Monday, May 07, 2018

'அன்பு' துன்பங்களைச் சகிக்க வேண்டும்


'அன்பு' துன்பங்களைச் சகிக்க வேண்டும் 

- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

(இக்கட்டுரை அன்பைப் பற்றிய முழுமையான கட்டுரையல்ல.  விரிவான கட்டுரை பின்னர் வெளிவரும். இது, தற்போதைய சூழலில் கிறிஸ்தவன் எப்படி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவது மட்டுமே) 

ன்பே கிறிஸ்தவத்தின் அடிப்படை. எனவேதான் வேதம், "அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்"  (1. யோவான் - 4:7, 8) என்று கூறுகிறது.   உலகினிலே வந்து நமக்காகப் பாடுகள்பட்டு மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கின்ற நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து அன்பின் நிறைவாகவே இருக்கிறார்.

எனவே அவரைத் தொழுது கொள்ளுகிற அனைவரும் அந்த அன்பினைப் பிரதிபலிப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இயேசு கிறிஸ்துவின் அன்புச்  சீடனான யோவான் எனவே, "தேவனிடத்தில் அன்பு கூருகிறேன் என்று ஒருவன் சொல்லியும்  தன்  சகோதரனைப் பகைத்தால்  அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான்?   (1. யோவான் - 4:20) எனக் கேள்வி எழுப்புகிறார்.

நாம் காணும் அனைவரும் தேவனால் படைக்கப்பட்டவர்கள்தான்.  எனவே ஜாதி, மதம், இனம், மொழி இவை அன்பிற்குத் தடையாக இருக்கக் கூடாது.  இவற்றின் அடிப்படையில் ஒருவன் மனிதர்களை எடைபோடுவானென்றால் அவன் தேவனை அறிந்தவனோ அல்லது தேவனால் அறியப்பட்டவனோ அல்ல.

யோவான் எழுதிய முதல் நிருபம்  அன்பின் நிருபம் என்றே அழைக்கப்படுகிறது.  அந்த நிருபத்தைத் தியானியுங்கள். இன்றய சூழலில் கிறிஸ்தவத்துக்கு எதிராக நடைபெறும்  செயல்களை பொறுமையோடு தாங்கிக்கொள்ள அது நமக்கு வழிகாட்டும். அப்போஸ்தலரான பேதுரு கூறுகிறார், "ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதனால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து அதன் நிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். " (1.பேதுரு -4:16)

"நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள் ; ஏனென்றால் தேவனுடைய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார். அவர்களாலே தூஷிக்கப்படுகிறார். உங்களாலே மகிமைப்படுகிறார். " (1.பேதுரு -4:14)

அன்பில்லாதவன் எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் பணக்கார வீடுகளில் சங்கிலியால் கட்டிப்போட்டு அல்லது கூண்டில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் நாயைப் போல இருக்கிறான். அவனது செல்வமும் செல்வாக்கும் அவனுக்கு  மெய் விடுதலையைத் தராது. 

மெய்யான அன்பினைப் பிரதிபலித்திட :-

யாராவது உங்களிடம் உதவி கேட்கும்போது அவரது ஜாதி, மதம், இனம், மொழி இவைகளைக் கவனியாமல் அவருக்கு உதவுங்கள்

யாராவது உங்களுக்கு இக்கட்டில் உதவி செய்யும்போது அவரது ஜாதி, மதம், இனம், மொழி இவைகளைக் கவனியாமல் இருங்கள்.

யாராவது உங்களைத் துன்புறுத்தும்போது அவரது ஜாதி, மதம், இனம், மொழி இவைகளைக் கவனியாமல் இருங்கள்.

இயேசு கிறிஸ்துக் கூறினார், "நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாய் இருந்தால் அதனால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்"   (யோவான் - 13:35) 

ஆம், நாம் இந்த உலகில் கிறிஸ்துவின் சீடர்கள் என்று சான்று பகரவே அழைக்கப்பட்டுள்ளோம். 

அன்பானவர்களே, தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று கூறும் வேதம் "அவர் பட்சிக்கும் அக்கினி" என்றும் கூறுகிறது மறுக்க முடியாத உண்மை.  எனவே தான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "இந்தக் கல்லின்மேல் விழுகிறவன்  எவனோ அவன் நொறுங்கிப்போவான்,  அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்" (லூக்கா - 20:18)  இதற்கு ஆயிரக்கணக்கான சான்றுகளை உலகம் கண்டுள்ளது.

அன்பானவர்களே, நாம் கிறிஸ்து நமக்குத் தந்த அன்பின் கட்டளைகளை மட்டும் கடைபிடிப்போம்.  அப்படிச் செய்யும்போது தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார். எதிரிகளை நண்பர்களாக மாற்றவும் செய்வார். 

No comments: