ஆதவன் 🖋️ 544 ⛪ ஜுலை 25, 2022 திங்கள்கிழமை
Sunday, July 24, 2022
செத்தவன்போல இருக்காதே, விழித்துக்கொள்!
Friday, July 22, 2022
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்
ஆதவன் 🖋️ 543 ⛪ ஜுலை 24, 2022 ஞாயிற்றுக்கிழமை
"அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது." ( லுூக்கா 1 : 50 )
காபிரியேல் தூதன் கூறிய செய்தியைக் கேட்டு அன்னை மரியாள் எலிசபெத்தை சந்திக்கச்செல்லுகின்றாள். எலிசபெத்து மரியாளைப்பார்த்து, "என் ஆண்டவரது தாயார் என்னிடத்தில் வரக்கூடிய பாக்கியம் எனக்கு எதனால் கிடைத்தது" என ஆச்சரியப்பட, அன்னை மரியாள் பாடிய புகழ் பாடலில் இன்றைய தியானத்துக்குரிய வார்த்தைகளைக் கூறுகின்றார்.
ஆம், கர்த்தரது இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்கு இந்தத் தலைமுறையில் மட்டுமல்ல, அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து இருக்கும் என்பதே இந்த வசனம் கூறுவது.
கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது ஒரு போலீஸ்காரரைப் பார்த்துப் பயப்படுவதுபோலவோ அல்லது ஒரு ஆசிரியரைப் பார்த்து மாணவன் பயப்படுவதுபோல பயப்படுவதையோ குறிக்கவில்லை.
"தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்." ( நீதிமொழிகள் 8 : 13 ) என நீதிமொழிகள் நூலில் வாசிக்கின்றோம்.
தீமையை வெறுக்கக்கூடிய மனம் நமக்கு வேண்டும். "பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்." என்று இந்த வசனம் கூறுகின்றது. இத்தகைய குணங்கள் மிகுதியாக அரசியல்வாதிகளிடம் இருப்பதை நாம் அறிவோம். பதவிக்காகவும் தாங்கள் சார்ந்துள்ள கட்சி செய்வதை நியாயப்படுத்தவும் அரசியல்வாதிகள் இப்படிச் செய்கின்றனர்.
ஆனால் இந்தக் குணம் பெரும்பாலான மனிதர்களிடமும் இருக்கின்றது. ஒரு கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைத்துவிட்டாலே பெருமை, அகந்தை மனிதர்களுக்கு வந்துவிடுகின்றது. பிரபஞ்சத்தையே படைத்து ஆட்சிசெய்யும் தேவன் எல்லா மகிமையையும் விட்டு அற்பமான மனிதனுக்கு ஒப்பானவராக மாறினாரே ? (வாசிக்க - பிலிப்பியர் 2 : 6-11)அவர் எப்படி இந்த அகந்தையும் பெருமையும் உள்ள மனிதர்களை ஏற்றுக்கொள்வார்?
அன்பானவர்களே, நமது தலைமுறை நன்றாய் இருக்கவேண்டுமென்று சொத்து சுகங்கள் சேர்த்து வைத்து கூடவே தேவ சாபத்தையும் சேர்க்கக்கூடாது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது என்று கூறப்பட்டுள்ளதால், "தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்" என்ற வசனத்தின்படி தீமையை வெறுத்து அவருக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழ்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்
ஆதவன் 🖋️ 542 ⛪ ஜுலை 23, 2022 சனிக்கிழமை
"தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." (எபிரெயர் 13: 7, 8)
கிறிஸ்துவின் சுவிசேஷம் யாரோ ஒருவரால் நமது வாழ்வில் நமக்கு அறிவிக்கப்பட்டு நாம் கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டிருப்போம். நம்மை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தியவர்கள் பிற்பாடு ஒருவேளை வழி விலகிப் போயிருக்கலாம்.
எனவேதான், நம்மை இரட்சிப்புக்கு நேராக நடத்தியவர்களின் செயல்பாடுகளை நினைத்து, அவற்றின் முடிவினைக் கவனித்து அவற்றைப் பின்பற்றவேண்டும். எனவேதான், "உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்." என்று எழுதுகின்றார் நிரூப ஆசிரியர்.
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அப்போஸ்தலர் காலத்தில் அவர் நடத்தியவிதங்களில் இன்றும் தன்னை விசுவாசிப்பவர்களை அவர் நடத்துகின்றார். நமது வாழ்வில் கிறிஸ்துவின் செயல்பாடுகள் இல்லாமல் போவதற்கு நமது தவறான செயல்பாடுகள் காரணமாய் இருக்கலாம், எனவே அவற்றை நாம் ஆராய்ந்து பார்த்து திருத்திக் கொள்ளவேண்டுமே தவிர, "பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்". (எபிரெயர் 13:9 ) என்கின்றார்.
இன்று பல கிறிஸ்தவர்கள் இப்படியே இருக்கின்றனர். தங்களது வாழ்வில் ஆசீர்வாதம் இல்லை என எண்ணி மாறி மாறி ஒவ்வொரு ஊழியக்காரர்களாக அலைந்து திரிகின்றனர். இந்த ஊழியர்கள் ஆளாளுக்கு ஒரு உபதேசம் கூறுபவர்களாக இருக்கின்றனர். எனவேதான், "பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்" என்று கூறப்பட்டுள்ளது. வேதாகம சத்தியங்களுக்கு முரணான போதனைகளே அந்நிய போதனைகள்.
அன்பானவர்களே, நம்மை நாம் வேத வெளிச்சத்தில் நிதானித்துப்பார்த்து நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டுமே தவிர அலைந்து திரிவதால் அர்த்தமில்லை.
தேவவசனத்தை நமக்குப் போதித்து நடத்தினவர்களை நாம் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுவோம். ஒருவேளை அவர்கள் வழி விலகிச் சென்றிருந்தால், வேத வெளிச்சத்தில் ஆராய்ந்துபார்த்து நேர் வழியில் நடப்போம்.
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பதால் நம்மை அவர் நேரான வழியில் நடத்துவார்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
Wednesday, July 20, 2022
பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுவோம்.
ஆதவன் 🖋️ 541 ⛪ ஜுலை 22, 2022 வெள்ளிக்கிழமை
"நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்." ( கொலோசெயர் 3 : 1, 2 )
கிறிஸ்துவுடன் கிறிஸ்துவுக்காக மரித்து (அதாவது பாவத்துக்கு மரித்து) அவருடன் எழுந்திருப்பதே நாம் இரட்சிக்கப்பட்டுளோம் என்பதற்கு அடையாளம். அப்படி இரட்சிப்பு அனுபவத்தைப் பெற்றவர்கள் கிறிஸ்துவைப்போல மேலான எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பார்கள்.
அதனையே, "நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்" என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகின்றார். ஒருவர் கிறிஸ்துவுக்குள் மரித்து உயிர்த்த அனுபவம் உள்ளவரென்றால் (அதாவது இரட்சிக்கப்பட்டவரென்றால் ) இப்படி மேலானவைகளைத் தேடுபவராக இருப்பார்.
தேவனுடைய வலது பாரிசத்தில் இருப்பவை இந்த பூலோகத்திலுள்ளவைகளல்ல. அந்த பரலோக மகிமை காரியங்கள் பவுல் அடிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அதனையே பவுல் அடிகள், "அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம்...."( 2 கொரிந்தியர் 12 : 7 ) என்று கூறுகின்றார்.
ஆனால் இந்த உலகத்தில் பெரும்பாலான கிறிஸ்தவ பிரசங்கிகளும் தங்களைக் ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் சபைகளும் இந்த அனுபவத்தையோ, இதுபற்றிய தெளிவோ இல்லாமல் நூறு சதவிகிதம் உலக காரியங்களையே பிரசங்கித்து மக்களை இருளுக்கு நேராக நடத்துகின்றனர். இவர்கள் நூதனமான சுவிசேஷத்தை அறிவிக்கின்றனர்.
"நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளீர்களானால் கிறிஸ்துவிடம் உங்கள் எல்லா உலகத் தேவைகளையும் கேளுங்கள். கிறிஸ்து வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளையல்ல பூமியிலுள்ளவைகளையே நாடுங்கள். அதற்கு அதிக காணிக்கைகளைக் கொடுங்கள். பத்தில் ஒருபங்கு வருமானத்தை எங்களுக்குத் தாருங்கள்; நீங்கள் கொடுப்பது பலமடங்காக உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படும்." என்பதே இவர்களது நூதன சுவிசேஷம்.
அன்பானவர்களே, ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் பிரபல பிரசங்கிகளால் வஞ்சிக்கப்படுகின்றார்கள். மக்களது காணிக்கைப் பணத்தால் இவர்களால் துவக்கப்பட்ட பத்திரிகைகளும் டெலிவிஷன்களும் இருளுக்கு நேராக மக்களை வழிநடத்தவே பயன்படுகின்றன.
நாம் நம்மைக் காத்துக்கொள்வோம். கிறிஸ்துவுடன்கூட எழுந்த நாம், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளையேத் தேடுவோம். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுவோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
Tuesday, July 19, 2022
கர்த்தருடன் இணைந்த வாழ்வை வாழ்வோம்
ஆதவன் 🖋️ 540 ⛪ ஜுலை 21, 2022 வியாழக்கிழமை
"கர்த்தருக்குக் காத்திரு, திடமனதாயிரு, அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார், கர்த்தருக்கே காத்திரு." ( சங்கீதம் 27 : 14 )
கர்த்தருக்குக் காத்திரு என்று இன்றைய வசனம் வலியுறுத்திக் கூறுகின்றது. "கர்த்தருக்கே காத்திரு" என்று கூறுவது அவருக்காக மட்டுமே காத்திரு எனும் பொருளில்தான்.
காத்திருத்தல் என்பது ஒன்றும் செய்யாமல் ஒரு பேருந்துக்கோ ரயிலுக்கோ காத்திருப்பதுபோல காத்திருப்பதையல்ல. மாறாக, பொறுமையோடு அமைதியாக கர்த்தர் செயல்படும்வரை உன் மனதில் விசுவாசத்தோடு இரு என்பதாகும். அதனைத்தான் திடமானதாயிரு என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், காத்திருத்தல் எனும் வார்த்தைக்கு மூல வேதாகமத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை QAVAH என்பதாகும். இதற்குக் 'காத்திருத்தல்' எனும் பொருளைத் தவிர வேறு இரண்டு அர்த்தங்களும் கூறப்பட்டுள்ளன. ஒன்று 'பின்னுதல்' (பெண்கள் தலை முடியைப் பின்னுவதுபோல) இன்னொரு பொருள் 'இணைத்தல்' (bind). அல்லது 'ஒட்டிக்கொள்ளுதல்'. எனவே இந்த வசனத்தின் மெய்யான பொருள், கர்த்தரோடு கர்த்தராக உன்னை பின்னிக்கொள், அவரோடு அவராக ஒட்டிக்கொள் என்பதாகும். அப்படி இருக்கும்போது அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
மேலும் இப்படிக் கர்த்தரோடு தங்களை இணைத்துக் கொண்டவர்களைக் குறித்து ஏசாயா, "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்." ( ஏசாயா 40 : 31 ) என்று கூறுகின்றார்.
ஆவிக்குரிய வாழ்வில் நாம் நடக்கும்போது நம்மைத் திடப்படுத்தவும் நாம் அவரோடு மேலும் நெருங்கிடவும் தேவன் சில வாக்குத்தத்தங்களை நமக்குத் தரலாம். அவை நமது வாழ்வில் நிறைவேறிட காலதாமதமாகலாம். ஆனால் நாம் அவரோடுள்ள உறவில் விலகிடாமல் நெருக்கமாக இருக்கவேண்டியது அவசியம்.
ஆபிரகாம் எழுபத்தைந்து வயதுள்ளவனாய் இருந்தபோது தேவன் அவருக்கு ஒரு மகனை வாக்களித்தார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேறிட அவர் தனது நூறு வயதுவரை காத்திருக்கவேண்டியிருந்தது. அவர் விசுவாசத்தில் உறுதியாக இருந்தார். காரணம், தேவனோடு அவர் தன்னைப் பிணைத்துக்கொண்டார்; அவரோடு ஒட்டிக்கொண்டார்.
அன்பானவர்களே, திடமனதாய் கர்த்தருடன் இணைந்த வாழ்வை வாழ்வோம். வேதாகமத்தை வாசிப்பதும், அன்றாட ஜெபத்தில் தரித்திருப்பதும் அவருக்கேற்ற ஒரு வாழ்வை வாழ்வதும் அவரோடுள்ள நமது நெருக்கத்தை அதிகரிக்கும். அப்போது அவர் நமது இருதயத்தை உறுதிப்படுத்துவார். அப்போது எந்த உலகக் கவலையும் பிரச்சனைகளும் நம்மை மேற்கொள்ளாது.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
இரட்சிப்பு ஒருநாளில் நடப்பதல்ல.......
ஆதவன் 🖋️ 539 ⛪ ஜுலை 20, 2022 புதன்கிழமை
"முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்." (மத்தேயு 24:13)
பொதுவாக இன்று ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலரும், "நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன்" என்று கூறுவது வழக்கம். சிலர் அதனை தேதி குறிப்பிட்டு இந்தத் தேதியில் நான் இரட்சிக்கப்பட்டேன் என்றும் கூறுவார்கள். இப்படிக் கூறுபவர்கள் பாவ மன்னிப்புக்கும் இரட்சிப்புக்குமுள்ள வேறுபாட்டை சரியாகப் புரிந்துகொள்ளாதவர்களே.
நமது மகன் நாம் சொல்லும் அறிவுரைகளைக் கேட்காமல் துன்மார்க்க நண்பர்களோடு சேர்ந்து பழகுகின்றான் என்று வைத்துக்கொள்வோம். ஒருமுறை அப்படி அவர்களோடு சேர்ந்து சிறு தகாத செயலில் ஈடுபட்டு காவல்துறையால் கைதுசெய்யப்படுகின்றான். நமக்குத் தகவல் வருகின்றது. நாம் காவல் நிலையம் செல்லுகின்றோம்.
நம்மைக் கண்டதும் மனம் கசிந்து அழுகின்றான். பின், "அப்பா, உங்கள் அறிவுரையினைக் கேட்காதது தவறுதான். என்னை மன்னியுங்கள்" என்கின்றான். நமது மகன் என்பதால் நாம் அவனை மன்னிக்கின்றோம். இதுவே பாவ மன்னிப்பு. கிறிஸ்துவிடம் நமது பாவங்களை அறிக்கையிடும்போது இதுபோல அவர் நம்மை மன்னிக்கின்றார். அதாவது நாம் அவருடன் ஒப்புரவாக்கப்படுகின்றோம். அப்போது அதுவரை நாம் செய்த பாவங்களை அவர் மன்னிக்கின்றார்.
ஆனால் காவல் நிலையத்திலிருந்து மீட்கப்பட்டபின் அந்த மகன் பழைய பாவ நண்பர்களைவிட்டு விலகவேண்டும். தாய் தகப்பனுக்கு ஏற்புடைய ஒரு வாழ்க்கை வாழவேண்டும். இறுதிவரை அப்படி இருந்தாலே அவன் பாவ மன்னிப்பைப் பெற்றதில் அர்தமுண்டு. இல்லையானால் மீண்டும் இக்கட்டுக்கு உள்ளாவான்.
இதனையே அப்போஸ்தலரான பவுல், "நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே." ( ரோமர் 5 : 10 )
அதாவது இப்படி ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. எனவே இப்படி பாவமன்னிப்பு பெற்று கிறிஸ்துவோடு ஒப்புரவாக்கப்பட்டபின்பு கிறிஸ்துவின் ஜீவனாலே நாம் இரட்சிக்கப்படுவது நிச்சயம் என்று பவுல் கூறுகின்றார். கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் நம்மைப் பாவத்திலிருந்து விடுதலை அளிக்கும்.
இப்படி இரட்சிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் ஆவியின் படியே நடப்பார்கள். "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ( ரோமர் 8 : 1, 2)
இது ஒருநாளில் நடப்பதல்ல. அன்றாடம் நாம் பாவத்துக்கு எதிராகப் போராடவேண்டும். இதுவே கிறிஸ்து கூறிய சிலுவை சுமக்கும் அனுபவம். இப்படிச் சிலுவை சுமந்து, பாவத்துக்கு எதிராகப் போராடி நமது வாழ்வின் இறுதிவரை நம்மைப் பாவமில்லாமல் காத்துக்கொள்ளவேண்டும். இப்படி வாழ்வின் "முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்." (மத்தேயு 24:13)
அன்பானவர்களே, என்றோ நாம் பெற்றுக்கொண்ட பாவ மன்னிப்பு அனுபவத்தை வைத்துக்கொண்டு , "நான் இரட்சிக்கப்பட்டேன் " என்று கூறிக்கொண்டு அலைவதால் அர்த்தமில்லை. உலக வாழ்வின் இறுதிவரை நமது வாழ்வு பாவமில்லாமல் நிலை நிற்கவேண்டும். இல்லையானால், நாம் முதலில் பார்த்த சம்பவத்திலுள்ள மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுபோல சாத்தானின் வல்லமைக்குள் கைதியாக இருப்போம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
Monday, July 18, 2022
ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தின ....
ஆதவன் 🖋️ 538 ⛪ ஜுலை 19, 2022 செவ்வாய்க்கிழமை
"பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்." ( மத்தேயு 11 : 25 )
ஒருவர் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு துறையில் சிறந்தவராக இருக்கலாம், ஆனால் அதனால் அவர் எல்லாம் தெரிந்தவரோ பெரிய மேதையோ என அர்த்தமல்ல. அவருக்கு ஏதோ பலவீனம் இருக்கும். அவரோடு நெருங்கிப் பழகினால்தான் அது தெரியும்.
இந்த உலகத்தில் மிகப்பெரிய விஞ்ஞானியாக புகழப்பட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். இவர் விஞ்ஞானத்தில் மேதையாக இருந்தாலும் அவரது அறிவு கடவுளை அறிந்திடத் தடையாகவே இருந்தது.
இந்த உலக வரலாற்றில் இதுவரைப் பிறந்தவர்களில் அதிக அளவு மூளைத்திறன் உள்ளவராக இருந்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின். அவரது அறிவினைக்கண்டு வியந்த விஞ்ஞானிகள் அவர் மரித்தபின் அவரது மூளையைப் பாதுகாத்து எப்படி இந்த மனிதனது மூளை இப்படி சிந்தித்தது , இவரதுமூளை மற்ற மனிதர்களது மூளையிலிருந்து எப்படி வேறுபட்டதாயிருக்கின்றது ஆராய்ச்சி செய்தனர்.
ஆனால், அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் நம்மை வியக்கவைக்கும். ஒருமுறை அவர் ஏதோ காரியமாக ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். ரயிலின் டிக்கெட் பரிசோதகர் அவரிடம் வந்து டிக்கெட்டை காண்பிக்குமாறு கூறினார். ஐன்ஸ்டின் தனது மேல்சட்டை, கால்சட்டை, மேலே அணிந்திருந்த கோட் பாக்கெட் என அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தார். டிக்கெட் கிடைக்கவில்லை.
அவரையே பார்த்துக்கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர், "டாக்டர் ஐன்ஸ்டின் அவர்களே, எனக்கு உங்களைத் தெரியும். நீங்கள் நிச்சயமாக டிக்கெட் வாங்கியிருப்பீர்கள். பரவாயில்லை, உங்களைப்போன்ற மேதைகளால் நமது நாட்டுக்கே பெருமை. நியாயப்படி அரசாங்கம் உங்களுக்கு இலவச பயண வசதி செய்துகொடுத்திருக்க வேண்டும்...அமர்ந்துகொள்ளுங்கள் " என்று கூறியபடி நகர்ந்தார்.
அவர் அடுத்த பெட்டியைநோக்கி நகரவும் ஐன்ஸ்ட்டின் கீழே குனிந்து தனது இருக்கையின் அடியில் டிக்கெட்டைத் தேடத் துவங்கினார். அதனைக் கவனித்தத் டிக்கெட் பரிசோதகர், "டாக்டர் ஐன்ஸ்டின் அவர்களே, பரவாயில்லை, எனக்கு அது தேவையில்லை" என்றார். அதற்கு ஐன்ஸ்டின் மறுமொழியாக, " சார், உங்களுக்கு அது தேவையில்லாமல் இருக்கலாம், எனக்கு அது தேவைப்படுகின்றது. நான் எங்கே செல்கிறேன் என்பது அதனைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும்" என்றார்.
மிகப்பெரிய மேதை என உலகத்தால் புகழப்பட்ட மனிதன் இந்த உலகத்தில் தான் எங்கு செல்கிறேன் என்று தெரியாமலே பயணம் செய்தது ஆச்சரியமாயில்லையா? தனது இந்த உலக பயணமே தெரியாதபோது மறுவுலகம் பற்றிய சிந்தனை அவருக்கு வேடிக்கையான கதையாகவே இருந்ததில் ஆச்சரியமில்லை.
மேதை எனப் புகழப்பட்ட ஐன்ஸ்டின் ஒருமுறைக் கூறினார், " 'கடவுள்' என்ற வார்த்தை என்னைப் பொறுத்தவரை மனித பலவீனங்களின் வெளிப்பாடு மற்றும் விளைவுகளே தவிர வேறொன்றுமில்லை, பைபிள் மரியாதைக்குரிய, ஆனால் இன்னும் பழமையான சிறுபிள்ளைத்தனமான கதைகளின் தொகுப்பாகும். இவற்றை நியாயப்படுத்த எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள முடியாது "
ஆம், மேதையாய் இருப்பதால் எல்லாம் தெரிந்தவர் என எண்ணிவிடக்கூடாது. எனவேதான் இயேசு கிறிஸ்து, "பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்." ( மத்தேயு 11 : 25 ) என்றார்.
அன்பானவர்களே, இதுபோல நமது அறிவும் படிப்பும் தேவனை அறிந்திடத் தடையாக இருக்கலாம். அப்படி இராதபடி பார்த்துக்கொள்வோம். "ஆண்டவரே, நான் புழுதியும் குப்பையுமானவன், என் பாவங்களை எனக்கு மன்னித்து உம்மை நான் அறிந்திட கிருபை செய்யும்" என வேண்டுதல் செய்வோம்.
தேவ செய்தி :- சகோ. எம் . ஜியோ பிரகாஷ் தொடர்புக்கு- 96889 33712
சமீபத்தியக் கட்டுரைகள் (Latest Articles)
🦋 Meditation verse - 1 கொரிந்தியர் 15 : 19 / 1 Corinthians 15:19
" ஆதவன் " தியானம் - 1977 ஜூலை 07, செவ்வாய் 2026 "இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்...
-
- சகோ. எம்.ஜியோ பிரகாஷ் ஒ ரு முறை திரளான மக்கள் கூடி வந்திருந்தபோது இயேசு கிறிஸ்து அவர்களுக்குப் பல அறிவுரைகளைக் க...
-
'ஆதவன்' 💚நவம்பர் 29 , 2024. 💚வெள்ளிக்கிழமை வேதாகமத் தியானம் - எண்:- 1,391 "மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீ...
-
கர்த்தருக்குக் காணிக்கை - எம்.ஜியோ பிரகாஷ் கர்த்தருக்குக் காணிக்கை என்கின்ற இந்த நூல் 2005 ம் ஆண்டு சகோ. ஜியோ பிரகாஷ் ...




.jpg)

