிழமை

"ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று" ( 2 இராஜாக்கள் 18 : 7 )

இன்றைய வசனம் எசேக்கியா ராஜாவைபற்றிக் கூறுகின்றது. கர்த்தர் அவரோடு இருந்ததால் அவர் போகுமிடமெல்லாம் அவருக்கு வெற்றியாயிற்று.  இந்த எசேக்கியா "ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்" ( 2 இராஜாக்கள் 18 : 2 ) ஆம் இருபத்தைந்து வயதிலேயே எசேக்கியா கர்த்தரை அறிந்து அவருக்கு ஏற்புடையவராய் வாழத் தன்னை ஒப்புக்கொடுத்திருந்தார்.  

யூதாவின் பல ராஜாக்களும் கார்த்தரைவிட்டு பின்மாறிப்போன காலத்தில் எசேக்கியா மட்டும் கர்த்தருக்கு உண்மையானவராக வாழ்ந்தார். "அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்." ( 2 இராஜாக்கள் 18 : 6 ) என்று வாசிக்கின்றோம். 

அன்பானவர்களே, பழைய ஏற்பாட்டுக்கால மக்கள் தேவனை அச்சத்துக்குரியவராகவே பார்த்து வந்தனர். அந்தக்காலகட்டத்திலேயே தாவீது, எசேக்கியா போன்றவர்கள் கர்த்தரிடம் அன்புகொண்டு வாழ்ந்தார்களானால் இன்று கிறிஸ்துவின் அன்பை ருசித்த நாம் கர்த்தர்மேல் எவ்வளவு அன்புள்ளவர்களாக வாழவேண்டும்?

இதனைத்தான் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்." ( யோவான் 15 : 4 ) என்று கூறினார். நாமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இருந்ததால் நாம் போகுமிடமெல்லாம் நமது ஆவிக்குரிய வாழ்வு  நமக்கு வெற்றியாகும்.

மேலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு இணைந்து அவருக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழும்போது நமது ஜெபங்களையும் அவர் கனிவுடன் கேட்டுப் பதிலளிப்பார்.  

எசேக்கியாவோடு கர்த்தர் இருந்ததால் அவரது ஜெபத்தைக்கேட்டு  ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தான் கூறிய வார்த்தைகளையே  கர்த்தர் மாற்றினார். மரித்துப்போவாய் என்று முதலில் கூறியிருந்தும் தனது முடிவினை கர்த்தர் மாற்றி எசேக்கியா மேலும் பதினைந்து ஆண்டுகள் வாழ வாழ்வை நீட்டிக்கொடுத்து மகிழப்பண்ணினார். 

எசேக்கியா ஜெபித்தபோது,  தான் கர்த்தருக்கு உண்மையாக இருந்ததை கர்த்தருக்கு நினைவு படுத்தினார். "ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்." ( 2 இராஜாக்கள் 20 : 3 ) என்று கூறப்பட்டுள்ளது. 

நாம் இப்படி நமது சாட்சியுள்ள வாழ்வை கர்த்தருக்கு எடுத்துக்கூறி ஜெபிக்கக்கூடியவர்களாக வாழ்வோமானால் எசேக்கியாவுக்குச் செய்ததுபோல நமக்கும் அதிசயமான நன்மைகளைச் செய்வார்.  ஆம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முள் வசிக்கும்படி இடம்கொடுக்கும்போது  நாம் செயல்கள் அனைத்தையும் அவர் நமக்கு அனுகூலமாக்குவார். மட்டுமல்ல, நமது விண்ணப்பங்களும் உடனடியாகப் பதில் தருவார். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                               

Wednesday, August 31, 2022

ஆண்டவரது வசனமே கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்

 ஆதவன் 🖋️ 583 ⛪ செப்டம்பர் 02,  2022 வெள்ளிக்கிழமை

"என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." ( யோவான் 12 : 48 )

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், கிறிஸ்துவை எல்லோருக்கும் அறிவிக்கவேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை. ஏனெனில் இதனை இயேசு கிறிஸ்து தான் பரலோகம் செல்லுமுன் ஒரு கட்டளையாகக் கூறினார். "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்." ( மாற்கு 16 : 15, 16 ) என்று வாசிக்கின்றோம். 

பிரசங்கிக்கவேண்டியது மட்டுமே நமது கடமை. அதனைத்தான் கிறிஸ்தவர்கள் செய்கின்றனரே  தவிர மதம் மாற்றுவதில்லை. ஊழியம் செய்கின்றேன் என்று கூறி வேத அறிவோ அனுபவமோ இல்லாத சில அற்பமான ஊழியர்கள்தான் இதில் தவறு செய்கின்றனர். ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை விதைக்கவேண்டுமேத்தவிர வலுக்கட்டாயமாக எவரையும் நாம் கிறிஸ்துவுக்குள் கொண்டுவரமுடியாது. 

இன்றைய தியான வசனத்தில் இயேசு கிறிஸ்து கூறுவது இதுதான்.  அதாவது எனது வார்த்தைகளை நீங்கள் விதையுங்கள். அதனை ஏற்றுகொள்ளாதவனை நான் கூறிய வசனமே நியாயம் தீர்க்கும். ஆம், தேவனது வார்த்தைகள் உயிரும் வல்லமையும் உள்ளது. அது மனிதனது  உள்ளத்தில் ஊடுருவி அவனது ஆத்துமா, சிந்தனை, செயல், அவனது உடல் அனைத்தையும் ஊடுருவி குத்தக்கூடியது. இதனை நாம் எபிரெயர் நிருபத்தில் பின்வருமாறு வாசிக்கின்றோம்:- 

"தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது." ( எபிரெயர் 4 : 12 )

ஒருவன் எந்த மார்க்கத்தானாய் இருந்தாலும் மனச்சாட்சி ஒன்றுதான். அதாவது அதுவே அனைவரையும் ஒரே தேவன் உண்டாக்கினார் என்பதற்கு அடையாளம். எனவே எந்த மனிதனும் இறுகி நியாயத் தீர்ப்பில் தப்பிட  முடியாது.

இதனையே அப்போஸ்தலரான பவுல், "அவர்களுடைய மனச்சாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்." ( ரோமர் 2 : 15 ) ஆம், ஆண்டவரது சட்டங்கள் எல்லா மனிதர்கள் உள்ளத்திலும் எழுதப்பட்டுள்ளன.

ஆண்டவரது வசனம் நீதியானது, மதங்களுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும் என்கின்றார் இயேசு கிறிஸ்து. இதனாலேயே அனைவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கின்றோம்.

கிறிஸ்துவைத் தள்ளி அவரது வார்த்தைகளை விசுவாசியாமல் போகும்போது நாம் நீதியாக வாழ முடியாது. அவரது வசனமே நம்மைச் சரியான பாதையில் நடத்த வல்லமையுள்ளது. 

"என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிற தொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்" என்பது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டுள்ளோம் எனக் கூறிக்கொண்டு வசனத்துக்குக் கீழ்ப்படியாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தங்களைக் கிறிஸ்தவர்கள்  எனக் கூறிக்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தும். நமது வாழ்க்கை கிறிஸ்துவின் வசனத்தின்படி உள்ளதா? என்பதனையும் நாம் ஆராய்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். 

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                                

Tuesday, August 30, 2022

எல்லோருக்கும் தேவன் தனது சித்தத்தை வெளிப்படுத்துவார்

 ஆதவன் 🖋️ 582 ⛪ செப்டம்பர் 01,  2022 வியாழக்கிழமை

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்." ( எரேமியா 33 : 3 )

இன்று பெரும்பாலும் மக்கள், அதுவும் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் மக்கள், தங்கள் எதிர்காலங்களை அறிந்துகொள்ளவும், தற்போதைய பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் ஊழியர்களைத் தேடி ஓடும் அவலம் உள்ளது. இது பணம் சம்பாதிக்கும் எண்ணமுள்ள ஊழியர்களுக்குச் சாதகமாக உள்ளது. இதுவே இன்றைய கிறிஸ்தவத்தின் சாபக்கேடாகவும் இருக்கின்றது.

நமது தேவன் பாரபட்சம் காட்டும் தேவனல்ல. எல்லோரையும் ஒரேபோல அன்பு செய்யும் தெய்வம் அவர். குறிப்பிட்டச் சிலருக்கு தேவன் சில காரியங்களை வெளிப்படுத்தலாம். அது அவர்கள் தேவனோடு கொண்டுள்ள உறவைப் பொறுத்ததே தவிர வேறு அதிசயமல்ல. தேவனோடுள்ள இந்த உறவை எல்லோரும் பெறலாம், பெறவேண்டுமென்று தான் தேவனும் விரும்புகின்றார். தேவனோடு உறவுள்ள வாழ்க்கை வாழ்வோமானால் அப்படி வாழும் எல்லோருக்கும் தேவன் தனது சித்தத்தை வெளிப்படுத்துவார்.  

இப்படி தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து வருவோமானால், இன்றைய வசனம் கூறுவதுபோல அவர் நமக்குப் பதில் தந்து நாம் அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை அறிவிப்பார். 

தேவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்றவுடன் அது நம்மால் முடியாது என்று பலரும் திகைக்கின்றனர். எனவேதான் இவர்கள் தற்காலிக விடுதலைவேண்டி ஊழியர்களை நாடுகின்றனர். பெரும்பாலான தீர்க்கதரிசன ஊழியர்கள் தங்களை தேவனோடு நெருங்கிய உறவுள்ளவர்கள் எனக் காட்டிக்கொள்ளவேண்டி போலியான அல்லது வேதத்துக்கு முரணான செயல்களில் ஈடுபட்டு மக்களைக் கவர்கின்றனர். 

வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து மக்களுக்குச் சுகம் அளிக்குமுன் பல இடங்களில் முதலில், "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றுதான் கூறுகின்றார்.  அதாவது நாம் நமது பிரச்சனைகளையும் நோய்களையும் பிரதானமாகப் பார்க்கின்றோம், ஆனால் தேவனோ நமது பாவங்களையே பிரதானமானதாகப் பார்க்கின்றார். 

ஆனால் இன்றைய எந்த ஊழியக்காரனும் இதனை மக்களுக்குச் சொல்வதுமில்லை, மக்களது பாவங்களை உணர்த்திக் கொடுப்பதுமில்லை. அவர்களே பாவங்களில் மூழ்கியிருப்பதால் அதுபற்றி மக்களிடம் தைரியமாக எடுத்துக்கூற அவர்களது மனச் சாட்சியே அவர்களைக் குத்துவதும் இப்படிக் கூறாமல் இருக்கக் காரணமாக இருக்கலாம். எனவே இவர்கள் கூறுவது தேவ வாக்கு என நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவேதான் தேவன் கூறுகின்றார், "உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." ( எரேமியா 23 : 16 )

இந்த வசனத்தை வாசிக்கும்போது எந்த தீர்க்கதரிசியையும் நாம் நம்பவேண்டாம் என்று பொருளாகின்றது. ஆனால், உண்மையான தீர்க்கதரிசிகளும் உள்ளனர். (அவர்கள் விசுவாசிகளிடம் பணம் பறிக்கும்  திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள்) அவர்கள் கூறுவது தேவனோடு உறவுகொண்டு வாழும் விசுவாசிகளுக்கு தேவன் ஏற்கெனவே கூறிய வார்த்தைகளை அவர்களுக்கு உறுதிப்படுத்துவதாக இருக்கும்.

அன்பானவர்களே, தீர்க்கதரிசன ஊழியர்களைத் தவிர்த்து, தேவனுக்கு ஏற்ற ஒரு வாழ்க்கை வாழ்ந்து, இன்றைய வசனம் கூறுவதுபோல,  அவரை நோக்கிக் கூப்பிடுவோம், அப்பொழுது அவர் நமக்கு உத்தரவு கொடுத்து, நாம் அறியாததும் நமக்கு  எட்டாததுமான பெரிய காரியங்களை நமக்கு அறிவிப்பார்.

தேவ செய்தி :- சகோஎம் . ஜியோ பிரகாஷ்                                  தொடர்புக்கு- 96889 33712                                               

சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)

🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 15 : 19 / 1 Corinthians 15:19

" ஆதவன் " தியானம் - 1977 ஜூலை 07, செவ்வாய் 2026       "இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்...