Friday, May 11, 2018

அரசாங்கம், அதிகாரம், ஜெபம் - சில ஆவிக்குரிய சபைகளின் தவறான வழிகாட்டுதல்கள்


அரசாங்கம், அதிகாரம், ஜெபம் - சில ஆவிக்குரிய சபைகளின் தவறான வழிகாட்டுதல்கள்  

- சகோ . எம். ஜியோ பிரகாஷ் 


ங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவ சபை எனக் கூறிக்கொள்ளும் பல சபைகளும் தங்களை ஆவிக்குரிய கிறிஸ்தவர்களென்றும் கூறிக்கொள்ளும் பல சபைகளின்  விசுவாசிகளும் இன்று செயல்படும் விதங்கள் இவர்கள் சரியான கிறிஸ்தவ வழிகாட்டுதல் உள்ளவர்கள்தானா, கிறிஸ்தவ அடிப்படை போதனைகள் இந்தச் சபைகளில் போதிக்கப்படுகின்றதா எனும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.  

பல ஆவிக்குரிய சபைப் போதகர்களும் விசுவாசிகளும் சமூக வலைத் தளங்களில் வெளியிடும் கருத்துக்கள் உண்மையில் கிறிஸ்தவ போதனைகளுக்கு முரணான கருத்துகளேயாகும். சாமீப காலங்களில் இன்றய ஆளும் பாரதீய ஜனதா கட்சி செயல்படும் முறையினை வைத்து இவர்கள் வெளியிடும் கருத்துக்கள் சிலவற்றைப் பாப்போம். 

"பாரதீய ஜனதா கட்சி தமிழகத்திலும் இந்தியாவிலும் இருந்து முற்றிலும் அகற்றப்பட உபவாசமிருந்து ஜெபிப்போம்" என ஒரு பதிவு ....

"அடுத்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் தோல்வி அடையவேண்டி உபவாசம் "

"கிறிஸ்தவர்களுக்கு எதிரான சக்திகள் அழித்து ஒழிக்கப்பட உபவாசம்"

இந்தக் கருத்துக்களை வெளியிடும் நபர்கள் தங்களை கிறிஸ்தவர்களின் பாதுகாவலர்கள்போல  காண்பித்துக் கொண்டாலும் பொதுவாக இவர்கள் அனைவரும் ஆவிக்குரிய வழிநடத்துதல் உள்ளவர்கள் கிடையாது. ஏனெனில் இவர்கள் ஜெபம், உபவாசம் இவை பற்றி கொண்டுள்ள கருத்துக்களும் இவர்களது செயல்களும் கிறிஸ்தவ போதனைகளுக்கு முரணானவையாகும்.

ஒரு குறிப்பிட்ட தேதியையும் மணியையும் குறிப்பிட்டு அந்த நேரத்தில் மேற்கூறிய கருத்துக்களுக்காக உவாசம் இருந்து ஜெபிக்க அழைப்பு விடுகின்றனர்.

ஜெபத்தில் முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய காரியங்கள் பல உள்ளன

முதலாவது ஜெபிக்கும் நாம் தேவனுக்கு உகந்த ஒரு வாழ்க்கை வாழவேண்டியது அவசியமாகும். தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அல்லது ஆவியின் வழிநடத்துதல் இல்லாத ஓர் வாழ்க்கை வாழ்ந்துகொண்டு ஜெபிப்பதால் எந்த பயனும் இல்லை. அது வெறும் வார்த்தை அலங்காரமாக மிருக்குமே தவிர தேவனுக்கு ஏற்புடையது ஆகாது. மத வைராக்கியம் கொண்டு நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மனதில்கொண்டு ஜெபிப்பதும் தேவனுக்கு ஏற்புடைய ஜெபமல்ல.

இந்த ஆவிக்குரிய சபைகள் ஜெபத்தை செய்வினை அல்லது பில்லி சூனியம் வைப்பதுபோல பயன் படுத்த முயலுவது தவறான காரியமல்லவா? நமக்கு விருப்பமில்லாதவர்கள் அல்லது நமக்கு எதிராக இருப்பவர்கள் அழிந்து ஒழிந்திட வேண்டுமென்று ஜெபிப்பது என்ன ஜெபம்? ஒருவேளை இந்த அரசாங்கம் மாறி வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர் நமக்குச் சாதகமாக இருப்பார்  என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது?

உலகத்தில் ஒருவனுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுப்பதும் அதனை எடுப்பதும் தேவனது சித்தம். "உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்திலே ஆளுகை செய்து தமக்குச் சித்தமானவனை அதன்மேல் அதிகாரியாக்குகிறார்" (தானியேல் - 5:21). அதாவது இன்று ஒருவர் தேசத்தின் தலைவராக இருக்கிறாரென்றால் அவர் தேவனுக்கு உகந்தவராக இல்லாவிட்டாலும் தேவனுக்குச் சித்தமானவர்தான். இந்த மக்களை இப்போது ஆள இவர் போதும் என்பவரை தேவன் ஆட்சியில் அமர்த்துகின்றார். 

"தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்துக்கு எதிர்த்து நிற்கிறான்" (ரோமர் - 13:1, 2)   

மேலும் இயேசு கிறிஸ்து நாம்மைத் துன்பப்படுத்திக்கிறவர்கள் அழிய வேண்டுமென்றோ தோல்வியடையவேண்டுமென்றோ  ஜெபிக்க நமக்கு கற்றுத்தரவில்லை.  "நான் உங்களுக்குச்  சொல்கிறேன், தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு  கன்னத்தையும் திருப்பிக் காட்டு "  (மத்தேயு - 5:39) என்றே கூறினார். "உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்"  (மத்தேயு - 5:44) என்றார். இதனைச் செயலிலும் காட்டினார். தன்னைக் காட்டிக்கொடுத்த யூதாசை அப்போதும்கூட, "சிநேகிதனே"  (மத்தேயு - 26:50) என்றே அழைத்தார். தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களுக்காக பிதாவிடம் மன்னிப்பு வேண்டி ஜெபித்தார். " பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னது என்று அறியாதிருக்கிறார்களே"  (லூக்கா - 23:34)

ஜெபத்தில் இரண்டாவது கவனிக்கவேண்டியது, தேவனது சித்தம் மட்டும் நிறைவேறிட ஜெபிப்பது. இதுவே மேலான ஜெபம். இயேசு கிறிஸ்து தான் பாடுபடுவதற்கு முந்தின இரவில் இப்படித்தான் ஜெபித்தார். "பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்  கூடுமானால்  நீங்கும்படிச் செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல , உம்முடைய சித்தத்தின் படியே ஆகக்கடவது"  (மத்தேயு - 26:39) என்றே ஜெபித்தார். இதுவே மேலான ஜெபம். தேவனது சித்தம் யார் ஆட்சி செய்யவேண்டுமோ அவரை ஆட்சியில் அமர்த்தும்.  

அன்பானவர்களே, ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகள் இந்தப் போதனைகளை மறந்துவிட்டார்களா அல்லது இந்த கிறிஸ்துவின் போதனை இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்று முடிவுக்கு வந்துவிட்டார்களா?

ஒருவன் கிறிஸ்தவனாகி விட்டதால் அவனது துன்பங்கள் மாறிவிடும் என்று வேதம் கூறவில்லை.  எனவே அப்படி ஒருவன் போதித்தால்  அவன் பொய்யன். "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" (யோவான் - 16:33) என இயேசு கிறிஸ்துவே கூறியுள்ளார்.   ஆனால் கிறிஸ்தவனுக்குள்ள மேன்மை அனுபவம் என்ன? அது சோதனை ஏற்படும்போது அதனைத் தாங்கும் வலிமையையும் அதிலிருந்து விடுபடும் வழியை தேவன் தருவார்.  எனவேதான்  வேதம் பின்வருமாறு கூறுகிறது, " மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறு சோதனை உங்களுக்கு நேரிடவில்லை, தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்  தக்கதாக, சோதனையோடு கூட  அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." (1 கொரிந்தியர் - 10:13) 

அப்போஸ்தலரான பேதுரு கூறுகிறார், "ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதனால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து அதன் நிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். " (1.பேதுரு -4:16)

"நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள் ; ஏனென்றால் தேவனுடைய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார். அவர்களாலே தூஷிக்கப்படுகிறார். உங்களாலே மகிமைப்படுகிறார். " (1.பேதுரு -4:14)

அன்பானவர்களே, ஆவிக்குரிய சபைகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சபைகள் கூறும் தவறான உபவாச ஜெபங்களில் ஈடுபட்டு தேவனுக்கு எதிராகச் செயல்படாதிருங்கள். தேவ சித்தம் நிறைவேற ஜெபியுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 

Monday, May 07, 2018

'அன்பு' துன்பங்களைச் சகிக்க வேண்டும்


'அன்பு' துன்பங்களைச் சகிக்க வேண்டும் 

- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 

(இக்கட்டுரை அன்பைப் பற்றிய முழுமையான கட்டுரையல்ல.  விரிவான கட்டுரை பின்னர் வெளிவரும். இது, தற்போதைய சூழலில் கிறிஸ்தவன் எப்படி வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவது மட்டுமே) 

ன்பே கிறிஸ்தவத்தின் அடிப்படை. எனவேதான் வேதம், "அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான். அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்"  (1. யோவான் - 4:7, 8) என்று கூறுகிறது.   உலகினிலே வந்து நமக்காகப் பாடுகள்பட்டு மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கின்ற நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து அன்பின் நிறைவாகவே இருக்கிறார்.

எனவே அவரைத் தொழுது கொள்ளுகிற அனைவரும் அந்த அன்பினைப் பிரதிபலிப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இயேசு கிறிஸ்துவின் அன்புச்  சீடனான யோவான் எனவே, "தேவனிடத்தில் அன்பு கூருகிறேன் என்று ஒருவன் சொல்லியும்  தன்  சகோதரனைப் பகைத்தால்  அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான்?   (1. யோவான் - 4:20) எனக் கேள்வி எழுப்புகிறார்.

நாம் காணும் அனைவரும் தேவனால் படைக்கப்பட்டவர்கள்தான்.  எனவே ஜாதி, மதம், இனம், மொழி இவை அன்பிற்குத் தடையாக இருக்கக் கூடாது.  இவற்றின் அடிப்படையில் ஒருவன் மனிதர்களை எடைபோடுவானென்றால் அவன் தேவனை அறிந்தவனோ அல்லது தேவனால் அறியப்பட்டவனோ அல்ல.

யோவான் எழுதிய முதல் நிருபம்  அன்பின் நிருபம் என்றே அழைக்கப்படுகிறது.  அந்த நிருபத்தைத் தியானியுங்கள். இன்றய சூழலில் கிறிஸ்தவத்துக்கு எதிராக நடைபெறும்  செயல்களை பொறுமையோடு தாங்கிக்கொள்ள அது நமக்கு வழிகாட்டும். அப்போஸ்தலரான பேதுரு கூறுகிறார், "ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதனால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து அதன் நிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். " (1.பேதுரு -4:16)

"நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள் ; ஏனென்றால் தேவனுடைய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார். அவர்களாலே தூஷிக்கப்படுகிறார். உங்களாலே மகிமைப்படுகிறார். " (1.பேதுரு -4:14)

அன்பில்லாதவன் எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் பணக்கார வீடுகளில் சங்கிலியால் கட்டிப்போட்டு அல்லது கூண்டில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படும் நாயைப் போல இருக்கிறான். அவனது செல்வமும் செல்வாக்கும் அவனுக்கு  மெய் விடுதலையைத் தராது. 

மெய்யான அன்பினைப் பிரதிபலித்திட :-

யாராவது உங்களிடம் உதவி கேட்கும்போது அவரது ஜாதி, மதம், இனம், மொழி இவைகளைக் கவனியாமல் அவருக்கு உதவுங்கள்

யாராவது உங்களுக்கு இக்கட்டில் உதவி செய்யும்போது அவரது ஜாதி, மதம், இனம், மொழி இவைகளைக் கவனியாமல் இருங்கள்.

யாராவது உங்களைத் துன்புறுத்தும்போது அவரது ஜாதி, மதம், இனம், மொழி இவைகளைக் கவனியாமல் இருங்கள்.

இயேசு கிறிஸ்துக் கூறினார், "நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாய் இருந்தால் அதனால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்"   (யோவான் - 13:35) 

ஆம், நாம் இந்த உலகில் கிறிஸ்துவின் சீடர்கள் என்று சான்று பகரவே அழைக்கப்பட்டுள்ளோம். 

அன்பானவர்களே, தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று கூறும் வேதம் "அவர் பட்சிக்கும் அக்கினி" என்றும் கூறுகிறது மறுக்க முடியாத உண்மை.  எனவே தான் இயேசு கிறிஸ்துக் கூறினார், "இந்தக் கல்லின்மேல் விழுகிறவன்  எவனோ அவன் நொறுங்கிப்போவான்,  அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும்" (லூக்கா - 20:18)  இதற்கு ஆயிரக்கணக்கான சான்றுகளை உலகம் கண்டுள்ளது.

அன்பானவர்களே, நாம் கிறிஸ்து நமக்குத் தந்த அன்பின் கட்டளைகளை மட்டும் கடைபிடிப்போம்.  அப்படிச் செய்யும்போது தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார். எதிரிகளை நண்பர்களாக மாற்றவும் செய்வார். 

Sunday, May 06, 2018

வெளிச்சத்துக்கு வருவோம் ......!


வெளிச்சத்துக்கு வருவோம் ......!

- சகோ. எம். ஜியோ பிரகாஷ் 


(ஒளியின் தூதனுடைய  (ஒளியான மெய்  தேவனுடைய தூதர்களின்)   வேடத்தைத் தரித்துக்கொண்ட பொய்யனின் (சாத்தானின்) ஊழியர்கள் பெருகி மக்களை சத்தியத்தை அறியவிடாமல் தடை செய்து வரும் காலகட்டத்தில் நாம் வாசிக்கின்றோம். பிரபல ஊழியர்கள் என்று அறியப்படும் பலரும் இன்று இப்படி வஞ்சிக்கிற ஆவியைக் கொண்டு மக்கள் சத்தியத்தினை அறியத்  தடையாக உள்ளனர். இவர்களிடமிருந்து ஆவிக்குரிய வாழ்வை மக்கள் காத்துக்கொள்ள வழிகாட்டும் கட்டுரை இது )  

கிறிஸ்தவத்தைப்பற்றி கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோருக்கும்,  கிறிஸ்துவை அறியாத மக்களுக்கும்  சரியான முறையில் எடுத்துச் சொல்ல இன்று ஆட்கள் மிக மிகக் குறைவு.  "அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்" (மத்தேயு - 9:37)    என இயேசு கிறிஸ்து கூறியது இன்றும் மிகச் சரியாக இருக்கிறது. 

வெளிப் பார்வைக்கு இன்று கிறிஸ்தவ ஊழியர்களும் ஊழியங்களும்  சபைகளும் பெருகியது போலத் தெரிந்தாலும் உண்மை அதுவல்ல. பெரும்பாலான இன்றைய கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவின் போதனையைப்  பின்பற்றவில்லை, ஊழியர்களும் போதகர்களும் கிறிஸ்துவின் போதனையைப் போதிக்கவில்லை. கிறிஸ்தவ ஆன்மிகம் என்றால் என்ன  என்பது பெரும்பாலான ஊழியர்களுக்கும்  கிறிஸ்தவர்கள் எனத் தங்களைக்  கூறிக் கொள்ளும்  மக்களுக்கும் தெரியவில்லை. தங்களது கையில் சுமந்து செல்லும் வேதம் கூறும் உண்மை கிறிஸ்தவர்களுக்குத் தெரியவில்லை. அப்படி தெரிந்திருக்குமேயானால் இன்று தமிழகத்தில் பிரபலமாக விளங்கும் பல ஊழியர்களும் காணாமல் போயிருப்பார்கள். சமுதாயத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டிருப்பார்கள். ஆம், நாங்கள் பரம்பரைக் கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் பலரும் கூட ஊழியர் கூறுவதை நம்பும் அளவுக்கு வேதம் கூறுவதை நம்பாததே இந்த இழி நிலைமைக்குக் காரணம்.

அன்பானவர்களே, கிறிஸ்துவை அறியாத ஊழியர்கள் கிறிஸ்துவை அறிவிக்கத் துவங்கியதே கிறிஸ்தவத்தின் மிகப் பெரிய சாபக் கேடாக இருக்கிறது. வெறும் பண ஆசையையே நோக்கமாகக் கொண்டு ஊழியம் செய்பவர்களும் வேறு வேலை கிடைக்காததால் ஊழியம் செய்ய வந்தவர்களும், உலக வேலையில் இருந்து சம்பாதித்துவிட்டு ரிட்டயர்டு ஆனபின் பொழுது போக்க ஊழியத்துக்கு வந்தவர்களும்,  பெருமைக்காக ஊழியம் செய்ய வந்தவர்களும் தான் பெரும்பாலான கிறிஸ்தவ  ஊழியர்கள்.  கிறிஸ்துவால் குறிப்பிட்டு ஊழியத்துக்கு அழைக்கப்பட்டு ஊழியம் செய்வோர்  வெகு சிலரே.  அப்படி கிறிஸ்துவால் ஊழியத்துக்கு அழைக்கப்பட்டு ஊழியத்துக்கு வந்தவர்களும் கிறிஸ்துவின்மேல் உள்ள பார்வையைத் திருப்பி ஏற்கெனவே உலகப்பிரகாரமாக ஊழியம் செய்து பிரபலமாக விளங்கும் ஊழியர்களைப் பார்த்து அதுபோன்று மாய்மால ஊழியம் செய்யத் துவங்கிவிடுகின்றனர். ஆம் அவர்களது ஆரம்பம் சரியாக இருந்தாலும் கிறிஸ்துவை விட்டுத் தங்களது பார்வையைத் திரும்பியதால் தவறான வழிக்குச் சென்றுவிடுவதுடன் பல ஆயிரக்கணக்கான மக்களையும் தவறான வழிக்கு நடத்துகின்றனர். இத்தகைய பின்மாற்ற    ஊழியர்களை  இன்றயக் கிறிஸ்தவத் தலைவர்களும் தங்களுக்கு மீட்பின் அனுபவம் இல்லாத காரணத்தால் கண்டுபிடிக்க முடியாமல் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றனர்.

ஒருவன் போதிப்பதைக் கேட்க அதிகம் கூட்டம் சேர்வதால் அவன் கூறுவது அனைத்தும் சரி என்று ஆகிவிடாது, மாறாக, அவன் பெரும்பாலான மக்களுக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதனை போதிக்கிறான் என்பதே உண்மை.  எனவே அது மக்களைத் திருப்பதிப்படுத்தும் போதனையே தவிர தேவனைத் திருப்பதி படுத்தும் போதனையாக இருக்க முடியாது.

இன்றய பிரபல போதகர்களது போதனைகளைக் கவனித்துப் பாருங்கள். அவை பெரும்பாலும் ஆசீர்வாதத்தைப் பிரசித்திப்படுத்தும் போதனைகளாகவே இருக்கும். "அதிசயம், அற்புதம், வல்லமை" இவையே இந்தப் போதகர்களது போதனையின் கருப்பொருள். இவைகளை ஒருவன் பெறவேண்டுமானால் அந்த ஊழியரது திட்டங்களுக்குப் பொருள் உதவி செய்யவேண்டும். இந்த ஊழியர்களது கூட்டங்களுக்குச் செல்லும் மக்களும் என்ன வேண்டுகிறார்கள்? தங்களது நோய்  நீங்க வேண்டும், பேய் நீங்கவேண்டும், கடன் தொல்லை நீங்கவேண்டும், தங்களது மக்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டும், நல்ல வேலை கிடைக்கவேண்டும், தங்கள் செய்யும் தொழில் செழிக்கவேண்டும்.....இப்படியே தான் இந்தப் பட்டியல் தொடரும்.  அதாவது துன்பமில்லாத ஒரு நல்ல செழிப்பான வாழ்க்கை வேண்டும் என்பதே மக்களது வேண்டுதல்; உலகத்தில் ஒரு மேலான வாழ்க்கை வாழ்ந்து முடிக்கவேண்டும் என்பதே மக்களது வேண்டுதல். மேற்படி விசயங்களில் ஆன்மிகம் எங்கே இருக்கிறது என்று யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை.

மக்களது இந்த ஆசையைத்தான் இன்றய ஊழியர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஜெபம், உபவாசம், காணிக்கை, ஆராதனை என அனைத்திலும் மக்களது இந்த உலக ஆசையைப் புகுத்தி இணைத்து மனக்   குருடர்களாக மக்களை இருளிலேயே வைத்துள்ளனர். காரணம் இந்த ஊழியர்களும் இப்படி மனக் குருடர்களாகவும் இருளின் பிடியில் இருப்பவர்களாகவும் இருபதே.  ஜெபம், உபவாசம், காணிக்கை, ஆராதனை இவை முக்கியமே எனினும் அவை வெறும் உலக ஆசீர்வாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடாது.  " உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று அறியீர்களா?" (யாக்கோபு - 4:4) மேலும் ஒருவன் ஜெபம் செய்து தேவனிடம் ஒன்றை வேண்டும் முன் அவன் கிறிஸ்துவின் இரத்தத்தால்  கழுவப்பட்ட அனுபவத்தைப் பெற்றவனாக இருக்க வேண்டியது அவசியமாகும். 

தேவச்  சாயலாகப் படைக்கப்பட்ட நாம் தேவனோடு இணையவேண்டும். இதுவே தேவனுடைய திட்டம். பரிசுத்த தேவனோடு இணையவேண்டுமானால் நாமும் பரிசுத்தமாக இருக்கவேண்டும். அது மனித முயற்சியால் ஆகாது. நாம்  கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டாக்கப்பட்ட  இரட்சிப்பினைப் பெற்று தேவனுடைய பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படும் ஒரு வாழ்க்கை அனுபவத்துக்குள் வந்தால் மட்டுமே அது முடியும்.  சுவிசேஷம் எழுதப்பட்டதன் நோக்கமே அதுதான். இதனை இயேசு கிறிஸ்துவின் அன்புச்  சீடனான யோவான், " இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினால் நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன" (யோவான் - 20;31)  எனத் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

மேலும் மத்தேயு நற்செய்தியில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைப் பற்றி கூறும்போது, "அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக: ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" (மத்தேயு - 1:21) என வானதூதன் இயேசுவின் உலகத்  தகப்பனாகிய யோசேப்பிடம்  கூறுவதைக் காணலாம்.

ஆனால் இன்றய ஊழியர்களும் கிறிஸ்தவத் தலைவர்களும் இவற்றைப் போதிப்பது கிடையாது. இந்த மீட்பின் அனுபவத்தைப் பெற மக்களை வழி நடத்துவதும் கிடையாது. ஆனால் இந்த ஊழியர்கள் மக்களது  தற்கால மன அமைதிக்காக மேற்பூச்சாக ஒத்தடம் கொடுத்து விடுகின்றனர். ஆம், "அவர்கள் தேவ நீதியை அறியாமல், தங்களது சுய நீதியை நிலை நிறுத்த" விரும்புகிறார்கள். (ரோமர் -  10:3)

ஆவிக்குரிய வாழ்வு என்பது ஒரு மேலான அனுபவமாகும். அது கிறிஸ்து வாழ்ந்து காட்டிய அனுபவம். அவரது சீடர்களும் பல்வேறு பரிசுத்தவான்களும் வாழ்ந்து காட்டிய அனுபவம்.  " மாம்சத்தின்படி நடக்கிறவர்கள்  மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்".  (ரோமர் -  8:5) என வேதம் கூறுகிறது.  கிறிஸ்துவுக்குரிய ஆவிக்குரிய வாழ்க்கை நாம் வாழும்போது நமது உலகத் தேவைகளை அவர் சாந்திப்பார். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்போது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக்  கொடுக்கப்படும்"  (மத்தேயு - 6:33) இந்த விசுவாசத்தோடு கிறிஸ்துவைப் பற்றி வாழ்வதுதான் கிறிஸ்தவ வாழ்வு.

ஒருவன் கிறிஸ்தவனாகி விட்டதால் அவனது துன்பங்கள் மாறிவிடும் என்று வேதம் கூறவில்லை.  எனவே அப்படி ஒருவன் போதித்தால்  அவன் பொய்யன். "உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு" (யோவான் - 16:33) என இயேசு கிறிஸ்துவே கூறியுள்ளார்.   ஆனால் கிறிஸ்தவனுக்குள்ள மேன்மை அனுபவம் என்ன? அது சோதனை ஏற்படும்போது அதனைத் தாங்கும் வலிமையையும் அதிலிருந்து விடுபடும் வழியை தேவன் தருவார். அவன் நிர்கதியற்று தற்கொலை போன்ற தவறான முடிவுக்குச் செல்ல மாட்டான்.  எனவேதான்  வேதம் பின்வருமாறு கூறுகிறது, " மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறு சோதனை உங்களுக்கு நேரிடவில்லை, தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்  தக்கதாக, சோதனையோடு கூட  அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்." (1 கொரிந்தியர் - 10:13) 

தேவன் எனக்கு எல்லாம் தந்துகொண்டே இருப்பதால் நான் அவரை நேசிக்கிறேன் என்பதல்ல, எந்த சூழலிலும் அவரிடம் அன்புடையவராக இருப்பதையே தேவன் விரும்புகிறார். யோபு கூறியதைப்போல, "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன் " (யோபு - 13:15) என்பதே தேவ அன்பு. இதனை யோபு தன்  அனுபவத்தால் உணர்ந்து கூறினார். தேவன் அவரை அதிகமாக ஆசீர்வதித்திருந்தார். ஆனால் அதே ஆசீர்வாதம் தன்னைவிட்டு எடுபட்ட போதும் யோபு தனது தேவ அன்பில் மாறவில்லை. இது யோபு தேவன்மேல் கொண்டிருந்த அன்பை  விசுவாசத்தையும் காட்டுகிறது. தனக்குத் துன்பம் ஏற்பட்டபோது யோபு கூறிய விசுவாச வார்த்தைகளைப்  பாருங்கள்:- " தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ ?" (யோபு - 2:10)

அப்போஸ்தலரான பவுல் அடிகள் இந்த அனுபவத்தில் இருந்ததால்தான், " கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ,  துன்பமோ , பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டையமோ இவையெல்லாவற்றிலேயும்  நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோமே.  மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமை களானாலும்,  நிகழ்காரியங் களானாலும் வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும் வேறெந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து   இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நாம்மைப்  பிரிக்க மாட்டாதென்று    நிச்சயத்திருக்கின்றேன்." (ரோமர் - 8:36-39) என்று கூறுகின்றார்.

ஆனால் இன்றய ஊழியர்கள் இதற்கு மாறாக மக்களை வழிநடத்துகின்றனர். தவறான முன் உதாரணங்களையும் தவறான நம்பிக்கையையும் மக்களிடம் புகுத்துகின்றனர். இதுவே இன்றய கிறிஸ்தவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோரின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றது. உதாரணமாக ஊழிக்காரன்  ஜெபித்தால் மாணவனுக்கு முதல் மதிப்பெண் கிடைக்கும் என்றும் தோல்வியே ஏற்படாது என்றும் ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால் கிறிஸ்தவ மாணவர்களைவிட மற்ற மத மாணவர்களே பல்வேறு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெறுகின்றனர்.  முதல் மதிப்பெண் பெறுவது மட்டுமே வாழ்வின்  வெற்றி அல்ல என்பதை உளவியல் ஆற்றுப்படுத்துனர்கள் தெரிந்துள்ள அளவுக்கு கிறிஸ்தவ ஊழியர்கள் தெரிந்துகொள்ளாதது இன்றய கிறிஸ்தவத்தின் சாபக்கேடாக உள்ளது.  அப்போஸ்தலரான பவுல் அடிகள், "இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கக்கூடியவர்களாய்  இருப்போம்"  (1 கொரிந்தியர் - 15:19) என்று எழுதுகின்றார்.


அன்பானவர்களே ! பின்மாற்ற ஊழியர்களை நம்பி ஏமாற வேண்டாம். முதலில் நீங்களே வேதாகமத்தை பரிசுத்த ஆவியின் துணையுடன் நன்கு வாசியுங்கள். உண்மையை அறியும் ஆர்வத்துடன் நீங்கள் வேதத்தை வாசிப்பீர்கள் என்றால் தேவன் உங்களை சாத்திய வெளிச்சத்துக்குள்  வழி நடத்துவார்.  ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாய் வாழ உறுதி  கொள்ளுங்கள். அதற்குத் தடையாக உள்ள பொருளாசைக்கு  நேராக வழிநடத்தும்  ஊழியர்களையும் , ஊழியர்களது பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளையும்  புறக்கணியுங்கள். கர்த்தர்தாமே உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார்.

"ஆனபடியால் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து  மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை" (ரோமர் - 8:1)