Sunday, March 31, 2024

வேதாகம முத்துக்கள் - மார்ச் 2024

        தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்      

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,117       💚 மார்ச் 01, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚  


"இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன." ( யோவான் 20 : 31 )

எந்த ஒரு புத்தகமும் குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காகவே எழுதப்பட்டிருக்கும். வெறுமனே எவரும் எழுதுவதில்லை. பரிசுத்த மனிதர்களைக்கொண்டு ஆவியானவரால் எழுதப்பட்ட வேதாகமும் நோக்கமில்லாமல் எழுதப்படவில்லை. 

ஆனால் இன்று சுவிசேஷ அறிவிப்பு என்று பலரும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றார்கள். பலருக்கு அதுவே பிழைப்புக்கான வழியாகவும் மாறிப்போனது. சுவிசேஷம் ஏன் எழுதப்பட்டது என்பதை பலரும் நினைத்துப்பார்ப்பதில்லை. தங்களுக்குத்  தெரிந்த உலக பொருளையே மனதில்கொண்டு பிரசங்கித்துக் கொண்டிருக்கின்றனர். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏன் உலகினில் வந்து பாடுகள்பட்டு மரிக்கவேண்டும்? வெறும் உலக ஆசீர்வாதங்களுக்காகவா? அப்படியானால் அவர் பிறந்திருக்கவேண்டிய அவசியமேயில்லையே.  ஆனால் இன்று 90% ஊழியர்களும் உலக ஆசீர்வாதம், நோயிலிருந்து விடுதலை, கடன்தொல்லை, பில்லிசூனிய கட்டுகளிலிருந்து விடுதலை  இவைகளை மக்களுக்குத் தரவே கிறிஸ்து உலகினில் பிறந்தார் என்பதுபோல போதிக்கின்றனர். 

இயேசு எனும் பெயருக்கு இரட்சகர் என்று பொருள். நமது பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கவே அவர் மனிதனாக இந்த உலகினில் தோன்றி பாடுகள்பட்டு விலையேறப்பெற்ற இரட்சிப்பை ஏற்படுத்தினார். இதனை நாம், "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்." ( மத்தேயு 1 : 21 ) என்று வாசிக்கின்றோம்.

வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் முதல் மல்கியா வரையிலான 39 நூல்களிலும் நாம் ஏதாவது பகுதியில் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி  முன்குறித்த தீர்க்கதரிசன பகுதியினைப் பார்க்கலாம்.  புதிய ஏற்பாடு முழுவதுமே அவரது இரட்சிப்பின் மகிமையினைக் கூறுகின்றன. இவைகளை ஞானமாய் நாம் அறியும்போது கிறிஸ்துவின்மேலுள்ள நமது விசுவாசம் அதிகரிக்கும். இதற்கு மாறாக உலக ஆசீர்வாதங்களுக்கான வசனங்களைப்  பொறுக்கியெடுத்து வாசித்துக் கொண்டிருப்போமானால் பரிதபிக்கக்கூடியவர்களாக இருப்போம்.  கர்த்தரை அறியவும் முடியாது.

இதனையே இயேசு கிறிஸ்துவின் அன்புத் சீடனான யோவான் இன்றைய வசனத்தில் விளக்குகின்றார். எனவேதான், வேதாகமம் உலக ஆசீர்வாதத்துக்காக எழுதப்படவில்லை, மாறாக "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன." என்று கூறுகின்றார். 

அன்பானவர்களே, எனவே நாம் வேதாகமத்தை இந்தக் கண்ணோட்டத்தில்தான் வாசிக்கவேண்டும். அப்போதுதான் நாம் தேவனுடைய மகிமையினையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று அறிந்துகொள்ளவும் அதன் மூலம் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்களாகவம் மாற முடியும். இல்லையானால் குருட்டுப் போதகர்களின் கட்டுக்கதைகளுக்கு அடிமையாகி வெற்று கூப்பாடுபோட்டுக்கொண்டு  கிறிஸ்தவர்கள் என்றுகூறி நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்பவர்களாக இருப்போம்.  ஆம், வேதாகமம் எழுதப்பட்ட நோக்கமறிந்து அதனை வாசிப்போம். நித்திய  ஜீவனைப் பெற்றுக்கொள்வோம். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,118      💚 மார்ச் 02, 2024 💚 சனிக்கிழமை 💚

"பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கின்றன." ( ஏசாயா 55 : 9 )

மனிதர்களது நினைவுகள் மனிதனின் மனதின் அளவுக்குத்தக்கத்தான் இருக்கும். ஒரு மிருகத்தின் நினைவுகள் மிருகத்துக்குரிய குணங்களை ஒத்துத்தான் இருக்கும். உதாரணமாக, ஒரு ஆடு அல்லது மாடு என்றைக்குமே தனக்கென்று ஒரு நல்ல வீடு கட்டவேண்டுமென்றோ ஒரு கார் வாங்கவேண்டுமென்றோ எண்ணாது. அவைகளின் எண்ணமெல்லாம் எங்கு பசுமைநிறம் தெரிகின்றதோ அங்கு செல்லவேண்டும்; வயிறு நிறையவேண்டும் என்பதுதான்.

இதுபோலவே தேவனது நினைவுகளும், வழிகளும் மனிதனைவிட உயர்ந்தவை. இதனைப் பவுலடிகள், "மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே." ( 1 கொரிந்தியர் 15 : 48 ) என்று கூறுகின்றார். கிறிஸ்து விண்ணகத்துக்குரியவர். அவரை விசுவாசிக்கும் நாமும் அவரைப்போல வானத்துக்குரியவர்களாக மாறவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். நாம் கிறிஸ்துவின் மீட்பு அனுபவத்தைப் பெற்றவர்களானால் நமது எண்ணமும் கிறிஸ்துவைப்போல மேலான எண்ணமாக இருக்கும்.

மேலும் பவுல் கூறுகின்றார், "நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்." (  கொலோசெயர் 3 : 1 ) அதாவது நாம் பாவத்துக்கு மரித்து கிறிஸ்துவுக்குள் உயிர்த்தது உண்மையானால் நமது எண்ணங்கள் கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுவதாக இருக்கும். பரலோக எண்ணமுடையதாக இருக்கும். இல்லையானால் பூமிக்குரியவைகளையே எண்ணிக்கொண்டு அவற்றுக்காகவே ஜெபித்துக்கொண்டு இருப்போம்.

இயேசு கிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது யூதர்களைப் பார்த்துக் கூறினார், "நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல." ( யோவான் 8 : 23 )

நமது எண்ணங்கள் பூமிக்குரிய ஆசீர்வாதங்களையே தேடுகின்றதா? அப்படியானால் நாம் இன்னும் கிறிஸ்து எதிர்பார்க்கும் மேலான நிலைக்கு வரவில்லை என்று பொருள். இப்படிப் பூமிக்குரிய ஆசீர்வாதங்களையே பிரசங்கிக்கும் பிரசங்கிகளும் பூமிக்குரியவர்களே. அவர்களைப் பின்பற்றும்போது நாம் மேலான நிலையினை அடைய முடியாது. 

கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள் என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே நமது வழிகளும், நினைவுகளும் உயர்ந்தவையாக இருக்க வேண்டும். அதுவே தேவன் விரும்புவது. 


 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,119       💚 மார்ச் 03, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

."....பலத்தினாலும் அல்லபராக்கிரமத்தினாலும் அல்ல,    என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின்      கர்த்தர்   சொல்லுகிறார்." (  சகரியா 4 : 6 ) 

மனிதன் அற்பமான பிறவிநமது உடல் கூட அற்பமானதுதான்.  இந்த அற்பமான உடலை வைத்துக்கொண்டு மனிதன் ஆட்டம் போடுகிறான்.  சராசரி மனிதனது  உடல் சூடு 98.6 டிகிரி F. இந்த உடல் சூடு 0.4 டிகிரி அதிகரித்து 99 டிகிரியாகிவிட்டால் நம்மால் எழுந்து நடமாட முடியாதுகாய்ச்சல் என்று சோர்ந்து  படுத்துவிடுவோம்இவ்வளவுதான் நமது பலம்

ஆனால் மனிதர்கள் இதனை எண்ணுவதில்லைதாங்கள்  நினைத்தால் எதனையும் சாதிக்கலாம் என எண்ணி  இறுமாப்பாய் அலைகிறார்கள்இப்படி இறுமாப்பாய் இருந்த  நமது அரசியல் தலைவர்கள் இருந்த இடம் தெரியாமல்  போய்விட்டதை நாம் கண்கூடாகப் பார்த்துள்ளோம்

முதல் முதலாகஆதியாகம சம்பவங்களில் தேவன் வலிமை மிக்கமனிதர்களது கைக்கு  வலிமை அற்றவர்களை விடுவித்து  என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்பதை மனிதர்களுக்குப்  புரிய வைத்தார் மோசே எனும் ஒற்றை மனிதனைக் கொண்டு  பார்வோன் மன்னனின் பெரிய ராணுவத்தைக் கவிழ்த்துப்  போட்டார்

பார்வோனின் படை வீரர்களும் குதிரைகளும் போர்  செய்வதற்குப் பழக்கப்பட்டவைபல போர்களை சந்தித்து வெற்றிகண்டவைஆனால் அந்தச் சேனையின் பலம் பார்வோனுக்கு  வெற்றியைக் கொடுக்கவில்லை.  தேவனுடைய ஆவியைப் பெற்றுஇருந்த மனிதனாகிய மோசேயின் முன் அந்தச் சேனையால்  நிற்க முடியவில்லை.  தேவனுடைய ஆவியினாலே எல்லாம் கூடும்என்பதற்கேற்ப வெற்றி மோசே மூலம் இஸ்ரவேல் மக்களுக்கு  கிடைத்தது.

நமக்குவேண்டுமானால் நமது பிரச்சனைகள்  மலைபோலத்  தெரியலாம்தேவனிடம் அதனை ஒப்புவித்துவிடும்போது அது  அற்பமான பிரச்னையாக மாறி நமக்கு வெற்றி கிடைக்கும்.  வேலை செய்யும் இடங்களில் பிரச்னை , குடும்பத்தில் பிரச்னைதொழிலில் பிரச்னை......ஐயோ நான் இதனை எப்படிச்  சமாளிக்கப் போகிறேன் எனப் புலம்பிப்  பயப்படவேண்டாம்.  தேவனுடைய ஆவியினால் நம்மை  விடுவிக்க முடியும்.

அப்போஸ்தலனாகிய பவுல் அடிகள் இதனால்தான் துணித்து  கூறுகிறார்,"என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே  எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." (  பிலிப்பியர் 4 : 13) எந்தச் சூழ்நிலையிலும் வெற்றியும் பலமும் தந்து தேவன்  நம்மை நிலை நிறுத்த வல்லவர்.

தேவனுடைய எண்ணங்களுக்கும் மனிதர்களுடைய  எண்ணங்களுக்கும் வித்தியாசம் உண்டு மனிதர்கள் பலம்தான் வெற்றிதரும் என எண்ணுகிறார்கள்ஆனால் தேவன்  பலவீனமானவைகளையும்அற்பமாய் எண்ணப்படு பவைகளையும்   தான்   பயன்படுத்துகின்றார்

மீதியானியர் கைகளுக்கு இஸ்ரவேல் மக்களை விடுவித்தக்  கிதியோன் மேலும் ஒரு உதாரணம்மீதியானியர் போரில்  வல்லவர்கள்ஆனால் கிதியோனிடம் இருந்த மக்களோ  அற்பமான சாதாரண மனிதர்கள்."உன்னுடன் வரும் மக்கள்  மிகுதியாக இருக்கிறார்கள் நீங்கள் வெற்றிபெற்றால் எங்கள்  கை பலம்தான் எங்களுக்கு வெற்றி தந்தது என மக்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசுவார்கள்எனவே உன்னோடுகூட  போரிட  வரும் உன் மக்களது  எண்ணிக்கையைக்  குறை எனக்கூறி  இறுதியில் 300 பேரைக் கொண்டு கிதியோன் மீதியானியரை  வெற்றி கொண்டார்(நியாயாதிபதிகள் -7)

 எதிரான எண்ணிக்கை தேவனுக்குப் பெரிதல்ல , பிரச்சனையின் அளவும் பெரிதல்ல.

"ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில்  பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்;  பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில்  பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்." (  1 கொரிந்தியர் 1 : 27) 

 ஆம் அன்பானவர்களேஉங்கள் பகுதியில்உங்கள் ஊரில் நீங்கள் பொருளாதாரத்திலோபதவியிலோபிறரைவிட  அற்பமானவர்களாக இருக்கலாம்.  ஆனால் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டு பயன்படுத்தும்போதுஉங்களை ஏழனமாய்ப் பார்த்தவர்கள் ஆச்சரியத்தால் வாய்பிழப்பார்கள்.

ஆம்,"என்னுடைய ஆவியினாலேயே ஆகும்"  என்று சேனைகளின் கர்த்தர் உங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,120     💚 மார்ச் 04, 2024 💚 திங்கள்கிழமை 💚

"திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது." ( யாக்கோபு 1 : 27 )

தவக்காலத்தில் நாம் அதிகமாக தானதருமங்கள் செய்யவேண்டுமென்று போதிக்கப்பட்டதால் அப்படிப் பல தர்ம காரியங்களைச்  செய்யலாம். வெறுமனே தர்மம் செய்வதல்ல, அப்படித்  தர்மம் செய்யுமுன் நாம் நம்மைத் தேவனுக்குமுன் தூய்மையுள்ளவர்களாக மாற்றிக்கொள்ளவேண்டியது முதலாவதான அவசியம் என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.  

திக்கற்ற பிள்ளைகள், விதவைகள் இவர்களுக்கு உதவுவதை தேவன் விரும்புகின்றார். காரணம், அவர்களுக்கென்று தேவனைத் தவிர உலகினில் வேறு எவரும் இல்லை. "தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்." ( சங்கீதம் 68 : 5 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

ஆனால், அப்படி திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் உதவி செய்பவர்களை  தேவன் அவர்கள் செய்யும் உதவியின் அடிப்படையில் மட்டும் பார்ப்பதில்லை. மாறாக, அவர்களது தனிப்பட்ட வாழ்கையினையும் பார்க்கின்றார். இன்று இப்படி அநாதைப்  பிள்ளைகளுக்கு உதவும் நிறுவனங்கள் பல இருக்கின்றன. வெளிநாட்டு உதவிகளைப்பெற்று பலர் இப்படி உதவிகள் செய்கின்றனர். ஆனால் அப்படி உதவிசெய்பவர்களது உள்ளான மனநிலையினையும் வாழ்க்கையினையும் தேவன் பார்க்கின்றார். 

அதனையே இன்றைய வசனத்தில் யாக்கோபு கூறுகின்றார், "உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது." என்று. அதாவது, நாம் நல்லது செய்யுமுன் நாமே நல்லவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அதிகமாக உதவிகள்  செய்பவர்களைக் கொடைவள்ளல் என இந்த உலகம் பாராட்டலாம். ஆனால் தேவன் அப்படிச் செய்பவரல்ல. நாம் இப்படி உதவி செய்யுமுன் நல்லவர்களாக, உலகப்  பாவக்  கறைகளற்றவர்களாக  இருக்கின்றோமா என்பதையும்  தேவன் பார்க்கின்றார்.  

நாம் பெரும்பாலும் மனிதப் பார்வையிலேயே அனைத்தையும் பார்க்கின்றோம். ஆனால், தேவன் நமது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தே நாம் செய்யும் அனைத்தையும் பார்க்கின்றார். அதன் அடிப்படையிலேயே தீர்ப்பிடுகின்றார். "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மத்தேயு 16 : 26 ) என்று இயேசு கிறிஸ்து கேள்வி எழுப்பினார்.

ஆம் அன்பானவர்களே, நாம் நமது பணத்தால், திறமையால், அல்லது கருணைச் செயல்களால் இந்த உலக மக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளலாம். அவர்களது உள்ளங்களைக் கவர்ந்து கொள்ளலாம். ஆனால் தேவனை அப்படிக் கவர முடியாது. நமது தனிப்பட்ட வாழ்க்கை தேவன் அருவருக்கும்  அவலட்சணமானதாக இருக்குமானால் அதனால் பயனென்ன? 

எனவே, திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறது நல்லதுதான் எனினும் நாம்  உலகத்தால் கறைபடாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்ளுகிறதும் முக்கியம். அதுவே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

தவக்காலத்தில் வெறுமனே தர்மம் செய்வதல்ல; மனம் திரும்பிய வாழ்க்கையோடுகூடிய தர்மச் செயல்களையே தேவன் விரும்புகின்றார். அதுவே அவர்முன் உண்மையான பக்தியாக இருக்கின்றது. 

  'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,121     💚 மார்ச் 05, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்." ( எசேக்கியேல் 18 : 4 )

வேதாகமத்தின் சில வசனங்கள் பலரைக் குழப்பத்துக்கு உட்படுத்துகின்றன. வாழ்வில் தொடர்ந்து துன்பங்களே ஏற்படும்போது பலரும் குடும்ப சாபங்களே இதற்குக் காரணம் என்று எண்ணிக்கொள்கின்றனர். நமது முன்னோர்கள் செய்த பாவங்களால் நாமும் நமது குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று பலரும் எண்ணிக்கொள்கின்றனர். ஒருமுறை வாழ்வில் மிகவும் துன்பப்பட்டுக்கொண்டிருந்த ஒரு சகோதரர்   என்னிடம், "பிரதர் எனது துன்பங்களுக்கு எனது தகப்பனாரும் எனது பாட்டனாரும் செய்த பாவங்கள்தான் காரணம்" என்று புலம்பினார்.

தொடர்ந்து அவர் என்னிடம், "ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர்." ( யாத்திராகமம் 34 : 7 ) என்று வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது உண்மை என்று கூறி அழுதார். 

நான் அவரிடம் கூறினேன், 'அப்படியல்ல சகோதரரே, நாம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு மனம் திரும்பிய ஒரு வாழ்க்கை வாழ்வோமானால் எந்தச் சாபமும் நம்மை மேற்கொள்ளாது. கிறிஸ்து இயேசு நமது பாவங்கள் சாபங்கள் அனைத்தையும் பரிகரித்துத்  தீர்த்துவிட்டார். அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது எந்த சாபங்களும் நம்மை மேற்கொள்ளாது,  இதனை நாம் பழைய ஏற்பாட்டிலும் வாசிக்கலாம்" என்றுகூறி அவருக்கு எசேக்கியேல் நூலிலுள்ள வசனத்தைக் காண்பித்தேன்.

"பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்." ( எசேக்கியேல் 18 : 20 )

ஆம் அன்பானவர்களே, நாம் கிறிஸ்துவுக்கேற்ற நீதியுள்ள வாழ்க்கை வாழும்போது எந்த சாபமும் நம்மை மேற்கொள்ளாது. அவனவன் செய்யும் தவறுக்கு அவனவன் தண்டனை அனுபவிப்பான். "பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துச் சொல்லுகிறது என்ன? இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்." ( எசேக்கியேல் 18 : 3 )

இயேசு கிறிஸ்துவின் சீடர்களுக்கும் இந்த எண்ணமே இருந்தது. எனவேதான் பிறவிக்குருடன் ஒருவனைக் கண்டபோது இயேசு கிறிஸ்துவிடம் அவர்கள் இதுகுறித்துக்  கேட்டனர். 

"அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான் என்றார்." ( யோவான் 9 : 3 )

எனவே துன்பங்கள் வாழ்வில் தொடரும்போது நமது முன்னோர்கள்மீது பழி சுமத்தாமல் நம்மை நாம் சோதித்துப் பார்ப்போம். தேவனுடைய கிரியைகள் நம்மில் வெளிப்படும்பொருட்டு நமக்கு அவர் துன்பங்களை அனுமதித்திருக்கலாம். கிறிஸ்துவிடம் மன்னிப்புக்கேட்டு அவரது இரத்தத்தால் கழுவப்படும் இரட்சிப்பு அனுபவத்தைப் பெறும்போது எந்தச் சாபங்களும் நம்மை மேற்கொள்ள முடியாது. 
"பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்." என்கிறார் பரிசுத்தரான கர்த்தர். தேவனுக்கேற்ற வாழ்க்கை வாழ ஒப்புக்கொடுப்போம்; முன்னோர்களின் பாவங்கள் சாபங்கள் எதுவும் நம்மைப் பாதிக்காது. 

"இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்" என்கிறார் பரிசுத்தரான கர்த்தர்.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,122    💚 மார்ச் 06, 2024 💚 புதன்கிழமை 💚


"என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை." ( உன்னதப்பாட்டு 5 : 6 )

அன்பானவர்களே, நமது தேவன் அன்பானவர்தான்; கிருபை நிறைந்தவர்தான், ஆனால் ஒவ்வொன்றுக்கும் அவர் குறிப்பிட்ட காலங்களை நியமித்துள்ளார். அதுபோலவே நாம் மீட்பு அடைவதற்கும் குறிப்பிட்ட காலத்தை நியமித்துள்ளார். அது இன்றுதான். அதனை நாம் அலட்சியப்படுத்தினால் பிற்பாடு அவரை நாம் காண முடியாது; அவர் நமக்குப் பதிலளிக்கமாட்டார். அதனையே இன்றைய தியான வசனம் நமக்கு நினைவூட்டுகின்றது. 

இன்று அவரை நாம் அன்பான இயேசு கிறிஸ்து எனச் சொல்லிக்கொண்டாலும் நமது இருதயக் கதவினை அவருக்குத் திறக்காமல் அடைத்துவைத்து வெறும் ஆராதனைக் கிறிஸ்தவர்களாக வாழ்ந்துகொண்டிருப்போமானால் அர்த்தமிருக்காது. இதனையே இன்றைய வசனம் கூறுகின்றது,  "என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை."

மனமாற்றமில்லாத வாழ்க்கை வாழ்வோமானால், "என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று" என்று குறிப்பிட்டுள்ளபடி அவர் கூறிய வார்த்தைகள் பிற்பாடு நம்மைச் சோர்ந்துபோகச் செய்யும் 

இயேசு கிறிஸ்து இதனையே பத்துக் கன்னியர் உவமையில் கூறினார். மணவாளன் வரும் சமயத்தில் ஆயத்தமாய் இருக்காமல் கதவு அடைக்கப்பட்டப்பின்னர் வந்து தட்டிக்கொண்டடிருந்தால் அவர் உங்களை அறியேன் எண்டு சொல்வேன் என்கிறார். "பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." ( மத்தேயு 25 : 12 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, "அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." ( 2 கொரிந்தியர் 6 : 2 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். நமது வாழ்க்கை என்று முடிவடையும் என்று நமக்குத் தெரியாது. எனவே பாவங்கள் மன்னிக்கப்படவும் மீட்பு அனுபவத்தினைப் பெறவும் இன்றே நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டியது அவசியம். 

"கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்." ( ஏசாயா 55 : 6 ) என்கின்றார் ஏசாயா. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் அனைவர்க்கும் சமீபமானவர். நம்மோடு உறுதியான நட்புறவு கொள்ள விரும்புகின்றவர். நாம் அவரைத் தேடத்தக்க காலம் இதுதான். நமக்காக பரிந்துபேசக்கூடியவராக இன்று அவர் இருக்கின்றார். ஆனால் அவர் மீண்டும் வரும்போது நீதியுள்ள நியாதிபதியாக வருவார். அன்று நீதியோடு நியாயம் தீர்ப்பார். எனவே இன்றே நாம் மன்னிப்புப்பெற ஏற்ற காலம்.  

நியாயத் தீர்ப்பு நாளில் அவரிடம் இரக்கத்துக்குக் கெஞ்ச முடியாது. அன்று நமது இதயக் கதவைத் திறக்க முடியாது. கதவைத் திறந்தாலும் "என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை." எனும் நிலைதான் ஏற்படும்.

"இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்." என்று கூறியுள்ளபடி நமது பாவங்களை இன்றே அவரிடம் அறிக்கையிட்டு மீட்பு அனுபவத்தைப் பெற்றுக்கொள்வோம். 


 'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,123     💚 மார்ச் 07, 2024 💚 வியாழக்கிழமை 💚

"அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்." ( யோவான் 13 : 27 )

உண்மையான மனம் திரும்புதல் இல்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டு தினசரி நற்கருணை உட்கொண்டாலும் நாம் சாத்தானுடைய மக்களும் அவனுக்கு அடிமையானவர்களுமாய் இருக்கின்றோம் என்பதனை இன்றைய தியான வசனம் நமக்கு எடுத்துக்கூறுகின்றது. 

ஆம், மெய்யான மனம்திருப்புதலும் உள்ளத்தில் தூய்மையும் இல்லாமல் இருந்துகொண்டு நற்கருணை உட்கொள்ளும்போது நாம் சாத்தானுக்கு அடிமைகள் ஆகின்றோம். இன்றைய தியான வசனத்தில் யூதாஸ் கிறிஸ்து கொடுத்த அப்பத்தினை வாங்கி உண்டபின் அவனுக்குள் சாத்தான் புகுந்தான் என்று கூறப்பட்டுள்ளது. அதுவரை அவனுக்குள் நுழையாத சாத்தான் அவன் நற்கருணையை உண்டவுடன் அவனுக்குள் நுழைந்தான். 

இதற்குக் காரணம் அவனுக்கிருந்த சாத்தானின் வஞ்சக குணம். ஏற்கெனவே கிறிஸ்துவைக்  காட்டிக்கொடுக்கத் திட்டம்போட்டுக்கொண்டு அதனை மறைத்து அவரிடம் வஞ்சகமாக அவன் நடந்துகொண்டான். இதனை நாம் "அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்." ( மத்தேயு 26 : 25 ) என்று வாசிக்கின்றோம். 

ஆம் அன்பானவர்களே, மனம்திரும்புதல் இல்லாத நற்கருணை நம்மை சாத்தானுக்கு அடிமையாக்கி பல்வேறு நோய்களைத்தான் நமக்கு ஏற்படுத்தும். எனவேதான் அப்போஸ்தலரான பவுல், "எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்." ( 1 கொரிந்தியர் 11 : 28 ) என்று கூறுகின்றார். 

தொடர்ந்து அவர், "இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.  நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்." ( 1 கொரிந்தியர் 11 : 30, 31 ) என்று கூறுகின்றார். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கையால் அப்பத்தை வாங்கி உண்ட யூதாஸின் உள்ளேயே  சாத்தான் புகுந்தான் என்றால் நாமெல்லோரும் எம்மாத்திரம்? யூதாஸ் எண்ணத்தில்  வஞ்சகமுள்ளவனாக இருந்தான். தனது உண்மையான குணத்தை மறைத்து இயேசு கிறிஸ்துவிடம் அன்புள்ளவனாக இருப்பதாகக் காட்டிக்கொண்டான். இதுபோல நாம் இருக்கின்றோமா என்பதனை நாம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். 

ஆலய காரியங்களில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவது, ஆராதனைகளில் தவறாமல் கலந்துகொள்வது, காணிக்கைகள் கொடுப்பது போன்ற காரியங்களை நாம் செய்துகொண்டிருக்கலாம். நற்கருணை உட்கொண்டு வரலாம். ஆனால் நமது உள்ளம் தேவனுக்கேற்ற உண்மையுள்ளதாக இருக்கின்றதா என்பது நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்று. 

உணர்வற்றவர்களாக நாம் வாழ்வோமானால் "நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்" என்று இயேசு யூதாஸைப் பார்த்துக் கூறியதுபோல நம்மிடமும் கூறுவார். அவனிடம் எதனைச் சீக்கிரமாய்ச் செய்யச் சொன்னார்? அவனது உள்ளம் விரும்பிய வஞ்சக செயல்பாட்டினை. ஆனால் அந்தச் செயலின்  முடிவினையும் அவனது வாழ்க்கையின் முடிவினையும்  நாம் அறிவோம். 

நமது உள்ளத்தைச் சாத்தான் நுழைய முடியாத பரிசுத்த ஆலயமாகக் காத்துக்கொள்ளவேண்டியதுதான் நமது முதல் கடமை.  அப்போதுதான் நாம் கிறிஸ்துவோடு பங்குள்ளவர்களாக இருப்போம். "உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்." ( மத்தேயு 5 : 37 ) என்றார் இயேசு கிறிஸ்து. யூதாஸ் தவறியதும் இந்த விஷயத்தில்தான். எனவே நாமும் எச்சரிக்கையாக இருப்போம். உண்மையுள்ள இதயத்தோடு வாழ ஆவியானவர் நம்மை வழிநடத்திட ஜெபிப்போம்.  அப்போதுதான் நாம் கிறிஸ்துவோடு பங்குள்ளவர்களாக இருப்போம். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,124      💚 மார்ச் 08, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்." ( மத்தேயு 3 : 8 )

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒருநாள் கூத்து போன்றதல்ல;  மாறாக அது அன்றாடம் சிலுவை சுமக்கும் அனுபவமாகும். மனம் திரும்புதல் என்பது ஒருநாள் நிகழ்வல்ல; அதனை நாம் தக்கவைத்துக்கொள்வதில்தான் வெற்றி இருக்கின்றது. ஒரு சில கன்வென்சன் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது உள்ளத்தில் ஏற்படும் கிளர்ச்சியால் சிலர் தொடர்ந்து அப்படிபட்டக் கூட்டங்களில் கலந்துகொள்ள விரும்புவதுண்டு. இதனால் தங்களை இரட்சிக்கப்பட்டவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர். 

இது எப்படியென்றால், கடற்கரையில்  அமர்ந்து கடற்காற்றையும் கடலின் அழகையும் ரசிப்பதுபோன்றது. அந்த அழகும் இன்பமும் நம்மை மகிழ்விப்பதால் அடிக்கடி கடற்கரைக்குச் செல்ல விரும்புகின்றோம். ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கை இப்படி இருப்பது போதாது. நமது வாழ்வில் தனிப்பட்ட மாற்றம் இல்லாமல் எத்தனை கூட்டங்களிலும் ஆராதனைகளிலும் நாம் பங்கெடுத்தாலும் அது பலனற்றதே. கடலின் அழகை ரசிப்பது போன்றதே.

இதனையே யோவான் ஸ்நானகன் தன்னிடம் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த பரிசேயர்களையும் சதுசேயர்களையும் பார்த்துக் கூறினார், "........விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்." ( மத்தேயு 3 : 7, 8 ) என்று. 

பரிசேயர்களிடமும்  சதுசேயர்களிடமும் எந்த மனமாற்றமும் இல்லை. எல்லோரும் யோவானிடம் ஞானஸ்நானம் பெறச் செல்வதைக்கண்டு அவர்களும் சென்றனர். பிரபலமானவரைப்  பார்க்க விரும்புவதுபோன்ற விருப்பத்துடன் யோவானிடம் சென்றனர். எனவேதான் யோவான் அவர்களை விரியன் பாம்புக் குட்டிகள் என்றுக்  கூறினார். 

ஆம் அன்பானவர்களே, இன்று பல கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய சபைகள் என்று கூறப்படும் சபைகளுக்குச் செல்வதால் தங்களை மீட்க்கப்பட்டவர்கள் அல்லது இரட்சிக்கப்பட்டவர்கள் என்று எண்ணிக்கொள்கின்றனர். நமது இரட்சிப்பு என்பது அழகை ரசிப்பது போன்றதல்ல; மாறாக, ஒரு தொடர் வாழ்க்கையில் அது அடங்கியுள்ளது. கிறிஸ்து நமக்குள் உருவாகி நம்மில் பிரதிபலிப்பதுதான் ஆவிக்குரிய கனிதரும் அனுபவம். அந்த அனுபவம் உள்ளவனே கிறிஸ்தவன்.

இன்று பலர் பீடி, சிகரட், வெற்றிலை பழக்கங்களிலிருந்து விடுபடுவதே இரட்சிப்பு என்று எண்ணிக்கொள்கின்றனர். அது குறித்துச் சாட்சியும் சொல்கின்றனர். ஆனால், இவைகளிலிருந்து மருத்துவ முறைகள் மூலமும் விடுதலை பெறமுடியும் என்பதே உண்மை. உண்மையான இரட்சிப்பு நமது உள்ளான மனிதனில் மாறுதல் கொண்டுவருவதாக இருக்கவேண்டும். ஆவிக்குரிய கனிகள் நிறைந்ததாக இருக்கவேண்டும். "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை." ( கலாத்தியர் 5 : 22, 23 ) என்று நாம் வாசிக்கின்றோம். 

எனவே அன்பானவர்களே, கனிகளோடு கூடிய கிறிஸ்தவ வாழ்க்கைதான் ஆவிக்குரிய வாழ்க்கை. அல்லாத வாழ்க்கை வெறுமையான ஆராதனைக் கிறிஸ்தவர்களையே உருவாக்கும். நம்மை ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு ஒப்புவித்து ஜெபிக்கும்போது பாவத்திலிருந்து விடுதலை மட்டுமல்ல, தொடர்ந்து அவர் நம்மை கனியுள்ளவர்களாக  மாற்றுவார். ஆவியானவரின் வல்லமை என்பது அதிசயம் அற்புதம் செய்வதல்ல; மாறாக பாவத்தை வென்று கனியுள்ள ஒரு வாழ்க்கை வாழ்வது. அதற்காக ஜெபிப்போம். கனியுள்ளவர்களாக மாறி உலகுக்கு நம்மை வெளிப்படுத்துவோம். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,125     💚 மார்ச் 09, 2024 💚 சனிக்கிழமை 💚

"அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்." ( யோபு 23 : 12 )

பக்தனாகிய யோபுவின் வாழ்க்கைச் சரித்திரம் நம் எல்லோருக்கும் நன்கு தெரிந்ததுதான். அவர் பட்ட பாடுகள், வேதனைகள் இவற்றை அவர் தேவன்மேல் கொண்ட விசுவாசத்தால் பொறுமையாய்ச்  சகித்து வெற்றிக்கொண்டார்.  

யோபுவின் வெற்றிக்குக் காரணத்தை இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கின்றோம். "அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்." என்கின்றார் அவர். 

தேவனுடைய வார்தைகளாகிய அவருடைய கற்பனைகளை விட்டு அவர் பின்வாங்கிடாமல் இருக்கக் காரணம் அவற்றை உணவைப் பாதுகாப்பதைவிட அதிகக் கவனமுடன் காத்துக்கொண்டதுதான் என்கின்றார். இன்று நாம் நமக்கு அதிகமாகிவிட்ட உணவை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துப் பாதுகாத்து உண்பதுபோல யோபு  தனது இதயமாகிய பெட்டியில் தேவ வார்த்தைகளைக் காத்துக்கொண்டார்.  எனவே அவை அவரது துன்பகாலத்தில்  அவர் தேவனைவிட்டுப் பின்மாறிடாமல் அவரைக் காத்துக்கொண்டன.

அன்பானவர்களே, பக்தனாகிய யோபு காத்துக்கொண்டது போல நாம் உணவைவிட முக்கியமாகக் காத்துக்கொள்ள வேண்டியவை நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தேவ வார்த்தைகளைத்தான். அதிலும் துன்ப காலங்களில் நமக்கு ஆறுதலும் தேறுதலும் தரும் ஒரு வசனம்,  "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்." ( மத்தேயு 11 : 28 ) என்பது.

தற்கொலை எண்ணத்தால் பிடிக்கப்பட்டு வாழ்வில் இறுதிக்காலத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளால் தொடப்பட்டு ஆறுதல் அடைந்து மீட்கப்பட்டப்  பல சாட்சிகள் உண்டு. பல சாட்சிகளை நான் கேட்டிருக்கின்றேன்; வாசித்திருக்கின்றேன். இன்று நாமும் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் இருந்தாலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகளை விசுவாசத்தோடு ஏற்று அவரிடம் செல்வோமானால் அவர் நமக்கு இளைப்பாறுதல் தருவார். 

மேலும், இன்றைய தியான வசனத்தில் யோபு, "அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை" என உறுதியோடு கூறுகின்றார். அதுபோல நாமும் தேவனது கட்டளைகளின்படி நடப்பதற்கு உறுதியேற்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் தேவனுக்கு எதிரானப் பாவச்  செயல்களைச்  செய்யாமல் தவிர்த்து வாழ நாம் முயற்சிக்கவேண்டும்.  

யோபு கூறுவதுபோலவே சங்கீத ஆசிரியரும்  கூறுவதை நாம் பார்க்கலாம். "உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்." ( சங்கீதம் 119 : 11 ) அவரது வார்த்தைகளை இருதயத்தில் வைத்தால் நாம் தேவனுக்கு  விரோதமாகப் பாவம் செய்யமாட்டோம் என்று இந்த வசனத்தின் மூலம் அறியலாம். 

ஆம் அன்பானவர்களே, தேவனது  வார்த்தைகளை நமது இருதயத்தில் பதித்து வைப்போம்; ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய் அவைகளைக் காத்துக்கொள்வோம்.  வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கின்ற நமக்கு அவைதான் இளைப்பாறுதல்.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,126                                           💚 மார்ச் 10, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்." ( 1 நாளாகமம் 28 : 9 )

நமது மூதாதையர்களின் தேவனாகிய கர்த்தரை அறிந்து அவருக்காக வாழ்வதைக் குறித்துத் தாவீது தனது மகன் சாலமோனுக்கு கூறிய அறிவுரைதான் இன்றைய தியான வசனம். இந்த வசனத்தில் தாவீது கூறும் முதலாவது காரியம், "கர்த்தரை அறிந்து அவரை நாம் சேவிக்கவேண்டும்" என்பது. கர்த்தரைப் பற்றி அறிவதல்ல; மாறாக கர்த்தரை முதலில் அறியவேண்டும். 

இறையியல் கல்லூரியில் படிப்பதாலும், பிரசங்கங்களைக் கேட்பதாலும் மறைக்கல்வி வகுப்புகளில் படிப்பதாலும்  தேவனைப் பற்றி மட்டுமே நாம் அறிய முடியும். ஆனால் அவரோடு தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்வதால் மட்டுமே அவரை அறிய முடியும். அப்படி கர்த்தரை அறிந்து சேவிக்கத் தனது மகன் சாலமோனுக்குத் தாவீது அறிவுரை கூறுகின்றார். 

ஏன் அவரை அறியவேண்டும் என்பதனை அடுத்ததாகக் கூறுகின்றார். அதாவது அவர், "எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்" ஆம் அன்பானவர்களே, கர்த்தரை நாம் ஏமாற்ற முடியாது. அவர் நமது உள்ளத்தின் நினைவுகள் அனைத்தையும் அறிகின்றார். நமது இருதயத்தை ஆராய்ந்து அறிகின்றார். நாம் எதற்காக அவரைத் தேடுகின்றோம் என்பதனை அவர் அறிவார். 

ஒரு பெண்ணை உண்மையாகக் காதலிக்கும் ஒருவன் அந்தப் பெண்ணைத்தான் விரும்புவானேத் தவிர அவள் கொண்டுவரும் வரதட்சணைகளைக் கணக்குப்போட்டுப் பார்த்துக் காதலிக்கமாட்டான். அதுபோலவே, தேவனை உண்மையாக நேசிக்கும் ஒருவன் அவரையும் அவர் தன்னோடு இருக்கவேண்டுமென்றும் தான் விரும்புவான். மனிதனின் அந்த எண்ணத்தை தேவன் அறிகின்றார். மேலும், அந்த எண்ணத்தோடு தேவனைத் தேடுகின்றவன் மட்டுமே ஆவிக்குரிய மேலான காரியங்களை அறிந்துகொள்கின்றான்.  

மூன்றாவதாகத் தாவீது கூறுவதுதான் முக்கியமான கருத்து. அவர் கூறுகின்றார், "நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்." 

இந்தக் காரியம் சாலமோனின் வாழ்வில் அப்படியே நிறைவேறியது. அவன் தேவனைத் தேடி வாழ்ந்தபோது தேவன் அவனுக்குத் தென்பட்டார். இரண்டுமுறை சாலமோனுக்கு அவர் தரிசனமானார். அப்படி இருந்தும் சிற்றின்ப ஆசையில் மூழ்கிய சாலமோன் மனைவிகளும் மறு  மனைவிகளுமாக 1000 பெண்களை விரும்பி ஏற்றுக்கொண்டான். பிற இனத்துப் பெண்களைத் திருமணம் செய்யக்கூடாது என்று தேவன் தடைவிதித்திருந்தபோதிலும் அதனை மீறி பல பிற இனத்துப் பெண்களை மணந்தான். 

"சாலொமோன் வயது சென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை." ( 1 இராஜாக்கள் 11 : 4 )

"சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்." ( 1 இராஜாக்கள் 11 : 6 ) எனவே, "நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்." என்று தாவீது கூறியதுபோல தேவன் சாலமோனைக் கைவிட்டார். 

எனவே அன்பானவர்களே, நாம் அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவிக்க வேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அவர்  எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார். நம்மைக்குறித்து அவருக்கு யாரும் எடுத்துச்சொல்லவேண்டிய அவசியமில்லை. அவர் எல்லாம் அறிவார். "மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை." ( யோவான் 2 : 25 ) என்று கூறப்பட்டுள்ளது. 

எனவே, நினைவுகளாலும், செயல்களாலும் கத்தரைவிட்டுப் பின்வாங்கிடாமல் எச்சரிக்கையாக இருப்போம். நாம் அவரைத் தேடினால் நமக்குத்  தென்படுவார்; நாம்  அவரை விட்டுவிட்டால் அவர் நம்மை என்றைக்கும் கைவிடுவார்.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,127                                           💚 மார்ச் 11, 2024 💚 திங்கள்கிழமை 💚

"நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்." ( ரோமர் 4 : 24, 25 )

ஆபிரகாமின் விசுவாசத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தைக் கூறுகின்றார். ஆபிரகாமின் விசுவாசம் அவருக்கு நீதியாக எண்ணப்பட்டதுபோல பிதாவை விசுவாசிக்கும் நமக்கும் எண்ணப்படும் என்கின்றார் பவுல். பிதாவாகிய தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குமுள்ள உறவு பல கிறிஸ்தவர்களுக்கும் இன்று புரியாமலேயே இருக்கின்றது. 

பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவைவிடப் பெரியவர். அவரே கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார்.  இதனை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். இதனை பெயரளவுக்கு கூறுவதல்ல, இந்த சத்தியத்தை நம்பி கிறிஸ்துவைப்போலப்   பிதாவைக் கனம் பண்ணவேண்டும். "தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்." ( யோவான் 8 : 42 ) என்று இயேசு கிறிஸ்து கூறுகின்றார்.

ஒருவரை ஒரு காரியத்தைச்  செய்து முடித்துவிட்டு வருமாறு ஒருவர் அனுப்புகின்றார் என்றால் அனுப்புகின்றவர்தானே பெரியவர்.?  பிதாவே அனுப்புகின்றவர். இயேசு கிறிஸ்து அனுப்பப்பட்டவர். ஆம் அன்பானவர்களே, பிதாவாகிய தேவனை நாம் விசுவாசிக்கவேண்டும். அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நமது பாவங்களுக்குப் பரிகாரியாக அனுப்பினார். பிதாவாகிய தேவனே இயேசு கிறிஸ்துவை உயிரோடு எழுப்பினார். அவரை விசுவாசித்தால் மட்டுமே நமக்கும் உயிர்த்தெழுதல் உண்டு என்று அப்போஸ்தலரான பவுல் இன்றைய தியான வசனத்தில் கூறுகின்றார். 

ரோமர் 4:25 பொது வேதாகம மொழிபெயர்ப்பில் மிகத் தெளிவாக உள்ளது. "நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்தெழச் செய்தார்"

இயேசு கிறிஸ்துவும் தான் பிதாவை நோக்கி ஜெபித்தபோது.  "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." ( யோவான் 17 : 3 ) என்றுதான் ஜெபித்தார். அதாவது நாம் பிதாவாகிய தேவனையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அறியவேண்டியது அவசியம். அப்படி அறியும்போதுதான் நாம் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றோம்.

அப்போஸ்தலரான பேதுருவும், "தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது." ( 2 பேதுரு 1 : 2 ) என்று எழுதுகின்றார். அதாவது தேவ கிருபையும் தேவ சமாதானமும் நமக்குப் பிதாவையும் குமாரனான இயேசு கிறிஸ்துவையும் அறியும்போதுதான் பெருகும். 

"தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்." ( எபேசியர் 1 : 19 ) எனத் தான் வேண்டுவதாகப் பவுல் கூறுகின்றார். நமக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களை ஆவியானவர் கொடுக்கும்படி வேண்டுவோம். 

இன்று தவறான  வேத போதக கூட்டத்தார் எழும்பி தவறான போதனைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். பிதாவாகிய தேவனுக்கு நாம் முன்னுரிமைக் கொடுத்தால் அது கிறிஸ்துவை அவமதித்ததுபோல இருக்கும் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவே பிதா தன்னைவிடப் பெரியவர் என்பதைத் தெளிவாகக் கூறினார், "ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்." ( யோவான் 14 : 28 )

அன்பானவர்களே, பிதாவுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குமுள்ள உறவினை நாம் புரிந்துகொள்ளவேண்டும். யோவான் நற்செய்தி இதனையே விளக்குவதாக உள்ளது. குறிப்பாக யோவான் 14 முதல் 17 வரையிலான அதிகாரங்கள் இதனைத் தெளிவுபடுத்தும்.

பிதாவைக் கனம் பண்ணுவதுபோல குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் நாம்  கனம் பண்ணவேண்டியது அவசியம். காரணம், நம்மை நியாயம்தீர்க்கும் அதிகாரத்தை பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவுக்கே அளித்துள்ளார்.  "அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்." ( யோவான் 5 : 22 ) வேத சத்தியங்களை ஆவியானவரின் துணையோடு புரிந்துகொள்வோம். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,128                                         💚 மார்ச் 12, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ( யோவான் 8 : 51 )

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆத்தும மரணத்தைப் பற்றி இன்றைய தியான வசனத்தில் குறிப்பிடுகின்றார். அதாவது, நமது ஆத்துமா நித்திய நரக அக்கினிக்குத் தப்பி நித்திய ஜீவனை அடையவேண்டுமானால் அவரது வார்த்தைகளை நாம் கைக்கொண்டு நடக்க வேண்டும். 

ஆனால் இன்று கிறிஸ்துவின் போதனைகள் சில கிறிஸ்தவர்களாலேயே,  "இவை இன்றைய சூழ்நிலையில் நடைமுறைக்குச் சாத்தியமில்லாதவை" என்று கூறப்படும் நிலைக்கு வந்துவிட்டது. "கிறிஸ்துவின் போதனைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளக்கூடியவையாக இருந்திருக்கலாம், ஆனால் இன்று இவை முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை" என்று கூறுகின்றனர் சிலர். 

இது சாத்தானின் வஞ்சகங்களில் ஒன்று. எந்த ஒரு அன்பான தகப்பனும் தனது இரண்டு வயது குழந்தையிடம் ஒரு குடம் தண்ணீரைத் தூக்கச் சொல்லமாட்டான்; அல்லது ஐந்து இட்லிகளைத் தின்றுதான் ஆகவேண்டுமென்று வற்புறுத்தி அடிக்கமாட்டான். ஆம் அன்பானவர்களே, நமது அன்பான தகப்பனாகிய தேவன் நம்மால் முடியாததைச் செய்யும்படி நிச்சயமாக நமக்குக் கட்டளைக் கொடுக்கமாட்டார்.  

சாத்தானின் தந்திரங்கள் நாம் அறியாதவையல்லவே என்று பவுல் அப்போஸ்தலர் கூறுவதுபோல இது சாத்தானின் தந்திரமே. அன்று ஏதேனில் தேவன் ஆதாமை நோக்கி, "நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்." ( ஆதியாகமம் 2 : 16, 17 )

ஆனால் சாத்தானாகிய பாம்பு ஏவாளிடம் நீங்கள் இந்தப் பழத்தைச் சாப்பிடுவதால் சாகமாட்டீர்கள் என்று பொய் கூறினான். "அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;" ( ஆதியாகமம் 3 : 4 ) என்று வாசிக்கின்றோம். அன்று  மனிதர்கள் தேவனுடைய வார்த்தைகளைவிடச் சாத்தானின் வார்த்தைகளையே நம்பினார்கள்.

எனவேதான் இயேசு கிறிஸ்து சாத்தனைப்பற்றி குறிப்பிடும்போது, "அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்." ( யோவான் 8 : 44 ) என்று குறிப்பிட்டார். 

இன்றும் கிறிஸ்துவின் போதனைகள் கடைபிடிக்க முடியாதவை என்று கூறுபவர்கள் சாத்தானின் தூதர்களே. இன்று நாம் பலமில்லாதவர்களாக இருப்பதால் நமக்குத் துணையாளரான பரிசுத்த ஆவியானவரை இயேசு கிறிஸ்து வாக்களித்து நமக்குத் தந்துள்ளார். "நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்." ( யோவான் 14 : 16 )

இப்படித்  தேவனால் அனுப்பப்படும் ஆவியானவர் நம்மை சத்திய பாதையில் நடத்துவார். "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 )

எனவே அன்பானவர்களே, நாம் நம்பிக்கையுடன் இருப்போம். கிறிஸ்துவின் வார்த்தைகள் ஆவியானவரின் பலத்தோடு நாம் வாழும்போது கடைபிடிக்கக்கூடியவைதான். ஆனால் வெற்றுச் சடங்குகள் மூலம் ஆவியானவரை நாம் பெறமுடியாது. அனுபவத்தால் உணர்ந்து தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது ஆவியானவரின் வல்லமையை நாம் உணரமுடியும். அவரே கிறிஸ்துவின் போதனைகளை நாம் கடைபிடித்து வாழ்ந்திட உதவிசெய்து கிறிஸ்து கூறிய  மரணத்தைக் காணாத நிலைவாழ்வை நாம் அடைந்திட வழிகாட்டி உதவுவார்.   

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,129                                         💚 மார்ச் 13, 2024 💚 புதன் கிழமை 💚

"கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்." ( சங்கீதம் 1 : 6 )

நீதிமான்களின் வழி, துன்மார்க்கரின் வழி என்று இரு வழிகளைக்குறித்து இன்றைய வசனம் கூறுகின்றது. கர்த்தருக்கேற்ற நீதியுள்ள மனிதன் செல்லும் வழி கடினமான வழியாக இருந்தாலும் அவனுக்கு சமாதானமும் மகிழ்ச்சியும் கிடைக்கின்றது. ஆனால் இதற்கு மாறாக துன்மார்க்கர்கள் செல்லும் வழி செழிப்பு,  மகிழ்ச்சி போல ஆரம்பத்தில் தோன்றினாலும் இறுதியில் அழிவுக்குரிய வழியாக அமைந்துவிடுகின்றது.  

நாம் தேவ வழியில் நடக்கும்போதும் அவரையே நினைவில் கொண்டவர்களாக வாழவேண்டும். அவரது கற்பனைகளின்படி நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும். "உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்." ( நீதிமொழிகள் 3 : 6 ) என்று வேதம் நமக்கு அறிவுறுத்துகின்றது. 

அன்பானவர்களே, சில வழிகள் தேவ வழிகளாக இருந்தாலும் தேவனது பாதுகாப்பு இருந்தால் மட்டுமே நாம் வெற்றிபெறமுடியும். காரணம், "உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்." ( சங்கீதம் 91 : 11 )என்று கூறப்பட்டுள்ளபடி  அவரது பாதுகாப்பு இல்லாவிட்டால் நாம் வெற்றிபெற முடியாது.

இஸ்ரவேலரை மோசே வழிநடத்தியபோது அற்புதமாக செங்கடலை பிளந்து வழி உண்டாக்கினார். இஸ்ரவேலர் கடல் நடுவே கால் நனையாமல் நடந்துசென்றபோது அவர்களுக்கு இருபுறமும் கடல்நீர் மதில்போல நின்றது. தேவன் கடல் நடுவே உண்டாக்கிய வழியானது தனது  மக்களுக்காக தேவன் உருவாக்கியது. அந்த வழியில் இஸ்ரவேல் மக்கள் நடந்தனர். ஆனால் அதே வழியில் அவர்களைப் பின்தொடர்ந்த பார்வோனின் படைவீரர்கள், குதிரைகள் அனைத்தும்  அழிந்து போயின. 

செங்கடல் நடுவே உருவான வழி தேவன் உருவாக்கிய வழிதான்; ஆனால் அது பார்வோனது படைகளுக்கானதல்ல, மாறாகத் தனது மக்களுக்காக அவர் உருவாக்கியது. இன்றும் இதுபோன்ற செயல்கள் நடைபெறுகின்றன. தேவ பிள்ளைகள் தேவனால் வழிநடத்தப்படுவதை உணராமல் அன்று பார்வோன் படைகள் செய்ததுபோல தேவனை அறியாத அல்லது தேவ சித்தப்படி வாழாமல் வாழும் சிலர் சில செயல்கள் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர். 

இன்று ஆவிக்குரிய மக்களாகிய நமக்கு கிறிஸ்துவே வழியாக இருக்கின்றார். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." ( யோவான் 14 : 6 ) என்று அவர் கூறியபடி பிதாவாகிய தேவனை நாம் அடைந்திட அவரே வழியாக இருக்கின்றார். 

ஆனால் நீதியான வாழ்க்கை வாழ்பவர்களே அவர் நடத்தும்வழியில் நடக்க முடியும். இன்று பல கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவே வழி என்பதை அறிந்திருந்தாலும், அவரை ஆராதிக்கின்றோம் என்று கூறிக்கொண்டாலும் பலவேளைகளில் ஏற்ற ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதில்லை. காரணம் அன்று பார்வோன் படைகள் இஸ்ரவேலர் சென்ற பாதையில் நடக்க முயன்றதுபோன்ற அவர்களது முயற்சி. பார்வோன் கொண்டிருந்தது போன்ற  கடின இருதயத்தையும், அவனது வஞ்சகமான குணம் போன்ற குணங்களையும் நாம் மாற்றாவிட்டால் வெற்றிபெற முடியாது. 

"கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்." என்று இன்றைய தியான வசனம் கூறுவதன்படி நாம் நீதியாக வாழ நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும்; அந்த வழியில் நடக்க நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ள முயலவேண்டும். அத்தகைய கர்த்தரது வழியில் ஆவியானவர் நம்மை  நடத்திட வேண்டுதல்செய்வோம். அப்போது நமது வழிகள் மேன்மையானதாக அமையும். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,130                                         💚 மார்ச் 14, 2024 💚 வியாழக்கிழமை 💚

"அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள். தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்." ( சங்கீதம் 106 : 19, 20 )

நாம் இன்று மனிதர்களாக அழகான உருவத்தில்  இருப்பதற்குக் காரணம் தேவன் நம்மைத் தனதுச்  சாயலாகப் படைத்ததனால்தான். நாம் காணும் இந்த மனித சாயல்தான் நம்மைப் படைத்த தேவனது சாயல். தேவன் ஒரு குரங்குபோலவோ யானையைப்போலவோ மாட்டைப்போலவோ இருந்திருப்பாரானால் நாமும் அப்படியே பிறந்திருப்போம். 

"தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்." ( ஆதியாகமம் 1 : 27 ) என்று வாசிக்கின்றோம். எனவே இந்த உலகத்தில் வாழும் ஆணும் பெண்ணும் தேவனது சாயலைப் பெற்றுள்ளோம் என்பது உண்மை. 

அன்று எகிப்திலிருந்து வெளிவந்து கானானை நோக்கி பயணம்செய்த இஸ்ரவேல் மக்கள் வழியில் கன்றுக்குட்டியின் உருவத்தைச்  செய்து "எங்களை எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டுவந்த தேவன் நீர்தான்" என்று அதனை வழிபட்டார்கள்.  ஆரோன் அவர்களை அப்படி அழிவுக்கு நேராக நடத்தினான். 

இதனையே இன்றைய வசனம் கூறுகின்றது, "தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்." ( சங்கீதம் 106 : 20 ) அதாவது தேவன்  தனது சாயலாக மனிதர்களைப் படைத்தார், அவர்களோ அந்த மகிமையான உருவத்தைக் கெடுத்து புல்லைத் தின்னும் மாட்டுக்கு ஒப்பாக மாற்றினார்கள். மாட்டின் குணமுள்ளவர்களாக மாறிப்போனார்கள்.

தேவன் அருவருக்கும் முக்கியமான இரு காரியங்கள் சிலை வழிபாடு மற்றும் விபச்சாரம். புதிய ஏற்பாட்டின்படி சிலை வழிபாடு என்பது சிலைகளைச் செய்து வணங்குவது மட்டுமல்ல மாறாக பொருளாசையும் சிலைவழிபாடுதான். "விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே." ( எபேசியர் 5 : 5 ) என்கின்றார் பவுல் அப்போஸ்தலர். 

இன்று நமது நாட்டில் பெரும்பாலான பாவச் செயல்களுக்குக் காரணம் சிலைவழிபாடு தான். "தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்" என்று கூறியுள்ளபடி மாட்டின் குணங்களுள்ள மனிதர்களாக மக்கள் மாறிப்போனார்கள்.  அன்பானவர்களே, வேத வசனங்கள் தேவ வார்த்தைகள். எனவே அவை ஒருபோதும் தவறுவதில்லை. மாட்டை ஆராதித்து வணங்கும் மனிதர்கள் தேவ குணத்தை அடைவார்கள் என்று நாம் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் அவர்கள் மாறவேண்டும் தேவ சாயலை அடையவேண்டும் என்பதே தேவ சித்தம். 

எனவேதான் நாட்டில் நடக்கும் அவலங்களைத் தேவன் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்.  "தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்." ( 2 பேதுரு 3 : 9 ) என்கின்றார் பேதுரு அப்போஸ்தலர். 

இன்றைய வசனத்தின்படி பண வெறியர்களாக நாம் வாழ்வோமானால் பணத்தை ஆராதித்து நமது மகிமையை வெற்றுத் தாள்போல மாற்றுகின்றோம் என்று பொருள். அல்லது தங்க நகைபோலவோ அடுக்குமாடி கட்டிடங்களாகவோ, வீட்டு மனைகளாகவோ நம்மை மாற்றுகின்றோம் என்று பொருள். அன்பானவர்களே, தேவன் நம்மைத் தனது சாயலாகவே இருக்கும்படி அழைகின்றார்.  

புல்லைத் தின்கின்ற மாட்டின் சாயலாக தங்கள் மகிமையினை மாற்றிய இஸ்ரவேல் மக்களைத் தேவன் அழித்து ஒழித்தார். அவர்களால் பரம கானானுக்குள் நுழைய முடியவில்லை. எனவே, நமக்கு இது ஒரு எச்சரிப்பாகும். தேவனையே சார்ந்து அவரது சாயலை அடைந்திட முயலுவோம். ஆவியோடும் உண்மையோடும் அவரை ஆராதித்து மேலான ஆவிக்குரிய அனுபவங்களைப்  பெறுவோம். 


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,131                                         💚 மார்ச் 15, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்". (  சங்கீதம் 119 : 92 )

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 8,00,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள், இதில்  1,35,000 (17%) பேர் இந்தியாவில் வசிப்பவர்கள். சிந்தித்துப்பாருங்கள்உலக மக்கள் தொகையில் இந்திய மக்கள்தொகை 17.5%. ஆனால், நம்  நாட்டில் உலக அளவில் 17% மக்கள் தற்கொலை செய்து மடிகின்றனர்.  1987 மற்றும் 2007 க்கு இடையில், தற்கொலை விகிதம் 1,00,000 பேருக்கு 10 பேர் என இருந்தது என்கின்றன புள்ளிவிபரங்கள்.  

இந்தத் தற்கொலைகளுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் எல்லா தற்கொலை மரணங்களும் மனம் சோர்வடைதல் மற்றும் நம்பிக்கை இல்லாமை இவற்றாலேயே நிகழ்கின்றன. அதாவது இந்த மக்களுக்கு நம்பிக்கையளிக்க யாருமே இல்லாத நிலைதான் காரணமாக இருக்கின்றது.

ஒவ்வொருவருக்கும் துன்பங்கள் உண்டு. சிலர் அவைகளைத் சகித்து வாழ்கின்றனர். சிலர் தாங்கமுடியாமல் தற்கொலையை நாடுகின்றனர். எனது வாழ்விலும் ஒருகாலத்தில் எதிர்காலத்தைப்பற்றி எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல், வேலை வாய்ப்புக்கள் இல்லாமல், என்னசெய்வது என அறியாமல்தான் இருந்தேன்.  அந்த  வேளையில்தான் என்னைவிட 10 வயது இளையவரான ஒரு சகோதரன் மூலம் கிறிஸ்துவை அறிந்து ஏற்றுக்கொண்டேன். எனவே அப்போது எனக்கு ஒரே நம்பிக்கையாய் இருந்தவை தேவனது வார்த்தைகள்தான்

இன்றைய வசனம் எனது வாழ்க்கைக்கு நூறு சதவிகிதம் பொருத்தக்கூடிய வசனம். ஆம், வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். இன்று இந்த வேதாகமத் தியானங்களை எழுதிக்கொண்டிருந்திருக்க மாட்டேன்.  

இன்று பெரியவர்களது தற்கொலை மட்டுமல்லசிறு குழந்தைகளது தற்கொலையும் அதிக அளவில் நடைபெறுகின்றது. தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை, தேர்வை சந்திக்கப்பயந்து தற்கொலை, ஆசைப்பட்டப்   படிப்பைப்  படிக்க முடியாததால் தற்கொலை, மற்ற மாணவர்கள் வைத்துள்ளதுபோல பைக், செல்போன் போன்றவைகள் தங்களுக்கு இல்லாததால் தற்கொலை எனக் குழந்தைகள்  தற்கொலைப் பட்டியல் காரணங்கள்  நீண்டுகொண்டிருக்கின்றன

கடன்தொல்லைகள், காதல் தோல்விகள், வேலையில்லாமை இவை வயதுவந்தோர்த்  தற்கொலைக்குக் காரணமாகின்றன.  எனவே, குழந்தைப்  பருவத்திலேயே நமது குழந்தைகளது மனதில் வேத வசனங்களை பதிய வைக்கவேண்டும்அந்த வசனங்கள்  அவர்களது நம்பிக்கையை உறுதிப்படுத்தும்மட்டுமல்ல அவர்கள் தேவனுக்கு ஏற்ற ஒரு வாழ்க்கைவாழ உதவிசெய்யும்.

அன்பானவர்களே, தேவனது வார்த்தைகள் பொய் சொல்வதில்லை. தேவனது கரத்தினுள் நம்மை ஒப்படைத்துவிட்டால் அவர் நிச்சயமாக நம்மைப் பாதுகாத்து நடத்துவார். எந்தவித துன்ப  சூழ்நிலையிலும் ஆறுதல் அளிக்கக்கூடிய வசனம் வேதத்தில் உண்டு. இப்படி ஆறுதல் அளிக்கும் வசனத்தைகளைத் தங்கள் வாழ்வில் காணாத மக்கள்தான் தற்கொலை செய்து மடிக்கின்றனர்

தாவீது வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தவர். எந்தவேளையும் அவரது  உயிர் சவுலால் வேட்டையாடப்படலாம்  என்ற சூழ்நிலைபலமுறை சவுல் தாவீதைக் கொன்றுவிடக்கூடிய   நெருக்கமான நிலை ஏற்பட்டதுஆனால் தாவீது தேவனையே  முழுவதுமாகப் பற்றிக்கொண்டார்.  எந்தச் சூழ்நிலையிலும் தேவன் தன்னோடு இருப்பதை அவர்  நம்பினார். எனவேதான் கூறுகின்றார், "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்". (  சங்கீதம் 23 : 4 ) அவர் அறிக்கையிட்டதுபோல தேவனது கோலும்  கைத்தடியுமான வார்த்தைகள்  அவரைத் தேற்றின.

நமது தேவன் இல்லாதவர்களை இருக்கின்றதாய் மாற்றுகின்றவர், ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த அண்டசராசரங்களைப் படைத்தவர் அவர். தேவனது வார்த்தையால் அனைத்தும் அசைகின்றன. அவருக்குள் நாம் உயிர்வாழ்கின்றோம். எனவே எந்த இக்கட்டுவந்தாலும் தேவனை உறுதியாகப்பற்றிக்கொண்டு வாழ்வோம்

தற்கொலை எனும் குறுகிய அவசர வழி நமது பிரச்னைகளுக்குத்  தீர்வல்ல என்பதை சோர்ந்துபோயிருக்கும் நமது சகோதரர்களுக்கு உணர்த்துவோம். கிறிஸ்துவின் ஆறுதலாளிக்கும் வார்த்தைகளால் அவர்களுக்குத் திடனாளிப்போம். அப்போது அவர்கள் ஒருநாள், "நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்". (  சங்கீதம் 119 : 93 )  என்று அவர்களும் பிறருக்குத் தேவனைக்குறித்துச்   சாட்சிக்  கூறுவார்கள்.   


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,132                                         💚 மார்ச் 16, 2024 💚 சனிக்கிழமை 💚

"உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள்." ( யோவான் 5 : 42, 43 )

இன்றைய சூழலில் உலக ஆசை இச்சைகளையே நிறைவேற்றிட ஜெபிப்பவர்களையும் அத்தகைய ஆசையை விசுவாசிகளிடம் தூண்டிவிடும் ஊழியர்களையும் பார்த்து இயேசு கூறுவதாக இந்த வசனம் பொருள்கொள்வதாக இருக்கின்றது.

தேவ அன்பினால் நிறைந்த  மனிதன் எப்போதும் தேவனையே சார்ந்து அவரையே அன்பு செய்பவனாக இருப்பான். உலக ஆசைகளோ, கவர்ச்சிகளோ அவனை அதிகம் பாதிக்காது. அத்தகைய தேவ அன்புள்ள மனிதனது ஜெபங்கள் வித்தியாசமானவைகளாக இருக்கும். உலக ஆசை தேவைகளைப்  பூர்த்திசெய்வது அத்தகைய மனிதர்களில் முதன்மையானதாக இருக்காது. 

ஆனால் தேவனால் வருகின்ற மகிமையை நாடாமல் உலக மகிமைக்காக ஏங்குபவர்கள் தாங்கள்  தேவனை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொண்டாலும் ஆலய வழிபாடுகளில் கலந்துகொண்டாலும் உள்ளான மனதில் உலக பெருமைக்காகவே ஏங்குபவர்களாக இருப்பார்கள். தங்களுக்கிருக்கும் பதவி, பணம், புகழ், அதிகாரம் இவைகளைக்கண்டு மற்றவர்கள் தங்களை மகிமைப்படுத்தவேண்டும் என்றே இவர்கள் எண்ணுவார்கள். 

இதனானால்தான் இயேசு கிறிஸ்து இன்றைய வாசகத்துடன் நிறுத்தாமல் தொடர்ந்து கூறினார்,  "தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?" ( யோவான் 5 : 44 ) என்று. அதாவது அவர்கள் தேவனை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொள்வது பொய்யானதாகும். மேற்படி உலக மகிமையைத் தேடும் மனிதர்கள் உண்மையான விசுவாசிகள் அல்ல.  அவர்கள் இந்த உலக ஆசீர்வாதங்கள் மூலம் மனிதரால் வரும் மகிமையை ஏற்றுக்கொள்ள விரும்புபவர்கள். 

இன்றைய வசனத்தில் இயேசு கிறிஸ்துத் தொடர்ந்து கூறுகின்றார், "நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள்." என்று. அதாவது இத்தகைய உலக மகிமையைத் தேடுபவர்கள் மெய்யான மனம்திரும்புதலுக்குரிய நற்செய்திகளைக் கேட்க மனமில்லாமல் தங்களது சுய அறிவுப்படி போதிக்கும் ஒருவனை ஏற்றுக் கொள்வார்கள்.

அன்பானவர்களே, இன்று ஆசீர்வாத போதகர்களுக்குப்பின் திரளான கூட்டம் ஓடுவதற்கான காரணம் இதுதான். அதாவது அவர்கள் உலக ஆசீர்வாதங்கள்மூலம் தங்களது மகிமையினை உயர்திக்கொள்வதற்காக சுய போதனை செய்யும் ஆசீர்வாதப் போதகர்கள்பின் ஓடுகின்றனர். இத்தகைய மனிதர்களை பார்த்து இயேசு கிறிஸ்து அன்று யூதர்களைப் பார்த்துக் கூறியதுபோலக் கூறுகின்றார், "உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்." தேவ அன்பு இருக்குமானால் அவன் தேவனையேத் தேடுவான். 

இன்று உலக அன்புக்கு அடிமையான தேவ அன்பு இல்லாத ஊழியர்களால் கிறிஸ்தவம் பிற மார்க்கத்து மனிதர்கள்முன் நகைப்புக்குரிய ஒன்றாக மாறிப்போனது பரிதாபகரமான உண்மை. கிறிஸ்தவத்தின் மேலான ஆவிக்குரிய பண்புகள், குணங்கள், சத்தியங்கள் இவை சுய மகிமையைத் தேடும் ஊழியர்களால் மறைக்கப்பட்டுள்ளது.  சமூக வலைத்தளங்களிலும் இத்தகைய சுயமகிமை ஊழியர்களே ஆக்கிரமிப்புச் செய்துள்ளனர். இவர்களது அவலட்சணமான உலக ஆசை காணொலிகள் மற்றவர்களால் அதிகம் பகிரப்பட்டு கிறிஸ்தவம் கேலிக்குள்ளாக்கப்பட்டு கிறிஸ்து திரும்பத் திரும்பச் சிலுவையில் அறையப்படுகின்றார்.

இதனை வாசிக்கும் அனுப்புச் சகோதரனே, சகோதரியே நம்மைப்பார்த்து கிறிஸ்து "உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்." என்று சொல்லிடாதவாறு நம்மைக் காத்துக்கொள்வோம். கிறிஸ்துவுக்கு மெய்யான சாட்சிகளாக வாழ்வோம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,133                                         💚 மார்ச் 17, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚


"சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை." ( யோவான் 7 : 18 )

நேற்றைய தியானத்தில் நாம் "தேவனால் வருகின்ற மகிமையை நாடாமல் உலக மகிமைக்காக ஏங்குபவர்கள் தாங்கள்  தேவனை விசுவாசிக்கின்றோம் என்று கூறிக்கொண்டாலும் உள்ளான மனதில் உலக பெருமைக்காகவே ஏங்குபவர்களாக இருப்பார்கள்" என்று கண்டோம். அதன்தொடர்ச்சியாகவே இன்றைய தியானத்தை நாம் கொள்ளலாம். சுய மகிமையைத் தேடும் ஊழியர்களும் மக்களும் தங்களது அந்தஸ்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்திக்கொள்ள தேவ வசனங்களை தங்களுக்கேற்ப மாற்றி பேசுபவர்களாக இருப்பார்கள். 

அதனையே இயேசு கிறிஸ்து, "சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான்"  என்று கூறுகின்றார். பரிசுத்த ஆவியானவர் போதிக்கும் வழியினைவிட்டு தங்களது மூளை அறிவால் நற்செய்தி அறிவிப்பவர்கள் தான் சுயமாய்ப் பேசுபவர்கள். அவர்கள் எப்போதும் தங்கள் சுய மகிமையை காத்துக்கொள்ளவே விரும்புவார்கள். அதற்கேற்ப பிரசங்கிப்பார்கள். 

ஆனால், "தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை." என்கின்றார் இயேசு கிறிஸ்து. மெய்யாகவே ஊழியத்துக்குத் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தான் தேவனால் அனுப்பப்பட்டவர்கள். அப்படி அனுப்பப்பட்டவர்கள் தங்களை அனுப்பியவரின் மகிமைக்காகவே உழைப்பார்கள், போதிப்பார்கள். எனவே அவர்களிடம்தான் மெய்யான நற்செய்தியை நாம் அறியமுடியும்.   

அன்பானவர்களே, ஒருவன் சுய விருப்பத்தின்படி ஊழியக்காரனாக மாறினானா அல்லது தேவனே அவனைத் தெரிந்தெடுத்து ஊழியத்துக்கு அனுப்பினாரா என்பதனை நாம் நமக்குத் தேவனோடு தனிப்பட்ட உறவினை வளர்த்துக்கொண்டால் மட்டுமே கண்டுணரமுடியும். எல்லோரும் வேதாகமத்திலிருந்து வசனங்களை மேற்கோள்காட்டிதான் பேசுவார்கள். ஆனால் அந்த வசனங்களைத் தேவன் எந்த அர்த்தத்தில், நோக்கத்தில் கூறினார் என்பதை உணர்ந்து சரியாகப் போதிப்பவனே தேவனால் அனுப்பப்பட்டவன்.  

இன்று பொதுவாக கிறிஸ்தவ விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் பலருக்கும் தேவனோடு தனிப்பட்டத் தொடர்பு இருப்பதில்லை. அதனை வளர்த்துக்கொள்ள அவர்கள் விரும்புவதும் இல்லை. உடனடி நிவாரணம்போல தேவ வசனங்களை யாராவது பேசி தங்களுக்காக ஜெபிப்பதையே விசுவாசிகள் விரும்புகின்றனர். இதனால் சுய மகிமையைத் தேடும் ஊழியர்களும் விசுவாசிகளுமாகக் கிறிஸ்துவின்  திருச்சபை மாறிப்போனது. 

தன்னை அனுப்பின மெய்தேவனாகிய கிறிஸ்துவின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை என்று இன்றைய வசனம் கூறுகின்றது. அதாவது உண்மையாக வாழும் அவர்களிடம் அநீதி இருப்பதில்லை. அவர்கள் பணம் சம்பாதிக்க கிறிஸ்துவைத் தேடமாட்டார்கள். இன்று பிற மார்க்கத்து மக்கள்கூட அழகாக அவர்களுக்குத் தெரிந்த ஆன்மீக முறையில் ஜெபிக்கின்றனர். பல ஜெபங்கள் நேர்மையானவையாகவே இருக்கின்றன. ஆனால் பல கிறிஸ்தவர்களது ஜெபங்கள் அவைகளைவிட மட்டமானவைகளாக இருக்கின்றன. 

ஆன்மீகத்தைத் தேடி பல்வேறு யோகிகளையும் சத்குருக்களையும் தேடி அலையும் மக்களிடம் வெற்று பண ஆசீர்வாதங்களையும் உலக ஆசீர்வாதங்களையும் காட்டி நாம்  எப்படி மனமாற்றத்தைக் கொண்டுவர முடியும்?  சுய மகிமையை விட்டு ஆவியானவருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழும்போது மட்டுமே நாம் உண்மையினை அறிய முடியும். 

"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்." ( யோவான் 16 : 13 ) என்றார் இயேசு கிறிஸ்து. அப்படி சத்திய ஆவியானவரை வாழ்வில் கொண்டவனே தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுபவனாகவும் உண்மையுள்ளவனாகவும் இருப்பான். அவனிடத்தில் அநீதி இருப்பதில்லை. 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,134                                         💚 மார்ச் 18, 2024 💚 திங்கள்கிழமை 💚

"சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." ( 1 கொரிந்தியர் 1 : 18 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக மனிதனாகப் பூமியில் பிறந்து, யூதர்களாலும்  தலைமைக் குருக்களாலும் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு பாடுபட்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டார். பின்னர், மூன்றாம் நாளில் ஜெய கிறிஸ்துவாக உயிர்த்தெழுந்தார். 

இப்படி அவர் மரணத்தை ஜெயமாக மேற்கொண்டதால் அவரது இரத்தத்தால் நமது பாவங்கள் கழுவப்பட்டு நாம் நீதிமான்களாக்கப்படுகின்றோம். இதனை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது நாம் மீட்கப்படுகின்றோம்; நீதிமான்களாக்கப்படுகின்றோம். இதுவே சிலுவை பற்றிய உபதேசம். 

பழையஏற்பாட்டுக்  காலத்தில் பாவங்களுக்காக காளைகள் வெள்ளாடுகள் பலியிடப்பட்டன. அவற்றின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்பட்டன. ஆனால் மிருகங்களின் இரத்தமானது பாவத்தின் வேரை முற்றிலுமாக அகற்றமுடியாததால் மனிதர்கள் மீண்டும் மீண்டும் பாவத்தில் விழுந்தனர்.  "அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே." ( எபிரெயர் 10 : 4 ) என்று வாசிக்கின்றோம். இதனை மாற்றி மனிதர்களுக்கு பாவத்திலிருந்து முழு விடுதலை அளிக்கவே கிறிஸ்து பூமியில் மனிதனாக  வந்தார். 

அவர் ஒரு மிருகத்தைப்போல அடிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இதனை "ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்." ( எபிரெயர் 13 : 11, 12 ) என்கின்றார் எபிரேய நிருப ஆசிரியர்.

இப்படி "இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்." ( எபிரெயர் 10 : 10 ) இதுவே உண்மை; இதுவே கிறிஸ்தவ விசுவாசம்.

அன்பானவர்களே, இந்தச் சிலுவை பற்றிய உபதேசமே நம்மை மீட்கமுடியும். இதனைப் பைத்தியமான கட்டுக்கதை என்று கூறுவோமானால் நாம் கெட்டு அழிவோம். இதனையே இன்றைய தியான வசனத்தில் நாம் "சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." என்று வாசிக்கின்றோம்.

இதனை நாம் ஏற்றுக்கொள்ளுமோது நமது  வாழ்க்கை மாறுதலடைகின்றது. நாம் பாவத்தை மேற்கொள்ளும் பெலனடைகின்றோம். ஆம், "இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." 

புராணக்  கட்டுக்கதைகளைப் போன்றதல்ல இந்த உண்மை. விசுவாசிக்கும் எந்த மனிதனும் தனது வாழ்வில் இதனை அனுபவப்பூரவமாக உணர்ந்துகொள்ளலாம்.  "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்." ( யோவான் 8 : 32 ) என்று இயேசு கிறிஸ்து கூறியபடி சிலுவை பற்றிய சத்தியமே நமக்கு விடுதலை அளிக்கக்கூடியது. இந்த உண்மையினை வாழ்வில் தங்களது சொந்த அனுபவமாக்குவதும் அதனைப் பிறருக்கு  அறிவிப்பதுமே  ஒவ்வொருக் கிறிஸ்தவனின் கடமை. 

காரணம், நாம் இப்படி இந்தச் சத்தியத்தை அறிவிக்கும்போதுதான் தங்களது சுய ஞானத்தில் தேவனைத் தேடி அலையும் மக்கள் மெய்யான தேவனைக் கண்டுபிடிக்க முடியும். "எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று." ( 1 கொரிந்தியர் 1 : 21 )

இதனை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் "சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது," என்று கூறியுள்ளபடி  இதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நமது ஆத்துமா கெட்டு அழிவதும் ஏற்றுக்கொண்டால் நாம்  இரட்சிக்கப்பட்டு தேவபெலனடைவதும்  சத்தியமாய் இருக்கிறது. 

"நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்." ( 1 பேதுரு 2 : 24 )

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,135                                         💚 மார்ச் 19, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்." ( எபிரெயர் 5 : 8 - 10 )

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பிரதான ஆசாரியர்கள் மட்டுமே ஆசரிப்புக்கூடாரத்தின் மகாபரிசுத்தஸ்தலதினுள் நுழைய முடியும். அதுவும் மிருகங்களின் இரத்தத்தால் தங்களது பாவங்களைக் கழுவி சுத்திகரித்தபின்னரே அப்படி நுழைய முடியும்.  ஆனால் இன்று பரலோகத்திலுள்ள மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொள்ளும் நாம் அனைவருமே நுழையலாம். அதற்கான வழியை இயேசு கிறிஸ்து தனது பாடு, மரணம், உயிர்த்தெழுதல் மூலம் உருவாக்கியுள்ளார். 

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மெல்கிசேதேக்கின் முறைமையின்படி தேவனால் தலைமை ஆசாரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி தலைமை ஆசாரியனாக தேவனால் நியமிக்கப்பட காரணமாக இருந்தவை என்னென்ன என்பதனை இன்றைய வசனம் விளக்குகின்றது.

பெருமையில்லாமல் தன்னைத் தாழ்த்தி பாடுபடுதல், கீழ்ப்படிதல் அதன் மூலம் பூரணமடைதல் எனும் காரியங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.  அதாவது அவர் தேவனுடைய குமாரன்; தேவனுக்கு நிகரானவர். ஆனால் அப்படியிருந்தும் பிதாவின் சித்தத்துக்குத் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்துக் கீழ்ப்படிந்தார். 

"அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்." ( பிலிப்பியர் 2 : 6 - 8 )

இப்படி அவர் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற நமக்கு  நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார். அன்பானவர்களே, எனவே கிறிஸ்துவை நாம் பின்பற்றவிரும்பினால் அவரைப்போன்ற கீழ்ப்படிதல் நமக்கு வேண்டும். தேவ வசனங்களுக்கும் தேவ சத்தத்துக்கும் நாம் கீழ்படியவேண்டும். உலகினில் நமக்கு வரும் துன்பங்களை முறுமுறுப்பின்றி சகிக்கவேண்டும். 

எகிப்திலிருந்து மோசேயால் கானானை நோக்கி வழிநடத்தப்பட்ட இஸ்ரவேலர்கள் பலர் அழிந்துபோக அவர்களது முறுமுறுப்பே காரணமாக இருந்தது. எனவேதான் "அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள்." ( 1 கொரிந்தியர் 10 : 10 ) என்று அறிவுறுத்துகின்றனர் பவுல் அப்போஸ்தலர். 

இப்படிக்  கீழ்ப்படிதல், துன்பங்களை முறுமுறுப்பில்லாமல் சகித்தல் வழியாக நாம் ஆவிக்குரிய வாழ்வில் பூரணமடைகின்றோம். கிறிஸ்து பூரணமடையவே இவைகள் தேவையாக இருந்ததென்றால் நமக்கு இவை எவ்வளவு அதிகத் தேவையாக இருக்கின்றன!!

இப்படி நாம் கீழ்ப்படியவும் துன்பங்களைச் சகிக்கவும் நமது மனித  பலத்தால் முடியாது என்பதால்தான் இயேசு கிறித்து நமக்கு பரிசுத்த ஆவியானவரை வாக்களித்து அதனைத் தந்துள்ளார். இந்த ஆவியானவரை நாம் வாழ்வில் பெற்றுக்கொள்ளவேண்டும். "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப்பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்" ( அப்போஸ்தலருடைய நடபடிகள் 1 : 8 ) என்று இயேசு கிறித்து கூறவில்லையா? 

ஆம் அன்பானவர்களே, "பிரதான ஆசாரியர்" என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்ட  கிறிஸ்துவே நம்மைப் பிதாவை நோக்கி வழிநடத்துகின்றவராக இருக்கின்றார். அந்தக்  கிறிஸ்துவைப்போல பாடுகளை சகிப்பதற்கும் கிறிஸ்துவுக்குச் சாட்சியாக நாம் வாழ்வதற்கும் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் நமக்குத் தேவையாய் இருக்கின்றது. எனவே ஆவியானவரின் அபிஷேகத்துக்கு வேண்டுதல் செய்வோம். மெய்யான கிறிஸ்தவ வாழ்வு வாழ அவரே நமக்கு உதவுவார். அப்போது நாமும் நமது பிரதான ஆசாரியரான கிறிஸ்துவைப்போல மகாபரிசுத்த பிதாவின் அண்டையில் சேரமுடியும்.

தேவ செய்தி :- சகோ. எம். ஜியோ பிரகாஷ்                                                   தொடர்புக்கு:- 96889 33712

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,136                                         💚 மார்ச் 20, 2024 💚 புதன்கிழமை 💚

"மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" ( மாற்கு 8 : 36,37 )

உலகத்தை ஆதாயப்படுத்துதல் என்பது உலக அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்லது உலக மக்களது இருதயங்களைக் கவர்ந்துகொள்வது என்று பொருள்படும். ஒருவர் தனது வீரத்தால் இந்த உலக அதிகாரத்தைக் கைப்பற்றலாம். பல நாடுகளையும் தனது அதிகாரத்தின்கீழ் கொண்டுவரலாம். இப்படிக் கொண்டுவருவது உலகை ஆதாயப்படுத்துவது. 

மேலும், தங்களுக்கு இருக்கும் திறமையால் உலக மக்களது இருதயத்தைக் கவர்ந்துகொள்ளலாம். பலகோடி ரசிகர்களைத் தங்களுக்காக ஆதாயமாக்கலாம். இதுவும் உலகை ஆதாயப்படுத்துவதுதான்.  

உலகத்தை இப்படி ஆதாயப்படுத்த முயன்ற பலர் அழிந்து போயுள்ளனர். தங்களது ஜீவனை நஷ்டப்படுத்தியுள்ளனர். உலகினை தங்களது பலத்தால் அடிமைப்படுத்த நினைத்த நெப்போலியன், ஹிட்லர் போன்றவர்களது முடிவு நாம் அறிந்ததே. இவர்களது வாழ்க்கை தங்களது ஆத்துமாவை அழிவுக்குநேராகக் கொண்டுசென்றது. 

அமெரிக்கத் திரையுலகை தனது கவர்ச்சியால் மயக்கி கட்டிப்போட்டவள்தான் மெர்லின் மன்றோ. மொத்த உலக இளைஞர்களும் இவளது கவர்ச்சியான நடிப்புக்கும் இவளது ஆபாச பேச்சுக்கும் அடிமையாக  இருந்தனர். ஆம் அவள் தனது ஆபாசத்தால் உலக மக்களது இருதயங்களைக் கவர்ந்துகொண்டாள்; ஆதாயப்படுத்திக்கொண்டாள். ஆனால் 1962 ஆம் ஆண்டு தனது 36 வது வயதில் தற்கொலைசெய்து மடிந்தாள். 

இன்றைய தியான வசனம் கூறுகின்றது,  "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?"

அன்பானவர்களே, இன்றும் இதுபோல தங்களது நடிப்புத் திறமையாலும் பாடல் பாடும் திறமை மற்றும்  நடனத் திறமையினாலும், எழுத்துத் திறமையினாலும் பலர் தங்களுக்கென ஒரு கூட்டம் மக்களை ஆதாயப்படுத்திக் கொண்டுள்ளனர்.  இதனால் பெருமைகொண்டு மற்றவர்களை அற்பமாக எண்ணிச்  செயல்படுகின்றனர். ஆனால் தங்களது சொந்த ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அதனால் என்ன லாபம்? 

பரலோகராஜ்யத்தின் மகிமைக்குமுன் உலக மகிமை அற்பமானதும் அழிந்துபோகக்கூடியதுமாகும்.  " பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக்கொள்ளுகிறான்." ( மத்தேயு 13 : 44 ) என்றார் இயேசு கிறிஸ்து.

நமக்குள்ள திறமைகள், பலம் இவற்றை உலகத்தை ஆதாயப்படுத்தப்  பயன்படுத்தாமல் இவற்றை இழந்தாலும் பரவாயில்லை பரலோகராஜ்யத்தை நாம் இழந்துவிடக்கூடாது என்று செயல்படவேண்டும்.  நிலத்தில் மறைந்துள்ள புதையலைக் கண்ட மனிதன் தனக்குள்ள எல்லாவற்றையும் விற்று அந்த நிலத்தைக் கொண்ட மனிதனைப்போல நாமும் செயல்படவேண்டியது அவசியம்.  நமது திறமைகள் பரலோகராஜ்யத்தை நாம் அடைந்திடத் தடையாக இருக்குமானால் அவற்றை உதறித் தள்ளி நமது ஆத்துமாவை நாம் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.  

ஆம் அன்பானவர்களே, உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், நமது ஜீவனை நஷ்டப்படுத்தினால் நமக்கு லாபம் என்ன?  உலக பெருமைகொண்டு  கவர்ச்சியில் மக்களைத் தங்கள்பால் ஈர்க்கத் துடிக்கும் திரையுலகினர் மனம் மாறிட அவர்களுக்காக ஜெபிப்போம்.  

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,137                                         💚 மார்ச் 21, 2024 💚 வியாழக்கிழமை 💚

"இனிச்சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்." ( ஏசாயா 60 : 19 )

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது வாழ்வில் வரும்போது நமது வாழ்க்கை ஒளியுள்ளதாக மாறுகின்றது. கர்த்தர் நமது வாழ்வில் தரும் ஒளியானது ஒருபோதும் மறையாமல் நிரந்தர ஒளியாக இருக்கும். சூரியன் சந்திரன் இவை உலகிற்கு ஒளிதந்தாலும் அவைகளுக்கு குறிப்பிட்ட காலங்கள் உண்டு. சூரியன் இரவில் ஒளிதராது; சந்திரன் பகலிலும் அமாவாசை காலங்களிலும் ஒளிதராது.   எனவே, இவைகளை ஒப்பிட்டு இன்றைய வசனம் கர்த்தரது நிரந்தர ஒளியை நமக்குக்  குறிப்பிடுகின்றது. 

மேலும் அடுத்த வசனம் கூறுகின்றது, "உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோகும்." ( ஏசாயா 60 : 20 ) இன்று பல்வேறு துக்கங்களாலும் பிரச்சினைகளாலும் நமது வாழ்க்கை இருளானதாக இருக்குமானால் கர்த்தர் நமது வாழ்வில் வரும்போது சூரியனும் சந்திரனுமாக இருக்கும் அவர் என்றும் மறையாமல் நமக்கு ஒளிதருவார். 

எனவேதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விபரிக்கும்போது "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது." ( மத்தேயு 4 : 15, 16 ) என ஏசாயாவின் தீர்க்கதரிசன வசனங்களை மத்தேயு நற்செய்தியாளர் மேற்கோள்காட்டி குறிப்பிடுகின்றார். 

யோவான் நற்செய்தியாளரும், "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை." ( யோவான் 1 : 4, 5 ) என்கின்றார். 

அன்பானவர்களே, நமது வாழ்க்கை எவ்வளவு இருளானதாக இருந்தாலும் கிறிஸ்து தரும் ஒளியை அந்த இருள் மேற்கொள்ள முடியாது. எனவே இந்த ஒளியான கிறிஸ்துவை நமது வாழ்வில் நாம் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. அப்போஸ்தலரான பவுல் உட்பட, இன்று புனிதர்களாக கருதப்படும் பலர் ஒருகாலத்தில் இருளின் அந்தகார பிடியினுள் இருந்தவர்கள்தான். ஆனால் கிறிஸ்துவின் ஒளியால் இன்று இவர்கள் நமக்கு முன்மாதிரியான சாட்சிகளாக இருக்கின்றார்கள். 

நீதியுள்ள வாழ்க்கை வாழும்போது நாமும் கிறிஸ்துவைப்போல ஒளிகொடுப்பவர்களாக மாறுகின்றோம். இதனையே இயேசு கிறிஸ்து, "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது." ( மத்தேயு 5 : 14 ) என்று கூறினார். மட்டுமல்ல, பிதாவின் ராஜ்யத்திலும் நாம் ஒளிகொடுப்பவர்களாக இருப்போம் என்று இயேசு கிறிஸ்து கூறினார். "அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்." ( மத்தேயு 13 : 43 )

அன்பானவர்களே, நமது பாவங்களை மறைக்காமல் இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டு மனம்திரும்பும்போது கிறிஸ்துவின் ஒளி நம்மில் பிரகாசிக்கும். அப்போது இன்றைய வசனம் கூறுவது நமது வாழ்வில் நிறைவேறும். ஆம், அப்போது சூரியன் நமக்கு வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் நம்மைப்  பிரகாசியாமலும், கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமும், மகிமையுமாயிருப்பார். நமது வாழ்வில் சூரியன் அஸ்தமிப்பதுமில்லை; சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; நமது துக்கநாட்கள் முடிந்துபோகும்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,138                                         💚 மார்ச் 22, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." ( சங்கீதம் 119 : 105 )

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மெய்யான ஒளியாக இருக்கின்றார் என்பதைக்குறித்து நேற்றைய தியானத்தில் பார்த்தோம். அந்த மெய்யான ஒளியிடம் நாம் அடைக்கலம்புகும்போது நமது ஒளி என்றும் குறைவில்லாமல் இருக்கும் என்றும் பார்த்தோம். இன்றைய தியான வசனம் கூறுகின்றது, தேவன் மட்டுமல்ல அவரது வார்த்தைகளும் நமக்கு ஒளியாக இருந்து வழிகாட்டுகின்றன. ஏனெனில் தேவனது வார்த்தைகளே தேவனாய் இருக்கின்றது. 

இதனையே யோவான் நற்செய்தியாளர் "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ( யோவான் 1 : 1 ) என்று கூறுகின்றார்.

வயல்வெளிகளில் வேலைசெய்பவர்கள் அதிகாலையில் இருட்டோடு எழுத்து செல்லும்போது கையில் ஒளிக்காக டார்ச் லைட் கொண்டு செல்வார்கள். அந்த வெளிச்சம் வயல் வரப்புகளில் கிடக்கும் கொடிய பாம்பு, தேள்  போன்றவைகளை அடையாளம்காட்டி அவர்கள் பாதுகாப்பாகச் செல்ல உதவுகின்றது. 

இதுபோலவே நமது வாழ்க்கையிலும் தேவ வசனங்கள் நமக்கு ஒளிகொடுத்து உதவுகின்றன. இருளான வேளைகளில், வாழ்வில் இனி நமக்கு விடுதலையே இல்லை எனும் சூழ்நிலைகளில் தேவ வசனம் நமக்கு ஒளிதந்து நம்மை மீட்கின்றது. ஆம் அன்பானவர்களே இதனை வாழ்வில் அனுபவித்த சங்கீத ஆசிரியர் தான் "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." என்று கூறுகின்றார். 

மிகுந்த வட்டிக் கடனாலும், குடும்ப உறுப்பினர்களின் கொடிய வியாதியினால் மனம் சோர்வுற்று செலவுக்கு பணமில்லாமல் இனி நாம் செத்துத் தொலைவதே நல்லது என முடிவெடுத்து வேதனையுடன் நடந்துச்சென்ற கிறிஸ்துவை அறியாத பிற மார்க்கத்துச் சகோதரன் ஒருவர் ஒரு ஆலயச் சுவரில் எழுதப்பட்டிருந்த தேவ வசனத்தைப் பார்த்தார். அந்த வசனம்:-  "நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்." ( ஏசாயா 41 : 10 ) என்று  கூறியது. அது தேவனே அவரிடம் பேசியதுபோல இருந்தது.

அன்பானவர்களே, இந்த வசனம் இருளான அவரது வாழ்வின் பாதைக்கு ஒளியாக மாறியது. இருதயம் நொறுங்கி தேவனை நோக்கிக் கூப்பிட்டார். தேவன் அவரது நிலைமையினை அதிசயிக்கத்தக்கதான ஒன்றாக மாற்றினார். அவரது சாட்சி பலருக்கும் ஒளியாகி அவரது இனத்து மக்கள் பலரை கிறிஸ்துவண்டைக்குக் கொண்டு சேர்த்து.  பல கிறிஸ்தவர்களுக்கும் அவர் கூறிய சாட்சி தேவ வசனங்களை அதிகமாக நம்பிட வழிசெய்தது. 

இன்றைய வசனத்தின் முந்தய வசனம் கூறுகின்றது, "உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்." ( சங்கீதம் 119 : 104 ) ஆம் அன்பானவர்களே, பாதைக்கு ஒளியாக இருக்கும் தேவ வசனங்கள் நம்மைஉணர்வடையச் செய்து பொய்வழியை வெறுக்கச் செய்கின்றது. 

நாம் கிறிஸ்துவுக்குள் புதுவாழ்வு பெற்றுள்ளோம் என்பதற்கு ஆதாரமே இதுதான். முதலாவது கிறிஸ்துவின் வசனம் நமது வாழ்வை மாற்றுகின்றது, இருளான நமது ஆத்துமாவுக்கு ஒளிதருகின்றது. தொடர்ந்து நாம் அவரது கட்டளைகளின்படி வாழவும் பொய்யான வழிகளை அருவெறுக்கவும் செய்கின்றது. வாழ்கைக்குத் தீபமாக விளங்கும் தேவ வசனங்களை தினமும் வாசித்து தியானிப்போம். நமது உலக வாழ்க்கையும் ஆன்மீக வாழ்க்கையும் பிரமிக்கத்தக்க மாற்றமடையும். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,139                                         💚 மார்ச் 23, 2024 💚 சனிக்கிழமை 💚

"உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 1 )

சர்தை சபையின் தூதனுக்கு என்று கூறப்பட்டுள்ள இன்றைய தியான வசனம் நம் அனைவரையும் நடுங்கச்செய்யும் வார்த்தைகளாகும். நமது செயல்பாடுகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கும் தேவன் நம்மைப்பார்த்து இப்படிக் கூறுவாரானால் எப்படியிருக்கும்?

நமது ஆவிக்குரிய செயல்பாடுகளைக்குறித்து நாம் அதிக கவனமுடன் இருக்க இன்றைய வசனம் நம்மை எச்சரிக்கின்றது. நம்மைப்பொறுத்தவரை நாம் செய்வதும், நமது ஆவிக்குரிய செயல்பாடுகளான ஜெபங்களும், வேதவாசிப்பும், ஜெபக்கூட்டங்கள் ஆராதனைகளில் கலந்துகொள்வதும்  மேன்மையானவைகளாக இருக்கலாம். ஆனால், தேவனது பார்வை வித்தியாசமானது. அவர் நமது மேற்படி செயல்களை மட்டும் பார்த்துத் தீர்ப்பிடுவதில்லை. நாம் செய்யும் செயல்களின் பின்னணி, செய்யப்படும் செயலின் நோக்கம் இவைகளையும் அவர் பார்க்கின்றார். 

எனவேதான் தொடர்ந்து அவர் கூறுகின்றார், "நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை." ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 2 ) நமது செயல்பாடுகள் மற்றும் உலக காரியங்களில் நாம் நடந்துகொள்ளும் முறைகள் இவைகளை அவர் நிறைவுள்ளவையாகக் காண முடியவில்லையானால் அவரது பார்வையில்  நாம்  உயிருள்ளவர்களென்று பெயர்பெற்றிருந்தாலும் செத்தவர்களாக இருப்போம். 

எனவே, இன்றைய தியான வசனம் வெறுமனே நல்லவை செய்து நாம் தேவனைத் திருப்திப்படுத்த முடியாது என்பதனைக் காட்டுகின்றது. நல்லவை செய்யுமுன் நாமே நல்லவர்களாக மாறவேண்டியது அவசியமாய் இருக்கின்றது. இன்று உலக மக்களில் பலரும் பெரிய செல்வந்தர்களும், திரையுலக பிரபலஸ்தர்களும் பல நல்ல செயல்களை செய்கின்றனர். ஆனால் தேவன் ஒருவர் செய்யும் நற்செயல்களைவிட அந்தச் செயலைச் செய்யும் மனிதர்களது தனிப்பட்ட வாழ்கையினைப் பார்க்கின்றார். 

இன்றைய வசனத்தைத் தொடர்ந்து தேவன் கூறுகின்றார், "ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்". ( வெளிப்படுத்தின விசேஷம் 3 : 3 ) அதாவது தேவ வசனத்தை கேட்டு, கேட்டவைகளைக் கைக்கொண்டு மனம்திரும்பிய வாழ்க்கை வாழவேண்டும் என்கின்றார் தேவன். இல்லாவிட்டால் நாம் நினையாத வேளையில் அழிவு வரும் என்று எச்சரிக்கின்றார். 

எனவே, பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்துடன் தேவனோடு தனிப்பட்டத் தொடர்புடன் நாம் வாழவேண்டியது அவசியமாகும். எப்போதும் நமக்குள் தேவனைக்குறித்த பயமும் நமது ஆவிக்குரிய வாழ்கையினைக்குறித்த எச்சரிக்கையும் இருக்கவேண்டியது அவசியம். 

"நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்." என்று கூறிய இயேசு "ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". ( யோவான் 8 : 51 ) என்றும் கூறினார். இதிலிருந்து நாம் அவரது வார்த்தைகளை வாழ்வாக்கும்போது மட்டுமே உயிருள்ளவர்களாக இருப்போம் என்பது தெளிவாகின்றது. 

எனவே அன்பானவர்களே, தேவனது வார்த்தைகளைக் கேட்போம், அவற்றை வாழ்வாக்குவோம்; மனம்திரும்பிய வாழ்க்கை வாழ நம்மை ஒப்புக்கொடுப்போம். அப்போது மட்டுமே தேவனது பார்வையில் நாம் உயிருள்ளவர்களாக இருப்போம். அப்போது மட்டுமே நமது நற்செயல்களையும் தேவன் அங்கீகரிப்பார். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,140                                         💚 மார்ச் 24, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதனால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்." ( சங்கீதம் 36 : 7 )

மகா பரிசுத்த தேவனின் முன்னிலையில் பரிசுத்தமானவைகளே சென்று சேரமுடியும். மனிதர்கள் நாம் இயல்பிலேயே நம்முள்  பாவ சுபாவங்கள் கொண்டவர்களாக இருக்கின்றோம். எனவே தேவனது சந்நிதியில் சேரவேண்டுமானால் நாம் தூய்மையானவர்களாக இருக்கவேண்டியது அவசியம். "தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்." ( வெளிப்படுத்தின விசேஷம் 21 : 27 ) என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது நாம் பிதாவின் சந்நிதியில் சென்று சேரவேண்டுமானால் ஆட்டுக்குட்டியான அவரது குமாரனாகிய இரத்தத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாகி தூய்மையடையவேண்டியது அவசியம். அன்பானவர்களே, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதற்காகவே கல்வாரியில் இரத்தம் சிந்தி மரித்தார். இப்படி மரித்ததனால் "அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்." ( எபேசியர் 2 : 5 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். 

இதனையே தாவீது இன்றைய தியான வசனத்தில், "உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதனால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்." என்று கூறுகின்றார்.  ஆம் அன்பானவர்களே, அவரது கிருபையால்தான் நாம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவரது செட்டைகளின் நிழலில் சென்று சேரும் வாய்ப்பினைப் பெற்றுள்ளோம். 

இது மனித முயற்சியால் உண்டானதல்ல; மாறாக இந்த வாய்ப்பு கர்த்தரது கிருபையால்தான் நமக்குக் கிடைக்கின்றது. "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு" ( எபேசியர் 2 : 8 ) என்று கூறுகின்றார் அப்போஸ்தலரான பவுல். எனவேதான் சங்கீத ஆசிரியரும் இன்றைய வசனத்தில், உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! என்று மனம் மகிழ்ந்து கூறுகின்றார். 

மட்டுமல்ல, இந்த கிருபையினால் உன்னதங்களில் பிதாவின் சந்நிதியில் நாம் கிறிஸ்துவோடுகூட அமரக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுள்ளோம். "கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்." ( எபேசியர் 2 : 6, 7 )

எனவே அன்பானவர்களே, நாம் எந்த வேளையிலும் கிறிஸ்துவின் கிருபையை இழந்திடாமல் காத்துக்கொள்ளவேண்டும். மாயையான உலக காரியங்களுக்கு முன்னுரிமைகொடுக்காமல் இருக்கவேண்டும்.  "பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்." ( யோனா 2 : 8 ) என்று யோனா கூறுகின்றார். தேவனுடைய மகா மேன்மையான கிருபையினை உலகக் கவர்ச்சியால் போக்கடிக்காமல் நம்மைக் காத்துக்கொள்வோம். 

அப்போது, சங்கீதக்காரர் கூறுவதுபோல நாமும் "தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது!" என்று கூறவும் அவரது செட்டைகளின் நிழலிலே வந்தடைடையவும் முடியும். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,141                                         💚 மார்ச் 25, 2024 💚 திங்கள்கிழமை 💚

"நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப் பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை." ( ரோமர் 3 : 21, 22 )

இஸ்ரவேல் மக்கள் கடைபிடிக்கவேண்டிய கட்டளைகளை தேவன் மோசே மூலம் கொடுத்தார். பத்துக் கட்டளைகளைத் தவிர மேலும் பல கட்டளைகளாக 613 கட்டளைகள் அடங்கியதுதான் நியாயப்பிரமாணம். மனிதர்கள் நீதியாக வாழ்வதற்காக இவை கொடுக்கப்பட்டன. ஆனால் அப்போஸ்தலரான பவுல், இந்த நியாயப்பிராமாணக் கட்டளைகள்  இல்லாமலேயே தேவ நீதி கிறிஸ்துவினால் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகின்றார். 

அதாவது, பத்துக்கட்டளைகள் முதலான கட்டளைகள் இல்லாமலேயே கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொள்ளும் ஒருவன் இவைகளைக் கடைபிடிப்பான் என்று கூறுகின்றார். அதனையே, "நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப் பட்டிருக்கிறது" என்கின்றார். "அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை." என்கின்றார். 

அதாவது, கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொண்டு ஒருவன் பாவ மன்னிப்பினைப் பெறும்போது அவனுக்குள் கிறிஸ்துவின் ஆவியானவர் வந்துவிடுகின்றார். அந்த ஆவியானவரே அவனை தேவனுடைய நீதிப்பாதையில் நடத்துவார். அந்த மனிதனுக்கு கட்டளைகள் தேவையில்லை. ஆம், கட்டளைகள் இல்லாமலேயே அவன் கட்டளைக்குட்பட்டு நடப்பான். 
 
"ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம்." ( ரோமர் 3 : 28 ) என்கின்றார். 

கிறிஸ்துவின் நீதிப்பிரமாணம் நியாயப்பிரமாண கட்டளைகளைவிட மேலானது. அதனை கிறிஸ்து பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். "........என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டுள்ளதே, நான் உங்களுக்குத் சொல்கின்றேன்" என்று குறிப்பிட்டு அவர் பல பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளுக்குப் புது மெருகேற்றினார். (காண்க;- மத்தேயு 5 : 21, 28, 32, 34, 39, 44. முதலானவைகள்) 

எனவே யூதர்கள் அவர் நியாயப்பிரமாண கட்டளைகளுக்கு எதிரி என்று எண்ணினார்கள். அவர்களுக்கு இதனைத் தெளிவுபடுத்தவே இயேசு கிறிஸ்து, தனது மலைப் பிரசங்கத்தில்,  நியாயப்பிரமாணத்தையாகிலும்  தீர்க்கதரிசனங்களையாகிலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்." ( மத்தேயு 5 : 17 ) என்று குறிப்பிடுகின்றார். 

ஆம் அன்பானவர்களே, நியாயப்பிரமாண கட்டளைகளை வரட்டுத்தனமாகக் கடைபிடிப்பதால் மட்டும்  நாம் கிறிஸ்துவுக்கு ஏற்றவர்கள் ஆகமுடியாது. கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் நமது உள்ளங்கள் மறுபிறப்படையும்போது மட்டுமே நாம் நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழ முடியும். இப்படிக் கூறுவதால் நியாயப்பிரமாண கட்டளைகளை நாம் அற்பமாக எண்ணுகின்றோம் என்று பொருளல்ல; மாறாக கிறிஸ்துவின்மேல் விசுவாசம்கொள்ளும்போதுதான் அவைகளை நாம் நிலை நிறுத்துகின்றோம். 

இதனையே, "அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே." ( ரோமர் 3 : 31 ) என்கின்றார் அப்போஸ்தலரான பவுல். கிறிஸ்துவுக்கேற்ற மக்களாக வாழ்வதற்கு கட்டளைகளல்ல, அவர்மேல்கொள்ளும் விசுவாசமே முக்கியமாக இருக்கின்றது. இல்லாவிட்டால் கிறிஸ்தவமும் உலகிலுள்ள பிற மதங்களைப்போல தனிக்  கட்டளைகளைக்கொண்ட ஒரு சாதாரண மதமாகவே இருக்கும். ஆனால், கிறிஸ்தவம் மதமல்ல; கிறிஸ்து காட்டிய ஒரு மார்க்கம்.

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,142                                         💚 மார்ச் 26, 2024 💚 செவ்வாய்க்கிழமை 💚

"அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை." ( எரேமியா 5 : 24 )

தேவனே ஏற்ற காலத்தில் மழையையும் பனியையும் பூமியில் அனுப்புகின்றார். பயிர்களின் அறுப்புக்காலங்களையும் அவரே ஏற்றவாறு நியமிக்கின்றார். ஆனால் பெரும்பாலான மனிதர்கள் இவை எதையும் தங்கள் மனதில் சிந்திப்பதில்லை. அவர்கள் தங்கள் உழைப்புதான் விளைச்சலின் ஆசீர்வாதத்தைத் தந்தது என எண்ணிக்கொள்கின்றனர். நாம் எவ்வளவுதான் உழைத்தாலும் தேவனது கரம் இல்லையானால் நமக்கு வெற்றி கிடைக்காது எனும் உண்மையை அவர்கள் உணருவதில்லை.

இன்றைய வசனம் இதனால்தான் கூறுகின்றது, "எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை." அதாவது இந்த ஆசீர்வாதங்களைத் தந்த தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக மக்கள் வாழ்வதில்லை. அவரது கட்டளைகளுக்குப் பயந்து கீழ்படிவதும் இல்லை. (எல்லோரும் இப்படி இருப்பதில்லை ஆனால் பெரும்பான்மையோர் இப்படியே இருக்கின்றனர்.)

பல வேளைகளில் புயலும் மழையும் ஏற்பட்டு பயிர்களின் விளைச்சல் அழிவுறுவதை நாம் பார்க்கின்றோம். விவசாயிகள் தங்கள் முதலீடு அழிந்ததையெண்ணிக் கலங்குகின்றனர். சிலர் கடவுளை சபிக்கின்றனர். சிலவேளைகளில் விவசாயிகள் தற்கொலைசெய்து தங்களை மாய்த்துக்கொள்கின்றனர்.

விவசாயம் மட்டுமல்ல, நாம் செய்யும் அனைத்துச் செயல்களிலும் நம்மோடு தேவனது கரம் இருந்தால் மட்டுமே நாம் ஆசீர்வாதம் பெற முடியும். "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்." ( நீதிமொழிகள் 10 : 22 ) என்று வேத வசனம் கூறுகின்றது. தேவனது ஆசீர்வாதம் என்பது பரிபூரண ஆசீர்வாதமாக இருக்கும்; அதில் வேதனை இருக்காது.

சிலரது வாழ்வில் அனைத்துச் செல்வங்களையும் அவர்கள் பெற்றிருந்தாலும் வீட்டில் நிம்மதி இருக்காது. காரணம், செல்வத்தின் திரட்சி மனநிம்மதியைத் தருவதில்லை. எனவேதான் வேதம் கூறுகின்றது, "தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன்பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்."( பிரசங்கி 5 : 19 )

அன்பானவர்களே, "சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்." (  நீதிமொழிகள் 15 : 16 ). எனவே தேவன் தரும் ஈவுகள் எவ்வளவு குறைவானதாக இருந்தாலும் அவருக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போம். நமக்கு வாழ்வில் மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, நம்மைத் தற்காக்கிற தேவனாகிய கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போம்; பயந்திருப்போம்; அப்போது அவர் நம்மை உண்மையான மகிழ்ச்சியால் நிரப்புவார்.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,143                                         💚 மார்ச் 27, 2024 💚 புதன்கிழமை 💚

"மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது." ( எபேசியர் 5 : 3 )

தேவன் அருவெறுக்கும் பாவங்களில் முதன்மையானது விபச்சாரம், வேசித்தனம் மற்றும் பாலியல் தொடர்பான பாவங்களும் சிலைவழிபாடும் தான். சிலைவழிபாடு என்று கூறும்போது நாம் அளவுக்கதிகமான  பொருளாசையும் சேர்த்தே கூறுகின்றோம். எகிப்தியர்களை தேவன் வெறுத்து அவர்களுக்குமுன் இஸ்ரவேலரை உயர்த்தக் காரணம் எகிப்தியரின் இத்தகைய பாவச் செயல்களே. இதனை நாம் லேவியராகமத்தில் வாசிக்கலாம். (லேவியராகமம் 20 ஆம் அதிகாரம்)

அவர்களது பல்வேறு பாலியல் பாவங்களைக் குறிப்பிட்டு கூறி தேவன் கூறுகின்றார், "நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்." ( லேவியராகமம் 20 : 23 ) ஆம் இத்தகைய பாவங்களில் அவர்கள் ஈடுபட்டதால் அவர்களை அருவெறுத்தேன் என்கின்றார் தேவன். 

எனவேதான் அப்போஸ்தலரான பவுல் தொடர்ந்து எழுதும்போது, "விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே." ( எபேசியர் 5 : 5 ) என்கின்றார். 

பொருளாசை சிலைவழிபாட்டுக்கு இணையான பாவமாக இருக்கின்றது. சிலை வழிபாடு என்பது ஒரு உருவத்தைச் செய்து அதனைத் தேவனாக வழிபடுவது. பொருளாசை என்பது அதுபோல பொருள், பணம் இவற்றை தேவனுக்கு இணையாகக் கருத்துவதாகும். 

"இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது." என்று பவுல் கூறுவதிலிருந்து அவர் இவற்றுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார் என்பது தெளிவாகின்றது. ஆனால் நமது நாடு எப்படி இருக்கின்றது?

இந்தியா மிகப்பெரிய ஆன்மீக நாடு என்று பலர்  நமது நாட்டைக் குறித்துக் கூறிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தேவன் விரும்பும் நற்செயல்கள் எதுவுமே இங்கு நடக்கவில்லை.   சிலை வழிபாடுகளும், விபச்சாரங்களும், வேசித்தனங்களும் பொருளாசையால் உந்தப்பட்டுச் செய்யப்படும் கொலைகளும் நமது நாட்டில் நிறைந்திருப்பதை தினசரி பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் பறைசாற்றுகின்றன. இவை அன்று எகிப்தியர் செய்த அருவெறுப்பான செயல்களுக்கு ஒத்திருக்கின்றன. 

"நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன்." என்று எகித்துக்கு எதிராகக் கூறியதுபோலவே தேவன் நமது நாட்டைக்குறித்தும் கூறுவார். 

ஆனால், கிறிஸ்தவ ஊழியர்களில் ஒருகூட்டத்தினர் இவை எதையுமே எண்ணாமல் ஆசீர்வாத உபதேசத்தில் மூழ்கி மீண்டும் மீண்டும் பொருளாசை எனும் விக்கிரக ஆராதனைக்கு நேராக மக்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர். ஒரே வேதாகமத்தைத்தான் தேவன் நமக்குக் கொடுத்துள்ளார். ஆனால் வசனங்களுக்கு ஆவியானவர் தரும் விளக்கத்தை அறியாமல் சுய அறிவு போதனையால் கிறிஸ்தவ  ஊழியங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

அன்பானவர்களே எச்சரிக்கையாயாக இருப்போம். "விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லை." ( எபேசியர் 5 : 5 ) என்கின்றார் பரிசுத்தரான கர்த்தர். மட்டுமல்ல, இத்தகைய பாவங்களால் இருளடைந்துள்ள நமது நாடு கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,144                                         💚 மார்ச் 28, 2024 💚 வியாழக்கிழமை 💚

"கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது." ( சங்கீதம் 33 : 12 )

ஒரு அரசாங்கம் ஒருவரை வெளிநாட்டிற்கு தனது தூதுவராகத் (Ambassador) தேர்வு செய்கின்றது என்றால் அது அவருக்கு ஒரு பெரிய கெளரவம். இப்படி தனது தூதுவரை தேர்வு செய்து பிற நாடுளில் பதவியில் அமர்த்துகின்றது உலக அரசாங்கம். இப்படித் தேர்வு செய்யப்படும் நபருக்கு அந்த நாட்டில் உள்ள அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே செய்யும். பல சலுகைகளும் வழங்கும். ஆனால் அந்த நபர் அரசாங்கத்துக்கு விசுவாசமுள்ளவராக, உண்மையுள்ளவராக இருக்கவேண்டியது அவசியம். இல்லையானால் சட்டப்படி அவர் தண்டிக்கப்படுவர்.

இதுபோலவே தனது பிரதிநிதியாகத் தேவன் தெரிந்துகொண்ட மக்கள்தான் இஸ்ரவேல் மக்கள். உலகினில் பல்வேறு மக்கள் இனங்கள் இருந்தாலும் தேவன் இஸ்ரவேல் மக்களைத் தனது தூதுவர்களாகக் குறிப்பாகத் தேர்வு செய்தார். அது உண்மையிலேயே யூதர்களுக்கு ஒரு மேன்மையான காரியம்தான். அப்போஸ்தலரான பவுல் இதுபற்றி கூறும்போது, "இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே." ( ரோமர் 3 : 2 )

தேவனுடைய வார்த்தைகள் யூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது மேன்மையான காரியம்தான். விலையேறப்பெற்றப் பொருட்களை நம்பிக்கையானவர்களிடம்தான் ஒப்படைப்பார்கள். தேவனும் அதுபோலத் தனது விலையேறப்பெற்ற வார்த்தைகளை யூதர்களிடம் ஒப்படைத்தார். மெய்யாகவே தேவன் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட யூதஜனம் பாக்கியமுள்ளது.

அன்பானவர்களே, இன்றைய உலகினில் வேதம் இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம்கொண்ட நம்மைத்தான் யூதர்கள் என்று குறிப்பிடுகின்றது (ரோமர் -2:28,29). நாம்தான் ஆவிக்குரிய யூதர்கள். எனவே நாம் தான் பாக்கியமுள்ளவர்கள்.

அப்போஸ்தலரான பேதுரு கூறுகின்றார், "நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்." ( 1 பேதுரு 2 : 9 )

ஆனால் இயேசு கிறிஸ்துக் குறிப்பிட்டதுபோல அதிகம் கொடுக்கப்பட்டவனிடம் அதிகம் கேட்கப்படும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. யூதர்கள் தேவனது வார்தைகளைப் பெற்றிருந்தாலும் அவர்கள் தேவனுக்கு விரோதமான பாவம் செய்தபோது தேவன் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தார். பிற ராஜாக்களிடம் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தார். இதுவே இன்றைய ஆவிக்குரிய யூதர்களாகிய நமக்கும் பொருந்தும்.

தனது விலையேறப்பெற்ற இரட்சிப்பை நமக்குத் தந்து நம்மை அலங்கரித்த தேவன் அதனை நாம் காத்துக்கொள்ளத் தவறினால் கடுமையாக நம்மைத் தண்டிப்பார் என்பதனையும் மறந்துவிடக் கூடாது. எனவே நாம் மற்றவர்களைவிட அதிக கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். பெற்றுக்கொண்ட இரட்சிப்பைக் கவனமுடன் காத்துக்கொள்வோம். ஏனெனில், "கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத் தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே". ( சங்கீதம் 96 : 4 ) என்று வேதம் கூறுகின்றது. தேவன் நமக்கு தகப்பனாக இருந்தாலும் அவர் பட்சிக்கிற அக்கினியாகவும் இருக்கின்றார் என்ற உண்மையினை நாம் மறந்துவிடாமல் கவனமுடன் நமது ஆவிக்குரிய வாழ்வைத் தொடர்வோம்.


'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,145                                       💚 மார்ச் 29, 2024 💚 வெள்ளிக்கிழமை 💚

"அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்." ( ஏசாயா 53 : 3 )

இன்றைய தியான வசனத்தை ஏசாயா தீர்க்கத்தரிசி எழுதி சுமார் 2750 ஆண்டுகள் ஆகிவிட்டன. நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தரிசனத்தில் கண்டு அவர் எழுதியவை இந்த வசனங்கள். இதனை நாம் கிறிஸ்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு அனுபவித்த பாடுகளோடு இன்று ஒப்பிட்டுப் பார்க்கின்றோம். ஆனால், அவர் அன்று  அனுபவித்தப் பாடுகளுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும்  யூதர்களைப்போல பலவேளைகளில் நாம் அவரை அசட்டைப்பண்ணி புறக்கணிக்கின்ற நிலைகளுக்கும் இதனை  ஒப்பிடலாம். .  

ஆம், அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மட்டும் அசட்டைப்பண்ணப்படவில்லை. இன்றும்  அசட்டைப் பண்ணப்பட்டவராகவே இருக்கின்றார். கிறிஸ்துவின் போதனைகள் வாழ்வில் கடைபிடிக்கக்கூடிய தன்மை உள்ளவையல்ல என்று கூறும்போது நாம் அவரை அசட்டைபண்ணுகின்றோம். சாட்சிக்கேடான வாழ்க்கை மற்றும்  கிறிஸ்தவ மூல உபதேசத்தை மறுத்து அல்லது அவற்றுக்கு எதிரான சுவிசேஷ அறிவிப்புகள் செய்யும்போது அவரை நாம் அசட்டைபண்ணுகின்றோம்; அல்லது புறக்கணிக்கின்றோம். 

வெறும் சமுதாய மாற்றத்துக்காக ஒரு சமூக சேவகனாக கிறிஸ்து உலகினில் வந்தார் என்று பிரசங்கிக்கும்போது நாம் அவரை புறக்கணித்து அசட்டைப் பண்ணுகின்றோம்.  விடுதலை இறையியல் என்று கூறி கிறிஸ்துவின் ஆன்மீக போதனைகளை திரித்து கம்யூனிச சித்தாந்தங்களோடு ஒப்பிட்டு உபதேசிக்கும்போது,  மனம்திரும்பி கிறிஸ்துவை வாழ்வில் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது நாம் அவரைப் புறக்கணித்து அசட்டைபண்ணுகின்றோம். எல்லாவற்றுக்கும் மேலாக, இவை எவற்றையும் உணராமல் துக்க வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அவருக்காக அழுது புலம்பும்போது நாம் அவரைப் புறக்கணித்து அசட்டைப் பண்ணுகின்றோம். 

இவற்றையே, "அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்" என்று ஏசாயா கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, "அவர் மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்." என்பது இன்றும் நடந்துகொண்டிருக்கின்ற காரியமாக இருக்கின்றது. 

அவர் நமக்காக இரத்தம் சிந்தி மரித்து நித்திய ஜீவனுக்கான வழியினைக் காட்டியதை மறுத்து இன்னும் உலக ஆசீர்வாதங்களுக்காக அவரை நாம் தேடி ஓடும்போது அவர் மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவிப்பவருமாக இருக்கிறார்.  காரணம், நமக்காக ஆத்தும தாகம் கொண்டு இருக்கும் அவரது மெய்யான அன்பை நாம்  எண்ணாமற்போகின்றோம். 

நம்மைப் பரிசுத்தம் பண்ணவே கிறிஸ்து பாடுபட்டு மரித்தார். அவரது இரத்தத்தால் நித்திய மீட்பினை ஏற்படுத்தினார்.  நமது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டுமானால் அவற்றைச் சுமந்து நாம் அவரிடம் சென்று சேரவேண்டும். இதனைச் செய்யாமல் ஆண்டுதோறும் வெறும் ஆராதனைகளும் வெற்றுச்  சடங்கு ஆச்சாரங்களையும் கடைபிடித்துக்கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. அப்படிச்செய்வது அவரைப் புறக்கணித்து அசட்டைப் பண்ணுவதையே குறிக்கும். 

எனவேதான் எபிரேய நிருப ஆசிரியர், "அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்." ( எபிரெயர் 13 : 12, 13 ) என்று கூறுகின்றார். ஆம் அன்பானவர்களே, நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம். பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தை பெற்று புது வாழ்வு பெறுவோம். 

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,146                                       💚 மார்ச் 30, 2024 💚 சனிக்கிழமை 💚

"பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு." ( எபிரெயர் 8 : 2 )

இயேசு கிறிஸ்துத்  தான் பட்ட பாடுகளின்மூலம் நித்திய மீட்பை உண்டுபண்ணிய மகத்தான நிகழ்வுகள்தான் அவரது மரணமும் உயிர்ப்பும். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இந்த உலகத்தில் ஆசாரிப்புக் கூடாரம் இருந்த முறைமையின்படி பரலோகத்திலும் ஆசாரிப்புக் கூடாரம் உள்ளது. இதனையே, "இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது" ( எபிரெயர் 8 : 5 ) என்று எபிரேயர் நிருபத்தில் கூறப்பட்டுள்ளது. 

உலகிலுள்ள ஆசாரிப்புக் கூடாரத்தினுள் தலைமைக்குரு மிருகங்களின் இரத்தத்தால் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை செல்வான். ஆனால் நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து  "வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினால்  ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்." ( எபிரெயர் 9 : 12 )

பழைய ஏற்பாட்டுக்கால ஆசாரிப்புக் கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலம் ஒரு நீண்ட திரைச்சீலையால் மறைத்துப் பிரிக்கப்பட்டிருக்கும். இதனை, "கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்." ( யாத்திராகமம் 26 : 33 ) என்று வாசிக்கின்றோம். 

ஆசாரியன் மட்டுமே அதனுள் செல்ல முடியும்.  நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தனது சுய இரத்தத்தால் பரலோக மீட்பை உண்டுபண்ணினார். இதற்கு அடையாளமாகவே அவர் உயிர் துறந்தபோது தேவாலயத்தின் அந்தத் திரைச் சீலை இரண்டாகக்  கிழிந்தது. "அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது." ( மாற்கு 15 : 38 )  எனும் வார்த்தைகள் இதற்காகவே குறிப்பாக எழுதப்பட்டுள்ளன.

"ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்," ( எபிரெயர் 10 : 19 ) நாம் பிதாவாகிய தேவனைச் சேரும் உரிமையினை அவர்மூலமாகப் பெற்றுள்ளோம். அங்கு நாம் தனித்திருக்கமாட்டோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு இருப்பார். இதனையே, "பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு." ( எபிரெயர் 8 : 2 ) என்று இன்றைய தியான வசனம் கூறுகின்றது.

நமக்காக கிறிஸ்து ஏற்படுத்தின மேலான வழியை எண்ணிப்பாருங்கள். நாம் பரிசுத்தமில்லாத மனிதர்கள். பிதாவை நெருங்கத் தகுதியில்லாதவர்கள். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசம் நமக்கு இந்த மகா பெரிய பேற்றினைப் பெற்றுத்தந்துள்ளது. எனவே, இதற்கு நன்றியுள்ளவர்களாக நாம் வாழவேண்டியது அவசியம். 

பெரிய வெள்ளிக்கிழமை ஆராதனைகளில் கலந்துகொள்ளும்போது வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு அழுவதற்கல்ல. மாறாக, நாம் இவற்றை எண்ணி கிறிஸ்துவுக்கு நன்றிசொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.  இன்று மட்டுமல்ல, நமது வாழ்நாள் முழுவதும் இந்த எண்ணம் நமக்குள் இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் கிறிஸ்துவின்மேல் அன்பு அதிகரித்து உலகத்தின் ஆசாபாசங்களின்மேல் உள்ள நாட்டங்கள் குறையும். கிறிஸ்துவின் மேலான தியாகத்துக்காக நன்றிகூறி அவருக்கு உண்மையுள்ளவர்களாக வாழ்வோம்.  

'ஆதவன்' 📖✝ வேதாகமத் தியானம் - எண்:- 1,147                                       💚 மார்ச் 31, 2024 💚 ஞாயிற்றுக்கிழமை 💚

"கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்." ( 1 கொரிந்தியர் 15 : 17 )

கிறிஸ்துவின் பாடுகளும் மரணமும் உயிர்த்தெழுதலும் நமக்கு நித்திய மீட்பினை ஏற்படுத்தின. கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆணிவேரே கிறிஸ்துவின் உயிர்ப்புத்தான். அதுவே அவர் மெய்யான தேவ குமாரன் என்பதற்குச் சாட்சி. உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் அவர் சாதாரண உலக மகான்களில் ஒருவரைப்போல நீதிபோதனைச் செய்து அழிந்துபோனவராகவே இருப்பார். மட்டுமல்ல, அவர் அப்படி உயிர்த்தெழவில்லையானால் நாம் மீட்பு அனுபவத்தை வாழ்வில் பெற்றிருக்கமாட்டோம்.

கிறிஸ்துவின் மீட்பு அனுபவம் நம்மில் செயல்புரிவதே அவர் உயிர்த்தெழுந்தார் என்பதற்குச் சாட்சி. இதனையே அப்போஸ்தலரான பவுல்,  "கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள்." என்று கூறுகின்றார்.  ஆம், அவர் உயிர்த்தெழவில்லையானால் அவரை நாம் விசுவாசிப்பது வீண். இதனையே, "கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா." ( 1 கொரிந்தியர் 15 : 14 ) என்கின்றார் பவுல்.

மட்டுமல்ல, "மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே." ( 1 கொரிந்தியர் 15 : 15 ) என்கின்றார். 

கிறிஸ்துவுக்குள் மரணமடைந்த மக்கள் அனைவரும் கிறிஸ்து உயிர்த்ததுபோல மீண்டும் எழுப்பப்படுவார்கள்  என்பது கிறிஸ்தவ நம்பிக்கை. ஆதாம் செய்த பாவத்தின் விளைவால் உலகில் மரணம் உண்டானது.  அந்த ஒரே மனிதனின் பாவம் அனைத்து மக்களையும் பாவத்துக்கும் மரணத்துக்கும் நேராக இழுத்துச் சென்றது. 

அதுபோல போல  கிறிஸ்து எனும் இரண்டாம் ஆதாமின் மரணமும் உயிர்ப்பும் நமக்கு மீட்பும் உயிர்ப்பும் அளிக்கின்றது. "மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்." ( 1 கொரிந்தியர் 15 : 21, 22 )

அன்பானவர்களே, உயிர்ப்புப் பெருவிழா நமக்குச் சொல்லும் செய்தி இதுதான். நாம் உலகில் வாழ்ந்து மடிவதோடு நமது வாழ்க்கை முடிவடைவதில்லை. மாறாக, அழிவில்லாத நமது ஆத்துமா கிறிஸ்துவால் எழுப்பப்படும். நமது உடலும் கிறிஸ்துவால் மறுரூபமாக்கப்பட்டு என்றும் அழியாமையை அடையும். எனவே நாம் நம்மை உயிர்தெழுதலுக்குத் தகுதியுள்ளவர்களாக நமது ஆத்துமாவையும் உடலையும் பரிசுத்தமாய்க் காத்துக்கொள்ளவேண்டியது அவசியமாய் இருக்கின்றது.  

காரணம்,  கர்த்தரது நியாயாசனத்துக்கு முன்பாக நாம் நிற்கவேண்டும். நாம் செய்த நன்மை தீமைக்கேற்ற பலனை அடையவேண்டும். மட்டுமல்ல, "அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்." ( 1 கொரிந்தியர் 15 : 53, 54 )

கிறிஸ்து மரணத்தை ஜெயமாக விழுங்கியதுபோல கிறிஸ்தவர்களாகிய நாமும் மரணத்தை ஜெயிக்கின்றவர்களாக இருக்கின்றோம். ஆம், கிறிஸ்தவன் இறந்து புதைக்கப்படுவதில்லை; மாறாக விதைக்கப்படுகின்றான். விதைக்கப்படும் நல்  விதைகளாக வாழ்வோம். வளர்ந்து கனிதந்து நம்மூலம் கிறிஸ்துவை உலகிற்கு அறிவிப்போம். மரணத்தை ஜெயித்து எழுந்த கிறிஸ்துவைப்போல  உயிர்ப்படையத் தகுதியுள்ளவர்களாக வாழ்வோம்.  அதற்கான பலத்தை கிறிஸ்துவே நமக்குத் தந்து நடத்துவாராக.