இயேசு கிறிஸ்து முதலில் நம்மை அன்புகூர்ந்ததினால் நாம் அவரை அன்பு செய்கின்றோம்.

Friday, September 17, 2021

கிறிஸ்து இருக்குமிடத்தில் நான்

                                - சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


"மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்." (  எஸ்தர் 9 : 4 )

யூதனாகிய இந்த மொர்தெகாயின் ஆரம்ப வாழ்கையினைப் பார்த்தால் மிகவும் அற்பமானது.  இவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகோனியாவைச் சிறைபிடித்துக்கொண்டு போனபோது அவனோடுகூட  சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்ட ஒரு யூதன். பாபிலோனிலே அடிமையாக வாழ்ந்தவன்

சிறையிருப்பிலிருந்து மீண்டு வந்தபின் ராஜாவாகிய அகாஸ்வேருவின் சூசான் அரண்மனையில் வாயில்காப்போனாகப் பணியாற்றிக்கொண்டிருந்தான்இந்த அகாஸ்வேரு ராஜா இந்தியாமுதல் எத்தியோப்பியா வரையிலான  127 நாடுகளை ஆட்சிசெய்தவன். (எஸ்தர் - 1:1)

 இந்தச் சிறிய வேலையில் இருந்தாலும் மொர்தெகாய் தேவனுக்குமுன் உண்மையுள்ளவனாக இருந்தான். தனது சித்தப்பா மகள் எஸ்தரையும் இவன் வளர்த்துவந்தான். (எஸ்தர் ஆகமத்தைப்  படித்து கதையினை அறிந்துகொள்ளுங்கள்)

அகாஸ்வேரு ராஜாவுக்கு அடுத்தபடியாக இருந்த மந்திரி ஆமான் என்பவனை மொர்தெகாய் வணங்காததுதான் பிரச்சனைக்குக் காரணமாயிற்று. அப்படித் தன்னை வணங்காததால் மொர்தெகாயை எப்படியாவது கொலை செய்துவிடவேண்டும் என ஆமான்  தீர்மானித்தான். அதற்காக தந்திரமாக வேலைசெய்தான்.  ஒரு சாதாரண வாயில்காவலன் ராஜாவுக்கு அடுத்தபடியான அதிகாரத்திலுள்ள மனிதனை வணங்காதது  தவறுதானே என நாம் எண்ணலாம். ஆனால் மொர்தெகாய் அப்படி ஆமானை வணங்காததற்குரிய காரணம் எஸ்தர் (கிரேக்கம்) நூலில் உள்ளது (விவிலியம் பொது மொழிபெயர்ப்பு). 

அதில் மொர்தெகாயின் அருமையான ஒரு ஜெபம் உள்ளதுமொர்தெகாய் தேவனிடம் விண்ணப்பம் பண்ணும்போது பின்வருமாறு கூறுகிறான், " ஆண்டவரே, ஆமானுக்கு  நான் வணக்கம் செலுத்த மறுத்ததற்குக் காரணம் செருக்கோ, இறுமாப்போ, வீண் பெருமையோ அல்ல  என்பதையும் நீர் அறிவீர். இஸ்ரயேலின் மீட்புக்காக நான் அவனுடைய உள்ளங்கால்களைக் கூட முத்தமிட்டிருப்பேன். ஆனால், கடவுளைவிட மனிதரை மிகுதியாக மாட்சிப்படுத்தக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு நான் நடந்துகொண்டேன். ஆண்டவரே, உம்மையைத்தவிர வேறு யாரையும் நான் வணங்கமாட்டேன்"   (எஸ்தர் கிரேக்கம் - 4:17d , 17e ) 

மொர்தெகாய் தேவனுக்கு முன்னுரிமை கொடுப்பதில் உறுதியாக இருந்தான். பதவியே போனாலும், உயிரே போனாலும்  தேவனுக்கு கொடுக்கவேண்டிய மகிமையை மனிதனுக்குக் கொடுக்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தான்

அன்பானவர்களே இப்படி நாமும் நம்மை ஆள்வோருக்கு வணக்கம் செலுத்தக்கூடாது எனப் பொருளல்ல. தேவனா, இல்லை மனிதனா அல்லது உலகப் பொருட்களா  எனத் தேர்வு செய்யவேண்டிய நிலை  வரும்போது தேவனுக்கே நாம் முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

பதவி, பொருளாசை இவைகளுக்கு மயங்கி தேவனை இரண்டாவது இடத்துக்குத்தள்ளிவிடக் கூடாது. இன்றைய சுவிசேஷ அறிவிப்புச் செய்திகள் பலவும் தேவனை அறிவிப்பதுபோல வெளிப்பார்வைக்கு இருந்தாலும் அவை உலக காரியங்களுக்கே முன்னுரிமை கொடுப்பனவாக உள்ளன.  எனக்குக் கிறிஸ்து போதும் என்று நிறைவடையும் மனநிலையினை பலரும் போதிப்பதில்லை. உலக ஆசீர்வாதங்களுக்காக கிறிஸ்துவைத் தேடும்படி போதிக்கும் போதனைகள் எங்கும் மேலோங்கி உள்ளன. 

அன்பானவர்களே, தன்னைத் தேவன் உயர்த்தவேண்டும் எனும் எண்ணத்தில் மொர்தெகாய் தேவனுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. ஆனால்,  சாதாரண வாயில் காவலனாக இருந்த "யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்". (  எஸ்தர் 10 : 3 ) என்று வேதம் கூறுகின்றது.

வாயில் காவலனான மொர்தெகாய்ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனாக மாறிவிட்டான் என்றால் அகாஸ்வேரு ஆட்சி செய்த 127 நாடுகளுக்கும் அவனும் அரசனுக்கடுத்த இரண்டாவது தலைவனாகமாறிவிட்டான்

தேவனுக்குமுன் உண்மையாய் வாழும்போது தேவன் ஒருவனை எப்படி உயர்த்துகிறார் பாருங்கள். எந்தவேளையிலும் தேவனுக்கு முன்னுரிமை கொடுப்பதில் உறுதியாக இருப்போம்.  

நாமும் இப்படி ஊலக காரியங்களில் உயரவேண்டும் என்று பொருளல்ல. "அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன் " என்று கூறி துணிந்து நின்ற யோபுவைபோல அவர் நம்மை உலக காரியங்களில் உயர்த்துகின்றாரோ இல்லையோ தேவனிடத்தில் திட விசுவாசமாய் இருக்கவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. ஏனெனில் நாம் இந்த உலக காரியங்களுக்காக அல்ல, நித்திய கால வாழ்கைக்காகவே கிறிஸ்துவால் அழைக்கப்பட்டுள்ளோம்.

சாதாரண உலக காரியங்களில் ஒரு மனிதனை தேவன் இப்படி உயர்த்துவாரென்றால், நித்தியத்தில் அவனுக்கு எவ்வளவு பெரிய ஆசீர்வாதங்களை வைத்திருப்பார்? 

நித்தியத்தில் உயர்த்துகின்றாரோ இல்லையோ அதுகூட வேண்டாம், கிறிஸ்து இருக்குமிடத்தில் நான் இருந்தால் போதும் எனும் எண்ணத்தில் வாழ்வோம், கிறிஸ்துவை அன்பு செய்வோம். 

No comments: