- சகோ. எம். ஜியோ பிரகாஷ்
ஆரம்பகால கிறிஸ்தவ ஊழியங்களில் மனிதர்கள் மீட்படைய நியாயப்பிரமாணக் கட்டளைகளைக் கடைபிடிப்பது போதுமா? இல்லை அதற்குமேலும் தேவன் எதிர்பார்க்கின்றாரா? என்பதை மக்களுக்கு விளக்கித் தெரிவித்து தெளிவுபடுத்துவதே முக்கியமான பணியாக இருந்துள்ளது. அப்போஸ்தலரான பவுல் தனது அனைத்து நிருபங்களிலும் இதனைத் தெளிவுபடுத்திக் கூறுவதைப் பார்க்கலாம்.
இஸ்ரவேல் மக்களுக்குத் தேவன் மோசே மூலம் பல்வேறு கட்டளைகளைக் கொடுத்திருந்தார். யாத்திராகமம் முதல் உபாகமம் முடிய கூறப்பட்டுள்ளக் கட்டளைகள் தேவன் அந்த மக்களை நல்வழிப்படுத்தவும் பிற மக்கள் இனத்திலிருந்து தான் தெரிந்துகொண்ட மக்களைச் சிறப்பானவர்களாக மாற்றவும் கொடுத்தவை.
இந்தக் கட்டளைகள் மொத்தம் 613 என்று வேத அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். இவற்றில் 365 கட்டளைகள் எதிர்மறையானவைகள். அதாவது செய்யக்கூடாதவை என மக்களை எச்சரிப்பவை. 248 கட்டளைகள் நேர்மறையானவை. அதாவது செய்யவேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்துபவை. எனவேதான் மோசே கூறினார், "இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது?" ( உபாகமம் 4 : 8 )
ஒரு சிறந்த யூதன் என்பவன் இந்தக் கட்டளைகளைக் கடைபிடிப்பவன்தான் என வேத அறிஞர்களும் பரிசேயர்களும் எண்ணினர். எனவே, அவர்கள் இந்தக் கட்டளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தனர். ஆனால் இந்த மக்கள் கட்டளைகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அன்புக்கும் மனித நேயத்துக்கும் கொடுக்கவில்லை.
கட்டளைகளுக்குக் கீழ்படிவதுபோல அன்பையும் நீதியையும் விட்டுவிடாமல் இருக்கவேண்டும் என்று இயேசு கிறிஸ்து வலியுறுத்தியது இதனால்தான். "மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே." ( மத்தேயு 23 : 23 )
வேதபாரகரும் பரிசேயரும் தாங்கள் தேவனது கட்டளைகளை அப்படியே பின்பற்றுவதால் பரலோக ராஜ்ஜியம் தங்களுக்கு சமீபமாய் இருப்பதாக எண்ணிக்கொண்டனர். ஆனால் அது தவறு என்று இயேசு சுட்டிக்காட்டினார். கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை விட மேலான ஒரு வாழ்க்கையினை தேவன் விரும்புகின்றார். எனவேதான் இயேசு கிறிஸ்து கூறினார், "வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( மத்தேயு 5 : 20 )
அதாவது கட்டளைகளுக்கு கீழ்படிவதைவிட உள்ளான மனிதனில் ஏற்படும் மாற்றத்தினை தேவன் விரும்புகின்றார்.
நான் ஆஸ்திரியா நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கு வாகன ஓட்டிகள் சாலைவிதிகளை மிகச் சரியாகப் பின்பற்றுவதைக் கண்டு வியந்தேன். இரவு பத்து மணியானாலும் சாலையில் வேறு வாகனங்கள் வராமல் இருந்தாலும், சிகப்பு விளக்கு எரிந்தால் வாகனங்களை நிறுத்தி பச்சை விளக்கு வரும்வரைக் காத்திருப்பதைக் கண்டேன். சாலையைக் கடப்பதற்கு நடந்து செல்லும் மனிதர்கள் வரும்போது வாகனங்களை நிறுத்தி நடந்துசெல்லும் மக்கள் சாலையைக் கடக்கும் வரை வாகனங்களை நிறுத்தி விடுவர்.
இந்தக் வாகன ஓட்டுனர்கள் அனைவரும் மிக நல்லவர்கள் என எண்ணிக்கொண்டேன். ஆனால் எனது மருமகன் கூறினார், "இவர்களும் நமது மக்களைப் போன்றவர்கள்தான். ஆனால் இங்கு அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படுகின்றன. சாலை விதிகளைப் பின்பற்றவில்லையானால் அவர்கள் விதிகளை மீறிய உடனேயே அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து அபராதம் வசூலிக்கப்படும். மூன்றுமுறை அபராதம் செலுத்தினால் அவர்களது ஓட்டுநர் உரிமையை அரசாங்கம் ரத்துசெய்து விடும். அப்படி ரத்து செய்யப்பட்ட உரிமையினை உடனே திரும்பப் பெறுவது மிகவும் கடினம், மேலும் இந்த நாட்டில் நான்கு சக்கர வாகனம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது; எங்கும் செல்ல முடியாது. அதற்குப் பயந்துதான் இவர்கள் இப்படி சாலை விதிகளை சரியாகப் பின்பற்றுகின்றனர்." என்று கூறினார்.
இதுபோலவே இஸ்ரவேல் மக்களது குணம் இருந்தது. அவர்கள் சட்டத்தைப் பின்பற்றினரேதவிர உள்ளான விதத்தில் கொடூர இருதயமுள்ளவர்களாகவே இருந்தனர். இதனை மக்களுக்குத் தெளிவுபடுத்தவே இயேசு கிறிஸ்து தனது பல குணமாக்கும் செயல்பாடுகளை ஓய்வுநாளில் செய்தார். ஆனால் யூதர்களோ, இரக்கமற்றவர்களாக குணமான மனிதனைப் பார்த்து தேவனை மகிமைப்படுத்தாமல் அது ஓய்வுநாளில் செய்யப்பட்டதால் இயேசு கிறிஸ்துவைக் குற்றப்படுத்தினர்.
உதாரணமாக, பெதஸ்தா குளத்தின் கரையில் முப்பத்தெட்டு ஆண்டுகள் முடங்கிக் கிடந்த ஒருவனை இயேசு கிறிஸ்து சுகமாக்கின சம்பவத்தைப் பார்ப்போம். (யோவான் - 5) நமது ஊரில் ஒருவர் பல மாதங்கள் நோயுற்று வீட்டிலேயே இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் குணம் பெற்று வெளியே வருகிறாரென்றால் அவரைப் பார்க்கும் நாம் அவரிடம், " எப்படி இருக்கிறீர்கள்? எந்த மருத்துவரிடம் மருத்துவம் பார்த்தீர்கள்? இப்போதும் மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறீர்களா?" என்று பல்வேறுவிதமாக விசாரிப்போமல்லவா?
ஆனால், முப்பத்தெட்டு ஆண்டுகள் நடக்க முடியாமல் இருந்த இந்த மனிதன் நடப்பதை பார்த்து எந்த யூதனுக்கும் இரக்கமோ மகிழ்ச்சியோ வரவில்லை. மாறாக, இயேசு அவனை ஓய்வுநாளில் குணமாக்கியதுதான் அவர்களுக்குத் தவறாகத் தெரிந்தது. ஆம், அவர்கள் கட்டளைகளைக் கட்டளைகளாகப் பார்த்தார்களேத் தவிர உள்ளத்தில் அன்போ நீதியோ இரக்கமோ இல்லை.
ஆம், நியாயப்பிரமாண கட்டளைகள் அவற்றைக் கடைபிடிப்பதால் மட்டும் எவரையும் நீதிமானாக்குவதில்லை. "நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே." ( கலாத்தியர் 2 : 16 ) என்று வேதம் கூறுவது இதனால்தான். உள்ளான மனிதனில் மாற்றம் ஏற்படாமல் செய்யும் எந்தச் செயலும் தேவனுக்கு ஏற்றதாக இருக்க முடியாது.
மக்களை நல்வழிப்படுத்த தேவன் கொடுத்தக் கட்டளைகள் பயனற்றுப் போயின. அவை கட்டுப்பாடாக வளர்க்கும் பன்றியைப்போல மாய சுத்தத்தை மனிதர்களுக்கு கொடுத்தன. பன்றியை எவ்வளவுதான் கட்டுப்படுத்தினாலும் அதன் பிறவி குணம் மாறாததுபோல் மக்களும் இருக்கின்றனர். இயல்பாகவே சுத்தத்தை விரும்பும் ஒரு பூனையைப்போல மாறினால்தான் மனிதன் தேவனைப்போல பரிசுத்தவானாக மாற முடியும். இது மனிதனால் சுயமாக முடியாதது. எனவே, பாவத்திலிருந்து மனிதனைப் புனிதப்படுத்த நியாயப்பிரமாணம் பலவீனமாகிவிட்டதால் அதனை மனிதனுக்காக தேவனே செய்துவிடத் தீர்மானித்தார்.
"அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்." ( ரோமர் 8 : 3 )
அன்பானவர்களே, இயேசு கிறிஸ்து உலகினில் வந்த நோக்கம் இதுதான். ஆனால், இன்று இதனை விட்டுவிட்டு ஆசீர்வாத போதனைகளே மேலோங்கி மனிதர்களை தேவனை அறியும் அறிவில் வளரவிடாமல் தடுக்கின்றன.
இயேசு கிறிஸ்துவின் காலத்துக்குப்பின் நாம் நியாயப்பிரமானத்துக்குக் கட்டுப்பட்டவர்களல்ல. மோசேயின் பிரமாணம் முடிவுற்று, கிறிஸ்துவின் கிருபையின் பிரமாணம் ஆரம்பமாயிற்று. இதனையே அப்போஸ்தலரான யோவான், "அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்; எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின." ( யோவான் 1 : 16, 17 ) என்று எழுதுகின்றார்.
கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசம்கொண்டு, அவர் எனக்காக ஜீவனைவிட்டு பாவத்திலிருந்து தனது சுய இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டார் என்று விசுவாசிக்கும்போது அவரது கிருபைக்குள் வருகின்றோம். ஆம், கிறிஸ்துவின் கிருபை அவர்மேல்கொள்ளும் விசுவாசத்தால் நமக்குக் கிடைக்கின்றது. காரணம் அவர் நமக்காக மரித்துள்ளார். இன்னும் பழைய கட்டளைகளை நம்பி வாழ்ந்தோமானால் நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாது. அவர் மூலமே நாம் நீதியான வாழ்க்கை வாழ முடியும். "நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே." ( கலாத்தியர் 2 : 21 ) என்கின்றார் பவுல் அடிகள்.
கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசமே நம்மை நீதிமானாக்கும். "நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே."( கலாத்தியர் 3 : 11 )
"ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்."( ரோமர் 3 : 28 )
"இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது; அது இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை." ( ரோமர் 3 : 21, 22 )
காரணம் அவரே, "நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி," ( எபேசியர் 2 : 14, 15 ) என்று கூறப்பட்டுள்ளது.
நியாயப்பிரமாணத்துக்கு உட்படாமல் கிறிஸ்துவின்மேல் கொள்ளும் விசுவாசத்தினால் உண்டாகும் கிருபைக்கு உட்பட்டிருந்தால் பாவம் நம்மை மேற்கொள்ளாது. "நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது." ( ரோமர் 6 : 14 )
காரணம், நாம் முன்பு பார்த்த உதாரணத்தில் கூறப்பட்ட பூனையைப்போல இயல்பிலேயே கிறிஸ்து பாவத்தைக் குறித்த அருவருப்பை நம்மில் தோன்றச்செய்துவிடுவார். ஆனால் யூதர்கள் அதனைப் பெற முடியவில்லை. காரணம் அவர்கள் கிறிஸ்துவை விசுவாசியாமல் நியாயப்பிரமாணக் கட்டளைகளிலேயே அதனைத் தேடினார்கள். "நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை; "என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்." ( ரோமர் 9 : 31, 32 )
எனவேதான் பாவத்திலிருந்து விடுதலை பெறுவதுபற்றி இயேசு கிறிஸ்து, "ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." ( யோவான் 8 : 36 ) என்று கூறினார்.
நாமும்கூட கிறிஸ்துவை விட்டு நமது சுய நீதி பிரமாணங்களிலோ அல்லது கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதிலோ மட்டுமே திருப்திகொண்டு வாழ்வோமெனில் "நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்." ( கலாத்தியர் 5 : 4 ) என்று கூறியுள்ளபடி கிறிஸ்துவின் கிருபையினை இழந்தவர்களாவோம். காரணம், "நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்." ( எபிரெயர் 7 : 19 )
இன்றும்கூட ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் பலர் நியாயப்பிரமாணக் கட்டளைகளைக் கைக் கொள்வதுபோன்ற ஒரு மனநிலையுடன் வேத வாசிப்பு, ஜெபம், உபவாசம், ஜெபகூடுகைகளில் கலந்துகொள்வது என்று இருந்துகொண்டு கிறிஸ்துவின் கிருபையினை இழந்துபோகின்றார்கள். "நான் அல்ல ஆண்டவரே, நான் ஜெபிப்பதாலேயோ, உபவாசிப்பதாலேயோ வேதாகமத்தை வாசிப்பதாலேயோ அல்ல உமது கிருபையால்தான் வாழ்கின்றேன்" என்று தாழ்த்தி ஜெபிக்கும்போதுதான் கிறிஸ்துவின் இரக்கத்தினைப் பெற முடியும். ஆனால் இன்று பலரும், "நான் ஜெபித்தேன், நான் உபவாசித்தேன் அதனால்தான் இது கைக் கூடியது என்று தங்களது செயலை மேன்மைபடுத்தி தங்களை அறியாமல் கிறிஸ்துவின் கிருபைக்குப் புறமாகிப்போகின்றனர். மனிதர்களுக்குள் இருக்கும் மாம்ச சிந்தனையே இதற்குக் காரணம்.
"தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களா யிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவனல்ல. மேலும், கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாகவும் , ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும். " (ரோமர்-8:9,10)
பாவத்துக்கு நாம் மரித்தவர்களாக இருக்கவேண்டுமானால் கிறிஸ்துவின் மேல் விசுவாசம்கொண்டு அவரது கிருபைக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டுமே தவிர கட்டளைகளுக்கு அல்ல. இதுவே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது. இயேசு கிறிஸ்து கூறினார், "....... அவர் (பிதா) அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்." ( யோவான் 6 : 29 ) அவரை விசுவாசிக்கும்போது கட்டளைகளல்ல, தேவனுடைய பரிசுத்த ஆவியானவரே நம்மை அனைத்து சத்தியத்துக்குள்ளும் வழி நடத்துவார். (யோவான் 16:13)
நியாயப்பிரமாணக் கட்டளைகளல்ல சத்திய ஆவியானவரே பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உலகத்தைக் கண்டித்து உணர்த்த முடியும் (யோவான் 16:8) எனவே கிறிஸ்துவின்மேல் உள்ள விசுவாசத்தை உறுதிப்படுத்தி வாழ்வோம். கட்டளைகளுக்கோ, சடங்காச்சாரங்களுக்கோ முன்னுரிமைகொடுத்து கிருபையினை இழந்துவிடாதிருப்போம்.